Sunday, March 19, 2017

கதை சொல்லப் போகிறேன்

இன்று கதை சொல்லல் தினம். கதை சொல்லல் தினத்தைப் பற்றி கதை சொல்லப் போகிறேன்.

மார்ச்சு 20 : உலகக் கதை - சொல்லல் தினம்
                        
 முதன் முதலில் 1991-ல் ஸ்வீடன் நாட்டில் தான் வருஷத்தின் ஒரு நாளை கதை-சொல்லல் தினமாக கொண்டாடத் தொடங்கினார்கள். ஆனால் ஏனோ ஒரு சில ஆண்டுகளிலேயே அப்படிக் கொண்டாடுவதை அவர்கள் நிறுத்தி விட்டார்கள். 1997-ல் அது மேற்கு ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயிர்பெற்றது.
                     ஏறக்குறைய இதே காலக்கட்டத்தில் தான் தென்-அமெரிக்க நாடுகள், மெக்சிகோ மற்றும் அதைச் சுற்றியுள்ள நாடுகளிலும் கதை சொல்லல் தினத்தை தேசிய அளவில் கொண்டாடும் வழக்கம் உருவாயிற்று.  2001 - 2003 காலகட்டத்தில் அது நார்வே, டென்மார்க், பின்லாந்து, மற்றும் எஸ்டோனியா போன்ற நாடுகளுக்கும் பரவி, மிக விரைவிலேயே கனடா மற்றும் உலகின் பிற நாடுகளிலும் கொண்டாடத் தொடங்கினார்கள்.
                    2005 ஆம் ஆண்டிலிருந்து தான் இந்நிகழ்வு அகில உலக அளவில் ஒரு தினமாக அங்கீகாரம் பெற்று, மார்ச் 20ந் தேதியை கதை-சொல்லல் தினமாக இன்று உலகம் முழுதும் கொண்டாடி மகிழ்கிறது. இந்நாளில் உலகிலுள்ள ‘கதை சொல்லிகள்’ அனைவரும் ஒன்றிணைந்து பல ‘கதை சொல்லல்’ சார்ந்த நிகழ்வுகளை மக்களிடையே நிகழ்த்தி, அவர்களை சந்தோஷப் படுத்துகின்றனர்.
                   ஒவ்வொரு ஆண்டும் கதை சொல்லல் தினத்திற்காக ஒரு மையக் கருத்து (THEME) உருவாக்கப் படுகிறது. அதை ஒட்டியே கதை சொல்லும் நிகழ்வுகள் அமைத்துக் கொள்ளப் படுகின்றன.
                2005ஆம் ஆண்டின் மைககருத்து இணைப்புப் பாலங்களாகவும் (BRIDGES), 2008ல் அது கனவுகளாகவும் (DREAMS), 2010ல் ஒளியும் நிழலுமாகவும் (LIGHT AND SHADOW), 2011ல் தண்ணீராகவும் (WATER), இந்த வருஷம் - 2017ல் அது உருமாற்றம் (TRANSFORMATION) என்பதாகவும் இருக்கிறது.                                      ஆழி சூழ் உலகை ஆளும் நம்முடைய மனிதகுல வரலாறு என்பது பெரிதும் கதைகளால் சூழப்பட்டது. மனிதன் சைகைளிலும் உடல் மொழியினாலும் பேசத் தொடங்கிய நாளிலிருந்தே அவன் கதைகளை உருவாக்கி பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளத் தொடங்கியிருக்க வேண்டும்.
                     எழுத்துக்களும் அதைப் பதிந்து வைப்பதற்கான சாதனங்களும் உருவாவதற்கு முந்தைய கால கட்டத்தில் எல்லா தகவல்களையும் நினைவில் வைத்திருப்பதற்கும் அவற்றைப் பரப்புவதற்கும் மனிதன் கதைகளைத் தான் பெரிதும் நம்பினான். வாய்மொழிக் கதைகளால் தான் மனிதன் போர்ச் செய்திகளையும், அதன் வெற்றி தோல்விகளையும் அரசர்களின் வீர பிரதாபங்களையும் மேலும் பல தகவல்களையும் பரப்பினான்.
                ஏனென்றால் வெறும் செய்தியாகவோ அல்லது தகவலாகவோ இருந்தால் அவற்றை நீண்ட காலத்திற்கு மனித மூளையால் நினைவில் வைத்திருக்க முடியாது. அதிலேயே கொஞ்சம் புனைவைக் கலந்து கதைகளாக்கி விட்டால் அதைக் கேட்பவர்களால் ஆயுசுக்கும் மறக்க முடியாது இல்லையா? மேலும் அதில் ஒவ்வொருவரும் தங்களின் கற்பனைக் கைச்சரக்குகளையும் கலந்து மற்றவர்களுக்குக் கடத்தும் போது புதிய புதிய கதைகளும் உருவாகின்றன.
