கல்லூரிகள் எல்லாம் திறந்து ப்ளஸ் டூ முடித்தவர்கள் எல்லாம் உற்சாகமாக, யூனிபார்ம் களிலிருந்து விடுதலை பெற்று, பட்டாம் பூச்சிகளாக சிறகடித்து கல்லூரிகளுக்குப் போய்க் கொண்டருக்க, அல்லது கல்லூரிகளில் சேர்வதற்கான ஆயத்தங்களில் இருக்க, இவற்றில் எதிலும் கலந்து கொள்ளாமல் பூக்காரம்மாளின் பெண் மட்டும் இன்னும் எங்கோ வேலைக்குப் போய்க் கொண்டிருப் பதைப் பார்த்த இவாஞ்சலினின் மனசுக்கு வருத்தமாக இருந்தது.
அந்தப் பெண் ரொம்பவும் நன்றாகப் படிக்குமென்று அவள் கேள்விப்பட்டிருந்தாள். அப்படிப் பட்ட பெண், கல்லூரிக்குப் போகாமல் இன்னும் ஏன் வேலைக்குப் போய்க் கொண்டிருக்க வேண்டும்? ஒருவேளை படித்தது போதுமென்று நிறுத்தி விட்டார்களா? மனசுக்குள் உழலும் கேள்விகள் இவாஞ்சலினுக்கு மிகவும் கவலை யளித்தன. பூக்காரம்மாளிடம் இது பற்றி விசாரிக்கலா மென்றால், இப்போதெல்லாம் அவளைப் பார்க்கவே முடிவதில்லை. தண்ணீர்க் குழாயில் சந்தித்து கூட ரொம்ப நாளாகி விட்டது.
இவாஞ்சலினின் வீடு வாஸ்து சாஸ்திரக்காரர்கள் பயமுறுத்தும் தெருப்பார்வையில் அமையப் பெற்றது. அந்த வீட்டிற்கு நேர் செங்குத்தாக விரியும் தெருவின் இறுதியில் குறுக்காக வரிசை பிடித்து தீப்பெட்டிகளாக அடுக்கப் பட்டிருக்கும் ஓடு வேய்ந்த வீடொன்றில் தான் பூக்காரம்மாவும் அவளின் குடும்பமும் வாடகைக்கு வசிக்கிறது. அவர்களின் காம்பௌண்ட்டிற்கு வெகு அருகாமையில் தான் நகராட்சிக் காரர்கள் அமைத்திருக்கும் தெருக்குழாயும் இருக்கிறது.
பூக்காரம்மாவுடன் இவாஞ்சலினுக்கு இலேசான பழக்கந்தான். எப்போதாவது தெருக்குழாயில் சந்தித்துக் கொண்டால் பரஸ்பரம் சிரித்துக் கொள்வார்கள்; அதிகாலையில் எழும்பி கோயம்பேடு மார்க்கெட்டிற்குப் போய் மொத்தமாய் பூ வாங்கி வந்து அதை சரமாய் தொடுத்து விற்பது தான் அவளின் பிரதான தொழில். இவாஞ்சலின் எப்போதாவது பூக்கேட்டால் தன் நீளமான கையினால் தாராளமாய் முழம் போட்டு ஒரு புன்னகைக் கீற்றையும் பூவுடன் ஒட்டவைத்துக் கொடுப்பாள். இவாஞ்செலினும் பேரம் எதுவும் பேசாமல் வாங்கிக் கொள்வாள்.
பூக்காரம்மாள் பார்ப்பதற்கு மிகவும் லட்சணமாக, கருப்பென்றுசொல்லிவிடமுடியாத மாந்தளிர் நிறத்தில்,மினுமினுக்கிற தேக அழகுடன் இருப்பாள். அவளை மூன்று பிள்ளைகளுக்கு அம்மா என்று சொன்னால் நம்புவதற்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். இதற்கு நேர்மாறாக அவளின் புருஷன் அடர்த்தியான கருப்பில் கட்டை குட்டையாக….கொஞ்சம் தவங்கித் தவங்கித் தான் நடப்பான். இருவரையும் ஒன்றாய்ச் சேர்த்து வாழ வைத்தது எந்த விதியோ என்று அவ்வப்போது தனக்குள் அங்கலாய்த்துக் கொள்வாள் இவாஞ்சலின்.
அன்றைக்கு இரண்டு குடங்களைத் தண்ணீர்க் குழாயில் வைத்து விட்டு தன்முறை வருவதற்கு கொஞ்சம் நேரமாகுமென்று தோன்றியதால் சமையலறையில் கைவேலையாக இருந்தாள் இவாஞ்சலின். வாசல் கேட்டை யாரோ கிணுக்குவது கேட்டு வெளியில் வந்து பார்த்தாள். இவளுடைய காலிக் குடங்களை கைகளில் வைத்துக் கொண்டு பூக்காரம்மாள் நின்று கொண்டிருந்தாள்.
