Tuesday, March 23, 2010

சிறுகதை : சிநேகிதன் எடுத்த சினிமா

திரையிடப்பட்ட முதல் நாள், முதல் காட்சியிலேயே "காதல் ஒரு ஞாபகம்" என்கிற திரைப்படத்தை பார்த்தே தீர்வது என்கிற தீவிர முடிவோடு தியேட்டருக்குப் போயிருந்தான் அழகர்சாமி. காரணம் அந்தத் திரைப்படத்தை எழுதி இயக்கி இருக்கிற கனகவேல்ராஜன், அழகர்சாமியின் பால்ய நண்பன். ஒன்பதாம் வகுப்பிலிருந்து ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில், ஒரே டெஸ்க்கில் உட்கார்ந்து படித்து, ஒரே ஹாஸ்டல் அறையில் தங்கி, ஒரே பிளேட்டில் உண்டு, ஒரே பாயில் உறங்கி, ஒரே கனவில் கிறங்கி, ஒரே பெண்ணைத் துரத்தி, ஒரே மாதிரி வேலைதேடி அல்லாடி.....அப்புறம் ஆளூக்கொரு பாதையில் பிரிந்து போய் ஒருவருக்கொருவர் தொலைந்து போனவர்கள்.
அழகர்சாமி அவனுடைய குக்கிராமத்தில் எட்டாவது வரைப் படித்துவிட்டு ஒன்பதாம் வகுப்பிற்கு அருப்புக்கோட்டையிலிருக்கும் ஒரு மேல்நிலைப் பள்ளியில் போய்ச் சேர்ந்த போது தான் கனகவேல்ராஜனைச் சந்தித்தான். அடிக்கடி மாற்றலாகும் அவனுடைய அப்பாவின் வேலை காரணமாக பையனாவது ஒரே பள்ளியில் ஒழுங்காகப் படிப்பைத் தொடரட்டுமென்று அதே பள்ளியில் சேர்க்கப்பட்டு படித்துக் கொண்டிருந்தான். இருவரின் பிறந்த ஊர்களும் பள்ளியிலிருந்து தினசரி வந்து போகும் தூரத்திலில்லாததால் ஹாஸ்டலிலும் சேர்க்கப் பட்டிருந்தார்கள்
ஹாஸ்டல் உணவு மற்ற மாணவர்களை மிரட்டிப் பயமுறுத்த அழகர்சாமிக்கோ அதுவே தேவாமிர்தமாய் வசீகரித்தது. தினசரி கேப்பைக் கூழும் கம்பும் சோளமுமாய்ச் சாப்பிட்டு வரகு, குருதவாலி அரிசிச் சோற்றுக்கே நாள், கிழமை என்று காத்திருந்த கிராமச் சூழலுக்கு மாறாக தினசரி நெல்லுச்சோறும் பொங்கல், பூரி, இட்லி, தோசை என்று ஹாஸ்டலில் கிடைத்ததில் தினறித் திக்குமுக்காடித் தான் போனான் அழகர்சாமி. அப்போதெல்லாம் வாழ்தலின் பிரதானமே அவனுக்கு வயிறு வளர்ப்பதாகவே இருந்தது.
ஒரு மதிய உணவு நேரத்தில் உணவொன்றே குறியாக தன்னுடைய புதிய அலுமினியத் தட்டோடு மெஸ்ஸை நோக்கி ஓட, அங்கங்கே கட்டிட விஸ்தரிப்பிற்காக வெட்டி வைத்திருந்த ஒரு அகன்ற குழிக்குள் அழகர்சாமி விழுந்து விட்டான். குள்ளமான உருவமென்பதால் உடனே தாவி ஏறவும் முடியவில்லை. மற்ற மாணவர்கள் எல்லாம் கைகொட்டி சிரித்து வேடிக்கை பார்க்க கனகவேல்ராஜன் தான் "சும்மா இருங்கடா ....." என்று அவர்களை அடக்கிவிட்டு, கை கொடுத்துத் தூக்கி விட்டான். அதில் வேர்விட்ட நட்பு எத்தனையோ சண்டை சச்சரவுகள், போட்டி பொறாமைகளையும் தாண்டி பூப்பூத்து வளர்ந்தது.
