Sunday, December 8, 2013

இராவுத்தர் வாத்தியார் - தினமலர் வாரமலரில் பிரசுரமான சிறுகதை


                        இராவுத்தர் வாத்தியாரின் மரணம் ஊர்க்காரர்கள் எல்லோரையும் ஒட்டு மொத்தமாக உலுக்கி விட்டது. அதை விடக் கொடுமை அவரின் மரணத்தில் யாருமே எதிர்பார்த்திராத பெரும் பிரச்னை ஒன்றும் முளைத்தது. இராவுத்தரை எங்கு அடக்கம் செய்வது?

                        இராவுத்தர் குடும்பத்தினரின் ஏற்பாட்டின்படி அவருக்கான இறுதிச் சடங்குகளை முறைப்படி செய்வதற்காக, ஹஸ்ரத் பட்டம் பெற்ற அவர்களின் குடும்ப நண்பரொருவர் அருப்புக் கோட்டையிலிருந்து வந்திருந்தார். அவர் சொன்ன பின்பு தான், அந்தப் பிரச்னை எல்லோரின் கவனத்திற்கும் வந்து உறுத்தத் தொடங்கியது.

                        கிராமத்தில் சாதிக்கொரு சுடுகாடும் இடுகாடும் இருந்தது. அந்த ஊரில் இராவுத்தர் வாத்தியாரின் வரவுக்கு முன்புவரை முஸ்லீம்களோ கிறிஸ்துவர்களோ யாரும் இல்லை. ஆதலால், முஸ்லீமான இராவுத்தர் வாத்தியாரை எங்கு அடக்கம் செய்வது என்ற பிரச்னை விஸ்பரூபமெடுத்து நின்றது. மசூதிக்குள் அதுவும் பாங்கு ஒலித்த பின்பு தான் முஸ்லீம்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட வேண்டுமென்பது சம்பிரதாயமென்றார் ராவுத்தரின் குடும்ப நண்பர். அதனால் இராவுத்தரின் உடலை அருப்புக் கோட்டைக்குக் கொண்டு போய்விடலாம் என்றும் அவர் அபிப்ராயம் சொன்னார்.

                        ஊர்க்காரர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ’இராவுத்தர் எங்களின் கிராமத்தில் வாழ்ந்தவர்; அவர் இந்த கிராமத்தின் சொத்து! அதனால் அவரின் ஆன்மா இங்குதான் அமைதி கொள்ள வேண்டும். எங்கோ கண்காணாத இடத்திற்கு அவரைக் கொண்டு போவதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்’ என்றார்கள் பிடிவாதமாக. ஆனால் அவரை எங்கே அடக்கம் செய்வது என்கிற கேள்விக்கான பதில் தான் யாருக்கும் தெரிந்திருக்க வில்லை.

                        பத்து நாட்களுக்கு முன்பு தான், சண்முகமும் அவனுடைய கிராமத்தின் முக்கியஸ்தர்கள் சிலரும் சேர்ந்து இராவுத்தர் வாத்தியாரை சென்னை விமான நிலையத்திற்குப் போய் ஹஜ் புனிதப் பயணத்திற்காக, சவூதி அரேபியாவிற்கு விமானம் ஏற்றி அனுப்பி விட்டு வந்திருந்தார்கள். சவூதி அரேபியாவின் மெக்கா நகரில் ஹஜ் பயணிகள் தங்கியிருந்த குடிசைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் நிறையப் பேர் இறந்து போனார்கள்; அவர்களில் இராவுத்தரும் ஒருவர். எல்லோரும் சேர்ந்து ஆசையாய் அனுப்பி வைத்த பயணம் கடைசியில் அவரையே விழுங்கி விட்டதே!  இந்தத் திட்டத்தை முன் மொழிந்தவன் என்ற முறையில் சண்முகத்துக்குள் குற்ற உணர்ச்சி குமைந்து வாட்டியது.

                        தொலைக்காட்சியில் செய்தியைக் கேட்டதும், அலுவலகத்திற்கு போன் பண்ணி மூன்று நாட்கள் விடுப்புச் சொல்லிவிட்டு, அவசரமாக தன்னுடைய கிராமத்திற்கு கிளம்பிப் போனான் சண்முகம்.  பஸ்ஸில் பயணிக்கும் போது அவன் மனம் அமைதியின்றி தவித்தபடி இருந்தது. முட்டிக் கொண்டு அழுகை பீறிட்டது.

                        எத்தனை மகத்தான மனிதர் அவர்! மொஹிதீன் முகமது என்பது தான் அவருடைய பெயர். அந்தப்பெயர் பள்ளிக்கூட பேரேடுகளில், அவர் கையெழுத்துப் போட்டு சம்பளம் வாங்குவதற்கு மட்டும் தான்! ஊரில் இராவுத்தர் வாத்தியார் என்று தான் அவர் பிரபலம். வேறு எந்தப் பணியும் கிடைக்காததால் சிலர் ஆசிரியப் பணியை ஏற்றுக் கொள்கிறார்கள்; மிகச் சிலரே ஆசிரியப் பணிக்கென்றே பிறந்து, அதற்காகவே தங்களை அர்ப்பணித்துக் கொள்கிறார்கள். இதில் இராவுத்தர் வாத்தியார் இரண்டாவது ரகம்.

                        வாத்தியார் என்றாலே அது எம்.ஜி.ஆரையே குறிக்கும் சொல்லாக இருந்த காலகட்டத்திலும், சண்முகத்தின் கிராமத்தில் மட்டும் அது இராவுத்தரைக் குறிக்கும் சொல்லாக புழக்கத்திலிருந்தது. ஒவ்வொருவரும் எங்கள் வாத்தியார் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்வார்கள். ஆசிரியப் பணி நிமித்தமாக தன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் ஊருக்குள் வந்து குடியேறியவர், வெகு சீக்கிரமே கிராமத்தில் ஒருவராய் கலந்து போய் விட்டார்.

                        இராவுத்தர் வாத்தியாரின் பூர்வீகம் மேற்கு வங்காளத்தில் கல்கத்தாவிற்கு அருகில் ஏதோ ஒரு கிராமம்! இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் போது நடந்த கலவரத்தைத் தொடர்ந்து உயிர் பிழைத்தால் போதுமென்று அவரின் சொந்தங்கள் யாவரும் பாகிஸ்தானுக்குக் குடி போய் விட்டார்கள்.           இராவுத்தரின் அப்பாவுக்கு அங்கு போவதில் விருப்பமில்லை! கல்கத்தாவிலும் தொடர்ந்து வசிக்க முடியாத கலவர சூழல். அவரின் ஆத்மார்த்தமான நண்பரொருவர் தான், தமிழ்நாட்டில்  அருப்புக்கோட்டையில் வசிக்கும் தன் உறவினர்களின் முகவரி கொடுத்து அனுப்பி வைத்திருக்கிறார். அங்கு போனவர்கள் அந்த ஊரில் கொஞ்ச நாள் தங்கி இருந்து வசிக்கத் தொடங்கி யிருக்கிறார்கள்! அப்புறம் அந்த ஊரிலேயே நிலை கொண்டு விட்டார்கள்

                        இராவுத்தரைப் பார்த்தாலே  வணங்கச் சொல்கிற மரியாதையான தோற்றம். எப்போதும் தும்பைப் பூ போல வெளுத்த வேட்டியும் சட்டையும் தான் அணிந்திருப்பார். கிராமத்துக்காரர்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும்; நம்ம ஊர்க் கண்மாய்த் தண்ணியில் கூட இராவுத்தர் அம்மா எப்படி இத்தனை வெண்மையாக துவைத்துக் கொடுக்கிறார்கள் என்று. அடர்த்தியான தலைமுடியை மிகவும் வித்தியாசமாக இரண்டு காதோரங்களிலும் வகிடெடுத்து ஏற்றிச் சீவி இருப்பார். அது மிகவும் வசீகரமாக இருக்கும்; சண்முகத்திற்கும் அவரைப் போலவே சீவிக் கொள்ளப் பிடிக்கும்.

                        ஆனால் அவன் எவ்வளவோ முயன்றும் அவரைப் போலவே சீவிக் கொள்வது எந்த வயதிலும் அவனுக்குச் சாத்தியப் படவேயில்லை. வாத்தியார் நெடுநெடுவென்று உயரம்; வறுமை பிடுங்கித் தின்றதால் உயரத்திற்குத் தகுந்த சதைப் பிடிப்பில்லாமல் கொஞ்சம் நோஞ்சானாகத் தெரிவார். ஆனாலும் முகத்தில் சுடர்விடும் களைக்கும் நடையில் தெரியும் கம்பீரத்திற்கும் என்றுமே குறைவிருக்காது.

                        அம்மைத் தடுப்பூசி போடுகிறவனுக்கு அப்புறம் ஊர்க்காரர்கள் அதிகம் பயந்தது இராவுத்தர் வாத்தியாருக்குத் தான். எப்போது யாரைப் பார்த்தாலும் ஒன்று பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பச் சொல்லி வற்புறுத்துவார்; அல்லது குடும்பக் கட்டுப்பாடு பண்ணிக்கச் சொல்லிக் கெஞ்சுவார்.

                        ஒவ்வொரு வாத்தியாரும் வருஷத்திற்கு குறைந்த பட்சம் சிலரையாவது குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்வதற்கு பிடித்துக் கொடுக்க வேண்டுமென்ற கட்டாயம் அமுலில் இருந்த கால கட்டம் அது. அதனால் இராவுத்தரைத் தூரத்தில் பார்த்தாலே கிராமத்துக் காரர்கள் ஓடி ஒளிந்து கொள்வார்கள்.

                        இராவுத்தர் வாத்தியாரிடம் பாடம் கேட்க நேர்ந்தவர்கள் நிஜமாகவே பாக்கியவான்கள்; மூன்றாம் வகுப்பு ஆங்கிலப் பாடத்திலிருந்து பள்ளிப் பிள்ளைகள் இராவுத்தரின் வளைய வரம்புக்குள் வரத் தொடங்குவார்கள். ஒரு பூவை மலர்விப்பது போல், அம்மா சங்கில் பால் புகட்டுவது போல் மெதுமெதுவாய் பாடங்களைப் பையன்களின் மூளைக்குள் ஏற்றுவார். அதுவும் ஆங்கிலமும் கணிதமும் இராவுத்தரிடம் வாசிக்க நேர்ந்தவர்களுக்கு ஆயுளுக்கும் மறக்காது.

                        இராவுத்தர் பாடம் நடத்தும் போது தன்னை மிகக் கடுமையானவராகக் காண்பித்துக் கொள்வாரே தவிர, மனதளவில் பனிக்கட்டி மாதிரி மிகவும் இலகுவானவர்; உடனே உருகி விடும் தன்மையானவர். கோபத்தில் நறுக்கென்று தலையில் கொட்டி விட்டு அப்புறம் அருகில் அழைத்து வலிக்குதாடா என்று வாஞ்சையாய்த் தலையைத் தடவிக் கொடுக்காத மாணவர்களே இருக்க முடியாது.

                        சண்முகத்தின் ஊரில் ஜாதிப் பிரிவுகள் தான் உண்டு. மதம் பற்றி அவர்கள் அதிகம் அறிந்திருக்க வில்லை. அந்த ஊருக்கு வந்த முதல் முஸ்லீம் குடும்பம் இராவுத்தருடையது தான். முஸ்லீம் என்பதையும் அவனின் ஊர்க்காரர்கள் இன்னொரு ஜாதியாகத் தான் புரிந்து கொண்டார்கள்.  தேவரே, நாயக்கரே என்பது போல் அவரையும் இராவுத்தரே என்று உரிமையோடும் உள்ளன்போடும் அழைத்து மகிழ்ந்தார்கள்.

                        இராவுத்தரும் மதம் பற்றியெல்லாம் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை; பள்ளியில் அவரின் தலைமையில் தான் சரஸ்வதி பூஜையும் விநாய சதூர்த்தியும் அமர்க்களமாகக் கொண்டாடப்படும். சுயமாய் அவர் புனைந்த பக்திப் பாடல்களைத் தான் அந்த பூஜைகளில் மாணவர்கள் பாடுவார்கள். அம்மன் மேல் அவர் இயற்றிய எத்தணையோ கும்மிப் பாடல்கள் ஊர்த் திருவிழாவில் இப்போதும் பாடப்படுவதுண்டு.

                        மழைக்கஞ்சி ஊற்றும் கொண்டாட்டத்தில் கூட அவரின் குடும்பமே கலந்து கொண்டு குதூகலப்படும். யாராவது அவரிடம், “நீங்க ஏன் இராவுத்தரே இங்கெயெல்லாம் வந்து சிரமப் படுறீங்க…” என்றால்  “ஏன், மழை எங்களுக்கும் தான வேணும் ……” என்று விகல்ப மில்லாமல் சிரிப்பார்.

                         இராவுத்தருக்கு அவரின் அல்லாவின் மீதும் அதீத பிரியமும் பக்தியுமிருந்தது. அவர் குடியிருந்த ஊரிலும்,  அக்கம் பக்கத்திலும் எங்குமே மசூதி என்று எதுவுமில்லை. அதனால் வகுப்பறையிலேயே ஒரு ஓரத்தில் பிரார்த்தணைக் கென்றே பிரத்யேகமான வேலைப்பாடுகளுடன் தயாராக வைத்திருக்கும் ஒரு துண்டை விரித்து, தலையில் ஒரு வெள்ளைக் கைக்குட்டையைப் போட்டுக் கொண்டு, முழந்தாளிட்டு கைகளைத் தூக்கி பிரார்த்தணை செய்வதை பள்ளிப் பிள்ளைகள் பலரும் பயமும் பக்தியுமாய்  பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

                        விஷேச நாட்களில் ஆடு வெட்டி இறைச்சி விற்கும் முனியாண்டி மாமா கூட இராவுத்தர் கறி வேண்டுமென்று கேட்டிருந்தால், அவர் வந்து முணுமுணு வென்று ஏதோ ஓதி, ஆட்டுத் தலையில் இலேசாய்க் கீறித் தந்த பின்பு தான், ஆட்டை அறுத்து முதலில் இராவுத்தருக்குத் தந்து விட்டுக் கூறு போட்டு மற்றவர்களுக்குத் தருவார்.

