Friday, November 9, 2012

விகடன் மேடை – கே.பாக்யராஜ் பதில் சொல்லாத என்னுடைய இரண்டு கேள்விகள்


       பொதுவாய் பிரபலங்களிடம் கேள்விகள் கேட்பது எனக்கு எப்போதும் பிடித்தமான விஷயமில்லை. பத்திரிக்கைகளுக்கு கேள்விகள் எழுதிப் போட்டு, அப்படியாவது பத்திரிக்கையில் பெயர் வருமென்று ஆசைப் படுகிற ரகமும் இல்லை நான். ஆனால் விகடன் மேடையில் வாசகர்களின் கேள்விகளுக்கு  கே.பாக்யராஜ் பதில் சொல்கிறார் என்று அறிந்ததும் மனசு பரபரப்பானது. ஏனென்றால் பாக்யராஜ் என்னுடைய பால்யகால ஆதர்சங்களில் மிகவும் பிரதானமானவராய் இருந்தவர்.

பாரதிராஜாவின் இயக்கத்தில் அவர் கதை வசனம் எழுதி கதாநாயகனாக அறிமுகமான புதிய வார்ப்புகள் படம் பார்த்ததுமே நண்பர்களின் வட்டத்தில் நான் அவரின் ரசிகன் என்று பெருமிதமாய் அறிவித்துக் கொண்டேன். எல்லோரும் சிரித்தார்கள். ஏனென்றால் அவர்கள் எல்லாம் சிவாஜியின் ரசிகர்கள். கமலும் ரஜினியும் அப்போது அத்தனை பிரபலமில்லை என்று தான் ஞாபகம்!

அவர்களைப் பொறுத்த வரை சினிமாவில் பிரபலங்களுக்கு ரசிகனாக இருப்பதில் தான் பெருமை. இப்பொழுது தான் முதல் படம் நடித்திருக்கிற பாக்யராஜிற்கு நான் ரசிகன் என்று சொன்னதும் என்னைக் கேலியும் கிண்டலும் பண்ணினார்கள்.            ஆனாலும் அவர்களின் கலாய்ப்புகளையும் மீறி நான் கே.பாக்யராஜின் ரசிகனாகவே தான் தொடர்ந்தேன். எனக்கு அவரை அவ்வளவு பிடிக்கும். முதல் படத்தைப் பார்த்ததுமே வீட்டில் அடம் பிடித்து அப்போது நான் அணிந்திருந்த மூக்குக் கண்ணாடியை அவர் திரைப்படத்தில் அணிந்திருந்தது மாதிரியே அகலமான பெரிய ப்ரேமாக மாற்றிக் கொண்டேன்.

பாக்யராஜ் அவரின் குருநாதர் பாரதிராஜாவிடமிருந்து பிரிந்து வந்து தனியாக படம் இயக்கத் தொடங்கிய பின்பு, பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளி வந்த சில திரைப்படங்கள் சிறப்பாக அமையாத போது நண்பர்களிட மெல்லாம் பாரதிராஜாவின் சிறப்பே பாக்யராஜ் மாதிரியான திரைக்கதை ஆசிரியர்களைத் தன்னுடன் அஸிஸ்டெண்ட்களாக வைத்துக் கொண்டதால் தான்; பாக்யராஜ் இல்லாமல் அவர் இயக்கிய படங்கள் – கல்லுக்குள் ஈரம், நிழல்கள், காதல் ஓவியம் – எதுவும் சோபிக்கவில்லை பார்த்தீர்களா என்று காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு சண்டை போட்டிருக்கிறேன்.

அவரின் நண்பர் B.V.பாலகுருவிற்காக அவர் கதை வசனம் எழுதி வில்லனாகவும் நடித்திருந்த கன்னிப் பருவத்திலே படம் பார்த்து விட்டு என்னுடைய நண்பர்கள் எல்லாம் ”என்னடா உங்க ஆளு அதுக்குள்ள வில்லனாயிட்டாரு; இனிமே அவர் அவ்வளவு தான்….” என்று கலாய்த்தபோது, ”நடிகன் என்றால் இப்படித் தான் எல்லா வேஷங்களிலும் நடிக்க வேண்டும்….” என்று ஏதோ சொல்லி சமாளித்தாலும் எனக்கு கண்ணீர் பொங்கி விட்டது. ஆனாலும் அந்தப் படம் எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது.  

