Thursday, December 31, 2009

கவிதை: பால்ய சினேகிதி

முச்சந்தியில் வாகன நெரிசலில்
மூச்சிறைக்க நின்றிருந்தபோது
பின்கொசுவம் வைத்த சேலைகட்டி
பிள்ளையை இடுக்கியபடி கடந்துபோன
பேதைப் பெண்ணிடம்
பால்ய சினேகிதியின் சாயல்!
ஒருவேளை....ஒருவேளை....
அவளே தானோ........?
அலைமோதும் நினைவுக்குள்ளும்
அனலடிக்குதடீ.....!
திருக்கார்த்திகை தினமொன்றில்
உரிமையாய் என் தலையில் நீ
தேய்த்துப்போன
ஒட்டுப்புல்லின் அடர்த்தியாய்
உதிர்கின்றன உன் நினைவுகள்!
அம்மணமாய் நாமலைந்த நாட்களில்
தொடங்குகிறது நமக்கான அந்தரங்கம்!
உன் "அரைமுடி" கேட்டு நானழுததாக
சின்ன வயதில் சொல்லிச் சொல்லி
சிரித்திருக்கிறாள் அம்மா!
செப்பு வைத்து நீ சோறாக்க
வயலுக்கு போவதாய் சொல்லி - நான்
வைக்கோற் போரில் விளையாடிவர
சோறு குழம்பு கூட்டென்று
மண்ணைக்குவித்து பரிமாறி
அவுக் அவுக் என
பாவணைகளில் தின்று முடித்ததும் - அம்மா
பசிக்கிறதென்றபடி ஓடியிருக்கிறோம்....!
தானியத்தை மென்று
நுனி நாக்கில் ஏந்தி நாம் வளர்த்த
புறாக் குஞ்சுக்கு
புகட்டி இரசித்திருக்கிறோம்....!
காடுகளில் தேடி அலைந்து
பொன்வண்டுகளைப் பிடித்து
தீப்பெட்டிகளில் வளர்த்திருக்கிறோம்!
வெயிலில் அலைந்து கதை பேசியபடி
சாணி பொறுக்கியிருக்கிறோம்;
மரநிழலில் ஓய்வெடுத்தபடி
வேப்ப முத்துக்கள் சேகரித்திருக்கிறோம்!
களிம்ண்ணில் கோயில் கட்டி
கடவுள் சிலை வடித்து
வீடுவீடாய் கொண்டு காட்டி
எண்ணெய் வாங்கி வந்து
விளக்கேற்றி விளையாடியிருக்கிறோம்....!
உணர்ச்சிகள் அரும்பாத வயதில்
புணர்ச்சி என்று புரியாமலே
உறுப்புக்களை ஒட்டி வைத்து
புருஷன் பொஞ்சாதி என்று
உறவாடி மகிழ்ந்திருக்கிறோம்.....!
பக்தி கொஞ்சமும் இல்லாமல் - உன்
பக்கத்தில் நடந்து போகிற சந்தோஷத்திற்காகவே
மலையேறிப் போய்
சாமி கும்பிட்டுத் திரும்பிய நாட்கள்!
சைக்கிள் கற்றுக் கொள்ளும் சாக்கில்
பரஸ்பரம் பரிமாறிக் கொண்ட
பவள முத்தங்கள்!
என் கைகளில் தவழ்ந்து
நீ பழகிய நீச்சல்!
உன் கைகளுக்குள் அடங்கி
நான் சிலிர்த்த மோகம்!
புத்தம் புதிய பூவாக நீ வந்திருந்து - என்
மனங் கொள்ளை கொண்ட
மயானக் கொள்ளை!
நீ வராமல் போனதால்
அழகிழந்த தெப்பத் திருவிழா!
இன்னும் இன்னுமென....
நெஞ்சின் ஆழத்தில் இனிக்கும்
நினைக்க நினைக்க சிலிர்க்கும்
நினைவுகள் ஏராளம்!
அறியாத வயதில் அருகிருந்தோம்;
வளர வளரத்தான்
விலகிப்போனோம் வெகுவாக....
கல்வி பிரித்தது; காலம் நம்மை
வேரோடு பிடுங்கி வீசி எறிந்தது
திசைக் கொருவராய்........
திருவிழாவில் தொலைந்த சிறுபிள்ளைகளாய்
தேடிக் கண்டடையவே முடியாதபடி
தொலைந்து போனோம் நீண்ட நெடுங்காலமாய்......

Tuesday, December 29, 2009

கவிதை: வாக்குமூலம்

என் வழ்க்கை என்னுடையதில்லை;
நதிபோல் குறுகி
கரைகளுக்குள் அடங்கி நடக்காமல்
பாதைகளற்ற நீரோட்டமாய்
கிடைத்த வெளிகளில்
கிளைத்துப் போகிறதென் வாழ்க்கை!
என் பயணத்தின் திசைகளை
எதெதுவோ தீர்மானிக்க
இலக்கற்று ஓடிக் கொண்டிருக்கிறேன்!

இளவயதின் இலட்சியங்கள் எல்லாம்
சிதறிப் போயின சீக்கிரமே;
சின்னத் தடயமுமில்லை
வரித்துக் கொண்ட வாழ்க்கையை
வாழ்ந்ததின் அடையாளமாக.....!

தமிழ் இலக்கியம் படிக்கும்
தாகமிருந்தது பால்யத்தில்;
எதிர்காலப் பயம் பற்றிய
பொறியில் விழுந்ததில்
பொறியாளனாய் வெளியேறினேன்; குடும்பத்தின்
பொருளாதார சிரமங்களையும் மீறி......!

கலை இலக்கியத்தை வாழ்க்கையாய் வரிக்கும்
கனவுகள் இருந்தது நிறைய
கஞ்சிக்கும் வழியற்றுப் போகுமென்ற கவலையில்
உத்தியோகம் பார்த்துத்தான்
உயிர் வளர்க்க நேர்ந்தது.....!

காதலித்து கலப்பு மணம் புரிந்து
சாதியின் வேர்களைக் கொஞ்சம்
கில்லி எறியும்
வேகம் இருந்தது ஆயினும்
சுயசாதியில் மணமுடித்து
சுருங்கி வாழத்தான் வாய்த்தது....!

உயிர் குழைத்து உருவாக்கிய அம்மாவை
மகாராணியாய் பராமரிக்க
ஆசை இருந்தது மனம் நிறைய; ஆயினும்
பிழைப்புக்காக பிறிதொரு நாட்டில் நானுழல
பிறழ்ந்த மனதுடன் பிதற்றியபடி
பிச்சைக்காரியாய் வீதிகளில் அவள்
அலையத்தான் நேர்ந்தது.....!
கிராமத்துடனான
தொப்புள் கொடி உறவருந்ததில் - அம்மா
உயிருடன் இருக்கிறாளா இல்லையா என்ற
உண்மை கூட தெரியாமலே போனது....!

கடுகு போல் சிறுக வாழாமல்
ஊறுணி போல் கிராமத்திற்கே
உபயோகமாய் வாழ்ந்து விடுகிற
இலட்சியங்கள் கொண்டிருந்தேன்; ஆயினும்
சொகுசான பட்டணத்து வாழ்வில்
சொத்து சேர்ப்பதே
வாழ்வின் தேடலானதில்
வறண்டு தான் போனேன்
இதயத்தில் துளியும் ஈரமற்று......!

சிறுசிறு கணக்குகளிலும்
சில்லரைப் பிணக்குகளிலும்
நட்புகள் நழுவிப் போயின;
சொந்தமும் சுற்றமும்
விலகிப் போய் வெகு நாளாயிற்று;
பிரியங்களையும் பிரேமைகளையும் மீறி
மனைவியுடனான உறவும்
முறுக்கிக் கொள்கிறது அடிக்கடி.....!

விரிந்து பரவும் வெறியோடு
வேர் பிடிக்கத் தொடங்கினேன்;
சுற்றிலும் வேலியிட்டு
சூனியத்தை அடை காத்தேன்
கிளை விரித்துக் காத்திருந்தும்
அண்டவில்லை புள்ளினமெதுவும்
அப்புறந்தான் புரிந்ததெனக்கு
வளர்ந்து வந்தது முள் மரமென்று.....!.

இலைகள் பழுத்து உதிர்ந்து விட்டன
மொட்டுக்களெல்லாம்
மலராமலே கருகி விட்டன
காயில்லை; கனியில்லை; அதனால்
விதைகளும் விழுகவில்லை
மொட்டை மரமாய் நிற்கிறேன்
வெட்ட வெளிதனில்.....
வீழ்ந்தால் விறகுக்காவது ஆவேனோ
வெறுமனே மட்கி
மண்ணோடு மண்ணாகிப் போவேனோ....!

Monday, December 28, 2009

கவிதை: (தா)காகங்களின் கதை

அன்புத் தங்கையே! அன்புத் தங்கையே!
இன்னும் கொஞ்ச தூரம் தான்
எங்காவது சிறிதளவாவது
நீர் கிடைக்கும் நிச்சயமாய்.....
அள்ளிச் செல்வோம்;

அதுவரை
வலிபொறு என் செல்லமே!

நீர் நிரப்பும் நேரம் வரை
நீதிக்கதை ஒன்று சொல்லட்டுமா?
நம்மைப் போலவே நீர்தேடி அலைந்த
காகங்களைப் பற்றிய கதை இது!
பள்ளிக்குப் போயிருந்தால் நாமும்
பாடப் புத்தகங்களில் படித்திருப்போம்;

பாட்டியிடம் திருடிய வடையை
தன்குரல் பற்றிய பிரமைகளில்
பாட்டுப் பாடி நரியிடம்
பறிகொடுத்ததும் கூட
இதே காகமாக இருக்கலாம்!
அத்துவானக் காட்டில் ஒருநாள்
அலைந்து கொண்டிருந்தது தாகத்துடன்!

சுற்றிச் சுற்றி அலைந்தும் கொஞ்சமும்
தண்ணீர் தட்டுப்படவில்லை தடாகமெதிலும்;
கடும் கானலைத் தவிர இன்று போலவே
கானகத்தில் நீர்ப்பசையில்லை எங்கும் ....

முன்பெல்லாம் இத்தனை
அலைச்சலும் தேடலும்
அவசியமிருந்ததில்லை காகங்களுக்கு;
ஏதாவது செடி மறைவில்
உழவனின் கஞ்சிக் கலயமிருக்கும்
உருட்டிக் குடித்து விட்டு
ஒய்யாரமாய் பறந்துவிடும் கரைந்தபடி.....

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்
விவசாய நிலங்களை யெல்லாம்
விழுங்கத் தொடங்கிய பின்புதான்
காகங்களுக்கும் நமக்கும்
தாகம் நிரந்தரமாயிற்று!

தூரரத்தில் வெகுதூரத்தில்
பானை ஒன்று மின்னியது
பாலை வெயிலில்;
பசியையும் மீறி காகம்
பறந்து போனது அதனருகில்...

பெரியதோர் மண்பானை அது;
இரவுப் பனியின் ஈரம் உலராமல்
தூரில் நீராய் நின்றிருந்தது
சூரியக் கதிர்களிலிருந்து
எப்புடியோ தப்பி.........

விளிம்பிலேறி எட்டிப் பார்த்து
விசனப்பட்டது காகம் - தன்
அலகுக்கு எட்டாத
ஆழத்தில் நீரிருப்பதை அறிந்து....

இதற்கு முன்பும் ஒரு சமயம்
இதே போல் நேர்ந்ததும் - தன்
புத்தி கூர்மையால் நீரருந்தியதும்
நினைவிலாடியது காகத்திற்கு......

கொஞ்சமும் தாமதிக்காமல்
அக்கம் பக்கம் கல் பொறுக்கி
அடுக்கடுக்காய் பானையுள் போட்டது;
கற்களால் பானை நிரம்பியும்
நீரெழும்பி வாரதது கண்டு
நிர்கதியாய் நின்றது காகம்!

என்னாயிற்று தண்ணீருக்கு?
ஐயகோ -
போட்ட கற்களின் அழுத்தத்தில்
ஓட்டை விழுந்து பழம் பானையில்
ஒழுகிய கொஞ்ச நீரையும்
வறண்டிருந்த நிலம்
வாய் பிளந்து உறிஞ்சிக் கொண்டதே!

என்ன செய்யும் ஏழைக் காகம்?
தாகம் தணிக்க வழியற்று
பறந்து போய் மறுபடியும் - சிறுவர்களின்
பாடப்புத்தகத்தில் புகுந்து கொண்டு
நீதிக் கதை வெளிகளில்
நீந்தித் திரியலாயிற்று !
நமக்குத்தான் நீர் தேடும் அவலம்
தொடர்கிறது காலங்கள் தோறும்.....!