அழகர்சாமி பட்டணத்து வாழ்க்கைக்கு கொஞ்சமும் பழக்கப்படாத கிராமத்து அசடாக அந்த ஹாஸ்டலுக்குள் நுழைந்திருந்தான். கனகவேல்ராஜன் தான் அவனை பட்டணத்து வாழ்க்கைக்கும் அதன் படோடோபங்களுக்கும் பழக்கப் படுத்தினான். அரைக்கால் டிரவ்ஷர் மட்டுமே அலைந்து திரிந்தவனுக்கு, மூட்டிய கைலியை லாவகமாய்க் கட்டி இடுப்பில் உருட்டி வைத்துக் கொள்ளும் சூட்சுமம் சொல்லித் தந்தான். உள்ளாடைகள் அணியச் சொன்னான். செருப்பு அணியச் செய்தான். பாடப்புத்தகங்களுக்கு வெளியே வாசிக்கிற பரவச அனுபவங்களை அறிமுகப்படுத்தினான். வயசின் சேட்டைகளை வாலிப ருசிகளை பழக்கப் படுத்தினான்.
சினிமாவையே அதிகம் அறிந்திராத கிராமத்து சிறுவனான அழகர்சாமிக்கு சினிமாவை அறிமுகப்படுத்தி அதன் காட்சியமைப்புகளைப் புரிந்து கொள்ளக் கற்றுக் கொடுத்தான்.அப்போதே கனகவேல்ராஜனுக்கு அவன் பார்த்த சினிமாக்களை கோர்வையாக காட்சி வரிசை பிசகாமல் வசனங்களுடன் விவரிக்கிற திறமை இருப்பதைப் பார்த்து அழகர்சாமி பெரிதும் ஆச்சர்யப்பட்டிருக்கிறான். இரண்டுபேரும் படிக்கப் போகிறோம் என்று இரயில்வே நிலையங்களுக்கும் பூங்காக்களுக்கும் போய் சினிமா வசனப் புத்தகங்களை நெட்டுரூப் போட்டு, பிரபல நடிகர்கள் மாதிரி நடித்துக் காட்டி அதை ரசித்துத் தலையாட்டும் காட்டுத் தாவரங்களுக்குள் அலைந்து திரிந்திருக்கிறார்கள். நீலக்காட்சிகளின் பிட் இணைத்து ஓட்டும் மலையாளப் படங்களின் பின்னிரவுக் காட்சிகளுக்குப் போய்விட்டு விடுதியின் முள்வேலியைத் தாண்டும் போது பிடிபட்டு வார்டனிடம் அறைவாங்கி இரவின் நிசப்தம் கிழிக்க அலறி இருக்கிறார்கள். விடுமுறை நாட்களில் வீதிகளில் அலைந்து பெண்களை ரசித்திருக்கிறார்கள். ஒவ்வொரு முழுப் பரீட்சை விடுமுறைக்கும் ஒருவரின் ஊர் என்று சேர்ந்து போய் குதித்து கும்மாளமிட்டு ஊரையே கலங்கடித்திருக்கிறார்கள்.
ப்ளஸ் ஒன் படிக்கும் போது தான் பெண்களைப் பற்றிய அதீத கனவுகளிலும் ஆசைகளிலும் அழகர்சாமி கவிதைகள் புனையத் தொடங்கினான்."அன்ன நடையாள்; சின்ன இடையாள்; பின்னல் சடையாள்; கன்னல் மொழியாள்; கருமை விழியாள்....." என்ற ரீதியில் கிறுக்கத் தொடங்கி, விடுமுறை தினங்களில் கனகவேல்ராஜனுக்கும் பக்கம் பக்கமாய் கவிதையிலேயே கடிதங்கள் வரைந்து தள்ளினான். கனகவேல்ராஜனோ அழகர்சாமியின் உளறல்களை எல்லாம் உலக மகா காவியங்கள் என்று உசுப்பேற்றி "உன்கிட்ட பாரதியின் சாயல் இருக்குடா; அக்னிக் குஞ்சு மாதிரி ஒரு திறமை ஒளி ஒளிஞ்சு இருக்குடா....." என்றெல்லாம் ஏகத்துக்கும் புகழ்ந்து, மேலும் மேலும் எழுதச் சொல்லி உற்சாகப் படுத்தினான்.
"அவளுக்கு இரண்டு நிழல்கள்
அவனையும் சேர்த்து........." என்று அழகர்சாமி எழுதிய இரண்டு வரிக்கவிதை ஒன்று துணுக்கு போல ஒரு வார இதழில் பிரசுரமாகிவிட கனகவேல்ராஜன் ஹாஸ்டலையே ரெண்டு பண்ணினான். அந்த இரண்டு வரிக் கவிதையின் அர்த்த ஆழங்களை இரத்த நாளங்கள் தெறிக்கப் பேசி பித்தேறித் திரிந்தான்.
