Wednesday, December 12, 2012

தினமணிக் கதிரில் என் சிறுகதை - கணிதச் சமன்பாடுகளில் காலாவதியாகும் மனித உறவுகள்


                         வீரகேசவன் பெர்மிஷன் போட்டு விட்டு வீட்டிற்குப் போகும் போது கூட முத்தையாவிடம் வந்து, “கண்டிப்பா ஒரு வழி வீட்டுக்கு வந்துட்டுப் போங்க ஸார்..... நீங்க, உங்க வீட்டுக்குப் போற வழியில தான் என்னோட வீடு....“என்று அழைப்பு விடுத்து விட்டுத் தான் போயிருந்தான்.
                        இன்றைக்கு அவனுடைய இரண்டாவது பெண்ணிற்கு மூன்றாம் வயது பிறந்த நாளாம். அவனும் ரொம்ப நாளாக இவனை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துக் கொண்டுதான் இருக்கிறான். இவனுக்குத் தான் போய் வருவதற்கான அவகாசமும் பொறுமையும் வாய்க்கப் பெறாமல் இழுத்துக் கொண்டே போகிறது.
                        மேலும் முத்தையாவிற்கு அவ்வளவு சீக்கிரம் யாருடைய வீட்டிற்கும் போய்ப் புழங்கி பழக்கமில்லை. அவனுடைய அம்மா பலதடவை அவனுடன், இப்படி சொந்தக்காரகள் யாருடனும் ஒட்டாமல் ஒதுங்கி இருக்கிற பழக்கத்திற்காக சண்டை போட்டிருக்கிறாள். ஆனாலும் அவள் உயிரோடு இருக்கிறவரை அவனை திருத்தவே முடியவில்லை.
                        வீட்டிற்கு, சொந்தக்காரர்கள் யாராவது வரும் போது அவர்களை என்ன உறவு முறை சொல்லி அழைப்பது என்று கூடத் தெரியாமல் பல தடவைகள் குழம்பித் தடுமாறி இருக்கிறான் முத்தையா. இவனுடைய அம்மா தான் சொல்லிக் கொடுப்பாள். அவள் வீட்டிலில்லாத நேரத்தில் யாராவது வந்து விட்டால் அவ்வளவுதான். என்ன பேசுவது என்றே தெரியாமல் திரு திருவென்று முழிப்பான்.
                        அப்புறம் சமாளித்துக் கொண்டு அப்போது வாய்க்கு என்ன உறவு முறை வருகிறதோ அதைச் சொல்லி “வாங்க பெரியம்மா.....”  என்றபடி வரவேற்பான். வீட்டிற்கு வந்திருப்பவரோ “அட என்ன தம்பி  என்னப் போயி பெரியம்மான்குற;  நான் உனக்கு அத்தை முறையாக்கும்;  இவர் உனக்கு மாமா வாக்கும்..... எங்க பொண்ண நீ கட்டிக்க வேண்டாமா...” என்று சிரித்தபடி சுட்டிக் காட்டுவார்கள்.
                        முத்தையாவும் வீரகேசவனும் வண்டலூருக்குப் பக்கத்தில் ஒரு கட்டுமானக் கம்பெனியில் வேலை பார்க்கிறார்கள். வீரகேசவன் வேலைக்கு சேர்ந்த புதிதில் ஒருநாள் முத்தையாவிடம் சாதாரணமாக பேசிக் கொண்டிருக்கும் போது, “உங்கள் பேச்சு, முகஜாடை எல்லாம் பார்த்தா தெற்கத்திப் பக்கம் மாதிரி தெரியுது.... உங்களோட சொந்த ஊர் எது சார்...?” என்றான்.
                        ”அப்படியா, நான் சென்னைக்கு வந்து செட்டிலாகி இருபது வருஷத்துக்கும் மேல ஆயிருச்சு; இன்னுமா என் முகத்துல தெற்கத்திக் களை தெரியுது.....என்று முகத்தில் ஆச்சர்யம் பொங்க கேட்ட முத்தையா ”நீ சொல்றது ரொம்பச் சரிப்பா; எனக்கு பூர்வீகம் ஸ்ரீவில்லிப்புத்தூருக்குப் பக்கத்துல முல்லிக்குளம்குற கிராமம்....”  என்றான்.
