Tuesday, July 16, 2013

சிறுகதை: பால்ய கர்ப்பங்கள் - தினமணிக்கதிரில் பிரசுரமானது


                       பத்தாம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடந்து கொண்டிருந்தது. விஜிலென்ஸ் வந்து போன கொஞ்ச நேரத்திற்கெல்லாம் ஒரு தேர்வு அறையிலிருந்து அய்யோ அம்மா என்று சத்தம் வரவும் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. தலைமை ஆசிரியர் தொந்தியைத் தூக்கிக் கொண்டு அவசரமாய் அந்த அறைக்கு ஓடினார்.

                        சுந்தரத்தாய்க்கு எதுவும் புரியவில்லை. அவள் உடம்பு சுகமில்லாததால் மெடிக்கல் லீவு போட்டு வீட்டிலிருந்தவள், இன்றைக்கு அவளுடைய பாடத்திற்கு பரீட்சை என்பதால் சிரமத்துடனேயே பள்ளிக்கு வந்திருந்தாள். அவள் பள்ளிக்குள் அனுமதிக்கப் படவில்லை. மாணவர்கள் எழுதி முடித்து வெளிவரக் காத்திருந்தாள். 

                        என்னமோ ஏதோவென்று, அவளும் பரபரப்பாயிருந்த அறைக்குப் போனாள். நாகவள்ளிக்கு பிரசவ வலி வந்து தரையில் விழுந்து துடித்துக் கொண்டிருந்தாள். தேர்வறையில் கண்காணிப்பிற்கு இருந்த கமலாம்பளும் சத்தங் கேட்டு ஓடிவந்த சுந்தரத்தாயும் அவளைக் கைத்தாங்கலாக பக்கத்திலிருந்த இயற்பியல் சோதணைக்கூடத்திற்கு அழைத்துக் கொண்டு போனார்கள். கமலாம்பாள் கோபத்தில் சத்தம் போட்டாள்.

                        ”குழந்தை பொறக்குறது இப்பவோ அப்பவோன்னு இருக்கும் போது எதுக்குடி பரீட்சை எழுதுறதுக்கெல்லாம் வர்ற....?” நாகவள்ளி பதில் எதுவும் பேசாமல் அலறிக் கொண்டிருந்தாள்.

                        ”விடுங்க டீச்சர்; இது குழந்தை பெத்துக்குற வயசா...! இவ எங்க ‘நாள்’ எல்லாம் கணக்கு வச்சிருக்கப் போறா....” சுந்தரத்தாய் தான் சமாதானப் படுத்தினாள்.

                        சுந்தரத்தாய்க்கு மனசுக்கு ரொம்பவும் கஷ்டமாக இருந்தது. பதிமூணு பதினாலு வயதில் கல்யாணம்; பதினைந்து வயதில் பிள்ளைப் பேறு! பால்ய வயதின் சந்தோஷங்கள் எதையும் அனுபவிக்க முடியாமல் என்ன ஒரு கொடுமையான வாழ்க்கை இந்தப் பெண்களுக்கு!

                  ஆசிரியர்கள் சிலர் வண்டி ஏதாவது கிடைக்குமா என்று பார்ப்பதற்காக வெளியில் ஓடினார்கள். ஆனால் அதற்கு அவசியமில்லாமல் கொஞ்ச நேரத்திலேயே குழந்தையின் சின்ன அழுகுரல் பள்ளி வளாகமெங்கும் எதிரொலித்த்து.

                        பெண் குழந்தை! சுந்தரத் தாயும் கமலாம்பாளும் தங்களுக்குத் தெரிந்த வகையில் குழந்தையை வெளியில் இழுத்துப் போட்டு ஆரம்பகட்ட பண்டுதங்களைப் பார்த்தார்கள்.

                        அரசு உயர்நிலைப் பள்ளியில் சுந்தரத்தாய்க்கு வேலை கிடைத்த போது அவளால் முழுமையாய் சந்தோஷப் பட முடியவில்லை. இரண்டு காரணங்கள். முதல் காரணம் – அவளை எங்கோ கேள்வியே பட்டிராத மாதர்மலை என்னும் கிராமத்தில் போஸ்டிங் போட்டிருந்தார்கள். இரண்டாவது காரணம் அவளின் இரண்டு வயதே ஆகியிருந்த குழந்தை நிர்மலாவை அந்தக் குக்கிராமத்தில் யாரிடம் விட்டுவிட்டு வேலைக்குப் போவது?

                        டேனியலிடம் கேட்டபோது, “குழந்தைய வளர்க்குறதுக்காகத் தான் நீ வேலைய விட்ட; இப்ப என்ன திடீர்னு மறுபடியும் வேலைக்குப் போகனும்னுட்டு.... இன்னும் கொஞ்ச நாளைக்கு வீட்டில இருந்து தான் குழந்தையப் பார்த்துக்கோயேன்....” என்றான்.

                        ”டெம்ப்ரரியா வேலை பார்த்துக்கிட்டுருக்கும் போது, குழந்தைக்காக வேலை வேண்டாம்னு விட்டது வாஸ்தவந்தான்; ஆனா இப்பக் கிடைச்சுருக்குறது அரசாங்க வேலைங்க..... அதெப்படிங்க அவ்வளவு சுலபமா விட முடியும்? ஒரு வருஷம் பல்லக் கடிச்சு சமாளிச்சுட்டம்னா அப்புறம் மாற்றல் வாங்கி நம்ம பக்கத்துக்கு வந்துடலாங்க; நிர்மலாவையும் ஸ்கூல்ல சேர்த்துட்டம்னா பெரிய சிரமம் இருக்காதுங்க.....” என்றாள்.

                        வேலையை ஒத்துக் கொள்ள முடிவு செய்து குடும்பத்தோடு மாதர்மலைக்குப் போனார்கள். முக்கால்வாசி தூரத்திற்கு இரயில் இருந்தது. மலை அடிவாரத்திலிருந்து அந்த கிராமத்திற்குப் போவதற்கு ஒரே ஒரு பஸ் ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு முறை மட்டுமே வந்து போய்க் கொண்டிருந்தது.

                        அந்த பஸ் பிரேக் டௌனானால் அதோ கதி தான். பஸ்ஸில் பயணிகளை விடவும் அதிகமாக மூட்டை முடிச்சுக்களும் காய்கறி, பழக் கூடைகளும் ஏற்றப்பட்டு லொட லொடவென்று முக்கி முனகிக் கொண்டு தான் மலை உச்சிக்குப் போக முடிந்தது.  

                        குழந்தைகள் கோலம் போட கோணல் மாணலாய் வைத்த புள்ளிகளாய் ஒழுங்கற்று அங்கொன்றும் இங்கொன்றுமாய் வீடுகளிருந்தன. அபூர்வமாய்ச் சில வீடுகளில் தான் மின்சாரமிருந்தது. பெரும்பான்மையான வீடுகள் மண்சுவர் வைத்து கம்மஞ்சக்கை அல்லது சோளத்தட்டை, புல் மற்றும் வைக்கோலால் தான் கூரை வேயப்பட்டிருந்தது.

                        குளிக்க புழங்க தண்ணீருக்கு, பாசி படர்ந்த கண்மாய் இருந்தது. குடிதண்ணீருக்கு ரொம்ப தூரம் போக வேண்டி இருந்தது. செவ்வாய்க் கிழமை வாரச்சந்தையில் மட்டுமே பொருட்கள் வாங்க முடிந்தது. ஒன்றிரண்டு பெட்டிக் கடைகள் மட்டும் பீடி, மூக்குப்பொடி, வெத்தலை பாக்கு, மிட்டாய்கள் போன்றவைகளை விற்றன. அவசர ஆத்திரத்திற்கு மருத்துவ வசதியும் எதுவுமில்லை.

                        டேனியல் சில நாட்கள் லீவு போட்டுவிட்டு அவர்கள் அங்கு தங்கி இருப்பதற்கான ஏற்பாடுகளைக் கவனித்தான். ஊரிலிருந்த கான்கிரீட் தளம் போட்ட ஒரே வீடு முத்தரசன் வாத்தியாருடையது. அந்த வீட்டின் மொட்டைமாடியில் வாத்தியாரின் அம்மா உயிரோடிருந்த போது தங்கிக் கொள்வதற்காக ஒரு சின்ன சமையலறையும் ஒரு எட்டுக்கு பத்து படுக்கை அறையும் கட்டியிருந்தார். அவளின் மறைவிற்குப் பின் அந்த ஈரறை கொண்ட வீடு வெறுமனே பூட்டப்பட்டுத் தான் கிடந்தது. அந்த வீட்டை அவர் சுந்தரத்தாய்க்கு வாடகைக்கு விட சம்மதித்ததில் தங்குவதற்கான பிரச்னை தீர்ந்தது.

                        டேனியல் அங்கிருந்து, அவனின் தினப்படி அலுவல்களுக்குக் கிளம்பிப் போய்விட்டான். சுந்தரத்தாயும் குழந்தையும் மாதம் ஒருமுறையோ அல்லது பள்ளியில் மூன்று நாட்களுக்கு மேல் தொடர்ந்து விடுமுறை கிடைக்கும் போதோ அவனிருக்கும் பட்டணத்திற்கு போவது என்றும் மற்ற நாட்களிலெல்லாம் அந்த மலைகிராமத்திலேயெ தங்கிக்  கொள்வது என்றும் முடிவானது.

                        நிர்மலாவைக் கவனித்துக் கொள்வதற்கு ஆள் கிடைப்பது தான் மிகவும் சிரமமாக இருந்தது. அவளையும் தன்னுடனேயே பள்ளிக்கு அழைத்துப் போய்க் கொண்டிருந்தாள். இவள் வகுப்பிற்கு போகும் தருணங்களில் துரு துருவென்று இருக்கும் நிர்மலாவை கவனித்துக் கொள்வது எல்லோருக்கும் பெரும்பாடாகவும் ரொம்பவும் சங்கடமாகவும் இருந்த்து.

                        எல்லா வகுப்புகளிலும் சொல்லி வைத்திருந்தாள். அங்கு படிப்பவர்களின் குடும்பத்தினர் யாராவது குழந்தையைப் பார்த்துக் கொண்டால், அதற்காக மாதம் ஒரு கணிசமான தொகையை தந்து விடுவதாக. காடு கழனி என்று வேலைக்குப் போகும் குடும்பத்தில் யாருமே இவளின் குழந்தையைக் கவனித்துக் கொள்ள முன்வரவில்லை.

                                இவள் வேலைக்குச் சேர்ந்து பத்து நாட்களுக்கப்புறம் தான் எட்டாம் வகுப்பிற்கு நாகவள்ளி பள்ளிக்கு வந்தாள். அப்போது அரையாண்டுத் தேர்வுகள் நெருங்கிக் கொண்டிருந்தன. அவள் பெயரே வருகைப் பதிவேட்டிலிருந்து நீக்கப் பட்டிருந்தது. ”ஏம்மா இவ்வளவு நாள் கழிச்சு ஸ்கூலுக்கு வர்ற?” என்று கேட்ட போது மரியாதை நிமித்தம் மார்பின் குறுக்கே கைகளைக் கட்டியபடி எதுவும் பேசாமல் தலை குனிந்தபடி நின்று கொண்டிருந்தாள் அவள்.

                        வகுப்பிலிருந்த இன்னொரு பெண் தான் எழுந்து “அவள் வயசுக்கு வந்துட்டா, அதான் டீச்சர்.....” என்றாள். வேறொரு பெண் எழுந்து, “அதெல்லாம் இல்ல டீச்சர்; அவ ஏழாப்பு முழுப் பரீட்சை லீவுலயே வயசுக்கு வந்துட்டா; அவங்க அய்யா, வேறொரு பொம்பளைய இழுத்துக்கிட்டு ஊரை விட்டு ஓடீருச்சு; அதனால கை வேலைக்கு ஆள் வேணுமின்னு அவங்க அம்மா இவள பள்ளிக்கூடத்துக்குப் போக வேணாமுன்னு இவ்வளவு நாளும் நிறுத்தி வச்சுருந்துச்சு; இவள் அழுது அழுது முரண்டு பிடிக்கவும் இப்பத் தான் மனசு இறங்கி பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி வச்சுருக்கு......” என்றாள்.

                        சுந்தரத்தாய் ”அப்படியா.....” என்று நாகவள்ளியைப் பார்க்க, அவள் விசும்பியபடி “ஆமாம் டீச்சர்; எனக்கு படிக்க ரொம்ப ஆசை டீச்சர்..... இவ்வளவு நாள் வராம இப்ப பள்ளியோடத்துக்கு வரவும் எட்மாஸ்டர் சேர்த்துக்க மாட்டேங்குறார் டீச்சர்; நீங்கதான் எப்படியாவது அவர்ட்ட சொல்லி என்ன சேர்த்துக்க சொல்லனும் டீச்சர்....” என்றாள்.

                        ”இவ்வளவு நாள் பாடம் படிக்காம, திடீர்னு எப்படிம்மா, விட்டுப்போன பாடங்கள எல்லாம் படிப்ப?” என்றாள் சுந்தரத்தாய். “கொஞ்சம் கொஞ்சமா படிச்சிருவேன் டீச்சர்; சந்தேகமிருந்தா உங்க வீட்டுக்கு வந்து கேட்டு படிச்சுக்கிடுறேன் டீச்சர்....” என்றாள் நம்பிக்கையாய்.

                        ”நாகவள்ளி நல்லா படிப்பா.....எப்பவுமே வகுப்புல அவதான் ஃபர்ஸ்ட் டீச்சர்; அதனால விட்டுப் போன பாடத்தை எல்லாம் சீக்கிரமே படிச்சுடுவா டீச்சர்; பாவம் டீச்சர், பள்ளிக்கூடத்துல சேர்த்துக்குங்க டீச்சர்....” என்று பல பிள்ளைகளும் அவளுக்காக வக்காலத்து வாங்கினார்கள்.

                        தலைமை ஆசிரியரிடம் அழைத்துப் போன போது அவர் “உன் இஷ்டத்துக்கு வந்து சேர்றதுக்கு இதென்ன பள்ளிக்கூடமா, இல்ல சந்தை மடமா? நீ யெல்லாம் படிச்சு என்ன பெரிய கலெக்டர் உத்தியோகத்துக்கா போகப் போற! பேசாம வீட்ல போயி இப்பவே சாணி தட்டிப் பழகிக்கோ.....” என்று சீறி விழுந்தார். சுந்தரத்தாய் தான் அவரை சமாதானப் படுத்தினாள்.

                        “சரி விடுங்க சார்... பெரியவங்க பண்ற தப்புக்கு இவ என்ன பண்ணுவா....? கிராமங்கள்ல பிள்ளைங்க பள்ளிக்கூட்த்துக்கு வர்றதே பெரிய விஷயம்; காமராசர்ங்குற புண்ணியவான் இந்த மாதிரி குக்கிராமங்கள்ல பள்ளிக் கூடங்களத் தொடங்கி மதிய உணவு திட்டத்தயும் கொண்டு வந்ததால சாப்புடுற சாக்கில தான் பல பிள்ளைங்க பள்ளிக்கூடத்துக்கே வருதுங்க..... அப்படி வர்றவங்களயும் நாம திருப்பி அனுப்பீட்டா எப்படி சார்..... இவள நான் தேத்திக் கொண்டு வந்துடுறேன்; சேர்த்துக்குங்க......” 

                        ”இவ பேரை வருகைப் பதிவேட்டுல இருந்து நீக்கி மாவட்ட அதிகாரிக்கெல்லாம் ரிப்போர்ட் அனுப்பியாச்சே மேடம்......” என்று தயங்கியவர் அப்புறம் இவளின் நச்சரிப்புக்கு ஆற்ற மாட்டாமல், அரை மனதாக நாகவள்ளியை மறுபடியும் பள்ளியில் சேர்த்துக் கொண்டார்.

                        நாகவள்ளியின் மூலம் தான் நிர்மலாவைக் கவனித்துக் கொள்கிற பிரச்னைக்கு ஒரு விடிவு கிடைத்தது. “எங்க அம்மாவும் ஆயாவும் காட்டு வேலைகளுக்குப் போறதில்லங்க டீச்சர்; கூடை, முறம்னு முடைஞ்சுக்கிட்டு வீட்டுல தான் இருப்பாங்க; முடைஞ்சத நம்ம ஊர் வாரச் சந்தையில தான் விப்பாங்க; நார் ஓலை எல்லாம் வாங்குறதுக்கு வாரத்துக்கு ஒரு வாட்டி தான் அம்மா மட்டும் மலை அடிவாரத்துக்குப் போயிட்டு வரும்; அப்பயும் ஆயா வீட்டுலதான் இருக்கும்; நீங்க வந்து பாப்பாவப் பார்த்துக்குங்கன்னு சொன்னீங்கன்னா சரீன்னுடுவாங்க....” என்றாள்.

                        அதன்படி அன்றைக்கு மாலையே சுந்தரத்தாய் நாகவள்ளியின் வீட்டுக்குப் போன போது, அவளின் அம்மா மட்டும் தான் வீட்டிலிருந்தாள். ஆயா வெளியில் எங்கேயோ போயிருந்தாள். அவளுக்கு அதிக பட்சம் போனால் முப்பது வயதுக்குள் தான் இருக்கும். வாழ்க்கை அவளின் உடலில் தளர்ச்சியையும் வறுமையின் சுவடுகளையும் ஆழமாய்ப் பதித்திருந்தாலும் முகத்தில் இளமையின் பொலிவிருந்த்து.

                                வீடு மிகச் சின்னதாய் குனிந்து தான் உள்ளே போக வேண்டியபடி இருந்தது. உள்ளே மண்தரை சாணிப்பாலால் மெழுகப்பட்டு, குறைவான பொருட்கள் அதனதன் இடத்தில் வைக்கப்பட்டு ஓரளவிற்கு நேர்த்தியாகவே இருந்தது.

                        வீட்டிற்கு முன்னால், திறந்த வெளி விஸ்தாரமாய் விரிந்து கிடந்தது. அங்கு கிளை விரித்து படர்ந்து கிடந்த வேப்ப மரத்தின் கீழ் தான் இவர்கள் முறம் பின்னுகிற வேலை நடந்து கொண்டிருப்பதற்கு அறிகுறியாக ஓலை மற்றும் நார்த் துணுக்குகள் சிதறிக் கிடந்தன. இவள் போகவும், உள்ளே அழைத்து கோரம் பாயை விரித்துப் போட்டு உட்கார வைத்து,  பரபரவென்று சுழன்று, கருப்பட்டி காப்பி கலந்து கொண்டு வந்து கொடுத்தாள் நாகவள்ளியின் அம்மா.

                        “பொறுத்துக்கனும் டீச்சர்; எங்க வீட்லயெல்லாம் பால் காப்பி போடுறதுல்ல......” வெட்கத்துடன் சிரித்தாள். “அதனால என்னங்க; இதுவே நல்லாத் தான் இருக்கு; எதுனாலும் நான் குடிப்பேன்.....” என்றவள் ”நாகவள்ளி உங்களுக்கு ஒரே பொண்ணா?” என்று எதார்த்தமாய்க் கேட்கவும் அவள் கண்களில் கரகரவென்று கண்ணீர் பொங்கி விட்ட்து.

                        ”இல்ல தாயி இவளுக்கு முன்ன ஒண்ணு இவளுக்கு அப்புறம் ஒண்ணுன்னு மொத்தம் மூணு பெத்தேன்; மத்த ரெண்டையும் படுபாவிங்க என் புருஷனும் அவனோட ஆத்தாளும் சேர்ந்துக்கிட்டு கள்ளிப் பால் ஊத்தி கொன்னுட்டாங்க தாயி; நாகவள்ளியையும் கொன்னுருப்பாங்க; இவள பெத்து ஒரு வருஷம் எங்க ஆத்தா வீட்டுலயே இருந்துட்டு அப்புறம் தான் தூக்கிட்டு வந்ததால தப்பிச்சா... ஆம்பளப் புள்ள தான் கடைசி காலத்துல அப்பனுக்கு கஞ்சி ஊத்துமாம்; பொம்பளப் புள்ளைன்னா செலவுதானாம்; இங்கயெல்லாம் பொம்பளப் புள்ளைகள பொறந்தவுடனே கொல்றது சகஸம் தாயி.....” என்றாள் துக்கம் மேலிட.

                         கொஞ்ச நேரம் பேசாமல் இருந்து விட்டு, “என் வயித்துல ஆம்பளப் புள்ளயே தரிக்காதுன்னு ஏதோ ஜோசியக்காரன் சொன்னான்னுட்டு என்னத் தள்ளி வச்சுட்டு வேறொருத்திய இழுத்துட்டுப் போயி, குடும்பம் நடத்துறான் கம்மனாட்டி....” என்று சொல்லி கணவனைக் கண்டபடி திட்டி காறிக்காறித் துப்பினாள். 

                        சுந்தரத்தாய் அவளின் குழந்தையை பார்த்துக் கொள்வது பற்றி பேச்செடுக்கவும்   “அதுக்கென்ன தாயி, மகராசியா விட்டுட்டுப் போ; பார்த்துக்குறோம்.....” என்றாள்.

                        இவள் சம்பளம் பற்றிப் பேச்செடுத்த போது, “பச்சப்புள்ளய பார்த்துக்கிறதுக்கு பைசாவா, அதெல்லாம் வேணாம் தாயி; அதுக்கு நாங்க என்ன பண்ணப் போறோம்....! அது பாட்டுக்கு வெளையாடப் போகுது; தூங்கப் போகுது; பசிக்கும் போது நீ குடுத்துருக்குற சோறு தண்ணியக் குடுக்கப் போறோம்..... அதுக்கெல்லாமா காசு வாங்குறது! கிராமத்துல அதெல்லாம் வழக்கமில்ல தாயி....” என்று எவ்வளவோ வற்புறுத்திய போதும் வம்படியாக பணம் வாங்கிக் கொள்ள மறுத்து விட்டாள்.

                        சுந்தரத்தாய் அவளிடமிருந்து விடைபெற்றுக் கிளம்பும் போது “நீங்க கிறிஸ்துவங்களோ டீச்சர்....” என்று கேட்டாள். ”ஆமா, ஏன் கேட்குறீங்க; கிறிஸ்துவங்க பிள்ளைன்னா பார்த்துக்க மாட்டீங்களா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டாள்.

                        “அய்யோ, நீ வேற தாயி; எல்லாம் மனுஷங்க தான.... நெத்திக்கு பொட்டு இட்டுக்கலையேன்னு கேட்டேன்.....” என்றவள், “பார்த்து பத்தரமாப் போயிட்டு வா தாயி...“ என்று அனுப்பி வைத்தாள். நாகவள்ளியும் அவளுடனேயே வந்தாள் நிர்மலாவைத் தூக்கிக் கொஞ்சியபடி.

                        நாகவள்ளி பெரும்பாலான நேரங்களில் சுந்தரத்தாயின் வீட்டில் தான் இருந்தாள். அவள் வீட்டில் மின்சார விளக்கு இல்லாததாலும், பாடங்களில் எழும் சந்தேகங்களை கேட்பதற்ககாகவும் இரவுகளிலும் டீச்சர் வீட்டிலேயே தான் தங்கிப் படித்தாள். அவ்வப்போது அவளுடனேயே சாப்பிட்டும் கொண்டாள்.

                        சுந்தரத்தாயே ஆச்சர்யப் படும் படியாக நாகவள்ளி கடந்து போன பாடங்களையெல்லாம் முழு மூச்சாய்ப் படித்து, எட்டாம் வகுப்பு அரையாண்டுத் தேர்விலேயே கணிசமான மதிப்பெண் வாங்கி, மூன்றாம் ரேங்க் வாங்கினாள்.  அரைப் பரீட்சைக்கு அப்புறம் வந்த மாதத் தேர்விலேயே தவறவிட்ட முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டாள். எல்லாம் சுமுகமாகத் தான் போய்க் கொண்டிருந்த்து.

            அடுத்த வருஷ கல்வியாண்டு தொடங்கி, காற்பரீட்சை விடுமுறைக்குப் பின் சுந்தரத்தாய் மட்டும் மாதர்மலை கிராமத்திற்குப் போனாள். டேனியல் நிர்மலாவை விஜயதசமிக்கு பள்ளியில் சேர்க்க வேண்டுமென்று தன்னுடனேயே வைத்துக் கொண்டான். அவனின் அம்மாவை ஊரிலிருந்து கெஞ்சிக் கூத்தாடி அழைத்துக் கொண்டு வந்து நிர்மலாவைக் கவனித்துக் கொள்ள ஏற்பாடும் செய்திருந்தான்.

                        மறுபடியும் நாகவள்ளி கொஞ்ச நாட்களாக பள்ளிக்கு வராமலிருந்தாள். அவளின் அருகாமை வீடுகளிலிருந்து வரும் பிள்ளைகளை விசாரித்த போது, “அவளுக்குக் கல்யாணம் டீச்சர்.....” என்றார்கள் சர்வ சாதாரணமாக.

                        மாதர்மலையில் சிறுவயது கல்யாணம் என்பது ரொம்பவும் இயல்பாயிருந்தது. எட்டாம், ஒன்பதாம் வகுப்புப் பெண் பிள்ளைகள் திடீர் திடீரென்று பள்ளிக்கு வராமல் நின்று விடுவார்கள். காரணம் கேட்டால் ’கல்யாணம்...’ என்பார்கள்.

                                பத்தாம் வகுப்பு பரீட்சையை ஓரிரு பெண்களே எழுதுவார்கள். நாகவள்ளிக்கும் இப்படி நேருமென்பதை அவள் கொஞ்சமும் நினைத்துப் பார்த்திருக்கவில்லை. கேள்விப்பட்ட்தும் தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்தாள்.

                        பள்ளி விட்டதும் ஒரு நாள், முகம், கை சேலையில் அங்கங்கே வெள்ளை வெள்ளையாய் அப்பிக் கிடந்த சாக்பீஸ் தூசிகளைக் கூட கழுவிக் கொள்ளாமல் விடுவிடென்று நாகவள்ளியின் வீட்டிற்குப் போனாள். வீட்டில் எல்லோரும் இருந்தார்கள்.

                        இவளைப் பார்த்ததும் ”வாங்க டீச்சர்.....” என்று வாய் நிறைய வரவேற்றார்கள். “நிர்மலாவ இப்படி ஊரிலேயே உட்டுட்டு வந்துட்டீங்களே! அது பாட்டுக்கு இங்க ஓடிக்கிட்டுத் திரியும்; வீடே கலகலப்பா இருந்தது. இப்பப் பாருங்க வீடே வெறிச் சோடிக் கிடக்கு.....” என்றார்கள்.

                        ”நான் கேள்விப்பட்டது நெஜமா? நாகவள்ளிக்குக் கல்யாணமாமே!” என்றாள் எடுத்த எடுப்பிலேயே முகத்தைக் கடுகடுவெறு வைத்துக் கொண்டு. ”ஆமாங்க டீச்சர்; இவளோட மாமனுக்குத்தான் கொடுக்கப் போறொம்......” என்றாள் நாகவள்ளியின் அம்மா.

                        “என்ன கொடுமைங்க இது.... பதினாலு வயசு கூட முடியாத பச்சப் புள்ளைக்கு கல்யாணம்ங்குறீங்க.....?” ஆவேசப் பட்டாள்.

                        ”நீங்க ஏன் டீச்சர் இப்படி கோபப்படுறீங்க; எங்க புள்ளைக்கு நாங்க எப்பக் கல்யாணம் பண்ணுனா உங்களூக்கென்ன....!” நாகவள்ளியின் ஆயாவும் கோபப் பட்டாள். அவளைப் பேசாமல் இருக்கச் சொல்லி விட்டு நாகவள்ளியின் அம்மா பொறுமையாகவே பேசினாள். ”எங்க பக்கமெல்லாம் வயசுக்கு வந்துட்டா கல்யாணம் கட்டிக் குடுத்துருவோம் டீச்சர்... இவ வயசுல நான் மூத்தவள பெத்து சாகவும் கொடுத்துட்டேன்....”  

                        ”நல்லாப் படிக்கிற புள்ளைங்க..... படிக்க வச்சீங்கன்னா நல்லா வருவாங்க.....” கொஞ்சம் சுதி இறங்கி சமாதானமாய்ப் பேசினாள் சுந்தரத்தாய்.

                        “அவ படிச்சு என்ன பண்ணப் போறாள் டீச்சர்? அப்புறமும் முறம் முடையனும்; இல்லைன்னா உங்க வாத்தியார் அன்னைக்கு சொன்னது போல சாணி தட்டனும்.... அப்பவே படிப்ப நிறுத்தியிருப்போம்; ரொம்ப அழுகுறாளேன்னுட்டுத் தான் கல்யாணம் பண்ற வரைக்கும் கழுதை பள்ளிக்கூடத்துக்குப் போகட்டும்’ ஒருவேளை வயித்துப் பாட்டுக்காவது ஆகும்னு தான் அனுப்பி வச்சோம்....” என்றாள் நாகவள்ளியின் அம்மா.

                        இவர்கள் பேசுவதையே நாகவள்ளி பார்த்துக் கொண்டிருந்தாள். அவளின் ஆயா சுந்தரத்தாயிடம் கை கூப்பி “பெரும்பாடுபட்டு புள்ளய கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சிருக்கோம்; நீ கண்டதையும் பேசி அவ மனச கலைச்சுடாதம்மா......எங்க கிட்ட என்ன இருக்கு....! வயித்துப் பாட்டுக்கே தினம் கஷ்டப்படுறோம்; இவ கல்யாணம் பண்ணிப் போறது நல்ல வசதியான குடும்பம்; வயிறார சாப்டுக்குவா; அதையும் கெடுத்துடாதம்மா....” என்றாள் கண்ணீருடன்.

                        சுந்தரத் தாய்க்கு அதற்கு மேல் என்ன சொல்வதென்று தெரியவில்லை. கடைசி முயற்சியாக, “உங்களுக்கு சாப்பாடு தான் பிரச்னையின்னா, நாகவள்ளிய என்கூட அனுப்பி வையுங்க; நான் அவள படிக்க வைக்கிறேன்.....” என்றாள்.

                        கிழவிக்கு ஆங்காரம் பொங்கி விட்ட்து. “கடைசியில உன் கிறிஸ்துவப் புத்திய காமிச்சிட்டில்ல; எங்க புள்ளய எங்க்கிட்டருந்து பிரிச்சு, படிப்பு ஆசைகாட்டி அவள கிறிஸ்துவச்சியா மாத்தலாம்னு பார்க்குறியா....” என்று வெலமெடுத்து சண்டை போட்டாள்.

                        ”நான் எங்கங்க மதம் மாத்துறது பத்திப் பேசுனேன்; நாங்க அந்த மாதிரி ஆளுங்க இல்லைங்க.... படிக்கத் தான் வைக்கிறேன்னேன்......” என்றாள் பவ்யமாக.

                        “சும்மா பசப்பாத; கடைசியா நீங்கள்ளாம் அங்கதான் வந்து நிப்பீங்கன்னு எங்களுக்குத் தெரியும்....சரியான புள்ள புடிக்கிற கூட்டம்; பேசாம கெளம்பிப் போயிரு; இதுக்கு மேல இங்க நின்னு பேசிக்கிட்டு இருந்தீன்னா அவ்வளவு நல்லாருக்காது.....” என்று எச்சரிப்பது போல் பேசினாள். வேறு வழியில்லாமல் சுந்தரத்தாயும் அங்கிருந்து கிளம்பினாள்.

                        அவள் வீட்டிற்குப் போன கொஞ்ச நேரத்திலெல்லாம் நாகவள்ளி வந்தாள். வந்ததும் வராததுமாய் “வீட்டுக்குத் தெரியாம ஓடி வந்துருக்கேன்; எப்படியாவது என்னக் காப்பாத்துங்க டீச்சர்.....” என்று அழத் தொடங்கி விட்டாள்.

                        அவள் அழுது கொண்டே சொன்னதிலிருந்து, அவளைக் கல்யாணம் செய்து கொள்ளப் போகிற மாமனுக்கு 35 வயதுக்கு மேலிருக்கும் என்றும் அவன் அவளுடைய தாயின் அண்ணன் என்றும் அவனுக்கு பத்து வருஷத்திற்கு முன்னால் ஏற்கெனவே திருமணமாகி, அவர்களுக்கு இன்னும் குழந்தை இல்லாத்தால் இவளைக் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறான் என்றும் தெரிந்து கொண்டாள்.  

                        ”நான் இப்பவே உங்க கூட வந்துடுறேன்; எங்க வீட்டுக்குத் தெரியாம எங்கயாவது கூட்டிட்டுப் போயி என்னை ஸ்கூல்ல சேர்த்து படிக்க வையுங்க டீச்சர்....”  விடாமல் அழுதாள் நாகவள்ளி. அப்படியெல்லாம் செய்தால் பிரச்னை பெரிதாகி விடுமென்றும் வேறு ஏதாவது செய்து அவளின் கல்வியைத் தொடர ஆவண செய்வதாக  அவளை சமாதானப் படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தாள்.

                                அவளை சமாதானப் படுத்தி அனுப்பி விட்டாளே தவிர இதில் மேற்கொண்டு என்ன செய்ய வேண்டுமென்று அவளுக்கு எதுவும் புரிபடவில்லை. பள்ளியில் பலபேரிடம் ஆலோசனை கேட்ட போதும், ”இதெல்லாம் இந்தப் பக்கம் வழக்கமா நடக்குறது தான...! நீங்க எதுக்கு இப்படி கெடந்து துடிக்கிறீங்க?” என்றார்கள் சக ஆசிரியர்கள்.

                        ”என்ன சார் கண்ணுக்கெதுக்க ஒரு பச்சப் புள்ள வாழ்க்கைய பாழாக்கப் போறாங்க... அத நாம பார்த்துக்கிட்டு சும்மா இருக்கணுமா? நாம எல்லாம் படிச்ச வாத்தியார்கள் இல்லையா? நமக்குன்னு சமூக பொறுப்பு எதுவுமில்லையா....?” என்று ஆதங்கப் பட்டாள்.

                        ”நீங்க வேற டீச்சர்; படிச்சு வாத்தியாரா இருக்குறது வயிறு கழுவுறதுக்கு; சமூக சீர்திருத்தம் செய்றதுக்கில்ல....! எனக்குத் தெரிஞ்சு சில வாத்தியார்களே அவங்க புள்ளைங்களுக்கு இதேமாதிரி சின்ன வயசுலேயே கல்யாணம் பண்ணி அனுப்பிக்கிட்டு இருக்காங்க....” என்றார் ஒருத்தர் விட்டேத்தியாய்.