Monday, December 21, 2009

சிறுகதை: ரௌத்திரம் பழகு

செல்வராணிக்கு பொங்கிப் பொங்கி அழுகை வந்தது. அவளுக்கு முன்னே இரண்டே இரண்டு சாத்தியங்கள் தான் இருந்தன. ஒன்று தற்கொலை செய்து கொண்டு செத்துப் போவது; இன்னொன்று புருஷனே கதி என்று அவனிடம் சரணாகதி அடைவது. இரண்டிலுமே அவளுக்குச் சம்மதமில்லை.ஆனால் அதைத் தவிர்த்து வேறு வழி எதுவும் புலப்படவில்லை. மனசு வழிகளற்று வெறுமை போர்த்தி இருண்டு கிடந்தது.
எத்தனை சிக்கலும் சிடுக்குமாய் ஆகிப்போனது தன்னுடைய தாம்பத்ய வாழ்க்கை என்று யோசிக்க யோசிக்க ஆற்றாமையில் மனசு கனத்தது. அம்மாவின் மடியில் முகம் புதைத்து கண்ணீர் வற்றும் வரைக் கதறி அழ வேண்டும் போலிருந்தது. திருமணம் என்பதே பெண்களுக்குப் பெரும் சுமை தான். காலில் கல்லைக் கட்டிக்கொண்டு கிணற்றுக்குள் குதித்து, கனத்தை மீறி நீச்சலடிக்கச் சொல்கிற சித்ரவதை தான் என்று அவளுக்குப் புரிந்தது.
ஆனால் படிப்பறிவே இல்லாத அம்மா அத்தனை கனத்தோடு எத்தனை லாவகமாய் நீந்திக் கரை சேர்ந்தாள் என்று நினைக்கும் போது செல்வராணிக்கு ஆச்சர்யமாயும் அவ்வப்போது பொறாமையாகவும் இருந்தது. தான் இத்தனை படித்திருந்தும் வேலைக்குப் போயும் கூட காலுதைத்து நீந்தவே தெரியவில்லையே! அம்மாவிடம் போய்த்தான் ஆரம்பம் முதல் மறுபடியும் கற்றுக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது.
செல்வராணிக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து கவனித்துக் கொண்டு தான் இருக்கிறாள். அம்மாவின் திருமண வாழ்க்கை என்பது சகிக்க முடியாத நரகமாய்த் தானிருந்தது. அப்பாவிடமிருந்து அவளுக்குக் கிடைத்ததெல்லாம் அடிகளும் சித்ரவதைகளும் நாக்கூசும் நாரச வார்த்தை களும் தான். அப்பா வேலைக்குப் போனதும் அம்மாவை ஆட்டிப் படைக்க அவளின் மாமியார் தயாராகி விடுவாள்.
அம்மா நிஜமாகவே பொறுமையில் பூமா தேவி தான். அப்பா, பாட்டி இருவரையும் தன்னுடைய மௌனத்தாலும், அமைதி தவழும் முகத்தாலுமே எதிர்கொண்டாள். ஒரு வார்த்தை எதிர்த்துப் பேச மாட்டாள். வாய் வலிக்கும் வரைத் திட்டி கை வலிக்கும் வரை அடித்து அவர்களே ஓய்ந்து போவார்கள்.
அப்பா; முரட்டு அப்பா. அவரை நினைத்தாலே செல்வராணிக்கு ஈரக்குலை நடுங்கும்.உடம்பெல்லாம் ஒரு பயமும் படபடப்பும் பரவும். எப்போதும் பீடி நாற்றமும் சாராய வீச்சமுமாய், கொஞ்சமும் நாசூக்கு இல்லாமல் புர்புர்ரென்று நடுவீட்டில் உட்கார்ந்து குசுப் போட்டுக் கொண் டிருப்பார். சின்னச் சின்ன பிரச்னைக்கும் ஆங்காரமாய்க் கோபம் வந்து அம்மாவையோ அல்லது செல்வராணியையோ போட்டு அடிப்பார்.
அம்மாவை, அப்பா வீதியில் போட்டு அடிக்கிற போதெல்லாம் எதிர்த்த வீட்டு நரசிம்மன் மாமா தான் விலக்கி விடுவார். அவரையும் அப்பா சும்மா விட மாட்டார். "நீ இவள வச்சிருக் கையாடா....." என்று அமில வார்த்தைகளை அவர் மீதும் கொட்டுவார். அவரும் பதிலுக்கு ஏதாவது திட்டிவிட்டு வீட்டுக்குள் போய் விடுவார்.
நரசிம்மன் மாமா பல தடவை அம்மாவிடம் சொல்லியிருக்கிறார். "எதுக்கும்மா இந்த குடிகார முட்டாப் பயகிட்ட அடியும் மிதியும் வாங்கிக் கிட்டு குடித்தனம் பண்ற? உதறீட்டு வெளியில வாம்மா....இவன் வீட்டுக்குள்ள செய்யிற வேலைகள வெளியில நாலு வீட்டுக்கு செஞ்சீன்னா, கௌரவமா இதைவிட சந்தோஷமா பொழைச்சுக்கலாம்...."
அம்மா ஒவ்வொரு தடவையும் பொறுமையாக அமைதியாக மறுத்து விடுவாள். "இருக்கட்டும்ணா....ஒருநாள் இல்லைன்னா ஒருநாள் நிச்சயமா அவர் திருந்தி வருவார் - தன் தவறுகளை எல்லாம் உணர்ந்து, பொண்டாட்டியும் பிள்ளையுமே பெரிசுன்னு.....கடவுள் கண்டிப்பா நல்வழி காட்டுவார் அண்ணா...."
அம்மாவின் நம்பிக்கை வீண் போகவில்லை. அப்பா தன் ஐம்பது வயதுக்கப்புறம் ஆடி ஓய்ந்து குடித்த சாராயத்தில் உடம்பு தளர்ந்து அம்மாவே கதி என்று வந்து விழுந்தார். அம்மா என்ன சொன்னாலும் அதை அப்படியே கேட்டார். பாட்டியும் படுத்த படுக்கையாய் விழுந்து விட அம்மாவின் பணிவிடைகளில் நெகிழ்ந்து "மகாராசியா நீ இருப்ப...." என்று வாழ்த்தி விட்டுத்தான் செத்துப் போனாள்.
அம்மாவின் பொறுமையும் சகிப்புத் தன்மையும் தனக்கு ஏன் இல்லாமல் போய் விட்டது என்று மனதுக்குள் புழுங்கினாள் செல்வராணி. எனக்கும் என் புருஷனை கனிவாய் எதிர் கொள்ளவும் அவரும் அவரின் குடும்பத்தினர்களும் செய்கிற கொடுமைகளைத் தாங்குகிற மனவலிமையை யும் கற்றுக் கொடும்மா? செல்வராணி அம்மாவைப் போய் பார்த்து வரக் கிளம்பினாள்.
செல்வராணி எம்.எஸ்.ஸி முடித்து,பொழுதைப் போக்க சிரமப்பட்டு மாவட்ட நூலகத்தில் உறுப்பினராகச் சேர்ந்தபோது தான் பிரேம்குமார் பரிச்சயமானான். ஒருமுறை இரண்டு மணி நேரத் தேடலுக்குப் பிறகும் தன் ரசனைக்கேற்ற புத்தகம் எதுவும் அகப்படாமல் வெறுமனே திரும்ப முற்பட்ட போது தான் அங்கு நூலகராய் இருந்த பிரேம்குமார் "மெம்பர்ஸ் புத்தகமில்லாமல் திரும்பிப் போறதாவது! என்ன மாதிரி புக்ஸ் புடிக்கும்னு சொல்லுங்க, நான் தேடி எடுத்துத் தாரேன்..." என்று முன் வந்தான்.
"தமிழ் நாவல் நல்லதா ஏதாவது கிடைச்சா பரவாயில்ல...." என்று அவள் சொல்லவும், "அசோகமித்திரன் படிப்பீர்களா?" என்று கேட்டபடி இவளின் கால்களுக்குப் பக்கத்தில் கீழடுக்கில் புத்தகம் தேட அவன் குனிய, இவள் அவசரமாய் சேலையை இழுத்துவிட்டு கால்களைக் கொஞ்சம் தள்ளி வைத்துக் கொண்டாள். பிரேம்குமார் சரேலென நிமிர்ந்து, "எதுக்குங்க என்னை இப்படி இன்சல்ட் பண்றீங்க? உங்களுக்குப் புத்தகம் தேடத்தான குனிஞ்சேன்? என் நோக்கத்தையே கொச்சைப் படுத்திட்டீங்களே!" என்றபடி கோபமாய் விலகிப் போனான்.
செல்வராணிக்கு கொஞ்ச நேரம் எதுவும் விளங்கவே இல்லை. நாமெங்கே இவனை அவமானப் படுத்தினோம் என்று யோசித்தபடி வீட்டிற்குப் போய்விட்டாள். அப்புறம் நிதானமாய் யோசித்தபோது அவன் புத்தகம் தேடக் குனிந்தபோது, தான் அவசரமாய் புடவையை சரி செய்தது அவன் மனதைப் பெரிதும் காயப்படுத்தி விட்டது புரிந்தது. அடுத்தநாள் அவனிடம் போய் , தான் வேண்டுமென்றே அப்படி செய்யவில்லை என்றும் பெண்மைக்கே உள்ள இயல்பில் தான் அப்படி செய்ததாகவும் விளக்கம் சொல்லி மன்னிப்பும் கேட்டாள்.
" ஏன் லேடீஸெல்லாம் இப்படி இருக்கிறீங்க! ஒரு ஆம்பளையப் பார்த்தாலே மாராப்ப இழுத்து மூடுறது; ப்ளவுஸ்ஸ சரி பண்றதுன்னு உங்களையும் அறியாம எங்களை எவ்வளவு இன்சல்ட் பண்றீங்க தெரியுமா? நாங்க ஃப்ரண்லியா முகம் பார்த்துப் பேசிக்கிட்டு இருக்கும் போது, நீங்க பண்ற சில செய்கைகள், உங்ககிட்ட விஷேசமா இருக்கிற சில உறுப்புகள பார்க்கச் சொல்ற சைகைகளா அர்த்தமாகிற அசிங்கம் புரியலையா உங்களுக்கு? நீங்க ஏன் உங்கள உடம்பாவே ஃபீல் பண்றீங்க! நான் பெண்கள சக மனுஷியாத்தான் பார்க்குறேன்......" நீளமாய்ப் பேசி போரடித்தாலும் சில நல்ல புத்தகங்களைத் தேடி எடுத்துக் கொடுத்தான்.
அப்புறம் வந்த தினங்களில் இருவரும் பேசிப்பேசி நட்பாகி, பிரமித்துக் காதலாகி கசிந்துருகி, ஆச்சர்யமாய் இரு குடும்பங்களும் அதிகம் எதிர்ப்பின்றி சம்மதிக்க, கல்யாணமாய்க் கனிந்தது. ஆனால் ஆசை அறுபது நாள்; மோகம் முப்பது நாள் என்கிற ஆரம்பக் கணக்குகளுக்குக் கூட அவளின் கல்யாண சந்தோஷம் நீடிக்கவில்லை. முதலிரவு முடிந்து, வலியும் களைப்புமாய் படுத்திருந்த போது பிரேம்குமார் சிரித்துக் கொண்டே கேட்டான்.
"மொத ராத்திரியில தான் பெண்களுக்கு கற்புக்கு அடையாளமான கன்னித்திரை கிழிந்து இலேசாய் இரத்தமெல்லாம் வருமின்னு புத்தகங்கள்ல படிச்சிருக்கேன். ஆனால் உனக்கு அந்த மாதிரி எதுவும் நடந்த மாதிரியே தெரியலியே, ஒருவேளை ஏற்கெனவே உனக்கு 'இந்த' அனுபவமிருக்கோ?"
ஒரே ராத்திரியில் காதலன் கணவனாய் உருமாறியதில் என்னன்னெவோ இராசாயானங்கள் எல்லாம் நிகழ்ந்து, அவனுடைய குரூர முகம் அசிங்கமாய் வெளிப்பட்டதில் செல்வராணி சுக்குநூறாய் உடைந்து போனாள் - கூடவே அவளின் காதலும் கனவுகளும் தான். காதலிக்கும் போது கனிவும் கரிசனமுமாய் பெண்களை ஆராதித்த பிரேம்குமார், கல்யாணத்தின் எந்த இடுக்கில் சிக்கி காணாமல் போனான்? பூ நெஞ்சமும் புன்னகை தவழும் முகமுமாய் சுற்றிச் சுற்றி வந்தவன் கல்யாணத்திற்கப்புறம் பாறாங்கல் மனதினனாய் இறுகிப் போனது எப்படி? இந்த கேள்விகளுக்கெல்லாம் அவளுக்குப் பதிலும் தெரியவில்லை. வாழ்வின் சூட்சுமமும் புரியவில்லை.
காதலிக்கும்போது வெளிப்படாத பிரேம்குமாரின் இன்னொரு முகம் -அவனின் குடிகார முகம் - கல்யாணத்திற்கு பிறகு வெளிப்பட்டது.அப்பாவுக்கும் இவனுக்கும் ஒரே வித்தியாசம் அவர் வெளியிலே போய் சாராயம் குடித்து வீதியில் விழுந்து கிடந்தார்; இவன் வீட்டிலேயே கொண்டு வந்து குடித்தான் வெளிப்படையாக. காதலிக்கும் போது சிகரெட்டைக் கூட மூடி மூடி ஆயிரம் சமாதானங்கள் சொல்லி குற்ற உணர்வுடன் குடிப்பதாக பாசாங்கு பண்ணியவன், கல்யாணத்திற்கு பிறகு மது குடிப்பது மிகச்சாதாரண, அன்றாட நிகழ்வாயிருந்தது.
எளிமையாய், சீரும் அதிகமில்லாமல், அப்பா நிகழ்த்திய கல்யாணம், பிரேம்குமார் வீட்டாரின் எதிர்பார்ப்புகளை நொறுக்கிவிட்டது என்பது அவர்களின் பேச்சில் அப்பட்டமாய் வெளிப்பட்டது. காதல் கல்யாணம் என்பதால் வரதட்சணை என்று பேரம் பேசவும் வாய்ப்பில்லாமல் போய் விட்டது. ஒரே பெண்ணிற்கு அப்பா நிறையச் செய்வார் என்று ரொம்பவும் எதிர்பார்த்து ஏமாந்து போனார்கள்.
"எத்தனை சம்பந்தம் சொந்தத்துல, சொத்து சுகத்தோட நான் நீன்னு போட்டி போட்டு இவனுக்கு பொண்ணு தர முன் வந்தாங்க. எல்லாத்தையும் வேண்டாம்னுட்டு காதல் கண்றாவின்னு ஒண்ணுமில்லாதவளைக் கட்டிக்கிட்டு வந்து சீரழியுறானே......" என்று செல்வராணி யின் மாமியார் அடிக்கடி குத்திக்காட்டினாள். பிரேம்குமாரின் அக்காள் ஒருத்தியும் புருஷனுடன் சேர்ந்து வாழாமல் இவர்களுடன் தங்கி இருந்ததில் அவளின் அட்டகாசங்களும் அவ்வப்போது அரங்கேற, வீட்டில் எப்போதும் சண்டையும் சச்சரவுகளும் தான்.
கல்யாணமாகி கொஞ்ச நாளிலேயே பிரேம்குமாருக்கு மதுரை பக்கத்திற்கு மாற்றலாகிவிட, அவன் செல்வராணியை அம்மா மற்றும் அக்காளுடன் சென்னை போரூரிலேயே குடிவைத்து, மாதம் ஓரிரு தடவை மட்டுமே வந்து போனான். அவன் வீட்டில் இல்லாத குறையை மாமியாரும் நாத்தனாரும் செவ்வனே நிறைவேற்றினார்கள். செல்வராணியை அடித்து துவைத்து அலசி காயப் போட்டார்கள்.
மாடு மாதிரி வீட்டு வேலைகளைச் செய்தாலும் மாமியாரையும் நாத்தனாரையும் செல்வராணியால் திருப்திபடுத்த முடியவில்லை. எப்போதும் அடுப்பங்கரை கரியும் வியர்வை நசநசப்பும் ஈரப்புடவையுமாய் எவ்வளவு தான் உழைத்தாலும் எடுத்ததெற்கெல்லாம் குற்றம் சொல்லி மனதைக் குதறினார்கள்.
"பொம்பளை இத்தனை சோறா திங்கிறது? இப்படி தின்னு தீர்த்தா அவன் ஒருத்தன் சம்பாத்தியம் எத்தனை நாளைக்காகும்? சும்மா மோரை ஊத்திக்கிட்டு ஊறுகாயகடிச்சு சாப்ட்டு எந்திரி......." சாப்பாட்டில் கூட சண்டை போட்டு செல்வராணியின் வயிற்றையும் நோகடித்தார்கள்.
ஒரு தடவை ஊருக்குப் போயிருந்தபோது அப்பாவிடம் இது பற்றி எல்லாம் பேசி தன்னால் அங்கு மறுபடியும் போய் வாழ முடியாது என்று சொல்ல அவர் அதிர்ந்து போய் விட்டார். "குடும்பம்னா அப்படித்தான் இருக்கும். எப்படி இருந்தாலும் நீ தான் அனுசரித்துப் போகனும். கல்யாணம் பண்ணுனதோட எங்க கடமை முடிஞ்சு போச்சு. அதுவும் இது நீயா தேடிக்கிட்ட வாழ்க்கை. இலாபமோ நஷ்டமோ புருஷன் வீட்ல அவன் கூட சேர்ந்து வாழ்றதுதான் பொம்பளைக்கு லட்சணம். கண்ணை கசக்கிக்கிட்டு அம்மாகிட்ட போய் நிக்காத. அவளால இதை தாங்க முடியாது...." என்று அறிவுரை கூறி அனுப்பினார்.
இவளின் கல்யாணத்திற்கு வர முடியாத கல்லூரி நண்பனொருவன், வேறொரு நாளில் இவளைப் பார்த்துப்போக வந்திருந்தான்.இவளும் அவனுக்கு தடபுடலாக டிபனும் காபியும் தந்து உபசரித்து அனுப்பி வைத்தாள். அவன் போவது வரை அமைதியாய் இருந்தவர்கள் அவன் வெளியேறவும் ஆரம்பித்தார்கள்.
"செல்வராணியோட அப்பா அவளை எப்படி சுதந்திரமா வளர்த்திருக்கார் பார்த்தியாமா? ஆண்களோட எல்லாம் ஜோவியலா அலைஞ்சு திரிய அனுமதிச்சிருக்காரே! நீயும் தம்பியும் என்னை வாசப்படி தாண்டவாவது விட்டுருப்பீங்களா?" அலுத்துக் கொள்வது போல் நக்கலடித்தாள் நாத்தனார்.
"அது சரி தான். பொண்ணை அப்படி எல்லாம் அலைய விட்டாத்தான, உன் தம்பி மாதிரி இளிச்சவாயன் மாட்டுவான். காக்காசு செலவில்லாம கல்யாணம் பண்ணி தள்ளி விடலாம். நமக்கு ஏதுடி அந்த சாமர்த்தியம்?" மாமியார் நீட்டி முழக்கினாள்.
"அவன் வந்து போன தோரணை, இவ மாய்ஞ்சு மாய்ஞ்சு கவனிச்சுக்கிட்ட கரிசனத்த எல்லாம் பார்க்குறப்ப சும்மா பார்த்துட்டுப் போக வந்தது மாதிரி தெரியலம்மா. ஏற்கனவே ரெண்டு பேருக்கும் கனெக்ஷன் இருக்கும் போலருக்கே...." விஷம் கொட்டினாள் நாத்தி. செல்வராணிக்கு மனசு கூசியது. உதடு கடித்து கண்ணீரை அடக்கி, உள்ளுக்குள்ளாகவே கதறினாள்.
இந்த வேளையில் இவளது எம்.எஸ்.ஸி டிகிரி சான்றிதழ் போஸ்டலில் வந்தபோது இன்னொரு பூகம்பம் வெடித்தது. அப்போதுதான், இவள் இரண்டாம் வகுப்பில் அதுவும் கோர்ஸ் முடித்து ஒன்றரை வருடங்களுக்கப்புறம் அரியர்ஸ் எழுதி பாஸ் பண்ணியிருந்த விபரம் மாப்பிள்ளை வீட்டாருக்கு தெரிந்தது. அன்றைக்கு பிரேம்குமாரும் வீட்டிலிருந்தான்.
"சரியான பிராடு குடும்பம் போலருக்குடி. இவங்கப்பன் இவள ஏதோ, கோல்டு மெடல் ரேஞ்சுக்கு புத்திசாலின்னு புகழ்ந்தான். இவ என்னடான்னா கோட் அடிச்சு செகண்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணியிருக்கிற இலட்சணம் இப்பத்தான் புரியுது....." என்றாள் மாமியார்.
"காலேஜூல உட்கார்ந்து படிச்சாத்தானம்மா, இவள் ஆம்பிளைக்குச் சமமா, அவங்களோட போய் ஊர் மேய்ஞ்சா...." நாத்தனார் முடிப்பதற்குள் செல்வராணிக்கு ஆங்காரம் பொங்கியது. "நீ எஸ்.எல்.சியவே ஒழுங்கா முடிக்கலை; உங்க தம்பி பி.ஏ.ஹிஸ்டரி. உங்க குடும்ப படிப்புக்கு என் எம்.எஸ்.ஸி ஒண்ணும் குறைஞ்சு போயிடல......" செல்வராணி பேசி முடிப்பதற்குள் பளீரென அறை விழுந்ததில் பொறி கலங்கிப் போனாள்.
"திமிராடி உனக்கு; என் படிப்பையே எளக்காரமா பேசுற அளவுக்கு துணிஞ்சிட்டியா? நான் மாசம் எட்டாயிரம் சம்பாதிக்கிறேனே, உன் எம்.எஸ்.ஸிய வச்சு நாக்கா வலிக்க முடியும்!" என்று பிரேம்குமார் கேட்கவும் செல்வராணிக்கு சுருக்கென்றது. ஒரு வெறியோடு பேப்பர் விளம்பரம் பார்த்து விண்ணப்பிக்கத் தொடங்கினாள். மூன்றே மாதத்தில் ஒரு சுயநிதி தனியார் பாலிடெக்னிக்கில் மாதம் ஐயாயிரம் ரூபாய் சம்பளத்தில் ஆசிரியை வேலை கிடைத்தது.
"இவ வெள்ளைத் தோலப்பார்த்து விழுந்து வேலை போட்டுக் குடுத்திருப்பான்கள்....." என்றாள் நாத்தனார். ஆனாலும் சம்பளப் பணம் பார்த்து அவளை வேலைக்குப் போக அனுமதித்தாள் மாமியார். "அம்மா இனிமேத்தான் இவள நீ பத்திரமாப் பார்த்துக்கனும்; நான் வேற எப்பவாவது தான் வீட்டுக்கே வர்றேன். இவ வெளியில வேலைக்குப் போறேன்னுட்டு எவன் பிள்ளையையாவது வயித்துல வாங்கிட்டு வந்துடப் போறாள்...." என்றான் பிரேம்குமார்.
செல்வராணிக்கு ஏற்கெனவே மனசு மரத்துபோய் விட்டிருந்தபடியால் அவள் பதிலேதும் பேசவில்லை. வீட்டுப் பிரச்னைகளை வேலையில் மறக்க முயன்றாள். சாயங்காலமும் ஒரு டியூசன் செண்டரில் பகுதி நேர ஆசிரியையாக வேலை பார்த்துவிட்டு, இரவு நேரங் கழித்துத் தான் வீட்டிற்குப் போனாள். அப்படியும் மாமியார் மற்றும் நாத்தனாரின் விஷ நாக்குகளிலிருந்து இவளால் தப்ப முடியவில்லை. இவளும் பதில் பேச வீடு இரணகளமானது.
மாதம் இரண்டு அல்லது அதிக பட்சம் மூன்று தடவை மட்டுமே வீட்டிற்கு வருகிற பிரேம்குமாரும் எப்போதும் குடித்துவிட்டு போதை தெளியாமலே இவளை அணுகினான்.
"உன்னைப் பார்த்தாலே எனக்கு மூடே வர மாட்டேங்குதுடி....பஸ்ஸுல, டிரெயின்ல, எவனெவனோ உரசி, இடிச்சு, வேலை செய்ற எடத்துலயும் எவன்கிட்ட யெல்லாமோ இளிச் சுட்டுத்தான வர்ற! அதனால உன்னைப் பார்த்தாலே கோபமும் அருவருப்பும்தாண்டி வருது......" எட்டி உதைத்து, வெளியில் தள்ளி கதவை மூடுவான். அவமானமாக இருக்கும்.
திடீரென்று அவனுக்கு தினவெடுத்தால் பாதி இராத்திரியில் உலுக்கி, "மகாராணிய கால்ல விழுந்து கெஞ்சனுமா, வாடி" என்று இழுத்துப் போய் பலாத்காரம் பண்ணுவதுபோல் முரட்டுத் தனமாய் புணர்ந்தான். பல நேரங்களில் இந்த நரக வேதனையிலிருந்து மீள ஒரே அடியாக செத்துப்போய் விடலாமா என்று கூட யோசித்தாள் செல்வராணி.
இந்நிலையில் செல்வராணிக்கு நாள் தள்ளிப் போய் அவள் கர்ப்பம் என்று டாக்டர் கன்பார்ம் பண்ணவும் வீடு கொந்தளித்தது. "நான் சொல்லல, இவள் வேலைக்குப் போறேன்னுட்டு வேசித்தனம் பண்ணி வயித்துல குழந்தையோட வந்து நிக்கிறா! அது நிச்சயமா என் குழந்தையே இல்ல" என்றான் நாக்கூசாமல். கருவைக் கலைத்து விடும்படி குடும்பமே கூச்சல் போட்டது. இவள் முடியாது என்று மூர்க்கம் காட்டினாள்.
"என் ஒருத்தன் சம்பாத்தியம் இந்த குடும்பத்துக்கு போதும். நீ தேவடியாத்தனம் பண்ணி இந்த குடும்பத்த ஒண்ணும் தூக்கி நிறுத்த வேணாம். வேலைக்குப் போற திமிருல தான் இப்ப எல்லாம் நீ ஓவராப் பேசுற. குழந்தைய அழிச்சிட்டு, வேலையையும் வேண்டாம்னு எழுதிக் குடுத்துட்டு வா. எல்லோரும் மதுரைக்கே போயி அங்க வீடெடுத்து தங்கி குடித்தனம் பண்ணலாம்" என்றான் தீர்மானமாக. செல்வராணியும் வேறு வழி தெரிமாமல் இனியும் அவர்களுடன் மல்லுக்கட்ட முடியாது என்ற முடிவில் அவர்களின் ஏற்பாட்டுக்குச் சரி என்றாள்.
அதற்குள் அம்மாவைப் போய் ஒரு முறை பார்த்து விட்டு வரலாம் என்று கிளம்பினாள். ஊருக்குப் போனபோது அப்பா வீட்டில் இல்லை. ஆபிஸில் ஏதோ அவசர வேலையாக வெளியில் போயிருப்பதாக அம்மா சொன்னாள்."நீ மட்டுமா தனியா வந்த, எங்கடி உன் புருஷன் வரலயா?" என்று மலரச்சியாய் வரவேற்றாள். வழக்கமான குசல விசாரிப்புகள் முடிந்ததும் செல்வராணி அழுகையும் கண்ணீருமாய், தான் புருஷன் வீட்டில் படுகிற அவஸ்தைகளை எல்லாம் ஒன்று விடாமல் விஸ்தாரமாய் சொல்லி முடித்தாள்.
"ரெண்டு வருஷம் கடத்துறதுக்குள்ள இருபது வருஷம் வாழ்ந்த அலுப்பும் சலிப்பும் ஏற்பட்டு வாழ்க்கையே வெறுத்துப் போச்சேம்மா. நீ எப்படிம்மா அப்பாவோட அடாவடித்தனங்களை முப்பது வருஷம் பொறுத்துக்கிட்டு காலந் தள்ளுன? உன்னை நெனச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்குமா. எனக்கும் உன் பொறுமையையும் சகிப்புத் தன்மையையும் கத்துக் குடும்மா....ப்ளீஸ்" - செல்வராணி.
எல்லாவற்றையும் கேட்டு முடித்த அம்மா "எதுக்குடி சகிச்சுக்கணும்? பொம்பளைன்னா சுய கெளரவமே இல்லாம எல்லாத்தையும் பொறுத்தே போகணுங்குறது யார் போட்ட சட்டம்? காலுக்கு உதவாத செருப்ப கழட்டி வீசுறத விட்டுட்டு காலை வெட்டணுங்கிறியே! விவாகரத்துக்கு எழுதிக் குடுத்துட்டு வீட்டுக்கு வாடி. உனக்கு நான் நல்ல வழி காட்டறேன்" என்றாள் வெடுக்கென்று.
அம்மா சொன்னதைக் கேட்டதும் ஆடிப்போனாள் செல்வராணி. "என்னம்மா இப்படி சொல்ற? எனக்கு புத்தி சொல்வீன்னு வந்து சொன்னா, ஒரேயடியா வெட்டிட்டு வந்துடுன்ற! அப்பா கடைசி காலத்துல திருந்தி வந்து இப்ப நீயே கதின்னு கெடக்குறாப்புல என் புருஷனும் வர மாட்டாரா?அது வரைக்கும் நானும் பொறுமையா காத்திருக்கிறது தானம்மா நம்ம பண்பாடு!"
என் புருஷன் மாதிரியே உன் புருஷனும் கண்டிப்பா ஒரு நாளைக்கு திருந்தி வருவான். அதுல சந்தேகமே இல்ல. ஆனா, ஆடி ஓய்ஞ்சு உடம்புலே இரத்தம் சுண்டுனப்புறம் அவன் திருந்தி வர்றதுலே என்னடி பிரயோசனம்? வாலிப வயசுல எல்லாம் கண்ணீரும் கவலையுமா காலங் கடத்திட்டு, வயசு போன காலத்துல என்னத்தடி சந்தோஷப்படறது?"
"நீ இருந்தியேம்மா, ஒரு தவம் மாதிரி பொறுமை காத்தியே!"
"அப்ப எனக்கு புத்தியும் இல்ல; போக்கிடமும் இல்லடி. உன்னை வச்சுக்கிட்டு நான் எங்கடி போயிருக்க முடியும்? எனக்கு என்ன வருமானம் இருந்துச்சு காலத்த ஓட்ட. ஆனா நீ அப்படி இல்லடி. சொந்தக் கால்ல நிக்கிறே. ஒரு பொண்ணுக்கு புருஷன விட வேலை தான்டி முக்கியம்! எதுக்காகவும் உன் வேலைய மட்டும் விட்டுடாத....."
"வயித்துலே புள்ள வேற வந்துருச்சேம்மா. எப்படி தனியா வந்து அதை ஆளாக்குவேன்? அப்பன் இல்லாத புள்ளைன்னு சமுகம் பலிக்குமே!"
"போடி அசடே. இன்னைக்கு காலம் எவ்வளவோ மாறியாச்சு. உன் புள்ளைக்கு உன் புருஷனோட இன்ஷியல் கூடத் தேவையில்லை. உன் இன்ஷியலே போதும். தைர்யமா உன் புருஷன் கிட்டருந்து வெலகி வா. நானும் நீயும் சென்னையில போயி தனி வீடெடுத்து தங்குவோம். எப்பவும் போல நீ வேலைக்குப் போயிட்டு வா. காலம் கனிஞ்சு கடவுளுக்கும் சம்மதம்னா, உனக்கு பொருத்தமான உன்னை அப்படியே ஏத்துக்கிற நல்ல உள்ளத்தோட இன்னொருத்தன் கிடைச்சா உனக்கு மறுபடியும் கல்யாணம் பண்ணி வைக்கிறேன். இன்னொரு புருஷன் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. உன்னால் தனியாகவே வாழ்ந்து ஜெயிச்சுட முடியும். தைர்யமாக முடிவெடுத்து கிளம்பி வா...."
"அம்மா நீ என் கூட சென்னைக்கு வந்துட்டா அப்புறம் அப்பா இந்த ஊருல எப்படி தனியா இருப்பார்?"
"எனக்கு எப்பவும் அவர் முக்கியமில்லை; நீ தாண்டி முக்கியம். இந்த ஏற்பாடு அவருக்குச் சம்மதம்னா அவரும் நம்ம கூட கிளம்பி வரட்டும். இஷ்டம் இல்லைன்னா எக்கேடும் கெட்டுப் போகட்டும்!"
அம்மாவின் திடமும் தீர்மானமும் பார்த்து செல்வராணிக்கு மலைப்பாக இருந்தது. அவள் அழைத்துப் போகிற பாதையில் நிறைய வெளிச்சமிருப்பதாகத் தோன்ற ஒரு நல்ல வக்க்£லைப் பார்த்துப் பேச கிளம்பினாள் செல்வராணி.

-- முற்றும்
(நன்றி : தாமரை - டிசம்பர் 2007 )

Friday, December 18, 2009

கவிதை: எங்கெங்கு சென்றாலும்

பிரமுகர்களைப் பார்க்கப் போகிறார்கள்
மரியாதை நிமித்தம்
மாலைகளுடனும் சால்வைகளுடனும்....

கோயில்களுக்குச் செல்கிறார்கள்
அனேக வேண்டுதல்களுடனும்
அர்ச்சகர்கள் மற்றும் பிச்சைக்காரர்களுக்கான
சில்லரைகளுடனும்....

