Monday, February 1, 2010

ஒரு வாசகியின் கடிதமும் பதிலும்

அன்புள்ள எழுத்தாளர் திரு.சுப்புராஜ் அவர்களுக்கு.,

தங்களின் ஒவ்வொரு பதிவையும் வரிவிடாமல் இன்றளவும் வாசிக்கிறேன்..பின்னூட்டமிட முடியாததிற்க்கு முதல் காரணம்,என்னால் முடியவில்லை, மிகவும் அசாதாரணமாக உள்ளது தங்களின் பின்னூட்ட முறை. குறைந்தபட்சம் மின்னஞ்சல் அனுப்புவது எளிமையானதென்றே கருதுகிறேன். எனவே சுலபமாக அனுப்ப இயலவில்லை., என்ற போதிலும் கடந்த ஒரு மாதமாக வெளிநாட்டு சுற்றுபயணத்தில் இருந்தேன்,வாசிப்பும் சற்று குறைவு தான்.இறுதியாக "வலி உணர்ந்தவன்" மற்றும் "சாருநிவேதிதாவுக்கு ஒரு மின் மடல்" இவ்விரண்டையும் வாசித்தேன்.,நிதர்சனமான கதை சொல்லி நீங்கள்., வாழ்வை அதன் அருகில் இருந்து அவதானித்ததின் பொருட்டு வந்து விழும் வார்த்தைகள் தங்களுடைய எழுத்து., இருந்தபோதிலும்.. ஒரு செய்தி ஓடையாக., தகவல் கொத்தாக இருப்பதே இலக்கியத்தின் மையத்தில் இட்டுசெல்வதாக அமையவில்லை என எண்ணுகிறேன்., அதன் அழகியல் தன்மை கைகூடவில்லையோ என தோன்றுகிறது."வலி உணர்ந்தவன்" கதையை வாசித்துவிட்டு "அருமை., நல்ல பதிவு" இப்படி பின்னூட்டம் இடுவதால் நீங்கள் திருப்தி அடைய கூடும்,பாராட்டை விரும்ப கூடும் மனநிலையில் நீங்கள் இருக்க வாய்ப்பு குறைவு., இருந்தபோதிலும் அது ஒரு அங்கீகாரம் தான்.ஆனால் இந்த எளிய அங்கீகாரத்திலே நீங்கள் தேங்கி நின்றுவிட்டால்., இன்னும் எட்டும் தூரம் மிக குறைவு,அதற்க்கு சந்தர்ப்பம் அளிக்க நீங்கள் தயாராக கூடாது என்பதே என் ஆவல்.தாகூர் பற்றிய ஒரு கதையுண்டு., தாங்களும் வாசித்திருக்க கூடும்.. "சூரிய அஸ்தமனத்தை கடலில் காண செல்லும் அவரிடம் தன் உறவினர் கழிவு நீரிலும் அஸ்தமனம் நிகழும் என சுட்டி காட்டி.. உன் கவிதையின் சிறப்பு உன் எழுத்தாளுமையால் வந்தது., அதற்க்கான அனுபவம் இன்றளவும் இல்லை" என்பதோடு முடியும்..நான் உங்களை விமர்சிப்பதற்காக இதை பதிவிடவில்லை., மேலும் ஆழத்தை சென்று சேரகூடிய எழுத்தாளுமை உங்களிடம் இருப்பது குறித்த கண்ணோடத்திலேயே சொல்ல முன்வருகிறேன்.,எதுவாக இருந்த போதிலும்,தங்களின் எழுத்து பணி தொடர வேண்டுகிறேன்..

--- சிவகாமி,
*************************************************************************************

அன்புள்ள சிவகாமி,

வணக்க்ம். நலம் தானே!

உங்களின் மின்மடல் என் எழுத்துக்கு ஆக்ஸிஜன் செலுத்தியது மாதிரி இருக்கிறது. உங்களின் வெளிப்படையான விமர்சனத்திற்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்!

நீங்கள் பின்னூட்டமெல்லாம் இட வேண்டாம். எனக்கு தனியாகவே மின்மடல் எழுதுங்கள்! மேலும் என் படைப்பை வாசிப்பவர்கள் விமர்சனரீதியாகவும் விவாதத்தைத் தொடங்கும் படியாகவும் கருத்துச் சொல்வதையே நான் மிகவும் வரவேற்கிறேன். மற்றபடி என் பதிவிற்கு அருமை; சூப்பர் என்றெல்லாம் வரும் பின்னூட்டங்களை என் படைப்பு வாசிக்கப் பட்டிருக்கிறது என்ற அளவில் மட்டுமே பொருட் படுத்துகிறேன். என் படைப்புகள் எழுதப்பட்டு முடித்ததுமே நானும் அதனுடைய விமர்சகனாக மாறி விடுவேன்.

வலி உணர்ந்தவன் சிறுகதை மீது எனக்கும் விமர்சனம் உண்டு. நீங்கள் குறிப்புடுவது போல அந்தக் கதை ’செய்தி ஓடையாகவும் தகவல் கொத்தாகவும் இருப்பதை நானும் ஒத்துக் கொள்கிறேன். கதையில் பூக்காரம்மாளின் புருஷன் கடைசியில் பேசுவதாக வரும் நீண்ட உரையாடல் தகவல் களஞ்சியமாக இருப்பதுடன் ஒரு பிரச்சார தொனியும் வந்து விட்டதால் கதையின் மொத்த அழகியலும் சீர்குலைந்து விட்டதை நானும் அறிந்திருக்கிறேன்.

என்ன செய்வது? அவன் நிகழ்த்தும் உரையாடல் பகுதிகளை நிகழ்ச்சிகளாக மாற்ற முடிந்திருந்தால் கதையின் அழகியல் தன்மை காப்பாற்றப் பட்டிருக்கும். ஆனால் இன்னும் சில பக்கங்கள் அதிகரித்து விடும். அப்புறம் அதன் பிரசுர சாத்தியம் முடக்கப்பட்டு விடுமோ என்று பயந்தேன். ஏற்கெனவே என் கதைகள் நீளமாக இருக்கின்றன என்கிற குறைபாட்டை/குற்றச்சாட்டை அவ்வப்போது எதிர்கொள்கிறேன்.

இதெல்லாம் சால்சாப்புதான்; தப்பித்தல் தான்.... எனக்கே ஏற்புடையதாய் இல்லை. அதனால் நேர்மையாக உங்களின் விமர்சனங்களை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். இனிமேல் எழுதும் கதைகளில் கவனமாக இருப்பேன் என்று உறுதி அளிக்கிறேன்.

தொடர்ந்து உங்களின் கருத்துக்களை எனக்கு எழுதிக் கொண்டிருங்கள். நன்றி!

அன்புடன்
சோ.சுப்புராஜ்

No comments:

Post a Comment