Sunday, December 8, 2013

இராவுத்தர் வாத்தியார் - தினமலர் வாரமலரில் பிரசுரமான சிறுகதை


                        இராவுத்தர் வாத்தியாரின் மரணம் ஊர்க்காரர்கள் எல்லோரையும் ஒட்டு மொத்தமாக உலுக்கி விட்டது. அதை விடக் கொடுமை அவரின் மரணத்தில் யாருமே எதிர்பார்த்திராத பெரும் பிரச்னை ஒன்றும் முளைத்தது. இராவுத்தரை எங்கு அடக்கம் செய்வது?

                        இராவுத்தர் குடும்பத்தினரின் ஏற்பாட்டின்படி அவருக்கான இறுதிச் சடங்குகளை முறைப்படி செய்வதற்காக, ஹஸ்ரத் பட்டம் பெற்ற அவர்களின் குடும்ப நண்பரொருவர் அருப்புக் கோட்டையிலிருந்து வந்திருந்தார். அவர் சொன்ன பின்பு தான், அந்தப் பிரச்னை எல்லோரின் கவனத்திற்கும் வந்து உறுத்தத் தொடங்கியது.

                        கிராமத்தில் சாதிக்கொரு சுடுகாடும் இடுகாடும் இருந்தது. அந்த ஊரில் இராவுத்தர் வாத்தியாரின் வரவுக்கு முன்புவரை முஸ்லீம்களோ கிறிஸ்துவர்களோ யாரும் இல்லை. ஆதலால், முஸ்லீமான இராவுத்தர் வாத்தியாரை எங்கு அடக்கம் செய்வது என்ற பிரச்னை விஸ்பரூபமெடுத்து நின்றது. மசூதிக்குள் அதுவும் பாங்கு ஒலித்த பின்பு தான் முஸ்லீம்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட வேண்டுமென்பது சம்பிரதாயமென்றார் ராவுத்தரின் குடும்ப நண்பர். அதனால் இராவுத்தரின் உடலை அருப்புக் கோட்டைக்குக் கொண்டு போய்விடலாம் என்றும் அவர் அபிப்ராயம் சொன்னார்.

                        ஊர்க்காரர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ’இராவுத்தர் எங்களின் கிராமத்தில் வாழ்ந்தவர்; அவர் இந்த கிராமத்தின் சொத்து! அதனால் அவரின் ஆன்மா இங்குதான் அமைதி கொள்ள வேண்டும். எங்கோ கண்காணாத இடத்திற்கு அவரைக் கொண்டு போவதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்’ என்றார்கள் பிடிவாதமாக. ஆனால் அவரை எங்கே அடக்கம் செய்வது என்கிற கேள்விக்கான பதில் தான் யாருக்கும் தெரிந்திருக்க வில்லை.

                        பத்து நாட்களுக்கு முன்பு தான், சண்முகமும் அவனுடைய கிராமத்தின் முக்கியஸ்தர்கள் சிலரும் சேர்ந்து இராவுத்தர் வாத்தியாரை சென்னை விமான நிலையத்திற்குப் போய் ஹஜ் புனிதப் பயணத்திற்காக, சவூதி அரேபியாவிற்கு விமானம் ஏற்றி அனுப்பி விட்டு வந்திருந்தார்கள். சவூதி அரேபியாவின் மெக்கா நகரில் ஹஜ் பயணிகள் தங்கியிருந்த குடிசைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் நிறையப் பேர் இறந்து போனார்கள்; அவர்களில் இராவுத்தரும் ஒருவர். எல்லோரும் சேர்ந்து ஆசையாய் அனுப்பி வைத்த பயணம் கடைசியில் அவரையே விழுங்கி விட்டதே!  இந்தத் திட்டத்தை முன் மொழிந்தவன் என்ற முறையில் சண்முகத்துக்குள் குற்ற உணர்ச்சி குமைந்து வாட்டியது.

                        தொலைக்காட்சியில் செய்தியைக் கேட்டதும், அலுவலகத்திற்கு போன் பண்ணி மூன்று நாட்கள் விடுப்புச் சொல்லிவிட்டு, அவசரமாக தன்னுடைய கிராமத்திற்கு கிளம்பிப் போனான் சண்முகம்.  பஸ்ஸில் பயணிக்கும் போது அவன் மனம் அமைதியின்றி தவித்தபடி இருந்தது. முட்டிக் கொண்டு அழுகை பீறிட்டது.

                        எத்தனை மகத்தான மனிதர் அவர்! மொஹிதீன் முகமது என்பது தான் அவருடைய பெயர். அந்தப்பெயர் பள்ளிக்கூட பேரேடுகளில், அவர் கையெழுத்துப் போட்டு சம்பளம் வாங்குவதற்கு மட்டும் தான்! ஊரில் இராவுத்தர் வாத்தியார் என்று தான் அவர் பிரபலம். வேறு எந்தப் பணியும் கிடைக்காததால் சிலர் ஆசிரியப் பணியை ஏற்றுக் கொள்கிறார்கள்; மிகச் சிலரே ஆசிரியப் பணிக்கென்றே பிறந்து, அதற்காகவே தங்களை அர்ப்பணித்துக் கொள்கிறார்கள். இதில் இராவுத்தர் வாத்தியார் இரண்டாவது ரகம்.

