Saturday, August 6, 2016

சிறுகதை: முன்னும் பின்னும் சில நாட் குறிப்புகள்

ஜூன் 22, 2005  புதன் – அபுதாபி
                சுமார் மூன்று மாதங்கள் அபுதாபியிலிருந்து 40கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கும் அல் வத்பா சிறையில் இருந்து விட்டு இன்றைக்குத் தான் வெளியில் வந்திருக்கிறேன். முழுமையான விடுதலை இன்னும் கிடைக்கவில்லை. பெயிலில் தான் விட்டிருக்கிறார்கள்.
                      சிறைக் காவலர்களைக் கடந்து வெளியில் வந்ததும் கம்பெனியிலிருந்து யாராவது என்னை அழைத்துப் போக வந்திருக்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்வையை ஓட்டினேன். யாரும் தட்டுப் படவில்லை. அரபி அரஃபாப் கை விட்டு விட்டான் என்று மனசுக்குள் நினைத்தபடி மெதுவாக அங்கிருந்து நடக்கத் தொடங்கினேன். கொஞ்ச தூரம் போனதும் தோளில் ஆதரவாய் ஒரு கை விழுந்தது. அபுபக்கர் சிரித்தபடி நின்று கொண்டிருந்தான். லாரி கொண்டு வந்திருந்தான்.
                       என்னை ஏற்றிக் கொண்டு போய் என் அறையில் இறக்கி விட்டு விட்டு  “ஆபீஸுக்கு நாளைக்கு வந்தால் போது”மென்று  அரஃபாப் சொன்னதாகச் சொல்லி, கையில் செலவுக்குக் கொஞ்சம் பணம் கொடுத்து விட்டுப் போனான்.
                       அறை சுத்தமாகவே இருந்தது. என்னுடன் தங்கியிருக்கும் மற்ற இருவரும் வேலைக்குப் போய் விட்டிருந்தார்கள். என்னுடைய சூட்கேசின் மீது இந்தியாவிலிருந்து வந்திருந்த இரண்டு ஏர் மெயில் கடிதங்கள் வைக்கப் பட்டிருந்தன. இரண்டையுமே மனைவி ராஜி தான் எழுதியிருந்தாள். பெரும்பாலும் ஒரே விஷயத்தைத் தான் திரும்பத் திரும்ப எழுதியிருந்தாள்.
                       ’முன்பெல்லாம் 15 நாட்களுக்கு ஒரு கடிதமாவது எழுதிக் கொண்டிருந்தாய். நீ அபுதாபிக்கு வேலை மாறிப் போனதிலிருந்து அது குறைந்து கடந்த மூன்று மாதங்களாக சுத்தமாய் கடிதமே வரவில்லை. போனும் பண்ணுவதில்லை. நான் எப்போது போன் பண்ணினாலும் உன் போன் ஆஃப் செய்யப்பட்டி ருப்பதாகவே தகவல் வருகிறது. வேலைப் பளு அதிகமா அல்லது உனக்கு அங்கு ஏதும் நேர்ந்து விட்டதோ என்று எனக்கு பயமாக இருக்கிறது. அதனால் கண்டிப்பாக கடிதம் எழுது.
                       துபாய்க்கு நீ வேலைக்கென்று கிளம்பிப் போகும் போது என்னிடம் என்ன வாக்குக் கொடுத்து விட்டுப் போனாய் என்று ஞாபகமிருக்கிறதா? மூன்றே மாதத்தில் எனக்கும் விசாவும் டிக்கெட்டும் அனுப்பி என்னையும் உன்னுடன் அழைத்துக் கொள்வதாக.             ஆனால் ஐந்து மாதங்களைக் கடந்த பின்பும்  என்னை அங்கு அழைத்துக் கொள்வதற்கு எந்த முயற்சியும் நீ செய்வதாகத் தெரியவில்லை. ஒருவேளை உனக்கு இனிமேல் நான் தேவைப்படாதவளாகி விட்டேனா?
                       இப்பொழுதெல்லாம் வீட்டு போனுக்கு நிறைய அனாமதேய கால்கள் வருகின்றன. எல்லாமே ஆண்கள். நீ வீட்டில் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டு அசிங்க அசிங்கமாய் பேசுகிறார்கள். பச்சையாக படுக்கைக்கு வா என்று அழைப்பு விடுக்கிறார்கள். எனக்கு ரொம்பவும் பயமாக இருக்கிறதுடா. இரவுகளில் தூக்கமே வர மாட்டேனென்கிறது. உன்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டு தூங்க வேண்டும் போலிருக்கிறது. எப்படா அது சாத்தியமாகும் குல்ஸ் பையா…..’   
                       எனக்கு துக்கம் பீறிட்டுக் கொண்டு வந்தது. எனக்கு நேர்ந்ததையெல்லாம் நீ அறிய நேர்ந்தால் அதை உன்னால் தாங்கிக் கொள்ள முடியாதும்மா. அதனால் தான் உனக்குக் கடிதம் எழுதவில்லை. நானே இந்தியாவிற்கு முழுசாய்த் திரும்பி வருவேனா என்று தெரியவில்லையே! இதில் உன்னை எப்படிடா கண்ணம்மா இங்கே அழைத்துக் கொள்ள முடியும்? ஸாரிடா செல்லம்…..

டிசம்பர் 17, 2004 வெள்ளி – சென்னை:
                       பம்பாய் ஸ்ரீகிருஷ்ணா ஏஜென்சியிலிருந்து போன் பண்ணி நான் துபாயிலுள்ள கான்சாகிப் காண்ட்டிராக்டிங் என்னும் கம்பெனியில் வேலைக்கு தேர்ந்தெடுக்கப் பட்டுவிட்டேன் என்ற தகவலைச் சொன்னார்கள். ஏதாவது ஃபேக்ஸ் நம்பர் கொடுத்தால் ஆஃபரை ஃபேக்ஸ் பண்ணுவதாகத் தெரிவித்தார்கள்.  அலுவலகத்தில் ஃபேக்ஸ் இருக்கிறது. ஆனாலும் அதைக் கொடுக்க விரும்பவில்லை.
                       மதிய உணவிற்கு வெளியே போய் வருவதாக சொல்லிவிட்டு கடை வீதிக்கு வந்தேன். எஸ்.டீ.டீ. பூத் செண்டர்களில் யாரிடமாவது ஃபேக்ஸ் இருக்கிறதா என்று விசாரித்து, ஒரு நம்பரை வாங்கி பம்பாய் ஏஜென்சிக்கு தெரிவித்து விட்டு காத்திருந்தேன்.
                       அரைமணி நேரக் காத்திருத்தலுக்கு அப்புறம் தான் ஃபேக்ஸ் வந்தது. சம்பளம் நான் நேர்முகத் தேர்வில் கேட்டிருந்ததை விடவும் மிகவும் குறைவாகவே போட்டிருந்தார்கள். மறுபடியும் பம்பாய் ஏஜென்சிக்கு தொடர்பு கொண்டு விசாரித்த போது
                       ”அது அவர்களின் ஆஃபர். நல்ல கம்பெனி. உனக்கு விருப்பமென்றால் கையெழுத்துப் போட்டு அனுப்பு. வேண்டாமென்றால் விட்டு விடு…”என்றார்கள் விட்டேத்தியாய்.  மனைவியிடம் பேசி விட்டு அங்கிருந்தபடியே Accepted என்று கையெழுத்துப் போட்டு திரும்பவும் ஃபேக்ஸ் பண்ணினேன்.

டிசம்பர் 22, 2004 புதன்  – சென்னை:
                       நந்தனத்தில் உள்ள மருத்துவப் பரிசோதணைக் கூடத்தில் மெடிக்கல் செக் அப் செய்து கொண்டேன். மாலையில் முடிவுகளை வாங்கப் போன போது வெடிகுண்டைத் தூக்கி வீசினார்கள். என்னுடைய உடலில் ஹெப்படைஸ் பி என்னும் வைரஸ் தொற்று இருப்பதாகவும் அதனால் மெடிக்கலி அன்ஃபிட் என்றும் வெளிநாட்டு வேலைக்கெல்லாம் என்னால் போக முடியாது என்றும் சொன்னார்கள்.
                        ”ஹெப்படைஸ் பின்னா என்ன டாக்டர்? அது அவ்வளவு பெரிய வியாதியா?”என்று  நடுங்கியபடி மருத்துவரிடம் கேட்டேன். வெளிநாட்டு வேலைகளுக்குப் போக முடியாது என்பதை விடவும் சீக்கிரம் செத்துப் போய் விடுவோனோ என்கிற  பயமே மனம் முழுவதும் வியாபித்துக் கிடந்தது.
                       “உங்களுக்கு சின்ன வயசுல மஞ்சள் காமாலை நோய் மாதிரி எதுவும் வந்துருக்கா….?” என்றார் டாக்டர். ”ஆமாம்….”என்று ஆமோதித்தேன். அம்மா கீழாநெல்லியை அரைத்து உருண்டை உருண்டையாய் உருட்டிக் கொடுக்க அடித் தொண்டையில் கசக்கும் அதை மூன்று வேளைகளும் கண்ணீர் மல்க விழுங்கியது ஞாபகம் வந்து இப்போதும் எனக்கு வாயில் கசப்பு எட்டிப் பார்த்தது.
                       “மஞ்சள் காமாலை நோய்க்கான வைரஸ் தான் ஹெப்படைஸ் பின்கிறது….”
                       “அப்பவே அதுக்கு மருந்து சாப்பிட்டு குணமாகிட்டேனே டாக்டர்….”
                       “ஹெப்படைஸ் பி வைரஸ் தொற்று ஒரு தடவை உடலுக்குள்ள போனாலே அது அழியவே அழியாது. நோய்க்கான அறிகுறிகள் தெரியாட்டாலும் அது ரத்தத்துலேயே தான் இருக்கும். அதை முழுசா அழிக்கிறதுக்கு இன்னும் மருந்தே கண்டுபிடிக்கல….”
                       “அப்ப நான் சீக்கிரமே செத்துப் போயிடுவனா டாக்டர்…..”அழுதே விட்டேன்.
                       ”நோ… நோ…. அது பெருசா உபத்திரவம் எதுவும் பண்ணாது. ஆனா நீங்க வெளிநாட்டுக்கு வேலைக்குப் போக முடியாது அவ்வளவு தான்….” என்று சிரித்துக் கொண்டே தைரியம் சொல்லி அனுப்பி வைத்தார் மருத்துவர். என்னுடைய வெளிநாட்டுக் கனவுகள் பணாலானது.

டிசம்பர் 25, 2004 சனி – சென்னை:
                       பம்பாய் ஏஜென்சி போனில் தொடர்பு கொண்டு ஏன் இன்னும் மெடிக்கல் சர்ட்டிபிகேட்டை அனுப்பி வைக்கவில்லை என்று விசாரித்தார்கள். மருத்துவர் சொன்ன விவரத்தைச் சொல்லவும், அவர்கள் மெடிக்கல் சர்ட்டிபிகேட்டை ஃபேக்ஸ் பண்ணச் சொன்னார்கள்.
                       அதைப் பார்த்ததும், “உங்கள் சென்னை மருத்துவர்கள் அப்டேட்டே ஆகாமல் ஹைதர்காலத்து விதிகளையே இன்னும் கட்டி அழுது கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். இப்போதெல்லாம் யு.ஏ.யில் இரண்டே இரண்டு வியாதிகளுக்கான டெஸ்ட்கள் மட்டும் தான் பண்ணுவார்கள். ஒன்று எயிட்ஸ்; இன்னொன்று டீ.பி. மற்றதை எல்லாம் அவர்கள் பொருட் படுத்துவதே இல்லை. விசா வந்து விட்டது. சீக்கிரம் பம்பாய்க்கு வந்து சேருங்கள்….” என்றார்கள்.
                       அவர்கள் சொன்னதைக் கேட்கவும் கொஞ்சம் ஆறுதலாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. அதே சமயத்தில் பணம் பிடுங்குவதற்காகப் பொய் சொல்கிறார்களோ என்று பயமாகவும் இருந்தது. நண்பர்கள் சிலரிடம் விசாரித்த போது ஸ்ரீகிருஷ்ணா ஏஜென்சி மிகவும் நம்பகமான கம்பெனி தான் என்றார்கள்.
                       மனைவி தான் நம்பிக்கை அளித்தாள். ஆனது ஆகட்டும். போயிட்டு வாப்பா. அப்படியே அவர்கள் ஏமாற்றினால் தான் என்ன? இருபதாயிரம் ரூபாய் செலவில் துபாயைச் சுற்றிப் பார்த்து விட்டு திரும்பி வந்ததாக இருக்கட்டும் என்று சொல்லி விட்டாள்.  

