ஷார்ஜாவின் அதிகாலை 04:30 மணி; முதலில் டைம்பீஸில் அலாரம் அடித்தது. சுரேந்திரன் எழும்பவில்லை. ஏற்கெனவே முழிப்பு வந்து இன்னும் ஏன் அலாரம் அடிக்கவில்லை என்ற கேள்வியுடன் புரண்டு கொண்டிருந்த பியூலாராணி தான் அலாரத்தை நிறுத்தினாள். மீண்டும் 4:40க்கு கைத்தொலை பேசியில் அலாரம் அடித்தது. அப்போதும் அவன் விழிக்க வில்லை.
இம்முறையும் பியூலா தான் எழுந்து அலாரத்தை அணைத்தாள். சரியாக அணைத்திருக் கிறோமா என்று விளக்கைப் போட்டு சரிபார்த்துக் கொண்டாள். ஏனென்றால் கைத்தொலைபேசியில் அலாரம் சரியாக அணைக்கப்படாவிட்டால் ஒவ்வொரு பத்து நிமிஷத்திற்கொரு முறை அலறித் தொலைக்கும். அசந்து தூங்குபவனைப் பார்க்க கொஞ்சம் பொறாமையாக இருந்தது. தூக்கம் எத்தனை பெரிய வரம்! அவளுக்குத் தான் எவ்வளவு முயன்றும் அந்த வரம் வசப்படுவதே இல்லை. அவள் ஆழ்ந்து தூங்கி அனேக நாட்களாகி விட்டது.
மசூதியிலிருந்து அதிகாலைத் தொழுகைக்கான 'பாங்கு' ஒலிக்கத் தொடங்கிய போது இலேசாய் புரண்டு படுத்தான். இனிமேல் இவனை உறங்க விட்டால் காலதாமதமாகி கம்பெனி வண்டி இவனை விட்டு விட்டுப் போய் விடும் என்பதால் தூங்குபவனைத் தட்டி எழுப்பினாள். "ப்ளீஸ் பியூலா; இன்னொரு அஞ்சு நிமிஷம் மட்டும் தூங்க விடு....." என்று கெஞ்சினான் கண்களைத் திறக்காமலேயே. "இப்பவே ரொம்ப நேர மாயிருச்சு; உங்க டிரைவர் உங்கள விட்டுட்டுத்தான் போகப் போறான்....." என்றபடி அவசரப் படுத்தினாள்.
ஷார்ஜாவிலிருந்து துபாயில் இவன் வேலைக்குப் போக வேண்டிய இடம் 20கி.மீ. தூரத்துக்குள் தான் இருக்கும். அங்கங்கே அகாலமாய் குறுக்கிடும் ரவுண்டபட்களைத் தவிர்த்து விட்டால் நேரான, அகல மான, நேர்த்தியான சாலைகள் தான்; எத்தனை மெதுவாய் ஓட்டினாலும் 15 - 20 நிமிட பயண தூரம் தான். ஆனாலும் காலை 7 மணி டூட்டிக்கு இவனுக்கு 5:30 மணிக் கெல்லாம் வண்டி வந்து விடும். அதில் கொஞ்சம் தாமதமானாலும் ஷார்ஜா - துபாய் சாலையில் வாகன நெரிசல் தொடங்கி, உரிய நேரத்திற்கு வேலைக்குப் போக முடியாது.
அடிக்கடி அவன் பியூலாவிடம் சொல்வதுண்டு. "உங்கப்பா நம்ம கல்யாணத்திற்கு மாப்பிள்ளை ஊர்வலம் வைக்காத குறைக்கு இந்த ஊர்ல அப்பப்ப என்னை ஊர்வலம் மாதிரித்தான் கூட்டிட்டுப் போறானுங்க...."
துபாயில் வேலை பார்க்கும் நிறையப் பேர், அங்கு ஏறிக் கொண்டிருக்கும் வீட்டு வாடகையைத் தாக்குப் பிடிக்க முடியாமல் ஷார்ஜாவிற்கு தங்கள் ஜாகையை மாற்றிக் கொண்டு விட்டதாலும், இங்கு கார் வாங்குவது மிகவும் கட்டுபடி ஆகக்கூடிய செலவு - ஒரு வருஷ வீட்டு வாடகைக்கு ஆகுற காசில் புத்தம் புதிய கார் வாங்கி விடலாம்; அதுவும் வங்கிக் கடனில் மிகச் சுலபமாக வாங்கி, கம்பெனிகள் தருகிற டிரான்ஸ் போர்ட் அலவன்ஸிலேயே மாதத் தவணையும் பெட்ரோல் செலவும் போக கொஞ்சம் மிச்சமும் ஆகும் - என்பதாலும் ஷார்ஜா- துபாய் சாலையில் டிராபிக் ஜாம் எப்போதும் தலையைத் தின்னும் பிரச்னை தான்.
எல்லோரும் ஷார்ஜாவில் வந்து குவிவதால் இங்கும் வீட்டு வாடகை ராக்கெட் வேகத்தில் எகிறிக் கொண்டிருக்கிறது. அதனால் இப்போதெல்லாம் ஷார்ஜாவிற்குப் பக்கத்திலுள்ள அஜ்மானுக்குக் குடியேறத் தொடங்கி இருக்கிறார்கள். அஜ்மான் - சென்னைக்குப் பக்கத்திலிருக்கும் பாண்டிச்சேரி மாதிரி; சாராயம் சல்லிசாய்க் கிடைக்கும் இடம். ஷார்ஜாவில் தடை செய்யப் பட்டிருக்கும் மது அஜ்மானில் ஆறாய் ஓடு மென்பது ஒரு விசேஷம். அஜ்மானுக்கப்புறம் போனால் கடலில் தான் விழவேண்டி இருக்கும்.