                       வீரகேசவன் “எனக்கு சாத்தூர் சார்....” என்று மலர்ந்தான். “ஸ்ரீவில்லிப்புத்தூர்ல பால்கோவா பேமஸ் ஆச்சே! அந்த பலகாரம்னா என் மனைவிக்கு உசுரு ஸார்; எடைக்கு எடை உங்க ஊர் பால்கோவா குடுக்குறதா இருந்தா புருஷனக் கூட விட்டுக் குடுத்துருவா....... அடுத்த தடவை ஊருக்கு போயிட்டு வரும்போது ஒரு ரெண்டு கிலோ மறக்காம வாங்கிட்டு வாங்க ஸார்....” என்றான் உரிமையாய்.
                        ”அதுக்கென்னப்பா வாங்கிட்டு வந்துட்டாப் போகுது....” என்றவன் கொஞ்சம் இடைவெளிவிட்டு “எங்கப்பா..... ஊர்ப்பக்கம் போயி பத்து வருஷத்துக்கு மேல ஆயிருச்சு.... இப்பல்லாம் ஊர்ப் பக்கமே போறதில்ல; அப்பா அம்மால்லாம் செத்துப் போயிட்டாங்க; நாங்க போனா, எங்கள ஆதரிக்குறதுக்கும் அங்க யாருமில்ல.....” என்றான் வருத்தம் தொனிக்க.
                        ”ஏன் ஸார் இவ்வளவு விரக்தியா பேசுறீங்க்? எங்க ஊருக்கு வாங்க ஸார்.... திரும்பும் போது சாத்தூர் சேவும், கருப்பட்டி மிட்டாயும் ஒரு மூட்டை வாங்கிக் குடுத்து அனுப்புறேன்....” என்றான். இருவரும் சிரித்துக் கொண்டார்கள்.
                        அன்றைக்கிலிருந்து “ரொம்ப நெருங்கிட்டோம்; பக்கத்து பக்கத்து ஊர்க்காரங்களாயிட்டோம்; வீட்டுக்கு வாங்களேன் ஸார்.... பேசிப் புழங்கி இருக்கலாம்ல......” என்று வற்புறுத்தவே தொடங்கி விட்டான்.
                        ”என் பொண்டாட்டி கிராமத்துப் பொண்ணு ஸார்; அருமையா சமைக்கும்; உடனே பட்டிக்காட்டு சமையல்னு குறைச்சு எடை போட்டுறாதீங்க.... இப்ப சென்னையில பேமஸா இருக்குற ஃபாஸ்ட் ஃபுட் அயிட்டங்கள் அதான் ஃபிரைடு ரைஸ், நூடூல்ஸ், சிக்கன் மஞ்சூரியன் எல்லாம் கூட சூப்பரா சமைக்கும் ஸார்.... நம்ம ஆபீஸ்லருந்து எங்க வீடு கொஞ்சம் தூரம் தான்; இருந்தாலும் விதம் விதமா சாப்புடுறதுக்காகவே மத்தியானம் ஒரு தடவை வீட்டுக்குப் போயிட்டு வர்றேன்னா பார்த்துக்குங்களேன்.....” என்று அவ்வப்போது ஆசை மூட்ட வேறு செய்தான்.
                        இன்றைக்கு வீரகேசவனின் வீட்டிற்குப் போய் விட்டுத்தான் வரலாமே என்று முத்தையாவிற்கு தோன்றியது. போனால் ஒரு வேளையாவது வாய்க்கு ருசியாக சாப்பிட்டு வரலாம் என்கிற ஆசையும் கிளர்ந்தது. வாய்க்கு ருசியாக சாப்பிட்டுத் தான் எத்தனை நாளாகிறது.....!
                        இவனுடைய மனைவிக்கு திருப்பத்தூருக்குப் பக்கத்தில் ஒரு கிராமத்தில் அரசு மேல் நிலைப்பள்ளியில் ஆசிரியை வேலை கிடைத்ததும் அதற்காகவே காத்திருந்த்து போல் குழந்தையையும் கையில் பிடித்தபடி பயணப்பட்டு விட்டாள்.
