Thursday, November 12, 2009

கவிதை - ஒரு மனைவியின் விடைபெறல்

எழுதியவர்: மேரித் தங்கம்

போய் வருகிறேன் தோழா!
விலகல் இல்லை இது;
விடைபெறல் மட்டுமே! உனக்கான
நேசமும் காதலும் என்னுள்
நிலைத்திருக்கும் என்றென்றும்.......

நாமிருவரும்
நட்பாய் கை குலுக்கினோம்;
நதியின் பிரவாகமிருந்தது நமக்குள்......
காதலாய் நிறம் மாறியபோதும்
கனவுகள் பொங்கிற்று மனதில்!

திருமணம் என்ற உறவுக்குள் புகுந்த
மறு நிமிடமே நீ
புருஷனாய் மாறிய இரசாயாணம்
புரியவே இல்லை எனக்கு!

அதிகார அஸ்திரங்களைத்
தொடுக்கத் தொடங்கினாய் அடுக்கடுக்காய்;
வாலியை மறைந்திருந்து வதம்செய்த
இராமபானங்களையும் விட
வலிமையானவை அவை....
இரணமான நாட்களின் நினைவில்
இன்னும் கூட
இரத்தம் கசிகிறது நெஞ்சில்!

எவ்வளவு முயன்றும் - உன்
புதுப்பிக்கப் படாத ஆணெனும்
புராதான மூளைக்குள் காலங்காலமாய்
பதுங்கிக் கிடக்கும்
மனைவியின் பிரதியாய்
மாறவே முடியவில்லை என்னால்
மன்னித்து விடு என் தோழா!

வேறு வழி தெரியவில்லை; அதனால்
விடை பெறுகிறேன் உன்னிடமிருந்து
கால நதியின் சுழற்சியில்
மறுபடி நாம் சந்திக்க நேர்ந்தால்
கை குலுக்குவோம் ஒரு புன்னகையுடன்
கணவன் மனைவியாய் நாமிருந்த
கசப்புகளை மறந்து..........!

(அன்புடன் இணையதள்ம் நடத்திய படக்கவிதைகள் பிரிவில் முதல் பரிசு பெற்றது)