ஜனவரி 03, 2005  திங்கள்  – பம்பாய்:
                       நேற்றே பம்பாய்க்கு வந்து விட்டேன். இரயில்வே ஸ்டேசனுக்குப் பக்கத்தில் ஒரு லாட்ஜில் அறையெடுத்துத் தங்கி யிருந்தேன். எங்கு பார்த்தாலும் விலை மாதர்கள் பார்வையிலேயே பாய் விரித்தபடி அலைந்து கொண்டிருந்தார்கள். எயிட்ஸ் பற்றிப் பயமாக இருந்ததால் சபலத்தை அடக்கிக் கொண்டேன்.
                       ஸ்ரீகிருஷ்ணா ஏஜென்சியில் காலையிலேயே பணத்தைக் கட்டச் சொல்லி விட்டார்கள். ஆனால் நண்பகலுக்கு மேல் தான் பாஸ்போர்ட்டையும் விமான டிக்கெட்டையும் கொடுத்து ஏர்போர்ட்டிற்கு வேகமாகப் போகும்படி விரட்டினார்கள்.
                       அப்போது தான் தெரிந்தது. நான் விசிட் விசாவில் தான் துபாய்க்கு அழைக்கப் பட்டிருக்கிறேன் என்கிற விபரம். விசிட் விசா மூன்று மாதங்களுக்கு செல்லும் என்றும் அதற்குள் வேலையில் என்னுடைய கெட்டிக்காரத்தனத்தை பரிசோதித்து விட்டுத் தான் வேலைக்கான விசா (WORK PERMIT) எடுத்துத் தருவார்களாம். வாழ்க்கையில் மறுபடியும் ஒரு செக்.
                       இரவு ஏழு மணிக்கு விமானம் தரை இறங்கியது. கம்பெனியின் டிரைவர் ஏர்போர்ட்டிற்கு வந்து அழைத்துப் போனான். அழகழகான உயரஉயரமான கட்டிடங்கள் வண்ண வண்ணமாய்ப் பிரகாசிக்கும் விளக்குகளினூடே பயணித்து சுற்றிலும் வெட்டவெளியாய் இருக்கும் ஒரு பொட்டல் வெளியில் இறக்கி விட்டான். அந்த இடத்தின் பெயர் ஜபீல் அலி என்றார்கள். அதுதான் கம்பெனியின் லேபர் கேம்ப்பாம். நல்ல அறையும் கட்டிலும் கம்பளியும் கொடுத்தார்கள். தூக்கம் தான் அறவே வரவில்லை.

ஜனவரி 04, 2005  செவ்வாய் –துபாய்:
                       கான்சாகிப் காண்ட்ராக்டிங் எல்.எல்.சி. என்னும் கம்பெனியில் சீனியர் பிராஜெக்ட் என்ஜினியராக வேலையில் சேர்ந்தேன். EMAAR INTERIOR FIT OUT WORKS என்கிற பிராஜெக்ட் சைட்டிற்கு அனுப்பி வைத்தார்கள். சுரேந்திரன் என்கிற மலையாளி தான் பிராஜெக்ட் மேனேஷர். படபடவென்று பேசி கண்ணாடிப் பாத்திரம் போன்ற மனதை படீரென்று போட்டு உடைத்து விடுகிறான்.
                       பக்கத்தில் உள்ள கடையில் எடீஸ்லாட் என்னும் டெலிபோன் கார்டு வாங்கி மனைவிக்கு போன் பண்ணினேன். சாப்பாடு பெரிய பிரச்னையாக இருக்கிறது. மதிய உணவு சாப்பிடவே இல்லை. காலையிலும் இரவிலும் லேபர் கேம்ப்பில் சாப்பிட்டேன். உணவு படு மோசமாக இருந்தது.

ஜனவரி 07, 2005  வெள்ளி  –துபாய்:
                       வெள்ளிக் கிழமை - வார விடுமுறை நாள். வீடு தேடும் படலம் தொடங்கியது. அகமதாபாத்திலிருந்து வந்து டிசைன் என்ஜினியராக வேலைக்குச் சேர்ந்திருக்கும் ஆதேஷ் ஸ்ரீவத்ஸா என்பவருடன் சேர்ந்து கொண்டு இருவரும் வீடு தேடத் தொடங்கினோம்.
                       ஆதேஷ் தான்,  துபாயில் வாடகை மிக மிக அதிகம் என்றும் ஷார்ஷாவிலும் அஜ்மானிலும் அது கொஞ்சம் affordable ஆகயிருக்குமென்று சொல்லி, ஜபீல் அலியிலிருந்து ஷேர் வேனில் பர் துபாய் போய் அங்கிருந்து பஸ்ஸில்  ஷார்ஷா போய் வீடு தேடத் தொடங்கினோம். அஜ்மான் கொஞ்சம் தூரம் என்பதால் அங்கு வேண்டாம் என்று முடிவு செய்து கொண்டோம்.
                       மூன்று ரூம்கள் பார்த்தோம். முதல் ரூம் இருவருக்குமே பிடிக்கவில்லை. இரண்டாவது ரூம் இருவருக்குமே பிடித்திருந்தது. ஆனால் ஐந்து மாத வாடகையை முன் பணமாகக் கேட்டதால் வேண்டா மென்று விட்டு விட்டோம். மூன்றாவது ரூம் ரோலா பஸ் ஸ்டாண்டிற்கு அருகில் பார்த்தோம். தமிழர். வாடகையும் குறைவு. எனக்குப் பிடித்திருந்தது. ஆனால் ஏனோ ஆதேஷிற்குப் பிடிக்கவில்லை. 
                       லேபர் கேம்ப்பிற்குத் திரும்ப மிகவும் காலதாமதமாகி விட்டது. அர்த்த ராத்திரியில் கேம்ப்பைக் கண்டுபிடிக்கவும் மிகவும் சிரமப் பட்டோம். நடுநிசி 01:30க்குத் தான் அறைக்குத் திரும்பினோம். கால்களிலெல்லாம் ஒரே வலி.

ஜனவரி 14, 2005 வெள்ளி  –ஷார்ஷா:
                       ஆதேஷின் வட இந்திய நண்பர் ஒருவரின் மூலம் ஷார்ஷாவில் ஹில்லி டவர் என்னும் பில்டிங்கில் பத்தாவது மாடியில் ஒரு அறையை முடிவு செய்து குடி போனோம். அங்கு ஏற்கெனவே பிரகாஷ் என்பவர் குடியிருந்தார். அவருடன் நாங்களும் அறையை ஷேர் பண்ணிக் கொள்ள முடிவானது.

ஜனவரி 21, 2005 வெள்ளி –ஷார்ஷா:
                       பிரகாஷ் என்னையும் ஆதேஷையும் பக்கத்தில் உள்ள கார்னிஸ் என்னும் கடற்கரைக்கு அழைத்துப் போனான். கடலிலிருந்து கால்வாய் வெட்டிக் கொண்டு வந்தது போல ஆற்றின் அகலம் தான் இருந்தது கடல். நீர் நீலநிறமாய் இருப்பதால் கடல் என அழைக்க வேண்டியிருக்கிறது. ஆனாலும் நடுவில் நீரூற்றுப் போல் பொங்குகிற செயற்கை அமைப்புடன் மிக அழகான மசூதியும் பூக்கள் நிரம்பிய பூங்காவும் புல்வெளியும் ரசிக்கத் தக்கதாய் இருந்தது. கரையில் நீள நடந்து பொழுது போக்கினோம்.

பிப்ரவரி 17, 2005 வியாழன்  – துபாய்:
                       கடந்து போன தினங்களில் சைட்டில் வேலை பெண்டை நிமிர்த்தி விட்டது. நாட் குறிப்புகள் எழுதக் கூட அவகாசமில்லை. விடுமுறை தினங்களிலும் வேலைக்குப் போக வேண்டி யிருந்தது.

பிப்ரவரி 20, 2005 ஞாயிறு  – துபாய்:
                       மிகவும் அதிர்ச்சியான செய்தி. ஹெச்.ஆர்.டி. மேனேஷர் போன் பண்ணி எனக்கு வேலைக்கான விசா எடுக்கப் போனபோது ஏற்கெனவே வேறொரு அபுதாபி கம்பெனியின் மூலம் எனக்கு கொத்தனார் வேலைக்கான விசா எடுக்கப் பட்டிருப்பதாகவும் அதனால் லேபர் மினிஸ்ட்ரியில் என்னுடைய விண்ணப்பத்தை ரிஜெக்ட் பண்ணி விட்டதாகவும் தெரிவித்தார்.
                       உடனேயே தலைமை அலுவலகத்திற்கு விழுந்தடித்துக் கொண்டு ஓடினேன்  ’நீ இங்கு வேலை பார்த்துக் கொண்டே வேறொரு கம்பெனியிலும் வேலைக்கு முயற்சித்திருக்கிறாயா?’ என்று கடுப்படித்தார்கள். நான் இல்லவே இல்லை என்றேன்.
                       அப்படியென்றால் நீ இந்தியாவில் இருக்கும் போதே அபுதாபி கம்பெனியும் வேலைக்கான விசாவை எடுத்திருக்க வேண்டும் என்றார். ஆச்சர்யம் தான்; ஒரே பாஸ்போர்ட்டிற்கு துபாய் இமிக்ரேசனில் விசிட் விசாவும் அபுதாபி இமிக்ரேசனில் வேலைக்கான விசாவும் தந்திருக்கிறார்கள்.
                       ”அதெப்படி முடியும்; நான் தான் எந்தக் கம்பெனியின் காண்ட்ராக்டிலும் கையெழுத்தே போட வில்லையே…”என்றேன் அப்பாவியாய்.
                       அவர் சிரித்துக் கொண்டே“யு.ஏ.யில் விசா வாங்குவதற்கு உன்னுடைய கையெழுத்தெல்லாம் தேவையில்லை.  பாஸ்போர்ட் நகலும் மூன்று போட்டோக்களும் இருந்தால் போதும். யார் வேண்டுமானாலும் பணம் கொடுத்தால் விசா கொடுத்து விடுவார்கள்….”என்றவர்  ”நீ போய் அபுதாபி விசாவைக் கேன்சல் பண்ணி விட்டு வந்தால் தான் இங்கு புதிதாய் விசா எடுக்க முடியும்….” என்றார் முடிவாக.
                       எனக்கு இலேசாய் ஞாபகம் வந்தது. துபாயிக்கு பயணப் படுவதற்கான ஏற்பாடுகளில் மும்முரமாய் இருந்த போது திருவனந்தபுரத்திலிருந்து ஒரு டிராவல் ஏஜெண்ட் போன் பண்ணி எனக்கு யு.ஏ.யில் வேலை உறுதியாகி விட்டது என்றும் எப்போது கிளம்ப சௌகரியப்படும் என்றும் கேட்டார். எனக்கு ஆர்வம் இல்லை என்று சொல்லி போனை வைத்து விட்டேன்.
                       அவர் மறுபடியும் போன் பண்ணி ”நீ தானே அப்ளை பண்ணியிருந்தாய். இப்போது ஆர்வமில்லை என்றால் என்ன அர்த்தம்? அவர்கள் உனக்கு விசா எடுத்து விட்டார்களே….!” என்றார். நான் அவர் சொல்வதை சீரியசாகவே எடுத்துக் கொள்ளவில்லை.
                       என்னுடைய சம்மதம் இல்லாமல் எனக்கு எப்படி வேலைக்கான விசா எடுக்க முடியுமென்று யோசித்து பொய் சொல்கிறார் என்று நினைத்து போனை துண்டித்து விட்டேன். அவரும் அதற்கப்புறம் தொந்தரவு பண்ணவில்லை.