                        அங்கேயே வீடெடுத்து தங்கிக் கொண்டு மாதம் ஒரிரு முறைகள் தான் சென்னைக்கு வந்து போகிறாள். அப்படி வருகிறவளுக்கு, இவன் அலங்கோலமாய்ப் போட்டிருக்கும் வீட்டை ஒதுங்க வைக்கவே நேரம் சரியாக இருக்கும். வாய்க்கு ருசியாக ஆக்கிப் போட வெல்லாம் நேரமிருக்காது.
                        மேலும் இவனுடைய மனைவிக்கு விதவிதமாய் சமைப்பதிலெல்லாம் ஆர்வமிருப்பதில்லை. அவள் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் ஹோட்டலிலிருந்து உணவை வரவழைத்து சாப்பிடுவதைத் தான் பெரிதும் விரும்புவாள். முத்தையாவோ வீட்டுச் சாப்பாட்டில் அதிகம் ஆர்வம் காட்டுபவன்.
                        இந்த விஷயத்தில் இருவருக்கும் எப்போதும் சண்டை தான். “உங்களுக்கு வேணுமின்னா நீங்க சமைச்சு சாப்பிடுங்க; எப்பவாவது லீவுக்கு வர்ற என் உயிர ஏன் எடுக்குறீங்க......” எரிந்து விழுவாள்.
                        ”என்ன பண்றது? எனக்கு சமைக்கத் தெரியல்லயே! நான் சாம்பார் வச்சா அது ரசம் மாதிரி இருக்கு; சரி நமக்கு நல்லா ரசம் வைக்க வருதுன்னு அதே ஃபார்முலாவுல இன்னொரு நாள் வச்சா அன்னைக்கு ரசம் கசாயம் மாதிரி அமையுது.....” முத்தையாவின் பதில் இரங்கத்தக்க விதத்தில் இருக்கும்.
                        ”ஆமா ஆம்பளைங்களுக்கு இது ஒரு சாக்கு.... சமைச்சு பழகிக்க வேண்டியது தான! நாங்க எல்லாம் சமைக்கிறதுக்கு பி.எச்.டி.யா படிச்சுட்டு வந்துருக்கோம்..... எல்லாம் பழக்கத்துல வர்றது தான்..... பொம்பளைங்களுக்கு என்னைக்கு சமையல் கட்டுலருந்து விடுதலை கிடைக்குதோ அன்னைக்குத் தான் உண்மையான விடுதலை; அதுவரைக்கும் ஆணாதிக்கத்தின் அடிமைகள் தான் நாங்கள்.....” என்று சிணுங்கியபடி அவள் சமையலறைக்குள் போவாள்.
                        இவன் உடனே பதறிப்போய் “அய்யோ செல்லம்; எப்பவாவது வீடுக்கு வர்ற நீ.....அந்த நேரத்தையும் சமைக்குறதுல வீணாக்க வேண்டாம்; நான் வெளியில போயி வாங்கிட்டே வந்துடுறேன்.....” என்றபடி பையை எடுத்துக் கொண்டு கிளம்பிப் போவான்.
                        பெரும்பாலும் அவள் வீட்டிற்கு வருகிற ஞாயிற்றுக் கிழமைகளின் பகல்கள் இப்படித்தான் கழியும். அவளுடனான சண்டையை அதிகம் வளர்த்தால் அபூர்வமாய் அவள் புணர்ச்சிக்கு அனுமதிக்கிற இரவுகளிலும் இவன் ‘பட்டினி’யாய்’ புரண்டு கொண்டிருக்க நேரும் என்பதால் இவனே அடங்கிப் போய் விடுவான்.  
                        தாம்பரத்தில் இறங்கியதும் ஒரே ஒரு நிமிஷம் முத்தையா யோசித்தான் – நேரே வீட்டிற்குப் போக மின்சார இரயிலைப் பிடிப்பதா அல்லது வீரகேசவனின் வீட்டிற்கு போய் வரலாமா என்று. வீரகேசவன் சொன்னபடி, அவன் வீடு ஒன்றும் முத்தையா அவனின் வீட்டிற்குப் போகும் வழியில் எல்லாம் இல்லை.
                        முத்தையா தாம்பரத்திலிருந்து மின் இரயிலைப் பிடித்து ஆவடி போக வேண்டும்; அங்கிருந்து ஸ்டாண்டிலிருக்கும் பைக்கை எடுத்து கோயில்பதாகை போக வேண்டும். பொதுவாகவே அவன் வீட்டிற்குப் போய்ச் சேர இரவு ஒன்பதரைக்கு மேலாகி விடும். 