ஆரம்பத்தில் பியூலாவும் சுரேந்திரனும் கூட துபாயில் தான் தங்கி இருந்தார்கள். மூன்று படுக்கை அறைகள் கொண்ட ஒரு அபார்ட்மெண்ட்டில் ஷேரிங் முறையில், ஒரு படுக்கை அறையை இவர்கள் பகிர்ந்து கொள்ள, இன்னொரு படுக்கை அறையில் ஒரு மலையாளத் தம்பதி அவர்களின் இரண்டு வயதுப் பெண் குழந்தையுடனும், மூன்றாவது படுக்கை அறையில் இரண்டு பிலிப்பினோ ஆண்களும் தங்கி இருந்தார்கள். இங்கெல்லாம் ஷேரிங் குடியிருப்புகள் சகஜம் தானென்றாலும் நிறைய சகிப்புத் தன்மையும் மற்றவர்களைப் பற்றி அலட்டிக் கொள்ளாத மனநிலையும் வேண்டும்.
ஒவ்வொரு படுக்கை அறைக்கும் தனித்தனி கழிவறைகள் இருந்ததால் அதன் சுத்தம் அத்தனை கவலைப் படும்படி இல்லை. ஆனால் எல்லோருக்கும் பொதுவான வரவேற்பறை மற்றும் சமையலறைப் பராமரிப்புத் தான் பியூலாவால் கொஞ்சமும் சகித்துக் கொள்ள முடியாததாய் இருந்தது. அதுவும் சமையலறைக்குள் போனாலே அவளுக்கு குமட்டிக் கொண்டு வரும். "தனி வீடு பார்த்துப் போயிடலாங்க....." என்ற அவளின் நச்சரிப்புக்கு ஆற்றமாட்டாமல், அவள் சமையலறைப் பக்கமே அதிகம் போகாதபடிக்கு சுரேந்திரன் ஹோட்டலிலிருந்து உணவை வரவழைத்து கொடுத்து விடுவான்.
ஒரு இரண்டு மாதங்கள் ஓடி இருக்கும். பிலிப்பினோ ஆண்கள் தங்களுடன் வசிக்க ஒரு பெண்ணைக் கொண்டு வந்தார்கள். "இந்த கண்றாவிகளை எல்லாம் பார்த்துக்கிட்டு என்னால இருக்க முடியாது. ஒண்ணு தனி வீடு பாருங்க; இல்லையின்னா என்னை ஊருக்கு அனுப்பி வச்சுருங்க....." பியூலா சுரேந்திரனுடன் சண்டைக்குப் போனாள். "பியூலா ஒரு விஷயம் நீ புரிஞ்சுக்கணும்; துபாயில தனி வீடு பார்த்தா என்னோட மொத்த சம்பளமும் வீட்டு வாடகைக்கே சரியாப் போயிரும்; அதால தான் இந்த ஏற்பாடு. அப்புறம் அவங்க வாழ்க்கையில எது சரி? எது தப்புன்னு நாம யாரு தீர்மானிக்குறது! நம்ம புராணங்கள்லேயே அஞ்சு பேரோட மனைவியா வாழ்ந்த பாஞ்சாலிய, நம்ம நாட்டுல இப்பவும் தெய்வமா வணங்குறதில்லையா?
"அதோட அவங்களோட வாழ்க்கை, ஒழுக்கம் பற்றி எல்லாம் நாம ஏன் அலட்டிக் கணும்.....அவங்களுக்கு இது சாதாரணமா இருக்கலாம். அவங்களும் நம்மைப் போலவே பொழைக்க வந்துருக்கிறாங்க. அவங்க வருமானத்துக்கு தனியறைங்கிறது கட்டுபடியாகாத கனவா இருக்கலாம்... அவங்களுக்குள்ள செக்ஸ¤வல் ரிலேஷன் இருந்தாகனுமின்னு கட்டாயம் கூட இல்ல! அப்படியே இருந்தாலும் அதனால நமக்கென்ன போச்சு...." என்று ஏதேதோ சமாதானம் சொல்லி பியூலாவை அந்த அறையிலேயே தொடர்ந்து தங்க சம்மதிக்க வைத்தான்.
அந்த மூன்று பேருக்குமான உறவுகள் பற்றிய நிறைய கற்பனைகளுடனும் கதையாடல்களுடனும் நாட்கள் கொஞ்சம் சுவாரஸ்யமாகவே நகர்ந்தது. சில நாட்களில் பிலிப்பினோக்கள் மூன்று பேருமே ஒரே அறையில் உறங்கினார்கள். சில நாட்களில் ஒரு ஆண் வரவேற்பறையிலும் மற்ற இருவரும் படுக்கை அறையிலுமாகப் படுத்துக் கொண்டார்கள். வரவேற்பறையில் படுக்கிற ஆண் அவ்வப்போது மாறினான் என்பது இதில் விஷேசம்.
அவர்களுக்குள்ளான உறவுகள் சீர்கெடுவதை வரவேற்பரை வாக்குவாதங்களிலிருந்து - அவர்களின் பேச்சு மொழி புரியாவிட்டாலும் - கொஞ்சம் கொஞ்சம் புரிந்து கொள்ள முடிந்தது. ஆண்கள் இருவரும் கடுமையாய் சண்டைபோட அந்தப் பெண் எந்தச் சலனமுமில்லாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும். ஒரு வெள்ளிக்கிழமை விடுமுறை தினத்தின் அதிகாலை அயர்ந்து தூங்கிக் கொண்டிருப்பவர்களை போலீஸ் வந்து எழுப்பி அந்த பிலிப்பினோக்களில் ஒரு ஆண் தூக்கு மாட்டி தற்கொலை செய்ததைச் சொன்னபோது சிலீரென்றிரிந்தது.