சிறுகதை - துரத்தும் நிழல்

தினசரி வேலைத் தளத்தில் நரசய்யா பற்றிய புகார்கள் பெருகிக் கொண்டிருந்தன. தனபாலுக்கு அவனை என்ன செய்வதென்றே புரியவில்லை. என்னதான் கண்டித்தாலும், புத்தி சொன்னாலும் அமைதியாக பாவம் போல் பார்த்துக் கொண்டு நிற்பவனை என்னதான் செய்வது?
கடந்த மூன்று தினங்களாக அவன் வேலைக்கும் வரவில்லை. அவனிடமிருந்து தகவலும் இல்லை. அவன் தங்கி யிருக்கும் 'லேபர் கேம்பிற்கு' போன் பண்ணிக் கேட்ட போதும் சரியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை.எங்கு போய்த் தொலைந்தான்? இவர்கள் கம்பெனி விசாவில் இருந்து கொண்டே வேறெந்த கம்பெனியிலும் வேலைக்குப் போகிறானா?
அவன் வேலைக்கு வந்தாலும் பிரச்னை; வராவிட்டாலோ பெரும் பிரச்னை. அவன் செய்கிற முக்கிய வேலை - கழிவறைகளைச் சுத்தப் படுத்துவது. அவன் வேலைக்கு வராத பட்சத்தில் கழிவறைகள் நாறத்தொடங்கி அந்தப் பக்கமே போக முடியாத சூழல் ஏற்பட்டுவிடும்.
"காலையில ஒரு தரம்; மத்தியானம் ஒரு தரம்னு கக்கூஸைக் கிளீன் பண்றதோட சரி. வேற ஒரு வேலையும் செய்யிறதில்ல. அவசர ஆத்திரத்துக்கு ஆள் இல்லாத குறைக்கு ஏதாவது சின்ன வேலை குடுத்தாலும் செய்ய மறுத்து முறைச்சுட்டுப் போயிடுறான் ஸார்.... " - எல்லா •போர்மேன்களும் நரசய்யாவின் மீது புகார் வாசித்து விட்டார்காள். "நீங்க அவனுக்கு அதிகப் படியாய் குடுக்கிற செல்லமும் சலுகைகளும் தான் அவனை யார் பேச்சையும் கேட்காத மூர்க்கனா வளர்த்து விட்டிருக்கு..." என்று தனபாலின் மீது நேரிடையாகவே குற்றம் சுமத்தினார்கள் அவனுடைய உதவிப் பொறியாளர்கள்.
வேலை ஆட்களுக்கும் நரசய்யாவிற்கும் எப்போதும் சண்டை தான். எப்போது யார் டாய் லெட்டை உபயோகிக்கப் போனாலும் ஒழுங்காகத் தண்ணீர் ஊற்றும்படியும் சுத்தமாக வைத்துக் கொள்ளும் படியும் சத்தம் போட்டுக் கொண்டே இருப்பான். 'என்னத்தத் தான் திங்கிறாய்ங்களோ; நாத்த மெடுத்த பயலுவ...' என்று தொடங்கி கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்து தனபாலே அவனை அழைத்து பல தடவை கண்டித்து அனுப்பியிருக்கிறான். ஆனாலும் ஓரளவிற்கு மேல் அவனைக் கண்டிக்க முடிவதில்லை.
ரொம்பவும் கோபப்பட்டுப் பேசினால் "எனக்கு வேலைமாத்திக் கொடுங்க ஸார்; இந்த அசிங்கம் புடுச்ச வேலைய வேற யாரையாவது விட்டுச் செய்யச்சொலுங்க..."என்கிறான். அதில் தான் பிரச்னையே! அவன் இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் கழிவறைகளைச் சுத்தம் செய்கிற வேலையைச் செய்ய யாருமே முன் வருவதில்லை. இது சம்பந்தமாக வேலைத் தளத்தில் கூட பெரும் பிரச்னை வெடித்து, அப்புறம் நரசய்யாவின் தயவால் தான் முடிவிற்கு வந்தது.
ஆரம்பத்தில் கொத்தனாருக்கு உதவியாளாக நரசய்யா வேலை பார்த்த போதெல்லாம் ஒரு பிரச்னையும் இல்லை. மிகவும் சுறுசுறுப்பாகவும் ஆர்வமாகவுமே வேலை பார்த்தான். அவனுக்கு இட்ட வேலைகளை வேக வேக மாக முடித்துவிட்டு கொத்தனார் வேலை பழகுவதிலும் பெரிய அளவில் ஆர்வம் காட்டினான். அவ்வப்போது தனபாலிடம் வந்து, 'பூச்சு வேலை தான் இன்னும் தனக்கு கை வரவில்லை என்றும், ஆனால் கட்டு வேலை எல்லாம் நன் றாகவே தன்னால் செய்ய முடியும் என்றும் கூறி அதனால் தன்னைத் தனியாக ஒரு பகுதியில் கட்டு வேலை செய்ய அனுமதிக்கும் படி' யும் பணிவுடன் கேட்டிருக்கிறான். இவனும் பார்க்கலாம் என்று சொன்னதோடு •போர் மேன்களை அழைத்து அவனுக்கு பிளாக் கட்டும் வேலை பிரித்துக் கொடுக்கும்படி உத்தரவும் போட்டிருக்கிறான். ஆனால் அதற்குள் என்னன்னெவோ நடந்து விட்டது.
தனபாலுக்கு துபாயில் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில் 'பிராஜெக்ட் மேனேஷர்' வேலை கிடைத்து விமானம் ஏறும் போது மனசு முழுக்க ஒரு பயம் இருந்தது. ஏனென்றால் தமிழக எல்லையைத் தாண்டி வெளியில் அவன் வேறெங்குமே இதுவரைப் போனதில்லை. தமிழ் மற்றும் தடுமாற்றமான ஆங்கிலம் தவிர்த்து வேறு எந்த மொழியிலும் ஒரு வார்த்தை யையும் அவன் அறிந்திருக்கவில்லை. இவனுடைய நண்பர்கள் வேறு ஒரேயடியாய் வயிற்றில் புளியைக் கரைத்தார்கள். "மகனே நீ நல்லா மாட்டிக்கிட்ட; ஹிந்தி தெரியாம ஒரு வாரம் கூட துபாயில உன்னால காலந்தள்ள முடியாது. ஏன்னா துபாயில ஆட்சி மொழி அரபின்னாலும் பேச்சு மொழி ஹிந்தி தான்......."
தனபாலின் நண்பர்கள் பயமுறுத்தியபடி தான் துபாயில் நிலைமை இருந்தது. ஏர்போர்ட்டிலேயே பாஸ்போர்ட் செக்கிங் கவுண்ட்டரில் இருந்த முழுக்க கறுப்பில் அங்கியும் பர்தாவும் அணிந்திருந்த அரபிப் பெண் ஹிந்தியிலேயே கேள்வி கேட்கத் தொடங்க, இவன் எதுவும் புரியாமல் விழிக்க "இந்தியன் தானே! இந்தி தெரியாதா?"என்று ஆச்சிரிய மாய்ப் பார்த்து விட்டு ஆங்கிலத்திற்கு மாறினாள்.
ஏர்போர்ட்டிற்கு இவனை அழைத்துப் போக வந்திருந்த பாகிஸ்தானி டிரைவருக்கோ ஆங்கிலத்தில் ஒரு அட்சரமும் புரியவில்லை. சைகையிலேயே இவன் பேசுவதைப் பரிகாசமாய்ப் பார்த்தபடி வண்டி ஓட்டிக் கொண்டு வந்தான். அடுத்த நாள் அலுவலத்திற்குப் போன போது பெர்ஸனல் மேனேஜர் - அவர் தமிழர் தான் என்றாலும் - ஹிந்தியில் பேசத் தொடங்கி இவன் முழிப்பதைப் பார்த்து ஆங்கிலத்தில் தொடர்ந்தார். ' கொஞ்சம் கொஞ்சமாக ஹிந்தி கற்றுக் கொள்ளும் படியும் இல்லை யென்றால் லேபர்ஸைச் சாமாளிக்க முடியாது' என்றும் அறிவுரைகளை அள்ளி வழங்கி இவனுக்காக ஒதுக்கப் பட்டிருந்த வேலைத் தளத்திற்கு அனுப்பி வைத்தார். ஒரு வார்த்தை கூட இவனிடம் தமிழில் பேசவில்லை என்பதும் இவனாகவே அவர் தமிழரென்று அறிந்து கொண்டபடியால் வலிந்து தமிழில் பேசிய போதும் அதை ரசிக்காமல் தவிர்த்து விட்டார் என்பதும் அதில் விசேஷம்.
அப்படியே சென்னைக்கு விமானம் ஏறிவிடலாம் போலிருந்தது தனபாலுக்கு. ஆனால் அதெல்லாம் வளை குடா நாடுகளில் அத்தனை சுலபமில்லை. வேலையில் சேர்ந்த முதல் நாளே பாஸ்போர்ட்டை பிடுங்கி அலுவலகத்தில் பத்திரப் படுத்திக் கொள்வார்கள் என்பதால் நினைத்த மாத்திரத்தில் எங்கும் போய்விடவும் முடியாது. மனசு முழுக்க பயத்தையும் பீதியையும் சுமந்து கொண்டு கோயிலுக்கு வெட்டுப்படப் போகும் ஆடு மாதிரி வேலைத்தளத்திற்குப் போனான் தனபால். அங்கு போன பின்பு தான் கொஞ்சம் ஆசுவாசமாக உணர்ந்தான்.
ஏனென்றால் இவனுடைய தலைமையில் இவனுக்குக் கீழே வேலை பார்க்க நியமிக்கப் பட்டிருந்த சூபர்வைசர்களும் பெரும்பாலான வேலையாட்களும் தென்னிந்தியாவின் பகுதிகளைச் சேர்ந்தவர்களாக - அதுவும் அதிக பட்சம் மலையாளிகளாகவும் கொஞ்சம் தமிழர்களாகவும் - இருந்ததால் மொழிப் பிரச்னை மூச்சை நிறுத்துவதாக இல்லை.ஆனால் இவன் கொஞ்சமும் எதிர் பார்க்காத முற்றிலும் புதிதான வேறொரு பெரும் பிரச்னை வெடித்தது.
சென்னையில் தனபால் பார்த்த கட்டுமான வேலைகளிலெல்லாம் 'சைட் ஆபீஸ்' என்பது கீற்றுக் கொட்டகையும் புழுதித் தரையும் நான்கைந்து மேஜை நாற்காலி களுடனுமிருக்கும். அவ்வளவு தான். கழிவறை வசதிகளுக்கெல்லாம் திறந்தவெளிகளையோ, பொதுக் கழிவறைகளையோ தான் தேடிப் போக வேண்டியிருக்கும். அபூர்வமாய் சைட் ஆபீஸிலேயே கழிவறை வசதியிருந்தாலும் தொடர்ந்த உபயோகத்தில் நாறி நாத்தம் குடலைப் புரட்டுவதாகி உபயோகிக்கக் கொஞ்சமும் லாயக்கற்றதாக மாறியிருக்கும். ஒருமுறை வேலையிலிருக்கும் போது வயிற்றைக் கலக்கி 'உட்கார' தோதான இடம் தேடி அலைந்து அதற்குள் பேண்ட்டிலேயே கழிந்து போன அவல அனுபவ மெல்லாம் அவனுக்கு இருக்கிறது.
ஆனால் தனபால் துபாய்க்கு வேலைக்கு வந்ததும் இங்கு அவன் பார்த்த சைட் ஆபிஸ்கள் ஆச்சர்யமும் பிரமிப்பும் ஊட்டுவதாய் இருந்தது. போர்ட்டோ கேபின்கள் என்ற பெயரில் மரத்தாலும் பிளாஸ்டிக்குக்ளாலும் வண்ணத் தகடுகளாலும் வடிவமைக்கப்பட்டு , குளிர்சாதன வசதி பொருத்தப் பட்டு எங்கு வேண்டுமானாலும் அப்படியே தூக்கிக் கொண்டு போய் நிர்மாணித்து விடும்படியாய் பளபளவென்று சென்னையின் மல்டி நேஷனல் கம்பெனிகளை நினைப் பூட்டுவதாய் இருந்தது. அதை விடவும் ஆச்சர்யம் அந்த போர்ட்டோ கேபின்களிலேயே அலுவலர்களுக்காக இணைக்கப்பட்டிருந்த கழிவறை வசதிகளும் வேலையாட்களுக்கு கழிவறைகளுக்காகவே அமைக்கப் பட்டிருந்த தனி போர்ட்டோ கேபின் களும் நம்ப முடியாத சுத்தத்துடன் தாரளமான நீர் வசதிகளுடனும் இருந்தது தான்!
எத்தனை தான் அழகாகவும் பளபளப்பாகவும் இருந்தாலும் தொடர்ந்து பராமரித்தால் தானே கழிவறைகள் சுத்தமாக இருக்கும்? கழிவறைகள் பற்றிய பிரக்ஷையே இல்லாமல் அதை யாவரும் உப யோகிக்க மட்டுமே செய்ததால் இவனுடைய சைட்டில் வேலை தொடங்கி ஒரிரு வாரத்துக்குள் அவை மிக மோசமாக நாறத் தொடங்கின. ஒருமுறை வேலைகளை மேற்பார்வையிட வந்த தனபாலின் ஆங்கிலேய மேலதிகாரி வேலையில் நிறைய முன்னேற்றங்களும் சிறப்புகளுமிருப்பதாய் பாராட்டிக் கொண்டே வந்தவர் அவனே சற்றும் எதிர் பார்க்காத ஒரு தருணத்தில் சட்டென வேலையாட்களின் கழிவறைக்குள் புகுந்து விட்டு, அதே வேகத்தில் மூக்கைப் பிடித்துக் கொண்டு வெளியே வந்தவர் இவனை மிக மோசமாக திட்டித் தீர்த்து விட்டார்.
"முகத்தை மட்டும் கழுவினாப் போதாது மேன்; பின்புறத்தையும் கழுவனும்...." என்று தொடங்கி ஆங் கிலக் கெட்ட வார்த்தைகளால் அபிஷேகம் செய்துவிட்டு, போகிற போக்கில் தான் அடுத்த முறை விசிட் வரும்போது ஒழுங்காக பராமரிக்கப் படாமல் கழிவறைகள் இதே நிலையில் தொடர்ந்தால் நீ இந்தியாவிற்கே திரும்பிப் போவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் எச்சரித்து விட்டுப் போனார்.
'பின்புறத்தை பேப்பரால் துடைத்துப் போட்டு விட்டு போகிறவனெல்லாம் கழுவுவதைப் பற்றி பேச, அதைக் கேட்கிற நிலைமை நமக்கு வந்து விட்டதே' என்ற தன்னிரக்கத்தையும் மீறி, ஒரு சின்ன விஷயத்தில் தான் இத்தனை அசிரத்தையாக இருந்து வாங்கிக் கட்டிக் கொண்டமே என்று தனபாலுக்கு வருத்தமாகவும் இருந்தது. உடனே •போர்மேன்களையும் பொறியாளர்களையும் அழைத்து தினசரி குறைந்தது இரண்டு தடவைகள் கழிவறைகளைச் சுத்தம் பண்ணுவதற்கு ஆட்களை நியமிக்கும்படி உத்தரவிட்டான். அப்போதெல்லாம் தனபால் கொஞ்சம் கூட எதிர்பார்த்திருக்கவில்லை. கழிவறைகளைச் சுத்தமாகப் பராமரிப்பது அப்படி ஒன்றும் பெரிய காரியமில்லை என்று தான் நம்பிக் கொண்டிருந்தான். ஆனால் அவனுடைய உதவியாளர்கள் அவனிடம் வந்து "யாருமே கக்கூஸ் கழுவுற வேலை செய்ய ஒத்துக்கமாட்டேனென்கிறார்கள்" என்று சொன்ன போது தான் தனபாலுக்கு இதிலுள்ள தீவிரம் புரிந்தது.
முதலில் ஆபீஸ் பையனை அழைத்து அலுவலகக் கழிவறைகளை மட்டுமாவது தினசரி சுத்தம் செய்யும்படி சொன்னான் தனபால். எந்தவிதமான மரியாதையோ தயவு தாட் சண்யமோ இல்லாமல் உடனடியாக "அதெல்லாம் என்னால முடியாது; வேறாள பார்த்துக்கோ ஸார்......" என்று வெடுக்கென பதில் சொல்லிவிட்டு வேலை இருக்கிற பாவணை யில் அங்கிருந்து நகர்ந்து போனான் அவன். அடுத்த கட்டமாக வேலைத் தளத்திற்கே போய் கொத்தனார், தச்சு வேலை மற்றும் கம்பி வேலைகளில் உதவியாளர்களாக இருப்ப வர்களிடம் பேசிப் பார்த்தான்.
"நல்ல கதையா இருக்கே! ஒரு இலட்சம், ஒன்றரை இலட்சம்னு ஏஜெண்ட்களுக்கு பணம் குடுத்து இங்க கக்கூஸ கழுவுறதுக்கா வந்துருக்கோம்? அதெல்லாம் முடியாது" என்று அவர்களும் முகத்திலடித்தது போல் மறுத்து விட்டார்கள். இப்படியெல்லாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தால் காரியமாகாது; அதிரடியாக ஏதாவது செய்தால் தான் வழிக்கு வருவார்கள் என்று முடிவு செய்து எல்லோரையும் ஒன்றாகக் கூட்டி ஒரு மீட் டிங்கிற்கு ஏற்பாடு செய்தான்.
"நம்முடைய கழிவறைகளை நாமே சுத்தப் படுத்திக் கொள்வதில் என்ன கேவலமிருக்கிறது...!" என்று தொடங்கி சின்னதாய் ஒரு உரை நிகழ்த்தி விட்டு அவர்களில் லேபர் பிரிவிலிருந்த 12 பேரை ஆறு டீம்களாகப் பிரித்து "தினசரி ஒரு டீம் காலையில் சுமார் இரண்டு மணி நேரம் மட்டும் கக்கூஸைக் கிளீன் பண்ணிவிட்டு மற்ற வேலை களைச் செய்யப் போய் விடலாம். அதன்படி செய்தால் ஒவ்வொருவரும் வாரம் ஒருமுறை தான் கக்கூஸைக் கிளீன் பண்ண வேண்டி இருக்கும் ..." என்று தன் முடிவை அறிவித்தான் தனபால்.
வேலையாட்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குள் காச் மூச் சென்று பேச அந்த இடம் ஒரே சத்தக்காடாய் இருந்தது. அப்புறம் ஒருவன் மட்டும் - அவன் பெயர் வெங்கடேஷன் - எழுந்து " நீங்க சொல்ற தெல்லாம் ஆகுற வேலையில்ல; எல்லாரும் எல்லா வேலையும் செய்ய முடியாது. இன்னின்ன ஆள் இன்னின்ன வேலை தான் செய்யனும்னு ஒரு கணக்கிருக்கு...அதால நீங்க சொல்ற வேலைய
எங்களால செய்ய முடியாது. நம்ம சைட்ல இப்ப இருக்கிறவங்கள்ல் நரசய்யாவால மட்டும் தான் அதைச் செய்ய முடியும். அவனுக்குத் தான் 'இது' பழக்கமான வேலை..."என்று சொல்லவும் நரசய்யா எழுந்து வெங்கடேஷனிடம் சண்டைக்குப் போனான்.
தனபால் அவர்களை அதட்டி அமைதிப் படுத்தி விட்டு வெங்கடேஷிடம் மிகக் கடுமையாகச் சொன்னான். "இங்க பார்; இந்த சைட்டைப் பொறுத்தவரைக்கும் நீயும் லேபர்; அவனும் லேபர். ஏன் அவன் மட்டும் கக்கூஸ் கழுவுற வேலையைச் செய்யனும்! நீ ஏன் அதே வேலையைச் செய்யக் கூடாது? நாளையிலிருந்து நீதான் 'அந்த' வேலையைச் செய்ற. இது என் ஆர்டர்....." என்று சொல்லவும் வெங்கடேஷ் மிகவும் கோபமாக எழுந்து இவனிடம் வந்து கத்தினான். " யாரைப் பார்த்து என்ன வேலை செய்யச் சொல்ற? என் சாதி என்ன! குலம் கோத்ரம் என்ன! ஏதாவது தெரியுமா உனக்கு? எதுக்கும் ஒரு தகுதி தராதரம் தெரிய வேணாம்? இது கூட புரியாம நீ என்ன பெரிய மயிரு என்ஜீ£னியரு!"சக வேலையாட்கள் அவனைப் பிடிக்கவில்லை என்றால் தனபாலை அடித்து விடுவான் போலிருந்தது. அத்தனை ஆக்ரோஷமும் ஆவேஷமுமிருந்தது அவனது குரலில்.
தனபாலுக்கே ஒரு கணம் பயமாகி விட்டது - அவனுடைய சுயமரியாதையைப் புண்படுத்தும் படி ஏதாவது பேசிவிட்டோமோ என்று. அப்புறம் சமாளித்துக் கொண்டு "இங்க பார் வெங்கடேஷ்! உன்னுடைய சாதீயத் திமிரைக் காட்டுறதுக்கு இது இந்தியா இல்ல; அங்கயும் கூட இப்பல்லாம் இது சாத்தியமில்ல. ஒருவேளை உன்னோட குக்கிராமத்துல வேணுமின்னா இது சாத்தியப்படலாம். நீ இப்ப துபாய்க்கு வேலைக்கு வந்திருக்கிறேங்குறத மொதல்ல மனசுல வச்சுக்கிட்டுப் பேசு......" என்றான் பொறுமையாக.
"துபாய்க்கு வேலைக்கு வந்தா நீ சொல்ற எல்லா எடுபிடி வேலையையும் செய்யணுமா என்ன? அதுக்கெல்லாம் நான் ஆளு இல்ல; தோட்டி வேலை செய்ற சாதியிலயா பொறந்திருக்கோம் நாங்க! பீயத் திங்குற துக்கு நாங்க என்ன பன்னியா?" மீண்டும் எடக்காகவும் இளக்காரமாகவுமே பேசினான்.
"அப்படீன்னா நீ இந்தியாவுக்குத்தான் திரும்பிப் போகனும்......" தனபாலும் கடுமை காட்ட "சரி என்னை ரீலீஸ் பண்ணு; நான் இந்தியாவிற்கே போய்க்கிறேன்......" என்று அவனும் வீம்பு காட்டினான். இவனிடம் எதற்கு மல்லுக்கட்ட வேண்டும் என்று யோசித்து அவனை அவனிடத்தில் போய் உட்காரச் சொன்னான்.
"இங்க பாருங்க என்னால உங்க யாரோட வாழ்க்கையையும் பாழாக்க முடியாது. ஏன்னா உங்கள மாதிரி நானும் பொழைக்கத்தான் இங்க வந்ரிருக்கேன். அதே சமயத்துல என்னோட பிரச்னையையும் நீங்க புரிஞ்சுக் கனும். அன்னைக்கு கோரா (இங்கிலீஸ்காரர்களை UAE யில் அப்படித்தான் அழைப்பார்கள்) வந்து எப்படிச் சத்தம் போட்டுட்டுப் போனான்னு தெரியுமில்ல! நாம யூஸ் பண்ற கக்கூஸ நாமளே க்ளீன் பண்றதுல எதுக்கு வீண் பிடிவாதம்! நம்ம மகாத்மா காந்தி கூட கக்கூஸ் கழுவி இருக்கார் தெரியும்ல...ப்ளீஸ். கொஞ்சம் கோ-ஆப்ரேட் பண்ணுங்க ...." தனபால் இறங்கி வந்து பொதுவாய் எல்லோரிடமும் பேசினான்.
ஆனால் அதற்கும் அவர்கள் யாரும் எதுவும் பேச வில்லை. வெங்கடேஷே தான் இம்முறையும் எழுந்து பதில் சொன்னான். "காந்திய எல்லாம் வீணா வம்புக்கிழுத்து உதாரணம் காட்ட வேண்டாம். அந்த மனுஷன் முட்டாள் தனமா ஏற்படுத்திட்டுப் போன முன்னுதாரணங்களை எல்லாம் •பாலோ பண்ண முடியாது.. ஊர்ல எங்க வீட்டுக் க்கூஸ்களயே வேற யாரோ வந்து தான் இன்னும் கழுவிக் குடுத்துக்கிட்டு இருக்கிறாங்க.....அதனால 'அந்த' வேலையச் செய்ய எங்க மனசு ஒப்பாது......." எல்லோரும் அவனை ஆமோதிப்பது போல் அமைதி காத்தார்கள்.
தனபால் அடுத்த அஸ்திரத்தையும் வீசிப் பார்த்தான். "உங்கள்ல டாய்லெட் கழுவ யார் முன் வர்றாங்களோ அவங்களுக்கு தினசரி ரெண்டு மணி நேரம் எக்ஸ்ட்ராவா ஓவர்டைம் குடுக்கச் சொல்றேன்.." அப்படியும் யாருமே மசியவில்லை. பெரியதோர் மௌனத்தையே பதிலாகத் தந்தார்கள். எந்தவிதமான இறுதி முடிவிற்கும் வராமலேயே, எல்லோரையும் அவரவர்களின் வேலைகளுக்குத் திரும்பிப் போகச் சொன்னான். அவர்கள் யாவரும் நமட்டுச் சிரிப்பை உதிர்த்தபடி கலைந்து போனதில் தனபாலுக்கு தான் தோற்றுப் போன உணர்வு பீறிட்டது.
அடுத்த முறை ஆங்கிலேய மேலதிகாரி வரும்போது எப்படி அவனை எதிர் கொள்வது? இந்த சின்னப் பிரச்னையைக் கூட உன்னால் சமாளிக்க முடியவில்லையா? என்று இளக்காரமாய்ப் பார்ப்பானே, என்ன செய்வது? தனபாலின் உதவிப் பொறியாள்ர்கள் வந்து "நீங்க இப்படி எல்லாம் மயிலே மயிலே இறகு போடுன்னு கெஞ்சிக்கிட்டுருந்தா காரியம் ஆகாது ஸார். நரசய்யா தான் இதுக்கு சரியான ஆளு. அவனைக் கூப்பிட்டு மிரட்டி செய்யிடான்னு சொல்லுங்க; கண்டிப்பா செய்வான்..."என்று ஆலோசனை சொன்னார்கள்.
"யாருமே செய்ய முன்வராதப்போ நரசய்யாவ மட்டும் ஏன் கட்டாயப் படுத்தனும்? அவன் மட்டும் என்னெ பாவம் பண்ணுனான்? ஏன் எல்லா விரல்களும் அவனை நோக்கியே நீள்கின்றன....." ஆச்சர்யமாய்க் கேட்டான் தனபால். "என்ன ஸார் இன்னுமா புரியல? அவங்க குடும்பத் 'தொழிலே' இது தான் ஸார். ஊர்ல இவனோட குடும்பமே காலங்காலமா 'இதைத்' தான் பண்ணிக்கிட்டு இருக்கு. அதால அவனுக்கு இது ஒண்ணும் புதுசில்ல. நீங்க அவனைத் தனியாக் கூப்பிட்டு நீதான் செய்யணுமின்னு கண்டிசனாச் சொல் லுங்க. தட்டாமச் செய்வான்....."என்றார்கள்.
தனபாலுக்கும் வேறு வழி தெரியவில்லை. ஆங்கிலேய மேலதிகாரி மீண்டும் சைட் விசிட் வருவதற்குள் இந்த கழிவறைப் பிரச்னை தீர்க்கப் பட்டால் அவனுக்கும் நிம்மதியாய் இருக்கும் என்று தோன்றியதால் நரசய்யாவைத் தனியாக அழைத்துப் பேசினான். "உனக்கு சொந்த ஊர் எதுப்பா..." மெதுவாய் ஆரம்பித்தான்.
"ஆந்திராவில குண்டூரு ஸார்....."
"இத்தனை சுத்தமா தமிழ் பேசுறயே எப்படி?" ஆச்சர்யமாய்க் கேட்டான் தனபால்.
"ஆந்திராக்காரன் தமிழ் பேசுறதுல என்ன ஸார் பெரிய ஆச்சர்யம். எண்ணூர், சூளூர் பேட்டை ஏரியாக்கள்ல தான் என்னோட சின்ன வயசுல இருந்தேன். பல ஊர் சுத்திட்டதால பல பாஷையும் பழக்கமாயிருச்சு..." சிரித்தபடி சொன்னான்.
"நான் எதுக்கு உன்னை வரச் சொன்னேன்னா எனக்காக நீ மறுக்காம ஒரு வேலை பண்ணனும். என்ன வேலைன்னு உனக்கே தெரியும். அதான் டாய்லெட் க்ளீன் பண்ற வேலை. நாளையிலருந்து பண்ணனும். செய்வியா? கொஞ்ச நாளைக்கு செய்; போதும். அப்புறம் மாற்று ஏற்பாட்டுக்கு வேற சைட்லருந்து ஆள் கிடைச்சதும் உன்னை நீ ரொம்ப ஆசைப்பட்ட கொத்தனார் வேலைக்கு மாத்தி விடுறேன்...." தயங்கித் தயங்கித் தான் தனபால் கேட்டான்.
கொத்தனார் வேலை பழகுபவனை ஒருபடி கீழே இறக்குவது தனபாலுக்கே கஷ்ட்மாகத்தான் இருந்தது. மாற்று ஏற்பாடு அது இது என்பதெல்லாம் இப்போதைய சமாளிப்பு தான் என்பதும் கடைசிவரை நரசய்யா கழிவறைகளைத்தான் கழுவிக் கொண்டிருக்க வேண்டுமென்பதும் மனசுக்குள் உறுத்தலாகத் தான் இருந்தது. கேட்டு விட்டு அவனின் பதிலுக்காக அவனையே கூர்ந்து பார்த்துக் கொண்டி ருந்தான்.
"பரவாயில்ல; செய்றேன் ஸார். நீங்க இவ்வளவு கேட்கும் போது மத்தவங்க மாதிரி செய்ய மாட்டேன்னு முரண்டு பிடிக்கவா முடியும்? செய்யின்னா செஞ்சாக வேண்டிய எளிய சாதிக்காரன் தான ஸார் நானு..." அவன் குரல் கம்மி கண்களில் கண்ணீர் பெருகியது. முப்பது வயதைக் கடந்த வாலிபன் செய்வதறியாமல் கண்ணீர் பெருக்குவதைப் பார்க்க மனம் பதைத்தது.
"நரசய்யா, என்னப்பா இது சின்னக் குழந்தை மாதிரி... உனக்கு இஷ்டமில்லைன்னா வேண்டாம். விட்டுரு. நான் வேற ஏதாவது ஏற்பாடு பண்ணிக்கிறேன்....."
"அதெல்லாம் ஒண்ணுமில்ல ஸார். நான் பிறந்த விதிய நெனச்சேன்: தானா கண்ணீர் பெருகிருச்சு. அவ்வளவு தான். எங்கள மாதிரி ஏழைகளோட கண்ணீருக்கு என்ன ஸார் மதிப்பிருக்கு? நானும் நான் பிறந்த சாதியிலருந்து - அதன் இழிவுகளிலிருந்து விலகிடனும்னு ஓடிஓடிப் பார்க்கிறேன். அது நிழல் மாதிரி துரத்திக்கிட்டு வருதே, என்ன தான் செய்யட்டும்! தலைமுறை தலைமுறையா சாக்கடையிலயும் மலத்துலயும் தான் பொரண்டுக்கிட்டு இருக்கிறோம். இதுக்கு விடிவே வர மாட்டேங்குது எங்களோட முப்பாட்டன், பாட்டன், தாத்தன் ஏன் எங்க அப்பன் முதற்கொண்டு எல்லோருமே பாதாளச் சாக்கடைய சுத்தம் பண்ணும் போது அந்த 'வாயு'ல சிக்கித்தான் செத்தொழிஞ்சாங்க. எங்க பெண்
மக்களும் மலத்த சுமந்துக்கிட்டு கக்கூஸ¤கள சுத்தப்படுத்திக்கிட்டுன்னு அதுலேதான் உழண்டுக்கிட்டு
இருக்கிறாங்க. எப்படியாவது இந்த இழிவுலருந்து தப்பிச் சுக்கலாம்னு வேற எடத்துக்கு வேலை தேடி ஓடி வந்தா எனக்கு முன்னால என் சாதி இங்க வந்துடுது. பழையபடியும் அதே வேலையிலயே எங்களப் போட்டு அமுக்கிடுது.....
முதல்ல சவூதி அரேபியாவிற்கு தோட்ட வேலைக்கின்னு கூட்டிட்டுப் போனாங்க. கொஞ்ச நாள் தோட்ட வேலை ஒட்டகப் பராமரிப்புன்னு குடுத்தாங்க... அப்புறம் பண்ணையில இருக்கிற டாய் லெட்டுக்கள கழுவ விட்டுட் டாங்க. இங்க வந்தும் இந்த நாறப் பொழப்பு தானான்னு ரெண்டு வருஷக் கான்ட்ராக்ட் முடிஞ்சதும் போதும்னு ஊருக்கே திரும்பிப் போயிட்டேன். அப்புறந்தான் துபாய்ல கட்டட வேலைக்கின்னு இந்த கம்பெனிக்கு வந்து சேர்ந்து, உங்களுக்கே தெரியுமே - கொத்தனார் வேலையெல்லாம் கத்துக்கிட்டிருந்தேன். அதுக்குள்ள மறுபடியும் பழைய குருடி; கதவைத் திறடின்னு.... விடுங்க ஸார். இதுல நான் யாரை நோக முடியும் சொல்லுங்க....
என் சாதி அடையாளங்களை அறிந்திடாத இந்தியர்கள் யாரும் போயிருக்காத புனிதமான தீவு ஏதாவது இருந்தா அங்க, என் குடும்பத்தையும் கூட்டிக் கொண்டு போய் குடியேறி வாழனும் ஸார்...பேராசை தான். நம்ம அப்துல்கலாம் சொன்னமாதிரி அது என்னோட கனவு. நிறை வேறுமான்னு பார்க்கலாம்.....ஆனா இப்போதைக்கு, முதல் தலைமுறையா என் தங்கச்சி ஒருத்தி நல்லாப் படிக்குறா. கல்வியாலயாவது எங்க சாதி இழிவுகள போக்க முடியாதாங்குற நப்பாசையில முழு மூச்சா அவளப் படிக்க வைக்கிறதுக்காகத் தான் ஓடி சம்பாரிச்சுக்கிட்டு இருக்கிறேன். திடுதிப்புன்னு வேலைய விட்டுட்டும் போகமுடியாது......." கண்ணீரைத் துடைத்தபடி சிரித்தான் அவன்.
"இதுக்காக ஏதோ ஒரு தீவை எல்லாம் நீ தேடிப் போகத் வேண்டிய தேவை இருக்காது நரசய்யா. காலம் ரொம்ப மாறீட்டு வருதுப்பா. இங்க நல்லா சம்பாதிச்சு நிறைய பணம் கொண்டு போய் இந்தியாவுல நிலம் வீடுன்னு வாங்கிப் போட்டு வாழத் தொடங்கும் போது நீ சொல்கிற இழிவுகளெல்லாம் தானா உதுந்துடும்; கவலைப் படாதே..."என்று அவனுக்கு நம்பிக்கை கொடுத்து அனுப்பி வைத்தான்.
ஆனாலும் தனபாலுக்கு மிகவும் கஷ்டமாகவும் சங்கடமாகவும் இருந்தது. நரசய்யாவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் 'இந்த' வேலையிலிருந்து விடுவித்து விட வேண்டும் என்று மனசுக்குள் சங்கல்பம் செய்து கொண்டான். அதனால் அவனைப் பற்றி வரும் புகார்களையும் கண்டும் காணாதது மாதிரி இருந்து விடலானான். ஆனால் தொடர்ந்து வேலைக்கு வராமலிருப்பதை அப்படி எளிதில் விட்டுவிட முடியாது. மூன்று நாட்களுக்கு மேல் முன் அனுமதி பெறாமல் தொடர்ந்து வேலைக்கு வராமலிருந்தால் தலைமை அலுவலத்திற்கு தெரியப்படுத்த வேண்டியது இவனுடைய கடமை. அப்படித் தெரியப் படுத்தி விட்டால் நரசய்யாவின் வேலைக்கே அது பெரும் சிக்கலாகி விடலாம்.
அப்படி யெல்லாம் பொறுப்பில்லாமல் நடந்து கொள்பவனில்லை நரசய்யா. கடந்த எட்டு மாதத்தில் ஒருநாள் கூட அவன் விடுப்பே எடுத்ததில்லை. திடீரென்று அவனுக்கு என்னவாகி விட்டது. ஏன் இப்படி அவனே சிக்கலை உருவாக்குகிறான்? இப்படி ஏடாகூடமாய் ஏதாவது செய்தால் தான் அவனை இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் வேலையிலிருந்து விடுவிப்பேன் என்று எதிபார்க்கிறானா? தனபாலுக்கு மிகவும் குழப்பமாக இருந்தது.
நல்லவேளையாக மூன்றாம் நாள் மத்தியானத்துக்கு மேல் வேலைத்தளத்திற்கு வந்திருந்தான் நரசய்யா. வந்ததும் வராததுமாக தனபாலின் கேபினுக்குள் நுழைந்தான். அவன் பரபரப்பும் பதட்டமுமாய் மிகவும் சோர்ந்து களைப்புடன் கலைந்த நிலையில் காணப்பட்டான். அவனுக்கு தாங்க முடியாத அளவிற்கு ஏதோ பெரிய துக்கமோ இழப்போ ஏற்பட்டிருக்கிறது என்பது அவனுடைய தோற்றத்திலிருந்தே தெரிந்தது.
தனபால் அவனது இருக்கையிலிருந்து எழுந்து போய் ஆறுதலாய் அவன் தோளைத் தொட்டு "என்னாச்சு நரசய்யா......" என்றான். அதற்கு மேல் அடக்க முடியாது என்பது போல் வெடித்து அழத் தொடங்கி விட்டான். அவனால் நிற்கவே முடியாமல் அறையின் மூலையில் குறுகி உட்கார்ந்தபடி குலுங் கி அழத் தொடங்கினான்.அவன் அழுது முடிக்கட்டுமென்று தனபாலும் அமைதியாகக் காத்திருந்தான்.
"நல்லா நாடகம் போடுறான் ஸார். மூனு நாள் சொல்லாமக் கொள்ளாம வேலைக்கு வராம இருந்ததுக்கு நீங்க ஆக்ஷன் எடுத்தாலும் எடுத்துருவீங்கன்னு அதைத் தடுக்கிறதுக்காக ஸிம்பத்தி க்ரியேட் பண்ணிக்கிட்டு இருக்கிறான். எல்லா லேபர்ஸ¤ம் வழக்கமாகப் பண்ற டிராமா தான். உஷாரா இருங்க ஸார். ஏமாந்துடாதீங்க..." குசுகுசுவென்று ஆங்கிலத்தில் தனபாலிடம் சொன்னான் அவனுடைய உதவியாளன் ஒருவன்.
"வாயைக் கொஞ்சம் மூடிட்டு பேசாம இருங்க. எல்லாத்தையும் கொச்சைப் படுத்தாதிங்க..." என்று தனபால் அவனிடம் எரிந்து விழவும் "அப்புறம் உங்க இஷ்டம் " என்றபடி உதவியாளன் எழுந்து போனான். கொஞ்சம் அழுகை குறைந்து விசும்பலினூடே "தலைமை ஆபிஸிலிருந்து என்னோட பாஸ் போர்ட்ட வாங்கிக் குடுங்க ஸார்.....நான் உடனே ஊருக்குப் போகனும்......."என்றான் நரசய்யா.
"அதுக்கென்னப்பா ஏற்பாடு பண்ணீடலாம்....என்ன விஷயமா ஊருக்குப் போகனும்னு சொல்லு. நான் எழுதி அனுப்பி வாங்கி தர்றேன்......"
"போச்சு ஸார்; எல்லாம் போச்சு. குடும்பமே அழிஞ்சு சின்னாபின்னமா ஆயிப் போச்சு. கொலை காரப்பாவிங்க....சீரழிச்சுட்டாய்ங்க....ஐயோ நான் என்ன பண்ணுவேன்? இழிந்த சாதியில பொறந்தா கால மெல்லாம் மலமள்ளிக் கிட்டுத்தான் திரியனுமா? கௌரவமா வேற தொழில் பண்ணிப் பொழைக்கக் கூடாதா? என்ன கொடுமைய்யான விதி ஸார் இது....." மறுபடியும் ஓ வென்று தரையில் புரண்டு அழத் தொடங்கினான்.
"நீங்க கூடச் சொல்லி இருந்தீங்கள்ல ஸார்; நிலம், வீடுன்னு வாங்கி வசதியா வாழத் தொடங்கிட்டா நாங்க பொறந்த சாதி இழிவு எங்கள விட்டு உதுந்துடும்னு....உதிரலையே ஸார்; உயிரையில்ல காவு வாங்கிருச்சு..சவூதீயிலயும் துபாயிலயும் உழைச்ச காசை குருவி சேர்க்குறாப்ல சேர்த்து வச்சு ஊர்ல ஒரு ரெண்டு ஏக்கரா விவசாய நெலம் வாங்குனோம்; விவசாயம் பண்ணப் போனப்ப ஊர்ல இருக்கிற உயர்ந்த சாதிக்காரங்க எல்லாம் ஒண்ணாச் சேர்ந்து வந்து மிரட்டி இருக்காங்க; ஊர் பஞ்சாயத்து அது இதுன்னு கூட்டி எங்க குடும்பத்தையே அசிங்கப் படுத்தி இருக்காங்க...
' நீங்க எல்லாம் விவசாயம் பார்க்கப் போயிட்டா தோட்டி வேலைய எவண்டா செய்றது? எங்க வீட்டு கக்கூஸ்கள் எல்லாம் நாறிக் கெடக்கனுமா....' ன்னு கேட்டிருக்காங்க. என் தங்கச்சி படிச்ச புள்ளயில்லையா? அந்த துடுக்குத் தனத்துல ' உன் பீய நீ தான் சுமக்கனும்; உன் நாத்தத்த நீ தான் கழுவனும் ' னு சொல்லி இருக்கு...இது பெரிய குத்தமா ஸார். அன்னைக்கு ராத்திரியோட ராத்திரியா அந்த உயர்சாதி மிருகப் பயல்கள் எங்க வீட்டுக்குள்ள புகுந்து....." பேச்சு வராமல் திணறினான். அருவி மாதிரி கண்ணீர் கொட்டியது.
தனபால் தண்ணீர் வரவழைத்துக் குடுத்தான். குடித்து விட்டு, விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தான். "என் அக்கா, அம்மா, தங்கச்சி - பதிமூனூ வயசு பச்ச மண்ணு ஸார் அது - மூனு பேரையும் மாறிமாறி பலாத்காரம் பண்ணி, தடுக்கப் போன எங்க அண்ணனையும் வெட்டிக் கொன்னுட்டு அப்படியும் ஆத்திரம் தீராம, நாலு பேத்தையும் துண்டு துண்டா வெட்டி நாங்க விவசாயம் பண்ண இருந்த நிலத்துல வீசிட்டுப் போய்ட்டாங்களாம் ஸார்.....இதை மறைஞ்சுருந்து பார்த்த ஒரே சாட்சியான என் பெரியப்பன கொலை வெறியோட அந்த கும்பல் தேடிக்கிட்டுத் திரியுதாம் இன்னும்....நான் போனாலும் என்னையும் வெட்டுனாலும் வெட்டுவாங்க. ஆனாலும் போய்த் தான் ஆகணும். தயவு பண்ணி என் பாஸ்போர்ட்ட வாங்கிக் குடுங்க ஸார்...."
நரசய்யா சொன்னதைக் கேட்டதும் தனபாலுக்கே தாங்க முடியவில்லை. இப்படியும் கொடுமை நடக்குமா என்று மனசு நடுங்கியது. உடனே தலைமை அலுவலகத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தேவையான ஏற்பாடுகள் செய்து அவசரமாய் ஒரு கடிதம் தயாரித்து, நரசய்யாவிற்கு எமர்ஜென்சி லீவைப் பரிந்துரைத்து டிரைவரை அழைத்து தேவையான வழிமுறைகளைச் சொல்லி, அவனை ஏர்போட்டில் போய் ப்த்திரமாய் இறக்கி விட்டு வரும்படிப் பணித்தான்.
நரசய்யா கிளம்பிப் போனதும் தனபாலுக்குள் அந்தக் கேள்வி எழுந்தது - நரசய்யா இனி என்னவாவான்? அவன் குடும்பத்தினர்களை அழித்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கான தண்டணையை பெற்றுத் தர போராடுவானா அல்லது உயர்ஜாதி பண்ணையார்களைக் கொன்றொழிக்கும் நக்ஸலைட்டாக மாறுவானா? பதில் காலத்தின் கைகளில் பத்திரமாய் இருக்கிறது.......
- முற்றும்
(அமரர் கல்கி நினைவு சிறுகதைப் போட்டி 2007ல் முதல்பரிசு பெற்றது)

