Tuesday, December 1, 2009

சிறுகதை - முடிவுறாத பயணம்

துபாய் விமான நிலையத்தில் காத்திருந்த கனகவள்ளிக்கு நேரம் ஆக ஆக பயம் அதிகரித்தது. சென்னையிலிருந்து அவள் இங்கு வருவதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்த கதிர்வேல் விமான நிலையத்திற்கு அவளை அழைத்துப் போக வந்திருக்கவில்லை. கனகவள்ளி துபாய் விமான நிலையத்தில் இறங்கிய போதே இருட்டத் தொடங்கி இருந்தது. வண்ண வண்ண விளக்குகளும் விஸ்தாரமான வெளிகளுமாய் வெகு அழகான வேறொரு உலகம் போலிருந்தது துபாய். நீண்ட நீண்ட வராந்தாக்களில் நீளநீளமாய் வெகு நேரம் நடக்க வேண்டி இருந்தது. அவளுக்கு மிகவும் களைப்பாக இருந்தது. எதிர்ப்பட்ட கடிகாரத்திலிருந்தபடி - துபாய்க்கும் இந்தியாவிற்கும் 1½ மணி நேர வித்தியாசம்; துபாய் தாமதமாக விடியும் - தன் கைக்கடிகாரத்தைத் திருத்திக் கொண்டாள்.
அவசரமாய் விரையும் கூட்டத்தினரை விட்டு விடாமல் அவர்களுடன் ஒட்டிக் கொண்டே தொடர்ந்தாள். கதிர்வேல் தெளிவாய் எழுதி யிருந்தான்; விமானத்தில் உன்னுடன் பயணிப்பவர்களைத் தொடர்ந்து வா; அவர்கள் வரிசையில் நின்றால் நீயும் நில்; அவர்கள் நடந்தால் நீயும் நட…அவர்களை மட்டும் விட்டு விடாதே! சிறுநீர் கழிக்க வேண்டும் போலிருந்தது.. அடக்கிக் கொண்டு தொடர்ந்து நடந்து கொண்டிருந்தாள். திடீரென்று வரிசையிலிருந்து சிலர் விலகிப் போவது போலிருக்க, அவர்கள் போன பாதையில் இவள் பார்க்க அங்கு கழிவறைகள் எதிர்ப்பட்டன. அப்பாடா என்று உணர்ந்தபடி இவளும் அவர்களைத் தொடர்ந்தாள்.
கழிவறைகள் கண்களில் ஒற்றிக் கொள்ளலாம் போல, அப்படி ஒரு சுத்தமாய், விஸ்தீரணமாய், நேற்றுத்தான் நிர்மாணிக்கப் பட்டது போல் புத்தம் புதிதாய் பளபளத்தன. தவிர்க்கவே முடியாமல், சென்னை விமான நிலையத்தில் அவள் உபயோகிக்க நேர்ந்த குமட்டலெடுக்கும் துர்நாற்றம் வீசும் கழிவறைகள் ஞாபகத்திற்கு வந்தன. பல நாட்டுப் பயணிகளும் புழங்கும் பன்னாட்டு விமான நிலையத்தின் கழிவறைகளே இந்த இலட்சணத்திலா என்று நினைத்துக் கொண்டாள்! அவள் கழிவறையிலிருந்து வெளியே வந்து பார்த்த போது, வெறிச்சோடிக் கிடந்தது. யாரையுமே காணவில்லை. இவளுடன் கழிவறைக்குள் போனவர்கள், அதற்குள்ளாகவா வெளியேறிப் போய் விட்டார்கள்? பயமாக இருந்தது கனகவள்ளிக்கு.
பழைய பாதையைப் பிடித்து தொடர்ந்து நடந்தாள். எதிர்ப்பட்ட எஸ்கலேட்டரில் கீழிறங்கினாள். நிறையப்பேர் கும்பல் கும்பலாய் நின்று கொண்டிருந்தார்கள். அப்பாடா என்றிருந்தது. சிலர் வரிசைகளில் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒரு பெண் பரிச்சயமானவளாய் விமானத்தில் பார்த்த முகமாய் இருக்கவே வேகமாய் நடந்து அவளுடன் போய் நின்று கொண்டாள். அவள் இவளைப் பார்த்து சினேகமாய்ச் சிரித்தாள்.
“இது எதுக்கான வரிசை? “அவளிடம் கனகவள்ளி பதட்டத்துடன் கேட்டாள்.
“இங்க கண்ணப் போட்டோப் புடிச்சு கம்பூட்டர்ல பதிஞ்சுக்குவாங்க…..” என்றாள் அவள். கனகவள்ளிக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவளிடம் பேசி மேல் விபரங்களை அறிந்து கொண்டாள். கை ரேகை மாதிரி கண் ரேகையாம்; ஒவ்வொருத்தருக்கும் கண்ரேகை வெவ்வேறு மாதிரியாக இருக்குமாம். ஒரே ஆள் வெவ்வேறு பாஸ்போர்ட்களில் இந்த நாட்டுக்குள் நுழைந்து விடுவதைக் கண்காணிப்பதற்கு இந்த ஏற்பாடாம். கண்ரேகை பதிவு முடிந்ததும் அந்தப் பெண்ணைப் பின் தொடர, அவள் கனகவள்ளியிடம் “ஒரிஜினல் விசாவ கலெக்ட் பண்ணீட்டீங்களா?” என்று கேட்டாள். கனகவள்ளி புரியாமல் பாஸ்போர்ட்டுக்குள் மடித்து வைத்திருந்த கதிர்வேல் கொரியரில் அனுப்பி வைத்திருந்த பேப்பரைக் காண்பித்தாள்.
“இது விசாவோட காப்பி தான்; ஒரிஜினல் அதோ அந்த கௌண்டர்ல இருக்கும்; போய் வாங்கிட்டு வந்துடுங்க…..” என்று கொத்துக் கொத்தாய் ஆட்கள் நின்று கொண்டிருந்த ஒரு கௌண்ட்டரைக் கைசுட்டிக் காட்டினாள். கனகவள்ளி ஓடிப்போய் அங்கிருந்தவனிடம் தன் கையிலிருந்த விசா காப்பியைக் காண்பித்து, அவன் கொடுத்த ஒரு ரோஸ் நிறக் காகிதத்தைப் பெற்றுக் கொண்டு வேகமாய்ப் போய் அந்தப் பெண்ணுடனே நின்று கொண்டாள். “உங்களுக்கு எல்லாமே தெரியுது! அடிக்கடி இங்க வருவீங்களோ?”பிரமிப்புடன் கேட்டாள்.
