Wednesday, December 12, 2012

தினமணிக் கதிரில் என் சிறுகதை - கணிதச் சமன்பாடுகளில் காலாவதியாகும் மனித உறவுகள்


                         வீரகேசவன் பெர்மிஷன் போட்டு விட்டு வீட்டிற்குப் போகும் போது கூட முத்தையாவிடம் வந்து, “கண்டிப்பா ஒரு வழி வீட்டுக்கு வந்துட்டுப் போங்க ஸார்..... நீங்க, உங்க வீட்டுக்குப் போற வழியில தான் என்னோட வீடு....“என்று அழைப்பு விடுத்து விட்டுத் தான் போயிருந்தான்.
                        இன்றைக்கு அவனுடைய இரண்டாவது பெண்ணிற்கு மூன்றாம் வயது பிறந்த நாளாம். அவனும் ரொம்ப நாளாக இவனை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துக் கொண்டுதான் இருக்கிறான். இவனுக்குத் தான் போய் வருவதற்கான அவகாசமும் பொறுமையும் வாய்க்கப் பெறாமல் இழுத்துக் கொண்டே போகிறது.
                        மேலும் முத்தையாவிற்கு அவ்வளவு சீக்கிரம் யாருடைய வீட்டிற்கும் போய்ப் புழங்கி பழக்கமில்லை. அவனுடைய அம்மா பலதடவை அவனுடன், இப்படி சொந்தக்காரகள் யாருடனும் ஒட்டாமல் ஒதுங்கி இருக்கிற பழக்கத்திற்காக சண்டை போட்டிருக்கிறாள். ஆனாலும் அவள் உயிரோடு இருக்கிறவரை அவனை திருத்தவே முடியவில்லை.
                        வீட்டிற்கு, சொந்தக்காரர்கள் யாராவது வரும் போது அவர்களை என்ன உறவு முறை சொல்லி அழைப்பது என்று கூடத் தெரியாமல் பல தடவைகள் குழம்பித் தடுமாறி இருக்கிறான் முத்தையா. இவனுடைய அம்மா தான் சொல்லிக் கொடுப்பாள். அவள் வீட்டிலில்லாத நேரத்தில் யாராவது வந்து விட்டால் அவ்வளவுதான். என்ன பேசுவது என்றே தெரியாமல் திரு திருவென்று முழிப்பான்.
                        அப்புறம் சமாளித்துக் கொண்டு அப்போது வாய்க்கு என்ன உறவு முறை வருகிறதோ அதைச் சொல்லி “வாங்க பெரியம்மா.....”  என்றபடி வரவேற்பான். வீட்டிற்கு வந்திருப்பவரோ “அட என்ன தம்பி  என்னப் போயி பெரியம்மான்குற;  நான் உனக்கு அத்தை முறையாக்கும்;  இவர் உனக்கு மாமா வாக்கும்..... எங்க பொண்ண நீ கட்டிக்க வேண்டாமா...” என்று சிரித்தபடி சுட்டிக் காட்டுவார்கள்.
                        முத்தையாவும் வீரகேசவனும் வண்டலூருக்குப் பக்கத்தில் ஒரு கட்டுமானக் கம்பெனியில் வேலை பார்க்கிறார்கள். வீரகேசவன் வேலைக்கு சேர்ந்த புதிதில் ஒருநாள் முத்தையாவிடம் சாதாரணமாக பேசிக் கொண்டிருக்கும் போது, “உங்கள் பேச்சு, முகஜாடை எல்லாம் பார்த்தா தெற்கத்திப் பக்கம் மாதிரி தெரியுது.... உங்களோட சொந்த ஊர் எது சார்...?” என்றான்.
                        ”அப்படியா, நான் சென்னைக்கு வந்து செட்டிலாகி இருபது வருஷத்துக்கும் மேல ஆயிருச்சு; இன்னுமா என் முகத்துல தெற்கத்திக் களை தெரியுது.....என்று முகத்தில் ஆச்சர்யம் பொங்க கேட்ட முத்தையா ”நீ சொல்றது ரொம்பச் சரிப்பா; எனக்கு பூர்வீகம் ஸ்ரீவில்லிப்புத்தூருக்குப் பக்கத்துல முல்லிக்குளம்குற கிராமம்....”  என்றான்.
                       வீரகேசவன் “எனக்கு சாத்தூர் சார்....” என்று மலர்ந்தான். “ஸ்ரீவில்லிப்புத்தூர்ல பால்கோவா பேமஸ் ஆச்சே! அந்த பலகாரம்னா என் மனைவிக்கு உசுரு ஸார்; எடைக்கு எடை உங்க ஊர் பால்கோவா குடுக்குறதா இருந்தா புருஷனக் கூட விட்டுக் குடுத்துருவா....... அடுத்த தடவை ஊருக்கு போயிட்டு வரும்போது ஒரு ரெண்டு கிலோ மறக்காம வாங்கிட்டு வாங்க ஸார்....” என்றான் உரிமையாய்.
                        ”அதுக்கென்னப்பா வாங்கிட்டு வந்துட்டாப் போகுது....” என்றவன் கொஞ்சம் இடைவெளிவிட்டு “எங்கப்பா..... ஊர்ப்பக்கம் போயி பத்து வருஷத்துக்கு மேல ஆயிருச்சு.... இப்பல்லாம் ஊர்ப் பக்கமே போறதில்ல; அப்பா அம்மால்லாம் செத்துப் போயிட்டாங்க; நாங்க போனா, எங்கள ஆதரிக்குறதுக்கும் அங்க யாருமில்ல.....” என்றான் வருத்தம் தொனிக்க.
                        ”ஏன் ஸார் இவ்வளவு விரக்தியா பேசுறீங்க்? எங்க ஊருக்கு வாங்க ஸார்.... திரும்பும் போது சாத்தூர் சேவும், கருப்பட்டி மிட்டாயும் ஒரு மூட்டை வாங்கிக் குடுத்து அனுப்புறேன்....” என்றான். இருவரும் சிரித்துக் கொண்டார்கள்.
                        அன்றைக்கிலிருந்து “ரொம்ப நெருங்கிட்டோம்; பக்கத்து பக்கத்து ஊர்க்காரங்களாயிட்டோம்; வீட்டுக்கு வாங்களேன் ஸார்.... பேசிப் புழங்கி இருக்கலாம்ல......” என்று வற்புறுத்தவே தொடங்கி விட்டான்.
                        ”என் பொண்டாட்டி கிராமத்துப் பொண்ணு ஸார்; அருமையா சமைக்கும்; உடனே பட்டிக்காட்டு சமையல்னு குறைச்சு எடை போட்டுறாதீங்க.... இப்ப சென்னையில பேமஸா இருக்குற ஃபாஸ்ட் ஃபுட் அயிட்டங்கள் அதான் ஃபிரைடு ரைஸ், நூடூல்ஸ், சிக்கன் மஞ்சூரியன் எல்லாம் கூட சூப்பரா சமைக்கும் ஸார்.... நம்ம ஆபீஸ்லருந்து எங்க வீடு கொஞ்சம் தூரம் தான்; இருந்தாலும் விதம் விதமா சாப்புடுறதுக்காகவே மத்தியானம் ஒரு தடவை வீட்டுக்குப் போயிட்டு வர்றேன்னா பார்த்துக்குங்களேன்.....” என்று அவ்வப்போது ஆசை மூட்ட வேறு செய்தான்.
                        இன்றைக்கு வீரகேசவனின் வீட்டிற்குப் போய் விட்டுத்தான் வரலாமே என்று முத்தையாவிற்கு தோன்றியது. போனால் ஒரு வேளையாவது வாய்க்கு ருசியாக சாப்பிட்டு வரலாம் என்கிற ஆசையும் கிளர்ந்தது. வாய்க்கு ருசியாக சாப்பிட்டுத் தான் எத்தனை நாளாகிறது.....!
                        இவனுடைய மனைவிக்கு திருப்பத்தூருக்குப் பக்கத்தில் ஒரு கிராமத்தில் அரசு மேல் நிலைப்பள்ளியில் ஆசிரியை வேலை கிடைத்ததும் அதற்காகவே காத்திருந்த்து போல் குழந்தையையும் கையில் பிடித்தபடி பயணப்பட்டு விட்டாள்.
                        அங்கேயே வீடெடுத்து தங்கிக் கொண்டு மாதம் ஒரிரு முறைகள் தான் சென்னைக்கு வந்து போகிறாள். அப்படி வருகிறவளுக்கு, இவன் அலங்கோலமாய்ப் போட்டிருக்கும் வீட்டை ஒதுங்க வைக்கவே நேரம் சரியாக இருக்கும். வாய்க்கு ருசியாக ஆக்கிப் போட வெல்லாம் நேரமிருக்காது.
                        மேலும் இவனுடைய மனைவிக்கு விதவிதமாய் சமைப்பதிலெல்லாம் ஆர்வமிருப்பதில்லை. அவள் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் ஹோட்டலிலிருந்து உணவை வரவழைத்து சாப்பிடுவதைத் தான் பெரிதும் விரும்புவாள். முத்தையாவோ வீட்டுச் சாப்பாட்டில் அதிகம் ஆர்வம் காட்டுபவன்.
                        இந்த விஷயத்தில் இருவருக்கும் எப்போதும் சண்டை தான். “உங்களுக்கு வேணுமின்னா நீங்க சமைச்சு சாப்பிடுங்க; எப்பவாவது லீவுக்கு வர்ற என் உயிர ஏன் எடுக்குறீங்க......” எரிந்து விழுவாள்.
                        ”என்ன பண்றது? எனக்கு சமைக்கத் தெரியல்லயே! நான் சாம்பார் வச்சா அது ரசம் மாதிரி இருக்கு; சரி நமக்கு நல்லா ரசம் வைக்க வருதுன்னு அதே ஃபார்முலாவுல இன்னொரு நாள் வச்சா அன்னைக்கு ரசம் கசாயம் மாதிரி அமையுது.....” முத்தையாவின் பதில் இரங்கத்தக்க விதத்தில் இருக்கும்.
                        ”ஆமா ஆம்பளைங்களுக்கு இது ஒரு சாக்கு.... சமைச்சு பழகிக்க வேண்டியது தான! நாங்க எல்லாம் சமைக்கிறதுக்கு பி.எச்.டி.யா படிச்சுட்டு வந்துருக்கோம்..... எல்லாம் பழக்கத்துல வர்றது தான்..... பொம்பளைங்களுக்கு என்னைக்கு சமையல் கட்டுலருந்து விடுதலை கிடைக்குதோ அன்னைக்குத் தான் உண்மையான விடுதலை; அதுவரைக்கும் ஆணாதிக்கத்தின் அடிமைகள் தான் நாங்கள்.....” என்று சிணுங்கியபடி அவள் சமையலறைக்குள் போவாள்.
                        இவன் உடனே பதறிப்போய் “அய்யோ செல்லம்; எப்பவாவது வீடுக்கு வர்ற நீ.....அந்த நேரத்தையும் சமைக்குறதுல வீணாக்க வேண்டாம்; நான் வெளியில போயி வாங்கிட்டே வந்துடுறேன்.....” என்றபடி பையை எடுத்துக் கொண்டு கிளம்பிப் போவான்.