“ரொம்ப நேரமா காலிங்பெல் அடிச்சடிச்சுப் பார்த்தேன்; சத்தமே கேட்கல; அதான் கேட்டை ஆட்டினேன்…..” வருத்தம் தொனிக்கிற குரலில் பேசினாள் அவள்.
“ஆமாங்க, கொஞ்ச நாளாவே காலிங் பெல் வேலை செய்யல; ரிப்பேர்ப் பண்ணச் சொன்னா இவர் சாக்குப் போக்குச் சொல்லி காலங் கடத்திட்டு இருக்கார்….அதுக்குள்ளயா தண்ணி நின்னு போச்சு?”
“இன்னைக்கு என்னன்னு தெரியல, சீக்கிரமே நின்னு போச்சு; எல்லாரும் அவங்கங்க கொடத்த எடுத்துட்டுப் போயிட்டாங்க….உன் கொடம் மட்டும் தனியாக் கெடந்துச்சு; எவளாவது லவட்டிக்கிட்டு போயிடப் போறாளேன்னு தான் கொண்டு வந்தேன்….” சிரித்தபடி சொன்னாள் பூக்காரம்மாள். இவாஞ்சலினுக்கு ஆச்சர்யமாக இருந்தது. பட்டணத்தில் இப்படியும் மனிதர்களா?
“இதென்ன தங்கமா, பித்தளையா திருடு போறதுக்கு? எவர் சில்வர் தான! உங்களுக் கெதுக்குங்க சிரமம்?” குடங்களைப் பெற்றுக் கொண்டு “வீட்டுக்குள்ள தான் வாங்களேன்…”என்றாள்.
“இல்லை தாயி நெறைய வேலை இருக்கு; எனக்கும் இன்னைக்கு ஒரு கொடம் கூடத் தண்ணி கெடைக்கல; அடிபம்ப்புலப் போயித் தான் அடிச்சிட்டு வரணும்…..நீயும் வர்றீயா?”
“அய்யோ நான் வரலைங்க; அவ்வளவு தூரத்துலருந்து என்னால தூக்கிட்டு வரமுடி யாது. அதோட அந்தத் தண்ணி அவ்வளவு நல்லாவும் இருக்காது; நாங்க கேன் தண்ணி வாங்கிக்கு வோம் …. “ என்ற இவாஞ்சலின் “ அப்புறம் ரொம்ப நாளாவே உங்ககிட்ட ஒண்ணு கேட்கணும்னு நெனச்சிருந்தேன்; நல்லாப் படிக்கிற உங்க பொண்ணோட படிப்ப ஏன் பாதியிலயே நிறுத்தீட்டீங்க? ஒரு டிகிரியாச்சும் படிக்க வச்சுருக்கலாமில்ல…..!” என்றாள்.
பூக்காரம்மாளின் கண்களில் நீர் திரையிட்டது. “அந்தக் கொடுமைய ஏன் தாயி கேட்குற…..?” என்றபடி வாசல்படியில் கால் நீட்டி வசதியாக உட்கார்ந்து கொண்டு பேசத் தொடங்கினாள். “என் பொண்ணு பத்தாப்புல நானூத்தி பதிநாலு மார்க்கு ; நம்ம தெருவே மூக்குல விரல் வச்சு சந்தோஷப் பட்டுச்சு; நான்தான் ப்ளஸ் டூ சேர்க்குறதுக்கு கவர்மெண்ட் பள்ளிக் கூடத்துக்குக் கூட்டிட்டுப் போனேன்; என்ன குரூப் வேணுமின்னு கேட்டாங்க. எங்களுக்கு சொல்லத்
தெரியல! உன்னை மாதிரி விஷயம் தெரிஞ்ச மகராசி யாரையாச்சும் கூட்டிட்டாவது போயிருக்க லாம்; அப்பத் தோணாமப் போயிடுச்சு….