சிறைக்கூடங்களுக்குச் செல்கிறார்கள்
சிற்றுண்டிகளுடனும்
சிதைந்த வாழ்க்கை சித்திரங்களுடனும்....

மருத்துவமனைகளுக்குப் போகிறார்கள்
ஆறுதல் மொழிகளுடனும்
ஆர்லிக்ஸ் மற்றும் பழங்களுடனும்.....

இழவு வீடுகளுக்குப் போகிறார்கள்
வலிமிகு இரணங்களுடனும்; சிலர்
வலிந்து வரவழைத்த கண்ணீருடனும்....

உறவுகளைத் தேடிப் போகிறார்கள்
குசல விசாரிப்புகளுடனும்
குழந்தைகளுக்கான தின்பண்டங்களுடனும்.....

நண்பர்களை நாடிப் போகிறார்கள்
பொங்கிப் பெருகும் நினைவுகளுடனும்
பொசுங்கிய கனவுகளுடனும்.....

தெப்பக் குளங்களுக்குப் போகிறார்கள்
குளிக்கும் ஆவலுடனும்; சிலர்
மீன்களுக்கான பொரிகளுடனும்.....

தெரு நாய்களைத் தாண்டிப் போகிறார்கள்
பயமும் பதுங்களுமாய்
திருடர்களும் உயிர்களை நேசிக்கும் சிலரும்
வீசிப் போகிறார்கள்
கொஞ்சம் பிஸ்கட்டுகளையும்....

இறந்த பின்பும் சுமந்து போகிறார்கள்
நிறைய பாவங்களையும்
நிறைவேறா ஆசைகளையும்; சிலர் மட்டும்
உதிர்கிறார்கள் ஒரு பூவைப் போல்
உரமாகிறார்கள் வேரடி மண்ணிற்கே....!

மூன்று கவிதைகள்

நவீன தாலிகள்
நவீன பெண்களுக்குத் தான்
எத்தனை எத்தனை தாலிகள்!

கம்பீரமாய் கழுத்தில் தொங்கும்
கம்பெனியின் அடையாள அட்டை;
மாலையாய்த் தழுவி
மனதை நிறைக்கும் கைத்தொலைபேசி!

மருத்துவரென்றால் ஸ்டெத்தாஸ்கோப்;
கணிணி நிபுணி என்றால்
கழுத்திலொரு ஈ.பேனா
இன்னும் என்னென்னவோ
அத்தனையையும் சுமக்கிறார்கள்
அலாதியான சந்தோஷங்களுடன்....!

புருஷர்கள் அணிவிக்கும்
பொன் தாலிகள் தான்
காலத்திற்கும் கனக்கும் நகரவிடாமல்.....!
யானைகளுக்கு அங்குசங்கள்;
நம் பெண்களுக்கு
தாலி என்னும் மஞ்சக்கயிறு!

விக்கல்; சில நினைவுகள்

தலையில் தட்டவும் யாருமற்ற
தனிமையில் இரையெடுக்கும் போது
முதல் கவளம் சோறே விக்கிற்று!
சிறுவயதில் அடிக்கடி விக்கும்;
அப்போதெல்லாம்
ஆறுதலாய் தலையில் தட்டி
அன்பாய் சொல்வாள் அம்மா
'உன்னை யாரோ நினைக்குறாங்கடா'!
இப்போது.....
யாரிருக்கிறார் நினைப்பதெற்கு?
ஞாபக அடுக்குகளில் துழாவினால்
பெருமூச்சே மிஞ்சிற்று!

பால்யகால நட்பெல்லாம்
பள்ளி இறுதி நாளொன்றில்
பசுமை நிறைந்த நினைவுகளே....
பாடியதோடு கலைந்து போயிற்று !

கல்லூரி கால நட்போ
கத்தை கத்தையான கடிதங்களில்
செழித்து வளர்ந்து
நலம்; நலமறிய அவா; எனும்
கார்டு கிறுக்கல்களில் குறுகி
வருஷத்துக் கொருமுறை
வாழ்த்து அட்டைகளாய் சுருங்கி
கடைசியில் வேலை கிடைத்ததும்
கரைந்து காணாமலே போயிற்று!

அலுவலக உறவுகளெல்லாம்
அசட்டுப் புன்னகைகள்;
அவ்வப்போது கைகுலுக்கள் தவிர்த்து
ஆழமாய் வேர் பிடிப்பதில்லை மனதில்....

சொந்தம் சுற்றமெல்லாம்
சடங்கு சம்பிரதாயங்களில்
முடங்கிப்போய் வெகு நாளாயிற்று!

இலக்கற்று ஓடிக் கொண்டிருக்கும்
இயந்திர வாழ்க்கையில்
யாரும் யாரையும்
நெஞ்சார்ந்து நினைப்பதற்கு நேரமேது?

எதிரெதிர் இலக்குகள்

அந்தரத்தில் தொங்குகிறது
நமக்கான ஒற்றையடிப் பாதை
எதிரெதிர் திசைகளில் நமது இலக்குகள்!

ஏதேதோ புள்ளிகளில் பயணம் தொடங்கி
எதிரும் புதிருமாய் நிற்கிறோம் இப்போது;
விலகவோ துளியும் இடமில்லை
இருபுறமும் அதல பாதாளம்
எப்படி அடைவது அவரவர் இலக்கை.....?

சேர்ந்து நடக்கத் தொடங்குவோம்
வேறுவழி எதுவுமில்லை இருவருக்கும்;
உலகம் உருண்டை என்பது
உண்மையானால்
இருவர் இலக்கையுமே கடந்தும்
தொடரலாம் நம் பயணம்.....!

Thursday, December 17, 2009

சிறுகதை: உயிர் ஊறும் ஒற்றைச் சொல்

“குழந்தையா இது; குட்டிச் சாத்தான்… இனியும் என்னால இதை மேய்க்க முடி யாது. இதப் பார்த்துக்கிறதுக்கு நீ வேற ஏற்பாடு பண்ணிக்க; நாளையிலருந்து நான் வேலைக்குப் போகப் போறேன்….” வெடித்தாள் மரியபுஷ்பம். அவசரமாய் வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்த முத்துப் பாண்டி ஒரு நிமிஷம் திகைத்தான். அப்புறம் தன்னுடைய மதிய உணவு பையை எடுத்து தோளில் மாட்டிக் கொண்டு கிளம்பப் போனவனை மறித்து மறுபடியும் சத்தம் போட்டாள் அவள்.
“இங்க ஒருத்தி கரடியாக் கத்திக்கிட்டிருக்கேன்; காதுலயே வாங்காதது மாதிரி நீ பாட்டுக்கு கிளம்புனைன்னா என்னப்பா அர்த்தம்? நான் வெளையாட்டுக்குச் சொல்லல…. நேத்தே நான் வேலை பார்த்த பழைய ஸ்கூல்ல பேசிட்டேன்…. நாளையிலருந்து வேலைக்கு வரச் சொல்லீட் டாங்க….. கொஞ்சம் சீரியஸா எடுத்துக்கிட்டு உடனே ஏற்பாடு பண்ணு… இல்லைன்னா நாளையி லருந்து நீ தான் லீவு போட்டுப் பார்த்துக்கனும்……” அதிகாலை வேளையில் சண்டை வேண்டா மென்று அமைதியாய் அலுவலகம் கிளம்பிப் போய்விட்டான் முத்துப்பாண்டி.
அலுவலகத்தில் அவனுக்கு வேலையே ஓடவில்ல்லை. திடுமென்று இப்படி அறிவித் தால் என்ன செய்வது? ஆனால் மரியபுஷ்பம் எப்பவுமே இப்படித்தான். புருஷனென்றாலும் புள்ளை யென்றாலும் அவளின் அதிகார வரம்புக்குள் அவள் சொல்கிற படியெல்லாம் ஆட வேண்டும்; குட்டிக் கரணம் போடச் சொன்னால் போட வேண்டும். மறுத்தால் அதை அவளால் தாங்கிக் கொள்ள முடி யாது. சில்வியாவிடம் அவளின் அதிகாரம் செல்லுபடியாக வில்லை. சில்வியா இவர்களின் பதினைந்து மாதக் குழந்தை.
“என்ன ரொம்ப டல்லா இருக்கேள்; உங்க குட்டி இளவரசி ரொம்ப படுத்த றாளோ…..” என்ற படி இவனுடைய டேபிளுக்கு வந்தார் வீரமணி. இவர் தான் சில்வியா இவர்களுக்குக் கிடைப்பதற்கு மூல காரணமாய் இருந்தவர். மிகவும் அற்புதமான மனிதர். எழுபது வயதைக் கடந்த கிழவர். இந்த வயதிலுல் வேலை செய்து தான் வயிற்றை நிரப்ப வேண்டுமென்கிற பரிதாபகரமான வாழ்க்கைச் சூழல் அவருக்கு.
ஒருமுறை அவர் முத்துப்பாண்டியின் வீட்டிற்கு வந்திருந்த போது “உங்களுக்கு எத்தனை குழந்தைகள் ஸார்…..” என்று எதார்த்தமாய்க் கேட்டார். பொதுவாய் இந்தக் கேள்விக்கு முத்துப்பாண்டி எப்போதும் ‘ஒரே ஒரு பெண் குழந்தை கிராமத்தில் அம்மாவின் அரவணைப்பில் வளர்கிறது’ என்று பொய் தான் சொல்வான். ஏனோ அன்றைக்கு வீரமணியிடம் அவன் அப்படிச் சொல்லவில்லை.
“எங்களுக்கு குழந்தைகள் இல்ல ஸார்…” என்றான். அவர் கொஞ்ச நேரம் மௌனமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்புறம், “பகவான் எப்பவுமே இப்படித்தான் ஸார்… நல்லவாள கஷ்டப் படுத்தி அதுல குரூர சந்தோஷம் அனுபவிப்பான்….” என்றவர், “பேசாம நீங்க ஒரு குழந்தைய தத்தெடுத்து வளருங்களென் ஸார்….” என்றார். முத்துப்பாண்டி சிரித்தான்.
குழந்தை தத்தெடுப்பு ஒன்றும் அவ்வளவு சுலபமான காரியமில்லை என்பதை அனுபவ ரீதியாய் அறிந்திருந்தான் அவன். சில வருஷங்களுக்கு முன்பே அதற்கான முயற்சிகளில் இறங்கி நிறைய அலைக்கழிப்புகள், அவமானங்களுக்கப்புறம் அது பெரிய பிஸினெஸ் என்கிற உண்மையை தெரிந்து கொண்டு அதிலிருந்து முற்றிலுமாய் விலகி விட்டான். அந்த கசப்பான அனுபங்களை வீரமணியிடம் விவரிக்கவும் அவரும் அதிர்ந்தார்.
மெதுவாய் “நீங்க அப்படி ஒரேயடியா ஒதுங்கிடக் கூடாது ஸார்; கண்டிப்பா பணம் பண்ண நினைக்காத சேவை மனப் பான்மையுள்ள நல்ல ஏஜென்சிகள் ஏதாவது இருக்கும் ஸார்… நான் தேடி, உங்களுக்கு ஒரு குழந்தை வாங்கித் தர்றேன்….” என்றவர் உடனே செயலில் இறங்கினார். சுற்றம் நட்பு எல்லோரிடமும் விசாரித்தார்.
அவரின் பக்கத்து வீட்டில் வாடகைக்குக் குடி வந்த ஒரு கிறிஸ்துவப் பெண்ணின் மூலம் பரங்கி மலையில் ஒரு குழந்தைகள் இல்லம் இருப்பதாக அறிந்து முதலில் அவர் போய் விசாரித்து விட்டு வந்தார். “குழந்தை யாருக்கு வேணுமோ அவங்கள வரச் சொல்லுங்க….” என்று சொல்லி ‘மேல் விபரங்கள் எதுவும் தரவில்லை அவர்கள்…’ என்றார்.
“ஆனா அவாளப் பார்த்தா ரொம்ப நல்லவாளாத் தெரியுது; எதுக்கும் நீங்க உங்க மனைவியோட ஒரே ஒரு தடவை போயிட்டு வந்துடுங்க….” என்று வற்புறுத்தினார். மரியபுஷ்பம், தான் இன்னொரு கசப்பான அனுபவத்திற்கு தயாரில்லை என்று மறுத்தாள். வீரமணி வீட்டிற்கே வந்து அவளை சமாதானப் படுத்தி சம்மதிக்க வைத்தார்.
பரங்கிமலையின் உச்சியில் மிகவும் அமைதியான சூழலில் அமைந்திருந்தது அந்த இல்லம். மரியபுஷ்பமும் முத்துப்பாண்டியும் அங்கு போய் விபரம் சொல்லி விசாரித்த போது, கொஞ்சநேரக் காத்திருப்புக்குப் பின் வந்தமர்ந்தாள் ஒரு சகோதரி. மிகவும் மெல்லிய குரலில் விசாரித்தார். அவரின் தமிழில் மலையாளம் மணத்தது. இவர்களின் கண்களை உற்றுப் பார்த்துவிட்டு இப்போதைக்கு தங்களிடம் பத்து மாதப் பெண் குழந்தை ஒன்றிருப்பதாகவும், விரும் பினால் எடுத்துப் போய் வளர்க்கலாம் என்றும் சொன்னார். ஆச்சரியத்திலும் சந்தோஷத்திலும் திக்கு முக்காடிப் போனார்கள் இருவரும். வரங்கொடுக்கும் தேவதையாய்த் தெரிந்தாள் அவள்.
அவர்களின் முந்திய அனுபவங்களுக்கு முற்றிலும் மாறாக மளமளவென்று காரியங் கள் நடந்தேறின. ஒரே மாதத்தில் குழந்தை இவர்களின் கைகளுக்கு வந்து விட்டது. அவர்களின் பராமரிப்பிற்கென்று மிகவும் குறைவான பணமே கேட்டார்கள். முத்துப்பாண்டி கேட்டே விட்டான் - ஏன் இத்தனை குறைச்சல்? அரசாங்கம் நிர்ணயித்த தொகையே இதை விடவும் அதிக மாயிற்றே? சிரித்துக் கொண்டே சொன்னார்கள் “எங்களுக்குப் பணம் பெரிசில்லை; குழந்தை சிறப்பாக வளர வேண்டும் அவ்வளவே…..” மரியபுஷ்பம் அழுதே விட்டாள்.
குழந்தைக்கு சில்வியா என்று பெயர் சூட்டினார்கள். முத்துப்பாண்டி தான் இந்தப் பெயரைப் பரிந்துரைத்தான். “பேரு ரொம்ப நல்லாருக்கே! எங்கருந்துப்பா புடிச்ச, இண்டர்நெட்ல ருந்தா... ” என்று மரியபுஷ்பம் கேட்டாள். ”அசோகமித்ரன் இந்தப் பேர்ல ஒரு சிறுகதை எழுதியிருக்கார்; அப்புறம் மேலை நாட்டுல சில்வியாபிளாத்துன்னு ஒரு பெரிய எழுத்தாளர் இருக்கார்....” என்றான் அவன். எப்படியோ பெயர் அவளுக்கும் ரொம்பப் பிடித்திருந்தது.
குழந்தையை தத்தெடுத்த போது மரியபுஷ்பம் ஒரு மெட்ரிக்குலேசன் பள்ளியில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியையாக வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். முதலில் வேலையை விடுகிற எண்ண மெல்லாம் இல்லை அவளுக்கு. வேலைக்குக் கிளம்பும் போது சில்வியாவை ஒரு கிரீச்சில் விட்டு விட்டு சாயங்காலம் வேலை முடிந்து திரும்பும் போது மீண்டும் வீட்டிற்குத் தூக்கிக் கொண்டு வருவதற்கு ஏற்பாடெல்லாம் பண்ணி வைத்திருந்தார்கள். குழந்தையை வீட்டிற்கு கொண்டு வந்த தினத்தில் அவள் முத்துப்பாண்டியிடம் கேட்டாள்.
“இவ்வளவு நாள் கழிச்சு கடவுள் நமக்கொரு குழந்தை குடுத்துருக்காரு; பேசாம நான் வேலைய விட்டுட்டு வீட்லருந்து குழந்தைய வளர்க்கட்டுமாப்பா? என் சம்பளம் இல்லாம நீ சமாளிச்சுடுவியா…?” முத்துப்பாண்டியும் உடனே சம்மதித்தான். அவனும் சில நாட்கள் விடுமுறை போட்டுவிட்டு சில்வியாவுடனே இருந்தான்.
சில்வியாவை வீட்டிற்கு கொண்டு வந்த தினத்தன்று அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் எல்லோரும் ஆர்வமாய் வந்து வந்து பார்த்தார்கள். “என்ன ஆன்ட்டி குழந்தை இவ்வளவு குட்டியூண்டா இருக்கு? பதினோரு மாசக் குழந்தை மாதிரியே இல்லையே!” என்றாள் பக்கத்து வீட்டு செல்வி. அப்போது சில்வியா மிகவும் எடை குறைவாகவே இருந்தாள். எப்படியும் தன்னுடைய சிரத்தையான பராமரிப்பில் அவளை நன்றாக தேற்றி விட முடியும் என்று நம்பினாள் மரியபுஷ்பம்.
முதல் சில நாட்கள் சில்வியா ரொம்பவும் சமர்த்தாய் இருந்தது. சாப்பாடு கொடுக்கும் போது சாப்பிட்டது. படுக்கை விரித்து வைத்து விட்டு போய், படுத்துக்கோ என்று சொன்னால் போய் படுத்துக் கொண்டது. அழுகை என்பதே அநேகமாய் இல்லை. மரியபுஷ்பமும் முத்துப்பாண்டியும் மாறி மாறி செல்லங் கொஞ்சியதாலோ என்னவோ அப்புறம் வந்த நாட்களில் தான் ரொம்பவும் அலும்பு பண்ணத் தொடங்கி விட்டது.
பாதி இராத்திரி வரைக்கும் வாய்மூடாமல் அழுகிறது - அதுவும் தூங்காமல், மற்றவர்களையும் தூங்க விடாமல். மரியபுஷ்பத்தின் மடியில் படுத்தால் தான் தூங்குவேனென் கிறது. ஆழ்ந்து தூங்குகிறதே என்று படுக்கையில் போட்டால் விழித்துக் கொண்டு வீறிடுகிறது. விழித்திருக்கும் நேரமெல்லாம் தூக்கி வைத்திருக்கச் சொல்கிறது. கீழே இறக்கி விட்டால் கத்தி ஊரைக் கூட்டுகிறது. வீடு முழுவதும் விளையாட்டுச் சாமான்களும் பொம்மைகளுமாய் வாங்கி நிறைத்திருக்கிறார்கள். ஆனால் சில்வியா எதையும் சட்டை செய்வதே இல்லை. அது எப்போதும் தானுண்டு தன் அழுகை உண்டு என்றே இருக்கிறது.
சாப்பாட்டு விஷயத்தில் இன்னும் விசித்திரமாய் நடந்து கொண்டது. என்ன கொடுத்தாலும் சாப்பிட்டது; சந்தோஷமான விஷயம் தான். ஆனால் சாப்பிடுவதையும் அழுவதை யும் தவிர்த்து வாழ்க்கையில் எதுவுமே இல்லை என்பது போல் நடந்து கொண்டது தான் மரியபுஷ் பத்தை பயமுறுத்தியது. குழந்தைத் தனம் கொஞ்சமும் இல்லாமல் பசியே அடங்காமல் கொடுக் கக் கொடுக்க சாப்பிட்டுக் கொண்டே இருந்தது. வயிறு பலூன் மாதிரி உப்புவதைப் பார்த்து மரிய புஷ்பமே நிறுத்தினால் தான் உண்டு. அப்படியும் சாப்பாடு கொடுப்பதை நிறுத்தியவுடன் பயங்கர மாய் அழுதது.
டாக்டரிடம் ஆலோசனை கேட்டால் பிரச்னையின் வீரியம் புரியாமலே “குழந்தை தானே எவ்வளவு சாப்பிடப் போகுது; தாராளமாக் குடுங்க....” என்றார். அப்படியும் ஒருநாள் அபரிமிதமாய்க் கொடுத்து அன்றைக்கு இராத்திரியெல்லாம் வாந்தி எடுத்து இவர்களை பயமுறுத்தி விட்டது. டாக்டரிடம் பதறியடித்துத் தூக்கிக் கொண்டு போனால் அவர் பரிசோதித்து விட்டு “கவலைப் படுறதுக்கு ஒண்ணுமே இல்ல; வாந்தி எடுக்குறதெல்லாம் குழந்தையோட வாழ்க்கையில ரொம்ப சகஸம்...” என்று சொல்லி அனுப்பி விட்டார்.
அதைவிட கொடுமை; எவ்வளவு சாப்பிட்டும் சில்வியா நாளுக்கு நாள் மெலிந்து எடை குறைந்து கொண்டே வந்தாள். டாக்டரோ “குழந்தை எல்லாவிதத்திலும் நார்மலா இருக்கு.... எடை குறைவு என்பதெல்லாம் இந்த வயதில் ஒரு பொருட்டே இல்லை; மேலும் எடை மெஷினில் கூட வித்தியாசங்கள் இருக்கும்....” என்றார். மரியபுஷ்பத்தின் நச்சரிப்புக்கு ஆற்ற மாட்டாமல் டயட்டீசியனைப் பார்க்கச் சொல்லி பரிந்துரை சீட்டுக் கொடுத்தனுப்பினார்.
“இந்த டாக்டருக்கு தடுப்பூசி போடுறதத் தவிர்த்து வேறதுவும் தெரியாது போலருக்குப்பா...” என்று அங்கலாய்த்தபடி டயட்டீசியனைப் பார்த்தார்கள். அவர் இவள் கொடுக்கிற உணவுகளை யெல்லாம் கேட்டுவிட்டு “போதுமே! தேவைக்கு மேலயே குடுக்குறீங் களே....” என்றவர், “பிறக்கும் போது எடை குறைவாயிருக்கும் குழந்தைகள் ரொம்பவும் மெதுவாய்த் தான் தேறி வரும்....” என்று சொல்லி விட்டார்.
மருத்துவ மனையில் டாக்டருக்காக காத்திருக்கும் தருணங்களில் அங்கு வரும் மற்ற கொழுக் மொழுக்கென்ற குழந்தைகளைப் பார்க்கும் போதும், அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் எல்லாம் குழந்தையை தேற்றுவதற்கென்று ஆளாளுக்கு ஒரு டயட்டை பரிந் துரைக்கும் போதும் மரியபுஷ்பம் ரொம்பவும் உடைந்து போனாள். “சின்னச் சின்ன பிள்ளைங்களெல்லாம் அட்வைஸ் பண்ற மாதிரி நம்ம நெலமை ஆயிடுச்சேப்பா....ஒருவேளை உண்மையிலேயே நமக்குத் தான் குழந்தைய வளர்க்கத் தெரியலயோ.... காலம் போன காலத்துல குழந்தைய எடுத்துட்டு வந்துட்டோமோ..” என்று பொங்கிப் பொங்கி அழுதாள்.
அதைவிட தத்தெடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக சில்வியாவை நீதிபதியிடம் காண்பிப்பதற்காக கோர்ட்டுக்குக் கொண்டு போன போது அங்கு வந்திருந்த குழந்தைகள் இல்லத்தின் சகோதரி “என்னம்மா குழந்தை இவ்வளவு மெலிஞ்சு போச்சு; கொஞ்சம் பார்த்துக்கங்கம்மா.....” என்ற போது மரியபுஷ்பத்தை சமாதானப் படுத்தவே முடியவில்லை. அன்றைக்கெல்லாம் அழுது கொண்டே இருந்தாள்.
“ஏங்க, குழந்தைய திரும்ப வாங்கிக்கு வாங்களோ?” என்று முதலில் பயந்து பயந்து பேசியவள், அப்புறம் “வேணுமின்னா நமக்கு குழந்தைய வளர்க்கத் தெரியலேன்னு நாமளே சில்வியாவத் திருப்பிக் கொண்டு போய் குடுத்துட்டு வந்துடலாமாப்பா....” என்று புலம்பத் தொடங்கி விட்டாள். முத்துப் பாண்டிக்கு ரொம்பவும் பயமாகி விட்டது இவளுக்கு ஏதும் ஆகிவிடுமோ என்று.
பத்து மாசத்திலேயே குழந்தைகள் பேசத் தொடங்கி விடுமென்று ஒரு பத்திரிக்கையில் வாசித்து விட்டு சில்வியாவிற்கு பேச்சுக் கற்றுக் கொடுக்கத் தொடங்கினாள் மரியபுஷ்பம். அதுவும் அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. கொஞ்சம் சிரமப் படுத்தினாலும் செய்கைகளை ஓரளவிற்கு சீக்கிரமே கற்றுக் கொண்டது. முத்துப்பாண்டி வெளியிலே கிளம்பும் போது கைகளை வீசி டாடா காண்பித்தது. ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு....’ என்று பாடினால் முதுகை முன்னும் பின்னும் வளைத்து ஆடியது. ‘நிலா நிலா ஓடிவா....’ என்றால் விரல்களை நீட்டி மடக்கி நிலவை அழைத்தது. ஆனால் பேசுவதற்கு வார்த்தைகள் தான் உருப்பெறவே யில்லை. ஏய்...ஆ...ஊ....என்று சத்தம் மட்டுமே கொடுத்தது.
என்னதான் மழலைச் சொல் இனிதென்று வள்ளுவர் சொல்லி இருந்தாலும் வார்த்தைகளற்ற மழலை மிழற்றலை எத்தனை நாட்களுக்கு ரசிக்க முடியும்! மரியபுஷ்பம் பொறுமை இழந்தாள். மடியில் போட்டுக் கொண்டு தாத்தா, அத்தை என்ற எளிதாய் நாக்குப் புரளும் வார்த்தைகளைக் கூட எத்தனை தரம் சொன்னாலும் திருப்பிச் சொல்ல எந்த முயற்சியும் செய்யாமல் முரண்டு பிடித்தது; அழுதது; அவளின் மடியிலிருந்து இறங்கிப் போகத் தொடங்கியது. மரியபுஷ்பம் ஆசிரிய அவதாரம் எடுத்தாள். ஆம்! குழந்தையை அடித்துச் சொல்லிக் கொடுக்க முயற்சித்தாள்.
“எதுக்காகவும் குழந்தைய அடிக்காதம்மா.....” என்று ஆட்சேபித்தான் முத்துப் பாண்டி. “இது போட்டி நெறைஞ்ச உலகம்ப்பா; காலாகாலத்துல எதையும் கத்துக் கலைன்னா நம்ம குழந்தை பின் தங்கிடுமோன்னு பயமா இருக்குப்பா...அப்புறம் எனக்கு வாய்ச்சது மாதிரி ஒரு உதவாக்கரை வாழ்க்கை தான் இதுக்கும் கிடைக்கும்....” என்றாள் மரியபுஷ்பம். முத்துப்பாண்டிக்கு சுருக்கென்றது. இருவரும் சண்டை போட்டுக் கொள்ளத் தொடங்கினார்கள். சில்வியா இன்னும் பயந்து போய் இருவரையும் வெறித்துப் பார்த்தது.
இரண்டு நாட்களுக்கு முன்னால் முத்துப்பாண்டி இரவு வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பியபோது வீடு வழக்கத்திற்கு மீறிய அமைதியில் உறைந்திருந்தது. எப்பவும் இவன் கேட்டைத் திறக்கும் ஓசை கேட்ட வுடனேயே சில்வியா ஆ..ஊ...என்று சத்தமிட்டபடி குதித்துக் கொண்டு ஓடி வரும். அன்றைக்கு வரவில்லை. ஒருவேளை தூங்கி யிருக்கும் என்று நினைத்தபடி கதவைத் திறக்கவும், கதவிற்குப் பின்னால் ஒடுங்கிப் போய் உட்கார்ந்திருந்தது இவன் காலைக் கட்டிக் கொண்டு கதறி அழுதது. தூக்கிக் கொண்டு மரியபுஷ்பத்தைத் தேடினால் அவள் இன்னொரு அறையில் படுத்துக் கிடந்தாள்.
“என்னப்பா ஆச்சு, குழந்தை ஏன் இப்படி கத்துது?”
“குழந்தையா இது! பிசாசு.... இத்துனூன்டு இருந்துக்கிட்டு இதுக்கு என்னமா கோபம் வருது தெரியுமா? மடியியில போட்டு சொல்லிக் குடுத்துக்கிட்டிருக்கேன்; தொடையில கடிச்சு வச்சுட்டு எழும்பிப் போகுதுப்பா....அதான் செமத்தியா வெளுத்துட்டேன்; சாயங்காலத் திலருந்து சாப்புடுறதுக்கும் ஒண்ணும் குடுக்கல.... தின்னுட்டு தின்னுட்டு மங்குனி மாதிரி நிக்குது; சத்தும் புடிக்க மாட்டேங்குது! மண்டையிலயும் ஒண்ணும் ஏற மாட்டேங்குது... வயித்தக் காயப் போட்டாத்தான் சரியா வரும்....”
“என்னப்பா இதெல்லாம்? குழந்தை கூடப் போயி சரிக்கு சரியாய்......”
“நீ சும்மா கெட; ஒனக்கு ஒரு எளவும் தெரியாது... நீ காலையில கிளம்பிப் போனா இராத்திரி தான் திரும்ப வர்ற; நான் தான் இது கூட மல்லாடுறேன். அதால என் இஷ்டத்துக்கு வளக்க விடு, இல்லையின்னா உன் கூடவே தூக்கிட்டுப் போ.....”
“உனக்குத் தான் குழந்தையோட சைக்காலஜியே புரியல; சும்மா அடியாத மாடு படியாதுன்ற கற்காலத்து கான்செப்டலயே இருக்காத... பொறுமையா சொல்லிக் குடு; எப்ப கத்துக்குதோ அப்ப கத்துக்கட்டும்; அவசரம் ஒண்ணுமில்ல; இத வளர்க்குறத விட வெட்டி முறிக்கிற வேலை எதுவும் உனக்கில்ல; புரியுதா....” முத்துப்பாண்டி கத்தவும் கோபித்துக் கொண்டு போய் படுத்துக் கொண்டாள்.
அவளின் ஈகோ காயம் பட்டு விட்டது போலும்; அது தான் அவசர அவசரமாய் நாளையிலிருந்து வேலைக்குப் போயே தீர்வேன் என்று பிடிவாதம் பிடிக்கிறாள். வீரமணியிடம் சொன்ன போது “அவங்க பிஸியா வேலை பார்த்துக்கிட்டு இருந்தவங்க இல்லியா? அதான் அவங்களால வீட்டுல அடைஞ்சு கெடக்க முடியல... அவங்க வேலைக்குப் போகட்டும்; நீங்க ஒரே ஒரு வாரத்துக்கு கிரீச்சுல ஏற்பாடு பண்ணுங்க... நான் ஊர்லருந்து ஒரு வயசான அம்மாவ வரவழைக்கிறேன்; அவங்க உங்க வீட்டோட தங்கி குழந்தையப் பார்த்துக்கட்டும்....” என்றார்.
முத்துப்பாண்டிக்கும் அதுதான் சரி என்று பட்டது. அவன் அறிந்திருந்த ஒரு கிரீச்சில் பேசினான். அவர்களும் “கொண்டு வந்து விடுங்கள்; பார்த்துக்கிறோம்.....” என்றார்கள். அலுவலகத் தில் பெர்மிஷன் போட்டுவிட்டு கொஞ்சம் சீக்கிரமே வீட்டிற்குப் போனான். மரியபுஷ்பம் குழந்தை யுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். அது ஷோபாவிற்குப் பின்னால் ஒளிந்து கொள்ள இவள் அங்கும் இங்கும் தேடுவதாக “எங்க...எங்க... என் செல்லத்த காணல!” என்று பாவணை பண்ணி விட்டு அப்புறம் ”ஏய்... குட்டி இங்கருக்கு...” என்று கண்டுபிடித்தாள். அப்புறம் சில்வியா இன்னொரு புது இடத்தில் ஒளிந்து கொள்ள அவர்களின் விளையாட்டு தொடர்ந்தது.
இவனைப் பார்த்ததும் விளையாட்டை நிறுத்திவிட்டு இருவரும் இவனிடம் வந்தார்கள். “என்னப்பா, இன்னைக்கு இவ்வளவு சீக்கிரம்?” என்றாள்.
“சில்வியாவப் பார்த்துக்கிறதுக்கு நான் வேற ஏற்பாடு பண்ணீட்டேன்; நாளையிலருந்து நீ வேலைக்குப் போய்க்கலாம்.....” என்றான் முத்துப்பாண்டி.
“இதச் சொல்றதுக்கா இவ்வளவு சீக்கிரம் வீட்டுக்கு வந்த! நான் என் முடிவ காலை யிலேயே மாத்திக் கிட்டாச்சு..... இனிமே எப்பவுமே நான் வேலைக்குப் போகப் போறதில்ல.....”
“ஏன் என்னாச்சு? உன்னோட ஸ்கூல் பசங்க மேல கருணை வந்து பாவம் பொழைச்சுப் போகட்டுமின்னு இந்த முடிவுக்கு வந்துட்டியா.....” கிண்டல் பண்ணினான்.
“ஏய்.. நீ உதை படப் போற! என் முடிவ மாத்துனதுக்குக் காரணம் நம்ம பொண்ணு....” என்றபடி சில்வியாவை அழைத்து “ குட்டி, நான் யாருன்னு அப்பாட்டச் சொல்லு...” என்றாள். சில்வியா உதடை மடித்து அழுத்தம் திருத்தமாக “அம்மா...” என்றது.
-- முற்றும்
(நன்றி : கல்கி 11.01.2009)

Wednesday, December 16, 2009

கவிதை: எதுவுமில்லை புதிதாய்.....

எதுவுமில்லை புதிதாய்
எல்லாம் என்றைக்கும் போலத்தான்
தினசரிகளின் ஒரே மாதிரியான சுழற்சி!

எல்லாச் செலவுகளும் முதல் தேதிக்கும்
எல்லாக் காரியங்களும்
விடுமுறை தினங்களுக்குமாய்
தள்ளிப் போடப்பட்டு
தள்ளிப் போடப்பட்டு
நாட்கள் நகரும் நத்தைகளாய்.......

எப்போதும் கண்களில் கொஞ்சம்
தூக்கம் மிச்சமிருக்கிறது;
முழுசாய் தூங்கி விழித்த
இரவென்று எதுவுமே இல்லை;
கனவுகளற்ற தூக்கம்
சாத்தியப் படுவதில்லை ஒருநாளும்.....!

கனவுகளில் மட்டும்
பச்சையம் இருந்திருந்தால்
உலகிற்கே தீர்ந்து போயிருக்கும்
உணவுப் பிரச்சினை!

இரைச்சலாகிப் போனது
இயல்பு வாழ்க்கை;
இயந்திரங்களின் உறுமலில்
கறுப்பாய் விடிகின்றன நாட்கள்!

அழுக்குத் தேய்த்துக் குளிக்க அவகாசமில்லை;
மென்று தின்ன நேரமில்லாமல்
விழுங்கிப் போகிறோம் உணவுகளை;
வயிறே பிரதானமான வாழ்விலும்
பிந்தித்தான் போகின்றன
சாப்பாட்டு வேளைகள்!

ஓடுகிறோம்; ஓடுகிறோம்;
ஓடிக்கொண்டே இருக்கிறோம்....
எதற்கென்று தெரியவில்லை;
எங்கென்றும் புரிவதில்லை;
ஓட்டம் மட்டும் தொடர்கிறது
வெறிகொண்ட வேகத்தில்
விழுமியங்களை விழுங்கியபடி.....!

Tuesday, December 15, 2009

கவிதை:கூண்டுக்கிளி

கூண்டிலடைத்த கிளி ஒன்றை
கொண்டு வந்து மாட்டினார்கள்
என் வீட்டு முற்றத்தில்.....

வயதின் வலிகளோடும்
புறக்கணிப்பின் இரணங்களோடும்
புரண்டு கொண்ண்டிருந்த எனக்கு
கிளியின் வருகை
களிப்பூட்டுவதாய்த் தானிருந்தது....

எனது இறுமலும் கிளியின் மழலையும்
இசையென இயைந்து போனதும்
சினேகமானோம் சீக்கிரமே!
ஆயினும்.......
எப்போதும் கீச் கீச்சென்றபடி
எதையோ பறிகொடுத்த பாவணையில்
சீக்கிரமே அலையலாயிற்று கிளி!

சின்ன அரவம் கேட்டாலும்
சிலிர்த்து நடுங்கியது;
எலி தேடி அலையும் பூனையின்
புள்ளிக் கண்களின் பசிவெறியோ
கிலி கொள்ளச் செய்தது கிளியை.....

சிறுவர்களின் உயிருள்ள பொம்மையாய்
சின்னஞ் சிறு கிளி!
உண்ணப் பழங்கள்; உறங்கக் கூண்டு
எல்லாம் கிடைக்கிறது; இருந்தும்
விரிந்த வானத்தில் சிறகசைத்துப்
பறந்த சந்தோஷம்
கூண்டுக்குள் கிடைக்குமா கிளிக்கு?
கிராமத்தின் வீதிகளில்
சுதந்திரமாய் சுற்றி அலைந்த
பால்யம் நினைவிலாடிய தெனக்கு!

பறந்து பார்க்கத்தானே கிளி அழகு!
கூண்டுக்குள் அடைத்து இரசிப்பது
குரூரமாயிருந்தது எனக்கு;

பள்ளிக்கும் பணிக்குமாய்
பலரும் கிளம்பிப் போனபின்
கிளியும் நானும் தனித்திருந்த வேளையில்
கூண்டைத் திறந்து வைத்து
பறந்து போக அனுமதித்தேன்;
வெளியே போகாமல் கிளி
வேடிக்கை பார்த்தது என்னை!

ஒருவேளை பயப்படுகிறதோ என்றெண்ணி
ஒளிந்து பார்த்தேன் கொஞ்ச நேரம்!
சலனமில்லை கிளியிடம்;
சாவகாசமாய் உலவியது உள்ளேயே!
வழிமறந்து போயிருக்கலாமென்று
கூண்டுக்குள் கை நுழைத்து கிளி பிடித்து
வெட்டவெளியில் வீசினேன் பறந்து போவென்று.....
தத்தி தத்தி நடந்து
தானே கூண்டிற்குள் நுழைந்து
ஓரத்திற்குப் போய் ஒடுங்கிக் கொண்டது;
வெளியேற்றி விடுவேனென்கிற பயத்தில்
வெடவெடவென நடுங்கி பம்மிக் கொண்டது;

பழகிய சிறை வாசம் பாதுகாப்பாக
பறத்தல் மறந்த கிளிக்கு
விரிந்த வானம் வெறுமையாயிற்றோ!
ஐயகோ....
மனித அவலம் கிளிக்குமா......?

சிறுகதை:கற்பு என்னும் குறும் படத்தின் கதைச் சுருக்கம்

"ஆரம்பிக்கலாமா ஸார்......" என்றான் அரவிந்த். எப்படியாவது முன்னேறி தன்னை நிரூபித்து விடுகிற துடிப்பும் தீவிர தேடலும் நிறைந்த அவன் சினிமாவில் இயக்குனராக முயற்சித்துக் கொண்டி ருப்பவன். முப்பது அல்லது கொஞ்சம் கூடப் போனால் முப்பத்திரண்டு வயதிருக்கலாம் அவனுக்கு.
அவர்களிருந்த அறை மிகவும் சுத்தமாக இருந்தது. அரவிந்தும் இன்னொருவரும் தரையில் ஜமுக்காளம் விரித்து உட்கார்ந்திருக்க, மூலையில் ஒரு கட்டில் மடிப்புக் குலையாத விரிப்புகளுடன் மல்லாந்து கிடந்தது. அரவிந்துடன் அமர்ந்திருந்தவர் வெள்ளை வெளேரென்று தும்பைப் பூப்போல் வேஷ்டியும் சட்டையும் அணிந்து ஐம்பதுகளின் ஆரம்ப வயதிலிருந்தார்.
கண்ணாடி டம்ளரிலிருந்த கறுப்பு திரவத்தில் ஐஸ் கட்டிகளைப் போட்டபடி "நான் கேட்டி ருந்தது இன்னைக்கு கிடைக்கும்ல....." என்றார் அரவிந்திடம். "கண்டிப்பா ஸார். எல்லா ஏற்பாடும் பண்ணீட்டேன்; முதல்ல கதை கேட்ருங்க...." என்றான் அவன்.
"ஊர்ல நான் பாட்டுக்கு மசால்பொடி வியாபாரம் பண்ணிக்கிட்டு செவனேன்னு கெடந்தவன, என்னென்னவோ ஆசையெல்லாம் காட்டி இவ்வளவு தூரம் இழுத்து வந்துட்ட.... குறும்படத்துக்கு பெரிசா என்ன மார்க்கெட் வேல்யூ இருக் குன்னு தெரியல. அவார்ட் ஏதாவது கிடைச்சாத்தான் அசலாவது தேறும். பத்துக்கு மேல ஒரு பைசா கூட செலவழிக்க மாட்டேன் பார்த்துக்க....சரி படத்துக்கு என்ன டைட்டில்....." கொஞ்சம் அசெளகரியமாக உணர்ந்தபடி பேசினார்.
"கற்பு;இரு நிகழ்வுகள்" னு இப்போதைக்கு டைட்டில் வச்சிருக்கேன். கதை சொல்லி முடிச்சதும் வேற டைட்டில்களும் யோசிக்கலாம்...." என்றான். தலையணையை எடுத்து கால்களுக்கு இடையில் அழுத்தி வைத்து, வசதியாய் சுவரில் சாய்ந்து கொண்டு கண்களாலேயே கதை சொல்லத் தொடங்கும்படி சமிக்ஷை செய்தார் அவர்.உடனே அரவிந்த் தொண்டையைச் செருமி கைகளை விரித்துத் தொடங்கினான்.
ஓப்பன் பண்ணதும் ஸ்கிரீன்ல பைவ்ஸ்டார் ஓட்டல் மாதிரி அதீத முகப்பு அழகுடன் ஒரு பில்டிங்கைக் காட்டுறோம். ஆனால் அது ஹோட்டல் இல்லை.ஒரு தொழிற்சாலை.தாம்பரம் தாண்டி செங்கல்பட்டுக்கு மிகச் சமீபத்தில் இருக்கிறது அந்த மல்டி நேஷனல் லெதர் கார்மெண்ட்ஸ் தொழிற்சாலை.பெண்களே அதிகமாய் வேலை பார்க்கும் அங்கு ஒவ்வொரு அங்குலத்திலும் அழகும் சுத்தமும் பளிச்சிடுகிறது.எங்கும் எதிலும் அமெரிக்கத்தனம். கழிவறைகளில் கூட தண்ணீர் டேப்புக்கு பதில் காகிதச் சுருள் வைக்கப் பட்டிருக்கிறது.
எங்கு பார்த்தாலும் கேமாராக்கள் பொருத்தபட்டு ஒவ்வொருவரின் பணியும் தீவிரமாகக் கண் காணிக்கப் படுகிறது. அதனால் தொழிற்சாலையில் எப்போதும் ஒருவிதமான இறுக்கமான சூழலே நிலவுகிறது."டாய்லெட்டுல கூட முழுசா தொறந்து ஒண்ணுக்குப் போகக் கூட பயமா இருக்குடி....கண்ணுக்குத் தெரியாத கேமரா பொருத்தி அதையும் படம் புடிச்சிப் பார்த்துக்கிட்டு இருப்பான்களோஎன்னவோ...."ன்னு கழிவறையில் இரண்டு பெண்கள் பேசிச் சிரித்துக் கொள்கிறார்கள்.
அலுவலகத்திலும் அதே சூழல் தான். இங்கும் பெரும்பான்மை பெண்களும் கொஞ்சூண்டு ஆண்களும் வேலை செய்கிறார்கள்.யாரும் யாரையும் ஸார் என்றோ மேடம் என்றோ அழைக்காமல் பதவிப்பாகுபாடில்லாமல் ஒருவரை ஒருவர் பெயர் சொல்லியே அழைத்துக் கொள்கிறார்கள்.ஆனாலும் மனதளவில் யாரும் யாருடனும் நெருங்காமல் கனத்த இடைவெளிகளுடன் புன்னகையால் மழுப்பியபடி நடமாடுகிறார்கள்.
மதிய உணவு இடைவேளை.டைனிங் ஹாலில் டேபிளுக்கு இரண்டு பேராக உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். சன் டீவியில் செய்தி வாசிப்பு ஓடிக் கொண்டிருக்கிறது. நம்முடைய கதாநாயகி மைதிலியும் - அவளுக்கு 28 வயதிருக்கும்;ஏற்றுமதி இறக்குமதிப் பிரிவில் உதவி மேலாளர் உத்தியோகம் - அவளின் தோழி ஜான்சியும் - அவளுக்கு 25 வயதிருக்கும்;எம்.டி.யின் செக்ரட்டரியாக இருக்கிறாள் - ஒரு டேபிளில் உட்கார்ந்து பேசியபடி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
மைதிலி : என்ன ஜான்சி லன்ச்சுக்குப் போயி பர்கரக் கடிச்சுக்கிட்டு இருக்கிற!அமெரிக்க கம்பெனியில வேலை பார்த்தா அவங்கள மாதிரி சாப்புடனுமா என்ன?
ஜான்சி : அப்படியெல்லாம் ஒண்ணுமில்லப்பா... நேத்து வேலைக்காரி வேலைக்கு வராததால வீட்டுல சமைக்கல.கேண்டீன்ல இதான் இருந்துச்சு.அதான் சாப்பிட்டுத் தான் பார்க்கலா மேன்னுட்டு வாங்கியாந்தேன்.....
மைதிலி தன்னுடைய டிபன் பாக்ஸிலிருந்து சாம்பார் சாதமும் கோஸ் பொரியலும் ஜான்சியின் பிளேட்டில் போட அவள் போதும் போதும் என்று தடுக்கிறாள். டீவியில் செய்தி ஓடுவதை மறுபடியும் போகஸ் பண்ணுகிறோம்.
ஜான்சி : எனக்கே எல்லாத்தையும் போட்டுட்டா அப்புறம் நீ என்னத்த சாப்பிடுவ!
மைதிலி : இதில என்ன இருக்குப்பா.....போன மாசம் கம்பெனியிலருந்து டிஸ்மிஸ் ஆனாளே சுமித்ரா, அவளப் பத்தி ஏதாவது தகவல் தெரிஞ்சுதாப்பா...?
ஜான்சி : பாவம்ப்பா அவ; இன்னும் சரியா வேல அமையலியாம்.தீவிரமாத் தான் தேடிக்கிட்டுரு கிறாளாம். இந்த சீனக்காரன் சம்பளத்த அள்ளி அள்ளிக் குடுக்குறான். சின்னதா தப்புப் பண்ணினாலும் அடுத்த நிமிஷமே எந்த விளக்கத்தையும் கேக்காம உடனே வேலையில இருந்து தூக்கிடுறான். எல்லோரையும் ஒரு வித பயத்துலயே வச்சு, வேலை வாங்குற மேல்நாட்டுக்காரன் டெக்னிக்.
மைதிலி : சுமித்ரா மேல ஒரு தப்பும் இல்ல;குவாலிட்டி டிபார்ட்மெண்ட் பண்ணின குளறுபடிக்கு இவ பலிகடாவாயிட்டா.என்ன செய்றது?
ஜான்சி : சுமித்ராவுக்கு ஆதரவா பேசுனம்னு நம்மளயும் வேலைய விட்டு கடாசிடப் போறாங்க.