Tuesday, November 10, 2009

குறுங்கவிதைகள் - 1

கடவுள் இல்லை என்று
எத்தனை தீவிரமாய் நம்பினாலும்
நெருக்கடிகள் நேரும் போதெல்லாம்
அலைபாயும் மனம் சரணடையும்
ஆண்டவனிடமே.....!
*****
நெரிசல் மிகுந்ததாயிற்று வாழ்க்கை
நெருக்கித் தள்ளுகிறார்கள்
எல்லோரும் என்னை;
நானும் மற்றவர்களை.....!
******
யாவரும்
கடந்து போகிறார்கள் புள்ளினங்களை;
பதற வைக்கும் அவசரங்களோடும்
பறத்தலின் பரவசங்களோடும்;
உயிர்களின் பசி உணர்ந்த
சிலர் மட்டுமே
வீசிப் போகிறார்கள்
கைப்பிடியளவு தானியங்களையும்.....!
*****
விதிக்கப்பட்ட வாழ்க்கை
ஒரே ஒரு நாள் தான்; ஆயினும்
எத்தனை சந்தோஷமாய்
அலைந்து பறக்கும் ஆவலுடன்
புற்றிலிருந்து புறப்படுகின்றன
மழை ஈசல்கள் -
வாசலில் காத்திருக்கும்
வலைகளையும் மீறி.....!
*****
விட்டில் பூச்சிகளுக்கு
விஷமாகும் வெளிச்சம்
உவமையாகும்
ஒளிமயமான வாழ்வுக்கும்....!
*****
உலகம் சுருங்குகிறது கிராமமாக.....
விரிந்து கொண்டிருக்கின்றன
மனிதர்களுக்குள்ளான இடைவெளிகள்!
*****
காலம் கடந்து கொண்டிருக்கிறது - நமது
கர்வங்களை நகைத்தபடி
தத்துவங்களைத் தகர்த்தபடி.....!
*****
அங்கீகாரங்களுக்கு அலைகிற
அவலம் தொடர்கிறது
ஆயுள் முழுதும்.....!
*****
கவனம்; மிகக் கவனம்
கையாளுங்கள் கண்ணாடி மாதிரி
கொஞ்சம் பிசகினாலும் நொறுங்கி விடும்
மனித மனங்கள்.....!
*****
வருஷந் தவறாமல் வாங்கிக் குவித்தும்
அனுப்ப யாருமில்லாததால்
என்னிடமே தேங்கிப் போயின
காதல் வாழ்த்து அட்டைகள்!
*****
ஒருவருடனும்
ஒத்துப்போக முடிவதில்லை;
ஒதுங்கி வாழ முயன்றாலோ
கொல்கிறது தனிமை!
*****

Friday, November 6, 2009

கவிதை: தாம்பத்யமெனும் கயிறு இழுக்கும் போட்டி

உனக்கும் எனக்குமான
கயிறு இழுக்கும் போட்டி தொடங்கியது
நம் திருமண நாளிலிருந்து......

இருவரும்
ஒருவரை நோக்கி ஒருவர்
இழுக்கத் தொடங்கினோம் மூர்க்கமாக!

அவ்வப்போது தன்னிலை மறந்து
ஒருவரை நோக்கி ஒருவர்
நகர்ந்து விட நேர்ந்தாலும் சீக்கிரமே
இயல்புக்குத் திரும்பி
இழுவையை தொடர்கிறோம்.....

கயிற்றின் மையம்
இற்றுக் கொண்டிருக்கிறது;
இருவரின் கைகளிலும் கொப்புளங்கள்
கால்களும் தளர்ந்து போயின
இருந்தும்
இழுவையின் பிடி மட்டும்
இன்னும் இன்னுமென
இறுகிக் கொண்டு தானிருக்கிறது.....

வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டு
விளையாட்டு விதிகளையும் மீறி
வெகுதூரம் வந்து விட்டோம்;
விலகிப் போவது சாத்தியமில்லை
விட்டுக் கொடுக்கவும் மனமில்லை
இலக்குகள் எதுவுமின்றி வெறும்
பழக்கத்தால் தொடர்கிறோம்;
அவ்வப்போது பாவணைகளிலும்.......!