’ஏழை வீட்டுப் புள்ளைய்யா; நல்லதா நீங்களே ஏதாவது படிப்புல சேர்த்துக்குங்க; உங்களுக்குக் கோடி புண்ணியம் கெடைக்கும்’ன்னு அவங்ககிட்டயே பொறுப்பக் குடுத்தேன். அவங்கதான் ஏதோ பேசன் டிசைன்னு ஒரு புதுக்குரூப்புல சேர்த்துக்குறோம்; ப்ளஸ் டூ படிச்சு முடிச்சாலே வேலை கிடைச்சுடும்னு ஆசைகாட்டி சேர்த்துக் கிட்டாங்க; ஆனா படிச்சு முடிச்சப்புறம் தான் அந்தப் படிப்போட வண்டவாளம் தெரிஞ்சுச்சு, வேலையும் கிடைக்கல; ஒரு மண்ணும் கிடைக்கல……
அந்தப் படிப்புல படிக்குறதுக்கு ஆளே சேரலைன்னு அரசாங்கமே அந்தக் குரூப்ப மூடச் சொல்லீருச்சாம்; அப்படி மூடிட்டா எங்க அதைச் சொல்லிக் குடுக்குற வாத்தியாருங்களுக்கு வேலை இல்லாமப் போயிருமோன்னு பயந்துக்கிட்டு கூட்டுக் களவாணி வாத்திமாருங்களெல்லாம் ஒண்ணாச் சேர்ந்துக் கிட்டு விவரந்தெரியாத என்னை மாதிரி ஏழை வீட்டுப் புள்ளைங்கள அமுக்கி அந்தக் குரூப்ல சேர்த்துக்கிட்டாங்களாம்; இந்த உண்மையெல்லாம் இப்பத்தான் தெரியுது, என்ன செய்றது?
அந்தப் படிப்புலயும் கண்ணும் கருத்துமாப் படிச்சு ஆயிரத்துச் சொச்சம் மார்க் வாங்கி யிருந்தா என் பொண்ணு; சரி இன்னொரு மூனு வருஷம் வாய, வயிறக் கட்டி ஒரு டிகிரியாச்சும் படிக்க வச்சா அது பொழைப்ப அது பார்த்துக்கிடட்டும்னு காலேஸ் தேடுனா, அக்கம் பக்கத்துல எந்தக் காலேஸுலயும் அந்தப் படிப்பு தட்டுப் படல: பெரிய பெரிய பணக்காரங்க படிக்கிற தனியார் காலேஷுல தான் அது இருக்காம்! அவ்வளவு பணத்துக்கு நாங்க எங்க போறது? அதான் போட்டோக் கடையில வேலைக்குப் போயிக்கிட்டு இருக்காள்…. எல்லாம் விதிம்மா! வேறென்ன சொல்றது? சரி தாயி, ரொம்ப நேரமாயிருச்சு, நான் கெளம்புறேன்” என்றபடி எழுந்து போனாள்.
அன்றைக்கு இரவே அருள்தாஸிடம் சொன்னபோது அவனுக்கும் ஆத்திரம் பொங்கியது. “நானூறுக்கு மேல மார்க் எடுத்த பொண்ணுக்கு ஃபேஷன் டிசைன் குரூப் குடுத்தாங்களா? அந்த வாத்திமாருங்கள எல்லாம் நிக்க வச்சு சுடணும்! காலேஷுல போயி அந்தப் படிப்பப் படிச்சாலும் இந்தப் பொண்ணால அதுல கரை சேர்றது கஷ்டம்! அதுக்கெல்லாம் கத்தை கத்தையா பணமிருந்தால் தான் முடியும்….” என்றான்.
அப்புறம் “வேணுமின்னா பாலிடெக்னிக்குல சேர்ந்து படிக்கச் சொல்லலாம்…..” என்று அவன் சொல்லவும் அவள் மலர்ந்து, “ரெண்டாவது வருஷத்துல சேர்த்துக்குவாங்களா….?” என்றாள்.
“அது சாத்தியமில்லப்பா…. ப்ளஸ் டூ ல மேத்ஸ்,பிஸிக்ஸ்,கெமிஸ்ட்ரி படிச்சிருந்தாத் தான் இரண்டாவது வருஷத்துல சேர முடியும்; இந்தப் பொண்ண எஸ்.எஸ்.எல்.சி. மார்க்க வச்சு முதல் வருஷத்துல தான் சேர்த்து விடணும்…..” என்றான். “அப்ப ரெண்டு வருஷப் ப்ளஸ் டூ படிப்பு பாழ் தானா! சரி நான் நாளைக்கு அவங்க கிட்டப் பேசிப் பார்க்குறேன்…”என்றாள்.
அடுத்த நாள் பூக்காரம்மாளை அழைத்து இது சம்பந்தமாகப் பேசிய போது,”எனக்கென்னம்மா புரியுது இதெல்லாம்! நான் என் பொண்ணையே கூட்டிட்டு வாறேன்; அவள் கிட்டயே பேசு….” என்றபடி உடனே ஓடிப்போய் தன் பெண்ணை அழைத்து வந்தாள்.
அந்தப் பெண் நிறத்திலும் முக வார்ப்பிலும் அவளின் அப்பாவைப் போல் இருந்தாலும் பூக்காரம்மாவைப் போலவே சித்துப் பெண்ணாக பர்க்க லட்சணமாக இருந்தாள்.”உன் பேரென்னம்மா…? “ என்றாள் இவாஞ்சலீன் அவளின் தலையை வாஞ்சையாய் வருடியபடி. இத்தனை நாளில் இந்தப் பெண்ணின் பேரைக் கூடத் தெரிந்து வைத்திருக்கவில்லையே என்று மனசுக்குள் தன்னைத் தானே கடிந்து கொண்டாள் அவள்.