                        பெரும்பாலும் அவள் வீட்டிற்கு வருகிற ஞாயிற்றுக் கிழமைகளின் பகல்கள் இப்படித்தான் கழியும். அவளுடனான சண்டையை அதிகம் வளர்த்தால் அபூர்வமாய் அவள் புணர்ச்சிக்கு அனுமதிக்கிற இரவுகளிலும் இவன் ‘பட்டினி’யாய்’ புரண்டு கொண்டிருக்க நேரும் என்பதால் இவனே அடங்கிப் போய் விடுவான்.  
                        தாம்பரத்தில் இறங்கியதும் ஒரே ஒரு நிமிஷம் முத்தையா யோசித்தான் – நேரே வீட்டிற்குப் போக மின்சார இரயிலைப் பிடிப்பதா அல்லது வீரகேசவனின் வீட்டிற்கு போய் வரலாமா என்று. வீரகேசவன் சொன்னபடி, அவன் வீடு ஒன்றும் முத்தையா அவனின் வீட்டிற்குப் போகும் வழியில் எல்லாம் இல்லை.
                        முத்தையா தாம்பரத்திலிருந்து மின் இரயிலைப் பிடித்து ஆவடி போக வேண்டும்; அங்கிருந்து ஸ்டாண்டிலிருக்கும் பைக்கை எடுத்து கோயில்பதாகை போக வேண்டும். பொதுவாகவே அவன் வீட்டிற்குப் போய்ச் சேர இரவு ஒன்பதரைக்கு மேலாகி விடும். 
                        வீரகேசவனின் வீடு தாம்பரத்திலிருந்து முடிச்சூர் தாண்டி இருந்தது. அங்கு போய்விட்டு இவனுடைய வீட்டிற்குப் போவதானால் எப்படியும் பதினோரு மணிக்கு மேலாகி விடும். வீட்டில் இவன் வருகையை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்க யாருமில்லை என்பதால் பிரச்னை எதுவுமில்லை.
                        வீரகேசவனின் வீட்டிற்குப் போவதென்று முடிவானதும் ஏதாவது வாங்கிக் கொண்டு போகலாம் என்று மார்க்கெட் பகுதிக்குப் போனான். யாருடைய வீட்டிற்குப் போனாலும் ஏதாவது வாங்கிக் கொண்டு போக வேண்டுமெகிற பழக்கத்தை அவனுடைய மனைவி தான் வற்புறுத்தி ஏற்படுத்தினாள்.
                        கல்யாணத்திற்கு முன்பு வரை யாரைப் பார்க்கப் போனாலும் கைவீசிக் கொண்டுதான் போவது அவனுக்கு வழக்கம். அவனின் குடும்பத்தில் எல்லாம் எல்லோருமே இப்படித்தான். குழந்தைகள் இருக்கிற வீட்டிற்குப் போனால் மட்டுமே அபூர்வமாக ஒரு பொட்டலம் சீனிச்சேவோ அல்லது காரச்சேவோ வாங்கிப் போவார்கள். மற்றபடி வீசுன கை வெறுங்கைதான்.
                        அதே பழக்கத்தில் கல்யாணத்திற்கு அப்புறம் முதல் முறையாக முத்தையாவின் மனைவி அவளின் தாய் வீட்டிற்குப் போயிருந்தபோது, அவளைப் பார்க்கப் போயிருந்த போதும் எதுவும் வாங்கிக் கொண்டு போயிருக்கவில்லை. இவன் போய்க் கொஞ்ச நேரத்தில் அவளாகவே சொன்னாள்.
                        ”வாங்கிட்டு வந்த பலகாரத்த எடுத்துக் குடுப்பா.... அப்பாவும் அம்மாவும் சாப்புடட்டும்....”
                        இவனுக்குத் திகைப்பாக இருந்த்து. தயங்கியபடி மெதுவாக “நான் பலகாரம் எதுவும் வாங்கியாரலேயே...! இங்க என்ன சின்னப் பிள்ளையா இருக்கு; தின்பண்டமெல்லாம் வாங்கியாறதுக்கு......” என்று சொன்னதும் திட்டிக் குமித்து விட்டாள். அப்புறம் அவளின் அம்மா தான் தலையிட்டு அவளை சமாதானப் படுத்தினாள். “சரி விடுடி; கிராமத்துக் காரங்கள்ளாம் அப்படித்தான்....”
                        அந்த சம்பவத்திற்கப்புறம் முத்தையா தினசரி வேலை முடிந்து வீட்டிற்குப் போகும் போதும் கூட மனைவி வீட்டிலிருக்கிறாள் என்றால் தின்பதற்கு ஏதாவது வாங்கிப் போவதை பழக்கப் படுத்திக் கொண்டான்.
                        இப்போது, முத்தையாவிற்கு மூன்று வயது தொடங்கி இருக்கும் பெண் குழந்தைக்கு என்ன வாங்கிப் போவது என்று யோசணையாக இருந்தது. ஏதாவது பொம்மைகள் வாங்கிப் போகலாம் என்றால், இவன் வாங்கிப் போகும் பொம்மை ஏற்கெனவே வாங்கப்பட்டு அவர்கள் வீட்டிலிருந்தால் என்ன செய்வது என்று தயக்கமாக இருந்தது. தின்பண்டமே வாங்கிப் போகலாம் என்று தீர்மானித்தான்.
                        பலகாரக் கடைக்குள் நுழந்தான். நான்கு பேர் இருக்கும் குடும்பத்திற்கு குறைந்தது அரைக் கிலோ இனிப்பாவது வாங்கிப் போனால் தான் மரியாதையாக இருக்கும் என்று நினைத்தபடி கடையிலிருக்கும் விலைப் பட்டியலை நோட்டம் விட்டான். மில்க் ஸ்வீட் அரைக் கிலோ வாங்குவதென்றால் 180 ரூபாய் ஆகிவிடும் போலிருந்தது. ஒருவேளை உணவிற்கு ஈடாக இவ்வளவு செலவழிக்க வேண்டுமா என்று சிறு சஞ்சலம் ஏற்பட்டது அவனுக்கு.
                        கடையில் வேறென்ன இருக்கிறது என்று கண்களை அலைய விட்டபோது கண்ணாடிப் பேழைகளுக்கு பின்னால் அடுக்கப் பட்டிருந்த பிஸ்கெட் பாக்கெட்கள் இவனின் கவனத்தை ஈர்த்தன. கெட்டியான பூ வேலைப்பாடுகள் நிறைந்த செவ்வக அட்டைக்குள் பேக்கிங் பண்ணப்பட்டு அழகாய்க் கண்ணைப் பறித்த கிரீம் பிஸ்கட் பாக்கெட் ஒன்றைக் காட்டி கடைக்காரனிடம் எடுத்துத் தரச் சொன்னான்.
                        ”என்ன வெலைப்பா....” என்றபடி பாக்கெட்டில் அச்சிடப் பட்டிருந்த MRP விலையைத் தேடிப் பார்த்தான்.
                        ”முப்பது ரூபாய் ஸார்.....” என்றான் கடைக்கார சிறுவன்.                
                        MRP விலையே 28 ரூபாய் தானப்பா போட்டுருக்கு; நீ அநியாயமா 2 ரூபாய் அதிகமா கேட்குற..... கன்ஸ்யூமர் கோர்ட்ல கேஸ் போட்டுருவேன்...” என்றான் முத்தையா.
                        ”அய்யே! இங்க 30 ரூபாய் தான் வெல; இஷ்டமின்னா வாங்கு... இல்லைன்னா போய்க்கிட்டே இரு....கோர்ட் கீர்ட்டுன்னு பயமுறுத்துற வேலை எல்லாம் இங்க வேண்டாம்...” என்றான் மூர்க்கமாக.
                        முத்தையா கடிகாரத்தில் மணி பார்த்தான். இரவு எட்டை நெருங்கி கொண்டிருந்தது. இந்தச் சிறுவனுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தால் மிகவும் தாமதமாகி விடும் என்று எண்ணமிட்டபடி அவன் கேட்ட பணத்தைக் கொடுத்து பிஸ்கட்டை வாங்கிக் கொண்டு கடையிலிருந்து வெளியேறினான்.
                        வீரகேசவனின் வீடு முடிச்சூர் தாண்டி எங்கேயோ இருக்கிறது என்று மட்டும் தான் முத்தையா அறிந்திருந்தான். தெளிவான முகவரி அவனிடம் இல்லை. வீரகேசவனுக்கு போன் பண்ணினான். “நான் தாம்பரம் வந்துட்டேன்; இங்கருந்து உன் வீட்டுக்கு எப்படிப்பா வர்றது.....”
                        வீரகேசவன் இவன் வருகையை கொஞ்சமும் எதிர்பார்த்திருக்க வில்லை என்பது அவனுடைய குரலில் தெரிந்தது. “அப்படியா ஸார்; நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல ஸார்..... சர்ப்ரைஸ்; பரவாயில்ல..... வாங்க ஸார்; நானும் இப்ப தாம்பரத்துல தான் இருக்கேன் ஸார்; நீங்க முடிச்சூர் ரோட்டுக்கு வந்து அந்த முனையில ஒரு பத்து பதினைஞ்சு நிமிஷம் காத்துருங்க; நான் கொஞ்சம் ஷாப்பிங் பண்ண வேண்டி இருக்கு. முடிச்சதும் உங்கள வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்......” என்றான்.
                        முத்தையா வீரகேசவனுடன் அவன் வீட்டிற்குப் போய் இறங்கிய போது அவனின் மனைவி “எவ்வளவு நேரங்க....” என்று கடிந்து கொள்ளத் தொடங்கி, முத்தையா நிற்பதைப் பார்த்த்தும் சுருதி குறைந்து, அவன் வாங்கிப் போயிருந்த பொருட்களை அபகரித்துக் கொண்டு அவசரமாய் உள்ளே போகப் போனாள். அவளை நிறுத்தி வீரகேசவன் முத்தையாவை அவளிடம் அறிமுகப் படுத்தி வைத்தான். அவள் கைகுவித்து வணக்கம் சொல்லியதும் பரபரப்பாய் வீட்டிற்குள் போனாள்.
                        அது 15 மாடிகளும், மாடிக்கு நான்காக மொத்தம் 60 வீடுகளும் கொண்ட மிகப் பெரிய குடியிருப்பு. இவர்கள் வீடிற்குள் நுழைந்த போது வீட்டின் வரவேற்பு அறை ஏற்கெனவே கலர் காகிதங்கள், ஜிகினாக்கள் எல்லாம் ஒட்டப்பட்டு ஒரு குழந்தையின் பிறந்தநாளை எதிர் கொள்ள தயாராகவே இருந்தது. ஒரு எட்டு வயது மதிக்கத்தக்க பையனும், பிறந்த நாள் கொண்டாடப் போகும் பெண்ணும் ”அப்பா....” என்றபடி வீரகேசவனிடம் ஓடி வந்து, முத்தையா நிற்பதைப் பார்த்து தயங்கி நின்றார்கள். “அங்கிளுக்கு ஷேக் ஹேண்ட் குடுங்க.....” என்றான் வீரகேசவன். கை கொடுத்தார்கள்.
