Tuesday, December 29, 2009

கவிதை: வாக்குமூலம்

என் வழ்க்கை என்னுடையதில்லை;
நதிபோல் குறுகி
கரைகளுக்குள் அடங்கி நடக்காமல்
பாதைகளற்ற நீரோட்டமாய்
கிடைத்த வெளிகளில்
கிளைத்துப் போகிறதென் வாழ்க்கை!
என் பயணத்தின் திசைகளை
எதெதுவோ தீர்மானிக்க
இலக்கற்று ஓடிக் கொண்டிருக்கிறேன்!

இளவயதின் இலட்சியங்கள் எல்லாம்
சிதறிப் போயின சீக்கிரமே;
சின்னத் தடயமுமில்லை
வரித்துக் கொண்ட வாழ்க்கையை
வாழ்ந்ததின் அடையாளமாக.....!

தமிழ் இலக்கியம் படிக்கும்
தாகமிருந்தது பால்யத்தில்;
எதிர்காலப் பயம் பற்றிய
பொறியில் விழுந்ததில்
பொறியாளனாய் வெளியேறினேன்; குடும்பத்தின்
பொருளாதார சிரமங்களையும் மீறி......!

கலை இலக்கியத்தை வாழ்க்கையாய் வரிக்கும்
கனவுகள் இருந்தது நிறைய
கஞ்சிக்கும் வழியற்றுப் போகுமென்ற கவலையில்
உத்தியோகம் பார்த்துத்தான்
உயிர் வளர்க்க நேர்ந்தது.....!

காதலித்து கலப்பு மணம் புரிந்து
சாதியின் வேர்களைக் கொஞ்சம்
கில்லி எறியும்
வேகம் இருந்தது ஆயினும்
சுயசாதியில் மணமுடித்து
சுருங்கி வாழத்தான் வாய்த்தது....!

உயிர் குழைத்து உருவாக்கிய அம்மாவை
மகாராணியாய் பராமரிக்க
ஆசை இருந்தது மனம் நிறைய; ஆயினும்
பிழைப்புக்காக பிறிதொரு நாட்டில் நானுழல
பிறழ்ந்த மனதுடன் பிதற்றியபடி
பிச்சைக்காரியாய் வீதிகளில் அவள்
அலையத்தான் நேர்ந்தது.....!
கிராமத்துடனான
தொப்புள் கொடி உறவருந்ததில் - அம்மா
உயிருடன் இருக்கிறாளா இல்லையா என்ற
உண்மை கூட தெரியாமலே போனது....!

கடுகு போல் சிறுக வாழாமல்
ஊறுணி போல் கிராமத்திற்கே
உபயோகமாய் வாழ்ந்து விடுகிற
இலட்சியங்கள் கொண்டிருந்தேன்; ஆயினும்
சொகுசான பட்டணத்து வாழ்வில்
சொத்து சேர்ப்பதே
வாழ்வின் தேடலானதில்
வறண்டு தான் போனேன்
இதயத்தில் துளியும் ஈரமற்று......!

சிறுசிறு கணக்குகளிலும்
சில்லரைப் பிணக்குகளிலும்
நட்புகள் நழுவிப் போயின;
சொந்தமும் சுற்றமும்
விலகிப் போய் வெகு நாளாயிற்று;
பிரியங்களையும் பிரேமைகளையும் மீறி
மனைவியுடனான உறவும்
முறுக்கிக் கொள்கிறது அடிக்கடி.....!

விரிந்து பரவும் வெறியோடு
வேர் பிடிக்கத் தொடங்கினேன்;
சுற்றிலும் வேலியிட்டு
சூனியத்தை அடை காத்தேன்
கிளை விரித்துக் காத்திருந்தும்
அண்டவில்லை புள்ளினமெதுவும்
அப்புறந்தான் புரிந்ததெனக்கு
வளர்ந்து வந்தது முள் மரமென்று.....!.

இலைகள் பழுத்து உதிர்ந்து விட்டன
மொட்டுக்களெல்லாம்
மலராமலே கருகி விட்டன
காயில்லை; கனியில்லை; அதனால்
விதைகளும் விழுகவில்லை
மொட்டை மரமாய் நிற்கிறேன்
வெட்ட வெளிதனில்.....
வீழ்ந்தால் விறகுக்காவது ஆவேனோ
வெறுமனே மட்கி
மண்ணோடு மண்ணாகிப் போவேனோ....!

No comments:

Post a Comment