(குறிப்பு: இந்தச் சிறுதை 06.12.2009 தேதியிட்ட தினமணிக்க்திரில் ’வந்து சென்ற நிழல் ’ என்னும் தலைப்பில் பிரசுரிக்கப் பட்டிருக்கிறது. தினமணிக்கதிரின் ஆசிரியர் குழுவிற்கு நன்றியுடன்....)
அன்னணூர் இரயில் நிலையத்தில் வந்து நின்ற மின்சார வண்டியிலிருந்து கூட்ட நெரிசலிலிருந்து பிதுங்கிக் கொண்டு வெளியே வந்து விழுந்தாள் அலமேலம்மாள். அவளுக்கு ரொம்பவும் படபடப்பாக இருந்தது. மத்தியான வேளையிலும் என்ன கூட்டம் என்று அலுத்துக் கொண்டாள். எத்தனைமுறை இரயிலில் பிரயாணித்தாலும் இறங்கும் நேரத்தில் எந்தப் பக்கம் பிளாட்பார்ம் வருமென்று குழம்பி விடுகிறது. இன்றைக்கு தூக்கக் கலக்கம் வேறு.
வெயிலின் உக்கிரத்திலும், நகரும் இரயில் வண்டியின் ஜன்னலினூடே முகத்தில் வந்து மோதும் இதமான காற்றின் குளிர்ச்சியில் இலேசாய் கண் அயர்ந்தவள் அப்படியே தூங்கிப் போனாள். நல்லவேளையாக ஏதோ ஒரு நிலையத்தை இரயில் கடந்து கொண்டிருக்கும் போது திடுக்கிட்டு விழித்தவள், பக்கத்தில் உட்கார்ந்திருந்த இளம் பெண்ணிடம் “எந்த ஸ்டேஷன்ம்மா போச்சு…?” என்று கேட்டாள்.
அவள் “தெரியல பாட்டி..” என்று அசிரத்தையாய் பதில் சொல்லி விட்டு, தான் வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தில் மூழ்கிப் போனாள். கடைசி நிலையத்தில் இறங்க வேண்டியவர்களுக்கு இடைப்பட்ட நிலையங்கள் பற்றிய பிரக்ஞை தேவையில்லை போலும். இன்னொருவர் தான், வலிந்து அவராகவே பதில் சொன்னார். “திருமுல்லைவாயில் போயிருச்சு; அடுத்து அன்னணூர் வரப் போகுது பெரியம்மா….” கேட்டதும் அடித்துப் பிடித்துக் கொண்டு எழும்பி கால்களுக்கிடையில் வைத்திருந்த கட்டைப்பையை தூக்கிக் கொண்டு அவசரமாய் இறங்கும் வழியை நோக்கி நகரத் தொடங்கினாள் அவள்.
கோடைவெயில் தீவிரமாக உறைத்தது. ஒரு சோடாவாவது குடித்தால் தேவலாம் போலிருந்தது. சேலை முந்தானையின் ஒரு முனையிலிருந்த முடிச்சை அவிழ்த்துப் பார்த்தாள். இரண்டு ஒரு ரூபாய் நாணயங்களும் ஒரே ஒரு எட்டணாவும் எட்டிப் பார்த்தன. இந்தப் பணத்திற்கு பாக்கெட் தண்ணீர் தான் கிடைக்கும். இப்போதைக்கு அது கூட பரவாயில்லை என்று தான் தோன்றியது அவளுக்கு.
வீட்டிற்குப் போவதற்கு அவள் இன்னும் குறைந்தது மூன்றரை கி.மீ. தூரமாவது நடக்க வேண்டியிருக்கும். இவ்வளவு தூரத்தை ஒருநாளும் அவள் நடந்து கடக்க நேர்ந்ததில்லை. வாழ்க்கை சுழற்றி அடித்த வேகத்தில் எல்லாவற்றையும் பழகிக் கொள்ள வேண்டியதாகி விட்டது. மிகவும் சோர்வாகவும் களைப்பாகவும் உணர்ந்தாள்.