                        இராவுத்தரிடம் சண்முகம் ஒருமுறை இது ஏனென்று துடுக்குத் தனமாக கேட்டபோது, சின்னப்பையன் தானே, இவனுக்கென்ன சொல்வது என்று உதாசீனப் படுத்தாமல், எந்த உயிரும் துடிதுடித்துச் சாகக் கூடாது என்பதற்காக குரானிலிருந்து சில வசனங்களை ஓதி, அந்த உயிர் அமைதியாக அல்லாவிடம் போய்ச் சேர்வதற்காகத்தான், வேதம் ஓதப்படுகிறது என்றும் அப்படி வெட்டப்படும் இறைச்சி ஹலால் உணவாகும் என்றும் சிரத்தையாக விளக்கம் சொன்னார்.                             இராவுத்தருக்குப் பாடம் சொல்லித் தருவதை விடவும் மிகவும் பிடித்தமான விஷயம் விவசாயம்! விவசாயம் சம்பந்தமான பல்வேறு அறிவுரைகளை அவர் குடியானவர்களுக்கு வாரி வாரி வழங்கிக் கொண்டே இருப்பார். அதுமட்டுமில்லாமல் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பிள்ளைகளை கண்மாய்க் கரைக்கு அழைத்துக் கொண்டு போய் மரக்கன்றுகளை நடச் செய்து கொண்டிருப்பார்; அல்லது பள்ளிக்குச் சொந்தமான தோட்டத்தில் காய்கறிகளையும் பழமரங்களையும் நட்டு அதைப் பராமரித்துக் கொண்டிருப்பார்.

                        அப்போது அமலில் இருந்த மதிய உணவுத் திட்டத்தில் மற்ற பள்ளிகளில் எல்லாம் வெறும் கோதுமை உப்புமாவும் நெல்லுக் கஞ்சியும் அதற்குத் தொட்டுக் கொள்ள கடலை மாவைக் கரைத்து செய்த கொடூரமான ஒரு குழம்புமே பரிமாறப்பட, இவர்களின் பள்ளியில் மட்டும் பள்ளித் தோட்டத்தில் விளைந்த கீரைக் குழம்பும், கத்தரிக்காய், வெண்டைக்காய் என்று விதவிதமான காய்கறிகளும் பரிமாறப்பட்டு, பிள்ளைகளை ஆசை ஆசையாய் பள்ளிக்கு வரவழைத்தன. 

                        அப்படி ருசியான மத்தியானச் சாப்பாட்டிற்காகவும் இராவுத்தரின் நச்சரிப்பிற்காகவும் பள்ளிக்கு அனுப்பப் பட்டவர்களில் சண்முகமும் ஒருவன். ஆனால் படிப்பில் அவனுக்கிருந்த ஆர்வத்தையும் சூட்டிகையையும் மிகச் சரியாய் அடையாளங் கண்டு  கொண்டு அவனை உற்சாகப் படுத்தி படிக்க வைத்தவர் இராவுத்தர் தான். எட்டாம் வகுப்பிற்கப்புறம் அவனின் படிப்பை நிறுத்தி, அவனை காட்டு வேலைகளுக்கு அனுப்ப  அவனுடைய அய்யா முற்பட்ட போது, இராவுத்தர் தான் அவனின் அய்யாவிடம் பக்குவமாய் எடுத்துச் சொல்லி, அவரின் மனதை மாற்றி அவன் பக்கத்து ஊரில் போய் மேற்கொண்டு படிக்க ஏற்பாடு செய்தார்.

                        ’ஒண்ணுக்குத் தண்ணிக்கு…’ என்று கிராமப் பள்ளிகளில் வழக்கத்திலிருக்கும் 15 நிமிஷ இடைவேளையில் வாத்திமார்களுக்கு டீ வாங்கி வந்து தருகிற வேலை பெரும்பாலும் சண்முகத்திற்குத் தான். இராவுத்தரின் டீயில் இனிப்புத் தூக்கலாக இருக்க வேண்டும்; இரத்தினசாமிக்கு இனிப்பே கூடாது; பெருமாள்சாமிக்கு ஸ்ட்ராங் டீ; கந்தசாமி வாத்தியாருக்குக் காஃபி என்பதெல்லாம் அவனுக்குத் தான் அத்துபடி. ஆசிரியர்கள் அவரவர் வகுப்பில் காத்திருக்க இவன் ஒவ்வொரு வகுப்பிற்கும் போய் அவர்களுக்கான சரியான டீக் கோப்பையை எடுத்துக் கொடுப்பான்.

                        இராவுத்தர் டீக்குடிக்கிற அழகு தான் மிகவும் வேடிக்கையாகவும் வேதணையாகவும் இருக்கும். கிளாஸை வாங்கியதும் ஒரு வெறியுடனும் ஆர்வத்துடனும் கிளாஸில் டீ குறைவதை ஒவ்வொரு மடக்கிற்கும் பரிதாபமாகப் பார்த்தபடி மூன்று அல்லது நான்கு மிடறு தான் விழுங்குவார். அப்புறம் வகுப்பிற்கு வந்து ஏற்கெனவே காத்திருக்கும் அவரின் பிள்ளைகளிடம் டீக்கிளாஸ் பயணிக்கும்.

                        அவர்களும் ஆளுக்கு இரண்டு அல்லது மூன்று மடக்கு; மீண்டும் ராவுத்தரிடம் டீக்கிளாஸ் திரும்பி வரும் போது தேயிலைக் கசடுகளுடன் கொஞ்சூண்டு தான் மிச்சமிருக்கும். அதையும் ஒட்ட உறிஞ்சிக் குடித்து விட்டுத் தான் கிளாஸைக் கொடுப்பார்.

                        ஆளுக்கொரு டீ வாங்கிக் குடிக்க இராவுத்தருக்கு வசதி இருந்ததில்லை. அவரின் வீட்டில் அள்ள அள்ளக் குறையாமல் வறுமையும் இரண்டு அல்லது மூன்று வருஷத்திற்கொரு குழந்தையும் தான் பெருகிக் கொண்டிருந்தன. அரிசிச் சோறெல்லாம் அவரின் வீட்டிலும் அபூர்வந்தான். கம்மஞ்சோற்றைக் கரைத்துக் குடித்து விட்டு அவர் பாடம் நடத்தும் போது காதடைத்த நாட்கள் தான் அநேகம். ஆனாலும் இராவுத்தருக்குள் இருந்த இளகிய மனத்தை ஒருமுறை தரிசிக்க நேர்ந்த சண்முகம் கதறி அழுது விட்டான்.

                        சண்முகத்தின் குடும்பமும் அன்றாடங்காய்ச்சி வகையினது தான். அவனுக்கும் பால் கலந்த டீ என்பதெல்லாம் கனவில் மட்டும் காணக் கிடைக்கும் தேவபானம் தான். ஒருமுறை வாத்தியார்கள் டீக் குடித்த பின்பு, ஒவ்வொரு கிளாஸிலும் தூரில் மிச்சமிருக்கும் டீத்துளிகளை இராவுத்தரின் கிளாஸில் சேகரித்து ஆசையுடன் குடிக்கப் போக, இராவுத்தர் அதைப் பார்த்து விட்டார்.

                        கோபமாய் சத்தம் போட்டு அழைத்தார். இவன் நடுங்கியபடி அருகில் போகவும் வாஞ்சையாய்த் தலையைத் தடவி “அப்படியெல்லாம் பண்ணக் கூடாது…” என்று அனுப்பி வைத்தார். அடுத்த நாள் அவனிடம் அதிகப்படியாய் ஒரு டீயும் வடையும் வாங்கி வரச் சொன்னார். இவன் அவரின் பிள்ளைகளுக்கென்று நினைத்துக் கொண்டிருக்க,  அவனுக்கே கொடுத்து குடிக்கச் சொன்னார். சண்முகம் சங்கோஷப்பட்டு மறுத்தான்.

                         “வெட்கப் படாம குடி; ஆனா எச்சில் மட்டும் என்னைக்குமே உனக்கு வேண்டாம்….” என்றார். அன்றைக்கு அவன் குடித்த டீயின் ருசியை அவனுக்கு வசதி வந்து பெரிய பெரிய நட்சத்திர ஓட்டல்களில் குடிக்க  நேர்ந்த போது கூட அவன் அனுபவித்ததில்லை; டீயின் ருசி என்பது டீயில் மட்டுமா இருக்கிறது?  

                        முறைசாராக் கல்வி என்ற பெயரில், படிப்பைத் தொடர முடியாமல் பாதியில் நிறுத்தியவர்களுக்காகவும், படிக்கவே சாத்தியமில்லாத முதியவர்களுக்காகவும் இரவுப் பள்ளிகள் தொடங்கப் பட்ட போது, “இதென்ன, இராத்திரி பகல் எந்நேரமும் சொல்லிக் குடுத்துக்கிட்டே இருக்குற சள்ளையான வேலை….” என்று சக ஆசிரியர்கள் சலித்துக் கொண்ட போதும் இராவுத்தர் அதையும் மிகவும் உற்சாகமாகவே ஏற்றுக் கொண்டார்;  ஒருநாளும் அலுத்துக் கொண்டதே இல்லை.

                        இரவுப் பள்ளியின் பாட வேளைகளில் விதவிதமாய்க் கதைகள் சொல்லியும், சுவாரஸ்யமாகப் பாடம் நடத்தியும் தனித் தனியாய் ஒவ்வொருவரின் மீதும் விஷேச கவனம் செலுத்தியும் அவர்களை ஆர்வமாய்ப் பள்ளிக்கு வரவழைத்தார். ஒரு கால கட்டத்தில் அந்த கிராமத்தில் கையெழுத்துப் போடத் தெரியாத முதியவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்கியதில் இராவுத்தருக்குப் பெரும் பங்கு இருந்தது.

                        சண்முகத்திற்கு என்ஜினியரிங் கல்லூரியில் இடம் கிடைத்து, அவனைக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டிய நேரத்தில் அவனின் அப்பாவால் பணம் புரட்ட முடியவில்லை. பருத்தி ஏவாரியிடம் அவர்களின் பணமிருந்தது. அவரோ உரிய நேரத்திற்குத் தராமல் இழுத்தடித்துக் கொண்டிருந்தார். எத்தனையோ பேரிடம் கேட்டும் யாரும் அவசரத்திற்கு உதவ முன் வரவில்லை. இதை எப்படியோ அறிந்து கொண்ட இராவுத்தர் அப்பாவை அழைத்து, அந்த மாதம் வாங்கியிருந்த அவரின் மொத்தச் சம்பளத்தையும் கவரோடு கொடுத்தார்.

                        ”அய்யோ வேண்டாம் சார்….. நீங்களே புள்ள குட்டிகள வச்சுக்கிட்டு கஷ்டப் படுறீங்க; எல்லாத்தையும் குடுத்துட்டா எதைவச்சு சாப்புடுவீங்க!” என்று தயங்கி அய்யா மறுத்த போது, “அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்; நம்ம ஊர்லயே முதல் தடவையா ஒருத்தனுக்கு இன்ஜினியரிங் படிக்க இடம் கிடைச்சுருக்கு….! முதல்ல பையனக் காலேசில போய் சேர்த்துட்டு வாங்க….” என்று வற்புறுத்தி பணத்தைக் குடுத்து அனுப்பி வைத்தார்.

                        சண்முகம் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது, ஒரு கார்த்திகை திருநாளுக்கு ஊருக்கு வந்திருந்தான். மாம்பிலி சுற்றுதலும், கபடி விளையாட்டுக்களும் முடிந்து, பெண்கள் அகல் விளக்குகளை நீரில் விட்டுக் கொண்டிருப்பதை கண்மாய்க் கரையில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது, கார்த்திகை தீபத்தை விடவும் பிரகாசமான அழகுடன் இராவுத்தரின் மூன்றாவது பெண் அம்ருதாபேகம் தனிமையில் போய்க் கொண்டிருப்பதைக் கவனித்தான். எட்டாம் வகுப்பு வரை அவனுடன் சேர்ந்து படித்தவள் தான் அம்ருதா. அப்போதெல்லாம் அவள் அவனுக்குள் எந்த விதமான சலனங்களையும் ஏற்படுத்தியதே இல்லை. ஆனால் அன்றைக்கு அவளின் அழகு அவனை என்னவோ செய்தது. ஒருநிமிஷம் நிதானம் தவறி, தன் கையிலிருந்த ஒட்டுப்புல்லை அவளின் தலையில் தேய்த்து விட்டு ஓடிப் போனான்.

