Tuesday, August 27, 2013
குங்குமம் வார இதழில் பிரசுரமான கவிதை
Tuesday, November 1, 2011
கவிதை:காத்திருப்பு
விடைபெற்றுப் போயினர்
உடன் பயணித்தவர்கள் யாவரும்;
வெறிச்சோடிக் கிடக்கிறது விமான நிலையம்;
அடுத்த விமானத்திற்கு இன்னும்
அவகாசமிருப்பதால்......
அலைபாயும் கண்களுடன் காத்திருக்கிறார்
அழைத்துப் போக யாரும் வராத
அவஸ்தைகளை விழிகளில் தேக்கி
சக்கர நாற்காலியில் ஒரு முதியவர்!
Friday, October 14, 2011
கவிதை: அலைவுறும் அகதி வாழ்க்கை
அழகான ஓர் வீடுமிருந்தது;
ஊரிருந்தது; உறவிருந்தது;
கனவாய் யாவும் ஒருநாள்
கலைந்து போனது.......
செல்லடித்து வாழ்வு
சிதைந்து போனது;
திசைக் கொன்றாய் உறவுகளும்
சிதறிப் போனது......
வேறோடு பிடுங்கி ஒருநாள்
வீசி எறியப்பட்டோம்
வீதிகளில்........
போர் தீயதென்று போதித்த
புத்தனின் வாரிசுகள் நடத்திய
யுத்தத்தில்
மொத்தமும் இழந்து போனோம்.....
பதுங்கு குழிகளுக்குள்ளும்
பலநாள் வாழ்ந்திருந்தோம்
பயத்தை மட்டும் புசித்தபடி;
உயிராசையில்
ஓடத் தொடங்கினோம்
தேசங்களைக் கடந்து........
பிள்ளைகள் ஒரு பக்கம்;
பெண்டுகள் ஒரு பக்கம்;
பேசும் மொழியும் மறந்து
அலைவுறத் தொடங்கினோம்
அகதிகளாய்.......
Wednesday, October 12, 2011
கவிதை - சாலையில் சில கடவுள்கள்
களிநடனம் புரிந்து கொண்டிருந்தாள்
காளி தேவி ஒருநாள்!
சஞ்சீவ மலை தூக்கி
பயணப் பட்டுக் கொண்டிருந்தார்
அனுமன் இன்னொருநாள்......!
வில்லேந்தி போர்புரிய
தயாராக நின்றிருந்தார்
இராமபிரான் பிறிதொருநாள்....!
சிவபெருமான் பார்வதி தேவியுடன்
தரிசனம் தந்து கொண்டிருந்தார்
மற்றொரு நாள்.....!
வள்ளி தெய்வானையுடன்
வரம் தரும் திருக்கோலத்தில்
முருகன் ஒருநாள்....!
சிலுவையில் அறையப்பட்டு
சிரத்தையுடன் இயேசுவும்
இரத்தம் உதிர்த்து நின்றார்
இன்னொருநாள்....!
மற்றொரு நாள்
உடம்பெங்கும் அம்மைத் தழும்புகளாய்
சில்லறைக்காசுகள் சிதறிக் கிடக்க
கைதூக்கி ஆசிர்வதித்தபடி
கனிவுடன் நின்றிருந்தார் ஷீரடி பாபா!
அதே இடத்தில்
கடவுள்களுக்கு உயிர் கொடுத்த
தெரு ஓவியனும்
இறந்து கிடந்தான் ஒருநாள்
கேட்பாரற்று.....!
Monday, October 11, 2010
கவிதை - இரவின் நிழல்
தோளில் முகம் புதைத்து
அழுவதில்
ஆறுதல் அடைந்திருக்கிறாய்;
சிறுகுழந்தையாய்ச் சுருண்டு – என்
மடியில் படுத்துறங்குவதில்
மகிழ்வு கண்டிருக்கிறாய்;
வெறுமை தகிக்கும் உன்
விடுதிச் சூழலிலிருந்து விடுபட்டு
எங்களின் வீட்டிற்கு
ஓடி வரும் போதெல்லாம்
துப்பட்டாவையும் துயரங்களையும்
களைந்து வீசி விட்டு
விடுதலை பெற்ற
சிறுபறவையாய்
சந்தோஷச் சிறகை விரித்திருக்கிறாய்.....
இப்போதெல்லாம் நீ
என் அருகில் அமரவே
அச்சப்படுகிறாய்;
தனித்திருக்கும் தருணங்களைத்
தவிர்க்கவே விரும்புகிறாய்;
கண் பார்த்து நான் பேசினாலும்
துப்பட்டாவை அடிக்கடி
இழுத்து விட்டு இம்சிக்கிறாய்;
இருவருக்கும் இடையில்
இப்போது விழுந்து கிடக்கிறது;
எனக்குள்ளிருந்த
ஆணெனும் மிருகம் விழித்து
உலாவத் தொடங்கிய
கனத்த இரவொன்றின் நிழல்
கடக்கவே முடியாதபடி.....
Monday, September 13, 2010
கல்கியில் எனது கவிதை:
இரவுகளில்
தரையில் விரிக்கப்பட்ட மெத்தையில்
பொம்மைகள் புடைசூழத் தூங்குவாள்
எங்கள் வீட்டு இளவரசி!
பொம்மைகளுடனான
அவளின் உலகத்தில்
அனுமதியில்லை யாருக்கும்....!
பொம்மைகளுக்கு
அம்மாவைப் போல் ஊட்டி விடுவாள்;
ஆசிரியையாக
பாடம் சொல்லித் சொல்வாள்;
பாட்டியாக தட்டிக் கொடுத்து
கதை சொல்வாள்;
தூங்க மறுக்கும் பொம்மைகளை
அப்பாவாக மிரட்டி உருட்டியும்
தூங்கப் பண்னுவாள்......!
விழிப்புவரும் நடு இரவுகளில்
இளவரசியைத் தேடினால்
மெத்தையிலிருந்து உருண்டுபோய்
வெறும் தரையில் விழுந்து
தூங்கிக் கொண்டிருப்பாள்
தேவதைக் கனவுகளுடன்.....
இவளின் வரவை எதிர்பார்த்து
மெத்தையில் உருண்டு கொண்டிருக்கும்
அவளின் பொம்மைகள்
கொட்டக் கொட்ட விழித்தபடி.......!
(நன்றி: கல்கி 12.09.2010)
Monday, July 12, 2010
கவிதை: உயிர் பிழைத்திருப்பதற்காக....
வியாபாரம் செய்யும் கூடைக்காரிகளிடம்
விருப்பத்துடன் வாங்குங்கள்
பேரம் பேசியேனும்
விலை கொஞ்சம் அதிகமென்றாலும்......!
*** *** ***
கையேந்தும் மூன்றாம் பாலினத்திற்கு
காசு போடுங்கள் மறுக்காமல்
அவர்களின் உழைப்பை மறுதலித்த
சமூகத்தின் அங்கம் தானே நாமெல்லாம்.....!
*** *** ***
இரயில் வண்டியின் இரைச்சலையும் மீறி
கூவிக் கூவி விற்கும்
கண்ணொளி இல்லாதவர்களிடம்
கனிவுடன் ஏதாவது வாங்குங்கள்
அவ்வப்போது........
*** *** ***
வழிபாட்டுத் தலங்களுக்குப் போனால்
கடவுளுக்குக் காணிக்கை போடாவிட்டாலும்
வாசலில் காத்திருக்கும்
பிச்சைக் காரர்களுக்கு
ஏதாவது கொடுக்க மறக்காதீர்கள்.....!
*** *** ***
சின்ன இரும்பு வளையத்துக்குள்
உடலைக் குறுக்கி ஒடித்து வளைத்து
சிரமப்பட்டு நுழைந்து
வெளியேறும் சிறுமியும்
கொட்டடித்து குட்டிக்கரணம் போட்டு
வில்லாய் உடல் வளைத்தும்
விளையாட்டுக் காட்டும் சிறுவனும்
தட்டேந்தி வரும்போது
தவறாமல் காசு போடுங்கள்.....!
*** *** ***
சின்னப் பிள்ளைகளின்
இரயில் விளையாட்டைப் போல்
ஒருவர் கொடுக்கை ஒருவர் பிடித்தபடி
நெரிசலினூடே பாடியபடிக்
கடந்து போகும் குருடர்களுக்கு
கண்டிப்பாய் கொடுங்கள் ஏதாவது.....!
*** *** ***
இவர்களெல்லாம்
உலக முதலாளிகளின் வரிசையில்
முதலிடம் பிடித்துவிடப் போவதில்லை;
இன்னும் கொஞ்ச நாள்
உயிர்த்திருக்க அவர்களுக்கு
உதவலாம் உங்கள் பணம்.....!
Friday, January 29, 2010
கவிதை: முதுமை; சில முறையீடுகள்
முகச் சுருக்கங்களை
கிரீம்களில் அழுத்தி மறைக்கலாம்;
விரட்டலாம் முதுமையின் வீச்சங்களை
வாசணை திரவியங்கள் தெளித்து....
இஸ்திரி போட்ட உடைகளை இன்பண்ணி
இளமையாய் தோற்றமளிக்கலாம்;
வாலிபத்தைப் பெண்களிடம் நிரூபிக்க
லேகியங்கள் கிடைக்கின்றன நிறையவே!
ஆயினும்
ஞாபக அடுக்குகளில்
குவிந்து கொண்டிருக்கும் குப்பைகளும்
துடைக்கத் துடைக்க பெருகும்
தூசுகளும்
கடந்த காலங்களின் வயதைக்
காட்டிக் கொடுத்து விடுகின்றனவே
எப்படி மறைத்தாலும்.......!
Wednesday, January 13, 2010
உரையாடல் கவிதைப் போட்டிக்காக....
கதையல்ல; நிஜம்
அன்றொரு நாள் அதிகாலையில்
கரடு முரடான
கிராமத்து சாலையின் வழி
பயணித்துக் கொண்டிருந்தது பேருந்து......
ஆண் பெண் இருக்கைகளுக்கு மத்தியில்
நின்றிருந்த நாற்பது கடந்த
நடுத்தர வயதினன்
மயங்கி விழுந்தான் சட்டென;
கிராமத்திலொருவன் மயங்கி விழ
காரணங்களுக்கா பஞ்சம்!
கூட்ட நெரிசலோ பசி மயக்கமோ
வேறெதுவும் தள்ளாமையோ.....
விழுந்தவனின் கைகள் காற்றில் துழாவின
கம்பிகளைப் பிடித்துக் கொள்ள....
ஒருகையில்
ஆண்கள் பகுதியின் கம்பியை பிடித்தவனின்
இன்னொரு கைக்கு அகப்பட்டது
இருக்கையில் அமர்ந்திருந்த
இளம்பெண் ஒருத்தியின் முழங்கை;
முழுதாய்ப் பற்றுவதற்குள்
அசூசையுடன் தட்டிவிட்டாள் கைகளை
காக்கை எச்சத்தைப் போல.....
ஆடவன் ஒருவனின் கைகள்
தன்மேல் பட அனுமதிப்பாளா
கண்ணகி வழியில் வந்த
கற்புள்ள தமிழ்ப்பெண்?
நின்று கொண்டிருந்த
இன்னொரு பெண் ஓடிவந்து
விழுந்தவனை மடியில் போட்டு
நீவி விட்டாள் நெஞ்சை;
மயக்கம் தெளிந்தவனுக்கு
தன் இருக்கையைத் தந்து
எழுந்து கொண்டான் இன்னொருவன்....
இறங்கும் போது
இன்னொருவளிடம் கேட்டேன்
மயங்கி விழுந்தவன் தெரிந்தவனா?
அதெல்லாமில்லை; அய்யோ பாவம்
விழுந்தவன் அறியாதவ னென்றாலும்
வேடிக்கையா பார்க்க முடியும்?
என்றபடி
கடந்து போனாள் தன் வழியில்.....
உலகம் இயங்குவது
கற்புள்ள பெண்களால் அல்ல;
கரிசனமுள்ளவர்களால்........!
Wednesday, January 6, 2010
உரையாடல் கவிதைப் போட்டிக்காக....
உறை மட்டும் வந்தது வாழ்த்துச் சொல்லி...
உள்ளீடுகள் ஒழுகிப் போயிருக்கலாம்;
திருடும் போயிருக்கலாம்....!
சந்தோஷங்களைத் தொலைத்த
சலனமே இல்லாது
கடந்து போகிறது பொங்கலின் கூடு....!
முட்கம்பிச் சிறைகளுக்குப் பின்னால்
மூன்று லட்சம் தமிழர்கள்!
உறைந்த விழிகள்
உதிர்க்கும் கண்ணீரில்
உப்புக் கரிக்கிறது பொங்கல்!
*** *** ***
நெற்றி முத்துக்கள்
முற்றி விளையும் நெல்மணிகள்!
காலடி விரல்கள் கிளைக்கும்
கரும்பின் வேர்களாய்....
பச்சையும் மஞ்சளும் பயிராகும்
நெஞ்சின் பாத்திகளில்.....
மரபணு மாற்றப்பட்ட
விதைகளின் திணிப்பில்
பறிபோகும் பாரம்பரியங்கள்!
விஷத்தை அள்ளி அள்ளி
விழுங்கச் சொல்லும் அவலம்;
சுவடுகள் கருகும் சூரிய மேய்ச்சலில்.....
நாக்குகள் பொசுங்கும்
தாம்பூலத் தரிப்புகளில்...!
லாட ஆணிகளை உதிர்த்து
நடக்கும் காளைகளின்
கால்களெங்கும் கொப்புளங்கள்!
நெல்லும் கரும்பும் விளைத்தும்
பதருக்குள் அரிசி பொறுக்கி
புலம்பல் நுரைத்துப் பீறிட
’பொங்கலோ பொங்கல்...!’
*** *** ***
பால்யநாட்களின் பொங்கல் தினத்தில்
தூங்கும் போது எழுப்பி – அம்மா
பாயில் போட்டுப் போன
தோசையின் இளஞ்சூடு
இன்னும் இருக்கிறது நெஞ்சில்....
அதிகாலைக் குளிரின் நடுக்கத்தை
அனுபவித்தபடி
சோளத் தட்டையின்
நுனி மடக்கி காரோட்டி
காடுகளுக்குப் போய் காப்புகள் கட்டி....
வீதியெங்கும் அலைந்து
வீடுகளின் கோலங்களை அளந்து
சாணி உருண்டையில் சொருகிய
பூசணிப் பூக்களாய் மலர்ந்து....
கூட்டாளிகளோடு
பலகாரங்களைப் பகிர்ந்து
புதுச் சட்டைகளைப் பற்றிப் பேசி
அக்காக்களின் மடிகளில்
அமர்ந்தபடி கதைகள் கேட்டு...
பொங்கல்பானையில் பூத்த நுரைக்கு
குலவையிடத் தெரியாமல் கூச்சலிட்டு
பூஜை முடியும் வரை
பொறுக்க முடியாமல் பொருமி
விரயமாகும் தேங்காய்த் தண்ணீருக்காய் வருந்தி..
மாடுகளைக் குளிப்பாட்டும் சாக்கில்
ஒரே நாளில் நிறையத் தடவைகள்
குளிர்ந்த நீரில் குதியாலம் போட்டு
கொம்பு வர்ணங்களில்
கட்சி கட்டி சண்டையிட்டு....
பொங்கலும் கரும்பும்
மாடுகளுக்குக் கொடுத்து – அவை
ஆசை ஆசையாய் உண்பதை ரசித்து....
இன்னும் இன்னுமென
ஏராளமாய் நினைவுகள்....!
எப்போது வருமென்று ஏங்கி
வந்து போனதும்
அதற்குள் முடிந்து போனதே
என்று வருந்தி
அடுத்த பொங்கலுக்காய்
ஆவலோடு எதிர் பார்ப்பதெல்லாம்
சிறுவயதிற்கே உரிய
சீதனங்கள் போலும்....!
Monday, January 4, 2010
கவிதை - பெய்யெனப் பெய்யும்
கொழுநன் தொழுவதெல்லாம்
கழுவேற்ற வேண்டிய
சடங்குகளில் ஒன்றென்பாள்;
பெண்ணுக்கு அழகென்று வள்ளூவன்
பரிந்துரைத்த பழக்கங்களையெல்லாம்
தீயிலிட வேண்டுமென்பாள் தீவிரமாய்!
ஆயினும்......
காகிதப் பூக்களே கவர்ச்சி என்றும்
கட்டிடங்களின் பிரம்மாண்டமே
நாட்டின் வளர்ச்சி என்றும்
கற்பிதங்கள் நிறைந்த
கடும்பாலை வெளியில் வாழ நேர்ந்த
வெயில் கொளுத்திய ஒரு நாளின்
மங்கிய மாலை வேளையில்
வெளியில் கிளம்பிய புருஷனிடம்
மழை பெய்யுமின்று மறக்காமல்
குடைகொண்டு போங்களென்றாள்;அவன்
மறுத்தபோதும் திணித் தனுப்பினாள்!
கட்க்கத்தில் கனக்கும் குடையுடன்
மனைவியை மனதுள் வைதபடி
வெளியில் சென்ற வேலை முடித்து
வீட்டுக்குத் திரும்பும் வழியில்
அதிசயமாய்ப் பிடித்தது அடைமழை!
துளியும் நனையாமல் வீடு திரும்பியதும்
மனைவியிடம் கேட்டான்
எப்படி அறிந்தாய்
இன்று மழை பெய்யுமென்று?
நீயும் பத்தினி தான்........!
முறைத்தபடி சொன்னாள் அவள்;
மன வலியை
முகத்தில் படிக்க முடிவது போல்
மழைவழி அறிய வானத்தை
வாசிக்கத் தெரிந்தால் போதும்.....!
பத்தினி என்கிற
பாசாங்குகள் தேவையில்லை;
Thursday, December 31, 2009
கவிதை: பால்ய சினேகிதி
மூச்சிறைக்க நின்றிருந்தபோது
பின்கொசுவம் வைத்த சேலைகட்டி
பிள்ளையை இடுக்கியபடி கடந்துபோன
பேதைப் பெண்ணிடம்
பால்ய சினேகிதியின் சாயல்!
ஒருவேளை....ஒருவேளை....
அவளே தானோ........?
அலைமோதும் நினைவுக்குள்ளும்
அனலடிக்குதடீ.....!
திருக்கார்த்திகை தினமொன்றில்
உரிமையாய் என் தலையில் நீ
தேய்த்துப்போன
ஒட்டுப்புல்லின் அடர்த்தியாய்
உதிர்கின்றன உன் நினைவுகள்!
அம்மணமாய் நாமலைந்த நாட்களில்
தொடங்குகிறது நமக்கான அந்தரங்கம்!
உன் "அரைமுடி" கேட்டு நானழுததாக
சின்ன வயதில் சொல்லிச் சொல்லி
சிரித்திருக்கிறாள் அம்மா!
செப்பு வைத்து நீ சோறாக்க
வயலுக்கு போவதாய் சொல்லி - நான்
வைக்கோற் போரில் விளையாடிவர
சோறு குழம்பு கூட்டென்று
மண்ணைக்குவித்து பரிமாறி
அவுக் அவுக் என
பாவணைகளில் தின்று முடித்ததும் - அம்மா
பசிக்கிறதென்றபடி ஓடியிருக்கிறோம்....!
தானியத்தை மென்று
நுனி நாக்கில் ஏந்தி நாம் வளர்த்த
புறாக் குஞ்சுக்கு
புகட்டி இரசித்திருக்கிறோம்....!
காடுகளில் தேடி அலைந்து
பொன்வண்டுகளைப் பிடித்து
தீப்பெட்டிகளில் வளர்த்திருக்கிறோம்!
வெயிலில் அலைந்து கதை பேசியபடி
சாணி பொறுக்கியிருக்கிறோம்;
மரநிழலில் ஓய்வெடுத்தபடி
வேப்ப முத்துக்கள் சேகரித்திருக்கிறோம்!
களிம்ண்ணில் கோயில் கட்டி
கடவுள் சிலை வடித்து
வீடுவீடாய் கொண்டு காட்டி
எண்ணெய் வாங்கி வந்து
விளக்கேற்றி விளையாடியிருக்கிறோம்....!
உணர்ச்சிகள் அரும்பாத வயதில்
புணர்ச்சி என்று புரியாமலே
உறுப்புக்களை ஒட்டி வைத்து
புருஷன் பொஞ்சாதி என்று
உறவாடி மகிழ்ந்திருக்கிறோம்.....!
பக்தி கொஞ்சமும் இல்லாமல் - உன்
பக்கத்தில் நடந்து போகிற சந்தோஷத்திற்காகவே
மலையேறிப் போய்
சாமி கும்பிட்டுத் திரும்பிய நாட்கள்!
சைக்கிள் கற்றுக் கொள்ளும் சாக்கில்
பரஸ்பரம் பரிமாறிக் கொண்ட
பவள முத்தங்கள்!
என் கைகளில் தவழ்ந்து
நீ பழகிய நீச்சல்!
உன் கைகளுக்குள் அடங்கி
நான் சிலிர்த்த மோகம்!
புத்தம் புதிய பூவாக நீ வந்திருந்து - என்
மனங் கொள்ளை கொண்ட
மயானக் கொள்ளை!
நீ வராமல் போனதால்
அழகிழந்த தெப்பத் திருவிழா!
இன்னும் இன்னுமென....
நெஞ்சின் ஆழத்தில் இனிக்கும்
நினைக்க நினைக்க சிலிர்க்கும்
நினைவுகள் ஏராளம்!
அறியாத வயதில் அருகிருந்தோம்;
வளர வளரத்தான்
விலகிப்போனோம் வெகுவாக....
கல்வி பிரித்தது; காலம் நம்மை
வேரோடு பிடுங்கி வீசி எறிந்தது
திசைக் கொருவராய்........
திருவிழாவில் தொலைந்த சிறுபிள்ளைகளாய்
தேடிக் கண்டடையவே முடியாதபடி
தொலைந்து போனோம் நீண்ட நெடுங்காலமாய்......
Tuesday, December 29, 2009
கவிதை: வாக்குமூலம்
என் வழ்க்கை என்னுடையதில்லை;
நதிபோல் குறுகி
கரைகளுக்குள் அடங்கி நடக்காமல்
பாதைகளற்ற நீரோட்டமாய்
கிடைத்த வெளிகளில்
கிளைத்துப் போகிறதென் வாழ்க்கை!
என் பயணத்தின் திசைகளை
எதெதுவோ தீர்மானிக்க
இலக்கற்று ஓடிக் கொண்டிருக்கிறேன்!
இளவயதின் இலட்சியங்கள் எல்லாம்
சிதறிப் போயின சீக்கிரமே;
சின்னத் தடயமுமில்லை
வரித்துக் கொண்ட வாழ்க்கையை
வாழ்ந்ததின் அடையாளமாக.....!
தமிழ் இலக்கியம் படிக்கும்
தாகமிருந்தது பால்யத்தில்;
எதிர்காலப் பயம் பற்றிய
பொறியில் விழுந்ததில்
பொறியாளனாய் வெளியேறினேன்; குடும்பத்தின்
பொருளாதார சிரமங்களையும் மீறி......!
கலை இலக்கியத்தை வாழ்க்கையாய் வரிக்கும்
கனவுகள் இருந்தது நிறைய
கஞ்சிக்கும் வழியற்றுப் போகுமென்ற கவலையில்
உத்தியோகம் பார்த்துத்தான்
உயிர் வளர்க்க நேர்ந்தது.....!
காதலித்து கலப்பு மணம் புரிந்து
சாதியின் வேர்களைக் கொஞ்சம்
கில்லி எறியும்
வேகம் இருந்தது ஆயினும்
சுயசாதியில் மணமுடித்து
சுருங்கி வாழத்தான் வாய்த்தது....!
உயிர் குழைத்து உருவாக்கிய அம்மாவை
மகாராணியாய் பராமரிக்க
ஆசை இருந்தது மனம் நிறைய; ஆயினும்
பிழைப்புக்காக பிறிதொரு நாட்டில் நானுழல
பிறழ்ந்த மனதுடன் பிதற்றியபடி
பிச்சைக்காரியாய் வீதிகளில் அவள்
அலையத்தான் நேர்ந்தது.....!
கிராமத்துடனான
தொப்புள் கொடி உறவருந்ததில் - அம்மா
உயிருடன் இருக்கிறாளா இல்லையா என்ற
உண்மை கூட தெரியாமலே போனது....!
கடுகு போல் சிறுக வாழாமல்
ஊறுணி போல் கிராமத்திற்கே
உபயோகமாய் வாழ்ந்து விடுகிற
இலட்சியங்கள் கொண்டிருந்தேன்; ஆயினும்
சொகுசான பட்டணத்து வாழ்வில்
சொத்து சேர்ப்பதே
வாழ்வின் தேடலானதில்
வறண்டு தான் போனேன்
இதயத்தில் துளியும் ஈரமற்று......!
சிறுசிறு கணக்குகளிலும்
சில்லரைப் பிணக்குகளிலும்
நட்புகள் நழுவிப் போயின;
சொந்தமும் சுற்றமும்
விலகிப் போய் வெகு நாளாயிற்று;
பிரியங்களையும் பிரேமைகளையும் மீறி
மனைவியுடனான உறவும்
முறுக்கிக் கொள்கிறது அடிக்கடி.....!
விரிந்து பரவும் வெறியோடு
வேர் பிடிக்கத் தொடங்கினேன்;
சுற்றிலும் வேலியிட்டு
சூனியத்தை அடை காத்தேன்
கிளை விரித்துக் காத்திருந்தும்
அண்டவில்லை புள்ளினமெதுவும்
அப்புறந்தான் புரிந்ததெனக்கு
வளர்ந்து வந்தது முள் மரமென்று.....!.
இலைகள் பழுத்து உதிர்ந்து விட்டன
மொட்டுக்களெல்லாம்
மலராமலே கருகி விட்டன
காயில்லை; கனியில்லை; அதனால்
விதைகளும் விழுகவில்லை
மொட்டை மரமாய் நிற்கிறேன்
வெட்ட வெளிதனில்.....
வீழ்ந்தால் விறகுக்காவது ஆவேனோ
வெறுமனே மட்கி
மண்ணோடு மண்ணாகிப் போவேனோ....!
Monday, December 28, 2009
கவிதை: (தா)காகங்களின் கதை
அன்புத் தங்கையே! அன்புத் தங்கையே!
இன்னும் கொஞ்ச தூரம் தான்
எங்காவது சிறிதளவாவது
நீர் கிடைக்கும் நிச்சயமாய்.....
அள்ளிச் செல்வோம்;
அதுவரை
வலிபொறு என் செல்லமே!
நீர் நிரப்பும் நேரம் வரை
நீதிக்கதை ஒன்று சொல்லட்டுமா?
நம்மைப் போலவே நீர்தேடி அலைந்த
காகங்களைப் பற்றிய கதை இது!
பள்ளிக்குப் போயிருந்தால் நாமும்
பாடப் புத்தகங்களில் படித்திருப்போம்;
பாட்டியிடம் திருடிய வடையை
தன்குரல் பற்றிய பிரமைகளில்
பாட்டுப் பாடி நரியிடம்
பறிகொடுத்ததும் கூட
இதே காகமாக இருக்கலாம்!
அத்துவானக் காட்டில் ஒருநாள்
அலைந்து கொண்டிருந்தது தாகத்துடன்!
சுற்றிச் சுற்றி அலைந்தும் கொஞ்சமும்
தண்ணீர் தட்டுப்படவில்லை தடாகமெதிலும்;
கடும் கானலைத் தவிர இன்று போலவே
கானகத்தில் நீர்ப்பசையில்லை எங்கும் ....
முன்பெல்லாம் இத்தனை
அலைச்சலும் தேடலும்
அவசியமிருந்ததில்லை காகங்களுக்கு;
ஏதாவது செடி மறைவில்
உழவனின் கஞ்சிக் கலயமிருக்கும்
உருட்டிக் குடித்து விட்டு
ஒய்யாரமாய் பறந்துவிடும் கரைந்தபடி.....
சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்
விவசாய நிலங்களை யெல்லாம்
விழுங்கத் தொடங்கிய பின்புதான்
காகங்களுக்கும் நமக்கும்
தாகம் நிரந்தரமாயிற்று!
தூரரத்தில் வெகுதூரத்தில்
பானை ஒன்று மின்னியது
பாலை வெயிலில்;
பசியையும் மீறி காகம்
பறந்து போனது அதனருகில்...
பெரியதோர் மண்பானை அது;
இரவுப் பனியின் ஈரம் உலராமல்
தூரில் நீராய் நின்றிருந்தது
சூரியக் கதிர்களிலிருந்து
எப்புடியோ தப்பி.........
விளிம்பிலேறி எட்டிப் பார்த்து
விசனப்பட்டது காகம் - தன்
அலகுக்கு எட்டாத
ஆழத்தில் நீரிருப்பதை அறிந்து....
இதற்கு முன்பும் ஒரு சமயம்
இதே போல் நேர்ந்ததும் - தன்
புத்தி கூர்மையால் நீரருந்தியதும்
நினைவிலாடியது காகத்திற்கு......
கொஞ்சமும் தாமதிக்காமல்
அக்கம் பக்கம் கல் பொறுக்கி
அடுக்கடுக்காய் பானையுள் போட்டது;
கற்களால் பானை நிரம்பியும்
நீரெழும்பி வாரதது கண்டு
நிர்கதியாய் நின்றது காகம்!
என்னாயிற்று தண்ணீருக்கு?
ஐயகோ -
போட்ட கற்களின் அழுத்தத்தில்
ஓட்டை விழுந்து பழம் பானையில்
ஒழுகிய கொஞ்ச நீரையும்
வறண்டிருந்த நிலம்
வாய் பிளந்து உறிஞ்சிக் கொண்டதே!
என்ன செய்யும் ஏழைக் காகம்?
தாகம் தணிக்க வழியற்று
பறந்து போய் மறுபடியும் - சிறுவர்களின்
பாடப்புத்தகத்தில் புகுந்து கொண்டு
நீதிக் கதை வெளிகளில்
நீந்தித் திரியலாயிற்று !
நமக்குத்தான் நீர் தேடும் அவலம்
தொடர்கிறது காலங்கள் தோறும்.....!
Friday, December 18, 2009
கவிதை: எங்கெங்கு சென்றாலும்
மரியாதை நிமித்தம்
மாலைகளுடனும் சால்வைகளுடனும்....
கோயில்களுக்குச் செல்கிறார்கள்
அனேக வேண்டுதல்களுடனும்
அர்ச்சகர்கள் மற்றும் பிச்சைக்காரர்களுக்கான
சில்லரைகளுடனும்....
சிறைக்கூடங்களுக்குச் செல்கிறார்கள்
சிற்றுண்டிகளுடனும்
சிதைந்த வாழ்க்கை சித்திரங்களுடனும்....
மருத்துவமனைகளுக்குப் போகிறார்கள்
ஆறுதல் மொழிகளுடனும்
ஆர்லிக்ஸ் மற்றும் பழங்களுடனும்.....
இழவு வீடுகளுக்குப் போகிறார்கள்
வலிமிகு இரணங்களுடனும்; சிலர்
வலிந்து வரவழைத்த கண்ணீருடனும்....
உறவுகளைத் தேடிப் போகிறார்கள்
குசல விசாரிப்புகளுடனும்
குழந்தைகளுக்கான தின்பண்டங்களுடனும்.....
நண்பர்களை நாடிப் போகிறார்கள்
பொங்கிப் பெருகும் நினைவுகளுடனும்
பொசுங்கிய கனவுகளுடனும்.....
தெப்பக் குளங்களுக்குப் போகிறார்கள்
குளிக்கும் ஆவலுடனும்; சிலர்
மீன்களுக்கான பொரிகளுடனும்.....
தெரு நாய்களைத் தாண்டிப் போகிறார்கள்
பயமும் பதுங்களுமாய்
திருடர்களும் உயிர்களை நேசிக்கும் சிலரும்
வீசிப் போகிறார்கள்
கொஞ்சம் பிஸ்கட்டுகளையும்....
இறந்த பின்பும் சுமந்து போகிறார்கள்
நிறைய பாவங்களையும்
நிறைவேறா ஆசைகளையும்; சிலர் மட்டும்
உதிர்கிறார்கள் ஒரு பூவைப் போல்
உரமாகிறார்கள் வேரடி மண்ணிற்கே....!
மூன்று கவிதைகள்
நவீன பெண்களுக்குத் தான்
எத்தனை எத்தனை தாலிகள்!
கம்பீரமாய் கழுத்தில் தொங்கும்
கம்பெனியின் அடையாள அட்டை;
மாலையாய்த் தழுவி
மனதை நிறைக்கும் கைத்தொலைபேசி!
மருத்துவரென்றால் ஸ்டெத்தாஸ்கோப்;
கணிணி நிபுணி என்றால்
கழுத்திலொரு ஈ.பேனா
இன்னும் என்னென்னவோ
அத்தனையையும் சுமக்கிறார்கள்
அலாதியான சந்தோஷங்களுடன்....!
புருஷர்கள் அணிவிக்கும்
பொன் தாலிகள் தான்
காலத்திற்கும் கனக்கும் நகரவிடாமல்.....!
யானைகளுக்கு அங்குசங்கள்;
நம் பெண்களுக்கு
தாலி என்னும் மஞ்சக்கயிறு!
விக்கல்; சில நினைவுகள்
தலையில் தட்டவும் யாருமற்ற
தனிமையில் இரையெடுக்கும் போது
முதல் கவளம் சோறே விக்கிற்று!
சிறுவயதில் அடிக்கடி விக்கும்;
அப்போதெல்லாம்
ஆறுதலாய் தலையில் தட்டி
அன்பாய் சொல்வாள் அம்மா
'உன்னை யாரோ நினைக்குறாங்கடா'!
இப்போது.....
யாரிருக்கிறார் நினைப்பதெற்கு?
ஞாபக அடுக்குகளில் துழாவினால்
பெருமூச்சே மிஞ்சிற்று!
பால்யகால நட்பெல்லாம்
பள்ளி இறுதி நாளொன்றில்
பசுமை நிறைந்த நினைவுகளே....
பாடியதோடு கலைந்து போயிற்று !
கல்லூரி கால நட்போ
கத்தை கத்தையான கடிதங்களில்
செழித்து வளர்ந்து
நலம்; நலமறிய அவா; எனும்
கார்டு கிறுக்கல்களில் குறுகி
வருஷத்துக் கொருமுறை
வாழ்த்து அட்டைகளாய் சுருங்கி
கடைசியில் வேலை கிடைத்ததும்
கரைந்து காணாமலே போயிற்று!
அலுவலக உறவுகளெல்லாம்
அசட்டுப் புன்னகைகள்;
அவ்வப்போது கைகுலுக்கள் தவிர்த்து
ஆழமாய் வேர் பிடிப்பதில்லை மனதில்....
சொந்தம் சுற்றமெல்லாம்
சடங்கு சம்பிரதாயங்களில்
முடங்கிப்போய் வெகு நாளாயிற்று!
இலக்கற்று ஓடிக் கொண்டிருக்கும்
இயந்திர வாழ்க்கையில்
யாரும் யாரையும்
நெஞ்சார்ந்து நினைப்பதற்கு நேரமேது?
எதிரெதிர் இலக்குகள்
அந்தரத்தில் தொங்குகிறது
நமக்கான ஒற்றையடிப் பாதை
எதிரெதிர் திசைகளில் நமது இலக்குகள்!
ஏதேதோ புள்ளிகளில் பயணம் தொடங்கி
எதிரும் புதிருமாய் நிற்கிறோம் இப்போது;
விலகவோ துளியும் இடமில்லை
இருபுறமும் அதல பாதாளம்
எப்படி அடைவது அவரவர் இலக்கை.....?
சேர்ந்து நடக்கத் தொடங்குவோம்
வேறுவழி எதுவுமில்லை இருவருக்கும்;
உலகம் உருண்டை என்பது
உண்மையானால்
இருவர் இலக்கையுமே கடந்தும்
தொடரலாம் நம் பயணம்.....!
Wednesday, December 16, 2009
கவிதை: எதுவுமில்லை புதிதாய்.....
எல்லாம் என்றைக்கும் போலத்தான்
தினசரிகளின் ஒரே மாதிரியான சுழற்சி!
எல்லாச் செலவுகளும் முதல் தேதிக்கும்
எல்லாக் காரியங்களும்
விடுமுறை தினங்களுக்குமாய்
தள்ளிப் போடப்பட்டு
தள்ளிப் போடப்பட்டு
நாட்கள் நகரும் நத்தைகளாய்.......
எப்போதும் கண்களில் கொஞ்சம்
தூக்கம் மிச்சமிருக்கிறது;
முழுசாய் தூங்கி விழித்த
இரவென்று எதுவுமே இல்லை;
கனவுகளற்ற தூக்கம்
சாத்தியப் படுவதில்லை ஒருநாளும்.....!
கனவுகளில் மட்டும்
பச்சையம் இருந்திருந்தால்
உலகிற்கே தீர்ந்து போயிருக்கும்
உணவுப் பிரச்சினை!
இரைச்சலாகிப் போனது
இயல்பு வாழ்க்கை;
இயந்திரங்களின் உறுமலில்
கறுப்பாய் விடிகின்றன நாட்கள்!
அழுக்குத் தேய்த்துக் குளிக்க அவகாசமில்லை;
மென்று தின்ன நேரமில்லாமல்
விழுங்கிப் போகிறோம் உணவுகளை;
வயிறே பிரதானமான வாழ்விலும்
பிந்தித்தான் போகின்றன
சாப்பாட்டு வேளைகள்!
ஓடுகிறோம்; ஓடுகிறோம்;
ஓடிக்கொண்டே இருக்கிறோம்....
எதற்கென்று தெரியவில்லை;
எங்கென்றும் புரிவதில்லை;
ஓட்டம் மட்டும் தொடர்கிறது
வெறிகொண்ட வேகத்தில்
விழுமியங்களை விழுங்கியபடி.....!
Tuesday, December 15, 2009
கவிதை:கூண்டுக்கிளி
கொண்டு வந்து மாட்டினார்கள்
என் வீட்டு முற்றத்தில்.....
வயதின் வலிகளோடும்
புறக்கணிப்பின் இரணங்களோடும்
புரண்டு கொண்ண்டிருந்த எனக்கு
கிளியின் வருகை
களிப்பூட்டுவதாய்த் தானிருந்தது....
எனது இறுமலும் கிளியின் மழலையும்
இசையென இயைந்து போனதும்
சினேகமானோம் சீக்கிரமே!
ஆயினும்.......
எப்போதும் கீச் கீச்சென்றபடி
எதையோ பறிகொடுத்த பாவணையில்
சீக்கிரமே அலையலாயிற்று கிளி!
சின்ன அரவம் கேட்டாலும்
சிலிர்த்து நடுங்கியது;
எலி தேடி அலையும் பூனையின்
புள்ளிக் கண்களின் பசிவெறியோ
கிலி கொள்ளச் செய்தது கிளியை.....
சிறுவர்களின் உயிருள்ள பொம்மையாய்
சின்னஞ் சிறு கிளி!
உண்ணப் பழங்கள்; உறங்கக் கூண்டு
எல்லாம் கிடைக்கிறது; இருந்தும்
விரிந்த வானத்தில் சிறகசைத்துப்
பறந்த சந்தோஷம்
கூண்டுக்குள் கிடைக்குமா கிளிக்கு?
கிராமத்தின் வீதிகளில்
சுதந்திரமாய் சுற்றி அலைந்த
பால்யம் நினைவிலாடிய தெனக்கு!
பறந்து பார்க்கத்தானே கிளி அழகு!
கூண்டுக்குள் அடைத்து இரசிப்பது
குரூரமாயிருந்தது எனக்கு;
பள்ளிக்கும் பணிக்குமாய்
பலரும் கிளம்பிப் போனபின்
கிளியும் நானும் தனித்திருந்த வேளையில்
கூண்டைத் திறந்து வைத்து
பறந்து போக அனுமதித்தேன்;
வெளியே போகாமல் கிளி
வேடிக்கை பார்த்தது என்னை!
ஒருவேளை பயப்படுகிறதோ என்றெண்ணி
ஒளிந்து பார்த்தேன் கொஞ்ச நேரம்!
சலனமில்லை கிளியிடம்;
சாவகாசமாய் உலவியது உள்ளேயே!
வழிமறந்து போயிருக்கலாமென்று
கூண்டுக்குள் கை நுழைத்து கிளி பிடித்து
வெட்டவெளியில் வீசினேன் பறந்து போவென்று.....
தத்தி தத்தி நடந்து
தானே கூண்டிற்குள் நுழைந்து
ஓரத்திற்குப் போய் ஒடுங்கிக் கொண்டது;
வெளியேற்றி விடுவேனென்கிற பயத்தில்
வெடவெடவென நடுங்கி பம்மிக் கொண்டது;
பழகிய சிறை வாசம் பாதுகாப்பாக
பறத்தல் மறந்த கிளிக்கு
விரிந்த வானம் வெறுமையாயிற்றோ!
ஐயகோ....
மனித அவலம் கிளிக்குமா......?
Friday, December 11, 2009
கவிதை - குடம் தண்ணீரும் குழந்தையின் சிரிப்பும்

குடம் தண்ணீருக்கு ஒரு
குழந்தை காவலா?
பள்ளிக்கூடம் போகாமலே
பருவங்கள் கரைந்தும்
இழப்பு கொஞ்சமும் உறுத்தாமல்
இயல்பாய் சிரிக்குது பாருங்கள்!
இப்பொழுதே சிரித்துக் கொள்
என் இனிய செல்லமே!
பத்திரப் படுத்திக் கொள்
பாதுகாப்பாய் உன் தண்ணீரையும்......
இனி நீ வளரும் நாட்களில்
உன் செம்பு நீரும் சிரிப்பும்
திருடு போய் விடலாம்....!
மூன்று பக்கமும்
தண்ணீர் சூழ்ந்திருந்தும்
பருக ஒருவாய்
நீரும் கிடைக்காமல் அலைகிறது
ஒரு பெருங் கூட்டம் !
ஆற்று நீரெல்லாம்
ஆலைக் கழிவுகளால்
அமிலமாகிப் போனது;
ஊற்றுப் படுகைகளுக் கெல்லாம்
ஊறு நேர்ந்து
உலர்ந்து வெகு காலமாயிற்று.;
காற்றும் விஷமாவது
கவலை அளிக்கிறது கண்ணே.....!
வளர்ச்சி என்றொரு வணிகப் பெயரில்
பறிபோய்க் கொண்டிருக்கிறது
வறியவர்களின் நீரும் நிலமும்....
ஏழைகளின் இரத்தம் உறிஞ்சி
குளிர் பானமென்று
கூவிக்கூவி விற்கிறார்கள்...!
தங்கத்தை விடவும்
தண்ணீருக்கு விலை ஏறுகிறது;
நடக்கிறது நல்லபடி
உலகெங்கும் நீர் வியாபாரம்!
ஆருடம் சொல்கிறார்கள்
அடுத்த உலக மகா யுத்தம்
நீருக்காக இருக்குமென்று....
தடுக்க முடியாமல் போகலாம்
தக்க வைத்துக் கொள் தங்கமே
உன் சிரிப்பையாவது அதுவரை.......
Thursday, November 12, 2009
கவிதை - ஒரு மனைவியின் விடைபெறல்
போய் வருகிறேன் தோழா!
விலகல் இல்லை இது;
விடைபெறல் மட்டுமே! உனக்கான
நேசமும் காதலும் என்னுள்
நிலைத்திருக்கும் என்றென்றும்.......
நாமிருவரும்
நட்பாய் கை குலுக்கினோம்;
நதியின் பிரவாகமிருந்தது நமக்குள்......
காதலாய் நிறம் மாறியபோதும்
கனவுகள் பொங்கிற்று மனதில்!
திருமணம் என்ற உறவுக்குள் புகுந்த
மறு நிமிடமே நீ
புருஷனாய் மாறிய இரசாயாணம்
புரியவே இல்லை எனக்கு!
அதிகார அஸ்திரங்களைத்
தொடுக்கத் தொடங்கினாய் அடுக்கடுக்காய்;
வாலியை மறைந்திருந்து வதம்செய்த
இராமபானங்களையும் விட
வலிமையானவை அவை....
இரணமான நாட்களின் நினைவில்
இன்னும் கூட
இரத்தம் கசிகிறது நெஞ்சில்!
எவ்வளவு முயன்றும் - உன்
புதுப்பிக்கப் படாத ஆணெனும்
புராதான மூளைக்குள் காலங்காலமாய்
பதுங்கிக் கிடக்கும்
மனைவியின் பிரதியாய்
மாறவே முடியவில்லை என்னால்
மன்னித்து விடு என் தோழா!
வேறு வழி தெரியவில்லை; அதனால்
விடை பெறுகிறேன் உன்னிடமிருந்து
கால நதியின் சுழற்சியில்
மறுபடி நாம் சந்திக்க நேர்ந்தால்
கை குலுக்குவோம் ஒரு புன்னகையுடன்
கணவன் மனைவியாய் நாமிருந்த
கசப்புகளை மறந்து..........!
(அன்புடன் இணையதள்ம் நடத்திய படக்கவிதைகள் பிரிவில் முதல் பரிசு பெற்றது)