Saturday, December 5, 2009

ஒரு வாசகியின் கடிதமும் பதிலும்

இன்றைய கவிதைகளை வாசித்தேன்..
நேரடி பொருளில் இருந்தாலும்.,இனிய அங்கதம் நிறைந்த சொல்லாடல்கள்..
நான்காவது கவிதையை வாசிக்கும் போது வாய்விட்டு சிரிக்காமல் இருக்கமுடியவில்லை..

அதன் நோக்கில் நீங்கள் ஒரு கட்டுரையே எழுதலாம்..

தனக்கு பிடித்தமான இசையை பாடலை அவர்கள் கேட்கும் வண்ணம் செய்து இருப்பின் குறை ஏதும் இல்லை.. ஆனால் சில நேரங்களில் அழைப்பவருக்கு தண்டனை போல கேட்கவேண்டியதாயுள்ளது..

காக்கை எச்சங்களை சகித்துகொள்ள தான் வேண்டும் போல..

நான் பொதுவாக கணினி திரையில் வாசிப்பது குறைவு கடினமும் கூட. தங்களின் நீண்ட சிறுகதைகளை அச்சிட்டு தான் வாசித்தேன்..

வலை தளத்தில் தேர்ந்தெடுத்த கட்டுரை,சிறுகதைகளை அவ்வாறு செய்து தனி கோப்புகளாக்கி நண்பர்கள்,இலக்கிய ஆர்வமுள்ள உறவினர்களுக்கு அதில் ஒரு பிரதியை வழங்குவது என் வழக்கம்..

அதிகம் திரு.ஜெமோ மற்றும் திரு.எஸ்.ரா வின் கட்டுரை வலைதள ஆக்கங்களை அச்சிட்டு சேகரித்துள்ளேன்.(நூல் வாங்கும் செலவை விட, அதிக நேரம் வீண் என்ற போதிலும் அதில் ஒரு நிறைவு..) தற்போது மேலும் ஒரு கோப்பு., எஸ்.எஸ் என்ற பெயரில்..

அன்புடன் சிவகாமி..

*********************************

அன்புள்ள சிவகாமி,

உங்களின் வாசிப்பு வேகம் என்னை மலைக்கவும் ஆச்சர்யப்படவும் வைக்கிறது. நான் வலையேற்றிய அடுத்த நிமிஷமே கவிதையை வாசித்து அது சம்பந்தமான கருத்துக்களை மின்மடலாகவும் அனுப்பி விட்டீர்களே!

நான் வலைப்பதிவு தொடங்கி கொஞ்ச நாட்களுக்கு அதை வாசிக்க யாரும் வராமல் விரக்தி அடைந்திருந்த ஒரு கணத்தில் தான் ஜெயமோகனுக்கு எழுதி அவருடைய வலைத்தளத்தில் பரிந்துரைக்கக் கேட்டுக் கொண்டேன். பெருந்தன்மை நிறைந்த அற்புதமான மனிதர். அடுத்த நிமிஷமே பரிந்துரைத்து தன் வலைத் தளத்தில் அறிமுகப் படுத்தி விட்டார். அவர் பரிந்துரைத்ததின் மூலம் எனக்கு உங்களை மாதிரி தீவிர வாசகியின் பரிச்சயம் கிடைத்திருக்கிறது. உங்கள் ஒருத்தருக்காக வேனும் அடிக்கடி வலைப் பதிவில் எழுத வேண்டுமென்கிற உத்வேகம் பிறந்திருக்கிறது. கண்டிப்பாய் செய்வேன்.

என்னுடைய கவிதையின் நான்காவது பகுதியை விரித்து கட்டுரையாக எழுதும்படி பரிந்துரைத்திருக்கிறீகள்! நான் இதுவரை கட்டுரைகள் எதுவும் எழுதியதில்லை - அபூர்வமாய் சில வாசகர் கடிதங்கள் தவிர்த்து. ஆனால் கட்டுரைகளும் எழுதிப் பழக வேண்டுமென்று தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
ஏனென்றால் நான் பார்வையிட்ட பெரும்பான்மையான வலைப் பதிவுகள் கட்டுரைகளால் தான் நிரம்பியிருக்கின்றன; பெரும்பாலான வருகைதாரர்களும் கட்டுரைகளைத்தான் விரும்பியும் வாசிக்கிறார்கள் என்பதை அறிகிறேன். உங்களின் ஆலோசனைக்கு நன்றி! அந்தக் கவிதை பற்றி இல்லை என்றாலும் மற்றபடி கட்டுரைகளும் எழுத முயற்சிக்கிறேன். வருகை தந்ததற்கும் வாசித்துக் கருத்து சொன்னதற்கும் நன்றிகள்!

அன்புடன்,
சுப்புராஜ்

No comments:

Post a Comment