சன் டீ.வி.யில் நடிகை குஷ்பு தமிழ் பெண்களின் கற்பு பற்றி தாறுமாறாக கருத்துச் சொன்னதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பெண்கள் தெருவில் இறங்கிப் போராடுவதாகவும் செய்தி சொல்கிறார்கள்.அவர்களின் பேச்சு கற்பு பற்றித் திரும்புகிறது.

மைதிலி : இந்த குஷ்பு சும்மா கிடக்காம கற்பு பத்தி ஏதோ கருத்துன்னு சொல்லி வைக்க அதுக்கு கோயில் கட்டுன தமிழ்நாட்டு ஜனங்க இப்ப வெளக்க மாத்த எடுத்துக்கிட்டுப் போறாங்களே, குஷ்புவுக்கு இதெல்லாம் தேவையா?
ஜான்சி : நம்மூர்லதான் எல்லாத்தையும் அரசியலாக்கிடுவாங்களே! இதுல குஷ்பு என்ன செய்யும் பாவம்? கற்காலத்துலருந்து கம்யூட்டர் காலம் வரைக்கும் பெண்ணோட ஒடம்பு தான் பிரதானம். என்ன அசிங்கம் இது!
மைதிலி : அப்படீன்னா நமக்கு கற்பு, கலாச்சாரம் எதுவும் தேவை இல்லைங்குறியா? இந்திய வாழ்க்கையோட ஆணிவேரையே கிள்ளி எறிஞ்சுட்டு அப்புறம் நாம என்ன வாழ்றது!
ஜான்சி : கற்புங்குற கான்செப்டே மிகப் பெரிய கற்பிதம். ஆணாதிக்க சிந்தனை பெண்களைத் தன்னோட சொத்தா அடிமையா ஆக்குறதுக்காக உருவாக்கி உலவ விட்ட எத்தனையோ அழகான மாய விலங்குகள்ல கற்புங்குறதும் ஒண்ணு.நம்ம உடம்புல நமக்கே உரிமை இல்லாம ஆண் அதிகாரம் செலுத்துறது எவ்வளவு பெரிய கொடுமை! இதுலருந்து முதல்ல வெளிய வரணும்.....
மைதிலி : அப்ப சோரம் போகுறது தான் பெண் விடுதலைங்குறியா?
ஜான்சி : இப்படி விபரீதமாப் புரிஞ்சுக்கிட்டா நானென்ன செய்றது! பெண்கள் உடம்பக் கடந்து வரணும்னு சொல்றேன்.அதிகமான எண்ணிக்கையில பெண்களப் புணர்வதே ஆண் மைன்னும் வீரமின்னும் நம்பி அலை பாய்கிற ஒரு சமூகத்துல பெண்ணுக்கு மட்டும் கற்புங்குற கவசமும் அதனால நேர்கிற உயிர்ப்பலிகளும் எதுக்குன்னு கேட்குறேன்! வெளிப்படையா வெக்கமில்லாம ரெண்டு மனைவிகளோட வாழ்கிற தலைவர்கள் எல்லாம் தமிழ்க்கற்பு பற்றி தாளிக்கிறது தேவையான்னு கேட்குறேன்...சரி விடு.....நாம ஏன் வீணா சண்டை போடணும்...இன்னும் எரநூறு வருஷம் போனாலும் கற்பு, கருமாந் திரங்கள்லருந்து மக்கள இவங்க விடுபட விடப்போறதில்ல...நம்ம தமிழ் டைரக்டர் களும் கைபடாத, கன்னி கழியாத விதவைகளுக்கு மட்டுமே மறுமணம் செய்து வைக் கிற புரட்சிகளும் மாறப் போறதில்ல....
அப்போது மைதிலியின் கைத்தொலைபேசி அலறி திரையில் 'காலிங் எரிக் ஸாங்' என்று மின்னுகிறது. மைதிலி ஜான்சி யிடம், "நம்ம எம்.டி.ப்பா...இவன் எப்ப சென்னைக்கு வந்தான்?" என்று சொல்லியபடி போனை ஆன் பண்ணி "எஸ் எரிக்......ஓகே.....ஓகே....ஷ்யூர்..." என்று பேசிவிட்டு போனைத் துண்டிக்கிறாள்.
அரவிந்த் கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொண்டபடி தயாரிப்பாளரின் முகம் பார்த்தான். "கொஞ்சம் சாப்டுறியா....?" என்று கிளாசை நீட்டினார். "பழக்கமில்லீங்க....."என்றபடி அவன் கதையைத் தொடரப் போனான்.
"ஒரு நிமிஷம் தம்பி..." என்றபடி அவர் குறுக்கிட்டார். "ரெண்டரை மணி நேர சினிமாவிலேயே படம் ஆரம்பிச்ச அஞ்சு நிமிஷத்துக்குள்ள கதை எதை நோக்கிப் போகுதுன்னு தெளிவாச் சொல்லி ஒரு எதிபார்ப்ப ஏற்படுத்தணும். இல்லைன்னா படம் பார்க்கிறவன் வெளில கிளம்பிப் போயிடுவான். நீ இன்னும் 'நாட்'டுக்கே இன்னும் வரலயே! சீக்கிரம் சட்டுப்புட்டுன்னு சொல்லுப்பா...."என்றார். "ட்ரீட்மென்ட்ல சரி பண்ணீடலாம் ஸார்...." என்று சமாதானப் படுத்தியபடி அரவிந்த் கதை சொல்லலைத் தொடர்ந் தான்.
மைதிலி எம்.டி.யிடம் போனில் பேசி முடிக்கவும் அவளிடம் ஜான்சி கேட்கிறாள்.
ஜான்சி : இப்பல்லாம் இந்த சீனாக்காரன் ஷெட்யூலே தெரியுறதில்ல....அமெரிக்காவுல இருக்கான்னு நெனச்சிக்கிட்டு இருந்தா திடீர்னு இங்க வந்து நிக்கிறான்.என்னவாம் அவனுக்கு?
மைதிலி : காலைல தான் சென்னைக்கு வந்தானாம். சாயங்காலம் கண்டிப்பா என்னைப் பார்க்கணுமாம். கொஞ்சம் தாமதமானாலும் காத்திருந்து பார்த்துட்டுப் போகச்சொன்னான். கஸ்டம் கிளியரன்ஸ் சம்பந்தமா என்கிட்ட ஏதோ பேசணுமாம்.
ஜான்சி : நானே கேட்கணும்னுருந்தேன். இப்பல்லாம் கஸ்டம்ஸ¤ல நம்ம கம்பெனி புராடெக்ட் ரொம்பத் தேங்குது போலருக்கே! பேக்டரில ஸ்டோர் கொள்ளாம புரொடக்ஷன் ஆயிட்டு இருக்கு. பொருள் வந்து சேரலைன்னு ஜெர்மனிலருந்தும் ஜப் பான்லருந்தும் போன் மேல போனாப் போட்டு ஒரே கொடச்சல். உங்க டிபார்ட் மென்ட்ல என்னதான் நடக்குது?
மைதிலி : அய்யோ! அதை ஏன் கேக்குறப்பா.....கஸ்டம்ஸ¤ல இப்ப முருகதாஸ¤ன்னு ஒரு புது ஆபீஸர் வந்துருக்கான்.ஒரே கொடச்சல்ப்பா. அது சரியில்ல; இது சரியில் லன்னு நொண்டிக் காரணங்களாச் சொல்லி கிளியரன்ஸ் சர்ட்டிபிகேட் தராம வேணும்னே இழுத்தடிக்கிறான். சரக்கு தேங்குறதால டேமரேஜ் சார்ஜும் எகிறிடுது.....ஆபீஸ்ல என்னடான்னா எனக்குத்தான் சாமர்த்தியம் போதாதுன்றாங்க....நானென்ன சினிமால மாதிரி கவர்ச்சி டான்ஸ் ஆடியா கஸ்டம்ஸ் ஆபிஸர்கள கவுக்க முடியும்?
ஜான்சி : (சிரிக்கிறாள்) அவனுக்கு என்ன தான் வேணுமாம். ஏதாவது பெருசா எதிர்பார்க்குறானோ என்னவோ?
மைதிலி : அதையும் சொல்லித்தொலைக்க மாட்டேன்றான்.புரோக்கர் மூலம் பணமும் அனுப்பிப் பார்த்தோம். திருப்பி அனுப்பிட்டான்.
ஜான்சி : கழுதைய விட்டுத் தள்ளு. அதுக்கு மேல நாம தான் என்ன பண்ண முடியும்? இனிமே எரிக் பார்த்துக்குவான். நம்மகிட்ட ஆயிரத்தெட்டு ரூல்ஸ் பேசுறவன்கள் வெளிநாட்டுக்காரன் போயி தாட்பூட்னு இங்கிலீஸ¤ல நாலு வுடுவுட்டா வாலச் சுருட்டிக்கிட்டு நீட்டுன எடத்துல கையெழுத்துப் போட்டு சலாமும் போட்டு அனுப்பிடுவான்கள். நம்ம அடிமை புத்தி அவ்வளவு சீக்கிரம் போகுமா என்ன! இன்னைக்கு உனக்கு லேட்டாகும் போலருக்கே....உன் பொண்ண நீ போற வரைக்கும் யாரு பார்த்துக்குவா?
மைதிலி : அது பிரச்னையில்லப்பா....ஸ்கூல் முடிஞ்சு டியூஷனுக்குப் போயிடுவா.டியூஷன் முடிஞ்சு அவள் வீட்டுக்குப் போறதுக்குள்ள சுப்புலட்சுமின்னு ஒரு வேலைக்காரி வந்து என் பொண்ணப் பார்த்துக்குவா...அவள மாதிரி ஒரு வேலைக்காரி பட்டணம் முழுக்க சல்லடை போட்டுத் தேடுனாலும் கிடைக்க மாட்டா.வேலை நறுவிசா அத்தனை சுத்தமா இருக்கும். ஒரு வம்பு தும்பு கிடையாது. பொரணி கிடையாது.பொய் கிடையாது; திருட்டுக் கிடையாது. கொஞ்ச வயசுக்காரி தான். சுறுசுறுப்பா பம்பரமா உழைப்பா.பகல்ல ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனில சித்தாளா வெலைக்குப் போறா. சாயங்காலம் எங்க வீட்டு வேலை. வேலைக்காரி விஷயத்துல நான் ரொம்ப லக்கி.....
அப்படியே கட் பண்ணி , அடையாரில் கட்டிட வேலை மும்முரமாய் நடைபெறும் ஒரு இடத்தைக் காண்பிக்கிறோம். கான்கிரீட் வேலை நடந்து கொண்டிருக்கிறது. சாரத்தில் பெண்களும் ஆண்
களும் நின்றபடி கான்கிரீட் நிரம்பிய சட்டியை ஒவ்வொருத்தராய் கை மாற்றி அது மேலே பய
ணித்துக் கொண்டிருக்கிறது. பொழுது இருள்கிறது. ஒரு சாரத்தில் நின்று கொண்டிருக்கும்
சுப்புலட்சுமி பதட்டமாக இருக்கிறாள்.
சு.லட்சுமி : நாழி ஆகுது மேஸ்திரி. நான் கெளம்பனும். என் இடத்துக்கு யாரையாவது அனுப்பு.
மேஸ்திரி : உன்னோட இதே ரோதனையாப் போச்சு. நீ என்ன ஆபீஸர் உத்தியோகமா பார்க்குற! ஒரு நாள் போல அஞ்சு மணிக்கு கிளம்ப முடியுமா? இன்னைக்கு ஆள் கம்மி. கான்கிரீட் வேலையை பாதில நிறுத்த முடியாது. அதால பேசாம வேலையப் பாரு.இல்லைன்னா எனக்கு கெட்ட கோவம் வந்துரும் பார்த்துக்க.....
ஒரு ஜோடிக் கண்கள் சுப்புலட்சுமியை வெறித்துக் கொண்டிருக்கின்றன.வேலை தொடர்கிறது.
மீண்டும் லெதர் கார்மென்ட் தொழிற்சாலை. எல்லோரும் வேலை முடிந்து கிளம்புகிறார்கள்.
ஜான்சி : பை மைதிலி. நான் கெளம்புறேன். எரிக் வந்தாச்சு. இந்த ஏரியா கவுன்சிலர் ஏதோ டொனேஷன் விஷயமாப் பேசிக்கிட்டிருக்கிறார். அவர் வெலிய வந்ததும் நீ உள்ள போயிரு. ஒன்னும் ஒர்ரி பண்ணிக்காத. எரிக் எம காதகன்.அவன் கிட்ட உன் பிரச்னைகள மட்டும் தெளிவா சொல்லீடு.எதையும் ஈஸியா சமாளிப்பான்.
இன்னும் கொஞ்சம் இருள்கிறது. மைதிலி கதவைத்தட்டிவிட்டு உள்ளே போகிறாள். டை கட்டிய
ஒடிசலான சீனன் நெடுநெடுவென நின்று கொண்டிருக்கிறான். இருவரும் ஆங்கிலத்தில் பேசிக் கொள்கி றார்கள். ஒரு ஃபைலை விரித்து சில பேப்பர்களைக் காட்டி அவள் விளக்கங்கள் சொல்ல அவன் குட் என்கிறான்.இனி அவர்கள் பேசிக் கொள்வது பின்னணியில் தமிழில் ஒலிக்கிறது.
மைதிலி : நானும் எவ்வளவோ போரடிப் பார்த்துட்டேன் எரிக். அந்த கஸ்டம்ஸ் ஆபிஸர் வேணும்னே இழுத்தடிக்கிறார்.
எரிக் : எனக்குத் தெரியும் அது. நீ மிக நல்ல வேலை செய்திருக்கிறாய். அதில் எனக்கு கொஞ்சமும் சந்தேகமில்லை. நானும் முருகதாஸிடம் பேசி விட்டேன். அவனும் நம் பொருட்களை எந்த கால தாமதமும் செய்யாமல் உடனுக்குடன் கிளியர் செய்ய ஒத்துக் கொண்டிருக்கிறான். அதற்காக அவன் ஒரு சிறு உதவியை உன்னிடமிருந்து எதிர்பார்க்கிறான்.
மைதிலி : (சந்தோஷமாக) செய்துடலாம் எரிக். என்ன வேணுமாம்?
எரிக் : சிம்பிள். முருகதாஸ் உன் மேல் மிகவும் ஆசையாக இருக்கிறானாம். ஒரே ஒரு இராத்திரி நீ அவனைச் சந்தோஷப் படுத்த வேண்டு மென்கிறான். அவ்வளவுதான். நீயும் அவனும் நாளை ஊட்டி கிளம்புவதற்கான எல்லா ஏற்பாடுகளும் செய்து விட் டேன். ஓ.கே.
மைதிலி : (அதிர்கிறாள். கொஞ்ச நேரம் எதுவும் பேசாமலிருக்கிறாள்.அப்புறம் தீர்மானமாகப் பேசுகிறாள்.) நோ எரிக். ஒரு நாளும் இதுக்கு நான் சம்மதிக்கவே மாட்டேன். உங்க கல்ச்சர்ல வேணும்னா இது ரொம்ப சாதாரணமா இருக்கலாம். யாரும் யாரோடயும் போய் படுத்துக்கிறது எங்க கல்ச்சர்ல சாத்தியமே இல்ல. வெரி ஸாரி.
எரிக் : நோ ப்ராப்ளம் அட் ஆல். உன்னை நான் ஒருபோதும் வற்புறுத்தவே மாட்டேன். நாளைக்கு வந்து உன் ராஜினாமாக் கடிதம் கொடுத்துட்டு அக்கவ்ண்ட்ட செட்டில் பண்ணிக்கோ. ஆனா ஒரு விஷயம் தெளிவா தெரிஞ்சுக்கோ. நம்ம நிறுவனத்துல எவ்வளவு வெளிநாட்டுக் காரங்க வேலை செய்றோம்! யாராவது உன்கிட்ட தப்பான எண்ணத்தோட அணுகியிருக்கமா? பதில் சொல்லு மைதிலி.......
மைதிலி : நிச்சயமா இல்ல எரிக்.
எரிக் : உன்னை படுக்கைக்கு கூப்புடுறது உன்னோட தேசத்துக்காரன் தானே! காதலையும் காமத்தையும் எதுக்கோ விலையா கேட்குறது உங்க ஆண்களோட மனோபாவந்தான். இந்த ஏற்பாட்டுல எனக்குமே உடன்பாடில்லை. ஒரு இந்தியப் பெண்ணிற்கு இது எத்தனை வலி மிகுந்த அனுபவம்னு எனக்கும் புரியும். நானும் அந்த முட்டாள் அதிகாரியிடம் எவ்வளவோ எடுத்துச் சொன்னேன். உன்னை விட இளமையான அழகான வேறு பெண்களை அனுப்புகிறேன் என்று கூட சொல்லிப் பார்த்தேன். ஏனோ அவன் மசியவே இல்லை. உன் பேரழகில் உண்மையிலேயே அவன் மயங்கி யிருக்கலாம்; அல்லது அவனது ஈகோவைக் காயப்படுத்தும் படி எப்பவாவது நீ பேசி இருக்கலாம். நீ மட்டும் தான் வேண்டுமென்று பிடிவாதமாக நிற்கிறான். எனக்கு என் பிஸினெஸ் முக்கியம். உங்களின் கற்பு, கலாச்சாரம் பற்றி எல்லாம் எனக்கு அக்கறை இல்லை. நீ விரும்பினால் நாளைக்கு ஊட்டிக்குப் போய் அந்த முட்டாளுடன் தங்கி விட்டு உடையில் பட்ட குருவி எச்சத்தை துடைப்பது போல் அந்த அனுபவத்தையும் கழுவித்துடைத்து விட்டு உன் தினப்படி வாழ்க்கைக்குத் திரும்பி விடலாம். ஒரு உத்திரவாதம் தருகிறேன். இதுவே முதலும் கடைசியும்! இனி ஒரு தடவை அவனே கேட்டாலும் உன்னை அனுப்ப மாட்டேன். இந்த ரகசியம் எனக் கும் இந்த அறைக் காற்றுக்கும் தவிர வேறு யாருக்கும் தெரியப் போவதில்லை. இதில் உனக்கு இஷ்டமில்லாத பட்சத்தில் நாளைக்கு உன் ராஜினாமாக் கடிதத்துடன் வந்துவிடு. இப்போது நீ போகலாம்.குட் நைட்.

அலுவலக வாகனம் அடையாறில் அவர்களின் புது ஃபிளட்டில் மைதிலியை இறக்கிவிட்டுச் செல்கிறது. வீடு இருளோடிருக்கிறது. வீட்டைத் திறந்து உள்ளே போகிறாள். அவளின் ஆறு வயது செல்ல மகள் ஒரு மூலையில் சுருண்டு படுத்துத் தூங்குகிறாள். பார்த்ததும் சிலீரென்கிறது. வேலைக்காரி இன்னும் வரவில்லை என்பது புரிந்து பரபரப்புடன் செயல்பட்டு பதட்டத்துடன் பாலைக் காய்ச்சி மகளை எழுப்பி புகட்டுகிறாள்.அவளுக்கு அழுகை பொங்குகிறது.
காசைத் துரத்துகிற தன் வாழ்க்கை மீது அவளுக்கு கோபம் வருகிறது. பிறந்ததிலிருந்தே தன் பிள்ளை தாதிகளிடமும் வேலைக்காரிகளிடமுமே வர்கிற அவலம் உறைக்கிறது. நெஞ்சோடு அணைத்து மார்பு விம்ம விம்ம ஒரு நாளும் பால் புகட்டியதில்லை. மடியில் போட்டு கதை சொல்லித் தூங்கப் பண்ணியதில்ல. வேலைக்குப் போகிற அம்மா என்கிற நிதர்சனம் புரிந்ததில் குழந்தையும் அதிகம் பிடிவாதம் பிடிக்காமல் தன்னைத்தானே தயார்படுத்திக் கொண்டதில் அவளுக்கும் குழந்தைத் தனமே இல்லாமல் போய் விட்டது. இன்றிலிருந்து எல்லாவற்றையும் உதறிவிட்டு இவளே உலகமென்று இருந்துவிடலாம் போலிருந்தது.
வேலைக்காரி சுப்புலட்சுமி அவசர அவசரமாக வருகிறாள். "மன்னிச்சுக்கோ தாயி. அந்த வீணாப்போன மேஸ்திரி கான்கிரீட் போட ஆள் போதாதுன்னு நேரத்தோட அனுப்ப மாட்டேன்னுட்டான். அதான் தாமதமாயிருச்சு....குட்டிச் செல்லம்: அஞ்சு நிமிஷம் பொறுத்துக்கோ; எல்லாம் ரெடி பண்ணீடுறேன்......" என்றபடி குழந்தையின் கன்னம் வருடி சேலையைத் தூக்கிச் சொருகிக் கொண்டு சமையலறைக்குள் போகிறாள். அங்கு இரண்டு பெண்களும் பரபரப்பாக இயங்குகிறார் கள். குழந்தை ஏதோ வீட்டுப்பாடத்தைக் கிறுக்கிக் கொண்டிருக்கிறது.
மைதிலியின் புருஷன் இராமனாதன் வேலை முடிந்து வீட்டிற்கு வருகிறான். கார்ச்சாவியை அதற்கான வளையத்தில் மாட்டிவிட்டு தன் அறைக்குப் போக யத்தனிக்கும் போது குழந்தை ஓடிவந்து "டாடி..." என்றபடி கால்களைக் கட்டிக் கொள்கிறது. "ஓ...இன்னுமா நீ தூங்கல. டாடிக்கு ரொம்ப டயர்டா இருக்குடா...." என்று உதறிவிட்டுப் போகிறான்.
மைதிலி வந்து அவனுடைய பெட்டியை வாங்கியபடி, "குழந்தைய ஏங்க இப்படி உதறிட்டுப் போறீங்க; இன்னைக்குத்தான் நீங்க வரும் போது அவள் முழிச்சுருக்கா; ஒரு ரெண்டு நிமிஷம் அவளக் கொஞ்சீட்டுப் போனா குறைஞ்சா போயிடுவீங்க....." என்று கண்டிக்கிறாள். "நான் எத்தன தடவை உங்களுக்குச் சொல்றது! ஐயாம் சாட்டர் டே ஹஸ்பெண்ட்; சண்டே •பாதர். மத்த நேரமெல்லாம் ஒரு கம்யூட்டர் ரோபோ அவ்வளவு தான்..."என்று சொல்லிப் போகிறான்.
சுப்புலட்சுமி கிண்ணத்திலிருந்து உணவை எடுத்து குழந்தைக்கு ஊட்டியபடி, "பொம்பளையாப் பொறந்தாலே எல்லாக் காலத்துலயும் அவஸ்தை தான் செல்லம். அதுவும் கண்ணுக்கு கொஞ்சம் லச்சணமா இருந்துட்டா நாய் பொழப்பு தான். நீ ஏன் செல்லம் பொண்ணாவந்து இந்த பூமியில பொறந்த?" என்றபடி குலுங்கி குழுங்கி அழத் தொடங்குகிறாள். சத்தம் கேட்டு மைதிலி ஓடி வந்து "என்னாச்சு சுப்பு?" என்கிறாள்."ஒண்ணுமில்ல தாயி...." என்று அவசரமாய் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அவளிடம் விடைபெற்று வெளியேறுகிறாள். ஐயோ பாவம்; இவளுக்கு என்ன பிரச்னையோ? என்று நினைத்துக் கொள்கிறாள்.
சாப்பாட்டு மேஜை. புருஷனுக்கு உணவு பரிமாறியபடி மைதிலி சொல்கிறாள். "ராம்; நான் வேலைய விட்டுடலாம்னு நெனைக்கிறேன்..." அவனுக்கு அதிர்ச்சியில் உணவு புரையேறுகிறது. தண்ணீர் அருந்தியபடி கேட்கிறான். "திடீர்னு ஏனிந்த விபரீத முடிவு? இதைவிடவும் கூடுன சம்பளத்துல வேற ஏதாச்சும் வேலை கிடைச்சுருக்கா?"
மைதிலி : இல்ல ராம்; கொஞ்ச நாளைக்கு வீட்லருந்து குழந்தையப் பார்த்துக்கிறேன். இவள் இன்னும் கொஞ்சம் பெரியவளான பின்னாடி வேற ஏதாச்சும் வேலை தேடிக்கலாம்.
ராம் : (சிரித்தபடி) அது அத்தனை சுலபமில்ல மைதிலி. அபிமன்யூ சக்கர வியூகத்துல மாட்டிக்கிட்டு முழிச்ச மாதிரி நம்மள மாதிரியானவங்க சம்பாத்யம்ங்குற வியூகத்ல மாட்டிக்கிட்டிருக்கோம். நாமளே ஆசைப்பட்டாலும் நம்மால அதை உடைக்க முடியாது. 45 இலட்ச ரூபாய் ஃபிளாட்; 7 இலட்ச ரூபா கார். ரெண்டுக்கும் மாதத் தவணை கட்டுறதுக்கே என் ஒருத்தனோட சம்பளம் போதாது. மத்த தினப்படி செலவுகள்; வளரும் குழந்தைக்கான செலவுகள்னு எப்படி சமாளிக்க முடியும்! அதனால வேலைய விடுறதெல்லாம் கனவுலயும் நெனைக்க முடியாதுப்பா....
மைதிலி :ஆபிஸ்ல ஒரு சின்னப் ப்ராப்ளம் ராம்; வேலைக்குப் போக முடியாத சூழல். அதான்..
ராம் : வேலைன்னா பிரச்னை இல்லாமயா இருக்கும். எனக்குக் கூடத்தான் தினசரி ஆயிரத் தெட்டுப் பிரச்னை. டார்கெட் முடிக்கலைன்னு தலையத் தின்னுறான்கள்.நானும் வேலைய விட்டுடட்டுமா? அப்புறம் நானும் நீயும் வீட்டையும் காரையும் சுத்தி சுத்தி வந்து கும்மி அடிக்கலாமா? சொல்லு....(எரிந்து விழுகிறான்)
மைதிலி : புரிஞ்சுக்கோங்க ராம்; ஆபிஸ்ல என் பெண்மைய விலையாக் கேட்குறாங்க. வேசியா வேஷங்கட்டச் சொல்றாங்க. நானென்ன செய்யட்டும்! (வெடித்து அழுதபடி அலுவலகத்தில் நடந்தவற்றைச் சொல்லி முடிக்கிறாள்)
ராம் : (கொஞ்ச நேரம் அமைதியாக உலவுகிறான். மைதிலியை அணைத்து ஆறுதல் படுத்துகிறான்) உணர்ச்சி வசப்படாம கொஞ்சம் பொறுமையா யோசி மைதிலி. இந்த சின்ன விஷயத்திற்காக வேலைய விட்டுடுறது புத்திசாலித் தனமாத் தோணல. நீ இப்ப இருக்கிறது வெளிநாட்டுக் கம்பெனி. அங்கருந்து வெளிய வந்தீன்னா இப்ப நீ வாங்குறதுல பாதிச் சம்பளம் கூட வேற கம்பெனில கிடைக்காது. ஒரே ஒரு மாசம் உன் வருமானம் இல்லைன்னாலும் நம்ம குடும்பம் திண்டாடிடும். கடல்ல தத்தளிச்சா யாராவது வந்து காப்பாத்த ஒரு சான்ஸ் இருக்கு; ஆனா கடன்ல தத்தளிச்சா மூழ்குறதத் தவிர வேற வழியே இல்ல....அடுத்தவன் பொண்டாட்டி மேல ஆசைப் படுறவன் ஆண்மை இல்லாதவனாத்தான் இருப்பான். உன்னை ஒண்ணும் செய்ய முடியாது அவனால. உனக்குப் புரியும்னு நெனைக்கிறேன். அதால தைர்யமா கிளம்பிப் போயிட்டு வா...(எழுந்து போகிறான்)
படுக்கை அறை. ராமனாதன் தூங்கிக் கொண்டிருக்கிறான்.மைதிலிக்கு தூக்கம் பிடிக்க வில்லை.அவளுக்கு மிகவும் வேதனையாக இருந்தது. கற்பை காணிக்கையாகக் கேட்கிறான் கயவன். கணவனோ மறக்காமல் காண்டம் கொண்டு போ என்கிறான்.என்ன தாம்பத்யம் இது! பேசாமல் வேலையையும் புருஷனையும் சேர்த்தே உதறிவிட்டு குழந்தையுடன் வெளியேறிவிடலாமா என்று யோசிக்கிறாள் மைதிலி. கூடவே ஒரு கேள்வியும் எழுகிறது - வெளியேறி எங்கு செல்வது?
இந்த நிமிஷம் கையில் காலணா இல்லை. இவளின் வங்கிக் கணக்கிலும் ஐநூறு ரூபாய் தேறினால் அதிகம்.சம்பளம் கிரெடிட் ஆன அடுத்த நிமிஷமே விழுங்கிக்கொள்ள முதலையாய் வாய் பிளந்து காத்திருக்கின்றன பின் தேதியிட்ட காசோலைகளும் கடன் அட்டைகளும். அப்பாவிடம் போனால் அதிகபட்சம் மூன்றுநாள் தாங்குவார்கள். அப்புறம் கிளம்பலியா என்று கேட்கத் தொடங்கி விடுவாள் அம்மா. ரிட்டயர்டு வாத்தியார் வீட்டில் கொட்டியா கிடக்கும் செல்வங்கள்! அதுவும் காலம் போனபிறகு ஒரு அஜாக்கிரதையான தருணத்தில் அம்மாவின் வயிற்றில் வந்து தங்கிவிட்ட தங்கையை கரையேற்றவே வழி தெரியாமல் முழி பிதுங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு இவளும் போய் இன்னொரு சுமையாக இருக்க முடியாது.
யோசணைகளின் கனத்திலேயே உறங்கிப்போகிறாள் மைதிலி. நடு இஅரவில் மறுபடியும் விழிப்பு வருகிறது அவளுக்கு. ஏனோ புருஷனின் அணைப்பும் வெதுவெதுப்பும் வேண்டியிருக்க, நெருங்கிப் போய் அவனை இறுக அணைத்து காதுமடல்களை இதழ்களால் வருடுகிறாள். ராமோ அரைத்தூக்கத்திலேயே "இன்னைக்கென்ன சனிக்கழமையா இதையெல்லாம் வச்சுக்கிறதுக்கு....பேசாம தூங்கு மைதிலி....நாளைக்கு நேரத்தோட எழும்பி வேலைக்குப் போக வேண்டாமா" என்றபடி புரண்டு அவளுக்கு புறமுதுகு காட்டித் தூங்கிப் போகிறான்.
மைதிலிக்கு சுளீரென்று அடிமனதில் வலிக்கிறது. அவமானத்தில் தன் பெண்மை காயம் பட்டதாய் உணர்கிறாள். இந்த உதாசீனப்படுத்தலுக்காவது இவனைப் பழிவாங்க வேண்டுமென்று மனதில் வெறி கிளம்புகிறது. மறுபடியும் தூங்கிப் போகிறாள்.
விடிந்ததும் வழக்கம் போல அலுவலகம் கிளம்பிப் போகிறாள். இவளின் மேஜையில் ஊட்டிக்கு போய் வருவதற்கான விமான டிக்கெட்டும் தங்கப் போகும் ஐந்து நட்சத்திர விடுதி பற்றிய விபரங் களுமிருக்கின்றன. எடுத்துக் கொண்டு கம்பெனிக் காரில் கிளம்பிப் போகிறாள்.

ஊட்டியின் பசுமையையும் பனி சூழ்ந்த அழகுகளையும் காட்டுகிறோம். ஹோட் டலில் இவ ளுக்காக இளித்துக் கொண்டு காத்திருக்கும் முருகதாஸைப் பார்க்கவே அருவருப்பாக இருக்கிறது அவளுக்கு. முருகதாஸ் மிருக இச்சை கொண்டவன் - மிருக இச்சை என்று சொல்வது மிரு கங்களை கேவலப் படுத்துகிற வார்த்தை; ஏனென்றால் அவை கலவிக்காக ஒரு போதும் தன் இணைகளை வெறிபிடித்து இம்சிப்பதில்லை- கண்ணில் படுகிற பெண்களை எல்லாம் காதலும் இல்லாமல் காமமும் இல்லாமல் வெறும் உடம்பாகவே பார்த்து அணைந்து விடுகிற ஆவேஷத்தில் அலைபவன். அந்த இரவு மிகமிக வலி மிகுந்ததாக நினைத்தாலே குமட்டலெடுக்கிற கசப்பான நினைவுகளாக மைதிலிக்கு கடந்து போகிறது. ஊட்டிக் காட்சிகளை ஆபாசமில்லாமல் காட்சிப் படுத்துவது பெரிய சவால் தான் நமக்கு. ஒளிப்பதிவாள நண்பர் - பூனே திரைப்படக் கல்லூரியில் படித்தவர் - இதைக் கச்சிதமாகப் படம் பிடித்துக் கொடுப்பார்.
அடுத்த நாள் சாயங்காலம் சென்னைக்குத் திரும்புகிறாள் மைதிலி. வீடு போட்டது போட்டபடி அப்படியே அலங்கோலமாகக் கிடக்கிறது. நேற்று வேலைக்காரி வேலைக்கு வரவில்லை என்று தெரிகிறது. அலுவலகத்திற்கு போன் பண்ணி இரண்டு நாட்கள் விடுப்பு சொல்லிவிட்டு வீட்டை ஒதுங்க வைக்கிறாள். குழந்தையைக் கட்டிக்கொண்டு குமுறி அழுகிறாள்.
நான்கு நாட்கள் கழித்துத் தான் சுப்புலட்சுமி வேலைக்கு வருகிறாள். அப்போது வீட்டிலிருக்கும் ராம் "இனிமேல் வேலைக்கு வர வேண்டாம்...." என்று வேலைக்காரியிடம் சண்டைக்குப் போகிறான். சுப்புலட்சுமியோ மிகவும் களைத்து சோர்ந்து போயிருக்கிறாள். ராமைக் கையெடுத்துக் கும்பிடுகிறாள்.
சு.லட்சுமி : இந்த ஒரு தடவை மன்னிச்சிருங்கையா....வீட்டுல கொஞ்சம் பிரச்னை. அதான் வேலைக்கு வர முடியல. இனிமே ஒழுங்கா வேலைக்கு வந்துருவேன்......
ராம் : இவ சொல்றது எதையும் நம்பாத மைதிலி. அத்தனையும் வெளி வேஷம். பயங்க ரமான பசப்புக்காரி இவள். கொலைகாரக் குடும்பம். இவ புருஷன போலீஸ் புடிச்சிட்டுப் போயிருச்சு தெரியுமா?
இரண்டு நாட்களுக்கு முந்தைய செய்தித் தாளை எடுத்து அதில் சுப்புலட்சுமியின் புருஷன் சம்பந்
தமாக செய்தி வெளிவந்திருக்கும் பக்கத்தைப் பிரித்துப் படிக்கச் சொல்லித் தருகிறான். அதில் சுப்புலட்சுமிக்கும் அவள் கட்டிட வேலைபார்க்கும் இடத்தில் இன்ஜீனியராக இருப்பவனுக்கும் கள்ளத் தொடர்பு இருந்ததாகவும் அது தெரிந்த சுப்புலட்சுமியின் புருஷன் அந்த இன்ஜீனியரைக் கொலை செய்து விட்டதாகவும் அதனால் காவல்துறை அவனைக் கைது பண்ணியிருப்பதாகவும் போட்டிருந்தது.
சு.லட்சுமி : அதுல போட்டுருக்கது அவ்வளவும் அபாண்டம் தாயி. எல்லாரும் ஒண்ணாச் சேர்ந்துக்கிட்டு நடந்ததத் திரிச்சு தப்புத் தப்பா செய்தி போட்டுருக்காங்க தாயி. நீயும் ஐயா சொல்றாப்ல என்னை வேலையிலருந்து விரட்டிட்டா நானும் என் பையனும் தெருவுல தான் நிக்கனும். அடைக்கலம் கொடு தாயி; உன்னைத் தான் மலை போல நம்பி இருக்கேன்....(மைதிலியின் கால்களைக் கட்டிக்கொண்டு கதறி அழுகிறாள்.)
மைதிலிக்கு அவள் மீது இனந்தெரியாத இரக்கமும் பிரியமும் சுரக்கிறது. அவளும் தன்னைப் போல ஒரு உழைக்கிற பெண்மணி என்பதால் வந்த கனிவு அது. சுப்புலட்சுமி உண்மையில் என்ன நடந்ததென்று விவரிக்கத் தொடங்குகிறாள். அவள் பேசப்பேச பின்னணியில் காட்சிகள் பிளாஸ் பேக்குகளாக விரிகின்றன.
"எனக்கும் என் புருஷனுக்கும் பில்டிங் வேலை நடக்குற எடத்துல குடிசை போட்டுக் குடுத்திருக்காங்க தாயி. நான் அந்த பில்டிங்குல சித்தாளாவும் என் புருஷன் பகல்ல ஸ்டோர் கீப்பராவும் இராத்திரில வாட்ச் மேனாகவும் வேலை பார்க்குறோம். அங்க கனகவேலுன்னு ஒரு இன்ஜீனியர் இருக்கான். அவன் தான் அங்க பொறுப்பு. ஓனரோட பையன். சின்னவயசுக்காரன் தான். தேவையில்லாம என்கிட்டத் தேடித்தேடி வந்து பேசுவான்; பார்க்கிற நேரமெல்லாம் பல்லிளிப்பு வேற. அவனப் பார்த்தாலே யெனக்குப் பத்திக்கிட்டு வரும். ஒரு சித்தாளுக்கும் இன்ஜீனியருக்கும் பேசுறதுக்கு என்ன இருக்குன்னு நான் பேசாம ஒதுங்கிப் போயிடுவேன்.
ஒரு நாலஞ்சு நாளைக்கு முன்னாடி - நான் கூட கான்கிரீட் வேலை இருந்துச்சுன்னு வீட்டு வேலைக்கு லேட்டா வந்தனே அன்னைக்கு - வேலை முடிஞ்சு முகங்கால் கழுவிக்கிட்டு என் குடிசையில இருக்கிறப்போ இவன் வந்து என்னைக் கூப்பிட்டான். அவன் பொண்டாட்டி பிரச வத்துக்குப் போயிட்டதாவும், நான் அப்பப்ப அவன் வீட்டுக்குப்போயி அவன் பொண்டாட்டியா இருக்கனும்னு பச்சையாவே கூப்பிட்டான். 'அதுக்கு நான் ஆளுல்ல;வேறாளப் பார்த்துக்கோ'ன் னு காறித் துப்பிட்டேன்.
'நானும் ரொம்ப நாளாவே ஜாடை மாடையா கூப்டுக்கிட்டு இருக்கிறேன்; நீ பெரிய பத்தினி மாதிரி டேக்கா குடுத்துக்கிட்டு இருக்குற. இன்னைக்கு ரெண்டுல ஒண்ணு முடிவு தெரிஞ்சாகனும்; ஒண்ணு நீ என் ஆசைக்கு இணங்கணும், இல்லைன்னா உனக்கும் உன் புருஷனுக்கும் இங்க வேலை கிடையாது. குடிசையக் காலி பண்ணீட்டு வேற எடம் பார்த்துப் போயிக்கங்க'ன் னு முடிவாச் சொல்லீட்டுப் போயிட்டான்.
நானும் 'மானம் மருவாதைய அடமானம் வச்சு வாழணும்ங்கிற தேவை எங்களுக்கில்ல; போடா நீயும் உன் புண்ணாக்கு வேலையும்' னு சொல்லிட்டு வந்துட்டேன்.
இத,அத்தோட விட்டுருக்கணூம்;என் புருஷன்கிட்ட இதமா பதமாய் பேசி, வேற எதுனாச்சும் வேலை தேடிப் போயிருக்கனும். நம்மளப் போயி வப்பாட்டியா வரச் சொல்லீட்டானேங்குற ஆத்தாமையில அன்னைக்கு ராத்திரியே என் புருஷன்கிட்ட போட்டு உடைச்சிட் டேன்.இது கோபத்துல கிளம்பிப் போயி சாராயத்த வயிறு முட்டக் குடிச்சிட்டு இன்ஜீனியர இழுத்துப்போட்டு அடிச்சே கொன்னுருச்சு தாயி. என் ஒரே புள்ள மேல சத்தியமா இதுதான் தாயி நடந்துச்சு......" சொல்லி விட்டு நீளமாய் அழுகிறாள் சுப்புலட்சுமி.
ராம் : நல்லா கதை கட்றாள். இவ நமக்கு வேண்டாம் மைதிலி. இவள இங்க வேலைக்கு வச்சிருந்தா போலீஸ¤க்கும் தேவை இல்லாம பதில் சொல்ல வேண்டியிருக்கும். நான் உனக்கு வேற வேலைக்காரி ஏற்பாடு பண்றேன்.....
மைதிலி : அவசியமில்ல; நான் முடிவு பண்ணீட்டேன் - நமக்கு சுப்புலட்சுமி தான் வேலைக்காரி. இனிமே அவள் நம்ம வீட்டோட தங்கி முழு நேரமும் வேலை செய்வா. நீ உள்ள போயி வேலையப் பாரு சுப்பு.....
மைதிலி தன் கணவனை கோபமாய் ஊடுருவி ஒரு பார்வை பார்க்கிறாள். அந்தப் பார்வை அவனுக்குள் ஆயிரம் கேள்விக் கணைகளை வீச அதன் உஷ்ணம் தாளாமல் கல்லாகச் சமைகிறான். கல்லின் மேல் டைட்டில் ஓடி படம் நிறைவடைகிறது.
கதை சொல்லி முடித்து அரவிந்த் தயாரிப்பாளரின் முகம் பார்க்கிறான். " கதை நல்லாருக்கு தம்பி.....நீங்க காலதாமதம் பண்ணாம காட்சி பிருச்சு வசனமெல்லாம் எழுதிருங்க.நாம கண்டிப்பா இந்தக் குறும்படத்தப் பண்றோம்....."என்கிறார்.
"தம்பி அப்புறம் நான் கேட்டிருந்தது......" என்று தயாரிப்பாளர் ஏதோ கேட்கத் தொடங்கும் போது கதவு தட்டப்படுகிறது. அரவிந்த் போய் கதவைத் திறக்க ஒரு பெண் நின்று கொண்டிருக்கிறாள்."வா புவனா....."என்று அவளை உள்ளே அழைத்து வருகிறான். தயாரிப்பாளரைக் காட்டி " இவர்தான் புரடீயூசர்; கொஞ்சம் பார்த்து நடந்துக்கோ...."என்கிறான்.
"ஸார் நீங்க கேட்டிருந்தது; பேரு புவனா.சினிமாவுல முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கு. நல்ல திறமையான ஆர்ட்டிஸ்ட். திறமைக்குத் தகுந்த வாய்ப்பு இன்னம் இதுக்கு அமையல..... நம்ம ஸ்கிரீப்டலயே ஒரு கேரக்டர் கொடுக்கலாம்.நீங்க பார்த்து ஏதாச்சும் பண்ணுங்க...." என்று சொல்லி அறையிலிருந்து அவன் வெளியேற அறைக் கதவு இறுக மூடிக் கொள்கிறது.

- முற்றும்
(நன்றி : தாமரை- பிப்ரவரி 2008)

Friday, December 11, 2009

சிறுகதை - ஒரு தேசமே சேவல் பண்ணையாய்…..

ஷார்ஜாவின் அதிகாலை 04:30 மணி; முதலில் டைம்பீஸில் அலாரம் அடித்தது. சுரேந்திரன் எழும்பவில்லை. ஏற்கெனவே முழிப்பு வந்து இன்னும் ஏன் அலாரம் அடிக்கவில்லை என்ற கேள்வியுடன் புரண்டு கொண்டிருந்த பியூலாராணி தான் அலாரத்தை நிறுத்தினாள். மீண்டும் 4:40க்கு கைத்தொலை பேசியில் அலாரம் அடித்தது. அப்போதும் அவன் விழிக்க வில்லை.
இம்முறையும் பியூலா தான் எழுந்து அலாரத்தை அணைத்தாள். சரியாக அணைத்திருக் கிறோமா என்று விளக்கைப் போட்டு சரிபார்த்துக் கொண்டாள். ஏனென்றால் கைத்தொலைபேசியில் அலாரம் சரியாக அணைக்கப்படாவிட்டால் ஒவ்வொரு பத்து நிமிஷத்திற்கொரு முறை அலறித் தொலைக்கும். அசந்து தூங்குபவனைப் பார்க்க கொஞ்சம் பொறாமையாக இருந்தது. தூக்கம் எத்தனை பெரிய வரம்! அவளுக்குத் தான் எவ்வளவு முயன்றும் அந்த வரம் வசப்படுவதே இல்லை. அவள் ஆழ்ந்து தூங்கி அனேக நாட்களாகி விட்டது.
மசூதியிலிருந்து அதிகாலைத் தொழுகைக்கான 'பாங்கு' ஒலிக்கத் தொடங்கிய போது இலேசாய் புரண்டு படுத்தான். இனிமேல் இவனை உறங்க விட்டால் காலதாமதமாகி கம்பெனி வண்டி இவனை விட்டு விட்டுப் போய் விடும் என்பதால் தூங்குபவனைத் தட்டி எழுப்பினாள். "ப்ளீஸ் பியூலா; இன்னொரு அஞ்சு நிமிஷம் மட்டும் தூங்க விடு....." என்று கெஞ்சினான் கண்களைத் திறக்காமலேயே. "இப்பவே ரொம்ப நேர மாயிருச்சு; உங்க டிரைவர் உங்கள விட்டுட்டுத்தான் போகப் போறான்....." என்றபடி அவசரப் படுத்தினாள்.
ஷார்ஜாவிலிருந்து துபாயில் இவன் வேலைக்குப் போக வேண்டிய இடம் 20கி.மீ. தூரத்துக்குள் தான் இருக்கும். அங்கங்கே அகாலமாய் குறுக்கிடும் ரவுண்டபட்களைத் தவிர்த்து விட்டால் நேரான, அகல மான, நேர்த்தியான சாலைகள் தான்; எத்தனை மெதுவாய் ஓட்டினாலும் 15 - 20 நிமிட பயண தூரம் தான். ஆனாலும் காலை 7 மணி டூட்டிக்கு இவனுக்கு 5:30 மணிக் கெல்லாம் வண்டி வந்து விடும். அதில் கொஞ்சம் தாமதமானாலும் ஷார்ஜா - துபாய் சாலையில் வாகன நெரிசல் தொடங்கி, உரிய நேரத்திற்கு வேலைக்குப் போக முடியாது.
அடிக்கடி அவன் பியூலாவிடம் சொல்வதுண்டு. "உங்கப்பா நம்ம கல்யாணத்திற்கு மாப்பிள்ளை ஊர்வலம் வைக்காத குறைக்கு இந்த ஊர்ல அப்பப்ப என்னை ஊர்வலம் மாதிரித்தான் கூட்டிட்டுப் போறானுங்க...."
துபாயில் வேலை பார்க்கும் நிறையப் பேர், அங்கு ஏறிக் கொண்டிருக்கும் வீட்டு வாடகையைத் தாக்குப் பிடிக்க முடியாமல் ஷார்ஜாவிற்கு தங்கள் ஜாகையை மாற்றிக் கொண்டு விட்டதாலும், இங்கு கார் வாங்குவது மிகவும் கட்டுபடி ஆகக்கூடிய செலவு - ஒரு வருஷ வீட்டு வாடகைக்கு ஆகுற காசில் புத்தம் புதிய கார் வாங்கி விடலாம்; அதுவும் வங்கிக் கடனில் மிகச் சுலபமாக வாங்கி, கம்பெனிகள் தருகிற டிரான்ஸ் போர்ட் அலவன்ஸிலேயே மாதத் தவணையும் பெட்ரோல் செலவும் போக கொஞ்சம் மிச்சமும் ஆகும் - என்பதாலும் ஷார்ஜா- துபாய் சாலையில் டிராபிக் ஜாம் எப்போதும் தலையைத் தின்னும் பிரச்னை தான்.
எல்லோரும் ஷார்ஜாவில் வந்து குவிவதால் இங்கும் வீட்டு வாடகை ராக்கெட் வேகத்தில் எகிறிக் கொண்டிருக்கிறது. அதனால் இப்போதெல்லாம் ஷார்ஜாவிற்குப் பக்கத்திலுள்ள அஜ்மானுக்குக் குடியேறத் தொடங்கி இருக்கிறார்கள். அஜ்மான் - சென்னைக்குப் பக்கத்திலிருக்கும் பாண்டிச்சேரி மாதிரி; சாராயம் சல்லிசாய்க் கிடைக்கும் இடம். ஷார்ஜாவில் தடை செய்யப் பட்டிருக்கும் மது அஜ்மானில் ஆறாய் ஓடு மென்பது ஒரு விசேஷம். அஜ்மானுக்கப்புறம் போனால் கடலில் தான் விழவேண்டி இருக்கும்.
ஆரம்பத்தில் பியூலாவும் சுரேந்திரனும் கூட துபாயில் தான் தங்கி இருந்தார்கள். மூன்று படுக்கை அறைகள் கொண்ட ஒரு அபார்ட்மெண்ட்டில் ஷேரிங் முறையில், ஒரு படுக்கை அறையை இவர்கள் பகிர்ந்து கொள்ள, இன்னொரு படுக்கை அறையில் ஒரு மலையாளத் தம்பதி அவர்களின் இரண்டு வயதுப் பெண் குழந்தையுடனும், மூன்றாவது படுக்கை அறையில் இரண்டு பிலிப்பினோ ஆண்களும் தங்கி இருந்தார்கள். இங்கெல்லாம் ஷேரிங் குடியிருப்புகள் சகஜம் தானென்றாலும் நிறைய சகிப்புத் தன்மையும் மற்றவர்களைப் பற்றி அலட்டிக் கொள்ளாத மனநிலையும் வேண்டும்.
ஒவ்வொரு படுக்கை அறைக்கும் தனித்தனி கழிவறைகள் இருந்ததால் அதன் சுத்தம் அத்தனை கவலைப் படும்படி இல்லை. ஆனால் எல்லோருக்கும் பொதுவான வரவேற்பறை மற்றும் சமையலறைப் பராமரிப்புத் தான் பியூலாவால் கொஞ்சமும் சகித்துக் கொள்ள முடியாததாய் இருந்தது. அதுவும் சமையலறைக்குள் போனாலே அவளுக்கு குமட்டிக் கொண்டு வரும். "தனி வீடு பார்த்துப் போயிடலாங்க....." என்ற அவளின் நச்சரிப்புக்கு ஆற்றமாட்டாமல், அவள் சமையலறைப் பக்கமே அதிகம் போகாதபடிக்கு சுரேந்திரன் ஹோட்டலிலிருந்து உணவை வரவழைத்து கொடுத்து விடுவான்.
ஒரு இரண்டு மாதங்கள் ஓடி இருக்கும். பிலிப்பினோ ஆண்கள் தங்களுடன் வசிக்க ஒரு பெண்ணைக் கொண்டு வந்தார்கள். "இந்த கண்றாவிகளை எல்லாம் பார்த்துக்கிட்டு என்னால இருக்க முடியாது. ஒண்ணு தனி வீடு பாருங்க; இல்லையின்னா என்னை ஊருக்கு அனுப்பி வச்சுருங்க....." பியூலா சுரேந்திரனுடன் சண்டைக்குப் போனாள். "பியூலா ஒரு விஷயம் நீ புரிஞ்சுக்கணும்; துபாயில தனி வீடு பார்த்தா என்னோட மொத்த சம்பளமும் வீட்டு வாடகைக்கே சரியாப் போயிரும்; அதால தான் இந்த ஏற்பாடு. அப்புறம் அவங்க வாழ்க்கையில எது சரி? எது தப்புன்னு நாம யாரு தீர்மானிக்குறது! நம்ம புராணங்கள்லேயே அஞ்சு பேரோட மனைவியா வாழ்ந்த பாஞ்சாலிய, நம்ம நாட்டுல இப்பவும் தெய்வமா வணங்குறதில்லையா?
"அதோட அவங்களோட வாழ்க்கை, ஒழுக்கம் பற்றி எல்லாம் நாம ஏன் அலட்டிக் கணும்.....அவங்களுக்கு இது சாதாரணமா இருக்கலாம். அவங்களும் நம்மைப் போலவே பொழைக்க வந்துருக்கிறாங்க. அவங்க வருமானத்துக்கு தனியறைங்கிறது கட்டுபடியாகாத கனவா இருக்கலாம்... அவங்களுக்குள்ள செக்ஸ¤வல் ரிலேஷன் இருந்தாகனுமின்னு கட்டாயம் கூட இல்ல! அப்படியே இருந்தாலும் அதனால நமக்கென்ன போச்சு...." என்று ஏதேதோ சமாதானம் சொல்லி பியூலாவை அந்த அறையிலேயே தொடர்ந்து தங்க சம்மதிக்க வைத்தான்.
அந்த மூன்று பேருக்குமான உறவுகள் பற்றிய நிறைய கற்பனைகளுடனும் கதையாடல்களுடனும் நாட்கள் கொஞ்சம் சுவாரஸ்யமாகவே நகர்ந்தது. சில நாட்களில் பிலிப்பினோக்கள் மூன்று பேருமே ஒரே அறையில் உறங்கினார்கள். சில நாட்களில் ஒரு ஆண் வரவேற்பறையிலும் மற்ற இருவரும் படுக்கை அறையிலுமாகப் படுத்துக் கொண்டார்கள். வரவேற்பறையில் படுக்கிற ஆண் அவ்வப்போது மாறினான் என்பது இதில் விஷேசம்.
அவர்களுக்குள்ளான உறவுகள் சீர்கெடுவதை வரவேற்பரை வாக்குவாதங்களிலிருந்து - அவர்களின் பேச்சு மொழி புரியாவிட்டாலும் - கொஞ்சம் கொஞ்சம் புரிந்து கொள்ள முடிந்தது. ஆண்கள் இருவரும் கடுமையாய் சண்டைபோட அந்தப் பெண் எந்தச் சலனமுமில்லாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும். ஒரு வெள்ளிக்கிழமை விடுமுறை தினத்தின் அதிகாலை அயர்ந்து தூங்கிக் கொண்டிருப்பவர்களை போலீஸ் வந்து எழுப்பி அந்த பிலிப்பினோக்களில் ஒரு ஆண் தூக்கு மாட்டி தற்கொலை செய்ததைச் சொன்னபோது சிலீரென்றிரிந்தது.
மிச்சமிருக்கிற இரண்டு பேரையும் போலீஸ் கைது பண்ணிக் கொண்டு போக, கடைசி வரை அந்த மரணம் இவர்களுக்கு புதிராகவே இருந்து விட்டது. அவர்களுக்குள் இருந்த எந்த சிக்கல் ஒருத்தனை தற்கொலை வரைக் கொண்டு போனது என்கிற உண்மை இவர்களுக்குத் தெரியவே இல்லை. அந்தப் பெண்ணை இருவருமே காதலித்ததாகவும் அவளை யார் மனைவியாக்கிக் கொள்வது என்கிற தீராத பிரச்னையில் தான் அந்த தற்கொலையோ கொலையோ நடந்திருக்கு மென்பது மாதிரி நிறைய யூகங்களே அந்த பிராந்தியம் முழுவதும் உலவிற்று. அதற்கப்புறம் பியூலாவும் சுரேந்திரனும் ஷார்ஜாவில் தனிவீடு பார்த்து குடிபோய் விட்டார்கள்.
பியூலாராணியின் தொடர்ந்த உலுப்பலில் எழும்பி உட்கார்ந்து கஷ்டப்பட்டு இமைகளைப் பிரித்தான் சுரேந்திரன். ஒவ்வொரு நாள் காலையிலும் இப்படி அதிகாலை எழும்பி வேலைக்காக ஓட வேண்டி இருப்பதை நினைக்கும் போதும் அவனுக்கு இந்தியாவிற்கே திரும்பிப் போய் விட வேண்டு மென்று வெறி கிளம்பும். கொஞ்ச நேரம் தான். அப்புறம் எதிர்காலத் தேவைகளும் கடன் அட்டைகளும் கழுத்தில் கத்தி வைக்க நிதர்சனத்திற்குத் திரும்பி மறு பேச்சின்றி பாத்ரூமிற்கு எழுந்து போவது அவனுக்கு வாடிக்கை.
"இராத்திரி நேரத்தோட தூங்காம லேப் டாப்ல பாட்டும் விளையாட்டுமாய் பொழுதைப் போக்கி லேட்டாப் படுக்கப் போக வேண்டியது; அப்புறம் காலையில கண் விழிக்க கஷ்டப்பட்டு வாழ்க்கையை வெறுத்து வேதாந்தம் பேச வேண்டியது; தேவையா இது?" பியூலாவின் விமர்சனத்தை சட்டை செய்யாமல் குளியலறைக்கு எழுந்து போனான் அவன்.
"என்ன பியூலா இது? நேத்து நீ குளிச்சுட்டுத் தண்ணி புடுச்சு வைக்கலியா! நான் இப்ப எப்படிக் குளிக்கிறது?" குளியலறையிலிருந்து அவன் குரல் கொடுத்த பின்பு தான் அவளுக்கு நேற்று சாயங்காலம் குளித்து முடித்து விட்டு தண்ணீர் பிடித்து வைக்கத் தவறியது ஞாபகத்திற்கு வந்தது. இந்த ஊரில் கோடை காலத்தில் பெரிய பிரச்னை எப்போதுமே தண்ணீர் பிடித்ததும் உடனே குளித்துவிட முடியாது. பைப்பிலிருந்து வெளியாகும் நீர் சருமம் கருகும் கொதிநிலையில் இருக்கும். தண்ணீர் பிடித்து ஆறேழு மணி நேரமாவது ஆற வைத்த பின்புதான் குளிக்க முடியும். எதைத் தொட்டாலும் சுடும். ஏ.சி. இல்லாமல் ஒரு நிமிஷம் கூட வீட்டிலிருக்க முடியாது. இரவு பதினோரு மணிக்கு வெளியில் போனாலும் வெக்கை முகத்தில் அறையும். வேர்த்து ஒழுகும்.
அவசர அவசரமாய் ஃபிரிட்ஜிலிருந்து ஐஸ் கட்டிகளை அள்ளிக் கொண்டு போய் பக்கெட் தண்ணீரில் போட்டு அவை கரைந்ததும் அவனைக் குளிக்கச் சொன்னாள். ஷார்ஜாவிலும் துபாயிலும் பேச்சிலர்களாக அறைக்கு எட்டுப்பேர், பத்துப் பேர் என்று அடைந்து கிடப்பவர்களும், லேபர் கேம்ப்புகளில் தங்கியிருப்பவர்களும் எப்படிக் குளிப்பார்கள்? இப்படி பக்கெட்டுகளில் தண்ணீர் பிடித்து ஆறவைத்து குளிக்க வசதிப்படுமா அவர்களுக்கு? இந்த கொதி தண்ணீரீல் குளித்து விட்டுத் தானே வேலைகளுக்கு ஓடவேண்டும் என்று நினைத்தபோது நெஞ்சின் ஓரத்தில் அவர்களுக்காக ஒரு சிறு பரிதாபம் சுரந்தது.
பகலில் பொதுவாய் தெருவில் அதிகம் நடமாட்டமிருக்காது. ஆனால் இராத்திரியில் பனிரெண்டு ஒரு மணிக்குக் கூட ஆட்கள் சர்வசாதாரணமாக அலைந்து கொண்டிருப்பதை பியூலா அவளுக்குத் தூக்கம் வராத இரவுகளில் ஜன்னலின் வழியே பார்த்து வியந்திருக்கிறாள். இது தூங்காதவர்களின் நகரம் என்று நினைத்துக் கொள்வாள். அரபு நாடுகள் அனைத்தும் ஆண்களின் தேசமாயிருந்தது. எங்கு பார்த்தாலும் ஆண்கள்: ஆண் கள்; ஆண்கள் தான் நீக்கிமற நிறைந்திருக்கிறார்கள். அபூர்வமாய்த்தான் பெண்கள் தென்படுவார்கள். அதுவும் வியாழக்கிழமை சாயங்காலங்களிலும், விடுமுறை தினங்களிலும் கடைவீதிகளுக்குப் போனால் விலக இடமிருக்காது. புற்றிலிருந்து புறப்பட்டு வருகிற மழை ஈசல்கள் மாதிரி ஒவ்வொரு சந்திலிருந்தும் ஆண்கள் வந்துகொண்டே இருப்பார்கள். ஷார்ஜாவின் ரோலா ஸ்கொயர் முழுவதும் ஆண்களின் தலையாக நிரம்பி இந்த தேசமே மிகப்பெரிய சேவல் பண்ணையாய் தோற்றங் கொள்ளும் அவளுக்கு.
அரபு நாடுகளில் திருட்டுப் பயமென்பதே துளியும் இருக்காது என்று சொல்லக் கேட்டிருக்கிறாள். அதை உறுதிப் படுத்துவது போல் இங்குள்ள வீடுகளின் கண்ணாடி ஜன்னல்களுக்கு இரும்பு கிராதிகள் வைக்கப்படாததைப் பார்த்து இங்கு வந்த புதிதில் பியூலா பெரிதும் ஆச்சர்யப்பட்டிருக்கிறாள். ஆனால் அப்படியெல்லாம் ஒரேயடியாக சந்தோஷப்படவும் முடியாது என்று சமகால நிகழ்வுகள் சொல்கின்றன். வீடுகளில் நடக்கும் சின்னச் சின்ன திருட்டுக்கள் பற்றி இப்போதெல்லாம் அடிக்கடி கேள்விப் படுகிறாள் அவள். துபாயில் சமீபத்தில் பூட்டியிருந்த ஒரு நகைக் கடையை காரால் மோதி உடைத்து உள்ளே புகுந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வைரங்களை கொள்ளைக்காரர்கள் அள்ளிப் போனதை தினசரிகளில் வாசித்து திகிலடைந்திருக்கிறாள்.
திருட்டு மட்டுமல்லாது பிச்சை எடுப்பதும் இங்கு சகஜமாகியிருக்கிறது. அவள் ஷார்ஜாவிற்கு வந்த புதிதில் பிச்சை எடுப்பவர்கள் யாரையும் பார்த்ததே இல்லை. ஆனால் இப்போதெல்லாம் கடை வீதிகளிலும் ஸப்-வேக்களிலும் குழந்தைகளும் முழுக்க கறுப்பு அங்கி அணிந்த பெண்களும் கையை நீட்டி பிச்சை கேட்பதை நிறையவே பார்க்கிறாள்.
ஒரு வழியாய் சுரேந்திரன் புறப்படத் தயாரானபோது அவனுடைய கைத்தொலைபேசிக்கு கம்பெனி டிரைவரிடமிருந்து மிஸ்ஸ¤டு கால் வந்துவிட்டது. போனில் பேசியபடி வேகமாய்ப் புறப்பட்டுப் போனான். அவ்வளவு தான். இப்போது கிளம்பிப் போகிறவன், இனி இரவு எட்டு எட்டரைக்கு மேல் தான் வீடு திரும்புவான். அதுவரைக்கும் அவளும் அவளின் தனிமையும் மட்டுமே! இந்த அறையே அவளுக்குச் சிறையாகத் தோன்றும். இரவே மூன்று வேளைக்குமான உணவையும் தயாரித்து முடித்து விடுவதால் பகலில் சமையல் வேலை கூட இருக்காது. துபாயில் இருக்கும் வரை இந்தப் பிரச்னை இல்லை. உடன் தங்கியிருந்த மலையாளப் பெண்ணிடம் அரட்டை அடிப்பதிலும் அவளின் குழந்தையுடன் விளையாடுவதிலும் நேரம் போவதே தெரியாது.
ஷார்ஜாவிற்கு வந்தபின்பு தான் தொலைக்காட்சி ஒன்றே ஒரே பொழுது போக்காய் மனசுக்குக் கொஞ்சமும் பிடிக்காத மலட்டு நிகழ்ச்சிகளையும், கட்சிச் சாயம் பூசிய செய்திகளையும், மில்லிமீட்டர் மில்லிமீட்டராய் நகரும் சீரியல்களையும் பார்த்துப் பார்த்து ஒரு கட்டத்தில் அதற்கே அடிமையாகிப் போனதை உணர்ந்தாள். ஒரு பதினைந்து இருபது நாட்களைப் போல் தமிழ்ச் சேனல் எதுவும் இவர்கள் வீட்டுத் தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகாதபோது பொழுதைக் கழிக்க திணறிப் போனாள்.
தமிழின் முக்கியத் தொலைக்காட்சி சேனல்கள் எல்லாம் தங்களின் ஒளிபரப்பு அலைவரிசைகளிலும் திசைகளிலும் சிற்சில மாற்றங்கள் செய்தபோது இவர்களின் அடுக்குமாடிக் குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த டிஷ் ஆண்ட்டனாக்கள் அதற்குத் தகுந்தாற் போல் டியூன் பண்ணப் படாததால் இவர்கள் வீட்டுத் தொலைக்காட்சியில் தமிழ்ச் சேனல்கள் எதுவுமே ஒளிபரப்பாகவில்லை. அந்த நாட்களில் சுரேந்திரனுடன் தினசரி சண்டைதான். அவனும் குடியிருப்பு அலுவலகத்தில் எவ்வளவோ முறையிட்டும் புகார் பண்ணியும் - கொஞ்சம் செலவு பிடிக்குமென்பதாலும், குடியிருப்பில் தமிழ்க் குடும்பங்கள் அதிகம் வசிக்காததாலும் - அவர்கள் எந்த முயற்சியும் செய்யாமல் சால்ஜாப்புகள் மட்டும் சொல்லி தட்டிக் கழித்ததில் நிறைய நாட்கள் ஓடிவிட்டன.
பியூலாவிற்கு பைத்தியம் பிடித்தது போலாகி விட்டது. புருஷனுடன் பேசுவதை சுத்தமாய் நிறுத்தி விட்டாள். அவன் மாற்று ஏற்பாடாக தமிழ்ப் பத்திரிக்கைகள் சிலதும் வாங்கிப் போட்டான். அவையும் அவளின் மீந்த பொழுதுகளைக் கடத்த போதுமானதாக இல்லை. அப்புறம் தான் பொழுதைப் போக்குவதற்கு பியூலா நல்ல வழிமுறை ஒன்றைக் கண்டுபிடித்தாள். அவன் புறப்பட்டுப் போனதும் ஜன்னலுக்குப் பக்கத்தில் ஒரு சேரை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்து வீதியில் நடப்பதை வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள்.அற்புதமாய் பொழுது போனது. ஒவ்வொரு நிமிஷமும் வீதி புத்தம் புதிதாய் பல சுவாரஸ்யங்களை நிகழ்த்தியபடி நீண்டு கிடக்கிறது என்பது அவளுக்குப் புரிந்தது.
அவள் தங்கி இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பு மிகவும் பரபரப்பான நாற்சந்திப்பின் ஒரு மூலையில் அமைந்திருக்கிறது. அடுக்குமாடிக் குடியிருப்புக்கு எதிர்த்தாற் போல் ஒரு பெரிய ஸ்டார் ஹோட்டல். டை யும் கோட்டும் அணிந்த பெரிய பெரிய கனவான்கள் - பெரும்பாலும் அமெரிக்கா, ஆஸ்திரிலியா, ஐரோப்பா நாடுகளிலிருந்து - வந்து கொண்டும் போய்க் கொண்டும் எப்போதும் பரபரப்பாய் இருக்கும். ஹோட்டலுக்கருகில் இந்தியாவின் கிளை நிறுவனம் ஒன்றின் பிர மாண்டமான புத்தம் புதிய நகைக்கடை அமைக்கப்பட்டு அந்த இடத்திற்கே அழகும் பொலிவுமாய் ஒளியூட்டிக் கொண்டிருக்கிறது.
அபார்ட்மெண்ட்டை ஒட்டிய விசாலமான பிளாட்பாரத்தில் லேபர்கள் குவிந்து கிடப்பார்கள். அவர்களின் காலை நேரமென்பது அதிகாலை மூன்றரை நான்கு மணிக்கெல்லாம் தொடங்கி விடும். அதுவும் அவர்களில் 'கல்லிவெல்லி' ஆட்கள் என்றொரு பிரிவினர் இருக்கிறார்கள். இந்த தேசத்தில் வேலை செய்ய முறையான விசா இல்லாதவர்கள், விசா காலம் முடிந்து போனவர்கள், ஏஜெண்ட் களால் வேலை என்று விசிட் விசாவில் அழைத்து வரப்பட்டு அப்புறம் ஏமாற்றப்பட்டவர்கள், முறையான கம்பெனி விசாவில் வேலைக்கு வந்தும் ஒழுங்காய் சம்பளம் தரப்படாததாலோ, அதிக சம்பளத்திற்கு ஆசைப்பட்டோ அல்லது வேறு பிரச்னைகளாலோ அங்கிருந்து வெளியேறி காணாமல் போயி அப்புறம் 'இந்த' கூட்டத்தில் கலந்தவர்கள் எல்லோரையும் 'கல்லிவெல்லி' ஆட்கள் என்றுதான் அழைப்பார்கள்.
தினசரி போலீசுக்குப் பயந்தபடி, நிரந்தர வேலை ஏதுமின்றி கிடைக்கிற வேலைகளைச் செய்து வயிற்றைக் கழுவி, ஒன்றிரண்டு மிச்சம் பண்ணி ஊருக்கும் அனுப்பிவைத்து...என்று அவர்களின் தினப்பாடு மிகமிகத் திண்டாட்டமானது. காலை நேரத்தில் பியூலாராணி தங்கியிருக்கும் வீட்டின் முதல்மாடி ஜன்னலிலிருந்து பார்த்தால் அப்படிப் பட்ட ஆட்கள் நிறைய அலைந்து கொண்டிருப்பது தெரியும். சாப்பாட்டுப் பொட்டலத்தைக் கையிலும், கண்களில் ஏக்கத்தையும் சுமந்தபடி தரகர்களுக்குப் பின்னாலும், வந்து நிற்கும் வாகனங்களுக்குப் பின்னாலும் ஓடிஓடிப் போய் வேலை கேட்டுக் கொண்டிருப்பார்கள். காலை பதினோறு பனிரெண்டு மணி வரை அலைந்தும் வேலை கிடைக்காத வேதனையோடு சிலர் திரும்பிப் போவதையும் அவள் பார்த்திருக்கிறாள்.
விசாலமான பிளாட்பாரத்தை ஒட்டி வரிசையாய் சிறுசிறு கடைகளும், சூப்பர் மார்க்கெட்டும், கம்யூட்டர் உதிரி பாகங்கள் விற்கிற கடையும், மருத்துவ கிளினிக்குகளும் அமைந்திருக்கின்றன. அதுவும் எதை எடுத்தாலும் ஒரு திர்ஹாம் அல்லது இரண்டு திர்ஹாம் மட்டுமே விலையுள்ள பொருட்கள் விற்கும் கடையில் எப்போதும் கூட்டம் அப்பிக் கொண்டிருக்கும்.
சூப்பர் மார்க்கெட்டிற்கு வெளியே வைக்கப்பட்டிருக்கும் பெரிய பெரிய குப்பைத் தொட்டிகளிலிருந்து சிலர் பேப்பர், அட்டைகள், குளிர்பான போத்தல்கள், பால்கவர், பிளாஸ்டிக் பொருட்கள் என்று மற்றவர்கள் பயன்படுத்தித் தூக்கி எறிந்தவைகளை பொறுக்கி சேகரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து ஆச்சர்யப் பட்டிருக்கிறாள். அதைவிட ஓடி ஓடி சம்பாதிக்கும் இவர்கள் காலையில் என்ன சாப்பிடுகிறார்கள் என்பதை கண்ணுற நேர்ந்தபோது அப்படியே உறைந்து போனாள். எல்லோரும் ஆளுக்கொரு புரோட்டாவை வாங்கி அதை டீயில் முக்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். புரோட்டாவை டீயில் முக்கிக் கூடவா சாப்பிட முடியும்? அதிர்ச்சியிலிருந்து மீள அனேக நாட்களானது அவளுக்கு. ஏழ்மையும் வறுமையும் எல்லா தேசங்களுக்கும் பொது போலிருக்கிறது.
அடுக்குமாடிக் குடியிருப்பின் இன்னொரு பக்கம் ஒரு மேம்பாலமும் அதை அடுத்து ஒரு அழகான மசூதியும் இருக்கின்றன. மசூதியில் வெள்ளிக் கிழமை நண்பகல் தொழுகை பார்க்க கோலாகோலமாய் இருக்கும். யாரும் முறைப்படுத்தாமலேயே ஒவ்வொருவரும் வரிசை வரிசையாய் தாங்கள் கையோடு கொண்டு வந்திருக்கும் பாயை விரித்து அமர்ந்து, தொழுகை தொடங்கியதும் எல்லோரும் ஒரே சமயத்தில் எழுவதும் குனிவதும் மடங்கி அமர்வதும் நெற்றிப் பொட்டு தரையில் பட விழுந்து வணங்கி எழுவதுமாய்......பார்க்கவே பரவசமாய் இருக்கும். மசூதி நிறைந்து அதன் சுற்றுவெளிகளும் நிரம்பி அதுவும் போதாமல் சாலைகளை ஒட்டிய பிளாட்பார்ம்களையும் ஆக்ரமித்து, அந்த நேரம், இடம் எல்லாம் ஆசீர்வதிக்கப் பட்டதாய்த் தோன்றும்.
கண்களைக் கொஞ்சம் எட்ட ஓட்டினால் அங்கங்கே நிறைய கட்டிடங்கள் கட்டும் பணி நடந்து கொண்டிருப்பது தெரியும். பார்த்திருக்க வளர்ந்து ஆளாகி விடும் பெண் பிள்ளைகள் மாதிரி எத்தனை வேகமாய் கட்டிடங்கள் வளர்கின்றன? தீப்பெட்டிகளை அடுக்கி வைப்பது போல் படபடவென்று மாடிகளை அடுக்கிக் கொண்டே போவதைப் பார்க்க பார்க்க இவளுக்கு ஆச்சர்யமாய் இருக்கும். ஊரிலெல்லாம் தளம் கான்கிரீட் போடுவதென்றால் சாரம் கட்டி, அதில் ஆட்கள் வரிசையாய் நின்றபடி, சட்டி சட்டியாய் கான்கிரீட் கலவையை மேலே அனுப்பி காலையிலிருந்து இரவு வரை போடுவதைப் பார்த்திருக்கிறாள்.
ஆனால் இங்கேயானால் இராட்சஷ மிஷின்களைக் கொண்டு வந்து - அதன் உயரமான ஒருமுனை யானையின் தும்பிக்கை மாதிரியே இருக்கிறது; நீரள்ளி ஆசீர் வதிக்கும் கோயில் யானை மாதிரி கண்மூடி கண் திறப்பதற்குள் அது, ட்ரக்குகளில் வரும் கான்கிரீட் கலவையை உறிஞ்சி மேல் தளத்தில் துப்பி விட - சில மணி நேரங்களிலேயே தளவேலை முடிந்து அடுத்த வேலைக்கு நகர்ந்து விடுகிறார்கள். கட்டிடம் கட்டும் பணியில் தான் எத்தனை விதமான இயந்திரங்கள் அலைந்து கொண்டிருக்கின்றன நாள்தோறும்.
சாலையில் ஓடும் வாகனங்களைக் கவனிப்பது அவளின் அடுத்த சுவாரஸ்யம்! எத்தனை எத்தனை விதவிதமான அழகழகான வாகனங்கள்! ஒருநாள் வெள்ளை வெளேரென்று பனிக்கரடி மாதிரி பளபளவென்று நீ...ள...மா...ன...காரொன்றைப் பார்த்தாள். அரபு ஷேக்குகள் பெரும்பாலும் அவர்களைப் போலவே ஓங்கு தாங்கென்றிருக்கும் பெரிய அளவிலான வாகனங்களிலேயே பயணிக்கிறார்கள். காரணம் பெரும்பாலும் அரபு ஷேக்குகளின் குடும்பம் பெரிதாக இருக்கும். பூங்காக்களிலும் ஷாப்பிங் செண்டர்களிலும் ஒவ்வொரு அரபி ஆணுக்குப் பின்னாலும் சம வயதுள்ள மூன்று நான்கு பெண்களும் துறுதுறுவென்ற குழந்தைகளும் போவதை அவளே பார்த்திருக்கிறாள்.அரபிக்களின் உடை பார்க்க அழகாய் இருக்கும்.
ஆண்கள் கழுத்து முதல் பாதம் வரைக்குமான தொளதொளவென்ற பளீரென்ற வெள்ளையில் அங்கி அணிந்து, தலையில் சிவப்புப் பூக்கள் போட்ட துண்டை விரித்து அதன் மேல் கறுப்பு வண்ணத்தில் இரண்டடுக்கு பிரிமனை மாதிரியான வட்ட வடிவ பின்னலும் அதிலிருந்து தொங்கும் அழகான குஞ்சங்களுமாய் காட்சி அளிப்பார்கள். அரபிக்களின் அந்த உடை சுரேந்திரனுக்கும் ரொம்பப் பிடிக்கும். துபாய் பெஸ்டிவல் சமயத்தில் நடந்த பொருட்காட்சியில் அரபி உடை அணிந்து போட்டோ எல்லாம் எடுத்து வைத்திருக்கிறான். பெண்களும் கறுப்பு அங்கியும் தலையில் கண்கள் மட்டும் வெளித் தெரியும் படியான கறுப்பு பர்தாவும் அணிந்திருப்பார்கள்.
அவ்வப்போது ஆம்புலன்சுகள் அலறலோடு ஓடும் போது அவளுக்கு பதட்டமாய் இருக்கும். இந்த ஊரில் விபத்துக்களும் நோயாளிகளும் அதிகம் என்றும் மருத்துவம் ரொம்பக் காஸ்ட்லி என்றும் அப்படியும் அத்தனை சிறப்பான சிகிச்சை கிடைக்காது என்றும் பலரும் சொல்லக் கேட்டிருக்கிறாள். சுரேந்திரன் அடிக்கடி சொல்வதுண்டு - அவன் வேலை பார்க்கும் இடத்தில் யாருக்காவது சிறு நோயென்றாலும் உடனே ஊருக்குத்தான் கிளம்பி விடுவார்கள் என்றும் ஆஸ்பத்திரிக்கு அதுவும் அரசு மருத்துவமனைகளுக்குப் போகச் சொன்னாலே அலறி விடுகிறார்கள் என்றும்.
அடுத்து அவள் சாலையில் அதிகம் சந்திப்பது தீயனைப்பு வண்டிகளை. இந்த ஊரில் அடிக்கடி எங்காவது எப்படி என்று தெரியாமலே தீப்பற்றிக் கொள்கிறது. பியூலாவே பலதடவைகள் அவள் வீட்டு ஜன்னலிலிருந்து அடுக்குமாடிக் கட்டிடங்களில் கரும்புகை சூழ மஞ்சளும் சிவப்பும் கலந்த ஜுவாலையுடன் தீ கொழுந்து விட்டெரிவதைப் பார்த்து பதறி, கொஞ்ச நேரத்திலேயே ஆம்புலன்ஸ¤ம் தீ அணைப்பு வண்டியும் விரைவதைப் பார்த்து ஆறுதலடைந்திருக்கிறாள்.
பத்து நாட்களுக்கு முன்னால் தான், அவள் தங்கியிருக்கும் கட்டிடத்திலிருந்து பதினைந்து கட்டிடங்கள் தள்ளி இருக்கும் ஒரு கட்டிடத்தில் ஒரு மோசமான தீ விபத்து நடந்து, அந்த குடியிருப்பின் மொட்டை மாடியில் ஆஸ்பெஸ்டாஸ் கூரை போட்ட வீடு நடுஇரவில் தீப்பற்றிக் கொண்டதில் ஒரு புருஷனும் மனைவியும் அவர்களின் இரண்டு சிறுவயதுக் குழந்தைகளும் கருகிப் போயினர்.
இவளும் போய் அந்தக் கோரக் காட்சியைப் பார்த்து வந்தாள். அன்றைக்கு முழுவதும் பொட்டுத் தூக்கமில்லை. எத்தனை கனவுகளோடு பிழைக்க வந்திருப்பார்கள்? இப்படி கரிக்கட்டை யாய் திரும்பிப் போனால் அதைப் பார்த்து அவர்களின் குடும்பம் என்ன பாடுபடும்? நினைக்க நினைக்க வாழ்வின் நிச்சயமின்மை முகத்திலறைய "நாம இப்பவே இந்திவாவுக்குத் திரும்பப் போயிடலாங்க....." என்று பியூலா புலம்பத் தொடங்கி விட்டாள்.அவளை சமாதானப் படுத்தி இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்குள் சுரேந்திரனுக்கு போதும் போது மென்றாகிவிட்டது.
மேம்பாலத்திற்கு அடியில் அதன் நிழலில் சிலர் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பார்கள் எப்போதும். அவர்களில் ஒருத்தனை அவள் அடிக்கடி அங்கு பார்ப்பாள்.அவனுக்கு முப்பது முப்பத்திரெண்டு வயதிருக்கும்.மிக நேர்த்தியாக உடை அணிந்திருப்பான். மற்றவர்கள் மாதிரி அவன் நிழலுக்கு ஒதுங்கிப் போபவனாகத் தெரிவதில்லை.
நண்பகல் தொழுகை முடிந்த நேரத்திலிருந்து சாயங்காலம் நான்கு அல்லது ஐந்து மணி வரை அங்கேயே தான் உட்கார்ந்திருப்பான். எதுவும் செய்யாமல் ஒரே இடத்தில் தொடர்ந்து மணிக்கணக்கில் எப்படி அவனால் உட்கார்ந்திருக்க முடிகிறது என்று அவளுக்கு ஆச்சர்யமாக இருக்கும். ஒரு வேளை அவளைப் போலவே அவனும் பொழுது போகாமல் தெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறானோ என்று நினைத்துக் கொள்வாள்..
அவனைப் பற்றிய நிறைய கேள்விகளுக்கு அவளுக்கு விடை தெரியவில்லை. அவன் யார்? எங்கு வேலை பார்க்கிறான்? வேலைவெட்டி எதுவுமில்லையா அவனுக்கு? வேலைக்காக அழைத்து வரப்பட்டு ஏமாற்றப்பட்டு விட்டவனா? சொந்த நாட்டிற்கும் திரும்பிப் போக முடியாமல் இங்கும் போக்கிடமில்லாமல் அலைகிறவனா?கிடைத்த வேலையைச் செய்கிற கல்லிவெல்லி ஆசாமியா? இங்கெல்லாம் கோடைக் காலங்களில் சில அலுவலகங்களும் வணிக நிறுவனங்களும் நண் பகல் 12 மணியிலிருந்து மாலை 4 மணி வரை இயங்குவதில்லை. அந்த மாதிரி ஓரிடத்தில் வேலை செய்பவனாக இருக்குமோ? ஆனால் இவனை அந்த நேரம் கடந்தும் சில தினங்களில் பார்த்திருக்கிறாளே! மேலும் அப்படிப்பட்டவகள் தாங்கள் தங்கி இருக்கும் அறைகளுக்குப் போய்த் தானே ஓய்வெடுப்பார்கள்! இவனுக்கு அப்படி ஒரு அறையே இல்லாமல் ஒருவேளை காரில் வசிப்பவனோ?
யு.ஏ.இ.யில் சில பேச்சிலர்கள் தங்களின் காரையே வசிப்பிடமாகக் கொண்டு அதிலேயே தங்கி, உண்டு, உறங்கி வாழ்கிறார்கள் என்று பத்திரிக்கைகளில் படித்து அதிர்ந்து போயிருக்கிறாள். டார்மென்ட்றி மாதிரி வசதியுள்ள இடங்களில் குளித்து, மற்ற கடன்களை முடித்துக் கொண்டு பகல் நேரங்களிலெல்லாம் காரிலேயே சுற்றிக் கொண்டிருந்து விட்டு இரவு ஏதாவது இலவச பார்க்கிங்கில் காரை நிறுத்தி காருக்குள்ளேயே உறங்கி விடுவார்களாம்.
இந்தியாவில் இதேபோல வெகு நேரம் காருக்குள் இருந்த சிலர் ஏ.சி.யிலிருந்து வெளியாகும் கார்பன் மோனாக்சைடால் செயலிழந்து மூச்சுத் திணறி இறந்து போன செய்தியை அறிந்ததும் இங்கு காரில் வாழ்பவர்கள் முக்கியமாக அந்த மேம்பால இளைஞன் தான் ஞாபகத் திற்கு வந்தான். கோடைகாலத்தில் இங்கு இரவிலும் வெக்கை இருக்கும். ஏ.சி. இல்லாமல் தூங்கவே முடியாது. அவர்கள் கார்பன் மோனாக்சைடிலிருந்து எப்படி சமாளிக்கிறார்கள்? கடவுளே! சில பேருக்கு ஏன் இத்தனை மோசமான வாழ்வனுபவம்!
`தினசரி பார்க்கிற மேம்பால நிழல் இளைஞனைக் கடந்த சில தினங்களாக அந்த இடத்தில் பார்க்க முடியவில்லை. எங்கு போனான் என்றும் தெரியவில்லை. பொதுவாய் கல்லிவெல்லி ஆட்கள் ஊருக்குப் போவதென்று முடிவெடுத்தால் விமானப் பயணத்திற்கான பணம் சேர்ந்ததும் போலிசில் சரணடைந்து விடுவார்களாம். போலீஸ் அவர்களை ஓரிரு மாதங்கள் சிறையில் வைத்திருந்து விட்டு அவர்களின் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைத்து விடுமாம்.
இவனும் அப்படி கிளம்பிப் போயிருப்பானோ? தினசரி அவனைப் பார்த்துப் பார்த்து கண்கள் பழகி விட்டதால் அவன் மேல் ஒரு இனம் புரியாத பாசம் ஏற்பட்டு விட்டது. அவன் இல்லாமல் அந்த இடம் வெறுமையாய் வெறிச் சோடிக் கிடப்பது போலிருந்தது. அவன் எங்கு போனான் என்பதற்கான விடை சில தினங்களுக்கு முந்தைய செய்தித்தாளில் அவளுக்குக் கிடைத்தது.
ஆங்கிலச் செய்தித் தாளெல்லாம் அவள் வாசிப்பதில்லை. சாயங்காலம் சப்பாத்திக்கு மாவு உருட்டிப் போடுவதற்காக பழைய பேப்பரை எடுத்து விரித்தபோது அதிலிருந்த ஒரு செய்தி வசீகரிக்க அதை வாசித்தவள் அப்படியே அதிர்ந்து போய் விட்டாள். செய்தி இது தான்:
துபாயிலிருக்கிற ஒரு இடுகாட்டில் பிணங்களை அடக்கம் செய்வதற்கு முன்னால் 'அதுகளை'ப் போட்டுக் கழுவுவதற்காக ஒரு அறை இருக்கிறதாம். அன்றைக்கு இராத்திரி அந்தப் பக்கமாய் ரோந்து சுற்றிய போலீஸ்காரனுக்கு அந்த பிணவறையில் ஏதோ நடமாட்டமிருப்பதாய் சந்தேகம் வர, உள்ளே போய் கையிலிருந்த சிகரெட் லைட்டரை எரியவிட்டுப் பார்த்திருக்கிறான். பிணங்களைப் போட்டுக் கழுவும் பிளாட்பாரத்தின் மேல் நிர்வாணமாக ஓர் ஆணும் பெண்ணும் ஆலிங்கனம் செய்து கொண்டிருந்தார்களாம். அவர்களிருவரும் கைது செய்யப் பட்டிருந்தார்கள்.அவர்களை அங்கு அனுமதித்த பிணவறைக் காவலாளி தப்பித்து ஓடிவிட்டானாம். கைதானவர்களின் போட்டோக்களும் போட்டிருந்தார்கள்.
அந்த ஆணும் பெண்ணும் தங்கள் அந்தரங்கம் கேவலப் படுத்தப்பட்ட அதிர்ச்சியில் குமுறி அழுதபடி யிருந்தார்கள். அதிலிருந்த ஆணின் முகம் பியூலாவிற்கு பரிச்சயமானதாயிருக்க கொஞ்சம் உற்றுக் கவனித்தவள் உறைந்து போனாள். அது மேம்பாலத்து நிழலில் ஓய்வெடுக்கும் இளைஞன்.

-- முற்றும்
(நன்றி : நவீன விருட்சம் – ஜுலை 2009)

கவிதை - குடம் தண்ணீரும் குழந்தையின் சிரிப்பும்



குடம் தண்ணீருக்கு ஒரு
குழந்தை காவலா?
பள்ளிக்கூடம் போகாமலே
பருவங்கள் கரைந்தும்
இழப்பு கொஞ்சமும் உறுத்தாமல்
இயல்பாய் சிரிக்குது பாருங்கள்!

இப்பொழுதே சிரித்துக் கொள்
என் இனிய செல்லமே!
பத்திரப் படுத்திக் கொள்
பாதுகாப்பாய் உன் தண்ணீரையும்......
இனி நீ வளரும் நாட்களில்
உன் செம்பு நீரும் சிரிப்பும்
திருடு போய் விடலாம்....!

மூன்று பக்கமும்
தண்ணீர் சூழ்ந்திருந்தும்
பருக ஒருவாய்
நீரும் கிடைக்காமல் அலைகிறது
ஒரு பெருங் கூட்டம் !

ஆற்று நீரெல்லாம்
ஆலைக் கழிவுகளால்
அமிலமாகிப் போனது;
ஊற்றுப் படுகைகளுக் கெல்லாம்
ஊறு நேர்ந்து
உலர்ந்து வெகு காலமாயிற்று.;
காற்றும் விஷமாவது
கவலை அளிக்கிறது கண்ணே.....!

வளர்ச்சி என்றொரு வணிகப் பெயரில்
பறிபோய்க் கொண்டிருக்கிறது
வறியவர்களின் நீரும் நிலமும்....
ஏழைகளின் இரத்தம் உறிஞ்சி
குளிர் பானமென்று
கூவிக்கூவி விற்கிறார்கள்...!

தங்கத்தை விடவும்
தண்ணீருக்கு விலை ஏறுகிறது;
நடக்கிறது நல்லபடி
உலகெங்கும் நீர் வியாபாரம்!

ஆருடம் சொல்கிறார்கள்
அடுத்த உலக மகா யுத்தம்
நீருக்காக இருக்குமென்று....
தடுக்க முடியாமல் போகலாம்
தக்க வைத்துக் கொள் தங்கமே
உன் சிரிப்பையாவது அதுவரை.......