மிச்சமிருக்கிற இரண்டு பேரையும் போலீஸ் கைது பண்ணிக் கொண்டு போக, கடைசி வரை அந்த மரணம் இவர்களுக்கு புதிராகவே இருந்து விட்டது. அவர்களுக்குள் இருந்த எந்த சிக்கல் ஒருத்தனை தற்கொலை வரைக் கொண்டு போனது என்கிற உண்மை இவர்களுக்குத் தெரியவே இல்லை. அந்தப் பெண்ணை இருவருமே காதலித்ததாகவும் அவளை யார் மனைவியாக்கிக் கொள்வது என்கிற தீராத பிரச்னையில் தான் அந்த தற்கொலையோ கொலையோ நடந்திருக்கு மென்பது மாதிரி நிறைய யூகங்களே அந்த பிராந்தியம் முழுவதும் உலவிற்று. அதற்கப்புறம் பியூலாவும் சுரேந்திரனும் ஷார்ஜாவில் தனிவீடு பார்த்து குடிபோய் விட்டார்கள்.
பியூலாராணியின் தொடர்ந்த உலுப்பலில் எழும்பி உட்கார்ந்து கஷ்டப்பட்டு இமைகளைப் பிரித்தான் சுரேந்திரன். ஒவ்வொரு நாள் காலையிலும் இப்படி அதிகாலை எழும்பி வேலைக்காக ஓட வேண்டி இருப்பதை நினைக்கும் போதும் அவனுக்கு இந்தியாவிற்கே திரும்பிப் போய் விட வேண்டு மென்று வெறி கிளம்பும். கொஞ்ச நேரம் தான். அப்புறம் எதிர்காலத் தேவைகளும் கடன் அட்டைகளும் கழுத்தில் கத்தி வைக்க நிதர்சனத்திற்குத் திரும்பி மறு பேச்சின்றி பாத்ரூமிற்கு எழுந்து போவது அவனுக்கு வாடிக்கை.
"இராத்திரி நேரத்தோட தூங்காம லேப் டாப்ல பாட்டும் விளையாட்டுமாய் பொழுதைப் போக்கி லேட்டாப் படுக்கப் போக வேண்டியது; அப்புறம் காலையில கண் விழிக்க கஷ்டப்பட்டு வாழ்க்கையை வெறுத்து வேதாந்தம் பேச வேண்டியது; தேவையா இது?" பியூலாவின் விமர்சனத்தை சட்டை செய்யாமல் குளியலறைக்கு எழுந்து போனான் அவன்.
"என்ன பியூலா இது? நேத்து நீ குளிச்சுட்டுத் தண்ணி புடுச்சு வைக்கலியா! நான் இப்ப எப்படிக் குளிக்கிறது?" குளியலறையிலிருந்து அவன் குரல் கொடுத்த பின்பு தான் அவளுக்கு நேற்று சாயங்காலம் குளித்து முடித்து விட்டு தண்ணீர் பிடித்து வைக்கத் தவறியது ஞாபகத்திற்கு வந்தது. இந்த ஊரில் கோடை காலத்தில் பெரிய பிரச்னை எப்போதுமே தண்ணீர் பிடித்ததும் உடனே குளித்துவிட முடியாது. பைப்பிலிருந்து வெளியாகும் நீர் சருமம் கருகும் கொதிநிலையில் இருக்கும். தண்ணீர் பிடித்து ஆறேழு மணி நேரமாவது ஆற வைத்த பின்புதான் குளிக்க முடியும். எதைத் தொட்டாலும் சுடும். ஏ.சி. இல்லாமல் ஒரு நிமிஷம் கூட வீட்டிலிருக்க முடியாது. இரவு பதினோரு மணிக்கு வெளியில் போனாலும் வெக்கை முகத்தில் அறையும். வேர்த்து ஒழுகும்.
அவசர அவசரமாய் ஃபிரிட்ஜிலிருந்து ஐஸ் கட்டிகளை அள்ளிக் கொண்டு போய் பக்கெட் தண்ணீரில் போட்டு அவை கரைந்ததும் அவனைக் குளிக்கச் சொன்னாள். ஷார்ஜாவிலும் துபாயிலும் பேச்சிலர்களாக அறைக்கு எட்டுப்பேர், பத்துப் பேர் என்று அடைந்து கிடப்பவர்களும், லேபர் கேம்ப்புகளில் தங்கியிருப்பவர்களும் எப்படிக் குளிப்பார்கள்? இப்படி பக்கெட்டுகளில் தண்ணீர் பிடித்து ஆறவைத்து குளிக்க வசதிப்படுமா அவர்களுக்கு? இந்த கொதி தண்ணீரீல் குளித்து விட்டுத் தானே வேலைகளுக்கு ஓடவேண்டும் என்று நினைத்தபோது நெஞ்சின் ஓரத்தில் அவர்களுக்காக ஒரு சிறு பரிதாபம் சுரந்தது.
பகலில் பொதுவாய் தெருவில் அதிகம் நடமாட்டமிருக்காது. ஆனால் இராத்திரியில் பனிரெண்டு ஒரு மணிக்குக் கூட ஆட்கள் சர்வசாதாரணமாக அலைந்து கொண்டிருப்பதை பியூலா அவளுக்குத் தூக்கம் வராத இரவுகளில் ஜன்னலின் வழியே பார்த்து வியந்திருக்கிறாள். இது தூங்காதவர்களின் நகரம் என்று நினைத்துக் கொள்வாள். அரபு நாடுகள் அனைத்தும் ஆண்களின் தேசமாயிருந்தது. எங்கு பார்த்தாலும் ஆண்கள்: ஆண் கள்; ஆண்கள் தான் நீக்கிமற நிறைந்திருக்கிறார்கள். அபூர்வமாய்த்தான் பெண்கள் தென்படுவார்கள். அதுவும் வியாழக்கிழமை சாயங்காலங்களிலும், விடுமுறை தினங்களிலும் கடைவீதிகளுக்குப் போனால் விலக இடமிருக்காது. புற்றிலிருந்து புறப்பட்டு வருகிற மழை ஈசல்கள் மாதிரி ஒவ்வொரு சந்திலிருந்தும் ஆண்கள் வந்துகொண்டே இருப்பார்கள். ஷார்ஜாவின் ரோலா ஸ்கொயர் முழுவதும் ஆண்களின் தலையாக நிரம்பி இந்த தேசமே மிகப்பெரிய சேவல் பண்ணையாய் தோற்றங் கொள்ளும் அவளுக்கு.