                        முத்தையா இருவரையும் அணைத்தபடி “உங்க பேர் சொல்லுங்க....”என்றான். “ஐயாம் ஷ்யாம்...” என்று பையனும் “பிரித்தி....”என்று பெண் மழலையிலும் சொன்னார்கள். பெண்ணிடம் இவன் வாங்கிப் போயிருந்த பிஸ்கட் பாக்கெட்டை நீட்டியதும் அது தயக்கமாய் வீரகேசவனைப் பார்த்தது. அவன் “வாங்கிக்க....” என்று அனுமதி கொடுக்கவும், பெற்றுக் கொண்டு உள்ளறை நோக்கி ஓடியது. கூடவே பையனும் ஓடினான்.
                        ”வீட்டை சுத்திப் பார்க்கலாமா ஸார்....” என்றான் வீரகேசவன். முத்தையா தலையாட்டவும் அவனை ஒவ்வொரு அறையாக அழைத்துக் கொண்டு போனான். அது மூன்று படுக்கை அறைகள் கொண்ட விசாலமான ப்ளாட். ஒவ்வொரு அறையும் மெல்லிய வண்ணங்களுடன் மிகவும் நேர்த்தியாக அலங்கரிக்கப் பட்டு,  அங்கங்கே கலை அம்சம் மிளிரும் பொருட்களும், பூச்சாடிகளும், பிளாஸ்டிக் பூக்கள் மற்றும் நவீன பொருட்களால் நிரம்பி இருந்தன.
                        வரவேற்பறையில் ஷோகேஸுக்குள் மிகப்பெரிய பிளாஸ்மா டீ.வி. ஹோம் தியேட்டருடன் இருந்தது. படுக்கை அறைகளிலும் டீ.வி.க்களும் மியூசிக் சிஸ்டங்களும் இருந்தன. இரண்டு படுக்கை அறைகளில் ஏ.சி. இருந்த்து. சமையலறையும் நான்கு பர்னர்கள் கொண்ட அடுப்பு, புகை உறிஞ்சுவதற்கான ஏற்பாடுகளுடனும் நவீன எலக்ட்ரிக் சாதனஙகளுடனும் இருந்தது.        
                        ”வீடு நெஜமாவே சூப்பரா இருக்கு வீரகேசவன்..... நல்லா அலங்கரிச்சுருக்கீங்க...” என்றான் முத்தையா. “நமக்கெங்க ஸார் அதுக்கெல்லாம் நேரம்! எல்லாம் வொய்ஃபோட கைங்கர்யம் தான்.... அவள் கேட்குற பொருட்கள வாங்கித் தர்றது மட்டும் தான் என்னோட வேலை....” அவனுடைய பேச்சில் பெருமை பொங்கியது. அப்போது அவனுடைய மனைவி அவசரமாய் வெளியே போனாள்.
                        ”பிறந்த நாள் கொண்டாடுறதுக்கு அக்கம் பக்கத்து பிளாட்காரங்களக் கூப்புடப் போறாள்....” வீரகேசவன் தகவல் சொன்னான்.
                        ”என்ன வெலையாச்சுப்பா ஃப்ளாட்டு....?”
                        ”அஞ்சு வருஷத்துக்கு முன்னால இதை நான் வாங்கும் போது 60 லட்சம் ஸார்..... இப்ப இதே அளவுல வாங்கப்போனா ஒண்ணரைக் கோடிக்கு மேல ஆயிடும்....” என்றான்.
                        முத்தையாவிற்கு தாகமாக இருந்தது. தண்ணீர் கேட்க சங்கோஷமாக இருந்தது. சரி சாப்பிடும் போது குடித்துக் கொள்ளலாம் என்று உலர்ந்திருந்த உதட்டை நாக்கால் நனைத்துக் கொண்டான்.
                        வீரகேசவனின் மனைவியுடன் இரண்டு பெண்களும் மூன்று குழந்தைகளும் வந்தார்கள். பிரீத்தியின் பிறந்த நாள் கொண்டாட்டம் தொடங்கியது. கேக்வெட்டி வண்ண மெழுகுவர்த்திகள் ஊதி அணைக்கப்பட்டு, ஒரு மெழுகுவர்த்தி ஒளிர வைக்கப்பட்டு, குடும்பத்தினர்கள் மாறி மாறி கேக் ஊட்டிக் கொண்டார்கள். குழந்தைகள் ஆங்கிலத்தில் பிறந்த நாள் வாழ்த்துப் பாடலை பாடினார்கள். அப்புறம் எல்லோருக்கும் பேப்பர் பிளேட்டில் வைத்து ஆளுக்கொரு கேக் துண்டு வழங்கப்பட்ட்து.
                        வந்திருந்தவர்களுக் கெல்லாம் வரவேற்பறையிலேயே பிளாஸ்டிக் சேர்கள் போடப்பட, வீரகேசவன் இவனை டைனிங் டேபிளில் உட்காரச் சொன்னான். அதுவும் சரிதான்; அப்படியே சாப்பிட்டு விடலாம் என்று நினைத்தபடி இவனும் உட்கார்ந்து கேக்கை சாப்பிடத் தொடங்கினான். எல்லோருக்கும் பேப்பர் கப்பில் காஃபி வந்த்து. இவனுக்கும் வந்தது. சாப்பிடுவதற்கு முன்னால் எப்படி காஃபி குடிப்பது என்று இவனுக்கு தயக்கமாக இருந்தது. ஆறிப் போகுமென்று அதையும் குடித்து முடித்தான்.
                        வந்தவர்கள் எல்லோரும் கிளம்பிப் போனார்கள். வீரகேசவன் இன்னொரு துண்டு கேக்கை எடுத்துக் கொண்டு வந்து முத்தையாவின் பிளேட்டில் போடப் போனான். ”வேணாம்ப்பா; ஏற்கெனவே எனக்கு சுகர் இருக்கு....” என்றபடி கைகளால் தடுக்கவும், ”அப்படியா ஸார் .....”  என்றபடி சமையலறைக்குள் ஓடிப்போய் ஒரு வெஜிடபிள் சமோசாவைக் கொண்டு வந்து பிளேட்டில் போட்டான்.
                        ”தினம் அவ்வளவு தூரத்துலருந்து எப்படி ஸார் வேலைக்கு வந்துட்டுப் போறீங்க...! கஷ்டமா இல்லையா...?” வீரகேசவன் கேட்டான்.
                        ”கஷ்டமாத் தான் இருக்கு; சொந்த வீடு அங்கருக்கும் போது என்னப்பா செய்றது...!’
                        ”காலையில எழுந்துருச்சு நீங்களே சமையல் பண்ணி.... பாக்ஸ்ல அடச்சு எடுத்துக்கிட்டு, லொங்கு லொங்குன்னு ஓடி இரயிலப் புடுச்சு..... பாவம் ஸார் நீங்க.....” நிஜமான அனுதாபமும் அக்கறையும் அவன் வார்த்தைகளில் வழிந்தது.
                        ”நீயும் குடும்பத்தோட எங்க வீட்டுக்கு ஒரு தடவை வந்துட்டுப் போகணும்ப்பா.....” என்று முத்தையா அவனுக்கு அழைப்பு விடுத்தான்.
                        ”அவ்வளவு தூரம் எங்க ஸார் வர முடியும்! அடுத்த வருஷம் கார் வாங்கீட்டு முடிஞ்சா வர்றோம் ஸார்....” என்றான்.
                        வீரகேசவனின் மனைவி சமையலறையில் உட்கார்ந்து கொண்டு இவர்கள் பேசுவதைக் கவனித்துக் கொண்டிருந்தாள். பிறந்தநாள் கொண்டாடிய பெண் அவளின் மடியில் படுத்துத் தூங்கிப் போனது. பையன் வரவேற்பறை சோபாவில் உட்கார்ந்தபடி ஏதோ பாடப் புத்தகத்தை விரித்து வைத்துப் படித்துக் கொண்டிருந்தான்.
                        முத்தையாவிற்கு மிகவும் ஆயாசமாக இருந்தது. வீரகேசவனோ நேரமாவது தெரியாமல் பேசிக் கொண்டிருந்தான். இரவுச் சாப்பாடு கொடுப்பதற்கான அறிகுறி எதுவுமே தென்பட வில்லை. ஒருவேளை, தான் கிளம்புகிறேன் என்று சொன்னால் தான் நேரமாவது உறுத்தி சாப்பிடச் சொல்வார்களோ என்ற எண்ணத்தில் “சரி கேசவா, ரொம்ப நேரமாயிருச்சு; நான் கிளம்புறேன்......” என்று முத்தையா எழுந்து கொள்ளவும், வீரகேசவனும் “அதுவும் சரிதான் ஸார்; நீங்க ரொம்ப தூரம் வேற போகணும்....” என்றபடி அவனை வழி யனுப்ப வாசலுக்கு வந்தான்.
                        ”இங்கருந்து ஒரு ஆட்டோ புடிச்சு, தாம்பரம் போயிடுங்க ஸார்; அப்புறம் வழக்கம் போல மின்சார இரயில் புடிச்சுப் போய்க்கங்க.....” என்று ஆலோசனை சொன்னான். முத்தையாவிற்கு பசி வயிற்றைக் கிள்ளியது. முதலில் முடிச்சூரில் போய் சாப்பிட வேண்டும் என்று எண்ணியபடி எட்டி நடையைப் போட்டான்.
                        ”என்னங்க மனுஷன், உங்க ஃப்ரண்டு! ஒரு குழந்தையோட பிறந்த நாளைக்கு, ஒரு கிப்ட் கூட வாங்கிட்டு வரத் துப்பில்லாம.....” என்றாள் வீரகேசவனின் மனைவி எரிச்சலுடன்.
                        ”அதான் பிஸ்கட் பாக்கெட் வாங்கிட்டு வந்தாருல்ல; பாவம் பட்டினியா கிளம்பிப் போறார்.....” என்றான் வீரகேசவன்.
                        ”ஆமாம் உங்க ஃப்ரண்டுக்கு சாப்பாடு ஒண்ணு தான் குறைச்சல்....! 28ரூ.க்கு பிஸ்கட் வாங்கிட்டு வந்தார்; அதுக்குத் தான் நாம 12ரூ. கேக், 6ரூ. சமோசா, 10ரூ. காஃபி நான் குடுத்த காஃபி 10ரூ. பெருமில்ல! - குடுத்தோம்ல... கணக்கு சரியாயிடுச்சு......” என்றாள்.
                        வீரகேசவனின் பையன் சத்தம் போட்டு பாடம் படிக்கத் தொடங்கினான். தமிழர்கள் விருந்தோம்பல் பண்பில் சிறந்து விளங்குபவர்கள்; நம் முன்னோர்கள், இரவுகளில் தங்களின் கிராமங்களைக் கடந்து போகும் வழிப் போக்கர்களுக்குக் கூட உணவு கொடுத்து, அவர்கள் உறங்கி ஓய்வெடுப்பதற்காக தங்களின் திண்ணைகளை ஒழித்துக் கொடுத்து உபசரிக்கும் உயர்ந்த பழக்கம் உள்ளவர்கள்.
                        படித்துக் கொண்டிருந்தவன் திடீரென்று வீரகேசவனிடம் கேட்டான் ”அப்பா, விருந்தோம்பல்னா என்னப்பா அர்த்தம்?”


