Monday, October 11, 2010

கவிதை - இரவின் நிழல்

அனேக நேரங்களில் - நீயென்
தோளில் முகம் புதைத்து
அழுவதில்
ஆறுதல் அடைந்திருக்கிறாய்;

சிறுகுழந்தையாய்ச் சுருண்டு – என்
மடியில் படுத்துறங்குவதில்
மகிழ்வு கண்டிருக்கிறாய்;

வெறுமை தகிக்கும் உன்
விடுதிச் சூழலிலிருந்து விடுபட்டு
எங்களின் வீட்டிற்கு
ஓடி வரும் போதெல்லாம்
துப்பட்டாவையும் துயரங்களையும்
களைந்து வீசி விட்டு
விடுதலை பெற்ற
சிறுபறவையாய்
சந்தோஷச் சிறகை விரித்திருக்கிறாய்.....

இப்போதெல்லாம் நீ
என் அருகில் அமரவே
அச்சப்படுகிறாய்;

தனித்திருக்கும் தருணங்களைத்
தவிர்க்கவே விரும்புகிறாய்;

கண் பார்த்து நான் பேசினாலும்
துப்பட்டாவை அடிக்கடி
இழுத்து விட்டு இம்சிக்கிறாய்;

இருவருக்கும் இடையில்
இப்போது விழுந்து கிடக்கிறது;
எனக்குள்ளிருந்த
ஆணெனும் மிருகம் விழித்து
உலாவத் தொடங்கிய
கனத்த இரவொன்றின் நிழல்
கடக்கவே முடியாதபடி.....

Sunday, October 10, 2010

சிறுகதை: பலிகேட்கும் தேர்வுகள் - மீள் பிரசுரம்

குறிப்பு:

இந்தச் சிறுகதை ஏற்கெனெவே நம்முடைய தளத்தில் பதிவேறி யாராலும் கண்டு கொள்ளப் படாமல் ( மன்னிக்கவும்: ஒருத்தர் கருத்துச் சொல்லியிருந்தார்) கடந்து போயிருந்தது.  இது அப்படி அமரச் சிறுகதை ஒன்றும் இல்லை தான்.

இந்தச் சிறுகதையை நான் 2008ம் வருஷத்தில் எழுதினேன். ஒவ்வொரு பத்திரிக்கையாகப் பவனி போய் செப்டம்பர் 2010ல் தான் தினமணிக் கதிரில் பிரசுரமானது.மாணவன் ஆசிரியையைக் கொலை செய்வதும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதுமான இன்றைய கல்விச் சூழலில் இந்தச் சிறுகதை மீண்டும் முக்கியத்துவம் பெறுவதாக நான் கருதுவதாலும் புதிதாக ஏதும் எழுதுவதற்கு   எனக்கு அலுப்பாக இருப்பதாலும் இந்தச் சிறுகதையையே மீண்டும் பதிவிடுகிறேன்.

சிறுகதை படிக்க நேரமோ பொறுமையோ இல்லாதவர்கள் கடந்து போய் விடுங்கள். நன்றி!

பத்தாம் வகுப்பு மாணவர்களின் பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு அங்கயற்கண்ணி கொஞ்சம் தாமதமாய்த் தான் போய்ச் சேர்ந்தாள். மையத்தின் சூபர்வைசர் ஏற்கெனவே பரிச்சயமானவர்.
“என்ன டீச்சர், முதல் நாளே லேட்டா வர்றீங்க! வழக்கம் போல ட்ரெயின் லேட்டா….!” என்றவர் “உங்களப் பார்த்தே தீருவேன்னு ஒருத்தர் காலையிலருந்து காத்திருக்கிறார்; என்னன்னு விசாரிச்சுட்டு வந்துருங்க…” என்று ஒரு நமட்டுச் சிரிப்புடன் அனுப்பி வைத்தார்.
உறவுகளே இல்லாமலாகி விட்ட வாழ்க்கையில் நம்மை யார் தேடி வந்திருக்கிறார்கள்? சூபர்வைசரின் சிரிப்பைப் பார்த்தால் இதில் ஏதோ வில்லங்கம் இருக்கும் போலிருக்கிறதே என்று மனசுக்குள் நிழலாடும் கேள்விகளுடன், தேடி வந்தவரை அணுகி விசாரித்தபோது அவர் சென்னையிலிருக்கும் ஒரு பிரபல பள்ளியின் புரோக்கர் என்று புரிந்தது.
அந்த பள்ளியின் மாணவர்கள் எழுதிய விடைத்தாட்கள் இந்த மையத்திற்குத் தான் திருத்துவதற்கு வந்திருக்கிறது என்றும், அவை இவளிடம் வந்தால் தாராளமாக மதிப்பெண்களைப் போடவேண்டும் என்றும் அப்படிச் செய்தால் ஒரு பேப்பருக்கு இவ்வளவு என்று கொடுத்து விடுவதாகவும் சொல்லி ஒரு பெருந்தொகையை முன்பணமாகவும் கொடுக்க முன் வந்தார். அங்கயற் கண்ணி அவரைத் திட்டி அனுப்பி விட்டு விடைத்தாள் திருத்தும் அறைக்குள் போனாள்.
“என்ன டீச்சர் நல்ல அறுவடையா…?” என்றார் சூபர்வைசர் கிண்டலாய்ச் சிரித்தபடி.
“அட, நீங்க வேற ஏன் ஸார் வெறுப்பேத்துறீங்க….! டம்மி நம்பர் அது இதுன்னு போட்டு எல்லாம் ரகசியமா வச்சிருந்தும் எப்படி ஸார் பேப்பர ட்ரேஸ் பண்ணி வந்துடுறாங்க….” என்றாள்.
“அந்த அரசியல் எல்லாம் நமக்கு விளங்காது டீச்சர்; ஆனால் இந்தத் தடவ பேப்பர ட்ரேஸ் பண்றது கொஞ்சம் கஷ்டம் தான்; ஏன்னா இப்ப புதுசா வந்துருக்கிற லேடி சி.இ.ஓ. கடைசி நேரத்துல, முதல்ல போட்டுருந்த ஷெட்யூல்படி பேப்பர்கள அனுப்பாம மாத்தி மாத்தி அனுப்பச் சொல்லீட்டாங்க… இப்பக் கூட உங்களத் தேடி வந்து பார்த்துட்டுப் போறாருல்ல; அவர் ஸ்கூல் பேப்பர் இந்த சென்டருக்கு வரல; நானும் சொல்லிப் பார்த்தேன்; அவர் கேட்கல….” என்றபடி அவள் திருத்து வதற்கான பேப்பர் கட்டைக் கொடுத்தார்.
“இது எந்த ஸ்கூல் பேப்பர் ஸார்….” என்று அங்கயற்கண்ணி கேட்கவும் அடையாரிலிருக்கும் பிரபல பள்ளியின் பெயரைச் சொன்னார் அவர். அங்கயற்கண்ணிக்கு சிலீரென்றிருந்தது. அந்தப் பள்ளியில் தான் அவளின் பெண் அன்புச்செல்வி ஒன்பதாம் வகுப்பு வரைப் படித்தாள். பத்தாம் வகுப்பில் தொடர்ந்து படிக்க அனுமதி மறுத்து விட்டார்கள்.
சென்ற வருஷ ஜூன் மாதத்தின் மத்தியில் கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறந்து கொஞ்ச நாட்களாகியிருந்த நிலையில், அன்புச் செல்வி படிக்கும் பள்ளி நிர்வாகம் அங்கயற் கண்ணியை பள்ளிக்கு அழைத்திருந்தது.
அலுவலக உதவியாளன் அனுமதிக்கவும், அவள் அன்புச் செல்வியையும் அழைத்துக் கொண்டு தலைமை ஆசிரியையின் அறைக்குள் நுழைந்தாள்.
இவள் வணக்கம் சொன்னதைக் கூட கவனிக்காத பாவணையில் முகத்தைக் கடுகடுவென்று வைத்துக் கொண்டு “நீங்கதான் அன்புச் செல்வியோட அம்மாவா?” என்றாள் தலைமை ஆசிரியை.
இவள் ஆமாம் என்று பவ்யமாய் தலை அசைக்கவும் ”பொம்பளப் பிள்ளைய இப்படியா பொறுப் பில்லாம வளப்பீங்க! அறிவியல்லயும் ஆங்கிலத்துலயும் இவ சிங்கிள் டிஜிட் மார்க்கத் தாண்டுறதே இல்ல; இதெல்லாம் நீங்க கவனிக்கிறதே இல்லையா? எனனவா வேலை பார்க்கு றீங்க?” என்றாள்.
“அரசு மேல்நிலைப் பள்ளியில ஆசிரியரா இருக்கேன் மேடம்…”
அவளுக்கு ஆங்காரமாய்க் கோபம் வந்தது.“ஆசிரியர் பிள்ளை மக்குன்னு நீங்க ரெண்டு பேரும் நிருபிக்கலைன்னு யாரு அழுதாங்க….!” என்று சிடுசிடுத்தாள்.
“இல்ல மேடம் வீட்ல கொஞ்சம் பிரச்னை; நானும் காட்பாடியத் தாண்டி ரொம்ப தூரம் வேலைக்குப் போயிட்டு வர்றதால இவளக் கவனிக்க நேரமிருக்கிறதில்ல; இனிமே பார்த்துக்கிறேன்”
“டூ லேட்; காரியம் கொஞ்சம் கை மீறிப் போயிருச்சு, இனிமே ஒண்ணும் பண்ண முடியாது; உங்க பொண்ணோட டீ.சி.யக் குடுத்துடுறோம், நீங்க வேற ஸ்கூல்ல சேர்த்து படிக்க வச்சுக்குங்க….”
“அப்படியெல்லாம் சொல்லாதீங்க மேடம்… அவளுக்கு ஒரு நல்ல கல்வி கிடைக்கனும்னு தான், சென்னையிலயே சிறந்தது உங்க ஸ்கூல்ன்னு கேள்விப்பட்டு, எவ்வளவோ சிரமங்களப் பொறுத்துக்கிட்டு ஆறாம் வகுப்புல இருந்து அவள இங்க சேர்த்து படிக்க வைக்கிறேன்;
இவளுக்காக காட்பாடியிலருந்து வில்லிவாக்கத்துக்கு குடி வந்துருக்கேன்…. பயணத்துலயே என்னோட பாதி நாள் கழிஞ்சுடுது; இவ படிப்புக்காகத் தான் பொறுத்துக் கிட்டிருக்கேன்….பெரிய மனசு பண்ணி ஒரே ஒரு வாய்ப்புக் குடுங்க, மூணே மாசத்துல முழுசா அவள நான் மாத்திக் காட்டுறேன் மேடம்…. ப்ளீஸ், தயவு பண்ணுங்க….” கையெடுத்துக் கும்பிட்டு இறைஞ்சினாள் அங்கயற்கண்ணி.
“அன்புச் செல்வியோட அப்பா என்ன பண்றார்? “ என்று கேட்டாள் தலைமை ஆசிரியை. “அவர் எலக்ட்ரானிக்ஸ் என்ஜீனியர் மேடம்; ஆனா அவர் இப்ப எங்க கூட இல்ல மேடம்; சிங்கப்பூர்ல வேறொரு பொண்ணு கூட குடும்பம் நடத்திக்கிட் டிருக்கிறார்….அதான் இவளப் பாதிச்சு படிப்புல சுணங்கிப் போயிட்டாள் மேடம்………“கண் கலங்கினாள் அங்கயற்கண்ணி.
“ஓ… ஐயாம் சாரி…..வேணும்னா ஒண்ணு பண்ணலாம்; எங்க ஸ்கூல்லயே தொடர்ந்து படிக்கட்டும்…. ஆனா எங்க ஸ்கூல் ரோல்ல வராம பரீட்சைய பிரைவேட்டா பணம் கட்டி வெளி மாணவர்களோட சேர்ந்து எழுதட்டும்; ஒருவேளை பாஸ் பண்ணீட்டாள்னா ப்ளஸ் ஒன்னுக்கு எங்க ஸ்கூல்லயே சேர்த்துக்குறோம்; அதுக்குன்னா ஏற்பாடு பண்ணட்டுமா….?”
“அய்யோ வேண்டாம் மேடம்; அது சரியா வராது….கொஞ்சம் பெரிய மனசு பண்ணி….” அங்கயற்கண்ணி முடிப்பதற்குள் சீறினாள் தலைமை ஆசிரியை.
”சொன்னாப் புரிஞ்சுக்குங்க மேடம். இது என்னோட தனிப்பட்ட முடிவில்ல; மேனேஜ் மென்ட்டோட முடிவு…..உங்க பொண்ண பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு அனுப்பினா கண்டிப்பா ஃபெயிலாயிடுவா(ள்); அது எங்க பள்ளிக்கே பெரிய களங்கமாப் போயிடும்….20 வருஷங்களுக்கும் மேலா பத்தாம் வகுப்புலயும் +2ல்யும் 100% பாஸ் ரிசல்ட் காண்பிச்சுட்டு வர்றோம்; அதோட ஸ்டேட் ரேங்க் வாங்குற ஸ்கூல்ல ஃபெயிலியர் வந்தா பேர் கெட்டுடாதா?”
அப்போது ஒரு நடுத்தர வயதுப் பெண் அறைக்குள் வந்து “நான் தான் இவளோட கிளாஸ் டீச்சர் மேம்; ஸ்பெஷல் கேர் எடுத்துப் பார்த்துக்கிறேன் மேம்…நாம ஒரு சான்ஸ் குடுத்துப் பார்க்கலாம் மேம்…” என்று அன்புச்செல்விக்காகப் பரிந்து பேசவும், தலைமை ஆசிரியைக்கு பலியாய் கோபம் வந்து விட்டது.
”யாரக் கேட்டு உள்ள வந்த, மேனர்ஸ் இல்லாம….உன் வேலை எதுவோ அதை மட்டும் பாரு…. ஃபெயிலாயிட்டா மேனேஜ் மென்ட்டுக்கு நீயா வந்து பதில் சொல்வ? கெட் அவுட்…”என்று சீறினாள். அங்கயற்கண்ணிக்கு அந்த டீச்சரைப் பார்க்க பாவமாக இருந்தது.
“வேணும்னா அன்புச் செல்விய இந்த வருஷம் ஒன்பதாம் வகுப்பிலேயே ஃபெயில் பண்ணீடுங்க மேடம்…..அவளோட பெர்மான்மஸ் பார்த்துட்டு அடுத்த வருஷம் பத்தாவது புரமோட் பண்ணிக்குங்க….” என்றாள் அங்கயற்கண்ணி. தலைமை ஆசிரியை அதையும் ஒத்துக் கொள்ள வில்லை.
“நாங்க யாரையும் எந்த வகுப்பிலயும் ஃபெயில் பண்றதில்ல; அது எங்க ஸ்கூலோட பாலிஸி….” என்றபடி அன்புச்செல்வியின் டீ.சி.யை கிழித்துக் கொடுத்து ‘பெஸ்ட் ஆஃப் லக்’ என்று வாழ்த்தி அனுப்பி வைத்தாள்.
என்ன செய்வதென்று தெரியாமல், முகவாட்டத்துடன் வெளியே வந்த அங்கயற் கண்ணியை அன்புச்செல்வியின் வகுப்பாசிரியை தான் தேற்றினாள். தன் பெயரைத் தங்கம்மாள் என்று அறிமுகப் படுத்திக் கொண்டாள்.
“இது சரியான முசுடு மேடம்; ரிசல்ட், ரிசல்ட்டுன்னு பேயா அலையும்; இதுவரைக்கும் இவளோட சேர்த்து ஏழு பேருக்கு டீ.சி. குடுத்து அனுப்பீருச்சு; அஞ்சு பேர பிரைவேட்டா எழுதச் சொல்லிருச்சு; ஒவ்வொரு வருஷமும் இப்படித்தான்... தேறாதுன்னு கொஞ்சம் சந்தேகம் இருந்தாலும் பேரண்ட்ஸக் கூப்பிட்டு டீ.சி.யக் குடுத்துருவாங்க…அப்புறம் நூறு சதவிகிதம் தேர்ச்சி காண்பிச்சுட்டோம்னு பீத்திக்குவாங்க...
விடுங்க; இவங்க புரஜெக்ட் பண்ற அளவுக்கு அன்புச்செல்வி ஒண்ணும் அத்தனைக்கு மோசமான ஸ்டூடண்ட் இல்ல; இப்ப கொஞ்ச நாளாத்தான் ரொம்பவும் டல்லா இருக்கிறா…! வீட்ல எதுவும் பிரச்னையா? சொல்லலாம்னா என்கிட்டச் சொல்லுங்க….” என்றாள்.
அவளின் பேச்சில் நிஜமான கரிசனம் தெரிந்தது. அங்கயற்கண்ணி அவளின் கதையைச் சொல்லத் தொடங்கினாள்.
அங்கயற்கண்ணிக்கு சொந்த ஊர் தென்காசிக்குப் பக்கத்திலுள்ள வாசுதேவநல்லூர்.அங்கேயே எலக்ட்ரானிக்ஸில் டிப்ளமா முடித்த முத்துராமன் என்பவளைக் காதலித்திருக்கிறாள். வேறு ஜாதி என்பதாலும் அவன் வேலை வெட்டி எதுவுமில்லாமல் வெறுமனே ஊர் சுற்றுகிறான் என்பதாலும் அங்கயற்கண்ணியின் அப்பா அவனை மணந்து கொள்ள சம்மதிக்க வில்லை.
அவளின் அம்மா இருவரையும் ரகசியமாய் அழைத்து “நீங்க என்ன தான் கெஜவித்தை செஞ்சு பார்த்தாலும் இவளோட அப்பா உங்க ரெண்டு பேத்துக்கும் கல்யாணம் பண்ணி வைக்க மாட்டார்; உங்களுக்கும் வயசாகலையா? பேசாம இந்த ஊரை விட்டுப் போயி எப்படியாவது பொழச்சுக்குங்க….நான் அவரச் சமாளிச்சுக்கிறேன்…..” என்று சொல்லி பணமும் நகையும் கொடுத்து வாழ்த்தி வழி அனுப்பி வைத்திருக்கிறாள்.
இருவரும் பாண்டிச்சேரிக்கு ஓடிப்போய் கல்யாணம் கட்டிக் கொண்டு ஒரு ஒண்டுக் குடித்தனத்தில் வாழ்க்கையைத் தொடங்கியிருக்கிறார்கள். அங்கயற்கண்ணி பி.எஸ்.ஸி, பி.எட். படித்திருந்ததால் மெட்ரிக்குலேசன் பள்ளியில் எளிதாய் வேலை கிடைத்திருக்கிறது.ஆனால் முத்து ராமனுக்குத் தான் சரியான வேலை அமையாமல் சிறு சிறு வேலைகள் தான் செய்ய வேண்டியிருந்ததாம். தன் படிப்பிற்கும், திறமைக்கும் தகுந்த வேலை சென்னைக்குப் போனால் கிடைக்கு மென்று முத்துராமன் அபிராயப்படவும், அதுவும் சரி என்று சென்னைக்குக் குடி வந்திருக்கிறார்கள்.
சென்னையில் தடுக்கி விழுந்தால் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் தான் என்பதால் அங்கயற்கண்ணிக்கு வேலை கிடைப்பதில் பிரச்னையில்லை.ஆனால் முத்துராமனுக்கு சென்னையிலும் சிலாக்கியமான வேலை அமையவில்லை.
அதனால் முத்துராமனின் தகுதியை உயர்த்தும் விதமாக அங்கயற்கண்ணி அவளுடைய சொற்ப வருமானத்திலும் அவனை பகுதி நேரக் கல்லூரியில் சேர்த்து பி.இ. படிக்க வைத்திருக்கிறாள். அதற்கப்புறம் அவர்கள் எதிபார்த்தபடியே அவனுக்கு ஒரு கம்பெனியில் நல்ல வேலை கிடைத்திருக்கிறது. அப்புறம் அவனின் நண்பன் ஒருவனின் மூலம் சிங்கப்பூரில் வேலை கிடைத்து அங்கு போய் செட்டிலாகி விட்டான். எப்போதாவது இந்தியாவிற்கும் வந்து போய்க் கொண்டிருந்தான்.
திடீரென்று தொடர்ந்து சில வருஷங்களுக்கு அவன் இந்தியா வராமல் இருக்கவும் , அவனுக்கு என்னவாயிற்றோ என்று பதறிப் போய், அங்கயற்கண்ணி டூரிஸ்ட் விசா வாங்கிக் கொண்டு சிங்கப்பூர் போய்ப் பார்த்தவள் அதிர்ந்து போய் விட்டாள்.
முத்துராமனுக்கு சிங்கப்பூரிலும் இன்னொரு குடும்பம் மனைவி குழந்தைகள் என்று இருந்தது. பைத்தியக்காரி மாதிரி அவன் என்றைக்காவது இந்தியா வருவான் என்று தான் காத்திருக்க, அவன் அங்கேயே இன்னொரு குடும்பத்துடன் வாழ்வதைப் பார்த்ததும் உடைந்து சிதறிப் போனாள். அடிப்படை நியாயம் கூட இல்லாத அவனிடம் பேசிப் பிரயோசனமில்லை என்று அடுத்த விமானம் பிடித்து இந்தியாவிற்கு வந்து விட்டாள்.
“அப்பாவோட நம்பிக்கைத் துரோகத்தை அன்புச்செல்வியாலயும் தாங்கிக்க முடியல; அதான் படிப்புல சுணங்கிப் போயிட்டா… நானும் அதக் கவனிக்காம இருந்துட்டேன்….” என்று தன் கதையைச் சொல்லி முடித்தாள் அங்கயற்கண்ணி.
“சரி போனதெல்லாம் போகட்டும்; நீங்க கவலைப் படாதீங்க; அன்புச்செல்விய நான் தேத்திக் காண்பிக்கிறேன்…” என்றாள் தங்கம்மாள் சவாலாக.
வில்லிவாக்கத்துலருந்து தினசரி வந்து போனால் பயணத்துலயே இவள் கலைத்துப் போயிடுவாள் என்றும் படிப்பில் கவனம் செலுத்த முடியாது என்றும் தங்கம்மாள் அபிப்ராயப் பட்டாள்.
அவளின் ஆலோசனைப்படி அன்புச்செல்வியை அங்கயற்கண்ணி குடியிருந்த திருவான்மியூர் பகுதியில் ஒரு அரசாங்க மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பில் சேர்த்து விட்டு அவளை தன்னுடைய வீட்டிலிருந்து பள்ளிக்குப் போய் வர ஏற்பாடுகள் செய்தாள்.
”ஒரு வருஷம் உங்க பொண்ணை நீங்க மறந்திடுங்க , நான் பார்த்துக்கிறேன்…” என்றாள். அப்படியே ஆனது. அந்த வருஷமே அன்புச்செல்வி தொண்ணூறு சதவிகிதத்திற்கும் மேலாக மதிப்பெண் எடுத்து தேறினாள். தொடர்ந்து அரசாங்க பள்ளியிலேயே இப்போது ப்ளஸ் ஒன் படித்துக் கொண்டிருக்கிறாள்.
“என்ன டீச்சர், பேப்பரயே பார்த்துக்கிட்டு இருக்கிறீங்க ; திருத்தத் தொடங்கலயா…?” என்று மையத்தின் சூபர்வைசர் கேட்கவும் தான் நினைவு கலைந்து நிகழ் காலத்திற்கு வந்தாள் அங்கயற்கண்ணி.
இது தற்செயலானதா, அல்லது விதியின் விளையாட்டா என்று தெரிய வில்லை. இதோ தன் செல்ல மகளுக்கு டீ.சி. கொடுத்து அவமானப் படுத்தி அனுப்பிய அடையாறு பள்ளியின் பேப்பர்கள் திருத்துவதற்காக அவளுக்கு முன் விரிந்து கிடக்கிறது. ஃபெயிலாகிப் போவாள் என்று தானே என் பெண்ணிற்கு டீ.சி.கொடுத்து அனுப்பினீர்கள்! இதோ உங்கள் பள்ளியின் எதிர்காலம் என் கையில்; என் பேனாவின் முனையில்… அவளுக்குள் ஒரு வன்மம் கிளர்ந்தது.
கண்ணில் விளக்கெண்ணை விட்டுக் கொண்டு ஒவ்வொரு பேப்பரையும் மிக மிகக் கவனமாக திருத்தத் தொடங்கினாள். சிறு பிழை என்றாலும் தடாலடியாக மதிப்பெண்களைக் குறைத்தாள். இது அவளுடைய இயல்பே அல்ல; பொதுவாய் மதிப்பெண்களை கர்ணபிரபு மாதிரி வாரி வாரி வழங்குவது தான் அவளது வழக்கம் . மாணவர்கள் 25 மதிப்பெண்களை நெருங்கி விட் டாலே, அங்கொன்றும் இங்கொன்றுமாய்ப் போட்டு 35க்குக் கொண்டு வந்து பாஸாக்கி விடுவாள்.
ஆனால் இந்த முறை அப்படிச் செய்யவில்லை. ஐந்து மாணவர்கள் 30,33 என்று பாஸுக்குப் பக்கத்தில் வந்தும், எந்த மாற்றமும் செய்யாமல், எங்கள் பள்ளியில் யாரும் ஃபெயிலாக மாட்டார் களென்று பெருமை பீற்றினீர்களே, இதோ அந்த வரலாற்றை உடைக்கிறேன் என்று மனசுக்குள் கறுவியபடி விடைத்தாள்களைக் கட்டி சூபர்வைசரிடம் ஒப்படைத்தாள் அங்கயற்கண்ணி.
ஆங்கில மீடியம் பள்ளி என்று அலப்பறை பண்ணும் பள்ளி; மாணவர்கள் பள்ளி வளாகத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டுமென்றும் தமிழில் பேசினால் தண்டம் விதிக்கும் பள்ளியில் ஆங்கிலப் பாடத்திலேயே ஐந்து பேர் ஃபெயிலென்றால்….. அது எத்தனை முரண்; அந்த தலைமை ஆசிரியை முகத்தை எங்கு போய் வைத்துக் கொள்வாள்! மனசுக்குள் குரூரமாகச் சிரித்துக் கொண்டாள் அங்கயற்கண்ணி.
“என்ன டீச்சர், அஞ்சு பேர பார்டர்ல ஃபெயிலாக்கி இருக்குறீங்க! நீங்க பொதுவா அப்படிப் பண்ற ஆளு இல்லயே, எத்தனை வருஷமா உங்களப் பார்த்துக் கிட்டு இருக்கிறேன்; இன்னைக்கு என்னாயிருச்சு…” என்று கரிசனமாய்க் கேட்டார் சூபர்வைசர்
“அதெல்லாம் அரை மார்க் போடக்கூட எடமில்ல ஸார்; ஃபெயிலாப் போகட்டும்; அப்பத் தான் அவங்களுக்கெல்லாம் புத்தி வரும்….” என்றாள் வெளத்துடன்.
“வேண்டாம் டீச்சர்; பசங்க பாவம்….யாரு மேலயோ உள்ள கடுப்புல பசங்களோட எதிகாலத்தப் பாழ் பண்ணீடாதீங்க….” என்று அவர் எவ்வளவோ எடுத்துச் சொல்லிய போதும் அவள் பிடிவாதமாய் மறுத்து விட்டாள்.
“அவ்வளவு தான் ஸார்….பேசாம பேப்பர வாங்கிக்குங்க…” என்றாள் மிகவும் கடுமையாக.
கிணறு வெட்டப் போய் பூதம் கிளம்பிய கதையாக, பத்தாம் வகுப்பு பரீட்சை முடிவுகள் வெளியாகி ஓரிரு தினங்களுக்குப்பின் தினப்பத்திரிக்கையில் வந்திருந்த ‘அந்த’ செய்தியை வாசித்த அங்கயற்கண்ணி அலறிவிட்டாள்.