                        அம்ருதாவும் சிரித்துக் கொண்டே ஒட்டுப்புல்லைத் தன் தலையிலிருந்து எடுத்துக் கொண்டிருப்பதை அவளுடைய மூத்த அண்ணன் அப்துல் பார்த்து, யார் அவளின் தலையில் ஒட்டுப்புல் தேய்த்தது என்று கேட்கவும் அவளும் எதார்த்தமாய் சண்முகத்தின் பெயரைச் சொல்லி விட்டாள். பொதுவாய் ஊரில் முறைப் பையனும் பெண்ணும் தான் ஒருவருக்கொருவர் ஒட்டுப்புல் தேய்த்து விளையாடுவது வழக்கம்; இவன் எதற்கு தன் தங்கையின் தலையில் ஒட்டுப்புல் தேய்க்க வேண்டும் என்று மிகவும் கோபமாகி, சண்முகத்தை அடிக்கப் போய்விட்டான். இதைக் கவனித்து விட்ட இராவுத்தர் அப்துலை அழைத்து சத்தம் போட்டு, விஷயத்தை இத்தோடு விட்டு விடும்படி  கண்டிப்பாகச் சொல்லி விட்டார்.

                        அப்புறம் சண்முகத்தை அழைத்து, “இந்த வயசுல படிக்கிற வேலைய மட்டும் பாரு; மனச அலை பாய விடாத…. கல்யாண வயசு வந்ததும் அப்பவும் உனக்கு அம்ருதா மேல ஆசை இருந்தா, இந்த சமூகத்த எதுத்து நிக்கற தைரியம் இருந்தா என்கிட்ட வந்து சொல்லு; சந்தோஷமா உனக்கு அம்ருதாவ நிக்காஹ் பண்ணி வைக்கிறேன்….” என்றார். அப்படியெதுவும் நடக்கவில்லை. அந்த வயதில் பெண்கள் மேல் வரும் ஈர்ப்பிற்குப் பெயர் காதல் இல்லை என்பதை அதட்டலோ அலட்டலோ இல்லாமல் புரிய வைத்தவர் இராவுத்தர் தான்.

                        இராவுத்தர் சொல்வதை ஊர்க்காரர்கள் பெரும்பாலும் தட்டாமல் கேட்டுக் கொள்வார்கள். ஒரே ஒருமுறை அவர் சொல்வதை அவர்கள் கேட்காமல் போய் அதனால் ஊருக்கு பெரும் அழிவும் நேர்ந்தது. கண்மாய்க் கரையின் கீழே தான் கிராமத்திற்கே பொதுவான பெரிய குடிதண்ணீர்க் கிணறு இருந்தது. கடுங்கோடையிலும் வற்றாமல் இளநீர் மாதிரி சுவையான தண்ணீரை வழங்கிக் கொண்டிருந்தது அது. இராவுத்தர் கண்மாய்க் கரையில் வைத்த மரங்கள் வளர்ந்து, பெரிதாகி அதில் பறவைகள் குடியேறத் தொடங்கவும், பறவைகளின் எச்சத்தால் குடிதண்ணீர்க் கிணறு பாழ்படத் தொடங்கியது.

                        சுவையான குடிதண்ணீர்க் கிணற்றை இழக்க மனமில்லாமல் ஊர்க்காரர்கள் கிணற்றைச் சுற்றியிருந்த கண்மாய்க் கரை மரங்கள் சிலவற்றை வெட்டி விடுவதென்று தீர்மானித்தார்கள். இதைக் கேள்விப்பட்டதும் இராவுத்தர் வாத்தியார் பதறிப் போனார். அவர் மரங்களைத் தன் பிள்ளைகளை விடவும் பெரிதாய் நேசித்து பிரியமாய் வளர்த்திருந்தார். அவரால் மரங்கள் வெட்டுப் படப் போவதைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. எல்லோரிடமும் மரங்களை வெட்ட வேண்டா மென்றும் வேறு ஏதாவது நீரோட்டம் மிகுந்த இடத்தில் குடி தண்ணீருக்குக் கிணறு தோண்டிக் கொள்ளும் படியும் அழுது கெஞ்சி அலுத்துப் போனார். ஆனால் யாருமே அவரின் ஆலோசணையை செவி மடுக்க வில்லை.

                        மரங்கள் வேரோடு வீழ்த்தப்பட்ட அன்று கூடுகளை இழந்த பறவைகளின் கூக்குரலில் கிராமமே  நடுங்கியது. அந்த வருஷம் பெருமழை பெய்து, கண்மாய் நிறைந்து, மரங்கள் வேரோடு வெட்டப் பட்டிருந் ததாலும், கரை மண் நெகிழ்ந்து கிடந்ததாலும், கண்மாய்க்கரை உடைப்பெடுத்து, ஊருக்குள் வெள்ளம் புகுந்தது.

                        ஆடு, மாடு, கோழிகள் அனேகமும் மிகச்சில மனிதர்களும் இறந்தார்கள். சில குடிசை வீடுகளும் நீரில் மூழ்கி அழிந்தன. அன்றைக்கே ஊர்க்காரர்கள் அவசர அவசரமாய்க் கரையைச் செப்பனிட்டு புதிய மரங்களை நட்டு வளர்க்கத் தொடங்கினார்கள். வேறொரு இடத்தில் புதிதாய்க் கிணற்றையும் வெட்டிக் கொண்டார்கள்.

                        இராவுத்தரைப் பற்றி எப்போது நினைத்தாலும், அவர் பலராமு நாயக்கரிடம் அடி வாங்கிய ஒரு சம்பவமும் கசப்புகளுடன் வந்து தொண்டையை அடைத்து விடும் சண்முகத்திற்கு. அப்போது சண்முகம் ஏழாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான். அந்த வருஷம் பள்ளி தொடங்கி 25 வருஷம் நிறைவானதை ஒட்டி பள்ளி புதுப் பொலிவுடன் புதுப்பிக்கப்பட்டிருந்தது. ஆண்டுவிழாவும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப் பட்டது.

                        அந்த விழாவில் இராவுத்தர் வாத்தியார் எழுதி, மாணவர்களை நடிக்க வைத்து இயக்கிய ஒரு நகைச்சுவை நாடகமும் அரங்கேறியது. அந்த நாடகத்தில் சண்முகமும் ஒரு கத்துக் குட்டி வக்கீலாக நடித்திருந்தான். நாடகத்தின் கதை அத்தனை துல்லியமாய் ஞாபகமில்லை அவனுக்கு. ஒரு செட்டியாருக்கும் பகடைக்கும் ஏதோ ஒரு வழக்கு; அவர்கள் நீதிமன்றத்திற்கு வந்து தங்கள் வழக்கைச் சொல்லி அது பைசல் பண்ணப் படுவதுதான் கதை  என்று ஞாபகம்!

                        காட்சிக்குக் காட்சி சிரித்துச் சிரித்து, அரங்கம் குலுங்கி, கிராமத்திற்கே வயிற்று வலி வந்து விட்டது. பலராமு நாயக்கரின் மகன் ரெங்கையா தான் கதாநாயகன்; பகடையாக வேஷங்கட்டி, இடுப்பில் நாலுமுழ வேட்டியும், கட்கத்தில் இடுக்கிய துண்டுமாய், அதீத உடல் மொழியால் அமர்க்களப் படுத்தி விட்டான். அவன் மேடைக்கு வந்து நின்றாலே கூட்டம் விழுந்து புரண்டு சிரித்தது. நாடகம் முடிந்த பின்பு எல்லாத் திசைகளிலிருந்தும் அவன் மீது பொழிந்த பாராட்டு மழையில் நனைந்து மகிழ்ந்து கொண்டிருந்தான்.

                        நாடகம் முடிந்து நான்கைந்து நாட்கள் கடந்திருந்த நிலையில், இராவுத்தர் வாத்தியாரை வழி மறித்த பலராமு நாயக்கர் காரணம் இன்னதென்று சொல்லாமலே அவரை அடிக்கத் தொடங்கி விட்டார். சாவடியிலிருந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஊர்க்காரர்கள் ஓடிப் போய் பலராமு நாயக்கரைப் பிடித்து இழுத்துக் கொண்டார்கள். “இந்தத் துலுக்கன் எங்க பரம்பரைக்கே பெரிய அவமானத்த தேடிக் குடுத்துட்டான்; இவனக் கொல்லாம விட மாட்டேன்…” என்றபடி அவர்களின் பிடியில் நிற்காமல் திமிறிக் கொண்டிருந்தார்.

                        பலராமு நாயக்கரைப் பிடித்திருந்தவர்கள், அவரை நாலு சாத்து சாத்தவும், “கம்பளத்து நாயக்கன் குலத்துல பொறந்த என் மகன இவன் சக்கிலியனாக்கிட்டானே!” என்றார். தொடர்ந்து ”பையன் அசல் பகடையாட்டமே இருக்கானே! உனக்குத் தான் பொறந்தானா, இல்ல….ன்னு சம்பந்தி காரப் பயலுகள் எல்லாம் எகத்தாளமும் ஏகடியமும் பண்றான்களே! ” என்றபடி வெடித்து அழத் தொடங்கி விட்டார்.

                        அன்றைக்கு இராவுத்தர் வாத்தியார் பள்ளிக்கு வரவில்லை. இராவுத்தர் மாதிரியான தேவ தூதரை ஒரு சாமானியன் எப்படி அடிக்க முடியும் என்பதைப் பள்ளிப் பிள்ளைகளால் நம்பவே முடியவில்லை. எல்லோரும் விசனப்பட்டுக் கொண்டும் பலராமு நாயக்கரை ஏதாவது செய்ய வேண்டுமென்றும் சதி ஆலோசணைகள் தீட்டிக் கொண்டு மிருந்தார்கள். பலராமு நாயக்கர் தூங்கும் போது அவர் மூக்கில் தலையணையை அமுக்கி, மூச்சை நிறுத்தி அவரைக் கொன்று விடுவதற்கான திட்டத்தைச் சொன்னவன்  அவரின் பையன் ரெங்கையா தான்!

                        இந்த விஷயம் ஊர்ப் பஞ்சாயத்துக்கு வந்தது. பலராமு நாயக்கர் இராவுத்தர் வாத்தியாரின் காலில் விழுந்து  மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று தீர்ப்புச் சொல்லப்பட்டது. இராவுத்தர் வாத்தியார் பதறிப்போய், “அய்யோ அதெல்லாம் வேண்டாம்…. அவர் மேல எனக்கு எந்தக் கோபமும் இல்ல; ஏற்கெனவே அவர் மனசு ஒடஞ்சு கெடக்குறார்; இதுக்கு மேலயும் அவரக் கஷ்டப் படுத்தாதீங்க….” என்று சொல்லி பஞ்சாயத்திலிருந்து எழுந்து போய் விட்டார்.

                        இராவுத்தர் வாத்தியார் பணியிலிருந்து ஓய்வு பெறப் போகிறார் என்ற செய்தி கிடைத்ததும் ஊர்க்காரர்கள் அவருக்குப் பெரிதாய் ஏதாவது செய்ய வேண்டுமென்று ஆசைப் பட்டார்கள். என்ன செய்யலாம் என்று பல சாத்தியங்களையும் அலசி ஆராய்ந்து, சண்முகம் தான் அவரை ஹஜ் பயணத்திற்கு அனுப்பி வைக்கலாம் என்று அபிப்ராயம் சொன்னான். மார்க்கக் கடமைகளில் ஒன்றான ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள வேண்டு மென்பது அவரின் ஆன்மீக இலட்சியம் என்பதையும், அவரின் வறுமையான வாழ்க்கைச் சூழலில் அது அவருக்கு என்றுமே சாத்தியப்படாது என்பதையும் அவன் அறிந்திருந்தான்.

                        ஊர்க்காரர்கள் சண்முகத்திடமே அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார்கள். பள்ளியின் பழைய மாணவர்களுக்கு விபரம் சொல்லி எழுதவும் பணம் வந்து குவிந்தது. ஊர்ப் பொதுவிலிருந்தும் பெருந் தொகையைக் கொடுத்தார்கள். இராவுத்தரைச் சம்மதிக்க வைப்பதற்குத் தான் பெரும்பாடு பட வேண்டி யிருந்தது. ஹஜ் பயணத்தை சொந்தப் பணத்திலிருந்து தான் மேற்கொள்ள வேண்டுமென்றும் இரவல் பணத்தில் கூடாது என்றும் சொல்லி பிடிவாதமாய் ஏற்றுக் கொள்ள மறுத்தார். இதுவும் உங்களின் பணம் தான் என்றும், அரசாங்கம் ஏழை முஸ்லீம்கள் புனிதப் பயணம் செல்வதற்கு பண உதவி செய்வதைப் போல் இதையும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும் எல்லோரும் வற்புறுத்தவே, அவர்களின் மனம் வருந்தக் கூடாது என்பதற்காக அரை மனதுடன்  ஏற்றுக் கொண்டார்.

                        சண்முகம் கிராமத்திற்குப் போய்ச் சேர்ந்த அடுத்தநாள் தான் இராவுத்தரின் சடலம் சவூதியிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து அமரர் ஊர்தி மூலம் கிராமத்திற்கு வந்து சேர்ந்தது. ஊரே துக்கத்தில் விம்மி வெடித்து அழுது அரற்றியது. இராவுத்தர் வாத்தியாரை அடக்கம் செய்வது சம்பந்தமாக விவாதித்து முடிவெடுக்க ஊர்க் கூட்டம் காளிஅம்மன் கோவிலில் கூட்டப் பட்டிருந்தது. ஆளாளுக்கு ஒரு ஆலோசணைகளை அள்ளி வழங்கிக் கொண்டிருந்தார்கள். எதுவும் சிலாக்கியமாக இருக்க வில்லை.

