Friday, November 6, 2009

கவிதை: தாம்பத்யமெனும் கயிறு இழுக்கும் போட்டி

உனக்கும் எனக்குமான
கயிறு இழுக்கும் போட்டி தொடங்கியது
நம் திருமண நாளிலிருந்து......

இருவரும்
ஒருவரை நோக்கி ஒருவர்
இழுக்கத் தொடங்கினோம் மூர்க்கமாக!

அவ்வப்போது தன்னிலை மறந்து
ஒருவரை நோக்கி ஒருவர்
நகர்ந்து விட நேர்ந்தாலும் சீக்கிரமே
இயல்புக்குத் திரும்பி
இழுவையை தொடர்கிறோம்.....

கயிற்றின் மையம்
இற்றுக் கொண்டிருக்கிறது;
இருவரின் கைகளிலும் கொப்புளங்கள்
கால்களும் தளர்ந்து போயின
இருந்தும்
இழுவையின் பிடி மட்டும்
இன்னும் இன்னுமென
இறுகிக் கொண்டு தானிருக்கிறது.....

வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டு
விளையாட்டு விதிகளையும் மீறி
வெகுதூரம் வந்து விட்டோம்;
விலகிப் போவது சாத்தியமில்லை
விட்டுக் கொடுக்கவும் மனமில்லை
இலக்குகள் எதுவுமின்றி வெறும்
பழக்கத்தால் தொடர்கிறோம்;
அவ்வப்போது பாவணைகளிலும்.......!

2 comments:

  1. அருமையான கவிதை..
    நிறைய விஷயங்கள் பேசுகிறது...

    ReplyDelete
  2. கருத்துக்ச் சொன்ன கமலேஷுக்கு அனேக நன்றிகள்!

    ReplyDelete