கல்லூரியிலும் இருவரின் நட்பும் தொடர்ந்தது. இலக்கிய நாட்டமும் எழுத்தார்வமும் இருந்த அழகர்சாமி கணிதத்தையும், எழுதுவதை ஊக்குவிப்பதையே தன் உயிர் மூச்சாகக் கொண்டிருந்த கனகவேல்ராஜன் ஆங்கில இலக்கியத்தையும் விருப்பப் பாடங்களாக தேர்ந்து கொள்ள நேர்ந்தது வாழ்க்கையின் குரூர நகைச்சுவைகளில் ஒன்று. அழகர்சாமி கவி அரங்கங்களிலும் கல்லூரி மலர்களிலும் புரட்சிக் கவிதைகள் எழுதி அதில் மயங்கி எவளாவது காதலியாக வரமாட்டாளா என்று காத்துக் கிடந்தான். கனகவேல்ராஜன் தமிழ் மன்றங்களுக்குத் தலைமை ஏற்று விழாக்களையும் அரசியலையும் அரங்கேற்றித் திரிந்தான்.
அழகர்சாமி கல்லூரியில் இறுதி வருஷம் படிக்கும் போது, நகைச்சுவைத் தோரணங்களாயிருந்த கல்லூரி நாடகங்களை சீர்திருத்தி விடும் கலகக்காரனின் முஸ்தீபுகளோடு காதலும் புரட்சியும் சரிவிகிதத்தில் கலந்த ஒரு நாடகம் எழுதி நாடக மன்றத்தில் சமர்ப்பித்தான். "வசந்தங்கள் திரும்பாது" என்ற தலைப்பிட்டு நூறு பக்கங்களில் நவீன நாடகத்தின் காட்சி விவரணைகள் மற்றும் வசனங்களோடு அவன் அந்த நாடகத்தை எழுதிக் கொடுத்திருந்தான்.ஆனால் நாடகமன்றம் அந்த நாடகத்தை நிராகரித்து விட்டது.
நாடகத்தில் நகைச்சுவை இல்லாமல் ரொம்பவும் வறட்சியாக இருப்பதால் மாணவர்கள் அதை ரசிக்க மாட்டார்கள் என்றும் நாடகத்தில் நிறைய பெண் பாத்திரங்கள் வருவதால் நம் நாடக மன்றத்தில் நடிக்கச் சம்மதித்து பெயர் கொடுத்திருக்கும் ஒரே ஒரு பெண்னை மட்டும் வைத்து அந்த நாடகத்தை அரங்கேற்ற முடியாது என்றும் காரணங்கள் சொல்லி புறக்கணித்து விட்டார்கள்.
செய்தி கேள்விப்பட்ட கனகவேல்ராஜன் கொதித்துப் போனான். தமிழ் மன்றத்தின் சார்பில் வசந்தம் திரும்பாது நாடகத்தை அரங்கேற்றிக் காட்டுகிறேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு நண்பர்களைத் திரட்டி ஒத்திகைகளுக்கு ஏற்பாடு செய்தான்.மதுரையின் புரொஃபஷனல் நாடகக் கம்பெனியிலிருந்து நடிகைகளைக் கொண்டு வருவதாகவும் சொல்லித் திரிந்தான்.ஆனாலும் கடைசி நிமிஷத்தில் கல்லூரி முதல்வர் நாடகத்தை அரங்கேற்ற அனுமதி மறுத்துவிட்டார்- கல்லூரியையும் விடுதியையும் கொச்சைப் படுத்துகிற காட்சிகளும் வசனங்களும் நிறைய இருக்கிறது என்று காரணம் காட்டி.
கனகவேல்ராஜன் எவ்வளவோ வாதாடிப் பார்த்தும், அழகர்சாமி நாடகத்திலிருக்கும் ஆட்சேபகரமான காட்சிகளையும் வசனங்களையும் நீக்கிவிடுவதாக உறுதிமொழி அளித்தும், கெஞ்சியும் கூட அவர் பிடிவாதம் தளரவில்லை. வீதிகளில் போட வேண்டிய புரட்சி நாடகங்களை எல்லாம் கல்லூரி விழா மேடையில் அனுமதிக்க முடியாது என்று முடிவாகச் சொல்லி விட்டு எழுந்து போய் விட்டார். கனகவேல்ராஜனும் அழகர்சாமியும் சோர்ந்து போய் என்ன செய்வது என்றும் தெரியாமல் அதன் விதி அவ்வளவு தான் என்று விட்டுவிட்டு வேறு வேலைகளைப் பார்க்கப் போய் விட்டார்கள்.
அழகர்சாமி இப்போது யோசித்துப் பார்க்கும்போது தான், தன் நாடகத்திற்கு அனுமதி மறுத்த முதல்வரின் செய்கை சிறுபிள்ளைத்தனமாகத் தோன்றியது. ஜனநாயகத் தன்மை கொஞ்சமும் இல்லாமல் எத்தனை கட்டுப்பெட்டித் தனமாய் இருக்கிறார்கள் கல்லூரி முதல்வர்கள்! வாலிப வயசுக்கே உரிய கனவுகளும் குறும்புகளும் நிறைந்த நல்லதோர் கதை தான் அது. அதைப் பார்த்து ஏன் அவர் அத்தனை பதட்டப் பட்டார் என்று ஆச்சரியமாக இருந்தது.