அரபு நாடுகளில் திருட்டுப் பயமென்பதே துளியும் இருக்காது என்று சொல்லக் கேட்டிருக்கிறாள். அதை உறுதிப் படுத்துவது போல் இங்குள்ள வீடுகளின் கண்ணாடி ஜன்னல்களுக்கு இரும்பு கிராதிகள் வைக்கப்படாததைப் பார்த்து இங்கு வந்த புதிதில் பியூலா பெரிதும் ஆச்சர்யப்பட்டிருக்கிறாள். ஆனால் அப்படியெல்லாம் ஒரேயடியாக சந்தோஷப்படவும் முடியாது என்று சமகால நிகழ்வுகள் சொல்கின்றன். வீடுகளில் நடக்கும் சின்னச் சின்ன திருட்டுக்கள் பற்றி இப்போதெல்லாம் அடிக்கடி கேள்விப் படுகிறாள் அவள். துபாயில் சமீபத்தில் பூட்டியிருந்த ஒரு நகைக் கடையை காரால் மோதி உடைத்து உள்ளே புகுந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வைரங்களை கொள்ளைக்காரர்கள் அள்ளிப் போனதை தினசரிகளில் வாசித்து திகிலடைந்திருக்கிறாள்.
திருட்டு மட்டுமல்லாது பிச்சை எடுப்பதும் இங்கு சகஜமாகியிருக்கிறது. அவள் ஷார்ஜாவிற்கு வந்த புதிதில் பிச்சை எடுப்பவர்கள் யாரையும் பார்த்ததே இல்லை. ஆனால் இப்போதெல்லாம் கடை வீதிகளிலும் ஸப்-வேக்களிலும் குழந்தைகளும் முழுக்க கறுப்பு அங்கி அணிந்த பெண்களும் கையை நீட்டி பிச்சை கேட்பதை நிறையவே பார்க்கிறாள்.
ஒரு வழியாய் சுரேந்திரன் புறப்படத் தயாரானபோது அவனுடைய கைத்தொலைபேசிக்கு கம்பெனி டிரைவரிடமிருந்து மிஸ்ஸ¤டு கால் வந்துவிட்டது. போனில் பேசியபடி வேகமாய்ப் புறப்பட்டுப் போனான். அவ்வளவு தான். இப்போது கிளம்பிப் போகிறவன், இனி இரவு எட்டு எட்டரைக்கு மேல் தான் வீடு திரும்புவான். அதுவரைக்கும் அவளும் அவளின் தனிமையும் மட்டுமே! இந்த அறையே அவளுக்குச் சிறையாகத் தோன்றும். இரவே மூன்று வேளைக்குமான உணவையும் தயாரித்து முடித்து விடுவதால் பகலில் சமையல் வேலை கூட இருக்காது. துபாயில் இருக்கும் வரை இந்தப் பிரச்னை இல்லை. உடன் தங்கியிருந்த மலையாளப் பெண்ணிடம் அரட்டை அடிப்பதிலும் அவளின் குழந்தையுடன் விளையாடுவதிலும் நேரம் போவதே தெரியாது.
ஷார்ஜாவிற்கு வந்தபின்பு தான் தொலைக்காட்சி ஒன்றே ஒரே பொழுது போக்காய் மனசுக்குக் கொஞ்சமும் பிடிக்காத மலட்டு நிகழ்ச்சிகளையும், கட்சிச் சாயம் பூசிய செய்திகளையும், மில்லிமீட்டர் மில்லிமீட்டராய் நகரும் சீரியல்களையும் பார்த்துப் பார்த்து ஒரு கட்டத்தில் அதற்கே அடிமையாகிப் போனதை உணர்ந்தாள். ஒரு பதினைந்து இருபது நாட்களைப் போல் தமிழ்ச் சேனல் எதுவும் இவர்கள் வீட்டுத் தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகாதபோது பொழுதைக் கழிக்க திணறிப் போனாள்.
தமிழின் முக்கியத் தொலைக்காட்சி சேனல்கள் எல்லாம் தங்களின் ஒளிபரப்பு அலைவரிசைகளிலும் திசைகளிலும் சிற்சில மாற்றங்கள் செய்தபோது இவர்களின் அடுக்குமாடிக் குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த டிஷ் ஆண்ட்டனாக்கள் அதற்குத் தகுந்தாற் போல் டியூன் பண்ணப் படாததால் இவர்கள் வீட்டுத் தொலைக்காட்சியில் தமிழ்ச் சேனல்கள் எதுவுமே ஒளிபரப்பாகவில்லை. அந்த நாட்களில் சுரேந்திரனுடன் தினசரி சண்டைதான். அவனும் குடியிருப்பு அலுவலகத்தில் எவ்வளவோ முறையிட்டும் புகார் பண்ணியும் - கொஞ்சம் செலவு பிடிக்குமென்பதாலும், குடியிருப்பில் தமிழ்க் குடும்பங்கள் அதிகம் வசிக்காததாலும் - அவர்கள் எந்த முயற்சியும் செய்யாமல் சால்ஜாப்புகள் மட்டும் சொல்லி தட்டிக் கழித்ததில் நிறைய நாட்கள் ஓடிவிட்டன.