பிப்ரவரி 28, 2005 திங்கள்  – அபுதாபி:
                       அல் மவாஸிம் என்கிற அபுதாபி கம்பெனி எனக்காக விசா எடுத்திருக்கிறது என்று அறிந்து கொண்டு அதை கேன்சல் பண்ணுவதற்காக அபுதாபிக்குக் கிளம்பிப் போனேன். இன்ஜினியரிங் படித்தவனுக்கு கொத்தனார் வேலைக்கு விசா எடுத்திருக்கும் கம்பெனி எப்படிப்பட்ட கம்பெனியாக இருக்கும்? விசாவைக் கேன்சல் பண்ணுவதற்கு பணம் எதுவும் கேட்பார்களோ என்றும் பயமாக இருந்தது.  
                       அபுதாபி இமிக்ரேசனில் போய் முட்டி மோதி ஒரு மலையாள நண்பரின் மூலம் விசாரித்து எப்படியோ அல் மவாஸிம் கம்பெனியின் போன் நம்பரைப் பெற்று அலுவலகத்திற்குத் தொடர்பு கொண்ட போது அவர்கள் அரஃபாபிடம் பேசும்படி சொல்லி அவரின் மொபைல் நம்பரைக் கொடுத்தார்கள்.
                       அவர் தான் இப்போது வேலைத் தளத்தில் இருப்பதாகவும் அங்கு வந்து தன்னை சந்திக்கும் படியும் தெரிவித்து எப்படி வர வேண்டும் என்கிற விபரங்களையும் விளக்கமாக சொன்னார். ஒரு டாக்ஸி பிடித்து டிரைவரிடமிருந்த போனில் தொடர்பு கொண்டு டிரைவரையே பேசச் சொல்லி அவரிருந்த இடத்திற்குப் போய்ச் சேர்ந்து விட்டேன்.
                       நான் எதிர்பார்த்துப் போயிருந்தபடி அவர் அத்தனை மோசமானவராய் இருக்கவில்லை. மூச்சுக்கு மூச்சு மை ஃபிரண்ட் மை ஃபிரண்ட் என்று விளித்து மிகவும் இணக்கமாகவே பேசினார். அவரால் எனக்கு ஏற்பட்டு விட்ட மன உளைச்சல்களுக்கும் அசௌகரியங்களுக்கெல்லாம் வருத்தம் தெரிவித்தார்.
                       ”நீ என்னைத் தேடி வந்திருக்கிற என்னுடைய விருந்தினன். உன்னை நான் உபசரிக்க வேண்டும். அதனால் நீ முதலில் போய் சாப்பிட்டு விட்டு வந்து விடு. அப்புறம் நாம் மேற்கொண்டு பேசலாம்…”என்றபடி 100 திர்ஹாமை எடுத்துக் கொடுத்து அவரின் டிரைவரையும் அனுப்பி வைத்தார்.
                       எனக்கு மிகவும் நெகிழ்ச்சியாகவும் அரபியர்களில் இத்தனை நல்லவர்களும் இருக்கிறார்களா என்று ஆச்சர்யமாகவும் இருந்தது.
                       சாப்பிட்டு விட்டு மலர்ச்சியாக வரவும்  இந்திய ஏஜெண்ட்டு தான் பணத்திற்காக தன்னைத் தவறாக வழி நடத்தி சம்பந்தப்பட்டவர்களிடம் சம்மதம் வாங்காமலேயே விசா எடுக்கச் சொல்லி விட்டார் என்றும் இன்ஜினியருக்கான விசா எடுப்பதென்றால் டிகிரி சர்ட்டிபிகேட்டில்  மினிஸ்ட்டிரியின் முத்திரை பெறுவதற்குக் காலதாமதமாகுமென்று சொல்லி ஒர்க்கர்ஸ்  விசா எடுக்க வைத்து விட்டதாகவும் தெரிவித்தார்.
                       விசாவைக் கேன்சல் பண்ணுவதெல்லாம் பெரிய விஷயமில்லை. அதை நாளைக்கே பண்ணி விடுவதாக உத்தரவாதமளித்தவர் துபாயில் எந்தக் கம்பெனி, எவ்வளவு சம்பளம் என்கிற விபரமெல்லாம் விசாரித்தார். நான் சொல்லவும், “நீ ஏன் என்னிடமே வேலையில் சேர்ந்து கொள்ளக் கூடாது? உன்னை எங்கள் கம்பெனியின் பிராஜெக்ட் மேனேஷராக்கி துபாய் கம்பெனி தருவதை விடவும் 500 திர்ஹாம் அதிகம் + தங்கும் அறையும்  தருகிறேன்….” என்றார்.
                       எனக்கு இலேசான சபலம் எட்டிப் பார்த்தது. இருந்தாலும் “அது சரியாக வராது. இப்போதைய கம்பெனியும் அதை அனுமதிக்காது. என்னுடைய பாஸ்போர்ட் அவர்களிடம் தான் இருக்கிறது…” என்றேன்.
                       “அந்தக் கவலை எல்லாம் உனக்கு வேண்டாம். நான் உங்களின் அரஃபாபிடம் பேசி உனக்கு எதுவும் பிரச்னை வராமல் பார்த்துக் கொள்கிறேன்….” என்று சொல்லவும் நானும் சம்மதித்தேன். அவருடைய காரிலேயே அலுவலத்திற்கு அழைத்துப் போய் ஆஃபர் லெட்டரையும் அடித்துக் கொடுத்து அனுப்பி விட்டார்.

மார்ச் 06, 2005 ஞாயிறு  – அபுதாபி:
                  புதிய கம்பெனியில் வேலையில் சேர்ந்து கொண்டேன். ஒர்க்கர்ஸ் விசாவை இன்ஜினியர் விசாவாக மாற்றித் தருவதாக உத்திரவாத மளித்து அதற்கான வேலைகளையும் தொடங்கி விட்டார்கள்.
                       அபுதாபி என்பது ஒரு சிறிய தீவு. எங்கிருந்து பார்த்தாலும் கடலின் நீலம் கண்ணுக்கு குளிர்ச்சியூட்டுவதாய் இருக்கிறது. அபுதாபிக்கு மிக அருகில் அல் படீன் என்னும் பழமையான நகரத்தில் ஒரு விஸ்தாரமான வில்லா கட்டுகிற பணிக்கு என்னை இன்சார்ஸாக நியமித்திருக்கிறார்கள்.
                       அங்கு ஏற்கெனவே அடித்தளம் போடுவதற்கான மண் தோண்டுகிற வேலை தொடங்கி மும்முரமாய் நடந்து கொண்டிருந்தது. ஆனால் கட்டிட வரைபடங்கள் இன்னும் மினிஸ்ட்ரியிலிருது அப்ரூவல் ஆகி வரவில்லை.
                       வேலைத் தளத்தைச் சுற்றிலும் நிறைய குடியிருப்புகளும் கடை வீதிகளும் இருக்கின்றன. மிக பக்கத்திலேயே ஒரு கட்டிடத்தில் எனக்கான தங்கும் அறையும் ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது. என்னுடன் மேலும் இருவர் தங்கி யிருக்கிறார்கள். அறை எல்லா வசதிகளுடனும் ஃபர்னிஷ் செய்யப்பட்டு இருக்கிறது.

மார்ச் 10, 2005 வியாழன்  –அபுதாபி:
                  சைட்டை ஒட்டி மூன்றடிக்கும் குறைவான தூரத்திலிருக்கும் ஒரு வீட்டில் முழுக்க கறுப்பு அங்கியும் பர்தாவும் அணிந்த ஒரு பெண்  குழந்தைக்கு சோறூட்டிக் கொண்டிருந்தாள். முகம் மட்டுமே வெளியில் தெரிந்தது. அது மிகவும் வசீகரமாகவும் இந்திய சாயலுடனும் இருந்தது. நான் அவளை வெறித்துப் பார்ப்பதை ஒரு கணத்தில் அவதானித்தவளின் இதழ்களில் ஒரு புன்னகைக் கீற்று மின்னலென ஓடி மறைந்தது.
                       கொஞ்சம் தைரியத்தை வர வழைத்துக் கொண்டு அந்த வீட்டின் காம்பௌண்ட் சுவருக்கு அருகில் போய் “இந்தியாவா….” என்றேன் மெதுவாக. “ம்… கோட்டையம்….” என்றவளின் மொழியில் மலையாள வாடை சாரலென வந்து சிலிர்ப்பூட்டியது.
                       நான்  “சென்னை; தமிழ்….” என்றேன். ”யானும் கொறச்சுக் கொறச்சு தமிழ் அறியும்….”என்றாள் மழலைத் தமிழில். கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.

மார்ச் 15, 2005 செவ்வாய்  –அபுதாபி:
                       வேலைத் தளத்திற்குப் பக்கத்து வீட்டிலிருக்கும் மலையாளப் பெண்ணின் பெயர் ஷர்மிளா. கோட்டயத்திலிருந்து வந்து ஒரு அரபியின் வீட்டில் வீட்டு வேலைகள் செய்து கொண்டிருக்கிறாள். தினசரி அவளுடன் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறேன்.
                       அவளுக்குக் கல்யாணமாகி பத்து வயதில் ஒரு பெண் குழந்தை ஊரில் அவளின் அம்மாவிடம் வளர்கிறது. புருஷனிடமிருந்து பிரிந்து வந்து விட்டாள். அதைப் பற்றிக் கேட்ட போது ”ஆ  ஆள் ஒரு மிருகம். கழிசடை…..”என்று ஏகப்பட்ட மலையாள கெட்ட வார்த்தைகளில் திட்டத் தொடங்கி விட்டாள்.
                       அவன் வேலை வெட்டிக்குப் போகாமல் ஊர் சுற்றிக் கொண்டு இவளின் சம்பாத்யத்தில்  தின்று கொழுத்துக் கொண்டிருந்ததைக் கூட சகித்துக் கொண்டாளாம். ஆனால் அவள் வீட்டில் இல்லாத போது எட்டு வயதுப் பெண்ணிடம் அதுவும் அவன் பெற்ற மகளிடமே பாலியல் உறவு கொள்ள முயற்சித்ததை அறிந்ததும் காறித் துப்பி விட்டு குழந்தையுடன் வெளியேறி விட்டதாய்த் தெரிவித்தாள். நான் உறைந்து போனேன். இப்படியும் மனிதர்களா, என்ன மாதிரியான மன வார்ப்புகள் அவர்களுக்கு…..!