                        வீரகேசவனின் வீடு தாம்பரத்திலிருந்து முடிச்சூர் தாண்டி இருந்தது. அங்கு போய்விட்டு இவனுடைய வீட்டிற்குப் போவதானால் எப்படியும் பதினோரு மணிக்கு மேலாகி விடும். வீட்டில் இவன் வருகையை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்க யாருமில்லை என்பதால் பிரச்னை எதுவுமில்லை.
                        வீரகேசவனின் வீட்டிற்குப் போவதென்று முடிவானதும் ஏதாவது வாங்கிக் கொண்டு போகலாம் என்று மார்க்கெட் பகுதிக்குப் போனான். யாருடைய வீட்டிற்குப் போனாலும் ஏதாவது வாங்கிக் கொண்டு போக வேண்டுமெகிற பழக்கத்தை அவனுடைய மனைவி தான் வற்புறுத்தி ஏற்படுத்தினாள்.
                        கல்யாணத்திற்கு முன்பு வரை யாரைப் பார்க்கப் போனாலும் கைவீசிக் கொண்டுதான் போவது அவனுக்கு வழக்கம். அவனின் குடும்பத்தில் எல்லாம் எல்லோருமே இப்படித்தான். குழந்தைகள் இருக்கிற வீட்டிற்குப் போனால் மட்டுமே அபூர்வமாக ஒரு பொட்டலம் சீனிச்சேவோ அல்லது காரச்சேவோ வாங்கிப் போவார்கள். மற்றபடி வீசுன கை வெறுங்கைதான்.
                        அதே பழக்கத்தில் கல்யாணத்திற்கு அப்புறம் முதல் முறையாக முத்தையாவின் மனைவி அவளின் தாய் வீட்டிற்குப் போயிருந்தபோது, அவளைப் பார்க்கப் போயிருந்த போதும் எதுவும் வாங்கிக் கொண்டு போயிருக்கவில்லை. இவன் போய்க் கொஞ்ச நேரத்தில் அவளாகவே சொன்னாள்.
                        ”வாங்கிட்டு வந்த பலகாரத்த எடுத்துக் குடுப்பா.... அப்பாவும் அம்மாவும் சாப்புடட்டும்....”
                        இவனுக்குத் திகைப்பாக இருந்த்து. தயங்கியபடி மெதுவாக “நான் பலகாரம் எதுவும் வாங்கியாரலேயே...! இங்க என்ன சின்னப் பிள்ளையா இருக்கு; தின்பண்டமெல்லாம் வாங்கியாறதுக்கு......” என்று சொன்னதும் திட்டிக் குமித்து விட்டாள். அப்புறம் அவளின் அம்மா தான் தலையிட்டு அவளை சமாதானப் படுத்தினாள். “சரி விடுடி; கிராமத்துக் காரங்கள்ளாம் அப்படித்தான்....”
                        அந்த சம்பவத்திற்கப்புறம் முத்தையா தினசரி வேலை முடிந்து வீட்டிற்குப் போகும் போதும் கூட மனைவி வீட்டிலிருக்கிறாள் என்றால் தின்பதற்கு ஏதாவது வாங்கிப் போவதை பழக்கப் படுத்திக் கொண்டான்.
                        இப்போது, முத்தையாவிற்கு மூன்று வயது தொடங்கி இருக்கும் பெண் குழந்தைக்கு என்ன வாங்கிப் போவது என்று யோசணையாக இருந்தது. ஏதாவது பொம்மைகள் வாங்கிப் போகலாம் என்றால், இவன் வாங்கிப் போகும் பொம்மை ஏற்கெனவே வாங்கப்பட்டு அவர்கள் வீட்டிலிருந்தால் என்ன செய்வது என்று தயக்கமாக இருந்தது. தின்பண்டமே வாங்கிப் போகலாம் என்று தீர்மானித்தான்.
                        பலகாரக் கடைக்குள் நுழந்தான். நான்கு பேர் இருக்கும் குடும்பத்திற்கு குறைந்தது அரைக் கிலோ இனிப்பாவது வாங்கிப் போனால் தான் மரியாதையாக இருக்கும் என்று நினைத்தபடி கடையிலிருக்கும் விலைப் பட்டியலை நோட்டம் விட்டான். மில்க் ஸ்வீட் அரைக் கிலோ வாங்குவதென்றால் 180 ரூபாய் ஆகிவிடும் போலிருந்தது. ஒருவேளை உணவிற்கு ஈடாக இவ்வளவு செலவழிக்க வேண்டுமா என்று சிறு சஞ்சலம் ஏற்பட்டது அவனுக்கு.
