பள்ளிக்கு இரண்டு நாளில் சி.இ.ஓ. இன்ஸ்பெக்ஷன் இருக்கிறது என்ற செய்தி வந்த போது, அது பியூலாராணியை அவ்வளவாக பாதிக்கவில்லை. “வரட்டுமே; அதனால் என்ன!” என்றாள் மிகச் சாதாரணமாய். சி.இ.ஓ. வையும் அவருடன் வருகிற ஆசிரிய பட்டாளத்தையும் சமாளிப்பது அப்படி ஒன்றும் சிரம்மான காரியமில்லை அவளுக்கு.
ப்யூலாராணி ப்ளஸ் ஒன் மற்றும் ப்ளஸ் டூ வகுப்புகளுக்கு கணிதம் கற்றுத் தருகிறாள். இன்ஸ்பெக்ஷன் தினத்தில் என்ன பாடம் நடத்துவது; என்ன மாதிரி கேள்விகள் கேட்பது என்கிற நெளிவு சுளிவுகளும் மாணவர்களை தயார் படுத்துகிற சூட்சுமமும் அவளுக்கு அத்துபடி. அவளுடைய பத்து வருஷ சர்வீஸில் இதுமாதிரி எத்தனை இன்ஸ்பெக்ஷன்களை ப்பூ என்று ஊதி தள்ளியிருக்கிறாள் அவள்!
“இந்தத் தடவை நமக்கு சி.இ.ஓ.வா ஒரு புதுலேடி வர்றாங்க.... “ என்றும் “போனவாரம் ஒரு தனியார் பள்ளிக்கு போயிருந்தப்ப அந்த ஸ்கூலயே ஒரு கலக்குக் கலக்கிட்டாங்களாம்... “ என்றும் ஜெய்சிங் சார் சொன்ன போதும் கூட அவள் அலட்டிக் கொள்ளவில்லை. “அப்படி என்னத்த சார் கலக்குக் கலக்குன்னு கலக்குனாங்க.... அந்தக் கலக்குக் கலக்குறதுக்கு அதென்ன குலுதாடி தொட்டியா...? “ என்று எல்லோருக்கும் சிரிப்பூட்டினாள்.
”நீங்க வேற மிஸ், சீரியஸ்னஸ் புரியாம பகடி பண்ணிக்கிட்டு இருக்கீங்க...! மத்த சி.இ.ஓ. மாதிரி இவங்க இல்லையாம்; ரொம்ப ஸ்ட்ரிக்டாம். ஸ்கூல்ல தண்ணி கூடக் குடிக்க மாட்டாங்களாம்; வரும்போதே கையோட சாப்பாடு, பிளாஸ்க்குல காஃபி எல்லாம் கொண்டாந்துடுவாங்களாம்... ஸ்கூல்ல எது குடுத்தாலும் சாப்புடுறதில்லையாம்.... திடுதிப்புன்னு ஏதாவது ஸ்கூலுக்குப் போய் நிப்பாங்களாம்; இவங்க புரோகிராம் டிரைவருக்கே கூடத் தெரியாதாம்... வண்டியில ஏறிக் கொஞ்ச தூரம் போன பின்னாடிதான் எங்க போகணுமின்னே சொல்வாங்களாம்...
அப்படித்தான் ஒரு தடவை, ப்ளஸ் டூ பிராக்டிகல் எக்ஸாம் நடக்குறப்ப, காலையிலேயே ஒரு பிரபலமான ஸ்கூலுக்குப் போயிருக்குறாங்க; இவங்க போயிருந்தப்ப எக்ஸ்டர்னல் ஆபிஸரே வராம, பிராக்டிகல் எக்ஸாம் கனஜோரா நடந்துக் கிட்டு இருந்துருக்கு... ஸ்கூல் நிர்வாகத்துக்கும் எக்ஸ்டர்னல் ஆபிஸருக்கும் ஒரு அண்டர்ஸ்டேண்டிங்குல அவர் எப்பவாவது வந்து ரெக்கார்டுகள்ளயும் பரீட்சப் பேப்பர்லயும் கையெழுத்துப் போட்டுக்குவாராம்..... ஸ்கூல் நிர்வாகத்துக்கு வார்னிங் மெமோ குடுத்து இதுவரைக்கும் நடந்த பிராக்டிகல் எக்ஸாம் மொத்தத்தையும் கேன்சல் பண்ணீட்டு மறுபடியும் புதுசா ஷெட்யூல் போட்டு வேறொரு எக்ஸ்டர்னல் ஆபிஸர அனுப்பி எக்ஸாம் நடத்தச் சொல்லி யிருக்காங்க; பழைய எக்ஸ்டர்னல் ஆபிஸருக்கு ஸ்பாட்லயே சஸ்பன்சன் ஆர்டர் குடுத்துருக்காங்க; நம்ம மாவட்டமே கதிகலங்கிக் கெடக்குதாம் தெரியுமா?
இன்னும் கேளுங்க; கிளைமாக்ஸே இனிமே தான்; சமீபத்துல இன்னொரு ஸ்கூலுக்கு தன்னோட பேனலோட இன்ஸ்பெக்ஸன் போயிருந்துருக்குறாங்க... இவங்க கூடப் போன ஆசிரியர்கள் எல்லாம் ஆளுக்கொரு வகுப்புக்குள்ள போயி இன்ஸ்பெக்ஸன் பண்ணிக்கிட்டு இருந்துருக்குறாங்க... இவங்க அப்படியே சும்மா வராண்டாவுல உலாத்திக்கிட்டு இருந்துருக்கிறாங்க.... திடுதிப்புன்னு ஒரு வகுப்புக்குள்ள நுழைஞ்சு பார்த்துருக்குறாங்க; பசங்கள் எல்லாம் அமைதியா ஏதோ எழுதிக்கிட்டும் படிச்சுக்கிட்டும் இருந்துருக்கிறாங்க; வாத்தியார் ரெக்கார்டு நோட்டுக்கள திருத்திக்கிட்டு இருந்திருக்கார்....
என்ன வகுப்பு நடக்குது இங்க...ன்னு சி.இ.ஓ. கேட்க, வாத்தியாரும் பவ்யமா இது மாரல் கிளாஸ் மேடம்; அதான் பசங்கள உருப்படியா ஏதாவது பாடம் படிச்சிக்கிட்டு இருக்கச் சொன்னேன்னு சொல்லவும் மேடத்துக்கு பழியா கோவம் வந்துருச்சாம்... மாரல் கிளாஸுன்னா ஒண்ணும் பண்ண வேண்டியதில்லையா? பசங்களுக்கு நீதி போதணைகள் முக்கியமில்லையா? பரீட்சையில மார்க் எடுக்குறதுக்கு மட்டும் தான் பசங்கள தயார் படுத்துவீங்களா? அவங்கள நல்ல குடிமக்களா உருவாக்க வேண்டியது உங்க கடமை இல்லையா? நம்ம பாடத்திட்டத்துல நீதிபோதணைகளுக்குன்னு எதுக்கு சில வகுப்புகள ஒதுக்கி இருக்குறாங்க; அதெல்லாம் வேலை மெனக்கெட்ட வேலையா....” பொரிஞ்சு தள்ளீட்டாங்களாம்.
அதோட விடாம ஹெட்மாஸ்டர், செக்ரட்டரின்னு மொத்த பள்ளிக்கூடத்தையும் உட்காரவச்சு நீதிபோதணை எத்தனை முக்கியம்னு மூணுமணி நேரம் லெக்சர் குடுத்துட்டு, ஸ்கூல் ரெக்கார்டுல நீதிபோதணை வகுப்பே நடக்கலயின்னு சிவப்பு மையால ரிமார்க் எழுதிட்டுப் போயிட்டாங்களாம்.... அன்னைக்கிலருந்து எந்த ஸ்கூலுக்கு இன்ஸ்பெக்ஸன் போனாலும் மாரல் பீரியட் இருக்கிற வகுப்பத் தேடிப்போயி அங்க இருக்கிற வாத்தியார ஒரு வழி பண்ணீடுறாங்களாம்....”
ஜெய்சிங் மூச்சு விடாமல் பேசி முடிக்கவும், ப்யூலாராணிக்கும் முதல் முறையாக வயிற்றில் புளியைக் கரைப்பது போலிருந்தது. சி.இ.ஓ. இன்ஸ்பெக்ஸன் வருகிற தினத்தில் அவளுக்கு ஒன்பதாம் வகுப்பிற்கு ஒரு நீதிபோதணை வகுப்பிருந்தது. அவளுடைய பள்ளியிலும் இதுவரை மாரல் வகுப்புகளை யாரும் அவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொண்டதில்லை. அது எப்போதும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஓய்வு மாதிரி; அல்லது அவசர வேலைகள் எதுவுமிருந்தால் அதைக் கவனித்துக் கொள்வதற்கான ஏற்பாடு, அவ்வளவு தான்... பெரும்பாலும் அந்த வகுப்பில் மாணவர்களை வெளியில் போய் விளையாடச் சொல்லி விடுவாள்; வேறு ஆசிரியர் யாராவது பாடம் நடத்த அல்லது பரீட்சை வைக்க என்று கேட்டால் தாராளமாய் தாரை வார்த்து விடுவாள்.
இதுவரைக்கும் இப்படித் தானிருந்தது. திடீரென்று அந்த வகுப்பிற்கும் தன்னைத் தயார் படுத்த வேண்டுமென்கிற எண்ணமே அவளை வேதணைப் படுத்துவதாய் இருந்தது. என்ன பேசி எப்படி அந்த வகுப்பை சமாளிப்பது என்று ஒரு வழியும் அவளுக்குப் புலப்படவில்லை. தலைமை ஆசிரியரிடம் போய் “ஸார், சி.இ.ஓ. இன்ஸ்பெக்ஸன் வர்ற அன்னைக்கு எனக்கு மாரல் கிளாஸ் ஒண்ணு இருக்கு....” என்று அவள் தொடங்குவதற்குள், “ஆமாமா, நானே உங்கள அழச்சுப் பேசனும்னு நெனச்சிருந்தேன்; நல்ல வேளை நீங்களாகவே வந்துட்டீங்க; எப்பவும் போல அந்த வகுப்புல ஒண்ணும் பண்ணாம இருந்துடாதீங்க; இந்த புது சி.இ.ஓ. மாரல் கிளாசுக்குத் தான் ஸ்பெசலா விசிட் அடிக்குறாங்களாம்... அதால உங்கள நல்லா தயார்ப் படுத்திட்டு வந்து அசத்திடுங்க....” என்றார்.
”என்னத்த சார் அசத்துறது, நீங்க வேற! நானே அந்த கிளாஸ எப்படி சமாளிக்கிறதுன்னு பதறிப் போயித்தான் உங்ககிட்ட ஆலோசணை கேக்கலாமின்னுட்டு வந்துருக்கேன்; நீங்கதான் ஒரு வழி சொல்லணும் சார், ப்ளீஸ்....” என்றாள்.
”என்னம்மா, மாரல் கிளாஸுக்குப் போய் இப்படி பயப்படுறீங்க...! நல்லா படிக்கணும்; ஒழுக்கமா இருக்கணும்; நேரந்தவறக் கூடாது; பெரியவங்கள மதிக்கணும்; மாதா, பிதா, குரு தெய்வம்னு நீதிபோதணைகளா சொல்ல வேண்டியது தானம்மா!” என்றார் நிதானமாய் வெற்றிலைக்கு சுண்ணாம்பு தடவியபடி.
”முக்கால் மணி நேரத்துக்கு இதையே எப்படி திருப்பித் திருப்பிச் சொல்லிக்கிட்டு இருக்க முடியும் ஸார்; உருப்படியா வேற ஏதாச்சும் சொல்லுங்க சார்...” பதறினாள் மிகவும் கெஞ்சுகிற தொனியில்.
”நேரா நீதிபோதணை சொல்லக் கூடாதும்மா.... முதல்ல ஏதாவது நல்ல கதைகள் சொல்லணும்; அப்புறம் இதுலருந்து பெறுகிற நீதின்னு நல்ல விஷயங்கள மாணவர்கள் மனசுல பதியிற மாதிரி சொல்லணும்; அதான் நீதிபோதணை வகுப்பு....”
”அது தெரியும் ஸார் எனக்கும்; இப்ப வகுப்புல சொல்றதுக்கு கதைகள் வேணுமே, அதான பிரச்னையே! உங்களுக்குத் தெரிஞ்ச கதைகள் ஒரு நாலஞ்சு சொல்லுங்க சார், நான் குறிச்சு வச்சுக்கிறேன்...” என்றபடி பேப்பரும் பேனாவுமாய் தயாரானாள் அவள்.
தலைமை ஆசிரியர் நீண்ட நேரத்திற்கு தீவிரமாய் யோசித்துவிட்டு, “மனசுக்குள்ள நெறைய கதைகள் ஓடுது; ஆனா ஒண்ணு கூட சட்டுன்னு ஞாபகம் வர மாட்டேன்ங்குதும்மா... என்ன செய்யலாம்? நீங்க நம்ம தமிழ் பண்டிட்ட பார்த்துக் கேளுங்க; அவங்களுக்கு நெறையா நீதிக் கதைகள் தெரிஞ்சிருக்கும்....” என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
”நீதிக்கதைகளா? அப்படி எதுவும் தெரியாதே எனக்கு; இராமாயாணம், மகாபாபாரதம், சீவக சிந்தாமணி, சீறாப்புராணம்னு செய்யுள்கள் கொஞ்சம் தெரியும். அந்தப் புத்தகங்கள் வேணும்னா தர்றேன்; படிச்சுப் பார்த்து ஒப்பேத்துறியா....?” என்றாள் தமிழ் பண்டிட்.
”அதெல்லாம் தான் பசங்களுக்கு சிலபஸுலேயே இருக்கே! அதுக்கு அப்பாற்பட்டு புதுசா ஏதாச்சும் சொல்லுங்க மேடம்....”
”நான் பாடப் புத்தகங்களுக்கு வெளியில எதுவுமே வாசிக்கிறதில்லம்மா; இன்னும் சொல்லப்போனா, பாடப்புத்தகங்களயே படிச்சு ரொம்ப நாளாச்சு; எப்பவோ படிச்சத வச்சு ஞாபகத்துலருந்து தான் ஒப்பேத்திக்கிட்டிருக்கேன்.... ம்... பாட்டி வடை சுட்டது; காக்கா கல் பொறுக்கி பானையில் போட்டு தண்ணி குடிச்சது மாதிரியான கதைகள் பரவாயில்லையா?”
”அய்யோ, அதெல்லாம் எலிமெண்டரி லெவல் மேடம்; பெரிய பசங்களுக்கு சொல்றது மாதிரி ஏதாவது சொல்லுங்க மேடம்.....”
”எனக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான்; சட்டியியில இருந்தாத்தான ஆப்பையில் வரும்.... நீ நம்ம கதிரேசன் சாரைப் போய்ப் பாரு. அவருதான் நம்ம ஏரியாவிலேயே பட்டிமன்றத்துல நம்பர் ஒன் பேச்சாளர்; டீ.வி.யில எல்லாம் அவரோட புரோகிராம் ஒளிபரப்பாகுது..... அவருக்கு இந்தமாதிரி கதைகள் எல்லாம் லட்டு மாதிரி; அப்படியே கொட்டுவார்... நீ வேணுங்குறத அள்ளிக்கிட்டு வந்துடலாம்....” என்றாள் முடிவாக.
சாப்பிட்டு முடித்து ஓய்வாக பல்குத்திக் கொண்டிருந்த கதிரேசன் ப்யூலா சொன்னதைக் கேட்டு பகபகவென்று சிரித்தார். ”பட்டிமன்றத்துல பாட்டி கதையா? எங்கள வச்சு நீங்க காமெடி கீமடி எதுவும் பண்ணலையே! அங்க நாங்க நீதியும் சொல்றதுல்ல; கதையும் சொல்றதுல்ல; உப்புக்கல்லுக்கும் பெறாத தீர்ப்புதான் சொல்வோம்.... வேணுமின்னா, பத்து நாளைக்கு முன்னால நடந்த பட்டிமன்றத்துல ஒரு பேச்சாளர் சொன்ன கதையச் சொல்றேன், உபயோகப் படுமான்னு பாருங்க....
வகுப்புல ஒரு வாத்தியார் பாடம் நடத்திக்கிட்டு இருந்தாராம்; அங்க ஒரு மாணவன் பாடத்தக் கவனிக்காம, கிளாஸ்ரூம் மூலையில இருந்த எலிப் பொந்தையே பார்த்துக்கிட்டு இருந்துருக்கான்; அதுக்குள்ள ஒரு எலி நுழைஞ்சுக்கிட்டு இருந்துருக்கு... அந்த நேரம் பார்த்து வாத்தியார் இவன எழுப்பி, தான் நடத்துற பாடம் புரியுதான்னு கேட்குறதுக்காக, ‘என்னப்பா எல்லாம் நுழையுதா...’ன்னு கேட்டாராம். பையனும் ரொம்ப சூட்டிகையா ‘எல்லாம் நுழைஞ்சுருச்சு; இன்னும் வால் மட்டும் தான் நுழையல...’ன்னு சொன்னானாம். கதை எப்பூடி...” என்றார் கதிரேசன் சிரித்துக் கொண்டே.
”இதுல நீதி போதணை எங்க சார் இருக்கு?” என்றாள் ப்யூலா அலுத்துக் கொண்டபடி. அவளுக்கு எரிச்சலாக இருந்தது.
”இப்படி எங்க நடுவர் மாதிரி எடக்கு மடக்கா கேட்டா எப்படி! எதைக் கவனிக்குறோமோ அதுதான் நுழையுமின்னு எதையாவது சொல்லி சமாளிக்க வேண்டியது தான்; பட்டி மன்றத்துல இது மாதிரி தான் கெடைக்கும்; நாங்களே, தலைப்புக்குச சம்பந்தம் இருக்கோ இல்லையோ, அப்பப்ப வாரப் பத்திரிக்கைகள்ல வர்ற ஜோக்குகள சொல்லி ஒப்பேத்திக்கிட்டு இருக்குறோம்; குரல்வளம் இருக்குறவங்க சினிமாப் பாட்டு பாடுறோம். அவ்வளவுதான். ஜனங்கள் சிரிக்க வைக்கிறது மட்டும் தான் எங்களோட வேலை. அவங்களும் அர்த்தம் இருக்கோ இல்லையோ வஞ்சணை இல்லாம சிரிச்சு எங்கள வாழ வைக்குறாங்க.... இதுல நீதிக்கதைகள் எல்லாம் மைக்ரோஸ்கோப் வச்சுத் தேடுனாலும் கெடைக்காது மேடம். உருப்படியா ஒரு யோசணை சொல்றேன்; பேசாம அன்னைக்கு லீவப் போட்டுட்டு வீட்டுல இருந்துருங்க....” என்றார்.
அப்புறம் “கொஞ்சம் பொருங்க; அவசரப்பட்டு உங்களுக்கு அட்வைஸ் பண்ணீட்ட்ன்னு நெனைக்கிறேன்; அந்தப் பீரியட் எனக்கு ப்ரியா இருந்தா, என்னை ஆக்டிங்னு அனுப்பி இந்த ஹெச்.எம். பழிதீர்த்தாலும் தீர்த்துடுவார்....” என்றபடி தன்னுடைய டைம் டேபிளை எடுத்துப் பார்த்து, அந்த நேரத்தில் தனக்கு வகுப்பிருப்பதை உறுதிப் படுத்திக் கொண்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.
விடுப்பு எடுப்பது சரியான யோசணையாகத் தான் தோன்றியது. கைவசம் அதிகம் லீவில்லை; சம்பளம் பிடித்தாலும் பரவாயில்லை என்று விடுப்பு எடுத்து விடலாம் தான். ஆனாலும் இன்ஸ்பெக்ஷன் தினத்தில் லீவு கிடைப்பது அத்தனை சுலபமில்லை. நிறைய பொய் சொல்ல வேண்டும்; மெடிக்கல் சர்ட்டிபிகேட் கூட சமர்பிக்க வேண்டியிருக்கலாம்; அதற்கு நிறைய மெனக்கிட வேண்டும்; போயும் போயும் ஒரு இன்ஸ்பெக்ஷனுக்கு பயந்து கொண்டு விடுப்பு எடுப்பதாவது என்று தன் தன்மானம் தடுக்க... நூலகத்திற்குள் ஓடினாள்.
அங்கு பஞ்சதந்திரக் கதைகள், தெனாலிராமன் கதைகள் என்று ஏதாவது கிடைத்தால், அதை எடுத்துக் கொண்டு வந்து சமாளித்து விடலாம் என்று நினைத்துக் கொண்டாள். நூலகர் மாரிமுத்து டேபிளில் தலைவைத்து குறட்டை விட்டுக் கொண்டிருக்க, முகத்தைச் சுற்றிலும் ஜொள் குளம் கட்டி நின்றது. இவள் சத்தங் கொடுக்கவும் பதறி விழித்து, பார்வையாலேயே “என்ன?” என்று வினவினார்.
”இங்க சிறுவர் நீதிக் கதைகள் சம்பந்தமான் புக்ஸ் ஏதாச்சும் இருக்குமா?” என்றாள் ப்யூலா.
”அப்படி எதுவும் பார்த்த ஞாபகம் எனக்கில்ல; இந்த நூலகம் தொடங்குன புதுசுல நீங்க சொல்றது மாதிரியான புக்ஸ் நெறையவே இருந்துச்சு... யாருமே புரட்டிக்கூட பார்க்காத்தால கரையான் அரிச்சு, ரொம்ப டேமேஸ் ஆயிட்டதால எல்லாத்தையும் டிஸ்போஸ் பண்ணியாச்சு.... நீங்க எதுக்கும் ரேக்குல தேடிப் பாருங்க; தப்பித் தவறி ஏதாவது அகப்படலாம்....” என்றபடி தன் தூக்கத்தை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார்.
ரேக்குகளை ஆராய்ந்தபோது, நிறைய அறிவியல் புத்தகங்களும், பாடப் புத்தக மாதிரிகளும், வினாத்தாள் பைண்டிங்குகளுமே அதிக மிருந்தன. அவற்றுடன் சிவசங்கரி, அகிலன், கல்கி, லட்சுமி, ஜெயகாந்தன் போன்ற எழுத்தாளர்களின் பெரிய பெரிய கதைப் புத்தகங்களும் கொஞ்சமிருந்தன. இவள் கதைப் புத்தகங்கள் வாசிக்கிற ரகமில்லை; அத்தனை பெரிய புத்தகங்களை வாசித்து அவசரத்திற்கு குறிப்பெடுப்பது சாத்தியமில்லை; மேலும் அவற்றிலிருந்து சிறுவர்களுக்கான நீதிபோதணைகள் கிடைக்குமென்கிற நம்பிக்கையும் அவளுக்கில்லை. டேபிளில் சிதறிக் கிடந்த தினசரி மற்றும் வாராந்திரிகளையும் ஒரு புரட்டுப் புரட்டினாள். எல்லாவற்றிலும் சினிமா, அரசியல், சின்னத்திரை சம்பந்தப்பட்ட அக்கப்போர்களும், கிசுகிசுக்களும், வாசகனை கிச்சுக்கிச்சுமூட்டும் செய்தி விமர்சன்ங்களும், கிளுகிளுப்பூட்டும் கதைகளுமே பொங்கி வழிந்தன.
வீட்டிற்கு வந்தபோது வராண்டாவில் ஜானி சுருண்டு படுத்துக் கிடந்தான். பாவமாக இருந்த்து. அவசரமாய்க் கதவைத் திறந்து, பாலைக் காய்ச்சி அவனை எழுப்பி பாலும் பிஸ்கெட்டும் கொடுத்தாள். சாப்பிட்டதும் வீட்டுப் பாடம் எழுத உட்கார்ந்து விட்டான். இவனை பராமரிக்க்க் கூட அவகாசமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறோமே என்று தன்னிரக்கம் சூழ்ந்தது. இவனுக்கு ஒரு நாளாவது கதை சொல்லி இருக்கிறோமா? நிலா காட்டி சோறூட்டி இருக்கிறோமா?
இவனிடம் பேசிப் பார்த்தால் ஏதாவது கதைகள் கிடைக்குமா? இவனுடைய பள்ளியிலாவது சொல்லித் தந்திருப்பார்களா? அவனைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டு “ ஜானிக் கண்ணு; உனக்கு கதை ஏதாச்சும் தெரியுமா? உங்க டீச்சர் கதை எதுவும் சொல்வாளா?” என்று கொஞ்சினாள்.
”இல்ல மம்மி; எப்ப்ப் பார்த்தாலும் படி, எழுதுன்னு விரட்டிக் கிட்டுத் தான் இருப்பாங்க; வெளையாடக் கூட விட மாட்டாங்க; கதை எல்லாம் சொன்னதே இல்ல; பாரு எவ்வளவு வீட்டுப் பாடம் குடுத்துருக்காங்க....” என்றபடி அவன் தன்னுடைய பாடங்களை முடிப்பதில் மூழ்கினான். இந்த்த் தலைமுறையில் சிறுவர்களாய் இருப்பது கூட பெரிய தண்டணைதான் என்று அவளுக்குத் தோன்றியது. வீட்டில் கதைகள் சொல்ல தாத்தா பாட்டிகள் யாருமில்லை; அம்மா அப்பாக்களுக்கு அதற்கெல்லாம் அவகாசமிருப்பதில்லை. பள்ளிகளிலும் பாடங்களைத் தவிர்த்து வேறெதுவும் கிடைப்பதில்லை. பிள்ளைப் பிராயம் பெரிய சாபம் தான்.
ப்யூலாவிற்கு அவளின் பால்யம் ஞாபகத்திற்கு வந்தது. அவளின் அம்மாவும் அப்பாவும் வேலைக்குப் போகிறவர்களாக இருந்ததால் இவளை தாத்தா, பாட்டியிடம் விட்டு வைத்திருந்தார்கள். கிராமத்தில் எங்கு பார்த்தாலும் கதைகளாகவே இறைந்து கிடந்தது. பாட்டியிடம் கதை கேட்காமல் இவள் தூங்கியதே இல்லை. வெளியூருக்கு எங்கும் போனால் தாத்தா இவளைத் தோளில் தூக்கி வைத்துக் கொண்டு கதைகள் சொல்லியபடி நடந்து போவார். தூரமே தெரியாது.காடு, கழனிகளுக்குப் போனாலும் அங்கும் வேலை செய்யும் பெண்களின் வாயிலிருந்து பொரணிகள் பேசித் தீர்ந்த்தும் கதைகள் கொட்டத் தொடங்கி விடும்.
பள்ளிகளிலும் மாதம் ஓரிரு முறைகள் எல்லா வகுப்பு மாணவர்களையும் ஒன்றாக உட்கார வைத்து ஏதாவது ஆசிரியர் கதை சொல்லத் தொடங்கி விடுவார். இது போக ஊரிலிருக்கும் கிழவர்களுக்கு பொழுது போக வில்லை என்றால் தெருப் பிள்ளைகளையெல்லாம் கூட்டி இராமாயாணம், மகாபாரதம், நல்லதங்காள், அல்லி அரசாணி மாலை என்று விதவிதமாய் கதைகள் சொல்லத் தொடங்கி விடுவார்கள். அவையெல்லாம் மிகவும் இனிமையான நாட்கள். ஆனால் கிராமத்தில் அவள் ஐந்தாவதை முடித்ததும், தொடர்ந்து அவளை கிராமத்தில் தாத்தா பாட்டியிடம் விட்டு வைத்திருந்தால் பெரிய மக்குப் பிள்ளையாக வளர்ந்து விடுவாள் என்று அவளை வேரோடு பிய்த்துக் கொண்டு போய் தொலை தூரத்தில் ஒரு ரெசிடென்சி ஸ்கூலில் போய் பதியம் போட்டார்கள். அன்றிலிருந்து அவளுக்கும் கதைகளுக்குமான உறவறுந்து போனது. பால்யத்தில் கேட்ட கதைகள் யாவும் அவளின் ஞாபகத்திலிருந்தும் அனேகமாக அழிந்து போயின.
வானொலியில் ஏதாவது கிடைக்குமா என்று தேடியதில் அங்கு டெலிபோன் அரட்டைகளும், சினிமாப் பாட்டுக்களும் நிரம்பி வழிந்தன. டீ.வி.யில் சேனல் சேனலாய்த் தாவியதில் மெகா சீரியல்களின் அதீத கண்ணீரும், பெண்ணடிமை பேணுகிற இம்மாரல் விஷயங்களும், சிறுவர் நிகழ்ச்சிகளிலோ வயசுக்கு சம்பந்தமில்லாத வாண்டுகளின் லூட்டிகளும், எல்லாவற்றையும் வாங்க வைத்து விட வசீகரிக்கும் ஆபாச விளம்பரங்களும், சேனல்களின் அரசியல் சார்புகளுக்குத் தக்கபடி சாயம் பூசிக்கொண்ட செய்திகளும், காதலைத் தவிர்த்து வாழ்வில் வேறெதுவுமே இல்லை என்று ஸ்தாபிக்கும் சினிமாக்களும்.... அவளுக்கு குமட்டலெடுத்த்து.
ப்யூலாராணியின் புருஷன் ஒரு புத்தகப் பிரியன். அவ்வப்போது இவள் கேள்வியே பட்டியிராத சிறுபத்திரிக்கைகளில் கவிதைகளும் கதைகளும் எழுதுபவன். அவனுடைய புத்தக பீரோவைக் குடைந்ததில், திருப்பித் திருப்பி வாசித்தாலும் மண்டைக்குள் அர்த்தம் புகாமல் எதுக்களிக்கும் சிக்கலான வார்த்தைக் குவியல்களினான இலக்கிய பத்திரிக்கைகளும், அதே மொழி நடையிலான அங்கங்கே ஆபாசம் தூவிய தடித் தடியான நாவல்களும், கட்டுரைத் தொகுப்புகளும் தூசும் ஒட்ட்டையும் நிறைந்து..... அவளுக்கு மூச்சுத் திணறியது. அவசரமாய் மூடி விட்டாள். வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பிய புருஷனிடம் மெதுவாய்க் கேட்டாள்.
”இவ்வளவு புக்ஸ் படிக்கிறீங்க; அப்ப்ப்ப பத்திரிக்கைகள்ல எழுத வேற செய்றீங்கள்ல.... எனக்கு நாளைக்கு ஒரு முக்கால் மணி நேரத்துக்கு ஒப்பேத்துறது மாதிரி நீதிக் கதைகள் ஏதாச்சும் சொல்லுங்களேன்.....”
”நீதி சொல்றது இலக்கிய வாதியோட வேலை இல்லையே! நான் படிக்கிற , எழுதுற கதைகள்ல எல்லாம் கலை இருக்கும்; அனுபவம் இருக்கும்; நீ தேடுற நீதி எதுவும் இருக்காதே!”
”சும்மா சமாளிக்காம ஏதாவது உருப்படியா சொல்லிக் குடுங்க் ப்ளீஸ்... எதுவும் கிடைக்கலின்னா, இராத்திரி என்னால தூங்கவே முடியாதுங்க. இப்பவே தலையெல்லாம் வலிக்குறாப்புல இருக்குங்க...!” என்றாள் அழுது விடுகிற தொனியில். ”அது உன்னோட பிரச்னை; அதுக்கு நானென்ன பண்ண முடியும்...!” என்று ஆங்கிலத்தில் சொல்லி விட்டு ஒரு தடிமனான புத்தகத்தை விரித்து வைத்துக் கொண்டு வாசிக்கத் தொடங்கி விட்டான்.
ப்யூலா பயந்தபடியே அவள் நீதி போதணை வ்குப்பிலிருந்த போது சி.இ.ஓ. இவளுடைய வகுப்புக்குள் நுழைந்து விட்டாள். ப்யூலா தன்னுடைய பால்யம் கதைகளால் சூழ்ந்திருந்த்தையும் இப்போதைய குழந்தைகளின் வாழ்க்கை கதைகளற்று வறண்டு போய் விட்டதையும், தான் கதைகள் தேடி அலைந்த்தையும் ஒரு கதை மாதிரி சொல்லி கொஞ்ச நேரத்தை ஒப்பேற்றிவிட்டு, மாணவர்களை நோக்கி, “உங்களுக்குத் தெரிஞ்ச கதைகள் ஏதாச்சும் சொல்லுங்க...” என்றாள் சமயோசிதமாக.
மணிகண்டன் எழுந்து நிற்கவும் ப்யூலாவிற்கு பதட்டமாகி விட்ட்து. இவன் மக்கு மாணவனாயிற்றே! கிணறு வெட்ட பூதம் கிளம்பும் போலிருக்கிறதே! என்னத்தைச் சொல்லி மானத்தை வாங்கப் போகிறானோ என்று திகிலில் உறைந்து நின்றாள். இனி ஒன்றும் செய்வதற்கில்லை. ஆசையாய் எழும்பியவனை உட்காரச் சொல்ல முடியாது. அவனையே கொஞ்ச நேரம் குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருந்தாள். அதற்குள் சி.இ.ஓ.வே “ம்... சொல்லுப்பா...” என்றாள்.
”ரொம்ப நாளாவே என் மனசுல ஒரு விஷயம் உறுத்திக்கிட்டு இருக்கு மிஸ்; அதுக்கு நீங்கதான் ஒரு தீர்வச் சொல்லணும்.... சின்ன வயசுல நானொரு கதை படிச்சுருக்கேன். அந்தக் கதை என்னன்ன்னா, ஒரு சின்னப்பையன் ஒரு பொருள் வாங்கப் போகும் போது, கடைக்காரர், கவனக் குறைவா, அவனுக்குத் தர வேண்டிய மீதிச் சில்லரையை விட கொஞ்சம் அதிகமாக் குடுத்துருறார்; அதை அந்தப் பையன் தனக்குன்னு வச்சுக்கனும்னு சொல்ல, அவங்க அம்மா அது தப்புன்னு சொல்லி, அதிகப்படியான பணத்த கடைக்காரர்கிட்டயே திருப்பிக் குடுத்துட்டு வரச் சொல்றாள். அவனும் அப்படியே பண்றான். நேர்மையின் முக்கியத்துவத்தை உணர்த்துறதுக்காக இந்தக் கதை சொல்லப் பட்டுருக்குன்னு புரிஞ்சுக்கிட்டேன்.
சமீபத்துல அச்சு அசல் இதே மாதிரி நிஜமாவே என்னோட வாழ்க்கையில ஒரு சம்பவம் நடந்துச்சு மிஸ். நான் ஒரு 12ரூ.க்கு நோட்டு ஒண்ணு வாங்கீட்டு 50ரூ. குடுத்தேன். கடைக்காரர் ஏதோ ஞாபகத்துல நான் குடுத்தது 100ரூ.ன்னு நெனச்சுக்கிட்டு மீதிச்சில்லரையா 38ரூ.க்குப் பதிலா 88ரூ. குடுத்தார். நானும் கவனிக்காம – நான் கணக்குல கொஞ்சம் வீக்கு மேடம் – அப்படியே வாங்கீட்டுப் போயி அம்மாகிட்டக் கொடுத்தேன். அவங்க இதைக் கண்டுபிடிச்சு, அதிகப் படியான 50ரூ.யை கடைக்காரர் கிட்டவே திருப்பிக் குடுத்துட்டு வரச் சொன்னாங்க....
நானும் சரின்னு குடுத்துடலாமின்னு போகுறப்ப, அப்பா ஹால்ல உட்கார்ந்து ஆடிட்டர் அங்கிள்கிட்டப் பேசிக்கிட்டு இருந்ததக் கேட்டேன். 15 இலட்ச ரூ.யெல்லாம் டேக்ஸா கட்ட முடியாது. இன்னும் கணக்கு வழக்குகளை அட்ஜஸ்ட் பண்ணி, அதிக பட்சம் 5இலட்ச ரூ.க்குள்ள டேக்ஸ் வர்றது மாதிரி கணக்கெழுதும் படியும் வேணுமின்னா ஒரு இலட்சம் ரூ.யைக் கோயில் உண்டியல்ல போட்டுடலாமின்னும் சொல்லிக்கிட்டு இருந்தார். எனக்கு முதல் தடவையா நேர்மை பத்தி சின்னக் குழப்பம் வந்துச்சு.....
சரி, அது ஏதோ பெரியவங்க சமாச்சாரமின்னு நெனச்சுக்கிட்டு நான் பணத்தத் திருப்பிக் குடுக்க கடைக்குப் போனேன்; கடையில என் வயதொத்த பொண்ணு கூட கடைக்காரர் சண்டை போட்டுக்கிட்டு இருந்தார். என்ன விஷயமின்னா, அந்தப் பொண்ணு இவர் கடையில கொஞ்ச நேரத்துக்கு முன்னால தான் 35ரூ.க்கு பேனா ஒண்ணு வாங்கியிருக்கு; பேக்கிங்கே பிரிக்காம வீட்டுக்கு எடுத்துட்டுப் போய் பிரிச்சுப் பார்த்தப்பதான் அது ரிப்பேரான பேனான்னு தெரிஞ்சுருக்குது. இப்ப கடைக்காரர் பேனாவ மாத்திக் குடுக்க மறுக்குறார். அந்தப் பொண்ணுதான் போற வழியில பேனாவ கீழ போட்டு ஒடைச்சிட்டு இப்ப வந்து புதுப்பேனா கேட்குறதா சொல்லி, பேனாவ மாத்திதர அவர் வம்படியா மறுத்திட்டார். அந்தப் பொண்ணும் வேற வழியில்லாம அழுதுகிட்டே திரும்பிப் போயிடுச்சு; அந்தக் கடைக்காரர் முகத்துல, ஒரு பழுதுல்ல பேனாவ ஒரு அறியாச் சிறுமி தலையில கட்டிட்ட பெருமையை நான் கண்கூடாப் பார்த்தேன்....
எங்க அப்பா, அரசாங்கத்துக்கு வரியா கட்ட வேண்டிய பணத்த அமுக்கிக்கிட்டு, ஒரு சிறு தொகைய கோயில் உண்டியல்ல போடுறது மூலம் தன் குற்ற உணர்ச்சிய மழுப்பிக்கிடுறார். எங்க அம்மா என்னடான்னா, வெறும் 50ரூ. கடைக்காரர் அதிகம் தந்தத திருப்பித் தரச் சொல்லீட்டு, இலட்சக் கணக்குல வரி ஏய்ச்சு மோசடி பண்ற அப்பாவ கண்டுக்கவே இல்ல; கடைக்காரர் ஒரு மோசமான பேனாவ ஒரு சின்னப் பொண்ணு தலையில கட்டி ஏமாத்துறார்.
நேர்மைங்குறதுக்கு என்னதான் அர்த்தம் மிஸ்? எங்க அப்பா, அந்தக் கடைக்காரர்னு யாருமே அவங்க சின்ன வயசுல அந்தக் கதைய வாசிக்கலையா? இல்ல நேர்மைங்குறது காலத்துக்குக் காலம், மனுஷருக்கு மனுஷர், வயசுகளுக்குத் தக்கபடியெல்லாம் மாறுபடுமா மிஸ்! தயவு பண்ணி எனக்கு வெளக்கிச் சொல்லுங்களேன்.....” பரிதாபமாகப் பார்த்தான் மணிகண்டன்.
சி.இ.ஓ. கை தட்டினாள். அவன் தோளில் தட்டி, “வெரிகுட்...” என்றாள். அப்புறம் கடைக்காரர் உனக்கு அதிகப்படியா குடுத்த 50ரூ.யை திருப்பிக் குடுத்தையா, இல்லையான்னு இன்னும் நீ சொல்லவே இல்லையே!” என்றாள் ஆர்வம் பொங்க.
”நீங்களே, சொல்லுங்க மிஸ்; நான் திருப்பிக் குடுக்கணுமா, தேவையில்லையா” என்று கேட்டான். சி.இ.ஓ. மாணவர்களை நோக்கி இந்தக் கேள்வியை வீசினாள். திருப்பித் தந்திருக்க வேண்டுமென்று மூன்று பேர்கள் மட்டும் கை தூக்கினார்கள். மற்ற முப்பத்தெட்டுப் பேரும் திருப்பித்தர தேவையில்லை என்றார்கள்.
”சரி நீ என்ன பண்ணுன?” என்றாள் சி.இ.ஓ. மணிகண்டனிடம்.
”நான் 35ரூ.யை அந்தப் பொண்ணத் தேடிப் போய்க் குடுத்து வேறொரு பேனா வாங்கிக்கச் சொன்னேன்; மிச்ச 15ரூ.யை நானே வச்சுக்கிட்டேன்.....” என்றான் மணிகண்டன். சக மாணவர்கள் எல்லோரும் கை தட்டினார்கள். “வெரி பிரில்லியண்ட் பாய்....” என்றபடி சி.இ.ஓ. அறையை விட்டு வெளியேற ப்யூலாராணி பிரமித்து நின்றாள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment