Thursday, February 16, 2012

ஆனந்த விகடனுக்கு மூன்று பரிந்துரைகள்:


ஏன் இப்போதெல்லாம் நீ உன்னுடைய பிளாக்கில் எதுவும் எழுதுவதில்லை என்று நண்பர்கள் எல்லாம் துளைத்து எடுக்கிறார்கள்….. இதில் துளியும் உண்மையில்லை; சும்மா மனச் சாந்திக்குக்கான பில்ட்டப்…. அவ்வளவு தான்.

நிஜத்தில் அப்படியெல்லாம் யாரும் என்னைத் துளைக்கவும் இல்லை; வளைக்கவும் இல்லை…. ஏனென்றால் அப்படியெல்லாம் என்னை வதைத்து எழுதத் தூண்ட, வாசிப்பு ஆர்வமுள்ள நண்பர்களே எனக்கு இல்லை என்பது தான் ஒரு ஆறுதல்; அல்லது சோகம்!

எழுதுவதே சொற்பம்; அதில் பிரசுரமாவதென்பது சொற்பமோ சொற்பம். அதனால் தான் பிளாக்கிலும் அதிகம் எழுத முடிவதில்லை.

எழுத்தாளர் திலீப்குமார் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டார் - தான் வருஷத்திற்கு ஒன்றரைச் சிறுகதைகள் எழுதுவதாக. நானும் அவரைப் போலத் தான் - வருஷத்திற்கு இரண்டோ மூன்றோ சிறுகதைகள்; கொஞ்சமே கொஞ்சம் கவிதைகள்….! அதிக பட்சம் அவ்வளவு தான்.

இலக்கியக் கனவான்களே! வரிந்து கட்டிக் கொண்டு வாரியலால் அடிக்க வந்து விடாதீர்கள்…… குறைவாக எழுதுவதில் மட்டும் தான் நான் திலீப்குமாருடன் என்னை ஒப்பிட்டுக் கொள்கிறேன். தரத்தில் அவருடைய கதைகளின் நிழலைக் கூட என்னால் நெருங்க முடியாது என்பதை நான் அறிந்தே இருக்கிறேன்.

இறைக்காத கிணறும் எழுதாத பிளாக்கும் தூர்ந்து போகும் வாய்ப்பிருப்பதால் நான் சமீபத்தில் ஆனந்த விகடனுக்கு எழுதிய வாசகர் கடிதத்தை இங்கே பதிவிடுகிறேன்.


03.02.2012
சென்னை – 62,

அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,

வணக்கம். நலம் தானே! திருமுல்லைவாயிலிலிருந்து சுப்புராஜ் எழுதுகிறேன்

நான் பொதுவாய் பத்திரிக்கைகளுக்கும் எழுத்தாளர்களுக்கும் கடிதங்கள் எல்லாம் எழுதிக் கொண்டிருப்பவனல்ல. ஆனந்தவிகடனுக்கே அபூர்வமான மிகச் சில தருணங்களில் மட்டுமே கடிதங்கள் எழுதி இருக்கிறேன். அதுவும் பெரும்பாலும் திட்டுவதற்குத் தான்.


நல்லதோர் படைப்பை வாசிக்க நேர்ந்தால் அற்புதமாக இருக்கிறதே என்று மனசுக்குள் சிலாகித்து, கொஞ்ச நேரம் அசை போடுவேன். அவ்வப்போது எழுதுகிற கிறுக்கும் இருப்பதால், நம்மால் ஏன் இப்படியெல்லாம் எழுத முடியாமல் இருக்கிறது? என்று கொஞ்சம் பொறாமையால் புகைவேன். ஆனாலும் கருகல் வாசனை வருவதற்குள் வாசித்த படைப்பைக் கடந்து போய் விடுவேன்.அதுதான் எனது இயல்பு.


ஆனால் இந்தவார ஆனந்த விகடனில் வந்திருக்கிற தமிழ்மகன் எழுதிய ”இது பாம்புக் கதையல்ல….” என்கிற சிறுகதையை அப்படி என்னால் எளிதாய் கடந்து போய் விட முடியவில்லை. காரணம் அந்தக் கதை மனசை என்னவோ செய்கிறது. இன்னும் கூட ஆழமான அந்தக் கதையின் பாதிப்பிலிருந்து என்னால் மீள முடியாமல்….. தொடங்கிய இந்த வாக்கியத்தை எப்படி முடிப்பதென்றும் தெரியாமல் என்னைத் தடுமாற வைத்து விட்டது அந்தக்கதை.


எழுதப்பட்ட கதை முடிகின்ற இடத்தில் தான் ஒரு நல்ல கதை தொடங்கும் என்பார்கள். தமிழ்மகனின் கதை நிச்சயம் ஒரு நல்ல கதைக்கான எல்லா விதமான லட்சணங்களுடனும் இருக்கிறது.


சமீப காலமாக நான் வாசிக்க நேர்ந்த எழுத்தாளர்களில் சந்தேகமே இல்லாமல் தமிழ்மகனின் எழுத்து தனித்துவ மிக்கதாய் இருக்கிறது. அவருக்கு என் வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்துவிடுங்கள். இவை சம்பிரதாயமான வார்த்தைகள் இல்லை.


முடிந்தால் அவரின் கைத்தொலைபெசி எண்ணும் முகவரியும் கொடுங்களேன். அம்பத்தூரில் தான் இருக்கிறார் என்று அறிகிறேன். நானும் அம்பத்தூருக்கு அருகில் இருக்கும் திருமுல்லைவாயிலில் தான் வசிக்கிறேன். அவரை நேரில் சந்தித்து கைகுலுக்கி ஒரு வாசகனாக வாழ்த்தி விட்டு வர ஆசைப் படுகிறேன்.


நான் தொடர்ந்து காசு கொடுத்து வாங்கி அட்டை டூ அட்டை வாசிக்கும் ஒரே வார இதழ் ஆனந்தவிகடன் மட்டும் தான் என்று அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன். ஆனந்தவிகடனில் மட்டும் தான் அற்புதமான சிறுகதைகள் – அதுவும் ஒரு வார இதழின் சிறுகதை வரம்புக்கான பக்க அளவுகளையெல்லாம் மீறி – அரங்கேறுகின்றன. ஹாட்ஸ் ஆஃப் டூ ஆனந்தவிகடன் ஆசிரியர் குழு!


ஆனந்தவிகடனின் தீவிர வாசகன் என்கிற உரிமையில் நான் சில பரிந்துரைகளை உங்களின் கவனத்திற்குக் கொண்டு வர ஆசைப் படுகிறேன்.


பரிந்துரை: 1
ஜுனியர் விகடன், சக்தி விகடன், நாணய விகடன்…… சமீபத்தில் டாக்டர் விகடன் என்று எத்தனையோ தலைப்புகளில் விகடனை வெளியிடுகிறீர்கள். இலக்கிய விகடன் என்றொரு இதழும் வெளியிடலாமே! இது என்னுடைய பரிந்துரையும் பணிவான வேண்டுகோளும்.


பரிந்துரை: 2
ஆனந்தவிகடன் ஆசிரியர் குழுவுக்கு இன்னொன்றையும் பரிந்துரைக்க ஆசைப் படுகிறேன். தயவு செய்து வைரமுத்து எழுதும் “மூன்றாம் உலகப்போர்” என்னும் நாலாந்தர நாவல் தொடரை உடனே நிறுத்தி விடுங்கள். அவருக்கு நாவல் எல்லாம் எழுத வர வில்லை. அவரிடம் வண்டல் வண்டலாய் வார்த்தைகள் குவிந்து கிடக்கின்றன். ஆனால் துளி கூட வாழ்வியல் தரிசனம் இல்லை.


வெற்று வார்த்தைகளால் உள்ளீடற்ற அலங்கார கோபுரம் கட்டிக் கொண்டிருக்கிறார். அது நாவலுக்குப் போதாது. இதை யாராவது சினிமாவாக எடுப்பார்கள் என்கிற எதிர் பார்ப்புகளுடன் கொஞ்சமும் நம்பகத்தன்மை இல்லாத நாடகத் தனமான சம்பவங்களால் நாவலை கட்டமைத்துக் கொண்டிருக்கிறார்.


அவரை அவரின் முதல் தொடர்கதையான வானம் தொட்டுவிடும் தூரத்திலிருந்து அவதானித்துக் கொண்டிருக்கிறேன். நாவல் என்பதின் நகம் தொடக் கூட, அவருக்கு கதை மொழி கைவரவில்லை என்பதை ரொம்பவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


கல்லூரியில் படிக்கும் காலத்தில் நான் வைரமுத்துவின் எழுத்துக்களுக்கு தீவிர வாசகனாக - இல்லை இல்லை வெறியனாகவே இருந்திருக்கிறேன். அவர் பாடல் எழுதியிருக்கிறார் என்பதற்காகவே பாடாவதியான படங்களுக்கும் போய், திரையில் அவரின் பெயர் பார்த்து புல்லரித்து புளகாங்கிதம் அடைதிருக்கிறேன்.


அவரின் வைகறை மேகங்களிலிருந்து தண்ணீர் தேசம் வரைக்கும் ஒன்று விடாமல் வாசித்திருக்கிறேன். மீண்டும் என் தொட்டிலுக்கு என்று அவர் எழுதிய மிகச் சாதரணமான் ஒரு மாத நாவலைக் கூட விட்டு வைக்க வில்லை. அவரின் சினிமாப் பாடல்களில் உள்ள கவிதைகளை வாசித்து மகிழ்வதற்காக பிளாட்பாரங்களில் குவித்து விற்கும் பாட்டுப் புத்தகங்கள் எல்லாம் வாங்கி பத்திரப் படுத்தி இருக்கிறேன். அப்படிப் பட்ட என்னாலேயே அவரின் சமீபத்திய எழுத்துக்களை கொஞ்சமும் ரசிக்க முடியவில்லை.


வைரமுத்துவின் மீது காழ்ப்புணர்ச்சி கொள்வதற்கு எனக்கு எந்த முகாந்திரமும் இல்லை. நான் அவரின் போட்டியாளனோ சினிமாசம்பந்தப் பட்டவனோ இல்லை. அதி நுட்பமான சிறுகதைகளும், ஆழமான கவிதை கட்டுரைகளும் வெளியாகும் ஆனந்த விகடனில் வைரமுத்துவின் அசட்டுத் தனமான தொடர் எதற்கென்று தான் அதை நிறுத்தி விடப் பரிந்துரைக்கிறேன். இதை தயவு செய்து நீங்கள் சரியான அர்த்தத்தில் புரிந்து கொள்ளுங்கள்.


ஆனந்த விகடன் என்னும் ஆயிரங்கால விருட்சத்திற்கு வைரமுத்துவின் பிராபல்யம் எல்லாம் ஒரு பொருட்டாக இருக்க முடியாது என்றும் நிச்சயமாய் நம்புகிறேன்.


அதனால் ஆனந்த விகடனின் தரத்தைக் காப்பாற்றுவதற்கான கரிசனத்திலும் உரிமையிலும் சொல்கிறேன். வைரமுத்துவின் தொடரை நிறுத்தி விடுங்கள். அவருக்கு சினிமாப் பாடல்கள் தவிர – கவிதைகள் உட்பட – எதுவும் எழுத வர வில்லை. இன்னும் அவரால் கல்லூரி காலத்து இளைஞனின் ரொமான்டிச மன நிலையைத் தாண்டியே வெளிய வர முடிய வில்லை என்பதை வலியுடன் பதிவு செய்ய விரும்புகிறேன்.


பரிந்துரை: 3
வட்டியும் முதலுமாய் வாழ்வின் தரிசனங்களைப் போட்டு வாங்கும் ராஜு முருகனை நாவல் எழுதச் சொல்லுங்கள். கண்டிப்பாக அது காலத்திற்கும் பேசப்படும். நன்றி!


அன்புடன்,


சோ.சுப்புராஜ்
பின் குறிப்பு:
இந்தக் கடிதத்தால் ஆகச் சிறந்த ஒரு நன்மை விளைந்திருக்கிறது. இந்தக் கடிதத்தை ஆனந்த விகடன் தமிழ்மகனுக்கு அனுப்பி அவர் என்னைத் தொடர்பு கொண்டு பேசினார். நன்றி சொன்னார். இந்தக் கடிதத்தால் அவருடைய தொடர்பு எண் கிடைத்து விட்டது; மேலும்  எனக்கு ஒரு எழுத்தாள நண்பரும் கிடைத்திருக்கிறார். ஒரு கடிதத்திற்கு இதைவிட வேறென்ன பாக்கியம் வேண்டும்…..!


1 comment:

  1. அருமை
    வைரமுத்துவின் நாவலை நான் பார்ப்பது கூட இல்லை. அந்த 5 முதல் 6 பக்கங்களை அப்படியே கடந்து விடுவேன்.
    ராஜு முருகன் நல்லா போட்டு வாங்குறார்
    http://www.athishaonline.com/2012/02/blog-post_14.html- CHECK THIS இந்த தமிழ் மகன் தானே அவர்?

    ReplyDelete