“சுகந்தி ஆண்ட்டி….”என்று அவள் சொல்லவும், “அழகான பேரா இருக்கே, யாரு வச்சது?” என்றாள் இவாஞ்சலீன். “அவங்க அப்பாரு வச்ச பேரு தான்; நல்ல ரசணையான மனுஷன் தான்; இப்பத்தான் எதுக்கும் பிரயோசணமில்லாமப் போயிருச்சு ….” என்றாள் பூக்காரம்மாள் கண்களில் மின்னும் காதலுடன்.
“உன்னோட பிளான் என்ன சுகந்தி? போட்டோக் கடையிலேயே இன்னும் எவ்வளவு காலத்துக்கு வேலை பார்த்துட முடியும்னு நெனைக்குற?” என்று கேட்டாள் இவாஞ்சலின்.
“தெரியல ஆண்ட்டி; ஓடுற வரைக்கும் ஓடட்டும்…. கூடவே கரஸ்பாண்டன்ஸ்ல ஏதாவது படிக்கலாம்னு நெனைச்சிருக்கேன். வேறென்ன பண்ண முடியும்? “ கண்களில் கண்ணீர்.
“பாலிடெக்னிக்குல சேர்ந்து டிப்ளமோ படிக்குறியா சுகந்தி? “என்று கேட்டாள் இவாஞ்சலின். அவள் கொஞ்சம் கூட யோசிக்காமல் சந்தோஷம் பொங்க “சரி ஆன்ட்டி ….” என்று தலையை ஆட்டினாள் வேகமாக. படிக்க வேண்டுமென்கிற ஆசையும் வேகமும் அந்தத் தலையாட்டலில் தெரிந்தது.
“முதல் வருஷத்துல தான் சேர்த்துக்குவாங்களாம்; ரெண்டு வருஷம் வீணாப் போயிருச் சுன்னோ, நம்மவிட வயசுல சின்னவங்களோட சேர்ந்து படிக்குறது மாதிரி ஆயிடுச்சேன்னோ ஃபீல் பண்ணக் கூடாது சரியா?” என்று ஆறுதலாய்ப் பேசினாள் இவாஞ்சலின்.“அதெல்லாம் பரவாயில்ல ஆண்ட்டி…..” சுகந்தி தெளிவாய்த் தான் பேசினாள். அடுத்து வந்த நாட்களில் பூக்காரம்மாளும் இவாஞ்சலினும் பாலிடெக்னிக் பாலி டெக்னிக்காக ஏறி இறங்கி விசாரித்தார்கள்.
இருவரும் சில நாட்கள் சில பொழுதுகளாவது ஒன்றாகத் திரிய நேர்ந்ததில் இவாஞ் சலின் பூக்காரம்மாளின் வாழ்க்கை பற்றிய நிறைய விபரங்களை அறிந்து கொண்டாள். ஒருமுறை இவாஞ்சலின், அவளிடம் “நீங்க பள்ளிக் கூடத்துக்கே போனதில்லையா?” என்று கேட்கவும், “அதெல்லாம் போனேன் தாயி; நாலாப்பு வரைக்கும் படிச்சேன். அப்புறம் எனக்கொரு தம்பி பிறக்கவும் என் படிப்பை நிறுத்தி என்னைய புள்ளை தூக்கப் போட்டுட்டாங்கல்ல…” என்றாள் கடந்த காலத்தின் கசப்புகளை விழுங்கியபடி.
இன்னொரு சமயம் “சுகந்தி அப்பாவ நீங்க எப்படி கல்யாணம் கட்டிக்கிட்டீங்க! வீட்டுல வற்புறுத்தி கட்டி வச்சுட்டாங்களோ…” என்று கேட்டாள் சிரித்தபடி. “அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல தாயி; நாங்க காதலிச்சுத் தான் கல்யாணம் கட்டிக்கிட்டோம்…” என்றாள். இவாஞ்சலின் முகத்தில் ஆச்சர்யம் காட்ட அவளே விளக்கமாய்ச் சொல்லத் தொடங்கினாள்.