ஆசிரியை தற்கொலை முயற்சி; தன்னுடைய மாணவர்கள் தேர்வில் தோல்வி
அடைந்ததின் எதிரொலி!
சென்னை, மே 23 – அடையாறிலுள்ள மிகப் பிரபலமான தனியார் பள்ளியைச் சேர்ந்த ஒரு ஆசிரியை தன்னிடம் பயின்ற மாணவர்கள் சமீபத்தில் நடந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்ததைத் தாங்கிக் கொள்ள முடியாமல் மனம் உடைந்து தற்கொலைக்கு முயன்று, உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலைமையில் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டிருக்கிறார். இதைப் பற்றி மேலும் கூறப் படுவதாவது:-
இரண்டு தினங்களுக்கு முன்னால் அரசு பள்ளிக் கல்வித்துறை இயக்குனகரம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான மாணவர் தேர்ச்சி முடிவுகளை வெளியிட்டிருந்தது. அதில் அடையாறிலுள்ள மிகப் பிரபலமான தனியார் பள்ளியைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் ஆங்கிலப் பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை என்றும், இதைக் கேள்விப் பட்டதும் அந்தப் பாடத்தைப் போதித்த ஆசிரியை திருமதி தங்கம்மாள் (43) நேற்று முன்தினம் அவருடைய வீட்டிலிருக்கும் போது பூச்சிக் கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் , உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில் சக ஆசிரியை ஒருவரின் மூலம் அருகாமையிலிருந்த அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப் படுவதாகவும் ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.
அடையாறு காவல்நிலைய ஆய்வாளர் பன்னீர் செல்வம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். ஆசிரியையின் தற்கொலை முயற்சிக்கு பள்ளி நிர்வாகம் கொடுத்த கெடுபிடிகளும் அழுத்தமும் காரணமா என்பது விசாரணையின் முடிவில் தெரிய வரலாம்.

அங்கயற்கண்ணிக்கு மனசு பாரமாக வலித்தது. தான் செய்த முட்டாள் தனத்தால் ஒரு அற்புதமான மனுஷியின் உயிரல்லவா போய் விடும் போலிருக்கிறது. கண்டிப்பாக ஃபெயிலாகி விடுவாள் என்று நம்பிய தன்னுடைய மகள் அன்புச் செல்வியை எப்படி பயிற்சி கொடுத்து அவளே ஆச்சர்யப்படும் விதமாக மிக நல்ல மதிபெண்களில் தேர்ச்சி பெற வைத்திருந்தாள். அந்த தங்கம்மாள் டீச்சருக்கா இந்த நிலைமை? அவளுக்கு எதுவும் ஆகியிருக்கக் கூடாது என்று மனசுக்குள் மறுகினாள்.
அன்புச்செல்வியையும் அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்குப் போனபோது தங்கம்மாள் அபாயக் கட்டத்தைத் தாண்டி ஆனால் மிகவும் சோர்ந்து போய் படுத்திருந்தாள். அவளின் படுக்கையைச் சூழ்ந்து கொண்டு சக ஆசிரியைகளும் மாணவர்களும் நிறையப்பேர் நின்று கொண்டிருந்தார்கள். அன்புச் செல்வி ஓடிப்போய் ஆசிரியையின் கைகளைப் பிடித்துக் கொண்டு அழத் தொடங்கவும் “அய்யோ…எனக்கு ஒண்ணுமில்லைடா; ஐயாம் ஆல்ரைட்…” என்று அவளை சமாதானப் படுத்தினாள்.
அங்கயற்கண்ணி அவளுக்கு அருகில் போய் மிக மெல்லிய குரலில் அவளுக்கு மட்டும் கேட்கும் படியாக “ஸாரி டீச்சர்; உங்களோட இந்த நிலைமைக்கு நான் தான் காரணம்…”என்றாள் குற்ற உணர்ச்சி மேலிட.
“அய்யய்யோ, நான் முட்டாள் தனமா ஏதோ பண்ணதுக்கு நீங்க என்ன மேடம் பண்ணுவீங்க; பாஸ் ஃபெயிலெல்லாம் பரீட்சையில சகஜம்னு யோசிக்காம அவசரத்துல ஏதோ பண்ணீட்டேன்; அந்தப் பசங்க பரீட்சையில் பெயிலானத என் டீச்சிங்க்கான தோல்வியா நெனைச்சு ஒரு நிமிஷம் தடுமாறிட்டேன்; அந்தப் பசங்க மறு மதிப்பீட்டுக்கு அப்ளை பண்ணியோ அல்லது அடுத்த மாசமே அரசாங்கம் நடத்துற மறு தேர்வ எழுதியோ பாஸ் பண்ணீடப் போறாங்க; இதக்கூட அந்த நிமிஷத்துல யோசிக்க முடியாமப் போயிடுச்சு…..” என்றாள் விரக்தியாய்.
அங்கயற்கண்ணி தான் வலிந்து மதிப்பெண்களைக் குறைத்துப் போட்டதை விளக்கமாய்ச் சொன்னான். “அந்த பள்ளிக் கூடத்துமேல இருந்த கோபத்துல, உங்க கேரியர்ல கறுப்புப் புள்ளி விழ வச்சு, உயிருக்குமில்ல உலை வைக்கப் பார்த்துட்டேன்…தயவு பண்ணி என்னை மன்னிச்சுடுங்க….” என்று சொல்லி கண் கலங்கினான்.
- முற்றும்

(நன்றி: தினமணிக்கதிர் 26.09.2010)

Monday, September 13, 2010

கல்கியில் எனது கவிதை:

தூக்கம் இழந்த பொம்மைகள்

இரவுகளில்
தரையில் விரிக்கப்பட்ட மெத்தையில்
பொம்மைகள் புடைசூழத் தூங்குவாள்
எங்கள் வீட்டு இளவரசி!

பொம்மைகளுடனான
அவளின் உலகத்தில்
அனுமதியில்லை யாருக்கும்....!

பொம்மைகளுக்கு
அம்மாவைப் போல் ஊட்டி விடுவாள்;

ஆசிரியையாக
பாடம் சொல்லித் சொல்வாள்;

பாட்டியாக தட்டிக் கொடுத்து
கதை சொல்வாள்;

தூங்க மறுக்கும் பொம்மைகளை
அப்பாவாக மிரட்டி உருட்டியும்
தூங்கப் பண்னுவாள்......!

விழிப்புவரும் நடு இரவுகளில்
இளவரசியைத் தேடினால்
மெத்தையிலிருந்து உருண்டுபோய்
வெறும் தரையில் விழுந்து
தூங்கிக் கொண்டிருப்பாள்
தேவதைக் கனவுகளுடன்.....

இவளின் வரவை எதிர்பார்த்து
மெத்தையில் உருண்டு கொண்டிருக்கும்
அவளின் பொம்மைகள்
கொட்டக் கொட்ட விழித்தபடி.......!

(நன்றி: கல்கி 12.09.2010)

Monday, July 12, 2010

கவிதை: உயிர் பிழைத்திருப்பதற்காக....

வீட்டு வாசலுக்கே கொண்டு வந்து
வியாபாரம் செய்யும் கூடைக்காரிகளிடம்
விருப்பத்துடன் வாங்குங்கள்
பேரம் பேசியேனும்
விலை கொஞ்சம் அதிகமென்றாலும்......!
*** *** ***
கையேந்தும் மூன்றாம் பாலினத்திற்கு
காசு போடுங்கள் மறுக்காமல்
அவர்களின் உழைப்பை மறுதலித்த
சமூகத்தின் அங்கம் தானே நாமெல்லாம்.....!
*** *** ***
இரயில் வண்டியின் இரைச்சலையும் மீறி
கூவிக் கூவி விற்கும்
கண்ணொளி இல்லாதவர்களிடம்
கனிவுடன் ஏதாவது வாங்குங்கள்
அவ்வப்போது........
*** *** ***
வழிபாட்டுத் தலங்களுக்குப் போனால்
கடவுளுக்குக் காணிக்கை போடாவிட்டாலும்
வாசலில் காத்திருக்கும்
பிச்சைக் காரர்களுக்கு
ஏதாவது கொடுக்க மறக்காதீர்கள்.....!
*** *** ***
சின்ன இரும்பு வளையத்துக்குள்
உடலைக் குறுக்கி ஒடித்து வளைத்து
சிரமப்பட்டு நுழைந்து
வெளியேறும் சிறுமியும்
கொட்டடித்து குட்டிக்கரணம் போட்டு
வில்லாய் உடல் வளைத்தும்
விளையாட்டுக் காட்டும் சிறுவனும்
தட்டேந்தி வரும்போது
தவறாமல் காசு போடுங்கள்.....!
*** *** ***
சின்னப் பிள்ளைகளின்
இரயில் விளையாட்டைப் போல்
ஒருவர் கொடுக்கை ஒருவர் பிடித்தபடி
நெரிசலினூடே பாடியபடிக்
கடந்து போகும் குருடர்களுக்கு
கண்டிப்பாய் கொடுங்கள் ஏதாவது.....!
*** *** ***
இவர்களெல்லாம்
உலக முதலாளிகளின் வரிசையில்
முதலிடம் பிடித்துவிடப் போவதில்லை;
இன்னும் கொஞ்ச நாள்
உயிர்த்திருக்க அவர்களுக்கு
உதவலாம் உங்கள் பணம்.....!

Thursday, June 10, 2010

சிறுகதை: ஒரு ஆசிரியை பரீட்சை வைக்கிறாள் தன் கணவனுக்கு.....