Ø  முற்றும்

(நன்றி: தினமணிக் கதிர் 25.11.2012)               

Friday, November 9, 2012

விகடன் மேடை – கே.பாக்யராஜ் பதில் சொல்லாத என்னுடைய இரண்டு கேள்விகள்


       பொதுவாய் பிரபலங்களிடம் கேள்விகள் கேட்பது எனக்கு எப்போதும் பிடித்தமான விஷயமில்லை. பத்திரிக்கைகளுக்கு கேள்விகள் எழுதிப் போட்டு, அப்படியாவது பத்திரிக்கையில் பெயர் வருமென்று ஆசைப் படுகிற ரகமும் இல்லை நான். ஆனால் விகடன் மேடையில் வாசகர்களின் கேள்விகளுக்கு  கே.பாக்யராஜ் பதில் சொல்கிறார் என்று அறிந்ததும் மனசு பரபரப்பானது. ஏனென்றால் பாக்யராஜ் என்னுடைய பால்யகால ஆதர்சங்களில் மிகவும் பிரதானமானவராய் இருந்தவர்.

பாரதிராஜாவின் இயக்கத்தில் அவர் கதை வசனம் எழுதி கதாநாயகனாக அறிமுகமான புதிய வார்ப்புகள் படம் பார்த்ததுமே நண்பர்களின் வட்டத்தில் நான் அவரின் ரசிகன் என்று பெருமிதமாய் அறிவித்துக் கொண்டேன். எல்லோரும் சிரித்தார்கள். ஏனென்றால் அவர்கள் எல்லாம் சிவாஜியின் ரசிகர்கள். கமலும் ரஜினியும் அப்போது அத்தனை பிரபலமில்லை என்று தான் ஞாபகம்!

அவர்களைப் பொறுத்த வரை சினிமாவில் பிரபலங்களுக்கு ரசிகனாக இருப்பதில் தான் பெருமை. இப்பொழுது தான் முதல் படம் நடித்திருக்கிற பாக்யராஜிற்கு நான் ரசிகன் என்று சொன்னதும் என்னைக் கேலியும் கிண்டலும் பண்ணினார்கள்.            ஆனாலும் அவர்களின் கலாய்ப்புகளையும் மீறி நான் கே.பாக்யராஜின் ரசிகனாகவே தான் தொடர்ந்தேன். எனக்கு அவரை அவ்வளவு பிடிக்கும். முதல் படத்தைப் பார்த்ததுமே வீட்டில் அடம் பிடித்து அப்போது நான் அணிந்திருந்த மூக்குக் கண்ணாடியை அவர் திரைப்படத்தில் அணிந்திருந்தது மாதிரியே அகலமான பெரிய ப்ரேமாக மாற்றிக் கொண்டேன்.

பாக்யராஜ் அவரின் குருநாதர் பாரதிராஜாவிடமிருந்து பிரிந்து வந்து தனியாக படம் இயக்கத் தொடங்கிய பின்பு, பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளி வந்த சில திரைப்படங்கள் சிறப்பாக அமையாத போது நண்பர்களிட மெல்லாம் பாரதிராஜாவின் சிறப்பே பாக்யராஜ் மாதிரியான திரைக்கதை ஆசிரியர்களைத் தன்னுடன் அஸிஸ்டெண்ட்களாக வைத்துக் கொண்டதால் தான்; பாக்யராஜ் இல்லாமல் அவர் இயக்கிய படங்கள் – கல்லுக்குள் ஈரம், நிழல்கள், காதல் ஓவியம் – எதுவும் சோபிக்கவில்லை பார்த்தீர்களா என்று காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு சண்டை போட்டிருக்கிறேன்.

அவரின் நண்பர் B.V.பாலகுருவிற்காக அவர் கதை வசனம் எழுதி வில்லனாகவும் நடித்திருந்த கன்னிப் பருவத்திலே படம் பார்த்து விட்டு என்னுடைய நண்பர்கள் எல்லாம் ”என்னடா உங்க ஆளு அதுக்குள்ள வில்லனாயிட்டாரு; இனிமே அவர் அவ்வளவு தான்….” என்று கலாய்த்தபோது, ”நடிகன் என்றால் இப்படித் தான் எல்லா வேஷங்களிலும் நடிக்க வேண்டும்….” என்று ஏதோ சொல்லி சமாளித்தாலும் எனக்கு கண்ணீர் பொங்கி விட்டது. ஆனாலும் அந்தப் படம் எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது.  

விடியும் வரைக் காத்திரு  (வசனம்: தூயவன்) என்னும் திரைப்படத்திலும் பாக்யராஜ் வில்லத்தனமான ஹீரோ தான்; அவர் தான் வில்லன் என்பதே படத்தின் இடைவேளைக்குக் கொஞ்சம் முன்பு தான் தெரியும். அந்தப் படம் பார்த்ததும் “நடிகன் என்றால் இவர் தான் நடிகன்…” என்று நண்பர்களிடமெல்லாம் உற்சாகமாக வாதிட்டேன்.

அது ஒரு அற்புதமான  த்ரில்லர் மூவி. ஏற்கெனவே அதைப் போல சில திரைப் படங்கள் வந்திருக்கின்றன; வல்லவனுக்கு வல்லவன் என்னும் திரைப்படத்தில் கூட கதாநாயகன் – ஜெமினி கணேசன் - தான் பிரதான வில்லன் என்பது திரைப்படத்தின் இறுதியில் தான் தெரியும், என்றாலும் பாக்யராஜின் இயக்கத்தில் வெளி வந்த படங்களில் விடியும் வரைக் காத்திருக்கு எப்போதுமே சிறப்பான ஒரு இடம் இருக்கும். அதற்கு அப்புறமும் அந்த மாதிரியான வேறு சில திரைப்படங்களும் – சட்டென்று ஞாபகம் வருவது; நூறாவது நாள் – வந்திருக்கின்றன.

அவரின் சினிமாத் தலைப்புகள் எல்லாம் ரொம்பவும் கவித்துவமாக இருக்கும் – சுவர் இல்லாத சித்திரங்கள், ஒரு கை ஓசை, விடியும் வரை காத்திரு, மௌன கீதங்கள், அந்த 7 நாட்கள், தூறல் நின்னு போச்சு என்று தொடர்ந்து …. தாவணிக் கனவுகள் வரை அவர் தன்னுடைய சினிமாக்களுக்கு கவித்துவமான தலைப்புகளையே வைத்துக் கொண்டிருந்தார். தாவணிக் கனவுகள் வியாபார ரீதியாக படு தோல்வி அடைந்ததும், கமர்சியல் சினிமா என்னும் சகதிக்குள் முழுவதுமாய் இறங்கி, சின்னவீடு என்றொரு கீழ்த்தரமான திரைப் படத்தை இயக்கினார். அதற்கப்புறம் அவரிடம் கவித்துவமான தலைப்புகளும் காணாமல் போய்விட்டன என்று தான் நினைக்கிறேன்.