“நாங்க பக்கத்து பக்கத்து ஊரு; சுகந்தி அப்பா பிராயத்துல கருப்பா இருந்தாலும் நல்லா களையா இருக்கும். அப்பல்லாம் நல்லா மேளம் வாசிக்கும். கல்யாணம், கருமாதி, ஊர்த் திருவிழான்னு அததுக்குத் தகுந்தபடி அபாரமா வாசிக்கும். அப்ப அதோட கழுத்தசைவையும் விரலோட நாட்டியத்தையும் பார்த்துப் பார்த்து நான் சொக்கித் தான் போனேன். ரொம்பத் தெறமை யான மனுஷன்ம்மா... நான் தான் மொதல்ல அதுட்டப் போயி, ‘எனக்கு உன்மேல ரொம்ப இஷ்டம்; என்னையும் உன்கூடவே கூட்டிட்டுப் போயிரு; உன் மேள வாசிப்பக் கேட்டுக்கிட்டே இருக்கனும் போலருக்கு’ன்னு சொன்னேன். அது முதல்ல ஒண்ணுஞ் சொல்லாம சிரிச்சிட்டுப் போயிருச்சு….
நான் திரும்பத் திரும்ப அதுகிட்டப் போயி இதையே சொல்லவும், சரி வான்னு கூட்டிட்டுப் போயி ஒரு கோயில்ல வச்சு தாலி கட்டிருச்சு; நாங்க வேற வேற ஜாதி; அதால ரெண்டு குடும்பத்திலயும் எங்கள ஏத்துக்காம, வெட்டுவோம், குத்துவோம்னு மெரட்டுனாங்க…..உங்களால ஆனதப் பார்த்துக்கங்கன்னுட்டு ஊரை விட்டு இந்த பட்டணத்துக்கு வந்துட்டோம். ஆரம்பத்துல எல்லாம் என்கிட்ட ரொம்ப ஆசையா பிரியமாத்தான் இருந்துச்சு…. ஏனோ பட்டணத்துக்கு வந்ததும் மேளம் வாசிக்கிறத விட்டுருச்சு. அதுக்குப் பதிலா சென்ட்ரிங் வேலைக்குப் போக ஆரம்பிச்சது. நல்ல வருமானம் வந்துச்சு.சொந்தமா கான்ட்ராக்ட் கூட எடுத்துப் பண்ணுச்சு….
ஒரு சமயம் மூணாவது மாடியில சென்ட்ரிங் வேலை செஞ்சுக்கிட்டு இருக்குறப்போ சாரம் சரிஞ்சு கீழ விழுந்துருச்சு. புட்டாணி போயிருச்சு. பொழச்சு வந்தது அந்த கடவுள் கிருபை; சேர்த்துவச்ச பணமெல்லாம் அதோட மருத்துவ செலவுலேயே காலியாயிருச்சு; உடம்பு ஒடுங்கி பாதி ஆளாப் போயிடுச்சு; தொடர்ந்து வேலைக்கும் போக முடியல. இப்படி ஒண்ணுக்கும் உதவாமப் போயிட்டமேன்கிற மன உளைச்சல்ல ரொம்பவும் ஒடைஞ்சு போயிட்டுது….
சென்ட்ரிங் சாமான்களை யெல்லாம் கூட்டாளிங்களே வித்துத் தின்னுட்டாங்க; வீட்டுல பசியும் வறுமையும் …. கஞ்சிக்கில்லைன்னா சண்டை சச்சரவுதான வரும்; அதான் நடக்குது எங்க வீட்லயும்; ஒருத்தருக்கொருத்தர் முகங்குடுத்து பேசுறதயே நிறுத்திக்கிட்டோம்……மூனு புள்ளைங்கள வச்சுக்கிட்டு எனக்கு முழி பிதுங்கிப் போச்சு. என்ன பண்ற துன்னே புரியல; அப்புறம் தான் எனக்குத் தெரிஞ்ச பூக்கட்டி விற்குற இந்த வேலையில ஏதோ வயித்துப் பாட்டுக்கு வஞ்சணையில்லாம காலம் ஓடிக்கிட்டு இருக்கு தாயி……” மூச்சுவிடாமல் பேசி நிறித்தினாள் பூக்காரம்மாள்.
பெரும்பாலான பாலிடெக்னிக்குகளில் ப்ளஸ் டூ வில் சம்பந்த மில்லாத குரூப்பைப் படித்த பெண்ணை சேர்த்துக் கொள்ளத் தயக்கம் காட்டினார்கள். ஓரிரு அரசு உதவி பெறும் பாலி டெக்னிக்குகளோ சுகந்தி எஸ்.எஸ்.எல்.சி. யில் எடுத்திருக்கும் மார்க் இடம் கிடைப்பதற்கு போதாது என்று சொல்லி விண்ணப்பப்பாரம் தருவதற்கே மறுத்து விட்டார்கள். சுய நிதி பாலிடெக்னிக்கு களில் டொனேஷன் அது இதென்று கட்டணம் எக்குத் தப்பாய்க் கேட்டார்கள். கடைசியில் ஒரு முஸ்லீம் மைனாரிட்டி பாலிடெக்னிக்கில் விசாரித்தபோது ஆறுதலாயும் நம்பிக்கையாயும் பேசினார் கள். ஆனால் அங்கு சேர்வதற்கும் வருஷத்திற்கு குறைந்தது இருபதாயிரம் ரூபாய்த் தேவைப் படுமென்று தெரிந்தது. “இதெல்லாம் கதைக்கு ஆகிற காரியமில்லை தாயி; அவளுக்கு விதிச்சபடி ஆகட்டும்…..” என்று சொல்லி பூக்காரம்மாள் விடை பெற்றுக் கொண்டாள்.