பியூலாவிற்கு பைத்தியம் பிடித்தது போலாகி விட்டது. புருஷனுடன் பேசுவதை சுத்தமாய் நிறுத்தி விட்டாள். அவன் மாற்று ஏற்பாடாக தமிழ்ப் பத்திரிக்கைகள் சிலதும் வாங்கிப் போட்டான். அவையும் அவளின் மீந்த பொழுதுகளைக் கடத்த போதுமானதாக இல்லை. அப்புறம் தான் பொழுதைப் போக்குவதற்கு பியூலா நல்ல வழிமுறை ஒன்றைக் கண்டுபிடித்தாள். அவன் புறப்பட்டுப் போனதும் ஜன்னலுக்குப் பக்கத்தில் ஒரு சேரை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்து வீதியில் நடப்பதை வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள்.அற்புதமாய் பொழுது போனது. ஒவ்வொரு நிமிஷமும் வீதி புத்தம் புதிதாய் பல சுவாரஸ்யங்களை நிகழ்த்தியபடி நீண்டு கிடக்கிறது என்பது அவளுக்குப் புரிந்தது.
அவள் தங்கி இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பு மிகவும் பரபரப்பான நாற்சந்திப்பின் ஒரு மூலையில் அமைந்திருக்கிறது. அடுக்குமாடிக் குடியிருப்புக்கு எதிர்த்தாற் போல் ஒரு பெரிய ஸ்டார் ஹோட்டல். டை யும் கோட்டும் அணிந்த பெரிய பெரிய கனவான்கள் - பெரும்பாலும் அமெரிக்கா, ஆஸ்திரிலியா, ஐரோப்பா நாடுகளிலிருந்து - வந்து கொண்டும் போய்க் கொண்டும் எப்போதும் பரபரப்பாய் இருக்கும். ஹோட்டலுக்கருகில் இந்தியாவின் கிளை நிறுவனம் ஒன்றின் பிர மாண்டமான புத்தம் புதிய நகைக்கடை அமைக்கப்பட்டு அந்த இடத்திற்கே அழகும் பொலிவுமாய் ஒளியூட்டிக் கொண்டிருக்கிறது.
அபார்ட்மெண்ட்டை ஒட்டிய விசாலமான பிளாட்பாரத்தில் லேபர்கள் குவிந்து கிடப்பார்கள். அவர்களின் காலை நேரமென்பது அதிகாலை மூன்றரை நான்கு மணிக்கெல்லாம் தொடங்கி விடும். அதுவும் அவர்களில் 'கல்லிவெல்லி' ஆட்கள் என்றொரு பிரிவினர் இருக்கிறார்கள். இந்த தேசத்தில் வேலை செய்ய முறையான விசா இல்லாதவர்கள், விசா காலம் முடிந்து போனவர்கள், ஏஜெண்ட் களால் வேலை என்று விசிட் விசாவில் அழைத்து வரப்பட்டு அப்புறம் ஏமாற்றப்பட்டவர்கள், முறையான கம்பெனி விசாவில் வேலைக்கு வந்தும் ஒழுங்காய் சம்பளம் தரப்படாததாலோ, அதிக சம்பளத்திற்கு ஆசைப்பட்டோ அல்லது வேறு பிரச்னைகளாலோ அங்கிருந்து வெளியேறி காணாமல் போயி அப்புறம் 'இந்த' கூட்டத்தில் கலந்தவர்கள் எல்லோரையும் 'கல்லிவெல்லி' ஆட்கள் என்றுதான் அழைப்பார்கள்.
தினசரி போலீசுக்குப் பயந்தபடி, நிரந்தர வேலை ஏதுமின்றி கிடைக்கிற வேலைகளைச் செய்து வயிற்றைக் கழுவி, ஒன்றிரண்டு மிச்சம் பண்ணி ஊருக்கும் அனுப்பிவைத்து...என்று அவர்களின் தினப்பாடு மிகமிகத் திண்டாட்டமானது. காலை நேரத்தில் பியூலாராணி தங்கியிருக்கும் வீட்டின் முதல்மாடி ஜன்னலிலிருந்து பார்த்தால் அப்படிப் பட்ட ஆட்கள் நிறைய அலைந்து கொண்டிருப்பது தெரியும். சாப்பாட்டுப் பொட்டலத்தைக் கையிலும், கண்களில் ஏக்கத்தையும் சுமந்தபடி தரகர்களுக்குப் பின்னாலும், வந்து நிற்கும் வாகனங்களுக்குப் பின்னாலும் ஓடிஓடிப் போய் வேலை கேட்டுக் கொண்டிருப்பார்கள். காலை பதினோறு பனிரெண்டு மணி வரை அலைந்தும் வேலை கிடைக்காத வேதனையோடு சிலர் திரும்பிப் போவதையும் அவள் பார்த்திருக்கிறாள்.
விசாலமான பிளாட்பாரத்தை ஒட்டி வரிசையாய் சிறுசிறு கடைகளும், சூப்பர் மார்க்கெட்டும், கம்யூட்டர் உதிரி பாகங்கள் விற்கிற கடையும், மருத்துவ கிளினிக்குகளும் அமைந்திருக்கின்றன. அதுவும் எதை எடுத்தாலும் ஒரு திர்ஹாம் அல்லது இரண்டு திர்ஹாம் மட்டுமே விலையுள்ள பொருட்கள் விற்கும் கடையில் எப்போதும் கூட்டம் அப்பிக் கொண்டிருக்கும்.