நான் அவரின் மௌன கீதங்கள் என்னும் திரைப்படத்திலிருந்தே மனசளவில் அவரிடமிருந்து விலகத் தொடங்கி விட்டேன். அதன் திரைக்கதை மிகவும் நேர்த்தியாக அமைக்கப் பட்டிருக்கும்… அது திரைப்படம் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போதே குமுதத்தில் தொடராகவும் அவராலேயே எழுதப் பட்டது. வாரம் தவறாமல் வாசித்து ரசித்திருக்கிறேன்.  ஆனால் அந்தக் கதையை என்னால் ரசிக்க முடியவில்லை.

ஆணாதிக்கத்தின் சாயல் அவரின் சினிமாக்களில் அப்பட்டமாய் வெளிப்பட்டது அந்தப் படத்திலிருந்து தான் என்று நினைக்கிறேன். ஒருவேளை அதற்கு முன்பு வரை அவரின் திரைப்படங்களை விடலைப் பையனாக அவரின் தீவிர ரசிகன் என்ற உணர்வில் பார்த்திருந்ததால் மௌனகீதங்களுக்கு முந்தைய திரைப்படங்களின் குறைபாடுகள் எனக்கு உறைக்க வில்லையோ என்னவோ.

 ஆண்கள் அவர்களை அறியாமல் சபலத்தில் வேறொரு பெண்ணிடம் உறவு வைத்துக் கொண்டு விட்டால் அதைப் பெண்கள் அவ்வளவு பெரிது படுத்தக் கூடாது என்னும் தொனியில் எடுக்கப் பட்டிருந்தது அந்தத் திரைப்படம். கதாநாயகன் அவனை அறியாமல் வேறொரு பெண்ணிடம் தவறு செய்து விட்டான் என்றும் சமூகத்தில் இதெல்லாம் சகஸம் என்றும் ஸ்தாபிப்பதற்காக, மனைவி இறந்ததும் உடனே மறுமணம் செய்யும் ஆணையும், மனைவி பிரசவத்திற்கு போயிருந்த சமயத்தில் மச்சினிச்சியையும் மடக்கிப் போட்டுக் கொண்ட ஆணையும் காட்டி நியாயப் படுத்தி இருப்பார்.

சரி அதே மாதிரி சந்தர்ப்பவசத்தால் ஒரு பெண்ணும் விரும்பி வேறொரு ஆணுடன் உறவு வைத்துக் கொண்டு விட்டால் அவளை மன்னித்து ஏற்றுக் கொள்ள வேண்டு மென்று அவரால் கதை அமைத்திருக்க முடிந்திருக்குமா என்று முதல் தடவையாக எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது.  அது மட்டுமல்ல; மௌன கீதங்கள் திரைப்படத்தின் கிளைமாக்ஸும் படு செயற்கை;  மற்றும் அபத்தத்தின் உச்சம்.

கணவன் தப்புச் செய்ததால் அதை அறிந்த அந்த நிமிஷமே அவனை உதறி விட்டு வெளியேறி, சுயமாய் வேலை பார்த்து வீம்புடன் வாழ்ந்து கொண்டிருக்கும் கதாநாயகி, அவன் வேறொரு பெண்ணை மணந்து கொள்வதை அறிந்து மணமேடையில் போய் அவனின் மேலே விழுந்து அப்படி அழுது புரண்டு புலம்புவதும், அது முடியாமல் போகவும் தற்கொலைக்கு முயல்வதுமான திரைக்கதை அமைப்பு படு செயற்கையாய் அமைந்து அந்த பெண் பாத்திர வார்ப்பின் சிறப்பைகளை எல்லாம் ஓரிரு காட்சிகளிலேயே சிதைத்து சின்னா பின்னமாக்கி விட்டதாகத் தோன்றியது எனக்கு.

அதற்கப்புறம் அந்தத் திருமணமே ஒரு நாடகம் என்று சித்தரிக்கப் பட்டு நாயகன் நாயகி ஒன்று சேர்வதாய் முடித்து, பாக்யராஜும் மிகச் சாதரண கமர்சியல் சினிமாக்காரர் தான் என்று என்னை உணர வைத்ததில்,  அவரின் மீதிருந்த என் அபிமானம் கொஞ்சம் கொஞ்சமாய்த் தெறிக்கத் தொடங்கியது. அதற்கப்புறமும் அவரின் திரைப் படங்களை தொடர்ந்து விரும்பித் தான் பார்த்துக் கொண்டிருந்தேன் – ஆனால் அவரின் தீவிர ரசிகனாக அல்ல; சாதாரணமாக எல்லாத் திரைப்படங்களையும் பார்க்க விரும்புகிறவனாக.

ஆனால் அவரின் சின்னவீடு திரைப்படத்திற்குப் பின்னால் அவரின் திரைப் படங்களை விரும்பிப் பார்ப்பதையே விட்டு விட்டேன். இது நம்ம ஆளு, வீட்ல விசேஷங்க, சுந்தரகாண்டம், வேட்டிய மடிச்சுக் கட்டு எல்லாம் தற்செயலாக போகிற போக்கில் பார்த்த படங்கள் தான்; அவற்றை எல்லாம் என்னால் ரசிக்க முடிந்ததில்லைல்லை. ஆரம்ப கால பாக்யராஜின் அடி நிழல் கூட அந்தப் படங்களில் படியவில்லை என்பதும் என் முடிவு. சுந்தரகாண்டத்தையெல்லாம் சகித்துக் கொள்ளவோ சீரணிக்கவோ என்னால் முடிந்ததில்லை.

வியாபார சினிமா என்னும் விஷ ஜந்து பாக்யராஜ் என்னும் எளிமையான நேர்த்தியான கதை சொல்லியை விழுங்கி விட்டது என்றும், அதை உணர்ந்து வெகு சீக்கிரமே அவர் விழித்துக் கொண்டு வெளியேறி விடுவார் என்றும் இன்னும் நம்பிக் கொண்டுதான் இருக்கிறேன். அவர் விகடன் மேடையில் வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்கிறார் என்பதை அறிந்ததும் என்னுடைய பால்யத்தை தன்னுடைய சினிமாக்களால் வசீகரமாய் உணரச் செய்த ஆதர்ச இயக்குனருக்கு இரண்டே இரண்டு கேள்விகள் எழுதிப் போட்டேன்.

 என்னுடைய ஒரு கேள்விக்கும் விகடனில் அவர் பதில் சொல்லவில்லை. வந்து குவிந்த கேள்விகளில் என்னுடைய கேள்விகள் அவர் பொருட் படுத்தத் தகுந்தவைகளாக இல்லாமல் இருந்திருக்கலாம்; ஒருவேளை என்னுடைய கேள்விகளை விகடன் அவருக்கு அனுப்பி வைக்காமல் கூட தவிர்த்திருக்கலாம்; சுவாரஸ்யமான பதில்களைப் பெறக் கூடிய அல்லது பதில் சொல்பவரைச் சுகமாக சொறிந்து விடும் கேள்விகளை மட்டும் தான் சம்பந்தப் பட்டவர்களுக்கு விகடன் ஆசிரியர் குழு அனுப்பி வைக்குமோ என்னவோ!
சரி அவரிடமிருந்து பதில் கிடைக்கா விட்டால் என்ன? நீண்ட நாட்களுக்கப்புறம் என்னுடைய பிளாக்கில் பாக்யராஜ் பற்றிய ஞாபகங்களை அசை போடுவதற்கு ஒரு வாய்ப்பு கொடுத்த பதில் கிடைக்காத என்னுடைய கேள்விகளை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

கேள்வி - 1:  புதிய வார்ப்புகள் - உங்களின் கதை வசனத்தில் உங்களின் குருநாதர் பாரதிராஜா இயக்கியபடம். அதில் கதாநாயகியை மணந்து கொண்ட கணவன், அவளை அவளுடைய காதலனுடன் எந்த வசனமுமில்லாமல், சேர்ந்து வாழ அனுப்பி வைப்பது தான் கிளைமாக்ஸ்.

அந்த ஏழு நாட்கள் - உங்களின் கதை வசனத்தில் நீங்களே இயக்கியபடம். ஆனால் அதிலும் கதாநாயகியை மணந்து கொண்ட கணவன் அவளை அவளுடைய காதலனுடன் சேர்ந்து வாழட்டும் என்று அனுப்பி வைக்க முடிவு செய்யும் போது, தாலி, செண்டிமெட், கலாச்சாரம்…. என்று நீண்ட வசனங்களுக்கப்புறம் காதலனே, அவள் கணவனுடன் தான் வாழ வேண்டுமென்று விட்டு விட்டுப் போகிறான். ஏன் இந்த முரண்பாடு? ஒருவேளை தாலி, கலாச்சாரம் இத்யாதிகள் என்பதெல்லாம் மத்யதர (சாதியிலும் பொருளாதாரத்திலும்) வர்க்கத்திற்கு மட்டுமானது என்பது தான் உங்களின் பார்வையா? எளிய சாதியினருக்கு அதெல்லாம் ஒரு பொருட்டு இல்லையா?

கேள்வி - 2:  உங்களின் சுந்தரகாண்டம் என்னும் திரைப்படத்தில், ஆசிரியராகிய கதாநாயகன் பெண்களுக்கு அவர்களின் ஒவ்வொரு பருவத்திற்கும் மதிப்பெண் போட்டு, பெண்ணொருத்தி பூப்பெய்தி, மணமுடித்து, ஒரு பிள்ளையையும் பெறும் போது தான் 100 மதிப்பெண்கள் பெற்று முழுமை அடைகிறாள் என்கிறான். இது விஷமத் தனமான ஆணாதிக்கக் கருத்தாக உங்களுக்குத் தோன்றவில்லையா? அதன்படி, அன்னை தெரசா கூட முழுமை அடைந்த பெண்ணில்லை என்று அர்த்தமாகிறதே! மேலும் எத்தனையோ பெண்கள் ஏதேதோ காரணங்களால், கல்யாணமாகாமலும், கல்யாணமாகியும் குழந்தை பெற முடியாமலும் சமூகத்தில் இருக்கிறார்களே, அவர்களெல்லாம் உங்களைப் பொறுத்தவரை முழுமை அடைந்தவர்களில்லையா? ஏன் உங்களின் முதல் மனைவிக்கே கூட குழந்தையே தரிக்க வில்லை; அதனால் பிரவிணா முழுமை அடைந்த பெண்ணில்லையா? தன்னால் பெண்ணாக முழுமை அடைய முடியவில்லை என்று உணர்ந்ததால் தான் அவர்கள் அல்ப ஆயுளிலேயே இறந்து விட்டார்களா?