                 உலகில் தான் எத்தனை விதமான கதைகள்! நல்லொழுக்கத்தைக் கற்பிக்க கதைகள்! நீதியை உணர்த்துவதற்கும் கதைகள்! குகை ஓவியங்களில் கதைகள்! கூத்தில் கதைகள்! நாடோடிப் பாடல்களிலும் கதைகள்!  இப்படி மனிதன் தன்னுடைய சந்தோஷத்திற்காக உருவாக்கி  உலவ விட்ட எல்லாக் கலைகளிலும் தவிரவும் புராணங்கள், இதிகாசங்கள், மத நூல்கள் போன்றவற்றிலும் கதைகளே நிரம்பி வழிகின்றன.
                        இந்தியாவைக் கதைகளின் தேசம் என்று சொன்னால் அது மிகை இல்லை. இங்கு உருவான எத்தனையோ கதைகள் யாத்ரீகர்கள், நாடோடிகள், வணிகர்கள் மற்றும் பிழைப்புத் தேடிப் போனவர்களின் மூலம்
கிரேக்கம், ஆப்பிரிக்கா, சீனா போன்ற பல தேசங்களுக்கும் பரவி இன்றும் அவை அங்கு உயிர்த்திருக்கின்றன.  
                   பிற தேசங்களிலிருந்தும் கோடிக்கணக்கான கதைகள் எந்தவிதமான பாஸ்போர்ட், விசா பிரச்னையையும் சந்திக்காமல் இந்தியாவிற்குள்ளும் ஊடுருவி இருக்கின்றன. கதைகள் மட்டும் மிகச் சுலபமாக தேச எல்லைகளை கடந்து விடுகின்றன என்பது தான் நிஜம்.
                அன்றைய பெருங்கதைகளின் காலத்திலிருந்து இன்றைய நாவல்கள், சிறுகதைகள், குறுங்கதைகள், மைக்ரோ கதைகளின் காலகட்டம் வரையிலும் அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியாக மனித மூளையிலிருந்து கதைகள் பெருகி வழிந்து கொண்டே தான் இருக்கின்றன.
                        தமிழில் எல்லா வகையான கதைகளும் கொட்டிக் கிடக்கின்றன. இங்கு அற்புதமான கதை சொல்லிகளுக்கும் பஞ்சமே இல்லை.
                        இரண்டு கதை சொல்லிகளைப் பற்றி இன்றைய நாளில் சுருக்கமாக நாம் அறிந்து கொள்ளலாம். ஒருவர் கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் என்னும் கிராமத்தைச் சேர்ந்த கி.ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் அவர்கள். தொன்னூற்று ஐந்து வயதைத் தொட்டுக் கொண்டிருக்கும் இளைஞர். கரிசல் இலக்கியத்தின் முன்னெத்தி ஏரோட்டி தனக்குப் பின்னால் பலரை உருவாக்கியவர். 
                      கி.ரா. ஒரு தேர்ந்த கதை சொல்லி. தன்னுடைய நாற்பது வயதுக்கப்புறம் தான் அவர் கதைகளை எழுதத் தொடங்கினார். அவர் இயல்பில் ஒரு விவசாயி. ‘நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கினேன். அப்போதும் பாடங்களைக் கவனிக்காமல் மழையையே ரசித்துக் கொண்டு இருந்துவிட்டேன்’ என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொள்பவர். எட்டாம் வகுப்பு வரை தான் படித்திருக்கிறார். ஆனால் அவருடைய கதை சொல்லும் திறனால் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றிய பெருமைக்குரியவர்.
                        கிராவின் பெரும்பாலான சிறுகதைகளும் நாவல்களும் குறுநாவல்களும் வாய்மொழி மரபில் உலவி வந்த கதைகளின் எழுத்து வடிவங்களே. கழனியூரான் என்னும் இன்னொரு கிராமத்து எழுத்தாளருடன் சேர்ந்து கிராமத்தின் வாய்மொழிக் கதைகளைத் தொகுத்து எழுத்து வடிவத்தில் கொண்டு வந்திருக்கிறார்.
                          பாலியல் கதைகளையும் வயது வந்தவர்களுக்கு மட்டும் என்ற பெயரில் தொகுத்தளித்திருக்கிறார். கிராமத்தில் புழக்கத்தில் இருக்கும் வட்டார வழக்குகளுக்கு ஒரு அகராதியையும் தயாரித்திருக்கிறார். தற்போது புதுச்சேரியில் தன்னுடைய மனைவியுடன் வாழ்ந்து வருகிறார்.
                        கி.ரா. கிராமத்து கதைகளை சொல்பவர் என்றால் தமிழின் நவீன கதைகளைத் தன்னுடைய குரலில் சொல்லி பதிவுசெய்து வருபவர் பவா செல்லத்துரை என்னும் கதை சொல்லி. திருவண்ணாமலையைப் பூர்வீகமாகக் கொண்டவர். அரசு வேலையை உதறிவிட்டு இலக்கியம், கதை சொல்லல், பதிப்பகம் என்று இயங்குபவர்.
                    பத்தாம் வகுப்புப் பரீட்சை விடுமுறையில் உறவுகள் பேசுகிறது என்னும் நாவலை எழுதி அது தீபஜோதி என்னும் மாத இதழில் திருவண்ணாமலை முழுவதும் இளம் எழுத்தாளர் பவாசெல்லத்துரையின் நாவல் என்று போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டு வெளி வந்திருக்கிறது.
               பள்ளியில் படிக்கும் போதே நாவல் வெளி வந்து விட்டதில் பெருமை பொங்கி அதுவே தன்னை திமிர்ப் பிடித்தவனாக அலைந்து திரிய வைத்தது என்றும் அந்தக்காலம் தான் சந்தோஷங்களைப் பறி கொடுத்த காலம் என்றும் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருக்கிறார் பவா செல்லத்துரை.
                   பவா செல்லத்துரை சிறந்த கவிஞர், பேச்சாளர், சிறுகதை எழுத்தாளர், பதிப்பாளர் என்று பன்முகத் திறமைகள் கொண்டவர் என்றாலும் அவரின் கதை சொல்லும் திறன் தான் மிகவும் பிரதானமான பங்கு வகிக்கிறது. கதை சொல்வதற்காகவே இலக்கிய இரவுகளை உருவாக்கியிருக்கிறார். முற்றம், டயலாக் போன்ற இலக்கிய அமைப்புகளையும் தொடர்ந்து நடத்தி வருகிறார்.
              சமீபத்தில் பவா செல்லதுரை பற்றிய ஆவணப்படம் ஒன்று பவா என்னும் கதைசொல்லி என்கிற பெயரில் வெளியாகி இருக்கிறது. ஆவணப்படத்தை மூத்த வலைப்பதிவரான செந்தழல் ரவியும், எஸ்கேபி கருணாவும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ஆர்ஆர் ஸ்ரீனிவாசன் இயக்கியிருக்கிறார்.
                        மிகவும் சுவாரஸ்யமான அந்த ஆவணப்படம் கதை சொல்லுதல் என்கிற கலையின் அழகை, அது தரும் மகிழ்ச்சியை அதற்கான அவசியத்தை உணர்த்துவதாக இருக்கிறது. அந்த ஆவணப் படத்தில் வேட்டை மற்றும் முதல்மதிப்பெண் பெற்ற தோழியின் கதையும் பவா செல்லத்துரையின் ஆர்பாட்டமில்லாத குரலில் எளிய மொழியில் மிகவும் சிறப்பான முறையில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
                        என்னுடைய பால்யம் கிராமத்தில் கழிந்தது. அங்கு எங்கெங்கும் கடவுள்களும்  கதைகளுமே இறைந்து கிடந்தன. ஒவ்வொரு வீட்டிற்கும் கதவுகள் இருந்ததோ இல்லையோ வாசலின் இருபுறமும் திண்ணைகள் அமைக்கப் பட்டிருந்தன. அவை வழிப் போக்கர்களை உபசரித்து மகிழ்வதற்காகவும் பெரியவர்களும் சிறுவர்களும் சேர்ந்து அமர்ந்து கதைகள் பேசி மகிழ்வதற்காகவும் உபயோகமாய் இருந்தன.
                     இரவானால் நட்சத்திரங்களையும் நிலவையும் ரசித்தபடி அம்மாவோ பாட்டியோ சொல்லும் கதைகளைக் கேட்டபடி தான் உறங்கியிருக்கிறேன். என்னுடைய அப்போதைய கனவுகளிலும் ராஜகுமாரன்களும், தேவதைகளும் அரக்கர்களுமே உலவினார்கள்.
            வாய்க்கு ருசிக்காத உணவுகளையும் கதைகளுடன் சேர்த்து குழந்தைகளுக்கு ஊட்டிவிடுகிற இலாவகம் கிராமத்து மனுஷிகளுக்குக் கைவந்த கலையாக இருந்தது. வயசுக்குத் தகுந்தபடியான கதைகள் சொல்லும் மனிதர்கள் அநேகம் இருந்தார்கள் அங்கு. பாலியல் கதைகளை பெரியவர்களிடம் கேட்டுத் தான் நான் வயசுக்கு வந்து விட்டதையே அறிந்து கொண்டேன்.
                        நான் படித்த காலக் கட்டத்தில் பள்ளிகளிலும் கதைகள் சொல்வதற்காகவும் நீதி போதணைகளுக்காகவும் வாரத்திற்கு ஒரு வகுப்பை ஒதுக்கி இருந்தார்கள். இராவுத்தர் வாத்தியாரும் கந்தசாமி மற்றும் ரத்தினசாமி வாத்தியார்களும் அற்புதமான கதை சொல்லிகளாக இருந்தார்கள்.
                        அவர்கள் தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகளுக்கு முன் தின ம் மாலையில் பிள்ளைகளை எல்லாம் ஒன்றாக உட்கார வைத்து ஒவ்வொரு பண்டிகையும் எதற்காகக் கொண்டாடப் படுகிறது, அவற்றின் சாரமும் மனித குலத்திற்கான செய்திகளும் என்னவென்று கதை கதையாக சொல்லி மகிழ்வித்தார்கள்.
                        ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகளாக இருப்பதே பெரும் சாபமாக இருக்கிறது அவர்களுக்கு. வீட்டில் அவர்களுக்குக் கதைகள் சொல்ல தாத்தா பாட்டிகள் இல்லை. அப்படியே இருந்தாலும் அவர்களும் குழந்தைகளுக்குக் கதைகள் சொல்ல நேரமில்லாமல் தொலைக்காட்சிகளின் முடியே இல்லாத அழுகாச்சி தொடர்களில் மூழ்கிக் கிடக்கிறார்கள்.
                       அதனால் குழந்தைகளும் அவர்களின் வயதுக்குப் பொருந்தாத தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பார்வையாளர்களாக இருக்க நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள். அல்லது கணிணி விளையாட்டுகளின் வன்முறைகளை ரசித்துக் குரூரமானவர்களாக உருவாகிக் கொண்டிருக்கிறார்கள்.
                    வீடுகளில் தான் இப்படி என்றால் இவர்களின் பள்ளிகளிலும் கதைகள் சொல்லும் மாரல் வகுப்புகள் ஏதும் இருப்பதாகவே தெரியவில்லை. கோடை விடுமுறை காலங்களிலும் குழந்தைகளை விளையாட விடாமலும் தாத்தா பாட்டி வீடுகளுக்கு அனுப்பி கதைகள் கேட்க வாய்ப்பளிக்காமல் புதிது புதிதாய் உருவாகும் சம்மர் கேம்ப் வகுப்புகளில் சேர்த்து சித்ரவதை செய்யப் படுகிறார்கள்.  
                        குழந்தைகள் மன ஆரோக்கியத்துடன் வளர வேண்டுமென்றால் அவர்களுக்குக் கதை சொல்லி வளர்க்க வேண்டும். அவர்கள் சொல்லும் கதைகளையும் காது கொடுத்துக் கேட்க வேண்டும். அதற்கு முதலில் பெரியவர்கள் கதைகளை அறிந்து கொள்ள வேண்டும். புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். கதை சொல்லல் தினத்திலிருந்து அதைத் தொடங்கலாம்….!

Ø  முற்றும்

No comments:

Post a Comment