                        பலராமு நாயக்கர் முதுமையின் தள்ளாட்டத்துடன் பஞ்சாயத்தாரின் முன்னால் வந்தார். பள்ளிக்குச் சொந்தமான தோட்ட நிலத்திற்குப் பக்கத்தில் தங்களுடைய பூர்விக சொத்தான ஆறரை ஏக்கர் நிலமிருப்பதாகவும், அதைத் தான் ஊருக்கு பொதுவில் எழுதிக் கொடுத்து விடுவதாகவும், அங்கு நாகூரில் உருவாக்கப் பட்டது போல், மசூதி ஒன்றைக் கட்டிக்கொண்டு அங்கு  இராவுத்தரை அடக்கம் செய்து, அதையே தர்காவாக்கி வழிபடலாம் என்றும் சொன்னார்.                     

                        அவரின் ஆலோசணை ஏற்றுக் கொள்ளப்பட்டது. அப்படித் தான் சண்முகத்தின் கிராமத்தில் அவசர மசூதி ஒன்றும் தர்கா ஒன்றும் உருவானது. அன்றிலிருந்து ஒவ்வொரு வருஷமும் இராவுத்தர் வாத்தியார் இறந்த நாள் என்பதைக் ஊர்க்காரர்கள் குருபூஜையாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்…..! திருவிழாக்கள் வழக்கொழிந்து போன இன்றைய கலக்கட்டத்திலும் இராவுத்தருக்கான குருபூஜை மட்டும் எந்தத் தடங்கலுமில்லாமல் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. இராவுத்தரின் தர்கா மெது மெதுவாக எல்லா மதத்தவர்களும் வந்து போகும் வழிபாட்டுத் தலமாகவும் மாறி கொண்டிருக்கிறது…..!

v  முற்றும்

(நன்றி: தினமலர் – வாரமலர் 08.12.2013)

Tuesday, August 27, 2013

குங்குமம் வார இதழில் பிரசுரமான கவிதை


தூங்காத ண்ணொன்று......

இறங்க வேண்டிய இடம் கடந்து

வெகுதூரம் வந்தாயிற்று;

தோளில் வழிந்து தூங்குபவனை

உதறிவிட்டு

எப்படி எழுந்து போவது?

 

யுகங்களின் தூக்கத்தை

ஒரே நாளில் தூங்குகிறானா?

தூங்கியே துக்கங்களைக்

கடந்து விடுகிற முயற்சியா?

அமைதியாய் ஆழ்ந்து

உறங்குகிற சூழல்

அமையவே இல்லையா

இதுவரை...

 

வீடென்பது இவனுக்கு

போர்க்களமோ; அல்லது

வீடற்ற பிளாட்பார வாசியா?

இரவுகளில் தூங்க முடியாமல்

உறவுச் சிக்கல்களில்

உழல்பவனா; அல்லது

பிரிவெனும் பெருந்துயரில்

பிதற்றி அலைபவனா?

 

பேருந்தில் ஏறியதும்

பேச்சுக் கொடுத்தான்;

எங்கே இறங்க வேண்டுமென்று.....

என் பதில் அவனது

காதில் விழுந்த்தோ இல்லையோ

அதற்குள் தூங்கத் தொடங்கியவன்

தொடர்கிறான் இன்னும்......

 

என்ன பிரச்னை இவனுக்கு

குலுங்கி ஓடும் பேருந்திலும்

அலுங்காமல் எப்படி இவனால்

உறங்க முடிகிறது....!

 

கடைசி நிறுத்தம் வந்து பேருந்தே

காலியானதும் தான் கண் விழித்தான்;

நான் இறங்கியிருக்க வேண்டிய

நிறுத்த்திற்கு அடுத்த்தில் தான்

அவன் இறங்க வேண்டுமாம்;

எப்படியும் அவன் தூக்கம் கலைத்து

நான் இறங்கிப் போவேன் என்றும்

அதன் பின்

அவனும் இறங்கிக் கொள்ளலாமென்று

நம்பிக்கையில் தூங்கினானாம்......!

இருந்தாலும் பரவாயில்லை;

என் தூக்கத்தை கௌரவித்த

முதல் மனிதனுக்கு நன்றி

என்று சொல்லி

இறங்கிப் போனான் நெடுவழியில்.....

 

                                      நன்றி: குங்குமம் 03.06.2013

Thursday, August 15, 2013

உயிரெழுத்து மாத இதழில் பிரசுரமான சற்றே பெரிய சிறுகதை: தீராத சாபங்கள்


                        முத்துப்பாண்டியைக் கொஞ்ச நேரம் உன்னிப்பாய்ப் பார்த்து விட்டு மிகவும் நிதானமான குரலில் கேட்டாள் பாக்யலட்சும் “உன் வாழ்க்கையிலயும் பெண்சாபம் மாதிரி ஏதாவது இருக்குமாப்பா… ”

                        சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு மத்தியான வேளை; வேலைத்தளம் இயந்திர இரைச்சலும் மனிதக் கூச்சலுமின்றி அமைதியாக இருந்தது. சாப்பிட்டு முடித்த வேலையாட்கள், சிலர் அங்கங்கே உட்கார்ந்து பழமை பேசிக் கொண்டும், பெரும்பாலோர் மணலிலும் தரையிலுமாய்ப் படுத்துக் கண்மூடியும் கிடந்தனர்.

            அக்கௌண்டென்ட் மணிசேகர் ஓரமாய் நின்று சிகரெட்டை இலயித்து இரசித்து ஊதிக் கொண்டிருந்தான். என்ஜினியர் முத்துப்பாண்டி, மதிய உணவிற்குக் கடித்துக் கொள்ள ஏதாவது வாங்கி வரும்படி வாட்ச்மேனிடம் சொல்லிக்  கொண்டிருந்தான்.

                         “வணக்கம் சாமியோவ்…..” என்றபடி பவ்யமாய்க் கைகுவித்து வேலைத் தளத்திற்குள் நுழைந்தவனை சிறுவன் என்று தான் மதிப்பிட வேண்டும்; அவனுக்கு 15 அல்லது அதிகபட்சம்16 வயதுக்குள் தானிருக்கும். ஆனால் அவனுடைய வயதிற்கு சற்றும் பொருத்தமில்லாமல், பெரிய மனிதத் தோரணையில் இடுப்பில் பளீரென்று வெண்மை துலங்கும் வேஷ்டியும், மேலுக்கு சற்றே பழுப்பேறிய முழுக்கைச் சட்டையும், ஒரு தோளில் இஸ்திரி மடிப்புக் கலையாத துண்டும், மறுதோளில் கொஞ்சம் அழுக்கான ஜோல்னாப் பையும் அணிந்திருந்தான். நெற்றியில் சந்தனக் கீற்றும் நடுவில் குங்குமமும், கண்களில் ஒளியும், முகம் முழுவதும் ஒரு பிரகாச ஜொலிப்புமாயும் இருந்தான்.              

            “சாமிக்கு சீக்கிரமே நல்ல காலம் பொறக்கப் போகுது……” என்றபடி முத்துப்பாண்டியை நெருங்கினான் கண்களால் அவனைத் தீர்க்கமாய் அளந்தபடி. முத்துப்பாண்டிக்கு அவன் விரிக்கிற வலையின் கண்ணிகள் புரிபடவே, “இதப் பாருப்பா, இது வேலை நடக்குற எடம்; உன் வித்தைகளை எல்லாம் வெளியில, வீடுகள்ல போய் காட்டு…..” என்றான்.

             “சாமி நீ எனக்கு காசு பணம் எதுவும் தரவேணாம்; காது குடுத்துக் கேளு; அது போதும். நடந்தது, நடக்கப் போறது எல்லாஞ் சொல்றேன். சரியா இருந்தா, உன் மனசுக்குச் சம்மதம்னா மட்டும் ஏதாவது குடு; சந்தோஷமா வாங்கிட்டுப் போறேன். நான் இப்ப மந்திராலத்திற்குப் போயி இராக வேந்திர சாமிகளத் தரிசனம் பண்ணீட்டு வந்துருக்கேன். சொல்ற வாக்கு அத்தணையும் சுத்தமாப் பலிக்கும்…”

            முத்துப்பாண்டி அவனை நம்பிக்கை இல்லாமல் பார்க்கவும் “உனக்கு நம்பிக்கை இல்லைன்னா இப்ப உன் மனசுக்குள்ள ஒரு பூவை நெனச்சுக்கோ, அதை நான் சரியா கண்டு பிடிக்கிறேன்….” என்றபடி மேஜையின் மேலிருந்த ஒரு காகிதத்தின் சிறு பகுதியைக் கிழித்துக் கையில் வைத்துக் கொண்டான்.

             “இதப் பாருப்பா, எனக்கு நெறைய வேலை கெடக்கு….அதோட முதலாளியும் சைட்டுக்கு வர்ற நேரம் இது…. அதனால இப்ப நீ கெளம்புற வழியப்பாரு;” என்று சிடுசிடுத்து அவனை வெளியில் விரட்டுவதிலேயே குறியாய் இருந்தான்.

            “சாமிக்கு கோபம் தான் சத்ரு; ஆனாலும் பரவாயில்ல. போறதுக்கு முன்னால ஒரே ஒரு குறிப்புச் சொல்றேன். சாமி மனசுல தீராத மனக்குறை ஒண்ணு இருக்கு; சரியா?” என்றான் அவன்.

            முத்துப்பாண்டிக்கு அடக்க முடியாமல் சிரிப்பு வந்து விட்டது. சிரித்தபடி சொன்னான். “செத்துப்போனவன உயிர்ப்பிக்குறதுக்கு சாவே நிகழ்ந்திராத வீட்லருந்து கடுகு வாங்கிட்டு வரச்சொன்ன புத்தரோட  மனோதத்துவந்தான்  நீ சொல்றதும்; யாரைப் பார்த்து சொன்னாலும் அது சரியாத்தான் இருக்கும். ஏன்னா ஏதாவது மனக்குறை இல்லாதவங்க இந்த உலகத்துலயே யாரும் இருக்க மாட்டாங்க…..”

            “அது வாஸ்தவம் தான் சாமி. உன்னோட மனக்குறை என்னன்னு சொல்றேன்; அப்பவாவது நம்புறியா பார்க்கலாம். உனக்கு கொஞ்சி மகிழ ஒரு குழந்தை யில்ல; கொள்ளி வைக்க ஒரு வாரிசு இல்ல; சரிதானா சாமி…” என்றான். முத்துப்பாண்டிக்கு சிலீரென்றது.

                        முத்துப்பாண்டிக்கும் பாக்கியலட்சுமிக்கும் கல்யாணமாகி 10 வருஷங்களுக்கும் மேலாகி விட்டது.   சந்தோஷமாக இருப்பதாகத் தான் நம்புகிறார்கள். ஆனால்  வாழ்க்கையைக் கொண்டாடவும் கொஞ்சி மகிழவும் ஒரு குழந்தை இல்லையே என்கிற சிறு குறை இருவரின் மனதுக்குள்ளும் தீராமல் நெருடிக் கொண்டிருக்கிறது என்பது நிஜம் தானே!

                         முத்துப்பாண்டி இப்பொழுது வேலை பார்க்கும் கம்பெனிக்கு வந்தே மூன்று மாதங்கள் தான் ஆகியிருந்தன. அவன் தனக்கு குழந்தை இல்லை என்கிற விபரத்தை வேலை பார்க்கிற இடத்தில் யாரிடமும் இதுவரை சொல்லியிருக்க வில்லை. அப்படி யிருக்கும் போது இந்தச் சிறுவன் எப்படி அத்தனை துல்லியமாய் கணித்துச் சொன்னான்?

                        ஒருவேளை அவன் குத்து மதிப்பாய் – இன்றைய தினங்களில் தான் குழந்தை இன்மை என்பது நிறைய தம்பதிகளிடம் உள்ள பிரச்னை தானே! – சொல்லியது தன் விஷயத்தில் சரியாகி விட்டதோ? முத்துப் பாண்டியின் முகக் குறிப்பிலிருந்து தான் சொன்னது சரிதான் என்பதைப் புரிந்து கொண்ட அந்தச் சிறுவன் மேலும் தொடர்ந்தான்.

                        ”ஆனால் சாமி சஞ்சலப் பட வேண்டாம்; இன்னும் எண்ணிப் பத்தே நாள்ல ஒரு நல்ல சேதி கண்டிப்பா வரும்; இது நான் வணங்குற இராகவேந்தர் மேல ஆணை…. இராகவேந்திரர் சாமிக்கு ஒரே ஒரு பூஜை மட்டும் பண்ணிட்டா உன்னைப் பிடிச்ச பீடை எல்லாம் உடனே விலகிடும்…..” என்று நிறுத்தி முத்துப் பாண்டியின் முகம் பார்த்தான் அவன்.

            ”சரி நீ இவ்வளவு சொன்னதே போதுமப்பா….பூஜை பண்ணனும்னு தோணுறப்ப சொல்லி அனுப்பறேன்; இப்ப நீ கிளம்பு….” என்று சொல்லியபடி ஒரு 10ரூ.தாளொன்றை எடுத்து நீட்டினான். பவ்யமாய் பணத்தை வாங்கிக் கொண்டவன், கொஞ்சதூரத்தில்  நின்று இவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மணிசேகரிடம் நகர்ந்து போய் “சாமிக்கு  யோக திசை திரும்பியாச்சு; இன்னியலருந்து ஏழே நாள்ல தென் திசையிலருந்து நல்ல சேதி ஒண்ணு வரப் போகுது…. அதுல சாமிகளோட மனசெல்லாம் குளுந்துரும்…..” என்றான். முத்துப்பாண்டி அவனிடத்தி லிருந்தபடியே அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தான்.

