Thursday, February 4, 2010

சிறுகதை : குழந்தைகள் விற்பனைக்கு

கடைசியில் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்ப்பதென்று முத்துப்பாண்டியும் மரியபுஷ்பமும் தீர்மானித்தார்கள். அவர்கள் சேர்ந்து வாழத் தொடங்கி 15 வருஷங்களுக்கும் மேலாகி விட்டது. இருவரும் கல்யாணம் செய்து கொள்ளவில்லை. அந்தச் சடங்குகளில் இருவருக்குமே நம்பிக்கை இல்லை. முத்துப்பாண்டி பிறப்பால் இந்து. ஆனால் கடவுள் இல்லவே இல்லை என்று தீர்மானமாய் நம்புகிறவன். மரியபுஷ்பமோ கர்த்தர் தான் ஒரே கடவுள் என்ற பிடிவாதம் கொண்டவள். இருவரும் காதலிக்க நேர்ந்தது காலத்தின் விளையாட்டுக்களில் ஒன்று.
கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமென்றால் யாராவது ஒருவர் மதம் மாறீயே ஆக வேண்டுமென்று வற்புறுத்தப் பட்டார்கள். இருவருக்குமே அதில் உடன் பாடில்லை.அதனால் கல்யாணம் பண்ணிக் கொள்ளாமலேயே சேர்ந்து வாழத் தொடங்கி விட்டார்கள்.
அவர்களும் ஒரு குழந்தைக்காக படாத பாடெல்லாம் பட்டு விட்டார்கள். யார் என்ன சொன்னாலும் கேட்டார்கள். மருத்துவம் , மாந்திரீகம் எல்லாம் பண்ணீனார்கள். உதடு கடித்து, வலி பொறுத்து, யோனி விரித்து எக்ஸ் – ரேக்கள் எடுத்து, தொப்புளில் டூயுப் செலுத்தி லேப்ராஸ் கோப்பி அறுவை சிகிச்சை செய்து, டி.என்.சி என்ற பெயரில் ஓட்டை விழும் வரைக்கும் கர்ப்பப் பையைச் சுரண்டி, உணர்ச்சியும் ஆண்மையும் மரத்துப் போகிற அளவுக்கு ஹார்மோன் ஊசிகளைக் குத்திக் கொண்டு, ஈ.டி. என்கிற சோதனைக் குழாய்க் குழந்தைக்கும் முயற்சி செய்து, சித்த, ஆயூர்வேதம், யுனானி மருத்துவ முறைகளிலும் முயற்சி செய்து, நிறைய போலிகளிடமும் ஏமாந்து, எதுவுமே பலிக்காமல், உடம்பும் மனசும் தளர்ந்து போய் கடைசியாக ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்ப்பதென்று தீர்மானித்தார்கள்.
குழந்தை தத்தெடுத்தல் என்பது மிகச் சுலபம் என்றும், அதற்கான இல்லங்களில் காய்கறிகள் மாதிரி குழந்தைகளைக் கூறுகட்டி வைத்திருப்பார்கள்; நமக்குப் பிடித்தமான குழந்தையை அப்படியே அள்ளிக் கொண்டு வந்து வளர்க்கலாம் என்றும் நம்பி இருந்தார்கள். ஆனால் தத்தெடுப்பதற்கான முயற்சிகளிலும் தேடலிலும் இறங்கிய பின்பு தான் அது அத்தனை சுலபமான காரியமில்லை என்ற உண்மை உறைத்தது. தத்தெடுப்பதற்கு யாரை அணுகுவது? எங்கு போய் விசாரிப்பது என்று எந்த விபரமும் அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. அனாதை இல்லங்களை அணுகி விசாரித்த போது தாங்கள் தத்தெல்லாம் தருவதில்லை என்று கை விரித்தார்கள். குப்பைத் தொட்டிகளிலும் , அரசு மருத்துவ மனைகளிலும் அன்றாடம் அனேகக் குழந்தைகள் அனாதைகளாக விழுந்து கொண்டிருக்கும் ஒரு தேசத்தில் இவர்களுக்கு ஆசையாய் எடுத்து வளர்க்க ஒரு குழந்தை கிடைப்பது குதிரைக் கொம்பாய்த் தானிருந்தது.