இவாஞ்சலினுக்கு மனசு ஆறவே இல்லை.எந்த வகையிலாவது அந்தப் பெண்ணிற்கு உதவ வேண்டுமென்று மனசு கிடந்து துடித்தது. “இப்படி பாலிடெக்னிக் படிக்கிற ஆசைய அந்தப் பொண்ணுக்கு ஊட்டிட்டு, அது இப்ப முடியாமப் போயிடும் போல இருக்குங்க….” அருள்தாஸிடம் சொல்லிப் புலம்பினாள். “நாம வேணுமின்னா பணம் கட்டி அந்தப் பொண்ண படிக்க வைக்க லாம்ப்பா….” என்றான் அவன். “நெசமாவா….பணம் கட்டுவீங்களா?” பதட்டப்பட்டாள் அவள்.
பூக்காரம்மாளையும் சுகந்தியையும் அழைத்து விவரம் சொல்லவும் அவர்களால் இதை நம்பவே முடியவில்லை.இரண்டு பேர்களின் கண்களிலும் தாரை தாரையாகக் கண்ணீர். பூக்காரம் மாள் தடாலென்று இவாஞ்சலினின் கால்களில் விழுந்து விட்டாள். இவாஞ்சலின் பதறிப்போய் “அய்யோ என்னங்க இதெல்லாம்…. “ என்று அவளை எழுப்பி சோபாவில் உட்கார வைப்பதற்குள் போதும் போதென்றாகி விட்டது. அப்புறமும் பொங்கிப் பொங்கி அழுது கொண்டிருந்தாள் அவள்.
“சொந்த பந்தங்களே ஒரு பைசா தந்துதவாத காலம் தாயி இது; முன்னப்பின்ன பழக்கமில்லாத எங்களுக்கு இவ்வளவு பெரிய தொகையக் கட்டி படிக்க வைக்குறேன்றியே, நெசமா
லுமே நீ தெய்வம் தாயி….” என்று அரற்றினாள்.
காரியங்கள் சரசரவென்று நடந்தேறின. அடுத்த நாளே இருவரும் போய் விண்ணப்ப படிவம் வாங்கி வந்தார்கள். அன்றைக்கே மூவரும் உட்கார்ந்து அதை நிரப்பத் தொடங்கினார்கள். இவாஞ்சலின் ஒவ்வொரு பகுதியாக வாசித்து, சுகந்தியும் பூக்காரம்மாளும் சொல்வதை படிவத்தில் நிரப்பிக் கொண்டிருந்தாள். ஜாதி பற்றிய கட்டத்தை நிரப்புவதற்காக , “நீங்க என்ன கம்யூனிட்டி சுகந்தி?” என்று கேட்கவும் “எஃப். சி. ஆன்ட்டி ….” என்றாள் சுகந்தி.
“அந்தக் வயித்தெரிச்சல ஏன்ம்மா கேட்குற! நாங்க கோயிலுக்கு பூக்கட்டி பொழைக்குற பண்டாரம் ஜாதி; ஆண்டிப் பண்டாரம்னு போட்டுருந்தா பிற்படுத்தப்பட்ட வகுப்புன்னு பதிவாயிருக் கும்; எங்க ஆளுங்க எல்லாம் அப்படித்தான் பதிஞ்சிக்கிறாங்க…. பிள்ளைங்கள பள்ளிக் கூடத்துல சேர்க்குறதுக்குத் தூக்கிட்டுப் போன கூறுகெட்ட மனுஷன் வெறுமனே ‘பண்டாரம்’ ஜாதின்னு சொல்லிப் பதிஞ்சிட்டு வந்துருச்சு; பண்டாரம்னா முற்போக்கு ஜாதியாம், சலுகை எதுவும் கெடைக்காதாம். அப்புறமும் மனுக் குடுத்து மாத்தச் சொல்லி எவ்வளவோ சண்டை போட்டுப் பார்த்தேன்; ஒரே அடியா முடியாதுன்னுடுச்சு….அதை விட இன்னொரு கொடுமை தாயி; என் ஜாதியில பிள்ளைங்கள சேர்க்காம இவ அப்பனோட ஜாதியில பிள்ளைங்களச் சேர்த்திருந்தா இன்னும் விசேஷமா நிறைய சலுகைகள் கெடைச்சிருக்கும்…..” என்றாள்.