வேடிக்கையாய் ஆரம்பித்த விவாதம் விபரீத முடிவுகளுக்கு இட்டுச் சென்று விட்டதாய் உணர்ந்தாள் நிர்மலா. இத்தனை தாமதமாய் அவள் ஒருநாளும் வீடு திரும்பிய தில்லை. பெரும்பாலும் மூர்த்தி வேலை முடித்து வீடு திரும்பும் போது அவள் வீட்டில் இருப்பாள். இன்றைக்கு அவன் வீட்டிற்கு வந்து இன்னேரம் நெடுநேரங் கடந்திருக்கும். அவள் இப்போது தான் வீட்டிற்கே போய்க் கொண்டிருக்கிறாள்.என்ன நடக்கப் போகிறதோ? எல்லாம் இந்த சுமித்ரா சனியனால் வந்த வினை.
அன்றைக்கு பணி முடிந்து பள்ளியிலிருந்து கிளம்பி நிர்மலாவும் சுமித்ராவும் இரயில் நிலையத்தை நெருங்கிய சமயத்தில், ஜெகன் தன்னுடைய ஸ்கூட்டரில் வேகமாய் வந்து, அவர்களை வழிமறித்து வாகனத்தை நிறுத்தி, மூச்சு வாங்கி, கர்சீப்பால் முகத்தை அழுந்தத் துடைத்தபடி தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டான்.
”என்ன ஜெகன், வண்டியியில தான வந்தீங்க? ஏதோ வண்டிய முன்னால விட்டு அதுக்குப் பின்னால ஓடி வந்தது மாதிரி இப்படி மூச்சு வாங்குறீங்க...” என்று சிரித்தாள் நிர்மலா.
”போங்க மிஸ். எவ்வளவு நேரமாக் கத்திக்கிட்டே வர்றேன்; காதுலயே வாங்காம ரெண்டு பேரும் வேகமா நடந்து வந்துட்டீங்க...” என்றான் ஜெகன்.
”இரைச்சல்ல ஒண்ணும் கேக்கலையே! சரி என்ன விஷயமின்னு சீக்கிரம் சொல்லுங்க.... இப்ப ட்ரெயின் வந்துடும்...” அவசரப்படுத்தினாள் நிர்மலா.
”ஒண்ணுமில்ல மிஸ்; (சுமித்ராவைக் காட்டி) இவங்கள பிரின்சிப்பால் உடனே கூட்டிகிட்டு வரச் சொன்னார். அதான்...” என்றான் அவன்.
”அந்தக் கெழடுக்கு வேற வேலையே இல்ல; ரிட்டயர்டு ஆயிட்டா அக்கடான்னு வீட்ல கெடக்காம, ஸ்கூலுக்கு பிர்ன்சிபால்னு வந்து நம்ம உயிர வாங்கிக்கிட்டு இருக்கு; சரியான மறதி கேஸ். நெனச்சு நெனச்சுக் கூப்புடும். கெளம்புறப்ப கூடப் பார்த்துட்டுத்தான வந்தேன்; இப்ப எதுக்காம் கூப்டுது....” சுமித்ராவின் முகத்தில் களைப்பும் அலுப்பும் அதீத எரிச்சலும் பொங்கியது.
” என்ன விஷயம்னு எதுவும் என்கிட்ட சொல்லல மிஸ்; வெரசாப் போயி கூட்டிட்டு வாடான்னு மட்டும் என்னை வெரட்டுனார்... ரொம்ப அவசராமான வெசயமாத் தான் இருக்கும்; அவர் ரொம்ப பதட்டமா இருந்தார். வண்டியில ஏறிக்குங்க மிஸ்.. வேகமா ஒரே மிதியில ஸ்கூல்ல கொண்டு போயி உட்டுர்றேன்...”என்றான் ஜெகன்.
அம்பத்தூரில் இருக்கிற ஒரு தனியார் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நிர்மலாவும் சுமித்ராவும் முறையே இயற்பியலுக்கும் வேதியியலுக்கும் ஆசிரியைகள். ஜெகன் அந்தப் பள்ளியின் அலுவலக உதவியாளன். வேலை முடிந்து நிர்மலா அரக்கோணத்திற்கும் சுமித்ரா அதையும் தாண்டி திருத்தணிக்கும் இரயிலில் திரும்பிப் போகவேண்டும்.
”நீங்க போங்க ஜெகன்; நான் வர்றேன்...” என்றாள் சுமித்ரா.
”அய்ய; ஒன்றரைக் கிலோ மீட்டருக்கும் மேல திரும்பி நடக்கனும் மிஸ். நீங்க நடந்து வந்தீங்கன்னா திரும்ப வர இருட்டீடும் மிஸ்; உங்க வேலை முடிஞ்சதும் நானே உங்கள திரும்ப இரயில்வே ஸ்டேஷனுக்குக் கொண்டு வந்து விடுறேன்....”
” பரவாயில்ல; உங்களுக்கெதுக்கு வீண் சிரமம். நான் ஒரு ஆட்டோ பிடிச்சாவது சீக்கிரம் வரப் பாக்குறேன்; நீங்க போயி நான் வந்துக்கிட்டு இருக்கேன்னு மட்டும் அந்த பிரின்சுபால் கெழடு கிட்ட சொல்லுங்க; அப்புறம் என்ன வரச் சொன்னதையே மறந்துட்டு அது பாட்டுக்கு வீட்டுக்குக் கிளம்பிடப் போகுது....” என்றாள் சுமித்ரா.
”வண்டியிலயே போயிட்டு வந்துடு சுமித்ரா... அப்பத்தான் ஆறரை மணி ட்ரெயினையாவது பிடிப்ப; இல்லையின்னா ஏழரை மணி ட்ரெயின் தான் உனக்கு....” நிர்மலாவும் சொன்னாள். “ வேண்டாம்ப்பா... அவரு போகட்டும்; நீங்க கெளம்புங்க ஜெகன்” என்று சுமித்ரா சொல்லவும், அவன் முகம் அவமானத்தால் தொங்கிப் போனது. விருட்டென்று வண்டியைக் கிளப்பிய வேகத்தில் அவனுடைய கோபம் அப்பட்டமாய் வெளிப்பட்டது. சுமித்ரா அதையெல்லாம் கண்டு கொண்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை.
”ப்ளீஸ் நிர்மலா... நீயும் என் கூட வாயேன்; கெழடு கொஞ்சம் சபலக் கேஸு. எதுக்குக் கூப்புடுதுன்னே தெரியல; ஒரு ஆட்டோ புடிச்சு போயிட்டு அதே ஆட்டோவுல திரும்பிடலாம்.....” கெஞ்சினாள் சுமித்ரா.
”நீ ஜெகன் கூட வண்டியிலயே போயிட்டு வந்துருக்கலாம் சுமித்ரா... ஆட்டோ சார்ஜாவது மிச்சமாயிருக்கும்; இந்த 21ம் நூற்றாண்டுலயும் ஏன் தான் இப்படி இருக்கியோ! அவன் கூட வண்டியில போனா உன் கற்பு போயிடுமா என்ன? ஜெகன் எவ்வளவு நல்ல மனுஷன்; அவன் மனச நோகடிச்சுட்டயே, இது உனக்கே நல்லா இருக்கா.... “ என்று அலுத்துக் கொண்டபடி ஆட்டோ விசாரிக்க்கப் போனாள் நிர்மலா. ஸ்டேண்டில் ஆட்டோ ஏதுமில்லை. ஆட்டோவிற்காகக் காத்திருக்கும் நேரத்தில் கொஞ்சம் நடக்கலாம் என்று இருவரும் பள்ளியை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள்.
”என் வீட்டுக்காரர் பத்தித் தான் உன்கிட்ட ஏற்கெனவே சொல்லி இருக்கேன்ல; அடுத்த ஆம்பளைகிட்ட நான் பேசுறதயே சகிச்சுக்க முடியாம சத்தம் போடுற ஆளு. நானு ஒரு ஆம்பளையோட வண்டியில பின்னால உக்கார்ந்து போனது தெரிஞ்சா அவ்வளவு தான்.... வீட்டுல பூகம்பமே வெடிக்கும்; என்னைக் கொன்னே போட்டாலும் ஆச்சர்ய படுறதுக்கில்ல.....” நடந்தபடி வருத்தமாய்ச் சொன்னாள் சுமித்ரா.
”அப்படின்னா பொண்டாட்டிய வீட்லயே பூட்டி வச்சுக்க வேண்டியது தான; எதுக்கு வேலைக்கெல்லாம் அனுப்பனும்...?” வெடித்தாள் நிர்மலா. “பணம் வேணுமே....! உனக்குத்தான் ரொம்பக் கஷ்டம் கொடுக்குறேன் நிர்மலா; மன்னிச்சுக்கோ....” என்றபடி இலேசாய் விசும்பத் தொடங்கினாள் சுமித்ரா.
”சரி சரி; அழுது தொலைக்காத... எதுக்கெடுத்தாலும் அழுகுறத விட்டுட்டு ஆம்பளைங்களத் தட்டிக் கேட்கத் தொடங்கனும். அப்பத்தான் பொம்பளைங்களுக்கு விமோசனம் பொறக்கும்... அதுசரி, நீ ஜெகன் கூட வண்டியில போனா, அதெப்படி உன் புருஷனுக்குத் தெரியும்?” என்று கேட்டாள் நிர்மலா.
”நானே ஏதாவது ஒரு சந்தர்ப்பத்துல உளறித் தொலச்சுடுவேன்; எனக்குத் தான் ஓட்டை வாயாச்சே! அதுவும் அவர்கிட்டருந்து நான் எதையும் எப்பவும் மறைக்கிறதே இல்ல.... அது அப்படியே பழகிருச்சு.....” என்றாள் பெருமை பொங்க.
”பெரிய பத்தினி தெய்வமின்னு மனசுக்குள்ள நெனப்பு....” என்று எரிச்சலடைந்த படி, “சரி சரி வேகமா எட்டி நட .....” சுமித்ராவை விரட்டினாள் நிர்மலா.
இருவரும் பள்ளிக்குப் போனபோது, பிரின்சிபால் கிளம்பத் தயாராக இருந்தார். அவரும் “எவ்வளவு நேரம்மா; நடந்தேவா வர்ற? ஜெகன் கூடவே வண்டியிலயே வந்துருக்கலாமில்லம்மா...” என்று கடிந்து கொண்டார்.
சுமித்ரா அதை சட்டை செய்யாமல் “என்ன விஷயம்னு சீக்கிரம் சொல்லுங்க ஸார்...” என்று அவசரப்படுத்தினாள். “பிராக்டிக்கல் எக்ஸாமுக்கு கெமிக்கல்ஸ் வேணுமின்னு சொல்லீட்டு இருந்தீல்லம்மா; அதுக்கு கம்பெனிலருந்து ஆள் வந்துருக்கார்; லிஸ்ட் எழுதிக் குடுத்துட்டுப் போம்மா....” என்றார் பிரின்சிபால்.
”ஸார் நம்ம லேப் அட்டெண்டர் கிட்ட மத்தியானமே லிஸ்ட் எழுதிக் குடுத்து உங்ககிட்ட கொடுக்கச் சொல்லி இருந்தேனே, அவரு குடுக்கலியா...?”
”ஆமா, ஏதோ குடுத்தானே! அது கெமிக்கல்ஸ் லிஸ்ட் தானா? அதை எங்க வச்சேன்னு இப்ப ஞாபகமில்லேம்மா; நீ எதுக்கும் இன்னொரு லிஸ்ட் எழுதிக் குடுத்துடும்மா....” என்றார் கூலாக. சாவித்திரி தலையில் அடித்துக் கொண்டு ஜெகனிடம் ஒரு பேப்பர் கொண்டுவரச் சொல்லி பரபரவென்று எழுதிக் கொடுத்துவிட்டு இருவரும் இரயில் நிலையம் நோக்கித் திரும்பி நடந்தார்கள்.
மறுநாள் மதிய உணவின் போது நிர்மலா, நேற்று நடந்த சம்பவத்தை விவரித்து, சுமித்ரா ஜெகனின் ஸ்கூட்டரில் பின்னால் உட்கார்ந்து போக மறுத்ததைச் சொல்லி,”இந்த நூற்றாண்டின் கற்புக்கரசி இவள் தான் ...” என்று கலாய்க்கவும், சக ஆசிரியைகள் எல்லோரும் கேலியும் கிண்டலுமாய் அவளைச் சீண்டத் தொடங்கினார்கள்.
”பழைய கற்புக்கரசியவே படாதபாடு படுத்திக்கிட்டு இருக்குறாங்க நம்ம நாட்டுல.... இதுல இன்னொரு கண்ணகியா? தாங்காதும்மா தமிழ்நாடு...” என்றாள் சாருலதா.
”ஜெகன் ரொம்ப சாதுடி. அவன் கூட இராத்திரி தனி ரூம்ல கூடத் தங்கலாம்; உன் கற்புக்கு ஒரு பங்கமும் நேராது... அதுக்கு நான் கேரண்டி; அத்தனை நல்லவன் அவன்; அவன் கூட வண்டியில போக மாட்டேன்னுட்டியா! நெசமாவே நீ வெவஸ்தை கெட்டவள் தான்...” என்றாள் சாவித்திரி.
”உன் புருஷன் அத்தனை சந்தேகப் பிராணியா சுமி! பொண்டாட்டியோட சம்பாத்யம் மட்டும் வேணும்; ஆனா ஆம்பிளையோட நிழல் கூட படாம அப்படியே பதிவிரதையா வீட்டுக்கு வரணுமாக்கும்; சரியான ஹிப்போகிராட்ஸ் தான்...” கடுமையாகச் சொன்னாள் ப்யூலாராணி.
பெண்கள் ஆளாளுக்கு தன் புருஷனைப் பற்றி கொடூரமாய்ச் சித்தரித்துப் பேசவும் சுமித்ராவிற்குக் கோபம் வரத் தொடங்கியது. “என் புருஷன் மட்டும் தான் சந்தேகப்பிராணியா? உலகத்துல இருக்குற எல்லா ஆம்பளைங்களும் அப்படித்தான்; கொஞ்சம் கூடக் கொறைச்சலா இருக்கலாம்; ஆனால் பொஸஸிவ்னஸ் இல்லாத ஆம்பளை ஒருத்தராவது உண்டா?” என்று வெடித்தாள்.
”பொண்டாட்டிமேல உள்ள அதீத பிரியத்துல கொஞ்சூண்டு பொஸஸிவ்னஸ் இருக்கலாம்; அதுல ஒண்ணும் தப்புல்ல....” என்று பொதுவாய்ச் சொன்னாள் சாவித்திரி. ”இவங்களுக்கெல்லாம் உறைக்கிற மாதிரி நல்லா சத்தமா சொல்லுங்க மாமி...” என்று உற்சாகமாகச் சொன்னாள் சுமித்ரா.
”அப்படி எல்லாம் எல்லா ஆம்பளைங்களையும் உன் புருஷனுக்குச் சம்மா ஒரே தட்டுல வச்சு சந்தோஷப்படாத சுமி. காலம் எவ்வளவோ மாறிடுச்சு; எவ்வளவோ ஆம்பளைங்க பெண்கள மதிச்சு, கரிசனத்தோட நடந்துக்கிறாங்கன்னு தெரியுமா உனக்கு!” என்றாள் நிர்மலா.
“அதெல்லாம் சும்மா பம்மாத்து வேலை. எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு.... எதையும் கண்டுக்காத மாதிரி வெளியில நடிச்சுட்டு மனசுக்குள்ள புழுங்கிக் கிட்டு இருப்பாங்க... சமயம் பார்த்து கோரமா வெளிப்படுத்துவாங்க; புரிஞ்சுக்க...” தீர்மானமாய்ச் சொன்னாள் சுமித்ரா.
”ஆம்பளைங்க சைக்காலஜிய அப்படியே கரைச்சுக் குடிச்சமாதிரி பெனாத்தத சுமி; நீ சொல்ற லிமிட்டுக்கும் மேலயே பெண்கள அனுமதிக்குற எத்தனையோ ஆம்பளைங்க இருக்குறாங்க; அதனால சந்தேகங்குற தீராத வியாதி உள்ள உன் புருஷனுக்காக ஒட்டு மொத்த ஆண்கள் சமூகத்தையும் குறைச்சுப் பேசாத....” நிர்மலாவும் கொஞ்சம் கோபமாய்ச் சொல்லவும் சுமித்ராவிற்கு ஆங்காரம் பொங்கி விட்டது.
”சரி, உன் புருஷன் உன்னை எதுவரைக்கும் அனுமதிப்பார்னு பரீட்சை பண்ணிப் பார்த்துடலாமா? இன்னைக்கு ஸ்கூல் முடிஞ்சதும் நீ வீட்டுக்குப் போகாத... உன்புருஷன் வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும் நீ வேறொருத்தர் கூட ஊர் சுத்தப் போயிருக்கிறதா பொய் சொல்றேன்; அதுக்கு உன்னவரோட ரியாக்‌ஷன் எப்படி இருக்குன்னு பார்த்துடலாமா?” என்றாள் சுமித்ரா.
”இதென்ன தப்பாட்டம் சுமி; உனக்கு பைத்தியம் தான் புடிச்சிருச்சு.... எந்தப் புருஷனால தான் தன் பொண்டாட்டி வேறொருத்தனோட ஊர் சுத்துறத சகிச்சுக்க முடியும்! விஷப் பரீட்சை எல்லாம் பண்ணாம போயி அவங்கவங்க வேலையப் பாருங்க...” என்றாள் சாவித்திரி.” அப்படின்னா ஒத்துக்கச் சொல்லுங்க; எல்லா ஆம்பளைங்களும் அப்படித்தான்னு ஆனானப்பட்ட இராமபிரானே தன் மனைவியத் தீக்குளிக்கச் சொன்னப்ப, நிர்மலாவோட புருஷன் எம்மாத்திரம்?” ஜெயித்துவிட்ட திமிரோடு சுமித்ரா பேசியது நிர்மலாவை உசுப்பி விட்டது.
”உன் பரீட்சைக்கு நான் ரெடி. நீ என்ன வேணுமின்னாலும் என்னைப் பத்தி என் புருஷன்கிட்ட சொல்லிக்க; அவர் தப்பா எடுத்துக்க மாட்டார்; நம்பவும் மாட்டார்... ஏன்னா ஹி இஸ் எ ஜெம் ஆப் எ பெர்ஸன்...” என்றாள் அழுத்தம் திருத்தமாக. எல்லோரும் ”வேண்டாம்; இது விபரீதமாகப் போய் விடலாம் ...” என்று எச்சரித்தார்கள்.
”சம்பள நாளும் அதுவுமா இதென்ன விளையாட்டு! இன்னைக்கு சீக்கிரமா வீட்டுக்கு போயிட்டு இன்னொரு நாளைக்கு வச்சுக்குங்கப்பா உங்க விளையாட்ட.....” என்று கொஞ்சம் தள்ளிப் போட முயன்றாள் சாவித்திரி. நடுவில் இடைவெளி விட்டால் அதற்குள் நிர்மலா அவளின் புருஷனிடம் இது பற்றிப் பேசி, அவனைத் தயார்ப் படுத்தி இதை நாடகமாக்கி விட சாத்திய மிருப்பதாகச் சொல்லி சுமித்ரா இதை தள்ளிப் போட ஒத்துக்கொள்ளவில்லை. இன்றைக்கே பரீட்சித்துப் பார்க்க வேண்டுமென்றாள் பிடிவாதமாக. நிர்மலாவும் ஆட்டத்திற்கு தயாரென்றாள்.
வீம்புக்காகச் சொல்லி விட்டாலும் நிர்மலாவின் மனசுக்குள் இலேசான கலக்கம் எட்டிப் பார்க்கவே செய்தது. மூர்த்தியின் மீது அதீத நம்பிக்கை வைத்திருக்கிறோமோ? இரண்டு வருஷ தாம்பத்யத்தில் சின்ன நெருடல் கூட நேர்ந்ததில்லை தான்; சந்தேகத்தின் சிறு இழை கூட அவனிடம் தலை காட்டியதில்லை தான்... ஆனாலும் இன்னொரு ஆணுடன் ஊர்சுற்றி விட்டு வருவதாய்ச் சொல்லப்படுவதை எப்படி எடுத்துக் கொள்வானோ? எல்லோரும் பயப்படும்படி விபரீதமாய் ஏதாவது நேர்ந்து விடுமோ?
மூர்த்தி நிர்மலாவைப் பெண் பார்க்க வந்தபோது, அவளுக்கு அவனை எங்கேயோ பார்த்த ஞாபகமிருந்தது. எவ்வளவு யோசித்தும் எங்கே என்று சட்டென்று ஞாபகம் வரவில்லை. திருமணத்திற்கான பூர்வாங்க பேச்சுக்கள் முடிந்து, இருவரும் கொஞ்ச நேரம் தனியாகப் பேசிக்கொள்ளட்டுமென்று பெரியவர்கள் அனுமதித்த போது, அவன் கேட்டான். “நீங்க வேலை பார்க்குறீங்களா?”
”ஆமா.... ஆனா உங்களுக்கு வேண்டாமின்னா வேலைய விட்டுர்றேன்...” என்றாள் தரையைப் பார்த்துக் கொண்டு.
”அய்யோ; தப்பித் தவறிக் கூட அந்தத் தப்பப் பண்ணீடாதீங்க; இப்ப இருக்கிற பொருளாதார சூழ்நிலைல, தேவைகள் பெருகி விட்ட தினப்படி வாழ்க்கையில ஒருத்தர் வருமானத்துல காலந்தள்ளுறது ரொம்பக் கஷ்டம்...” என்றான் வெளிப்படையாக. அவனுடைய குரலைக் கேட்டதும் அவளுக்கு ஞாபகம் வந்து விட்டது. உள்ளூர் டீ.வி.யில் பட்டிமன்ற பேச்சாளராக அவனைப் பார்த்திருக்கிறாள். “நீங்க பட்டிமன்றத்துல பேசுறதக் கேட்டுருகேன்; உங்க பேச்சும் தமிழ் உச்சரிப்பும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்....”என்றாள்.
அவர்களுக்குத் திருமணம் முடிந்து ஓரிரு மாதங்கள் கடந்து விட்டிருந்த ஒரு மாலை நேரத்தில் “நிம்மி, உனக்கு மகேந்திரன்னு யாரையாவது தெரியுமா?” என்று கேட்டான். அவளுக்கு சிலீரென்றிருந்தது. சில வருஷங்களுக்கு முன்பு அவள் வேலை பார்த்த பள்ளி நிர்வாகியின் மகன் தான் மகேந்திரன். இருவரும் காதலித்தார்கள். நிறைய கடிதங்கள் எழுதி, பள்ளியின் உல்லாச சுற்றுலாக்களில் நெருக்கமாய் நின்று போட்டோக்கள் எடுத்துக் கொண்டார்கள். அப்புறம் தான் அவனின் சுயரூபம் வெளிப்பட்டது. பெண்களை காதலெனும் மாய வலையில் சிக்க வைத்து, தன்னுடைய வெறியைத் தீர்த்துக் கொண்டு விலகி விடுகிற கயவன் அவன் என்ற உண்மை புரிந்த அடுத்த நிமிஷமே அவனின் தொடர்பைத் துண்டித்துக் கொண்டு அந்தப் பள்ளியிலிருந்தும் வெளியேறி விட்டாள்.
”நமக்குக் கல்யாணம் நிச்சயமாகிக் கொஞ்சநாள்ல இந்த மகேந்திரன் என்னை வந்து பார்த்தான்; நீ அவனுக்கு எழுதிய கடிதங்கள், எடுத்துக்கிட்ட போட்டோக்கள் எல்லாம் காட்டி உன்னோட கேரக்டர் மோசமின்னும், கல்யாணத்த நிறுத்திடனுமின்னும் சொன்னான். வேலையப் பார்த்துட்டுப் போடான்னு திட்டி அனுப்பீட்டேன்; இதை ஏன் இப்ப உன்கிட்ட சொல்றேன்னா, பருவ வயசுல காதலிக்குறதுங்குறது ரொம்ப இயல்பான விஷயந்தான்; அதுக்காக உனக்கு குற்ற உணர்வு எதுவும் தேவையில்லைன்னு சொல்றதுக்குத்தான்...” என்றான். இப்படி ஒரு ஆண்மகனா என்று நிர்மலாவிற்கு ஆச்சர்யமாய் இருந்தது.
ஒருமுறை ஒரு இரயில்வே விபத்தின் காரணமாக திடீரென்று இரயில்களை எல்லாம் நிறுத்தி விட்டார்கள். போக்குவரத்தே ஸ்தம்பித்து, பஸ்களிலும் நெரிசல் பொங்கி வழிந்தது. ஆட்டோக்களும் கிடைக்காத சூழலில் இவள் முன்பின் தெரியாத ஆடவன் ஒருவனின் ஸ்கூட்டரில் லிப்ட் கேட்டு, அவன் பெண்ணையே பார்த்திராத மாதிரி வழிந்து, இவளை இவள் வீட்டிற்கே கொண்டு வந்து இறக்கி விட்டுப் போனான். வாசலில் நின்று இதைப் பார்த்துக் கொண்டிருந்த மூர்த்தி, “உதவி செய்தவனை அப்படியேவா அனுப்பறது? வீட்டுக்குள்ள கூப்புட்டு ஒரு காஃபியாவது குடுத்து அனுப்பியிருக்கலாமே...!” என்று கடிந்து கொண்டான்.
”மணி ஏழரைக்கு மேல ஆயிருச்சு; இந்நேரம் உன் ஹஸ்பண்டு வீட்டிற்கு வந்துருப்பாருல்ல....” என்று நிர்மலாவிடம் கேட்டு உறுதி படுத்திக் கொண்டு போனில் நம்பரைச் சுழற்றினாள் சுமித்ரா. கைத்தொலைபேசிகளோ, பேசரோ எல்லாம் புழக்கத்திற்கு வராத காலகட்டம் அது. தொடர்பு கொள்ள ஒரே சாத்தியம் லேண்ட் லைன் மட்டுமே!
”ஹலோ, இது நிர்மலா வீடா; நான் அவளோட தோழி சுமித்ரா – கூட வேலை பார்க்குற கொலிக் பேசுறேன்....” என்று ஆரம்பித்தாள்.
“நிர்மலா, இன்னும் ஸ்கூல்லருந்து வீட்டுக்கு வரலையே...!” என்றது எதிர்முனை. “அவள் இன்னைக்கு ஸ்கூலுக்கே வரல; அது சம்பந்தமா உங்ககிட்டப் பேசுறதுக்குத் தான் போன் பண்ணினேன்...” என்றாள் சுமித்ரா.
”என்கிட்ட என்ன பேசணும்....?”
”கொஞ்ச நாளா உங்க வொய்ஃப்போட போக்கே சரியில்ல; ஸ்கூலே அசிங்கப் பட்டுப் போச்சு.... ஸ்கூல்ல சுந்தரராமன்ங்குறவர்கிட்ட ரொம்ப இழையுறாங்க... அதான் உங்க காதுல் போட்டு வைக்கலாமின்னு....”
”ஆணும் பொண்ணும் சேர்ந்து வேலை பார்க்குற எடத்துல, ஒருத்தருக் கொருத்தர் பேசிச் சிரிக்காம எப்படிங்க இருக்க முடியும்! இதைச் சொல்றதுக்கா வேலை மெனக்கிட்டு எனக்கு போன் பண்ணுனீங்க...”
“நான் சொல்றத முழுசா கேளுங்க மிஸ்டர் மூர்த்தி.... அவங்க உறவு நீங்க நெனைக்குற லிமிட்டெல்லாம் தாண்டி ரொம்ப தூரம் போயாச்சு; இன்னைக்குக் கூட ரெண்டு பேரும் ஸ்கூலுக்கு மட்டம் போட்டுட்டு மகாபலிபுரம் போயிருக்குறாங்க ஜாலியா இருக்குறதுக்காக.....” நிர்மலா சுமித்ராவைக் கிள்ளினாள். “நீ எல்லை மீறிப்போற....” என்று மெல்லிய குரலில் கண்டித்தாள். சுமித்ரா ரிசீவரின் வாயை மூடிக் கொண்டு, “சும்மா வெளையாட்டுக்குத் தான.... உன் லட்சிய புருஷர் எப்படித்தான் ரியாக்ட் பண்றாருன்னு தான் பார்ப்பமே....” என்றாள் கிண்டலுடன்.
”இங்க பாருங்க மிஸஸ்....உங்க பேரு என்ன சொன்னீங்க; ம்....சுமித்ரா; நிர்மலாவ உங்களோட தோழிங்குறீங்க... அப்புறம் அவங்களப் பத்தி இப்படி அபாண்டமா பழி சொல்றீங்களே! உங்களப் பத்தி நான் என்ன நெனைக்குறது! உங்களூக்கும் நிர்மலாவுக்கும் ஏதாவது பிரச்னையா?” என்றான் மூர்த்தி.
”அய்யோ, நான் சொல்றதெல்லாம் நூறுசதம் உண்மைங்க; உங்களுக்கு இந்த உண்மை பின்னாடி தெரிய வரும்போது பெரிய விளைவுகள ஏற்படுத்திடுமோன்னு பயந்து தான் இப்பவே உங்க காதுல போட்டா, இதை நீங்க முளையிலேயே கிள்ளிடலாமேன்னு தான்.... என் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையின்னா, நீங்க ஸ்கூலுக்கு வந்து கூட விசாரிச்சுப் பார்க்கலாம்.....” அவள் பேசி முடிப்பதற்குள் மூர்த்தி சீறினான்.
”இங்க பாருங்க; நீங்க நிர்மலாவோட தோழின்னு சொன்னதுனால தான் இவ்வளவு நேரம் பேசிக்கிட்டிருந்தேன்... உங்களோட பேச்சு சரியில்ல; என் மனைவிய அவள் வேலை பார்க்குற எடத்துல போயி வேவு பார்க்குற கேவலமான காரியத்தச் செய்யச் சொல்றீங்களா! அந்த அளவுக்கு மட்டமான ஆளு நான் இல்ல....போனை வச்சுட்டு உங்க வேலையப் பார்த்துக்கிட்டுப் போங்க” என்று சிடுசிடுத்து பட்டென்று போனைத் துண்டித்தான்.
சுமித்ரா கொஞ்ச நேரத்திற்கு ஒன்றுமே பேசவில்லை. ஆழமாய் நிர்மலாவை ஏறிட்டாள். “ரியலி, நீ ரொம்பக் குடுத்து வச்சவ நிர்மலா... உன்னை நெனச்சா எனக்கு ரொம்ப பொறாமையா இருக்கு! இப்படி ஒரு ஆம்பளையா, என்னால இன்னும் கூட நம்பவே முடியல... உண்மையிலேயே உன் புருஷன் கிரேட் பெர்ஸன் தான்; நான் என்னோட தோல்விய ஒத்துக்கிறேன்....” என்றாள்.
நிர்மலாவிற்கு ரொம்பவும் பெருமையாக இருந்தது. இருந்தாலும் ஒரு மூன்றாம் மனுஷியிடம் பெருந்தன்மையாய்க் காட்டிக் கொண்டிருந்து விட்டு தான் வீட்டிற்குப் போனதும் வெடிப்பானோ என்று மனதின் மூலையில் ஒரு பயப் பந்தும் உருண்ட்து. வீட்டிற்குப் போனதும் முதல் வேலையாக அவன் ஆரம்பிப்பதற்குள் எல்லாவற்றையும் கொட்டி விட வேண்டுமென்று நினைத்துக் கொண்டாள்.
நிர்மலா வீட்டிற்குப் போனபோது மூர்த்தி டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். ”வா நிர்மலா, இப்பத்தான் வர்றியா? முகங்கால் கழுவிட்டு சீக்கிரம் வா; நானே உனக்குப் பிடிச்ச அயிட்டங்கள சூப்பரா சமைச்சு வச்சுருக்கேன்; சாப்பிடலாம்....” என்றான்.
அவள் முகங்கால் கழுவி நைட்டிக்கு மாறி, டைனிங் டேபிளுக்கு வந்ததும் அதற்காகவே காத்திருந்த்து போல் ஆரம்பித்தான். “நிர்மலா, உனக்கு இன்னைக்கு சம்பள நாளாச்சே! எங்க சம்பளக் கவர்?” என்றான். நிர்மலா எழுந்து போய் சம்பளக் கவரை எடுத்து வந்து அவனிடம் கொடுக்கவும் எந்த சிந்தனையு மில்லாமல் அவளின் சம்பளப் பணத்தை சிரத்தையாய் எண்ணத் தொடங்கினான்.
நிர்மலாவிற்கு ”ச்சீ...” என்றிருந்த்து. என்ன மாதிரியான மனுஷன் இவன்! இவன் தன் மீது வைத்திருப்பது அதீத நம்பிக்கையா? அல்லது நீ எக்கேடும் கெட்டுப்போ; எனக்கு முதல் தேதி நீ கொண்டு வருகிற சம்பளப்பணம் தான் முக்கியம் என்கிற அக்கறையின்மையா? அவள் வெடித்து அழத் தொடங்கினாள்.