ஒருமுறை ஒரு நடு வயதுப் பெண், கையில் ஒரு மூன்று வயதுப் பெண் குழந்தையையும். மடியில் பச்சிளம் சிசுவையும் ஏந்தியபடி மரியபுஷ்பத்திடம் வந்து பிச்சை கேட்டாள். இரண்டு குழந்தைகளையும் பார்க்கப் பார்க்க அவளுக்கு ஆசை பொங்கியது. அப்படியே அந்தக் கைக்
குழந்தையை பிடுங்கிக் கொண்டு ஓடி விடலாம் போலிருந்தது.
“ஏம்மா, உன்னைப் பார்த்தா கர்த்தரோட கிருபையில நல்லா ஆரோக்கியமாத்தான இருக்குற! பிச்சை எடுத்துப் பிழைக்கிறது அசிங்கமாயில்லையா? ஏதாவது வேலை செஞ்சு – நாலு வீட்ல பாத்திரம் தேய்ச்சாவது பிழைக்கலாமில்லையா?” என்றாள் மரியபுஷ்பம்.
“இந்தக் கைக்குழந்தைய வச்சுக்கிட்டு நான் என்னத்த தாயி வேல பார்க்குறது! மகராசி, இதுக முகம் பார்த்தாவது ஏதாவது தர்மம் பண்ணு தாயி, உனக்குப் புண்ணியமாப் போகும்…..”- இறைஞ்சினாள் பிச்சைக்காரி.
மரியபுஷ்பம் கைக்குழந்தையைப் பார்த்து விரல் சொடுக்க, அது இவளைப் பார்த்து கண்களை உருட்டி, சிரித்து நெளிந்ததில் அப்படியே நெகிழ்ந்து போனாள். “நான் ஒண்ணு சொல்றேன் கேட்குறியா? அதால உன் பிரச்னையும் தீரும்; என் பிரச்னையும் தீரும். உன்கிட்ட இருக்குற ரெண்டு குழந்தைகள்ல கைக் குழந்தைய எனக்குக் குடுத்துரு. அதை நாங்க ராணி மாதிரி வளர்க்கிறோம். உனக்கும் நெறையாப் பணம் தர்றோம். நீயும் கௌரவமா ஏதாவது தொழில் செஞ்சு பொழச்சுக்கோ…” என்றாள் மரியபுஷ்பம்.
அந்தப் பிச்சைக்காரிக்கு அப்படி ஒரு ஆங்காரம் வந்து விட்டது.”அய்ய, போவியா? பிச்சை கேட்டா, நீ பிள்ளையக் கேக்கிறியே! என்னை விட மோசமான பிச்சைக்காரியா இருப்ப போலருக்கு. என் பொழப்பே இதுகள நம்பித்தான் ஓடிக்கிட்டிருக்கு ; வந்துட்டியே என் பொழப்பக் கெடுக்க….” மேலும் ஏதேதோ முணங்கியபடி வெடுக்கென வேறு இடம் தேடி நகர்ந்து போய் விட்டாள் அவள். மரியபுஷ்பம் பெருத்த அவமானத்தில் மனதுடைந்து போனாள்.
இன்னொருமுறை அரசாங்க ஆஸ்பத்திரியில் அப்போது தான் பிறந்த குழந்தையை அதைப் பெற்றெடுத்தவள் அங்கேயே அனாதையாக விட்டு விட்டுப் போய் விட்டாள் என்ற பத்திரிக்கை செய்தியைப் படித்து, உடனேயே மருத்துவமனைக்கு ஓடினான் முத்துப் பாண்டி –அந்தக் குழந்தையை எடுத்து வளர்க்கலாமென்ற ஆவலில். அங்கு போனபோது தான் புரிந்தது அதை எடுத்து வளர்க்க எத்தனை போட்டோ போட்டி என்று. இவன் போவதற்கு முன்பேயே நிறையப் பேர் குழந்தையைக் கேட்டு வந்து குவிந்து விட்டிருந்தார்கள்.
குழந்தை இவனுக்குக் கிடைக்கவில்லை, என்றாலும் அத்தனை அதிகாலையில் அங்கு போனதிலும் ஒரு நல்லது நடந்தது. அங்கு இவன் சந்தித்த ஒருவர் தான், குழந்தையை தத்தெடுப்பதற்கான முறையான வழிமுறைகளைச் சொல்லிக் கொடுத்து, குழந்தைகளைத் தத்துக் கொடுப்பதற்கென்று அரசாங்கமே அனுமதித்திருக்கும் சேவை மையங்கள் சிலவற்றின் முகவரி களையும் தந்து அனுப்பி வைத்தார்.
முத்துப் பாண்டியின் தேடல் தொடங்கியது. அவர் கொடுத்த முகவரியில் ஒவ்வொன்றாய்ப் போய் விசாரிக்கத் தொடங்கினான். முதலில் இவன் போய் விசாரித்த மையத்தில் , ஏற்கெனவே குழந்தை கேட்டு நிறையப் பேர் ரெஜிஸ்டர் பண்னி நீண்ட காலம் காத்திருப்பதாகவும் , அவர்களுக்கே தங்களால் இன்னும் குழந்தை கொடுக்க முடியாத நிலையில் புதிது புதிதாய் மேலும் ஆட்களைச் சேர்த்து பட்டியலை நீட்டிக் கொண்டு போவதில் ஒரு பிரயோசனுமும் இல்லை என்றும் சொல்லி பிடிவாதமாய் இவன் பெயரைப் பதிந்து கொள்ளவே மறுத்து விட்டார்கள்.
இன்னொரு மையத்தில், சமீபத்தில் ஆந்திராவில் குழந்தை கடத்தல் சம்பவங்கள் நிறைய நடந்து விட்டதாலும் அரசாங்கம் நிரம்பக் கெடுபிடி பண்ணுவதாலும் தங்களின் மையத்திற்கு குழந்தைகளே வருவதில்லை என்றும் சொல்லி திருப்பி அனுப்பி விட்டார்கள். வேறு சில மையங்களில் விசாரித்த போதும் ஆளுக்கொரு காரணங்கள் சொல்லி தட்டிக் கழித்தார்களே தவிர யாரும் நம்பிக்கையான பதிலைத் தரவே இல்லை.
முத்துப்பாண்டி விரக்தியில் மனதுடைந்து இது தேறாது என்று விட்டு விட்டான். அப்புறம் தான் இன்னொருத்தர் மூலம் ஷெனாய் நகரில் குழந்தைகளைத் தத்துக் கொடுக்கும் இல்லங்களை எல்லாம் கண்காணிக்கவும் அவற்றை முறைப்படுத்தவுமாய் ஒரு தொண்டு நிறுவனம் இயங்குவதாகவும் அவர்களிடம் போய் பதிவு பண்ணிக் கொண்டால் சீக்கிரம் காரியம் கை கூடுமென்று கேள்விப் பட்டு அங்கு போனான்.
அவர்களும் கொஞ்சம் அலைக் கழித்து, கவுன்சிலிங் அது இதென்று இழுத்தடித்து பத்து நாட்களுக்கப்புறம் ஒருவழியாய் விண்ணப்பப் படிவம் கொடுத்தார்கள். அதில் ஆதியோடந்தமாக புருஷன் மனைவி இருவரின் சரித்திரமும் சான்றுகளோடு பதிந்து கொள்ளப் பட்டு அப்புறமும் அடுக்கடுக்கான கேள்விகளால் துளைத்தெடுத்தார்கள் – உங்களுக்கு மருத்துவ ரீதியா குழந்தையே பிறக்காதுங்கிறதுக்கு டாக்டர் சர்ட்டிபிகேட் இருக்கா? உங்கள் பெயரில் அசையும், அசையா சொத்துக்கள் மற்றும் வங்கிகளில் வைப்பு நிதிகள் இருக்கிறதா? இத்யாதி….இத்யாதிகள்….
முத்துப்பாண்டியும் மரியபுஷ்பமும் ரொம்பவும் சலித்துப் போனார்கள். மரியபுஷ்பம் வாய் விட்டே கேட்டு விட்டாள். “பெற்றவர்களால் புறக்கணிக்கப் பட்ட ஒரு குழந்தையை எடுத்து வளர்ப்பதற்கு இத்தனை கேள்விகளா?” அந்த மையத்தின் நிர்வாகி மிகப் பொறுமையாய் பதில் சொன்னாள்.
”குழந்தை மிகச் சரியான எடத்துக்குத் தான் போகுதான்கிறத உறுதிப் படுத்துகிறதுக்குத் தான் இத்தனையும் கேட்குறோம்; நீங்களும் தத்தெடுத்துட்டுப் போற குழந்தைக்கு உணர்வு ரீதியா உண்மையான பெற்றோரா மாறணும். உங்களுக்கு குழந்தை இல்லாத குறைக்காக ஒரு அனாதைக் குழந்தையை வளர்க்குறோமிங்கிற காம்ப்பெளக்ஸ் வரவே கூடாது; இப்ப ஒரு ஆர்வக் கோளாறுல குழந்தைய தத்தெடுத்துட்டு அப்புறம் தொடர்ந்து வளர்க்கச் சிரமப் பட்டு, அனாதைக் குழந்தை தானேன்னு தெருவில விட்டுட்டா எவ்வளவு சமூகப் பிரச்னைகள் உருவாகும்? அதோட சில சமூக விரோதிங்க குழந்தைய எடுத்துட்டுப் போயி கொஞ்ச நாள் வளர்த்துட்டு அப்புறம் பிச்சை எடுக்க,நரபலி கொடுக்க, பிராஸ்ட்டியூசன் பண்ணன்னு உபயோக்கிறாங்க; இன்னும் சிலர் குழந்தைகள் கிட்டருந்து கண்ணு, கிட்னின்னு உருவிக்கிட்டு அப்புறம் தெருவில வீசிட்டுப் போயிடுறாங்க அதை எல்லாம் தவிர்க்கத் தான்….. குழந்தைய உங்களுக்கு வளர்க்கக் குடுத்தாலும் கொஞ்ச நாளைக்கு நாங்களும் கண் காணிச்சுக் கிட்டே தான் இருப்போம் தெரிஞ்சுக்குங்க…..”
அப்புறம் அந்த மிக முக்கியமான கேள்வியைக் கேட்டாள் தொண்டு நிறுவன நிர்வாகி. “உங்களின் கல்யாணத்தை ரெஜிஸ்டர் பண்ணி இருக்கிறீர்கள் தானே?” முத்துப்பாண்டியும் மரிய புஷ்பமும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி, “இல்லை நாங்கள் கல்யாணம் பண்ணிக் கொள்ளாமலேயே சேர்ந்து வழ்கிறோம்….” என்றார்கள். இதைக் கொஞ்சமும் அவள் எதிர்பார்த்திருக்கவில்லை என்பது அவளின் முகச் சுளிப்பிலிருந்து புரிந்தது.
“ஐ ஆம் ஸாரி….உங்களால் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பது சாத்தியமில்லை…. முறைப்படி திருமணமானவர்களுக்கு மட்டுமே குழந்தையைத் தத்தெடுக்க எங்களால் உதவ முடியும் ……” என்றாள் தீர்மானமாக.
“இதென்ன கட்டுப்பெட்டித் தனம் மேடம்? கல்யாணமாறதுக்கும் ஒரு குழந்தைய வளர்க்குறதுக்கும் என்ன சம்பந்தம்? ஒருவேளை கல்யாணமானவங்க குழந்தைய தத்தெடுத்த பின்னால விவாகரத்து வாங்கிக் கிட்டா என்ன பண்ணுவீங்க?” என்று கேட்டான் முத்துப்பாண்டி.
“அதெல்லாம் தெரியாது ஸார்; கோர்ட்ல தத்தெடுக்கும் பார்மாலிட்டிஸின் போது நீதிபதி கல்யாணமானவங்கங்குறதுக்கு ஆதாரம் கேட்பார். இல்லைன்னா தத்துக் குடுக்க சம்மதிக்க மாட்டார்; அது தான் ரூல்ஸ்…..” என்றாள் பிடிவாதமாக.
“சுஷ்மிதாசென் மட்டும் எப்படி கல்யாணமாகுறதுக்கு முன்னாடியே ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்குறாங்க…..” என்று கேட்டாள் மரியபுஷ்பம்.
“அதானே! சாமானியர்களுக்கு மட்டும் தான் சட்ட திட்டங்களும் விதிகளுமா? பிரபலங்களுக்குன்னா எதுவுமே பிரச்னை இல்லையா!” என்றான் முத்துப்பாண்டி.
“எதுக்கு ஸார் வெட்டி விவாதம் பண்றீங்க? எங்களுக்கு என்ன கேட்கச் சொன்னாங்களோ அதைத் தான் நாங்க கேட்குறோம் ஆனால் உங்க பிரச்னைக்கு என்னால ஒரு சின்னத் தீர்வு சொல்ல முடியும். நீங்க ஒரு நோட்டரி பப்ளிக் மூலம் கல்யாணம் பண்ணிகிட்டு குடித்தனம் பண்றதா ஒரு அபிடெபிட் வாங்கி கோர்ட்ல புரட்யூஸ் பண்ணீடுங்க….” என்று அவள் சொல்லவும் இருவரும் சந்தோஷமானார்கள்.
அப்புறம் முத்துப்பாண்டியும் மரியபுஷ்பமும் தங்களின் விண்ணப்பத்தில் தந்திருந்த விபரங்களெல்லாம் உண்மையானவை தானா என்று அவர்களின் வீட்டிற்கே அந்த தொண்டு நிறுவனத்திலிருந்து சிலர் வந்து விசாரித்து ஊர்ஜிதப் படுத்திய பின்பு இவர்களுக்குக் குழந்தை வழங்கலாமென்று ரிப்போர்ட் பண்ணி காத்திருப்போர் பட்டியலில் இவர்களைச் சேர்த்துக் கொண்டார்கள்.
“நீங்க ரொம்பப் பொறுமையா காத்திருக்கனும்; எங்களோட மையத்தோட லிங்க்கில சில அனாதைக் குழந்தைகள பராமரிக்கிற இல்லங்கள் இருக்கு. அவங்க கிட்ட குழந்தைங்க வர்றப்ப, சீனியாரிட்டிப்படி குழந்தை கேட்டு எங்ககிட்ட ரெஜிஸ்டர் பண்ணி இருக்குறவங்களுக்கு குழந்தைய அடாப்ஷன் கொடுப்போம். உங்க டெர்ன் வர்றதுக்கு கொஞ்சக் காலம் பிடிக்கலாம்……நீங்க எங்களயே முழுசா நம்பிக்கிட்டு இருக்கணும்னு கட்டாயமில்ல; வேற சோர்ஸ் மூலமாவும் நீங்க குழந்தைக்கு முயற்சி பண்ணலாம்…..” என்று சொல்லி அனுப்பி வைத்தார்கள்.அலைச்சல் தான் மிச்சம். பலன் ஒன்றும் இல்லை.அதிகம் நம்பிக்கை இல்லாமல் வீட்டிற்குத் திரும்பி ய கையோடு அதை மறந்தும் போனார்கள்.
ஒரு ஆறு மாதங்கள் கடந்திருக்கும். ஒருநாள் முத்துப்பாண்டி வெளியே போய் விட்டு அலுவலகம் திரும்பிய போது ரிஸப்சன் பெண் ஓடி வந்து”ஸார் உங்க செல்போனை ஆபிஸ்ல மறந்து வச்சுட்டுப் போயிடிங்களா….?” என்று கேட்டாள். ”ஒண்ணும் மறக்கல; அந்த சனியன் கிட்டருந்து கொஞ்ச நேரமாச்சும் தொந்தரவு இல்லாம இருக்கணும்னு நான் வேணும்னு தான் டேபிள்லேயே விட்டுட்டுப் போயிருந்தேன்….ஏன் முக்கியமான கால் எதுவும் வந்ததா?” என்று கேட்டான்.
“உங்க மனைவிதான் கால் பண்ணீருந்தாங்க;விபரம் ஒண்ணும் சொல்லல…நீங்க வந்ததும் அவங்களுக்கு மறந்துடாம கால் மட்டும் பண்ணச் சொன்னாங்க….” என்று சொல்லி விட்டு சிணுங்கிய டெலிபோனை அவசரமாய்க் கவனிக்கப் போனாள்.
மரியபுஷ்பத்திடமிருந்து அழைப்பா? முக்கியமான விஷயம் இல்லை என்றால் வேலை நேரத்திலெல்லாம் தொந்தரவு தர மாட்டளே! என்ன விஷயமாயிருக்கும் என்று யோசித்தபடி அவளுக்குத் தொடர்பு கொண்டான்.முத்துப்பாண்டியின் குரலைக் கேட்டதுமே “நாளைக்கு ஒருநாள் லீவு எழுதிக் குடுத்துட்டு, சாயங்காலம் சீக்கிரம் வீட்டுக்கு வந்து சேருடா…” என்றாள். அவள் மிகவும் சந்தோஷமாய் இருக்கிறாள் என்பது புரிந்தது அவனுக்கு. அந்த மாதிரி நேரங்களில் தான் புருஷனை ‘டா’ ப்போட்டு விளிப்பாள்.
எவ்வளவு யோசித்தும் அவளின் சந்தோஷத்துக்கான காரணத்தை முத்துப் பாண்டியால் யூகிக்க முடியவில்லை. எம்.டி.யிடம் ஒரு வார்த்தை சொல்லி விட்டு சாயங்காலம் சீக்கிரம் கிளம்பி வீட்டிற்குப் போனால், வீடே விழாக் கோலம் பூண்டிருந்தது. கலர் காகிதங்களும், ஜிகினாத் தோரணங்களும், வண்ணப் பலூன்களுமாய் அலங்கரிக்கப் பட்டு, வீட்டின் ஒவ்வொரு அங்குலத்திலும் மரியபுஷ்பத்தின் அத்தனை நரம்புகளிலும் மகிழ்ச்சியின் ஆரவாரம் எதிரொலித்தது.
“என்னடா செல்லம்! டாக்டர் நல்ல சேதி எதுவும் சொன்னாரா, கன்சீவ் ஆயிட்டேன்னு…..”ஆர்வமாய்க் கேட்டான் முத்துப்பாண்டி. “பேராசை தான் உனக்கு! அப்படியெல்லாம் ஒண்ணுமில்லப்பா……”சட்டென்று மின்சாரம் தடை பட்டது போல் அவளின் முகம் இருளடைந்தது. “ஸாரிப்பா…” என்று மனைவியை இழுத்து அணைத்துக் கொண்டான். கொஞ்ச நேரத்தில் மரியபுஷ்பமும் இயல்புக்குத் திரும்பி “இது வேற சந்தோஷம்டா…மடையா! ஷெனாய் நகர்ல குழந்தைக்காக ரெஜிஸ்டர் பண்ணியிருந்தோம்ல; அவங்கதான் இன்னைக்குப் போன்ல கூப்ட்டு அண்ணாநகர்ல ஒரு இல்லத்தில் 10 மாதப் பெண் குழந்தை ஒன்னு இருப்பதாவும் போய்ப் பார்த்து பிடித்திருந்தா தத்தெடுத்துக் கொள்ளும்படியும் சொன்னாங்க…” என்றாள்.
அவள் சொல்லச் சொல்ல முத்துப்பாண்டிக்கும் உற்சாகமும் சந்தோஷ்மும் பீறிட்டது.எத்தனை வருஷத்து தேடலும் கனவும் காத்திருப்பும் இப்போது கை கூடப் போகிறது? சந்தோஷத்தை எப்படி வெளிப்படுத்துவ தென்றே அவனுக்குத் தெரியவில்லை. மனைவியை அலாக்காகத் தூக்க முயற்சி செய்தான். அசைக்கக் கூட முடியவில்லை. அவள் சிரித்தாள். இருவரும் வெளியிலே கிளம்பிப் போய் குழந்தைக்குத் தேவையான பொம்மைகள், உடைகள் எல்லாம் வாங்கிக் கொண்டு இவர்களும் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு வந்தார்கள்.
இருவரும் இரவெல்லாம் தூங்கவே இல்லை. வரப் போகும் குழந்தை பற்றியே மரியபுஷ்பம் ஆவாலாதி பட்டுக் கொண்டிருந்தாள்.”நம்ம ஆசைப் பட்ட படியே பெண் குழந்தையே கிடைச்சிருச்சில்லைங்க…” என்றாள்.
இவன் ‘ம்’ என்றான்.
“குழந்தை வாய் நெறைய நம்மள அம்மா அப்பான்னு தான் கூப்டப் பழக்கணும்; மம்மி டாடி யெல்லாம் வேண்டாம்; சரியா?”
“உன் இஷ்டம்மா…..”
“அப்துல்கலாம் மாதிரி நம்ம பொண்ண ஏரோநாட்டிக்கல் என்ஜினியரிங் படிக்க வைக்கலாங்க….”
“அப்படியே செய்திடலாம்…..”
“பெண் குழந்தை வந்தாச்சு; இனி நீங்க ஓடிச் சம்பாதிக்கணும்…. நம்ம வாழ்க்கைக்குத் தான் ஒரு பிடிப்பும் அர்த்தமும் கிடைச்சிருச்சில்ல…..”
பலவாறாகப் பேசி, கனவிலும் குழந்தை பற்றியே பிதற்றி…வெளிச்சத்தின் முதல் கீற்று பூமியில் பட்டதுமே எழுந்து தயாரானார்கள். அந்த விடியல் மிக அழகானதாகவும் அற்புதமானதாகவும் அர்த்தம் நிறைந்ததாகவும் தோன்றியது அவர்களுக்கு.
ஆசையும் கனவுமாய் ஓடோடிப் போய்க் குழந்தையைப் பார்த்தார்கள். அத்தனை சந்தோஷமும் வடிந்து போகும்படி வெயிலில் வாடிய தளிராக துவண்டு போய் சதைப் பிடிப்பே இல்லாமல் நோஞ்சானாக நொய் நொய்யென்று அழுது கொண்டு இருந்தது குழந்தை. ஆனாலும் போதிய ஊட்டமும் பராமரிப்பும் இல்லாததால் தான் அந்தக் குழந்தை அப்படி இருக்கிறது என்றும் வீட்டிற்குக் கொண்டு போய் உரிய கவனத்துடன் வளர்த்தால் தேற்றி விடலாமென்றும் தாங்களுக்குத் தாங்களே சமாதானம் சொல்லிக் கொண்டு, அதையே தத்தெடுத்துக் கொள்ள இருவருமே தங்களின் சம்மதத்தைத் தெரிவித்தார்கள்.
குழந்தையை தங்களுக்குத் தெரிந்த டாக்டரிடம் தூக்கிக் கொண்டு போய் மருத்துவப் பரிசோதணை செய்து மற்ற பார்மாலிட்டிஸெல்லாம் முடிந்த பின்பு இல்லத்தின் நிர்வாகி இவர்களைத் தனியறையில் அழைத்துப் பேசினாள். குழந்தைக்கான பாராமரிப்புக் கட்டணமாக எண்பதாயிரம் ரூபாயும் நிர்வாகச் செலவுகளுக்காக பத்தாயிரம் ரூபாயும் மற்றும் மருத்துவச் செலவுகளுக்காக இன்னொரு பத்தாயிரம் ரூபாயும் ஆக மொத்தம் ஒரு இலட்ச ரூபாய் இப்போது தர வேண்டுமென்றும் இது போக முறைப்படி தத்தெடுப்பதற்கான வக்கீல் மற்றும் நீதிமன்ற செலவுகள் தனியென்றும் சொன்னாள்.
முதல் அதிர்ச்சி முகத்தில் அறைந்தது.“அரசாங்கம் நிர்ணயித்தபடி குழந்தையின் பராமரிப்புக்கு நாளொன்றுக்கு ஐம்பது ரூபாய் வீதம் கணக்குப் போட்டால் பதினைந்தாயிரம் ரூபாய் தானே ஆகும்….” முத்துப்பாண்டி இலேசாய் ஆரம்பிக்கவும் இல்ல நிர்வாகிக்கு சுரீரென்று கோபம் வந்தது. “அரசாங்கத்துக்கு என்ன தெரியும்? பாலும் பவுடரும் சோப்பும் ஆயாக்களுக்கான சம்பளமும் என்று ஒவ்வொன்றும் என்ன விலை ஆகிறது? இதில் தினசரி ஐம்பது ரூபாய் எந்த மூலைக்கு! மேலும் குழந்தையை பெரும்பாடு பட்டு நாங்கள் ஆந்திராவிலிருந்து வரவழைச்சுருக்கோம். அதுக்கான போக்குவரத்துச் செலவுகளுக்கெல்லாம் நாங்க எங்க போறது….” இல்ல நிர்வாகி செலவுகளைப் பட்டியலிடவும் முத்துப் பாண்டி “நிங்க பண்றது சேவை மாதிரி தெரியலயே; பக்காவான குழந்தை வியாபாரம் மாதிரியில்ல இருக்கு…..”என்று அவசரப் பட்டு வாய் விட்டு விட்டான்.
அவன் அப்படிச் சொன்னது அவளின் ஈகோவைப் பெரிதும் காயப் படுத்தி விட்டது போலும். கோபத்தில் முகம் சிவுசிவுக்க பட்டென்று நாற்காலியிலிருந்து எழும்பி, ”இங்கருந்து நீங்க வெளியில போயிடுங்க ; உங்களுக்கு நாங்க குழந்தை தர்றதா இல்ல; இவ்வளவு கணக்குப் பார்க்குற நீங்க குழந்தையை எப்படி வளப்பீங்க…..” என்றாள். முத்துப்பாண்டி தான் சொன்னதற்காக மன்னிப்புக் கேட்டான். மரியபுஷ்பமும் எவ்வளவோ மன்றாடினாள். இல்ல நிர்வாகி பிடிவாதமாய் குழந்தையைத் தர மறுத்ததோடு அப்படி மறுப்பதற்கு அவள் முன்னிறுத்திய காரணம் மரியபுஷ்பத்தை மிகவும் காயப் படுத்தி விட்டது.
“கல்யாணமே பண்ணிக்காம சேர்ந்து வாழற இல்லீகல் தம்பதி நீங்கள்; உங்களுக்கு நாங்க குழந்தைய தத்துக் குடுக்க விரும்பல;குழந்தையை வளர்த்து மோசமான விஷயங்களுக்கு யூஸ் பண்ணீடுவீங்கன்னு நாங்க பயப்படுறோம்…..” என்று அவள் சொன்னதைக் கேட்டதும் மனதுடைந்து போனாள் மரியபுஷ்பம். அவள் முத்துப்பாண்டியிடம் “ நீ எழும்பி வாப்பா; நமக்கு குழந்தையும் வேண்டாம்; மண்ணாங்கட்டியும் வேண்டாம்….” என்று அவனையும் அழைத்துக் கொண்டு இல்லத்தை விட்டு வெளியேறினாள் அழுது கொண்டே.
“நான் வாய வச்சுக்கிட்டு சும்மா இருந்திருக்கலாம்…..இந்தக் காலத்துல எல்லாமே பணம் தான்னு எனக்குப் புரியாமப் போயிடுச்சு…. சட்டுன்னு வாய விட்டுட்டேன். குழந்தை பெத்துக்கிற முயற்சிகளுக்கு நாம மருத்துவமனைகளுக்கும் மருந்து செலவுகளுக்கும் கொட்டிக் குடுத்த பணத்த கண்க்குப் பார்த்தா அவங்க கேட்ட பணம் ஒண்ணுமே இல்ல; பேசாம குடுத்து எடுத்துட்டு வந்திருக்கலாம்….எத்தனை ஆசையா இந்தக் குழந்தைய எடுத்து வளர்க்கலாம்னு கனவுகள வளர்த்து வைச்சிருந்த…. எல்லாத்துலயும் இப்ப மண்ணள்ளிப் போட்டுட்டேன் நான்…ஸாரிடா” என்றான் முத்துப்பாண்டி.
“பரவாயில்ல விடுப்பா….இத்தனை விலை குடுத்து அந்தக் குழந்தையை எடுத்துட்டுப் போய் வளர்க்குறது அந்தக் குழந்தைக்கே நல்லதில்ல….அது வளர்ந்து வர்றப்ப இயல்பான குழந்தைத் தனத்தோட செய்ற சின்னத் தப்பும் நம்மைப் பெருசாக் கோபப் படுத்தும். பணம் குடுத்து வாங்குன பண்டம்ங்குறதால நிஜமான பாசம் நிச்சயம் வராதுப்பா….போட்ட பணத்த எப்படி ஈடுகட்டுறதுன்னு தான் புத்தி அலையும்; அதனால மனசப் போட்டு அலட்டிக்காம பேசாம அதை விட்டொழி…..” என்றாள் ஆறுதலாய்.
தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியாள் இவர்களிடம் வந்து சொன்னாள். ”இப்படித்தான் ஆசையாய் குழந்தையை எடுத்து வளர்க்க வருபவர்களிடம் அவர்கள் மனசு நோகும்படி எதையாவது சொல்லி, குழந்தையைத் தத்துக் கொடுப்பதைத் தவிர்த்து விட்டு, அப்புறம் இதையே காரணம் காட்டி அரசாங்கத்திடம் அனுமதி வாங்கி,வெளிநாட்டுக் காரங்களுக்கு பெரும் தொகைக்கு குழந்தைகள வித்துடுவாங்க….இதுதான் இவங்களோட வாடிக்கை…..”
குழந்தையைத் தத்தெடுப்பதின் பின்னணியில் பெரும் பிசினஸ் இயங்குவதைப் புரிந்து கொண்டு அந்த சுழலிருந்து வெளியே வந்து விட்டார்கள். அப்புறம் குழந்தைக்கான எந்தப் புது முயற்சியிலும் அவர்கள் இறங்கவில்லை
-- முற்றும்
(நன்றி : தினமலர் – வாரமலர் 19.10.2008)

2 comments:

  1. இது சிறுகதையா அல்லது அனுபவமா என்று சந்தேகமே வந்துவிட்டது. அந்த அளவுக்கு யதார்த்தமாக எழுதியிருக்கிறீர்கள். வாசித்தவுடன் மனது கனத்தது என்னமோ நிஜம்.

    ReplyDelete
  2. அற்புதமான கதை. ஒரு படைப்பின் தரத்தை பின்னூட்டங்கள் மட்டுமே தீர்மானிப்பதில்லை என்பதற்கு இது ஒரு அத்தாட்சி

    ReplyDelete