                        வாத்தியார் என்றாலே அது எம்.ஜி.ஆரையே குறிக்கும் சொல்லாக இருந்த காலகட்டத்திலும், சண்முகத்தின் கிராமத்தில் மட்டும் அது இராவுத்தரைக் குறிக்கும் சொல்லாக புழக்கத்திலிருந்தது. ஒவ்வொருவரும் எங்கள் வாத்தியார் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்வார்கள். ஆசிரியப் பணி நிமித்தமாக தன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் ஊருக்குள் வந்து குடியேறியவர், வெகு சீக்கிரமே கிராமத்தில் ஒருவராய் கலந்து போய் விட்டார்.

                        இராவுத்தர் வாத்தியாரின் பூர்வீகம் மேற்கு வங்காளத்தில் கல்கத்தாவிற்கு அருகில் ஏதோ ஒரு கிராமம்! இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் போது நடந்த கலவரத்தைத் தொடர்ந்து உயிர் பிழைத்தால் போதுமென்று அவரின் சொந்தங்கள் யாவரும் பாகிஸ்தானுக்குக் குடி போய் விட்டார்கள்.           இராவுத்தரின் அப்பாவுக்கு அங்கு போவதில் விருப்பமில்லை! கல்கத்தாவிலும் தொடர்ந்து வசிக்க முடியாத கலவர சூழல். அவரின் ஆத்மார்த்தமான நண்பரொருவர் தான், தமிழ்நாட்டில்  அருப்புக்கோட்டையில் வசிக்கும் தன் உறவினர்களின் முகவரி கொடுத்து அனுப்பி வைத்திருக்கிறார். அங்கு போனவர்கள் அந்த ஊரில் கொஞ்ச நாள் தங்கி இருந்து வசிக்கத் தொடங்கி யிருக்கிறார்கள்! அப்புறம் அந்த ஊரிலேயே நிலை கொண்டு விட்டார்கள்

                        இராவுத்தரைப் பார்த்தாலே  வணங்கச் சொல்கிற மரியாதையான தோற்றம். எப்போதும் தும்பைப் பூ போல வெளுத்த வேட்டியும் சட்டையும் தான் அணிந்திருப்பார். கிராமத்துக்காரர்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும்; நம்ம ஊர்க் கண்மாய்த் தண்ணியில் கூட இராவுத்தர் அம்மா எப்படி இத்தனை வெண்மையாக துவைத்துக் கொடுக்கிறார்கள் என்று. அடர்த்தியான தலைமுடியை மிகவும் வித்தியாசமாக இரண்டு காதோரங்களிலும் வகிடெடுத்து ஏற்றிச் சீவி இருப்பார். அது மிகவும் வசீகரமாக இருக்கும்; சண்முகத்திற்கும் அவரைப் போலவே சீவிக் கொள்ளப் பிடிக்கும்.

                        ஆனால் அவன் எவ்வளவோ முயன்றும் அவரைப் போலவே சீவிக் கொள்வது எந்த வயதிலும் அவனுக்குச் சாத்தியப் படவேயில்லை. வாத்தியார் நெடுநெடுவென்று உயரம்; வறுமை பிடுங்கித் தின்றதால் உயரத்திற்குத் தகுந்த சதைப் பிடிப்பில்லாமல் கொஞ்சம் நோஞ்சானாகத் தெரிவார். ஆனாலும் முகத்தில் சுடர்விடும் களைக்கும் நடையில் தெரியும் கம்பீரத்திற்கும் என்றுமே குறைவிருக்காது.

                        அம்மைத் தடுப்பூசி போடுகிறவனுக்கு அப்புறம் ஊர்க்காரர்கள் அதிகம் பயந்தது இராவுத்தர் வாத்தியாருக்குத் தான். எப்போது யாரைப் பார்த்தாலும் ஒன்று பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பச் சொல்லி வற்புறுத்துவார்; அல்லது குடும்பக் கட்டுப்பாடு பண்ணிக்கச் சொல்லிக் கெஞ்சுவார்.

                        ஒவ்வொரு வாத்தியாரும் வருஷத்திற்கு குறைந்த பட்சம் சிலரையாவது குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்வதற்கு பிடித்துக் கொடுக்க வேண்டுமென்ற கட்டாயம் அமுலில் இருந்த கால கட்டம் அது. அதனால் இராவுத்தரைத் தூரத்தில் பார்த்தாலே கிராமத்துக் காரர்கள் ஓடி ஒளிந்து கொள்வார்கள்.

                        இராவுத்தர் வாத்தியாரிடம் பாடம் கேட்க நேர்ந்தவர்கள் நிஜமாகவே பாக்கியவான்கள்; மூன்றாம் வகுப்பு ஆங்கிலப் பாடத்திலிருந்து பள்ளிப் பிள்ளைகள் இராவுத்தரின் வளைய வரம்புக்குள் வரத் தொடங்குவார்கள். ஒரு பூவை மலர்விப்பது போல், அம்மா சங்கில் பால் புகட்டுவது போல் மெதுமெதுவாய் பாடங்களைப் பையன்களின் மூளைக்குள் ஏற்றுவார். அதுவும் ஆங்கிலமும் கணிதமும் இராவுத்தரிடம் வாசிக்க நேர்ந்தவர்களுக்கு ஆயுளுக்கும் மறக்காது.

                        இராவுத்தர் பாடம் நடத்தும் போது தன்னை மிகக் கடுமையானவராகக் காண்பித்துக் கொள்வாரே தவிர, மனதளவில் பனிக்கட்டி மாதிரி மிகவும் இலகுவானவர்; உடனே உருகி விடும் தன்மையானவர். கோபத்தில் நறுக்கென்று தலையில் கொட்டி விட்டு அப்புறம் அருகில் அழைத்து வலிக்குதாடா என்று வாஞ்சையாய்த் தலையைத் தடவிக் கொடுக்காத மாணவர்களே இருக்க முடியாது.

                        சண்முகத்தின் ஊரில் ஜாதிப் பிரிவுகள் தான் உண்டு. மதம் பற்றி அவர்கள் அதிகம் அறிந்திருக்க வில்லை. அந்த ஊருக்கு வந்த முதல் முஸ்லீம் குடும்பம் இராவுத்தருடையது தான். முஸ்லீம் என்பதையும் அவனின் ஊர்க்காரர்கள் இன்னொரு ஜாதியாகத் தான் புரிந்து கொண்டார்கள்.  தேவரே, நாயக்கரே என்பது போல் அவரையும் இராவுத்தரே என்று உரிமையோடும் உள்ளன்போடும் அழைத்து மகிழ்ந்தார்கள்.

                        இராவுத்தரும் மதம் பற்றியெல்லாம் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை; பள்ளியில் அவரின் தலைமையில் தான் சரஸ்வதி பூஜையும் விநாய சதூர்த்தியும் அமர்க்களமாகக் கொண்டாடப்படும். சுயமாய் அவர் புனைந்த பக்திப் பாடல்களைத் தான் அந்த பூஜைகளில் மாணவர்கள் பாடுவார்கள். அம்மன் மேல் அவர் இயற்றிய எத்தணையோ கும்மிப் பாடல்கள் ஊர்த் திருவிழாவில் இப்போதும் பாடப்படுவதுண்டு.

                        மழைக்கஞ்சி ஊற்றும் கொண்டாட்டத்தில் கூட அவரின் குடும்பமே கலந்து கொண்டு குதூகலப்படும். யாராவது அவரிடம், “நீங்க ஏன் இராவுத்தரே இங்கெயெல்லாம் வந்து சிரமப் படுறீங்க…” என்றால்  “ஏன், மழை எங்களுக்கும் தான வேணும் ……” என்று விகல்ப மில்லாமல் சிரிப்பார்.

                         இராவுத்தருக்கு அவரின் அல்லாவின் மீதும் அதீத பிரியமும் பக்தியுமிருந்தது. அவர் குடியிருந்த ஊரிலும்,  அக்கம் பக்கத்திலும் எங்குமே மசூதி என்று எதுவுமில்லை. அதனால் வகுப்பறையிலேயே ஒரு ஓரத்தில் பிரார்த்தணைக் கென்றே பிரத்யேகமான வேலைப்பாடுகளுடன் தயாராக வைத்திருக்கும் ஒரு துண்டை விரித்து, தலையில் ஒரு வெள்ளைக் கைக்குட்டையைப் போட்டுக் கொண்டு, முழந்தாளிட்டு கைகளைத் தூக்கி பிரார்த்தணை செய்வதை பள்ளிப் பிள்ளைகள் பலரும் பயமும் பக்தியுமாய்  பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

                        விஷேச நாட்களில் ஆடு வெட்டி இறைச்சி விற்கும் முனியாண்டி மாமா கூட இராவுத்தர் கறி வேண்டுமென்று கேட்டிருந்தால், அவர் வந்து முணுமுணு வென்று ஏதோ ஓதி, ஆட்டுத் தலையில் இலேசாய்க் கீறித் தந்த பின்பு தான், ஆட்டை அறுத்து முதலில் இராவுத்தருக்குத் தந்து விட்டுக் கூறு போட்டு மற்றவர்களுக்குத் தருவார்.

                        இராவுத்தரிடம் சண்முகம் ஒருமுறை இது ஏனென்று துடுக்குத் தனமாக கேட்டபோது, சின்னப்பையன் தானே, இவனுக்கென்ன சொல்வது என்று உதாசீனப் படுத்தாமல், எந்த உயிரும் துடிதுடித்துச் சாகக் கூடாது என்பதற்காக குரானிலிருந்து சில வசனங்களை ஓதி, அந்த உயிர் அமைதியாக அல்லாவிடம் போய்ச் சேர்வதற்காகத்தான், வேதம் ஓதப்படுகிறது என்றும் அப்படி வெட்டப்படும் இறைச்சி ஹலால் உணவாகும் என்றும் சிரத்தையாக விளக்கம் சொன்னார்.                             இராவுத்தருக்குப் பாடம் சொல்லித் தருவதை விடவும் மிகவும் பிடித்தமான விஷயம் விவசாயம்! விவசாயம் சம்பந்தமான பல்வேறு அறிவுரைகளை அவர் குடியானவர்களுக்கு வாரி வாரி வழங்கிக் கொண்டே இருப்பார். அதுமட்டுமில்லாமல் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பிள்ளைகளை கண்மாய்க் கரைக்கு அழைத்துக் கொண்டு போய் மரக்கன்றுகளை நடச் செய்து கொண்டிருப்பார்; அல்லது பள்ளிக்குச் சொந்தமான தோட்டத்தில் காய்கறிகளையும் பழமரங்களையும் நட்டு அதைப் பராமரித்துக் கொண்டிருப்பார்.

                        அப்போது அமலில் இருந்த மதிய உணவுத் திட்டத்தில் மற்ற பள்ளிகளில் எல்லாம் வெறும் கோதுமை உப்புமாவும் நெல்லுக் கஞ்சியும் அதற்குத் தொட்டுக் கொள்ள கடலை மாவைக் கரைத்து செய்த கொடூரமான ஒரு குழம்புமே பரிமாறப்பட, இவர்களின் பள்ளியில் மட்டும் பள்ளித் தோட்டத்தில் விளைந்த கீரைக் குழம்பும், கத்தரிக்காய், வெண்டைக்காய் என்று விதவிதமான காய்கறிகளும் பரிமாறப்பட்டு, பிள்ளைகளை ஆசை ஆசையாய் பள்ளிக்கு வரவழைத்தன. 

                        அப்படி ருசியான மத்தியானச் சாப்பாட்டிற்காகவும் இராவுத்தரின் நச்சரிப்பிற்காகவும் பள்ளிக்கு அனுப்பப் பட்டவர்களில் சண்முகமும் ஒருவன். ஆனால் படிப்பில் அவனுக்கிருந்த ஆர்வத்தையும் சூட்டிகையையும் மிகச் சரியாய் அடையாளங் கண்டு  கொண்டு அவனை உற்சாகப் படுத்தி படிக்க வைத்தவர் இராவுத்தர் தான். எட்டாம் வகுப்பிற்கப்புறம் அவனின் படிப்பை நிறுத்தி, அவனை காட்டு வேலைகளுக்கு அனுப்ப  அவனுடைய அய்யா முற்பட்ட போது, இராவுத்தர் தான் அவனின் அய்யாவிடம் பக்குவமாய் எடுத்துச் சொல்லி, அவரின் மனதை மாற்றி அவன் பக்கத்து ஊரில் போய் மேற்கொண்டு படிக்க ஏற்பாடு செய்தார்.

                        ’ஒண்ணுக்குத் தண்ணிக்கு…’ என்று கிராமப் பள்ளிகளில் வழக்கத்திலிருக்கும் 15 நிமிஷ இடைவேளையில் வாத்திமார்களுக்கு டீ வாங்கி வந்து தருகிற வேலை பெரும்பாலும் சண்முகத்திற்குத் தான். இராவுத்தரின் டீயில் இனிப்புத் தூக்கலாக இருக்க வேண்டும்; இரத்தினசாமிக்கு இனிப்பே கூடாது; பெருமாள்சாமிக்கு ஸ்ட்ராங் டீ; கந்தசாமி வாத்தியாருக்குக் காஃபி என்பதெல்லாம் அவனுக்குத் தான் அத்துபடி. ஆசிரியர்கள் அவரவர் வகுப்பில் காத்திருக்க இவன் ஒவ்வொரு வகுப்பிற்கும் போய் அவர்களுக்கான சரியான டீக் கோப்பையை எடுத்துக் கொடுப்பான்.

                        இராவுத்தர் டீக்குடிக்கிற அழகு தான் மிகவும் வேடிக்கையாகவும் வேதணையாகவும் இருக்கும். கிளாஸை வாங்கியதும் ஒரு வெறியுடனும் ஆர்வத்துடனும் கிளாஸில் டீ குறைவதை ஒவ்வொரு மடக்கிற்கும் பரிதாபமாகப் பார்த்தபடி மூன்று அல்லது நான்கு மிடறு தான் விழுங்குவார். அப்புறம் வகுப்பிற்கு வந்து ஏற்கெனவே காத்திருக்கும் அவரின் பிள்ளைகளிடம் டீக்கிளாஸ் பயணிக்கும்.

                        அவர்களும் ஆளுக்கு இரண்டு அல்லது மூன்று மடக்கு; மீண்டும் ராவுத்தரிடம் டீக்கிளாஸ் திரும்பி வரும் போது தேயிலைக் கசடுகளுடன் கொஞ்சூண்டு தான் மிச்சமிருக்கும். அதையும் ஒட்ட உறிஞ்சிக் குடித்து விட்டுத் தான் கிளாஸைக் கொடுப்பார்.

                        ஆளுக்கொரு டீ வாங்கிக் குடிக்க இராவுத்தருக்கு வசதி இருந்ததில்லை. அவரின் வீட்டில் அள்ள அள்ளக் குறையாமல் வறுமையும் இரண்டு அல்லது மூன்று வருஷத்திற்கொரு குழந்தையும் தான் பெருகிக் கொண்டிருந்தன. அரிசிச் சோறெல்லாம் அவரின் வீட்டிலும் அபூர்வந்தான். கம்மஞ்சோற்றைக் கரைத்துக் குடித்து விட்டு அவர் பாடம் நடத்தும் போது காதடைத்த நாட்கள் தான் அநேகம். ஆனாலும் இராவுத்தருக்குள் இருந்த இளகிய மனத்தை ஒருமுறை தரிசிக்க நேர்ந்த சண்முகம் கதறி அழுது விட்டான்.

                        சண்முகத்தின் குடும்பமும் அன்றாடங்காய்ச்சி வகையினது தான். அவனுக்கும் பால் கலந்த டீ என்பதெல்லாம் கனவில் மட்டும் காணக் கிடைக்கும் தேவபானம் தான். ஒருமுறை வாத்தியார்கள் டீக் குடித்த பின்பு, ஒவ்வொரு கிளாஸிலும் தூரில் மிச்சமிருக்கும் டீத்துளிகளை இராவுத்தரின் கிளாஸில் சேகரித்து ஆசையுடன் குடிக்கப் போக, இராவுத்தர் அதைப் பார்த்து விட்டார்.

                        கோபமாய் சத்தம் போட்டு அழைத்தார். இவன் நடுங்கியபடி அருகில் போகவும் வாஞ்சையாய்த் தலையைத் தடவி “அப்படியெல்லாம் பண்ணக் கூடாது…” என்று அனுப்பி வைத்தார். அடுத்த நாள் அவனிடம் அதிகப்படியாய் ஒரு டீயும் வடையும் வாங்கி வரச் சொன்னார். இவன் அவரின் பிள்ளைகளுக்கென்று நினைத்துக் கொண்டிருக்க,  அவனுக்கே கொடுத்து குடிக்கச் சொன்னார். சண்முகம் சங்கோஷப்பட்டு மறுத்தான்.

                         “வெட்கப் படாம குடி; ஆனா எச்சில் மட்டும் என்னைக்குமே உனக்கு வேண்டாம்….” என்றார். அன்றைக்கு அவன் குடித்த டீயின் ருசியை அவனுக்கு வசதி வந்து பெரிய பெரிய நட்சத்திர ஓட்டல்களில் குடிக்க  நேர்ந்த போது கூட அவன் அனுபவித்ததில்லை; டீயின் ருசி என்பது டீயில் மட்டுமா இருக்கிறது?  

                        முறைசாராக் கல்வி என்ற பெயரில், படிப்பைத் தொடர முடியாமல் பாதியில் நிறுத்தியவர்களுக்காகவும், படிக்கவே சாத்தியமில்லாத முதியவர்களுக்காகவும் இரவுப் பள்ளிகள் தொடங்கப் பட்ட போது, “இதென்ன, இராத்திரி பகல் எந்நேரமும் சொல்லிக் குடுத்துக்கிட்டே இருக்குற சள்ளையான வேலை….” என்று சக ஆசிரியர்கள் சலித்துக் கொண்ட போதும் இராவுத்தர் அதையும் மிகவும் உற்சாகமாகவே ஏற்றுக் கொண்டார்;  ஒருநாளும் அலுத்துக் கொண்டதே இல்லை.

                        இரவுப் பள்ளியின் பாட வேளைகளில் விதவிதமாய்க் கதைகள் சொல்லியும், சுவாரஸ்யமாகப் பாடம் நடத்தியும் தனித் தனியாய் ஒவ்வொருவரின் மீதும் விஷேச கவனம் செலுத்தியும் அவர்களை ஆர்வமாய்ப் பள்ளிக்கு வரவழைத்தார். ஒரு கால கட்டத்தில் அந்த கிராமத்தில் கையெழுத்துப் போடத் தெரியாத முதியவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்கியதில் இராவுத்தருக்குப் பெரும் பங்கு இருந்தது.

                        சண்முகத்திற்கு என்ஜினியரிங் கல்லூரியில் இடம் கிடைத்து, அவனைக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டிய நேரத்தில் அவனின் அப்பாவால் பணம் புரட்ட முடியவில்லை. பருத்தி ஏவாரியிடம் அவர்களின் பணமிருந்தது. அவரோ உரிய நேரத்திற்குத் தராமல் இழுத்தடித்துக் கொண்டிருந்தார். எத்தனையோ பேரிடம் கேட்டும் யாரும் அவசரத்திற்கு உதவ முன் வரவில்லை. இதை எப்படியோ அறிந்து கொண்ட இராவுத்தர் அப்பாவை அழைத்து, அந்த மாதம் வாங்கியிருந்த அவரின் மொத்தச் சம்பளத்தையும் கவரோடு கொடுத்தார்.

                        ”அய்யோ வேண்டாம் சார்….. நீங்களே புள்ள குட்டிகள வச்சுக்கிட்டு கஷ்டப் படுறீங்க; எல்லாத்தையும் குடுத்துட்டா எதைவச்சு சாப்புடுவீங்க!” என்று தயங்கி அய்யா மறுத்த போது, “அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்; நம்ம ஊர்லயே முதல் தடவையா ஒருத்தனுக்கு இன்ஜினியரிங் படிக்க இடம் கிடைச்சுருக்கு….! முதல்ல பையனக் காலேசில போய் சேர்த்துட்டு வாங்க….” என்று வற்புறுத்தி பணத்தைக் குடுத்து அனுப்பி வைத்தார்.

                        சண்முகம் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது, ஒரு கார்த்திகை திருநாளுக்கு ஊருக்கு வந்திருந்தான். மாம்பிலி சுற்றுதலும், கபடி விளையாட்டுக்களும் முடிந்து, பெண்கள் அகல் விளக்குகளை நீரில் விட்டுக் கொண்டிருப்பதை கண்மாய்க் கரையில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது, கார்த்திகை தீபத்தை விடவும் பிரகாசமான அழகுடன் இராவுத்தரின் மூன்றாவது பெண் அம்ருதாபேகம் தனிமையில் போய்க் கொண்டிருப்பதைக் கவனித்தான். எட்டாம் வகுப்பு வரை அவனுடன் சேர்ந்து படித்தவள் தான் அம்ருதா. அப்போதெல்லாம் அவள் அவனுக்குள் எந்த விதமான சலனங்களையும் ஏற்படுத்தியதே இல்லை. ஆனால் அன்றைக்கு அவளின் அழகு அவனை என்னவோ செய்தது. ஒருநிமிஷம் நிதானம் தவறி, தன் கையிலிருந்த ஒட்டுப்புல்லை அவளின் தலையில் தேய்த்து விட்டு ஓடிப் போனான்.

                        அம்ருதாவும் சிரித்துக் கொண்டே ஒட்டுப்புல்லைத் தன் தலையிலிருந்து எடுத்துக் கொண்டிருப்பதை அவளுடைய மூத்த அண்ணன் அப்துல் பார்த்து, யார் அவளின் தலையில் ஒட்டுப்புல் தேய்த்தது என்று கேட்கவும் அவளும் எதார்த்தமாய் சண்முகத்தின் பெயரைச் சொல்லி விட்டாள். பொதுவாய் ஊரில் முறைப் பையனும் பெண்ணும் தான் ஒருவருக்கொருவர் ஒட்டுப்புல் தேய்த்து விளையாடுவது வழக்கம்; இவன் எதற்கு தன் தங்கையின் தலையில் ஒட்டுப்புல் தேய்க்க வேண்டும் என்று மிகவும் கோபமாகி, சண்முகத்தை அடிக்கப் போய்விட்டான். இதைக் கவனித்து விட்ட இராவுத்தர் அப்துலை அழைத்து சத்தம் போட்டு, விஷயத்தை இத்தோடு விட்டு விடும்படி  கண்டிப்பாகச் சொல்லி விட்டார்.

                        அப்புறம் சண்முகத்தை அழைத்து, “இந்த வயசுல படிக்கிற வேலைய மட்டும் பாரு; மனச அலை பாய விடாத…. கல்யாண வயசு வந்ததும் அப்பவும் உனக்கு அம்ருதா மேல ஆசை இருந்தா, இந்த சமூகத்த எதுத்து நிக்கற தைரியம் இருந்தா என்கிட்ட வந்து சொல்லு; சந்தோஷமா உனக்கு அம்ருதாவ நிக்காஹ் பண்ணி வைக்கிறேன்….” என்றார். அப்படியெதுவும் நடக்கவில்லை. அந்த வயதில் பெண்கள் மேல் வரும் ஈர்ப்பிற்குப் பெயர் காதல் இல்லை என்பதை அதட்டலோ அலட்டலோ இல்லாமல் புரிய வைத்தவர் இராவுத்தர் தான்.

                        இராவுத்தர் சொல்வதை ஊர்க்காரர்கள் பெரும்பாலும் தட்டாமல் கேட்டுக் கொள்வார்கள். ஒரே ஒருமுறை அவர் சொல்வதை அவர்கள் கேட்காமல் போய் அதனால் ஊருக்கு பெரும் அழிவும் நேர்ந்தது. கண்மாய்க் கரையின் கீழே தான் கிராமத்திற்கே பொதுவான பெரிய குடிதண்ணீர்க் கிணறு இருந்தது. கடுங்கோடையிலும் வற்றாமல் இளநீர் மாதிரி சுவையான தண்ணீரை வழங்கிக் கொண்டிருந்தது அது. இராவுத்தர் கண்மாய்க் கரையில் வைத்த மரங்கள் வளர்ந்து, பெரிதாகி அதில் பறவைகள் குடியேறத் தொடங்கவும், பறவைகளின் எச்சத்தால் குடிதண்ணீர்க் கிணறு பாழ்படத் தொடங்கியது.

                        சுவையான குடிதண்ணீர்க் கிணற்றை இழக்க மனமில்லாமல் ஊர்க்காரர்கள் கிணற்றைச் சுற்றியிருந்த கண்மாய்க் கரை மரங்கள் சிலவற்றை வெட்டி விடுவதென்று தீர்மானித்தார்கள். இதைக் கேள்விப்பட்டதும் இராவுத்தர் வாத்தியார் பதறிப் போனார். அவர் மரங்களைத் தன் பிள்ளைகளை விடவும் பெரிதாய் நேசித்து பிரியமாய் வளர்த்திருந்தார். அவரால் மரங்கள் வெட்டுப் படப் போவதைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. எல்லோரிடமும் மரங்களை வெட்ட வேண்டா மென்றும் வேறு ஏதாவது நீரோட்டம் மிகுந்த இடத்தில் குடி தண்ணீருக்குக் கிணறு தோண்டிக் கொள்ளும் படியும் அழுது கெஞ்சி அலுத்துப் போனார். ஆனால் யாருமே அவரின் ஆலோசணையை செவி மடுக்க வில்லை.

                        மரங்கள் வேரோடு வீழ்த்தப்பட்ட அன்று கூடுகளை இழந்த பறவைகளின் கூக்குரலில் கிராமமே  நடுங்கியது. அந்த வருஷம் பெருமழை பெய்து, கண்மாய் நிறைந்து, மரங்கள் வேரோடு வெட்டப் பட்டிருந் ததாலும், கரை மண் நெகிழ்ந்து கிடந்ததாலும், கண்மாய்க்கரை உடைப்பெடுத்து, ஊருக்குள் வெள்ளம் புகுந்தது.

                        ஆடு, மாடு, கோழிகள் அனேகமும் மிகச்சில மனிதர்களும் இறந்தார்கள். சில குடிசை வீடுகளும் நீரில் மூழ்கி அழிந்தன. அன்றைக்கே ஊர்க்காரர்கள் அவசர அவசரமாய்க் கரையைச் செப்பனிட்டு புதிய மரங்களை நட்டு வளர்க்கத் தொடங்கினார்கள். வேறொரு இடத்தில் புதிதாய்க் கிணற்றையும் வெட்டிக் கொண்டார்கள்.

                        இராவுத்தரைப் பற்றி எப்போது நினைத்தாலும், அவர் பலராமு நாயக்கரிடம் அடி வாங்கிய ஒரு சம்பவமும் கசப்புகளுடன் வந்து தொண்டையை அடைத்து விடும் சண்முகத்திற்கு. அப்போது சண்முகம் ஏழாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான். அந்த வருஷம் பள்ளி தொடங்கி 25 வருஷம் நிறைவானதை ஒட்டி பள்ளி புதுப் பொலிவுடன் புதுப்பிக்கப்பட்டிருந்தது. ஆண்டுவிழாவும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப் பட்டது.

                        அந்த விழாவில் இராவுத்தர் வாத்தியார் எழுதி, மாணவர்களை நடிக்க வைத்து இயக்கிய ஒரு நகைச்சுவை நாடகமும் அரங்கேறியது. அந்த நாடகத்தில் சண்முகமும் ஒரு கத்துக் குட்டி வக்கீலாக நடித்திருந்தான். நாடகத்தின் கதை அத்தனை துல்லியமாய் ஞாபகமில்லை அவனுக்கு. ஒரு செட்டியாருக்கும் பகடைக்கும் ஏதோ ஒரு வழக்கு; அவர்கள் நீதிமன்றத்திற்கு வந்து தங்கள் வழக்கைச் சொல்லி அது பைசல் பண்ணப் படுவதுதான் கதை  என்று ஞாபகம்!

                        காட்சிக்குக் காட்சி சிரித்துச் சிரித்து, அரங்கம் குலுங்கி, கிராமத்திற்கே வயிற்று வலி வந்து விட்டது. பலராமு நாயக்கரின் மகன் ரெங்கையா தான் கதாநாயகன்; பகடையாக வேஷங்கட்டி, இடுப்பில் நாலுமுழ வேட்டியும், கட்கத்தில் இடுக்கிய துண்டுமாய், அதீத உடல் மொழியால் அமர்க்களப் படுத்தி விட்டான். அவன் மேடைக்கு வந்து நின்றாலே கூட்டம் விழுந்து புரண்டு சிரித்தது. நாடகம் முடிந்த பின்பு எல்லாத் திசைகளிலிருந்தும் அவன் மீது பொழிந்த பாராட்டு மழையில் நனைந்து மகிழ்ந்து கொண்டிருந்தான்.

                        நாடகம் முடிந்து நான்கைந்து நாட்கள் கடந்திருந்த நிலையில், இராவுத்தர் வாத்தியாரை வழி மறித்த பலராமு நாயக்கர் காரணம் இன்னதென்று சொல்லாமலே அவரை அடிக்கத் தொடங்கி விட்டார். சாவடியிலிருந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஊர்க்காரர்கள் ஓடிப் போய் பலராமு நாயக்கரைப் பிடித்து இழுத்துக் கொண்டார்கள். “இந்தத் துலுக்கன் எங்க பரம்பரைக்கே பெரிய அவமானத்த தேடிக் குடுத்துட்டான்; இவனக் கொல்லாம விட மாட்டேன்…” என்றபடி அவர்களின் பிடியில் நிற்காமல் திமிறிக் கொண்டிருந்தார்.

                        பலராமு நாயக்கரைப் பிடித்திருந்தவர்கள், அவரை நாலு சாத்து சாத்தவும், “கம்பளத்து நாயக்கன் குலத்துல பொறந்த என் மகன இவன் சக்கிலியனாக்கிட்டானே!” என்றார். தொடர்ந்து ”பையன் அசல் பகடையாட்டமே இருக்கானே! உனக்குத் தான் பொறந்தானா, இல்ல….ன்னு சம்பந்தி காரப் பயலுகள் எல்லாம் எகத்தாளமும் ஏகடியமும் பண்றான்களே! ” என்றபடி வெடித்து அழத் தொடங்கி விட்டார்.

                        அன்றைக்கு இராவுத்தர் வாத்தியார் பள்ளிக்கு வரவில்லை. இராவுத்தர் மாதிரியான தேவ தூதரை ஒரு சாமானியன் எப்படி அடிக்க முடியும் என்பதைப் பள்ளிப் பிள்ளைகளால் நம்பவே முடியவில்லை. எல்லோரும் விசனப்பட்டுக் கொண்டும் பலராமு நாயக்கரை ஏதாவது செய்ய வேண்டுமென்றும் சதி ஆலோசணைகள் தீட்டிக் கொண்டு மிருந்தார்கள். பலராமு நாயக்கர் தூங்கும் போது அவர் மூக்கில் தலையணையை அமுக்கி, மூச்சை நிறுத்தி அவரைக் கொன்று விடுவதற்கான திட்டத்தைச் சொன்னவன்  அவரின் பையன் ரெங்கையா தான்!

                        இந்த விஷயம் ஊர்ப் பஞ்சாயத்துக்கு வந்தது. பலராமு நாயக்கர் இராவுத்தர் வாத்தியாரின் காலில் விழுந்து  மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று தீர்ப்புச் சொல்லப்பட்டது. இராவுத்தர் வாத்தியார் பதறிப்போய், “அய்யோ அதெல்லாம் வேண்டாம்…. அவர் மேல எனக்கு எந்தக் கோபமும் இல்ல; ஏற்கெனவே அவர் மனசு ஒடஞ்சு கெடக்குறார்; இதுக்கு மேலயும் அவரக் கஷ்டப் படுத்தாதீங்க….” என்று சொல்லி பஞ்சாயத்திலிருந்து எழுந்து போய் விட்டார்.

                        இராவுத்தர் வாத்தியார் பணியிலிருந்து ஓய்வு பெறப் போகிறார் என்ற செய்தி கிடைத்ததும் ஊர்க்காரர்கள் அவருக்குப் பெரிதாய் ஏதாவது செய்ய வேண்டுமென்று ஆசைப் பட்டார்கள். என்ன செய்யலாம் என்று பல சாத்தியங்களையும் அலசி ஆராய்ந்து, சண்முகம் தான் அவரை ஹஜ் பயணத்திற்கு அனுப்பி வைக்கலாம் என்று அபிப்ராயம் சொன்னான். மார்க்கக் கடமைகளில் ஒன்றான ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள வேண்டு மென்பது அவரின் ஆன்மீக இலட்சியம் என்பதையும், அவரின் வறுமையான வாழ்க்கைச் சூழலில் அது அவருக்கு என்றுமே சாத்தியப்படாது என்பதையும் அவன் அறிந்திருந்தான்.

                        ஊர்க்காரர்கள் சண்முகத்திடமே அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார்கள். பள்ளியின் பழைய மாணவர்களுக்கு விபரம் சொல்லி எழுதவும் பணம் வந்து குவிந்தது. ஊர்ப் பொதுவிலிருந்தும் பெருந் தொகையைக் கொடுத்தார்கள். இராவுத்தரைச் சம்மதிக்க வைப்பதற்குத் தான் பெரும்பாடு பட வேண்டி யிருந்தது. ஹஜ் பயணத்தை சொந்தப் பணத்திலிருந்து தான் மேற்கொள்ள வேண்டுமென்றும் இரவல் பணத்தில் கூடாது என்றும் சொல்லி பிடிவாதமாய் ஏற்றுக் கொள்ள மறுத்தார். இதுவும் உங்களின் பணம் தான் என்றும், அரசாங்கம் ஏழை முஸ்லீம்கள் புனிதப் பயணம் செல்வதற்கு பண உதவி செய்வதைப் போல் இதையும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும் எல்லோரும் வற்புறுத்தவே, அவர்களின் மனம் வருந்தக் கூடாது என்பதற்காக அரை மனதுடன்  ஏற்றுக் கொண்டார்.

                        சண்முகம் கிராமத்திற்குப் போய்ச் சேர்ந்த அடுத்தநாள் தான் இராவுத்தரின் சடலம் சவூதியிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து அமரர் ஊர்தி மூலம் கிராமத்திற்கு வந்து சேர்ந்தது. ஊரே துக்கத்தில் விம்மி வெடித்து அழுது அரற்றியது. இராவுத்தர் வாத்தியாரை அடக்கம் செய்வது சம்பந்தமாக விவாதித்து முடிவெடுக்க ஊர்க் கூட்டம் காளிஅம்மன் கோவிலில் கூட்டப் பட்டிருந்தது. ஆளாளுக்கு ஒரு ஆலோசணைகளை அள்ளி வழங்கிக் கொண்டிருந்தார்கள். எதுவும் சிலாக்கியமாக இருக்க வில்லை.

                        பலராமு நாயக்கர் முதுமையின் தள்ளாட்டத்துடன் பஞ்சாயத்தாரின் முன்னால் வந்தார். பள்ளிக்குச் சொந்தமான தோட்ட நிலத்திற்குப் பக்கத்தில் தங்களுடைய பூர்விக சொத்தான ஆறரை ஏக்கர் நிலமிருப்பதாகவும், அதைத் தான் ஊருக்கு பொதுவில் எழுதிக் கொடுத்து விடுவதாகவும், அங்கு நாகூரில் உருவாக்கப் பட்டது போல், மசூதி ஒன்றைக் கட்டிக்கொண்டு அங்கு  இராவுத்தரை அடக்கம் செய்து, அதையே தர்காவாக்கி வழிபடலாம் என்றும் சொன்னார்.                     

                        அவரின் ஆலோசணை ஏற்றுக் கொள்ளப்பட்டது. அப்படித் தான் சண்முகத்தின் கிராமத்தில் அவசர மசூதி ஒன்றும் தர்கா ஒன்றும் உருவானது. அன்றிலிருந்து ஒவ்வொரு வருஷமும் இராவுத்தர் வாத்தியார் இறந்த நாள் என்பதைக் ஊர்க்காரர்கள் குருபூஜையாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்…..! திருவிழாக்கள் வழக்கொழிந்து போன இன்றைய கலக்கட்டத்திலும் இராவுத்தருக்கான குருபூஜை மட்டும் எந்தத் தடங்கலுமில்லாமல் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. இராவுத்தரின் தர்கா மெது மெதுவாக எல்லா மதத்தவர்களும் வந்து போகும் வழிபாட்டுத் தலமாகவும் மாறி கொண்டிருக்கிறது…..!

v  முற்றும்

(நன்றி: தினமலர் – வாரமலர் 08.12.2013)

No comments:

Post a Comment