Saturday, December 5, 2009

அனுபவப் பகிர்வுகள் - கல்கி நட்புச் சிறப்பிதழ்:

சில நாட்களுக்கு முன்னால் இரவு வேலை முடிந்து வீட்டிற்குப் போன போது என் முகவரிக்கு அந்த வார கல்கி நட்புச் சிறப்பிதழ் தபாலில் வந்திருந்த்து. ஏதாவது படைப்புகள் பிரசுரிக்கப் பட்டிருந்தால் தான் இதழ்கள் வீட்டிற்கு அனுப்பப்படும். கல்கி இதழைப் பார்த்ததும் என்னுடைய எந்தப் படைப்பு அச்சேறி இருக்கிறதென்கிற அலை பாய்தலோடு அவசர அவசரமாய் இதழைப் புரட்டினேன். கூரியர் தபால் செலவு சிக்கனத்திற்காக எப்போதும் இதழ்களுக்கு நான் இரண்டு மூன்று கதைகளாகத் தான் சேர்த்து அனுப்புவேன். அதனால் எந்தக் கதை என்பதை அறிந்து கொள்ளும் ஆவல்; மனதில் அந்தக் கதையோ இந்தக் கதையோ என்கிற தத்தளிப்பு; பரபரப்பு.... ஆனால் எவ்வளவு தேடியும் எதுவும் கண்ணில் படவில்லை.
பரபரப்பாக புரட்டியதால் இரண்டு மூன்று பக்கங்களாக புரட்டி விட்டோமோ, அல்லது அவசர புரட்டலில் கண்களிலிருந்து தவறி விட்ட்தோ என்று மறுபடியும் நிதானமாக முதலிருந்து கடைசிவரை இரண்டு தடவைகள் புரட்டிப் பார்த்தேன். ம்ஷூம். எதுவும் அகப்படவில்லை.
கல்கியியில் முதன்முதலாக என்னுடைய சிறுகதை பிரசுரமாகியிருந்தபோதும் (1988 அல்ல்து 1989 என்று ஞாபகம்) இப்படித்தான் நேர்ந்தது. அவர்கள் இதழ் அனுப்பி யிருந்தார்கள். ஆனால் என்படைப்பு எதுவும் காணக்கிடைக்க வில்லை. அப்புறம் இதழை கவனமாக ஆராய்ந்த போது தான் தெரிந்த்து சில பக்கங்கள் விடுபட்டிருந்த விஷயம். அவர்கள் வேண்டுமென்று செய்திருக்க மாட்டார்கள்.
இதழ் கடைகளுக்கு விற்பனைக்கு வருவதற்கு முன்பே எழுதியவனுக்கு தகவல் தந்து விட வேண்டுமென்கிற நல்லெண்ணத்தில் அவசர அவசரமாய் பக்கங்களைப் பின் பண்ணி அனுப்பும் போது அந்த்த் தவறு (பக்கங்கள் விடுபடல்) நேர்ந்திருக்கிறது என்று புரிந்து கொண்டேன். அப்போதெல்லாம் தபால் துறையும் மிகவும் சுறுசுறுப்பாக செயல் பட்டுக் கொண்டிருந்த்து.
சென்னையில் முதல் நாள் தபாலில் சேர்க்கப்படும் கடிதங்கள் சென்னை மற்றும் அதன் புறநகர்களுக்கு பெரும்பாலும் அடுத்த நாளே பட்டுவாடா பண்ணப் பட்டுவிடும். தமிழ்நாட்டுக்குள் எந்த குக்கிராமத்துக்கும் அதிக பட்சம் மூன்று நாட்களில் போய்ச் சேர்ந்து விடும். ஆனால் இப்போது அதுவெல்லாம் ஒரு கனாக்காலம் போலாகி விட்ட்து. சமீபத்தில் இலக்கியபீட்த்தின் சார்பில் சென்னையில் போஸ்ட் பண்ணப் பட்ட இன்லாண்ட் கடிதம் ஒன்று எனக்கு இருபது நாட்களுக்கப்புறம் தான் கிடைத்தது. அப்படியாவது கிடைத்த்தே என்று சந்தோஷப் பட்டுக் கொண்டேன்.
ஏனென்றால் இப்போதெல்லாம் தபாலில் கடிதங்கள் தவறுதல் என்பது மிகவும் சர்வசாதாரணம். ஒவ்வொரு மாதமும் எனக்கு அனுப்ப்ப்படும் பல புத்தகங்களில் - உயிர்மை, காலச்சுவடு, வார்த்தை, உன்னதம், அகநாழிகை, கிழக்கு வாசல் உதயம் போன்றவைகளில் – ஒன்றிரண்டு தவறி விடுகின்றன. அப்புறம் இதழ்களின் அலுவலகங்களுக்குப் போன் பண்ணி, விஷயம் சொல்லி அவர்கள் இன்னொரு இதழை கூரியரில் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
பல நேரங்களில் இதற்காக எனக்கு குற்ற உணர்ச்சி கூட மேலிடுகிறது. இலக்கியப் பத்திரிக்கைகள் நடத்துவதில் அப்படி என்ன பெரிய லாபம் கிடைத்து விடும்? அவர்களே சிரமங்களுக்கிடையில் தான் நட்த்திக் கொண்டிருப்பார்கள்; இதில் அவ்வப்போது நான் வேறு வீண்செலவு வைக்கிறேனே என்று. அதனால் தான் இப்போதெல்லாம் இரயில்வே பிளாட்பார்ம் கடைகளில் சர்வ சாதாரணமாகக் கிடைக்கும் உயிரெழுத்து மாதிரியான இதழ்களுக்கு நான் சந்தா அனுப்புவதில்லை. கடைகளிலிருந்தே வாங்கிப் படித்துக் கொள்கிறேன். சரி சொல்ல வந்ததை விட்டு விட்டு எங்கேயோ போய் விட்டேன். அடுத்த நாள் வரை பொறுமையாய்க் காத்திருந்து கடைகளுக்கு கல்கி இதழ் வந்த போது வாங்கிப் பார்த்த போது அதில் என் கதை பிரசுரமாகி இருந்த்து. அதைப் பார்த்ததும் அப்படியே மிதந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அனுபவங்களை இன்னொரு கட்டுரையில் வேறொரு சந்தர்ப்பத்தில் விரிவாக எழுத உத்தேசித்திருக்கிறேன்.
அதைப் போலவே இந்த முறையும் நேர்ந்திருக்கலாமென்று நட்புச் சிறப்பிதழை முழுமையாக ஆராய்ந்த போது 96 பக்கங்களும் மிகச் சரியாக பின் பண்ணப் பட்டிருந்தன. ஒன்றும் புரியவில்லை. சரி நட்புச் சிறப்பிதழென்பதால் அந்த இதழில் அவ்வப்போது எழுதுகிறவர்களுக்கு (கல்கி சிறுகதைப் போட்டியில் முதல் பரிசெல்லாம் வாங்கி அதன் தீபாவளி மலரிலெல்லாம் கதை எழுதியிருக்கிறனாக்கும்) ஒரு பிரதி அனுப்பியிருப்பார்கள் போலவென்று நினைத்துக் கொண்டு இதழை முதல் பக்கத்திலிருந்து வாசிக்கத் தொடங்கினேன்.
வாசித்துக் கொண்டே வரும்போது இயக்குநர் ஷங்கர் பற்றிய கட்டுரைப் பக்கத்தில் ஒரு துணுக்கு மாதிரி பிரசுரமாயிருந்ததை வாசித்தால் அட.... அது நானெழுதிய ஒரு சிறு கவிதை. நான் பொதுவாய் வெகுஜன இதழ்களுக்கு கவிதைகள் அனுப்புவதில்லை என்பதால் சட்டென்று ஞாபகம் வராமல் போய்விட்ட்து. கவிதையைப் பார்த்தபின்பு தான் கல்கி இதழுக்கு நிறைய குறுங்கவிதைகளும் அனுப்பி வைத்திருந்தது ஞாபகத்திற்கு வந்தது. அந்த மொத்தக் கவிதைகளில் நட்புச் சிறப்பிதழுக்குப் பொருத்தமாய் அந்த சிறுகவிதை மட்டும் இருந்ததால் அதைப் பிரசுரித்திருப்பார்கள் போலிருக்கிறது. அந்தக் கவிதை இதோ:
பெண் தோழிகள் தனக்கு
நிறைய என்று
பெருமையாய்ச் சொல்லிக் கொள்வான்....
மனைவியின் ஒப்புதலோடு
அவ்வப்போது அவர்களை வீட்டிற்கும்
அழைத்து வந்து
அளவளாவி உபசரிப்பதும் உண்டு
ஆனால்-
ஒரே ஒருமுறை
மனைவியின் தோழனென்று ஒருவன்
வீட்டிற்கு வந்தபோது
வெடித்தது பூகம்பம்;
விரிசலாயிற்று தாம்பத்யம்.....!

-- சோ.சுப்புராஜ்

1 comment:

  1. நல்லதொரு கவிதை நண்ப சுப்புராஜ்

    தாம்பத்யம் விரிசலாவதற்கும் பூகம்பம் வெடிப்பதற்கும் அவனுடைய புரிதலுணர்வுக் குறைவே காரணம். என்ன செய்வது - ஆண்கள் பொதுவாக இப்படித்தான் இருக்கிறார்கள்.

    கல்கியில் பிரசுரமானதற்கும் நல்வாழ்த்துகள்

    ReplyDelete