“அப்படியெல்லாம் இல்ல; ஒருதடவை வந்து போயிட்டாலே, இங்க என்னென்ன பார்மாலிட்டிசுன்னு புரிஞ்சு போயிடுமே…. நான் இங்க வர்றது மூணாவது தடவை…..” பெருமை பொங்கச் சொன்னாள் அந்தப் பெண்.
விமான நிலைய விசாரிப்புகள், சோதனையிடல் எல்லாம் முடிந்து வெளியில் வந்து, ஒரு சுழல் மேடைக் கருகில் காத்திருந்து அதில் வந்து விழும் லக்கேஸ்களைச் சேகரித்துக் கொண்டு, கையசைப்புகள், சந்தோஷப் புன்னகைகள் என்று ஆரவாரமாயிருக்கும் காத்திருப்போர் கூட்டத்திற்கு அந்தப் பெண்ணுடனே வந்தாள்.
‘ஹாய்….’ என்று ஓடி வந்த ஒருவனுடன் அந்தப் பெண் கிளம்பிப் போகவும், கனகவள்ளி காத்திருந்தவர்களினூடே கதிர்வேலின் முகத்தைத் தேடினாள். ம்கூம்; தட்டுப் பட வில்லை. நெஞ்சில் இலேசாய் ஒரு திகில் பரவியது. பதட்டப் படக் கூடாது. பக்கத்தில் கழிவறைக்கு அல்லது டீ குடிக்க என்று எங்காவது போயிருப்பான். அல்லது விமானம் வந்து விட்டது தெரியாமலிருக்கலாம். இதோ இன்னும் கொஞ்ச நேரத்தில் எங்கிருந்தாவது ஓடிவந்து கன்னம் தட்டி "ஸாரிடா செல்லம்; பயந்துட்டியா......" என்றபடி கைபிடிக்கப் போகிறான் என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்டாள்..
ஒரு இளம்பெண் தள்ளு வண்டி நிறைய அட்டைப் பெட்டிகளும், பைகளும், சூட்கேஸ்களுமாய் தளும்பத் தளும்ப வைத்துத் தள்ளிக் கொண்டு வந்தாள். அவளைப் பார்த்ததும் ஒருவன் ஓடி வர - அவளுடைய புருஷனாகத்தான் இருக்கும் - இருவரும் அக்கம் பக்கச் சூழல் மறந்து இறுக அணைத்துக் கொள்ள அந்தப் பெண் அவன் தோளில் முகம் பதித்து குமுறி அழத் தொடங்கி விட்டாள். கனகவள்ளிக்கு சிலிர்ப்பாக இருந்தது. எத்தனை வருஷப் பிரிவோ? எத்தனை போராட்டங்களுக்கப்புறம் சந்திக்கிறார்களோ?
கதிர்வேலுக்கு இப்படி எல்லாம் ஆவேஷமாய் ஆரவாரமாய்த் தன் அன்பையும் காதலையும் வெளிப்படுத்தத் தெரியாது. அதிக பட்சம் கைகளைப் பிடித்துக் கொள்வான். அல்லது பட்டும் படாமல் கன்னத்தில் இலேசாய்த் தட்டுவான். அவ்வளவு தான். ஆனால் அந்த இலேசான ஸ்பரிசத்திலேயே தன் பிரிவின் வேதனைகளையும் பிரியங்களையும் அழுத்தமாய் வெளிப்படுத்தி விடுவான். இப்போது எங்கு போய்த் தொலைந்தானென்று தெரியவில்லையே! டேய், குல்ஸ் தடியா எங்கேடா இருக்கே? என்று விமான நிலையம் அதிரக் கத்த வேண்டும் போலிருந்தது அவளுக்கு. கதிர்வேல் கனகவள்ளியை விட ஒருசில அங்குலங்கள் உயரம் கம்மியாகத் தானிருப்பான். அதனால் அவள் அவனை எப்போதும் குல்ஸ் தடியா என்றுதான் செல்லமாக அழைப்பாள்.
இராத்திரி எல்லாம் பொட்டுத் தூக்கமில்லை. முதல் விமானப் பயணம் மேற்கொள்ளப் போகிற கனவுகளிலும் சிலிர்ப்புகளிலும் அதீதமான பயத்திலும் எங்கே அலாரம் அடிக்காமல் போய் அசந்து தூங்கி விடுவோமோ என்கிற முன்னெச்சரிக்கை உணர்விலும் தூக்கமே வரவில்லை. நீண்ட தொலைவு பஸ் பிரயாணங்களிலேயே வாந்தி எடுத்து விடுகிற உடம்புவாகு அவளுக்கு. இராட்டினத்தில் கூட ஏறமாட்டாள். சின்ன வயசில் ஊர்த் திருவிழாவில் ஒருமுறை எல்லோரும் வற்புறுத்தி ஏற்றி விட ஒரே சுற்றில் கிறுகிறென்று வந்து குய்யோ முறையோ என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்து இறங்கிக் கொண்டாள். துணையற்ற விமானப் பயணம் என்ன மாதிரியான அனுபவங்களை எல்லாம் அளிக்கப் போகிறதோ என்ற அச்சம் வேறு அவளை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது. அதை விட இன்னொரு முக்கியமான காரணமும் அவளைத் தூங்க விடாமல் இம்சித்தது. அன்றைய இரவு வீட்டில் அவள், புருஷன் தவிர்த்த இன்னொரு ஆணுடன் ஒரே அறையில் தூங்க நேர்ந்தது.
விமானம் கிளம்புவதற்கு குறைந்தது மூன்று மணி நேரத்திற்கு முன்னதாகவே விமான நிலையத்திற்குப் போய்விடுவது நல்லது என்று அவள் அறிவுறுத்தப் பட்டிருந்தாள். காலை ஏழு மணி விமானத்தைப் பிடிப்பதற்கு அதிகாலை மூன்று மணிக்கெல்லம் வீட்டிலிருந்து கிளம்பினால் தான் சரியாக இருக்கும். ஆனால் அவ்வளவு அதிகாலையில் கால் டாக்ஸியில் எப்படி தனியாகப் பயணிப்பது என்று பயமாக இருந்தது. அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் உதவி கேட்டபோது ஏதேதோ காரணங்கள் சொல்லி தட்டிக் கழித்து விட்டார்கள். யாரும் இவளுடன் அதிகாலையில் விமான நிலையம் வரை துணைக்கு வர சம்மதிக்கவில்லை. அவரவர்களுக்கு அவரவர் வேலை முக்கியம்!
வேறு வழியில்லாமல் வேலை செய்யுமிடத்தில் உதவி கேட்ட போது அங்கும் பெண்கள் உடன்வர மறுத்து விட்டார்கள். அந்த அர்த்த ராத்திரியில் எத்தனை பெண்கள் போனாலும் தனித் தனி தான் என்றும் அப்படியே கடத்திக் கொண்டுபோய் மும்பாய்க்கு விற்றுவிட்டால் என்ன செய்ய முடியும் என்பதும் அவர்களின் முன்னெச்சரிக்கைக் கேள்வி. கடைசியில் அலுவலக உதவியாளன் கோபாலை உடன் அழைத்துப் போகச் சொன்னார்கள். அவனும் சம்மதித்தான். ஆனால் அவன் தங்கி இருந்தது வேளச்சேரியிலிருந்து வெகு தூரம் தாண்டி இப்போது தான் வளர்ந்துவரும் ஒரு புதிய குடியிருப்பில். அவ்வளவு அதிகாலையில் கனகவள்ளி தங்கியிருக்கும் ஆவடிக்கு எப்படி வந்து சேர்ந்து இவளுடன் கால் டாக்ஸியில் துணைக்குப் பயணிப்பது? அவன் மோட்டார் வாகன மெல்லாம் வைத்திருக்கவில்லை. அதனால் இரவே அவனை வீட்டிற்கு வரச் சொல்லிவிட்டாள்.
அவள் தங்கியிருந்தது ஈரறைகள் மட்டுமே கொண்ட லைன் வீடொன்றில். அதில் ஒரு மிகச் சின்ன சமையலறை - இரண்டு பேர் நிற்கலாம்; அவ்வளவே அதன் விஸ்தீரணம் - மற்றும் அதைவிடக் கொஞ்சம் பெரிய இன்னொரு அறை உண்ண, உறங்க, வாழ, படிக்க எல்லாவற்றிற்கும் பொதுவானது. அங்கிருந்த எல்லா வீடுகளுமே அதே அளவு தான் என்பதாலும் கோபாலை ஒரு ராத்திரி மட்டும் உங்களுடன் தங்க வைத்துக் கொள்ளுங்களென்று யாரிடமும் கேட்க முடியாதென்பதாலும் அவள் அந்த பொது அறையின் ஒரு மூலையில் சுருண்டு கொண்டு அவனை இன்னொரு மூலையில் படுத்துறங்க ஏற்பாடு செய்தாள். அவன் எந்த சலனமும் இல்லாமல் நிம்மதியாக உறங்கி விட்டான். இவளுக்குத் தான் உறக்கமே பிடிக்கவில்லை. இப்படி யாருமற்ற அனாதை மாதிரி இந்த பட்டணத்தில் வந்து தனியாக அவஸ்தை பட நேர்ந்து விட்டதை நினைக்கும் போது அவளுக்கு பொங்கி பொங்கி அழுகை வந்தது. காதலிப்பதும் காதலித்தவனையே மணந்து கொள்வதும் அத்தனை பெரிய குற்றமா? குற்றம் தானென்று மீசையை முறுக்கினார் கனகவள்ளியின் அய்யா.
அவளுக்கு சொந்த ஊர் வேடசதூருக்குப் பக்கத்திலிருக்கும் அழகாபுரி என்னும் அழகான கிராமம். அங்கு ஹோட்டல் வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருந்தது இவர்களின் குடும்பம். ஒரு பெரு வெள்ளத்தில் அழகாபுரி அணைக்கட்டு உடைந்தபோது அதன் மராமத்துப் பணிகளுக்காக டெக்னிக்கல் உதவியாளனாக தினக்கூலி அடிப்படையில் வேலைக்கு வந்த கதிர்வேல் கீற்றுக் கொட்டகை வேய்ந்த இவர்களின் ஹோட்டல் மாடி அறையில் தங்கியபடி - அவனுடன் இன்னும் இரண்டு பேரும் தங்கி இருந்தனர் - ஹோட்டலில் மாதாந்திரக் கணக்கு வைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
கனகவள்ளி அப்போது ப்ளஸ் டூ பாஸ் பண்ணி, "பொட்டக் கழுத படிச்சது போதும்...." என்று சொல்லி அவள் அய்யா படிப்பை நிறுத்திவிட ஆயத்தங்கள் செய்ய, அவளோ மேற்கொண்டு படித்தே தீருவேன் என்று சாப்பிடாமெலெல்லாம் சத்தியாக்கிரகம் பண்ணிக் கொண்டிருந்தாள். கதிர்வேல் அவர்களுக்குள் புகுந்து அவளின் அய்யாவை சமாதானப் படுத்தி அவள் படிப்பைத் தொடர அனுமதி வாங்கித் தந்தான்.
“படிச்சபுள்ள சொல்லுது; ஏதாவது விஷயமிருக்கும்….” என்று அவளின் அய்யாவும் கொஞ்சம் இறங்கி வந்து "எப்ப மாப்பிள்ளை திகைஞ்சாலும் படிப்ப நிறுத்திக் கல்யாணம் கட்டிக் குடுத்துருவேன்...அப்ப வந்து முரண்டு பிடிக்கக் கூடாது, சொல்லீட்டேன்......" என்ற கண்டிஷனோடு அவளை வேடசந்தூர் கல்லூரிக்கு அனுப்பி படிக்க வைத்தார். அதற்குப் பின் கதிர்வேலின் மீது கனகவள்ளிக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு அதுவே வெகு சீக்கிரம் காதலாக மாறியது.
கதிர்வேலுக்கு சென்னையில் வேலை கிடைத்து, அவன் அழகாபுரியிலிருந்து வெளியேறிப் போன பின்பும் இருவருக்கு மிடையிலிருந்த காதல் தொடர்ந்தது ஒரு ஆச்சர்யமென்றால் அவள் வேடசந்தூர் கல்லூரியில் இளநிலைப் பட்டப்படிப்பை முடிக்கும் வரை அய்யாவின் தீவிர தேடலிலும் அவளுக்கு சரியான மாப்பிள்ளை தகையாதது இன்னொரு ஆச்சர்யம். அப்புறம் தான் கனகவள்ளி தயங்கித் தயங்கி பயந்து கொண்டே கதிர்வேல் மேல் தனக்கிருக்கும் பிரியத்தை அய்யாவிடம் வெளிப்படுத்தினாள்.
'படித்த புள்ள; புகை, போதை என்று எந்த கெட்ட பழக்கமும் இல்லாத ஒழுக்கமான புள்ளை' என்று கதிர்வேல் மீது அவருக்கு எப்போதுமே நல்ல அபிப்ராயமிருந்தது. அதனால் அவர் கனகவள்ளியின் மீது எந்தவித கோபமுமின்றி "அட அசடே! இத முதல்லயே சொல்லியிருக்கக் கூடாது? அந்த புள்ளய கட்டிவக்கிறதுக்கு யாருக்குத் தான் கசக்கும்!" என்றபடி அவனுடைய குடும்பத்தைப் பற்றி அறிந்து வரும் ஆவலில் கதிர்வேலின் கிராமத்திற்குக் கிளம்பிப் போனார்.
உற்சாகமாகக் கிளம்பிப் போன அய்யா ஊசி குத்தப் பட்ட பலூனாக சோர்ந்து போய் அதிர்ச்சியுடன் திரும்பி வந்தார். அம்மா தான் அய்யாவிடம் கேட்டாள்- "போன காரியம் என்னாச்சு; காயா, பழமா?" என்று. அய்யா அம்மாவை அடிக்கப் போய்விட்டார். " எதையும் முன்னப் பின்ன விசாரிக்காம ஒய்யாரமா நம்ம வீட்டுலயே அவன குடி வச்சதே பெரிய குத்தம்; இன்னம் பொண்ணையும் தூக்கிக் குடுத்தமுன்னா நம்ம சாதிசனம் நம்மள அப்படியே மெச்சும்....." என்றார்.
"இப்படிப் பூடகமாப் பேசுனா என்னத்தப் புரியுது.....உடைச்சுச் சொல்லுங்க ...." - அம்மா.
"அவனோட சம்பந்தமெல்லாம் சரியா வராது சொல்லீட்டேன். நான் அவனோட ஊருக்குப் போயி அவன் அப்பன் பேரச் சொல்லி விசாரிச்சுத் தேடிப்போனப்ப அவன் அப்பன் என்ன பண்ணிக்கிட்டிருந்தான் தெரியுமாடி..... செத்த மாட்ட அறுத்துக் கூறு போட்டுக்கிட்டிருந்தான்...நாத்தமெடுத்த பயலுக, அதைத் திம்பாய்ங்களாம்....இன்னும் புரியலயா? நீ ஒரு கூமுட்டை யாச்சே....சக்கிலியச் சாதிடி அவன்....
நம்ம நாட்டுப் புறத்தில யெல்லாம் செருப்புத் தைக்கிறது, எளவு சொல்லப் போறதுன்னு இருப்பான்கள்ல, அந்தக் கூட்டம்டி.... அந்த வீட்டுக்கா உன் பொண்ண குடுக்கப்போற? அந்தப் பய நம்ம சாதியா இருக்கணும்னு நான் எதிர்பார்த்துப் போகல தான்; குறைஞ்சது நம்ம சாதிக்குச் சமமா இருக்குற சாதியாவது இருப்பான்னு நெனெச்சுருந்தேன்; அவனோட பழக்கம், பவிசு எல்லாம் அப்படித் தான் இருந்துச்சு… இந்த பாழாப் போன படிப்பும் அவன் வெளுத்த தோலும் என்னை ஏமாத்திப் போட்டுருச்சு…… உன் பொண்ணுக்கு புரியற மாதிரி எடுத்துச் சொல்லு. அவ்வளவு தான்....."
“கொஞ்சம் நாகரிகக் கொறைவா இருந்தாலும் பரவாயில்ல; இனிமே சாதி என்னன்னு கேட்காம எந்தப் பயலையும் ஹோட்டல் மாடியில் தங்க உடுறதில்ல……” என்றும் அன்றைக்கே தீர்மானித்துக் கொண்டார் அவர். கனகவள்ளிக்கு கதிர்வேலின் சாதி பற்றி ஏற்கெனவே தெரியு மென்றும் அவள் அதை அய்யாவிடம் மறைத்து விட்டதையும் அவர் அறிந்தபோது ரௌத்திரமாகி விட்டார். அப்பாவுக்கும் மகளுக்குமான போராட்டத்தில் அவள் தனக்கு காதல் தான் பெருசு என்று வீட்டைவிட்டுக் கிளம்பிய நிமிஷத்திலிருந்து அவர்களுக்குள்ளான உறவு முற்றிலுமாய் முறிந்தது. அதற்கப்புறம் அவள் அழகாபுரியில் தன் வீட்டுப் படியேற அனுமதிக்கப் படவில்லை. ஓரிரு வருஷங்களில் எல்லாம் சரியாகுமென்ற நம்பிக்கை கூட இற்று விழுந்து வெகு காலமாகி விட்டது.
கதிர்வேலின் ஊரில் வேறுமாதிரியான பிரச்னை வந்தது. கதிர்வேல் வீட்டுக்காரர்களுக்கு அவளை ஏற்றுக் கொள்வதில் எந்தப் பிரச்னையுமில்லை. ஆனால் அவனின் ஊர்க்காரர்கள் கொந்தளித்துப் போனார்கள். "ஒரு குடியானவ வீட்டுப்புள்ள இழிந்த சாதி வீட்டுல வந்து வாழ்ந்தா எங்க ஊர்க் கட்டுக் கோப்புல்ல குலைஞ்சு போயிடும்...அப்புறம் எங்க வீடுகளுக்குமில்ல வந்து பொண்ணு கேப்பாய்ங்க ஈன சாதிப் பயலுவ....." னு ஆளாளுக்குக் குதித்தார்கள். ஊர்ப் பெரியவர்கள் என்று அறியப்பட்ட சிலர் இவளிடமும் வந்து முதலில் நைச்சியமாய்ப் பேசிப் பார்த்தார்கள். “வாம்மா, உன்னை உன் குடும்பத்தோட கொண்டு போய் சேர்த்து விட்டுறோம்…” என்று.
இவள் அதற்கு சம்மதிக்காமல் போகவும் "உனக்கு ஓடிப்போறதுக்கு நம்ம சாதியில ஆம்பளையே இல்லையா?" என்று அசிங்கம் அசிங்கமாய்ப் பேசினார்கள். அதையும் அவள் சகித்துக் கொண்டு அமைதி காக்கவே பஞ்சாயத்தென்று கூட்டி, அபராதம் விதித்து, ஊரை விட்டு ஒதுக்கிவைத்து....... என்று பலவாறு கொடுமைப் படுத்தியதில் கதிர்வேலின் அப்பா அம்மா இருவருமே மன உளைச்சலில் மிகச் சீக்கிரமே செத்துப் போனார்கள்.
முதல் விமானப் பயணம் தர வேண்டிய பரவச அனுபவம் கனகவள்ளிக்கு வாய்க்கவில்லை. ஆனால் அது இத்தனை மோசமானமான அனுபவமாக இருக்கு மென்று அவள் கனவிலும் நினைத்திருக்கவில்லை. விமானத்தில் சரியான சாப்பாடு கூட தரவில்லை. விமானத்தில் இவ்வளவு கம்மியாய் அதுவும் வாய்க்கு ருசியில்லாத உணவுதான் தருவார்கள் என்று முன்பே தெரிந்திருந்தால் வீட்டிலிருந்து வரும் போதே புளியோ தரையோ அல்லது எலுமிச்சை சாதமோ கட்டிக் கொண்டு வந்திருப்பாள். விமானத்தில் மது மட்டும் தாராளமாய்ப் புழங்கியது. எல்லோரும் கிளாஸ் கிளாஸாய் வாங்கிக் குடித்தார்கள். ஆனால் நல்ல சாப்பாடு தராததைப் பற்றித் தான் யாரும் அலட்டிக் கொள்ளவே யில்லை.
விமானம் வேறு, டவுன் பஸ் மாதிரி உலகத்தையே சுற்றிக் கொண்டு வந்தது. காலையில் போர்டிங் பாஸ் போடுகிற இடத்திலேயே சொல்லிவிட்டான் - விமானம் காலதாமதமாகத் தான் கிளம்பப் போகிறது; நீங்கள் கனெக்ட்டிங் ஃபிளைட்டை விட்டுவிடுவீர்கள் என்று. இது முன்னமேயே தெரிந்திருந்தால் இப்படி அவசர அவசரமாய் அதிகாலையே கிளம்பி வந்திருக்க வேண்டியதில்லை. கோபாலையும் வீட்டிற்கு இரவே வரச்சொல்லி கஷ்டப்படுத்தி இருக்க வேண்டியிருந்திருக்காது. விமானம் சாவகாசமாய் இரண்டு மணிநேரம் தாமதமாய்க் கிளம்பி அப்புறமும் பாஸஞ்சர் இரயில் மாதிரிப் பயணித்து, மஸ்கட்டில் தரை இறங்கி சிலமணி நேரம் காத்திருந்து - தனியார் பஸ் மாதிரி பயணிகளை கூவிக்கூவி அழைப்பார்கள் போலிருக்கிறது - பஹ்ரைனுக்கு வந்தபோது கனெக்ட்டிங் ஃபிளைட் கிளம்பிப் போய் விட்டிருந்தது.
அவள் மட்டுமல்லாமல் அந்த விமானத்தில் பயணித்தவர்கள் அத்தனை பேரும் அனாதைகள் மாதிரி பஹ்ரைனில் அலைய நேர்ந்தது. அடுத்த ஃபிளைட் பற்றிய முறையான தகவல் இல்லை. நண்பகல் வேளை கடந்தும் ஒருவாய் உணவுக்கும் அந்த விமானக் கம்பெனி வழி செய்யவில்லை. குழந்தைகள் எல்லாம் கதறத் தொடங்கிய பின்பு பயணிகள் சிலர் விமான சிப்பந்திகளுடன் சண்டை போட, போனால் போகிற தென்று மாலை மூன்று மணிக்குமேல் விமான நிலைய உணவகத்தில் சாப்பிடுவதற்கு ஏற்பாடு செய்தார்கள். அப்படி ஒரு மோசமான சாப்பாட்டை அவள் வாழ்க்கையில் அதுவரை சாப்பிட்டதே இல்லை. பசியை விடவும் கொடுமையாய் இருந்தது அந்த உணவு. உப்பு, உறைப்பு எதுவுமில்லாமல் புழுவை மெல்வது மாதிரி வழுவழுவென்று.......ஓங்கரிப்பு வந்து எழுந்து ஓடிவந்து விட்டாள். பசியோடவே அடுத்த கனெக்டிங் ஃபிளைட்டில் சாயங்காலம் தான் கிளம்ப முடிந்தது.
பஹ்ரைனிலிருக்கும் போது விமான தாமதம் பற்றி கதிர்வேலுக்கு தகவல் கொடுத்து விடலாமென்று நினைத்து யார் யாரிட மெல்லாமோ விசாரித்து டெலிபோன் கார்டு ஒன்று வாங்கி அவனுடைய கைத் தொலைபேசிக்கு பலமுறை தொடர்பு கொண்டபோதும் அரபியிலும் ஆங்கிலத்திலும் பதிவு செய்யப்பட்ட பெண்குரலே - நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறார்; அல்லது போன் சுவிட்ச் ஆஃப் செய்யப் பட்டுள்ளது - ஒலித்தது. அதற்கு மேல் என்ன செய்வதென்று தெரியாமல் அவனே விமான தாமதம் பற்றி விமான நிலையத்திலிருந்து அறிந்து கொள்வான் என்று பேசாமலிருந்து விட்டாள். மத்தியானம் துபாய் வரவேண்டிய விமானம் ஆடி அசைந்து ஒரு வழியாய் இரவு ஏழரை மணிக்கு துபாய் விமான நிலையத்தில் நிதானமாக தரை இறங்கியது.
கதிர்வேலின் மேல் கோபம் கோபமாய் வந்தது கனகவள்ளிக்கு. அவனை சென்னைக்கு வந்து தன்னை கையோடு துபாய்க்கு அழைத்துப் போகச் சொல்லி எவ்வளவோ மன்றாடினாள். அவனோ " லீவு கிடைக்கவில்லை; நான் வந்து போவதற்கான அனாவசிய வீண் செலவுகள்....." என்று ஆயிரம் சமாதானங்கள் சொல்லி விசாவும் டிக்கெட்டும் அனுப்பி வைத்து, வந்து சேர்வதற்கான வழிமுறைகளை விளக்கமாக எழுதி "பச்சபுள்ளைங்கெல்லாம் விமானத்துல தனியா வருதுங்க; நீ படிச்ச பொண்ணு, பயப்புடாம வந்து சேரு....விமான நிலையத்துக்கு வந்து புடிச்சுக்கிறேன்....." என்று சொல்லி தனியாகவே கிளம்பி வரச் செய்து விட்டான்.
“துபாய்க்கு நேரடியாய் எத்தனையோ விமானங்களிருக்க, இப்படி சுற்றிக் கொண்டு வரும் விமானத்தில் ஏன் டிக்கெட் எடுத்து அனுப்பினாய்…” என்று போனில் கேட்ட போது, இந்த விமானக் கம்பெனி மட்டும் தான் அதிக செலவில்லாமல் விஸிட் விசாவுக்கு ஏற்பாடு செய்கிறார்கள் என்றும் அதற்கு அவர்கள் விதிக்கும் ஒரே நிபந்தனை அவர்களின் விமானத்தில் பயணிக்க வேண்டும்….என்றும் சொல்லி விட்டான். வந்து சேர்ந்தவளை உடனே வந்து அழைத்துப் போகாமல் இவன் எங்கு போய்த் தொலைந்தான் என்று அவளுக்கு எரிச்சலாக இருந்தது.
துபாயில் நேரம் இரவு பத்து மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. விமான நிலையம் ஆட்களின் நடமாட்டத்தில் அப்போதும் பரபரப்பாகவே இருந்தது. கதிர்வேல் தன்னை அழைத்துப்போக இன்னும் வராமலிருப்பது கனகவள்ளிக்கு ஆச்சர்யமாகவும் அழுகையாகவும் இருந்தது. அவன் இப்படி எல்லாம் பொறுப்பில்லாமல் நடந்து கொள்ள மாட்டான். அவனுக்கு என்னவோ நடந்திருக்கிறது. இப்போது அவனை எப்படி தொடர்பு கொள்வது? பக்கத்திலிருப்பவர்களிடம் கைத் தொலைபேசி இரவல் வாங்கி பலமுறை அவனைத் தொடர்பு கொள்ள முயன்றும் அவனை போனில் பிடிக்க முடியவில்லை. எப்போது தொடர்பு கொண்டாலும் பதிவு செய்யப்பட்ட அந்த பெண் குரலே ஒலித்தது. என்ன செய்வதென்றே தெரியவில்லை.
இவ்வளவு பதட்டத்திலும் கொஞ்ச நேரமாகவே கனகவள்ளி கவனித்துக் கொண்டிருந்தாள். அந்தச் சிறுமிக்கு அதிகபட்சம் பதினைந்து வயதிருக்கும். நிறைய அழுத சுவடுகளுடனும் அழுக்கேறிய உடைகளுடனும் ஏதோ பிதற்றிக் கொண்டு அங்கும் இங்குமாய் அலைந்து கொண்டிருந்தாள். விமான நிலைய சூழ்நிலைக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாததாக இருந்தது அவளின் தோற்றம். ஒவ்வொருவரிடமும் அவள் போய் ஏதோ கேட்க யாரும் அவளைச் சட்டை செய்வதாகத் தெரியவில்லை. சிலர் முகஞ்சுழிப்பது மாதிரியும் இருந்தது. காவலர்கள் யாரும் அருகில் இல்லாததால் தான் அவள் இந்த கோலத்தில் இவ்வளவு சுதந்திரமாக நடமாட முடிகிறது என்று கனகவள்ளி யூகித்தாள்.
அவளுக்கு அருகில் போய் அவள் என்ன தான் முனகுகிறாள் என்று காது கொடுத்துக் கேட்ட போது அந்தச் சிறுமி பேசுவது தமிழென்று புரிந்தது. இன்னும் கூர்மையாய்க் கேட்டபோது "ஐயா யாராச்சும் என்னை மதுரை போற ஏரோப்பிளேன்ல ஏத்திவிடுங்களேன்......" என்று அந்தச் சிறுமி முனகுவதை அறிந்ததும் கனகவள்ளிக்கு சிலீரென்றது. என்ன கொடுமை இது! இவளும் தன்னைப் போலவே அழைத்துப் போகிறவர்கள் வராததால் அலை மோதுகிறாளா?
அவளைத் தோள் தொட்டணைத்து "பாப்பா உன் பேரென்னம்மா?" என்று கனகவள்ளி கேட்கவும் அந்த சிறுமியின் முகத்தில் உண்டான மலர்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை. "அக்கா..... நம்மூராக்கா நீங்க...." என்றபடிக் கதறி அழத் தொடங்கி விட்டாள். அவளைத் தோளில் சாய்த்துக் கொண்டு "பயப்படாதம்மா நான் இருக்கிறேன்ல...." என்று ஆறுதலாய் முதுகில் தட்டிக் கொடுத்தாள்.
அந்தச் சிறுமி திக்கித்திணறி கோர்வையில்லாமல் பேசியவற்றிலிருந்து கனகவள்ளி புரிந்து கொண்டது: சிறுமியின் பெயர் சுந்தரத்தாய். மதுரைக்குப் பக்கத்தில் மேலமங்களம் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவள். ஐந்தாவது வரைக்கும் படித்திருக்கிறாள். அப்பா அம்மா இரண்டு பேரும் விவசாயக் கூலிகள். மாதம் மூவாயிரம் ரூபாய் சம்பளம் பேசி பத்தாயிரம் ரூபாய் முன்பணம் கொடுக்கப்பட்டு வீட்டுவேலைகள் செய்வதற்கென்று துபாய்க்கு அழைத்து வரப் பட்டிருக்கிறாள். வேலை செய்த இடத்தில் எஜமானர்களின் பாலியல் தொந்தரவு பொறுக்க மாட்டாமல் அங்கிருந்து எப்படியோ தப்பித்து ஒரு டாக்ஸி டிரைவரின் உதவியால் விமான நிலையத்திற்கு கொண்டு வந்து விடப்பட்டிருக்கிறாள்.
"அக்கா...கை விட்றாதீங்கக்கா.....காப்பாத்துங்கக்கா....." என்று அந்தச் சிறுமி அழுதது ஈரக்குலையை அறுப்பதாய் இருந்தது. கனகவள்ளி மனசுக்குள் சிரித்துக் கொண்டாள். அவளே இங்கு நிராதரவாய்த் தான் நிற்கிறாள். இதில் இன்னொரு சுமை. ஆனாலும் அந்தச் சிறுமிக்கு எப்படியாவது உதவ வேண்டு மென்று மனசுக்குள் தோன்றியது. ஆனால் எப்படி என்று தான் எந்த வழியும் புலப்பட வில்லை.கதிர்வேல் வந்ததும் அவனிடம் சொன்னால் அவன் ஏதாவது வழிகாட்டுவான் என்று நினைத்துக் கொண்டாள். ஒருவேளை இதென்ன வீண் தொந்தரவு என்று திட்டுவானோ என்றும் பயமாக இருந்தது.
யோசித்துக் கொண்டிருக்கும் போதே, இரண்டு பேர் அவசரமாய் வந்து அந்த சிறுமியை ஏதோ திட்டியபடி இழுத்துக் கொண்டு போனார்கள். அவர்கள் பேசிய மொழி துளியும் கனகவள்ளிக்குப் புரியவில்லை. அவர்களைத் தடுக்கவும் முடியவில்லை. அப்போது அங்கு ஓடி வந்த ஒரு போலிஸ்காரர், அவர்களிடம் ஏதோ கேட்பதும் அவர்கள் அவருக்கு பதில் சொல்வதும் தெரிந்தது. அப்புறம் போலிஸ்காரர் விலகிக் கொள்ள, அவர்கள் சிறுமியை இழுத்துக் கொண்டு விமான நிலையத்தை விட்டு வெளியேறினார்கள். கனகவள்ளிக்கு அந்த அறியாச் சிறுமியின் மீது பரிதாபமும் இந்த நிலையில் ஏதும் செய்ய முடியாத தன் கையாலாகாத் தனத்தின் மீது கோபமும் ஏற்பட்டது.
நேரம் கடந்து கொண்டிருந்தது. கதிர்வேல் அங்கு வருவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. அவளுக்கு பெரும் மலைப்பாகவும் குழப்பமாகவும் இருந்தது. போலீஸை அணுகி உதவி கேட்கலாமா என்று யோசித்தாள். ஆனால் போலீஸென்றாலே ஒருவித பயமும் பீதியும் அவளின் மனசுக்குள் திரண்டது. இந்தியாவில் போலீஸ் பற்றி அவள் நல்லதாய் எதுவும் கேள்விப் படவில்லை. துபாய் போலீஸ் ஒருவேளை நல்லவர்களாய் பொது மக்களுக்கு உதவுபவர்களாக இருக்கலாமோ என்ற நப்பாசையும் எழுந்தது. ஆனால் அவர்கள் அந்த சிறுமிக்கு உதவ வில்லையே என்ற கேள்வியும் எழுந்து மனசு குழம்பியது..
அந்த சிறுமி தன்னிடம் சொன்னதெல்லாம் தப்பாக இருக்கலாமோ? வேலைக்கு கொண்டு வந்தவர்களை ஏமாற்றி விட்டு ஓடிப் போவதற்காகத் தான் இங்கு வந்திருப்பாளோ? பலவாறு யோசித்துக் கொண்டிருந்தபோது அப்போது அங்கு வந்த ஒரு டாக்ஸியிலிருந்து இறங்கியவன் கையில் 'கனகவள்ளி' என்று எழுதப் பட்டிருந்த காகிதம் இருந்தது. அவனிடம் போய் தான் தான் கனகவள்ளி என்று சொல்லவும் "வணக்கம் மேடம்; கதிர்வேல் ஸார் அனுப்பி உங்களக் கூட்டிட்டு வரச் சொன்னார்....." என்று கை கூப்பினான்.
"அவருக்கு என்னாச்சு.....ஏன் வரல?" பதறியது அவளது குரல்.
"ஒரு சின்னப் பிரச்னை மேடம். ஸார் என்ஜீனியரா இருக்குற சைட்ல ஒரு விபத்து. ஃபவுண்டேஷன் தோண்டுறப்போ ஒரு பழைய சுவர் இடிஞ்சு விழுந்ததுல ரெண்டு லேபர்ஸ் இறந்து போயிட்டாங்க. அதனால ஸார் இப்ப போலீஸ் கஸ்டடியில இருக்கார். அவங்க தான் அவரோட போனையும் பறிமுதல் பண்ணி ஆஃப் பண்ணி வச்சுக்கிட்டாங்க…..பயப்படாதீங்க. ஸார அவங்க ஒண்ணும் பண்ண மாட்டாங்க. அவரே வந்து உங்களக் கூட்டிட்டுப் போகணும்னு எவ்வளவோ முயற்சி பண்ணுனார். ஆனாலும் போலீஸ் அனுமதிக்கல; அதான் என்னை அனுப்பி வச்சார். வாங்க டாக்ஸியில போகும் போது விளக்கமாச் சொல்றேன்.." என்றபடி டாக்ஸியை நோக்கிச் சென்றான். துபாயில் தனக்கு என்னென்ன அனுபவங்கள் காத்திருக்கிறதோ என்ற திகிலுடன் அவனைத் தொடர்ந்தாள் கனகவள்ளி.
(நன்றி: உன்னதம் – அக்டோபர் 2009)

6 comments:

  1. நீங்கள் தமிழ்மணம், தமிழ்வெளி போன்ற திரட்டிகளில் இணைத்தால் உங்கள் வலை பலர் பார்வையில் படும்.

    ReplyDelete
  2. really gud style of story telling,why dont you think of changing the format of the blog. esp when we read story we need some broad reading phase

    bhushana

    ReplyDelete
  3. //கோவி.கண்ணன் said...

    நீங்கள் தமிழ்மணம், தமிழ்வெளி போன்ற திரட்டிகளில் இணைத்தால் உங்கள் வலை பலர் பார்வையில் படும்.
    //

    Thiratti, tamil10, tamilers innum niraya irukkirathu.

    vaazthukkal

    ReplyDelete
  4. as kovi kananan said you could add your blog in Tamilmanam, Tamilish and others.

    This dubai story looks very long to me, so I have just read only the 1st 4 senetcnes. sorry for that please. There are 10000 of stories about Dubai & singapore Tamilan life so its little boring to me, sorry please.

    ReplyDelete
  5. என்னுடைய பதிவுப் பக்கத்தைப் பொருட்படுத்தி பார்த்ததற்கும் கருத்துரைத்ததற்கும் நண்பர்கள் கோவி கண்ணன், Bhushana,சபரிநாதன் அர்த்தநாரி மற்றும் குப்பன் யாஷூ நால்வருக்கும் நன்றிகள்!

    கோவிக் கண்ணன் மற்றும் சபரிநாதனுக்கு: உங்கள் ஆலோசனையை ஏற்கெனவே செயல்படுத்தி பார்த்திருக்கிறேன். தமிழ்வெளியில் என்னுடைய பதிவுப்பக்கம் அவ்வப்போது மின்னத்தான் செய்கிறது. யாரும் பொருட் படுத்தியதாகத் தான் தெரியவில்லை.என்னுடைய நீண்ட கதைகள் குப்பன் சொல்வது போல் அலுப்பூட்டுவதாக இருக்கலாம். தழிழ்மணத்தில் எவ்வளவோ முயன்றும் சேர்ப்பிக்க முடியவில்லை. மற்ற திரட்டிகளை இன்னும் முயற்சிக்கவில்லை.

    Bhushanaக்கு: உங்களின் கருத்துக்களுக்கும் பாராட்டுகளுக்க்ம் அனேக நன்றிகள்!

    குப்பன் யாஷூக்கு: ஒரு கதையின் முதல் நான்கு வரிகளை மட்டும் வாசித்து விட்டு கருத்துரைக்க முனைவது அராஜகமில்லையா? கதையை வாசிக்காமலேயே இது துபாய் மற்றும் சிங்கப்பூரில் வாழ்பவர்களின் வாழ்க்கையைப் பற்றிப் பேசுவதாக எப்படி நீங்களாகவே புனைந்து கொள்கிறீர்கள்! உங்களுக்கு கதை படிக்கிற மனநிலை இல்லை என்றால் கடந்து சென்று விடுங்கள்; அவ்வளவு தான்!சரி முதல் கதை தான் அலுப்பூட்டுகிற தென்றால் மற்ற கவிதைகளையோ கதைகளையோ வாசித்துப் பார்த்திருக்கலாமே!பரவாயில்லை; வந்ததற்கு நாலுவரி வாசித்ததற்கு நன்றிகள்!

    அன்புடன்
    சோ.சுப்புராஜ்

    ReplyDelete
  6. கோவியார் சொன்னதேதான். தமிழ்மணத்தில் சேர்த்துருங்க.

    அப்புறம் இன்னொன்னு..... கோவிச்சுக்கக் கூடாது.

    எழுதுவதோடு நம்ம கடமை முடிஞ்சுருது. வாசிக்கணுமுன்னு இருப்பவர்கள் வந்து வாசிப்பாங்க.


    ஃபாண்ட் சைஸைக் கொஞ்சம் பெருசாக்கினால் நல்லது.

    வேர்டு வெரிஃபிகேஷன் இருந்தால் பின்னூட்டுபவர்கள் 'வேற வேலையில்லை'ன்னு போகும் வாய்ப்பு அதிகம்.

    தூக்கிருங்க. மாடரேஷன் வச்சுக்கோங்க.

    ReplyDelete