            மணிசேகர் கையிலிருந்த சிகரெட்டை அவசரமாய்க் காலில் போட்டு நசுக்கியபடி ஆச்சர்யமாய் அந்தச் சிறுவனைப் பார்க், ”இப்ப ஏதாவது ஒரு பூ பேர நெனைச்சுக்க சாமி; நான் கரெக்டா கண்டுபிடிக்கிறேன்….” என்று சொல்வதும், அப்புறம் முத்துப்பாண்டியின் இடத்திலிருந்து கிழித்துக் கொண்டு போன துண்டு காகிதத்தில் ஏதோ எழுதி அவனிடம் காண்பிப்பதும் தெரிந்தது. அதைப் பார்த்ததும் மணிசேகர் மலர்ந்து “அய்யோ… அசத்திட்டீயே, எப்படிய்யா  இது….”என்று கிட்டத் தட்ட கூவினான்.

            முத்துப்பாண்டி மனசுக்குள் சிரித்தபடி வாட்ச்மேன் வாங்கி வந்திருந்த பருப்பு வடையைக் கடித்துக் கொண்டு மதிய உணவைச் சாப்பிடத் தொடங்கினான். அவனின் அய்யாவிற்கு இந்த மாதிரியான ஜோதிடம், குறிகேட்பது போன்றவற்றி ளெல்லாம் தீவிர நம்பிக்கை. உள்ளூர் ஜோதிடரைக் கலந்து பேசாமல் எந்த ஒரு காரியத்தையும் செய்ய மாட்டார். அவரைப் பொறுத்தவரை ஒவ்வொருத்தரின் வாழ்க்கையும் ஏற்கெனவே எழுதித் தீர்மானிக்கப் பட்டு விட்டது. அந்த பிரம்மனின் எழுத்தை வாசித்து மொழி பெயர்ப்பவர்கள் தான் ஜோதிடர்களும், குறிகாரர்களும். அதனால் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் அவர்களின் வழி காட்டுதல்களின் படியும் ஆலோசணைகளின் படியும் நகர்த்தினால் அது அதிக சிக்கலில்லாமல் போகும் என்று தீர்மானமாய்ச் சொல்வார். அவரின் அதீத நம்பிக்கையே  முத்துப்பாண்டிக்கு அவற்றின் மீது வெறுப்பாய்ப் படிய காரணமானது.

            முத்துப்பாண்டி ஒரு ஆடிமாதம் அதுவும் சனிக்கிழமையில் வந்து அவருக்கு மகனாகப் பிறந்து விட்டதில் அவருக்கு ஏக வருத்தம். நீண்ட நாட்களுக்கப்புறம் பிறந்ததாலும் அதுவும் ஒரே பிள்ளையாய்ப் போய் விட்டதாலும் வேறு வழியில்லாமல் சகித்துக் கொண்டார். அப்படியும் அம்மாவை எப்போது பார்த்தாலும் ஆகாத வேளையில் பிள்ளையைப் பெற்று விட்டதற்காகக் கரித்துக் கொட்டுவார். அவனையும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் “ஆடிச்சனி; ஆடிச்சனி… ஆட்டி வைக்கிறியேடா…..” என்று அலுத்துக் கொள்வார்.

            முத்துப்பாண்டிக்கு பள்ளிக்கூடம் போகிற வயசு வந்ததும் அவனின் ஜாதகக் கட்டைத் தூக்கிக் கொண்டு சடாட்சரத்திடம் தான் ஓடினார் அய்யா. சடாட்சரம் அவர்களின் குடும்ப ஜோதிடர். அவரும் அவனின் ஜாதகத்தை அலசி ஆராய்ந்து ஏதேதோ கணக்குகளை எல்லாம் போட்டுப் பார்த்து விட்டு “பையனுக்கு கல்விக்கான யோகம் சுத்தமா இல்லையே சாமி….” என்று கை விரித்து விட்டார். அதனால் முத்துப்பாண்டியைப் படிக்க வைப்பது வேண் வேலை என்று முடிவு செய்த அய்யா அவனை பள்ளிக்கு அனுப்பவே சம்மதிக்க வில்லை.

            உள்ளூர் ஆசிரியர்கள் வீட்டிற்கு வந்து நச்சரிக்கவும், முத்துப்பாண்டியின் அம்மா தான் “நாமதான் படிக்காத கூ முட்டைகளாப் போயிட்டோம்; பையனாவது ஒரு கையெழுத்துப் போடவும், தெக்க வடக்க போனா, பஸ் பார்த்து ஏறுறதுக்குமாவது நாலெழுத்துப் படிக்கட்டு….” மென்று அய்யாவை சமாதானப் படுத்தி அவனை அவர்களுடன் பள்ளிக்கு அனுப்பி வைத்தாள்.

            ஆனால் ஜோதிடரின் கணிப்பை மீறி முத்துப்பாண்டி மிக நன்றாகப் படித்தான். வாத்தியார் களெல்லாம் வாயாரப் புகழ்ந்ததால் வேறு வழியில்லாமல் அவனை பாலிடெக்னிக் வரை படிக்க வைத்தார். பாலிடெக்னிக்கிலும் எந்த குரூப்பில் பையனைச் சேர்ப்பது என்று சடாட்சரத்திடம் கலந்து பேசித்தான் அவர் முடி வெடுத்தார். முத்துப்பாண்டிக்கு ஆங்காரம் பொங்கினாலும் அய்யாவை மீறி எதுவும் செய்ய முடியாததால் அமைதி காத்தான். சடாட்சரம் குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத பாவணையில் பீடிகையுடன் பேசினார்.

            “பையனோட ஜாதக அம்சப்படி அவர் இவ்வளவு தூரம் படிச்சது தெய்வச் செயல்ன்னு தான் சொல்லனும்; ஏதோ ஒரு இழை சாதகமா இருந்து இழுத்துட்டு வந்துருக்கு; இனிமேத்தான் நாம ரொம்பவும் கவனமா இருக்கணும்…. குடுக்குறது மாதிரிக் குடுத்து ஒரே அடியா கவுத்தாலும் கவுத்துடும்….. அதனால கரண்டு, என்ஞின் சம்பந்தப்படாத படிப்பாப் படிக்க வைக்கிறது உத்தமமா இருக்கும்….” என்று அவர் சொல்லி விடவே, எலக்ட்ரானிக்ஸும் கம்யூட்டரும் மெக்கானிக்கலும் கோலோச்சிய கால கட்டத்தில் அப்போது வழக்கொழிந்து கொண்டிருந்த சிவில் என்ஜினியரிங்கில் கொண்டு போய் அவனை வலுக்கட்டாயமாக சேர்த்துவிட்டு வந்தார்.

            படித்து முடித்த பின்பும் கூட அய்யாவின் ஜோதிடக் கிறுக்கு அவனைப் பாடாய்ப் படுத்திக் கொண்டு தான் இருந்தது. அவன் சரியான வேலை எதுவும் கிடைக்காமல் தினக்கூலி அடிப்படையில் டெக்னிக்கல் அஸிஸ்டெண்ட்டாக அல்லல் பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில, தனியாக கன்ஸ்ட்ரக்‌ஷன் பிஸினெஸ் செய்து கொண்டிருந்த அவனின் சீனியர் ஒருவர் தனக்கு ஒரு பெரிய தொகைக்கு காண்ட்ராக்ட் கிடைத்திருப்பதாகவும் முத்துப்பாண்டி ஒன்று அல்லது இரண்டு லட்ச ரூபாய் புரட்டிக் கொண்டு வந்தால் அவனையும் தன்னுடைய கம்பெனியில் பார்ட்னராக சேர்த்துக் கொண்டு,  சேர்ந்து பிஸினெஸ் பண்ணலாமென்று வற்புறுத்தி அழைத்தார்.

            முத்துப்பாண்டியின் அய்யாவால் கொஞ்சம் முயற்சி செய்திருந்தாலே அந்தப் பணத்தைப் புரட்டித் தந்திருக்க முடியும். அவர் அப்போதும் சோதிடரிம் போய்த் தான் ஆலோசணை கேட்டார். அவரோ குரு, சூரியன், சுக்கிரன் என்று குருட்டுக் கணக்குகள் போட்டு விட்டு, “ஜாதகப்படி பையனுக்கு சொந்தத் தொழிலுக்கெல்லாம் பிராப்தமெ இல்ல; அதுவும் பார்ட்னர்ஷிப்பெல்லாம் படாதபாடு படுத்திரும்… நஷ்டப்பட்டு நாறிப் போயிரும் பொழைப்பு…. அதுக்கு மேல உங்க இஷ்டம்; ஆனா இன்னும் கொஞ்ச நாள்ல அரசாங்க உத்தியோகம் கேரண்டி….” என்று உளறினார். முத்துப்பாண்டிக்கும் அவனுடைய அய்யாவிற்கும் அன்றைக்கிலிருந்து பேச்சு வார்த்தை முறிந்தது. சென்னையில் ஒரு சிறு வேலை கிடைத்ததுமே அவரிடமிருந்து தப்பித்தால் போதுமென்று கிராமத்திலிருந்து ஓடி வந்து விட்டான்.

                        சாயங்காலம் மணிசேகர் முத்துப்பாண்டியிடம் வந்து அந்த குறி சொன்ன சிறுவனை வானளாவப் புகழ்ந்து தள்ளினான். “அந்தப் பையன் கிட்ட நிச்சயமா ஏதோ சக்தி இருக்கு ஸார்….. இந்த சின்ன வயசுலயே பெரிய ஞானம்….நடந்தது நடக்கப் போறது எல்லாத்தையும் அப்படியே புட்டுப் புட்டு வைக்கிறான்….”

                        ”முதல்ல என்னை ஒரு பூ பேர மனசுக்குள்ள நெனச்சுக்கச் சொன்னான்; எல்லோரும் பொதுவா மல்லி, முல்லை, கனகாம்பரம்,ரோஜான்னு தான் நினைச்சுக்கு வாங்க…ஆனா நான் மனசுல நெனச்சுக்கிட்டது அவ்வளவு ஈஸியா யாராலயும் யூகிக்க முடியாதது. நேத்து ராத்திரி தான் அந்தப் பூவோட பேர்ல வந்துருந்த பழைய படத்த டீ.வில பார்த்துருந்தேன்…. யோசிச்சு முடிஞ்ச அடுத்த நிமிஷம் ஒரு துண்டு சீட்டுல எழுதிக் காட்டுறான் – தாழம்பூன்னு… எப்படி சார் இது சாத்தியம்…..!

                         உங்களுக்குத் தான் ஏனோ இன்னும் அவன் மேல நம்பிக்கை வரல; ஆனா என் விஷயத்துல அவன் சொன்னது அத்தனையும் நூத்துக்கு நூறு உண்மை ஸார்…. முகத்தப் பார்த்ததும் பளிச்சுன்னு சொல்றான் – எனக்கு பெண்சாபம் இருக்குன்னு; அப்படியே ஆடிப் போயிட்டேன் ஸார்….” என்றான் மணிசேகர்..

                        “அப்படி என்ன உனக்கு பொல்லாத பெண் சாபம்….” என்றான் முத்துப்பாண்டி சுவாரஸ்யமில்லாமல்.

            “நான் காலேஸுல படிச்சு முடிச்சுட்டு கிராமத்துல வேலை இல்லாமச் சுத்திக்கிட்டிருந்த சமயத்துல ஒரு பொண்ணக் காதலிச்சேன் ஸார்; நாங்க ரெண்டு பேருமே கல்யாணம் பண்ணிக்க சாத்தியமே இல்லாத வெவ்வேற ஜாதிகளச் சேர்ந்தவங்க; வசதி வாய்ப்புலயும் அவ மலைன்னா நான் வெறும் கடுகு; ஆனாலும் நாங்க தீவிரமாக் காதலிச்சோம். ஆனால் நாங்க காதலிக்கிற விஷயம் ஊருல ஒரு சுடு குஞ்சுக்கும் தெரியாது……

            திடீர்னு ஒருநாள் அவங்க வீட்டுல அவளுக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணீட்டாங்க… என்கிட்ட ஓடி வந்து ஓன்னு அழுதாள். என்ன பண்றதுன்னு எனக்கும் ஒண்ணும் புரியல. தீவிர யோசணைக்குப் பின்னால கல்யாணத்துக்கு முதல் நாள் ரெண்டுபேரும் ஊரைவிட்டு ஓடிப் போயிடுறதுன்னு முடிவு பண்ணினோம். அதன்படியே அன்னைக்கு அதிகாலையில அவள் வீட்லருந்து கிளம்பி இரயிலடிக்குப் போயிட்டாள்.

            எனக்குத்தான் கடைசி நிமிஷத்துல அடி மனசுல ஒரு பயம் வந்துடுச்சு; வேலை வெட்டி எதுவுமில்லாம, முன்னப் பின்ன பழக்கமில்லாத ஊருல, அதுவும் ஒரு பொண்ணக் கூட்டிட்டுப் போயி எப்படிப் பொழைக்கிறதுங்கிற நிதர்சனம் உறைச்சது. அதோட நாங்க ஊரை விட்டு ஓடிப்போன விஷயம் தெரிஞ்ச அடுத்த நிமிஷமே அவங்க அப்பாவும் சாதிசனமும் சேர்ந்து எங்க குடும்பத்தயே குளோஸ் பண்ணிடுவாங்கன்கிற உண்மை புரிஞ்சதும், நான் இரயிலடிக்குப் போகாம வீட்லயே இருந்துட்டேன்.

அவளும் கொஞ்ச நேரம் காத்திருந்து பார்த்துட்டு வீட்டுக்குத் திரும்பிப் போயிடுவாள்னு நம்பிக் கிட்டிருந்தேன். ஆனால் பாவி மகள் நான் இரயிலடிக்கு வராதது தெரிஞ்சதும் ஓடுற இரயிலுல விழுந்து உயிரை மாய்ச்சுக்கிட்டாள்; செய்தி கேள்விப்பட்டதும் எனக்கு சிலீர்னு ஆயிடுச்சு. நல்ல வேளையா எங்க காதல் விவகாரம் ஊர்ல யாருக்கும் தெரியாததால எங்க குடும்பம் தப்பிச்சிருச்சு…

                        ஆனாலும் என் மனச்சாட்சி இன்னைக்கும் என்னைக் கொன்னுக்கிட்டுத்தான் இருக்கு; ஒரு அப்பாவிப் பொண்ண காதலிச்சுட்டு, அப்புறம் அத எதிர் கொள்ள தைரியமில்லாம அவள் சாக நான் காரணமா இருந்துட்டேனேன்கிற உறுத்தல் இன்னும் இருக்கு…..இதை அந்த குறிசொல்லி எவ்வளவு சரியாக் கண்டுபுடிச்சுச் சொல்லீட்டான்; இது திறமை இல்லையா?” நீளமாய்ப் பேசி நிறுத்தினான் மணிசேகர்.

            இது மைண்ட் ரீடிங் சமாச்சார மென்று முத்துப்பாண்டிக்குப் புரிந்தது. ஆனால் அவன் மணிசேகரிடம் எதுவும் சொல்ல வில்லை.

            அந்த குறி சொல்லி வேலைத் தளத்திற்கு வந்து விட்டுப் போன ஏழாவது நாள் மணிசேகர் வேலைத் தளத்திலிருந்த போது அந்த செய்தி வந்தது டெலிபோனில். செய்தியைக் கேட்டதும் நெஞ்சைப் பிடித்தபடி உட்கார்ந்தான் மணிசேகர். அவன் முகம் இருளடைந்து போய்விட்டது. என்ன நடந்தது என்று அவனால் சொல்லக் கூட முடியவில்லை. கொஞ்ச நேரத்திற்குப் பின்னால் அவன் தலையில் இடி மாதிரி இறங்கிய செய்தியை அவன் அழுது கொண்டே சொல்லவும் முத்துப் பாண்டியும் சைட்டிலிருந்தவர்களும் வாயடைத்துப் போய் விட்டார்கள்.

                        மணிசேகரின் மனைவி அவர்களுடைய ஐந்து வயது மகனைப் பள்ளியிலிருந்து அழைத்துக் கொண்டு, வீட்டிற்கு ஆட்டோவில் திரும்பிக் கொண்டிருக்கும் போது மோசமான விபத்தொன்றில் சிக்கி இருவரும் உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலைமையில் மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டிருக்கிறார்கள் என்பது தான் செய்தியின் சாரம். முத்துப்பாண்டி பதறிப்போய் மணி சேகரையும் இழுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினான். இவர்கள் போவதற்கு முன்பே இருவரும் இறந்து போயிருந்தார்கள். என்ன ஒரு கோரமான விதி என்றிருந்தது முத்துப் பாண்டிக்கு. அவனுக்கு துக்கத்தில் நெஞ்செல்லாம் வலித்தது.

                        எல்லாம் முடிந்து மிகவும் சோர்ந்து போய் இரவு நெடுநேரம் கழித்துத் தான் முத்துப்பாண்டி வீட்டிற்குப் போனான்.  அப்போதும் பாக்கியலட்சுமி தூங்காமல் விழித்துக் கிடந்தாள். வேலைத் தளத்தில் நடந்ததை எல்லாம் அவளிடம் அவன் சொல்லி முடிக்கவும், அவனையே கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்து விட்டு “அப்ப அந்த குறிசொல்லி சொன்னது மாதிரியே உங்க நண்பரோட பெண்சாபம், அவரோட குடும்ப வாழ்க்கையையே நிர்மூலமாக்கிருச்சு இல்லையா?” என்றாள்.

                        ”அவன் ஒரு பிராடு; அவன் சொன்னதப் போயி பெருசு படுத்திக்கிட்டு…. அதோட அவன் நல்ல செய்தி இல்ல வருமின்னான்…. இந்த மாதிரி நடக்குமுன்னு எதுவும் சொல்லவே இல்ல; கோடிகூட காட்டலயே!”

                        ”ஒருவேளை அவருக்கிருந்த பெண்சாபம் தான் அவருக்கு வர வேண்டிய நல்ல செய்திய வழிமறைச்சு கெட்ட செய்தியா மாத்திருச்சோ என்னவோ….” என்றாள். அப்புறம் தான் முத்துப்பாண்டியை கொஞ்ச நேரம் உன்னிப்பாய்ப் பார்த்து விட்டு கேட்டாள் “உன் வாழ்க்கையிலயும் பெண்சாபம் மாதிரி ஏதாவது இருக்குமாப்பா… ”

                        ”இதென்ன அசட்டுத்தனம்! அந்தக் குறிகாரன் தான் ஏதோ பணம் புடுங்குறதுக்காக பெண்சாபம் அது இதுன்னு வாய்க்கு வந்த வார்த்தையச் சொன்னான்னா, நீயும் அதையே விடாமப் புடிச்சு வேதாளம் மாதிரி தொங்கிக்கிட்டு…. அதோட எனக்கு பெண்சாபம் எதுவும் இருக்குன்னு அந்தக் குறிகாரன் சொல்லலப்பா…” என்றான் முத்துப்பாண்டி.

                        “நம்மளோட ஆணாதிக்க சமூகத்துல எல்லா ஆம்பிளைகளுக்கும் பெண்களோட சாபம் இருந்தே தீரும்ப்பா; நம்ம வளர்ப்பு முறையும் வாழ்க்கையும் அப்படி… என்ன பெரும்பாலான பெண்கள், ஆண்கள பெருந்தன்மையா  மன்னிச்சுடுவாங்க; அவ்வளவு தான்…..நீயும் யோசிச்சுப் பாரு” என்றாள் விடாப்பிடியாக..                                “என் வாழ்க்கையில என் அம்மாவுக்கப்புறம் குறுக்கிட்ட ஒரே பெண் நீதான்; எங்க அம்மாவ அவங்க கடேசி காலத்துல என்னால சரியா கவனிச்சுக்க முடியாமப் போயிருச்சு; ஆனாலும் அவங்க எனக்கு சாபம் எதுவும் குடுத்துருக்க வாய்ப்பே இல்ல…. இனிமே நீ ஏதாவது சாபம் குடுத்தாத் தான்…..” என்றான் சிரித்தபடி.

                        ”சாபமின்னா, நேரடியா மண்ணை வாரித் தூத்தி, நீ அழிஞ்சு போயிடுவ; உன் வம்சம் வெளங்காமப் போயிடும்ன்ங்குற மாதிரி சபிக்கிறதுன்னு அர்த்தமில்லப்பா; உன்னையும் அறியாம நீ செஞ்ச அல்லது செய்யாமப் போன காரியங்களால யாராவது மன வேதணை அடைஞ்சு…. அதுவே நமக்கு சாபமா மாறி இருக்கலாமில்லையா?

நாமளும் ஒரு குழந்தை பெத்துக்கிறதுக்காக எவ்வளவு பாடு படுறோம்; மருத்துவ ரீதியா நமக்கு எந்த பிரச்னையும் இல்லாம இருந்தும் ஏன் இன்னும் நமக்கு குழந்தை பொறக்கல…. கண்ணுக்குத் தெரியாத ஏதோ காரணம் – ஏன் அந்த குறிகாரன் சொன்ன மாதிரி பெண் சாபம் மாதிரி ஏதாச்சும் இருக்கலாமில்லையா?” என்றாள்.  

                         முத்துப்பாண்டியின் நினைவடுக்குகளில் மெதுவாய் பச்சையம்மாள் மேலெழும்பி வந்தாள். பத்து வருஷங்களுக்கும் மேலாக அடி மனதின் ஆழத்தில் உறங்கியபடி அவனை உறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை இந்த நிமிஷம் சொல்லி விடலாமா என்று யோசித்தான் முத்துப்பாண்டி. எந்தப் புள்ளியிலிருந்து ஆரம்பித்து பச்சையம்மாளின் கதையை சொல்லத் தொடங்குவது? எதையெல்லாம் சொல்வது? எதையெல்லாம் மனசுக்குள்ளேயே போட்டு அமுக்குவது? முதலில், சொல்லித்தான் ஆக வேண்டுமா? மாஜிக் காதலிகள் பற்றி எல்லாம் மனைவியிடம் பகிர்ந்து கொள்ளலாமா? அதன் மூலம் புதிய பூகம்பங்கள் புறப்பட்டு  சீராகப் போய்க் கொண்டிருக்கும் குடும்ப வாழ்க்கையில் சிக்கல்கள் ஏதும் விளைந்து விடாதா? த்தனை வருஷங்களுக்கப்புறம் அவளைப் பற்றி வெளியே சொல்லி இப்போது ஆகப் போவதென்ன? முத்துப்பாண்டிக்கு பெரும் குழப்பமாக இருந்தது. அவனின் மனதுக்குள் ஒரு போராட்டமே நிகழ்ந்தது.

                        அவன் சென்னையில் ஒரு காண்ட்ராக்டரிடம் வேலையிலிருந்த போது அவர்களின் கம்பெனிக்கு திருவண்ணாமலையில் மின்சார வாரியத்தின் கட்டிடம் கட்டும் பணி ஒன்று கிடைத்தது. அதற்காக அவன் திருவண்ணாமலையில் போய்த் தங்கி அந்தக் கட்டுமானப் பணியிலிருந்த போதுதான் பச்சையம்மாளைச் சந்தித்தான். பச்சையம்மாள் ஒன்றும் பெரிய அழகி இல்லை என்றாலும் பார்க்கத் தூண்டுகிற பளபளப்பும் முக வசீகரமும் பொருந்தியவள். அட்டைக் கருப்பு என்று சொல்ல முடியாதபடி இலேசான புது நிறப்பெண். இவனிடம் சித்தாளாக வேலை செய்து கொண்டிருந்தாள். ஒருநாள் வேலைத் தளத்தில் எல்லோருக்கும் சாக்லேட் கொடுத்து விட்டு இவனின் அலுவலகத்திற்குள் வந்து பொட்டலத்தை நீட்டி “இனிப்பு எடுத்துக்கங்க ஸார்….” என்றாள்.  

                        ஒரே ஒரு சாக்லெட்டை எடுத்தபடி “என்னம்மா விஷேசம்….” என்றான் அசிரத்தையாக.

                        “நான் +2 பாஸ் பண்ணிருக்கிறேன் ஸார். அதான்….” என்றாள் முகமெல்லாம் மலர. முத்துப்பாண்டிக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவளைப் பார்த்தால் +2 படிக்கிற வயசுக்காரியாகத் தெரியவில்லை.

                         “ஸ்கூலுக்குப் போய் படிக்கல ஸார்; பிரைவேட்டா எழுதிப் பாஸ் பண்ணேன்” என்று சிரித்தாள். அவளின் சிரிப்பில் ஒரு வைராக்கியமும் வசீகரமும் தெரிந்தது.

                        அப்புறம் வந்த நாட்களில் பச்சையம்மாளின் வாழ்க்கையைப் பற்றி பலரிடமும் கொஞ்சம் கொஞ்சமாய் விசாரித்து அவன் அறிந்து கொண்ட தகவல்கள் மனதில் இரத்தம் கசிவதாய் இருந்தது. பச்சையம்மாள் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் போது அவளுடைய அப்பா இறந்து போனார். அன்றோடு அவளின் பள்ளிப் படிப்பிற்கு முற்றுப்புள்ளி விழுந்தது. அம்மாவின் தொழில் கள்ளச் சாராயம் காய்ச்சி விற்பது; அவளுடைய தம்பியுடன் சேர்ந்து அந்தத் தொழிலைச் செய்தாள். வேறொருவனுடன் சேர்ந்து வெளிப்படையாய்க் குடித்தனமும் நடத்தினாள். அந்தப் பெண்களின் வாழ்க்கையில் அதெல்லாம் மிகச் சாதாரணம். 

            பச்சையம்மாள் அந்தச் சூழலுடன் ஒட்டாமல் வளர்ந்தாள். அவள் நிறையப் படிக்க வேண்டு மென்று ஆசைப் பட்டாள். கட்டுமானப் பணிகளிலும், காடு கழனிகளிலும், செங்கல் சூளைகளிலும் கிடைத்த வேலைகளைச் செய்து கொண்டு கொஞ்சம் கொஞ்சமாய்ப் படிக்கத் தொடங்கினாள். பிரைவேட்டாக பரீட்சை எழுதி எஸ்.எஸ்.எல்.சி முடித்து, இப்போது +2வும் பாஸ் பண்ணி விட்டாள்.

                        முத்துப்பாண்டிக்கு ஒரு கீழ்மட்டப் பெண்ணிற்கு இருக்கும் படிப்பாசை ஆச்சர்யமாக இருந்தது. அவளுக்கு ஏதாவது உதவ வேண்டுமென்று, அவளை அழைத்துப் பேசினான். அவளின் விருப்பம் தெரிந்து தொலைதூரக் கல்வியில் பி.காம். படிக்கப் பணம் கட்டி, தேவையான புத்தகங்களும் வாங்கிக் கொடுத்தான். யாருக்கு வேலை இல்லை என்றாலும் அவளுக்கு மட்டும் தினசரி வேலை கொடுக்கும் படி மேஸ்திரிக்கு உத்தரவிட்டான். அதுவும் கடினமில்லாத எளிதான வேலைகளில் மட்டும்  – அலுவலகத்தைக் கூட்டிப் பெருக்குவது, மணல் சலிப்பது, தண்ணீர் ஊற்றுவது மாதிரியான வேலைகளில் – அவளை ஈடுபடுத்தச் சொன்னான்.

                        ஒருமுறை முப்பதடி உயரத்திலிருந்த நீளமான பீமிற்கு கயிற்றில் நடப்பவளின் லாவகத்தோடு அவள் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த போது, திடீரென்று வீசிய காற்றில் சேலையும் பாவாடையும் பந்துபோல் விரிந்து மேலே தூக்கத் தொடங்க, பெண்மைக்கே உரிய பதட்ட உணர்வில் உடைகளை ஒழுங்கு படுத்த முனைந்ததில் கைப்பிடியை நழுவ விட்டு நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டாள். நல்ல வேளையாக அங்கு குவிக்கப் பட்டிருந்த மணல் மேட்டின் மீது விழுந்ததால் உயிருக்கு ஆபத்தில்லாமல் தப்பித்தாள். ஆனாலும் கால் எழும்பு முறிந்து விட்டது.

                        பச்சையம்மாளை உடனே ஒரு பெரிய பிரைவேட் மருத்துவமனையில் சேர்த்து, அவள் பரிபூரணமாய் குணமாகும் வரை அங்கேயே தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள ஏற்பாடு செய்தான். மருத்துவச் செலவுகளைக் கம்பெனி ஏற்க முன்வராத போது இவனுடைய சொந்தப் பணத்திலிருந்து செலவு செய்தான். அதுபோக அவளின் வீட்டுச் செலவுகளுக்கும் அவ்வப்போது பணம் தந்து உதவினான். வேலைத்தளத்தில் இவை எல்லாம் வேறுமாதிரி அர்த்தப் படுத்தப்பட்டு அசிங்கமான கதைகள் உலவின. இருவருமே அதைப் பற்றி சட்டை செய்யவில்லை.

                        கட்டுமானப் பணி முழுவதும் முடிந்து திருவண்ணாமலையிலிருந்து முத்துப்பாண்டி கிளம்ப இருந்த தினத்தில், அவனைப் பார்த்துப் போவதற்காக பச்சையம்மாள் வந்திருந்தாள். நிரந்தரமாய்ப் பிரியப் போகிற மன நெகிழ்ச்சியும், இதுவரை மனசுக்குள் பொத்தி வைத்திருந்த நேசமும், நன்றி பெருக்கும், தனிமையான சூழலும் கலந்த பலவீனமான ஒரு தருணத்தில் இருவரும் உடலோடு உடல் கலந்து விட்டார்கள்.

                       எந்த நிர்ப்பந்தமும்  நெருக்குதலுமில்லாமல் வெகு இயல்பாகத் தான் அவர்களுக்குள் அந்த கலவி நிகழ்ந்தது. ஆனாலும் தான் அவசரப்பட்டு விட்டதாக   முத்துப்பாண்டிக்கு  குற்ற உணர்ச்சி பீறிட்டது.

                        “மன்னிச்சிரு பச்சை. கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன்; கடைசியில சைட்டுல எல்லோரும் நம்மைப் பற்றிக் கட்டி விட்ட கதைகள உண்மையாவே ஆக்கிட்டனே….!” தொடர்ந்து வார்த்தை வராமல் தவித்தான் அவன்.

                        ”அடப் போங்க ஸார்…. நீங்க வேற, பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசிக் கிட்டு… என்னை மட்டும் மறந்துட மாட்டீங்கள்ல ஸார்…..” என்று மீண்டும் நெருங்கி வந்து உதடுகளைக் கவ்வி அழுத்தமாக முத்தம் கொடுத்துவிட்டு விடுவிடென்று கிளம்பிப் போய்விட்டாள்.

                        இரண்டு மாதங்களுக்கப்புறம் முத்துப்பாண்டி ஃபைனல் பில் சம்பந்தமாக திருவண்ணாமலை போயிருந்த போது பச்சையம்மாளின் வாழ்க்கையில் புயல் வீசிக் கொண்டிருந்தது. அவளின்  அம்மாவும், மாமாவும்  காய்ச்சி விற்ற சாராயம் குடித்த சிலர் செத்துப் போயிருந்ததால், இருவரையும் போலீஸ் வந்து அடித்து இழுத்துக் கொண்டு போய்விட பச்சையம்மாள் நிர்கதியாய் நின்றாள். முத்துப்பாண்டியைப் பார்த்ததும் கதறி அழுதாள்.

         அப்புறம் மிகவும் இரங்கத் தக்க குரலில் சொன்னாள். “தயவு பண்ணி என்னையும் உங்க கூடவே கூட்டிட்டுப் போயிடுங்க ஸார்…..இங்க விட்டுட்டுப் போனிங்கன்னா, போலீஸும் பொறுக்கிகளும் என்னை சீரழிச்சு சின்னா பின்ன மாக்கிடுவாங்க…. நான் உங்களுக்கும் உங்க குடும்ப வாழ்க்கைக்கும் எந்த தொந்தரவும் குடுக்க மாட்டேன்…நீங்களும் எனக்கு எந்த அந்தஸ்தும் தர வேண்டாம்; சும்மா உங்களோட ‘வப்பாட்டி’ மாதிரி வச்சுக்கிட்டு, அப்பப்ப ஆண் துணையா மட்டும் வந்து போயிட்டிருந்தீங்கன்னாப் போதும்….” நெஞ்சே வெடித்து விடும் போல கதறி அழுபவளைப் பார்த்ததும் முத்துப்பாண்டிக்கும் கண்ணீர் பொங்கியது.

                        “என்ன பச்சை இப்படிச் சொல்லீட்ட! கண்டிப்பா உன்னை நான் கல்யாணம் பண்ணிக்குறேன்…” என்று சொன்ன கையோடு அவளையும் அழைத்துக் கொண்டு  ஊருக்குப் போனான்.

                        முத்துப்பாண்டியின்  அய்யாவிற்கு இரண்டு விஷயங்களில் அசைக்க முடியாத நம்பிக்கை. ஒன்று ஜாதி; இன்னொன்று சோதிடம்! அதுவும் இரண்டாவதில் அதீத நம்பிக்கை. அய்யா இவன் சொன்னதை யெல்லாம் கேட்டதும் தாம் தூமென்று குதித்தார்.

         “கல்யாணம்ங்குறது வெளையாட்டுக் காரியமில்லடா; அது ஆயிரங் காலத்துப் பயிரு…. நம்ம சந்ததி தழைக்கச் செய்யிற ஏற்பாடு; நோங்குன பொம்பளைய எல்லாம் பொண்டாட்டியா ஆக்கிக்கிட முடியாது… நாலு நல்ல விஷயங்களையும் பார்த்துப் பண்ணனும்; நீ என்னடான்னா, தராதரமே இல்லாம ஒரு சித்தாளு சிறிக்கிய இழுத்துட்டு வந்து, கல்யாணம் கட்டி வைங்கிறீயே, உனக்கு புத்தி கித்திப் பெசகிப் போச்சா? ஜோசியர் அன்னைக்கே சொன்னார்; வெளியூர்க்கெல்லாம் பையன அனுப்புனா, பிள்ளை கை மீறிப் போயிடுவான்னு… அவர் சொன்ன மாதிரியே வந்து நிக்கிறியேடா…”

                        முத்துப்பாண்டி பிடிவாதம் பிடிக்க, அவனின் அம்மா தான் அய்யாவிடம் அழுது அரற்றி, “அவன் தான் ஆசைப் பட்டுக் கூட்டிட்டு வந்துட்டான்ல; உனக்கெதுக்கு இத்தனை வீம்பு… நம்பி வந்த பொம்பளப் புள்ளய என்ன செய்யறது இப்ப! அவளையே தான் அவனுக்கு கட்டி வச்சு தொலையேன்…. உன் கிரீடம் ஒண்ணும் எறங்கிடாது?” என்று சண்டை போட்டாள்.

                        பச்சையம்மாளின் ஜாதகக் குறிப்புகளைக் கொண்டு வந்தால், ஜோசியரிடம் காட்டிப் பொருத்தம் பார்த்துவிட்டு, பொருந்தினால் கல்யாணம் பண்ணி வைப்பதாக அய்யா இறங்கி வந்தார்.

                        முத்துப்பாண்டி அந்த ஏற்பாட்டையும் ஒத்துக் கொள்ளாமல் அவருடன் சண்டைக்குப் போனான். பச்சையம்மாள் தான் குறுக்கிட்டு இந்த சின்ன விஷயத்திற்காக அப்பாவும் பிள்ளையும் அடித்துக் கொள்ள வேண்டாமென்றும் தான் ஊருக்குப் போய் தன்னுடைய ஜாதகக் குறிப்புகளைக் கொண்டு வருவதாகவும் கிளம்பிப் போனாள்.

          அவளைத் தனியாக திருவண்ணாமலைக்கு அனுப்பி வைத்தது தான் முத்துப்பாண்டி செய்த பெருந் தவறு. அந்த நேரம் பார்த்து, அவன் வேலை பார்த்த கம்பெனி  அவனை அவசர வேலை காரணமாக டெல்லிக்குப் போய்வரப் பணித்ததால், பச்சையம்மாளைத் தனியாக திருவண்ணாமலைக்கு அனுப்பி விட்டு, இவன் டெல்லிக்குப் பயணமானான்.            

                        பத்து நாட்களுக்கப்புறம் அவன் டெல்லியிலிருந்து திரும்பி ஊருக்குப் பொனபோது,  பச்சையம்மாள் திருவண்ணாமலையிலிருந்து திரும்பி வந்திருக்கவில்லை. ஆனால் அவளிடமிருந்து  ஒரு கடிதம் வந்திருந்தது. ’அவன் செய்த எல்லா உதவிகளுக்கும் நன்றி என்றும், தான் அவனுக்குப் பொருத்தமான மனைவியாக இருக்க மாட்டாள் என்றும் அதனால் அவள் முத்துப்பாண்டினின் வாழ்விலிருந்து முற்றிலும் விலகிக் கொள்வதாகவும்‘ உருக்கமாக எழுதி இருந்தாள்.

            இடையில் என்ன நடந்தது என்று அவனுக்குப் புரியவில்லை. அய்யா தான் ஏதோ சதி பண்ணி அவள் மனதைக் கலைத்து அவளை திருப்பி அனுப்பி விட்டதாய் தோன்றி அவருடன் சண்டைக்குப் போனான். அவர் தனக்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லை என்று சாதித்து விட்டார். அவனின் அம்மாவும் “அந்தப் புள்ள ஊருக்குப் போயிட்டுத் திரும்பி வரவே இல்லய்யா…” என்றாள்.

                        அவசரமாய் திருவண்ணாமலைக்குப் போய்த் தேடி அலைந்ததில் அவள் அகப்படவே இல்லை. அவள் அங்கு போகவே இல்லை என்ற தகவல் தான் கிடைத்தது. பச்சையம்மாளின் அம்மாவும் மாமாவும் ஜெயிலில் இருந்ததால் அவள் எங்கு போயிருக்கக் கூடும் என்கிற விபரத்தை விசாரித்து அறியவும் வழியில்லாமல் போய்விட்டது. அப்புறம் அம்மாவின் வற்புறுத்தலால் அய்யா ஏற்பாடு செய்த பாக்கியலட்சுமியை திருமணம் செய்து கொண்டான்.

                        பச்சையம்மாளுக்கும் தனக்குமான சில அந்தரங்கங்களைச் சென்சார் பண்ணி விட்டுத் தான் முத்துப்பாண்டி பச்சையம்மாளின் கதையை பாக்யலட்சுமியிடம் சொன்னான். அவள் கொஞ்ச நேரம் எதுவும் பேசவே இல்லை. அப்புறம் பெண்மைக்கே உரிய உக்கிரத்துடன் பெரிதாய் சீறினாள்

                        ”நீ யெல்லாம் ஒரு மனுஷனா? ஒரு அப்பாவிப் பெண்ணோட வாழ்க்கையில இஷ்டம் போல விளையாடிட்டு, எதுவுமே நடக்காதது மாதிரி பேசுற! இதப் பத்தி என்கிட்ட இதுவரைக்கும் ஒரு வார்த்தை கூட சொன்னதில்ல; நம்பி வந்தவள நட்டாத்துல விட்டுருக்கியே…. இதுக்காகவே ஏழேழு ஜென்மத்துக்கும் உனக்கு மன்னிப்பே கிடையாதே….”

                        ”இதுல நான் செஞ்ச தப்பு என்ன இருக்கு! அவளே என் வாழ்க்கையிலருந்து வெலகிப் போயிட்டா…”

                        ”அவளே எப்படி வெலகிப் போவா? உங்க அப்பாவும் அம்மாவும் தான் ஏதாவது பண்ணியிருப்பாங்க; நீ இன்னும் நாலு எடம் போயி அவளோட சொந்தக்காரங்கள் கிட்ட விசாரிச்சிருந்தீன்னா அவள் கிடைச்சிருப்பா….”

                        ”சரி காலம் கடந்து போயாச்சு; இப்ப என்ன தான் பண்ண முடியும்?”

                        ”அப்படியெல்லாம் விட முடியாதுப்பா; எனக்கென்னமோ நீயும் உன் குடும்பமும் பச்சயம்மாள மோசம் பண்ணுனதால தான் நமக்கு குழந்தை இல்லாமப் போயிடுச்சோன்னு தோணுது… அதனால நீ தெரிஞ்சோ தெரியாமலோ பண்ணுன பாவத்துக்கு நாம பிராயச்சித்தம் ஏதாவது பண்ணனும்; அதுக்கு நீ பச்சயம்மாளத் தேடிக் கண்டுபிடிக்கனும்; நாளைக்கே ஒரு நாலைஞ்சு நாள் லீவப் போட்டுட்டு நீ அவளத் தேடிக் கண்டுபிடிக்கிற வழியப் பாரு….” என்றாள் தீர்மானமாக.

                        பாக்யலட்சுமி சொன்னால் சொன்னது தான்; அவளின் பிடிவாதம் பிரசித்தி பெற்றது. சைட்டில் நடந்ததை ஏன் இவளிடம் சொன்னோம் என்றிருந்தது முத்துப் பாண்டிக்கு.

                        அவன் திருவண்ணாமலைக்கு கிளம்பிப் போய் பச்சையம்மாள் முன்பு குடியிருந்த பகுதியில் போய் விசாரித்துப் பார்த்தான்.            அந்தப் பகுதியின் முகமே மாறிப் போய்க் கிடந்தது. குடிசைகள் இருந்த இடமே தெரியாமல் அழகழகான பெரும் கட்டிடங்கள் முளைத்திருந்தன. மருந்துக்குக் கூட தெரிந்த முகம் எதுவும் தென்படவில்லை. எதிர்ப்பட்ட ஒன்றிரண்டு பேர்களிடம் விசாரித்துப் பார்த்ததிலும் எந்தத் துப்பும் கிடைக்கவில்லை.

                        சென்னைக்கே திரும்பிப் போய்விடத் தீர்மானித்து பேருந்து நிலையம் போனான். அங்கிருந்த ஒரு ஹோட்டலில் டிபன் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது பரிமாறிய சர்வர் இவனையே குறுகுறுவெனப் பார்ப்பது போலவும் இவனிடம் ஏதோ கேட்க விரும்புகிறான் என்றும் தோன்றியது. அடர்த்தியான தாடி மீசையும் காவி உடையுமாயிருந்தவனை முத்துப்பாண்டிக்கு யாரென்று அடையாளம் தெரியவில்லை.

                        இவன் சாப்பிட்டுக் கை கழுவி விட்டு கல்லாப் பெட்டியில் உட்கார்ந்திருப்பவரிடம் காசு கொடுத்து விட்டு வெளியேறப் போகையில் அவன் இவனிடம் ஓடி வந்தான்.

                        “ஸார் நீங்க ஈ.பி. ஆபிஸ் கட்டுன கான்ட்ராக்டரோட என்ஜினியர் தான?”

                        “ஆமா, நீ யாருப்பா…? எனக்கு யாருன்னே சுத்தமா அடையாளம் தெரியலயே….”

                        “நான் பச்சையம்மாவோட மாமா ஸார்….” என்று சிரித்தான்.

                        முத்துப்பாண்டிக்கு முன் ஒரு வெளிச்சம் படர்ந்தது போல் இருந்தது. கண்டிப்பாக இவனுக்குப் பச்சையம்மாள் பற்றிய விபரங்கள் தெரிந்திருக்கும். அவளை நெருங்கி விட்டது போல் ஒரு சந்தோஷம் மனசுக்குள் துளிர்த்தது.

                        அவன் கொடுத்த தகவலின்படி முத்துப்பாண்டி சேலம் போய் அங்கிருந்து உலிப்புரத்தை விசாரித்துப் போனால் பச்சையம்மாள் அங்கு இல்லை. ஆனால் அவளின் உறவுக்கார பெண்ணொருத்தியின் மூலம் அவள் இப்போது ராசிபுரத்தில் இருப்பது தெரிந்தது.

                        அவன் ராசிபுரம் போய் அந்தப்பெண் கொடுத்திருந்த முகவரியை விசாரித்துப் போனபோது, அங்கும் பச்சையம்மாள் தட்டுப் படவில்லை. ஒரு காம்பௌண்டிற்குள் தீப்பெட்டி தீப்பெட்டிகளாய் வரிசையாய் அடுக்கப் பட்டிருந்த லைன் வீடொன்றில் ஒரு ஆறேழு வயதுப் பெண் புத்தகத்தை விரித்துப் படித்துக் கொண்டிருந்தது. முகத்தில் பச்சையம்மாளின் சாயலிருந்தது. இவன் வாசலில் தயங்கி நிற்பதைப் பார்த்து, உள்ளேருந்து எழுந்து வந்து ”நீங்க யாரு? உங்களுக்கு என்ன வேணும்?” என்றாள்.

                        “இங்க பச்சையம்மாள்ங்குறது…..”

                        “என்னோட அம்மாதான்…..” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே இடுப்பில் தண்ணீர் குடத்தை சுமந்தபடி பச்சையம்மாள் வந்தாள். அவளைப் பார்த்ததும் முத்துப்பாண்டிக்கு திக்கென்றிருந்தது. ரொம்பவும் மெலிந்து வாடிப் போயிருந்தாள்.  இவனைப் பார்த்ததும் ஆச்சர்யத்தில் கண்களை அகல விரித்து “ஸார் நீங்களா? வாங்க….வாங்க…” என்று வீட்டுக்குள் அழைத்துப் போனாள்.

                        பச்சையம்மாளைப் பார்க்கப் பார்க்க முத்துப்பாண்டிக்கு மனசைப் பிசைவதாக இருந்தது. அவனுக்கு குமுறி அழ வேண்டும் போலிருந்தது. ”என்னாச்சு பச்சை! ஏன் இப்படி இருக்குற? “ – அவனது குரல் உடைந்து வந்து விழுந்தது.

                        “எனக்கென்ன சார்; நான் நல்லாத்தான் இருக்குறேன்…..” என்றவள் “என்னை விடுங்க ஸார்…நீங்க நல்லா இருக்குறீங்களா?” என்றாள்.

                        அவள் பழைய கதைகளைச் சொல்லத் தொடங்கினாள். முத்துப்பாண்டி டெல்லிக்குக் கிளம்பிப் போனதும் பச்சையம்மாள் அவளின் ஜாதகக் குறிப்பை எடுத்து வருவதற்காக அவனுடைய கிராமத்திலிருந்து கிளம்பி யிருக்கிறாள்.  அவளின் ஜாதகக் குறிப்பு திருவண்ணாமலையில் இல்லை என்பதும் அது சேலத்தில் அவர்களின் பூர்வீக வீட்டில் அவளின் அப்பாவைப் பெற்ற பாட்டியிடம் இருப்பதும் அவளுக்குத் தெரிந்திருந்தது.

                        அதனால் அவள் சேலத்திற்கு வந்து பாட்டியிடமிருந்து குறிப்பை வாங்கிக் கொண்டவள் ‘உடனே முத்துப்பாண்டினின் ஊருக்குப் போய் என்ன செய்யப் போகிறோம்? அவன் டெல்லியிலிருந்து வரும் வரை பாட்டியுடனே கொஞ்ச நாள் தங்கி இருக்கலா மென்று’ முடிவு செய்து அதன்படி சேலத்திலேயே தங்கி இருந்தாள்.

            அவள் சேலத்திற்கு வரும்போதே முத்துப்பாண்டியின் ஜாதகத்தையும் அவனின் அய்யாவிடமிருந்து வாங்கிக் கொண்டு வந்திருந்தாள். சேலத்திலேயே இருவர் ஜாதகத்தையும் காட்டிப் பொருத்தம் பார்க்கலாமென்று அவளின் பாட்டி ஒரு ஜோசியரிடம் அழைத்துப் போனாள்.

            அவர் இருவர் குறிப்பையும் பார்த்து சில கணக்குகளையும் போட்டுவிட்டு “பையனின் தோப்பனார் உயிரோடு இருக்கிறாரா?” என்று கேட்டார். இவள் ஆமாம் என்று சொல்லவும் அப்படி என்றால் கண்டிப்பாக கல்யாணம் செய்து கொள்ள வேண்டாமென்றும் அப்படி கல்யாணம் பண்ணிக் கொண்டால் பெண்ணின் மாமனார் இறந்து விடுவார்…” என்றும் சொல்லி விட்டார்.          

            மேலும் வேறு இரண்டு ஜோசியர்களிடமும் ஜாதகத்தைக் காட்டியதில் அவர்களும் முதல் ஜோசியர் சொன்னதையே உறுதிப் படுத்தினார்கள். பச்சையம்மாளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. முத்துப்பாண்டிக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை என்பதும் அவன் கண்டிப்பாக அவனது அய்யாவிடம் சண்டை போட்டு இவளைக் கல்யாணம் செய்து கொள்வான் என்பதும் அவளுக்கு உறுதியாகத் தெரிந்தது.

                        ஆனாலும் ஜோதிடத்தைத் திடமாக நம்புகிற அவனது அய்யா மிகவும் பதறிப் போய்விடுவார். அதுவும் தன் உயிருக்கே ஆபத்து என்பதை அறிய நேர்ந்தால் எந்த மனிதன் தான் நிம்மதியாக இருக்க முடியும்?

            அவளுக்கும் ஜோதிடர்கள் சொல்வதை நம்புவதா வேண்டாமா என்று குழப்பமாக இருந்தது. அவர்கள் சொல்வதை மீறி இருவரும் கல்யாணம் செய்து கொண்டு  ஒருவேளை முத்துப்பாண்டினின் அய்யா உண்மையிலேயே இறந்து விட்டால், அந்தக் குற்ற உணர்ச்சி வாழ்நாளெல்லாம் தன்னை உறுத்திக் கொண்டிருக்குமே என்று மனசுக்குள் மறுகினாள்.

            அவளின் பாட்டியிடம் ஆலோசனை கேட்டபோது அவளும் “வேண்டாம் தாயி; விட்டுடு….இத்தனை தயக்கத்தோட ஒரு கல்யாணம் நடக்குறது உங்க ரெண்டு பேருக்குமே நல்லதில்லை…..” என்றாள்.

            பச்சையம்மாள் மனதைக் கல்லாக்கிக் கொண்டு முத்துப்பாண்டியின்  வாழ்க்கையிலிருந்து முற்றிலுமாய் விலகிக் கொளண்டாள். அப்புறம் சேலத்திலேயே பாட்டியுடன் தங்கி கிடைத்த வேலைகளைச் செய்து வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தாள். 

            தொலைதூரக் கல்வியைத் தொடர்ந்து தன்னுடைய பி.காம். பட்டப் படிப்பை முடித்தாள். அதை வைத்து ஒரு தனியார் அலுவலகத்தில் உதவிக் கணக்காளராக வேலைக்குச் சேர்ந்தாள். கல்யாணமே வேண்டா மென்றிருந்தவளை பாட்டி தான் வற்புறுத்தி ஆதிகேசவனை மணமுடித்து வைத்தாள்.

            ஆதிகேசவன் லாரி டிரைவராக வேலை பார்த்தான். மூன்று வருஷம் கூட அவர்களின் தாம்பத்யம் நீடிக்கவில்லை. ஒரு தொலைதூரப் பயணத்தில் இவன் ஓட்டிப்போன லாரி அதிவேகமாய் வந்த அரசுப் பேருந்துடன் மோதியதில் ஆதிகேசவன் அந்த இடத்திலேயே செத்துப் போனான். பச்சையம்மாளுக்கு மிஞ்சியது அவன் மூலம் அவளுக்குக் கிடைத்த ஒரு பெண் குழந்தையும், எயிட்ஸ் வியாதியும் தான்!

       பச்சையம்மாள் தன் மகளை வயிற்றில் சுமக்கும் போது செய்து கொண்ட வழக்கமான இரத்தப் பரிசோதனையின் போது தான் ஆதிகேசவன் அவளுக்கு எயிட்ஸைப் பரிசளித்திருந்த விபரமே தெரிந்திருக்கிறது. நல்லவேளையாக ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து விட்டதால் கருவிலிருக்கும் குழந்தைக்கு எயிட்ஸ் தொற்ற விடாமல் மருத்துவர்கள் பார்த்துக் கொண்டார்கள்

            பச்சையம்மாளின் கதையைக் கேட்ட முத்துப்பாண்டி இடிந்து போய் உட்கார்ந்திருந்தான். கொஞ்ச நேரம் ஒன்றுமே பேசவில்லை. அப்புறம் மெதுவாய்ச் சொன்னான். “சரி போனதெல்லாம் போயிருச்சு; இப்ப நீ குழந்தையையும் கூட்டிக்கிட்டு என்கூடவே வந்துடு பச்சை; அங்க வந்து உனக்கு சிகிச்சையும் உன் பொண்ணுக்கு ஒரு நல்ல கல்வியும் ஏற்பாடு பண்றேன்….” என்றான்.

            இல்லைங்க ஸார்; அது சரியா வராது. என் வாழ்க்கை இந்த ஊர்லயே முடிஞ்சு போகட்டும். என் பொண்ணத்தான் அனாதரவா விட்டுட்டுப் போயிடுவனோன்னு ரொம்பவும் பயந்துக் கிட்டு இருந்தேன்; கடவுளாப் பார்த்துத் தான் உங்களை அனுப்பி வச்சிருக்கார்; என் பொண்ண உங்க கூடவே கூட்டிட்டுப் போயிடுங்க…  உங்களுக்குந்தான் குழந்தையே இல்லைன்குறீங்களே! இவள உங்க பொண்ணா வளர்த்து அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சுக் கொடுங்க….” என்றபடி கண் கலங்கினாள்.

            முத்துப்பாண்டி எவ்வளவோ வற்புறுத்தியும் பச்சையம்மாள் அவனுடன் வரச் சம்மதிக்கவில்லை. அவளின் பெண்ணை மட்டும் அழைத்துக் கொண்டு ஒரு புதிய வாழ்க்கையை நோக்கி தன் பயணத்தைத் தொடங்கினான் முத்துப்பாண்டி.

 

Ø  முற்றும்

(உயிரெழுத்து மார்ச் 2013)