சூப்பர் மார்க்கெட்டிற்கு வெளியே வைக்கப்பட்டிருக்கும் பெரிய பெரிய குப்பைத் தொட்டிகளிலிருந்து சிலர் பேப்பர், அட்டைகள், குளிர்பான போத்தல்கள், பால்கவர், பிளாஸ்டிக் பொருட்கள் என்று மற்றவர்கள் பயன்படுத்தித் தூக்கி எறிந்தவைகளை பொறுக்கி சேகரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து ஆச்சர்யப் பட்டிருக்கிறாள். அதைவிட ஓடி ஓடி சம்பாதிக்கும் இவர்கள் காலையில் என்ன சாப்பிடுகிறார்கள் என்பதை கண்ணுற நேர்ந்தபோது அப்படியே உறைந்து போனாள். எல்லோரும் ஆளுக்கொரு புரோட்டாவை வாங்கி அதை டீயில் முக்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். புரோட்டாவை டீயில் முக்கிக் கூடவா சாப்பிட முடியும்? அதிர்ச்சியிலிருந்து மீள அனேக நாட்களானது அவளுக்கு. ஏழ்மையும் வறுமையும் எல்லா தேசங்களுக்கும் பொது போலிருக்கிறது.
அடுக்குமாடிக் குடியிருப்பின் இன்னொரு பக்கம் ஒரு மேம்பாலமும் அதை அடுத்து ஒரு அழகான மசூதியும் இருக்கின்றன. மசூதியில் வெள்ளிக் கிழமை நண்பகல் தொழுகை பார்க்க கோலாகோலமாய் இருக்கும். யாரும் முறைப்படுத்தாமலேயே ஒவ்வொருவரும் வரிசை வரிசையாய் தாங்கள் கையோடு கொண்டு வந்திருக்கும் பாயை விரித்து அமர்ந்து, தொழுகை தொடங்கியதும் எல்லோரும் ஒரே சமயத்தில் எழுவதும் குனிவதும் மடங்கி அமர்வதும் நெற்றிப் பொட்டு தரையில் பட விழுந்து வணங்கி எழுவதுமாய்......பார்க்கவே பரவசமாய் இருக்கும். மசூதி நிறைந்து அதன் சுற்றுவெளிகளும் நிரம்பி அதுவும் போதாமல் சாலைகளை ஒட்டிய பிளாட்பார்ம்களையும் ஆக்ரமித்து, அந்த நேரம், இடம் எல்லாம் ஆசீர்வதிக்கப் பட்டதாய்த் தோன்றும்.
கண்களைக் கொஞ்சம் எட்ட ஓட்டினால் அங்கங்கே நிறைய கட்டிடங்கள் கட்டும் பணி நடந்து கொண்டிருப்பது தெரியும். பார்த்திருக்க வளர்ந்து ஆளாகி விடும் பெண் பிள்ளைகள் மாதிரி எத்தனை வேகமாய் கட்டிடங்கள் வளர்கின்றன? தீப்பெட்டிகளை அடுக்கி வைப்பது போல் படபடவென்று மாடிகளை அடுக்கிக் கொண்டே போவதைப் பார்க்க பார்க்க இவளுக்கு ஆச்சர்யமாய் இருக்கும். ஊரிலெல்லாம் தளம் கான்கிரீட் போடுவதென்றால் சாரம் கட்டி, அதில் ஆட்கள் வரிசையாய் நின்றபடி, சட்டி சட்டியாய் கான்கிரீட் கலவையை மேலே அனுப்பி காலையிலிருந்து இரவு வரை போடுவதைப் பார்த்திருக்கிறாள்.
ஆனால் இங்கேயானால் இராட்சஷ மிஷின்களைக் கொண்டு வந்து - அதன் உயரமான ஒருமுனை யானையின் தும்பிக்கை மாதிரியே இருக்கிறது; நீரள்ளி ஆசீர் வதிக்கும் கோயில் யானை மாதிரி கண்மூடி கண் திறப்பதற்குள் அது, ட்ரக்குகளில் வரும் கான்கிரீட் கலவையை உறிஞ்சி மேல் தளத்தில் துப்பி விட - சில மணி நேரங்களிலேயே தளவேலை முடிந்து அடுத்த வேலைக்கு நகர்ந்து விடுகிறார்கள். கட்டிடம் கட்டும் பணியில் தான் எத்தனை விதமான இயந்திரங்கள் அலைந்து கொண்டிருக்கின்றன நாள்தோறும்.
சாலையில் ஓடும் வாகனங்களைக் கவனிப்பது அவளின் அடுத்த சுவாரஸ்யம்! எத்தனை எத்தனை விதவிதமான அழகழகான வாகனங்கள்! ஒருநாள் வெள்ளை வெளேரென்று பனிக்கரடி மாதிரி பளபளவென்று நீ...ள...மா...ன...காரொன்றைப் பார்த்தாள். அரபு ஷேக்குகள் பெரும்பாலும் அவர்களைப் போலவே ஓங்கு தாங்கென்றிருக்கும் பெரிய அளவிலான வாகனங்களிலேயே பயணிக்கிறார்கள். காரணம் பெரும்பாலும் அரபு ஷேக்குகளின் குடும்பம் பெரிதாக இருக்கும். பூங்காக்களிலும் ஷாப்பிங் செண்டர்களிலும் ஒவ்வொரு அரபி ஆணுக்குப் பின்னாலும் சம வயதுள்ள மூன்று நான்கு பெண்களும் துறுதுறுவென்ற குழந்தைகளும் போவதை அவளே பார்த்திருக்கிறாள்.அரபிக்களின் உடை பார்க்க அழகாய் இருக்கும்.
ஆண்கள் கழுத்து முதல் பாதம் வரைக்குமான தொளதொளவென்ற பளீரென்ற வெள்ளையில் அங்கி அணிந்து, தலையில் சிவப்புப் பூக்கள் போட்ட துண்டை விரித்து அதன் மேல் கறுப்பு வண்ணத்தில் இரண்டடுக்கு பிரிமனை மாதிரியான வட்ட வடிவ பின்னலும் அதிலிருந்து தொங்கும் அழகான குஞ்சங்களுமாய் காட்சி அளிப்பார்கள். அரபிக்களின் அந்த உடை சுரேந்திரனுக்கும் ரொம்பப் பிடிக்கும். துபாய் பெஸ்டிவல் சமயத்தில் நடந்த பொருட்காட்சியில் அரபி உடை அணிந்து போட்டோ எல்லாம் எடுத்து வைத்திருக்கிறான். பெண்களும் கறுப்பு அங்கியும் தலையில் கண்கள் மட்டும் வெளித் தெரியும் படியான கறுப்பு பர்தாவும் அணிந்திருப்பார்கள்.