                        கடையில் வேறென்ன இருக்கிறது என்று கண்களை அலைய விட்டபோது கண்ணாடிப் பேழைகளுக்கு பின்னால் அடுக்கப் பட்டிருந்த பிஸ்கெட் பாக்கெட்கள் இவனின் கவனத்தை ஈர்த்தன. கெட்டியான பூ வேலைப்பாடுகள் நிறைந்த செவ்வக அட்டைக்குள் பேக்கிங் பண்ணப்பட்டு அழகாய்க் கண்ணைப் பறித்த கிரீம் பிஸ்கட் பாக்கெட் ஒன்றைக் காட்டி கடைக்காரனிடம் எடுத்துத் தரச் சொன்னான்.
                        ”என்ன வெலைப்பா....” என்றபடி பாக்கெட்டில் அச்சிடப் பட்டிருந்த MRP விலையைத் தேடிப் பார்த்தான்.
                        ”முப்பது ரூபாய் ஸார்.....” என்றான் கடைக்கார சிறுவன்.                
                        MRP விலையே 28 ரூபாய் தானப்பா போட்டுருக்கு; நீ அநியாயமா 2 ரூபாய் அதிகமா கேட்குற..... கன்ஸ்யூமர் கோர்ட்ல கேஸ் போட்டுருவேன்...” என்றான் முத்தையா.
                        ”அய்யே! இங்க 30 ரூபாய் தான் வெல; இஷ்டமின்னா வாங்கு... இல்லைன்னா போய்க்கிட்டே இரு....கோர்ட் கீர்ட்டுன்னு பயமுறுத்துற வேலை எல்லாம் இங்க வேண்டாம்...” என்றான் மூர்க்கமாக.
                        முத்தையா கடிகாரத்தில் மணி பார்த்தான். இரவு எட்டை நெருங்கி கொண்டிருந்தது. இந்தச் சிறுவனுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தால் மிகவும் தாமதமாகி விடும் என்று எண்ணமிட்டபடி அவன் கேட்ட பணத்தைக் கொடுத்து பிஸ்கட்டை வாங்கிக் கொண்டு கடையிலிருந்து வெளியேறினான்.
                        வீரகேசவனின் வீடு முடிச்சூர் தாண்டி எங்கேயோ இருக்கிறது என்று மட்டும் தான் முத்தையா அறிந்திருந்தான். தெளிவான முகவரி அவனிடம் இல்லை. வீரகேசவனுக்கு போன் பண்ணினான். “நான் தாம்பரம் வந்துட்டேன்; இங்கருந்து உன் வீட்டுக்கு எப்படிப்பா வர்றது.....”
                        வீரகேசவன் இவன் வருகையை கொஞ்சமும் எதிர்பார்த்திருக்க வில்லை என்பது அவனுடைய குரலில் தெரிந்தது. “அப்படியா ஸார்; நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல ஸார்..... சர்ப்ரைஸ்; பரவாயில்ல..... வாங்க ஸார்; நானும் இப்ப தாம்பரத்துல தான் இருக்கேன் ஸார்; நீங்க முடிச்சூர் ரோட்டுக்கு வந்து அந்த முனையில ஒரு பத்து பதினைஞ்சு நிமிஷம் காத்துருங்க; நான் கொஞ்சம் ஷாப்பிங் பண்ண வேண்டி இருக்கு. முடிச்சதும் உங்கள வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்......” என்றான்.
                        முத்தையா வீரகேசவனுடன் அவன் வீட்டிற்குப் போய் இறங்கிய போது அவனின் மனைவி “எவ்வளவு நேரங்க....” என்று கடிந்து கொள்ளத் தொடங்கி, முத்தையா நிற்பதைப் பார்த்த்தும் சுருதி குறைந்து, அவன் வாங்கிப் போயிருந்த பொருட்களை அபகரித்துக் கொண்டு அவசரமாய் உள்ளே போகப் போனாள். அவளை நிறுத்தி வீரகேசவன் முத்தையாவை அவளிடம் அறிமுகப் படுத்தி வைத்தான். அவள் கைகுவித்து வணக்கம் சொல்லியதும் பரபரப்பாய் வீட்டிற்குள் போனாள்.
                        அது 15 மாடிகளும், மாடிக்கு நான்காக மொத்தம் 60 வீடுகளும் கொண்ட மிகப் பெரிய குடியிருப்பு. இவர்கள் வீடிற்குள் நுழைந்த போது வீட்டின் வரவேற்பு அறை ஏற்கெனவே கலர் காகிதங்கள், ஜிகினாக்கள் எல்லாம் ஒட்டப்பட்டு ஒரு குழந்தையின் பிறந்தநாளை எதிர் கொள்ள தயாராகவே இருந்தது. ஒரு எட்டு வயது மதிக்கத்தக்க பையனும், பிறந்த நாள் கொண்டாடப் போகும் பெண்ணும் ”அப்பா....” என்றபடி வீரகேசவனிடம் ஓடி வந்து, முத்தையா நிற்பதைப் பார்த்து தயங்கி நின்றார்கள். “அங்கிளுக்கு ஷேக் ஹேண்ட் குடுங்க.....” என்றான் வீரகேசவன். கை கொடுத்தார்கள்.
                        முத்தையா இருவரையும் அணைத்தபடி “உங்க பேர் சொல்லுங்க....”என்றான். “ஐயாம் ஷ்யாம்...” என்று பையனும் “பிரித்தி....”என்று பெண் மழலையிலும் சொன்னார்கள். பெண்ணிடம் இவன் வாங்கிப் போயிருந்த பிஸ்கட் பாக்கெட்டை நீட்டியதும் அது தயக்கமாய் வீரகேசவனைப் பார்த்தது. அவன் “வாங்கிக்க....” என்று அனுமதி கொடுக்கவும், பெற்றுக் கொண்டு உள்ளறை நோக்கி ஓடியது. கூடவே பையனும் ஓடினான்.
                        ”வீட்டை சுத்திப் பார்க்கலாமா ஸார்....” என்றான் வீரகேசவன். முத்தையா தலையாட்டவும் அவனை ஒவ்வொரு அறையாக அழைத்துக் கொண்டு போனான். அது மூன்று படுக்கை அறைகள் கொண்ட விசாலமான ப்ளாட். ஒவ்வொரு அறையும் மெல்லிய வண்ணங்களுடன் மிகவும் நேர்த்தியாக அலங்கரிக்கப் பட்டு,  அங்கங்கே கலை அம்சம் மிளிரும் பொருட்களும், பூச்சாடிகளும், பிளாஸ்டிக் பூக்கள் மற்றும் நவீன பொருட்களால் நிரம்பி இருந்தன.
                        வரவேற்பறையில் ஷோகேஸுக்குள் மிகப்பெரிய பிளாஸ்மா டீ.வி. ஹோம் தியேட்டருடன் இருந்தது. படுக்கை அறைகளிலும் டீ.வி.க்களும் மியூசிக் சிஸ்டங்களும் இருந்தன. இரண்டு படுக்கை அறைகளில் ஏ.சி. இருந்த்து. சமையலறையும் நான்கு பர்னர்கள் கொண்ட அடுப்பு, புகை உறிஞ்சுவதற்கான ஏற்பாடுகளுடனும் நவீன எலக்ட்ரிக் சாதனஙகளுடனும் இருந்தது.        
                        ”வீடு நெஜமாவே சூப்பரா இருக்கு வீரகேசவன்..... நல்லா அலங்கரிச்சுருக்கீங்க...” என்றான் முத்தையா. “நமக்கெங்க ஸார் அதுக்கெல்லாம் நேரம்! எல்லாம் வொய்ஃபோட கைங்கர்யம் தான்.... அவள் கேட்குற பொருட்கள வாங்கித் தர்றது மட்டும் தான் என்னோட வேலை....” அவனுடைய பேச்சில் பெருமை பொங்கியது. அப்போது அவனுடைய மனைவி அவசரமாய் வெளியே போனாள்.
                        ”பிறந்த நாள் கொண்டாடுறதுக்கு அக்கம் பக்கத்து பிளாட்காரங்களக் கூப்புடப் போறாள்....” வீரகேசவன் தகவல் சொன்னான்.
                        ”என்ன வெலையாச்சுப்பா ஃப்ளாட்டு....?”
                        ”அஞ்சு வருஷத்துக்கு முன்னால இதை நான் வாங்கும் போது 60 லட்சம் ஸார்..... இப்ப இதே அளவுல வாங்கப்போனா ஒண்ணரைக் கோடிக்கு மேல ஆயிடும்....” என்றான்.
                        முத்தையாவிற்கு தாகமாக இருந்தது. தண்ணீர் கேட்க சங்கோஷமாக இருந்தது. சரி சாப்பிடும் போது குடித்துக் கொள்ளலாம் என்று உலர்ந்திருந்த உதட்டை நாக்கால் நனைத்துக் கொண்டான்.
                        வீரகேசவனின் மனைவியுடன் இரண்டு பெண்களும் மூன்று குழந்தைகளும் வந்தார்கள். பிரீத்தியின் பிறந்த நாள் கொண்டாட்டம் தொடங்கியது. கேக்வெட்டி வண்ண மெழுகுவர்த்திகள் ஊதி அணைக்கப்பட்டு, ஒரு மெழுகுவர்த்தி ஒளிர வைக்கப்பட்டு, குடும்பத்தினர்கள் மாறி மாறி கேக் ஊட்டிக் கொண்டார்கள். குழந்தைகள் ஆங்கிலத்தில் பிறந்த நாள் வாழ்த்துப் பாடலை பாடினார்கள். அப்புறம் எல்லோருக்கும் பேப்பர் பிளேட்டில் வைத்து ஆளுக்கொரு கேக் துண்டு வழங்கப்பட்ட்து.
                        வந்திருந்தவர்களுக் கெல்லாம் வரவேற்பறையிலேயே பிளாஸ்டிக் சேர்கள் போடப்பட, வீரகேசவன் இவனை டைனிங் டேபிளில் உட்காரச் சொன்னான். அதுவும் சரிதான்; அப்படியே சாப்பிட்டு விடலாம் என்று நினைத்தபடி இவனும் உட்கார்ந்து கேக்கை சாப்பிடத் தொடங்கினான். எல்லோருக்கும் பேப்பர் கப்பில் காஃபி வந்த்து. இவனுக்கும் வந்தது. சாப்பிடுவதற்கு முன்னால் எப்படி காஃபி குடிப்பது என்று இவனுக்கு தயக்கமாக இருந்தது. ஆறிப் போகுமென்று அதையும் குடித்து முடித்தான்.
                        வந்தவர்கள் எல்லோரும் கிளம்பிப் போனார்கள். வீரகேசவன் இன்னொரு துண்டு கேக்கை எடுத்துக் கொண்டு வந்து முத்தையாவின் பிளேட்டில் போடப் போனான். ”வேணாம்ப்பா; ஏற்கெனவே எனக்கு சுகர் இருக்கு....” என்றபடி கைகளால் தடுக்கவும், ”அப்படியா ஸார் .....”  என்றபடி சமையலறைக்குள் ஓடிப்போய் ஒரு வெஜிடபிள் சமோசாவைக் கொண்டு வந்து பிளேட்டில் போட்டான்.
                        ”தினம் அவ்வளவு தூரத்துலருந்து எப்படி ஸார் வேலைக்கு வந்துட்டுப் போறீங்க...! கஷ்டமா இல்லையா...?” வீரகேசவன் கேட்டான்.
                        ”கஷ்டமாத் தான் இருக்கு; சொந்த வீடு அங்கருக்கும் போது என்னப்பா செய்றது...!’
                        ”காலையில எழுந்துருச்சு நீங்களே சமையல் பண்ணி.... பாக்ஸ்ல அடச்சு எடுத்துக்கிட்டு, லொங்கு லொங்குன்னு ஓடி இரயிலப் புடுச்சு..... பாவம் ஸார் நீங்க.....” நிஜமான அனுதாபமும் அக்கறையும் அவன் வார்த்தைகளில் வழிந்தது.
                        ”நீயும் குடும்பத்தோட எங்க வீட்டுக்கு ஒரு தடவை வந்துட்டுப் போகணும்ப்பா.....” என்று முத்தையா அவனுக்கு அழைப்பு விடுத்தான்.
                        ”அவ்வளவு தூரம் எங்க ஸார் வர முடியும்! அடுத்த வருஷம் கார் வாங்கீட்டு முடிஞ்சா வர்றோம் ஸார்....” என்றான்.
                        வீரகேசவனின் மனைவி சமையலறையில் உட்கார்ந்து கொண்டு இவர்கள் பேசுவதைக் கவனித்துக் கொண்டிருந்தாள். பிறந்தநாள் கொண்டாடிய பெண் அவளின் மடியில் படுத்துத் தூங்கிப் போனது. பையன் வரவேற்பறை சோபாவில் உட்கார்ந்தபடி ஏதோ பாடப் புத்தகத்தை விரித்து வைத்துப் படித்துக் கொண்டிருந்தான்.
                        முத்தையாவிற்கு மிகவும் ஆயாசமாக இருந்தது. வீரகேசவனோ நேரமாவது தெரியாமல் பேசிக் கொண்டிருந்தான். இரவுச் சாப்பாடு கொடுப்பதற்கான அறிகுறி எதுவுமே தென்பட வில்லை. ஒருவேளை, தான் கிளம்புகிறேன் என்று சொன்னால் தான் நேரமாவது உறுத்தி சாப்பிடச் சொல்வார்களோ என்ற எண்ணத்தில் “சரி கேசவா, ரொம்ப நேரமாயிருச்சு; நான் கிளம்புறேன்......” என்று முத்தையா எழுந்து கொள்ளவும், வீரகேசவனும் “அதுவும் சரிதான் ஸார்; நீங்க ரொம்ப தூரம் வேற போகணும்....” என்றபடி அவனை வழி யனுப்ப வாசலுக்கு வந்தான்.
                        ”இங்கருந்து ஒரு ஆட்டோ புடிச்சு, தாம்பரம் போயிடுங்க ஸார்; அப்புறம் வழக்கம் போல மின்சார இரயில் புடிச்சுப் போய்க்கங்க.....” என்று ஆலோசனை சொன்னான். முத்தையாவிற்கு பசி வயிற்றைக் கிள்ளியது. முதலில் முடிச்சூரில் போய் சாப்பிட வேண்டும் என்று எண்ணியபடி எட்டி நடையைப் போட்டான்.
                        ”என்னங்க மனுஷன், உங்க ஃப்ரண்டு! ஒரு குழந்தையோட பிறந்த நாளைக்கு, ஒரு கிப்ட் கூட வாங்கிட்டு வரத் துப்பில்லாம.....” என்றாள் வீரகேசவனின் மனைவி எரிச்சலுடன்.
                        ”அதான் பிஸ்கட் பாக்கெட் வாங்கிட்டு வந்தாருல்ல; பாவம் பட்டினியா கிளம்பிப் போறார்.....” என்றான் வீரகேசவன்.
                        ”ஆமாம் உங்க ஃப்ரண்டுக்கு சாப்பாடு ஒண்ணு தான் குறைச்சல்....! 28ரூ.க்கு பிஸ்கட் வாங்கிட்டு வந்தார்; அதுக்குத் தான் நாம 12ரூ. கேக், 6ரூ. சமோசா, 10ரூ. காஃபி நான் குடுத்த காஃபி 10ரூ. பெருமில்ல! - குடுத்தோம்ல... கணக்கு சரியாயிடுச்சு......” என்றாள்.
                        வீரகேசவனின் பையன் சத்தம் போட்டு பாடம் படிக்கத் தொடங்கினான். தமிழர்கள் விருந்தோம்பல் பண்பில் சிறந்து விளங்குபவர்கள்; நம் முன்னோர்கள், இரவுகளில் தங்களின் கிராமங்களைக் கடந்து போகும் வழிப் போக்கர்களுக்குக் கூட உணவு கொடுத்து, அவர்கள் உறங்கி ஓய்வெடுப்பதற்காக தங்களின் திண்ணைகளை ஒழித்துக் கொடுத்து உபசரிக்கும் உயர்ந்த பழக்கம் உள்ளவர்கள்.
                        படித்துக் கொண்டிருந்தவன் திடீரென்று வீரகேசவனிடம் கேட்டான் ”அப்பா, விருந்தோம்பல்னா என்னப்பா அர்த்தம்?”


Ø  முற்றும்

(நன்றி: தினமணிக் கதிர் 25.11.2012)