மார்ச் 25, 2005 வெள்ளி  –துபாய்:
                  நேற்றுத் தான் ரொம்பவும் பயந்து கொண்டே ஷர்மிளாவிடம், நாளைக்கு நாமிருவரும் வெளியில் எங்காவது போய்விட்டு வரலாமா என்று கேட்டேன். அவளும் ஆச்சர்யமாக கொஞ்சமும் தயங்காமல் உடனேயே சரி என்றாள்.
                       அரபி வீட்டில் உன்னை வெளியில் எல்லாம் போக விடுவார்களா என்று கேட்ட போது அவளுக்குத் தெரிந்த மலையாளக் குடும்பம் ஒன்று துபாயில் இருப்பதாகவும் அவர்கள் தான் ஷர்மிளாவை அரபியின் வீட்டில் வேலைக்குச் சேர்த்து விட்டதாகவும் அங்கு போவதாகச் சொன்னால் அனுமதித்து விடுவார்கள் என்றும் சொன்னாள்.
                       காலையிலேயே அபுதாபி பஸ் ஸ்டாண்டிற்கு வந்து விட்டாள். எங்கு போகலாம் என்று கேட்ட போது, நான்கு சுவர்களுக்குள் இருந்து இருந்து மூச்சு முட்டுகிறது. நீ எங்கு அழைத்துப் போனாலும் வருகிறேன் என்றாள். துபாயில் குளோபல் வில்லேஸ் என்றொரு பொருட்காட்சித் திடல் இருப்பதாக அறிந்திருந்தேன். அங்கு போகலாம் என்று முடிவு செய்து கிளம்பினோம்.
                       குளோபல் வில்லேஸைச் சுற்றிப் பார்த்தது - அதுவும் ஒரு பெண்ணுடன் – அற்புதமான அனுபவமாக இருந்தது. அது ஒரு மிகப் பிரமாண்டமான விசாலமான திறந்த வெளி தீம் பார்க். நடக்க நடக்க ரம்மியமான காட்சிகளுடன் விரிந்து கொண்டே போனது. முழுவதும் பார்த்து முடிக்க மூன்று நாட்களுக்கும் மேலாகும் போலிருந்தது.
                       இந்தியா, பாகிஸ்தான், கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, சிங்கப்பூர் என்று ஒவ்வொரு நாட்டின் பெயரிலும் அந்தந்த நாடுகளின் பிரதான அடையாளங்களுடன் அமைக்கப் பட்டிருந்த முகப்புகள் அற்புதமாக இருந்தன. இந்தியாவின் முகப்பாக செங்கோட்டையை அமைத்திருந்தார்கள்.
                       உள்ளே இருந்த ஸ்டால்களில் எல்லாம் ஆடைகள், அலங்காரப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், உணவுப் பொருட்கள் என்று விற்றுக் கொண்டிருந்தார்கள். விலை வெளியில் விடவும் மிகமிக அதிகமாக இருந்தது. ஷர்மிளாவிற்கு வண்ணக் கற்கள் மின்னுகிற ரோல்டு கோல்டு கழுத்து சங்கிலி ஒன்றை வாங்கிப் பரிசளித்தேன். சந்தோஷமாக வாங்கி அங்கேயே அணிந்து கொண்டாள்.
                       விதவிதமான விளையாட்டுகளும், வான வேடிக்கைகளும், லேசர் ஒளி நீரூற்று நடனங்களுமாய் பார்க்கப் பார்க்க மனம் கொள்ளை போனது. கண்களுக்கு சலிக்கவே இல்லை. ஆனால் கால்கள் வலிக்கத் தொடங்கின. நன்றாக இருட்டியதும் பொருட்காட்சித் திடலிலிருந்து வெளியே வந்தோம்.
                       ”இனி என்ன செய்யலாம்?” என்றேன். “உன் விருப்பம்…” என்றாள். “இரவிற்கு துபாயிலேயே ஏதாவது ஹோட்டலில் அறையெடுத்துத் தங்கி விட்டு அதிகாலையில் அபுதாபி போய்க் கொள்ளலாமா…” என்றேன் கொஞ்சம் தயங்கிய குரலில். உடனேயே சரி என்றாள்.
                       ஹோட்டல் அறையில் எங்களுக்கு மனத் தடைகள் உடைய அதிக நேரமாகவில்லை. இரவு முழுவதும் தூங்கவே இல்லை. சலிக்கச் சலிக்கப் பேசினோம். உடல் வலிக்க வலிக்க முயங்கினோம். அவளின் உடலும் நீண்ட காலமாகத் தீண்டப் படாமல் ஒரு ஆணின் நெருக்கத்திற்கு ஏங்கிக் கிடந்திருப்பதை அவளின் அதீதக் கிறக்கத்திலும் கண் சொருகிய முனகல்களிலும் உணர்ந்து கொண்டேன்.
                       முதல் தடவை முயங்கத் தயாராகும் போது நான் காண்டம் உறையைப் பிரிப்பததைப் பார்த்ததும் “ஏன் எயிட்ஸ் வந்து விடுமென்று பயப்படுகிறாயா?”என்றாள் பட்டென்று. “அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை…” என்று நான் ஏதோ சொல்ல வந்ததைக் கூட பொருட் படுத்தாமல் அவளே தொடர்ந்தாள்.
                       “நீ அழைத்ததும் பிகு பண்ணாமல் உடனேயே உன்னுடன் கிளம்பி வந்து விட்டதால் என்னை அல்பமானவள் என்று கூட நீ நினைத்துக் கொண்டிருக்கலாம். அதுபற்றி எனக்குக் கவலை இல்லை.  ஆனால் முதல் தடவை உன்னை பார்த்ததுமே எனக்கு உன் மேல் அப்படி ஒரு பிரேமை உண்டாகி விட்டது.  அது ஏனென்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை….”என்று என்னை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.
                       அப்புறம் என் காதுகளை நாவால் வருடியபடி ”என்னுடைய இரண்டாவது குழந்தையை உன் மூலம் பெற்றுக் கொள்ள பிரியப் படுகிறேன்…..” என்று சிணுங்கும் குரலில்  சொன்னாள். நான் காண்டமைத் தூக்கி எறிந்து விட்டு அவளின் மீது விழுந்து மூர்க்கமாய் இயங்கத் தொடங்கினேன்.

மார்ச் 26, 2005 வெள்ளி  –அபுதபி:
                  மிக அதிகாலையில் ஹோட்டல் ரூமைக் காலி பண்ணிவிட்டு அபுதாபிக்குக் கிளம்பிப் போனோம். விடைபெறும் போது ஷர்மிளாவிடம் அடுத்த வாரமும் இதைப் போலவே எங்காவது போய்விட்டு வரலாமா என்று கேட்டேன். “ஆளுக்கு ஆசை தான். வாரவாரமென்றால் அரபி விட மாட்டான். அவனுக்கு சந்தேகமும் வந்து விடும். மாதம் ஒரு நாள் வைத்துக் கொள்ளலாம்….” என்றாள்.

ஏப்ரல் 05, 2005 செவ்வாய்  – அபுதாபி:
                  இரண்டு நாட்களுக்கு முன்பு வேலைத் தளத்தில் மிக மோசமான ஒரு விபத்து நிகழ்ந்து விட்டது. வரைபட அப்ரூவலுக்காக ஆர்க்கிடெக்ட் அலுவலகத்திற்கும் அபுதாபி மினிஸ்ட்ரிக்குமாய் அலைந்து கொண்டிருந்ததில் நாலைந்து நாட்களாக என்னால் சைட்டிற்குப் போக முடிய வில்லை.
                       அடித்தளம் அமைப்பதற்காகத் தோண்டியிருந்த நீளமான ஆழமான குழிகளில் எல்லாம் சமீபத்தில் பெய்த பெரு மழையில் நீர் தேங்கி குழிகள் கேவிங் ஆகிக் கொண்டிருந்ததை டூட்டியில் இருந்த சூபர்வைசர் பொருட்படுத்தவும் இல்லை. என் கவனத்திற்குக் கொண்டு வரவும் இல்லை.
                       திடீரென்று சைட்டிற்குப் பக்கத்தில் உள்ள வீட்டின் மிகப் பழைய ஏற்கெனவே பலவீனமாய் இருந்த காம்பௌண்ட் சுவர் இடிந்து விழுந்து விட்டது. அது எப்படி அரபி வீட்டின் பக்கம் சரிந்து விழுந்தென்று தெரியவில்லை. ஒருவேளை வேலைத் தளத்தில் சுவற்றை ஒட்டி கட்டுமானத் தளவாடங்கள் அடுக்கப் பட்டிருந்ததால் அந்தப் பக்கம் விழுந்து விட்டதோ என்னவோ!
                       அப்போது சுவற்றிற்கு அருகில் உள்ள புழங்கு வெளியில் உட்கார்ந்து பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்த ஷர்மிளாவின் மீது சுவற்றின் பெரும்பகுதி விழுந்ததில் அவள் மயங்கி விழுந்து மூர்ச்சையாகி அதிர்ச்சியிலேயே இறந்து விட்டாள். 
                       வேலைக்கு பொறுப்பான என்ஜினியர் என்பதால் நான் கைது பண்ணப்பட்டேன். காவல் நிலையத்திலும் நீதி மன்றத்திலும் எனக்கு ஒரு அட்சரமும் புரியாத அரபி மொழியில் ஏதேதோ வாத பிரதி வாதங்கள் நிகழ்ந்து நான் சிறைக்குக் கொண்டு செல்லப் பட்டேன். ஷர்மிளா இறந்ததைத் தான் என்னால் தாங்கிக் கொள்ளவே முடிய வில்லை.

ஜூன் 22, 2005  புதன் – அபுதாபி:
                  அலுவலகம் போனபோது அரஃபாப் அல் படீனில் வில்லா கட்டும் காண்ட்ராக்ட் கை நழுவிப் போய் விட்டது என்று காச் மூச்சென்று சத்தம் போட்டார். நான் எதுவும் பேசாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.                      
                       அப்புறம் கொஞ்சம் குளிர்ந்து ”நல்லவேளையாக இடிபாடுகளில் சிக்கி இறந்து போனது ஒரு இந்தியப் பெண்ணாக இருந்தாள். அதே விபத்தில் ஒரு அரபியர் இறந்து போயிருந்தால் நீ சிரச்சேதம் பண்ணப் பட்டிருப்பாய்; அல்லது வாழ்நாள் முழுவதும் சிறையிலேயே கழிக்க வேண்டி யிருந்திருக்கும்.
                       இப்போது இறந்து போன இந்தியப் பெண்ணின் குடும்பத்திற்கு ப்ளட் மணியாக அதாவது இந்திய மொழியில் நஷ்ட ஈடாக ஒரு லட்சம் திர்ஹாம் கொடுத்தால் நீ விடுவிக்கப் பட்டு விடுவாய். உன்னால் கொடுக்க முடியுமா….?” என்றார். சுமார் பனிரெண்டு லட்சம் இந்திய ரூபாய்கள். என்னிடம் அவ்வளவு பணம் மொத்தமாக இருந்திருந்தால் நான் ஏன் இங்கு வேலைக்கு வந்திருக்கப் போகிறேன்!
                       ”நான் ஏன் கொடுக்க வேண்டும்? கம்பெனிக்காகத் தானே அந்த வேலை நடந்தது. நான் வேலையில் சேர்வதற்கு முன்பேயே வரைபடங்கள் அப்ரூவல் வராமலேயே குழி தோண்டி நீண்ட நாட்களுக்கு வெறுமனே வைத்திருந்ததால் தான் மண் சரிந்து பக்கத்து வீட்டின் காம்பௌண்ட் சுவர் இடிந்து விழுந்தது. அதற்கு நானெப்படி பொறுப்பாக முடியும்.….”என்றேன் கோபமாக.
                       ”நீ வேலையில் கொஞ்சம் சிரத்தையாக இருந்திருந்தால் அப்போதே எங்களுக்கு தவறைச் சுட்டிக்காட்டி, வேலையைத் தொடராமல் பார்த்துக் கொண்டிருக்கலாமே. சரி போனது போகட்டும்.  கம்பெனி சார்பில் ஐம்பதாயிரம் திர்ஹாம் கொடுக்கிறேன். அதற்கு மேல் என்னாலும் கொடுக்க முடியாது. மிச்சப் பணத்தை நீ தான் எப்படியாவது ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். அல்லது வருடக் கணக்கில் நீ சிறையிலேயே இருந்து கொள்….” என்றார் தீர்மானமாக.
                       கையிருப்பில் சுமார் இருபதாயிரம் திர்ஹாம் இருந்தது. இந்தியாவில் கிராமத்தில் இருக்கும் பூர்வீக நிலத்தை விற்றால் மிச்சப் பணத்தைப் புரட்டி விடலாம். மனைவியிடம் பேசி அதற்கு ஏற்பாடு செய்து கொள்ள முடிவு செய்தேன்.  
                       ”சரி. ஆனால் நான் முழுசாய் விடுவிக்கப் பட்டதும் என்னை இந்தியாவிற்குத் திரும்பிப் போய் விட அனுமதிக்க வேண்டும். இங்கு என்னால் தொடர்ந்து வேலை செய்ய முடியாது….”என்றேன்.
                       “உன் இஷ்டம்.  வற்புறுத்த மாட்டோம்….” என்றார்.
v  முற்றும்
(புலம் பெயர்வு சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றது.