நாடகப்படி கதையின் நாயகி வெளிநாட்டில் தன் புருஷனுடன் வசித்து வருகிறாள்.அப்போது அவள் தீவிரமாய் நோய் வாய்ப்பட்டு படுத்த படுக்கையாய் இருக்கிறாள்.அவள் படித்த கல்லூரியிலிருந்து 25 வருஷங்களுக்கொருமுறை பழைய மாணவர்களை எல்லாம் ஒன்று சேர்க்கும் ஒரு விழாவிற்கான அழைப்பிதழ் வருகிறது. இவளும் இந்தியாவிற்குப் போய் அவளின் கல்லூரி விழாவில் கலந்து கொள்ள வேண்டுமென்று ஆசைப்படுகிறாள்.அவள் உடம்பு இப்போது இருக்கும் நிலையில் அது சாத்தியமில்லை என்று அவள் புருஷன் அவளை இந்தியா அழைத்துப் போக மறுக்கிறான். நாயகியோ போயே தீர்வேன் என்று முரண்டு பிடிக்கிறாள். மருத்துவரிடம் ஆலோசணை கேட்கிறார்கள். அவரும் முதலில் மறுத்து, அப்புறம் அவளின் பிடிவாதம் பார்த்து "பரவாயில்லை அழைத்துப் போய் வாருங்கள். பழைய நண்பர்களைச் சந்திப்பதும், புது சூழ்நிலையும் அவளுக்கு மருந்தாகி நோயின் கடுமை குறைந்து அவள் குணமாகலாம்....." என்று சொல்ல, நாயகி புருஷனுடன் இந்தியா வருகிறாள்.
கல்லூரி விழாவிற்குப் போகும் வழியில், வீட்டில் தேடிக் கண்டுபிடித்த போட்டோ ஆல்பத்தை விரித்து தன் கடந்த காலத்து வாழ்க்கையைப் புரட்டிப் பார்த்து அசைபோட, அந்த பழைய நாட்கள் உயிர்ப்புடன் பிளாஸ்பேக்குகளாக விரிகிறது. மாணவ மாணவிகளுக்கிடையே மலர்ந்த சினேகம், காதல், போட்டி, பொறாமைகள், தவிப்புகள், காதல் தோல்விகள், செல்லக் கோபங்கள், சில்மிஷங்கள், நகைச்சுவை விளையாட்டுக்கள், பரீட்சை பயங்கள், கல்லூரி நிர்வாகத்தின் சுரண்டல்கள், உள் அரசியல், மாணவப் போராட்டங்கள், ஒரு மாணவன் இறந்து போதல், அதைத் தொடர்ந்த வெறியாட்டங்கள், சமரசங்கள், கல்லூரி விழாக்கள் என்று ஒவ்வொரு காட்சியாக அரங்கேறுகிறது.
பிளாஸ்பேக் முடிந்து, பரவசத்தோடும் சிறகடிக்கிற மனநிலையோடும் கல்லூரி விழாவிற்குப் போகிறாள் கதையின் நாயகி. ஆனால் விழாவிற்கு இவள் எதிர்பார்த்துப் போயிருந்த பழைய மாணவர்கள் யாவரும் அடுத்த கட்டத்திற்குப் போய்விட்ட அதிகாரிகளாகவும், அரசியல்வாதிகளாகவும், ஆன்மீகவாதிகளாகவும், பிஸினெஸ் மேன்களாகவும், அம்மாக்களாகவும், குடும்பத் தலைவர்களாகவும் பழைய சுவடுகள் ஏதுமற்று, பொருள் தேடுதலே வாழ்தலின் வெற்றி என்று நினைத்து அதில் பெருமைபட்டுக் கொண்டும், அதிகாரம் செலுத்திக்கொண்டும், இளைய தலைமுறை பற்றிக் குறைபட்டுக் கொண்டும் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். கனவுகளும், இனிய கற்பனைகளும், அறியாமைகளும் நிறைந்த மாணவப் பருவம் ஒரு போதும் வாழ்க்கையில் வேறு எந்தக் கட்டத்திலும் திரும்பக் கிடைக்காது என்கிற நிதர்சனம் உறைக்க, "நாம வெளிநாட்டுக்கே திரும்பிப் போகலாம்......." என்று கணவனிடம் சொல்லி விட்டு குலுங்கி அழுகிறாள். அப்படியே காட்சி உறைய நாடகம் நிறைவு பெறுவதாக எழுதி இருந்தான் அழகர்சாமி.
. இப்போது அந்த நாடகப் பிரதி எங்கிருக்கிறது? கல்லூரி நாட்களுக்கப்புறம் ஒரு நாளும் அதைப் பார்த்த ஞாபகம் அவனுக்கில்லை. எழுதும் போது இரண்டு கார்பன் பேப்பர்கள் வைத்து -இவன் நாடகம் எழுதிய காலகட்டத்தில் போட்டாக் காப்பிகள் வெகுவாய் புழக்கத்திற்கு வந்திருக்கவில்லை - எழுதியது ஞாபகத்திற்கு வந்தது. மூலப்பிரதியை கல்லூரியின் நாடக மன்றத்தில் சமர்பித்து நாடகம் நிராகரிக்கப்பட்ட பின்பும் அது இவன் கைக்குத் திரும்பாமல் அங்கேயே தங்கிவிட்டது. கார்பன் பிரதிகள் எங்கு போயிற்றென்று ஞாபகமில்லை. ஒருவேளை கனகவேல்ராஜனிடம் ஒரு பிரதி இருக்கலாம்; அவன் தான் இந்த நாடகத்தை ஒரு பொக்கிஷம் போல தூக்கிக் கொண்டு திரிந்தான்.
கல்லூரி நாட்களுக்கப்புறம், அழகர்சாமிக்கும் கனகவேல்ராஜனுக்கும் இடையில் இருந்த நட்பு அவனே ஒரு கவிதையில் சொல்லி இருப்பதைப் போல ஆடம்ப நாட்களில் கத்தை கத்தையான காகிதங்களில் செழித்து வளர்ந்து, காலப்போக்கில் உள்நாட்டு தபால் உறைகளாக மெலிந்து, "நலம்; நல மறிய ஆவல்" என்னும் அஞ்சல் அட்டைகளாக சுருங்கி, புது வருஷம் பொங்கல்களுக்கான வாழ்த்து அட்டைகளாகி, அப்புறம் அதுவுமின்றி கரைந்து வெறும் நினைவுகளாக நெஞ்சில் மட்டும் தங்கிப் போனது.
ஒரு கடுங்கோடையின் வெயில் நாளில் பசி, தாகம் நிறைந்து சென்னை வீதிகளில் அழகர்சாமி அலைந்து கொண்டிருந்த போது திடீரென்று கனகவேல்ராஜன் எதிர்ப்பட்டான். அவன், தான் இப்போது சினிமாவில் வேலை செய்வதாகச் சொல்லவும் அழகர்சாமிக்கு ஆச்சர்யமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது.
"எங்க ஊர்க்காரர் ஒருத்தர் புதுமுகங்களைப் போட்டு ஒரு படம் தயாரிக்கிறார். ஊர்ல சும்மா தான இருக்கிற; வந்து உனக்கு தெரிஞ்ச வேலையைப் பாருன்னு கூட்டிட்டு வந்துட்டார்...."என்றான் மலர்ச்சியாக. படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கு அழைத்துப்போய் பலபேரிடம் அனுமதி கேட்டு அழகர்சாமிக்கு ஒரு வேளை சாப்பாட்டிற்கு ஏற்பாடு செய்தான். சாப்பாட்டில் கனவின் சுவை இருந்தது.
அப்புறம் கொஞ்ச நாட்களுக்கு இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டார்கள்.சினிமா பற்றி நிறைய பேசினார்கள்.அவன் வேலை பார்த்த திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் நடுவில் மனஸ்தாபமாகி, இயக்குனர் பாதிப்படத்தில் விலகிக் கொண்டதாகவும், தயாரிப்பாளரே இயக்குநனராகவும் அவதாரம் எடுத்து உதவியாளர்களை வைத்தே மிச்சப்படத்தை முடித்து வெளியிட்டதாகவும் சொன்னான். அதில் கனகவேல்ராஜன் கூட நிறைய காட்சிகளுக்கு துண்டுதுண்டாக வசனம் எழுதியிருந்ததாக பெருமைப்பட்டுக்கொண்டான்.
அந்தப் படம் ரிலீசாகி படுமோசமாய் தோல்வி கண்டது. கொஞ்சமும் சகித்துக் கொள்ள முடியாத அந்த திரைப் படத்தை நண்பனின் பெயரை திரையில் பார்த்து விடுகிற சந்தோஷத்திற்காக மட்டுமே மூன்றுமுறைப் பார்த்தான் அழகர்சாமி. முதல்முறை இவன் தியேட்டருக்குள் போவதற்குள்ளாகவே டைட்டில்கள் முடிந்து படம் தொடங்கி விட்டது. இரண்டாம் முறை உதவி இயக்குனர்கள் மற்றும் வசன கர்த்தாக்களின் பட்டியலில் கனகவேல்ராஜனின் பெயரைத் தேடி ஏமாந்து, மூன்றாம் தடவை போன போது தான் புரொடக்ஷன் உதவியாளர்கள் என்னும் பெரும் பட்டியலுக்குள் நண்பனின் பெயர் பார்த்து கைதட்டி, எல்லோரும் ஒரு மாதிரியாகப் பார்க்கவும் தலையைக் குனிந்து கொண்டான்.
சில நாட்கள் கழித்து அந்த சினிமா கம்பெனிக்கு கனகவேல்ராஜனைத் தேடிப் போன போது கம்பெனியே காணாமல் போயிருந்தது. அவனைப் பற்றிய விவரங்களும் கிடைக்கவில்லை. சினிமாவில் ஒரு பெரும் வேலை நிறுத்தம் நடந்தபோது மிகவும் உருக்குலைந்த நிலையில் மீண்டும் கனகவேல்ராஜனைச் சந்தித்தான் அழகர்சாமி. அப்போது அவன் ஒரு சுமாரான உத்தியோகத்தில் இருந்ததால் கனகவேல்ராஜனுக்கு உணவு மற்றும் சிகரெட்டுகளுக்கு தாராளமாகவே ஏற்பாடு செய்தான். இருவரும் நிறைய நிறையப் பேசினார்கள்.
"சினிமா என்பது கோடிகோடியாய் பணம் புரளும் ஒரு துறை தான். ஆனாலும் பட்டினி சாவுகளும் இங்கு சர்வசாதாரணம்.." என்றும் " மிகச்சிலரை முன்னிலைப் படுத்துவதற்காக லட்சம் பேர் மண்ணோடு மண்ணாக மட்கிப் போவதுண்டு....." என்றும் சினிமா பற்றி நிறைய தெளிவுகளுக்கு வந்திருந்தான் கனகவேல்ராஜன்.
"ஒருசில படங்களுக்கு மட்டும் உதவி இயக்குனராக வேலை செய்து விட்டு, ஒரே வருஷத்துல இயக்குனராக வாய்ப்புக் கிடைத்து ஜெயித்தவர்களும் இருக்கிறார்கள்; இருபது முப்பது வருஷமா உதவி இயக்குனர்களாகவே இதில் உழன்று கொண்டிருப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனாலும் சினிமா ஒரு வசீகரமான சுழல் மாதிரி. ஒருமுறை உள்ளே நுழைந்து விட்டால் அப்புறம் அவ்வளவு சுலபமா யாரும் வெளியேறி விலகிப் போகவே முடியாது. அதன் கவர்ச்சியும் வருமான சாத்தியமும் அப்படிப் பட்டது....." என்றான் சிரித்துக் கொண்டே..
அழகர்சாமி தானும் சினிமாவிற்குள் நுழையலாமா என்று அவனிடம் கேட்ட போது, தப்பித் தவறிக் கூட அந்த தப்பை செய்து விட வேண்டாம் என்றும் அழகர்சாமியின் மனநிலைக்கும் அவனுடைய வருமானம் தேவைப் படுகிற இப்போதைய குடும்ப நிலைமைகளுக்கும் சினிமா ஒருபோதும் பொருந்திப் போகாது என்றும் சொல்லி அவனுடைய ஆசைகளை முளையிலேயே கிள்ளி விட்டான்.
அடுத்த முறை அழகர்சாமி கனகவேல்ராஜனைச் சந்தித்த போது அவன் ஒரு பிரபல தமிழ் வாரப் பத்திரிக்கையில் சினிமா நிருபராக வேலை பார்ப்பதாகத் தெரிவித்தான். “உன்னோட சினிமா கனவு என்னாச்சு?” என்று கேட்ட போது, இந்த வேலையும் தன் கனவு சினிமாவை சாத்தியப் படுத்துவதற்கான ஒரு படி தான் என்றான். அழகர்சாமிக்குப் புரியவில்லை.
தான் சினிமா நிருபராக இருப்பதின் மூலம் நிறைய பிரபல நடிகர், நடிகைகளைச் சந்திப்பது சாத்தியமாவதாகவும், அவர்களிடம் நெருங்கி கதை சொல்வதாகவும் அவர்களின் மூலம் ஏதாவது தயாரிப்பாளர் தன்னை படம் இயக்க அனுமதிப்பார் என்றும் விளக்கமளித்தான். பேச்சு பல திசைகளில் அலைந்து விட்டு திருட்டு டி.வி.டி மற்றும் வி.சி.டி.பற்றித் திரும்பியது. கனகவேல்ராஜனுக்கு திருட்டு டி.வி.டி மற்றும் வி.சி.டி.எடுப்பவர்கள் அதை வாங்கிப் பார்ப்பவர்களின் மீதெல்லாம் ஆங்காரமாய் கோபமிருந்தது. “கோடி கோடியா கொட்டி படம் எடுக்குறாங்க; அதைத் தியேட்டர்ல போய் பார்க்காம, திருட்டுத் தனமா எடுத்து பிஸினஸ் பண்றவங்களை எல்லாம் சுட்டுக் கொல்லனும்....” என்றான் கொதிநிலையின் உச்சத்தில்.
அழகர்சாமி சிரித்துக் கொண்டே “சினிமாக் காரங்களுக்கு திருட்டு டி.வி.டி மற்றும் வி.சி.டி.பத்திப் பேசுறதுக்கு எந்த அருகதையும் தார்மீக நியாயமும் கிடையாது; அவங்க பண்ணாத திருட்டா? வெளிநாட்டு டி.வி.டி. பார்த்துத் தான படமே எடுக்குறாங்க...! நாவல்கள்ல இருந்து நிகழ்வுகள நைசா உருவி தங்களோட படத்துல காட்சிகளா வச்சுக்கிறாங்க.... நாவல் எழுதுனவன்கிட்ட அனுமதி வாங்குறதுமில்ல; நையாப் பைசா குடுக்குறதுமில்ல....”என்று சொல்லவும் கனகு ’அதுவும் சரிதான்; இருந்தாலும்.....” என்று எதையோ சொல்ல வந்து அதைத் தொடராமல் விட்டு விட்டான்.
அப்புறம் அழகர்சாமியிடம் நல்லதாய் ஏதாவது கதை எழுதிக் கொடுத்தால் அதை தங்கள் பத்திரிக்கையில் வெளியிட ஏற்பாடு செய்ய முடியும் என்று சொல்லவே இவனும் அடுத்த வாரமே பனிரெண்டு பக்கங்களில் ஒரு சிறுகதை எழுதிக் கொடுத்தான். அடுத்த சில வாரங்களிலேயே அவனுடைய சிறுகதை அந்த பத்திரிக்கையில் பிரசுரமாகி இருந்தது.
ஆனால் பிரசுரமான கதையைப் படித்த அழகர்சாமிக்கு இரத்தம் சூடேறி கோபம் தலைக்கேறி விட்டது. அவனுடைய கதை அநியாயத்திற்கு சுருக்கப்பட்டு ஒரே பக்கத்தில் அதுவும் முக்கால் பக்கத்திற்கு கதையும் கால் பக்கத்திற்கு ஓவியமுமாய் போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்ட பிணம் மாதிரி குற்றுயிரும் கொலையுயிருமாக பிரசுரமாகி இருந்தது. உடனே கனகவேல்ராஜனைச் சந்தித்து அழகர்சாமி சத்தம் போட்டான், அவனோ இவனுடைய கோபத்தின் சாரத்தைக் கொஞ்சமும் புரிந்து கொள்ளாமல் அவனுடைய எடிட்டரைப் புகழ்ந்து பேசினான்.
"எங்க எடிட்டர் மாதிரி ஒரு திறமைசாலிய எங்கயுமே நீ பார்க்க முடியாது. ஒரு வார்த்தை கூட அனாவசியமா துருத்திக்கிட்டு இருக்கிறத அவரு அனுமதிக்க மாட்டாரு. உன் கதைய எப்படி கச்சிதமா எடிட் பண்ணி அழகா போட்டுருக்கார்னு பார்த்தியில்ல...."
"உங்க எடிட்டர் பண்ணியிருக்கிறது எடிட்டிங் இல்ல; கொலை...." குமுறினான் அழகர்சாமி.
"உன் கோபம் அர்த்தமில்லாதது அழகர்; இந்த பத்திரிக்கையில எவ்வளவு ரைட்டர்ஸ் அவங்க படைப்பு ஒரு வரியாவது பப்ளிஷ் ஆகாதான்னு தவமிருக்காங்கன்னு தெரியுமா உனக்கு? உன் கதை வந்ததுக்கு சந்தோஷப் படாம சும்மா குதிக்காத. நீ எழுதியிருந்த கதையோட எஸன்ஸ் அப்படியே பப்ளிஸ் ஆயிருக்கா இல்லையா? அதைத்தான் பார்க்கனும்......"
"உங்க எடிட்டர பேசாம ஜூஸ் கடை திறந்து எஸன்ஸ் வியாபாரம் பண்ணச் சொல்லு. உத்தமமான தொழிலு. பத்திரிக்கையை விட நல்லா காசும் புரளும்...." கோபமாய்ப் பேசிவிட்டு அழகர்சாமி விலகிப்போனான்.
அதற்கப்புறம் நீண்ட நாட்களுக்கு அவனைச் சந்திக்கும் சந்தர்ப்பங்கள் அமையவே இல்லை. ஒருமுறை புத்தகக் கண்காட்சியில் தற்செயலாக சந்தித்த போது, அவன் பத்துப் படங்களுக்கு மேல் உதவி மற்றும் அசோசியேட் இயக்குனர்களாக வேலை செய்து விட்டதாகவும், விரைவில் தானே ஒரு படத்தை இயக்கப் போவதாகவும் நம்பிக்கை தெரிவித்தான். சொன்னது மாதிரியே இதோ படத்தை இயக்கி வெளியிட்டும் விட்டானே! இந்தப் படத்தைப் பார்த்து விட்டு தன்னுடைய விமர்சனத்தை விரிவாகவே எழுதி அவனுக்கு அனுப்ப வேண்டும் என்று நினைத்துக் கொண்டான் அழகர்சாமி.
அழகர்சாமிக்கு ஒரு வழியாய் டிக்கெட் கிடைத்து பரபரப்பாய் உள்ளே போனான். படத்தை ஆரம்பத்திலிருந்து ஒரு பிரேம் கூட விடாமல் பார்த்துவிடும் துடிப்பும், நண்பனின் பெயரை டைட்டிலில் தரிசிக்கிற பரவசமும் அவனிடமிருந்தன. இவன் இடம் தேடி உட்கார்ந்ததும் படம் தொடங்கியது. கையெழுத்து வடிவிலான மார்டன் தமிழ் எழுத்துக்களில் டைட்டில்கள் மின்னின. இறுதியில்
கதை,
திரைக்கதை,
வசனம்,
இயக்கம் :
கனகவேல்ராஜன்
என்று காட்டியபோது தியேட்டரில் விசில் பறந்தது. அவன் ஏற்கெனவே பத்திரிக்கையாளானாக வேலை பார்த்திருந்த்தால், படம் ரிலீஸுக்கு முன்பாகவே பத்திரிக்கை நண்பர்களின் மூலம் படத்தைப் பற்றியும் தன்னைப் பற்றியும் அவ்வப்போது செய்தி வெளியிடச் செய்ததில் படத்தைப் பற்றிய ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதோடு, கனகவேல்ராஜன் என்கிற பெயரும் பிரபலமாகி விட்டிருந்தது கை தட்டல்களின் அடர்த்தியில் புரிந்தது. தன் நண்பனுக்கு இத்தனை மரியாதையா என்று நினைக்கும்போது அழகர்சாமிக்கு கொஞ்சம் கர்வமாகவே இருந்தது. பக்கத்தில் உட்கார்ந்து படம் பார்ப்பவனிடம் கனகவேல்ராஜன் என் நண்பனாக்கும் என்று பெருமை அடித்துக்கொள்ளவும் மனசு துடித்தது. அடக்கிக் கொண்டான்.
படம் ஆடம்பித்தது. கேமரா அமெரிக்காவின் தெருக்களில் அலைந்து அதன் பிரமிக்க வைக்கும் உயர உயரமான கட்டிடங்களையும், சுத்தமான சாலைகளையும், அழகான பூங்காக்களையும் காட்டியபடி, அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்றின் ஒரு ஃபிளாட்டுக்குள் பிரவேசித்தது. அதன் படுக்கை அறையில் நடுவயது தாண்டிய பெண் ஒருத்தி நோயாளியாகப் படுத்துக் கிடக்கிறாள். ஒரு கடிதத்தை எடுத்துப் படிக்க அவளின் கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது. அவளின் புருஷன் உள்ளே நுழைந்து தன் கோர்ட்டை கழற்றி ஹேங்கரில் மாட்டிவிட்டு அவளின் கன்னம் தட்டி "எப்படி இருக்கிறாய் செல்லமே!" என்கிறான். "நான் படிச்ச கல்லூரியில அலுமினி ஃபங்ஷன்; இன்விடேஷன அம்மா அனுப்பியிருக்கா; இருபத்தஞ்சு வருஷங்களுக்கு அப்புறம் கூடப் படிச்சவங்க எல்லோரையும் பார்க்க ஒரு வாய்ப்பு. நானும் போயிட்டு வரணுங்க.........” என்கிறாள்.
அழகர்சாமிக்கு சிலீரென்றது. "அடப்பாவி........." என்றான் மனசுக்குள். கல்லூரி நாட்களில் அவன் நாடகமாய் எழுதி அரங்கேற்ற முடியாமல் போன கதை அப்படியே சினிமாவாக ஓடிக் கொண்டிருந்தது.

(நன்றி: உயிரெழுத்து – மார்ச் 2010)

2 comments:

  1. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete
  2. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete