பத்தாம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடந்து கொண்டிருந்தது. விஜிலென்ஸ் வந்து
போன கொஞ்ச நேரத்திற்கெல்லாம் ஒரு தேர்வு அறையிலிருந்து அய்யோ அம்மா என்று சத்தம் வரவும்
பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. தலைமை ஆசிரியர் தொந்தியைத் தூக்கிக் கொண்டு அவசரமாய்
அந்த அறைக்கு ஓடினார்.
சுந்தரத்தாய்க்கு
எதுவும் புரியவில்லை. அவள் உடம்பு சுகமில்லாததால் மெடிக்கல் லீவு போட்டு
வீட்டிலிருந்தவள், இன்றைக்கு அவளுடைய பாடத்திற்கு பரீட்சை என்பதால் சிரமத்துடனேயே பள்ளிக்கு
வந்திருந்தாள். அவள் பள்ளிக்குள் அனுமதிக்கப் படவில்லை. மாணவர்கள் எழுதி முடித்து
வெளிவரக் காத்திருந்தாள்.
என்னமோ
ஏதோவென்று, அவளும் பரபரப்பாயிருந்த அறைக்குப் போனாள். நாகவள்ளிக்கு பிரசவ வலி
வந்து தரையில் விழுந்து துடித்துக் கொண்டிருந்தாள். தேர்வறையில் கண்காணிப்பிற்கு
இருந்த கமலாம்பளும் சத்தங் கேட்டு ஓடிவந்த சுந்தரத்தாயும் அவளைக் கைத்தாங்கலாக
பக்கத்திலிருந்த இயற்பியல் சோதணைக்கூடத்திற்கு அழைத்துக் கொண்டு போனார்கள். கமலாம்பாள்
கோபத்தில் சத்தம் போட்டாள்.
”குழந்தை
பொறக்குறது இப்பவோ அப்பவோன்னு இருக்கும் போது எதுக்குடி பரீட்சை
எழுதுறதுக்கெல்லாம் வர்ற....?” நாகவள்ளி பதில் எதுவும் பேசாமல் அலறிக் கொண்டிருந்தாள்.
”விடுங்க
டீச்சர்; இது குழந்தை பெத்துக்குற வயசா...! இவ எங்க ‘நாள்’ எல்லாம் கணக்கு
வச்சிருக்கப் போறா....” சுந்தரத்தாய் தான் சமாதானப் படுத்தினாள்.
சுந்தரத்தாய்க்கு
மனசுக்கு ரொம்பவும் கஷ்டமாக இருந்தது. பதிமூணு பதினாலு வயதில் கல்யாணம்; பதினைந்து
வயதில் பிள்ளைப் பேறு! பால்ய வயதின் சந்தோஷங்கள் எதையும் அனுபவிக்க முடியாமல் என்ன
ஒரு கொடுமையான வாழ்க்கை இந்தப் பெண்களுக்கு!
ஆசிரியர்கள்
சிலர் வண்டி ஏதாவது கிடைக்குமா என்று பார்ப்பதற்காக வெளியில் ஓடினார்கள். ஆனால்
அதற்கு அவசியமில்லாமல் கொஞ்ச நேரத்திலேயே குழந்தையின் சின்ன அழுகுரல் பள்ளி
வளாகமெங்கும் எதிரொலித்த்து.
பெண்
குழந்தை! சுந்தரத் தாயும் கமலாம்பாளும் தங்களுக்குத் தெரிந்த வகையில் குழந்தையை
வெளியில் இழுத்துப் போட்டு ஆரம்பகட்ட பண்டுதங்களைப் பார்த்தார்கள்.
அரசு
உயர்நிலைப் பள்ளியில் சுந்தரத்தாய்க்கு வேலை கிடைத்த போது அவளால் முழுமையாய்
சந்தோஷப் பட முடியவில்லை. இரண்டு காரணங்கள். முதல் காரணம் – அவளை எங்கோ கேள்வியே
பட்டிராத மாதர்மலை என்னும் கிராமத்தில் போஸ்டிங் போட்டிருந்தார்கள். இரண்டாவது
காரணம் அவளின் இரண்டு வயதே ஆகியிருந்த குழந்தை நிர்மலாவை அந்தக் குக்கிராமத்தில்
யாரிடம் விட்டுவிட்டு வேலைக்குப் போவது?
டேனியலிடம் கேட்டபோது, “குழந்தைய
வளர்க்குறதுக்காகத் தான் நீ வேலைய விட்ட; இப்ப என்ன திடீர்னு மறுபடியும்
வேலைக்குப் போகனும்னுட்டு.... இன்னும் கொஞ்ச நாளைக்கு வீட்டில இருந்து தான் குழந்தையப்
பார்த்துக்கோயேன்....” என்றான்.
”டெம்ப்ரரியா
வேலை பார்த்துக்கிட்டுருக்கும் போது, குழந்தைக்காக வேலை வேண்டாம்னு விட்டது
வாஸ்தவந்தான்; ஆனா இப்பக் கிடைச்சுருக்குறது அரசாங்க வேலைங்க..... அதெப்படிங்க
அவ்வளவு சுலபமா விட முடியும்? ஒரு வருஷம் பல்லக் கடிச்சு சமாளிச்சுட்டம்னா
அப்புறம் மாற்றல் வாங்கி நம்ம பக்கத்துக்கு வந்துடலாங்க; நிர்மலாவையும் ஸ்கூல்ல
சேர்த்துட்டம்னா பெரிய சிரமம் இருக்காதுங்க.....” என்றாள்.
வேலையை
ஒத்துக் கொள்ள முடிவு செய்து குடும்பத்தோடு மாதர்மலைக்குப் போனார்கள். முக்கால்வாசி
தூரத்திற்கு இரயில் இருந்தது. மலை அடிவாரத்திலிருந்து அந்த கிராமத்திற்குப்
போவதற்கு ஒரே ஒரு பஸ் ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு முறை மட்டுமே வந்து
போய்க் கொண்டிருந்தது.
அந்த
பஸ் பிரேக் டௌனானால் அதோ கதி தான். பஸ்ஸில் பயணிகளை விடவும் அதிகமாக மூட்டை
முடிச்சுக்களும் காய்கறி, பழக் கூடைகளும் ஏற்றப்பட்டு லொட லொடவென்று முக்கி முனகிக்
கொண்டு தான் மலை உச்சிக்குப் போக முடிந்தது.
குழந்தைகள்
கோலம் போட கோணல் மாணலாய் வைத்த புள்ளிகளாய் ஒழுங்கற்று அங்கொன்றும் இங்கொன்றுமாய்
வீடுகளிருந்தன. அபூர்வமாய்ச் சில வீடுகளில் தான் மின்சாரமிருந்தது.
பெரும்பான்மையான வீடுகள் மண்சுவர் வைத்து கம்மஞ்சக்கை அல்லது சோளத்தட்டை, புல் மற்றும்
வைக்கோலால் தான் கூரை வேயப்பட்டிருந்தது.
குளிக்க
புழங்க தண்ணீருக்கு, பாசி படர்ந்த கண்மாய் இருந்தது. குடிதண்ணீருக்கு ரொம்ப தூரம்
போக வேண்டி இருந்தது. செவ்வாய்க் கிழமை வாரச்சந்தையில் மட்டுமே பொருட்கள் வாங்க
முடிந்தது. ஒன்றிரண்டு பெட்டிக் கடைகள் மட்டும் பீடி, மூக்குப்பொடி, வெத்தலை
பாக்கு, மிட்டாய்கள் போன்றவைகளை விற்றன. அவசர ஆத்திரத்திற்கு மருத்துவ வசதியும்
எதுவுமில்லை.
டேனியல்
சில நாட்கள் லீவு போட்டுவிட்டு அவர்கள் அங்கு தங்கி இருப்பதற்கான ஏற்பாடுகளைக்
கவனித்தான். ஊரிலிருந்த கான்கிரீட் தளம் போட்ட ஒரே வீடு முத்தரசன்
வாத்தியாருடையது. அந்த வீட்டின் மொட்டைமாடியில் வாத்தியாரின் அம்மா உயிரோடிருந்த
போது தங்கிக் கொள்வதற்காக ஒரு சின்ன சமையலறையும் ஒரு எட்டுக்கு பத்து படுக்கை
அறையும் கட்டியிருந்தார். அவளின் மறைவிற்குப் பின் அந்த ஈரறை கொண்ட வீடு வெறுமனே
பூட்டப்பட்டுத் தான் கிடந்தது. அந்த வீட்டை அவர் சுந்தரத்தாய்க்கு வாடகைக்கு விட
சம்மதித்ததில் தங்குவதற்கான பிரச்னை தீர்ந்தது.
டேனியல்
அங்கிருந்து, அவனின் தினப்படி அலுவல்களுக்குக் கிளம்பிப் போய்விட்டான். சுந்தரத்தாயும்
குழந்தையும் மாதம் ஒருமுறையோ அல்லது பள்ளியில் மூன்று நாட்களுக்கு மேல் தொடர்ந்து
விடுமுறை கிடைக்கும் போதோ அவனிருக்கும் பட்டணத்திற்கு போவது என்றும் மற்ற
நாட்களிலெல்லாம் அந்த மலைகிராமத்திலேயெ தங்கிக் கொள்வது என்றும் முடிவானது.
நிர்மலாவைக்
கவனித்துக் கொள்வதற்கு ஆள் கிடைப்பது தான் மிகவும் சிரமமாக இருந்தது. அவளையும்
தன்னுடனேயே பள்ளிக்கு அழைத்துப் போய்க் கொண்டிருந்தாள். இவள் வகுப்பிற்கு போகும்
தருணங்களில் துரு துருவென்று இருக்கும் நிர்மலாவை கவனித்துக் கொள்வது
எல்லோருக்கும் பெரும்பாடாகவும் ரொம்பவும் சங்கடமாகவும் இருந்த்து.
எல்லா
வகுப்புகளிலும் சொல்லி வைத்திருந்தாள். அங்கு படிப்பவர்களின் குடும்பத்தினர்
யாராவது குழந்தையைப் பார்த்துக் கொண்டால், அதற்காக மாதம் ஒரு கணிசமான தொகையை தந்து
விடுவதாக. காடு கழனி என்று வேலைக்குப் போகும் குடும்பத்தில் யாருமே இவளின்
குழந்தையைக் கவனித்துக் கொள்ள முன்வரவில்லை.
இவள் வேலைக்குச் சேர்ந்து பத்து நாட்களுக்கப்புறம் தான் எட்டாம்
வகுப்பிற்கு நாகவள்ளி பள்ளிக்கு வந்தாள். அப்போது அரையாண்டுத் தேர்வுகள் நெருங்கிக்
கொண்டிருந்தன. அவள் பெயரே வருகைப் பதிவேட்டிலிருந்து நீக்கப் பட்டிருந்தது. ”ஏம்மா
இவ்வளவு நாள் கழிச்சு ஸ்கூலுக்கு வர்ற?” என்று கேட்ட போது மரியாதை நிமித்தம்
மார்பின் குறுக்கே கைகளைக் கட்டியபடி எதுவும் பேசாமல் தலை குனிந்தபடி நின்று
கொண்டிருந்தாள் அவள்.
வகுப்பிலிருந்த இன்னொரு
பெண் தான் எழுந்து “அவள் வயசுக்கு வந்துட்டா, அதான் டீச்சர்.....” என்றாள். வேறொரு
பெண் எழுந்து, “அதெல்லாம் இல்ல டீச்சர்; அவ ஏழாப்பு முழுப் பரீட்சை லீவுலயே
வயசுக்கு வந்துட்டா; அவங்க அய்யா, வேறொரு பொம்பளைய இழுத்துக்கிட்டு ஊரை விட்டு
ஓடீருச்சு; அதனால கை வேலைக்கு ஆள் வேணுமின்னு அவங்க அம்மா இவள பள்ளிக்கூடத்துக்குப்
போக வேணாமுன்னு இவ்வளவு நாளும் நிறுத்தி வச்சுருந்துச்சு; இவள் அழுது அழுது
முரண்டு பிடிக்கவும் இப்பத் தான் மனசு இறங்கி பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி
வச்சுருக்கு......” என்றாள்.
சுந்தரத்தாய்
”அப்படியா.....” என்று நாகவள்ளியைப் பார்க்க, அவள் விசும்பியபடி “ஆமாம் டீச்சர்;
எனக்கு படிக்க ரொம்ப ஆசை டீச்சர்..... இவ்வளவு நாள் வராம இப்ப பள்ளியோடத்துக்கு
வரவும் எட்மாஸ்டர் சேர்த்துக்க மாட்டேங்குறார் டீச்சர்; நீங்கதான் எப்படியாவது
அவர்ட்ட சொல்லி என்ன சேர்த்துக்க சொல்லனும் டீச்சர்....” என்றாள்.
”இவ்வளவு
நாள் பாடம் படிக்காம, திடீர்னு எப்படிம்மா, விட்டுப்போன பாடங்கள எல்லாம் படிப்ப?”
என்றாள் சுந்தரத்தாய். “கொஞ்சம் கொஞ்சமா படிச்சிருவேன் டீச்சர்; சந்தேகமிருந்தா
உங்க வீட்டுக்கு வந்து கேட்டு படிச்சுக்கிடுறேன் டீச்சர்....” என்றாள்
நம்பிக்கையாய்.
”நாகவள்ளி நல்லா
படிப்பா.....எப்பவுமே வகுப்புல அவதான் ஃபர்ஸ்ட் டீச்சர்; அதனால விட்டுப் போன பாடத்தை
எல்லாம் சீக்கிரமே படிச்சுடுவா டீச்சர்; பாவம் டீச்சர், பள்ளிக்கூடத்துல
சேர்த்துக்குங்க டீச்சர்....” என்று பல பிள்ளைகளும் அவளுக்காக வக்காலத்து
வாங்கினார்கள்.
தலைமை
ஆசிரியரிடம் அழைத்துப் போன போது அவர் “உன் இஷ்டத்துக்கு வந்து சேர்றதுக்கு இதென்ன
பள்ளிக்கூடமா, இல்ல சந்தை மடமா? நீ யெல்லாம் படிச்சு என்ன பெரிய கலெக்டர்
உத்தியோகத்துக்கா போகப் போற! பேசாம வீட்ல போயி இப்பவே சாணி தட்டிப் பழகிக்கோ.....”
என்று சீறி விழுந்தார். சுந்தரத்தாய் தான் அவரை சமாதானப் படுத்தினாள்.
“சரி
விடுங்க சார்... பெரியவங்க பண்ற தப்புக்கு இவ என்ன பண்ணுவா....? கிராமங்கள்ல
பிள்ளைங்க பள்ளிக்கூட்த்துக்கு வர்றதே பெரிய விஷயம்; காமராசர்ங்குற புண்ணியவான்
இந்த மாதிரி குக்கிராமங்கள்ல பள்ளிக் கூடங்களத் தொடங்கி மதிய உணவு திட்டத்தயும்
கொண்டு வந்ததால சாப்புடுற சாக்கில தான் பல பிள்ளைங்க பள்ளிக்கூடத்துக்கே
வருதுங்க..... அப்படி வர்றவங்களயும் நாம திருப்பி அனுப்பீட்டா எப்படி சார்.....
இவள நான் தேத்திக் கொண்டு வந்துடுறேன்; சேர்த்துக்குங்க......”
”இவ
பேரை வருகைப் பதிவேட்டுல இருந்து நீக்கி மாவட்ட அதிகாரிக்கெல்லாம் ரிப்போர்ட்
அனுப்பியாச்சே மேடம்......” என்று தயங்கியவர் அப்புறம் இவளின் நச்சரிப்புக்கு ஆற்ற
மாட்டாமல், அரை மனதாக நாகவள்ளியை மறுபடியும் பள்ளியில் சேர்த்துக் கொண்டார்.
நாகவள்ளியின்
மூலம் தான் நிர்மலாவைக் கவனித்துக் கொள்கிற பிரச்னைக்கு ஒரு விடிவு கிடைத்தது.
“எங்க அம்மாவும் ஆயாவும் காட்டு வேலைகளுக்குப் போறதில்லங்க டீச்சர்; கூடை, முறம்னு
முடைஞ்சுக்கிட்டு வீட்டுல தான் இருப்பாங்க; முடைஞ்சத நம்ம ஊர் வாரச் சந்தையில தான்
விப்பாங்க; நார் ஓலை எல்லாம் வாங்குறதுக்கு வாரத்துக்கு ஒரு வாட்டி தான் அம்மா
மட்டும் மலை அடிவாரத்துக்குப் போயிட்டு வரும்; அப்பயும் ஆயா வீட்டுலதான்
இருக்கும்; நீங்க வந்து பாப்பாவப் பார்த்துக்குங்கன்னு சொன்னீங்கன்னா
சரீன்னுடுவாங்க....” என்றாள்.
அதன்படி அன்றைக்கு மாலையே
சுந்தரத்தாய் நாகவள்ளியின் வீட்டுக்குப் போன போது, அவளின் அம்மா மட்டும் தான்
வீட்டிலிருந்தாள். ஆயா வெளியில் எங்கேயோ போயிருந்தாள். அவளுக்கு அதிக பட்சம் போனால்
முப்பது வயதுக்குள் தான் இருக்கும். வாழ்க்கை அவளின் உடலில் தளர்ச்சியையும்
வறுமையின் சுவடுகளையும் ஆழமாய்ப் பதித்திருந்தாலும் முகத்தில் இளமையின்
பொலிவிருந்த்து.
வீடு மிகச் சின்னதாய் குனிந்து தான் உள்ளே போக வேண்டியபடி
இருந்தது. உள்ளே மண்தரை சாணிப்பாலால் மெழுகப்பட்டு, குறைவான பொருட்கள் அதனதன் இடத்தில்
வைக்கப்பட்டு ஓரளவிற்கு நேர்த்தியாகவே இருந்தது.
வீட்டிற்கு
முன்னால், திறந்த வெளி விஸ்தாரமாய் விரிந்து கிடந்தது. அங்கு கிளை விரித்து
படர்ந்து கிடந்த வேப்ப மரத்தின் கீழ் தான் இவர்கள் முறம் பின்னுகிற வேலை நடந்து
கொண்டிருப்பதற்கு அறிகுறியாக ஓலை மற்றும் நார்த் துணுக்குகள் சிதறிக் கிடந்தன. இவள்
போகவும், உள்ளே அழைத்து கோரம் பாயை விரித்துப் போட்டு உட்கார வைத்து, பரபரவென்று சுழன்று, கருப்பட்டி
காப்பி கலந்து கொண்டு வந்து கொடுத்தாள் நாகவள்ளியின் அம்மா.
“பொறுத்துக்கனும்
டீச்சர்; எங்க வீட்லயெல்லாம் பால் காப்பி போடுறதுல்ல......” வெட்கத்துடன்
சிரித்தாள். “அதனால என்னங்க; இதுவே நல்லாத் தான் இருக்கு; எதுனாலும் நான்
குடிப்பேன்.....” என்றவள் ”நாகவள்ளி உங்களுக்கு ஒரே பொண்ணா?” என்று எதார்த்தமாய்க்
கேட்கவும் அவள் கண்களில் கரகரவென்று கண்ணீர் பொங்கி விட்ட்து.
”இல்ல
தாயி இவளுக்கு முன்ன ஒண்ணு இவளுக்கு அப்புறம் ஒண்ணுன்னு மொத்தம் மூணு பெத்தேன்;
மத்த ரெண்டையும் படுபாவிங்க என் புருஷனும் அவனோட ஆத்தாளும் சேர்ந்துக்கிட்டு
கள்ளிப் பால் ஊத்தி கொன்னுட்டாங்க தாயி; நாகவள்ளியையும் கொன்னுருப்பாங்க; இவள
பெத்து ஒரு வருஷம் எங்க ஆத்தா வீட்டுலயே இருந்துட்டு அப்புறம் தான் தூக்கிட்டு
வந்ததால தப்பிச்சா... ஆம்பளப் புள்ள தான் கடைசி காலத்துல அப்பனுக்கு கஞ்சி
ஊத்துமாம்; பொம்பளப் புள்ளைன்னா செலவுதானாம்; இங்கயெல்லாம் பொம்பளப் புள்ளைகள
பொறந்தவுடனே கொல்றது சகஸம் தாயி.....” என்றாள் துக்கம் மேலிட.
கொஞ்ச நேரம் பேசாமல் இருந்து விட்டு, “என்
வயித்துல ஆம்பளப் புள்ளயே தரிக்காதுன்னு ஏதோ ஜோசியக்காரன் சொன்னான்னுட்டு என்னத்
தள்ளி வச்சுட்டு வேறொருத்திய இழுத்துட்டுப் போயி, குடும்பம் நடத்துறான்
கம்மனாட்டி....” என்று சொல்லி கணவனைக் கண்டபடி திட்டி காறிக்காறித்
துப்பினாள்.
சுந்தரத்தாய்
அவளின் குழந்தையை பார்த்துக் கொள்வது பற்றி பேச்செடுக்கவும் “அதுக்கென்ன
தாயி, மகராசியா விட்டுட்டுப் போ; பார்த்துக்குறோம்.....” என்றாள்.
இவள்
சம்பளம் பற்றிப் பேச்செடுத்த போது, “பச்சப்புள்ளய பார்த்துக்கிறதுக்கு பைசாவா,
அதெல்லாம் வேணாம் தாயி; அதுக்கு நாங்க என்ன பண்ணப் போறோம்....! அது பாட்டுக்கு
வெளையாடப் போகுது; தூங்கப் போகுது; பசிக்கும் போது நீ குடுத்துருக்குற சோறு
தண்ணியக் குடுக்கப் போறோம்..... அதுக்கெல்லாமா காசு வாங்குறது! கிராமத்துல
அதெல்லாம் வழக்கமில்ல தாயி....” என்று எவ்வளவோ வற்புறுத்திய போதும் வம்படியாக பணம்
வாங்கிக் கொள்ள மறுத்து விட்டாள்.
சுந்தரத்தாய் அவளிடமிருந்து
விடைபெற்றுக் கிளம்பும் போது “நீங்க கிறிஸ்துவங்களோ டீச்சர்....” என்று கேட்டாள். ”ஆமா,
ஏன் கேட்குறீங்க; கிறிஸ்துவங்க பிள்ளைன்னா பார்த்துக்க மாட்டீங்களா?” என்று
சிரித்துக் கொண்டே கேட்டாள்.
“அய்யோ,
நீ வேற தாயி; எல்லாம் மனுஷங்க தான.... நெத்திக்கு பொட்டு இட்டுக்கலையேன்னு
கேட்டேன்.....” என்றவள், “பார்த்து பத்தரமாப் போயிட்டு வா தாயி...“ என்று அனுப்பி
வைத்தாள். நாகவள்ளியும் அவளுடனேயே வந்தாள் நிர்மலாவைத் தூக்கிக் கொஞ்சியபடி.
நாகவள்ளி பெரும்பாலான
நேரங்களில் சுந்தரத்தாயின் வீட்டில் தான் இருந்தாள். அவள் வீட்டில் மின்சார
விளக்கு இல்லாததாலும், பாடங்களில் எழும் சந்தேகங்களை கேட்பதற்ககாகவும் இரவுகளிலும்
டீச்சர் வீட்டிலேயே தான் தங்கிப் படித்தாள். அவ்வப்போது அவளுடனேயே சாப்பிட்டும்
கொண்டாள்.
சுந்தரத்தாயே
ஆச்சர்யப் படும் படியாக நாகவள்ளி கடந்து போன பாடங்களையெல்லாம் முழு மூச்சாய்ப்
படித்து, எட்டாம் வகுப்பு அரையாண்டுத் தேர்விலேயே கணிசமான மதிப்பெண் வாங்கி,
மூன்றாம் ரேங்க் வாங்கினாள். அரைப்
பரீட்சைக்கு அப்புறம் வந்த மாதத் தேர்விலேயே தவறவிட்ட முதலிடத்தைத் தக்க வைத்துக்
கொண்டாள். எல்லாம் சுமுகமாகத் தான் போய்க் கொண்டிருந்த்து.
அடுத்த
வருஷ கல்வியாண்டு தொடங்கி, காற்பரீட்சை விடுமுறைக்குப் பின் சுந்தரத்தாய்
மட்டும் மாதர்மலை கிராமத்திற்குப் போனாள். டேனியல் நிர்மலாவை விஜயதசமிக்கு பள்ளியில்
சேர்க்க வேண்டுமென்று தன்னுடனேயே வைத்துக் கொண்டான். அவனின் அம்மாவை ஊரிலிருந்து
கெஞ்சிக் கூத்தாடி அழைத்துக் கொண்டு வந்து நிர்மலாவைக் கவனித்துக் கொள்ள ஏற்பாடும்
செய்திருந்தான்.
மறுபடியும்
நாகவள்ளி கொஞ்ச நாட்களாக பள்ளிக்கு வராமலிருந்தாள். அவளின் அருகாமை
வீடுகளிலிருந்து வரும் பிள்ளைகளை விசாரித்த போது, “அவளுக்குக் கல்யாணம்
டீச்சர்.....” என்றார்கள் சர்வ சாதாரணமாக.
மாதர்மலையில்
சிறுவயது கல்யாணம் என்பது ரொம்பவும் இயல்பாயிருந்தது. எட்டாம், ஒன்பதாம் வகுப்புப்
பெண் பிள்ளைகள் திடீர் திடீரென்று பள்ளிக்கு வராமல் நின்று விடுவார்கள். காரணம்
கேட்டால் ’கல்யாணம்...’ என்பார்கள்.
பத்தாம் வகுப்பு பரீட்சையை ஓரிரு பெண்களே எழுதுவார்கள். நாகவள்ளிக்கும்
இப்படி நேருமென்பதை அவள் கொஞ்சமும் நினைத்துப் பார்த்திருக்கவில்லை.
கேள்விப்பட்ட்தும் தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்தாள்.
பள்ளி
விட்டதும் ஒரு நாள், முகம், கை சேலையில் அங்கங்கே வெள்ளை வெள்ளையாய் அப்பிக்
கிடந்த சாக்பீஸ் தூசிகளைக் கூட கழுவிக் கொள்ளாமல் விடுவிடென்று நாகவள்ளியின் வீட்டிற்குப்
போனாள். வீட்டில் எல்லோரும் இருந்தார்கள்.
இவளைப்
பார்த்ததும் ”வாங்க டீச்சர்.....” என்று வாய் நிறைய வரவேற்றார்கள். “நிர்மலாவ
இப்படி ஊரிலேயே உட்டுட்டு வந்துட்டீங்களே! அது பாட்டுக்கு இங்க ஓடிக்கிட்டுத்
திரியும்; வீடே கலகலப்பா இருந்தது. இப்பப் பாருங்க வீடே வெறிச் சோடிக்
கிடக்கு.....” என்றார்கள்.
”நான் கேள்விப்பட்டது
நெஜமா? நாகவள்ளிக்குக் கல்யாணமாமே!” என்றாள் எடுத்த எடுப்பிலேயே முகத்தைக்
கடுகடுவெறு வைத்துக் கொண்டு. ”ஆமாங்க டீச்சர்; இவளோட மாமனுக்குத்தான் கொடுக்கப்
போறொம்......” என்றாள் நாகவள்ளியின் அம்மா.
“என்ன
கொடுமைங்க இது.... பதினாலு வயசு கூட முடியாத பச்சப் புள்ளைக்கு
கல்யாணம்ங்குறீங்க.....?” ஆவேசப் பட்டாள்.
”நீங்க ஏன் டீச்சர்
இப்படி கோபப்படுறீங்க; எங்க புள்ளைக்கு நாங்க எப்பக் கல்யாணம் பண்ணுனா
உங்களூக்கென்ன....!” நாகவள்ளியின் ஆயாவும் கோபப் பட்டாள். அவளைப் பேசாமல் இருக்கச்
சொல்லி விட்டு நாகவள்ளியின் அம்மா பொறுமையாகவே பேசினாள். ”எங்க பக்கமெல்லாம்
வயசுக்கு வந்துட்டா கல்யாணம் கட்டிக் குடுத்துருவோம் டீச்சர்... இவ வயசுல நான்
மூத்தவள பெத்து சாகவும் கொடுத்துட்டேன்....”
”நல்லாப்
படிக்கிற புள்ளைங்க..... படிக்க வச்சீங்கன்னா நல்லா வருவாங்க.....” கொஞ்சம் சுதி
இறங்கி சமாதானமாய்ப் பேசினாள் சுந்தரத்தாய்.
“அவ
படிச்சு என்ன பண்ணப் போறாள் டீச்சர்? அப்புறமும் முறம் முடையனும்; இல்லைன்னா உங்க
வாத்தியார் அன்னைக்கு சொன்னது போல சாணி தட்டனும்.... அப்பவே படிப்ப நிறுத்தியிருப்போம்;
ரொம்ப அழுகுறாளேன்னுட்டுத் தான் கல்யாணம் பண்ற வரைக்கும் கழுதை
பள்ளிக்கூடத்துக்குப் போகட்டும்’ ஒருவேளை வயித்துப் பாட்டுக்காவது ஆகும்னு தான்
அனுப்பி வச்சோம்....” என்றாள் நாகவள்ளியின் அம்மா.
இவர்கள்
பேசுவதையே நாகவள்ளி பார்த்துக் கொண்டிருந்தாள். அவளின் ஆயா சுந்தரத்தாயிடம் கை
கூப்பி “பெரும்பாடுபட்டு புள்ளய கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சிருக்கோம்; நீ
கண்டதையும் பேசி அவ மனச கலைச்சுடாதம்மா......எங்க கிட்ட என்ன இருக்கு....!
வயித்துப் பாட்டுக்கே தினம் கஷ்டப்படுறோம்; இவ கல்யாணம் பண்ணிப் போறது நல்ல
வசதியான குடும்பம்; வயிறார சாப்டுக்குவா; அதையும் கெடுத்துடாதம்மா....” என்றாள்
கண்ணீருடன்.
சுந்தரத்
தாய்க்கு அதற்கு மேல் என்ன சொல்வதென்று தெரியவில்லை. கடைசி முயற்சியாக,
“உங்களுக்கு சாப்பாடு தான் பிரச்னையின்னா, நாகவள்ளிய என்கூட அனுப்பி வையுங்க; நான்
அவள படிக்க வைக்கிறேன்.....” என்றாள்.
கிழவிக்கு
ஆங்காரம் பொங்கி விட்ட்து. “கடைசியில உன் கிறிஸ்துவப் புத்திய காமிச்சிட்டில்ல;
எங்க புள்ளய எங்க்கிட்டருந்து பிரிச்சு, படிப்பு ஆசைகாட்டி அவள கிறிஸ்துவச்சியா
மாத்தலாம்னு பார்க்குறியா....” என்று வெலமெடுத்து சண்டை போட்டாள்.
”நான் எங்கங்க மதம்
மாத்துறது பத்திப் பேசுனேன்; நாங்க அந்த மாதிரி ஆளுங்க இல்லைங்க.... படிக்கத் தான்
வைக்கிறேன்னேன்......” என்றாள் பவ்யமாக.
“சும்மா
பசப்பாத; கடைசியா நீங்கள்ளாம் அங்கதான் வந்து நிப்பீங்கன்னு எங்களுக்குத்
தெரியும்....சரியான புள்ள புடிக்கிற கூட்டம்; பேசாம கெளம்பிப் போயிரு; இதுக்கு மேல
இங்க நின்னு பேசிக்கிட்டு இருந்தீன்னா அவ்வளவு நல்லாருக்காது.....” என்று
எச்சரிப்பது போல் பேசினாள். வேறு வழியில்லாமல் சுந்தரத்தாயும் அங்கிருந்து
கிளம்பினாள்.
அவள் வீட்டிற்குப் போன
கொஞ்ச நேரத்திலெல்லாம் நாகவள்ளி வந்தாள். வந்ததும் வராததுமாய் “வீட்டுக்குத்
தெரியாம ஓடி வந்துருக்கேன்; எப்படியாவது என்னக் காப்பாத்துங்க டீச்சர்.....” என்று
அழத் தொடங்கி விட்டாள்.
அவள்
அழுது கொண்டே சொன்னதிலிருந்து, அவளைக் கல்யாணம் செய்து கொள்ளப் போகிற மாமனுக்கு 35
வயதுக்கு மேலிருக்கும் என்றும் அவன் அவளுடைய தாயின் அண்ணன் என்றும் அவனுக்கு பத்து
வருஷத்திற்கு முன்னால் ஏற்கெனவே திருமணமாகி, அவர்களுக்கு இன்னும் குழந்தை
இல்லாத்தால் இவளைக் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறான் என்றும் தெரிந்து கொண்டாள்.
”நான்
இப்பவே உங்க கூட வந்துடுறேன்; எங்க வீட்டுக்குத் தெரியாம எங்கயாவது கூட்டிட்டுப்
போயி என்னை ஸ்கூல்ல சேர்த்து படிக்க வையுங்க டீச்சர்....” விடாமல் அழுதாள் நாகவள்ளி. அப்படியெல்லாம்
செய்தால் பிரச்னை பெரிதாகி விடுமென்றும் வேறு ஏதாவது செய்து அவளின் கல்வியைத் தொடர
ஆவண செய்வதாக அவளை சமாதானப் படுத்தி
வீட்டிற்கு அனுப்பி வைத்தாள்.
அவளை சமாதானப் படுத்தி அனுப்பி விட்டாளே தவிர இதில்
மேற்கொண்டு என்ன செய்ய வேண்டுமென்று அவளுக்கு எதுவும் புரிபடவில்லை. பள்ளியில்
பலபேரிடம் ஆலோசனை கேட்ட போதும், ”இதெல்லாம் இந்தப் பக்கம் வழக்கமா நடக்குறது
தான...! நீங்க எதுக்கு இப்படி கெடந்து துடிக்கிறீங்க?” என்றார்கள் சக ஆசிரியர்கள்.
”என்ன
சார் கண்ணுக்கெதுக்க ஒரு பச்சப் புள்ள வாழ்க்கைய பாழாக்கப் போறாங்க... அத நாம
பார்த்துக்கிட்டு சும்மா இருக்கணுமா? நாம எல்லாம் படிச்ச வாத்தியார்கள் இல்லையா?
நமக்குன்னு சமூக பொறுப்பு எதுவுமில்லையா....?” என்று ஆதங்கப் பட்டாள்.
”நீங்க
வேற டீச்சர்; படிச்சு வாத்தியாரா இருக்குறது வயிறு கழுவுறதுக்கு; சமூக
சீர்திருத்தம் செய்றதுக்கில்ல....! எனக்குத் தெரிஞ்சு சில வாத்தியார்களே அவங்க
புள்ளைங்களுக்கு இதேமாதிரி சின்ன வயசுலேயே கல்யாணம் பண்ணி அனுப்பிக்கிட்டு
இருக்காங்க....” என்றார் ஒருத்தர் விட்டேத்தியாய்.
இன்னொருத்தர் “இவங்க எல்லாம் இப்படித் தான் டீச்சர்; திருந்தாத
ஜென்மங்கள்.... இதில நாம என்ன செய்ய முடியும்? மொரட்டு ஆளுங்க வேற... ரொம்ப
நெருக்குனமின்னா அடிச்சுப் போடுவானுங்க.....” என்றார்.
அவளால் எனக்கென்ன என்று
இருக்க முடியவில்லை. மாவட்ட ஆட்சியருக்கு கிராமம் பற்றிய விவரங்களை எழுதி அங்கு
பால்ய விவாகம் நடக்க இருப்பதாகவும் அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கும் படியும் மனு
எழுதிப் போட்டாள்.
ஆச்சர்யமாக
நாலைந்து நாட்களுக்குள்ளாகவே தாசில்தார் தன்னுடைய பரிவாரங்களுடன் கிராமத்திற்கு
விசாரணைக்கு வந்து விட்டார். தாசில்தார் அலுவலக புரோக்கர்கள் மூலம் இதை முன்
கூட்டியே தெரிந்து கொண்ட நாகவள்ளியின் மாமன், சுந்தரத்தாய்க்கு எதிராக அவள்
தங்களின் தங்கை குடும்பத்தை மதம் மாற்ற முயற்சிப்பதாக எதிர்மனு செய்து விட்டதில்
பிரச்னை சுலபமாக திசை மாறி விட்டது. ஊர்க்காரர்கள் பலரும் சுந்தரத்தாய்க்கு எதிராக
திரண்டு சண்டைக்கு வந்து விட்டார்கள்.
மேலும் நாகவள்ளீக்கு
அவர்கள் திருமண ஏற்பாடுகள் எதுவும் செய்யவில்லை என்றும் சொந்தம் விட்டுப்
போக்க்கூடாது என்பதற்காக நிச்சயதார்த்தம் மட்டுமே செய்யப் போவதாகவும் அவளுக்கு
பதினெட்டு வயது முடிந்த பின்பு தான் திருமணம் செய்விப்பதாகவும் சாதித்தார்கள். தாசில்தாரும்
அவர்கள் சொன்னதை அப்படியே நம்பி, கிராமத்தினருக்கு ஆதரவாகவே பேசினார்.
கடைசியில்
சுந்தரத்தாய் கிராமத்தில் பால்யவிவாகம் நடப்பதாய்க் குறிப்பிட்டு
ஆட்சித்தலைவருக்கு எழுதிய மனுவை வாபஸ் வாங்கினால், நாகவள்ளியின் மாமன்
சுந்தரத்தாய்க்கு எதிராக கொடுத்திருந்த மதமாற்ற மனுவையும் திரும்ப்ப் பெற்றுக்
கொள்வதாக உறுதி அளித்தான்.
இது
நடக்காத பட்சத்தில் தாசில்தார், கல்வி அதிகாரிக்கு சுந்தரத்தாயின் மீது நடவடிக்கை
எடுக்கும்படி பரிந்துரைத்து எழுதப் போவதாக சொல்லவும், இவளின் சக ஆசிரியர்களும்
தலைமை ஆசிரியரும் சுந்தரத்தாயை மனுவை வாபஸ் பெற்றுக் கொள்ளும் படி
வற்புறுத்தினார்கள்.
அவள்
நாகவள்ளியை தொடர்ந்து பள்ளிக்கு அனுப்பிப் படிக்க வைக்க சம்மதித்தால் மட்டுமே தன்னுடைய
மனுவை திரும்பப் பெறுவதாகவும், இல்லையென்றால் எந்த விசாரணைக்கும் தண்டனைக்கும்
தான் தயார் என்றும் பிடிவாதம் பிடித்தாள். நாகவள்ளியின் வீட்டில் அவளைத் தொடர்ந்து
பள்ளிக்கு அனுப்ப ஒத்துக் கொள்ளவே சமரசமானது இருதரப்பும்.
நாகவள்ளிக்குத்
திட்டமிடபடி நிச்சயதார்த்தம் என்கிற நாடகத்துடன் திருமணமே நடந்தது. சுந்தரத்தாயும்
இதற்கு மேல் இவர்களுடன் போராட முடியாது என்று ஒதுங்கிக் கொண்டாள். ஆனால் ஆச்சர்யமாக நாகவள்ளி அதற்குப் பின்பும்
பள்ளிக்கு அனுப்பப் பட்டாள். அதற்குக் காரணம் அவர்கள் பஞ்சாயத்தில் நாகவள்ளியை
பள்ளிக்கு அனுப்புவதாய் ஒத்துக் கொண்ட்தல்ல; அதையெல்லாம் அவர்கள் சட்டையே
பண்ணவில்லை. நிஜமான காரணம் நாகவள்ளியின் பிடிவாதம்.
தன்னைத்
தொடர்ந்து பள்ளிக்கு அனுப்பவில்லை யென்றால் தனக்கு தன் இஷ்டத்திற்கு மாறாக
திருமணம் செய்து வைத்ததால் தான் சாகப் போவதாகவும் தன்னுடைய மரணத்திற்குக் காரணம்
தன்னுடைய குடும்பம் தான் என்று எழுதி வைத்துவிட்டு விஷத்தைத் தின்று செத்து
விடுவதாக அவள் மிரட்டியதில் அவர்கள் அரண்டு போய் அவளைத் தொடர்ந்து பள்ளிக்கு
அனுப்பிக் கொண்டிருந்தார்கள். பத்தாம் வகுப்பிற்கு நாகவள்ளி வந்த கொஞ்ச
நாட்களிலெல்லாம் அவளின் வயிறு இலேசாய் மேடிடத் தொடங்கியது.
பிரசவம்
முடிந்து கண் விழித்தவள் சுந்தரத்தாயைத் தான் முதலில் தேடினாள். அவள் பக்கத்தில்
போகவும் கைகளைப் பிடித்துக் கொண்டு ”டீச்சர், இனிமே என்னால தொடர்ந்து
பள்ளிக்கூட்த்துக்கு வந்து படிக்க முடியுமான்னு தெரியல; கண்டிப்பா பொறந்துருக்குற
கொழந்தையக் காரணம் காட்டி என் படிப்ப நிறுத்திடுவாங்க.........” என்று கண்
கலங்கினாள்.
அப்புறம் உறுதி தொனிக்கும்
குரலில் சொன்னாள். “இவங்க என்னப் பள்ளிக்கூட்த்துக்கு அனுப்புறத்த்தான் நிறுத்த
முடியும்; ஆனா நான் பள்ளிக்கூடத்துக்கு வராட்டாலும் வேற வழிகள்ல படிக்கத்தான்
செய்வேன்; இன்னைக்குப் பொறந்துருக்குற என் பொண்ண எத்தன எதிர்ப்பு வந்தாலும் அவ
விரும்புற வரைக்கும் படிக்க வைப்பேன்..... அதை எந்த கொம்பனாலயும் தடுக்க முடியாது
டீச்சர்......”
அப்புறம்
பிறந்திருக்கும் குழந்தையைக் காட்டி ”இவ தலைமுறையிலயாவது எங்க ஊர்லருந்தும் இந்த
சுத்துப்பட்டி கிராமங்கள்லருந்தும் பெண் சிசுக்கள கொல்றதும் சின்ன வயசுலேயே
கல்யாணம் செஞ்சு வைக்கிறதும் ஒழிஞ்சிடுமா டீச்சர்....?” என்றாள்.
இரங்கத் தக்க விதத்தில் ஏக்கமாய் அவள் கேட்டது அங்கிருப்பவர்கள் எல்லோரின் வயிற்றிலும்
கத்தியாய் பாய்ந்து கலங்க வைத்தது.
Ø முற்றும்
(நன்றி: தினமணிக்கதிர் 23.06.2013)
No comments:
Post a Comment