 

Thursday, June 21, 2012

சிறுகதை : ஓரிடம்நோக்கி...

நுழைவதற்குமுன் ஒரு சிறு குறிப்பு:

            உங்களுக்கிருக்கும் அனேக முக்கிய வேலைகளை ஒத்திவைத்து விட்டு இந்தக் கதையை வாசிக்க புகுந்ததற்கு அனேக வணக்கங்கள்; இன்று அதிகாலை ஏறக்குறைய ஒரே நேரத்தில் உலகத்தின் பல பகுதிகளிலும் நிகழும் சம்பவங்கள் கீழே விவரிக்கப்பற்றிருக்கின்றன. கதை மாந்தர்கள் யாவரும் அவரவரின் தாய் மொழிகளில் தான் உரையாடிக்கொள்கிறார்கள். ஆனால் இந்தக் கதையை எழுதுகிறவனுக்கு அவனுடைய தாய் மொழியே தடுமாற்ற மென்பதால் அவனுக்குத் தெரிந்த அரைகுறைத் தமிழில் விவரித்துக் கொண்டு போகிறான் என்பதை மட்டும் மனதில் நிறுத்திக் கொண்டு தொடர்ந்து வாசியுங்கள்.நன்றி!

இந்தியா: லக்னோவிற்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில்……

              ரபீந்தர் சிங்கின் கண்களிலிருந்து தூக்கம் ஒரு பட்டாம்பூச்சியாய் பறந்து போனது. கொஞ்ச நேரம் அப்படியே அசைவில்லாமல் படுத்துக் கிடந்தான். அப்புறம் இமைகளைத் திறக்காமலேயே எழும்பி, கைகளால் தடவித் தடவி நடந்து, அறையின் ஒரு மூலைக்குப் போய் கை குவித்து மனசுக்குள் ஏதோ முனங்கியபடி வணங்கி  விட்டு மெல்ல கண்களைத் திறந்தான்.

             அங்கு பதினேழு வயது மதிக்கத் தகுந்த ஒரு சிறுவன் போட்டோவில் மாலை அணிவிக்கப் பட்டு எப்போதும் எரியும் சிறிய மின்விளக்கு வெளிச்சத்தில் சிரித்துக்கொண்டிருந்தான். அந்தச் சிரிப்பிலேயே உலகம் முழுமைக்குமான சினேகமும் கருணையும் நிரம்பி வழிவதாய் இருந்தது. ரபீந்தருக்கும் அந்த போட்டோவில் இருக்கும் சிறுவனின் வயது தானிருக்கும். அவனின்  உலகம் கொஞ்ச நாட்களுக்கு முன்பு வரை கூட வண்ணங்களற்று ஒரே இருட்டாய்த் தானிருந்தது. அவன் விழிகள் ஒளி பெற்றது அந்த போட்டாவிலிருக்கும் சிறுவனால் தான்.   

            அவசரமாய் அந்த அறைக்குள் நுழைந்த ரபீந்தரின் அம்மா , இன்னும் நீ இங்கு தான் இருக்கிறாயா? அங்கு அப்பா சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறார்; நாம் இன்றைக்கு திருக்கழுக்குன்றம் போக வேண்டுமில்லையா? நேரமாகிறது மகனே……” என்றபடி அவனை விரட்டினாள். அவள் அப்போதே குளித்து தலை உலர்த்தி வெளியில் கிளம்புவதற்கான ஆடைகள் உடுத்தித் தயாராக இருந்தாள்.

            நன்றாக ஞாபகம் இருக்கிறது அம்மா; மறக்க முடியுமா இதையெல்லாம்? இதோ பதினைந்து நிமிடங்களில் தயாராகிக் கிளம்பி விடுவேன்! கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். என்றபடி அவசரமாய் வெளியேறினான் ரபீந்தர் சிங்.

  ஐக்கிய அரபு நாடுகளின் கூட்டமைப்பிலுள்ள அபுதாபியில்……

                        வாப்பா, நேரமாகிக்கிட்டே இருக்கு; இன்னும் டாக்ஸி வரலியே! சாலையில பாருங்க எவ்வளவு டாக்ஸிகள் ஓடுது. இதுகள்ல ஒண்ண கை காட்டி ஏறிப் போய்க்கிட்டே இருக்கலாம்; நாம  எதுக்காக உங்க நண்பரோட டாக்ஸிக்காக அனாவசியமா காத்திருக்கனும்.. படபடத்தாள் ஸைராபானு. கான்ஷாகிப் கொஞ்சமும் பதட்டப்படாமல் சொன்னார்.

         அவசரப்படாத பானுநமக்கு  விமானத்துக்கு இன்னும் நெறைய நேரமிருக்கு; நண்பர்  கண்டிப்பா சரியான நேரத்துக்கு வந்துடுவார்..

        நாம இந்தியாவுக்குப் போறோம் வாப்பா; இமிக்ரேஷன் கிளியரன்ஸ் அது இதுன்னுநெறைய பார்மாலிட்டிஸ் இருக்கும்நீங்கன்னா  இவ்வளவு சாவகாசமா இருக்கீங்க. டிராபிக்ஜாம் தொடங்கிருச்சுன்னா அப்புறம் நாம ஏரோடிராம் போய்ச் சேர்ந்த மாதிரி தான்…”

                     கான்ஷாகிப் சிரித்துக் கொண்டார். பானுவிற்கு பதினைந்து வயது தான் ஆகிறது.அதற்குள் இத்தனை சூட்டிகை. எதிலும் அவசரம் தான். பொறுமை என்பதே மருந்துக்கும் இருப்பதில்லை. திடீரென்று ஜவஹர்நிஸா பீவியின் ஞாபகம் வந்தது அவருக்கு. பானுவின் அம்மா; இரண்டு வருஷங்களுக்கு முன்பு ஏதோ பெயர் தெரியாத பெரிய வியாதியில் விழுந்து இந்தியாவிற்குக் கொண்டு போய், டெல்லியின் பெரிய மருத்துவமனையில் சேர்த்து வைத்தியம் பார்த்தும், காப்பாற்ற முடியாமல் செத்துப் போனாள்.

                      நோய் மட்டும் அவளைக் கொல்லவில்லை; அவருடைய இரண்டு கிட்னிகளும் பழுதாகி, டயாலிசஸில் மட்டுமே அவர் உயிர்த்திருந்த நாட்களில், எங்கே அவர் தன்னை விட்டு சீக்கிரம் போய் விடுவாரோ என்ற மனக்கவலையிலேயே மறுகி, தன்னைக் கொஞ்சமும் பராமரித்துக் கொள்ளாமல் அதனாலேயே நோய் முற்றி அவள் முந்திக் கொண்டாள். ஆனால் அவருக்கு மாற்றுச் சிறுநீரகம் பொருத்தப் பட்டு இப்போது நல்ல ஆரோக்கியமாக இருக்கிறார். அவள் உயிரோடிருந்திருந்தால் எத்தனை சந்தோஷப் பட்டிருப்பாள்! அல்லா தான் கொஞ்சமும் கருணை இல்லாமல்  அதற்குள் அவசர அவசரமாய் அவளைத் தன்னிடம் அழைத்துக் கொண்டாரே!

                        பானு அவரின் நினைவைக் கலைத்தாள். வாப்பா என்ன யோசனை..எதுக்கும் இன்னொரு தடவை உங்க நண்பருக்கு போன் பண்ணி எங்க இருக்காருன்னு விசாரிங்க அவரு இன்னும் வீட்டுல தூங்கிக் கிட்டு இருக்கப் போறார்…” மகளின் நச்சரிப்பிற்கு ஆற்ற மாட்டாமல் கான்ஷாகிப் தன்னுடைய  கைத் தொலைபேசியில் நண்பரைத் தொடர்பு கொள்ள முயன்று கொண்டிருந்த போது, முத்துராமனின்  டாக்ஸி அவர்களுக்கருகில்  வந்து நின்றது.

           என்ன அங்கிள், இவ்வளவு லேட் பண்ணீட்டீங்க.. என்று சலித்துக் கொண்டபடி டாக்ஸிக்குள் ஏறினாள் பானு. கான்ஷாகிப் எதுவும் சொல்லவில்லை. உரிய நேரத்திற்குள் விமான நிலையத்திற்குப் போய் விட முடியும் என்பது அவருக்குத் தெரியும். அவர் இந்த டாக்ஸியை ஏற்பாடு செய்ததற்கு டாக்ஸி ஓட்டுநர் தன்னுடைய நண்பர் என்பது மட்டுமல்ல காரணம்; முத்துராமன்  தமிழ் நாட்டைச் சேர்ந்தவன் என்பதால் அவன் மூலம் சென்னையில் சில ஏற்பாடுகள் செய்ய வேண்டி இருந்தது.

            ஸாப். உங்கள் விமானம் சென்னையில் இறங்கியதுமே என்னோட மாமா உங்கள வந்து சந்திப்பார்; அவர் உங்கள திருக்கழுக்குன்றம் கூட்டிட்டுப் போயி, அங்க உங்க வேலை முடிஞ்சதும், மறுபடியும் உங்கள சென்னைக்குக் கூட்டிட்டு வந்து விமானம் ஏத்தி விடுவார்; டீ .கே…” என்றான்


இந்தியா: பெங்களூர் இரயில் நிலையத்தில்……

                        லால்பாக் எக்ஸ்பிரஸ் இருபது நிமிஷங்கள் தாமதமாகப் புறப்படுமென்று மும்மொழிகளில்  இரயில் நிலைய அறிவிப்பாளினி திரும்பத் திரும்ப அலறிக் கொண்டிருந்தாள்.கல்யாணிக்கு கவலையாக இருந்தது. தொடக்கமே தாமத மென்றால் போய்ச் சேரவேண்டிய இடத்திற்கு எவ்வளவு தாமதமாகுமோ?

            என்ன கல்யாணி மதினி, இவ்வளவு காலையில எங்க பயணம்? என்றபடி அவளுக்கருகில்வந்து நின்றான் போர்ட்டர் குமரப்பன். அவனே தொடர்ந்து தனியாவா போறீங்க ? என்றும் சேர்த்துக் கொண்டான்.

                        இல்ல; இல்ல. அவுகளும் கூட வர்றாக; சாப்புடுறதுக்கு ஏதாச்சும் வாங்கியாரன்னு போயிருக்காக.சென்னைக்குப் போறோம். என்றாள் உற்சாகமாக. ஆபரேஷன் பண்ணுன உடம்பு, அண்ணன எதுக்கு அங்கிட்டும் இங்குட்டுமா இழுத்தடிக்கிறீங்க வீட்டுல பேசாம இருக்கச் சொல்லக் கூடாதா? குமரேசன் கரிசனமாய்ச் சொன்னான்.

                        அதெல்லாம் அலைய விடுறதில்ல வீட்டுலயே தான் இருக்காக. இது ரொம்ப முக்கியமான ஜோலி; அதான் கூட்டிக்கிட்டுப் போறேன்ஆபரேஷன் முடிஞ்சும் ஏழெட்டு மாசம் ஓடிப்  போயிருச்சே! டாக்டர்ட்டக் கேட்டோம்அதெல்லாம் தாராளமா போயிட்டு வரலாம்னுட்டார்.

                        உங்கள சும்மா சொல்லக் கூடாது மதினி.எமன் வாய்க்குள்ள போய்ட்ட அண்ணன் உயிர சத்தியவான் சாவித்திரியாட்டம் போராடில்ல மீட்டுக்கிட்டு வந்துருக்கீங்க..இப்பவாச்சும் ஒழுக்கமா இருக்காரா , இல்ல பழைய மாதிரி நாக்கச் சப்புக் கட்டிக் கிட்டுத்தான் அலையுறாரா? ஏன்னா ருசி கண்ட பூனையில்லையா அதான் கேட்குறேன்.

                        இல்ல சுத்தமா இல்ல.இப்ப எல்லாம் ரொம்பவும் மாறீட்டார்; சாராயக் கடைப் பக்கம் தலை வச்சுக் கூடப் படுக்குறதில்ல; ஆமா, குடிச்சுக் குடிச்சு ஈரல் மொத்தமும் வெந்து போய் இப்ப புது ஈரல்ல பொருத்திருக்கு! டாக்டர் கண்டிஷனா சொல்லீட்டார். இனிமே ஒருதுளி சாராயம் குடிச்சாலும் கடவுள் கூட காப்பாத்த மாட்டார்ன்னுட்டு அவருக்கும் பொறுப்பும் உயிர் வாழணும்னு ஆசையும் வந்துருச்சுல்ல.இனிமே தப்புப் பண்ணாதுன்னு நம்பலாம்.என்றாள் தீர்மானமாக.

                        அப்போது கேசவன் உணவுப் பொட்டலங்களோடு வந்தான். என்ன அண்ணே! புது மனுஷனா ஆயிட்டீங்க போலருக்கு.. என்றான் குமரப்பன். ஆமாம்ப்பா, ஏதோ கடவுள் அனுக்கிரகம் என்றபடி வானத்தைப் பார்த்து வணங்கினான் கேசவன். சென்னைக்குப் போறீங்கன்னு மதினி சொன்னாங்க சென்னையில என்ன ஜோலியோ? என்றான் குமரப்பன்.

                        சென்னைக்குப் போயி அங்கருந்து, திருக்கழுக்குன்றம்ங்குற ஊருக்குப் போறோம்ப்பா.

                        கோயிலுக்குப் போறீகளாக்கும்; அந்த ஊர் கோயிலு தான் உலகப் பிரசித்தி பெற்றதாச்சே! என்று குமரப்பன் சொல்லவும், 'கோயிலுக்கெல்லாம் போகலப்பா.'என்று மறுத்துச் சொல்லப் போன கேசவன் ஏதோ நினைத்துக் கொண்டவனாய்,ஆமாமா, நாங்க போற எடமும் கோயில் தான்; அங்கயும் புதுசா ஒரு கடவுள் உருவாகியிருக்கு…” என்றான்.

 மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூர் விமானநிலையத்தில்.

                        ஸ்டீபன் தன்னுடைய கைத்தொலைபேசியில் ரொம்பநேரமாகப் பேசிக் கொண்டிருப்பதை மிகவும் கவலையுடன் கவனித்துக் கொண்டிருந்தாள் ஸ்டெல்லா மேரி. பேசிமுடித்து அவர் அவளுக்கு அருகில் உள்ள இருக்கையில் வந்து உட்காரவும் அதற்காகவே காத்திருந்தது போல், செல்போனைக் காட்டி சிடுசிடுத்தாள். இந்த சனியன வீட்டுலயே விட்டுட்டு வந்துருக்கலாம்; எப்பப் பார்த்தாலும் இதுலயே பேசிப் பேசி பாழாப்போறீங்க.ஆபீஸுலயும் வீட்டுலயும் தான் இருபத்தி நாலு மணி நேரமும் பேசி மறுகுறீங்கன்னா ஊருக்குப் போகும் போதும் கொஞ்சம் கூட ஓய்வா இருக்க மாட்டீங்களா? 

                        செல்போன வீட்டுல வுட்டுட்டு வர்றதாவது.அவ்வளவுதான்; சமீபத்துல ஒரு இணைய  தளத்துல கவிதை ஒண்ணு வாசிச்சேன்; சொல்றேன் கேளு..'என் கைத் தொலைபேசி ஒலிக்காத நேரங்களில் நான் இறந்து போனதாய் உணர்கிறேன்'னு தொடங்குது அந்தக் கவிதை. அது நிஜம்; கைத்தொலைபேசி மட்டும் இல்லைன்னா நான் செத்தே போயிடுவேன்..

                        ஆமா சாகுறீங்க; அதான் சாவோட விளிம்பு வரைக்கும் போயிட்டு வந்துட்டீங்கள்ள இனியும் என்ன! வாய மூடிக்கிட்டு பேசாம இருங்க. டாக்டர் உங்கள அதிகம் ஸ்ட்ரெய்ன் பண்ணக் கூடாதுன்னு சொல்லீருக்கார்; அது ஞாபகம் இருக்கட்டும்.

                        அடி அசடே! டாக்டருங்க எப்பவுமே அப்படித்தான் ; வாங்குன காசுக்கு வஞ்சனை இல்லாம சும்மா எதுனாச்சும் அட்வைஸ்கள வாரி விடுவாங்க.. நவீன மருத்துவத்துல கிட்னி மாற்று ஆபரேசன்லாம் ஒண்ணுமே இல்லம்மா; சும்மா எறும்பு கடிச்ச மாதிரி. எனக்குத் தான் ஆபரேசன் முடிஞ்சும் அஞ்சு மாசத்துக்கு மேல ஆயிடுச்சே அதனால வீணாப் பயப்படாத..கே…”

                        சரி இப்ப இவ்வளவு நேரமா யாரு கூடப் பேசுனீங்க.

                        எங்க அக்கா கூடம்மா.. கன்னியாகுமரியிலருந்து அக்காவும் மாமாவும் நேத்தே சென்னைக்கு வந்துட்டாங்களாம்; நாம  சென்னை போயி இறங்குனதும், அவங்களும் நம்ம கூடவே திருக்கழுக்குன்றம் வர்றாங்க.அங்க போயி நம்ம காரியம் முடிஞ்சதும் அப்படியே நம்மள கன்னியாகுமரிக்கு கடத்திட்டுப் போகப் போறாங்களாம்.. ஸ்டீபன் பேசிக் கொண்டிருக்கும் போதே அவருடைய கைத் தொலைபேசி சிணுங்கவும் அதை எடுத்துப் பேசத் தொடங்கினார்..

பாகிஸ்தானின் கராச்சி நகரில். 

                        அதிகாலைத் தொழுகை முடிந்ததும் மசூதியிலிருந்து அவசரமாய்க் கிளம்பப் போன இஸ்மாயிலைத் தடுத்தார் ஹுசேன்.என்ன அவசரம்? கொஞ்சம் பொறும்; நானும் வர்றேன், சேர்ந்தே போயிடலாம்.. பேசிக் கொண்டே நடந்தார்கள்.

                        இந்த வருஷம் ஹஜ் புனிதப் பயணம் போறதுக்கு வாய்ப்பு வந்தும் வேணாம்னுட்டீகளாமே! ஆண்டவன் அவதரிச்ச பூமிய தரிசிக்கிறத விட அப்படி என்ன முக்கிய வேலை உங்களுக்கு..

                        முக்கிய ஜோலி தான்; இன்னைக்கு இந்தியாவுக்குக் கிளம்புறோம்..

                        இந்தியாவுக்கா? இப்ப இருக்குற கெடுபிடியில விசா எப்படிக் கிடைக்கும்!

                        அதெல்லாம் அலைஞ்சு திரிஞ்சு வாங்கிட்டோம்; இமிக்ரேஷன்ல இருக்கிறவங்களும் நம்மள மாதிரி மனுஷங்க தான! விஷயத்தச் சொன்னதும் மறுக்காம விசா குடுத்துட்டாங்க..

                        அப்படி என்ன விஷயமா இந்தியாவுக்குப் போறீங்க?

                        உம்ம கிட்ட ஏற்கெனவே சொல்லி இருந்தேன்! நீர் தான் மறந்துட்டீர்என் பேத்தி ஃபாத்திமாவுக்கு மாற்று இதயம் பொறுத்துனமே.!

                        ஆமா, ஆமா. இப்ப ஞாபகம் வந்துருச்ச..இன்னைக்கு சரியா ஒரு வருஷம் ஆகுதுல்ல, அவள் புது மனுஷியா பொறந்து வந்து..!

