எதுவுமில்லை புதிதாய்
எல்லாம் என்றைக்கும் போலத்தான்
தினசரிகளின் ஒரே மாதிரியான சுழற்சி!
எல்லாச் செலவுகளும் முதல் தேதிக்கும்
எல்லாக் காரியங்களும்
விடுமுறை தினங்களுக்குமாய்
தள்ளிப் போடப்பட்டு
தள்ளிப் போடப்பட்டு
நாட்கள் நகரும் நத்தைகளாய்.......
எப்போதும் கண்களில் கொஞ்சம்
தூக்கம் மிச்சமிருக்கிறது;
முழுசாய் தூங்கி விழித்த
இரவென்று எதுவுமே இல்லை;
கனவுகளற்ற தூக்கம்
சாத்தியப் படுவதில்லை ஒருநாளும்.....!
கனவுகளில் மட்டும்
பச்சையம் இருந்திருந்தால்
உலகிற்கே தீர்ந்து போயிருக்கும்
உணவுப் பிரச்சினை!
இரைச்சலாகிப் போனது
இயல்பு வாழ்க்கை;
இயந்திரங்களின் உறுமலில்
கறுப்பாய் விடிகின்றன நாட்கள்!
அழுக்குத் தேய்த்துக் குளிக்க அவகாசமில்லை;
மென்று தின்ன நேரமில்லாமல்
விழுங்கிப் போகிறோம் உணவுகளை;
வயிறே பிரதானமான வாழ்விலும்
பிந்தித்தான் போகின்றன
சாப்பாட்டு வேளைகள்!
ஓடுகிறோம்; ஓடுகிறோம்;
ஓடிக்கொண்டே இருக்கிறோம்....
எதற்கென்று தெரியவில்லை;
எங்கென்றும் புரிவதில்லை;
ஓட்டம் மட்டும் தொடர்கிறது
வெறிகொண்ட வேகத்தில்
விழுமியங்களை விழுங்கியபடி.....!
Wednesday, December 16, 2009
Subscribe to:
Post Comments (Atom)
tamilish, tamilmanam poantra thiratigal patri theriumaa? You may get a good reach if u publish them there.
ReplyDeleteஎனக்கு பிடித்த வரிகள்!
ReplyDelete" கனவுகளில் மட்டும்
பச்சையம் இருந்திருந்தால்
உலகிற்கே தீர்ந்து போயிருக்கும்
உணவுப் பிரச்சினை!"
வாழ்த்துக்கள்!
நன்றி விசா மற்றும் முகிலன்!
ReplyDeleteதமிழ்வெளி மற்றும் தமிழ் மணத்தில் பதிந்து வைத்திருக்கிறேன்.பதிவு போட்டதும் தமிழ்வெளியில் கிளிக்கினால் உடனே அவர்களின் திரட்டியில் மின்னிவிடுகிறது.
ஆனால் தமிழ்மணத்தில் சிலசமயங்களில் மின்னுகிறது. பலசமயங்களில் என்னை மாதிரி அசமந்தமாய் வெறித்துப் பார்த்து புதிய பதிவு எதுவுமில்லையே என்கிறது; நானும் அதிகம் மெனக்கெடுவதில்லை. நானென்ன சாருநிவேதிதாவா என் படைப்புகளைப் பற்றி எப்போதும் நானே சிலாகித்துப் பேசிக் கொண்டிருப்பதற்கு! யாராவது தற்செயலாக வழிமாறி வந்தவர்கள் என் படைப்புகளால் ஈர்க்கப்பட்டு மறுபடி வந்தால் வாசித்துவிட்டுப் போகட்டும். யாருமே வராவிட்டாலும் பிரச்னையில்லை; என் படைப்புகளை ஒரே இடத்தில் தொகுத்து வைத்துக் கொள்வதற்காக இதில் தொடர்ந்து பதிவிட்டுக் கொண்டுதான் இருக்கப் போகிறேன்!
எது எப்படியோ அபூர்வமாய் வந்து கருத்துச் சொன்ன உங்கள் இருவருக்கும் அனேக வணக்கங்கள்!