கவிதை: இலவசங்கள்

சமைக்க மசாலாக்கள்
சல்லாபிக்க காண்டம்கள்
சருமத்திற்கு களிம்புகள்
முகத்திற்கு பௌடர்
முலை வளர மூலிகைகள்
குளிக்க சோப் மற்றும் ஷாம்ப்புகள்
பற்பசைகள்; தலைவலித் தைலங்கள்
மகளிரின் மாதப் பிரச்சினைகளூக்கும்
தீட்டுத் துணி பொட்டலங்கள்;
இன்னும் என்னென்னெவோ
எல்லாம் கிடைக்கும்
எங்கே? புத்தகக் கடைகளில்; அதுவும்
குறைந்த விலைகளில் கூடவே
மெலிந்த தமிழிதழ் ஒன்றும்
தருவார்கள் இலவசமாய்.....
வாசிக்க ஒன்றும் தேறாது; ஆயினும்
வாங்கி வர மறக்காதீர்கள்
குழந்தைகளின் மலந்துடைத்து
குப்பையில் வீச
உதவும் உத்திரவாதமாய்.......!

சிறுகதை - நிலமென்னும் நல்லாள்

“காணி நிலம்னா சுமார் எத்தனை சதுர அடி இருக்கும் மிஸ்டர் ராம்நாத்?” என்றார் பரமேஸ்வரன். இப்படி ஒரு திடீர்க் கேள்வியை சற்றும் எதிர் பார்க்காத ராம்நாத் கொஞ்சம் தடுமாறித் தான் போனார்.
“ஸாரி….தெரியலியே ஸார்; எதுக்குக் கேட்குறீங்க? நான் வேணும்னா நெட்ல தேடிப் பார்த்துச் சொல்லட்டுமா?“ என்றார் பணிவுடன்..
“நோ…நோ…. பரவாயில்லை விடுங்க; சும்மாதான் கேட்டேன். நம்ம பாரதியார், பராசக்தி கிட்ட காணிநிலந்தான் கேட்டார். கடைசி வரைக்கும் அவருக்கு அது கை கூடவே இல்ல; ஆனால் அந்த மகா கவிக்கு சாத்தியப் படாதது, நாம இப்பத் தேடிப்போற மிஸ்டர் காளியப்பனுக்கு சாத்தியமாகி இருக்கு பார்த்தீங்களா? அதான் கேட்டேன்” என்றார் பரமேஸ்வரன். “ஆமாம் ஸார்….” என்று ஆமோதித்து சிரித்தார் ராம்நாத்.
பரமேஸ்வரன் டெல்லியைத் தலைமை இடமாகக் கொண்டு, சென்னை, கல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத் என்று அத்தனை மெட்ரோ நகரங்களிலும் கிளைபரப்பி விரிந்திருக்கும் கே.ஜே.எம். என்னும் ரியல் எஸ்டேட் கம்பெனியின் நிர்வாக இயக்குனர். ராம்நாத் அதே நிறுவனத்தின் சென்னைக் கிளைக்கு ரீஜினல் மேனேஜர்.பரமேஸ்வரன் டெல்லியிலிருந்து கிளம்பி வந்த காரியத்தையே மறந்து காளியப்பனின் தோப்பைப் பார்த்து மலைத்துப் போய் நின்றார்.
வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அடர்ந்த வனம் மட்டுமே கண்ணுக்குத் தெரியும். அதனுள் ஓர் வீடிருப்பது யாருக்கும் புலப்படாது. வீடென்று கூட அதை வர்ணிக்க முடியாது. வனவாச இராமனின் பர்ணசாலை மாதிரி இயற்கை எழில் பொங்க எளிமையாய் அமைக்கப் பட்டிருந்தது அந்த கான்கிரீட் குடில். மொட்டை மாடியில் ஒரு தென்னோலை பந்தலும் வேயப்பட்டிருந்தது.
குடிலைச் சுற்றிலும் தென்னை, மா, பலா, வாழை, கொய்யா, எலுமிச்சை, மாதுளை என்று விதவிதமான மரங்களும், கண்ணுக்குக் குளிர்ச்சியாய் பார்க்கப் பார்க்க பரவச மூட்டும் வண்ண மலர்த் தோட்டங்களும் அடர்ந்திருந்தன. பறவைகளின் கலவையான ஒலி சங்கீதமாய் வெளியெங்கும் வழிந்து கொண்டிருந்தது.
சுற்றிலும் இருக்கிற நிலங்கள் எல்லாம் கண்ணுக்கெட்டிய தூரம் வரை கோரைப் புல்லும், காட்டுச் செடிகளும், முட்புதர்களுமாய் அடர்ந்து மொத்த நிலமும் பாழ்பட்டுக் கிடக்க, ஒரு துண்டு நிலம் மட்டும் அடையாளத்திற்காக பத்தடிக்கொரு கல்தூணும் அவற்றை இணைத்துக் கட்டிய முட்கம்பி வேலியுமாய் பிரிக்கப் பட்டு, உள்ளே பச்சைப் பசேலென்று ஒரு சொர்க்கத்தையே சிருஷ்டித்து வைத்தது போலிருந்தது!
கோரை மண்டிக் கிடந்த நிலங்களிலும் கூட ஐம்பது அறுபதடிக்கு ஒரு கிணறு கெத் கெத் தென்று தண்ணீர் நிரம்பிக் கிடந்தன. எல்லாமே நஞ்சை நிலங்களாயிருந்து இப்போது சில வருஷங்களாக விவசாயம் பண்ணப் படாததால் கரடு மண்டிக் கிடந்தது துல்லியமாய்ப் புரிந்தது. ”இதெல்லாம் அசலான விவசாய நிலங்களா இருந்துருக்கும் போலருக்கே…எப்படி அவங்க நமக்கு வித்தாங்க?” ஆச்சர்யமாய்க் கேட்டார் பரமேஸ்வரன்.
“ரொம்ப காலத்துக்கு முன்னாலயே விவசாயம் நொடிச்சுப் போயிருச்சு ஸார்; அதான் நமக்கு வசதியாப் போயிருச்சு... இந்தப் பகுதியில குவாரிகள் வேற பெருகி விவசாய வேலைக்கு ஆள் கிடைக்காமப் போகவும் எல்லோரும் நிலங்களத் தரிசாத் தான் போட்டுருந்தாங்க; அதான் நாம புரோக்கர்கள் மூலமா நிலம் வாங்குறது தெரிஞ்சதும் கிடைச்சவரைக்கும் லாபமின்னு குடுத்துட்டாங்க…..விவசாய நிலங்கள வீடுகட்டுற மனைகளா மாத்துறதுக்கு, அரசியல் வாதிங்களையும், அரசாங்க அதிகாரிகளயும் சரிக்கட்டுறதுக்குத் தான் ரொம்ப செலவழிக்க வேண்டி இருந்துச்சு ஸார்…..” என்றார் ராம்நாத்.
“உங்களின் முயற்சிகளையும் அதற்கான உழைப்பையும் நானறிவேன் ராம்நாத்…..இந்த நெலத்தையும் வாங்கிப் போட்டிருந்தேள்ன்னா நான் வந்துருக்க வேண்டிய அவசியமே வந்திருக்காது….பரவாயில்ல; பேரனுக்கு பூணூல் கல்யாணம் வச்சிருக்காள்; இத முடிச்சிட்டு சொந்த ஊர்ப்பக்கம் அப்படியே தலையக் காட்டிட்டுப் போயிடணும்……”
“எவ்வளவோ பேசிப் பார்த்துட்டோம் ஸார்; இந்த நெலத்துக்காரன் எதுக்குமே மசிய மாட்டேங்குறான்….புரோக்கர்கள் எஸ்.ஆர்.வோ. மூலம் போலியா பவர் ஆவணம் தயாரிச்சு இங்க இருக்கவங்கள வெளியேத்திடலாமான்னு கூடக் கேட்டாங்க; ஆனா நீங்க தான் அது சரியா வராதுன்னு சொல்லீட்டீங்களே! இந்த ஏரியா கவுன்சிலரே நம்ம புரோக்கர் தான்; அவர் மூலமா வேணுமின்னா ஏதாவது பண்ணீடலாமா ஸார்…..”
“நோ…. நோ…. நம்மளோடது கார்ப்பரேட் கம்பெனி….. அரசியல்வாதிங்க செய்றது மாதிரி அப்படியெல்லாம் பண்ண முடியாது….. விஷயம் வெளியியில வந்துச்சுன்னா நம்ம இன்வெஸ்டர்ஸ் எல்லாம் நம்பிக்கை இழந்துடுவாங்க; நான் அவர்கிட்ட பேசிப் பாக்குறேன்; இன்னும் எனக்கு நம்பிக்கை இருக்கு….. என்றார்.
சென்னையிலிருந்து சுமார் 40கி.மீ. தொலைவில் வண்டலூர் – கேளம்பாக்கம் நெடுஞ்சாலையில் கொஞ்சம் உள்ளடங்கி பரந்து விரிந்து கிடக்கிறது சுமார் முன்னூறு ஏக்கர் நிலம். சுற்றிலுமிருக்கிற நிலங்களை யெல்லாம் கே.ஜே.எம். ஏற்கெனவே காசுகொடுத்து கையகப் படுத்தி விட்டது. அடுக்குமாடி வீடுகளும், தகவல் தொழிற்நுட்பப் பூங்காக்களுமாய் வானத்தை எட்டிப் பிடிப்பது மாதிரியான உயர உயரமான கட்டிடங்களாக நிர்மாணிக்க உத்தேசித்திருக்கிறார்கள். சிங்கப்பூரிலிலிருந்தும், லண்டனிலிருந்தும் பெரிய பெரிய ஆர்க்கிடெக்ட் ஜாம்பவான்கள் எல்லாம் வரப் போகிறார்கள். இந்தப் பகுதியின் முகமே மாறப் போகிறது. அதற்கு பெரிய முட்டுக்கட்டையாக இருப்பது காளியப்பன் தான். அவர் தன்னுடைய நிலத்தை கே.ஜே.எம். கம்பெனிக்கு விற்க பிடிவாதமாய் மறுத்துக் கொண்டிருக்கிறார். பரமேஸ்வரன் அவரைச் சமாதானப் படுத்தி நிலத்தை வாங்குவதற்காகத் தான் டெல்லியிலிருந்து சென்னைக்கு வந்திருக்கிறார்.
காளியப்பனின் கான்கிரீட் குடிலின் தரைத்தளம் மிக உயரத்தில் ஏழெட்டுப் படிகளுடன் அமைக்கப் பட்டிருந்தது. விளை நிலத்திற்குள் வீடிருந்ததால் வெள்ள நாட்களில் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து விடாமலிருப்பதற்காக இவ்வளவு உயரமென்று புரிந்தது. படியேறி இருவரும் மேலே போனார்கள். வாசற்கதவு திறந்து தான் இருந்தது. ஆனாலும் ஆட்கள் யாரும் தென்படவில்லை. அழைப்பு மணியை அழுத்தலாமென்றால் அப்படி ஒரு ஏற்பாடு இருப்பதற்கான அறிகுறியே தென்படவில்லை. சத்தங் கொடுக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, தூக்கிச் சொருகிய சேலையுடன் பரபரப்பாய் அலைந்து கொண்டிருந்த ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி, இவர்களைப் பார்த்ததும் சேலையைக் கீழே இறக்கி விட்டு அருகில் வந்து, “யாரு வேணுங்க….” என்றாள் பணிவுடன்.
“மிஸ்டர் காளியப்பன்……” என்று ராம்நாத் இழுத்தார். ராம்நாத்தை ஏற்கெனவே பார்த்திருந்த ஞாபகம் அவளுக்குள் நிழலாட, “ஓ…நீங்களா? வாங்க ஸார்….” என்றாள். இவர்கள் உள்ளே போனார்கள். சின்ன வரவேற்பறை; மிகச் சுத்தமாக இருந்தது. சுவரில் ஒரு பெரிய போட்டோ நெற்றியில் எப்போதும் எரியும் எலக்ட்ரிக் லைட்டுடனும் ஜவ்வாது மாலையுடனுமிருந்தது. போட்டாவி லிருந்தவரின் நெற்றியில் கண்ணாடிக்கு மேல் குங்குமம் அப்பிக் காய்ந்து போயிருந்தது. அவர் இப்போது உயிருடன் இல்லை என்பதற்கான சகல அறிகுறிகளும் தென்பட்டன.
அவசரமாய் உள்ளே ஓடிப்போய் இரண்டு மூங்கில்ச் சேர்களைக் கொண்டு வந்து போட்டு உட்காரச் சொன்னாள். அப்புறம் உள்ளறை நோக்கி குரல் கொடுத்தாள். “டேய் சின்னத் தம்பி; இங்க வாடா…” ஏழு அல்லது எட்டு வயது மதிக்கத் தக்க ஒரு சிறுவன் அரைக்கால் சட்டை மட்டும் அணிந்து மேலே ஒன்றும் போடாமல் “என்னம்மா வேனும் உனக்கு…” என்று எரிச்சல் பொங்கும் குரலுடன் வெளியே வந்தான். இவர்களைப் பார்த்ததும் குரலைத் தாழ்த்தி “என்னம்மா….” என்று குசுகுசுத்தான். “நீ வெரசா ஓடிப் போய் முந்தி வந்திருந்த கம்பெனி அதிகாரிங்க வந்துருக்காங்கன்னு சொல்லி அப்பச்சிய கையோட கூட்டிட்டு வா….” என்று பையனை விரட்டினாள்.
“பரவாயில்லம்மா; அவரு எங்க இருப்பாருன்னு சொல்லுங்க நாங்களே போய்ப் பார்த்துக்குறோம்……” என்றார் பரமேஸ்வரன். அவள் வாசலுக்காக வந்து தூரமாய் விரல் சுட்டி , “அதோ அங்க பம்பு செட் ரூம் இருக்கு பாருங்க; அதுக்குப் பக்கத்துல இருக்க வேப்ப மரத்து நெழல்ல தான் உட்கார்ந்துருப்பாரு….” என்றவள், “கொஞ்சம் இருங்க; காப்பித்தண்ணி வச்சுத் தர்றேன், குடிச்சுட்டுப் போங்க…..”என்றாள்.
“அதெல்லாம் வேணாம்மா….நாங்க ஆபீஸுலருந்து கெளம்பும் போது குடிச்சுட்டுத்தான் வந்தோம்…..” என்றபடி இருவரும் கீழே இறங்கி நடக்கத் தொடங்கினார்கள். நிலம் பசுமை போர்த்தி விஸ்தாரமாய் விரிந்து கிடந்தது. அங்கங்கே பருத்தியும், கடலையும், கத்தரியும், வெண்டையும், மல்லிச் செடியும் பாத்தி பாத்தியாய் பிரிக்கப் பட்டு செழித்து வளர்ந்து கிடந்தன. ஒரு பகுதியில் பச்சை இலை களுக்குள் சிவப்பு சிவப்பாய் மிளகாய்ப் பழங்கள் எட்டிப் பார்த்து பவளம் மாதிரி மின்னிக் கொண்டிருந்தன. கொத்துக் கொத்தாய் அங்கங்கே ஆட்கள் வேலையிலிருந்தனர். ஆறேழு கறுத்த பெண்கள் இவர்களைப் பார்த்தும் பார்க்காதது போல் குனிந்து குசுகுசுவென்று பேசியபடி நீரும் சேறுமாயிருந்த நிலத்தில் நெல் நாற்றுக்களைப் பாவிக் கொண்டிருந்தார்கள்.
“இன்னும் நாம எவ்வளவு பரப்பளவு நிலம் வாங்க வேண்டி இருக்கு ராம்நாத்?” நடையை எட்டிப் போட்டபடி கேட்டார் பரமேஸ்வரன்.
“முன்னூத்திச் சொச்சம் ஏக்கர் நெலத்துல இந்த காளியப்பனோடது வெறும் நாலு ஏக்கர் முப்பது சென்ட் மட்டும் தான் இன்னும் நாம வாங்க வேண்டி இருக்கு ஸார்….மத்த எல்லோரோட நிலத்தையும் வாங்கி கிரயம் பண்ணீட்டம் …இவர்ட்டத்தான் எவ்வளவோ பேசிப் பார்த்துட்டோம்; அடியாட் களவச்சு மிரட்டியும் பார்த்துட்டம்; மசியவே மாட்டேன்கிறார். நிலத்தத் தரவே முடியா துன்னு ஒத்தக் கால்ல நிக்கிறார்…” வருத்தமாய் சொன்னார் ராம்நாத்.
“கவலைப் படாதீங்க; வாங்கிடலாம்; அதுக்குத் தான நான் வந்துருக்கேன்; மத்தவங்களுக்குக் குடுத்தத விட கொஞ்சம் காசை அதிகமாத் தூக்கி எறிஞ்சா சலாம் போட்டுக் குடுத்துருவாங்க…..” பரமேஸ்வரனின் குரலில் நம்பிக்கையும் பலரை இப்படி வீழ்த்திய அனுபவமும் வழிந்தது.
வேப்பமரத்துக் காற்று சிலுசிலுவென்றிருந்தது. பம்பு செட்டிலிருந்து தண்ணீர் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது. காளியப்பன் கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்தபடி கீழே உட்கார்ந்திருந்த வயதான பெண்மணிக்கு வெற்றிலை இடித்துக் கொடுத்துக் கொண்டிருந்தார். அந்தப் பெண்மணிக்கு தொண்ணூறுக்கு மேல் வயதிருக்கும். கூன்விழுந்து, உடம் பெல்லாம் சுருங்கி முகத்தில் ஏகப்பட்ட சுருக்கங்களுடன் சந்தோஷமாய்ச் சிரித்துக் கொண்டிருந்தார்.
பரமேஸ்வரனும் ராம்நாத்தும் அங்கே போகவும், காளியப்பன் கயிற்றுக் கட்டிலிலிருந்து எழும்பி, அவர்களை வரவேற்று கட்டிலில் உட்கார வைத்தார்.”நல்ல வெயில்ல இந்தக் கெழவனத் தேடி வந்துருக்கீங்க…! சுத்தமான தென்னங்கள்ளு இருக்கு; ஆளுக்கு ஒரு சொம்பு அடிக்கிறீகளா?” என்றபடி கட்டிலுக்கடியிலிருந்து ஒரு மண் கலயத்தை எடுத்தார்.
“அய்யய்யோ அதெல்லாம் வேண்டாம்….” இருவரும் அவசரமாய் மறுத்தார்கள்.”பெரிய மனுஷங்க இதையெல்லாம் குடிக்க மாட்டீக…! ஆனா சீமைச்சரக்கைக் குடிச்சு உடம்பக் கெடுத்துக்குவீங்க…. நம்ம அரசாங்கமே அப்படித் தான இருக்கு; குடியானவனக் கள் எறக்க விடாம, கண்ட கருமாந்திரங்களப் போட்டுக் காய்ச்சி பாக்கெட் சாராயம்னு வித்து, மனுஷங்களப் பாழ் பண்ணிக்கிட்டு இருக்கு…. என்ன நான் சொல்றது?” சத்தம் போட்டுச் சிரித்தார் காளியப்பன். அப்புறம் இரண்டு இளநீர்க் காய்களைச் சீவி “இதையாவது குடிங்க…” என்று கொடுத்தார்.
“உங்க நில விஷயமாப் பேசத்தான் வந்தோம்….” பரமேஸ்வரன் நேரிடையாக விஷயத்திற்கு வந்தார். “ அப்பவே நான் ஸார்ட்ட சொல்லீட்டனே, அதை எப்பவுமே நான் விக்கிறதா இல்லன்னு…” என்றார் காளியப்பன்.
“நீங்க கொஞ்சம் உங்க முடிவ மறுபரீசீலனை பண்ணணும்; எல்லாருக்கும் சென்ட்டுக்கு முப்பதாயிரம்னு கொடுத்துத் தான் கெரயம் பண்ணுனோம்; உங்க நிலத்துக்கு அம்பது தர்ரோம்; வீடுகள் கட்டி முடித்ததும் உங்க குடும்பம் குடியிருக்க மூணு படுக்கை அறை வசதி கொண்ட ஃபிளாட் ஒண்ணும் ஃப்ரியாவே தர்ரோம்….இப்பல்லாம் விவசாயத்துல என்ன வருமானம் வருது? போட்ட முதலே திரும்புறதுல்ல; உங்க மொத்த நிலத்துக்கும் சுமார் ரெண்டரைக் கோடி ரூபாய் கெடைக்கும் . அதை வச்சு நீங்க வேற எதாவது பிஸினஸ் பண்ணலாம்; ஷேர்ல இன்வெஸ்ட் பண்ணலாம்; பேங்க்ல கூட டெபாஸிட் பண்ணலாம்….எதுல போட்டாலும் விவசாயத்துல வர்றத விட கண்டிப்பா அதிகமா வருமானம் வரும்….”
“இதப் பாருங்க ஸார்; விவசாயத்த லாப நஷ்டக் கணக்குப் பார்க்கிற தொழிலா நாங்க நடத்தல; அது ஒரு வாழ்க்கை முறை; அது இல்லாட்டா செத்துப் போயிடுவம் சார்…..”என்றார் காளியப்பன்.
“கொஞ்சம் சென்டிமென்ட்ட எல்லாம் தள்ளி வச்சுட்டு யோசிங்க மிஸ்டர் காளியப்பன்; காலத்துக்குத் தக்கன மாற வேண்டாமா? எல்லாத்துக்குமே பயன்பாடுன்னு ஒண்ணு இருக்குல்ல…”
“அப்படி வாழ்க்கையில எல்லாத்தையும் பயன்பாட்டை மட்டும் வச்சி பார்க்க முடியாது ஸார்…..இதோ இந்தக் கிழவி – அதான் எங்கம்மாவுக்கு 93 வயசாகுது; இனிமே பயன்பாடுன்னு பார்த்தா ஒண்ணுமே இல்ல; என்னபண்ணலாம்? வெளில வீசிடலாமா, இல்லை மூச்சைப் பிடிச்சுக் கொன்னுடலாமா? உங்கள மாதிரி படிச்சவங்க அதையும் ஞாயப்படுத்துவீங்க; கருணைக் கொலைன்னு; ஆனா எங்க மனசு ஒப்புக்காது ஸார்…”
“விவசாயத்துல என்ன மிஞ்சிடும் மிஸ்டர் காளியப்பன்! அது தோத்துப் போயி எவ்வளவோ காலமாயிடுச்சு…இன்னும் அதைப் போயி விடாமத் தொடர்றது புத்திசாலித் தனமா?”
“விவசாயம் ஏன் தோத்துப் போச்சுன்னு என்னைக் காவது யோசிச்சிருக்கிங்களா? டெவலப் பண்றம்னு அரசாங்கமும் உங்கள மாதிரி ஆட்களும் விவசாய நிலத்தச் சுத்தி கரைய உயர்த்தி ரோடு போடுறிங்க; ஆனால் மழைத் தண்ணி வெளியேறுறதுக்கு வடிகால் வசதி பண்றதில்ல… அதிகமான தண்ணியால பயிரெல்லாம் அழுகுது; நிலத்தடி நீரையெல்லாம் கட்டுமான வேலைகளுக்கும் குளிர்பானம் தயாரிக்கவும் உறிஞ்சிட்டா விவசாயத்துக்கு எப்படி தண்ணி கெடைக்கும்? ஆனால் ஒண்ணு மட்டும் தெரிஞ்சுக்குங்க…..விவசாயம் நசிஞ்சா உலகமே அழிஞ்சுடும்; அதனால எங்கள மாதிரி ஆட்கள யாவது ஒழுங்கா விவசாயம் பண்ண விடுங்க …. நெலத்த விலைக்குக் கேட்டுக்கிட்டு இனி ஒரு முறை தயவு பண்ணி இங்க வராதீங்க….” கை கூப்பி வழி அனுப்பி வைத்தார் காளியப்பன்.
பரமேஸ்வரன் தான் படு தோல்வி அடைந்து விட்டதாக உணர்ந்தார். அவருடைய இத்தனை வருஷ அனுபவத்தில் காளியப்பன் மாதிரி எதற்குமே மசியாத இத்தனை பிடிவாதமான ஆசாமிகளைச் சந்தித்ததே இல்லை. காளியப்பனிடம் அவரின் எல்லா முயற்சிகளும் பல்லிளித்தன. காளியப்பனின் வசமுள்ள நிலத்தை வாங்க முடியாத பட்சத்தில் கம்பெனி பெருத்த நஷ்டத்தைச் சந்திக்க வேண்டி வரலாம். ஏனென்றால் அந்தப் பகுதியில் தான் தகவல் தொழிற் நுட்பப் பூங்கா அமைக்க உத்தேசிக்கப்பட்டு அதற்கான பூர்வாங்க வேலைகள் எல்லாம் முடிந்து விட்டன. இந் நிலையில் பிளானை மாற்றினால் இதில் முதலீடு செய்திருப்பவர்கள் நம்பிக்கை இழப்பார்கள். கம்பெனியின் ஷேர்களின் விலை சரியும். அப்புறம் சேர்மனிடம் முகங் காட்டவே முடியாது.
“காளியப்பனோட வாரிசுகள் யாரையாவது மடக்கி எழுதி வாங்க முயற்சிக்கலாமா ராம்நாத்….”
“இல்ல ஸார்; நாங்க அந்தக் கோணத்துலயும் ஏற்கெனவே முயற்சி பண்ணிப் பார்த்துட்டோம்…. அவருக்கு ஒரே ஒரு பொண்ணு தான்; நாம அவங்க வீட்டுக்குப் போயிருந்தப்ப நம்மல வரவேற்று வீட்டுக்குள்ள கூட்டிடுப் போனாங்கள்ள அவங்க தான்…..இப்ப புருஷன் கூடக் கூட இல்ல; விவாகரத்துப் பண்ணீட்டாங்க…. அந்த அம்மாவும் அப்பா கிழிச்ச கோட்டத் தாண்டவே மாட்டேன்னுட்டாங்க…” என்றார் ராம்நாத்.
எல்லா வழிகளும் அடைபட்டுப் போனது போலிருந்தது. அலுவலகத்தில் உட்கார்ந்து நிலம் சம்பந்தப்பட்ட ஆவணங்களை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த போது பரமேஸ்வரனுக்கு அந்த ஆச்சிரியம் கவனத்திற்கு வந்தது. வில்லங்கம், பட்டா, சிட்டா அடங்கல் என்று எல்லா ஆவணங்களிலும் நிலத்தின் உரிமையாளராக சேதுராம அய்யர் என்பவரின் பெயரே இருந்தது. 1930க்கப்புறம் நிலம் கை மாறவே இல்லை. அப்படியே கை மாறி இருந்தாலும் அது முறையாகப் பதிவு பண்ணப் படவில்லை. உற்சாகத்தில் துள்ளிக் குதித்து ராம்நாத்தை சத்தம் போட்டு அழைத்தார்.
” டாக்குமெண்ட் படி காளியப்பனுக்கோ அவரோட வாரிசு களுக்கோ நிலத்துல எந்த பாரத்தியதையுமே இல்லையே! அப்புறம் ஏன் நாம அவரோட மல்லுக் கட்டிக் கிட்டிருக்கோம் ….”
“இல்ல ஸார்; நாங்க தரோவா விசாரிச்சுட்டம்; டாக்குமெண்ட் இல்லையே தவிர எல்லோருமே நிலம் காளியப்பனோடதுன்னு தான் சொல்றாங்க; அவர்கிட்ட ஏதாவது அத்தாட்சி இருக்கலாம்….” என்றார் ராம்நாத்.
“நோ….அதைப்பத்தி நமக்கு அக்கறை இல்ல; குத்தகைக்காரரா இருந்துருப்பாங்க; அல்லது சேதுராம அய்யரோட கூத்தியாளோட வாரிசுகள் மூலம் இவங்களுக்கு வந்துருக்கலாம். ஆனால் எல்லாமே வாய்மொழி பரிவர்த்தனைகள் தான். முறையா பதிவு பண்ணப் படல…. நாம இதை சாதகமாப் பயன் படுத்தி சேதுராம அய்யரோட வாரிசு யாரையாவது கண்டுபிடிச்சுட்டமின்னா, அவங்க மூலம் நெலத்த நம்ம கம்பெனிக்கு எழுதி வாங்கிக்கலாம்…. இனியும் காலந் தாழ்த்தாம அவரோட வாரிசத் தேடுங்க….” என்றார் பரமேஸ்வரன்.
ஊருக்குள் அலைந்து வயதான கிழவர்களிடம் ஒருவர் விடாமல் விசாரித்ததில் மின்மினி மாதிரி ஒரு புள்ளி வெளிச்சம் தெரிந்தது. இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு சேதுராம அய்யரின் குடும்பம் மத்திய சர்க்காரில் உயர்ந்த உத்தியோகங்கள் பெற்று டெல்லிக்கு குடி போனார்கள் என்று. அதைத் தொடர்ந்து பிரயாணித்ததில் சேதுராம அய்யரின் கொள்ளுப்பேரன் ஒருவன் நடேஷன் என்ற பெயரில் இப்போது மும்பையில் வசிப்பதாகத் தகவல் கிடைத்தது. பரமேஸ்வரன் உடனே மும்பைக்குப் பயணமானார்.
நடேஷனுக்கு சுமார் முப்பத்தைந்து வயதிருக்கும். தாராவி பகுதியில் சிதிலமடைந்து கிடந்த ஒரு பழைய வீட்டில் தன்னுடைய தாய், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் அன்றாட வயிற்றுப் பாட்டுக்கே அல்லாடுகிற வறிய நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தார். எக்ஸ்போர்ட் பிஸினெஸ் நொடித்து சொத்து சுகமெல்லாம் இழந்து, இப்போது 75 இலட்ச ரூபாய் கடனுடன் தத்தளித்துக் கொண்டிருந்தார்கள். பரமேஸ்வரன் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு பேசினார்.
“என்னை கடவுள் அனுப்புன பிரதிநிதியா நெனச்சுக்குங்க; உங்க பிரச்னைகள் எல்லாம் இன்னைக்கோட தீரப் போகுது….” என்றார் பரமேஸ்வரன். “உங்களப் பார்த்தா கடவுளோட பிரதிந்தியாத் தெரியல; குடுகுடுப்பைக் காரன் மாதிரி இருக்கீங்க….” என்றார் நடேஷன் சிரித்த படி. ”உங்களுக்கு நல்ல ஹுயூமர் சென்ஸ் ஸார்….சென்னைக்குப் பக்கத்துல உங்க பேமிலி பிராப்பர்ட்டி ஒண்ணு இருக்கு தெரியுமா?” என்று கேட்டார் பரமேஸ்வரன். நடேஷனுக்கு அதைப் பற்றி எதுவும் தெரிந்திருக்க வில்லை. ஆனால் அவனுடைய அம்மா சொன்னாள்.
“அது எங்க பூர்வீகந்தான்; ஆனால் இப்ப அங்க எங்களுக்கு யாருமில்ல…ரொம்ப காலத்துக்கு முன்னாலயே சொத்தெல்லாம் வித்தாச்சே!”
“இல்ல, இன்னும் விற்கப் படாம ஒரு நாலரை ஏக்கர் விவசாய நிலம் இருக்கு; ஆனால் அனாமத்தா ஒருத்தன் அனுபவிச்சுக்கிட்டு இருக்கான்…..” தான் கையோடு கொண்டு போயிருந்த ஆவணங்களைக் காட்டி விளக்கமளித்தார் பரமேஸ்வரன். “நீங்க சேதுராம அய்யரோட லீகல் வாரிசுங் குறதுக்கான ஆதாரங்களோட என்னோட கெளம்பி, சென்னை வந்து உங்க நிலத்த எங்க கம்பெனிக்கு எழுதிக் கொடுத்தீங்கன்னா, உங்களுக்கு ரெண்டு கோடி ரூபாய் கெடைக்கும்; அதை வச்சு நீங்க உங்க பிரச்னைகள் எல்லாத்தையும் தீர்த்துக்கலாம்….” பரமேஸ்வரன் சொல்லச் சொல்ல நடேஷனின் முகம் பிரகாசமானது.
இருவரும் விமானத்தில் கிளம்பி உடனே சென்னைக்கு வந்தார்கள். நிலத்தை ரெஜிஸ்டர் பண்ணுவதற்கு முன்னால் நிலத்தையும் அதை இப்போது அனுபவிப்பவர்களையும் பார்க்க வேண்டு மென்று நடேஷன் ஆசைப் பட்டதால், முதலில் அவர்கள் காளியப்பனின் வீட்டிற்குப் போனார்கள். அந்த வீட்டின் வரவேற்பறை சுவரிலிருந்த புகைப்படத்திலிருந்தவரின் முகச்சாயல் நடேஷனின் முகத்தை ஒத்திருந்தது. அந்த புகைப் படத்தைப் பார்த்ததும் அவருக்குள் சிலீரென்று ஒரு உணர்வு அதிர்ந்தது. போட்டோவைத் தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டார் நடேஷன். காளியப்பனுக்கு நடேஷனைப் பார்த்ததும் ஆச்சர்யமாக இருந்தது. அவர் சத்தங் கொடுக்கவும் குடும்பமே வரவேற் பறைக்கு வந்து நடேஷனை ஆச்சர்யமாய்ப் பார்த்தது.
அது 1940களின் முற்பகுதி.: சூரியன் கண்விழிக்க நிறைய நேரமிருந்த ஒரு நடுநிசியில் இருளாண்டிப் பகடை தன் மனைவி, மகன் மற்றும் புது மருமகளுடன் இரத்தின மங்கலத்திலிருக்கும் சேதுராம அய்யரின் வீட்டிற்கு முன் நின்றபடி துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு பயபக்தியுடன் மிக மெதுவாக “சாமி…சாமி….” என்று குரல் கொடுத்தார். எழும்பி வந்த சேதுராம அய்யர், தன்னுடைய பண்ணையாள் வேளைகெட்ட நேரத்தில் குடும்பத்துடன் நிற்பதைப் பார்த்து பதறிப்போய், “என்னடா, இந்த நேரத்துல?” என்றார்.
“எங்க ஜாதிக்காரப் பயல் ஒருத்தன் சம்சாரி வீட்டுப் பொண்ண இழுத்துட்டு ஓடிட்டானாம் சாமி…. காவக்கார தேவரும் மத்த சம்சாரிகளும் சேரிக்குள்ள பூந்து எங்க குடிசைகளை எல்லாம் கொளுத்திட்டாங்க; ஆப்புட்ட ஆட்களையும் கண்ணு மண்ணு தெரியாம அடிச்சு நொறுக்கிக் கிட்டிருக்குறாங்க… அதான் எல்லோரும் உயிர் பொழச்சாப் போதுமின்னு ஊரைக் காலி பண்ணீட்டுப் போறொம் சாமி….மத்த பகடைங்கல்லாம் ஏற்கெனவே போயிட்டாங்க…நான்தான் சாமிகள் கிட்ட ஒரு வார்த்தை சொல்லீட்டுப் போயிடலாம்னுட்டு…..”
“யாரோ யாரையோ இழுத்துக்கிட்டுப் போனதுக்கு நீங்க என்னடா பண்ணுவேள்? வரவர இந்த ஊர்க் காராளுக்கு அறிவின்றதே இல்லாமப் போயிடுச்சு…அண்டிப் பொழைக்கிற ஊரை விட்டுட்டு எங்கடா போவீங்க…” அய்யர் கரிசனமாய்க் கேட்கவும் இருளாண்டி “தெரியல சாமி…” என்று ஒப்புச் சொல்லி அழத் தொடங்கி விட்டான்.
”முதல்ல அழறத நிறுத்துடா மடையா….எதுக்கெடுத்தாலும் அழுதுக்கிட்டு! அவாள் சொன்னா உடனே ஊரை விட்டுக் கெளம்புனுமா என்ன! எதுத்து நிக்கனுன்டா….. நீ ஊர விட்டல்லாம் போக வேண்டாம்; நம்ம ஏரிக்கரைத் தோப்பு நெலத்துல போயி குடிசை போட்டுத் தங்கிக்க…” என்றார்.
“உங்களுக்கு எதுக்கு சாமி பொல்லாப்பு; அவங்க உங்க கூட சண்டைக்கு வருவாங்க….” என்று பயந்தான் இருளாண்டி. “அதெல்லாம் நான் பேசிக்கிறேன்; நீ குடும்பத்தக் கூட்டிட்டு தோட்டத்துக்குப் போ; இன்னைக்கு ஒரு ராத்திரி எப்படியாவது சமாளிச்சுக்குங்க; நாளைக்கு குடிசை போட்டுரலாம்….” என்று அனுப்பி வைத்தார்.
அன்றைக்கிலிருந்து இருளாண்டியின் குடும்பம் அய்யரின் தோப்பிலேயே தங்கிக் கொண்டு அவரின் விவசாய வேலைகளை எல்லாம் செய்தார்கள். முதலில் சம்சாரிகள் வரிந்து கட்டிக் கொண்டு அய்யருடன் சண்டை போட்டுப் பார்த்தார்கள். அய்யர் மசிவதாய் இல்லை. அப்புறம் அய்யரின் மேலிருந்த மரியாதையாலும் இருளாண்டியின் குடும்பம் எந்த வம்பு தும்பும் வைத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதாலும் மேலும் ஊரை விட்டு ரொம்பவும் ஒதுங்கித் தானே வசிக்கப் போகிறார்கள் ஒழிந்து போகட்டும் என்றும் சம்சாரிகளும் இந்த ஏற்பாட்டைக் கண்டும் காணாமல் இருந்து விட்டார்கள்.
ஆகஸ்ட் 15, 1947 – சேதுராம அய்யர் தன் பண்ணையாட்களை யெல்லாம் அழைத்து தன் வீட்டில் சமைத்த பசு நெய்யொழுகும் சர்க்கரைப் பொங்கலை தொன்னை இலைத் துண்டங்களில் கரண்டி கொள்ளாமல் அள்ளி அள்ளிப் பரிமாறினார். அவர் முகத்தில் சந்தோஷம் கொப்பளித்தது.
“என்ன சாமி விசேஷம்…?” என்றான் இருளாண்டிப் பகடை.
“நம்ம தேசத்துக்கு சுதந்திரம் வந்துருச்சுடா; நம்மள அடிமையா வச்சு ஆண்டுக்கிட்டிருந்த வெள்ளைக்காரன் நம்ம நாட்டை விட்டு வெளியப் போப்போறாண்டா…..”
“அதனால நமக்கு என்ன சாமி?”
“அட முட்டாப் பயலே, நம்ம நாட்ட நாமளே, ராஜாங்கம் பண்ணப் போறம்டா…..”
“நீங்க ராஜாங்கம் பண்ணுவீங்க; நாங்க என்ன பண்ணப் போறோம் சாமி?” இருளாண்டியின் கேள்வி சேதுராம அய்யருக்கு சுரீலென்றது. அவருக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. இந்தியாவில் சாதிகளின் ஆதிக்கம் உதிரும் நாள் தான் உண்மையான விடுதலை; அது சித்திக்க இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடக்கனுமோ? என்று எண்ணிக் கொண்டார்.
“வியாக்கியானமெல்லாம் பண்ன்ணாம நீங்களும் சந்தோஷமா கொண்டாடுங்கடா; காந்தி இருக்கார்; அவர் உங்களக் கைவிட மாட்டாருடா……” என்றவர் “போடா, போயி சர்க்கரைப் பொங்கல சந்தோஷமா வாங்கிச் சாப்புடுடா, கேள்வி எதுவும் கேட்டுக்கிட்டு நிக்காம….” என்று விரட்டினார்.
1950 வாக்கில் அய்யரின் ஒரே பையனுக்கு டெல்லியில் மத்திய சர்க்காரில் வேலை கிடைத்து அவன் அங்கு போகவும், பையனை விட்டுப் பிரிந்திருக்க முடியாத அய்யரும் அய்யரம்மாவும் கிராமத்திலிருந்த நிலபுலன்களையும் சொத்து சுகங்களையும் விற்றுக் காசாக்கிக் கொண்டு டெல்லிக்கே போய்விட முடிவு செய்து, ஒவ்வொன்றாக விற்கத் தொடங்கினார்கள். கடைசியில் இருளாண்டியின் குடும்பம் குடிசை போட்டுத் தங்கியிருந்த ஏரிக்கரைத் தோப்பு நிலம் மட்டும் மீத மிருந்தது. அய்யர் இருளாண்டியை வீட்டிற்கு அழைத்தார்.
“எல்லாத்தையும் வித்திட்டீகளே சாமி, இனிமே இந்தப் பக்கமே வரமாட்டீகளா” இருளாண்டியின் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது.
“வயசான காலத்துல அங்கிட்டும் இங்கிட்டும் அலைய முடியாதில்லடா! அதான்; கொஞ்ச நஞ்ச தூரமா என்ன? நீ இப்ப இருக்குற தோட்டத்தப் பத்தி ஒரு முடிவு எடுக்கத் தான் உன்னைக் கூப்பிட்டேன்……”
“நாங்க வேற ஊரு பார்த்துக் கிளம்பிக்கிறோம் சாமி, நீங்க அதையும் வித்துக்குங்க…”
“உங்க பாட்டன் காலத்துலருந்து எங்கள அண்டியே பொழச்ச, உங்கள அப்படி நிர்க்கதியா விட்டுட்டுப் போக மனசு கேட்கலடா…பேசாம அந்த நெலத்த நீயே எடுத்துக்கடா…..”
“அய்யோ சாமி, என்கிட்ட ஏது அவ்வளவு பணம்? அதோட பகடை யெல்லாம் சொந்தமா நெலம் வச்சுப் பொழைச்சா, சம்சாரிங்க பார்த்துட்டு சும்மா இருப்பாங்களா என்ன?”
‘நான் முடிவு பண்ணீட்டன்டா; அந்த நெலம் உனக்குத் தான்; அதை உனக்கு நான் தானமாத் தர்றதா ஏற்கெனவே பத்தரம் எழுதியாச்சு…இந்தா பத்தரம்; பத்தரமா வச்சுக்கோ….” என்று மடியிலிருந்து ஒரு பத்திரத்தை எடுத்துத் தரவும், “சாமி…” என்றபடி அவரின் கால்களில் விழுந்தான்.
“அடக் கோட்டிப் பயலே எழுந்திருடா…” என்று அவனைத் தழுவி தூக்கி நிறுத்தி,”போய்ப் பார்த்து பதமா பொழச்சுக்கடா….” என்று ஆசிர்வதித்து அனுப்பி வைத்தார்.
“இதை அப்படியே வச்சுக்காதடா; தலையாரிட்டக் குடுத்து பத்தரப் பதிவு ஆபிஸுல போயி பதிஞ்சு வச்சுக்கடா….” என்றும் சொல்லித் தான் அனுப்பினார்.
சம்சாரிகள் எல்லாம் திரண்டு வந்து அய்யரிடம் சண்டை போட்டார்கள்.”பகடைப் பயலெல்லாம் சொந்த நெலத்துல விவசாயம் பண்ணுனா, அப்புறம் அவெங்க எப்படி எங்கள மதிப்பாங்க? போறபோக்குல ஊருக்குன்னு இருக்கிற வழமைகள எல்லாம் ஒடச்சுட்டுப் போகலாம்னு பார்க்குறீங்களா!” என்றார்கள். “எல்லோரும் மனுஷங்க தானடா…போய் வேலையப் பாருங்கடா…” என்று அவர்களைச் சமாதானப் படுத்தி அனுப்பி வைத்தார். ஆனாலும் ஆரம்பத்தில் இருளாண்டிக்கு அவர்கள் நிறைய தொந்தரவு கொடுத்தார்கள். போராடித் தான் தங்களை நிலை நிறுத்திக் கொண்டார்கள்.
கதை போல நிலம் தங்கள் கைக்கு வந்த வரலாற்றைச் சொல்லி, காலத்தின் கசங்களும் பழுப்புமேறிக் கிடந்த சேதுராம அய்யர் தன் பாட்டனுக்கு எழுதிக் கொடுத்த பத்திரத்தை எடுத்து நடேஷனிடம் கொடுத்தார் காளியப்பன்.
“இதெல்லாம் செல்லாது மிஸ்டர் ந்டேஷன். ரெஜிஸ்டர் ஆபிஸ்ல இந்தப் பத்திரம் பதிவு பண்ணப் படவே இல்ல…” அவசரமாய்ச் சொன்னார் பரமேஸ்வரன்.
நடேஷன் அந்தப் பத்திரத்தையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். சேதுராம அய்யரின் கையெழுத்தை கைகளால் மெதுவாய் வருடினான்.அவனது கண்களிலிருந்து கண்ணீர் பொங்கி வழிந்தது. நடேஷன் நா தழுதழுக்கப் பேசத் தொடங்கினான்.
“மன்னிக்கனும் மிஸ்டர் பரமேஸ்வரன்; இந்த நெலத்த காளியப்பனே தொடர்ந்து அனுபவிக்கட்டும். தானமாத் தந்தத திருப்பி வாங்குறது முறை இல்ல. நீங்க உங்க பிளான்ல மாற்றம் பண்ணிக்குங்க….மிஸ்டர் காளியப்பன் , எதுக்கும் நாளைக்கு நீங்க பத்திர பதிவு அலுவலகத்துக்கு வந்துடுங்க, இதை முறைப்படி உங்க பேருக்கே மாத்திக் குடுத்துதுறேன்….அதான் உங்களுக்குப் பின்னாடி பிரச்னை வராது….” காளியப்பனின் மொத்தக் குடும்பமும் நடேஷனைக் கைகுவித்து வணங்கியது.
(நன்றி : தினமணிக் கதிர்: 20.09.2009 & கல்கி: 07.06.2009)

Thursday, November 5, 2009

கவிதை: பறக்கும் கம்பளம்

சிறுவயதில் பள்ளிக்குப் போக - நான்
அடம் பிடிக்கும் போதெல்லாம்
அம்மா சொல்வாள் அடிக்கடி
"ஒழுங்காய் பள்ளிக்குப் போய்
நல்லபடியாய் படித்து முடித்தால்
உனக்கு நான்
பறக்கும் கம்பளம் ஒன்று வாங்கி
பரிசளிக்கிறேன் ... " என்று.

ஆச்சரியத்தில் கண்கள் விரிய
ஆகட்டுமென்று ஓடியிருக்கிறேன்
ஆகாயம் பார்த்தபடி பள்ளிக்கு;
கதைகளில் கேட்டதுண்டு
சினிமாக்களில் பார்த்ததுண்டு - ஆயினும்
பார்த்ததில்லை நிஜத்தில்
பறக்கும் கம்பளத்தை.........

ஏறி உட்கார்ந்ததும் விர்ரென்று
மனதில் நினைக்கும் இடத்திற்கு
பறந்து போய் இறக்கி விடுமாம்;
எத்தனை சந்தோஷம் அது!
நினைக்கும் போதே பறக்கிற உணர்வில்
நெஞ்செல்லாம் இனித்திருக்கும் அப்போது!

கனவுகளில் மிதந்தபடி
காத்திருந்தேன் பறக்கும் கம்பளம்
கைவசமாகும் நாளுக்காக.
அப்புறம் தான் புரிந்தது.......
அறிவு வளர விவரம் புரிய
அம்மா சொன்னது பொய்யென்று !

அவள் சொன்ன அனேகம் பொய்களில்
இதுவும் ஒன்றென்று விட்டுவிட முடியாமல்
திணறித் திரிந்தேன் சில நாட்களுக்கு;
ஏன் இப்படி ஏமாற்றினாள்?

எல்லாப் பெற்றோர்களும்
சைக்கிளோ உடைகளோ
தின்பண்டங்களோ - அல்லது
சாத்தியமான வேறொன்றோ
வாங்கித் தருவதாய்ச் சொல்லித்தான்
படிக்க வைப்பார்கள் பிள்ளைகளை;
இவள் மட்டும் ஏன்
இல்லாத ஒன்றிற்கு ஆசை காட்டினாள்?

யோசித்தபோது புரிந்தது;
சைக்கிளோ வேறெதுவோ
வாங்கித்தர வசதியில்லை அவளுக்கு
இல்லாத ஒன்றை இரையாய்ப் பிடித்து
இழுத்து வந்திருக்கிறாள் இவ்வளவு தூரம்
பாவம் அம்மா என்று
பரிதாப பட்டேன் அவளுக்காக........

அவளிடமே இது பற்றி
ஒரு முறை கேட்டபோது
"வாக்குத் தந்தபடி எப்போதோ
வாங்கித் தந்து விட்டேன்
பறக்கும் கம்பளத்தை உனக்கு;
எதுவென்று புரியவில்லையா?
காலம் உணர்த்தும் மகனே
காத்திரு அதுவரை" என்று
நழுவிப்போனாள் சிரித்தபடி......

அப்போதும் புரியவில்லை;
அறிவு கொஞ்சம் கம்மி தானெனக்கு.
ஒவ்வொரு நாடாய்ப் பறந்து
உலகம் சுற்றும் போது
உண்மை புரிந்த தெனக்கு; அவள்
பரிசளித்த பறக்கும் கம்பளம்
பத்திரமாய் இருக்கிறது என்னிடம்
கல்வி என்னும் பேறுருவில்....

ஆசை ஆசையாய் அம்மா
பரிசளித்த பறக்கும் கம்பளத்தில்
ஒரே ஒருமுறை கூட அவளை
உட்கார்த்தி அழகு பார்க்கும்
பாக்கியந்தான் இல்லாமலானது - எனது
வாழ்வின் இன்னொரு அவலம்!

(குறிப்பு: இந்தக் கவிதை அன்புடன் இணையதளம் 2007ல் நடத்திய கவிதைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றது)

கவிதை :வாகனங்களும் வாழ்க்கைப் பயணங்களும்

கிராமத்தின் வீதிகளில்
கால்களில் புழுதி படிய
நடந்து கொண்டிருந்தேன்
வெயிலின் சுகம் உணர்ந்தபடி.....


கொதிக்கும் தார்ச் சாலையில்
கொண்டு போய் எறிந்தது விதி!
பாதம் பொசுங்கி பரிதவித்து
சைக்கிளில் போகிறவனைப் பார்த்து
சபலம் வந்தது கொஞ்சம்;
முட்டி மோதி முனைந்ததில்
கைவசமானது ஒரு சைக்கிள்!


குரங்கு படல் போட்டுப் பழகி
சில்லு மூக்கு உடைந்து
சிராய்ப்புகள் பல கடந்து - என்
கட்டுப்பாட்டுக்குள் சைக்கிள் வரவும்
விட்டுவிடுதலையான உணர்வில்
சிட்டுக்குருவியைப் போல்
பறந்து திரிந்தேன் வீதிகளில்!


சக பயணிகளின் வேகத்திற்கு
ஈடுகொடுக்க முடியவில்லை
எனது சைக்கிளால்....
எல்லோரும் மிக எளிதாய்
என்னைக் கடந்து போகவும்
எரிச்சலானது பயணங்கள் மீது.....!
பெடலை மிதித்து மிதித்து
கால்களில் வலி மிகுந்து
தொலைதூரப் பயணங்கள் தொந்தரவானதில்
சலித்துப்போனது சைக்கிள் பயணம்!


மோட்டார் சைக்கிளின் மீது
மோகம் வந்தது அப்புறம்!
மீண்டுமொரு இடைவிடா தேடலில்
மின்னலென கைக்கும் எட்டியது!
காதல் மனைவி பின்னால் அமர்ந்து
கட்டிப் பிடித்து வர
கற்றைக் குழலும் சேலைத் தலைப்பும்
காற்றிலாடி கவிதை பாட
காற்றைக் கிழித்துப் பறந்தேன்;
சந்தோஷங்கள்
சதிராடிய தினங்கள் அவை!


அதிக நாட்கள் நீடிக்கவில்லை
அந்த சந்தோஷங்கள்;
சீறிப்போகும் வாகனங்கள்
சினேக மாயில்லை;
கொஞ்சம் அசந்தாலும் நம்மை
முட்டித் தள்ளி முன்னேறி
கடந்து போக எப்போதும்
காத்திருந்தது ஒரு கூட்டம்!
வெயிலும் மழையும் சேதப்படுத்த
வேகம் என்னைக் கலவரப்படுத்த
பாதுகாப்பற்ற பயணமாயிருந்தது அது!


காரில் கடந்து போனவர்கள்
கனவை வளர்த்தார்கள்;
அடுத்த கட்டத்திற்கு அலைபாய
ஆவலாயிற்று மனது!
கார் வாங்குவதற்கு முன் - அதை
நிறுத்துவதற்கு வசதியாக
விசாலமான வெளிகளுடன் ஒரு
வீடும் வாங்க வேண்டியிருந்தது!
கடின உழைப்பிலும் பின் தேதியிட்ட
காசோலை வசதிகளிலும்
கைகூடிற்று காரும் வீடும்!
குளிரூட்டப்பட்ட காற்றும்
கூடவே இதமான இசையுமாய்
பரவசமாயிருந்தன பயணங்கள்!
இருந்தும் -
தேடல்கள் இன்னும் தீர்ந்தபாடில்லை;
குண்டும் குழியுமான சாலைகளும்
நீண்டு நெளியும் வாகன நெரிசல்களும்
சலிப்பூட்டுகின்றன பயணங்களை......
குட்டி விமானமிருந்தால்
இலக்குகளை இன்னும்
விரைவாய் அடையலாமென்ற
வேகம் பிறந்திருக்கிறது மனதில்....
ஆசைகளும் தேடலும் எல்லைகளற்றவை;
முடிவற்று நீளும் பாதையில்
மூச்சிறைக்க ஓடிக் கொண்டிருக்கிறேன்.....
பயணங்கள் ஒரு போதும் முடிவதில்லை!


சிறுகதை - மீண்டும் துளிர்த்தது


ஜோஸ்யக் கிளியின் முன்னால் பரப்பப் பட்டிருக்கும் ராசிக் குறிப்புகள் போல, தனசேகருக்கு முன்னால் முப்பத்திரண்டு கடிதங்கள் சிதறிக் கிடந்தன. அவனுடைய நண்பர்கள் அவனுக்காகக் கொடுத்திருந்த நான்கு வரித் திருமண விளம்பரத்திற்கு வந்திருந்த கடிதங்கள் அவை. கிளி, ஜோஸ்யக்காரன் விரல்களுக்குள் ஒளித்துக்காட்டும் நெல்மணியைக் கண்டதும் மிக எளிதாக ராசிக்குறிப்பைத் தேர்ந்தெடுத்து விடுகிறது. இவனுக்குத் தான் எப்படி இந்தக் குவியலிலிருந்து தன் மனைவியைத் தேர்ந்தெடுப்ப தென்ற சூட்சுமம் புரியவில்லை. நாற்பது வயதைக் கடந்துவிட்ட மனைவியை இழந்த ஒரு விடோயரை மணந்து கொள்ளத் தான் எவ்வளவு பேர் - இளம்பெண்கள், முதிர்கன்னிகள், விதவைகள், விவாகரத்தானவர்கள் என்று - ஆர்வம் காட்டி விண்ணப்பம் அனுப்பி இருக்கிறார்கள்! தனசேகருக்கு மிகவும் ஆச்சர்யமாகவும், இவர்களிலிருந்து ஒருத்தியைத் தேர்ந்தெடுத்து, மீண்டும் ஒரு முறை கல்யாணம் பண்ணி…. ஆயாசமாகவும் இருந்தது.
சுமித்ராவின் மீது கோபம் கிளர்ந்தது அவனுக்குள். ஏன் இப்படிப் பண்ணினாள்? அவனுடன் ஐந்து வருஷங்கள் கூட முழுதாய் வாழ்ந்து முடிக்காமல் அல்ப ஆயுளில் விருட்டென்று விடைபெற்றுக் கொண்டு போய் விட்டாளே ராட்சஸி! ஆனால் அவளை மரணத்தை நோக்கி தள்ளியதில் அவனுக்கும் தானே பங்கிருக்கிறது என்ற குற்ற உணர்ச்சியும் பொங்கியது. அவன் மட்டுமா? முதல் காரணம் அவனுடைய அம்மா.அவள் தான் சுமித்ராவைத் தேடிப்பிடித்துக் கொண்டு வந்து அவனுக்கு மணமுடித்து வைத்தாள். ஆனால் கல்யாணமான ஆறாவது மாதத்திலிருந்தே அவளைக் கரித்துக் கொட்டத் தொடங்கி விட்டாள் – சீக்கிரம் பேரனோ பேத்தியோ பெற்றுக் கொடுக்கச் சொல்லி. நாளுக்கு நாள் அவளின் நச்சரிப்பும் வார்த்தைகளால் வதைப்பதும் அதிகமானது. அவ்வப்போது தன்னுடைய மகனுக்கு வேறொரு கல்யாணம் செய்து வைத்து விடுவதாய் பயமுறுத்த வேறு செய்தாள். தனசேகர் கூட அம்மாவிடம் இதற்காக சண்டை போட்டிருக்கிறான்.
அடுத்தது இந்த சமூகம்! எங்கு போனாலும் ‘இன்னும் குழந்தை இல்லையா?’ என்கிற கேள்வி சுமித்ராவை சித்ரவதை செய்வதாய் இருந்தது. ஆளாளுக்கு அறிவுரைகளை வேறு தாராளமாய் அள்ளி வழங்கிய படி கடந்து போனார்கள். அப்புறம் தொலைக்காட்சி, சினிமா, பத்திரிக்கைகள் என்று எல்லாவற்றிலும் பெண்ணென்றால் பிள்ளை பெற்றுத் தர வேண்டும்; குடும்பத்தின் சந்ததி தழைக்க எப்பாடு பட்டாலும் அவள் உதவ வேண்டும் என்கிற சித்திரத்தையே முன் வைத்து அப்படி முடியாத பெண்களை குற்ற உணர்ச்சி கொள்ள வைத்தன.
ஒருமுறை அவர்கள் பார்த்த திரைப்படம் சுமித்ராவை விரக்தியின் விளிம்புக்கே இட்டுச் சென்றது. அந்த திரைப்பட இயக்குநரை அவளுக்கு ரொம்பவும் பிடிக்கும்; அவர் இயக்கி நடித்த ஒரு படத்தையும் அவள் தவற விட்டதே இல்லை. அந்தத் திரைப்படத்தின் கதாநாயகன் மிகவும் பொறுப்புள்ள ஆசிரியர்; தன்னிடம் படிக்கும் பெண்ணைக் காதலிக்கக் கூடாது என்கிற உன்னத இலட்சியங் களெல்லாம் உடையவன். அப்படிப்பட்டவன் பெண்களுக்கு அவர்களின் ஒவ்வொரு பருவத்திற்கும் தக்கபடி மதிப்பெண் போடுகிற அற்பத்தனமான காரியத்தைச் செய்கிறான் – பிறக்கும் போது இத்தனை மார்க்; ருதுவாகும் போது இத்தனை மார்க்; திருமணமானதும் இத்தனை மார்க்; பிரசவிக்கும் போது இத்தனை மார்க் என்று. ஒரு பெண் என்பவள் ஒரு பிள்ளைக்குத் தாயாகும் போது தான் முழுமை பெறுகிறாள் என்கிற முட்டாள் தனமான கருத்தைச் சொல்கிறது அந்த திரைப்படம்.
அந்த திரைப்படத்தைப் பார்த்து வந்த தினத்தில் சுமித்ரா இரவெல்லாம் தூங்கவே இல்லை. தன்னால் முழுமையான பெண்ணாக வாய்ப்பே இல்லையா என்பதையே திருப்பித் திருப்பிக் கேட்டு அரற்றிக் கொண்டிருந்தாள். தனசேகரின் சமாதானம் எதுவுமே அவளிடம் எடுபடவில்லை. “அவ்வளவு பெரிய டைரக்டர் சொன்னால் சரியாத்தான் இருக்கும்…” என்றாள். “அப்படி இல்லம்மா, அவரோட முதல் மனைவிக்குக் கூட குழந்தை இல்லை; அதனால அவங்க முழு மனுஷி இல்லையா என்ன?” என்று இவன் கேட்கவும், “அப்படித் தான் போலருக்கு; அதான் அவங்களும் சீக்கிரமே செத்துப் போயிட்டாங்க…” என்றாள் விரக்தியாய். அன்றைக்கு ராத்திரியே திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் தூக்கத்திலேயே சுமித்ராவின் உயிர் பிரிந்தது.
சுமித்ரா இறந்த ஒரு சில மாதங்களிலேயே அவனின் அம்மாவும் இறந்து போனது, மனித மனங்களின் மர்மம் ஆழங் காணவே முடியாத தென்பதற்கான மற்றுமொரு அழியா சாட்சியம். தனிமை தனசேகரைத் தின்று கொண்டிருக்க, அவனின் அலுவலக நண்பர்கள் தான் வற்புறுத்தி அவனை இன்னொரு திருமணத்திற்கு இணங்க வைத்து, இந்த விளம்பரத்தை வெளியிட்டார்கள்.
வந்திருந்த கடிதங்களை மெதுவாய் மேலோட்டமாய்ப் புரட்டிக் கொண்டிருந்தபோது ஒரு கடிதத்துடனேயே ஒட்டப் பட்டிருந்த பாஸ்போர்ட் அளவிலான போட்டோவிலிருந்த முகம் கொஞ்சம் பரிச்சயமான தாயிருக்கவே உற்றுப் பார்த்தான். காலம் தன் ரேகைகளை அழுத்தமாய் பதித்து அந்த முகத்தில் நிறைய மாற்றங்களை நிகழ்த்தியிருந்த போதிலும் அவனுக்கு அந்த முகத்தை அடையாளம் தெரியவே செய்தது. பெயரைப் படித்தவனுக்கு நரம்புகளிலெல்லாம் ஒரு சிலிர்ப்பு ஓடியது. மறக்க முடியுமா அன்னபூரணியை! அவள் எப்படி இந்தக் கடிதக் குவியலுக்குள்…..?
தனசேகர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலங்களில் பேச்சுப் போட்டிகளிலும் கவி அரங்கங்களிலும் கலக்கிக் கொண்டிருந்தான். ஒருமுறை கோவையில் நடை பெற்ற கல்லூரிகளுக் கிடையிலான கவிதைப் போட்டியில் தான் அன்னபூரணியைச் சந்தித்தான். அவளும் கவிதைப் போட்டியில் கலந்து கொள்வதற்காக மதுரையில் ஒரு பெண்கள் கல்லூரியிலிருந்து வந்திருந்தாள். அவள் வாசித்த கவிதை அவளைப் போலவே எளிமையான அழகுகளுடன் கவித்துவம் பொங்க அற்புதமாய் இருந்தது. ஆனால் அது கவியரங்குகளில் வாசிக்கப் படக் கூடிய கவிதை அல்ல; எழுதப்பட்டு தனியாய் வாசித்தால் இலக்கிய அனுபம் தரக்கூடிய கவிதை. மாணவர்களுக்குப் புரியாததால், அவளை வாசிக்கவே விடாமல் கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணி மேடையிலிருந்து கீழே இறக்கி விட்டு விட்டார்கள்; பாவம்!
தனசேகர் வாசித்த கவிதைக்குத் தான் அன்றைக்கு முதல் பரிசு கிடைத்தது. அவனுக்கு கவி அரங்குகளின் சூட்சுமம் தெரியும். நடுவர்களாய் உட்கார்ந்திருக்கும் தமிழாசிரியர்களுக்கு கவிதை பற்றிய ஒரு மண்ணாங்கட்டி புரிந்துணர்வும் இருக்காது. நவீன தமிழ் இலக்கியத்தின் பக்கம் தலைவைத்தும் படுக்க மாட்டார்கள்! மாணவர்களின் கைதட்டல்களை வைத்துத் தான் மதிப்பெண்கள் போடுவார்கள். வார்த்தைகளில் கொஞ்சம் நெளிவு சுளிவுகள்; வாசிப்பதில் ஏற்ற இறக்கம்; அங்கங்கே பெண்களைச் சீண்டும் பிரயோகங்கள்… இருந்தால் போதும்; மாணவர்கள் கைதட்டி ரசித்து முதல் பரிசை வாங்கிக் கொடுத்து விடுவார்கள். அன்றைக்கும் அதுதான் நடந்தது. போட்டி முடிந்ததும் இவன் வலியப் போய் அன்னபூரணியிடம் அவளின் கவிதையை சிலாகித்துப் பேசினான். அவளுக்கோ முகத்தில் கோபம் கொப்பளித்தது ”உங்க கவிதைக்குத் தான் முதல் பரிசு அறிவிச்சிருக்காங்க; நீங்க என் கவிதையை பாராட்டிப் பேசுறீங்க….! என்ன நக்கல் பண்றீங்களா? இல்ல ரூட் போடலாம்னு பார்க்குறீங்களா? புகழ்ந்து பேசுனா மடங்குற பொண்ணு நானில்ல; அதுக்கு வேற ஆளப் பாருங்க…” என்றாள் படபடவென்று.
தனசேகருக்கு என்னவோ போல் ஆகிவிட்டது.முகம் வெளிறி அங்கிருந்து விலகிப் போய் விட்டான். இருந்தும் அவளின் கவிதை அவனைத் தூங்க விடாமல் இம்சித்தது.அரங்கத்தில் அந்தக் கவிதைக்கு ஏற்பட்டுவிட்ட அவமானத்தைத் துடைக்க வேண்டுமென்று துடித்தான். தமிழ் மன்றத் தினரிடமிருந்து அவளின் கவிதையின் கையெழுத்துப் பிரதியை வாங்கி அதை அப்படியே ஒரு இலக்கிய சிறு பத்திரிக்கைக்கு அனுப்பி வைத்தான்.
அடுத்த மாதமே அது அந்தப் பத்திரிக்கையில் பிரசுரமானது. ஒரு சிறு கடிதம் எழுதி அவளின் கவிதை பிரசுரமான இதழுடன் அவளின் கல்லூரி முகவரிக்கு அனுப்பி வைத்தான்.அதற்கு அடுத்த இதழில் அந்தக் கவிதையைப் பாராட்டி நிறைய வாசகர்கள் கடிதம் எழுதியிருந்தார்கள். அதையும் வாங்கி அவளுக்கு அனுப்பி வைத்தான். அப்புறம் வந்த கவி அரங்கத்தில் சந்தித்த போது அவளே தேடி வந்து பேசினாள்.
தன்னுடைய கவிதையை அச்சில் பார்த்த சந்தோஷமும் மலர்ச்சியும் அவளின் முகத்தில் அப்பட்டமாய் வழிந்தது. அன்றிலிருந்து இருவருக்குமான நட்பு துளிர்விட்டு புதுப்புதுக் கிளைக ளுடன் விரியத் தொடங்கியது. பரிசு பெற வேண்டுமென்கிற அக்கறை கொஞ்சமு மில்லாமல் இருவரும் சந்தித்துக் கொள்வதற்காகவே கவி அரங்கங்களிலும் பேச்சுப்போட்டியிலும் பட்டிமன்றங்களிலும் கூடக் கலந்து கொள்ளத் தொடங்கினார்கள்.
பட்டாம் பூச்சிகளாய் சிறகடித்துப் பறந்த கல்லூரிக் காலம் முடிந்து வேலைக்காக அல்லா டிய நாட்களிலும் இருவருக்குமான நட்பும் நேசமும் உயிர்ப்புடனிருந்தது. தனசேகருக்கு சென்னை யில் வேலை கிடைத்து, தாராளமாய் சம்பளம் வரத் தொடங்கியதும், கல்யாணம் பண்ணிக்கொள்ள தைரியம் வந்தவுடன், அவன் மனதிற்குள் முதலில் மனைவியாய் நிழலாடியவள் அன்னபூரணிதான். தப்பாக நினைத்துக் கொள்வாளோ என்கிற தயக்கத்தையும் மீறி, அவளைத் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்கிற விருப்பத்தை அவளிடம் தெரிவித்து விட்டான்.
அவள் ரொம்ப நேரத்திற்கு எதுவுமே பேசவில்லை. அப்புறம் சிரித்துக் கொண்டே சொன் னாள். “உன்னை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டு உன் கூட வந்துட்டா, அப்புறம் எங்க மாமாவ யாரு கட்டிப்பா…?” அவள் சீரியஸாகச் சொல்கிறாளா, இல்லை சும்மா விளயாட்டுக்குச் சொல்கி றாளா என்று குழப்பமாக இருந்தது. அவளுக்கு அப்பா இல்லை என்று ஏற்கெனவே சொல்லி இருக்கிறாள். ஆனால் அவளைக் கல்யாணம் பண்ணிக் கொள்வதற்காகவே ஒரு தாய்மாமா தயாராக இருக்கிற விஷயத்தை இதுவரைக்கும் அவள் சொன்னதே இல்லை.
அன்னபூரணியின் அப்பா ஆசிரியராக உத்தியோகம் பார்த்தவர். அவரின் காலத்திலெல் லாம் வீடுவீடாகப் போய் கிராமத்து மனிதர்களிடம் பேசி குடும்பக் கட்டுப்பாட்டிற்கு ஆள் பிடிக்க வேண்டுமென்பது ஆசிரியப் பணியின் ஒரு பகுதியாகவே இருந்திருக்கிறது. அப்படியிருந்தும் அந்த குடும்பக் கட்டுப்பாட்டை தன் விஷயத்தில் கடைபிடிக்க வேண்டுமென்று அவருக்குத் தோணவே இல்லை;ஆண் வாரிசு வேண்டுமென்ற அன்றைய பத்தாம் பசலித் தனத்திற்கு அவரும் பலியானதின் விளைவு அடுத்தடுத்து ஐந்து பெண்கள்; எப்போதும் வீட்டில் வறுமை. சின்ன வயதிலேயே செத்தும் போய் விட்டார். நண்டும் சிண்டுமாய் ஆறு பெண் குழந்தைகளுடன் தனிமரமாய் நின்ற அன்னபூரணியின் தாயை அவரின் தம்பி தான் ஆதரித்திருக் கிறார். அவரைக் கல்யாணம் செய்து கொள்வது தான் தன்வரை சரியாக இருக்கு மென்றும், அதன் மூலம் தான் தன்னுடைய தங்கைகளையும் கரை சேர்க்க முடியுமென்றும் அவள் சொன்னாள். தன சேகரும் இதற்கு மேல் வற்புறுத்துவது முறையல்ல என்று ஒதுங்கிக் கொண்டான். அதற்கப்புறம்
அவளை மறுபடியும் சந்திக்கிற சந்தர்ப்பமே அமையவில்லை அவனுக்கு.
அன்னபூரணியிடமிருந்து வந்திருந்த கடிதம் வித்தியாசமாக இருந்தது. அது திருமண விளம்பரம் பார்த்து அனுப்பப் பட்டதாகவே தெரியவில்லை. ஏதோ வேலைக்கான விண்ணப்பம் போல ஆங்கிலத்தில் டைப் பண்ணப்பட்டு பாஸ்போர்ட் அளவிலான நிழற்படத்துடனிருந்தது. ஏதோ தவறு நடந்திருக்கிறது என்று தனசேகருக்குப் புரிந்தது. கடித மேலுறையிலிருந்த முகவரியை திரும்பவும் வாசித்தான். அவனுடைய விளம்பரத்தின் பெட்டி எண்:KB3425. அன்னபூரணி விண்ணப்பித்திருக்கும் விளம்பரப் பெட்டி எண்:KR3425. அவள் Rயை Bமாதிரி எழுதியிருந்ததால் அந்தக் கடிதம் தவறுதலாக தனக்கு அனுப்பப் பட்டு விட்டது என்கிற விபரம் புரிந்தது அவனுக்கு.
தற்செயலாக இருந்தாலும், அன்னபூரணியின் கடிதம் தவறுதலாக தனக்கு அனுப்பப் பட்டிருப்பதில் ஏதோ சூட்சுமமான செய்தி ஒளிந்திருப்பதாய் அவனுக்குத் தோன்றியது. அன்னபூரணியைப் போய்ப் பார்த்து வந்தால் என்ன என்கிற எண்ணம் மெல்ல அவனுக்குள் எட்டிப் பார்த்தது. திடீரென்று போய் நின்றால் அவள் தன்னை எப்படி எதிர் கொள்வாள்? ஒருவேளை தன்னுடைய வருகை அவளின் குடும்பத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்தி விடுமோ? என்ன ஆனாலும் பரவா யில்லை; அவளைப் போய்ப் பார்த்து வருவதென்று தீர்மானித்தான் தனசேகர்.
திருநெல்வேலி டவுனின் முக்கிய வீதியிலிருந்த அன்னபூரணியின் வீட்டைக் கண்டுபிடிப் பதில் அவனுக்கு சிரமமேதும் இருக்கவில்லை. வீட்டின் மையத்தில் மூன்று படிக்கட்டுகளும் அதன் இருபுறமும் சிமெண்ட் திண்ணைகளும், நிறைந்த பூ வேலைப் பாடுகளுடன் ஓங்குதாங்காய் நின்ற தேக்கு மரக் கதவுகளும் பழம் பெருமை பேசி அவனை வரவேற்றன. திண்ணையில் கொஞ்சம் வயது கூடிய ஒரு பெண் வெறும் தரையில் படுத்து கண் மூடிக் கிடந்தாள். இவன் அங்கு போய் நின்றதும் அரவம் கேட்டுக் கண் விழித்து எழுந்தவள், தலைமுடியை அள்ளி முடிந்தபடி, “நீ யாருப்பா? உனக்கு என்ன வேணும்” என்றாள்.
“நான் சென்னையிலிருந்து வர்றேன்; இங்க அன்னபூரணிங்குறது….”
“என் பொண்ணு தான்; கொஞ்சம் இருப்பா, கூப்புடுறேன்…..” என்றபடி வீட்டுக்குள் பார்த்து சத்தங் கொடுத்தாள். அவசர அவசரமாய் வெளியே வந்த அன்னபூரணி வயசுக்குச் சற்றும் பொருத்தமில்லாமல் பாவாடை தாவணி அணிந்திருந்தாள். இவனைக் கொஞ்ச நேரம் யாரோ போல் புரியாமல் ஏற இறங்கப் பார்த்து விட்டு சட்டென்று ஞாபகம் வந்தவளாய், ”ஏய் தனா, நீ எங்க இந்தப் பக்கம்?” என்றபடி மலர்ந்தாள். “அம்மா; இவர் தனசேகர்….கவிதையெல்லாம் எழுதுறவர்…ஏற்கெனவே இவரப் பத்தி உன்கிட்ட சொல்லி இருக்கேன்ல…” என்று அறிமுகப் படுத்தினாள். அவளின் முகத்தில் தான் அணிந்திருந்த உடைக்காக கூச்சம் படர்ந்தது. “அம்மாட்ட பேசிட்டு இரு; ஒரு நிமிஷத்துல வந்துடுறேன்….” என்றபடிஅவசரமாய் வீட்டுக்குள் போனாள்.
“அன்னம் உன்னப் பத்தி நெறைய சொல்லி இருக்கா தம்பி, இன்னம் கடிதமெல்லாம் எழுதறாளா….?”என்று அன்னபூரணியின் அம்மா கேட்கவும் அவனுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. அதற்குள் அன்னபூரணியே ஒரு டம்ளரில் மோருடன் வந்து விட்டாள். இப்போது பாவாடை தாவணியைக் கலைந்து விட்டு, சேலை அணிந்து இன்னும் அழகாய் இருந்தாள்.
“இவ்வளவு வருஷங்களுக்கப்புறம் மறுபடியும் உன்னைப் பார்த்தது மனசுக்கு ரொம்பவும் சந்தோஷமா இருக்கு தனா! ஆமா, இந்த வீட்டு முகவரி உனக்கெப்படிக் கிடைச்சது? நாங்களே இங்க குடி வந்து ரெண்டு மாசந்தானே ஆகுது?” என்றாள். தனசேகர் எல்லா விபரங்களும் சொல்லி அவளின் கடிதத்தை எடுத்துக் காண்பித்தான். கொஞ்ச நேரம் பலதையும் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். “இரு உனக்கு குடிக்கிறதுக்கு காஃபி கலந்து எடுத்துட்டு வர்றேன்; நீ தான் காஃபின்னா பொண்டாட்டியையே விக்கிற ஆளாச்சே…” என்றபடி எழுந்து சமையலறையை நோக்கிப் போனாள் அன்னபூரணி.
“பூரணிக்கு எத்தனை குழந்தைங்கம்மா? ஒண்ணையுமே கண்ணுல காங்கல….” என்று அன்னபூரணியின் அம்மாவிடம் பேச்சுக் கொடுத்தான் தனசேகர். கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல் , அவனையே குறுகுறுவென்று பார்த்திருந்து விட்டு “கொழந்தையா? அவளுக்கு இன்னும் கல்யாண மே ஆகலையேப்பா….” என்றாள் அவள். இவனுக்கு ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.
“பூரணி சொன்னாங்களே, அவங்களக் கல்யாணம் பண்றதுக்காக தாய்மாமன் அதான் உங்களோட தம்பி காத்திருந்த கதையெல்லாம்….” பூரணியின் அம்மா சிரித்தாள் “எனக்கு தம்பின்னெல்லாம் யாருமில்லப்பா… இன்னும் சொல்லப்போனா, அது வரமா சாபமான்னே தெரியல; எங்க சந்ததியில ஆறேழு தலைமுறையா ஆண் வாரிசே கிடையாது… எங்க பாட்டிக்கு எட்டுப் பொண் குழந்தைங்க; எங்க அம்மாவுக்கு ஏழு; எனக்கு அஞ்சு; இவளோட தங்கைகளுக்கும் ஆளுக்கு ரெண்டோ மூணோ எல்லாமே பெண் குழந்தைங்க தான். அஞ்சு பொண் பொறந்தாலே அரசனும் ஆண்டிம்பாங்க; ஆனா நாங்க யாருமே ஆண்டியாகல; நல்லாத்தான் இருக்கோம். நீ அன்னத்தக் கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்பட்டியாமே! அன்னைக்கு முழுவதும் அழுதுக்கிட்டே இருந்தாள்; உன் மேல அவளுக்கு ரொம்ப இஷ்டம்; தெரியுமா…..”
“பூரணிக்கு என்மேல ரொம்ப இஷ்டம்ங்குறீங்க; அப்புறம் ஏன் புதுசா ஒரு தாய் மாமாவ உருவாக்கி என்னை தட்டிக் கழிக்கனும்? புரியலேயேம்மா….” தனசேகர் கேட்கவும் அவள் பொட் டென்று அழத் தொடங்கி விட்டாள். அன்னபூரணி காஃபியுடன் வரவும், கண்களைத் துடைத்துக் கொண்டு, “நீ காஃபி குடிப்பா…” என்றாள். காஃபி, பிரபஞ்சன் தன் கதைகளில் வர்ணிக்கும் தரத்தில் அடி நாக்கில் கசப்பும் மேலே தித்திப்புமாக அற்புதமான ருசியுடன் இருந்தது.
“ஏன் பூரணி இன்னும் நீ கல்யாணம் பண்ணிக்கல? அம்மா ரொம்ப வருத்தப்பட்டு அழறாங்க, தெரியுமா...” என்றான் தன்சேகர்.“கல்யாணம் அத்தன முக்கியமா, என்ன” என்றாள் சலிப்புடன்.
“கல்யாணங்கிற ஏற்பாட்ல நம்பிக்கை இல்லையா உனக்கு”
“நம்பிக்கை இருந்தாப் போதுமா, அதுக்கான தகுதி வேணாமா?” மையமாய் சிரித்து மழுப்பினாள். அவளின் கண்களில் சோகம் விளிம்பு கட்டியது. தனசேகருக்கு அவள் சொன்னதின் அர்த்தம் விளங்கவில்லை. ஆனால் அவளின் அடி மனதில் ஏதோ காயம் இருப்பது மட்டும் புரிந்தது.
“கல்யாணத்துக்கு பெருசா என்ன தகுதி வேணும் பூரணி, யூ மீன் டௌரி…..”
“விடு தனா, அப்படி இப்படின்னு நாற்பது வயசத் தாண்டியாச்சு; இதுக்கு மேல என்ன
கல்யயணம் காட்சின்னு….”
“இளமைக்குக் கூட கல்யாணம் அத்தன முக்கியமில்ல பூரணி; முதுமைக்குத் தான் ஒரு துணையும் தோழமையும் கண்டிப்பாத் தேவை; வெட்கத்த விட்டு இப்பவும் கேட்கிறேன்; நீ சம்மதிச்சா நாமளே கல்யாணம் பண்ணிக்கலாம் பூரணி…..” அவளிடமிருந்து நீண்ட மௌனமே பதிலாக வெளிப்பட்டது.மறுபடியும் அவனே பேசினான்.
“உன்னோட பிரச்னை எதுன்னாலும் என்கிட்ட நீ வெளிப்படையாப் பேசலாம் பூரணி…. எனக்கு பணத்தேவை எதுவும் இல்ல; அதால டௌரிங்கிற பேச்சே வேண்டியதில்ல… செவ்வாய் தோஷம் மாதிரியான ஜாதகக் கோளாறுன்னா, அதுல எல்லாம் எனக்கு துளி கூட நம்பிக்கையில்ல; உங்க அம்மாவையும் நம்ம கூடவே வச்சுப் பராமரிக்குறதுலயும் எனக்கு ஆட்சேபணை எதுவுமில்ல” அன்னபூரணி இப்போதும் பதிலேதும் பேசாமல் காலிக் கோப்பைகளுடன் உள்ளே போனாள்.
”அவளோட பிரச்னைய அவளால உன்கிட்ட சொல்ல முடியாது தம்பி… உன்னப் பார்த்தா, ரொம்ப நல்ல மாதிரியாத் தெரியுது; நீ கண்டிப்பா புரிஞ்சுக்குவங்குற நம்பிக்கையில அவ கல்யாணம் பண்ணிக்க மறுக்குறதுக்கான காரணத்த நான் சொல்றேன்…. அது இயற்கை அவளுக்கு பண்ணுன சதி; வேறென்ன….” அன்னபூரணியின் அம்மா பேச ஆரம்பித்தாள்.
“அன்னம் இன்னும் பெரிய மனுஷியாவே ஆகல தம்பி… நாங்களும் பார்க்காத வைத்தியமில்லை; அழைச்சுட்டுப் போகாத கோயில் குளமில்லை; மருந்து மாந்திரீகம் எதுலயுமே பலிக்கல…. சரி, அவளுக்கு விதிச்சது அவ்வளவு தான்னு விட்டுட்டோம்; வேறென்ன செய்றது?”
அன்னம் தான் அவர்களுக்கு மூத்த பெண்; அப்பா இறந்ததும் நொடித்துப் போன குடும்பம், அவள் படித்து வேலைக்குப் போக ஆரம்பிக்கவும் தான், கொஞ்சம் கொஞ்சமாய் தலை நிமிர்ந்திருக்கிறது. அவள் தான் தங்கைகளை எல்லாம் படிக்க வைத்தாள். நான்கு தங்கைகளுக்கும் அமர்க்களமாய் கல்யாணம் செய்வித்து, அவர்களின் நல்லது கெட்டதுகளைக் கவனித்துக் கொண்டாள். அவர்கள் எல்லோரும் தன் குடும்பம், குழந்தைகள் என்று சுருங்கி, இவளிடமிருந்து விலகிப் போகத் தொடங்கவும், திடீரென்று தன்னைச் சுற்றிலும் ஒரு வெறுமை படர்வதாய்த் உணர்ந்திருக்கிறாள்..
ஊராரின் பார்வைகளிலும் ஒரு ஏளனமும் பரிதாபமும் தோன்றவே, தன்னைத் தெரிந்த முகங்களின் குறுகுறுக்கிற பார்வைகளிலிருந்து முற்றாக விலகி, அவளின் குறைபாட்டை அறிந்திராத ஜனங்களுக்கு மத்தியில் போய்க் கலந்து கரைந்து விட வேண்டுமென்று, யாருக்கும் தகவல் கூட தெரிவிக்காமல் அம்மாவை மட்டும் அழைத்துக் கொண்டு இந்தப் புதிய இடத்திற்கு வந்து விட்டாள். இதுவும் நிரந்தரமில்லை. வேலை கிடைத்ததும் அந்த இடம் நோக்கி நகர்ந்து விடுகிற உத்தேசத்தில் தீவிர முயற்சியில் இருக்கிறாள். “இப்ப சொல்லுங்க தம்பி, தாம்பத்தியத்துக்கு தயாராகாம, வம்ச விருத்திக்கும் வழியில் லாம எப்படி அவளால கல்யாணம் பண்ணிக்க முடியும்?”
“தாம்பத்ய சுகமும் வம்ச விருத்தியும் மட்டுமே வாழ்க்கை இல்லைன்னு வாழ்ந்து புரிஞ்சுக்கிட்டவன் நான்: பூரணி சம்மதிச்சா, நான் பண்ணிக்கிறென்ம்மா…. அவ எனக்கு ஒரு தோழியா இருந்தாப் போதும்; அன்னபூரணியால அது நிச்சயமா முடியும்……”
“அப்படின்னா தாராளமா கூட்டிடுப் போங்க தம்பி; உங்கள மாதிரி மனுஷனுக்காகத் தான் அவள் இவ்வளவு நாள் காத்திருந்தாளோ என்னவோ….. “ என்றாள்.
“பூரணி மட்டுமில்லம்மா; நீங்களும் என் கூடவே வாங்க… என் மனசுலயும் வீட்டுலயும் தாராளமாவே இடமிருக்கு…..” என்றான் தனசேகர்.
தற்செயலாக நேர்ந்த ஒரு மிகச் சிறிய தவறு, ஒரு பத்திரிக்கை அலுவலகத்தின் தபால் பிரிப்பவர் கவனக் குறைவாய் செய்திட்ட ஒரு செயல், தன்னுடைய வாழ்க்கையின் மிக அற்புதமான திருப்பங்களுக்கு காரணமாக அமைந்து விட்டதே! என்று யோசித்தபடி அன்னபூரணி மெதுவாய் நடந்து போய் தனசேகரின் கைகளைக் காதலுடன் பற்றிக் கொண்டாள் - அவளுக்குள் அவளின் பெண்மை பூ மாதிரி மலர்வதை உணர்ந்தபடி.
-- முற்றும்
(நன்றி: தினமணிக்கதிர் 11.10.2009)