“ஏன் அவரு அப்படி என்ன ஜாதி” என்றாள் இவாஞ்சலின் ஆர்வம் மேலிட. பூக்காரம் மாள் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டு மிகவும் மெல்லிய குரலில் ”அவரோட ஜாதி என்னன்னு இந்தப் பட்டணத்துல யாருக்குமே தெரியாது; உன்கிட்ட மட்டும் சொல்றேன்; நீயும் உன் மனசோட வச்சுக்கோ…” என்று பெரும் பீடிகைக்குப் பின் சொன்னாள். ”அது எஸ்.ஸி. கம்யூனிட்டி தாயி;துப்புக் கெட்ட மனுஷன் அது ஜாதியிலயும் பிள்ளைகளச் சேர்க்காம, என் ஜாதியையும் முழுசாச் சொல்லாம படுபாவி பிள்ளைகளுக்கு ஒரு சலுகையும் கிடைக்க விடாமப் பண்ணீருச்சு…”
இவாஞ்சலினுக்கு நிஜமாகவே ஆச்சர்யமாக இருந்தது. எத்தனையோ பேர் தாங்கள் வசதி வாய்ப்புகளோடிருந்தும் தங்களின் பிறந்த ஜாதியை மறைத்து பொய்ச் சான்றிதழ் கொடுத் தேனும் சலுகைகள் அனுபவிக்கத் துடிக்கிறார்கள். அவளுடைய சொந்த கிராமத்தில் நிலபுலன்களும் தோட்டந் துறவுகளும் நிறைந்த ஒரு பெரும் பணக்காரக் குடும்பம்; தாங்கள் பிறந்த ரெட்டியார் ஜாதியை கஞ்ச ரெட்டி என்று மாற்றிக் கொண்டால், மலை ஜாதி மக்களுக்கான சலுகைகள் கிடைக்குமென்று அறிந்து அதற்கான முயற்சிகளில் இறங்கி, அவர்களின் மாவட்டத்திலேயே அப்படிப்பட்ட ஜாதிப் பிரிவினர் வசிக்கவில்லை என்று தாசில்தார் சான்றிதழ் தர மறுத்தும் தன்னுடைய பணத்தையும் செல்வாக்கை யும் பயன்படுத்தி வேறொரு மாவட்டத்தில் போய் அப்படிப் பட்ட சான்றிதழ் பெற்று, சலுகைகளை அனுபவிப்பதை நேரிடையாகவே அவள் அறிவாள். அப்படிப் பட்ட மனிதர்களுக்கு மத்தியில் உண்மையிலேயே தாழ்த்தப் பட்ட குடியில் பிறந்திருந்தும் அதைத் தன் பிள்ளைகளுக்குத் தராமல் மறைத்துவிடும் மனுஷன். அறியாமையாலா? ஆணவத்தாலா? இவாஞ்சலினுக்குப் புரியவில்லை.
ஒரு நல்ல நாளில் பூக்காரம்மாளையும் அவளின் பெண்ணையும் அழைத்துக் கொண்டு போய் பணம் கட்டி பாலிடெக்னிக்கில் சேர்த்து விட்டு வந்தாள் இவாஞ்சலின்.அன்றைக்கும் இரு வரும் கை கூப்பி கண்ணீர் பெருக்கினார்கள். இரண்டு நாள் சென்றிருக்கும். பூக்காரம்மாளின் புருஷன் மட்டும் இவாஞ்சலினின் வீட்டிற்கு வெளியே வந்து நின்றார். அப்போது அருள்தாஸும் வீட்டிலிருந்தார். “எங்க குடும்பத்துக்கே விளக்கேத்தி வச்சுருக்கீங்க; கோடானுகோடி வருஷத்துக்கு நீங்க சுகமாய் இருக்கனும்…” என்று கண்ணீருடன் கை கூப்பி வணங்கினார். ”எதுக்குப் பெரிய வார்த்தையெல்லாம் …..” என்றபடி அவரைச் சமாதானப் படுத்தி இருவரும் வற்புறுத்தி வீட்டிற்குள் அழைத்துப் போனார்கள். அவருக்கு சாப்பிட ஏதாவது தரலாமென்று இவாஞ்சலின் சமையலறைகுள் போனாள்.
அருள்தாஸ் தான் கேட்டார்.”என்னைய்யா இப்படி அசட்டு மனுஷனா இருக்குற! உன் ஜாதியில புள்ளைங்கள பதிஞ்சு வைச்சிருந்தீன்னா எவ்வளவு சலுகைகள் கெடைச்சிருக்கும்? வேலை யிலயும் முன்னுரிமையெல்லாம் கெடைச்சுருக்குமில்ல; அத விட்டுட்டு எஃப்.சி.ன்னு பதிஞ்சு பிள் ளைங்களுக்கு ஒண்ணும் கிடைக்காமப் பண்ணீட்டீயே….”