அவ்வப்போது ஆம்புலன்சுகள் அலறலோடு ஓடும் போது அவளுக்கு பதட்டமாய் இருக்கும். இந்த ஊரில் விபத்துக்களும் நோயாளிகளும் அதிகம் என்றும் மருத்துவம் ரொம்பக் காஸ்ட்லி என்றும் அப்படியும் அத்தனை சிறப்பான சிகிச்சை கிடைக்காது என்றும் பலரும் சொல்லக் கேட்டிருக்கிறாள். சுரேந்திரன் அடிக்கடி சொல்வதுண்டு - அவன் வேலை பார்க்கும் இடத்தில் யாருக்காவது சிறு நோயென்றாலும் உடனே ஊருக்குத்தான் கிளம்பி விடுவார்கள் என்றும் ஆஸ்பத்திரிக்கு அதுவும் அரசு மருத்துவமனைகளுக்குப் போகச் சொன்னாலே அலறி விடுகிறார்கள் என்றும்.
அடுத்து அவள் சாலையில் அதிகம் சந்திப்பது தீயனைப்பு வண்டிகளை. இந்த ஊரில் அடிக்கடி எங்காவது எப்படி என்று தெரியாமலே தீப்பற்றிக் கொள்கிறது. பியூலாவே பலதடவைகள் அவள் வீட்டு ஜன்னலிலிருந்து அடுக்குமாடிக் கட்டிடங்களில் கரும்புகை சூழ மஞ்சளும் சிவப்பும் கலந்த ஜுவாலையுடன் தீ கொழுந்து விட்டெரிவதைப் பார்த்து பதறி, கொஞ்ச நேரத்திலேயே ஆம்புலன்ஸ¤ம் தீ அணைப்பு வண்டியும் விரைவதைப் பார்த்து ஆறுதலடைந்திருக்கிறாள்.
பத்து நாட்களுக்கு முன்னால் தான், அவள் தங்கியிருக்கும் கட்டிடத்திலிருந்து பதினைந்து கட்டிடங்கள் தள்ளி இருக்கும் ஒரு கட்டிடத்தில் ஒரு மோசமான தீ விபத்து நடந்து, அந்த குடியிருப்பின் மொட்டை மாடியில் ஆஸ்பெஸ்டாஸ் கூரை போட்ட வீடு நடுஇரவில் தீப்பற்றிக் கொண்டதில் ஒரு புருஷனும் மனைவியும் அவர்களின் இரண்டு சிறுவயதுக் குழந்தைகளும் கருகிப் போயினர்.
இவளும் போய் அந்தக் கோரக் காட்சியைப் பார்த்து வந்தாள். அன்றைக்கு முழுவதும் பொட்டுத் தூக்கமில்லை. எத்தனை கனவுகளோடு பிழைக்க வந்திருப்பார்கள்? இப்படி கரிக்கட்டை யாய் திரும்பிப் போனால் அதைப் பார்த்து அவர்களின் குடும்பம் என்ன பாடுபடும்? நினைக்க நினைக்க வாழ்வின் நிச்சயமின்மை முகத்திலறைய "நாம இப்பவே இந்திவாவுக்குத் திரும்பப் போயிடலாங்க....." என்று பியூலா புலம்பத் தொடங்கி விட்டாள்.அவளை சமாதானப் படுத்தி இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்குள் சுரேந்திரனுக்கு போதும் போது மென்றாகிவிட்டது.
மேம்பாலத்திற்கு அடியில் அதன் நிழலில் சிலர் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பார்கள் எப்போதும். அவர்களில் ஒருத்தனை அவள் அடிக்கடி அங்கு பார்ப்பாள்.அவனுக்கு முப்பது முப்பத்திரெண்டு வயதிருக்கும்.மிக நேர்த்தியாக உடை அணிந்திருப்பான். மற்றவர்கள் மாதிரி அவன் நிழலுக்கு ஒதுங்கிப் போபவனாகத் தெரிவதில்லை.
நண்பகல் தொழுகை முடிந்த நேரத்திலிருந்து சாயங்காலம் நான்கு அல்லது ஐந்து மணி வரை அங்கேயே தான் உட்கார்ந்திருப்பான். எதுவும் செய்யாமல் ஒரே இடத்தில் தொடர்ந்து மணிக்கணக்கில் எப்படி அவனால் உட்கார்ந்திருக்க முடிகிறது என்று அவளுக்கு ஆச்சர்யமாக இருக்கும். ஒரு வேளை அவளைப் போலவே அவனும் பொழுது போகாமல் தெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறானோ என்று நினைத்துக் கொள்வாள்..
அவனைப் பற்றிய நிறைய கேள்விகளுக்கு அவளுக்கு விடை தெரியவில்லை. அவன் யார்? எங்கு வேலை பார்க்கிறான்? வேலைவெட்டி எதுவுமில்லையா அவனுக்கு? வேலைக்காக அழைத்து வரப்பட்டு ஏமாற்றப்பட்டு விட்டவனா? சொந்த நாட்டிற்கும் திரும்பிப் போக முடியாமல் இங்கும் போக்கிடமில்லாமல் அலைகிறவனா?கிடைத்த வேலையைச் செய்கிற கல்லிவெல்லி ஆசாமியா? இங்கெல்லாம் கோடைக் காலங்களில் சில அலுவலகங்களும் வணிக நிறுவனங்களும் நண் பகல் 12 மணியிலிருந்து மாலை 4 மணி வரை இயங்குவதில்லை. அந்த மாதிரி ஓரிடத்தில் வேலை செய்பவனாக இருக்குமோ? ஆனால் இவனை அந்த நேரம் கடந்தும் சில தினங்களில் பார்த்திருக்கிறாளே! மேலும் அப்படிப்பட்டவகள் தாங்கள் தங்கி இருக்கும் அறைகளுக்குப் போய்த் தானே ஓய்வெடுப்பார்கள்! இவனுக்கு அப்படி ஒரு அறையே இல்லாமல் ஒருவேளை காரில் வசிப்பவனோ?
யு.ஏ.இ.யில் சில பேச்சிலர்கள் தங்களின் காரையே வசிப்பிடமாகக் கொண்டு அதிலேயே தங்கி, உண்டு, உறங்கி வாழ்கிறார்கள் என்று பத்திரிக்கைகளில் படித்து அதிர்ந்து போயிருக்கிறாள். டார்மென்ட்றி மாதிரி வசதியுள்ள இடங்களில் குளித்து, மற்ற கடன்களை முடித்துக் கொண்டு பகல் நேரங்களிலெல்லாம் காரிலேயே சுற்றிக் கொண்டிருந்து விட்டு இரவு ஏதாவது இலவச பார்க்கிங்கில் காரை நிறுத்தி காருக்குள்ளேயே உறங்கி விடுவார்களாம்.
இந்தியாவில் இதேபோல வெகு நேரம் காருக்குள் இருந்த சிலர் ஏ.சி.யிலிருந்து வெளியாகும் கார்பன் மோனாக்சைடால் செயலிழந்து மூச்சுத் திணறி இறந்து போன செய்தியை அறிந்ததும் இங்கு காரில் வாழ்பவர்கள் முக்கியமாக அந்த மேம்பால இளைஞன் தான் ஞாபகத் திற்கு வந்தான். கோடைகாலத்தில் இங்கு இரவிலும் வெக்கை இருக்கும். ஏ.சி. இல்லாமல் தூங்கவே முடியாது. அவர்கள் கார்பன் மோனாக்சைடிலிருந்து எப்படி சமாளிக்கிறார்கள்? கடவுளே! சில பேருக்கு ஏன் இத்தனை மோசமான வாழ்வனுபவம்!
`தினசரி பார்க்கிற மேம்பால நிழல் இளைஞனைக் கடந்த சில தினங்களாக அந்த இடத்தில் பார்க்க முடியவில்லை. எங்கு போனான் என்றும் தெரியவில்லை. பொதுவாய் கல்லிவெல்லி ஆட்கள் ஊருக்குப் போவதென்று முடிவெடுத்தால் விமானப் பயணத்திற்கான பணம் சேர்ந்ததும் போலிசில் சரணடைந்து விடுவார்களாம். போலீஸ் அவர்களை ஓரிரு மாதங்கள் சிறையில் வைத்திருந்து விட்டு அவர்களின் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைத்து விடுமாம்.
இவனும் அப்படி கிளம்பிப் போயிருப்பானோ? தினசரி அவனைப் பார்த்துப் பார்த்து கண்கள் பழகி விட்டதால் அவன் மேல் ஒரு இனம் புரியாத பாசம் ஏற்பட்டு விட்டது. அவன் இல்லாமல் அந்த இடம் வெறுமையாய் வெறிச் சோடிக் கிடப்பது போலிருந்தது. அவன் எங்கு போனான் என்பதற்கான விடை சில தினங்களுக்கு முந்தைய செய்தித்தாளில் அவளுக்குக் கிடைத்தது.
ஆங்கிலச் செய்தித் தாளெல்லாம் அவள் வாசிப்பதில்லை. சாயங்காலம் சப்பாத்திக்கு மாவு உருட்டிப் போடுவதற்காக பழைய பேப்பரை எடுத்து விரித்தபோது அதிலிருந்த ஒரு செய்தி வசீகரிக்க அதை வாசித்தவள் அப்படியே அதிர்ந்து போய் விட்டாள். செய்தி இது தான்:
துபாயிலிருக்கிற ஒரு இடுகாட்டில் பிணங்களை அடக்கம் செய்வதற்கு முன்னால் 'அதுகளை'ப் போட்டுக் கழுவுவதற்காக ஒரு அறை இருக்கிறதாம். அன்றைக்கு இராத்திரி அந்தப் பக்கமாய் ரோந்து சுற்றிய போலீஸ்காரனுக்கு அந்த பிணவறையில் ஏதோ நடமாட்டமிருப்பதாய் சந்தேகம் வர, உள்ளே போய் கையிலிருந்த சிகரெட் லைட்டரை எரியவிட்டுப் பார்த்திருக்கிறான். பிணங்களைப் போட்டுக் கழுவும் பிளாட்பாரத்தின் மேல் நிர்வாணமாக ஓர் ஆணும் பெண்ணும் ஆலிங்கனம் செய்து கொண்டிருந்தார்களாம். அவர்களிருவரும் கைது செய்யப் பட்டிருந்தார்கள்.அவர்களை அங்கு அனுமதித்த பிணவறைக் காவலாளி தப்பித்து ஓடிவிட்டானாம். கைதானவர்களின் போட்டோக்களும் போட்டிருந்தார்கள்.
அந்த ஆணும் பெண்ணும் தங்கள் அந்தரங்கம் கேவலப் படுத்தப்பட்ட அதிர்ச்சியில் குமுறி அழுதபடி யிருந்தார்கள். அதிலிருந்த ஆணின் முகம் பியூலாவிற்கு பரிச்சயமானதாயிருக்க கொஞ்சம் உற்றுக் கவனித்தவள் உறைந்து போனாள். அது மேம்பாலத்து நிழலில் ஓய்வெடுக்கும் இளைஞன்.
-- முற்றும்
(நன்றி : நவீன விருட்சம் – ஜுலை 2009)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment