Thursday, November 5, 2009

கவிதை :வாகனங்களும் வாழ்க்கைப் பயணங்களும்

கிராமத்தின் வீதிகளில்
கால்களில் புழுதி படிய
நடந்து கொண்டிருந்தேன்
வெயிலின் சுகம் உணர்ந்தபடி.....


கொதிக்கும் தார்ச் சாலையில்
கொண்டு போய் எறிந்தது விதி!
பாதம் பொசுங்கி பரிதவித்து
சைக்கிளில் போகிறவனைப் பார்த்து
சபலம் வந்தது கொஞ்சம்;
முட்டி மோதி முனைந்ததில்
கைவசமானது ஒரு சைக்கிள்!


குரங்கு படல் போட்டுப் பழகி
சில்லு மூக்கு உடைந்து
சிராய்ப்புகள் பல கடந்து - என்
கட்டுப்பாட்டுக்குள் சைக்கிள் வரவும்
விட்டுவிடுதலையான உணர்வில்
சிட்டுக்குருவியைப் போல்
பறந்து திரிந்தேன் வீதிகளில்!


சக பயணிகளின் வேகத்திற்கு
ஈடுகொடுக்க முடியவில்லை
எனது சைக்கிளால்....
எல்லோரும் மிக எளிதாய்
என்னைக் கடந்து போகவும்
எரிச்சலானது பயணங்கள் மீது.....!
பெடலை மிதித்து மிதித்து
கால்களில் வலி மிகுந்து
தொலைதூரப் பயணங்கள் தொந்தரவானதில்
சலித்துப்போனது சைக்கிள் பயணம்!


மோட்டார் சைக்கிளின் மீது
மோகம் வந்தது அப்புறம்!
மீண்டுமொரு இடைவிடா தேடலில்
மின்னலென கைக்கும் எட்டியது!
காதல் மனைவி பின்னால் அமர்ந்து
கட்டிப் பிடித்து வர
கற்றைக் குழலும் சேலைத் தலைப்பும்
காற்றிலாடி கவிதை பாட
காற்றைக் கிழித்துப் பறந்தேன்;
சந்தோஷங்கள்
சதிராடிய தினங்கள் அவை!


அதிக நாட்கள் நீடிக்கவில்லை
அந்த சந்தோஷங்கள்;
சீறிப்போகும் வாகனங்கள்
சினேக மாயில்லை;
கொஞ்சம் அசந்தாலும் நம்மை
முட்டித் தள்ளி முன்னேறி
கடந்து போக எப்போதும்
காத்திருந்தது ஒரு கூட்டம்!
வெயிலும் மழையும் சேதப்படுத்த
வேகம் என்னைக் கலவரப்படுத்த
பாதுகாப்பற்ற பயணமாயிருந்தது அது!


காரில் கடந்து போனவர்கள்
கனவை வளர்த்தார்கள்;
அடுத்த கட்டத்திற்கு அலைபாய
ஆவலாயிற்று மனது!
கார் வாங்குவதற்கு முன் - அதை
நிறுத்துவதற்கு வசதியாக
விசாலமான வெளிகளுடன் ஒரு
வீடும் வாங்க வேண்டியிருந்தது!
கடின உழைப்பிலும் பின் தேதியிட்ட
காசோலை வசதிகளிலும்
கைகூடிற்று காரும் வீடும்!
குளிரூட்டப்பட்ட காற்றும்
கூடவே இதமான இசையுமாய்
பரவசமாயிருந்தன பயணங்கள்!
இருந்தும் -
தேடல்கள் இன்னும் தீர்ந்தபாடில்லை;
குண்டும் குழியுமான சாலைகளும்
நீண்டு நெளியும் வாகன நெரிசல்களும்
சலிப்பூட்டுகின்றன பயணங்களை......
குட்டி விமானமிருந்தால்
இலக்குகளை இன்னும்
விரைவாய் அடையலாமென்ற
வேகம் பிறந்திருக்கிறது மனதில்....
ஆசைகளும் தேடலும் எல்லைகளற்றவை;
முடிவற்று நீளும் பாதையில்
மூச்சிறைக்க ஓடிக் கொண்டிருக்கிறேன்.....
பயணங்கள் ஒரு போதும் முடிவதில்லை!


No comments:

Post a Comment