Tuesday, November 29, 2016

 பிரதமர் மோடி அவர்களுக்கு ஒரு அவசர ஆலோசணை:

இன்றைக்கு தினச் செலவுக்கு எப்படியாவது கொஞ்சம் பணம் எடுத்து விட வேண்டும் என்று தீர்மானித்து என்னிடமிருக்கும் வங்கி அட்டைகளையும் பாஸ் புக், மற்றும் காசோலைகளையும் பையில் போட்டுக் கொண்டு வீதியில் இறங்கினேன்.

வழக்கம் போல் எந்த ஏடிஎம்மிலும் பணம் இல்லை. ஆந்திரா வங்கியில் பணம் எடுப்பவர்களின் வரிசையில் நின்று கொண்டிருக்கும் போது நான் 1500ரூ.க்குக் காசோலை எழுதி கையில் வைத்துக் கொண்டு நிற்பதைப் பார்த்த எனக்குப் பின்னால் நின்றவர், இந்த சிறிய தொகைக்கு ஏன் இவ்வளவு நீள வரிசையில் நிற்கிறீர்கள்; எஸ்.பி.ஐ. வங்கி ஏடி எம்மில் பணம் இருக்கிறது போய் எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். அவரிடமும் எனக்கு முன்னால் நின்றவரிடமும் இதோ வந்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டு கொஞ்ச தூரத்திலிருந்த ஏடிஎம்மிற்கு ஓடினேன்.

அங்கு போனபின்புதான் தெரிந்தது. அங்கு வங்கியில் நிற்கும் கூட்டத்தினரை விடவும் அதிகம் பேர் நின்று கொண்டிருந்தார்கள். நான் மெசினுக்கு அருகில் போகும் போது கண்டிப்பாக அதில் நிரப்பப் பட்டிருக்கும் பணம் காலியாகி விடும் என்று தோன்றியதால் மறுபடியும் வங்கியின் வரிசைக்கே வந்து நின்றேன். வரிசை அப்படி ஒன்றும் நகர்ந்திருக்கவில்லை.

நத்தை வேகத்தில் வரிசை நகர்ந்து நான் கவுண்டருக்குப் போய்க் காசோலையை நீட்டியதும் அங்கிருந்த காசாளர் தன்னிடம் 100ரூ. அல்லது 50ரூ. கரன்சிகளே இல்லை என்றும் 2000ரூயும் அதன் மடங்குகளிலும் எழுதிக் கொடுத்தால் தான் தன்னால் தர முடியும் என்று சொல்லி விட்டார். ரூ.2000 நோட்டை வைத்துக் கொண்டு நானென்ன செய்வது?

எஸ்பிஐ வங்கிக்குப் போனேன். அங்கு நின்ற கூட்டத்தைப் பார்த்துப் பதறிப்போய் ஐசிஐசிஐ வங்கிக்கு ஓடினேன். பெரிதாய்க் கூட்டம் இல்லை. அதாவது கூட்டம் வங்கிக்குள் வழிந்து வீதிக்கெல்லாம் வந்திருக்கவில்லை. வரிசையின் வாலைப் பிடித்துக் கொண்டு நின்றேன். நான் கவுண்டரில் இருப்பவரிடம் அந்த வங்கிக்கான காசோலையைக் கொடுக்கவும் என்னை ஏற இறங்கப் பார்த்தவர் காலையிலேயே சொல்லி விட்டோமே எங்களிடம் 2000ரூ. கரன்சி தவிர்த்து வேறில்லை என்று. இப்படி விடாப்பிடியாய் வரிசையில் நின்று வந்து எங்களைக் கஷ்டப்படுத்துகிறீர்களே என்று அலுத்துக் கொண்டார் ஒரு குற்ற உணர்ச்சியுடன். 500ரூபாயாக இருந்தால் கூட வாங்கிக் கொள்கிறேன் என்றேன்.
-    500ரூ. இன்னும் வரவில்லையே என்றார்.
-    தொலைக்காட்சியிலெல்லாம் புழக்கத்திற்கு வந்து விட்டதென்று சொல்கிறார்களே என்றேன்.
-    அதென்னவோ தெரியவில்லை; எங்கள் வங்கிக்கு இன்னும் வரவில்லை என்றார்.

அஞ்சலகத்திற்கு ஓடினேன். அங்கு பெரிய அளவிற்குக் கூட்டமெல்லாம் இல்லை. ஆனால் அவர்களின் சுறுசுறுப்பைத் தான் நாம் அறிவோமே! பெரும்பாலான நேரங்களில் கணிணிகள் இயங்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும். என்ன செய்வது என்று தெரியாமல் அதற்கு முன்னால் உட்கார்ந்திருப்பவரும் முழித்துக் கொண்டிருப்பார். இன்றைக்கும் அதே கதை தான். ஆனால் கடைசியில் அவரும் 100ரூ.எல்லாம் சுத்தமாக இல்லை என்று கை விரித்து விட்டார்.

கடைசியில் பணமே எடுக்காமல் வீட்டிற்கு வந்து விட்டேன். என் அனுபவத்தை வைத்து நம்முடைய பாரதப்பிரதமருக்கு ஒரு ஆலோசணை சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

பொதுமக்கள் யாவரும் 100 ரூ. மற்றும் 50ரூ. கரன்சிகளை வங்கிகளில் செலுத்தாமல் அவர்களே பதுக்கி வைத்துக் கொள்கிறார்கள் என்று தெரிகிறது. 100 ரூ. மற்றும் 50ரூ. கரன்சிகளை அவர்கள் கருப்புப் பணமாக வைத்திருக்கிறார்கள். அதனால் அந்த கரன்சிகளை வங்கிகளுக்குள் கொண்டு வருவதற்காக ஒரு நடுநிசியில் தொலைக்காட்சியில் தோன்றி பிரதமர் மோடி அவர்கள் 100 ரூ. மற்றும் 50ரூ. கரன்சிகளை செல்லாது என்று அறிவிக்கும் படியும் அதற்குப் பதிலாக உடனேயே 3000ரூ. அல்லது 4000ரூ. கரன்சிகளை புதிதாய் அச்சிட்டு வெளியிடும்படியும் ஆலோசணை சொல்கிறேன். நம்முடைய பொருளாதார வல்லுநர்கள் தொலைக்காட்சியில் தோன்றி உங்களை புதிய இந்தியாவிற்கு வித்திட்டவர் என்று புகழாரம் சூட்டி மகிழ்வார்கள். இன்னும் சில சாமான்ய மக்கள் செத்தொழிவார்கள். அதனால் நமக்கென்ன? நாட்டின் மக்கள் தொகை அப்படியாவது கொஞ்சம் குறையட்டுமே!