விடியும் வரைக் காத்திரு  (வசனம்: தூயவன்) என்னும் திரைப்படத்திலும் பாக்யராஜ் வில்லத்தனமான ஹீரோ தான்; அவர் தான் வில்லன் என்பதே படத்தின் இடைவேளைக்குக் கொஞ்சம் முன்பு தான் தெரியும். அந்தப் படம் பார்த்ததும் “நடிகன் என்றால் இவர் தான் நடிகன்…” என்று நண்பர்களிடமெல்லாம் உற்சாகமாக வாதிட்டேன்.

அது ஒரு அற்புதமான  த்ரில்லர் மூவி. ஏற்கெனவே அதைப் போல சில திரைப் படங்கள் வந்திருக்கின்றன; வல்லவனுக்கு வல்லவன் என்னும் திரைப்படத்தில் கூட கதாநாயகன் – ஜெமினி கணேசன் - தான் பிரதான வில்லன் என்பது திரைப்படத்தின் இறுதியில் தான் தெரியும், என்றாலும் பாக்யராஜின் இயக்கத்தில் வெளி வந்த படங்களில் விடியும் வரைக் காத்திருக்கு எப்போதுமே சிறப்பான ஒரு இடம் இருக்கும். அதற்கு அப்புறமும் அந்த மாதிரியான வேறு சில திரைப்படங்களும் – சட்டென்று ஞாபகம் வருவது; நூறாவது நாள் – வந்திருக்கின்றன.

அவரின் சினிமாத் தலைப்புகள் எல்லாம் ரொம்பவும் கவித்துவமாக இருக்கும் – சுவர் இல்லாத சித்திரங்கள், ஒரு கை ஓசை, விடியும் வரை காத்திரு, மௌன கீதங்கள், அந்த 7 நாட்கள், தூறல் நின்னு போச்சு என்று தொடர்ந்து …. தாவணிக் கனவுகள் வரை அவர் தன்னுடைய சினிமாக்களுக்கு கவித்துவமான தலைப்புகளையே வைத்துக் கொண்டிருந்தார். தாவணிக் கனவுகள் வியாபார ரீதியாக படு தோல்வி அடைந்ததும், கமர்சியல் சினிமா என்னும் சகதிக்குள் முழுவதுமாய் இறங்கி, சின்னவீடு என்றொரு கீழ்த்தரமான திரைப் படத்தை இயக்கினார். அதற்கப்புறம் அவரிடம் கவித்துவமான தலைப்புகளும் காணாமல் போய்விட்டன என்று தான் நினைக்கிறேன்.

நான் அவரின் மௌன கீதங்கள் என்னும் திரைப்படத்திலிருந்தே மனசளவில் அவரிடமிருந்து விலகத் தொடங்கி விட்டேன். அதன் திரைக்கதை மிகவும் நேர்த்தியாக அமைக்கப் பட்டிருக்கும்… அது திரைப்படம் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போதே குமுதத்தில் தொடராகவும் அவராலேயே எழுதப் பட்டது. வாரம் தவறாமல் வாசித்து ரசித்திருக்கிறேன்.  ஆனால் அந்தக் கதையை என்னால் ரசிக்க முடியவில்லை.

ஆணாதிக்கத்தின் சாயல் அவரின் சினிமாக்களில் அப்பட்டமாய் வெளிப்பட்டது அந்தப் படத்திலிருந்து தான் என்று நினைக்கிறேன். ஒருவேளை அதற்கு முன்பு வரை அவரின் திரைப்படங்களை விடலைப் பையனாக அவரின் தீவிர ரசிகன் என்ற உணர்வில் பார்த்திருந்ததால் மௌனகீதங்களுக்கு முந்தைய திரைப்படங்களின் குறைபாடுகள் எனக்கு உறைக்க வில்லையோ என்னவோ.

 ஆண்கள் அவர்களை அறியாமல் சபலத்தில் வேறொரு பெண்ணிடம் உறவு வைத்துக் கொண்டு விட்டால் அதைப் பெண்கள் அவ்வளவு பெரிது படுத்தக் கூடாது என்னும் தொனியில் எடுக்கப் பட்டிருந்தது அந்தத் திரைப்படம். கதாநாயகன் அவனை அறியாமல் வேறொரு பெண்ணிடம் தவறு செய்து விட்டான் என்றும் சமூகத்தில் இதெல்லாம் சகஸம் என்றும் ஸ்தாபிப்பதற்காக, மனைவி இறந்ததும் உடனே மறுமணம் செய்யும் ஆணையும், மனைவி பிரசவத்திற்கு போயிருந்த சமயத்தில் மச்சினிச்சியையும் மடக்கிப் போட்டுக் கொண்ட ஆணையும் காட்டி நியாயப் படுத்தி இருப்பார்.

சரி அதே மாதிரி சந்தர்ப்பவசத்தால் ஒரு பெண்ணும் விரும்பி வேறொரு ஆணுடன் உறவு வைத்துக் கொண்டு விட்டால் அவளை மன்னித்து ஏற்றுக் கொள்ள வேண்டு மென்று அவரால் கதை அமைத்திருக்க முடிந்திருக்குமா என்று முதல் தடவையாக எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது.  அது மட்டுமல்ல; மௌன கீதங்கள் திரைப்படத்தின் கிளைமாக்ஸும் படு செயற்கை;  மற்றும் அபத்தத்தின் உச்சம்.

கணவன் தப்புச் செய்ததால் அதை அறிந்த அந்த நிமிஷமே அவனை உதறி விட்டு வெளியேறி, சுயமாய் வேலை பார்த்து வீம்புடன் வாழ்ந்து கொண்டிருக்கும் கதாநாயகி, அவன் வேறொரு பெண்ணை மணந்து கொள்வதை அறிந்து மணமேடையில் போய் அவனின் மேலே விழுந்து அப்படி அழுது புரண்டு புலம்புவதும், அது முடியாமல் போகவும் தற்கொலைக்கு முயல்வதுமான திரைக்கதை அமைப்பு படு செயற்கையாய் அமைந்து அந்த பெண் பாத்திர வார்ப்பின் சிறப்பைகளை எல்லாம் ஓரிரு காட்சிகளிலேயே சிதைத்து சின்னா பின்னமாக்கி விட்டதாகத் தோன்றியது எனக்கு.

அதற்கப்புறம் அந்தத் திருமணமே ஒரு நாடகம் என்று சித்தரிக்கப் பட்டு நாயகன் நாயகி ஒன்று சேர்வதாய் முடித்து, பாக்யராஜும் மிகச் சாதரண கமர்சியல் சினிமாக்காரர் தான் என்று என்னை உணர வைத்ததில்,  அவரின் மீதிருந்த என் அபிமானம் கொஞ்சம் கொஞ்சமாய்த் தெறிக்கத் தொடங்கியது. அதற்கப்புறமும் அவரின் திரைப் படங்களை தொடர்ந்து விரும்பித் தான் பார்த்துக் கொண்டிருந்தேன் – ஆனால் அவரின் தீவிர ரசிகனாக அல்ல; சாதாரணமாக எல்லாத் திரைப்படங்களையும் பார்க்க விரும்புகிறவனாக.

ஆனால் அவரின் சின்னவீடு திரைப்படத்திற்குப் பின்னால் அவரின் திரைப் படங்களை விரும்பிப் பார்ப்பதையே விட்டு விட்டேன். இது நம்ம ஆளு, வீட்ல விசேஷங்க, சுந்தரகாண்டம், வேட்டிய மடிச்சுக் கட்டு எல்லாம் தற்செயலாக போகிற போக்கில் பார்த்த படங்கள் தான்; அவற்றை எல்லாம் என்னால் ரசிக்க முடிந்ததில்லைல்லை. ஆரம்ப கால பாக்யராஜின் அடி நிழல் கூட அந்தப் படங்களில் படியவில்லை என்பதும் என் முடிவு. சுந்தரகாண்டத்தையெல்லாம் சகித்துக் கொள்ளவோ சீரணிக்கவோ என்னால் முடிந்ததில்லை.

வியாபார சினிமா என்னும் விஷ ஜந்து பாக்யராஜ் என்னும் எளிமையான நேர்த்தியான கதை சொல்லியை விழுங்கி விட்டது என்றும், அதை உணர்ந்து வெகு சீக்கிரமே அவர் விழித்துக் கொண்டு வெளியேறி விடுவார் என்றும் இன்னும் நம்பிக் கொண்டுதான் இருக்கிறேன். அவர் விகடன் மேடையில் வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்கிறார் என்பதை அறிந்ததும் என்னுடைய பால்யத்தை தன்னுடைய சினிமாக்களால் வசீகரமாய் உணரச் செய்த ஆதர்ச இயக்குனருக்கு இரண்டே இரண்டு கேள்விகள் எழுதிப் போட்டேன்.

 என்னுடைய ஒரு கேள்விக்கும் விகடனில் அவர் பதில் சொல்லவில்லை. வந்து குவிந்த கேள்விகளில் என்னுடைய கேள்விகள் அவர் பொருட் படுத்தத் தகுந்தவைகளாக இல்லாமல் இருந்திருக்கலாம்; ஒருவேளை என்னுடைய கேள்விகளை விகடன் அவருக்கு அனுப்பி வைக்காமல் கூட தவிர்த்திருக்கலாம்; சுவாரஸ்யமான பதில்களைப் பெறக் கூடிய அல்லது பதில் சொல்பவரைச் சுகமாக சொறிந்து விடும் கேள்விகளை மட்டும் தான் சம்பந்தப் பட்டவர்களுக்கு விகடன் ஆசிரியர் குழு அனுப்பி வைக்குமோ என்னவோ!
சரி அவரிடமிருந்து பதில் கிடைக்கா விட்டால் என்ன? நீண்ட நாட்களுக்கப்புறம் என்னுடைய பிளாக்கில் பாக்யராஜ் பற்றிய ஞாபகங்களை அசை போடுவதற்கு ஒரு வாய்ப்பு கொடுத்த பதில் கிடைக்காத என்னுடைய கேள்விகளை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

கேள்வி - 1:  புதிய வார்ப்புகள் - உங்களின் கதை வசனத்தில் உங்களின் குருநாதர் பாரதிராஜா இயக்கியபடம். அதில் கதாநாயகியை மணந்து கொண்ட கணவன், அவளை அவளுடைய காதலனுடன் எந்த வசனமுமில்லாமல், சேர்ந்து வாழ அனுப்பி வைப்பது தான் கிளைமாக்ஸ்.

அந்த ஏழு நாட்கள் - உங்களின் கதை வசனத்தில் நீங்களே இயக்கியபடம். ஆனால் அதிலும் கதாநாயகியை மணந்து கொண்ட கணவன் அவளை அவளுடைய காதலனுடன் சேர்ந்து வாழட்டும் என்று அனுப்பி வைக்க முடிவு செய்யும் போது, தாலி, செண்டிமெட், கலாச்சாரம்…. என்று நீண்ட வசனங்களுக்கப்புறம் காதலனே, அவள் கணவனுடன் தான் வாழ வேண்டுமென்று விட்டு விட்டுப் போகிறான். ஏன் இந்த முரண்பாடு? ஒருவேளை தாலி, கலாச்சாரம் இத்யாதிகள் என்பதெல்லாம் மத்யதர (சாதியிலும் பொருளாதாரத்திலும்) வர்க்கத்திற்கு மட்டுமானது என்பது தான் உங்களின் பார்வையா? எளிய சாதியினருக்கு அதெல்லாம் ஒரு பொருட்டு இல்லையா?

கேள்வி - 2:  உங்களின் சுந்தரகாண்டம் என்னும் திரைப்படத்தில், ஆசிரியராகிய கதாநாயகன் பெண்களுக்கு அவர்களின் ஒவ்வொரு பருவத்திற்கும் மதிப்பெண் போட்டு, பெண்ணொருத்தி பூப்பெய்தி, மணமுடித்து, ஒரு பிள்ளையையும் பெறும் போது தான் 100 மதிப்பெண்கள் பெற்று முழுமை அடைகிறாள் என்கிறான். இது விஷமத் தனமான ஆணாதிக்கக் கருத்தாக உங்களுக்குத் தோன்றவில்லையா? அதன்படி, அன்னை தெரசா கூட முழுமை அடைந்த பெண்ணில்லை என்று அர்த்தமாகிறதே! மேலும் எத்தனையோ பெண்கள் ஏதேதோ காரணங்களால், கல்யாணமாகாமலும், கல்யாணமாகியும் குழந்தை பெற முடியாமலும் சமூகத்தில் இருக்கிறார்களே, அவர்களெல்லாம் உங்களைப் பொறுத்தவரை முழுமை அடைந்தவர்களில்லையா? ஏன் உங்களின் முதல் மனைவிக்கே கூட குழந்தையே தரிக்க வில்லை; அதனால் பிரவிணா முழுமை அடைந்த பெண்ணில்லையா? தன்னால் பெண்ணாக முழுமை அடைய முடியவில்லை என்று உணர்ந்ததால் தான் அவர்கள் அல்ப ஆயுளிலேயே இறந்து விட்டார்களா?