தண்ணீர் பாக்கெட் வாங்கப் போனவளுக்கு அங்கிருந்த டெலிபோனைப் பார்த்ததும் முதலில் தன் பையனுக்கு போன் பண்ணி தன்னை இரயில் நிலையத்திற்கு வந்து மோட்டார் சைக்கிளில் அழைத்துச் செல்லும் படி கேட்டுக் கொள்வது இன்னும் உசிதமாகப் படவே அவனுக்கு போன் பண்ணினாள்.ஆனால் அவன் ரொம்ப தூரத்தில் ஏதோ ஒரு அலுவலகத்தில் நேர்முகத் தேர்விற்காக காத்திருப்பதாகவும் இப்போது அங்கு கிளம்பி வருவது சாத்தியப் படாது என்றும் சொல்லி போனை வைத்தான்.
கடைக்காரரிடம் ஒரு ரூபாய் நாணயம் ஒன்றைக் கொடுக்கவும் “இன்னும் ஒரு ரூபாய் குடும்மா; ரெண்டு கால் ஆயிடுச்சு…” என்றான். “நாலு வார்த்தை பேசுறதுக்குள்ள ரெண்டு கால் ஆயிடுச்சா….” என்று அலுத்துக் கொண்டபடி அவன் கேட்ட பணத்தைக் கொடுத்தாள். காலம் அதி வேகமாகத் தான் ஓடுகிறது என்று தனக்குள் நினைத்துக் கொண்டாள். மிச்சமிருக்கிற எட்டணாவிற்கு தண்ணீர் பாக்கெட் கூடக் கிடைக்காது. சுற்றுமுற்றும் பார்த்தாள். நிலையம் வெறிச்சோடிக் கிடந்தது. இனி அடுத்து இரயில் வரும் நேரத்தில் தான் நிலையம் களை கட்டும்.
இரயில் நிலையத்திலிருந்த குடி தண்ணீர்க் குழாய் கொஞ்சமும் ஈரப்பதமே இல்லாமல் வறண்டு இறுகிப் போய்க் கிடந்தது. எதற்கும் திறந்து பார்க்கலாமென்று திறந்து பார்த்தாள். காற்றுக் கூட வரவில்லை. தண்ணீரைக் காசு கொடுத்து வாங்கிக் குடிக்கிற காலமும் வந்ததே என்று முனகிக் கொண்டாள். தொண்டை வறட்சியாக இருந்தது. தண்ணீர் குடிக்காமல் தொடர்ந்து நடக்க முடியாது என்று தோன்றியது. கடைக்காரனிடமே எட்டணாவைக் கொடுத்து, “ஒரு தண்ணிப் பாக்கெட் கொடேன்….” என்றாள்.
“இன்னும் ஐம்பது பைசா வேணும்; தண்ணிப் பாக்கெட் ஒரு ரூபாய்…” என்றான் அவன் இயந்திரத் தனமாக. “தெரியுமப்பா; வேற சில்லறை இல்ல என்கிட்ட; தாகமா இருக்கு…..” என்றாள் மிகவும் இரங்கத்தக்க குரலில். இதைச் சொல்லி முடிப்பதற்குள் மனசுக்குள் கூசிப் போனாள் அவள்.
கடைக்காரன் என்ன நினைத்தானோ, அல்மேலம்மாளிடமிருந்து காசை மறுத்து விட்டு, தன்னுடைய உபயோகத்திற்காக வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவளிடம் நீட்டினான். கண்கள் பனிக்க பாட்டிலை வாங்கியவள் ஆசை தீரக் குடித்து மிச்சத் தண்ணீரை நன்றியுடன் அவனிடம் திருப்பித் தந்து விட்டு நிலையத்தை விட்டு மெதுவாய் வெளியேறினாள்.