காக்கைச் சிறகினிலே – ஜூலை 2016 இதழில் பிரசுரிக்கப்பட்டது)

Wednesday, August 3, 2016

இன்றைக்கு ஒரு சிறுகதை:

நீண்ட நாட்களாக ப்ளாக் பக்கமே வராமல் இருந்து விட்டேன்.
இனி அவ்வப்போது வந்து பத்திரிக்கைகளில் பிரசுரமான என் ஆக்கங்களை இங்கே பதிவிடப் போகிறேன்.

தினமணியும் நெய்வேலி புத்தகக் கண்காட்சியும் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டி 2016ல் இரண்டாவது பரிசு பெற்ற சிறுகதை இது.

சிறுகதை:
திரைகடலோடியும்….

                    இன்னும் இரண்டு நாட்களில் வரப் போகிற பொங்கல் பண்டிகையை எப்படி எப்படி எல்லாமோ கொண்டாடலாம் என்று மனம் நிறைய கனவுகளையும் அதற்கான திட்டமிடல்களையும் கொண்டிருந்தான் மாடசாமி. அவனுடைய சீன முதலாளியிடம் இரண்டு நாட்கள் விடுமுறை வேண்டு மென்று கேட்டு அவரும் சம்மதித்திருந்தார்.
                       ஆனால்  பொங்கலுக்கு முந்தின தினம் அவன் சூப்பர் மார்க்கெட்டில்  பணியில் இருந்த போது காவல்துறை மேப்படியான்களால் சுற்றி வளைக்கப் பட்டான். அவர்கள் அவனிடம் பாஸ்போர்ட்டையும் ஒர்க் பெர்மிட்டையும் காண்பிக்கச் சொன்னார்கள்.                            
                       மாடசாமியிடம் அவன் மலேசியாவில் தங்கி வேலை செய்தற்குத் தேவையான எந்த விசாவும் இருக்க வில்லை.  அவனிடம் இருந்ததோ இரண்டு வருஷங்களுக்கு முன்பே காலாவதியாகிப் போன டூரிஸ்ட் விசா மட்டுமே. வந்தவர்கள் நேரிடையாக மாடசாமியை மட்டும் தான் சுற்றி வளைத்தார்கள்.
                       அங்கிருந்த மற்றவர்கள் யாரிடமும் அவர்கள் எதையும் காண்பிக்கக் கூடச் சொல்லவில்லை. யாரோ மாடசாமியைப் பற்றி அவர்களுக்குத் தகவல் கொடுத்துத் தான் அவனை மட்டும் குறி வைத்து வந்திருக்கிறார்கள் என்று அவனுக்குப் புரிந்தது.
                       லியோஸிங் தான் காட்டிக் கொடுத்திருப்பான் என்று மாடசாமி யூகித்தான். ஒரு வாரத்திற்கு முன்பு இருவருக்கும் கடுமையான சண்டை. வாக்குவாதத்தின் போது லியோ மாடசாமியிடம், “நீயே திருட்டுத் தனமா இங்க தங்கியிருக்குற! நாளைக்கே போலீஸ் வந்து புடிச்சா உன்னை உன் நாட்டுக்கே அடிச்சுத் துரத்தீடும்..” என்று இளக்காரமாய்ப் பழிக்க, மாடசாமியும் பதிலுக்கு அவனைத் திட்டினான்.
                       ”எனக்காவது போலீஸ் புடுச்சா போறதுக்கு சொந்த நாடுன்னு ஒண்ணு இருக்கு. ஆனா உனக்குன்னு ஒரு நாடு இருக்கா? எந்த தேசத்துலயாவது உனக்கு வேர்கள் இருக்கா? நீ பிறப்பால் சீனன். ஆனா சீனாவுக்கு உன்னால போக முடியாது. ஏன்னா நீ அதோட பிரஜையே இல்லை. மலேசியாவுலயும் நீ மண்ணின் மைந்தனில்லை. இரண்டாம் தர மூன்றாம் தரகுடிமகன் தான்…..”
                       மாடசாமியின் வார்த்தைகள் லியோவைக் கடுமையாக சீண்டி விட்டிருக்க வேண்டும். அதற்கப்புறம் அவன் எதுவும் பேசாமல் அமைதியாகி விட்டான். அதை மனதில் வைத்திருந்து அவன் தான் மாடசாமி பற்றிய தகவலை போலீஸுக்குச் சொல்லி மாட்டி விட்டிருப்பான் என்று நினைத்துக் கொண்டான்.
                       சுமார் இரண்டு வருஷங்களுக்கு முன்பு எத்தனை கனவுகளோடு அவன் மலேசியாவிற்குப் பயணமானான். அவனுடைய அப்பா அவருடைய கையிருப்பில் இருந்த மொத்த சேமிப்பையும் போட்டு அவனுடைய தங்கையின் திருமணத்திற்காக வாங்கிச் சேர்த்து வைத்திருந்த நகைகளையும் விற்று அப்புறமும் ஒரு லட்ச ரூபாய் கடனை வாங்கி மொத்தமாய் இரண்டு லட்ச ரூபாய் கட்டி மலேசியாவிற்கு வந்திருந்தான்.
                       அலாவுதீன் டிரேடிங் இண்டர் நேஷனல் என்ற  கம்பெனியில் கணக்காளர் வேலை என்றும் – அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் கூட அடித்துக் கொடுத்திருந்தார்களே  – தங்கும் அறை  தந்து மாதம்  அறுபதாயிரம் ரூபாய் சம்பளம் தருவார்கள் என்றும் சர்க்கரையாய்ப் பேசினானே கோயம்புத்தூர் ஏஜெண்ட்.
                       “மலேசியாவிற்குப் போய் இறங்கியதும் நான் வேலை பார்க்கப் போகிற கம்பெனிய ஈஸியா கண்டு பிடிச்சுப் போயிடலாமா ஸார்…. கம்பெனி அட்ரஸக் காண்பிச்சா வழி சொல்வாங்களா?” என்று மாடசாமி அப்பாவியாய்க் கேட்டதும் எத்தணை ஆரவாரமாய் சிரித்தான் அந்த படுபாவி.
                       ”நீ ஏன் யாரையும் தேடிப் போகனும்? நீ என்ன சாதாரணக் கம்பெனிக்கா வேலைக்குப் போற! உன்னைத் தேடி ஆளு வருமப்பா. நீ ஏர்போர்ட் போய் இறங்கியதும் கம்பெனிக்காரன் வந்து உன்னை கார் வச்சு அழைச்சிட்டுப் போவான். பயப்படாமப் போ…..”என்றானே!
                       ”அதுக்கில்ல ஸார். என்னை அவங்களோ நான் அவங்களையோ முன்னப் பின்னப் பார்த்ததில்லயே, அப்புறம் எப்படி ஒருத்தரை ஒருத்தர் கண்டு பிடிச்சிக்கிறதுங்குறதுக்காகத் தான் கேட்டேன்.”என்றான் மறுபடியும் தன் அசட்டுத்தனம் வழிந்தோடும் வார்த்தைகளில்.
                       ”என்னப்பா நீ இவ்வளவு கூமுட்டையா இருக்குற? கம்பெனி பேர எழுதி அதுக்குக் கீழ வெல்கம் மிஸ்டர் நாச்சிமுத்து மாடசாமி ஃப்ரம் இண்டியான்னு எழுதி யிருக்கிற அட்டைய கையில தூக்கிப் பிடிச்சிக்கிட்டு கம்பெனி ஆள் நிப்பாங்கப்பா. அதப் பார்த்ததும் நீ தான் அவங்ககிட்டப் போய் நான் இன்னார்னு அறிமுகப் படுத்திக்கிடனும். இதுல என்ன பெரிய குழப்பம்!
                       சீனாக்காரனோ மலாய்க் காரனோ தான் வந்திருப்பான். அவன்கிட்டப் போய் தமிழ்ல பேசிக்கிட்டு நிக்காத. அப்புறம் உன்னை அனுப்பி வச்ச என் கம்பெனி மானம் கப்பல்ல ஏறிடும். ஸ்டைலா இங்கிலீஸ்ல பேசு. வாரத்துக்கு குறைஞ்சது நாலு பேர அனுப்பிக்கிட்டு இருக்கிறேன். யாருமே இப்படிப் கேனத்தனமா கேள்வி கேட்டதில்லப்பா….” என்று  ரொம்பவும் கோபித்துக் கொண்டார்.
                       அப்புறமும் அவனின் மனதுக்குள் ஆயிரம் கேள்விகள் அலை அடித்தன. முதல் மாதம் சம்பளம் வாங்குவது வரையான சாப்பாட்டுச் செலவுகளுக்கு என்ன செய்வது? கம்பெனியில் அட்வான்ஸ் தருவார்களா? மலேசிய உணவுகள் வயிற்றுக்கு ஒத்துக் கொள்ளுமா? ரூமில் ஸ்டவ் வைத்து சமைத்துக் கொள்ள அனுமதிப்பார்களா? என்று….. ஆனால் ஏஜெண்ட் கோபப்படுவார் என்பதால் கேட்கவில்லை..
                       கோயம்பத்தூர்க்காரர் சப் ஏஜெண்ட் தான். மெயின் ஏஜெண்ட் சென்னையில் இருக்கிறார். அவரிடம் போய் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று சென்னைக்குக் கிளம்பினான். அங்கு போனபின்பு அவர்கள் இவன் பேசுவதற்கே வாய்ப்புத் தரவில்லை.
                       இவனிடம் மிச்சப் பணத்தைப் பெற்றுக் கொண்டதும் விமான டிக்கெட்டையும் பாஸ்போர்ட்டையும் கையில் திணித்து ஜல்தி ஜல்தி என்று ஹிந்தியில் பேசி அவனை அங்கிருந்து விரட்டுவதிலேயே குறியாய் இருந்தார்கள்.
                       அதனால் கேள்விகளை யெல்லாம் மனதுக்குள்ளேயே புதைத்து விட்டு ஏர் போர்ட்டிற்குக் கிளம்பிப் போனான். அங்கு போய்த் தான் பாஸ்போர்ட்டைப் பிரித்து விசா முத்திரை இடப்பட்டிருந்த பக்கத்தைப் பார்த்தான். ஆங்கில எழுத்துக்கள் தான் ; ஆனால் வார்த்தைகள் எதுவும் அர்த்தமாக வில்லை. மலாய் மொழிக்கு எழுத்து வடிவம் கிடையாது என்பதையும் ஆங்கில லிபியில் தான் அவர்கள் எழுதுவார்கள் என்பதையும் மலேசியாவிற்குப் போய் சில நாட்களுக்கு அப்புறம் தான் அவன் அறிந்து கொண்டான்.  
                       கோலாலம்பூரில் இறங்கியதும் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போலிருந்தது அவனுக்கு. இவனுடன் விமானத்தில் பயணித்தவர்களைப் பின் தொடர்ந்தே போனதில் ஒரு வழியாய் விமான நிலையத்திற்கு வெளியே வந்து சேர்ந்து விட்டான். ஆனால் அங்கு அவனை வரவேற்கத் தான் யாரும் வந்து காத்திருக்கவில்லை. தாமதமாக வருவார்களோ என்று அங்கும் இங்குமாய் அலைந்து கொண்டிருந்தான்.
                       மலேசியாவில் நேரம் பத்து மணியைக் கடந்த பின்பும்  யாரும் வரவில்லை என்றதும் மாடசாமிக்கு பயம் வந்தது. அகோரமாய் பசிக்க வேறு செய்தது. ஒரு டாக்ஸி பிடித்து டிரைவரிடம் கம்பெனி அவனுக்குத் தந்திருந்த  அப்பாயிண்ட் மெண்ட் லெட்டரிலிருந்த முகவரியைக் காண்பித்தான்.
                       டாக்ஸி டிரைவரும் மாடசாமியை ஏற்றிக் கொண்டு ரோடு ரோடாக அலைந்தும் ஆர்டரில் இருந்த முகவரியைக் கண்டு பிடிக்கவே முடியவில்லை. ஒரு கட்டத்தில் அவனும் சலித்துப் போய் ஜலான் மஜீத் இந்தியா என்பது இது தான்…. ஆனால் இங்கு அந்தக் கம்பெனி எங்கிருக்கிறது என்று தெரியவில்லை என்று ஓட்டை ஆங்கிலத்தில் சொல்லி ஒரு மசூதிக்கு அருகில் இறக்கி விட்டுவிட்டுப் போய் விட்டான்.
                       கொஞ்ச தூரம் நடந்த போது குறிஞ்சி உணவகம் என்று தமிழில் எழுதப்பட்ட பெயர்ப் பலகை கண்ணில் பட்டதும் புதுத் தெம்பு வந்தது. மரத்துப் போயிருந்த பசியும் மறுபடியும் உயிர் பெற்றது. பொடி எழுத்தில் வாழை  இலையில் உணவு பரிமாறப்படும் என்றும் எழுதப் பட்டிருந்தது.
                       கல்லாவில் மினுமினுக்கிற கறுப்பில் உட்கார்ந்திருந்தவர் நிச்சயமாக தமிழராகத் தான் இருப்பார் என்றும் தோன்றியது. உள்ளே போய் உட்கார்ந்ததும் விசாரிக்க வந்த பரிசாரகப் பெண்ணிடம் ”ஒரு சைவ சாப்பாடு....” என்றான் மாடசாமி.
                       பரிசாரகப் பெண் ”தண்ணி என்ன வேண்டும்?” என்றாள். மாடசாமிக்குப் புரியவில்லை. தண்ணீரைத் தானே குடிப்பார்கள்; ஒருவேளை இந்த ஊரில் சல்லிசாகக் கிடைக்கிற தென்று பெட்ரோலைக் குடித்துக் கொண்டு சாப்பிடுவார்களோ என்னவோ என்று நினைத்துக் கொண்டு, “நீங்க என்ன கேட்குறீங்க...? எனக்கு உங்க கேள்வியே வெளங்கலையே!” என்றான்.
                       ”சாப்புடுறப்ப குடிக்க என்ன தண்ணி வேணும்....?” என்றாள் அவள் மீண்டும் அழுத்தம் திருத்தமாக. ”தண்ணி பச்சத் தண்ணி தான் வேணும்...” என்றான் மாடசாமி மறுபடியும். அவள் அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க, இவர்களின் விளையாட்டை ஒரு நமட்டுச் சிரிப்புடன் வேடிக்கை பார்த்துக் கொண்டு கல்லாவில் உட்கார்ந்திருந்தவர் எழுந்து வந்தார்.
                        “ஊருக்குப் புதுசா? ஊரு நாட்டுலருந்து வந்துருக்கீங்களோ? அவள் குடிக்க காஃபி, டீ, கூல்டிரிங்ஸ் மாதிரி ஏதாச்சும் வேணுமான்னு கேட்குறா....” என்று விளக்க மளித்தார்.
                       ”எதுவும் வேண்டாம்; தண்ணி போதும்....” என்றான். அவர் அவளிடம் “ஐஸ் கொஸாங் கொண்டு வா...” என்று சொல்லவும் அவள் தலையில் அடித்துக் கொண்டு போனாள். சிறிது நேரத்தில் ஒரு கண்ணாடி டம்ளரில் குளிர்ந்த நீர் கொண்டு வந்து வைத்தாள். மலேசியப் பணம் ரிங்கெட்டை தமிழில் வெள்ளி என்று அழைக்கிறார்கள் என்றும் அந்த உணவகத்திலிருந்து அறிந்து கொண்டான்.
                       சாப்பிட்டு முடித்ததும் கல்லாவில் உட்கார்ந்தவரிடம் போய் பணத்தைக் கொடுத்து விட்டு, “காலையிலருந்து அட்ரஸ் தேடி அலையுறேன். கண்டுபிடிக்கவே முடியலைங்க. உங்களுக்காச்சும் தெரியுதான்னு பாருங்க…”என்று சொல்லி, அவரிடம் முகவரியைக் காண்பித்தான்.
                       “நீங்க காண்பிக்குற சீட்டுல இருக்குறதுல வீதி பேரு மட்டும் தான் நிஜம். மத்ததெல்லாம் பொய்யின்னு தான் தோணுது. ஆனா நீங்க எதுக்கும் பக்கத்துல இருக்குற போஸ்ட் ஆபீசுல போயி விசாரிச்சுப் பாருங்க….” என்று தபால் நிலையம் போவதற்கு வழி காண்பித்து அனுப்பி வைத்தார்.
                       தபால் நிலையத்தில் அலாவுதீன் டிரேடிங் இண்டர் நேஷனல் என்ற பெயரில் கோலாலம்பூரில் கம்பெனி எதுவும் இல்லை என்று உறுதியாய் சொன்னார்கள். மாடசாமிக்கு தான் ஏமாற்றப் பட்டு விட்டோம் என்பது புரிந்தது. மறுபடியும் குறிஞ்சி உணவகத்திற்குப் போய் அழுதான்.
                       ”உங்களப் போல ஊரு நாட்டுலருந்து மாசத்துக்கு நாலஞ்சு பேரு ஏஜெண்டுகளால ஏமாத்தப்பட்டு இங்க வந்துக்கிட்டுத் தான் இருக்குறாங்க. அழுது ஒண்ணும் ஆகப் போறதில்ல. பேசாம ஊருக்குத் திரும்பிப் போயிடுங்க…” என்றார்.
                       ”ஊருக்குத் திரும்பிப் போறதுக்கு விமான டிக்கெட்டுக்குக் கூட என்கிட்ட பணம் இருக்காதுங்களே…. என்கிட்ட மிச்சமிருக்கிற பணம் ஒரு நாலஞ்சு நாளைக்கு சாப்பாட்டுச் செலவுக்குக் கூட வராதே….!” என்றான்.
                       அவனுடைய பாஸ்போர்ட்டையும் விமான டிக்கெட்டையும் வாங்கிப் பார்த்தவர், “இப்படி விவரம் தெரியாம வெள்ளந்தியா இருக்கீங்களே தம்பி. நீங்க இங்க வந்துருக்கிறது டூரிஸ்ட் விசாவுல. அதுக்கு ரிட்டன் டிக்கெட் காண்பிச்சாத் தான் விசாவே தருவான். அதனால டிக்கெட்டுக்குப் பணமெல்லாம் தேவையில்ல; ஏர்லைன் ஆபீஸுக்குப் போயி உடனே திரும்பிப் போகனும்னு சொல்லுங்க. அவங்க ஏற்பாடு பண்ணுவாங்க….” என்றார் அவனை விசித்திரமாகப் பார்த்தபடி.
                        ”ரெண்டு லட்ச ரூபாய் கடன் வாங்கி ஏஜெண்டுக்குக் கட்டிட்டு இங்க வேலைக்குன்னு வந்துருக்கேங்க. திரும்பிப் போனா வீட்டுல எல்லோரும் செத்துப் போயிடுவாங்க. நான் பி.காம் படிச்சிருக்கேங்க…. அதுக்கு இங்க வேல எதுவும் கிடைக்காதா?”என்றான் அழுதபடி.
                       ”அதெல்லாம் அவ்வளவு சுலபமில்ல தம்பி…..” என்று கொஞ்ச நேரம் யோசித்தவர், ”நம்ம ஊர்க்காரப் பிள்ளைங்கிறதால ஒரு உதவி வேணா பண்றேன்…. நீங்க டூரீஸ்ட் விசாவுல வந்துருக்குறதால முப்பது நாட்களுக்கு மலேசியாவுல இருக்கலாம். அப்புறமும் அதை ஒரு மாசத்துக்கு நீட்டிக்கலாம்.
                       என் ஓட்டல்லயே தங்கி சாப்பிட்டுக்கிட்டு என்கிட்டயே ஏதாவது வேலைகளை செய்யுங்க. வாரம் ஒருநாள் லீவு தர்றேன். ஏதாவது வேலை கிடைக்குமான்னு கம்பெனிகளுக்குப் போய் விசாரிச்சுப் பாருங்க. ரெண்டு மாசம் பாருங்க. கிடைக்கலைன்னா ஊருக்குத் திரும்பிப் போயிடுங்க.….”என்றார்.
                       அப்போது அந்த ஹோட்டல்காரர் மாடசாமிக்குத் தெய்வமாகத் தெரிந்தார். ஹோட்டல் என்றும் பாராமல் மடாரென்று அவர் காலில் விழுந்தான். எல்லோரும் ஆச்சர்யமாய் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். “அய்யோ, என்ன தம்பி இது….”என்று அவனை எழுப்பி ஒரு பரிசாரகனை அழைத்து, அவனை உள்ளே அழைத்துப் போகச் சொன்னார்.
                       மாடசாமி தன்னுடைய அப்பாவிற்கு தாங்கள் ஏமாற்றப் பட்டதை ஊருக்குப் போகும் போது சொல்லிக் கொள்ளலாம் என்று பத்திரமாய் வந்து சேர்ந்து விட்டதாக பட்டும் படாமல் கடிதம் எழுதினான்.
                       ஹோட்டல்காரர் ரொம்பவும் பயந்தார். போலீஸ் நடமாட்டம் தெருவில் தெரிந்தாலே அவனை உள்ளே போய் பம்மிக் கொள்ளச் சொன்னார். ஏனென்று விசாரித்த போது ”வேலைக்கான விசா இல்லாமல் இங்க வேலை செய்யக் கூடாது தம்பி. மேப்படியான்கள் புடிச்சிட்டா எனக்கும் பிரச்னை. உனக்கும் பிரச்னை…”என்றார்.
                       உள்ளூர் தினசரியை வாங்கி சலிக்காமல் வேலை தேடியும் எதுவும் அமைய வில்லை. யாரும் நேர்முகத் தேர்வுக்குக் கூட அழைக்கவில்லை. கம்பெனிகளில் நேரிடையாகப் போய் விசாரித்த போதும் பி.ஆர். ஸ்டேட்டஸ் வைத்திருப்பவர்களுக்குத் தான் வேலை தரமுடியும் என்று இவனுக்கு வேலை தர மறுத்து விட்டார்கள்.
                       இரண்டு மாதங்கள் முடியப் போகும் தருணத்தில்  ஹோட்டல்காரர் மாடசாமி இதுவரை வேலை செய்ததற்காக எண்ணூறு வெள்ளியை சம்பளமாகத் தந்து, ”பத்திரமா ஊருக்குப் போயிட்டு வாங்க தம்பி….”என்று அனுப்பி வைத்தார்.
                       “நான் உங்க கிட்டயே தொடர்ந்து வேலை செய்றேன்ங்க. இதேபோல ஏதாவது சம்பளம் போட்டுக் குடுங்க போதும்….” என்று கெஞ்சினான் மாடசாமி.
                       ”அதெல்லாம் தப்பு தம்பி. உன்கிட்ட டூரிஸ்ட் விசா கூட அவகாசம் முடியப் போகுது. மாட்டிக்கிட்டீன்னா கடுமையான பெனாலிட்டி போட்டுருவாங்க. கட்ட முடியலைன்னா பெரம்படி வாங்கி அஞ்சாறு வருஷம் ஜெயில்லயும் கிடக்கனும்….”என்று வம்படியாய் அவனை வெளியேற்றி விட்டார்.
                       ஹோட்டல்காரர் தேவையில்லாமல் பயப்படுகிறார் என்று மாடசாமிக்குத் தோன்றியது. இந்தோனேஷியாவிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் மற்றும் அக்கம் பக்கத்து நாடுகளிலிருந்தும் எந்த விதமான விசாவும் இல்லாமல் இங்கு வந்து தினக்கூலிக்கு எடுபிடிகளாக எவ்வளவோ பேர் வேலை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதை அவன் தீவிரமாய் வேலை தேடி அலைந்த நாட்களில் அறிந்து கொண்டான். அவனும் அவர்களில் ஒருவனாக மாறிவிட முடிவு செய்தான்.