Ø முற்றும்

Monday, May 31, 2010

சிறுகதை: ஒரு விபத்து; சில நிகழ்வுகள்


மறக்கவே முடியாதபடி மனதில் ஆழப் பதிந்து போனது இந்த வருஷ ‘ஹோலிப் பண்டிகை’. ஹோலி; ஹோலி என்று ஜாலியாய்க் கூவியபடி ஆண்களும் பெண்களும் ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை வாரி இறைத்தும், சித்தாள்ப் பெண்கள் ஹோலிப் பாடல்கள் பாடி என்ஜீனியர்களிடமும் ஆபிஸர்களிடமும் காசு கேட்டுக் கலாய்த்துக் கொண்டும் சந்தோஷமாய் அலைந்து கொண்டிருந்த போது, விதி எல்லோருடைய முகங்களிலும் கரியைப் பூசி அழகு பார்த்த கறுப்பு தினமானது அன்றைக்கு.
ஹோலிப் பண்டிகைக் கொண்டாட்டங்களும் மகிழ்ச்சி ஆரவாரங்களும் ஒரு பக்கம் உற்சாகமாக அரங்கேறிக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் பால்ராஜும், நரேந்திரனும் மறுநாள் போட வேண்டிய சிலாப் கான்கிரிட்டுக்கான ஆயத்தப் பணிகளில் மும்முரமாய் இருந்தார்கள். அப்போது திடீரென்று வேலை ஆட்களின் கூடரங்களிலிருந்து அழுகையும் கூச்சலுமாய் சத்தம் கேட்கத் தொடங்கவும் ஏதோ விபரீதம் என்று புரிந்து இருவரும் கூடாரம் நோக்கி ஓடினார்கள்.
வேலை ஆட்களின் உபயோகத்திற்காகக் கட்டப் பட்டிருந்த தண்ணீர் தொட்டியின் இரண்டு சுவர்கள் அப்படியே சரிந்து அப்போது குளித்துக் கொண்டும் தண்ணீர் பிடித்துக் கொண்டு மிருந்தவர்களின் மீது விழுந்து ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் விழுந்த சுவற்றிற்கு அடியில் மாட்டிக் கொண்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்கள். பார்த்த மாத்திரத்திலேயே எல்லோருக்கும் நெஞ்சு பதறியது. தண்ணீர்த் தொட்டியில் நீர் நிரப்பிய டேங்க்கர் லாரி ஒன்று அவசர அவசரமாக வெளியேறிக் கொண்டிருந்தது.
சூழல் முழுக்க பதட்டமும் அழுகையும் அவசர ஓட்டங்களுமாய் இருந்தது. எல்லோரும் தங்கள் தங்கள் குழந்தை குட்டிகளும், உறவினர்களும் பத்திரமாய் இருக்கிறார்களா என்று பார்த்துக் கொண்டார்கள். தைரியமான சிலர், இடிபாடுகளுக்கிடையில் சிக்கிக் கொண்டிருந்தவர்களை வெளி யில் இழுத்துப் போட்டுக் கொண்டிருந்தார்கள். விழாது நின்று கொண்டிருந்த மற்ற இரண்டு சுவர்களும் எப்போதும் விழுந்து விடலாம் என்பது போல் நிறைய விரிசல்களுடன் பயமுறுத்திக் கொண்டிருந்தன.
“பத்துப் பேர்ருக்கு மேல செத்துட்டாங்க போலருக்கு….”
“இன்னும் கூட இருக்கும்கிறாங்க; குறைஞ்சது இருபது பேர் காலின்னு பேசிக்கிறாங்க”
“அதெல்லாம் சும்மா யாரோ பீதியக் கெளப்பி விடுறாங்க; உயிர்ச் சேதமெல்லாம் ஒண்ணுமில்ல; கொஞ்சப் பேருக்கு அடி பட்டுருக்கு அவ்வளவு தான்….” பலரும் பலவிதமாய்க் கூடிக்கூடிப் பேசினார்கள். உண்மை நிலவரம் யாருக்கும் தெரிய வில்லை. எல்லாம் அனுமானங்கள், கைகால் முளைத்து கதைகளாகி உலவத் தொடங்கின.
அரசு அலுவலர்களுக்கான அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டும் பணி அது. ஹைதராபாத் கம்பெனிக்கு டெண்டர் கிடைத்து அப்போது தான் வேலைகள் தொடங்கி இருந்தன.பெரும்பாலான கட்டிடத் தொழிலாளர்கள் ஹைதராபாத்திலிருருந்தே வரவழைக்கப்பட்டு, அவர்களும் வேலைத்தளத்திலேயே கூடாரங்கள் அமைத்துத் தங்க வைக்கப் பட்டிருந்தார்கள். அந்தத் தொழிலாளர்களின் உபயோகத்திற்காகக் கட்டப் பட்டிருந்த தண்ணீர்த் தொட்டிதான், டேங்க்கர் லாரி மூலம் தண்ணீர் நிரப்பப் பட்டுக் கொண்டிருந்தபோது இடிந்து விழுந்து விட்டது. செய்தி கேள்விப் பட்டதும் கம்பெனியின் முக்கியப் பொறுப்பிலிருந்தவர்கள் எல்லோரும் அடித்துப் பிடித்துக் கொண்டு சம்பவ இடத்திற்கு ஓடி வந்தார்கள்.
“ஏதாவது வண்டி ஏற்பாடு பண்ணுங்க; அடிபட்டவங்கள ஆசுப்பத்திரிக்குக் கொண்டு போகலாம்…..” யாரோ ஒருத்தர் சத்தம் போடவும், சிலர் ரோட்டை வழிமறித்து அப்போது அந்த வழியாய்ப் போன சரக்குகள் ஏற்றும் மினிவேன் ஒன்றை நிறுத்தினார்கள். கைகால் நசுங்கிய, மண்டையில் அடிபட்ட மற்றும் பயத்திலேயே மயக்கமாகி விட்ட என்று மொத்தம் பதினெட்டு உடல்களை வேனில் வரிசையாகப் படுக்க வைத்தார்கள்.வேனின் டிரைவர் முனகிக் கொண்டிருந்தான். “இதென்ன அக்கிரமமா இருக்கு? வண்டி யெல்லாம் ஒரே இரத்தமா வேற ஆக்குறாங்களே! எங்க ஓனருக்கு யாரு பதில் சொல்றது?”
“கொஞ்சம் உதவி பண்ணுப்பா, உன் வேனுக்கு உண்டான வாடகைய செட்டில் பண்ணீடு றோம்; உன் வண்டியையும் அப்புறம் மேல நாங்களே கழுவிக் கொடுத்துடுறோம்…” என்று அவனை சமாதானப் படுத்தினார் திவாகர் ராவ் – கம்பெனியின் அட்மினிஸ்ட்ரேஷன் மேனேஜர். அப்புறம் அவனிடம் “இது விபத்துக் கேஸா இருக்குறதால பிரைவேட் ஆஸ்பத்திரியில எடுத்துக்க மாட்டாங்க….அதால நேரா ஜி.ஹெச்சுக்கே கொண்டு போயிரு….” என்றார்.
“ஏன் செலவாகும்னு பாக்குறீங்களாக்கும்! அவ்வளவு தூரம் ஜி.ஹெச்சுக்குக் கொண்டு போனா, போற வழியிலேயே பாதி உயிர் போயிடும்; அதால பக்கத்துல இருக்குற தனியார் ஆஸ்பத்திரிக்கே கொண்டு போகச் சொல்லுங்க…” உண்ர்ச்சி மேலிட உரிமையாய்ச் சொன்னார் அடிபட்டுக் கிடப்பவர்களின் உறவினர் ஒருவர்.
அவர் சொன்னதைக் கேட்டதும் திவாகரின் முகம் சட்டென்று விழுந்து விட்டது. ”பணம் பெரிசில்ல; எத்தனை கோடி செலவானாலும் கம்பெனி மூலம் நான் ஏற்பாடு பண்றேன்; எங்க வேனுமின்னாலும் கொண்டு போங்க , நமக்கு உயிர் பிழைக்குறது தான் முக்கியம்…” என்றார். தேறும் என்று நிச்சயமாய்த் தெரிந்தவர்களை மட்டும் தங்களின் மருத்துவமனையில் அனுமதித்துக் கொண்டு, மற்ற இழுபறி கேஸ்களை தங்களின் ஆம்புலன்ஸ் வண்டியிலேயே ஜி.ஹெச். அனுப்பிவைத்தது அருகிலிருந்த தனியார் மருத்துவமனை.
”அதுவும் சரிதான்; எல்லோரையும் ஒரே எடத்துல வச்சு சிகிச்சை குடுத்தா என்னமோ ஏதோன்னு பார்க்குறவங்களுக்கெல்லாம் பதட்ட மாயிடாதா….” என்று தங்களுக்குள்ளாகவே சமாதானம் சொல்லிக் கொண்டார்கள். விபத்து நடந்த இடத்தில் உடைந்த வளையல் துண்டுகளும், அறுந்த செருப்புகளும், நசுங்கிக் கிடந்த பாத்திரங்களும், சிதறிக் கிடந்த பொம்மைகளும், அங்கங்கே திட்டுத் திட்டாய் உறைந்து கிடந்த இரத்தத் துளிகளும் பார்க்கும் யாருக்கும் சிலீரென்ற ஓர் உணர்வை ஊட்டி வாழ்தலின் நிச்சயமின்மையை உணர்த்திக் கொண்டிருந்தன.
போலீஸ் வந்து கூட்டத்தைக் கலைத்தது. தீயணைப்புப் படையினர் வந்து விழுந்து கிடந்த சுவர்களுக்கடியில் இன்னும் வேறு யாரேனும் மீட்கப்படாமல் மாட்டிக் கொண்டிருக்கிறார்களா என்று பரிசோதித்தார்கள். மேலும் விரிசல் விழுந்திருந்த சுவர்களுக்கருகில் பொதுஜனம் யாரும் போகாமல் பார்த்துக் கொண்டார்கள். “தண்ணித் தொட்டி கட்டியிருக்கிற இலட்சணத்தப் பாருங்க; அஸ்திவாரமே தோண்டாம தரைக்கு மேல அப்படியே ஏனோதானோன்னு கட்டியிருக்குறாங்க…. “
“உடைஞ்சு கிடக்குற சுவர் எதுலயாவது உயிரோட்டமிருக்கா பாருங்க…. காஃபிக்கு சர்க்கரை போடுறது மாதிரி, சிமெண்ட்ட ஸ்பூன்ல அளந்து போட்டுல்ல கட்டிருப்பாங்க போலருக்கு; இப்படிக் கெட்டுனா சுவர் எப்படி ஸ்ட்ராங்கா இருக்கும்? அதான் வாயப் பொழந்துருச்சு….”
“கவர்மெண்ட் என்ஞீனியர்கள் எல்லாம் என்னத்தப் புடுங்குனாங்கன்னே தெரியல….!”
“அதுங்களா, எச்சக்கல நாயிங்க…..கான்ட்ராக்ட்காரன்ட்ட காச வாங்கிக்கிட்டு வாலாட்டிக்கிட்டு எதையும் கண்டுக்காம இருந்துருக்குங்க…..” வேடிக்கை பார்க்கும் பொதுஜனம் போகிறபோக்கில் காண்ட்ராக்டரின் வேலைத்தரத்தை விமர்சித்துப் போனது.
மருத்துவமனை வட்டாரத்திலிருந்து சேதாராங்கள் பற்றிய செய்தி கசியத் தொடங்கியது. ஒரு பதினைந்து வயதுப் பெண், ஐம்பது வயது மூதாட்டி, ஆறு மற்றும் எட்டு வயதில் இரண்டு சிறுவர்கள் இறந்து போயிருந்தார்கள். ஐந்து பேர் இன்னும் கவலைக்கிடமான நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்கள். மற்றவர்கள் அபாயக் கட்டத்தைத் தாண்டி விட்டிருந்தார்கள்.
“இந்த வேலைக்கு இன்சார்ஸு யாருங்க?” மிடுக்காய் இருந்த இன்ஸ்பெக்டர் லோகநாதன் அதிகாரமாய்க் கேட்டார். நாற்பது வயதிலேயே அறுபது வயதுக்குரிய தளர்வுடனிருந்த நரேந்திரன் “நான் தாங்க …”என்றபடி இன்ஸ்பெக்டரின் அருகில் போனார்.தன்னைக் கைது பண்ணி, ஜெயிலில் அடைத்து சித்ரவதை பண்ணுவார்களோ என்ற பயமும் கலக்கமும் அவரின் முகத்தில் அப்பட்டமாய்த் தெரிந்தது.
“வாங்க ஸ்டேஷனுக்குப் போயிட்டு வந்துடலாம்…” தோளில் கை போட்டபடி இன்ஸ்பெக்டர் மிக மரியாதையாகவே அழைத்துப் போனார். ”பயப்படாதீங்க; நீங்க என்ன கொலையா பண்ணீட்டீங்க! எதிபாராம நடந்த விபத்துக்கு நீங்க என்ன பண்ணுவீங்க? ஒரே ஒரு ஸ்டேட்மெண்ட் மட்டும் குடுத்துட்டு திரும்பிடலாம்…. வில்லங்கமில்லாம எப்படி ஸ்டேட்மெண்ட் கொடுக்குறதுன்னும் நானே சொல்லித் தாறேன்….” நரேந்திரனின் காதுகளுக்குள் கிசுகிசுத்த இன்ஸ்பெக்டரின் கண்களுக்குள் கரன்ஸிகள் படபடத்தன. இது அவருக்கு கொழுத்த வாய்ப்பு!
ரீஜினல் டைரக்டர் சேதுராமன் அவசரமாய் அவர்களுக்கு அருகில் வந்து “நீங்க ஸ்டேஷன்ல போயி இருங்க; ஆனா ஸ்டேட்மெண்ட் எதுவும் கொடுக்க வேண்டாம்…. நான் மினிஸ்ட்டர்ட்டப் பேசிட்டு நம்ம வக்கீலையும் அழைச்சுக்கிட்டு ஸ்டேஷனுக்கு வர்றேன்; அப்புறம் மத்ததப் பார்த்துக்கலாம்…” என்றார். நரேந்திரன் பயம் தெளிந்து இன்ஸ்பெக்டரைத் தொடர்ந்தார்.
போலீஸைச் சமாளிப்பது பெரிய விஷயமாய் இருக்கவில்லை. மினிஸ்டரின் போன்காலும் கொஞ்சம் பணமும் போதுமானதாக இருந்தது. ஹோலிப் பண்டிகைக் கொண்டாட்டங் களில் வேலை ஆட்கள் குடித்துவிட்டு தண்ணீர்த் தொட்டியின் மேலேறி ஆட்டம் போட்டதால் தான் சுவர் விழுந்து விட்டதென்று பதிந்து கொண்டார்கள். மினிஸ்டரின் உத்தரவின் பேரில் அந்தப் பகுதி எம்.எல்.ஏ. ஆச்சரியமாய் அதிகக் கூட்டமும் ஆரவாரமும் இல்லாமல் வந்தார். துக்கம் வழிகிற முகத்துடன் காரிலிருந்து இறங்கி, வேலைஆட்களிடம் போய் ஆறுதலாய் ஏதோ பேசினார். வேலை ஆட்களுக்கும் மௌனமாய்க் கண்ணீருடன் கேட்டுக் கொண்டார்கள். அப்புறம் விபத்து நடந்த பகுதியைச் சுற்றிப் பார்த்து விட்டு விருட்டென்று கிளம்பிப் போய்விட்டார்.
அவர் கிளம்பிப் போன அடுத்த நிமிடமே, அதற்காகவே காத்துக் கொண்டிருந்தது போல, அந்தப் பகுதி சுத்தமாய்த் துடைத்தெடுக்கப்பட்டது. விபத்து நடந்ததற்கான எந்த அடையாளமும் இல்லாமல் இரத்தம் தோய்ந்த, விரிசல் கண்டிருந்த சுவர்களும் அப்புறப் படுத்தப் பட்டன. ஆஸ்பத்திரியில் அபாயக் கட்டத்திலிருந்தவர்களும் இயல்பு நிலைமைக்குத் திரும்பி விட்டார்களென்ற செய்தி வந்ததும் ரீஜினல் டைரக்டருக்கு மூச்சு சீரானது.
விபத்து பற்றிய செய்தியை பெரிது படுத்தாமலிருக்க, பத்திரிக்கைக் காரர்களிடம் தான் பெரிதும் போராட வேண்டியிருந்தது; பெரும் தொகையும் செலவழிக்க வேண்டியிருந்தது. கடைசியில் செய்தியை இருட்டடிப்ப்பு செய்ய முடியாதென்றும் , முக்கியத்துவ மில்லாமல் மூன்றாம் நான்காம் பக்கங்களில் பொடி எழுத்துக்களில் கம்பெனியின் பெயரின்றி வெளியிடவும் ஒத்துக் கொண்டு அதன் படியே வெளியிட்டார்கள்.பணம் பத்திரிக்கை வரையும் பாயும் என்பது நிரூபணமானது.
அடுத்தநாள் களைப்பும் தூக்கமுமாய் அலுவலக அறையில் திவாகர் ராவும் சேது ராமனும் உட்கார்ந்து அடுத்து என்ன செய்யலாம் என்பது பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது, போலீஸின் இன்னொரு பிரிவிலிருந்து தொப்பியும் தொப்பையுமாய் இருவர் வந்து விபத்து பற்றிய விபரங்களை க் கேட்டார்கள். பேச்சில் கறாரான சிடுசிடுப்பு இருந்தது.
“போலீஸுக்குத்தான் ஏற்கெனவே ஸ்டேட்மெண்ட் கொடுத்து பார்மாலிட்டிஸும் பண்ணியாச்சே…..” அலுப்புடன் சொன்னார் திவாகர்ராவ்.
“அது லோக்கல் போலீஸ். நாங்க ….” வந்தவர் முடிப்பதற்குள் சேதுராமன் எழுந்து வந்து அவர்களை பக்கத்து அறைக்குள் அழைத்துப் போனார். கொஞ்ச நேரத்திலேயே சிரித்தபடி அவர்கள் வெளியேறினர். போகிறபோக்கில் “நீங்க எதுக்கும் கவலைப் படாதீங்க; எல்லாத்தையும் நாங்க பார்த்துக்குறோம்… ஏதாவது உதவி வேணுமின்னா தயங்காமப் போன் பண்ணுங்க…” என்று அசடு வழிந்து போனார்கள். சேதுராமனும் திவாகரும் இலேசாய்ச் சிரித்துக் கொண்டார்கள்.
அவர்கள் கிளம்பிப் போன கொஞ்ச நேரத்தில் தும்பைப் பூப்போல வெள்ளை வெளேரென்று வேஷ்டியும் சட்டையும், மிக நிளமான துண்டும் அணிந்திருந்த ஒருவர் தன் பின்னால் ஆறேழுபேர் புடைசூழ புயல் போல வேகமாய் வந்தார். வந்ததுமே ஏக வசனத்தில் ஆரம்பித்தார்.“இங்க எவன்டா கான்ட்ராக்டர்?” யாரும் அவருக்கு பதில் சொல்லா திருக்கவும் அவர் பாட்டுக்குப் பேசத் தொடங்கினார்.
“தொழிலாளி உயிருன்னா உங்களுக்கு மயிருக்குச் சமானமாயிடுச்சா… நாலு பேர் தான் செத்துட்டாங்கன்னு ஏன் பொய்த் தகவல் தர்றீங்க? கை, கால் எழந்து நடைப் பிணமா வாழப் போறவங்களுக்கு உங்களோட பதிலு என்ன? கவர்மெண்ட் தந்த சிமெண்ட்ட எல்லாம் வெளிமார்க்கெட்டுல வித்துட்டு சாம்பலக் கலந்து தண்ணித் தொட்டி கட்டுனதால தான் அது சரிஞ்சிடிச்சுன்னு தெரியாதா எங்களுக்கு! இதை நான் சும்மா விடப் போறதில்ல; சாலை மறியல் பண்ணி இந்த விஷயத்தைக் கோட்டை வரைக்கும் கொண்டுபோவேன்….” தாம்தீமென்று குதித்தார்.
அதே வேகத்தில் தன் பரிவாரங்களுடன் போய் வேலை ஆட்களைச் சந்தித்து, “உங்கள எல்லோரும் ஏமாத்தப் பாக்குறாங்க; உங்களுக்கு நியாயம் கிடைக்கப் போராடுவேன்….” என்றபடி நடுவீதியில் நின்றபடி மீட்டீங் போலப் பேசத் தொடங்கினார். “இதென்ன ஸார் புதுக் குழப்பம்! சாலை மறியல் அது இதுன்னு பயமுறுத்துறார். கூப்புட்டு ஏதாவது குடுத்து அனுப்பலாமா?” திவாகர் பதறினார்.
“இவனெல்லாம் வெத்து வேட்டு… சும்மா ஃபிலிம் காட்டுறான்….போனதடவை வார்டு எலக்சன்ல நின்னு டெபாஸிட் காலி; இவனுக மாதிரி ஆளுக மிரட்டலுக்கெல்லாம் பயந்து குடுக்க ஆரம்பிச்சா, கம்பெனிய வித்தாலும் குடுத்து மாளாது; ஈசல் மாதிரி வந்துக்கிட்டே இருப்பா னுங்க…. அதனால கண்டுக்காம விட்டுடு; அவனே குதுச்சு அடங்கி காணாமப் போயிடுவான்; அப்படியும் போகலைன்னா, நம்ம போலீஸ் ப்ரண்டுக எதுக்கு இருக்குறாங்க! கூப்பிட்டுச் சொன்னா புடிச்சுட்டுப் போயி பொய்கேசப் போட்டு நாலு தட்டுத் தட்டி அனுப்புனா, அப்புறம் இந்தப் பக்கம் தலை வச்சே படுக்க மாட்டாங்க….” என்றார் சேதுராமன். அப்படியே தான் நடந்தது.
“தொழிலாளத் தோழர்களே….” என்று ஆரம்பித்து அரை மணிநேரம் பேசினார். அவருடன் வந்த கைத்தடிகள் மட்டும் அவ்வப்போது கைதட்டினார்கள். வேலை ஆட்கள் யாரும் அவர் பேச்சில் ஆர்வம் காட்டாது ஒதுங்கி நிற்க, இங்கு எதுவும் பெயராது என்று தெரிந்து ஆளுக்கொரு பக்கமாய்ச் சிதறிப் போனார்கள்.
லேபர் ஆபிஸிலிருந்து இரண்டு பேர் வந்தார்கள். ஏகப்பட்ட கேள்விகள்! இறந்தவர் களின் பெயர்கள் எதுவும் தினசரி ரோல் ரிஜிஸ்ட்டரிலேயே இல்லை. யாருக்கும் எந்த விதமான விபத்துக் காப்பீடும் எடுக்கப் பட்டிருக்கவில்லை. திவாகர்ராவ் முழிமுழி என்று முழித்தார். சேதுராமன் தான் சாமர்த்தியமாய்ப் பேசிச் சமாளித்து, அலுவலகத்தில் வந்து அவர்களைக் கவனிப் பதாய் உறுதி அளித்து அனுப்பி வைத்தார்.
போஸ்ட்மார்ட்டம் முடிந்து செத்துப் போனவர்களின் உடல்கள் ஜி.ஹெச்.சிலிருந்து வருகிற செய்தி கிடைத்ததும் சேதுராமன் பரபரப்பானார்.
“பாடிய எந்தக் காரணத்துக்காகவும் வேலை ஆட்களின் கூடாரங்களுக்கு கொண்டு வரக் கூடாது.ஆஸ்பத்திரியில் இருந்தபடியே சுடுகாட்டிற்கு கொண்டு போய் இறுதிச் சடங்குகள நிறைவேற்றி விடுங்கள்.பாடிய இங்கு கொண்டு வந்தா பலரும் பலவிதமாய் கிளப்பி விடுவார்கள். அப்புறம் வேறு பிரச்சினைகள் வரலாம்….” சேதுராமன் கண்டிப்பாய் சொல்லி விட்டு அவசர அவ சரமாய் கிளம்பிப் போனார்.
வெட்டியானிடம் சொல்லி குழி எல்லாம் வெட்டி தயாராக வைத்திருந்தார்கள். மாலை 5 மணிக்கெல்லாம் நான்கு உடல்களும் அமரர் ஊர்தி மூலம் சுடுகாட்டிற்கு வந்து சேர்ந்து விட்டன. திவாகர் ராவிற்கு அப்பாடா என்று இருந்தது.இன்றைக்காவது சீக்கிரம் வீட்டிற்குப் போய் கொஞ்சம் தூங்கலாம் என்று நினைத்துக் கொண்டார்.ஆனால் அது அவ்வளவு சுலபமில்லை என்று அதற்கப்புறம் நிகழ்ந்தவை உணர்த்தின.
இறுதி சடங்குகள் செய்ய சுடுகாட்டிற்கு வர, வேலை ஆட்கள் மறுத்தார்கள்.தங்களின் பெரிய மேஸ்திரி ஹைதராபாத்திலிருந்து வந்த பின்பு தான் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிப் போம் என்று முரண்டு பண்ணினார்கள். சுடுகாட்டிற்கு வெளியே பிணங்களை இறக்கி விட்டு அமரர் ஊர்தி சென்று விட கம்பெனி ஆட்கள் பிணங்களுக்கு காவல் இருந்தனர்.திவாகர் ராவும் மற்றும் சிலரும் வேலை ஆட்களை சமாதானப் படுத்த முயன்று தோற்றுக் கொண்டிருந்தனர்.
“காலைலருந்து இவங்க எதைப்பத்தியும் பேசாம அமைதியா இருந்துட்டு இப்பப் போயி பெரிய மேஸ்திரி வரணும்னு சொல்றாங்கன்னா அதனோட உள்ளர்த்தம் வேற. செத்துப் போனவங்களுக்கு நஷ்ட ஈடு பத்தி பேசி தீர்மானிக்க, பிணங்களை அப்புறப் படுத்தும் முன்பேயே நினைக்கிறார்கள்.அதை வெளிப்படையா கேட்க கம்பெனி விசுவாசம் தடுக்குறதால பெரிய மேஸ்திரி வரணும்னு ஜால்சாப்பு சொல்றாங்க…..” நரேந்திரன் திவாகர் ராவிடம் சொல்ல அவர் சேதுராமனை அவருடைய செல்போனில் தொடர்பு கொண்டார்.
“நஷ்ட ஈடு பத்தி எல்லாம் நானோ நீயோ தீர்மானிக்க முடியாது.மேனேஜிங் டைரக்டர் தான் தீர்மானிக்கணும். நான் அங்க இருந்தா அவங்க என்கிட்ட நஷ்ட ஈடு பத்தி கேட்பாங்கன்னு தான் நான் அப்பவே ஆபிஸீக்கு வந்துட்டேன்.எப்படியாவது சமாளித்து சுமுகமாய் பிணங்களை அடக்கம் செய்கிற வழியைப் பார்……” என்று சிடுசிடுத்தார் சேதுராமன். இருட்டிக் கொண்டு வந்தது. குண்டும் குழியும் மனித நரல்களாயும் கிடக்கிற முள் பாதைக்குள் பிணங்களை எப்படி எடுத்துச் செல்வது என்று எல்லோருக்கும் கவலை மேலிட்டது. பிணங்கள் வேறு சிதைந்து துர்நாற்றம் வீசத் தொடங்கி இருந்தன.
இரவு பதினோறு மணியைத் தாண்டியும் வேலை ஆட்கள் மசிவதாய்த் தெரிய வில்லை. பெரிய மேஸ்திரி வருவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.இந்தா இருக்கிற ஹைதராபாத் திலிருந்து வருவதற்கு ஏன் இவ்வளவு தாமதம்? அவருக்கு தகவல் சொல்லப்பட்டதா? ஒருவேளை கம்பெனி அவரைப் போகக் கூடாதென்று ஹைதராபாத்திலேயே தடுத்து நிறுத்தி விட்டதா? ஒன்றும் உறுதியாய்த் தெரியவில்லை. மீண்டும் ரீஜினல் டைரக்டர் சேதுராமனைத் தொடர்பு கொள்ள அவர் ஏகப்பட்ட உஷ்ணத்தில் கத்தினார்.
“இதைக் கூட சமாளிக்க துப்பில்லைனா நீ என்ன அட்மினிஸ்ட்ரேஷன் மானேஜர்? எம்.டி. கிட்ட நஷ்ட ஈடு பத்தி பேசிட்டேன்.அவர் தலைக்கு பத்தாயிரமோ பதினைஞ்சாயிரமோ கம்பெனி சார்புல கொடுக்கலாம்ங்கிறார். செத்துப் போனவங்க யாருக்கும் இன்ஸீரன்ஸ் கூட நம்ம பண்ணியிருக்கல. இதை எல்லாம் இப்பவே அவங்களுக்குச் சொன்னா என்னை நாற அடிச்சிடு வானுங்க. மெதுமெதுவாத் தான் சொல்லி சம்மதிக்க வைக்கணும்…..” என்று சிடுசிடுத்தவர் கொஞ்சம் கோபம் தணிந்து சொன்னார்.
“எப்படியாச்சும் அவங்களை சுடுகாட்டிற்குக் கொண்டு போயிடுங்க. நான் அங்க வந்து அவங்க கிட்ட பேசிப் பார்க்கிறேன்…” என்று சொல்லி போனை வைத்தார்.
“பிணம் தனியாக இருக்கிறது; பெரிய மேஸ்திரி வரும்வரை பிணங்களுக்கு அருகி லாவது போய் காத்திருக்கலாம்…..” என்று பேசி ஒரு வழியாய் வேலை ஆட்களை எல்லாம் சமாதானப் படுத்தி சுடுகாட்டிற்கு கொண்டு வந்தார் திவாகர்ராவ்.
சேதுராமன் வந்ததும் வேலை ஆட்களிடம் “ஏன் இப்படிப் ப்ண்ணுகிறீர்கள்? எங்களுக்கும் துக்கமாகத்தான் இருக்கிறது. போட்டோகிராபரை வைத்து போட்டோ எடுத்துக் கொள்வோம். உங்கள் பெரிய மேஸ்திரிக்கு காட்டிக் கொள்ளுங்கள்…” என்று கூறி கையோடு கூட்டி வந்திருந்த போட்டோ கிராபரின் மூலம் போட்டோக்கள் எடுத்துத் தள்ளினார்.அப்புறமும் வேலை ஆட்கள் விரைத்துக் கொண்டு தான் நின்றார்கள்.சேதுராமனின் சமாளிப்புகளை செவிமடுக்கத் தயாரின்றி திரும்பிக் கொண்டார்கள்.அப்புறம் தான் அவர் காரிலிருந்து அந்த பெட்டியை இறக்கினார்.
எல்லோருடைய கண்களிலும் தூக்கத்தையும் துக்கத்தையும் மீறி ஒரு பிரகாசம் ஒளிர்ந்தது. காரிலிருந்து இறங்கிய பெட்டியில் உயர்ரக மதுவகைகள் பாட்டில் பாட்டிலாய் அடுக்கப்பட்டிருந்தன.
“எல்லோருக்கும் குடுங்கப்பா. குடிச்சு மனசை ஆத்திக்கிட்டு பெரிய மேஸ்திரிக்கு காத்திருப்போம்…..”திவாகரைப் பார்த்து கண்சிமிட்டியபடி சொன்னார்.
ஆளுக்கொரு பாட்டிலுடன் ஒதுங்கினார்கள்.குடித்து முடித்து வட்டமாய் உட்கார்ந்து குழறலாய்ப் பேசினார்கள். இதை எல்லாம் நமுட்டுச் சிரிப்புடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் சேதுராமன்.
“பிணம் நாத்தமெடுக்கத் தொடங்கியிருச்சு. இன்னும் எதுக்கு இதுங்களை வச்சு வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கனும்; குழிக்குள்ள எறக்கி மண்ணத் தள்ளுங்கப்பா….” என்று ஒரு கூட்டம் அபிப்ராயம் சொல்ல, இன்னொரு கூட்டம் அவனுடன் சண்டைக்குப் போனது.
“பெரிய மேஸ்திரி வரணும்; அதுவரைக்கும் எந்தக் காரியமும் பண்ணக் கூடாது…. பேசித் தீர்க்காமப் பிணத்தப் புதைச்சாச்சுன்னா அப்புறம் ஒத்தப் பைசா கூடக் குடுக்காம கம்பெனி நம்மல ஏமாத்திடும்…..”
“பெரிய மேஸ்திரி என்ன பெரிய புடுங்கியா? ஆக்ஸிடெண்ட் நடந்து ரெண்டு நாளாகுது, இன்னும் வந்த பாடில்ல; அவன் வந்து மட்டும் என்ன பண்ணப் போறான்! கம்பெனிக்கு சாதகமாத்தான் பேசப் போறான்……” ஆளாளுக்கு அடித்துக் கொள்ளத் தொடங்கினார்கள். அவர்களை விலக்கி விடப் போன அலுவலக ஆட்களை தடுத்து நிறுத்தினார் சேதுராமன்.
“சண்டை போடட்டும்; அப்புறம் தான் பிரச்னை ஒரு முடிவிற்கு வரும்….” என்றார் குரூரமாய்ச் சிரித்தபடி. சண்டை போட்டபடியே ஒரு கூட்டம் பிணங்களை எல்லாம் ஏற்கெனவே வெட்டி வைத்திருந்த குழிகளுக்குள் தள்ளி மண் பொட்டு மூடினார்கள். காரியங்கள் எல்லாம் போதையிலேயே மளமளவென்று நடந்தேறின.
“எப்படி சுலபமா முடிச்சுட்டேன் பார்த்தியா?” தன் சாமர்த்தியத்தை தானே ரசித்தபடி திவாகரிடம் சொன்னார் சேதுராமன்.திவாகர்ராவிற்குத் தான் தொழிலாளர்களின் மீது பச்சாதாபமும் கோபமும் ஏற்பட்டது. போதை தெளியாதவர்கள் சுடுகாட்டிலேயே விழுந்து கிடக்க மற்றவர்கள் அங்கிருந்து வெளியேறினார்கள்.

முற்றும்.

Sunday, April 25, 2010

சிறுகதை: சக்கர வியூகம்

நல்ல தூக்கத்திலிருந்த நடுநிசியில் ஆதிராமனின் வீட்டுக் கதவைத் தட்டி அவரைக் கைது செய்ய வேண்டுமென்றது போலீஸ். ஆதிராமனின் குடும்பமே அரண்டு போய் விட்டது. அப்போது அவர் இரவு உடையாக பழுப்பெறிய நான்கு முழ வேஷ்டியும் ஒரு முண்டா பனியனும் மட்டுமே அணிந்திருந்தார். மாற்று உடை அணிந்து கொள்ளக் கூட போலீஸ் அவரை அனுமதிக்கவில்லை. அவரின் படபடப்பு விலகுவதற்குள்ளாகவே அரெஸ்ட் வாரண்ட்டைக் காட்டி அவசரப் படுத்தினார்கள்.
ஆதிராமனின் மனைவி முருகேஸ்வரிக்குத் தூக்கக் கலக்கம் கலைவதற்குள்ளாகவே அவள் புருஷனை போலீஸ் அள்ளிக் கொண்டு போய்விட்டது.பக்கத்து அறையில் தூங்கிக் கொண்டிருந்த அவர்களின் பையனுக்கே விடிந்து எழுந்த பின்பு தான் விஷயமே தெரிந்தது. ஆனால் அதிகாலைப் பத்திரிக்கைகள் எல்லாம் ஆதிராமனின் கைது பற்றிய செய்திகளை அனல் பறக்கும் தலைப்புகளில் சுடச்சுட அலறின.
அணுவியல் விஞ்ஞானி ஆதிராமன் பொடாசட்டத்தின் கீழ்க் கைது;
தேசத்துரோகக் குற்றச்சாட்டு
செய்தியை வாசித்த முருகேஸ்வரிக்கும் அவளுடைய மகனுக்கும் என்ன நடக்கிறதென்றே எதுவும் புரிய வில்லை. அரசின் பாதுகாப்பு ரகசியங்களை ஆதிராமன் அயல் நாடுகளுக்கு விற்றுவிட்டதாக அவரின் மீது குற்றஞ் சாட்டப் பட்டிருந்தது. முருகேஸ்வரியும் அவளுடைய மகனும் உள்ளூர் காவல் நிலையத்திற்கு ஓடிப்போய் விசாரிக்கவும், இரவோடிரவாக தலைநகரக் காவல் நிலையத்திற்கு ஆதிராமன் கொண்டு செல்லப் பட்டதாக தகவல் சொல்லப்பட்டது.
ஒரு வக்கீலின் உதவியோடு காவல் நிலையத்தை அணுகுவதுதான் சரியாக இருக்குமென்று புரிந்தாலும் அவர்களுக்கு வக்கீல் யாரையும் தெரிந்திருக்க வில்லை. கிராமத்து மனிதர்கள். அதிகம் பேருடன் பரிச்சயமில்லாதவர்கள். அவர்களுக்குத் தெரிந்தவர்கள் எல்லாம் கம்பெனி குடியிருப்பில் ஆதிராமனுடன் வேலை பார்க்கும் சக விஞ்ஞானிகள் மட்டும் தான். ஆனால் அவர்களும் இவர்களுக்கு உதவத் தயாராய் இல்லை என்பதுதான் இதில் பெரிய சோகம்.
நேற்றுவரைப் பிரியமாய்ப் பழகியவர்களும் பத்திரிக்கைச் செய்தியைப் படித்ததும் விரோதமாய்ப் பார்த்தார்கள். இரக்கம் சுரக்கும் சில ஈர நெஞ்சுக்காரர்களும் எங்கே ஆதிராமனுக்கு உதவப் போய் தங்களையும் சந்தேகப்பட்டு, தேசத் துரோகச் சதியில் சம்பந்தப் படுத்தி விடுவார்களோ என்று பயந்து 'நமக்கேன் வம்பு' என்று நல்ல பிள்ளைகளாய் ஒதுங்கிக் கொண்டார்கள்.
முட்டிமோதி ஒரு வழியாய் முருகேஸ்வரி அவளுடைய மகனுடைய கல்லூரி நண்பனின் உதவியுடன் ஒரு வக்கீலை அழைத்துக் கொண்டு காவல் நிலையத்திற்குப் போய் விசாரித்தால், பொடா என்றும் தேசியப் பாதுகாப்பு என்றும் பெரிய பெரிய சட்ட வார்த்தைகளைப் பேசி போலீஸ் பயமுறுத்த, இவர்கள் அழைத்துப் போன கத்துக்குட்டி வக்கீல் மிரண்டு போய் விட்டார். ஜாமீனில் கூட விடமுடியாது என்று போலீஸ் வம்படியாய் மறுத்து விட தங்களின் விதியை நொந்தபடி வீடுவந்து சேர்ந்தார்கள். இருவருக்கும் பிழியப் பிழிய அழ மட்டுமே முடிந்தது. அழுவதையும் வீட்டிற்குள் முடங்கிக் கொண்டு மட்டுமே செய்தார்கள். தெருவில் இறங்கினால் எதிர்ப்படுபவர்களின் முகங்களில் கசியும் ஏளனமும் பரிதாபமும் ரொம்பவே வதைத்தது. உற்றமும் சுற்றமும் இவர்களைக் குற்றவாளிகளாய் நோக்க வீட்டையே சிறையாகப் பாவித்து ஒடுங்கிப் போனார்கள்.
காவல் துறையின் பெரிய அதிகாரிகள் ஐந்து பேர் ஆதிராமனைச் சூழ்ந்து கொண்டு முதலில் கேள்விகளால் வறுத்தெடுத்தார்கள். என்ன உங்கள் திட்டம்? இன்னும் யாரெல்லாம் இந்தச் சதியில் சம்பந்தப் பட்டிருக்கிறார்கள்? எத்தனை இலட்சம் டாலர் உங்களுக்குக் கிடைத்தது? ஸுவிஸ் பாங்க் ரகசிய கணக்கு எண் என்ன? ஆதிராமனைச் சுற்றிலும் கேள்விகளே பாம்புகளாய்ச் சீறிக் கொண்டிருந்தன. அவருக்கு ஒரு மண்ணும் புரியவில்லை. பதிலற்ற கேள்விகளின் நெடியில் அவர் பெரிதும் மூச்சுத் திணறினார்.
‘நான் அந்த ரகமில்லை நண்பர்களே! சம்பளக் கவரை அப்படியே மனைவியிடம் ஒப்படைத்து விட்டு நானுண்டு என் ஆராய்ச்சியுண்டு என்று இயங்குபவன்; என் குடும்பத்துடன் அதிகம் நேரம் செலவிட்டதில்லை; அவர்களை வெளியில் அழைத்துப் போய் சுற்றிக் காண்பித்ததில்லை. அதிகம் படிப்பறிவில்லாத மனைவி கூட அவளாகவே தான் இந்த டெல்லிக் குளிரையையும் வெயிலையும் ஹிந்தியையும் சமாளிக்கப் பழகிக் கொண்டாள். அதில் ஒரு துளிகூட நான் அவளுக்கு கற்றுக் கொடுக்கவும் இல்லை; உதவியாய் இருக்கவும் இல்லை.
எனக்கும் நிறையக் கனவுகள் உண்டு. ஆனால் அது நீங்கள் நினைப்பது போல் சத்தியமாய் சம்பாதிப்பதிலும் சொத்து சேர்ப்பதிலும் இல்லை; அணுவியலில் புதிது புதிதாய் சாதிப்பதிலும் நம் மூளை பலத்தை உலக நாடுகளுக்கு உணர்த்தி அவர்களை ஆச்சிர்யமூட்டுவதிலும் தான். அந்த முயற்சியில் தான் என் நேரங்களை எல்லாம் செலவிட்டுக் கொண்டிருந்தேன். புரிந்து கொள்ளுங்கள் என் போலீஸ் நண்பர்களே!’ என்று மனசுக்குள் முனங்கியபடி பலகீனமான மௌனத்தால் போலீஸை எதிகொண்டார் ஆதிராமன்.
“ஒரு விஞ்ஞானி ஆச்சேன்னு மரியாதை கொடுத்து விசாரிச்சா, நீ மசியறதாய்த் தெரியலயே! இனிதான் நீ போலீசோட நிஜமுகத்தைப் பார்க்கப் போற…..” என்றபடி ஒரு அதிகாரி ஆதிராமனின் அந்தரங்க உறுப்பை நோக்கி தன் பூட்ஸ்காலை வீச, மற்றவர்களும் மிருகத் தனமாய்த் தாக்கத் தொடங்கினர். போலீஸின் வழக்கமான சித்ரவதைகளில் ஆதிராமன் துடித்துப் போனார்.
துடிக்கத் துடிக்க நகக்கண்களில் ஊசி ஏற்றினார்கள். எலக்ட்ரிக் ஷாக் கொடுத்தார்கள். ஐஸ் படுக்கையில் படுக்க வைத்து அலற அலற ஆசனவாயில் லத்தியை நுழைத்தார்கள். தலை கீழாகக் கட்டித் தொங்கவிட்டு கதறக் கதற அடித்து நொறுக்கினார்கள். வலி தாளாமல் ஆதிராமன் மயக்கமானால், தெளிந்ததும் மீண்டும் மூன்றாம் தர விசாரணை முறைகளைத் தொடர்ந்தார்கள்.
ஆறுமாதங்கள் இப்படியே இடை விடாமல் தொடர்ந்தார்கள். வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்டு வெவ்வேறு வார்த்தைகளில் திருப்பித் திருப்பிக் கேட்டதையே கேட்டடர்கள். ஆளாளுக்கு அடித்து துவம்சம் செய்தார்கள். வெளிநாட்டுக் காரர்களுக்கு ஆதிராமன் விற்றதாய் ஒரு வரைபடத்தின் நகலையும் அதன் விளக்கமான கம்யூட்டர் சி.டி.யையும் காட்டினார்கள். விற்றதற்கு ஆதாரமாய் சக விஞ்ஞானிகள் மூன்றுபேர் கூட்டாக ஸ்டேட்மென்ட் கொடுத்திருந்தார்கள்.
தன்னை வேண்டுமென்றே சிக்கவைக்க ஏதேதோ வியூகம் வகுக்கப்பட்டு தானும் தன்னை அறியாமலேயே அதற்குள் அகப்பட்டுக் கொண்ட மர்மம் ஆதிராமனுக்கு மெதுவாய்ப் புரியத் தொடங்கியது. ஏன் இதெல்லாம்? யாருக்கு என்ன கெடுதல் செய்தேன்? நானுண்டு; என் வேலை யுண்டு என்று யாரிடமும் அதிகம் ஒட்டாமலிருந்தது பெரிய பிசகா? ஆதிராமனுக்குத் துக்கம் பொங்கியது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் அழகன்குளம் என்கிற சிறு கிராமத்தில் தொடங்கியது ஆதிராமனின் பால்யம். அவனின் அப்பாவின் வாழ்க்கையும் கால்களும் பனைமரத்துடன் பிணைக்கப் பட்டிருந்தன. பனை ஏறுதலும் பனைப் பொருட்களைத் தயாரித்து விற்பதும் அவர்களின் தொழிலாய் இருந்தது. ஆதிராமனுக்கு படிப்பு இளநொங்காய் இனித்தது. கள்ளாய்ப் போதையூட்டியது. பனை வெல்லமாய் அடி நாக்கையும் தாண்டி இதயம் வரை தித்திதது. பனை ஏறுகிற குடும்பத்திலிருந்து ஒரு விஞ்ஞானி உருவானது என்பது இயற்கை நிகழ்த்திக் காட்டிய அற்புதங்களில் ஒன்று. அதற்கான விதை அவருடைய பதின்மூன்றாம் வயதில் அவருக்குள் விழுந்தது. அன்றைக்கு இரத்தினசாமி வாத்தியார் அணுவைப் பற்றி பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அவருக்குத் தெரியும்; எப்படி பாடங்களை மாணவர்களின் மூளைக்குள் நேரிடையாக விதைப்பது என்கிற சூட்சுமம்.
பாடம் தொடங்குவதற்கு முன் அவர் ஒவ்வொரு மாணவனுக்கும் ஆளுக்கொரு சிறு சாக்பீஸ் துண்டைக் கொடுத்து சிறு துகளாக உடைக்கச் சொன்னார். யார் இருப்பதிலேயே சிறிய துகளாக உடைத்துத் தருகிறார்களோ அவனுக்கு மூன்று முழு கலர் சாக்பீஸ்கள் பரிசு என்று அறிவித்தார். மற்றவர்கள் சிறிதும் பெரிதுமாய் உடைத்து ஆசிரியரிடம் காண்பிக்க ஆதிராமன் ஒரு புள்ளி அளவிலான துகளை பேப்பரில் வைத்து நீட்டினான். ஆதிராமனுக்குத் தான் பரிசு கிடைத்தது.
அப்புறம் இரத்தினசாமி ஆசிரியர் பாடத்திற்குள் புகுந்தார்.”இப்ப ஆதிராமன் உடைத்துக் கொடுத்ததையும் கூட இன்னும் பல லட்சம் துகள்களாக உடைக்க முடியும். கண்ணுக்கே புலப்படாத சக்திவாய்ந்த மைக்ரோஸ் கோப்புகளின் மூலம் மட்டுமே பார்க்க முடிகிற மிக நுண்ணிய துகள் தான் அணுவென்பது. இந்த உலகத்துல உள்ள ஒவ்வொரு பொருளும் கோடானுகோடி அணுக்களால் தான் கட்டமைக்கப் பட்டிருக்கின்றன. கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தி அவற்றைப் பிணைத்து வைத்திருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தி என்றதும் அதைக் கடவுள்னு புரிஞ்சுக்கிடாதீங்க; அதன் பேர் எலக்ட்ரான்…..”
ஆசிரியர் பாடத்தைத் தொடர்ந்தார். ஆதிராமனுக்கு அணுவின் மீது ஈடுபாடும் அதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்கிற தீவிரமும் ஏற்பட்டது. தேடித் தேடிப் படித்தான். நியூக்ளியர் சயின்ஸில் பட்டமேற்படிப்பு வரைப் படித்துவிட்டு வேலை இல்லாமல் அல்லாடினான். வயிற்றுப் பாட்டுக்கே போதாத சம்பளத்தில் ஒரு மெட்ரிக்குலேசன் பள்ளியில் ஆசிரியராகக் கொஞ்சநாள் அவஸ்தைப் பட்டான். அப்புறம் தான் யூப்பிஎஸ்ஸி தேர்வெழுதி இளம் விஞ்ஞானியாக அந்த ஆராய்ச்சிக் கேந்திரத்துக்குள் அடியெடுத்து வைத்தான்.
விஞ்ஞானிக்குரிய எந்தப் பந்தாவும், வரவழைக்கப் பட்ட செயற்கையான மேதா விலாசமும் இல்லாமல் எளிமையான கிராமத்து மனிதனாய் இயல்பான பயத்துடன் முதல்நாள் அவன் வேலைக்குப் போனபோது, சக விஞ்ஞானிகள் பலரும் பரிகாசமாய்ப் பார்த்தார்கள்.
“ரிஸர்வேஷன் கோட்டாவுல வந்துருப்பான்; அரேபாபா, ஆராய்ச்சியில கூடவா ரிஸர்வரேஷன்?” இளக்காரமாய் முதுகுக்குப் பின்னால் சிரித்தார்கள். கேலியில் கிலியாகி தேம்பி அழுதவனை ஆராய்ச்சிக் கேந்திரத்தின் டீன் தேற்றினார்.
“இவர்களெல்லாம் சருகுகள்; சத்தம் போடத்தான் செய்வார்கள். இவர்களுக்கெல்லாம் ஆராய்ச்சி என்பது கனமான புத்தகங்களிலிருந்து காப்பி அடித்து கான்பிரன்ஸ்களில் கட்டுரை வாசித்து காலத்தை ஓட்டுவது. புதிதாய் எதையும் கண்டுபிடிக்க மாட்டார்கள்! ஆனால் நீ தளிர்; கிளை விரித்துப் படறப் போகிறவன். இந்த வெட்டி ஆசாமிகளை எல்லாம் உதறிவிட்டு அடுத்தகட்டத்துக்குப் போகிற வழிகளைப்பார்….”
அணுவியல் பற்றிய ஆராய்ச்சிகள் ஒரு சுழல் மாதிரி ஆதிராமனை உள்ளிழுத்துக் கொண்டன. உயரதிகாரி கொடுத்த உற்சாகத்தில் ஊக்கம் பெற்று கற்பூரமாய்ப் பற்றிக் கொண்டு திகு திகுவென்று எல்லோரையும் எரித்துக் கொண்டு ஒளிர்ந்தான்.பேரும் புகழும் பதவி உயர்வுகளும் படிப் படியாய் வந்து சேர்ந்தன.
“அமெரிக்க ஆராய்ச்சி நிலையத்துல நியூக்ளியர் பிஷ்ஷன் சம்பந்தமான ஒரு ஃபெல்லோஷிப்புக்கு அரசாங்கமே உன்னை அனுப்பத் தீர்மானிச்சுருக்கு; இது மிகப்பெரிய கௌரவம். மறுக்காமப் போயிட்டு வா மேன்; அநேகமா அடுத்த உதவி டீன் நீ தான்….” தலைமை விஞ்ஞானி ஆதிராமனுக்கு கை கொடுத்து அனுப்பி வைத்தார்.
ஃபெல்லோஷிப் முடிந்து விடைபெறுகிற தினத்தில் ஆராய்ச்சிமையத்தின் தலைவர் ஃபிரடெரிக் ஜோன்ஸ் ஆதிராமனைத் தன் கேபினுக்கு அழைத்து அவர் அங்கு சமர்ப்பித்திருந்த ஆராய்ச்சிக் கட்டுரைபற்றி வெகுநேரம் சிலாகித்துப் பேசினார்.
“மிஸ்டர் ஆதி, நீங்கள் ஏன் எங்கள் நாட்டிலேயே தங்கிவிடக் கூடாது? இங்கு உங்களால் இன்னும் சிறப்பாகப் பிரகாசிக்க முடியும். இந்தியாவில் இப்போது நிங்கள் சம்பாதிப்பதைப்போல் இருபது மடங்கு சம்பாத்தியம்; உங்கள் பையனுக்கு இங்கேயே ஒரு உயர்தரமான கல்வி… இன்னும் என்னென்ன வேண்டும் கேளுங்கள்; எல்லாம் ஏற்பாடு செய்கிறேன்; உங்களை மாதிரி விஞ்ஞானிகளுக்கெல்லாம் இங்குதான் சிறப்பான மரியாதைகளும் வாழ்க்கை வசதிகளும் கிடைக்கும்; சரியென்று சொல்லுங்கள்….”
“உங்களின் அன்பிற்கும் அழைப்பிற்கும் ரொம்பவும் நன்றி ஜோன்ஸ்; ஆனால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். உங்களின் ஆஃபரை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது… அரசாங்கச் செலவில் இங்கு கற்றுக்கொள்ள வந்தவன் நான்; இங்கு அறிந்து கொண்டதை அங்குபோய் இன்னும் மேம்பட்ட தரத்தில் அமல் படுத்திப் பார்க்க வேண்டும் ….ப்ளீஸ் என்னை விட்டு விடுங்கள்…” ஆதிராமன் ஒரு புன்னகையுடன் மறுத்தார்.
“சொன்னால் புரிந்து கொள்ளுங்கள் ஆதிராமன்; உங்களின் அறிவையும் உழைப்பையும் இந்தியா மாதிரியான ஒரு ஏழை வெப்பப் பிரதேசத்தில் போய் ஏன் வீணடிக்க விரும்புகிறீர்கள்….! இந்த நாட்டுக்கு கற்றுக் கொள்ள வந்தவர்கள் எல்லோருமே இங்கு தங்கி விடுவது தான் வாடிக்கை; உங்களின் அரசாங்கம் உங்களை எதுவும் செய்துவிட முடியாது; இங்கு தங்க மறுத்து வெளியேறும் முதல் ஆள் நீங்களாகத்தான் இருக்கும்…” செல்லக் கோபத்துடன் சீண்டினார் ஜோன்ஸ்.
“என்ன செய்வது ஜோன்ஸ்? நீங்கள் குறிப்பிடும் ஏழை வெப்ப பிரதேசத்தில் தானே என்னுடைய வேர்கள் விரவிக் கிடக்கின்றன. அவற்றை பிடுங்கிக் கொண்டு வருவது எனக்கு சாத்தியமும் இல்லை; அவசியமும் இல்லை; மேலும் என்னை உருவாக்கி விட்ட தேசத்திற்குத் தான் என்னுடைய அறிவும் உழைப்பும் பயன்பட வேண்டுமென்கிற பிடிவாதமும் உண்டு எனக்கு. வருகிறேன் நண்பரே!” ஜோன்ஸின் முகம் ஜிவு ஜிவுவென இரத்தச் சிவப்பாவதைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல் ஆதிராமன் கைகுலுக்கி விடைபெற்றார்.
அப்படி ஏன் ஓடி வர வேண்டும்? இங்கு வந்து என்ன சாதித்தோம்! தேசத் துரோகி என்கிற பட்டம் தான் கிடைத்தது! பொதுக் கழிப்பிடத்தை விடவும் மோசமான மூத்திர மலவாடை அடிக்கும் லாக்கப் ரூம்களில் அடைபட்டு அடிபட்டதுதான் மிச்சம்….. பேசாமல் ஜோன்ஸ் கொடுத்த வேலையை ஒத்துக் கொண்டு அங்கேயே சுகமாய் வாழ்ந்திருக்கலாம் என்று முதல் முறையாய் மனம் புழுங்கினார் ஆதிராமன்.
ஆட்சிமாறி பொடா சட்டம் விலக்கிக் கொண்டபோதும் ஆதிராமன் சட்டத்தின் பிடியிலிருந்து வெளியேற முடியவில்லை. ஆனால் ஜாமின் கிடைத்தது. வீட்டிற்குப்போய் மனைவியையும் மகனையும் பார்த்தவருக்கு இதயம் வெடித்து விடும் போலாகி விட்டது.இருவரும் துரும்பாய் இளைத்து அரை ஆளாய்க் கிடந்தார்கள்.முருகேஸ்வரி புருஷனைக் கட்டிக் கொண்டு வெடித்து அழுதாள். பையன் அனல் கக்கும் பார்வையால் ஆதிராமனை உலுக்கினான்.
“ஏம்ப்பா இப்படி பண்ணுன! உன்னைப் பத்தி எவ்வளவு உயர்வா நெனைச்சுக்கிட்டிருந்தேன் நான்; ஒரே ராத்திரியில எல்லாத்தையும் போட்டு ஒடச்சுட்டியேப்பா… என்னால காலேஸுக்குப் போக முடியல; அம்மாவால மார்க்கெட்டுக்குப் போக முடியல; கிராமத்துலருந்து வந்த நம்ம சொந்த பந்த மெல்லாம் காறித் துப்பிட்டுப் போயிட்டாங்க. ஆறுதலுக்குக் கூட ஆள் இல்லாம அனாதையா இந்த பட்டணத்துல அலையிறது எவ்வளவு கொடுமை தெரியுமா? உனக் கென்ன நீ பாட்டுக்கு ஜெயிலுக்குள்ள போயி ஹாய்யா உட்காந்துக்கிட்ட …..
“ஏன்ப்பா இதெல்லாம்… எனக்குத் துட்டுச் சேர்த்து வைக்கவா? 'கல்விதான் நம்மள மாதிரி ஆட்களுக்கு ஒரே சொத்து; அதால கவனமாப் படின்னு' எனக்கு அடிக்கடி அட்வைஸ் பண்ணீட்டு நீ புத்திய அலைய விட்டுட்டியேப்பா….!”முகத்தை மூடிக்கொண்டு அவன் குமுறி அழுதது ஆதிராமனைக் குலை நடுங்கச் செய்தது.காவல் நிலையங்களில் அவர் அனுபவித்த சித்ரவதைகளையும் விடக் கொடுமையானதாக இருந்தது அது.
“நான் ஒண்ணுமே பண்ணலைடா…. எப்படியோ பொய்யும் புரட்டுமா ஜோடிச்சு என்னை மாட்டி விட்டுட்டாங்கடா கண்ணு; என்னை நம்புடா…” அவனைப் பிடித்து இழுத்து அணைத்துக் கொண்டு பலவீனமாய் முனங்கினார் ஆதிராமன். ஆனால் மாரிமுத்து அவரிடமிருந்து திமிறிக் கொண்டு, தமிழ், ஆங்கில மற்றும் ஹிந்திப் பத்திரிக்கைகளை அள்ளிக் கொண்டு வந்து அவருக்கு முன்னால் பரப்பினான். எல்லாவற்றிலும் ஆதிராமனே டாபிக்கல் செய்தியாக இருந்தார். அவர் செய்தது மிகப்பெரிய தேசத் துரோகம் என்று விலாவாரியான ஆதாரங்களுடன் பரபரப்பான செய்தி கட்டுரைகள் வெளியிடப் பட்டிருந்தன.
“இதெல்லாம் பொய்யாப்பா? ஏன் ஒட்டு மொத்தமா எல்லோரும் உனக்கெதிரா பொய் சொல்லனும்? உன்னைப் பார்க்கவே எனக்குப் பிடிக்கலப்பா….” ஒரு தந்தை தானே தன் மகனுக்கு ரோல் மாடலாக இருக்க வேண்டும்! இப்படிப்பட்ட அவலம் எந்த தகப்பனுக்கும் வர வேண்டாம்; இவனைக் காப்பாற்றுவதற்காக வேனும் தன்னைக் குற்றமற்றவரென்று நிரூபிக்கிற வெறி கிளம்பியது ஆதிராமனுக்கு.
ஒருவழியாய் அவரின் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஆதிராமனை பொடா சட்டத்தின் பிடியிலிருந்து ஆறாண்டுகளுக்கப்புறம் நீதிமன்றம் விடுதலை செய்தது. நீதிபதி தன்னுடைய தீர்ப்பில் அரசு இயந்திரத்தைக் கடுமையாக சாடி இருந்தார். ஒரு அப்பாவி விஞ்ஞானியின் மீது கொஞ்சமும் பொறுப்பில்லாமல், அடிப்படை ஆதாரம் கூட இல்லாமல், சட்ட ஷரத்துகளின் அனுகூலங்களை மட்டுமே பயன்படுத்தி ஜோடிக்கப்பட்ட பொய்வழக்கு என்று. மேலும் இவ்வழக்கில் சம்பந்தப் பட்ட அரசு அதிகாரிகளையும் காவல் துறையினரையும் அவர்களின் துறை ரீதியான விசாரணைக்கு உட்படுத்தி கடுமையாகத் தண்டிக்கவும் பரிந்துரை செய்திருந்தார் அவர்
தீர்ப்பு வாசிக்கப்பட்டு முடித்ததும் ஆதிராமன் செத்துப் போகவும் தயாராய் இருந்தார். தான் நிரபராதி என்று இந்த சமூகத்திற்கு நிரூபிக்கத்தானே இத்தனை நாட்கள் அவர் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு காத்திருந்தார். ஆனாலும் ஆதிராமனின் குடும்ப வாழ்க்கை அவரின் தீர்ப்பு நாளுக்கெல்லாம் காத்திருக்காமல் ஏற்கெனவே இருண்டு போகத் தொடங்கி இருந்தது.
நீதிமன்றம் ஆதிராமனைக் குற்றமற்றவரென்று விடுதலை செய்து, என்ன புண்ணியம்? காலத்தின் கைமீறி என்னென்னவோ நடந்து விட்டதே! ஒரே செல்ல மகன் மனநிலை பிசகி, அப்பாவைத் தூக்கில் போடுங்கள் என்று பேதலித்த புத்தியுடன் பிதற்றிக் கொண்டு வீதிகளில் அலைந்தான். மகனின் பரிதாப நிலையைக் காண சகிக்காமல் முருகேஸ்வரி எப்போதோ தற்கொலை செய்து கொண்டு செத்துப் போயிருந்தாள்.
ஆதிராமன் உடல், மனம் எல்லாம் சோர்ந்து போய் வீட்டிலிருந்தபோது, அந்தப் பெண் அவரை அணுகினாள். துரு துருவென்று அலைபாயும் கண்கள் அவளுக்கு. பத்திரிக்கை அல்லது டீ.வி.யின் நிருபராக இருப்பாள் என்று நினைத்துச் சத்தம் போட்டார்.
“எத்தனை தரம் சொன்னாலும் ஏன் யாருமே புரிந்து கொள்ள மாட்டேனென்று அடம்பி டிக்கிறீர்கள்? யாருக்கும் என்னால் பேட்டி தர முடியாது… போலீஸ்காரர்களை மட்டும் விசாரித்து ஏதோ மர்மக் கதை போலத் திரித்துத் திரித்து எழுதித் தானே என் மகனைப் பைத்தியமாக்கினீர்கள்; என் மனைவியை சாவை நோக்கித் தள்ளினீர்கள்; இன்னும் உங்கள் பசி அடங்கவில்லையா? தயவு செய்து என்னைத் தனியாக விட்டு விட்டு வெளியே போய் விடுங்கள்…..” கை கூப்பி கெஞ்சினார்.
அவள் மிக அமைதியாகச் சொன்னாள்.”மன்னிக்க வேண்டும். நான் நீங்கள் நினைக்கிற மாதிரி நிருபர் இல்லை. உங்களின் மனவலிக்கு மருந்து போட வந்திருக்கிறேன். என் பெயர் காத்ரீனா. ஃபிரடெரிக் ஜோன்ஸ் என்னை உங்களிடம் அனுப்பி வைத்துருக்கிறார்…..” என்றபடி ஒரு மூடிய உறையைக் கொடுத்து பவ்யமாய் வணங்கி நின்றாள்.
உறையை உடைத்துப் படித்ததும் எந்த உணர்ச்சியையும் முகத்தில் காட்டாமல் உறையை மூடினார் ஆதிராமன். உள்ளே ஆதிராமன் ஃபிரடெரிக் ஜோன்ஸின் ஆராய்ச்சி நிலையத்தில் பணியில் சேர்வதற்கான அப்பாயின்மெண்ட் ஆர்டரும், விசா விண்ணப்பத்திற்கான பேப்பர்கள் மற்றும் ஏர் டிக்கெட்டும் இருந்தன.
அந்த வெளிநாட்டுப் பெண்ணை உற்றுப் பார்த்தபடி சொன்னார் ஆதிராமன்.“மிஸ்டர் ஜோன்ஸிடம் சொல்லுங்கள்; அவர் கொடுத்த வேலையை நன்றியுடன் நான் ஒத்துக் கொண்டதாக. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அங்கு வந்து நான் வேலையில் சேர்கிறேன். இந்த நன்றி கெட்ட தேசத்திற்கு விசுவாசமாக இருந்து, நான் அனுபவித்த பலன்கள் இந்த ஜென்மத்திற்குப் போதும்…” அவள் ஒரு துள்ளலுடன் கிளம்பிப் போனாள்.
காத்ரீனா தான் தங்கியிருக்கும் உயர்தர ஹோட்டலின் தனியறைக்குள் போய் தாழ் போட்டுக் கொண்டு தீப்பெட்டி சைஸிலிருந்த கைத்தொலைபேசியில் எண்களை ஒற்றி காதோடு வைத்துக் கொண்டு மெல்லிய குரலில் பேசினாள். “ஜோன்ஸ்; நம்முடைய ஆபரேஷன் வெற்றி! மிஸ்டர் ஆதிராமன் நம்முடைய தேசத்திற்கு வந்து வேலையில் சேர சம்மதம் தெரிவித்து விட்டார்…”
எதிர்முனையிலும் சந்தோஷமும் மகிழ்ச்சியும் குரலிலேயே பொங்கியது.”வெரிகுட்; வெரிகுட்…. நீதான் இதை முடித்தாய். எல்லாப் புகழும் உனக்கே!”
“நான் என்ன செய்தேன் ஜோன்ஸ்! நீங்கள் போட்டுக்குடுத்த பாதையில் பயணம் செய்தேன்; ஆதியின் சக விஞ்ஞானிகளும் அரசியல்வாதிகளும் அபாரமாய் ஒத்துழைத்து நம்முடைய வேலையை மிகச் சுலபமாக்கி விட்டார்கள்…..”
“அதுவும் சரிதான்; ஆதிதான் புவர் ஃபெல்லோ… அன்றைக்கே அவரை நம் ஆராய்ச்சி நிலையத்தில் வேலையில் சேர்ந்து விடும்படி எவ்வளவோ எடுத்துச் சொன்னேன். அவர்தான் புரிந்து கொள்ளவே யில்லை. தேவையில்லாத சித்ரவதைகளையும் அவமானங்களையும் அனுபவித்த பின்பே இறங்கி வந்திருக்கிறார். சரி இனியும் நீ அங்கிருப்பது அவசியமில்லை. நாம் அமைத்த குற்ற வியூகத்திற்கு உதவி புரிந்த எல்லோருக்கும் எலும்புத் துண்டு உண்டு என்று உறுதியளித்து விட்டு சீக்கிரம் இங்கு வந்து சேர்…. நான் அவர்களின் இரகசியக் கணக்குகளில் டாலர்களை வரவு வைத்து விடுகிறேன்….” கைத் தொலை பேசியை அணைத்து விட்டு காத்ரீனா தன் அடுத்தகட்ட வேலைகளுக்கு ஆயுத்தமானாள்.
-- முற்றும்


Sunday, April 18, 2010

சிறுகதை - இவர்களும் சுவர்களும்


கடினமாக இருந்தாலும்
பெரும் போராட்டத்திற்கு பிறகாவது
வீதியில் மனிதர்களைப் பிரித்தபடி
விஸ்தீரணமாய் எழும்பி நின்ற
சாதீயச் சுவர்களை
உடைத்து விட்டோம் ; ஆனால்
மனவெளிகளில் மதிலுகளாய்
உயர்ந்து நிற்கும் உத்தப்புரச் சுவர்களை
உடைப்பது எப்போது....!

அங்கு மட்டுமா அந்தச் சுவர் என்னும் தலைப்பிட்டு இளமாறன் எழுதிய சிறு கவிதை அதிகம் பெயர் தெரியாத அந்த சிறுபத்திரிக்கையில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. அவன் எழுதி அச்சில் வந்த முதல் கவிதை. ஒவ்வொரு எழுத்தாக வாசித்து மனசுக்குள் சந்தோஷப் பட்டுக் கொண்டிருந்தான். இதை யாரிடமாவது வாசித்துக் காட்ட வேண்டும் போல் இருந்தது. ஆனால் இந்த அலுவலகத்தில் யாருக்காவது கவிதை பிடிக்குமா என்பது பற்றி அவனுக்கு எதுவும் தெரியாது. அப்போது ஆவுடையப்பன் இளமாறனுக்கு தேனீர் கொண்டு வந்தான்.
இளமாறன் தனக்குப் பரிமாறப்பட்டிருந்த தேனிரை மிகவும் ரசித்துக் குடித்தான். குடித்து முடித்ததும் ஆவுடையப்பனை மனதாரப் பாராட்டினான். “டீ போடுறதுல நல்லா தேறீட்ட ஆவுடையப்பா….நீ போடுற டீக்கு நான் அடிமை ஆகிக்கிட்டே வர்றேன்; இப்பல்லாம் காலையில நீ போட்டுக் குடுக்குற டீயக் குடிச்ச பெறகு தான் வேலையே ஓடுது….” என்றான்.
அட்மினிஸ்ட்ரேஷன் ஆபிஸரே மனதாரப் பாராட்டிய பின்பும் ஆவுடையப்பனின் முகத்தில் சந்தோஷத்திற்குப் பதில் வாட்டமே மிகுந்திருந்தது. ”நீங்க பாராட்டுறீங்க; ஆனா மத்தவங்க…? இன்னைக்கும் யாரும் எதுவுமே குடிக்கல ஸார்; மனசுக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு…..” என்றான் அழுதுவிடுகிற தொனியில்.
“இதுல உன்னோட தப்பு எதுவுமில்ல ஆவுடை ; இது எனக்கும் அவங்களுக்குமுள்ள சின்ன ஈகோ பிரச்னை…சீக்கிரம் தீர்த்துடலாம்…. கொஞ்சம் பொறுமையா இரு…..”
“அது இல்ல ஸார்; இப்பவும் நாலஞ்சு நாளா இப்படித்தான் நடக்குது…. கலந்த காஃபி, டீயெல்லாம் ஒவ்வொரு நாளும் அப்படியே கீழ கொட்டும் போது தாங்க முடியல…. சாயங்காலமும் இப்படித்தான் ஆகுது; ஸ்நாக்ஸும் சாப்பிட மாட்டேங்குறாங்க…. எதுக்கு இந்தப் போராட்டம்? நான் வேணும்னா ஊருக்கே திரும்பிப் போயிடட்டுமா ….?”
“நோ நோ… அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்துடாத ஆவுடை….” என்ற இளமாறன் திடீரென்று இவனிடம் காட்டினால் என்ன என்று எண்ணமிட்டபடி கவிதை வந்த இதழை அவனிடம் விரித்துக் காட்டி படித்துப் பார்க்கச் சொன்னான். “நீங்க எழுதுனதா ஸார்.... நீங்க கவிதை எல்லாம் எழுதுவீங்களா ஸார்....” என்றபடி ஆர்வமாய் வாசிக்கத் தொடங்கினான். படித்து முடித்ததும் “எனக்கு சொல்லத் தெரியல்; ஆனா ரொம்ப நல்லா இருக்கு ஸார்....” என்றபடி காலிக் கோப்பையை எடுத்துக் கொண்டு போனான்.
இன்றைக்கும் அலுவலகத்தில் யாருமே காஃபி, தேனீர் எதுவும் குடிக்கவில்லை. எல்லோருடைய மேஜைகளிலும் பீங்கான் கோப்பைகளில் பரிமாறப் பட்டிருந்த காஃபியும் தேனீரும் அலுங்காமல் குலுங்காமல் அப்படி அப்படியே வண்ண வேலைப்பாடுகள் நிறைந்த மூடிகளால் மூடப் பட்டிருந்தன. அவை குளீரூட்டப்பட்ட அறையின் குளிர்ச்சியில் வேக வேகமாய்த் தன் வெப்பத் தன்மையை இழந்து கொண்டிருந்தன.
இளமாறன் தன் அறை ஜன்னலில் தொங்கிய வெனீஸியன் பிளைன்டை விலக்கிப் பார்த்தான். அனைவரும் இரண்டு மூன்று பேர்களாகச் சேர்ந்து வேலைத் தளத்திற்கு வெளியே கீற்றுக் கொட்டகையில் இயங்கும் அவசர டீக்கடை நோக்கி மெதுவாய் நகர்ந்து கொண்டிருந்தார்கள். அப்போது சென்னையின் தலைமை அலுவலகத்திலிருந்து வைஸ்பிரஸிடென்ட் பிரபுபட்டேலின் வாகனம் அலுவலகம் நோக்கி வந்து கொண்டிருப்பது தெரிந்தது. வாகனத்தை நிறுத்தி, கார்க் கண்ணாடியை இறக்கி விட்டு, கொத்துக் கொத்தாய்ப் போய்க் கொண்டிருப்பவர்களில் ஒருத்தனை அழைத்து அவர் ஏதோ விசாரிப்பதும், அவன் ஏதோ பதில் சொல்வதும், இங்கிருந்து தெரிந்தது. இன்றைக்கு கண்டிப்பாய் பிரச்னை வெடிக்கப் போகிறது என்று இளமாறன் நினைத்துக் கொண்டார். அவர்களும் இதைத்தான் எதிர்பார்த்திருப்பார்கள்.
இது மிகச்சிறிய மார்க்கெட்டிங் அலுவலகம். 15 பேர் தான் வேலை பார்க்கிறார்கள் - இரண்டு பெண்களையும் சேர்த்து. சென்னையிலிருந்து 40கி.மீ.தூரத்தில் பிரதான சாலையிலிருந்து வெகுவாக தள்ளி பெரும் பசி கொண்ட நகரத்தால் வேக வேகமாக விழுங்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு கிராமத்தில், சுற்றிலும் விவசாயம் செய்யப் படாமல் வெறுமனே போடப்பட்டிருக்கும் நிலங்களால் சூழப்பட்டு, புத்தம் புதுப் பொலிவுடன் இப்போது தான் கட்டிமுடிக்கப் பட்ட கட்டிடத்தில் இயங்குகிறது. சுற்றிலும் தரிசாகப் போடப்பட்டிருக்கும் நிலங்களில் எல்லாம் அடுக்குமாடி குடியிருப்புகளும், ஐ.டி.பார்க்குகளும் கட்டப்போகிறார்கள். அவற்றை விற்பனை செய்வதற்கான அலுவலகம் தான் இது.
இந்த அலுவலகத்திற்கு ஹவுஸ் கீப்பிங் வேலைகளுக்குத் தான் இளமாறனுக்கு சட்டென்று ஆட்கள் அகப்படவில்லை.எலக்ட்ரிக் வேலைகளுக்கு பக்கத்து கிராமத்திலிருந்து ஒருவனை நியமித்து விட்டான். இன்னொரு ஆள் வேண்டும். அவன் ஆல் ரவுண்டராக - ஆபிஸ் பையனாக, காஃபி, டீ கலந்து தருபவனாக, அலுவலகத்தைக் கூட்டிப் பெருக்குவனாக,முக்கியமாக தினசரி ஒருமுறையாவது கழிவறைகளைச் சுத்தப் படுத்துபவனாக - இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தான். எவ்வளவு முயன்றும் அப்படி ஓர் ஆள் அவருக்கு அகப்படவே இல்லை.
பக்கத்து கிராமத்திலிருந்து வேலை கேட்டு வருபவர்களும் கழிவறைகளைச் சுத்தப் படுத்த வேண்டுமென்று சொன்னதும் முகஞ்சுழித்துப் போய்விட்டார்கள். ஏதாவது ஏஜென்சியை நியமிக்கலாமென்றால் இரண்டே இரண்டு சிறிய கழிவறைகளை தினசரி ஒருமுறைச் சுத்தப் படுத்துவதற்கு மாதம் ரூபாய் 15 ஆயிரம் வேண்டுமென்று கேட்டார்கள். சென்னையிலிருந்து தூர மென்றும், அக்கம் பக்கத்தில் வேறு அலுவலகம் ஏதும் இல்லாததால் இந்த வேலைக்கென்று தனியாக முழு நேரமாகத்தான் ஆட்களை நியமிக்க வேண்டுமென்றும் காரணம் சொன்னார்கள்.
ஒருமுறை நீண்ட இடைவேளைக்கப்புறம் இளமாறன் தன் சொந்த கிராமத்திற்குப் போயிருந்த போது சங்கரலிங்கத்துடன் பேசிக் கொண்டிருந்தார். அவர் இவர்களின் தோட்டத்தில் பண்ணையாளாக வேலை பார்த்தவர். இளமாறனின் அப்பா பெரியாரிடம் தீவிர ஈடுபாடு கொண்டவராய் இருந்ததால் ஜாதி வித்தியாசங்களுக்கு அப்பாற்பட்டு இவர்களின் வீடுகளில் சகஸமாகப் புழங்க அனுமதிக்கப் பட்டவர். இளமாறனை சிறு வயதிலிருந்தே தூக்கி வளர்த்தவர்.
“என் பையன் ஆவுடைக்கு ஏதாவது வழி பண்ணக் கூடாதா தம்பி? வேலை வெட்டி எதுக்கும் போகாம, ஊர்க் காரங்களோட சண்டையும் சச்சரவுமா அலையுறான். புதுசு புதுசா பிரச்னைகளையும் இழுத்து விட்டுக்கிறான்….கூப்பிட்டு கொஞ்சம் புத்தி சொல்லிட்டுப் போங்க தம்பி ; நீங்க சொன்னாக் கொஞ்சம் கேப்பான்….”.
உள்ளூர் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு, அப்புறம் நான்குமைல் நடந்து போய்ப் பக்கத்து ஊரில் படிக்க பால்மாறிக் கொண்டு, படிப்பை எட்டாவதோடு நிறுத்திக் கொண்டு, காடுமேடுகளில் காலித்தனமாய் அவன் அலைந்து கொண்டிருப்பதாகவும், இப்போது ஒரு பெரிய பிரச்னையில் வேறு அவன் மாட்டிக் கொண்டிருப்பதாகவும் சொன்னார்.
அவர்களின் ஊரைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் தமிழகத்தில் தீண்டாமைக் கொடுமைகள் வெகுவாகக் குறைந்து விட்டது என்றும், டீக்கடைகளில் இரட்டை டம்ளர் முறை எல்லாம் இல்லவே இல்லை என்றும் சட்டமன்றத்தில் பேசியிருந்தார். அந்த செய்தியைப் படித்த கோடானு கோடிப்பேர் மனசுக்குள் சிரித்தபடி கடந்து போய்விட, ஆவுடையப்பனுக்கு மட்டும் பலியாய் கோபம் வந்திருக்கிறது.
அமைச்சரின் சொந்த கிராமத்திலேயே தீண்டாமைக் கொடுமைகள் தாண்டவமாடுவதையும் , டீக் கடைகளில் இரட்டை டம்ளர் முறை இன்னும் அமலில் இருப்பதை ஆதாரங்களுடன் விவரித்தும், அவரின் மாவட்டத்தில் மட்டும் இன்னும் எங்கெல்லாம் இரட்டை டம்ளர் முறை கடைபிடிக்கப் படுகிறது என்று ஒரு பெரும் பட்டியலையும் தயாரித்து அந்த செய்தி வந்த பத்திரிக்கைக்கே வாசகர் கடிதமாக எழுதி விட்டான்.
எதிர்க் கட்சிக்கு ஆதரவான அந்தப் பத்திரிக்கைக்காரனுக்கு இந்த விஷயம் லட்டு மாதிரி. அவனுடைய பத்திரிக்கையிலேயே குறிப்பிட்ட ஜாதியினரைத் தவிர வேறு யாரும் உள்ளே போய் எட்டிப் பார்த்துவிடக் கூட முடியாது; ஆனாலும் அவர்கள் ஏதோ ஜாதிக்கு எதிரிகள் மாதிரி பாய்ந்து கொண்டு, தங்களுடைய நிருபரை அனுப்பி வண்ணப் புகைப்படங்கள் எடுக்கவைத்து ஆவுடையப்பனைப் பேட்டி கண்டு நீண்ட கட்டுரையாக எழுதி முதல் பக்கத்திலேயே

அமைச்சரின் ஊரிலேயே தீண்டாமைக் கொடுமைகள்; டீக்கடைகளில் இன்னும் தொடரும் இரட்டை டம்ளர் அவலம்

என்று கொட்டை எழுத்துக்களில் செய்தியை வெளியிட்டு விட அமைச்சருக்கு மானமே போய்விட்டது. அன்றைக்கிலிருந்து அமைச்சரின் உறவினர்களும் கட்சிக்காரர்களும் ஆவுடையப்பனுக்கு குடைச்சல் கொடுக்கத் தொடங்கி விட்டார்கள். தகுந்த வாய்ப்புக் கிடைத்தால் அவனைப் போட்டுத் தள்ளவும் தயங்க மாட்டார்கள் என்பதால் உயிருக்குப் பயந்து ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறான்.
இளமாறன் ஆவுடையை அழைத்துப் பேசினான்.
”எங்க அப்பன் தலையால அடிச்சிக்கிச்சு படிக்கச் சொல்லி…உங்கள மாதிரி நானும் ஒழுங்காப் படிச்சிருந்தா இந்தப் பாழாப்போன ஊரை விட்டுப் போயி கௌரவமா பொழச்சிருக்கலாம்……. உலகம் எங்கயோ போயிட்டுருக்கு; ஆனால் இன்னும் நம்ம மாதிரி கிராமங்கள்ல, அய்யா, சாமின்னு துண்டை எடுத்து கக்கத்துல வச்சுக் கூழைக் கும்புடு போட்டுக்கிட்டு, குடியான வங்க குண்டியைத் தாங்கிக்கிட்டு அடிமையா வாழ வேண்டியிருக்கு..! இதெல்லாம் மாற இன்னும் எத்தனை நூற்றாண்டு ஆகணுமோ?” என்றான் விசனத்துடன்.
“ஜாதிங்கிறது நம்ம இந்திய சமுதாயத்தோட இரத்தத்துலயே இருக்குற வியாதி ஆவுடை… கிராமங்கள்ல மட்டுமில்ல; பட்டணத்துலயும் கண்ணுக்குத் தெரியாம இருக்கத் தான் செய்யுது….” என்று அவனை ஆறுதல் படுத்த முயன்றான் இளமாறன்.
“அங்கெல்லாம் இலைமறை காய்மறையா இருக்கலாம் ஸார்; ஆனா கிராமங்கள்ல தான் வெட்ட வெளிச்சமா எந்த குற்ற உணர்ச்சியுமில்லாம பிறந்த ஜாதிக்காக ஒரு கூட்டம் பெருமைப் பட்டுக்கிட்டும் இன்னொரு கூட்டத்த சிறுமைப் படுத்திக் கிட்டும் இருக்காங்க…. என்னையும் உங்க கூடவே கூட்டிட்டுப் போயிடுங்களேன் ஸார்….. ஆப்புட்ட வேலை செஞ்சு பொழச்சுக்கிறேனே….”
இளமாறனுக்கு தன்னுடைய புது அலுவலகத்திற்கே ஒரு ஆள் தேவை என்பது உறைக்க உடனே சரி என்றான். வேலை பற்றியும் விவரித்தான்.”பட்டணத்துக்குக் கூட்டிட்டு வந்து நம்மல இப்படி கக்கூஸ் கழுவ விட்டுட்டானே நம்ம ஊர்க்காரன்னு என்மேல வருத்தப் படக் கூடாது ஆவுடை… உன் மனசுக்கு ஒப்புச்சுன்னா மட்டும் என்கூட கிளம்பி வா…நாளைக்கே போகலாம்….”
“எந்த வேலையும் எனக்குச் சம்மதந்தான்… இப்போதைக்கு இந்த சனியம்புடிச்ச ஊருலருந்து தப்பிச்சுப் போனாப் போதும்….” என்று சொல்லி மாறனுடன் கிளம்பி வந்து விட்டான்.
வேலை எளிமையாகவும் சந்தோஷமாகவுமே இருந்தது. காலையில் ஆவுடைதான் அலுவலகத்தைத் திறந்து வைத்து, மேஜை நாற்காலிகளைத் துடைத்து, அறைகளையும் பெருக்கி, கழிவறைகளையும் சுத்தப் படுத்தி அலுவலகத்தை தயார்ப் படுத்துவான். காலை 10மணிக்கு ஒரு முறையும் மாலை 4 மணிக்கு இன்னொரு முறையும் எல்லோருக்கும் காஃபி, டீ கலந்து தருவான். அப்புறம் நகல் எடுப்பது, கேட்பவர்களுக்கு வெளியில் போய் சாப்பாடு வாங்கி வருவது என்று அவ்வப்போது இடப்படுகிற வேலைகளையும் சுணங்காமல் செய்வான். பத்து நாட்களுக்கு மேல் எந்தப் பிரச்னையுமில்லாமல் சுமுகமாகப் போய்க் கொண்டிருந்தது.
ஒருநாள் மிகச் சீக்கிரமே அலுவலகம் வந்துவிட்ட கோபாலன், ஆவுடையப்பன் கழிவறைகளை கழுவுவதைப் பார்த்ததும் பதறிப் போய் விட்டான். அவனிடம் எதுவும் சொல்லாமல் இளமாறன் வந்ததும் அவருடன் சண்டைக்குப் போனான்.
“என்ன அட்மினிஸ்ட்ரேஷன் ஆபிஸர் நீங்க? கக்கூஸ் கழுவுறவனையா காஃபி டீ கலந்து கொடுக்குச் சொல்றது….”
“ஏன் இதிலென்ன தப்பு? ஒவ்வொண்ணுக்கும் தனித் தனியா ஆள் போடுறதுக்கு இதென்ன அவ்வளவு பெரிய ஆபிஸா என்ன?” என்று கேட்டான் மாறன்.
“அதெப்படி, கக்கூஸ் கழுவுறவன், காஃபி டீ கலந்து கொடுத்தா அது ஹைசீனிக்கா இருக்குமா என்ன!”
“ஏன் இருக்காது? நீங்க எல்லாம் கக்கூஸ் போயி கழுவிட்டு அப்புறம் காபி டீ குடிக்கிற தில்லையா? அல்லது சாப்புடுறது தான் இல்லையா?”
“இது விதண்டாவாதம்! நானும் அவனும் ஒண்ணா உங்களுக்கு? நான் கக்கூஸ் உள்ள போயிட்டாளே, சோப்புப் பட்டு கம்பிளீட்டா கழுவிட்டுத்தான் வெளியவே வருவேன்; அதே அளவுக்கு சுத்தமும் அக்கறையும் இவன்கிட்ட எதிர்பார்க்க முடியுமா? கண்டதையும் ஒழப்பிட்டு அப்படியே வந்து காஃபி டீ கலந்து குடுத்துட்டான்னா, அதை குடிக்குற நம்மளோட ஆரோக்கி யத்துக்கு யாரு பொறுப்பு?” என்று சீறினான்.
“இங்க பாருங்க கோபாலன்; தேவை இல்லாம பிரச்னை பண்ணாதீங்க… அவன் எட்டாவது வரைப் படிச்சிருக்கான்; சுத்தம் பத்திய அடிப்படையான விஷயங்கள் அவனுக்கும் தெரியும்; நானும் அவனைக் கண் காணிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன்; அதனால நீங்க பதட்டப் படுற மாதிரி எதுவும் நடந்துடாது…” இளமாறன் பொறுமையாய் எடுத்துச் சொல்லியும் அவன் சமாதானமாகாமல் திருப்பித் திருப்பிச் சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தான். கக்கூஸ் கழுவுகிறவனை காஃபி, டீ, கலந்து கொடுக்க அனுமதிக்கக் கூடாது என்று.
இளமாறனுக்கு கோபம் வந்து விட்டது. “””’”உங்களுக்கு இதுல இஷ்டமில்லைன்னா, அசூசையா ஃபீல் பண்ணீங்கன்னா நீங்க வேணு மின்னா ஆபிஸ்ல எதுவும் குடிக்காம இருந்துக்குங்க…..” என்றான் வெடுக்கென்று. அவனும் கோபமாய் முறைத்து விட்டுப் போய் விட்டான். அலுவலகத்தில் வேலை பார்க்கும் மற்றவர்களிடமும் சொல்லி, அவர்களுக்கும் பீதியைக் கிளப்பி விட்டு எல்லோரும் ஆவுடையப்பனைப் புறக்கணிக்கத் தொடங்கி விட்டார்கள் மௌனமாய்.
எதிர்பார்த்தபடி வைஸ்பிரஸிடென்ட் அனைவரையும் ஒரு அவசர மீட்டிங்கிற்கு அழைத்தார். நேரடியாக விஷயத்திற்கு வந்தார். “இளமாறன் என்னப்பா இதெல்லாம்? ஸ்டாஃப் வெல்பேர் அரேன்ஞ்மென்ட் இவ்வளவு மோசமாவா பண்றது? ஹைஸீனிக்கா இருக்காதுன்னு ஃபீல் பண்ணாங்கன்னா ஆள மாத்துறத விட்டுட்டு இதென்ன அக்கப்போர்….?”
“ஸார், மன்னிக்கனும்; இது ஹைஸீனிக் சம்பந்தப்பட்ட பிரச்னை இல்ல. அதுதான் உண்மையின்னா இப்ப இவங்கல்லாம் காஃபி, டீ, குடிக்கிற கீத்துக் கொட்டகை ஓட்டலுக்குள்ள ஒரே ஒரு தடவை போய்ப் பார்த்துட்டு வாங்க….ஈயும் எறும்புமாய் எவ்வளவு அருவருப்பா இருக்குன்னுட்டு… அதுமட்டுமில்ல; அங்க ஒரே வாளி தண்ணில தான் காலையிலருந்து இராத்திரி வரைக்கும் எச்சிக் கிளாஸ முக்கி முக்கி கழுவுறதா பேர் பண்றாங்க…. பார்த்தாலே குமட்டலெடுக்கும் அந்த சூழல்ல எப்படி சந்தோஷமாக் குடிக்குறாங்க?” என்றான் இளமாறன்.
வீ.பீ. கோபாலனைப் பார்த்தார். “எங்களுக்கு வேற வழி இல்லாததால தான் அங்க போய்க் குடிக்குறோம் ஸார்…பிரச்னையையே புரிஞ்சுக்க மாட்டங்கறார் ஸார்…” என்றான் அவன்.
“என்னோட சின்ன வயசுல எங்க கிராமத்துப் பள்ளிக் கூடத்துல சத்துணவு சமைக்கிறதுக்கு ஒரு தலித் பெண்ண நியமிச்சார் ஹெட்மாஸ்டர்….ஊர்க்காரங்கல்லாம் ஒண்ணாச் சேர்ந்துக் கிட்டு தங்கள் பிள்ளைகள சாப்பாடு வாங்க அனுப்பாமப் புறக்கணிச்சாங்க….ஒரு தலித் சமைச்சத தாங்கள் சாப்பிடுறதாங்கிற ஜாதித் திமிர் அது…. அதேதான் இங்கேயும் நடக்குது; படிச்ச பட்டணத்துக் காரங்களுக்கும் படிக்காத கிராமத்துக்காரங்களுக்கும் ஜாதி பார்க்குறதுல மட்டும் பெரிய வித்தியாசம் எதுவுமில்லன்னு நிரூபிக்கிறாங்க….” என்றான் இளமாறன்.
கோபாலன் அவசரமாய் இடை மறித்தான். “எல்லாத்துலயும் ஜாதிக்கண்ணாடி மாட்டிக்கிட்டு குதர்க்கமாப் பார்க்காதீங்க ஸார்.. ஆவுடையப்பன் என்ன ஜாதீன்னு இதுவரைக்கும் எங்க யாருக்கும் தெரியாது; அதைப் பத்தி எங்களுக்கு அக்கறையும் இல்ல…. ரெண்டு வேலையையும் ஒருத்தரே செஞ்சா கண்டிப்பா ஹைஸீனிக்கா இருக்காதுன்னு நெனைக்கிறோம்; அதான் எதிர்க்குறோம்…”
“என்ன கோபாலன் ஹைஸீனிக் ஹைஸீனிக்குன்னு ரொம்பத்தான் அலட்டிக்கிறீங்க; அவன் என்ன கைய உள்ளவுட்டா கக்கூஸ் கழுவுறான்….எல்லா வேலைக்கும் டூல்ஸ் இருக்கு; ஸொலுசனைத் தெளிச்சு, பிரஸ்ஸால தேய்ச்சு,ஃபிளஸ்ஸவுட்ட திறந்துவிட்டா கிளீனிங் முடிஞ் சது…கையில கிளவுஸ் மாட்டிருக்கான்; முகத்துலயும் கவசம் அணிஞ்சுதான் வேலை பார்க்குறான்… இதுல எங்கருந்து ஹைஸினிக் பிராப்ளம் வருதுசொல்லுங்க… நம்ம வீடுகள்ள எல்லாம் நம்ம பொண்ணுங்க கழிவறைய கிளீன் பண்ணீட்டு வந்து சமையல் கட்டுல வேலை பார்க்குறதில்லையா? அவங்க சமைச்சத நாம சாப்புடுறதுதான் இல்லையா?
ஆவுடையோட ஜாதி என்னன்னே தெரியாதுன்னு அப்படியே அப்பாவி மாதிரி பேசறீங்களே! நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்க…. கக்கூஸ் கழுவ சம்மதிச்சு வர்றாங்கன்னாலே அவங்க தலித் ஜாதியாத் தான இருப்பாங்கன்னு உங்களுக்குத் தெரியாதா என்ன? அந்த அடிப்படையில தான அவன் காஃபி, டீ, கலந்து தர்றத எதுக்குறீங்க…?” இளமாறன் நீளமாய்ப் பேசிக் கொண்டே போக வீ.பி. இடையில் புகுந்தார்.
“இளமாறன் உங்க லெக்சரக் கேட்க இப்ப நாம கூடி இருக்கல! அதோட இதை ஜாதிப் பிரச்னையா நீங்க மாத்த முயற்சி பண்ணாதீங்க…. நம்ம வீடுகள்ளயே ஒரே ஓவர்ஹெட் டேங்க்லருந்து தான் சமையலறைக்கும் தண்ணி வர்றது; கழிவறைக்கும் வர்றது; சமையலறை குழாய்லருந்து ரெம்ப சாதாரணமா தண்ணி புடிச்சுக் குடிப்போம்; ஆனால் கழிவறை குழாயிலருந்து தண்ணி புடிச்சுக் குடிக்க நமக்கு மனசு ஒப்புமா? அசூசையா ஃபீல் பண்ணுவமா இல்லையா? அது ஹுமன் சைக்காலஜி அவ்வளவு தான்; இங்கயும் அதுதான் பிரச்னைன்னு நான் நெனைக்கிறேன்…அதனால ரெண்டு வேலையையும் ஒருத்தன செய்ய விடாதீங்க; பிரிச்சுடுங்க….” என்றார் தீர்மானமாய்.
“சரி ஸார்; இன்னையிலிருந்து ஆவுடையப்பன் காஃபி, டீ மட்டும் கலந்து குடுப்பான்; கக்கூஸ் கழுவுறதுக்கு நான் வேற ஆள் ஏற்பாடு பண்ணிக்குறேன்….” என்றான் இளமாறன்.
அவசரமாய் ஆட்சேபித்தான் கோபாலன் “நோ…நோ…அதெல்லாம் சரியா வராது ஸார்; ஆவுடை கக்கூஸ் வேணா கழுவட்டும்….காஃபி, டீ கலக்குறதுக்கு வேற ஆள் போடச் சொல்லுங்க…”
“ஏன் ஸார் அப்படி….” சிரித்தபடி கேட்டான் இளமாறன்.
“பொதுவாவே அவங்க சுத்தமா இருக்க மாட்டாங்க; அவங்க கலக்குறத எப்படி ஸார் எல்லோரும் குடிக்க முடியும்?”
இளமாறனுக்கு ஆக்ரோஷமாய்க் கோபம் வந்தது. அப்படியே பொங்கினான். “ஏன் ஸார் இப்படி இருக்கிறீங்க? இதை நான் தான் ஏதோ வலிஞ்சு ஜாதிப் பிரச்னையா மாத்திறேன்னு சொன்னீங்களே, பார்த்தீங்களா ஸார் இவரோட அடி மனசோட விகாரத்த…இப்படித் தான் அர்த்த மில்லாம எதையாவது சொல்லி காலங்காலமா அவங்கள ஒதுக்கி வைச்சுருக்கோம்…. அவங்க குளிச்சு சுத்தபத்தமா இல்லாததால தான் கோயிலுக்குள்ள விடுறதில்லைன்னு அபத்தமா சொல்லிக்கிட்டும் திரியறோம்….என்ன கொடுமை ஸார் இதெல்லாம்…!
உத்தப்புரம்ங்குற கிராமத்துல தீண்டாமையின் சின்னமா இருந்த ஒரு நீண்ட சுவரக் கண்டுபிடிச்சு ரொம்பப் பெரிய போராட்டத்துக்கப்புறம் அதோட ஒரு சிறு பகுதிய அரசாங்கம் தலையிட்டு உடைச்சிருக்காங் களாம்…நெஞ்சத் தொட்டுச் சொல்லுங்க, அந்த மாதிரிச் சுவர் அங்க மட்டுந்தான் இருக்கா? அந்த உயர் ஜாதி மனோபாவமும் அகம்பாவமும் நம்ம எல்லோருடைய உள்ளுணர்வுலயும் இல்லையா? அதனால தான தலித்துகள்னா சுத்தமா இருக்க மாட்டாங்க; அவங்க கலக்குற காஃபி, டீ எல்லாம் ஹைஸீனிக்கா இருக்காதுன்னு கண்டபடி கதை கட்டிக்கிட்டு அவங்களத் தொட்டா தீட்டு பார்த்தா பாவம்னுட்டு ஒதுக்கி வச்சுக்கிட்டு இருக்குறோம்….” மூச்சு விடாமல் பேசியதும் அந்த இடத்திலிருந்து எழுந்து கோபமாய் வெளியேறினான் இளமாறன். அடுத்த நாள் இளமாறனும் ஆவுடையப்பனும் அந்தக் கம்பெனி வேலையிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள்.

-- முற்றும்

Tuesday, March 23, 2010

சிறுகதை : சிநேகிதன் எடுத்த சினிமா

திரையிடப்பட்ட முதல் நாள், முதல் காட்சியிலேயே "காதல் ஒரு ஞாபகம்" என்கிற திரைப்படத்தை பார்த்தே தீர்வது என்கிற தீவிர முடிவோடு தியேட்டருக்குப் போயிருந்தான் அழகர்சாமி. காரணம் அந்தத் திரைப்படத்தை எழுதி இயக்கி இருக்கிற கனகவேல்ராஜன், அழகர்சாமியின் பால்ய நண்பன். ஒன்பதாம் வகுப்பிலிருந்து ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில், ஒரே டெஸ்க்கில் உட்கார்ந்து படித்து, ஒரே ஹாஸ்டல் அறையில் தங்கி, ஒரே பிளேட்டில் உண்டு, ஒரே பாயில் உறங்கி, ஒரே கனவில் கிறங்கி, ஒரே பெண்ணைத் துரத்தி, ஒரே மாதிரி வேலைதேடி அல்லாடி.....அப்புறம் ஆளூக்கொரு பாதையில் பிரிந்து போய் ஒருவருக்கொருவர் தொலைந்து போனவர்கள்.
அழகர்சாமி அவனுடைய குக்கிராமத்தில் எட்டாவது வரைப் படித்துவிட்டு ஒன்பதாம் வகுப்பிற்கு அருப்புக்கோட்டையிலிருக்கும் ஒரு மேல்நிலைப் பள்ளியில் போய்ச் சேர்ந்த போது தான் கனகவேல்ராஜனைச் சந்தித்தான். அடிக்கடி மாற்றலாகும் அவனுடைய அப்பாவின் வேலை காரணமாக பையனாவது ஒரே பள்ளியில் ஒழுங்காகப் படிப்பைத் தொடரட்டுமென்று அதே பள்ளியில் சேர்க்கப்பட்டு படித்துக் கொண்டிருந்தான். இருவரின் பிறந்த ஊர்களும் பள்ளியிலிருந்து தினசரி வந்து போகும் தூரத்திலில்லாததால் ஹாஸ்டலிலும் சேர்க்கப் பட்டிருந்தார்கள்
ஹாஸ்டல் உணவு மற்ற மாணவர்களை மிரட்டிப் பயமுறுத்த அழகர்சாமிக்கோ அதுவே தேவாமிர்தமாய் வசீகரித்தது. தினசரி கேப்பைக் கூழும் கம்பும் சோளமுமாய்ச் சாப்பிட்டு வரகு, குருதவாலி அரிசிச் சோற்றுக்கே நாள், கிழமை என்று காத்திருந்த கிராமச் சூழலுக்கு மாறாக தினசரி நெல்லுச்சோறும் பொங்கல், பூரி, இட்லி, தோசை என்று ஹாஸ்டலில் கிடைத்ததில் தினறித் திக்குமுக்காடித் தான் போனான் அழகர்சாமி. அப்போதெல்லாம் வாழ்தலின் பிரதானமே அவனுக்கு வயிறு வளர்ப்பதாகவே இருந்தது.
ஒரு மதிய உணவு நேரத்தில் உணவொன்றே குறியாக தன்னுடைய புதிய அலுமினியத் தட்டோடு மெஸ்ஸை நோக்கி ஓட, அங்கங்கே கட்டிட விஸ்தரிப்பிற்காக வெட்டி வைத்திருந்த ஒரு அகன்ற குழிக்குள் அழகர்சாமி விழுந்து விட்டான். குள்ளமான உருவமென்பதால் உடனே தாவி ஏறவும் முடியவில்லை. மற்ற மாணவர்கள் எல்லாம் கைகொட்டி சிரித்து வேடிக்கை பார்க்க கனகவேல்ராஜன் தான் "சும்மா இருங்கடா ....." என்று அவர்களை அடக்கிவிட்டு, கை கொடுத்துத் தூக்கி விட்டான். அதில் வேர்விட்ட நட்பு எத்தனையோ சண்டை சச்சரவுகள், போட்டி பொறாமைகளையும் தாண்டி பூப்பூத்து வளர்ந்தது.
அழகர்சாமி பட்டணத்து வாழ்க்கைக்கு கொஞ்சமும் பழக்கப்படாத கிராமத்து அசடாக அந்த ஹாஸ்டலுக்குள் நுழைந்திருந்தான். கனகவேல்ராஜன் தான் அவனை பட்டணத்து வாழ்க்கைக்கும் அதன் படோடோபங்களுக்கும் பழக்கப் படுத்தினான். அரைக்கால் டிரவ்ஷர் மட்டுமே அலைந்து திரிந்தவனுக்கு, மூட்டிய கைலியை லாவகமாய்க் கட்டி இடுப்பில் உருட்டி வைத்துக் கொள்ளும் சூட்சுமம் சொல்லித் தந்தான். உள்ளாடைகள் அணியச் சொன்னான். செருப்பு அணியச் செய்தான். பாடப்புத்தகங்களுக்கு வெளியே வாசிக்கிற பரவச அனுபவங்களை அறிமுகப்படுத்தினான். வயசின் சேட்டைகளை வாலிப ருசிகளை பழக்கப் படுத்தினான்.
சினிமாவையே அதிகம் அறிந்திராத கிராமத்து சிறுவனான அழகர்சாமிக்கு சினிமாவை அறிமுகப்படுத்தி அதன் காட்சியமைப்புகளைப் புரிந்து கொள்ளக் கற்றுக் கொடுத்தான்.அப்போதே கனகவேல்ராஜனுக்கு அவன் பார்த்த சினிமாக்களை கோர்வையாக காட்சி வரிசை பிசகாமல் வசனங்களுடன் விவரிக்கிற திறமை இருப்பதைப் பார்த்து அழகர்சாமி பெரிதும் ஆச்சர்யப்பட்டிருக்கிறான். இரண்டுபேரும் படிக்கப் போகிறோம் என்று இரயில்வே நிலையங்களுக்கும் பூங்காக்களுக்கும் போய் சினிமா வசனப் புத்தகங்களை நெட்டுரூப் போட்டு, பிரபல நடிகர்கள் மாதிரி நடித்துக் காட்டி அதை ரசித்துத் தலையாட்டும் காட்டுத் தாவரங்களுக்குள் அலைந்து திரிந்திருக்கிறார்கள். நீலக்காட்சிகளின் பிட் இணைத்து ஓட்டும் மலையாளப் படங்களின் பின்னிரவுக் காட்சிகளுக்குப் போய்விட்டு விடுதியின் முள்வேலியைத் தாண்டும் போது பிடிபட்டு வார்டனிடம் அறைவாங்கி இரவின் நிசப்தம் கிழிக்க அலறி இருக்கிறார்கள். விடுமுறை நாட்களில் வீதிகளில் அலைந்து பெண்களை ரசித்திருக்கிறார்கள். ஒவ்வொரு முழுப் பரீட்சை விடுமுறைக்கும் ஒருவரின் ஊர் என்று சேர்ந்து போய் குதித்து கும்மாளமிட்டு ஊரையே கலங்கடித்திருக்கிறார்கள்.
ப்ளஸ் ஒன் படிக்கும் போது தான் பெண்களைப் பற்றிய அதீத கனவுகளிலும் ஆசைகளிலும் அழகர்சாமி கவிதைகள் புனையத் தொடங்கினான்."அன்ன நடையாள்; சின்ன இடையாள்; பின்னல் சடையாள்; கன்னல் மொழியாள்; கருமை விழியாள்....." என்ற ரீதியில் கிறுக்கத் தொடங்கி, விடுமுறை தினங்களில் கனகவேல்ராஜனுக்கும் பக்கம் பக்கமாய் கவிதையிலேயே கடிதங்கள் வரைந்து தள்ளினான். கனகவேல்ராஜனோ அழகர்சாமியின் உளறல்களை எல்லாம் உலக மகா காவியங்கள் என்று உசுப்பேற்றி "உன்கிட்ட பாரதியின் சாயல் இருக்குடா; அக்னிக் குஞ்சு மாதிரி ஒரு திறமை ஒளி ஒளிஞ்சு இருக்குடா....." என்றெல்லாம் ஏகத்துக்கும் புகழ்ந்து, மேலும் மேலும் எழுதச் சொல்லி உற்சாகப் படுத்தினான்.
"அவளுக்கு இரண்டு நிழல்கள்
அவனையும் சேர்த்து........." என்று அழகர்சாமி எழுதிய இரண்டு வரிக்கவிதை ஒன்று துணுக்கு போல ஒரு வார இதழில் பிரசுரமாகிவிட கனகவேல்ராஜன் ஹாஸ்டலையே ரெண்டு பண்ணினான். அந்த இரண்டு வரிக் கவிதையின் அர்த்த ஆழங்களை இரத்த நாளங்கள் தெறிக்கப் பேசி பித்தேறித் திரிந்தான்.
கல்லூரியிலும் இருவரின் நட்பும் தொடர்ந்தது. இலக்கிய நாட்டமும் எழுத்தார்வமும் இருந்த அழகர்சாமி கணிதத்தையும், எழுதுவதை ஊக்குவிப்பதையே தன் உயிர் மூச்சாகக் கொண்டிருந்த கனகவேல்ராஜன் ஆங்கில இலக்கியத்தையும் விருப்பப் பாடங்களாக தேர்ந்து கொள்ள நேர்ந்தது வாழ்க்கையின் குரூர நகைச்சுவைகளில் ஒன்று. அழகர்சாமி கவி அரங்கங்களிலும் கல்லூரி மலர்களிலும் புரட்சிக் கவிதைகள் எழுதி அதில் மயங்கி எவளாவது காதலியாக வரமாட்டாளா என்று காத்துக் கிடந்தான். கனகவேல்ராஜன் தமிழ் மன்றங்களுக்குத் தலைமை ஏற்று விழாக்களையும் அரசியலையும் அரங்கேற்றித் திரிந்தான்.
அழகர்சாமி கல்லூரியில் இறுதி வருஷம் படிக்கும் போது, நகைச்சுவைத் தோரணங்களாயிருந்த கல்லூரி நாடகங்களை சீர்திருத்தி விடும் கலகக்காரனின் முஸ்தீபுகளோடு காதலும் புரட்சியும் சரிவிகிதத்தில் கலந்த ஒரு நாடகம் எழுதி நாடக மன்றத்தில் சமர்ப்பித்தான். "வசந்தங்கள் திரும்பாது" என்ற தலைப்பிட்டு நூறு பக்கங்களில் நவீன நாடகத்தின் காட்சி விவரணைகள் மற்றும் வசனங்களோடு அவன் அந்த நாடகத்தை எழுதிக் கொடுத்திருந்தான்.ஆனால் நாடகமன்றம் அந்த நாடகத்தை நிராகரித்து விட்டது.
நாடகத்தில் நகைச்சுவை இல்லாமல் ரொம்பவும் வறட்சியாக இருப்பதால் மாணவர்கள் அதை ரசிக்க மாட்டார்கள் என்றும் நாடகத்தில் நிறைய பெண் பாத்திரங்கள் வருவதால் நம் நாடக மன்றத்தில் நடிக்கச் சம்மதித்து பெயர் கொடுத்திருக்கும் ஒரே ஒரு பெண்னை மட்டும் வைத்து அந்த நாடகத்தை அரங்கேற்ற முடியாது என்றும் காரணங்கள் சொல்லி புறக்கணித்து விட்டார்கள்.
செய்தி கேள்விப்பட்ட கனகவேல்ராஜன் கொதித்துப் போனான். தமிழ் மன்றத்தின் சார்பில் வசந்தம் திரும்பாது நாடகத்தை அரங்கேற்றிக் காட்டுகிறேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு நண்பர்களைத் திரட்டி ஒத்திகைகளுக்கு ஏற்பாடு செய்தான்.மதுரையின் புரொஃபஷனல் நாடகக் கம்பெனியிலிருந்து நடிகைகளைக் கொண்டு வருவதாகவும் சொல்லித் திரிந்தான்.ஆனாலும் கடைசி நிமிஷத்தில் கல்லூரி முதல்வர் நாடகத்தை அரங்கேற்ற அனுமதி மறுத்துவிட்டார்- கல்லூரியையும் விடுதியையும் கொச்சைப் படுத்துகிற காட்சிகளும் வசனங்களும் நிறைய இருக்கிறது என்று காரணம் காட்டி.
கனகவேல்ராஜன் எவ்வளவோ வாதாடிப் பார்த்தும், அழகர்சாமி நாடகத்திலிருக்கும் ஆட்சேபகரமான காட்சிகளையும் வசனங்களையும் நீக்கிவிடுவதாக உறுதிமொழி அளித்தும், கெஞ்சியும் கூட அவர் பிடிவாதம் தளரவில்லை. வீதிகளில் போட வேண்டிய புரட்சி நாடகங்களை எல்லாம் கல்லூரி விழா மேடையில் அனுமதிக்க முடியாது என்று முடிவாகச் சொல்லி விட்டு எழுந்து போய் விட்டார். கனகவேல்ராஜனும் அழகர்சாமியும் சோர்ந்து போய் என்ன செய்வது என்றும் தெரியாமல் அதன் விதி அவ்வளவு தான் என்று விட்டுவிட்டு வேறு வேலைகளைப் பார்க்கப் போய் விட்டார்கள்.
அழகர்சாமி இப்போது யோசித்துப் பார்க்கும்போது தான், தன் நாடகத்திற்கு அனுமதி மறுத்த முதல்வரின் செய்கை சிறுபிள்ளைத்தனமாகத் தோன்றியது. ஜனநாயகத் தன்மை கொஞ்சமும் இல்லாமல் எத்தனை கட்டுப்பெட்டித் தனமாய் இருக்கிறார்கள் கல்லூரி முதல்வர்கள்! வாலிப வயசுக்கே உரிய கனவுகளும் குறும்புகளும் நிறைந்த நல்லதோர் கதை தான் அது. அதைப் பார்த்து ஏன் அவர் அத்தனை பதட்டப் பட்டார் என்று ஆச்சரியமாக இருந்தது.
நாடகப்படி கதையின் நாயகி வெளிநாட்டில் தன் புருஷனுடன் வசித்து வருகிறாள்.அப்போது அவள் தீவிரமாய் நோய் வாய்ப்பட்டு படுத்த படுக்கையாய் இருக்கிறாள்.அவள் படித்த கல்லூரியிலிருந்து 25 வருஷங்களுக்கொருமுறை பழைய மாணவர்களை எல்லாம் ஒன்று சேர்க்கும் ஒரு விழாவிற்கான அழைப்பிதழ் வருகிறது. இவளும் இந்தியாவிற்குப் போய் அவளின் கல்லூரி விழாவில் கலந்து கொள்ள வேண்டுமென்று ஆசைப்படுகிறாள்.அவள் உடம்பு இப்போது இருக்கும் நிலையில் அது சாத்தியமில்லை என்று அவள் புருஷன் அவளை இந்தியா அழைத்துப் போக மறுக்கிறான். நாயகியோ போயே தீர்வேன் என்று முரண்டு பிடிக்கிறாள். மருத்துவரிடம் ஆலோசணை கேட்கிறார்கள். அவரும் முதலில் மறுத்து, அப்புறம் அவளின் பிடிவாதம் பார்த்து "பரவாயில்லை அழைத்துப் போய் வாருங்கள். பழைய நண்பர்களைச் சந்திப்பதும், புது சூழ்நிலையும் அவளுக்கு மருந்தாகி நோயின் கடுமை குறைந்து அவள் குணமாகலாம்....." என்று சொல்ல, நாயகி புருஷனுடன் இந்தியா வருகிறாள்.
கல்லூரி விழாவிற்குப் போகும் வழியில், வீட்டில் தேடிக் கண்டுபிடித்த போட்டோ ஆல்பத்தை விரித்து தன் கடந்த காலத்து வாழ்க்கையைப் புரட்டிப் பார்த்து அசைபோட, அந்த பழைய நாட்கள் உயிர்ப்புடன் பிளாஸ்பேக்குகளாக விரிகிறது. மாணவ மாணவிகளுக்கிடையே மலர்ந்த சினேகம், காதல், போட்டி, பொறாமைகள், தவிப்புகள், காதல் தோல்விகள், செல்லக் கோபங்கள், சில்மிஷங்கள், நகைச்சுவை விளையாட்டுக்கள், பரீட்சை பயங்கள், கல்லூரி நிர்வாகத்தின் சுரண்டல்கள், உள் அரசியல், மாணவப் போராட்டங்கள், ஒரு மாணவன் இறந்து போதல், அதைத் தொடர்ந்த வெறியாட்டங்கள், சமரசங்கள், கல்லூரி விழாக்கள் என்று ஒவ்வொரு காட்சியாக அரங்கேறுகிறது.
பிளாஸ்பேக் முடிந்து, பரவசத்தோடும் சிறகடிக்கிற மனநிலையோடும் கல்லூரி விழாவிற்குப் போகிறாள் கதையின் நாயகி. ஆனால் விழாவிற்கு இவள் எதிர்பார்த்துப் போயிருந்த பழைய மாணவர்கள் யாவரும் அடுத்த கட்டத்திற்குப் போய்விட்ட அதிகாரிகளாகவும், அரசியல்வாதிகளாகவும், ஆன்மீகவாதிகளாகவும், பிஸினெஸ் மேன்களாகவும், அம்மாக்களாகவும், குடும்பத் தலைவர்களாகவும் பழைய சுவடுகள் ஏதுமற்று, பொருள் தேடுதலே வாழ்தலின் வெற்றி என்று நினைத்து அதில் பெருமைபட்டுக் கொண்டும், அதிகாரம் செலுத்திக்கொண்டும், இளைய தலைமுறை பற்றிக் குறைபட்டுக் கொண்டும் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். கனவுகளும், இனிய கற்பனைகளும், அறியாமைகளும் நிறைந்த மாணவப் பருவம் ஒரு போதும் வாழ்க்கையில் வேறு எந்தக் கட்டத்திலும் திரும்பக் கிடைக்காது என்கிற நிதர்சனம் உறைக்க, "நாம வெளிநாட்டுக்கே திரும்பிப் போகலாம்......." என்று கணவனிடம் சொல்லி விட்டு குலுங்கி அழுகிறாள். அப்படியே காட்சி உறைய நாடகம் நிறைவு பெறுவதாக எழுதி இருந்தான் அழகர்சாமி.
. இப்போது அந்த நாடகப் பிரதி எங்கிருக்கிறது? கல்லூரி நாட்களுக்கப்புறம் ஒரு நாளும் அதைப் பார்த்த ஞாபகம் அவனுக்கில்லை. எழுதும் போது இரண்டு கார்பன் பேப்பர்கள் வைத்து -இவன் நாடகம் எழுதிய காலகட்டத்தில் போட்டாக் காப்பிகள் வெகுவாய் புழக்கத்திற்கு வந்திருக்கவில்லை - எழுதியது ஞாபகத்திற்கு வந்தது. மூலப்பிரதியை கல்லூரியின் நாடக மன்றத்தில் சமர்பித்து நாடகம் நிராகரிக்கப்பட்ட பின்பும் அது இவன் கைக்குத் திரும்பாமல் அங்கேயே தங்கிவிட்டது. கார்பன் பிரதிகள் எங்கு போயிற்றென்று ஞாபகமில்லை. ஒருவேளை கனகவேல்ராஜனிடம் ஒரு பிரதி இருக்கலாம்; அவன் தான் இந்த நாடகத்தை ஒரு பொக்கிஷம் போல தூக்கிக் கொண்டு திரிந்தான்.
கல்லூரி நாட்களுக்கப்புறம், அழகர்சாமிக்கும் கனகவேல்ராஜனுக்கும் இடையில் இருந்த நட்பு அவனே ஒரு கவிதையில் சொல்லி இருப்பதைப் போல ஆடம்ப நாட்களில் கத்தை கத்தையான காகிதங்களில் செழித்து வளர்ந்து, காலப்போக்கில் உள்நாட்டு தபால் உறைகளாக மெலிந்து, "நலம்; நல மறிய ஆவல்" என்னும் அஞ்சல் அட்டைகளாக சுருங்கி, புது வருஷம் பொங்கல்களுக்கான வாழ்த்து அட்டைகளாகி, அப்புறம் அதுவுமின்றி கரைந்து வெறும் நினைவுகளாக நெஞ்சில் மட்டும் தங்கிப் போனது.
ஒரு கடுங்கோடையின் வெயில் நாளில் பசி, தாகம் நிறைந்து சென்னை வீதிகளில் அழகர்சாமி அலைந்து கொண்டிருந்த போது திடீரென்று கனகவேல்ராஜன் எதிர்ப்பட்டான். அவன், தான் இப்போது சினிமாவில் வேலை செய்வதாகச் சொல்லவும் அழகர்சாமிக்கு ஆச்சர்யமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது.
"எங்க ஊர்க்காரர் ஒருத்தர் புதுமுகங்களைப் போட்டு ஒரு படம் தயாரிக்கிறார். ஊர்ல சும்மா தான இருக்கிற; வந்து உனக்கு தெரிஞ்ச வேலையைப் பாருன்னு கூட்டிட்டு வந்துட்டார்...."என்றான் மலர்ச்சியாக. படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கு அழைத்துப்போய் பலபேரிடம் அனுமதி கேட்டு அழகர்சாமிக்கு ஒரு வேளை சாப்பாட்டிற்கு ஏற்பாடு செய்தான். சாப்பாட்டில் கனவின் சுவை இருந்தது.
அப்புறம் கொஞ்ச நாட்களுக்கு இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டார்கள்.சினிமா பற்றி நிறைய பேசினார்கள்.அவன் வேலை பார்த்த திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் நடுவில் மனஸ்தாபமாகி, இயக்குனர் பாதிப்படத்தில் விலகிக் கொண்டதாகவும், தயாரிப்பாளரே இயக்குநனராகவும் அவதாரம் எடுத்து உதவியாளர்களை வைத்தே மிச்சப்படத்தை முடித்து வெளியிட்டதாகவும் சொன்னான். அதில் கனகவேல்ராஜன் கூட நிறைய காட்சிகளுக்கு துண்டுதுண்டாக வசனம் எழுதியிருந்ததாக பெருமைப்பட்டுக்கொண்டான்.
அந்தப் படம் ரிலீசாகி படுமோசமாய் தோல்வி கண்டது. கொஞ்சமும் சகித்துக் கொள்ள முடியாத அந்த திரைப் படத்தை நண்பனின் பெயரை திரையில் பார்த்து விடுகிற சந்தோஷத்திற்காக மட்டுமே மூன்றுமுறைப் பார்த்தான் அழகர்சாமி. முதல்முறை இவன் தியேட்டருக்குள் போவதற்குள்ளாகவே டைட்டில்கள் முடிந்து படம் தொடங்கி விட்டது. இரண்டாம் முறை உதவி இயக்குனர்கள் மற்றும் வசன கர்த்தாக்களின் பட்டியலில் கனகவேல்ராஜனின் பெயரைத் தேடி ஏமாந்து, மூன்றாம் தடவை போன போது தான் புரொடக்ஷன் உதவியாளர்கள் என்னும் பெரும் பட்டியலுக்குள் நண்பனின் பெயர் பார்த்து கைதட்டி, எல்லோரும் ஒரு மாதிரியாகப் பார்க்கவும் தலையைக் குனிந்து கொண்டான்.
சில நாட்கள் கழித்து அந்த சினிமா கம்பெனிக்கு கனகவேல்ராஜனைத் தேடிப் போன போது கம்பெனியே காணாமல் போயிருந்தது. அவனைப் பற்றிய விவரங்களும் கிடைக்கவில்லை. சினிமாவில் ஒரு பெரும் வேலை நிறுத்தம் நடந்தபோது மிகவும் உருக்குலைந்த நிலையில் மீண்டும் கனகவேல்ராஜனைச் சந்தித்தான் அழகர்சாமி. அப்போது அவன் ஒரு சுமாரான உத்தியோகத்தில் இருந்ததால் கனகவேல்ராஜனுக்கு உணவு மற்றும் சிகரெட்டுகளுக்கு தாராளமாகவே ஏற்பாடு செய்தான். இருவரும் நிறைய நிறையப் பேசினார்கள்.
"சினிமா என்பது கோடிகோடியாய் பணம் புரளும் ஒரு துறை தான். ஆனாலும் பட்டினி சாவுகளும் இங்கு சர்வசாதாரணம்.." என்றும் " மிகச்சிலரை முன்னிலைப் படுத்துவதற்காக லட்சம் பேர் மண்ணோடு மண்ணாக மட்கிப் போவதுண்டு....." என்றும் சினிமா பற்றி நிறைய தெளிவுகளுக்கு வந்திருந்தான் கனகவேல்ராஜன்.
"ஒருசில படங்களுக்கு மட்டும் உதவி இயக்குனராக வேலை செய்து விட்டு, ஒரே வருஷத்துல இயக்குனராக வாய்ப்புக் கிடைத்து ஜெயித்தவர்களும் இருக்கிறார்கள்; இருபது முப்பது வருஷமா உதவி இயக்குனர்களாகவே இதில் உழன்று கொண்டிருப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனாலும் சினிமா ஒரு வசீகரமான சுழல் மாதிரி. ஒருமுறை உள்ளே நுழைந்து விட்டால் அப்புறம் அவ்வளவு சுலபமா யாரும் வெளியேறி விலகிப் போகவே முடியாது. அதன் கவர்ச்சியும் வருமான சாத்தியமும் அப்படிப் பட்டது....." என்றான் சிரித்துக் கொண்டே..
அழகர்சாமி தானும் சினிமாவிற்குள் நுழையலாமா என்று அவனிடம் கேட்ட போது, தப்பித் தவறிக் கூட அந்த தப்பை செய்து விட வேண்டாம் என்றும் அழகர்சாமியின் மனநிலைக்கும் அவனுடைய வருமானம் தேவைப் படுகிற இப்போதைய குடும்ப நிலைமைகளுக்கும் சினிமா ஒருபோதும் பொருந்திப் போகாது என்றும் சொல்லி அவனுடைய ஆசைகளை முளையிலேயே கிள்ளி விட்டான்.
அடுத்த முறை அழகர்சாமி கனகவேல்ராஜனைச் சந்தித்த போது அவன் ஒரு பிரபல தமிழ் வாரப் பத்திரிக்கையில் சினிமா நிருபராக வேலை பார்ப்பதாகத் தெரிவித்தான். “உன்னோட சினிமா கனவு என்னாச்சு?” என்று கேட்ட போது, இந்த வேலையும் தன் கனவு சினிமாவை சாத்தியப் படுத்துவதற்கான ஒரு படி தான் என்றான். அழகர்சாமிக்குப் புரியவில்லை.
தான் சினிமா நிருபராக இருப்பதின் மூலம் நிறைய பிரபல நடிகர், நடிகைகளைச் சந்திப்பது சாத்தியமாவதாகவும், அவர்களிடம் நெருங்கி கதை சொல்வதாகவும் அவர்களின் மூலம் ஏதாவது தயாரிப்பாளர் தன்னை படம் இயக்க அனுமதிப்பார் என்றும் விளக்கமளித்தான். பேச்சு பல திசைகளில் அலைந்து விட்டு திருட்டு டி.வி.டி மற்றும் வி.சி.டி.பற்றித் திரும்பியது. கனகவேல்ராஜனுக்கு திருட்டு டி.வி.டி மற்றும் வி.சி.டி.எடுப்பவர்கள் அதை வாங்கிப் பார்ப்பவர்களின் மீதெல்லாம் ஆங்காரமாய் கோபமிருந்தது. “கோடி கோடியா கொட்டி படம் எடுக்குறாங்க; அதைத் தியேட்டர்ல போய் பார்க்காம, திருட்டுத் தனமா எடுத்து பிஸினஸ் பண்றவங்களை எல்லாம் சுட்டுக் கொல்லனும்....” என்றான் கொதிநிலையின் உச்சத்தில்.
அழகர்சாமி சிரித்துக் கொண்டே “சினிமாக் காரங்களுக்கு திருட்டு டி.வி.டி மற்றும் வி.சி.டி.பத்திப் பேசுறதுக்கு எந்த அருகதையும் தார்மீக நியாயமும் கிடையாது; அவங்க பண்ணாத திருட்டா? வெளிநாட்டு டி.வி.டி. பார்த்துத் தான படமே எடுக்குறாங்க...! நாவல்கள்ல இருந்து நிகழ்வுகள நைசா உருவி தங்களோட படத்துல காட்சிகளா வச்சுக்கிறாங்க.... நாவல் எழுதுனவன்கிட்ட அனுமதி வாங்குறதுமில்ல; நையாப் பைசா குடுக்குறதுமில்ல....”என்று சொல்லவும் கனகு ’அதுவும் சரிதான்; இருந்தாலும்.....” என்று எதையோ சொல்ல வந்து அதைத் தொடராமல் விட்டு விட்டான்.
அப்புறம் அழகர்சாமியிடம் நல்லதாய் ஏதாவது கதை எழுதிக் கொடுத்தால் அதை தங்கள் பத்திரிக்கையில் வெளியிட ஏற்பாடு செய்ய முடியும் என்று சொல்லவே இவனும் அடுத்த வாரமே பனிரெண்டு பக்கங்களில் ஒரு சிறுகதை எழுதிக் கொடுத்தான். அடுத்த சில வாரங்களிலேயே அவனுடைய சிறுகதை அந்த பத்திரிக்கையில் பிரசுரமாகி இருந்தது.
ஆனால் பிரசுரமான கதையைப் படித்த அழகர்சாமிக்கு இரத்தம் சூடேறி கோபம் தலைக்கேறி விட்டது. அவனுடைய கதை அநியாயத்திற்கு சுருக்கப்பட்டு ஒரே பக்கத்தில் அதுவும் முக்கால் பக்கத்திற்கு கதையும் கால் பக்கத்திற்கு ஓவியமுமாய் போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்ட பிணம் மாதிரி குற்றுயிரும் கொலையுயிருமாக பிரசுரமாகி இருந்தது. உடனே கனகவேல்ராஜனைச் சந்தித்து அழகர்சாமி சத்தம் போட்டான், அவனோ இவனுடைய கோபத்தின் சாரத்தைக் கொஞ்சமும் புரிந்து கொள்ளாமல் அவனுடைய எடிட்டரைப் புகழ்ந்து பேசினான்.
"எங்க எடிட்டர் மாதிரி ஒரு திறமைசாலிய எங்கயுமே நீ பார்க்க முடியாது. ஒரு வார்த்தை கூட அனாவசியமா துருத்திக்கிட்டு இருக்கிறத அவரு அனுமதிக்க மாட்டாரு. உன் கதைய எப்படி கச்சிதமா எடிட் பண்ணி அழகா போட்டுருக்கார்னு பார்த்தியில்ல...."
"உங்க எடிட்டர் பண்ணியிருக்கிறது எடிட்டிங் இல்ல; கொலை...." குமுறினான் அழகர்சாமி.
"உன் கோபம் அர்த்தமில்லாதது அழகர்; இந்த பத்திரிக்கையில எவ்வளவு ரைட்டர்ஸ் அவங்க படைப்பு ஒரு வரியாவது பப்ளிஷ் ஆகாதான்னு தவமிருக்காங்கன்னு தெரியுமா உனக்கு? உன் கதை வந்ததுக்கு சந்தோஷப் படாம சும்மா குதிக்காத. நீ எழுதியிருந்த கதையோட எஸன்ஸ் அப்படியே பப்ளிஸ் ஆயிருக்கா இல்லையா? அதைத்தான் பார்க்கனும்......"
"உங்க எடிட்டர பேசாம ஜூஸ் கடை திறந்து எஸன்ஸ் வியாபாரம் பண்ணச் சொல்லு. உத்தமமான தொழிலு. பத்திரிக்கையை விட நல்லா காசும் புரளும்...." கோபமாய்ப் பேசிவிட்டு அழகர்சாமி விலகிப்போனான்.
அதற்கப்புறம் நீண்ட நாட்களுக்கு அவனைச் சந்திக்கும் சந்தர்ப்பங்கள் அமையவே இல்லை. ஒருமுறை புத்தகக் கண்காட்சியில் தற்செயலாக சந்தித்த போது, அவன் பத்துப் படங்களுக்கு மேல் உதவி மற்றும் அசோசியேட் இயக்குனர்களாக வேலை செய்து விட்டதாகவும், விரைவில் தானே ஒரு படத்தை இயக்கப் போவதாகவும் நம்பிக்கை தெரிவித்தான். சொன்னது மாதிரியே இதோ படத்தை இயக்கி வெளியிட்டும் விட்டானே! இந்தப் படத்தைப் பார்த்து விட்டு தன்னுடைய விமர்சனத்தை விரிவாகவே எழுதி அவனுக்கு அனுப்ப வேண்டும் என்று நினைத்துக் கொண்டான் அழகர்சாமி.
அழகர்சாமிக்கு ஒரு வழியாய் டிக்கெட் கிடைத்து பரபரப்பாய் உள்ளே போனான். படத்தை ஆரம்பத்திலிருந்து ஒரு பிரேம் கூட விடாமல் பார்த்துவிடும் துடிப்பும், நண்பனின் பெயரை டைட்டிலில் தரிசிக்கிற பரவசமும் அவனிடமிருந்தன. இவன் இடம் தேடி உட்கார்ந்ததும் படம் தொடங்கியது. கையெழுத்து வடிவிலான மார்டன் தமிழ் எழுத்துக்களில் டைட்டில்கள் மின்னின. இறுதியில்
கதை,
திரைக்கதை,
வசனம்,
இயக்கம் :
கனகவேல்ராஜன்
என்று காட்டியபோது தியேட்டரில் விசில் பறந்தது. அவன் ஏற்கெனவே பத்திரிக்கையாளானாக வேலை பார்த்திருந்த்தால், படம் ரிலீஸுக்கு முன்பாகவே பத்திரிக்கை நண்பர்களின் மூலம் படத்தைப் பற்றியும் தன்னைப் பற்றியும் அவ்வப்போது செய்தி வெளியிடச் செய்ததில் படத்தைப் பற்றிய ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதோடு, கனகவேல்ராஜன் என்கிற பெயரும் பிரபலமாகி விட்டிருந்தது கை தட்டல்களின் அடர்த்தியில் புரிந்தது. தன் நண்பனுக்கு இத்தனை மரியாதையா என்று நினைக்கும்போது அழகர்சாமிக்கு கொஞ்சம் கர்வமாகவே இருந்தது. பக்கத்தில் உட்கார்ந்து படம் பார்ப்பவனிடம் கனகவேல்ராஜன் என் நண்பனாக்கும் என்று பெருமை அடித்துக்கொள்ளவும் மனசு துடித்தது. அடக்கிக் கொண்டான்.
படம் ஆடம்பித்தது. கேமரா அமெரிக்காவின் தெருக்களில் அலைந்து அதன் பிரமிக்க வைக்கும் உயர உயரமான கட்டிடங்களையும், சுத்தமான சாலைகளையும், அழகான பூங்காக்களையும் காட்டியபடி, அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்றின் ஒரு ஃபிளாட்டுக்குள் பிரவேசித்தது. அதன் படுக்கை அறையில் நடுவயது தாண்டிய பெண் ஒருத்தி நோயாளியாகப் படுத்துக் கிடக்கிறாள். ஒரு கடிதத்தை எடுத்துப் படிக்க அவளின் கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது. அவளின் புருஷன் உள்ளே நுழைந்து தன் கோர்ட்டை கழற்றி ஹேங்கரில் மாட்டிவிட்டு அவளின் கன்னம் தட்டி "எப்படி இருக்கிறாய் செல்லமே!" என்கிறான். "நான் படிச்ச கல்லூரியில அலுமினி ஃபங்ஷன்; இன்விடேஷன அம்மா அனுப்பியிருக்கா; இருபத்தஞ்சு வருஷங்களுக்கு அப்புறம் கூடப் படிச்சவங்க எல்லோரையும் பார்க்க ஒரு வாய்ப்பு. நானும் போயிட்டு வரணுங்க.........” என்கிறாள்.
அழகர்சாமிக்கு சிலீரென்றது. "அடப்பாவி........." என்றான் மனசுக்குள். கல்லூரி நாட்களில் அவன் நாடகமாய் எழுதி அரங்கேற்ற முடியாமல் போன கதை அப்படியே சினிமாவாக ஓடிக் கொண்டிருந்தது.

(நன்றி: உயிரெழுத்து – மார்ச் 2010)