                        அன்னைக்கு மட்டும் அந்த இதயம் கிடைக்கலைன்னா, இன்னைக்கு எங்க ஃபாத்திமா எங்களுக்கு உயிரோட இருந்திருக்க மாட்டாள்; அவளுக்கு இப்ப ஆறு வயசாகுது.ஆனா எங்களப் பொறுத்த வரைக்கும் அவளுக்கு புது இதயம் பொறுத்துனதுலருந்து தான் கணக்கு: அதன் படி அவளுக்கு இன்னைக்குத் தான் ஒரு வயசாகுது.அதுக்குக் காரண மானவங்கள சந்திக்குறதுக்குத் தான் இந்தியாவுக்குப்போறோம். கண் கலங்கினார்.       சரி, சரி அழாம சந்தோஷமாப் போயிட்டு வாரும். யாரெல்லாம் போறீர்? இஸ்மாயிலின் வீடு வரவே விடை பெற்றுக் கொண்டபடி கேட்டார் .

                        குடும்பத்தோட போக ஆசை தான்; ஆனா மூனு பேருக்குத் தான் விசா கெடைச்சது; அதால நானு, என் பையன், பேத்தி மூனு பேரும் போறோம்.சென்னை வரைக்கும் விமானத்துல போயி அங்கருந்து வாடகைக் கார் அமர்த்தி திருக்கழுக்குன்றம் போறதா பிளான்.

                        அல்லாவின் கருணையால் எல்லாம் நல்லபடியா நடக்கும்; போயிட்டு வாருங்கோ.

 இன்றைக்கு மிகச் சரியாக ஒரு வருஷத்திற்கு முன்பு சென்னைக் கருகில் உள்ள திருக்கழுக்குன்றத்தில்.

                        யுகேந்திரன எங்கம்மா, இன்னும் தூங்குறான் போலருக்கு; ஸ்கூலுக்குக் கிளம்ப நேரமாகலையா அவனுக்கு? அலுவலகத்திற்குக் கிளம்புகிற அவசரத்திலும் அக்கறையாக விசாரித்தார்

 மணிகண்டன்.  நேத்து இராத்திரி இவனும் இவனோட நண்பர்களும் சேர்ந்து நடத்திக்கிட்டு இருக்கிற நற்பணி மன்றத்துக்கு ஆண்டு விழாவாம்; அது முடிஞ்சு ரொம்ப லேட்டாத் தான் படுக்குறதுக்குப் போனான்; அதான் இன்னும் அசந்து தூங்குறான்; நான்  இப்பப் போயி எழுப்பி விடுறேன்.நீங்க கிளம்புங்க. என்று மரகதவல்லி சொல்லிக் கொண்டிருக்கும் போதே யுகேந்திரன் எழும்பி வந்து அவர்களுக்கு முன் நின்றான்.

                        அப்பா, இப்பவே லேட்டாயிருச்சு; இன்னைக்கு நான் பஸ்ஸ விட்டுருவேன்னு தோணுது; கிளாஸ்ல பரீட்சை வேற இருக்கு. அதால  பைக் எனக்கு வேணும்; நீ  பஸ்ஸுல வேலைக்குப் போ..

                        நீ  ரொம்ப அசதியா இருப்ப கண்ணு...பைக் வேணாம்; வேணுமின்னா ஆட்டோல போ.

                        இல்லப்பா, அது சரியா வராது. எனக்கு சாயங்காலமும் கொஞ்சம் வேலை இருக்கு; சேரிக் குழந்தைங்களுக்கு டியூசன் எடுக்கனும்.சேரிக்குள்ள எல்லாம் ஒரே சேறும் சகதியுமா இருக்கு ஆட்டோ போகாது; அதுக்கும் பைக் தான் வசதி..

                        அப்ப சரி; மறந்துறாம ஹெல்மட் போட்டுட்டுப் போ. என்று சொல்லியபடி, இப்பவே நேரமாகி விட்டதே என்று துரிதமாக நடக்கத் தொடங்கினார் மணிகண்டன்.

                        எவ்வளவு வேகமாகக் கிளம்பியும் தாமதத்தைத் தவிர்க்க முடியவில்லை யுகேந்திரனால். அவசரமாய்க் கிளம்பியதில் ஹெல்மட்டை எல்லாம் அவன் பொருட் படுத்தவே இல்லை. பிரேயர் தொடங்கி விட்டது.டாப் கியருக்கு மாறி ஆக்ஸிலேட்டரை முடுக்கியதில் பைக் விமானமாய்ச் சீறிப் பறந்தது. இவனுக்கு முன்னால் போன ஏதோ வண்டியிலிருந்து ஆயில் கொட்டி சாலையில் சிதறிக் கிடந்தது. அதன் மீது இவனுடைய பைக் சக்கரம் ஏறியதும் சரட்டென்று வழுக்கி விட, வண்டி நிலை தடுமாறி, அவனுக்குப் பின்னால் வந்த லாரியில் மோத, வேகமாகத் தூக்கி வீசப்பட்டான்.

                        யுகேந்திரன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, உயிருக்குப் போராடிக் கொண்டிருக்க, அவனைச் சுற்றிலும் வியாபித்துக் கிடந்த அழுகுரல்களும் விசும்பல்களும் கல் மனதையும் கரைப்பதாய் இருந்தது. ஆனால் கடவுளின் மனம் தான் கரைவதாய் இல்லை

                        ஸாரி மிஸ்டர் மணிகண்டன்; எங்களால முடிஞ்சதெல்லாம் பண்ணிப் பார்த்துட்டோம் இருந்தும் உங்க மகனைக் காப்பாத்த முடியல. கண் கலங்கினார் தலைமை மருத்துவர்.

                        அய்யய்யோ அப்படியெல்லாம் சொல்லாதீங்க டாக்டர்; எங்களுக்கிருக்கிறது கறிவேப்பிலைக் கன்னு மாதிரி ஒரே பையன்.. இன்னும் உயிர் இருக்குறாப்புல தான் இருக்கு; ஏதாவது பண்ணி என் பையன  பொழைக்க வையுங்க. என்றபடி அவரின் கால்களில் விழுந்து கதறினாள் மரகதவல்லி.

                        அய்யோ என்னம்மா நீங்க; முதல்ல எழும்புங்க. நீங்க மனச திடப்படுத்திக்கிட்டு நடந்தத ஜீரணிச்சுத் தான் ஆகணும்ஒரு வகையில நீங்க சொல்றது நிஜம் தான்; உங்க பையனுக்கு ஏற்பட்டுருக்குறது மூளைச்சாவுங்குறதால மத்த முக்கியமான அவயங்கள்ல இன்னும் கொஞ்ச நேரத்துக்கு உயிர் இருக்கும்; ஆனாலும் உங்க பையன உயிர் பிழைக்க வைக்கிறதெல்லாம் சாத்தியமில்ல. ஆனா நீங்க உங்க பையனோட உறுப்புகள தானம் பண்ண சம்மதிச்சா, அதுகளை எடுத்து மத்தவங்களுக்குப் பொருத்தி அவங்கள்ல உங்க பையனோட உயிர துடிக்க வைக்கலாம்; யோசிச்சு முடிவு சொல்லுங்க.

                        சொந்தங்களும் சுற்றமும் நட்பும் கூடிக்கூடிப் பேசி இந்த ஏற்பாட்டை முற்றிலுமாய் நிராகரித்தார்கள். தங்கள் குழந்தையின் உடம்பைக் கூறு போட அனுமதிக்க மாட்டோம் என்று கூச்சல் போட்டார்கள். ஆனால் மணிகண்டனும் மரகதவல்லியும் கொஞ்ச நேரத் தயக்கத்திற்குப் பின் தீர்மானமாய்ச் சொன்னார்கள். மண்ணோ தீயோ தின்னு செரிக்கப் போற எங்க பையன் உடம்பால சில உயிர்கள காப்பாத்த முடியுமின்னா தாராளமா உறுப்பு தானம் தர்றோம் டாக்டர். மருத்துவர் குழு உடனே செயல்பட்டது.



மீண்டும் இன்றைய தினம் அந்தி மாலையில்; திருக்கழுக்குன்றத்தில்.

                        யுகேந்திரனின் வீடு. அவனின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் அவனுக்கு  அஞ்சலி செலுத்துவதற்காக ஊரே திரண்டிருந்தது. அதுபோக செய்தியை அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் மற்றும் உலகத்தின் பல பகுதியிலிருந்தும் அவனின் உறுப்புக்களைத் தானமாய் பெற்று அதன் மூலம் இப்போது வாழ்கிறவர்கள் என்று. கூட்டம் திருவிழா மாதிரி திமிலோகப் பட்டது.

                        மணிகண்டனின் கைகளைப் பிடித்துக் கொண்டு கண் கலங்கியபடி இந்த மனித சமூகம் உங்களுக்கும் உங்க பையனுக்கும் ரொம்பக் கடமைப் பட்டுருக்குங்குங்க ஸார்.. அவனோட உறுப்புகள் தானம் பண்ணப்பட்ட செய்தியால தான் இன்னைக்கு பரவலா பல இடங்கள்ல மூளைச் சாவு ஏற்படும் போதெல்லாம் உறுப்பு தானம் பண்ணலாங்குற உத்வேகம் பலருக்கும் ஏற்பட்டுருக்கு. என்றார் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்.

                        யுகேந்திரனுக்கு அழிவே இல்லீங்க.அவன் எங்க மூலாமா என்னைக்கும் வாழ்ந்துக்கிட்டு ருப்பான்உங்களுக்கு எப்பல்லாம் அவன பார்க்கணுமின்னு தோணுதோ அப்பல்லாம் எங்களுக்கு தகவல் மட்டும் சொல்லுங்க; உலகத்துல எந்த மூலையில இருந்தாலும் ஓடோடி வர்றோம்…” என்றார் ஸ்டீபன். மரகதவல்லி பாகிஸ்தான் சிறுமி ஃபாத்திமாவைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டு அவளின் நெஞ்சில் காதை வைத்து தன் மகனின் இதயம் துடிப்பதைக் கேட்டு கண் கலங்கினாள்.அப்புறம் ரபீந்திர் சிங்கின் கண்களுக்குள் உற்றுப் பார்த்து தன் மகனின் ஆன்மா உயித்திருப்பதை அறிந்து சந்தோஷப் பட்டாள்.

--  முற்றும்