                       பெட்ரோல் பங்குகளிலும் கன்ஸ்ட்ரக்‌ஷன் வேலைகள் நடைபெறும் இடங்களிலும் போய் தொடர்ந்து விசாரித்த போது தேஜா பெட்டாலிங் என்னும் இடத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த மிகப் பெரிய கட்டுமானப் பணியில் பெரியாளாக வேலைக்குச் சேர்த்துக் கொண்டார்கள். தினக்கூலி 40 வெள்ளி. பக்கத்தில் இருந்த லேபர்ஸ் கூடாரத்திலும் தங்கிக் கொள்ள அனுமதித்தார்கள்.
                       வாழ்க்கை பெரிய பிரச்னைகள் எதுவும் இல்லாமல் ஓடத் தொடங்கியது. வேலை தான் மிகவும் கடினமாக இருந்தது. தினசரி 12 மணி நேரத்திற்கும் மேல் உழைக்க வேண்டி இருந்தது. ஓவர் டைமிற்குக் கூலி கிடைத்தாலும்  உடம்பெல்லாம் வலித்தது. ஆனாலும் மாதந் தவறாமல் வீட்டிற்குக் கணிசமான பணம் அனுப்ப முடிந்ததில் மாடசாமிக்கு கவலை இல்லாமல் காலம் கழிந்து கொண்டிருந்தது.
                       இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை அவனுக்கு வார விடுமுறை. அந்த நாட்களில் லிட்டில் இந்தியா பகுதிக்குப் போய் கடை வீதிகளில் அலைந்தும் தியேட்டர்களுக்குப் போய் தமிழ் சினிமாக்கள் பார்த்தும் சந்தோஷமாய்க் கழித்து விட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தான்.
                       அப்படி ஒரு விடுமுறை தினத்தில் தான் மாடசாமி கலைச்செல்வியை சந்தித்தான். அந்த சந்திப்பு அவனுடைய வாழ்க்கையில் பெரிய திருப்பங்களை ஏற்படுத்தப் போகிறது என்பதை அப்போது அவன் அறிந்திருக்க வில்லை.
                       அன்றைக்கும் லிட்டில் இந்தியாவில் சுற்றி அலைந்து விட்டு வேலை செய்யும் இடத்திற்குத் திரும்புவதற்காக பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்தான்.
                       பஸ்ஸில் உட்கார இடம் கிடைக்காமல் நின்று கொண்டு தான் பயணிக்க வேண்டி இருந்தது. அப்படி ஒன்றும் நெரிசல் இல்லை. அவனிடமிருந்து கொஞ்ச தூரத்தில் நின்று கொண்டிருந்த பெண் கொஞ்சம் வசீகரமாய் இருந்தாள். பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போலிருந்தது.
                       பஸ்ஸின் குலுக்கலில் அவளுக்கு அருகில் நின்று கொண்டிருந்த ஒருவன் தெரியாமல் மோதுவது போல் வேண்டுமென்றே  அவளை உரசியபடியே பயணித்தான். மாடசாமி அதை ஒரு நமட்டுச் சிரிப்புடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
                       அவள் திடீரென்று அவளை இடித்துக் கொண்டு நின்றிருந்தவனிடம் திரும்பி மெல்லிய குரலில் “தமிழ்நாட்டுலருந்து வந்துருக்கீங்களோ?” என்றாள் தமிழிலேயே. அவனும் ஆச்சர்யமாக “ஆமா, எப்படி கண்டு பிடிச்சீங்க....” என்றான்.
                       “வேற யாரும் பஸ்ஸுல பொண்ணுங்கள இப்படி இடிக்க மாட்டாங்க.....” என்றவள் சிடுசிடுக்கவும் மிகவும் கூசிப்போய் மெதுவாய் அங்கிருந்து நகர்ந்து தூரமாய்ப் போய் நின்று கொண்டான்.
                       ஆச்சர்யமாக அவள் மாடசாமி இறங்கிய ஸ்டாப்பிங்கிலேயே இறங்கவும் அவளிடம் பேச்சுக் கொடுத்தான். ”அதெப்படி நீங்க தமிழ்நாட்டுலருந்து வந்துருக்க எல்லாத்தையும் ஒட்டு மொத்தமா இடிராஜாக்கள்ன்னு சொல்லலாம்.....” என்றான்.
                       ”ஓ.... நீங்களும் தமிழ்நாட்டுலர்ந்து தான் வந்துருக்கீகளோ.....” என்றாள். அவள் பேசுகிற தமிழ் வித்தியாசமாக இருந்தது. வார்த்தைகளை இழுத்து இழுத்துப் பேசினாள்.
                       “ஆமா. நீங்க சொல்ற இடிராஜாக்கள் எல்லாம் சென்னையிலயும் அதைச் சுத்தியிருக்கிற பகுதியிலயும் தான் இருப்பாங்க. எங்க பக்கத்துல யெல்லாம் பொண்ணுங்கள இடிச்சா அவ்வளவுதான். எலும்பை உடைச்சுக் கையில கொடுத்துருவாங்க பார்த்துக்கிடுங்க....” என்றான்.
                       ”அப்படியா.... நீங்க எந்தப் பகுதியிலருந்து வாறீக....” என்றாள். மாடசாமி சேலம் பக்கதிலருந்து வருவதாகச் சொன்னான். ஒரு பஸ் வரவும் “பை... லா....” என்றபடி கைகளை ஆட்டி ஓடிப்போய் பஸ்ஸில் ஏறிப் போய் விட்டாள்.
                       சில நாட்களிலேயே அதே பெண்ணை மீண்டும் ஒருமுறை சந்திக்க நேர்ந்தது. அன்றைக்கு ஒரு மழைநாள். ரொம்ப நேரமாய்க் காத்திருந்த போதும் பஸ் வந்த பாடில்லை. தொப்பலாய் நனைந்து, ஈரமும் குளிருமாய் வெடவெடத்தபடி பஸ்ஸிற்குக் காத்திருந்து சலித்த போது தான் அவள் இவனிடம் வந்து சிநேகதிமாய் சிரித்து, “நீங்க தேஜா பெட்டாலிங் தானே போக வேண்டும்?” என்றாள்.
                       மாடசாமி அப்போது தான் அவளைக் கவனித்தான். இவ்வளவு நேரம் இவள் எங்கிருந்தாள் என்று எண்ணியபடி “ஆமாம், அதுக்கென்ன?” என்றான். “நாம் ஒரு டாக்ஸி பிடித்து கட்டணத்தைப் பகிர்ந்து கொள்ளலாமா?” என்றாள். அவனுக்கும் அது நல்ல யோசணையாகத் தோன்றவே சரி என்றான்.
                       அவளே டாக்ஸி பிடித்தாள். இவன் டிரைவருக்குப் பக்கத்தில் உட்காரப் போகவும் அவனை உரிமையாய் அழைத்து பின் ஸீட்டில் அவளுக்குப் பக்கத்திலேயே உட்காரச் சொன்னாள்.
                       டாக்ஸி போய்க் கொண்டிருந்த போது, “நாம தனித்தனியா உட்கார்ந்திருந்தா, டிரைவர் நம்ம ரெண்டு பேரும் வேறவேற ஆட்கள்ன்னு தெரிஞ்சுக்கிட்டு  முழுக் கட்டணத்தையும் தனித்தனியா புடுங்கிடுவான். அதான்...” என்றாள். தன்னை கலைச்செல்வி என்று அறிமுகப் படுத்திக் கொண்டவள் தங்களுக்கும் பூர்வீகம் தமிழ்நாடு தான் என்றாள்.
                       ”எந்த ஊர்...” என்ற போது “அதெல்லாம் எங்க அப்பாவுக்குத் தான் தெரியும். அவர் தான் ரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவை போயிட்டு வருவார். டாய்லெட் கூட இல்லாத ஊர்ங்கிறதால நான் போறதில்ல; ரொம்ப சின்ன வயசுல ரெண்டொரு தடவை போயிட்டு வந்த ஞாபகம் இருக்கு...” என்றாள்.
                       மாடசாமி இறங்குமிடம் வருவதற்கு முன்பே ஓரிடத்தில் டாக்ஸியை நிறுத்தச் சொல்லி மீட்டரிலிருந்த கட்டணத்தில் பாதிக்கும் சற்று அதிகமாகவே அவனிடம் தந்து விட்டு இறங்கிப் போனாள்.
                       ஒருநாள் சினிமாவிற்குப் போயிருந்த போது அவளும் வந்திருந்தாள். அந்த தியேட்டர் காம்ப்ளெக்ஸில் சுந்தர புருஷன் மற்றும் காதல் கோட்டை என்று இரண்டு தமிழ்ப் படங்கள் போட்டிருந்தார்கள். இவன் சுந்தரபுருஷன் பார்க்கலாம் என்று போயிருந்தான்.
                       அவள் இவனிடம் வந்து “காதல் கோட்டைக்கு எனக்கும் சேர்த்து டிக்கெட் வாங்கிடுங்க....” என்று பணம் கொடுத்தாள். அப்போது தான் மாடசாமியின் மனதுக்குள் பெரு மழை பெய்தது போல் சிலிர்ப்பாய் இருந்தது.  காதல் கோட்டை மாதிரியான சினிமாவை ஒரு பெண்ணுடன் சேர்ந்து பார்க்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று ரொம்பவும் சந்தோஷமாக இரண்டாம் முறையாக அந்தப் படத்தைப் பார்த்தான். தியேட்டரில் தான் இருவரும் சரளமாக உரையாடத் தொடங்கினார்கள்.
                       கலைச்செல்வி அவனைப் பற்றி விசாரிக்கவும் ஏனோ அவளிடம் பொய் சொல்லத் தோன்றாமல்  எல்லாவற்றையும் சொன்னான். அடுத்த நாளே கலைச்செல்வி மாடசாமியை அவளின் அப்பாவிடம் அழைத்துப் போனாள்.  
                       மாடசாமி ஏஜெண்டால் ஏமாற்றப்பட்ட விபரங்களை அவளின் அப்பாவிடம் சொல்லி ”பாவம்ப்பா பி.காம் படிச்சிட்டு கன்ஸ்ட்ரக்‌ஷன் ஸைட்ல எடுபிடி வேலைகள் செய்றாராம். உங்க செல்வாக்குல இவருக்கு நல்ல வேலை ஏதாச்சும் வாங்கிக் குடுங்கப்பா...” என்றாள்.
                       அவளுடைய அப்பா மலேசியாவில் பெரும் புள்ளி போலிருக்கிறது. உள்ளூர் தமிழ் அமைப்பிற்குத் தலைவராக இருந்தார். மலேசியாவின் பிரதான கட்சி ஒன்றிலும் பெயர் தெரிந்த நபராக அறியப் பட்டிருந்தார்.
                       ஒரே வாரத்தில் பெட்டாலிங் ஜெயாவிலிருந்த மிகப் பெரிய சூப்பர் மார்க்கெட்டில் அவன் கணக்காளர் ஆனான். மாதம் இரண்டாயிரத்து ஐநூறு வெள்ளி சம்பளம். அதே கட்டிடத்தில் ஒரு அறையில் நான்கு பேருடன் தங்கல். எல்லாவற்றையும் சாத்தியப் படுத்திய கலைச் செல்வியை மானசீகமாய் கடவுளாய் வழிபடத் தொடங்கினான்.
                       கால ஓட்டத்தில் அவளின் மீதிருந்த மரியாதையும் பக்தியும் காதலாய்க் கனிந்தது. ஆனாலும் அதை அவளிடம் வெளிப்படுத்தாமல் – ஒருவேளை அவனை வெறுத்து ஒதுங்கிப் போய் விடுவாளோ என்ற பயத்தினால் – மனசுக்குள்ளேயே பூட்டி வைத்துக் கொண்டிருந்தான்.
