Wednesday, January 13, 2010

உரையாடல் கவிதைப் போட்டிக்காக....

கதையல்ல; நிஜம்

அன்றொரு நாள் அதிகாலையில்
கரடு முரடான
கிராமத்து சாலையின் வழி
பயணித்துக் கொண்டிருந்தது பேருந்து......

ஆண் பெண் இருக்கைகளுக்கு மத்தியில்
நின்றிருந்த நாற்பது கடந்த
நடுத்தர வயதினன்
மயங்கி விழுந்தான் சட்டென;
கிராமத்திலொருவன் மயங்கி விழ
காரணங்களுக்கா பஞ்சம்!
கூட்ட நெரிசலோ பசி மயக்கமோ
வேறெதுவும் தள்ளாமையோ.....

விழுந்தவனின் கைகள் காற்றில் துழாவின
கம்பிகளைப் பிடித்துக் கொள்ள....
ஒருகையில்
ஆண்கள் பகுதியின் கம்பியை பிடித்தவனின்
இன்னொரு கைக்கு அகப்பட்டது
இருக்கையில் அமர்ந்திருந்த
இளம்பெண் ஒருத்தியின் முழங்கை;
முழுதாய்ப் பற்றுவதற்குள்
அசூசையுடன் தட்டிவிட்டாள் கைகளை

காக்கை எச்சத்தைப் போல.....
ஆடவன் ஒருவனின் கைகள்
தன்மேல் பட அனுமதிப்பாளா
கண்ணகி வழியில் வந்த
கற்புள்ள தமிழ்ப்பெண்?

நின்று கொண்டிருந்த
இன்னொரு பெண் ஓடிவந்து
விழுந்தவனை மடியில் போட்டு
நீவி விட்டாள் நெஞ்சை;
மயக்கம் தெளிந்தவனுக்கு
தன் இருக்கையைத் தந்து
எழுந்து கொண்டான் இன்னொருவன்....

இறங்கும் போது
இன்னொருவளிடம் கேட்டேன்
மயங்கி விழுந்தவன் தெரிந்தவனா?
அதெல்லாமில்லை; அய்யோ பாவம்
விழுந்தவன் அறியாதவ னென்றாலும்
வேடிக்கையா பார்க்க முடியும்?
என்றபடி
கடந்து போனாள் தன் வழியில்.....

உலகம் இயங்குவது
கற்புள்ள பெண்களால் அல்ல;
கரிசனமுள்ளவர்களால்........!

3 comments:

  1. சத்தியமான கவிதை. கரிசனம் மட்டுமே உலகை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது. இது கதையல்ல, நிஜம்.

    ReplyDelete
  2. attagasam
    parisukku uriya kavithai..
    ulagin indraiya thevai karisanam .manathai thodukirathu
    advance vaazhthukal
    padma

    ReplyDelete
  3. இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் & வெற்றி பெற வாழ்த்துகள்

    ReplyDelete