Tuesday, August 9, 2016

சிறுகதை: காதல் என்கிற பெயரில்…..

                         பத்திரிக்கைக்காரன் என்றால் அவனுக்கு மூன்றாவது கண் ஒன்று முளைத்திருக்க வேண்டும்; அதுவும் முழு நேரமும் விழித்திருக்க வேண்டும் என்று எடிட்டோரியல் மீட்டிங்கில் எங்களின் எடிட்டர் தீவிரமாய்ச் ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தார்.
                        அவர் சொல்வதெதுவும் என் மூளைக்குள் ஏறாமல்  அவரின் டேபிளில் நானெழுதி வைத்திருக்கும் புரஃபோசலுக்கு அனுமதி கிடைக்குமா கிடைக்காதா என்று தீவிரமாய் யோசித்துக் கொண்டிருந்தேன்.
                        நான் ராஜமாணிக்கம்; ஒரு வாரப் பத்திரிக்கையில் உதவி ஆசிரியராக வேலை செய்கிறேன். படித்தது என்ஜினியரிங். ஆனால் பார்ப்பது பத்திரிக்கைப் பணி. கல்லூரியில் படிக்கும் காலத்தில் பகுதிநேர மாணவ நிருபராக பிரபல பத்திரிக்கை நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும் வாய்ப்புக் கிடைத்தது.
                        அந்த எழுத்தார்வமே பெரும் போதையாகி என்னை இயக்க, வேலை என்பதை சம்பாதிப்பதற்கு மட்டுமானதாய் எடுத்துக் கொள்ளாமல் சந்தோஷத்திற்கு மானதுமாய் பாவித்ததால், படித்து முடித்த பின்பும் அதே பணியிலேயே ஆனால் வேறொரு பத்திரிக்கை அலுவலகத்தில் தொடர்கிறேன். நிறைய சவால்களும் கொஞ்சம் சவடால்களும் நிறைந்த பணி.
                        என் அலுவல்களில் ஒரு பகுதி தினப் பத்திரிக்கைகளை வாசித்து, அதில் சுவாரஸ்யமாக அல்லது மனதைப் பாதிக்கும் விதமாக செய்தி ஏதாவது வந்திருந்தால், அதைத் துரத்திக் கொண்டு போய், சம்பந்தப்பட்டவர்களைச் சந்தித்துப் பேசி, மேலும் விபரங்கள் சேகரித்து, கட்டுரையாக எழுதி ஆசிரியரின் பார்வைக்கு வைப்பேன். அவர் வெற்றிலை மென்றது போக மிச்சமிருக்கிற சொற்ப நேரத்தில் அதைப் படித்துப் பார்த்து அனுமதித்தால் பிரசுரமாகும்.
                        அப்படித் தான் காதலர் தினத்திற்கு அடுத்த நாளும் தினப் பத்திரிக்கை செய்திகளை அசுவாரஸ்யமாக மேய்ந்து கொண்டிருந்தேன். சில அமைப்புகள் காதலர்தினக் கொண்டாட்டங்களை எதிர்ப்பதும் இன்னும் சில அமைப்புகள் அவற்றை ஆதரிப்பதுமான வழக்கமான செய்திகளே நிரம்பிக் கிடந்தன. ஆனால் அதிலிருந்த ஒரு செய்தி என்னை வசீகரித்தது.
                        காதலர் தினத்தில் ஒரு காதலன் தன் பிரியத்திற்குரிய காதலிக்கு, பூங்கொத்துக்களை வாங்கிக் கொடுக்கலாம்; அழகழகான வழுவழுப்பான வாழ்த்து அட்டைகளை வாங்கி அனுப்பி வைக்கலாம்; அல்லது மறக்க முடியாத பொருட்கள் எதையாவது பரிசளித்து மகிழலாம்.
                        எதுவும் கொடுக்க முடியாத பட்சத்தில் சில அழுத்தமான முத்தங்களை மட்டுமாவது பரிமாறிக் கொண்டு அந்த நாளை இனிமையாய்க்  கடந்து போயிருக்கலாம். ஆனால் இந்த வருஷக் காதலர் தினத்தில் ஒரு காதலன் தன் காதலியின் முகத்தில் திராவகம்  ஊற்றிக் கொண்டாடியிருக்கிறான்.
                        செய்தியின் சுருக்கம் இது தான். 
மதுரையில் காதலர் தினத்தில் நடந்த பயங்கரம்!
தன்னைக் கல்யாணம் செய்ய மறுத்த காதலியின் முகத்தில் ஆசிட் வீசி விட்டு ஓடிப் போனான் அவளின் முன்னாள் காதலன்!  
                  
                   பளிச்சென்று மூளைக்குள் பல்பு எரிந்தது எனக்கு. இந்த செய்தியைத் துரத்திக் கொண்டு போய் விசாரித்து ஒரு நீண்ட கட்டுரையாக எழுதும் உத்தேசத்தில் எடிட்டரின் டேபிளில் அதற்கான அனுமதி வேண்டி  அவசரம் என்று குறிப்பிட்டு அவர் கண் பார்வையில் படும்படி வைத்து விட்டு எடிட்டோரியல் மீட்டிங்கில் நெர்வஸாக நகம் கடித்துக் கொண்டிருந்தேன்.
                        மீட்டிங் முடிந்த கொஞ்ச நேரத்திலேயே ஆசிரியர் என்னை அழைத்து, ஆச்சர்யமாக கேள்வி எதுவும் கேட்காமலேயே என்னுடைய புரஃபோசலுக்கு பச்சை மையில் ஓ.கே என்றெழுதி என்னிடமே தரவும், அன்றைக்கு இரவே, அலுவலகத்தில் அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு மதுரை நோக்கிப் பயணமானேன்.
                        முகத்தில் ஆசிட் வீசப்பட்ட ஆனந்தி அரசாங்க மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டிருந்தாள். அவளைப் பார்ப்பதற்கு மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை. அவளின் தாயால் அதிகம் பேச முடியவில்லை. அவள் பேச வாய் திறந்தாலே அழுகை தான் முட்டிக் கொண்டு வந்தது.
                        ஆசிட் ஊற்றப்பட்ட பெண்ணின் அக்காளும் அவளின் கணவனும் அவர்களுடனிருந்தார்கள். அவர்களும் இந்நிகழ்ச்சியின் பின்னணிகள் பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை.
                        அக்கம் பக்கத்தில் நிறைய நபர்களைச் சந்தித்து பேட்டி கண்டு இது சம்பந்தமான விபரங்களைச் சேகரித்தேன். அதில் மூன்று முக்கியமான நபர்கள் தந்த வாக்குமூலங்கள் இந்த சம்பவத்தின் பின்னணிகளைப் புரிந்து கொள்வதற்கு பெரிதும் உதவியாக இருந்தன. வாக்குமூலங்களைத் தொகுத்து நீண்ட கட்டுரையாக எழுதி ஆசிரியரின் பார்வைக்கு வைத்தேன்.
                        கட்டுரையை வாசித்தவர் இதை முழுசாய் பிரசுரிக்க முடியாது என்றும் அதிகபட்சம் ஒரு பெட்டிச் செய்தியாக மட்டுமே இதை வெளியட முடியும் என்றும் அது இந்தக் கட்டுரைக்கும் உன் உழைப்பிற்கும் மரியாதை செயவதாகாது என்றும் பதவிசான வார்த்தைகளில் சொல்லி பிரசுரிக்க மறுத்து விட்டார்.
                        எங்களின் பத்திரிக்கைப் பணியில் இதெல்லாம் சகஸம்தானே என்று அப்போதைக்கு என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டு வேறு பணிகளில் மூழ்கிப் போனேன். சில நாடகளுக்கு அப்புறம் அதை ஒரு சிறுகதையாகவும் எழுதிப் பார்த்தேன். அதுவும் சரியாக வரவில்லை.
                        அதனால் என்னிடமே நீண்ட நாட்களாக தூங்கிக் கொண்டிருந்த மூன்று வாக்குமூலங்களையும், கொஞ்சம் பட்டிதட்டி, எடிட் பண்ணி என்னுடைய புனைவு மொழியில் அப்படியே என்னுடைய இணையதள வாசகர்களின் பார்வைக்கு வைக்கிறேன்.

வாக்குமூலம்: 1 – முத்தையா
                        என் பெயர் முத்தையா. அப்பா ஆதிமூலம். ஆனந்தி என்னுடைய சொந்த மாமன் மகள் தான்; எனக்கு முறைப்பெண்ணும் கூட. அவளின் பெயரை உச்சரித்தாலே மனசின் ஓரத்தில் தித்திக்கும்.  அவள் பிறந்த போது எனக்கு ஐந்து அல்லது ஆறு வயதிருக்கும். அப்போது நாங்கள் பந்தல்குடியில் குடி இருந்தோம்.
                        அவளைப் பார்ப்பதற்காக அப்பா என்னைக் கைபிடித்து கொப்புச்சித்தன் பட்டிக்கு நான்கு மைல் தூரம் நடத்திக் கொண்டு போனது நேற்று நடந்தது போல் இன்னும் பசுமையாக என் நினைவில் இருக்கிறது. அப்பா எவ்வளவோ வற்புறுத்தி அழைத்த போதும் அம்மா எங்களுடன் வர மறுத்து விட்டாள்.
                        என்னைத் திண்ணையில் சம்மணங்கால் போட்டு  உட்காரவைத்து என் மாமன் அவளைத் துணிப் பொட்டலமாய்த் தூக்கிக் கொண்டு வந்து என் மடியில் கிடத்தினார்.
                        “நல்லாப் பார்த்துக்கடா... இவதான் உன் பொண்டாட்டி...... என்று சொன்னார். அப்பாவும் ஆமோதிப்பது போல் சிரித்தார். அப்போது நான் ரொம்பவும் வெட்கப்பட்டேன். அவளுக்கு பெயர் கூட சூட்டப் பட்டிருக்கவில்லை. என் விரலை அவளிடம் கொடுக்கவும் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டு எச்சில் ஒழுக பல் முளைக்காத ஈறுகள் விரித்து அவள் சிரித்தது இன்னும் என் நினைவி லிருக்கிறது.
                        ஆனந்தியின் அக்காள் என்னிடம் வந்து “என் தங்கச்சிய நீ ஏண்டா தூக்கி வச்சுருக்குற......? என்று சொல்லி கால்ச் சட்டைக்கு கீழே தெரிந்த என் தொடையில் நறுக்கென்று கிள்ளி வைத்தாள். நான் அம்மா என்று அலறினேன். அவளும் என் தங்கச்சிய என்கிட்டக் குடுடா..... என்று என்னை விடச் சத்தமாய் அழத் தொடங்கி விட்டாள். மாமன் வந்து அவளை சமாதானப் படுத்த முயற்சித்தார். ஆனாலும் குழந்தையை என் மடியிலிருந்து இறக்கிய பின்பு தான் அவளின் அழுகை நின்றது.
                        அவளின் அக்காவிற்கு அப்போது என்னை விட இரண்டு வயது அதிகம். அவளுக்கு என்னைக் கண்டால் எப்போதுமே பிடிக்காது. அவளுக்கு மட்டுமல்ல; அவளின் அம்மா – அதாவது என் அத்தைக்கும் எங்கள் குடும்பத்தைப் பிடிக்காது. அது அவளுக்கும் என் அம்மாவுக்குமான ஆரம்பகால நாத்தனார் சண்டைகளாலும் மனஸ்தாபங்களாலும் மனதில் வரித்துக் கொண்ட வன்மத்தால் நிறைந்தது.
                        ஆனந்தியின் அப்பா சிறுவயதிலேயே ஒரு சாலை விபத்தில் இறந்து போனார். வாழவழி தெரியாமல் அவர்கள் நிர்கதியாய் நின்ற போது, அம்மாவின் எதிர்ப்பையும் மறுப்பையும் மீறி ஆனந்தியின் குடும்பத்தை அப்பா பந்தல்குடிக்கே கொண்டு வந்து தனி வீடெடுத்து குடிவைத்து அவர்கள் கௌரவமாய் பிழைப்பதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார்.
                        கால ஓட்டத்தில் அத்தைக்கு எங்கள் குடும்பத்தின் மீதிருந்த கோபம் கொஞ்சம் கொஞ்சமாய்க் குறையத் தொடங்கியது. ஆனால் என்னுடைய அம்மா இன்னும் கூட அவர்களின் குடும்பத்தின் மீது அதே தீராப் பகையுடனேயே தான் இருக்கிறார். என்ன சொல்லியும் அவளை மாற்ற முடியவில்லை என்னால்.
                        ஆனந்தி ஒரு அற்புதமான பெண். அவள் பந்தல்குடியில் பெரும்பாலும் எங்கள் வீட்டிலிருந்து தான் வளர்ந்தாள். அவளுக்கு நன்றாக படிப்பு வந்தது. எனக்கோ அது எட்டிக்காயாய் கசந்தது. அதனால் அவள் படித்தாள்; நான் அவள் படிப்பதை வேடிக்கை பார்த்தேன். ஆனால் நானும் அவளும் ஒன்றாய்த் தான் வளர்ந்தோம். இருவருக்கும் ஒருவர் மீது ஒருவருக்கு அளவுக்கதிகமான பிரியமுமிருந்தது.
                        நான் பத்தாம் வகுப்பு பெயிலான கையோடு, ஊர் சுற்றிக் கொண்டு அலைந்தேன். அப்புறம் அப்பாவுக்கு ஒத்தாசையாக அவருடன் சேர்ந்து விவசாயத்தைக் கவனித்துக் கொண்டேன். ஆனந்தி ப்ளஸ் டூ முடித்த பின்பு, அவளுக்கு கோயம்புத்தூரில் என்ஜினீயரிங் கல்லூரியில் இடம் கிடைத்தது.
                        அவளின் அம்மா அவ்வளவு தூரம் போயெல்லாம் படிக்க வேண்டாம் என்றாள். அத்தை அப்படிச் சொன்னதற்குக் காரணம் மகளைப் பிரிந்திருக்க வேண்டுமே என்பது மட்டுமல்ல; அவளால் அவ்வளவு செலவழித்து படிக்க வைப்பது சிரமம் என்றும் நினைத்தாள்.
                         நானும் அப்பாவும் தான் பிடிவாதமாக அத்தையை சமாதானப் படுத்தி ஆனந்தியை கோயம்புத்தூருக்கு அழைத்துப் போய் கல்லூரியிலும் பெண்கள் விடுதியிலும் சேர்த்து விட்டு வந்தோம்.                              அப்பா அம்மாவிற்குத் தெரியாமல் உதவினார் என்றாலும் ஆனந்தி படித்து முடிப்பதற்குள் அத்தை படாத பாடு பட்டு விட்டாள். அல்லும் பகலும் அயராத உழைப்பு. ஆனந்தியும் பொறுப்பை உணர்ந்து சிரத்தையாகப் படித்தாள். அவள் என்ஜினீயரிங் படித்து முடிக்கவும், அவளுக்கு காம்பஸ் இண்டர்வியூவில் மதுரையில் இருந்த ஒரு கம்யூட்டர் நிறுவனத்தில் வேலை கிடைத்தது.
                        ஆனந்தி அங்கேயே விடுதியில் தங்கிக் கொண்டு விடுமுறை தினங்களில் பந்தல்குடிக்கும் வந்து போய் கொண்டிருந்தாள். போன வருஷந்தான் என்னுடைய அப்பாவும் தவறிப் போனார்.
                        ஆனந்தியை எனக்கு மணமுடித்துக் கொடுக்க அத்தைக்கு ஆசை இருந்தது.
                        ஆனாலும் அவ்வளவு படித்த பெண்ணை பத்தாம் வகுப்பு பெயிலான நான் எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும் என்று தயங்கி நான் தான் தெரிந்தவர்கள் பலரிடம் சொல்லி வைத்து, அவளுக்கு மாப்பிள்ளை தேடினேன்.
                        சிவகாசியிலிருந்து ஒரு வரன் வந்தது. அது தகைந்து, ஆனந்தியின் திருமணத்திற்கான ஏற்பாடுகளை நானும் அத்தையும் செய்து கொண்டிருந்தோம். அதற்குள் என்னன்னவோ நடந்து விட்டது.
                        எவனோ ஒரு முட்டாள் ஆனந்தி ஆபிஸ் போகும் போது மறித்து அவள் மீது ஆசிட் வீசி விட்டு ஓடி விட்டான். பத்திரிக்கைகளும் போலீஸும் அவனைக் காதலன் என்று கதை கட்டிக் கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக எனக்குத் தெரியும் இது காதல் இல்லை.
                        நீங்களே சொல்லுங்கள், நிஜமாக காதலிப்பவன் எவனும் தான் காதலிக்கும் பெண்ணின் முகத்தை இப்படிக் கோரப் படுத்திப் பார்க்க விரும்புவானா? அவனொரு மிருகம்; அவ்வளவு தான்.
                        அழகு தேவதையாய் வலம் வந்த என் அத்தை பெண்ணின் முகம் ஆசிட் வீச்சால் இப்போது கோரமாகி, அவள் உயிருக்கும் போராடிக் கொண்டிருக்கிறாள். ஆசிட் ஊற்றியவனின் முகத்திலும் இதே மாதிரி ஆசிட் ஊற்றி அதன் வலியையும் வேதணையையும் அவனை உணரச் செய்ய வேண்டும்; அப்போது தான் என் மனசு ஆறும்....! 

வாக்குமூலம்: 2  – கதிர்வேல்        
                         விருதுநக்ர் மாவட்டத்தில் தீப்பெட்டிக்கும் பட்டாசுக்கும் பெயர் போன சிவகாசி தான் எனக்கு சொந்த ஊர். நடிகை ஸ்ரீதேவியின் பூர்வீகம் கூட சிவகாசி தான் தெரியுமா? சில மாதங்களுக்கு முன்பு பந்தல்குடி என்னும் ஊருக்கு அம்மாவுடன் போய் எனக்கு திருமணத்திற்காக ஆனந்தி என்கிற பெண்ணைப் பார்த்து பேசி முடித்து விட்டு வந்தோம்.
                         நாங்கள் பெண் பார்த்துவிட்டு வந்த அடுத்த நாளே, அகிலன் என்றொருவன் என்னை எங்களின் பள்ளியில் வந்து சந்தித்தான். அவன் தன்னை ஆனந்தியின் காதலன் என்று சொல்லிக் கொண்டான்.
                        அன்றைக்கு நான் காலையில் பள்ளிக்குள் நுழைந்து கையெழுத்துப் போட்டுக் கொண்டிருக்கும் போது, என்னுடன் வேலை பார்க்கும் சக ஆசிரியை புவனேஸ்வரி மேடம் “கதிர்வேல் ஸார், அகிலன்னு ஒருத்தர் உங்களச் சந்திக்கனும்னு காலையிலருந்து வந்து காத்திருக்கிறார்; பார்த்தீங்களா.....” என்றாள்.
                        எனக்கு அகிலன் என்று யாருடனும் பரிச்சயமிருக்கவில்லை; எனக்குத் தெரிந்த ஒரே அகிலன் தமிழின் பிரபல எழுத்தாளர்; சித்திரப் பாவை என்ற நாவலுக்காக ஞானபீட விருதெல்லாம் வாங்கியவர். அவர் இப்போது உயிரோடு இல்லை. அப்படியே உயிரோடிருந்தாலும் இவ்வளவு காலையில் என்னைச் சந்திக்க அவர் வந்து காத்திருக்க எந்த முகாந்திரமும் இல்லை என்று தோன்றியது.
                        அப்படியா, நான் பார்க்கலையே! எங்க இருக்கார்.....என்றேன் ஆர்வம் மேலிட.
                        சுற்றுமுற்றும் கண்களை அலைய விட்டவள், ஒரு மரத்தடியில் நின்று கொண்டிருந்தவனை விரல் சுட்டி, “அதோ அவர் தான்.....என்றாள்.
                        அதிகம் கட்டிட வசதிகள் இல்லாத அரசு மேல்நிலைப் பள்ளி எங்களது. பாதி வகுப்புகள் மரத்தடிகளில் தான் நடக்கும். மரத்தடியில் காத்திருந்தவனுக்கும் என்னுடைய வயது தானிருக்கும்.
                        அவனுக்கு அருகில் போய், “ஹலோ, நான் தான் கதிர்வேல்; நீங்க என்னையா தேடி வந்துருக்கீங்க.....?”  என்று கை கொடுத்தேன். ரொம்பவும் பதட்டப் படுகிறவனாகவும் பரபரப்பாகவும் தெரிந்தான். அவன் எனக்கு கை எதுவும் கொடுக்கவில்லை.
                        உங்க கூட நான் கொஞ்சம் பேசனும்....என்றான் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு. முன்பின் அறிமுக மில்லாத என்னிடம் இவன் ஏன் இத்தனை கடுமையான முகபாவம் காட்டுகிறான்... என்று மனசுக்குள் நினைத்தபடி, “எது சம்பந்தமா.....?” என்றேன்.
                         “நீங்க கல்யாணம் பண்ணிக்கப் போற ஆனந்தி சம்பந்தமா....என்றான் அதே விரைப்புடன். 
                        பிரேயர் ஆரம்பிக்க இன்னும் நேரமிருந்தது. முதல் பீரியட் எனக்கு  அன்றைக்கு வகுப்பெதுவும் இல்லை.  அகிலனை ஸ்டாஃப் ரூமிற்கு அழைத்துப் போனேன். ஸ்டாஃப் ரூமில் யாருமில்லை. எல்லோரும் பிரேயருக்கான ஆயத்தங்களில் வெட்ட வெளிகளில் அலைந்து கொண்டு இருந்தார்கள்.
                        சொல்லுங்க....என்றேன் அங்கிருந்த ஒரு பெஞ்ச்சில் அகிலனை உட்காரும்படி சைகையில் காட்டியபடி.  நீங்க யாரு? ஆனந்தியப் பத்தி என்ன சொல்லனும் உங்களுக்கு...?”
                        ஆனந்திய நீங்க கல்யாணம் பண்ணிக்கக் கூடாதுன்னு எச்சரிச்சுட்டுப் போகத் தான் வந்தேன்.....” என்றான் எரிச்சலூட்டும் தொனியில். இன்றைய நாளின் தொடக்கம் சரியில்லை என்று மனக்குறளி சொல்லியது.
                        ”காரணம் என்னன்னு தெரிஞ்சுக்கலாமா? திடீர்னு வந்ததும் வராததுமா மொட்டைத் தாத்தா குட்டையில விழுந்தான்ங்குறது போல ஆனந்திய  கல்யாணம் பண்ணக்கூடாதுன்னு சொன்னா என்ன அர்த்தம்....! முதல்ல உங்களுக்கும் ஆனந்திக்கும் என்ன சம்பந்தமுன்னு சொல்லுங்க....என்றேன்.
                        நான் அவளக் காதலிச்சவன்; இப்பவும் அவளக் காதலிச்சுக்கிட்டு இருப்பவன்; அவளும் என்னைக் காதலிக்குறா..... ஆனா வீட்டுல உள்ளவங்க இதை விரும்பல; அவங்கள நான் சமாளிச்சுக்குவேன்; இப்ப நீங்க அவளக் கல்யாணம் பண்ணக் கூடாது.....ஏதாவது காரணம் சொல்லி அவள வேண்டாமின்னுடனும்..... என்றான்.
                        ஏனோ அகிலன் சொல்வதெல்லாம் பொய்யென்று எனக்குள் ஒரு உள்ளுணர்வு எச்சரித்தது. அதனால் உங்களப் பத்தி எல்லா விபரமும் ஆனந்தி ஏற்கெனவே என்கிட்ட சொல்லியாச்சு;  நீங்க கிளம்பலாம்....என்று சும்மாவாச்சும் அவனிடம் சொல்லி வைத்தேன்.
                        அவனும் விடாமல்  என்னப்பத்தி உங்க கிட்ட அவள் என்ன சொன்னாளோ தெரியாது.... ஆனா நீங்க ஒரு விஷயம் மட்டும் தெரிஞ்சுக்கனும்; எங்களோடது சினிமாக் காதலில்ல; கைபடாம காதலிக்கிறதுக்கு; எங்களுக்குள்ள எல்லாமே நடந்துருச்சு.... புரிஞ்சுக்குங்க....” என்றான்.
                        அவன் ’எல்லாமே’ என்பதைத் தேவைக்கு மேலேயே அழுத்திச் சொன்னான்.
                        ”இங்க பாருங்க அகிலன்,  நீங்க சொல்ற எதையும் நான் நம்பத் தயாரில்ல; அப்படியே நீங்க சொல்றது உண்மையாவே இருந்தாலும் எனக்கு அதுபற்றியெல்லாம் அக்கறை இல்ல. கல்யாணத்துக்கு முன்னால ஒரு பெண் காதலிக்குறதுங்குறது பெரிய குத்தமும் இல்ல. அதோட உண்மையாக் காதலிக்கிற எவனும் தான் நேசிக்கிற பொண்ணப்பத்தி இப்படி அபாண்டமா சொல்லிக்கிட்டு இருக்கவும் மாட்டான்.... முடிஞ்சா எங்க கல்யாணாத்துக்கு வந்து ஒருவாய் சாப்பிட்டுட்டுப் போங்க.... என்று படபடவென்று அவனிடம் பேசிவிட்டு வகுப்பறை நோக்கிப் போய் விட்டேன்.
                        ஆனால் இந்த விஷயத்தை அப்படியே விட்டு விட மனதில்லை. ஆனந்தியிடமே இதைப் பற்றி நேரிடையாகப் பேசி விடாலாமென்று தீர்மானித்து, பள்ளிக்கு அரைநாள் விடுப்பு எழுதிக் கொடுத்துவிட்டு அன்றைக்கு மத்தியானமே மதுரைக்குப் பஸ் ஏறி அவளை அவளின் அலுவலகத்தில் போய் சந்தித்தேன்.
                        என்னைச் சற்றும் எதிர்பார்க்காத ஆனந்தி ரொம்பவும் பதட்டமடைந்தாள். சம்பிரதாயமான விசாரிப்புகளுக்குப் பின் அகிலன் என்னை வந்து சந்தித்தது பற்றிச் சொல்லி, “நிஜமாகவே நீங்கள் இருவரும் காதலிப்பதாக இருந்தால் உங்களின் கல்யாணத்திற்காக உங்களின் அம்மாவை சந்தித்துப் பேசி அவர்களை என்னால் சம்மதிக்க வைக்க முடியும்....” என்று சொன்னேன். அவள் சிரித்தபடி சொன்னாள்.
                        அகிலன் கொஞ்சமும் மெச்சூரிட்டியே இல்லாத விடலைத் தனமானவன் என்றும், அவன் ஆனந்தி தங்கி இருக்கும் மகளிர் விடுதி இருக்கும் பகுதியில் வசிப்பவன் ; விடுதி நடத்துபவர் அகிலனுக்கும் தெரிந்தவர் என்பதால் அவன் அவ்வப்போது விடுதிக்கு வரும் போது நட்புணர்வுடன் அவனுடன் பழகியதாகவும், அதை அவன் காதல் என்று தப்பாக அர்த்தம் பண்ணிக் கொண்டதாகவும்
                        அதை அறிய நேர்ந்த அந்த கணமே அகிலனிடம், தனக்கு அவன் மீது அந்த மாதிரியான எந்த அபிப்ராயமும் இல்லை என்று சொல்லி விலகி விட்டதாகவும் ஆனால் அகிலனோ விடாமல் அவளைத் தொடர்ந்து தன்னை அவள் காதலித்தே ஆக வேண்டுமென்று வற்புறுத்திக் கொண்டிருப்பதாகவும் சொன்னாள்.
                        ஆனந்தியிடம் பேசி விட்டு வந்ததும் எனக்கு மனசில் பாரம் இறங்கி நிம்மதியாக இருந்தது. நாங்கள் திருமணத்திற்கான மற்ற ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருந்தோம்.
                        அகிலனை அன்றைக்கு எதுவும் செய்யாமல் அப்படியே போக விட்டது எவ்வளவு பெரிய பிசகென்று இப்போது தான் புரிகிறது எனக்கு.
                        அவனை போலீஸில் பிடித்துக் கொடுத்திருக்க வேண்டும். அவன் காலைச் சுற்றிய பாம்பென்பதைக் கணிக்கத் தவறி விட்டேன்; அதனால் தான் ஆனந்திக்கு இப்போது இந்த மாதிரி நிகழ்ந்து விட்டது…. !

வாக்குமூலம்: 3  – அகிலன்
                        குறிப்பு : போலீஸ் கஸ்டடியில் லாக்கப்பிலிருந்த அகிலன் முதலில் பேசவே மறுத்தாலும் அப்புறம் இன்ஸ்பெக்டரின் அனுமதியுடன் பேசி நான் பதிவு பண்ணிய வாக்குமூலம் இது.
                        என்பேரு அகிலன். அம்மா ஆசையா வச்சபேரு. அது ஒரு எழுத்தாளரின் பெயர் என்றும் நான் அவரின் பெயருக்கு எந்த வகையிலும் நியாயம் செய்யவில்லை என்றும் தமிழில் நான் ஓரிலக்க மதிப்பெண்களை வாங்கிக் கொண்டுவந்து காட்டிய போது விசனப்பட்டு சொல்லியிருக்கிறாள்.
                        எனக்கு சொந்த ஊருன்னு எந்த ஊரையும் சொல்லிக்க முடியாது. யாதும் ஊரேங்குற வகையைச் சேர்ந்தவன். ஏன்னா அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அரசாங்க உத்தியோகம். அப்பா சிவில் சப்ளைஸ்ல அதிகாரி; அம்மா அரசாங்க ஆஸ்பத்திரியில் நர்ஸ்.
                        அப்பா அநியாயத்துக்கு நேர்மையாளரா இருந்ததால் அதுவே அவருக்கு பெரும் போதையாகி எப்பவும் எல்லோர் கூடவும் வாக்குவாதம்; சண்டை..... அதனால் அடிக்கடி ட்ரான்ஸ்ஃபர்.
                        நானும் அப்பாகூட கொஞ்ச நாள்; அம்மாகூடக் கொஞ்ச நாள்னு வெவ்வேறு ஊர்கள்ல ஸ்டேட் போர்டு, செண்ட்ரல் போர்டு, மெட்ரிக்குலேசன்னு விதவிதமான பள்ளிகள்ல படிச்சேன். ஆனா என் மண்டையில எந்தப் படிப்புமே ஏறல.
                        அப்பாவும் அம்மாவும் என் மூளைக்குள் படிப்பைத் திணித்து விட முயன்றார்கள்.... எப்படி உருண்டு பொரண்டும் என்னால பி.எஸ்.ஸியைக் கூட முழுசாக முடிக்க முடியவில்லை; இன்னும் நாலஞ்சு பேப்பர் அரியர்ஸ் இருக்கு....!
                        அப்பாவுக்கு மேலூருக்கு மாற்றல் உத்தரவு வந்தபோது, அம்மா சிவகங்கையில் வேலையிலிருந்தாள். எப்படியோ முட்டிமோதி யார்யாரிடமோ கெஞ்சி மதுரையில் இருக்குற அரசு மருத்துவ மனைக்குத்  தலைமை நர்ஸாக வந்து சேர்ந்தாள்.
                        அங்கு நாங்கள் குடியிருந்த  அதே தெருவில் இருந்த லேடீஸ் ஹாஸ்டலில் தான் ஆனந்தி தங்கி இருந்தாள். அவளை  நான் முதல் தடவையாக பார்த்த நிமிஷமே பளிச்சுன்னு மூளைக்குள் ஒரு மின்னல் வெட்டு மாதிரி தோணுச்சு; இவள் தான் எனக்கானவள்னு.... ஆம்! அந்த நிமிஷத்திலருந்தே நான் அவளைக் காதலிக்கத் தொடங்கி விட்டேன்.
                        ஆனால் அவளை அணுகுவது தான் அத்தனை சுலபமாக இருக்க வில்லை; அவள் தங்கியிருந்த ஹாஸ்டல் நடத்துன ஓனரோட பையனை நண்பனாக்கிக்கிட்டு அடிக்கடி அவனைச் சந்திக்கப் போறது போல் ஹாஸ்டலுக்குப் போகத் தொடங்கினேன்.
                        அவள் பின்னால நாயாய் பேயாய் அலைந்தேன்.  அவள் என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையுறப்ப, பொம்பள மனசு எம்மாத்திரம்? கடைசியில அவள் என்னுடன் பேசத் தொடங்கினாள். அதுவே எனக்கு பெரிய வெற்றியாக எதையோ சாதித்து விட்ட சந்தோஷத்தைத் தந்தது.
                        ஒரு கட்டத்தில் அவளிடம் எனக்கு அவள் மேலிருந்த தீவிரமான காதலைப் பற்றிச் சொல்லவும், அவள் தனக்கு அப்படிப்பட்ட உணர்வுகள் எதுவும் இல்லை என்றும் என்னைத் தன்னுடைய நண்பனாக மட்டுமே பாவித்துப் பழகியதாகவும் சொன்னாள்.
                        ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் நட்பு எப்படி சாத்தியம்! காதல் தான் அது…. என்று அவளை நான் நச்சரிக்கத் தொடங்கினேன். அதற்கப்புறம் அவள் என்னைத் தவிர்க்கத் தொடங்கிவிட்டாள்.
                        நான் என் பெற்றோர்களுக்கு ஒரே பிள்ளை; அதனால் என் முகத்தில் சிறு வாட்டத்தையும் அவர்களால் சகித்துக் கொள்ள முடியாது. மேலும் சிறு வயதிலிருந்தே அம்மாவும் அப்பாவும் அருகிருந்து அரவணைத்து என்னை வளர்க்கவில்லை.
                        அந்தக் குற்ற உணர்ச்சியாலோ என்னவோ, நான் எதை ஆசைப்பட்டுக் கேட்டாலும் அதை எப்படியாவது தருவித்துத் தந்து விடுவார்கள். இதுவரை நான் ஆசைப்பட்டு எதுவும் கிடைக்காமல் போனதில்லை என்பதால் ஆனந்தியையும் என்னால் எப்படியும் அடைந்து விட முடியும் என்று திடமாக நம்பினேன். என்னுடைய அப்பாவிடம் அவள் வீட்டில் போய் பெண் கேட்கச் சொன்னேன்.
                        முதல் தடவையாக அவர் என்னிடமும் ஒரு அரசாங்க அதிகாரி போலவே “பாவம்; அந்தப் பொண்ணோட வாழ்க்கைய நான் பாழாக்க விரும்பல...”என்று ஒரே வாக்கியத்தில் என்னோட ஆசையை நிராகரித்து விட்டார். அம்மாவிடம் சொல்லவும், அவள் என்னை ஏதாவது வேலை தேடிக் கொள்ளும் படியும் அதற்கு அப்புறம் அவர்கள் வீட்டில் போய் பேசுவதாகவும் சொன்னாள்.
            அது கொஞ்சமும் சாத்தியமில்லாத பாதை. ஆண்கள் என்றால் வேலைக்குப் போகவேண்டும்; சம்பாதிக்க வேண்டும் என்பது இந்த சமூகத்தின் சாபக்கேடு என்பது என் அபிப்ராயம். என்னால் தினசரி கடிகார முட்களைத் துரத்தும் மாதச் சம்பளத்துக்காரனாக ஒருபோதும் மாறவே முடியாது.
            அதனால் அப்பாவிடம், “கொஞ்சம் பணம் ஏற்பாடு பண்ணித் தாருங்கள்; ஏதாவது பிஸினெஸ் பண்ணுகிறேன்....” என்றேன். அவருக்கு என்மேல் எந்த நம்பிக்கையும் இல்லை யாதலால் நான் சொன்னதை அவர் பொருட் படுத்தவே இல்லை.
            இதற்கிடையில் ஆனந்திக்கு அவர்கள் வீட்டில் தீவிரமாக மாப்பிள்ளை தேடத் தொடங்கினார்கள் என்பதை அறிந்து கொண்டேன். அவளே தான் சொன்னாள். இனியும் தாமதித்தால் அவளுக்கு வேறு யாருடனாவது திருமணம் செய்து அனுப்பி விடுவார்களென்று எனக்கு பயமும் பதட்டமும் வந்து விட்டது.
                        அவளுக்கு சிவகாசியைச் சேர்ந்த கதிர்வேல் என்பவனுடன் திருமணம் கூடி வந்து விட்டதை அறிந்து, கதிர்வேலையும் சந்தித்து விஷயத்தைச் சொல்லி அவனை ஆனந்தியயைக் கல்யாணம் பண்ணிக் கொள்கிற புரபோசலில் இருந்து விலகி விடும்படி கெஞ்சினேன்; அவனும் என்னை சீரியசாக எடுத்துக்க வில்லையே..... நான் என்னதான் செய்வது? நான் காதலிக்கும் பெண்ணை எப்படி இன்னொருவனுக்கு மனைவியாக்க அனுமதிப்பது?
            அதனால் காதலர் தினத்தன்று அவள் ஹாஸ்டலில் இருந்து ஆபிஸுக்குக் கிளம்பும் போது அவளைப் பின் தொடர்ந்து போனேன். அவள் ஆபிஸை நெருங்கியதும் அவளிடம் பேச்சுக் குடுத்தேன். சட்டென்று கையோடு நான் கொண்டு போயிருந்த ஆசிட்டை எடுத்து அவள் முகத்தில் ஊற்றி விட்டு ஓடிப் போய் விட்டேன்.
                        நான் செய்தது தவறு தான்; எனக்கு என்ன தண்டணை வேண்டுமென்றாலும் கிடைக்கட்டும்... அனுபவிக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால் ஒரு விஷயம்! நான் ஆசைப் பட்டது எதுவும் எனக்குக் கிடைத்தாக வேண்டும்; அது பொருளாக இருந்தாலும், பொண்ணாக இருந்தாலும்.... எனக்குக் கிடைக்கலைன்னா அதை வேற யாருக்கும் கிடைக்க விட மாட்டேன்!

கடைசிச் செய்தி:
                   சில நாட்களுக்கு முன்பு ஆனந்தி, மருத்துவம் பலனளிக்காமல் இறந்து விட்டாள். அவளின் அக்காள் தங்கையின் சார்பில் கேட்ட கேள்விகள் அங்கிருந்த யாவரையும் உலுக்கி விட்டன.
                   என் தங்கை என்ன குற்றம் செய்தாள்; பெண்ணாய் பிறந்ததா, அல்லது பார்க்கக் கொஞ்சம் இலட்சணமாய் இருந்ததா, அவளுக்கு ஏனிந்தத் தண்டனை?
                   பெண்கள் எல்லாம் ஆண்களின் விளையாட்டு பொம்மைகள் தானா? எங்களுக்கென்று உணர்வுகளும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளும் இருக்கவே கூடாதா?
                   இந்தச் சமூகம் என்பது ஆண்களுக்கு மட்டுமே ஆனதா?  இன்னும் இவளை போல் எத்தணை பெண்கள் இப்படி சிதைக்கப்படுவதை இந்தச் சமூகம் சகித்துக் கொண்டிருக்கப் போகிறது?

v  முற்றும்

Saturday, August 6, 2016

சிறுகதை: முன்னும் பின்னும் சில நாட் குறிப்புகள்

ஜூன் 22, 2005  புதன் – அபுதாபி
                சுமார் மூன்று மாதங்கள் அபுதாபியிலிருந்து 40கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கும் அல் வத்பா சிறையில் இருந்து விட்டு இன்றைக்குத் தான் வெளியில் வந்திருக்கிறேன். முழுமையான விடுதலை இன்னும் கிடைக்கவில்லை. பெயிலில் தான் விட்டிருக்கிறார்கள்.
                      சிறைக் காவலர்களைக் கடந்து வெளியில் வந்ததும் கம்பெனியிலிருந்து யாராவது என்னை அழைத்துப் போக வந்திருக்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்வையை ஓட்டினேன். யாரும் தட்டுப் படவில்லை. அரபி அரஃபாப் கை விட்டு விட்டான் என்று மனசுக்குள் நினைத்தபடி மெதுவாக அங்கிருந்து நடக்கத் தொடங்கினேன். கொஞ்ச தூரம் போனதும் தோளில் ஆதரவாய் ஒரு கை விழுந்தது. அபுபக்கர் சிரித்தபடி நின்று கொண்டிருந்தான். லாரி கொண்டு வந்திருந்தான்.
                       என்னை ஏற்றிக் கொண்டு போய் என் அறையில் இறக்கி விட்டு விட்டு  “ஆபீஸுக்கு நாளைக்கு வந்தால் போது”மென்று  அரஃபாப் சொன்னதாகச் சொல்லி, கையில் செலவுக்குக் கொஞ்சம் பணம் கொடுத்து விட்டுப் போனான்.
                       அறை சுத்தமாகவே இருந்தது. என்னுடன் தங்கியிருக்கும் மற்ற இருவரும் வேலைக்குப் போய் விட்டிருந்தார்கள். என்னுடைய சூட்கேசின் மீது இந்தியாவிலிருந்து வந்திருந்த இரண்டு ஏர் மெயில் கடிதங்கள் வைக்கப் பட்டிருந்தன. இரண்டையுமே மனைவி ராஜி தான் எழுதியிருந்தாள். பெரும்பாலும் ஒரே விஷயத்தைத் தான் திரும்பத் திரும்ப எழுதியிருந்தாள்.
                       ’முன்பெல்லாம் 15 நாட்களுக்கு ஒரு கடிதமாவது எழுதிக் கொண்டிருந்தாய். நீ அபுதாபிக்கு வேலை மாறிப் போனதிலிருந்து அது குறைந்து கடந்த மூன்று மாதங்களாக சுத்தமாய் கடிதமே வரவில்லை. போனும் பண்ணுவதில்லை. நான் எப்போது போன் பண்ணினாலும் உன் போன் ஆஃப் செய்யப்பட்டி ருப்பதாகவே தகவல் வருகிறது. வேலைப் பளு அதிகமா அல்லது உனக்கு அங்கு ஏதும் நேர்ந்து விட்டதோ என்று எனக்கு பயமாக இருக்கிறது. அதனால் கண்டிப்பாக கடிதம் எழுது.
                       துபாய்க்கு நீ வேலைக்கென்று கிளம்பிப் போகும் போது என்னிடம் என்ன வாக்குக் கொடுத்து விட்டுப் போனாய் என்று ஞாபகமிருக்கிறதா? மூன்றே மாதத்தில் எனக்கும் விசாவும் டிக்கெட்டும் அனுப்பி என்னையும் உன்னுடன் அழைத்துக் கொள்வதாக.             ஆனால் ஐந்து மாதங்களைக் கடந்த பின்பும்  என்னை அங்கு அழைத்துக் கொள்வதற்கு எந்த முயற்சியும் நீ செய்வதாகத் தெரியவில்லை. ஒருவேளை உனக்கு இனிமேல் நான் தேவைப்படாதவளாகி விட்டேனா?
                       இப்பொழுதெல்லாம் வீட்டு போனுக்கு நிறைய அனாமதேய கால்கள் வருகின்றன. எல்லாமே ஆண்கள். நீ வீட்டில் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டு அசிங்க அசிங்கமாய் பேசுகிறார்கள். பச்சையாக படுக்கைக்கு வா என்று அழைப்பு விடுக்கிறார்கள். எனக்கு ரொம்பவும் பயமாக இருக்கிறதுடா. இரவுகளில் தூக்கமே வர மாட்டேனென்கிறது. உன்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டு தூங்க வேண்டும் போலிருக்கிறது. எப்படா அது சாத்தியமாகும் குல்ஸ் பையா…..’   
                       எனக்கு துக்கம் பீறிட்டுக் கொண்டு வந்தது. எனக்கு நேர்ந்ததையெல்லாம் நீ அறிய நேர்ந்தால் அதை உன்னால் தாங்கிக் கொள்ள முடியாதும்மா. அதனால் தான் உனக்குக் கடிதம் எழுதவில்லை. நானே இந்தியாவிற்கு முழுசாய்த் திரும்பி வருவேனா என்று தெரியவில்லையே! இதில் உன்னை எப்படிடா கண்ணம்மா இங்கே அழைத்துக் கொள்ள முடியும்? ஸாரிடா செல்லம்…..

டிசம்பர் 17, 2004 வெள்ளி – சென்னை:
                       பம்பாய் ஸ்ரீகிருஷ்ணா ஏஜென்சியிலிருந்து போன் பண்ணி நான் துபாயிலுள்ள கான்சாகிப் காண்ட்டிராக்டிங் என்னும் கம்பெனியில் வேலைக்கு தேர்ந்தெடுக்கப் பட்டுவிட்டேன் என்ற தகவலைச் சொன்னார்கள். ஏதாவது ஃபேக்ஸ் நம்பர் கொடுத்தால் ஆஃபரை ஃபேக்ஸ் பண்ணுவதாகத் தெரிவித்தார்கள்.  அலுவலகத்தில் ஃபேக்ஸ் இருக்கிறது. ஆனாலும் அதைக் கொடுக்க விரும்பவில்லை.
                       மதிய உணவிற்கு வெளியே போய் வருவதாக சொல்லிவிட்டு கடை வீதிக்கு வந்தேன். எஸ்.டீ.டீ. பூத் செண்டர்களில் யாரிடமாவது ஃபேக்ஸ் இருக்கிறதா என்று விசாரித்து, ஒரு நம்பரை வாங்கி பம்பாய் ஏஜென்சிக்கு தெரிவித்து விட்டு காத்திருந்தேன்.
                       அரைமணி நேரக் காத்திருத்தலுக்கு அப்புறம் தான் ஃபேக்ஸ் வந்தது. சம்பளம் நான் நேர்முகத் தேர்வில் கேட்டிருந்ததை விடவும் மிகவும் குறைவாகவே போட்டிருந்தார்கள். மறுபடியும் பம்பாய் ஏஜென்சிக்கு தொடர்பு கொண்டு விசாரித்த போது
                       ”அது அவர்களின் ஆஃபர். நல்ல கம்பெனி. உனக்கு விருப்பமென்றால் கையெழுத்துப் போட்டு அனுப்பு. வேண்டாமென்றால் விட்டு விடு…”என்றார்கள் விட்டேத்தியாய்.  மனைவியிடம் பேசி விட்டு அங்கிருந்தபடியே Accepted என்று கையெழுத்துப் போட்டு திரும்பவும் ஃபேக்ஸ் பண்ணினேன்.

டிசம்பர் 22, 2004 புதன்  – சென்னை:
                       நந்தனத்தில் உள்ள மருத்துவப் பரிசோதணைக் கூடத்தில் மெடிக்கல் செக் அப் செய்து கொண்டேன். மாலையில் முடிவுகளை வாங்கப் போன போது வெடிகுண்டைத் தூக்கி வீசினார்கள். என்னுடைய உடலில் ஹெப்படைஸ் பி என்னும் வைரஸ் தொற்று இருப்பதாகவும் அதனால் மெடிக்கலி அன்ஃபிட் என்றும் வெளிநாட்டு வேலைக்கெல்லாம் என்னால் போக முடியாது என்றும் சொன்னார்கள்.
                        ”ஹெப்படைஸ் பின்னா என்ன டாக்டர்? அது அவ்வளவு பெரிய வியாதியா?”என்று  நடுங்கியபடி மருத்துவரிடம் கேட்டேன். வெளிநாட்டு வேலைகளுக்குப் போக முடியாது என்பதை விடவும் சீக்கிரம் செத்துப் போய் விடுவோனோ என்கிற  பயமே மனம் முழுவதும் வியாபித்துக் கிடந்தது.
                       “உங்களுக்கு சின்ன வயசுல மஞ்சள் காமாலை நோய் மாதிரி எதுவும் வந்துருக்கா….?” என்றார் டாக்டர். ”ஆமாம்….”என்று ஆமோதித்தேன். அம்மா கீழாநெல்லியை அரைத்து உருண்டை உருண்டையாய் உருட்டிக் கொடுக்க அடித் தொண்டையில் கசக்கும் அதை மூன்று வேளைகளும் கண்ணீர் மல்க விழுங்கியது ஞாபகம் வந்து இப்போதும் எனக்கு வாயில் கசப்பு எட்டிப் பார்த்தது.
                       “மஞ்சள் காமாலை நோய்க்கான வைரஸ் தான் ஹெப்படைஸ் பின்கிறது….”
                       “அப்பவே அதுக்கு மருந்து சாப்பிட்டு குணமாகிட்டேனே டாக்டர்….”
                       “ஹெப்படைஸ் பி வைரஸ் தொற்று ஒரு தடவை உடலுக்குள்ள போனாலே அது அழியவே அழியாது. நோய்க்கான அறிகுறிகள் தெரியாட்டாலும் அது ரத்தத்துலேயே தான் இருக்கும். அதை முழுசா அழிக்கிறதுக்கு இன்னும் மருந்தே கண்டுபிடிக்கல….”
                       “அப்ப நான் சீக்கிரமே செத்துப் போயிடுவனா டாக்டர்…..”அழுதே விட்டேன்.
                       ”நோ… நோ…. அது பெருசா உபத்திரவம் எதுவும் பண்ணாது. ஆனா நீங்க வெளிநாட்டுக்கு வேலைக்குப் போக முடியாது அவ்வளவு தான்….” என்று சிரித்துக் கொண்டே தைரியம் சொல்லி அனுப்பி வைத்தார் மருத்துவர். என்னுடைய வெளிநாட்டுக் கனவுகள் பணாலானது.

டிசம்பர் 25, 2004 சனி – சென்னை:
                       பம்பாய் ஏஜென்சி போனில் தொடர்பு கொண்டு ஏன் இன்னும் மெடிக்கல் சர்ட்டிபிகேட்டை அனுப்பி வைக்கவில்லை என்று விசாரித்தார்கள். மருத்துவர் சொன்ன விவரத்தைச் சொல்லவும், அவர்கள் மெடிக்கல் சர்ட்டிபிகேட்டை ஃபேக்ஸ் பண்ணச் சொன்னார்கள்.
                       அதைப் பார்த்ததும், “உங்கள் சென்னை மருத்துவர்கள் அப்டேட்டே ஆகாமல் ஹைதர்காலத்து விதிகளையே இன்னும் கட்டி அழுது கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். இப்போதெல்லாம் யு.ஏ.யில் இரண்டே இரண்டு வியாதிகளுக்கான டெஸ்ட்கள் மட்டும் தான் பண்ணுவார்கள். ஒன்று எயிட்ஸ்; இன்னொன்று டீ.பி. மற்றதை எல்லாம் அவர்கள் பொருட் படுத்துவதே இல்லை. விசா வந்து விட்டது. சீக்கிரம் பம்பாய்க்கு வந்து சேருங்கள்….” என்றார்கள்.
                       அவர்கள் சொன்னதைக் கேட்கவும் கொஞ்சம் ஆறுதலாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. அதே சமயத்தில் பணம் பிடுங்குவதற்காகப் பொய் சொல்கிறார்களோ என்று பயமாகவும் இருந்தது. நண்பர்கள் சிலரிடம் விசாரித்த போது ஸ்ரீகிருஷ்ணா ஏஜென்சி மிகவும் நம்பகமான கம்பெனி தான் என்றார்கள்.
                       மனைவி தான் நம்பிக்கை அளித்தாள். ஆனது ஆகட்டும். போயிட்டு வாப்பா. அப்படியே அவர்கள் ஏமாற்றினால் தான் என்ன? இருபதாயிரம் ரூபாய் செலவில் துபாயைச் சுற்றிப் பார்த்து விட்டு திரும்பி வந்ததாக இருக்கட்டும் என்று சொல்லி விட்டாள்.  

ஜனவரி 03, 2005  திங்கள்  – பம்பாய்:
                       நேற்றே பம்பாய்க்கு வந்து விட்டேன். இரயில்வே ஸ்டேசனுக்குப் பக்கத்தில் ஒரு லாட்ஜில் அறையெடுத்துத் தங்கி யிருந்தேன். எங்கு பார்த்தாலும் விலை மாதர்கள் பார்வையிலேயே பாய் விரித்தபடி அலைந்து கொண்டிருந்தார்கள். எயிட்ஸ் பற்றிப் பயமாக இருந்ததால் சபலத்தை அடக்கிக் கொண்டேன்.
                       ஸ்ரீகிருஷ்ணா ஏஜென்சியில் காலையிலேயே பணத்தைக் கட்டச் சொல்லி விட்டார்கள். ஆனால் நண்பகலுக்கு மேல் தான் பாஸ்போர்ட்டையும் விமான டிக்கெட்டையும் கொடுத்து ஏர்போர்ட்டிற்கு வேகமாகப் போகும்படி விரட்டினார்கள்.
                       அப்போது தான் தெரிந்தது. நான் விசிட் விசாவில் தான் துபாய்க்கு அழைக்கப் பட்டிருக்கிறேன் என்கிற விபரம். விசிட் விசா மூன்று மாதங்களுக்கு செல்லும் என்றும் அதற்குள் வேலையில் என்னுடைய கெட்டிக்காரத்தனத்தை பரிசோதித்து விட்டுத் தான் வேலைக்கான விசா (WORK PERMIT) எடுத்துத் தருவார்களாம். வாழ்க்கையில் மறுபடியும் ஒரு செக்.
                       இரவு ஏழு மணிக்கு விமானம் தரை இறங்கியது. கம்பெனியின் டிரைவர் ஏர்போர்ட்டிற்கு வந்து அழைத்துப் போனான். அழகழகான உயரஉயரமான கட்டிடங்கள் வண்ண வண்ணமாய்ப் பிரகாசிக்கும் விளக்குகளினூடே பயணித்து சுற்றிலும் வெட்டவெளியாய் இருக்கும் ஒரு பொட்டல் வெளியில் இறக்கி விட்டான். அந்த இடத்தின் பெயர் ஜபீல் அலி என்றார்கள். அதுதான் கம்பெனியின் லேபர் கேம்ப்பாம். நல்ல அறையும் கட்டிலும் கம்பளியும் கொடுத்தார்கள். தூக்கம் தான் அறவே வரவில்லை.

ஜனவரி 04, 2005  செவ்வாய் –துபாய்:
                       கான்சாகிப் காண்ட்ராக்டிங் எல்.எல்.சி. என்னும் கம்பெனியில் சீனியர் பிராஜெக்ட் என்ஜினியராக வேலையில் சேர்ந்தேன். EMAAR INTERIOR FIT OUT WORKS என்கிற பிராஜெக்ட் சைட்டிற்கு அனுப்பி வைத்தார்கள். சுரேந்திரன் என்கிற மலையாளி தான் பிராஜெக்ட் மேனேஷர். படபடவென்று பேசி கண்ணாடிப் பாத்திரம் போன்ற மனதை படீரென்று போட்டு உடைத்து விடுகிறான்.
                       பக்கத்தில் உள்ள கடையில் எடீஸ்லாட் என்னும் டெலிபோன் கார்டு வாங்கி மனைவிக்கு போன் பண்ணினேன். சாப்பாடு பெரிய பிரச்னையாக இருக்கிறது. மதிய உணவு சாப்பிடவே இல்லை. காலையிலும் இரவிலும் லேபர் கேம்ப்பில் சாப்பிட்டேன். உணவு படு மோசமாக இருந்தது.

ஜனவரி 07, 2005  வெள்ளி  –துபாய்:
                       வெள்ளிக் கிழமை - வார விடுமுறை நாள். வீடு தேடும் படலம் தொடங்கியது. அகமதாபாத்திலிருந்து வந்து டிசைன் என்ஜினியராக வேலைக்குச் சேர்ந்திருக்கும் ஆதேஷ் ஸ்ரீவத்ஸா என்பவருடன் சேர்ந்து கொண்டு இருவரும் வீடு தேடத் தொடங்கினோம்.
                       ஆதேஷ் தான்,  துபாயில் வாடகை மிக மிக அதிகம் என்றும் ஷார்ஷாவிலும் அஜ்மானிலும் அது கொஞ்சம் affordable ஆகயிருக்குமென்று சொல்லி, ஜபீல் அலியிலிருந்து ஷேர் வேனில் பர் துபாய் போய் அங்கிருந்து பஸ்ஸில்  ஷார்ஷா போய் வீடு தேடத் தொடங்கினோம். அஜ்மான் கொஞ்சம் தூரம் என்பதால் அங்கு வேண்டாம் என்று முடிவு செய்து கொண்டோம்.
                       மூன்று ரூம்கள் பார்த்தோம். முதல் ரூம் இருவருக்குமே பிடிக்கவில்லை. இரண்டாவது ரூம் இருவருக்குமே பிடித்திருந்தது. ஆனால் ஐந்து மாத வாடகையை முன் பணமாகக் கேட்டதால் வேண்டா மென்று விட்டு விட்டோம். மூன்றாவது ரூம் ரோலா பஸ் ஸ்டாண்டிற்கு அருகில் பார்த்தோம். தமிழர். வாடகையும் குறைவு. எனக்குப் பிடித்திருந்தது. ஆனால் ஏனோ ஆதேஷிற்குப் பிடிக்கவில்லை. 
                       லேபர் கேம்ப்பிற்குத் திரும்ப மிகவும் காலதாமதமாகி விட்டது. அர்த்த ராத்திரியில் கேம்ப்பைக் கண்டுபிடிக்கவும் மிகவும் சிரமப் பட்டோம். நடுநிசி 01:30க்குத் தான் அறைக்குத் திரும்பினோம். கால்களிலெல்லாம் ஒரே வலி.

ஜனவரி 14, 2005 வெள்ளி  –ஷார்ஷா:
                       ஆதேஷின் வட இந்திய நண்பர் ஒருவரின் மூலம் ஷார்ஷாவில் ஹில்லி டவர் என்னும் பில்டிங்கில் பத்தாவது மாடியில் ஒரு அறையை முடிவு செய்து குடி போனோம். அங்கு ஏற்கெனவே பிரகாஷ் என்பவர் குடியிருந்தார். அவருடன் நாங்களும் அறையை ஷேர் பண்ணிக் கொள்ள முடிவானது.

ஜனவரி 21, 2005 வெள்ளி –ஷார்ஷா:
                       பிரகாஷ் என்னையும் ஆதேஷையும் பக்கத்தில் உள்ள கார்னிஸ் என்னும் கடற்கரைக்கு அழைத்துப் போனான். கடலிலிருந்து கால்வாய் வெட்டிக் கொண்டு வந்தது போல ஆற்றின் அகலம் தான் இருந்தது கடல். நீர் நீலநிறமாய் இருப்பதால் கடல் என அழைக்க வேண்டியிருக்கிறது. ஆனாலும் நடுவில் நீரூற்றுப் போல் பொங்குகிற செயற்கை அமைப்புடன் மிக அழகான மசூதியும் பூக்கள் நிரம்பிய பூங்காவும் புல்வெளியும் ரசிக்கத் தக்கதாய் இருந்தது. கரையில் நீள நடந்து பொழுது போக்கினோம்.

பிப்ரவரி 17, 2005 வியாழன்  – துபாய்:
                       கடந்து போன தினங்களில் சைட்டில் வேலை பெண்டை நிமிர்த்தி விட்டது. நாட் குறிப்புகள் எழுதக் கூட அவகாசமில்லை. விடுமுறை தினங்களிலும் வேலைக்குப் போக வேண்டி யிருந்தது.

பிப்ரவரி 20, 2005 ஞாயிறு  – துபாய்:
                       மிகவும் அதிர்ச்சியான செய்தி. ஹெச்.ஆர்.டி. மேனேஷர் போன் பண்ணி எனக்கு வேலைக்கான விசா எடுக்கப் போனபோது ஏற்கெனவே வேறொரு அபுதாபி கம்பெனியின் மூலம் எனக்கு கொத்தனார் வேலைக்கான விசா எடுக்கப் பட்டிருப்பதாகவும் அதனால் லேபர் மினிஸ்ட்ரியில் என்னுடைய விண்ணப்பத்தை ரிஜெக்ட் பண்ணி விட்டதாகவும் தெரிவித்தார்.
                       உடனேயே தலைமை அலுவலகத்திற்கு விழுந்தடித்துக் கொண்டு ஓடினேன்  ’நீ இங்கு வேலை பார்த்துக் கொண்டே வேறொரு கம்பெனியிலும் வேலைக்கு முயற்சித்திருக்கிறாயா?’ என்று கடுப்படித்தார்கள். நான் இல்லவே இல்லை என்றேன்.
                       அப்படியென்றால் நீ இந்தியாவில் இருக்கும் போதே அபுதாபி கம்பெனியும் வேலைக்கான விசாவை எடுத்திருக்க வேண்டும் என்றார். ஆச்சர்யம் தான்; ஒரே பாஸ்போர்ட்டிற்கு துபாய் இமிக்ரேசனில் விசிட் விசாவும் அபுதாபி இமிக்ரேசனில் வேலைக்கான விசாவும் தந்திருக்கிறார்கள்.
                       ”அதெப்படி முடியும்; நான் தான் எந்தக் கம்பெனியின் காண்ட்ராக்டிலும் கையெழுத்தே போட வில்லையே…”என்றேன் அப்பாவியாய்.
                       அவர் சிரித்துக் கொண்டே“யு.ஏ.யில் விசா வாங்குவதற்கு உன்னுடைய கையெழுத்தெல்லாம் தேவையில்லை.  பாஸ்போர்ட் நகலும் மூன்று போட்டோக்களும் இருந்தால் போதும். யார் வேண்டுமானாலும் பணம் கொடுத்தால் விசா கொடுத்து விடுவார்கள்….”என்றவர்  ”நீ போய் அபுதாபி விசாவைக் கேன்சல் பண்ணி விட்டு வந்தால் தான் இங்கு புதிதாய் விசா எடுக்க முடியும்….” என்றார் முடிவாக.
                       எனக்கு இலேசாய் ஞாபகம் வந்தது. துபாயிக்கு பயணப் படுவதற்கான ஏற்பாடுகளில் மும்முரமாய் இருந்த போது திருவனந்தபுரத்திலிருந்து ஒரு டிராவல் ஏஜெண்ட் போன் பண்ணி எனக்கு யு.ஏ.யில் வேலை உறுதியாகி விட்டது என்றும் எப்போது கிளம்ப சௌகரியப்படும் என்றும் கேட்டார். எனக்கு ஆர்வம் இல்லை என்று சொல்லி போனை வைத்து விட்டேன்.
                       அவர் மறுபடியும் போன் பண்ணி ”நீ தானே அப்ளை பண்ணியிருந்தாய். இப்போது ஆர்வமில்லை என்றால் என்ன அர்த்தம்? அவர்கள் உனக்கு விசா எடுத்து விட்டார்களே….!” என்றார். நான் அவர் சொல்வதை சீரியசாகவே எடுத்துக் கொள்ளவில்லை.
                       என்னுடைய சம்மதம் இல்லாமல் எனக்கு எப்படி வேலைக்கான விசா எடுக்க முடியுமென்று யோசித்து பொய் சொல்கிறார் என்று நினைத்து போனை துண்டித்து விட்டேன். அவரும் அதற்கப்புறம் தொந்தரவு பண்ணவில்லை.

பிப்ரவரி 28, 2005 திங்கள்  – அபுதாபி:
                       அல் மவாஸிம் என்கிற அபுதாபி கம்பெனி எனக்காக விசா எடுத்திருக்கிறது என்று அறிந்து கொண்டு அதை கேன்சல் பண்ணுவதற்காக அபுதாபிக்குக் கிளம்பிப் போனேன். இன்ஜினியரிங் படித்தவனுக்கு கொத்தனார் வேலைக்கு விசா எடுத்திருக்கும் கம்பெனி எப்படிப்பட்ட கம்பெனியாக இருக்கும்? விசாவைக் கேன்சல் பண்ணுவதற்கு பணம் எதுவும் கேட்பார்களோ என்றும் பயமாக இருந்தது.  
                       அபுதாபி இமிக்ரேசனில் போய் முட்டி மோதி ஒரு மலையாள நண்பரின் மூலம் விசாரித்து எப்படியோ அல் மவாஸிம் கம்பெனியின் போன் நம்பரைப் பெற்று அலுவலகத்திற்குத் தொடர்பு கொண்ட போது அவர்கள் அரஃபாபிடம் பேசும்படி சொல்லி அவரின் மொபைல் நம்பரைக் கொடுத்தார்கள்.
                       அவர் தான் இப்போது வேலைத் தளத்தில் இருப்பதாகவும் அங்கு வந்து தன்னை சந்திக்கும் படியும் தெரிவித்து எப்படி வர வேண்டும் என்கிற விபரங்களையும் விளக்கமாக சொன்னார். ஒரு டாக்ஸி பிடித்து டிரைவரிடமிருந்த போனில் தொடர்பு கொண்டு டிரைவரையே பேசச் சொல்லி அவரிருந்த இடத்திற்குப் போய்ச் சேர்ந்து விட்டேன்.
                       நான் எதிர்பார்த்துப் போயிருந்தபடி அவர் அத்தனை மோசமானவராய் இருக்கவில்லை. மூச்சுக்கு மூச்சு மை ஃபிரண்ட் மை ஃபிரண்ட் என்று விளித்து மிகவும் இணக்கமாகவே பேசினார். அவரால் எனக்கு ஏற்பட்டு விட்ட மன உளைச்சல்களுக்கும் அசௌகரியங்களுக்கெல்லாம் வருத்தம் தெரிவித்தார்.
                       ”நீ என்னைத் தேடி வந்திருக்கிற என்னுடைய விருந்தினன். உன்னை நான் உபசரிக்க வேண்டும். அதனால் நீ முதலில் போய் சாப்பிட்டு விட்டு வந்து விடு. அப்புறம் நாம் மேற்கொண்டு பேசலாம்…”என்றபடி 100 திர்ஹாமை எடுத்துக் கொடுத்து அவரின் டிரைவரையும் அனுப்பி வைத்தார்.
                       எனக்கு மிகவும் நெகிழ்ச்சியாகவும் அரபியர்களில் இத்தனை நல்லவர்களும் இருக்கிறார்களா என்று ஆச்சர்யமாகவும் இருந்தது.
                       சாப்பிட்டு விட்டு மலர்ச்சியாக வரவும்  இந்திய ஏஜெண்ட்டு தான் பணத்திற்காக தன்னைத் தவறாக வழி நடத்தி சம்பந்தப்பட்டவர்களிடம் சம்மதம் வாங்காமலேயே விசா எடுக்கச் சொல்லி விட்டார் என்றும் இன்ஜினியருக்கான விசா எடுப்பதென்றால் டிகிரி சர்ட்டிபிகேட்டில்  மினிஸ்ட்டிரியின் முத்திரை பெறுவதற்குக் காலதாமதமாகுமென்று சொல்லி ஒர்க்கர்ஸ்  விசா எடுக்க வைத்து விட்டதாகவும் தெரிவித்தார்.
                       விசாவைக் கேன்சல் பண்ணுவதெல்லாம் பெரிய விஷயமில்லை. அதை நாளைக்கே பண்ணி விடுவதாக உத்தரவாதமளித்தவர் துபாயில் எந்தக் கம்பெனி, எவ்வளவு சம்பளம் என்கிற விபரமெல்லாம் விசாரித்தார். நான் சொல்லவும், “நீ ஏன் என்னிடமே வேலையில் சேர்ந்து கொள்ளக் கூடாது? உன்னை எங்கள் கம்பெனியின் பிராஜெக்ட் மேனேஷராக்கி துபாய் கம்பெனி தருவதை விடவும் 500 திர்ஹாம் அதிகம் + தங்கும் அறையும்  தருகிறேன்….” என்றார்.
                       எனக்கு இலேசான சபலம் எட்டிப் பார்த்தது. இருந்தாலும் “அது சரியாக வராது. இப்போதைய கம்பெனியும் அதை அனுமதிக்காது. என்னுடைய பாஸ்போர்ட் அவர்களிடம் தான் இருக்கிறது…” என்றேன்.
                       “அந்தக் கவலை எல்லாம் உனக்கு வேண்டாம். நான் உங்களின் அரஃபாபிடம் பேசி உனக்கு எதுவும் பிரச்னை வராமல் பார்த்துக் கொள்கிறேன்….” என்று சொல்லவும் நானும் சம்மதித்தேன். அவருடைய காரிலேயே அலுவலத்திற்கு அழைத்துப் போய் ஆஃபர் லெட்டரையும் அடித்துக் கொடுத்து அனுப்பி விட்டார்.

மார்ச் 06, 2005 ஞாயிறு  – அபுதாபி:
                  புதிய கம்பெனியில் வேலையில் சேர்ந்து கொண்டேன். ஒர்க்கர்ஸ் விசாவை இன்ஜினியர் விசாவாக மாற்றித் தருவதாக உத்திரவாத மளித்து அதற்கான வேலைகளையும் தொடங்கி விட்டார்கள்.
                       அபுதாபி என்பது ஒரு சிறிய தீவு. எங்கிருந்து பார்த்தாலும் கடலின் நீலம் கண்ணுக்கு குளிர்ச்சியூட்டுவதாய் இருக்கிறது. அபுதாபிக்கு மிக அருகில் அல் படீன் என்னும் பழமையான நகரத்தில் ஒரு விஸ்தாரமான வில்லா கட்டுகிற பணிக்கு என்னை இன்சார்ஸாக நியமித்திருக்கிறார்கள்.
                       அங்கு ஏற்கெனவே அடித்தளம் போடுவதற்கான மண் தோண்டுகிற வேலை தொடங்கி மும்முரமாய் நடந்து கொண்டிருந்தது. ஆனால் கட்டிட வரைபடங்கள் இன்னும் மினிஸ்ட்ரியிலிருது அப்ரூவல் ஆகி வரவில்லை.
                       வேலைத் தளத்தைச் சுற்றிலும் நிறைய குடியிருப்புகளும் கடை வீதிகளும் இருக்கின்றன. மிக பக்கத்திலேயே ஒரு கட்டிடத்தில் எனக்கான தங்கும் அறையும் ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது. என்னுடன் மேலும் இருவர் தங்கி யிருக்கிறார்கள். அறை எல்லா வசதிகளுடனும் ஃபர்னிஷ் செய்யப்பட்டு இருக்கிறது.

மார்ச் 10, 2005 வியாழன்  –அபுதாபி:
                  சைட்டை ஒட்டி மூன்றடிக்கும் குறைவான தூரத்திலிருக்கும் ஒரு வீட்டில் முழுக்க கறுப்பு அங்கியும் பர்தாவும் அணிந்த ஒரு பெண்  குழந்தைக்கு சோறூட்டிக் கொண்டிருந்தாள். முகம் மட்டுமே வெளியில் தெரிந்தது. அது மிகவும் வசீகரமாகவும் இந்திய சாயலுடனும் இருந்தது. நான் அவளை வெறித்துப் பார்ப்பதை ஒரு கணத்தில் அவதானித்தவளின் இதழ்களில் ஒரு புன்னகைக் கீற்று மின்னலென ஓடி மறைந்தது.
                       கொஞ்சம் தைரியத்தை வர வழைத்துக் கொண்டு அந்த வீட்டின் காம்பௌண்ட் சுவருக்கு அருகில் போய் “இந்தியாவா….” என்றேன் மெதுவாக. “ம்… கோட்டையம்….” என்றவளின் மொழியில் மலையாள வாடை சாரலென வந்து சிலிர்ப்பூட்டியது.
                       நான்  “சென்னை; தமிழ்….” என்றேன். ”யானும் கொறச்சுக் கொறச்சு தமிழ் அறியும்….”என்றாள் மழலைத் தமிழில். கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.

மார்ச் 15, 2005 செவ்வாய்  –அபுதாபி:
                       வேலைத் தளத்திற்குப் பக்கத்து வீட்டிலிருக்கும் மலையாளப் பெண்ணின் பெயர் ஷர்மிளா. கோட்டயத்திலிருந்து வந்து ஒரு அரபியின் வீட்டில் வீட்டு வேலைகள் செய்து கொண்டிருக்கிறாள். தினசரி அவளுடன் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறேன்.
                       அவளுக்குக் கல்யாணமாகி பத்து வயதில் ஒரு பெண் குழந்தை ஊரில் அவளின் அம்மாவிடம் வளர்கிறது. புருஷனிடமிருந்து பிரிந்து வந்து விட்டாள். அதைப் பற்றிக் கேட்ட போது ”ஆ  ஆள் ஒரு மிருகம். கழிசடை…..”என்று ஏகப்பட்ட மலையாள கெட்ட வார்த்தைகளில் திட்டத் தொடங்கி விட்டாள்.
                       அவன் வேலை வெட்டிக்குப் போகாமல் ஊர் சுற்றிக் கொண்டு இவளின் சம்பாத்யத்தில்  தின்று கொழுத்துக் கொண்டிருந்ததைக் கூட சகித்துக் கொண்டாளாம். ஆனால் அவள் வீட்டில் இல்லாத போது எட்டு வயதுப் பெண்ணிடம் அதுவும் அவன் பெற்ற மகளிடமே பாலியல் உறவு கொள்ள முயற்சித்ததை அறிந்ததும் காறித் துப்பி விட்டு குழந்தையுடன் வெளியேறி விட்டதாய்த் தெரிவித்தாள். நான் உறைந்து போனேன். இப்படியும் மனிதர்களா, என்ன மாதிரியான மன வார்ப்புகள் அவர்களுக்கு…..!

மார்ச் 25, 2005 வெள்ளி  –துபாய்:
                  நேற்றுத் தான் ரொம்பவும் பயந்து கொண்டே ஷர்மிளாவிடம், நாளைக்கு நாமிருவரும் வெளியில் எங்காவது போய்விட்டு வரலாமா என்று கேட்டேன். அவளும் ஆச்சர்யமாக கொஞ்சமும் தயங்காமல் உடனேயே சரி என்றாள்.
                       அரபி வீட்டில் உன்னை வெளியில் எல்லாம் போக விடுவார்களா என்று கேட்ட போது அவளுக்குத் தெரிந்த மலையாளக் குடும்பம் ஒன்று துபாயில் இருப்பதாகவும் அவர்கள் தான் ஷர்மிளாவை அரபியின் வீட்டில் வேலைக்குச் சேர்த்து விட்டதாகவும் அங்கு போவதாகச் சொன்னால் அனுமதித்து விடுவார்கள் என்றும் சொன்னாள்.
                       காலையிலேயே அபுதாபி பஸ் ஸ்டாண்டிற்கு வந்து விட்டாள். எங்கு போகலாம் என்று கேட்ட போது, நான்கு சுவர்களுக்குள் இருந்து இருந்து மூச்சு முட்டுகிறது. நீ எங்கு அழைத்துப் போனாலும் வருகிறேன் என்றாள். துபாயில் குளோபல் வில்லேஸ் என்றொரு பொருட்காட்சித் திடல் இருப்பதாக அறிந்திருந்தேன். அங்கு போகலாம் என்று முடிவு செய்து கிளம்பினோம்.
                       குளோபல் வில்லேஸைச் சுற்றிப் பார்த்தது - அதுவும் ஒரு பெண்ணுடன் – அற்புதமான அனுபவமாக இருந்தது. அது ஒரு மிகப் பிரமாண்டமான விசாலமான திறந்த வெளி தீம் பார்க். நடக்க நடக்க ரம்மியமான காட்சிகளுடன் விரிந்து கொண்டே போனது. முழுவதும் பார்த்து முடிக்க மூன்று நாட்களுக்கும் மேலாகும் போலிருந்தது.
                       இந்தியா, பாகிஸ்தான், கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, சிங்கப்பூர் என்று ஒவ்வொரு நாட்டின் பெயரிலும் அந்தந்த நாடுகளின் பிரதான அடையாளங்களுடன் அமைக்கப் பட்டிருந்த முகப்புகள் அற்புதமாக இருந்தன. இந்தியாவின் முகப்பாக செங்கோட்டையை அமைத்திருந்தார்கள்.
                       உள்ளே இருந்த ஸ்டால்களில் எல்லாம் ஆடைகள், அலங்காரப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், உணவுப் பொருட்கள் என்று விற்றுக் கொண்டிருந்தார்கள். விலை வெளியில் விடவும் மிகமிக அதிகமாக இருந்தது. ஷர்மிளாவிற்கு வண்ணக் கற்கள் மின்னுகிற ரோல்டு கோல்டு கழுத்து சங்கிலி ஒன்றை வாங்கிப் பரிசளித்தேன். சந்தோஷமாக வாங்கி அங்கேயே அணிந்து கொண்டாள்.
                       விதவிதமான விளையாட்டுகளும், வான வேடிக்கைகளும், லேசர் ஒளி நீரூற்று நடனங்களுமாய் பார்க்கப் பார்க்க மனம் கொள்ளை போனது. கண்களுக்கு சலிக்கவே இல்லை. ஆனால் கால்கள் வலிக்கத் தொடங்கின. நன்றாக இருட்டியதும் பொருட்காட்சித் திடலிலிருந்து வெளியே வந்தோம்.
                       ”இனி என்ன செய்யலாம்?” என்றேன். “உன் விருப்பம்…” என்றாள். “இரவிற்கு துபாயிலேயே ஏதாவது ஹோட்டலில் அறையெடுத்துத் தங்கி விட்டு அதிகாலையில் அபுதாபி போய்க் கொள்ளலாமா…” என்றேன் கொஞ்சம் தயங்கிய குரலில். உடனேயே சரி என்றாள்.
                       ஹோட்டல் அறையில் எங்களுக்கு மனத் தடைகள் உடைய அதிக நேரமாகவில்லை. இரவு முழுவதும் தூங்கவே இல்லை. சலிக்கச் சலிக்கப் பேசினோம். உடல் வலிக்க வலிக்க முயங்கினோம். அவளின் உடலும் நீண்ட காலமாகத் தீண்டப் படாமல் ஒரு ஆணின் நெருக்கத்திற்கு ஏங்கிக் கிடந்திருப்பதை அவளின் அதீதக் கிறக்கத்திலும் கண் சொருகிய முனகல்களிலும் உணர்ந்து கொண்டேன்.
                       முதல் தடவை முயங்கத் தயாராகும் போது நான் காண்டம் உறையைப் பிரிப்பததைப் பார்த்ததும் “ஏன் எயிட்ஸ் வந்து விடுமென்று பயப்படுகிறாயா?”என்றாள் பட்டென்று. “அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை…” என்று நான் ஏதோ சொல்ல வந்ததைக் கூட பொருட் படுத்தாமல் அவளே தொடர்ந்தாள்.
                       “நீ அழைத்ததும் பிகு பண்ணாமல் உடனேயே உன்னுடன் கிளம்பி வந்து விட்டதால் என்னை அல்பமானவள் என்று கூட நீ நினைத்துக் கொண்டிருக்கலாம். அதுபற்றி எனக்குக் கவலை இல்லை.  ஆனால் முதல் தடவை உன்னை பார்த்ததுமே எனக்கு உன் மேல் அப்படி ஒரு பிரேமை உண்டாகி விட்டது.  அது ஏனென்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை….”என்று என்னை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.
                       அப்புறம் என் காதுகளை நாவால் வருடியபடி ”என்னுடைய இரண்டாவது குழந்தையை உன் மூலம் பெற்றுக் கொள்ள பிரியப் படுகிறேன்…..” என்று சிணுங்கும் குரலில்  சொன்னாள். நான் காண்டமைத் தூக்கி எறிந்து விட்டு அவளின் மீது விழுந்து மூர்க்கமாய் இயங்கத் தொடங்கினேன்.

மார்ச் 26, 2005 வெள்ளி  –அபுதபி:
                  மிக அதிகாலையில் ஹோட்டல் ரூமைக் காலி பண்ணிவிட்டு அபுதாபிக்குக் கிளம்பிப் போனோம். விடைபெறும் போது ஷர்மிளாவிடம் அடுத்த வாரமும் இதைப் போலவே எங்காவது போய்விட்டு வரலாமா என்று கேட்டேன். “ஆளுக்கு ஆசை தான். வாரவாரமென்றால் அரபி விட மாட்டான். அவனுக்கு சந்தேகமும் வந்து விடும். மாதம் ஒரு நாள் வைத்துக் கொள்ளலாம்….” என்றாள்.

ஏப்ரல் 05, 2005 செவ்வாய்  – அபுதாபி:
                  இரண்டு நாட்களுக்கு முன்பு வேலைத் தளத்தில் மிக மோசமான ஒரு விபத்து நிகழ்ந்து விட்டது. வரைபட அப்ரூவலுக்காக ஆர்க்கிடெக்ட் அலுவலகத்திற்கும் அபுதாபி மினிஸ்ட்ரிக்குமாய் அலைந்து கொண்டிருந்ததில் நாலைந்து நாட்களாக என்னால் சைட்டிற்குப் போக முடிய வில்லை.
                       அடித்தளம் அமைப்பதற்காகத் தோண்டியிருந்த நீளமான ஆழமான குழிகளில் எல்லாம் சமீபத்தில் பெய்த பெரு மழையில் நீர் தேங்கி குழிகள் கேவிங் ஆகிக் கொண்டிருந்ததை டூட்டியில் இருந்த சூபர்வைசர் பொருட்படுத்தவும் இல்லை. என் கவனத்திற்குக் கொண்டு வரவும் இல்லை.
                       திடீரென்று சைட்டிற்குப் பக்கத்தில் உள்ள வீட்டின் மிகப் பழைய ஏற்கெனவே பலவீனமாய் இருந்த காம்பௌண்ட் சுவர் இடிந்து விழுந்து விட்டது. அது எப்படி அரபி வீட்டின் பக்கம் சரிந்து விழுந்தென்று தெரியவில்லை. ஒருவேளை வேலைத் தளத்தில் சுவற்றை ஒட்டி கட்டுமானத் தளவாடங்கள் அடுக்கப் பட்டிருந்ததால் அந்தப் பக்கம் விழுந்து விட்டதோ என்னவோ!
                       அப்போது சுவற்றிற்கு அருகில் உள்ள புழங்கு வெளியில் உட்கார்ந்து பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்த ஷர்மிளாவின் மீது சுவற்றின் பெரும்பகுதி விழுந்ததில் அவள் மயங்கி விழுந்து மூர்ச்சையாகி அதிர்ச்சியிலேயே இறந்து விட்டாள். 
                       வேலைக்கு பொறுப்பான என்ஜினியர் என்பதால் நான் கைது பண்ணப்பட்டேன். காவல் நிலையத்திலும் நீதி மன்றத்திலும் எனக்கு ஒரு அட்சரமும் புரியாத அரபி மொழியில் ஏதேதோ வாத பிரதி வாதங்கள் நிகழ்ந்து நான் சிறைக்குக் கொண்டு செல்லப் பட்டேன். ஷர்மிளா இறந்ததைத் தான் என்னால் தாங்கிக் கொள்ளவே முடிய வில்லை.

ஜூன் 22, 2005  புதன் – அபுதாபி:
                  அலுவலகம் போனபோது அரஃபாப் அல் படீனில் வில்லா கட்டும் காண்ட்ராக்ட் கை நழுவிப் போய் விட்டது என்று காச் மூச்சென்று சத்தம் போட்டார். நான் எதுவும் பேசாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.                      
                       அப்புறம் கொஞ்சம் குளிர்ந்து ”நல்லவேளையாக இடிபாடுகளில் சிக்கி இறந்து போனது ஒரு இந்தியப் பெண்ணாக இருந்தாள். அதே விபத்தில் ஒரு அரபியர் இறந்து போயிருந்தால் நீ சிரச்சேதம் பண்ணப் பட்டிருப்பாய்; அல்லது வாழ்நாள் முழுவதும் சிறையிலேயே கழிக்க வேண்டி யிருந்திருக்கும்.
                       இப்போது இறந்து போன இந்தியப் பெண்ணின் குடும்பத்திற்கு ப்ளட் மணியாக அதாவது இந்திய மொழியில் நஷ்ட ஈடாக ஒரு லட்சம் திர்ஹாம் கொடுத்தால் நீ விடுவிக்கப் பட்டு விடுவாய். உன்னால் கொடுக்க முடியுமா….?” என்றார். சுமார் பனிரெண்டு லட்சம் இந்திய ரூபாய்கள். என்னிடம் அவ்வளவு பணம் மொத்தமாக இருந்திருந்தால் நான் ஏன் இங்கு வேலைக்கு வந்திருக்கப் போகிறேன்!
                       ”நான் ஏன் கொடுக்க வேண்டும்? கம்பெனிக்காகத் தானே அந்த வேலை நடந்தது. நான் வேலையில் சேர்வதற்கு முன்பேயே வரைபடங்கள் அப்ரூவல் வராமலேயே குழி தோண்டி நீண்ட நாட்களுக்கு வெறுமனே வைத்திருந்ததால் தான் மண் சரிந்து பக்கத்து வீட்டின் காம்பௌண்ட் சுவர் இடிந்து விழுந்தது. அதற்கு நானெப்படி பொறுப்பாக முடியும்.….”என்றேன் கோபமாக.
                       ”நீ வேலையில் கொஞ்சம் சிரத்தையாக இருந்திருந்தால் அப்போதே எங்களுக்கு தவறைச் சுட்டிக்காட்டி, வேலையைத் தொடராமல் பார்த்துக் கொண்டிருக்கலாமே. சரி போனது போகட்டும்.  கம்பெனி சார்பில் ஐம்பதாயிரம் திர்ஹாம் கொடுக்கிறேன். அதற்கு மேல் என்னாலும் கொடுக்க முடியாது. மிச்சப் பணத்தை நீ தான் எப்படியாவது ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். அல்லது வருடக் கணக்கில் நீ சிறையிலேயே இருந்து கொள்….” என்றார் தீர்மானமாக.
                       கையிருப்பில் சுமார் இருபதாயிரம் திர்ஹாம் இருந்தது. இந்தியாவில் கிராமத்தில் இருக்கும் பூர்வீக நிலத்தை விற்றால் மிச்சப் பணத்தைப் புரட்டி விடலாம். மனைவியிடம் பேசி அதற்கு ஏற்பாடு செய்து கொள்ள முடிவு செய்தேன்.  
                       ”சரி. ஆனால் நான் முழுசாய் விடுவிக்கப் பட்டதும் என்னை இந்தியாவிற்குத் திரும்பிப் போய் விட அனுமதிக்க வேண்டும். இங்கு என்னால் தொடர்ந்து வேலை செய்ய முடியாது….”என்றேன்.
                       “உன் இஷ்டம்.  வற்புறுத்த மாட்டோம்….” என்றார்.
v  முற்றும்
(புலம் பெயர்வு சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றது.

காக்கைச் சிறகினிலே – ஜூலை 2016 இதழில் பிரசுரிக்கப்பட்டது)