                       இயற்கை விதியின் படி மனதின் அழுத்தம் தாங்காமல் ஒரு கட்டத்தில் அவனின் காதல் வெடித்து பஞ்சு பஞ்சாகி வெளிப்பட கலைச் செல்விக்கும் தெரிந்து விட்டது.
                       ”இதைச் சொல்வதற்கு ஏன் இத்தணை கால தாமதம்லா?” என்ற புன்முறுவலுடன் அவனின் காதலை ஏற்றுக் கொண்ட கலைச்செல்வி அவளின் அப்பாவிடம் போய் மாடசாமியை தனக்கு மணமுடித்து வைக்கும்படி மன்றாடினாள். ஒரே செல்ல மகள். அவளின் விருப்பத்தை அவர் ஒருநாளும் மறுத்ததே இல்லை. மாடசாமியை அழைத்துப் பேசினார்.
                       ”தம்பிக்கு தமிழ்நாட்டுல எந்த ஊர்ப்பா....?”
                       ”ஏற்கெனவே சொல்லியிருக்கேனே ஸார். சேலம். அங்க எங்க அப்பா காய்கறி, பழங்கள் சில்லரை வியாபாரம் பண்றார்....”
                       ”சேலம் நீங்க பொழைக்கிற ஊர். உங்களோட பூர்வீகம் எதுன்னு கேட்டேன்ப்பா.....”
                       ”பூர்வீகம்ன்னா சேலம் மாவட்டத்துல கம்மாளப்பட்டிங்கிற கிராமம் ஸார். அங்க இப்பவும் எங்க அப்பா வழி தாத்தா பாட்டி எல்லாம் இருக்குறாங்க....”
                       ”கம்மாளப்பட்டியா? எனக்கு நல்லாத் தெரியுமே அந்த ஊர. எங்களுக்குப் பூர்வீகம் நாமக்கல்லுக்குப் பக்கத்துல பாப்பம் பாளையம். எங்க பாட்டன் காலத்துலயே ஒரு பஞ்சத்துல தாக்குப் பிடிக்க முடியாம பொழப்புத் தேடி பினாங்குக்கு வந்து இங்கயே கால ஊனிக்கிட்டம்.
                       இருந்தாலும் நம்ம வேர்கள விட்டுறக் கூடாதுன்னு ரெண்டு மூணு வருஷத்துக்கு ஒரு தடவையாச்சும் ஊர்ப்பக்கம் போய் வந்துக்கிட்டு தான் இருக்கிறேன். நாம ரொம்ப நெருங்கீட்டோம் பார்த்தியாப்பா! ரெண்டு ஊருக்கும் கொண்டான் கொடுத்தான் உறவுகள் எல்லாம் ஏற்கெனவே இருக்கே. உங்க ஊர்க்காரர் கோவிந்தசாமி எங்க ஊர்ல தான் பொண்ணு கட்டியிருக்கார். அவரத் தெரியுமாப்பா?”  
                       ”பெரிய கவுண்டரத் தெரியாதவங்க ஊர்ல யாரு இருப்பாங்க ஸார்....”
                       ”அப்படியா, சந்தோஷம். அவருக்கு ஏதாவது வகையில நீ சொந்தமாப்பா?”
                       ”அய்யோ, அவரு எங்க; நாங்க எங்க. அவரு வீடு இருக்கிற வீதியில எங்க தாத்தா காலத்துல எல்லாம் நாங்க செருப்புப் போட்டுக் கூட நடக்க முடியாது ஸார்....” என்றான் ஒரு நைந்த புன்னகையுடன்.  ”அப்படியா....” என்று ஆச்சர்யப்பட்டவர் அப்புறம் வேறு விஷயங்களுக்குத் தாவினார்.
                       ஒருவாரம் கழிந்திருக்கும். கலைச்செல்வியின் அப்பா மறுபடியும் வரச் சொல்லிப் போயிருந்தான். “உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணினா கல்யாணத்த ரெஜிஸ்டர் பண்ணும் போது உனக்கு விசா இல்லைங்குறது வெளியில தெரிஞ்சு அது சிக்கலாயிடுமேப்பா....” என்றார்.
                       ”பத்துமலை முருகன் கோயில்ல வச்சு இப்போதைக்குக் கல்யாணம் பண்ணிக்கலாம்ப்பா. அப்புறம் நிதானமா இந்த ஊர் பொண்ணக் கல்யாணம் கட்டிக்கிட்டார்ங்குறத காரணமாக் காட்டி உங்க அரசியல் செல்வாக்க வச்சி ஏதாவது சித்து வேலைகள் பண்ணி மாடசாமிக்கு பி.ஆர்.ஸ்டேட்டஸ் வாங்கிக் குடுத்துருங்கப்பா...” என்றாள் கலைச்செல்வி ஒரு செல்லச் சிணுங்களுடன்.
                       ”அது அவ்வளவு சுலபமில்லம்மா...” என்றார் அவர். கலைச்செல்வியோ “அதெல்லாம் முடியாதுப்பா. நீங்க என்னவாச்சும் பண்ணிக்குங்க. ஆனா எப்படியாச்சும் எனக்கு இவரக் கல்யாணம் கட்டி வைங்க. இல்லைன்னா நான் செத்துப் போயிடுவேன்ப்பா....” என்றாள் பிடிவாதமாக. மாடசாமிக்கு பெருமையாகவும் சந்தோஷமாகவும் கொஞ்சம் பயமாகவும் இருந்தது.
                       ”அவசரப்படாத கலை. விசாரிக்கிறேன். இன்னும் ஒரு பத்து நாள் அவகாசம் குடு. என்ன பண்ணலாமின்னு பார்க்குறேன்...” என்றார். ஆனால் மாடசாமியின் கெட்ட நேரம், நாலைந்து நாட்களிலேயே மேப்படியான்களிடம் மாட்டிக் கொண்டானே!
                       போலீஸ் கஸ்டடியில் இருக்கும் போது அவனின் சூப்பர் மார்க்கெட் சகாக்கள் சிலர் அவனைப் பார்க்க வந்திருந்தார்கள். அவர்களுடன் லியோஸிங்கும் வந்திருந்தான். ”மேப்படியான்களிடம் நீயே மாட்டி விட்டுட்டு இப்போது எதற்கு வந்திருக்கிறாய்?” என்று அவனுடன் சண்டைக்குப் போனான் மாடசாமி.
                       அவனோ சத்தியமாக  தான் காட்டிக் கொடுக்கவில்லை என்று சாதித்தான். அவன் கண்களில் பொய்யில்லை. நிஜமான கலக்கம் தெரிந்தது. அப்படியென்றால் தன்னை யார் தான் காட்டிக் கொடுத்திருப்பார்கள் என்று மாடசாமிக்குக் குழப்பமாக இருந்தது.   
                        நீதிமன்றத்தில் அவனுக்கு ஆறாயிரம் வெள்ளி அபராதம் விதித்தார்கள். அதைக் கட்டிவிட்டு அவனுடைய செலவில் அவன் இந்தியாவிற்குத் திரும்பிப் போய் விட வேண்டும் என்றும் இனிமேல் அவன் மலேசியாவிற்குள் நுழையக் கூடாது என்று நிரந்தரத் தடையும் விதித்தார்கள். அபராதத் தொகையை கட்ட முடியாத பட்சத்தில் மூன்று வருஷங்களை அவன் ஜெயிலில் கழிக்க வேண்டும்.
                        சூப்பர் மார்க்கெட் முதலாளியும் அவனுடன் வேலை பார்த்த அவனுடைய சகாக்களும் ஆளுக்குக் கொஞ்சம் பணம் போட்டு தண்டத் தொகையைக் கட்டினார்கள். அவன் திரும்பிப் போவதற்கான விமான டிக்கெட்டிற்கு அவனிடமே போதுமான பணம் இருந்தது.
                        மாடசாமி இந்தியாவிற்குத் திரும்பிப் போக இருந்த தினத்தில் அவனை ஏர்போட்டிற்கு வந்து சந்தித்தாள் கலைச்செல்வி. ”கவலைப்படாத செல்வி. இப்போதைக்கு இந்தியாவுக்குப் போயிட்டு கொஞ்ச நாள்ல கள்ளத் தோணி பிடிச்சாவது மலேசியாவுக்குத் திரும்பி வந்து உன்னைக் கல்யாணம் கட்டிக்கிறேன்.....” என்றான் திரைப்பட ஹீரோவின் வீராவேசத்தோடு.
                        ”முட்டாள்த் தனமா அப்படி எதுவும் செய்து தொலைக்காத. அப்புறம் நீ உயிரோடவே ஊருக்குத் திரும்பிப் போக முடியாது. நீ போதைப் பொருள் வச்சிருந்தது மாதிரி ஏதாவது பொய்க் கேஸப் போட்டு உன்னை தூக்கு மேடைக்கு அனுப்பிடுவாங்க....” என்றாள் கலைச்செல்வி.
                        ”என்மேல யாருக்கு அத்தணை வெறுப்பு?”
                        ”இப்ப உன்னை மேப்படியான்கள்கிட்ட மாட்டி விட்டது யார்ன்னு நெனைக்குற?” என்றாள்.  “தெரியலையே....” என்றான் மாடசாமி.
                        “எங்க அப்பா தான்....” என்றாள் அழுது கொண்டே.
                        மாடசாமி அதிர்ந்து ”உளராத. அவர் ஏன் என்னைக் காட்டிக் கொடுக்கனும்...” என்றான்.
                        “நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்காம இருக்குறதுக்காக.....” என்றாள்.
                        மாடசாமிக்கு எதுவும் புரியவில்லை. அவளே விளக்கமாகச் சொன்னாள்.
                        ”இந்தியர்கள் தான் திரைகடலோடி திரவியம் தேட வந்தாலும் சாதியையும் சாமியையும் சுமந்துக்கிட்டுத் தான வர்றீங்க.... அன்னைக்கு உன்னோட பூர்வீகம் அதுஇதுன்னு சுத்தி வளைச்சுப் பேசினாரே அது எதுக்குன்னு நெனைக்குற? உன்னோட சாதி என்னன்னு தெரிஞ்சுக்கிறதுக்குத் தான். நேரிடையா விசாரிச்சா அவரப் பத்தாம்பசலி, பிற்போக்கானவர்ன்னு நாம நினைச்சிடுவோம்ல....
                        எப்படியோ உன் சாதி என்னன்னு தெரிஞ்சுக்கிட்டார். அப்புறம் எப்படி என்னை உனக்குக் கட்டிக் கொடுக்க அவரோட மேல் சாதி கௌரவம் இடம் குடுக்கும்? முதல்ல வேற மாதிரிப் பேசி வெட்டி விடப் பார்த்தார்.....!     ஆனா நானோ பொம்மை கேட்டு அடம் பிடிக்கிற குழந்தை மாதிரி பிடிவாதமா உன்னைத் தான் கட்டிக்குவேன்னு ஒத்தக் கால்ல நின்னேன்.
                        அதான் உன்னைக் கழட்டி விடுறதுக்காக போலீஸ்ல காட்டிக் கொடுத்துட்டார்....” என்று கண்ணீருடன் சொல்லி விடை பெற்றுப் போன கலைச்செல்வியைப் பிரமையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் மாடசாமி.

Ø  முற்றும்


(தினமணியும் – நெய்வேலி புத்தக்க கண்காட்சியும் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் இரண்டாவது பரிசு பெற்றது. தினமணிக்கதிர் 24.07.2016 இதழில் பிரசுரிக்கப் பட்டது)