ஏதேதோ யோசணைகளுடன் இரயில் தண்டவாளங்களை தடுமாற்றத்துடன் கடக்கப் போனவளை ஒரு சிறுமியின் குரல் தடுத்து நிறுத்தியது. “பாட்டி அங்கயே நில்லுங்க….எதுத்தாப்புல இரயில் வந்துக்கிட்டுருக்கு…” என்று கிட்டத் தட்ட அலறினாள் அந்தச் சிறுமி. அலமேலம்மாள் அப்படியே ஸ்தம்பித்து நிற்பதற்கும் இரயில் தட தட வென கடந்து போவதற்கும் சரியாக இருந்தது.
“படுபாவி ஸ்டேஷனுக்குப் பக்கத்துல வரும் போது கூட சத்தம் குடுக்காம இரயில ஓட்டிட்டுப் போறான் பாரு….” என்று சிறுமி என்ஞின் டிரைவரைத் திட்டியது இரயில் கிழித்துப் போன காற்றில் அரைபட்டு கரைந்து போனது. சிறுமியை கனிவாய்ப் பார்த்தபடி நடக்கத் தொடங்கினாள் அலமேலம்மாள். கையிலிருந்த பை பேயாய்க் கனத்தது. மகளிடமிருந்தாவது ஒரு ஐம்பது ரூபாய் வாங்கிக் கொண்டு வந்திருக்கலாம். அவளும் “வழிச் செலவுக்கெல்லாம் பணம் வச்சிருக்கையில்லம்மா….” என்று கேட்கத்தான் செய்தாள். “அதெல்லாம் தம்பி தாராளமாக் கொடுத்துத் தான் அனுப்பினாண்டி….” என்று சமாளித்துக் கிளம்பி விட்டாள்.
கேட்டிருந்தால் அவளாலும் ஏதாவது தர முடிந்திருக்குமா என்று சந்தேக மாகத்தான் இருந்தது. அவள் கேட்ட தொனியில் சுரத்தே இல்லை. புகுந்த வீட்டில் அவள் சந்தோஷமாக இருப்பதற்கான அறிகுறிகளே தெரியவில்லை. எதையும் அவள் வெளிப்படையாய் சொல்லவில்லை என்றாலும் தானும் அவளின் தம்பியும் மனக்கஷ்டப் படக் கூடாது என்பதற்காக அவளின் கஷ்டங்களை மறைக்கிறாளோ என்று அலமேலம்மாளுக்கு சந்தேகமாக இருந்தது.
மகளுடன் மனம் விட்டுப் பேசுவதற்கான தனிமையும் வாய்க்கவே இல்லை. எப்போதும் சம்பந்தி வீட்டைச் சேர்ந்தவர்கள் யாராவது கூடவே இருந்தார்கள். அவசரப் பட்டு பெண்ணை நரகத்தில் தள்ளி விட்டு விட்டோமோ என்று அல்மேலம்மாளுக்கு மனக் கிலேசமாக இருந்தது.
அவளின் வீட்டுக்காரர் ரிட்டயர்ட் ஆனபோதே, கிடைத்த பணத்தை வைத்து வசந்திக்கு கல்யாணம் செய்து அனுப்பி விடலாம் என்று தான் சொன்னாள் அலமேலம்மாள். அப்போது நல்ல வரன்களும் வந்தன. ஆனால் எவ்வளவு சொல்லியும் கேட்காமல், மொத்தப் பணத்தையும், கையிலிருந்த சேமிப்புகளையும் சேர்த்து அதிக வட்டிக்கு ஆசைப் பட்டு பைனான்ஸ் கம்பெனிகளில் போய் கொட்டினார் அவர்.
“வசந்திக்கு இருபது வயசுதான ஆகுது இப்ப….. இன்னம் மூணே வருஷத்துல போட்ட பணம் இரட்டிப்பாயிடும்… அதவச்சு நம்ம பொண்ணுக்கு இன்னும் சிறப்பா கல்யாணம் செய்து அனுப்பலாம்…” என்றார். ஆனால் வெகு சீக்கிரமே பைனான்ஸ் கம்பெனிகள் மூழ்கிப் போக, முதலுக்கே மோசமாகி அந்த அதிர்ச்சியிலேயே அவர் செத்துப் போனார்.
ஒரே நாளில் வாழ்க்கையின் வீழ்ச்சி அவளை நிலைகுலையச் செய்து விட்டது. கல்யாண வயதில் முதிர்ந்து நிற்கும் பெண்; படித்துக் கொண்டிருக்கும் பையன் என்று இரண்டு பிள்ளைகளுடன் நிராதரவாய் தெருவில் நின்ற போது ஆறுதலுக்குக் கூட யாருமில்லை. எங்காவது வேலைக்குப் போகலாமென்றால், அதுவரைக்கும் வீட்டின் சமையலறை தவிர்த்து வேறு உலகம் அறிந்திருக்க வில்லை. அதிகம் படித்திருக்கவும் இல்லை. அக்கம் பக்கத்து வீடுகளுக்குப் போய் பத்துப் பாத்திரம் தேய்த்துப் பிழைக்கலா மென்றால் அதற்கும், முன்னர் வாழ்ந்த வாழ்க்கை முட்டுக்கட்டை போட்டது - கௌரவம் என்ற பெயரில்.
என்ன செய்வது என்று யோசித்து அவசர அவசரமாய் வீட்டை விற்று விட்டு, பக்கத்திலேயே மிகச்சிறிய ஒரு வாடகை வீட்டிற்கு குடி போனார்கள். கொஞ்ச நாட்களுக்கப்புறம் தன்னுடைய நகைகளையும் வீடு விற்று வந்த பணத்தின் பெரும் பகுதியையும் போட்டு மகளுக்குக் கல்யாணம் பண்ணி அனுப்பினாள். மிச்சப் பணத்தை வங்கியில் டெபாஸிட்டாகப் போட்டு அதற்குக் கிடைக்கும் சொற்ப வட்டிக்குள் வாழ்க்கையின் தேவைகளைச் சுருக்கிக் கொண்டார்கள். பையனும் ஒரு வழியாய் இன்ஜினியரிங் முடித்து விட்டான். அவனுக்கொரு வேலை கிடைத்து விட்டால் விடிந்து விடுமென்று தோன்றியது அலமேலம்மாளுக்கு.
இரயில் நிலைய வெளிகளைத் தாண்டி மேடேறிய போது, திருப்பத்தில் எதிர்ப்பட்ட பெண் திடீரென்று ”பெரியம்மா நீங்களா?” என்று முகம் பிரகாசமானாள். அலமேலம்மாளுக்கு சட்டென்று அவளை யாரென்று அடையாளந் தெரியவில்லை. கூர்ந்து பார்த்த போது புரிபட்டது. “சுந்தரியில்ல நீ! நீ எங்கேடி இந்தப் பக்கம்? பெரிய மனுஷியாட்டம் ஆயிட்டயேடி…ஆமா, ஆயிடுச்சே அஞ்சு வருஷத்துக்கும் மேல…குடும்பத்தோட சொந்த கிராமத்திற்கு குடி போய் விட்டதா இல்ல கேள்விப்பட்டேன்….அண்ணன், அப்பா எல்லாம் சௌக்கியம் தான…..” பிரமை விலகாமல் பேசிக் கொண்டு போனாள் அலமேலம்மாள்.
சுந்தரியின் முகத்தில் கருமை படர்ந்தது. “கிராமத்துக்குத் தான் போனோம் பெரியம்மா....ஆனா அங்கயும் எங்கள யாரும் நிம்மதியா வாழ உடல; இங்க வர்ற பேப்பர் அங்கயும் தான வரும்! ஊருக்குப் போன கொஞ்ச நாளிலேயே நாங்க பெங்களூர்ப் பக்கம் பிழைக்கப் போயிட்டோம்….இப்ப முருகப்பா பாலிடெக்னிக்குல சேர்றதுக்கு அப்ளிகேஷன் வாங்கிட்டு, திரும்ப பெங்களூருக்குப் போயிட்டுருக்கேன் பெரியம்மா…..” என்றாள் சுந்தரி.
தினப்பத்திரிக்கையில் வந்த ஒரு செய்தி ஒரு குடும்பத்தையே குலைத்துப் போட்ட கொடூரம் அலமேலம்மாளுக்கு ஞாபகம் வந்தது. அலமேலம்மாளின் வீட்டுக்கு எதிர்த்தாப் போலிருந்த காலி மனையில் குடிசை போட்டுத் தங்கி இருந்தது சுந்தரியின் குடும்பம். மனைக்குச் சொந்தக்காரன் காலிமனையை காபந்து பண்ணுவதற்காக இவர்களைக் குடி வைத்திருந்தான்.
ஏழ்மையான குடும்பம்; ஆனால் செம்மையான வாழ்க்கை. சுந்தரியின் அப்பா பெயிண்டிங் வேலைகள் செய்வார். அவளின் அம்மாவிற்கோ நிறைய திறமைகள். கை ரேகை பார்ப்பாள்; குறி சொல்வாள்; அவ்வப்போது அவளின் மீது சாமி இறங்கி அருள்வாக்கும் சொல்வாள். அவள் சொல்வது அப்படியே பலித்தது என்று பலரும் பேசிக் கொள்வதை அலமேலம்மாள் கேட்டிருக்கிறாள். வீடு தங்கவே மாட்டாள். கோயில், திருவிழா என்று அலைந்து கொண்டிருப்பாள். எப்போதும் மஞ்சள் உடை. நெற்றியில் ஒரு ரூபாய் அளவிற்கு பெரிதாய் குங்குமம். அதையும் மீறி அப்படி ஒரு அழகில் ஜொலிப்பாள்.
சுந்தரியும் அவளின் அண்ணனும் பள்ளிக்குப் போகும் நேரம் தவிர்த்து மற்ற நேரமெல்லாம் அலமேலம்மாள் வீட்டில் தான் பழியாய்க் கிடப்பார்கள்.ஏவிய வேலைகளைச் செய்வார்கள். கொடுத்ததைச் சாப்பிட்டுக் கொள்வார்கள். சுந்தரியின் அப்பாவும் தென்னை மரத்திலேறி தேங்காய் பறிப்பது, அவற்றை உரித்து,கடைகளுக்குக் கொண்டு போய் விலைபேசி விற்று வருவது…. என்று எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வார்.
ஒருநாள் காலையில் குறி சொல்வதற்கு வெளியில் கிளம்பிப் போன சுந்தரியின் அம்மா இரவில் வீடு திரும்பவில்லை. எங்கு போனாள் என்கிற தகவலும் இல்லை. அன்றைக்கு நடுராத்திரி சுந்தரியின் அப்பா அலமேலம்மாவின் வீட்டைத் தட்டி “சுந்தரியோட அம்மா போலீஸ் ஸ்டேஷன்ல இருக்காளாம்யா…” என்று அழுதார். இருவரும் அவசரமாய்க் கிளம்பிப் போய், அவளை அங்கிருந்து மீட்டுக் கொண்டு வந்தார்கள்..
அடுத்தநாள் தினப் பத்திரிக்கையில் வந்த செய்தி தெருவிற்கே அவலானது. சென்னையில் ஒரு ஹோட்டலில் போலீஸ் ரெய்டு என்றும் அதில் விபச்சார அழகிகள் கைது என்றும் போட்டிருந்தார்கள். அழகிகளின் புகைப்படங்கள் வண்ணத்தில் அச்சேறியிருந்தன. அதில் சுந்தரியின் அம்மா மஞ்சள் உடையில் பெரிய குங்குமத்துடன் தனித்துத் தெரிந்தாள்.
குறி கேட்பதற்காகத் தான் தன்னை ஒருவன் அங்கு வரச் சொல்லி இருந்தான் என்று அவள் சொன்னதை போலீஸ், பொதுஜனம் யாருமே நம்பவில்லை. அசிங்க அசிங்கமாய்ப் பேசி அவமானப் படுத்தினார்கள். பெண்கள் கூடுகிற இடங்களில் எல்லாம் இதே பேச்சாகவே இருந்தது. இரண்டாம் நாள் சுந்தரியின் அம்மா தற்கொலை செய்து கொண்டாள். அதற்கப்புறம் ஒருவேளை சுந்தரியின் அம்மா உண்மையைத் தான் சொல்லி இருப்பாளோ…. அநியாயமாய் ஒரு உயிர் போய் விட்டதே என்று சிலர் உச்… கொட்டினார்கள். சுந்தரியின் குடும்பம் வீட்டைக் காலி பண்ணிக் கொண்டு எங்கு போகிறோம் என்று யாரிடமும் சொல்லிக் கொள்ளாமலேயே தெருவிலிருந்து வெளியேறினார்கள்.
“பெங்களூர்ல எப்படிடி, பொழப்பு நல்லா படியாப் போகுதா.....?”
“எங்க பெரியம்மா, அம்மா எறந்தத அப்பாவால தாங்கிக்கவே முடியல; ரொம்ப உடைஞ்சு போயிட்டார்....அன்னைக்கு ராத்திரியெல்லாம் எவ்வளவோ எடுத்துச் சொன்னார்; யாரு என்ன வேணா சொல்லட்டும், உன்ன நான் நம்புறேன்னு.... அம்மாவும் சமாதானமாயிட்டாப்புல தான் பேசுனாள்; அதான் எல்லாரும் கொஞ்சம் கண் அசந்துட்டோம்.... அந்த நேரம் பார்த்து ஏற்கெனவே எங்களுக்குத் தெரியாம வாங்கி மறைச்சு வச்சுருந்த வெஷத்தக் குடிச்சுட்டுப் படுத்து ஒரேடியா தூங்கிப் போயிட்டா....அப்பாவால முன்ன மாதிரி வேலைக்குப் போக முடியல.... அண்ணன் தான் ஐ.டி.ஐ. முடிச்சுட்டு ஒரு கம்பெனியில டெம்ப்ரரியா வேலைக்குப் போயிட்டுருக்கான் பெரியம்மா....” கண் கலங்கினாள் சுந்தரி.
அலமேலம்மாளுக்கும் துக்கமாகத் தான் இருந்தது. ஆனலும் இனி அழுது என்ன ஆகப் போகிறது என்று அவளைத் தேற்றியபடி “வீட்டுக்கு ஒருவழி வந்துட்டுப் போயேன்டி…” என்றாள்.
“எனக்கும் ஆசையாத்தான் இருக்கு பெரியம்மா...அண்ணன், அக்காள் எல்லாத்தையும் பார்க்கணுமின்னு....ஆனாலும் என்னை மன்னிச்சுக்குங்க பெரியம்மா; நம்ம தெருக்காரங்க யாரையும் நேருக்கு நேரா பார்க்கிற தைரியம் எங்களுக்கு இன்னும் வரல….அது சரி நீங்க ஏன் பெரியம்மா நடந்து போயிட்டு இருக்கீங்க! இருங்க நான் போயி ஒரு ஆட்டோ புடிச்சுட்டு வர்றேன்….” என்றாள் கரிசனமாய்.
இவளுக்கு தங்களுடைய இப்போதைய குடும்ப நிலைமை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தெரியவும் கூடாது என்று விரும்பினாள் அலமேலம்மாள்.
“இல்லடி; டாக்டர் முடிஞ்சப்பல்லாம் நடக்கச் சொல்லியிருக்கிறார் அதான்…..” சமாளிக்க முனைந்தாள். “அடப் போங்க பெரியம்மா; அதுக்காக இந்த வேணாத வெயில்லயா நடப்பாங்க…..”என்றபடி இவள் எவ்வளவோ மறுத்தும் கேட்காமல் ஓடிப்போய் ஒரு ஆட்டோவைப் பிடித்துக் கொண்டு வந்து, ஏற்றி அனுப்பி விட்டுத் தான் அவள் விடைபெற்றுப் போனாள்.
ஆட்டோவில் பயணிக்கும் போது முள்ளின் மீது உட்கார்ந்திருப்பதாய் உணர்ந்தாள் அலமேலம்மாள். சிறுபெண் அன்பினாலும், ஆர்வக் கோளாறினாலும் ஆட்டோ அமர்த்திக் கொடுத்துவிட்டு அவள் பாட்டுக்கு தன் வழியில் போய் விட்டாள். வீட்டில் போய் இறங்கியதும் ஆட்டோ சத்தம் கொடுக்க வேண்டுமே! எப்படிக் கொடுப்பது? பேசாமல் தன்னிடம் பணமில்லை என்கிற உண்மையை சுந்தரியிடம் சொல்லி இருக்கலாமோ? சுய கௌரவத்தைக் காப்பாற்றும் முயற்சியில், இன்றைக்கு சர்வ நிச்சயமாய் ஆட்டோக்காரனிடம் அவமானப் படத் தான் போகிறோம் என்று பயமாக இருந்தது அவளுக்கு.
வீட்டில் எங்காவது பணமிருக்குமா? அலமாரிகளை மனக் கண்ணால் துழாவினாள். ம்கூம். மகளைப் பார்க்கக் கிளம்பும் போது சில்லறைக் காசுகள் முதற்கொண்டு எல்லாவற்றையும் சேகரித்துக் கொண்டு தான் கிளம்பியிருந்தாள். அக்கம் பக்கத்தில் யாரிடமாவது கடன் வாங்கிக் கொடுக்க முடியுமா? ஆனால் அவசரத்திற்கு யார் தருவார்கள்! சட்டென்று ஒரு பொறி தட்டியது. உளுந்தம் பருப்பு டப்பாவிற்குள் எப்போதோ போட்டு வைத்து மறந்து போன 50ரூ. ஞாபகத்திற்கு வந்தது. அது பத்திரமாய் இப்போதும் அங்கேயே இருக்குமா? ஒருவேளை தன் மகனின் கண்ணில் எப்பவாவது பட்டு அவன் எடுத்து செலவழித்திருப்பானா? அப்படியே இருந்தாலும் அந்தத் தொகை போதுமா? எப்பவும் இரயில் நிலையத்திலிருந்து வீட்டிற்கு வருவதற்கு 50ரூ. தான் தருவது. ரோடு சரியாயில்லை என்று கொஞ்சம் சுற்றிக் கொண்டு வேறு போகிறான். பெட்ரோல் விலை வேறு தினசரி ஏறிக் கொண்டிருக்கிறது. அதை இதைச் சொல்லி இவன் அதிகம் கேட்காமல் இருக்க வேண்டும்!
“தென்றல் நகர்ல எந்தத் தெரு பாட்டிம்மா…?” போகிற போக்கில் கேட்டான் ஆட்டோக்காரன். இவள் வழி சொன்னாள். வீட்டு வாசலில் ஆட்டோ நின்றதும், ”கொஞ்சம் இருப்பா; வீட்டுக்குள்ள போய்த் தான் பணம் எடுத்தாறணும்….” என்றபடி அவசரமாய் இறங்கினாள்.
“இல்ல பாட்டியம்மா, ஆட்டோ அமர்த்துன பொண்ணே பணம் குடுத்துருச்சே…..!” என்று சொன்னவன், பதிலை எதிபார்க்காமல் ஆட்டோவை விருட்டென்று கிளப்பிப் போனான்.
-- முற்றும்
No comments:
Post a Comment