அவர் அருள்தாஸை தீர்க்கமாகப் பார்த்தார். அப்புறம் பேசினார் “சலுகைகள் கிடைக்கும் தான். கூடவே என் ஜாதிக்கான இழிவும் அவங்க மேல படிஞ்சுடுமே! அதால இந்த சமூகம் அவங்களுக்குத் தர்ற வலி, அவமானம் எல்லாத்தையும் அவங்க அனுபவிச்சாகனுமே! எல்லோருக்கும் தலித்துகள் அனுபவிக்குற சலுகைகள் மட்டும் தான் கண்ண உறுத்துது; அதுக்கு அவங்க குடுக்குற வெலை யாருக்குமே தெரிய மாட்டேங்குது….. கிராமத்துல போயி பள்ளனா, பறையனா, சக்கிலி யனா ஒரே ஒரு நாளாவது வாழ்ந்து பார்த்தாத்தான் அந்த வலியும் வேதணையும் புரியும்….
மேளம் வாசிக்குறது என் மனசுக்கு ரொம்ப சந்தோஷம் தர்ற விஷயம் பட்டணத்துக்கு பொழைக்க வந்ததும் நான் அதக் கூட விட்டுட்டேன்; ஏன்னா அதுல என் ஜாதி அடையாளம் ஒட்டிட்டு இருக்கு; அதன் மூலமாக் கூட என் ஜாதி என்னன்னு தெரிஞ்சு என்னைச் சுத்தி இருக்குற வங்க என் குடும்பத்தையும் என் பிள்ளைங்களையும் இளக்காரமாப் பார்க்குறத நான் விரும்பல அதான்…என் பிள்ளைகள பள்ளிக்கூடத்துல சேர்க்கும்போது சாதி இல்லைன்னு தான் போடனும்னு ஆசைப் பட்டேன்; ஆனா என்ன மாதிரி சாமானியன் அப்படிச் சொன்னா அத பள்ளிக் கூடத்துல ஏத்துக்குவாங்களா என்ன! அதான் என் பொஞ்சாதியோட சாதியில சேர்த்தேன்…..
நானும் படிக்க ஆசைப்பட்டு சின்ன வயசுல கிராமத்துப் பள்ளிக்கூடத்துக்குப் போனேன் ஸார்; அந்த நாட்கள்ல ஊருக்குள்ளதான் சேரின்னு எங்கள ஒதுக்கி வச்சிருந்தாங்கன்னா, பள்ளிக் கூடத்துலயும் அதே கதை தான்…. வகுப்புல தனியா உட்கார வச்சாங்க; மதிய உணவுக்கு தனி வரிசை; குடிக்குற தண்ணிக்கு தனி தம்ளர்; இழிந்த சாதின்னு வாத்தியார்களும் சக மாணவர் களும் எங்க மேல செலுத்துன அதிகாரம் இருக்கே, அப்பப்பா! அந்த வலியும் வேதணையும் இப்ப நெனைச்சாலும் மனசு நடுங்குது.
நான் ஆறாப்பு படிச்சுக்கிட்டிருந்த சமயம்; சின்ன வகுப்புல கிளாஸ் ரூமுலேயே யாரோ ஒரு பையன் வெளிக்குப் போயிட்டான்னு சொல்லி என்னைக் கூப்புட்டு ‘அதை’ச் சுத்தப் படுத்தச் சொன்னாங்க… இத்தனை பேரு இருக்கும் போது நான் ஏன் பண்ணணும்னு கேட்டேன்; என் ஜாதியச் சொல்லி, இதையெல்லாம் நீங்க தாண்டா பண்ணனும்னாங்க; முடியாதுன்னுட்டு என் வகுப்புக்குப் போயிட்டேன்; ஹெட் மாஸ்டர் கூப்புட்டு, ‘ஏண்டா நாயெ! உனக்கு அத்தனை திமிறா?’ன்னு அடிச்சார்…. அன்னைக்கோட படிப்பே வேணாமின்னுட்டு ஓடி வந்துட்டேன் ஸார்…..
அந்த நிலைமை என் பிள்ளைகளுக்கு வர வேணாமின்னு தான் அவங்களுக்கு என் ஜாதியத் தரல…. ஜாதி இழிவுகளோட வலிய அனுபவிச்சு உணர்ந்த எனக்கு, சலுகைகள் பெரிசாத் தெரியல; நான் பிறந்த ஜாதியோட நிழல் கூட, என் பிள்ளைங்க மேல படிய விட மாட்டேன் ஸார்…” என்றார் தீவிரமான குரலில்.
-- முற்றும்
(நன்றி: தினமலர் – வாரமலர் 13.12.2009

நல்ல பதிவு
ReplyDeleteநல்ல வரிகள்