                                இன்னொருத்தர் “இவங்க எல்லாம் இப்படித் தான் டீச்சர்; திருந்தாத ஜென்மங்கள்.... இதில நாம என்ன செய்ய முடியும்? மொரட்டு ஆளுங்க வேற... ரொம்ப நெருக்குனமின்னா அடிச்சுப் போடுவானுங்க.....” என்றார்.

                        அவளால் எனக்கென்ன என்று இருக்க முடியவில்லை. மாவட்ட ஆட்சியருக்கு கிராமம் பற்றிய விவரங்களை எழுதி அங்கு பால்ய விவாகம் நடக்க இருப்பதாகவும் அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கும் படியும் மனு எழுதிப் போட்டாள்.

                        ஆச்சர்யமாக நாலைந்து நாட்களுக்குள்ளாகவே தாசில்தார் தன்னுடைய பரிவாரங்களுடன் கிராமத்திற்கு விசாரணைக்கு வந்து விட்டார். தாசில்தார் அலுவலக புரோக்கர்கள் மூலம் இதை முன் கூட்டியே தெரிந்து கொண்ட நாகவள்ளியின் மாமன், சுந்தரத்தாய்க்கு எதிராக அவள் தங்களின் தங்கை குடும்பத்தை மதம் மாற்ற முயற்சிப்பதாக எதிர்மனு செய்து விட்டதில் பிரச்னை சுலபமாக திசை மாறி விட்டது. ஊர்க்காரர்கள் பலரும் சுந்தரத்தாய்க்கு எதிராக திரண்டு சண்டைக்கு வந்து விட்டார்கள்.

                        மேலும் நாகவள்ளீக்கு அவர்கள் திருமண ஏற்பாடுகள் எதுவும் செய்யவில்லை என்றும் சொந்தம் விட்டுப் போக்க்கூடாது என்பதற்காக நிச்சயதார்த்தம் மட்டுமே செய்யப் போவதாகவும் அவளுக்கு பதினெட்டு வயது முடிந்த பின்பு தான் திருமணம் செய்விப்பதாகவும் சாதித்தார்கள். தாசில்தாரும் அவர்கள் சொன்னதை அப்படியே நம்பி, கிராமத்தினருக்கு ஆதரவாகவே பேசினார்.

                        கடைசியில் சுந்தரத்தாய் கிராமத்தில் பால்யவிவாகம் நடப்பதாய்க் குறிப்பிட்டு ஆட்சித்தலைவருக்கு எழுதிய மனுவை வாபஸ் வாங்கினால், நாகவள்ளியின் மாமன் சுந்தரத்தாய்க்கு எதிராக கொடுத்திருந்த மதமாற்ற மனுவையும் திரும்ப்ப் பெற்றுக் கொள்வதாக உறுதி அளித்தான்.

                        இது நடக்காத பட்சத்தில் தாசில்தார், கல்வி அதிகாரிக்கு சுந்தரத்தாயின் மீது நடவடிக்கை எடுக்கும்படி பரிந்துரைத்து எழுதப் போவதாக சொல்லவும், இவளின் சக ஆசிரியர்களும் தலைமை ஆசிரியரும் சுந்தரத்தாயை மனுவை வாபஸ் பெற்றுக் கொள்ளும் படி வற்புறுத்தினார்கள்.

                        அவள் நாகவள்ளியை தொடர்ந்து பள்ளிக்கு அனுப்பிப் படிக்க வைக்க சம்மதித்தால் மட்டுமே தன்னுடைய மனுவை திரும்பப் பெறுவதாகவும், இல்லையென்றால் எந்த விசாரணைக்கும் தண்டனைக்கும் தான் தயார் என்றும் பிடிவாதம் பிடித்தாள். நாகவள்ளியின் வீட்டில் அவளைத் தொடர்ந்து பள்ளிக்கு அனுப்ப ஒத்துக் கொள்ளவே சமரசமானது இருதரப்பும்.

                        நாகவள்ளிக்குத் திட்டமிடபடி நிச்சயதார்த்தம் என்கிற நாடகத்துடன் திருமணமே நடந்தது. சுந்தரத்தாயும் இதற்கு மேல் இவர்களுடன் போராட முடியாது என்று ஒதுங்கிக் கொண்டாள். ஆனால்  ஆச்சர்யமாக நாகவள்ளி அதற்குப் பின்பும் பள்ளிக்கு அனுப்பப் பட்டாள். அதற்குக் காரணம் அவர்கள் பஞ்சாயத்தில் நாகவள்ளியை பள்ளிக்கு அனுப்புவதாய் ஒத்துக் கொண்ட்தல்ல; அதையெல்லாம் அவர்கள் சட்டையே பண்ணவில்லை. நிஜமான காரணம் நாகவள்ளியின் பிடிவாதம்.

                        தன்னைத் தொடர்ந்து பள்ளிக்கு அனுப்பவில்லை யென்றால் தனக்கு தன் இஷ்டத்திற்கு மாறாக திருமணம் செய்து வைத்ததால் தான் சாகப் போவதாகவும் தன்னுடைய மரணத்திற்குக் காரணம் தன்னுடைய குடும்பம் தான் என்று எழுதி வைத்துவிட்டு விஷத்தைத் தின்று செத்து விடுவதாக அவள் மிரட்டியதில் அவர்கள் அரண்டு போய் அவளைத் தொடர்ந்து பள்ளிக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்கள். பத்தாம் வகுப்பிற்கு நாகவள்ளி வந்த கொஞ்ச நாட்களிலெல்லாம் அவளின் வயிறு இலேசாய் மேடிடத் தொடங்கியது.

                        பிரசவம் முடிந்து கண் விழித்தவள் சுந்தரத்தாயைத் தான் முதலில் தேடினாள். அவள் பக்கத்தில் போகவும் கைகளைப் பிடித்துக் கொண்டு ”டீச்சர், இனிமே என்னால தொடர்ந்து பள்ளிக்கூட்த்துக்கு வந்து படிக்க முடியுமான்னு தெரியல; கண்டிப்பா பொறந்துருக்குற கொழந்தையக் காரணம் காட்டி என் படிப்ப நிறுத்திடுவாங்க.........” என்று கண் கலங்கினாள்.

       அப்புறம் உறுதி தொனிக்கும் குரலில் சொன்னாள். “இவங்க என்னப் பள்ளிக்கூட்த்துக்கு அனுப்புறத்த்தான் நிறுத்த முடியும்; ஆனா நான் பள்ளிக்கூடத்துக்கு வராட்டாலும் வேற வழிகள்ல படிக்கத்தான் செய்வேன்; இன்னைக்குப் பொறந்துருக்குற என் பொண்ண எத்தன எதிர்ப்பு வந்தாலும் அவ விரும்புற வரைக்கும் படிக்க வைப்பேன்..... அதை எந்த கொம்பனாலயும் தடுக்க முடியாது டீச்சர்......”

            அப்புறம் பிறந்திருக்கும் குழந்தையைக் காட்டி ”இவ தலைமுறையிலயாவது எங்க ஊர்லருந்தும் இந்த சுத்துப்பட்டி கிராமங்கள்லருந்தும் பெண் சிசுக்கள கொல்றதும் சின்ன வயசுலேயே கல்யாணம் செஞ்சு வைக்கிறதும் ஒழிஞ்சிடுமா டீச்சர்....?” என்றாள்.

               இரங்கத் தக்க விதத்தில் ஏக்கமாய் அவள் கேட்டது அங்கிருப்பவர்கள் எல்லோரின் வயிற்றிலும் கத்தியாய் பாய்ந்து கலங்க வைத்தது.                      

Ø  முற்றும்

(நன்றி: தினமணிக்கதிர் 23.06.2013)

Wednesday, December 12, 2012

தினமணிக் கதிரில் என் சிறுகதை - கணிதச் சமன்பாடுகளில் காலாவதியாகும் மனித உறவுகள்


                         வீரகேசவன் பெர்மிஷன் போட்டு விட்டு வீட்டிற்குப் போகும் போது கூட முத்தையாவிடம் வந்து, “கண்டிப்பா ஒரு வழி வீட்டுக்கு வந்துட்டுப் போங்க ஸார்..... நீங்க, உங்க வீட்டுக்குப் போற வழியில தான் என்னோட வீடு....“என்று அழைப்பு விடுத்து விட்டுத் தான் போயிருந்தான்.
                        இன்றைக்கு அவனுடைய இரண்டாவது பெண்ணிற்கு மூன்றாம் வயது பிறந்த நாளாம். அவனும் ரொம்ப நாளாக இவனை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துக் கொண்டுதான் இருக்கிறான். இவனுக்குத் தான் போய் வருவதற்கான அவகாசமும் பொறுமையும் வாய்க்கப் பெறாமல் இழுத்துக் கொண்டே போகிறது.
                        மேலும் முத்தையாவிற்கு அவ்வளவு சீக்கிரம் யாருடைய வீட்டிற்கும் போய்ப் புழங்கி பழக்கமில்லை. அவனுடைய அம்மா பலதடவை அவனுடன், இப்படி சொந்தக்காரகள் யாருடனும் ஒட்டாமல் ஒதுங்கி இருக்கிற பழக்கத்திற்காக சண்டை போட்டிருக்கிறாள். ஆனாலும் அவள் உயிரோடு இருக்கிறவரை அவனை திருத்தவே முடியவில்லை.
                        வீட்டிற்கு, சொந்தக்காரர்கள் யாராவது வரும் போது அவர்களை என்ன உறவு முறை சொல்லி அழைப்பது என்று கூடத் தெரியாமல் பல தடவைகள் குழம்பித் தடுமாறி இருக்கிறான் முத்தையா. இவனுடைய அம்மா தான் சொல்லிக் கொடுப்பாள். அவள் வீட்டிலில்லாத நேரத்தில் யாராவது வந்து விட்டால் அவ்வளவுதான். என்ன பேசுவது என்றே தெரியாமல் திரு திருவென்று முழிப்பான்.
                        அப்புறம் சமாளித்துக் கொண்டு அப்போது வாய்க்கு என்ன உறவு முறை வருகிறதோ அதைச் சொல்லி “வாங்க பெரியம்மா.....”  என்றபடி வரவேற்பான். வீட்டிற்கு வந்திருப்பவரோ “அட என்ன தம்பி  என்னப் போயி பெரியம்மான்குற;  நான் உனக்கு அத்தை முறையாக்கும்;  இவர் உனக்கு மாமா வாக்கும்..... எங்க பொண்ண நீ கட்டிக்க வேண்டாமா...” என்று சிரித்தபடி சுட்டிக் காட்டுவார்கள்.
                        முத்தையாவும் வீரகேசவனும் வண்டலூருக்குப் பக்கத்தில் ஒரு கட்டுமானக் கம்பெனியில் வேலை பார்க்கிறார்கள். வீரகேசவன் வேலைக்கு சேர்ந்த புதிதில் ஒருநாள் முத்தையாவிடம் சாதாரணமாக பேசிக் கொண்டிருக்கும் போது, “உங்கள் பேச்சு, முகஜாடை எல்லாம் பார்த்தா தெற்கத்திப் பக்கம் மாதிரி தெரியுது.... உங்களோட சொந்த ஊர் எது சார்...?” என்றான்.
                        ”அப்படியா, நான் சென்னைக்கு வந்து செட்டிலாகி இருபது வருஷத்துக்கும் மேல ஆயிருச்சு; இன்னுமா என் முகத்துல தெற்கத்திக் களை தெரியுது.....என்று முகத்தில் ஆச்சர்யம் பொங்க கேட்ட முத்தையா ”நீ சொல்றது ரொம்பச் சரிப்பா; எனக்கு பூர்வீகம் ஸ்ரீவில்லிப்புத்தூருக்குப் பக்கத்துல முல்லிக்குளம்குற கிராமம்....”  என்றான்.
                       வீரகேசவன் “எனக்கு சாத்தூர் சார்....” என்று மலர்ந்தான். “ஸ்ரீவில்லிப்புத்தூர்ல பால்கோவா பேமஸ் ஆச்சே! அந்த பலகாரம்னா என் மனைவிக்கு உசுரு ஸார்; எடைக்கு எடை உங்க ஊர் பால்கோவா குடுக்குறதா இருந்தா புருஷனக் கூட விட்டுக் குடுத்துருவா....... அடுத்த தடவை ஊருக்கு போயிட்டு வரும்போது ஒரு ரெண்டு கிலோ மறக்காம வாங்கிட்டு வாங்க ஸார்....” என்றான் உரிமையாய்.
                        ”அதுக்கென்னப்பா வாங்கிட்டு வந்துட்டாப் போகுது....” என்றவன் கொஞ்சம் இடைவெளிவிட்டு “எங்கப்பா..... ஊர்ப்பக்கம் போயி பத்து வருஷத்துக்கு மேல ஆயிருச்சு.... இப்பல்லாம் ஊர்ப் பக்கமே போறதில்ல; அப்பா அம்மால்லாம் செத்துப் போயிட்டாங்க; நாங்க போனா, எங்கள ஆதரிக்குறதுக்கும் அங்க யாருமில்ல.....” என்றான் வருத்தம் தொனிக்க.
                        ”ஏன் ஸார் இவ்வளவு விரக்தியா பேசுறீங்க்? எங்க ஊருக்கு வாங்க ஸார்.... திரும்பும் போது சாத்தூர் சேவும், கருப்பட்டி மிட்டாயும் ஒரு மூட்டை வாங்கிக் குடுத்து அனுப்புறேன்....” என்றான். இருவரும் சிரித்துக் கொண்டார்கள்.
                        அன்றைக்கிலிருந்து “ரொம்ப நெருங்கிட்டோம்; பக்கத்து பக்கத்து ஊர்க்காரங்களாயிட்டோம்; வீட்டுக்கு வாங்களேன் ஸார்.... பேசிப் புழங்கி இருக்கலாம்ல......” என்று வற்புறுத்தவே தொடங்கி விட்டான்.
                        ”என் பொண்டாட்டி கிராமத்துப் பொண்ணு ஸார்; அருமையா சமைக்கும்; உடனே பட்டிக்காட்டு சமையல்னு குறைச்சு எடை போட்டுறாதீங்க.... இப்ப சென்னையில பேமஸா இருக்குற ஃபாஸ்ட் ஃபுட் அயிட்டங்கள் அதான் ஃபிரைடு ரைஸ், நூடூல்ஸ், சிக்கன் மஞ்சூரியன் எல்லாம் கூட சூப்பரா சமைக்கும் ஸார்.... நம்ம ஆபீஸ்லருந்து எங்க வீடு கொஞ்சம் தூரம் தான்; இருந்தாலும் விதம் விதமா சாப்புடுறதுக்காகவே மத்தியானம் ஒரு தடவை வீட்டுக்குப் போயிட்டு வர்றேன்னா பார்த்துக்குங்களேன்.....” என்று அவ்வப்போது ஆசை மூட்ட வேறு செய்தான்.
                        இன்றைக்கு வீரகேசவனின் வீட்டிற்குப் போய் விட்டுத்தான் வரலாமே என்று முத்தையாவிற்கு தோன்றியது. போனால் ஒரு வேளையாவது வாய்க்கு ருசியாக சாப்பிட்டு வரலாம் என்கிற ஆசையும் கிளர்ந்தது. வாய்க்கு ருசியாக சாப்பிட்டுத் தான் எத்தனை நாளாகிறது.....!
                        இவனுடைய மனைவிக்கு திருப்பத்தூருக்குப் பக்கத்தில் ஒரு கிராமத்தில் அரசு மேல் நிலைப்பள்ளியில் ஆசிரியை வேலை கிடைத்ததும் அதற்காகவே காத்திருந்த்து போல் குழந்தையையும் கையில் பிடித்தபடி பயணப்பட்டு விட்டாள்.
                        அங்கேயே வீடெடுத்து தங்கிக் கொண்டு மாதம் ஒரிரு முறைகள் தான் சென்னைக்கு வந்து போகிறாள். அப்படி வருகிறவளுக்கு, இவன் அலங்கோலமாய்ப் போட்டிருக்கும் வீட்டை ஒதுங்க வைக்கவே நேரம் சரியாக இருக்கும். வாய்க்கு ருசியாக ஆக்கிப் போட வெல்லாம் நேரமிருக்காது.
                        மேலும் இவனுடைய மனைவிக்கு விதவிதமாய் சமைப்பதிலெல்லாம் ஆர்வமிருப்பதில்லை. அவள் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் ஹோட்டலிலிருந்து உணவை வரவழைத்து சாப்பிடுவதைத் தான் பெரிதும் விரும்புவாள். முத்தையாவோ வீட்டுச் சாப்பாட்டில் அதிகம் ஆர்வம் காட்டுபவன்.
                        இந்த விஷயத்தில் இருவருக்கும் எப்போதும் சண்டை தான். “உங்களுக்கு வேணுமின்னா நீங்க சமைச்சு சாப்பிடுங்க; எப்பவாவது லீவுக்கு வர்ற என் உயிர ஏன் எடுக்குறீங்க......” எரிந்து விழுவாள்.
                        ”என்ன பண்றது? எனக்கு சமைக்கத் தெரியல்லயே! நான் சாம்பார் வச்சா அது ரசம் மாதிரி இருக்கு; சரி நமக்கு நல்லா ரசம் வைக்க வருதுன்னு அதே ஃபார்முலாவுல இன்னொரு நாள் வச்சா அன்னைக்கு ரசம் கசாயம் மாதிரி அமையுது.....” முத்தையாவின் பதில் இரங்கத்தக்க விதத்தில் இருக்கும்.
                        ”ஆமா ஆம்பளைங்களுக்கு இது ஒரு சாக்கு.... சமைச்சு பழகிக்க வேண்டியது தான! நாங்க எல்லாம் சமைக்கிறதுக்கு பி.எச்.டி.யா படிச்சுட்டு வந்துருக்கோம்..... எல்லாம் பழக்கத்துல வர்றது தான்..... பொம்பளைங்களுக்கு என்னைக்கு சமையல் கட்டுலருந்து விடுதலை கிடைக்குதோ அன்னைக்குத் தான் உண்மையான விடுதலை; அதுவரைக்கும் ஆணாதிக்கத்தின் அடிமைகள் தான் நாங்கள்.....” என்று சிணுங்கியபடி அவள் சமையலறைக்குள் போவாள்.
                        இவன் உடனே பதறிப்போய் “அய்யோ செல்லம்; எப்பவாவது வீடுக்கு வர்ற நீ.....அந்த நேரத்தையும் சமைக்குறதுல வீணாக்க வேண்டாம்; நான் வெளியில போயி வாங்கிட்டே வந்துடுறேன்.....” என்றபடி பையை எடுத்துக் கொண்டு கிளம்பிப் போவான்.
                        பெரும்பாலும் அவள் வீட்டிற்கு வருகிற ஞாயிற்றுக் கிழமைகளின் பகல்கள் இப்படித்தான் கழியும். அவளுடனான சண்டையை அதிகம் வளர்த்தால் அபூர்வமாய் அவள் புணர்ச்சிக்கு அனுமதிக்கிற இரவுகளிலும் இவன் ‘பட்டினி’யாய்’ புரண்டு கொண்டிருக்க நேரும் என்பதால் இவனே அடங்கிப் போய் விடுவான்.  
                        தாம்பரத்தில் இறங்கியதும் ஒரே ஒரு நிமிஷம் முத்தையா யோசித்தான் – நேரே வீட்டிற்குப் போக மின்சார இரயிலைப் பிடிப்பதா அல்லது வீரகேசவனின் வீட்டிற்கு போய் வரலாமா என்று. வீரகேசவன் சொன்னபடி, அவன் வீடு ஒன்றும் முத்தையா அவனின் வீட்டிற்குப் போகும் வழியில் எல்லாம் இல்லை.
                        முத்தையா தாம்பரத்திலிருந்து மின் இரயிலைப் பிடித்து ஆவடி போக வேண்டும்; அங்கிருந்து ஸ்டாண்டிலிருக்கும் பைக்கை எடுத்து கோயில்பதாகை போக வேண்டும். பொதுவாகவே அவன் வீட்டிற்குப் போய்ச் சேர இரவு ஒன்பதரைக்கு மேலாகி விடும். 
                        வீரகேசவனின் வீடு தாம்பரத்திலிருந்து முடிச்சூர் தாண்டி இருந்தது. அங்கு போய்விட்டு இவனுடைய வீட்டிற்குப் போவதானால் எப்படியும் பதினோரு மணிக்கு மேலாகி விடும். வீட்டில் இவன் வருகையை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்க யாருமில்லை என்பதால் பிரச்னை எதுவுமில்லை.
                        வீரகேசவனின் வீட்டிற்குப் போவதென்று முடிவானதும் ஏதாவது வாங்கிக் கொண்டு போகலாம் என்று மார்க்கெட் பகுதிக்குப் போனான். யாருடைய வீட்டிற்குப் போனாலும் ஏதாவது வாங்கிக் கொண்டு போக வேண்டுமெகிற பழக்கத்தை அவனுடைய மனைவி தான் வற்புறுத்தி ஏற்படுத்தினாள்.
                        கல்யாணத்திற்கு முன்பு வரை யாரைப் பார்க்கப் போனாலும் கைவீசிக் கொண்டுதான் போவது அவனுக்கு வழக்கம். அவனின் குடும்பத்தில் எல்லாம் எல்லோருமே இப்படித்தான். குழந்தைகள் இருக்கிற வீட்டிற்குப் போனால் மட்டுமே அபூர்வமாக ஒரு பொட்டலம் சீனிச்சேவோ அல்லது காரச்சேவோ வாங்கிப் போவார்கள். மற்றபடி வீசுன கை வெறுங்கைதான்.
                        அதே பழக்கத்தில் கல்யாணத்திற்கு அப்புறம் முதல் முறையாக முத்தையாவின் மனைவி அவளின் தாய் வீட்டிற்குப் போயிருந்தபோது, அவளைப் பார்க்கப் போயிருந்த போதும் எதுவும் வாங்கிக் கொண்டு போயிருக்கவில்லை. இவன் போய்க் கொஞ்ச நேரத்தில் அவளாகவே சொன்னாள்.
                        ”வாங்கிட்டு வந்த பலகாரத்த எடுத்துக் குடுப்பா.... அப்பாவும் அம்மாவும் சாப்புடட்டும்....”
                        இவனுக்குத் திகைப்பாக இருந்த்து. தயங்கியபடி மெதுவாக “நான் பலகாரம் எதுவும் வாங்கியாரலேயே...! இங்க என்ன சின்னப் பிள்ளையா இருக்கு; தின்பண்டமெல்லாம் வாங்கியாறதுக்கு......” என்று சொன்னதும் திட்டிக் குமித்து விட்டாள். அப்புறம் அவளின் அம்மா தான் தலையிட்டு அவளை சமாதானப் படுத்தினாள். “சரி விடுடி; கிராமத்துக் காரங்கள்ளாம் அப்படித்தான்....”
                        அந்த சம்பவத்திற்கப்புறம் முத்தையா தினசரி வேலை முடிந்து வீட்டிற்குப் போகும் போதும் கூட மனைவி வீட்டிலிருக்கிறாள் என்றால் தின்பதற்கு ஏதாவது வாங்கிப் போவதை பழக்கப் படுத்திக் கொண்டான்.
                        இப்போது, முத்தையாவிற்கு மூன்று வயது தொடங்கி இருக்கும் பெண் குழந்தைக்கு என்ன வாங்கிப் போவது என்று யோசணையாக இருந்தது. ஏதாவது பொம்மைகள் வாங்கிப் போகலாம் என்றால், இவன் வாங்கிப் போகும் பொம்மை ஏற்கெனவே வாங்கப்பட்டு அவர்கள் வீட்டிலிருந்தால் என்ன செய்வது என்று தயக்கமாக இருந்தது. தின்பண்டமே வாங்கிப் போகலாம் என்று தீர்மானித்தான்.
                        பலகாரக் கடைக்குள் நுழந்தான். நான்கு பேர் இருக்கும் குடும்பத்திற்கு குறைந்தது அரைக் கிலோ இனிப்பாவது வாங்கிப் போனால் தான் மரியாதையாக இருக்கும் என்று நினைத்தபடி கடையிலிருக்கும் விலைப் பட்டியலை நோட்டம் விட்டான். மில்க் ஸ்வீட் அரைக் கிலோ வாங்குவதென்றால் 180 ரூபாய் ஆகிவிடும் போலிருந்தது. ஒருவேளை உணவிற்கு ஈடாக இவ்வளவு செலவழிக்க வேண்டுமா என்று சிறு சஞ்சலம் ஏற்பட்டது அவனுக்கு.
                        கடையில் வேறென்ன இருக்கிறது என்று கண்களை அலைய விட்டபோது கண்ணாடிப் பேழைகளுக்கு பின்னால் அடுக்கப் பட்டிருந்த பிஸ்கெட் பாக்கெட்கள் இவனின் கவனத்தை ஈர்த்தன. கெட்டியான பூ வேலைப்பாடுகள் நிறைந்த செவ்வக அட்டைக்குள் பேக்கிங் பண்ணப்பட்டு அழகாய்க் கண்ணைப் பறித்த கிரீம் பிஸ்கட் பாக்கெட் ஒன்றைக் காட்டி கடைக்காரனிடம் எடுத்துத் தரச் சொன்னான்.
                        ”என்ன வெலைப்பா....” என்றபடி பாக்கெட்டில் அச்சிடப் பட்டிருந்த MRP விலையைத் தேடிப் பார்த்தான்.
                        ”முப்பது ரூபாய் ஸார்.....” என்றான் கடைக்கார சிறுவன்.                
                        MRP விலையே 28 ரூபாய் தானப்பா போட்டுருக்கு; நீ அநியாயமா 2 ரூபாய் அதிகமா கேட்குற..... கன்ஸ்யூமர் கோர்ட்ல கேஸ் போட்டுருவேன்...” என்றான் முத்தையா.
                        ”அய்யே! இங்க 30 ரூபாய் தான் வெல; இஷ்டமின்னா வாங்கு... இல்லைன்னா போய்க்கிட்டே இரு....கோர்ட் கீர்ட்டுன்னு பயமுறுத்துற வேலை எல்லாம் இங்க வேண்டாம்...” என்றான் மூர்க்கமாக.
                        முத்தையா கடிகாரத்தில் மணி பார்த்தான். இரவு எட்டை நெருங்கி கொண்டிருந்தது. இந்தச் சிறுவனுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தால் மிகவும் தாமதமாகி விடும் என்று எண்ணமிட்டபடி அவன் கேட்ட பணத்தைக் கொடுத்து பிஸ்கட்டை வாங்கிக் கொண்டு கடையிலிருந்து வெளியேறினான்.
                        வீரகேசவனின் வீடு முடிச்சூர் தாண்டி எங்கேயோ இருக்கிறது என்று மட்டும் தான் முத்தையா அறிந்திருந்தான். தெளிவான முகவரி அவனிடம் இல்லை. வீரகேசவனுக்கு போன் பண்ணினான். “நான் தாம்பரம் வந்துட்டேன்; இங்கருந்து உன் வீட்டுக்கு எப்படிப்பா வர்றது.....”
                        வீரகேசவன் இவன் வருகையை கொஞ்சமும் எதிர்பார்த்திருக்க வில்லை என்பது அவனுடைய குரலில் தெரிந்தது. “அப்படியா ஸார்; நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல ஸார்..... சர்ப்ரைஸ்; பரவாயில்ல..... வாங்க ஸார்; நானும் இப்ப தாம்பரத்துல தான் இருக்கேன் ஸார்; நீங்க முடிச்சூர் ரோட்டுக்கு வந்து அந்த முனையில ஒரு பத்து பதினைஞ்சு நிமிஷம் காத்துருங்க; நான் கொஞ்சம் ஷாப்பிங் பண்ண வேண்டி இருக்கு. முடிச்சதும் உங்கள வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்......” என்றான்.
                        முத்தையா வீரகேசவனுடன் அவன் வீட்டிற்குப் போய் இறங்கிய போது அவனின் மனைவி “எவ்வளவு நேரங்க....” என்று கடிந்து கொள்ளத் தொடங்கி, முத்தையா நிற்பதைப் பார்த்த்தும் சுருதி குறைந்து, அவன் வாங்கிப் போயிருந்த பொருட்களை அபகரித்துக் கொண்டு அவசரமாய் உள்ளே போகப் போனாள். அவளை நிறுத்தி வீரகேசவன் முத்தையாவை அவளிடம் அறிமுகப் படுத்தி வைத்தான். அவள் கைகுவித்து வணக்கம் சொல்லியதும் பரபரப்பாய் வீட்டிற்குள் போனாள்.
                        அது 15 மாடிகளும், மாடிக்கு நான்காக மொத்தம் 60 வீடுகளும் கொண்ட மிகப் பெரிய குடியிருப்பு. இவர்கள் வீடிற்குள் நுழைந்த போது வீட்டின் வரவேற்பு அறை ஏற்கெனவே கலர் காகிதங்கள், ஜிகினாக்கள் எல்லாம் ஒட்டப்பட்டு ஒரு குழந்தையின் பிறந்தநாளை எதிர் கொள்ள தயாராகவே இருந்தது. ஒரு எட்டு வயது மதிக்கத்தக்க பையனும், பிறந்த நாள் கொண்டாடப் போகும் பெண்ணும் ”அப்பா....” என்றபடி வீரகேசவனிடம் ஓடி வந்து, முத்தையா நிற்பதைப் பார்த்து தயங்கி நின்றார்கள். “அங்கிளுக்கு ஷேக் ஹேண்ட் குடுங்க.....” என்றான் வீரகேசவன். கை கொடுத்தார்கள்.
                        முத்தையா இருவரையும் அணைத்தபடி “உங்க பேர் சொல்லுங்க....”என்றான். “ஐயாம் ஷ்யாம்...” என்று பையனும் “பிரித்தி....”என்று பெண் மழலையிலும் சொன்னார்கள். பெண்ணிடம் இவன் வாங்கிப் போயிருந்த பிஸ்கட் பாக்கெட்டை நீட்டியதும் அது தயக்கமாய் வீரகேசவனைப் பார்த்தது. அவன் “வாங்கிக்க....” என்று அனுமதி கொடுக்கவும், பெற்றுக் கொண்டு உள்ளறை நோக்கி ஓடியது. கூடவே பையனும் ஓடினான்.
                        ”வீட்டை சுத்திப் பார்க்கலாமா ஸார்....” என்றான் வீரகேசவன். முத்தையா தலையாட்டவும் அவனை ஒவ்வொரு அறையாக அழைத்துக் கொண்டு போனான். அது மூன்று படுக்கை அறைகள் கொண்ட விசாலமான ப்ளாட். ஒவ்வொரு அறையும் மெல்லிய வண்ணங்களுடன் மிகவும் நேர்த்தியாக அலங்கரிக்கப் பட்டு,  அங்கங்கே கலை அம்சம் மிளிரும் பொருட்களும், பூச்சாடிகளும், பிளாஸ்டிக் பூக்கள் மற்றும் நவீன பொருட்களால் நிரம்பி இருந்தன.
                        வரவேற்பறையில் ஷோகேஸுக்குள் மிகப்பெரிய பிளாஸ்மா டீ.வி. ஹோம் தியேட்டருடன் இருந்தது. படுக்கை அறைகளிலும் டீ.வி.க்களும் மியூசிக் சிஸ்டங்களும் இருந்தன. இரண்டு படுக்கை அறைகளில் ஏ.சி. இருந்த்து. சமையலறையும் நான்கு பர்னர்கள் கொண்ட அடுப்பு, புகை உறிஞ்சுவதற்கான ஏற்பாடுகளுடனும் நவீன எலக்ட்ரிக் சாதனஙகளுடனும் இருந்தது.        
                        ”வீடு நெஜமாவே சூப்பரா இருக்கு வீரகேசவன்..... நல்லா அலங்கரிச்சுருக்கீங்க...” என்றான் முத்தையா. “நமக்கெங்க ஸார் அதுக்கெல்லாம் நேரம்! எல்லாம் வொய்ஃபோட கைங்கர்யம் தான்.... அவள் கேட்குற பொருட்கள வாங்கித் தர்றது மட்டும் தான் என்னோட வேலை....” அவனுடைய பேச்சில் பெருமை பொங்கியது. அப்போது அவனுடைய மனைவி அவசரமாய் வெளியே போனாள்.
                        ”பிறந்த நாள் கொண்டாடுறதுக்கு அக்கம் பக்கத்து பிளாட்காரங்களக் கூப்புடப் போறாள்....” வீரகேசவன் தகவல் சொன்னான்.
                        ”என்ன வெலையாச்சுப்பா ஃப்ளாட்டு....?”
                        ”அஞ்சு வருஷத்துக்கு முன்னால இதை நான் வாங்கும் போது 60 லட்சம் ஸார்..... இப்ப இதே அளவுல வாங்கப்போனா ஒண்ணரைக் கோடிக்கு மேல ஆயிடும்....” என்றான்.
                        முத்தையாவிற்கு தாகமாக இருந்தது. தண்ணீர் கேட்க சங்கோஷமாக இருந்தது. சரி சாப்பிடும் போது குடித்துக் கொள்ளலாம் என்று உலர்ந்திருந்த உதட்டை நாக்கால் நனைத்துக் கொண்டான்.
                        வீரகேசவனின் மனைவியுடன் இரண்டு பெண்களும் மூன்று குழந்தைகளும் வந்தார்கள். பிரீத்தியின் பிறந்த நாள் கொண்டாட்டம் தொடங்கியது. கேக்வெட்டி வண்ண மெழுகுவர்த்திகள் ஊதி அணைக்கப்பட்டு, ஒரு மெழுகுவர்த்தி ஒளிர வைக்கப்பட்டு, குடும்பத்தினர்கள் மாறி மாறி கேக் ஊட்டிக் கொண்டார்கள். குழந்தைகள் ஆங்கிலத்தில் பிறந்த நாள் வாழ்த்துப் பாடலை பாடினார்கள். அப்புறம் எல்லோருக்கும் பேப்பர் பிளேட்டில் வைத்து ஆளுக்கொரு கேக் துண்டு வழங்கப்பட்ட்து.
                        வந்திருந்தவர்களுக் கெல்லாம் வரவேற்பறையிலேயே பிளாஸ்டிக் சேர்கள் போடப்பட, வீரகேசவன் இவனை டைனிங் டேபிளில் உட்காரச் சொன்னான். அதுவும் சரிதான்; அப்படியே சாப்பிட்டு விடலாம் என்று நினைத்தபடி இவனும் உட்கார்ந்து கேக்கை சாப்பிடத் தொடங்கினான். எல்லோருக்கும் பேப்பர் கப்பில் காஃபி வந்த்து. இவனுக்கும் வந்தது. சாப்பிடுவதற்கு முன்னால் எப்படி காஃபி குடிப்பது என்று இவனுக்கு தயக்கமாக இருந்தது. ஆறிப் போகுமென்று அதையும் குடித்து முடித்தான்.
                        வந்தவர்கள் எல்லோரும் கிளம்பிப் போனார்கள். வீரகேசவன் இன்னொரு துண்டு கேக்கை எடுத்துக் கொண்டு வந்து முத்தையாவின் பிளேட்டில் போடப் போனான். ”வேணாம்ப்பா; ஏற்கெனவே எனக்கு சுகர் இருக்கு....” என்றபடி கைகளால் தடுக்கவும், ”அப்படியா ஸார் .....”  என்றபடி சமையலறைக்குள் ஓடிப்போய் ஒரு வெஜிடபிள் சமோசாவைக் கொண்டு வந்து பிளேட்டில் போட்டான்.
                        ”தினம் அவ்வளவு தூரத்துலருந்து எப்படி ஸார் வேலைக்கு வந்துட்டுப் போறீங்க...! கஷ்டமா இல்லையா...?” வீரகேசவன் கேட்டான்.
                        ”கஷ்டமாத் தான் இருக்கு; சொந்த வீடு அங்கருக்கும் போது என்னப்பா செய்றது...!’
                        ”காலையில எழுந்துருச்சு நீங்களே சமையல் பண்ணி.... பாக்ஸ்ல அடச்சு எடுத்துக்கிட்டு, லொங்கு லொங்குன்னு ஓடி இரயிலப் புடுச்சு..... பாவம் ஸார் நீங்க.....” நிஜமான அனுதாபமும் அக்கறையும் அவன் வார்த்தைகளில் வழிந்தது.
                        ”நீயும் குடும்பத்தோட எங்க வீட்டுக்கு ஒரு தடவை வந்துட்டுப் போகணும்ப்பா.....” என்று முத்தையா அவனுக்கு அழைப்பு விடுத்தான்.
                        ”அவ்வளவு தூரம் எங்க ஸார் வர முடியும்! அடுத்த வருஷம் கார் வாங்கீட்டு முடிஞ்சா வர்றோம் ஸார்....” என்றான்.
                        வீரகேசவனின் மனைவி சமையலறையில் உட்கார்ந்து கொண்டு இவர்கள் பேசுவதைக் கவனித்துக் கொண்டிருந்தாள். பிறந்தநாள் கொண்டாடிய பெண் அவளின் மடியில் படுத்துத் தூங்கிப் போனது. பையன் வரவேற்பறை சோபாவில் உட்கார்ந்தபடி ஏதோ பாடப் புத்தகத்தை விரித்து வைத்துப் படித்துக் கொண்டிருந்தான்.
                        முத்தையாவிற்கு மிகவும் ஆயாசமாக இருந்தது. வீரகேசவனோ நேரமாவது தெரியாமல் பேசிக் கொண்டிருந்தான். இரவுச் சாப்பாடு கொடுப்பதற்கான அறிகுறி எதுவுமே தென்பட வில்லை. ஒருவேளை, தான் கிளம்புகிறேன் என்று சொன்னால் தான் நேரமாவது உறுத்தி சாப்பிடச் சொல்வார்களோ என்ற எண்ணத்தில் “சரி கேசவா, ரொம்ப நேரமாயிருச்சு; நான் கிளம்புறேன்......” என்று முத்தையா எழுந்து கொள்ளவும், வீரகேசவனும் “அதுவும் சரிதான் ஸார்; நீங்க ரொம்ப தூரம் வேற போகணும்....” என்றபடி அவனை வழி யனுப்ப வாசலுக்கு வந்தான்.
                        ”இங்கருந்து ஒரு ஆட்டோ புடிச்சு, தாம்பரம் போயிடுங்க ஸார்; அப்புறம் வழக்கம் போல மின்சார இரயில் புடிச்சுப் போய்க்கங்க.....” என்று ஆலோசனை சொன்னான். முத்தையாவிற்கு பசி வயிற்றைக் கிள்ளியது. முதலில் முடிச்சூரில் போய் சாப்பிட வேண்டும் என்று எண்ணியபடி எட்டி நடையைப் போட்டான்.
                        ”என்னங்க மனுஷன், உங்க ஃப்ரண்டு! ஒரு குழந்தையோட பிறந்த நாளைக்கு, ஒரு கிப்ட் கூட வாங்கிட்டு வரத் துப்பில்லாம.....” என்றாள் வீரகேசவனின் மனைவி எரிச்சலுடன்.
                        ”அதான் பிஸ்கட் பாக்கெட் வாங்கிட்டு வந்தாருல்ல; பாவம் பட்டினியா கிளம்பிப் போறார்.....” என்றான் வீரகேசவன்.
                        ”ஆமாம் உங்க ஃப்ரண்டுக்கு சாப்பாடு ஒண்ணு தான் குறைச்சல்....! 28ரூ.க்கு பிஸ்கட் வாங்கிட்டு வந்தார்; அதுக்குத் தான் நாம 12ரூ. கேக், 6ரூ. சமோசா, 10ரூ. காஃபி நான் குடுத்த காஃபி 10ரூ. பெருமில்ல! - குடுத்தோம்ல... கணக்கு சரியாயிடுச்சு......” என்றாள்.
                        வீரகேசவனின் பையன் சத்தம் போட்டு பாடம் படிக்கத் தொடங்கினான். தமிழர்கள் விருந்தோம்பல் பண்பில் சிறந்து விளங்குபவர்கள்; நம் முன்னோர்கள், இரவுகளில் தங்களின் கிராமங்களைக் கடந்து போகும் வழிப் போக்கர்களுக்குக் கூட உணவு கொடுத்து, அவர்கள் உறங்கி ஓய்வெடுப்பதற்காக தங்களின் திண்ணைகளை ஒழித்துக் கொடுத்து உபசரிக்கும் உயர்ந்த பழக்கம் உள்ளவர்கள்.
                        படித்துக் கொண்டிருந்தவன் திடீரென்று வீரகேசவனிடம் கேட்டான் ”அப்பா, விருந்தோம்பல்னா என்னப்பா அர்த்தம்?”


Ø  முற்றும்

(நன்றி: தினமணிக் கதிர் 25.11.2012)               

Friday, November 9, 2012

விகடன் மேடை – கே.பாக்யராஜ் பதில் சொல்லாத என்னுடைய இரண்டு கேள்விகள்


       பொதுவாய் பிரபலங்களிடம் கேள்விகள் கேட்பது எனக்கு எப்போதும் பிடித்தமான விஷயமில்லை. பத்திரிக்கைகளுக்கு கேள்விகள் எழுதிப் போட்டு, அப்படியாவது பத்திரிக்கையில் பெயர் வருமென்று ஆசைப் படுகிற ரகமும் இல்லை நான். ஆனால் விகடன் மேடையில் வாசகர்களின் கேள்விகளுக்கு  கே.பாக்யராஜ் பதில் சொல்கிறார் என்று அறிந்ததும் மனசு பரபரப்பானது. ஏனென்றால் பாக்யராஜ் என்னுடைய பால்யகால ஆதர்சங்களில் மிகவும் பிரதானமானவராய் இருந்தவர்.

பாரதிராஜாவின் இயக்கத்தில் அவர் கதை வசனம் எழுதி கதாநாயகனாக அறிமுகமான புதிய வார்ப்புகள் படம் பார்த்ததுமே நண்பர்களின் வட்டத்தில் நான் அவரின் ரசிகன் என்று பெருமிதமாய் அறிவித்துக் கொண்டேன். எல்லோரும் சிரித்தார்கள். ஏனென்றால் அவர்கள் எல்லாம் சிவாஜியின் ரசிகர்கள். கமலும் ரஜினியும் அப்போது அத்தனை பிரபலமில்லை என்று தான் ஞாபகம்!

அவர்களைப் பொறுத்த வரை சினிமாவில் பிரபலங்களுக்கு ரசிகனாக இருப்பதில் தான் பெருமை. இப்பொழுது தான் முதல் படம் நடித்திருக்கிற பாக்யராஜிற்கு நான் ரசிகன் என்று சொன்னதும் என்னைக் கேலியும் கிண்டலும் பண்ணினார்கள்.            ஆனாலும் அவர்களின் கலாய்ப்புகளையும் மீறி நான் கே.பாக்யராஜின் ரசிகனாகவே தான் தொடர்ந்தேன். எனக்கு அவரை அவ்வளவு பிடிக்கும். முதல் படத்தைப் பார்த்ததுமே வீட்டில் அடம் பிடித்து அப்போது நான் அணிந்திருந்த மூக்குக் கண்ணாடியை அவர் திரைப்படத்தில் அணிந்திருந்தது மாதிரியே அகலமான பெரிய ப்ரேமாக மாற்றிக் கொண்டேன்.

பாக்யராஜ் அவரின் குருநாதர் பாரதிராஜாவிடமிருந்து பிரிந்து வந்து தனியாக படம் இயக்கத் தொடங்கிய பின்பு, பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளி வந்த சில திரைப்படங்கள் சிறப்பாக அமையாத போது நண்பர்களிட மெல்லாம் பாரதிராஜாவின் சிறப்பே பாக்யராஜ் மாதிரியான திரைக்கதை ஆசிரியர்களைத் தன்னுடன் அஸிஸ்டெண்ட்களாக வைத்துக் கொண்டதால் தான்; பாக்யராஜ் இல்லாமல் அவர் இயக்கிய படங்கள் – கல்லுக்குள் ஈரம், நிழல்கள், காதல் ஓவியம் – எதுவும் சோபிக்கவில்லை பார்த்தீர்களா என்று காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு சண்டை போட்டிருக்கிறேன்.

அவரின் நண்பர் B.V.பாலகுருவிற்காக அவர் கதை வசனம் எழுதி வில்லனாகவும் நடித்திருந்த கன்னிப் பருவத்திலே படம் பார்த்து விட்டு என்னுடைய நண்பர்கள் எல்லாம் ”என்னடா உங்க ஆளு அதுக்குள்ள வில்லனாயிட்டாரு; இனிமே அவர் அவ்வளவு தான்….” என்று கலாய்த்தபோது, ”நடிகன் என்றால் இப்படித் தான் எல்லா வேஷங்களிலும் நடிக்க வேண்டும்….” என்று ஏதோ சொல்லி சமாளித்தாலும் எனக்கு கண்ணீர் பொங்கி விட்டது. ஆனாலும் அந்தப் படம் எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது.  

விடியும் வரைக் காத்திரு  (வசனம்: தூயவன்) என்னும் திரைப்படத்திலும் பாக்யராஜ் வில்லத்தனமான ஹீரோ தான்; அவர் தான் வில்லன் என்பதே படத்தின் இடைவேளைக்குக் கொஞ்சம் முன்பு தான் தெரியும். அந்தப் படம் பார்த்ததும் “நடிகன் என்றால் இவர் தான் நடிகன்…” என்று நண்பர்களிடமெல்லாம் உற்சாகமாக வாதிட்டேன்.

அது ஒரு அற்புதமான  த்ரில்லர் மூவி. ஏற்கெனவே அதைப் போல சில திரைப் படங்கள் வந்திருக்கின்றன; வல்லவனுக்கு வல்லவன் என்னும் திரைப்படத்தில் கூட கதாநாயகன் – ஜெமினி கணேசன் - தான் பிரதான வில்லன் என்பது திரைப்படத்தின் இறுதியில் தான் தெரியும், என்றாலும் பாக்யராஜின் இயக்கத்தில் வெளி வந்த படங்களில் விடியும் வரைக் காத்திருக்கு எப்போதுமே சிறப்பான ஒரு இடம் இருக்கும். அதற்கு அப்புறமும் அந்த மாதிரியான வேறு சில திரைப்படங்களும் – சட்டென்று ஞாபகம் வருவது; நூறாவது நாள் – வந்திருக்கின்றன.

அவரின் சினிமாத் தலைப்புகள் எல்லாம் ரொம்பவும் கவித்துவமாக இருக்கும் – சுவர் இல்லாத சித்திரங்கள், ஒரு கை ஓசை, விடியும் வரை காத்திரு, மௌன கீதங்கள், அந்த 7 நாட்கள், தூறல் நின்னு போச்சு என்று தொடர்ந்து …. தாவணிக் கனவுகள் வரை அவர் தன்னுடைய சினிமாக்களுக்கு கவித்துவமான தலைப்புகளையே வைத்துக் கொண்டிருந்தார். தாவணிக் கனவுகள் வியாபார ரீதியாக படு தோல்வி அடைந்ததும், கமர்சியல் சினிமா என்னும் சகதிக்குள் முழுவதுமாய் இறங்கி, சின்னவீடு என்றொரு கீழ்த்தரமான திரைப் படத்தை இயக்கினார். அதற்கப்புறம் அவரிடம் கவித்துவமான தலைப்புகளும் காணாமல் போய்விட்டன என்று தான் நினைக்கிறேன்.

நான் அவரின் மௌன கீதங்கள் என்னும் திரைப்படத்திலிருந்தே மனசளவில் அவரிடமிருந்து விலகத் தொடங்கி விட்டேன். அதன் திரைக்கதை மிகவும் நேர்த்தியாக அமைக்கப் பட்டிருக்கும்… அது திரைப்படம் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போதே குமுதத்தில் தொடராகவும் அவராலேயே எழுதப் பட்டது. வாரம் தவறாமல் வாசித்து ரசித்திருக்கிறேன்.  ஆனால் அந்தக் கதையை என்னால் ரசிக்க முடியவில்லை.

ஆணாதிக்கத்தின் சாயல் அவரின் சினிமாக்களில் அப்பட்டமாய் வெளிப்பட்டது அந்தப் படத்திலிருந்து தான் என்று நினைக்கிறேன். ஒருவேளை அதற்கு முன்பு வரை அவரின் திரைப்படங்களை விடலைப் பையனாக அவரின் தீவிர ரசிகன் என்ற உணர்வில் பார்த்திருந்ததால் மௌனகீதங்களுக்கு முந்தைய திரைப்படங்களின் குறைபாடுகள் எனக்கு உறைக்க வில்லையோ என்னவோ.

 ஆண்கள் அவர்களை அறியாமல் சபலத்தில் வேறொரு பெண்ணிடம் உறவு வைத்துக் கொண்டு விட்டால் அதைப் பெண்கள் அவ்வளவு பெரிது படுத்தக் கூடாது என்னும் தொனியில் எடுக்கப் பட்டிருந்தது அந்தத் திரைப்படம். கதாநாயகன் அவனை அறியாமல் வேறொரு பெண்ணிடம் தவறு செய்து விட்டான் என்றும் சமூகத்தில் இதெல்லாம் சகஸம் என்றும் ஸ்தாபிப்பதற்காக, மனைவி இறந்ததும் உடனே மறுமணம் செய்யும் ஆணையும், மனைவி பிரசவத்திற்கு போயிருந்த சமயத்தில் மச்சினிச்சியையும் மடக்கிப் போட்டுக் கொண்ட ஆணையும் காட்டி நியாயப் படுத்தி இருப்பார்.

சரி அதே மாதிரி சந்தர்ப்பவசத்தால் ஒரு பெண்ணும் விரும்பி வேறொரு ஆணுடன் உறவு வைத்துக் கொண்டு விட்டால் அவளை மன்னித்து ஏற்றுக் கொள்ள வேண்டு மென்று அவரால் கதை அமைத்திருக்க முடிந்திருக்குமா என்று முதல் தடவையாக எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது.  அது மட்டுமல்ல; மௌன கீதங்கள் திரைப்படத்தின் கிளைமாக்ஸும் படு செயற்கை;  மற்றும் அபத்தத்தின் உச்சம்.

கணவன் தப்புச் செய்ததால் அதை அறிந்த அந்த நிமிஷமே அவனை உதறி விட்டு வெளியேறி, சுயமாய் வேலை பார்த்து வீம்புடன் வாழ்ந்து கொண்டிருக்கும் கதாநாயகி, அவன் வேறொரு பெண்ணை மணந்து கொள்வதை அறிந்து மணமேடையில் போய் அவனின் மேலே விழுந்து அப்படி அழுது புரண்டு புலம்புவதும், அது முடியாமல் போகவும் தற்கொலைக்கு முயல்வதுமான திரைக்கதை அமைப்பு படு செயற்கையாய் அமைந்து அந்த பெண் பாத்திர வார்ப்பின் சிறப்பைகளை எல்லாம் ஓரிரு காட்சிகளிலேயே சிதைத்து சின்னா பின்னமாக்கி விட்டதாகத் தோன்றியது எனக்கு.

அதற்கப்புறம் அந்தத் திருமணமே ஒரு நாடகம் என்று சித்தரிக்கப் பட்டு நாயகன் நாயகி ஒன்று சேர்வதாய் முடித்து, பாக்யராஜும் மிகச் சாதரண கமர்சியல் சினிமாக்காரர் தான் என்று என்னை உணர வைத்ததில்,  அவரின் மீதிருந்த என் அபிமானம் கொஞ்சம் கொஞ்சமாய்த் தெறிக்கத் தொடங்கியது. அதற்கப்புறமும் அவரின் திரைப் படங்களை தொடர்ந்து விரும்பித் தான் பார்த்துக் கொண்டிருந்தேன் – ஆனால் அவரின் தீவிர ரசிகனாக அல்ல; சாதாரணமாக எல்லாத் திரைப்படங்களையும் பார்க்க விரும்புகிறவனாக.

ஆனால் அவரின் சின்னவீடு திரைப்படத்திற்குப் பின்னால் அவரின் திரைப் படங்களை விரும்பிப் பார்ப்பதையே விட்டு விட்டேன். இது நம்ம ஆளு, வீட்ல விசேஷங்க, சுந்தரகாண்டம், வேட்டிய மடிச்சுக் கட்டு எல்லாம் தற்செயலாக போகிற போக்கில் பார்த்த படங்கள் தான்; அவற்றை எல்லாம் என்னால் ரசிக்க முடிந்ததில்லைல்லை. ஆரம்ப கால பாக்யராஜின் அடி நிழல் கூட அந்தப் படங்களில் படியவில்லை என்பதும் என் முடிவு. சுந்தரகாண்டத்தையெல்லாம் சகித்துக் கொள்ளவோ சீரணிக்கவோ என்னால் முடிந்ததில்லை.

வியாபார சினிமா என்னும் விஷ ஜந்து பாக்யராஜ் என்னும் எளிமையான நேர்த்தியான கதை சொல்லியை விழுங்கி விட்டது என்றும், அதை உணர்ந்து வெகு சீக்கிரமே அவர் விழித்துக் கொண்டு வெளியேறி விடுவார் என்றும் இன்னும் நம்பிக் கொண்டுதான் இருக்கிறேன். அவர் விகடன் மேடையில் வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்கிறார் என்பதை அறிந்ததும் என்னுடைய பால்யத்தை தன்னுடைய சினிமாக்களால் வசீகரமாய் உணரச் செய்த ஆதர்ச இயக்குனருக்கு இரண்டே இரண்டு கேள்விகள் எழுதிப் போட்டேன்.

 என்னுடைய ஒரு கேள்விக்கும் விகடனில் அவர் பதில் சொல்லவில்லை. வந்து குவிந்த கேள்விகளில் என்னுடைய கேள்விகள் அவர் பொருட் படுத்தத் தகுந்தவைகளாக இல்லாமல் இருந்திருக்கலாம்; ஒருவேளை என்னுடைய கேள்விகளை விகடன் அவருக்கு அனுப்பி வைக்காமல் கூட தவிர்த்திருக்கலாம்; சுவாரஸ்யமான பதில்களைப் பெறக் கூடிய அல்லது பதில் சொல்பவரைச் சுகமாக சொறிந்து விடும் கேள்விகளை மட்டும் தான் சம்பந்தப் பட்டவர்களுக்கு விகடன் ஆசிரியர் குழு அனுப்பி வைக்குமோ என்னவோ!
சரி அவரிடமிருந்து பதில் கிடைக்கா விட்டால் என்ன? நீண்ட நாட்களுக்கப்புறம் என்னுடைய பிளாக்கில் பாக்யராஜ் பற்றிய ஞாபகங்களை அசை போடுவதற்கு ஒரு வாய்ப்பு கொடுத்த பதில் கிடைக்காத என்னுடைய கேள்விகளை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

கேள்வி - 1:  புதிய வார்ப்புகள் - உங்களின் கதை வசனத்தில் உங்களின் குருநாதர் பாரதிராஜா இயக்கியபடம். அதில் கதாநாயகியை மணந்து கொண்ட கணவன், அவளை அவளுடைய காதலனுடன் எந்த வசனமுமில்லாமல், சேர்ந்து வாழ அனுப்பி வைப்பது தான் கிளைமாக்ஸ்.

அந்த ஏழு நாட்கள் - உங்களின் கதை வசனத்தில் நீங்களே இயக்கியபடம். ஆனால் அதிலும் கதாநாயகியை மணந்து கொண்ட கணவன் அவளை அவளுடைய காதலனுடன் சேர்ந்து வாழட்டும் என்று அனுப்பி வைக்க முடிவு செய்யும் போது, தாலி, செண்டிமெட், கலாச்சாரம்…. என்று நீண்ட வசனங்களுக்கப்புறம் காதலனே, அவள் கணவனுடன் தான் வாழ வேண்டுமென்று விட்டு விட்டுப் போகிறான். ஏன் இந்த முரண்பாடு? ஒருவேளை தாலி, கலாச்சாரம் இத்யாதிகள் என்பதெல்லாம் மத்யதர (சாதியிலும் பொருளாதாரத்திலும்) வர்க்கத்திற்கு மட்டுமானது என்பது தான் உங்களின் பார்வையா? எளிய சாதியினருக்கு அதெல்லாம் ஒரு பொருட்டு இல்லையா?

கேள்வி - 2:  உங்களின் சுந்தரகாண்டம் என்னும் திரைப்படத்தில், ஆசிரியராகிய கதாநாயகன் பெண்களுக்கு அவர்களின் ஒவ்வொரு பருவத்திற்கும் மதிப்பெண் போட்டு, பெண்ணொருத்தி பூப்பெய்தி, மணமுடித்து, ஒரு பிள்ளையையும் பெறும் போது தான் 100 மதிப்பெண்கள் பெற்று முழுமை அடைகிறாள் என்கிறான். இது விஷமத் தனமான ஆணாதிக்கக் கருத்தாக உங்களுக்குத் தோன்றவில்லையா? அதன்படி, அன்னை தெரசா கூட முழுமை அடைந்த பெண்ணில்லை என்று அர்த்தமாகிறதே! மேலும் எத்தனையோ பெண்கள் ஏதேதோ காரணங்களால், கல்யாணமாகாமலும், கல்யாணமாகியும் குழந்தை பெற முடியாமலும் சமூகத்தில் இருக்கிறார்களே, அவர்களெல்லாம் உங்களைப் பொறுத்தவரை முழுமை அடைந்தவர்களில்லையா? ஏன் உங்களின் முதல் மனைவிக்கே கூட குழந்தையே தரிக்க வில்லை; அதனால் பிரவிணா முழுமை அடைந்த பெண்ணில்லையா? தன்னால் பெண்ணாக முழுமை அடைய முடியவில்லை என்று உணர்ந்ததால் தான் அவர்கள் அல்ப ஆயுளிலேயே இறந்து விட்டார்களா?