Friday, October 14, 2011

கவிதை: அலைவுறும் அகதி வாழ்க்கை

எமக்கு மொரு நாடிருந்தது – அங்கு
அழகான ஓர் வீடுமிருந்தது;
ஊரிருந்தது; உறவிருந்தது;
கனவாய் யாவும் ஒருநாள்
கலைந்து போனது.......

செல்லடித்து வாழ்வு
சிதைந்து போனது;
திசைக் கொன்றாய் உறவுகளும்
சிதறிப் போனது......
வேறோடு பிடுங்கி ஒருநாள்
வீசி எறியப்பட்டோம்
வீதிகளில்........

போர் தீயதென்று போதித்த
புத்தனின் வாரிசுகள் நடத்திய
யுத்தத்தில்
மொத்தமும் இழந்து போனோம்.....

பதுங்கு குழிகளுக்குள்ளும்
பலநாள் வாழ்ந்திருந்தோம்
பயத்தை மட்டும் புசித்தபடி;
உயிராசையில்
ஓடத் தொடங்கினோம்
தேசங்களைக் கடந்து........

பிள்ளைகள் ஒரு பக்கம்;
பெண்டுகள் ஒரு பக்கம்;
பேசும் மொழியும் மறந்து
அலைவுறத் தொடங்கினோம்
அகதிகளாய்.......



Wednesday, October 12, 2011

கவிதை - சாலையில் சில கடவுள்கள்

அரக்கன் ஒருவனை காலில் போட்டு மிதித்தபடி
களிநடனம் புரிந்து கொண்டிருந்தாள்
காளி தேவி ஒருநாள்!

சஞ்சீவ மலை தூக்கி
பயணப் பட்டுக் கொண்டிருந்தார்
அனுமன் இன்னொருநாள்......!

வில்லேந்தி போர்புரிய
தயாராக நின்றிருந்தார்
இராமபிரான் பிறிதொருநாள்....!


சிவபெருமான் பார்வதி தேவியுடன்
தரிசனம் தந்து கொண்டிருந்தார்
மற்றொரு நாள்.....!

வள்ளி தெய்வானையுடன்
வரம் தரும் திருக்கோலத்தில்
முருகன் ஒருநாள்....!


சிலுவையில் அறையப்பட்டு
சிரத்தையுடன் இயேசுவும்
இரத்தம் உதிர்த்து நின்றார்
இன்னொருநாள்....!

மற்றொரு நாள்
உடம்பெங்கும் அம்மைத் தழும்புகளாய்
சில்லறைக்காசுகள் சிதறிக் கிடக்க
கைதூக்கி ஆசிர்வதித்தபடி
கனிவுடன் நின்றிருந்தார் ஷீரடி பாபா!

அதே இடத்தில்
கடவுள்களுக்கு உயிர் கொடுத்த
தெரு ஓவியனும்
இறந்து கிடந்தான் ஒருநாள்
கேட்பாரற்று.....!


Tuesday, October 11, 2011

சிறுகதை: குங்குமச்சிமிழ்

            தனிச்சுற்றுக்கு மட்டுமாய் வந்து கொண்டிருந்த ஒரு சிறுபத்திரிக்கையில் ரஞ்சனியின் நீண்ட கவிதை ஒன்று வந்திருந்தது. இதழ் அலுவலகத்திற்கு வந்த நாளில் அவளுடன் சக்திகணபதி என்றொருவர் தொலைபேசியில் பேசினார். அவளின் கவிதை பற்றி அவளுடன் விவாதிக்க விரும்புவதாகவும் முகவரி கொடுத்தால் வீட்டிற்கே நேரில் வருவதாகவும் சொன்னார்.
                    இவளுக்கு சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருந்தது. இதுவரைக்கும் இவளின் கவிதை பற்றி கடிதமோ ஒரு பாராட்டோ வந்ததில்லை. இந்த தமிழ்ச் சமூகம் கவிதை பற்றிய புரிதல் எதுவுமில்லாமல் வறட்சியாக இருப்பதாக நினைத்துக் கொள்வாள். இபோது ஒரு கவிதை ரசிகர் இவளுடன் கவிதை பற்றி நேரில் விவாதிக்க விரும்புகிறார். ஆனால் அவரை வீட்டிற்கு அழைக்க முடியாது. அவரிடம் ”வீட்டில் கவிதையை பற்றிப் பேசுகிற சூழல் இல்லை...” என்றும் ”அலுவலகத்திற்கு வாருங்கள்; விவாதிக்கலாம்....” என்றும் சொன்னாள்.
                      ரஞ்சனி எட்டாம் வகுப்புப் படிக்கும் போதிருந்து கையில் அகப்பட்டதை யெல்லாம் எடுத்து வாசிக்கத் தொடங்கினாள். அவளின் அப்பா மிக்சர் வாங்கிக் கொண்டுவரும் காகிதத்தைக் கூட மிச்சம் வைக்காமல் வெறி கொண்டு வாசித்த பின்பு தான் குப்பையில் போடுவாள். பாடப் புத்தகங்களை விட இப்படி வாசிக்கும் பகுதிகள் அவளுக்கு ருசியாய்த் தெரிந்தன.
                   பத்தாம் வகுப்புப் படிக்கும் போது எழுதுகிற கிறுக்கும் பிடித்தது. அதுவும் புதுக்கவிதை என்ற பெயரில் எதுகை மோனை சந்தம் சொந்தம் என்று எந்த சிக்கலும் இல்லாமல் எழுதப்பட்டு வந்த கவிதைகள் அவளை மிகவும் ஈர்ப்பதாய் இருந்தன. அதைப் போல வாக்கியங்களை மடக்கி மடக்கி எழுதுவது அவளுக்கும் சுலபமாய்க் கை கூடியது.
நிறைய எழுதிப் பழகிய பின்பு, ப்ளஸ் டூ படிக்கும் போது அவள் எழுதிய ஒரு கவிதை – காதல் பற்றியது - ஒரு தினசரியின் வாரப்பதிப்பில் வந்திருந்தது. அடுத்த நாளே பள்ளியில் பிரபலமானாள். தலைமை ஆசிரியர் முதற்கொண்டு எல்லோரும் அழைத்து பாராட்டினார்கள்.
                  வீட்டில் அப்பாவிற்கு இவள் எழுதியது பிடித்திருந்ததா இல்லையா என்று கண்டுபிடிக்க முடியவில்லை. “படிப்புல கோட்டை விட்டுறாதம்மா....” என்றபடி தலையை பிரியமாய்த் தடவிக் கொடுத்தார். இது பாராட்டா துக்கமா என்று அன்றைக்கு அவளால் எந்த முடிவிற்கும் வர முடிய வில்லை.
கல்லூரியில் படிக்கும் காலத்தில் தமிழ்மன்றம், கவிதைப் போட்டிகள் என்று கனவுகளோடு அலைந்து கொண்டிருந்தாள். ஒரு பௌர்ணமி இரவில் விடுதியின் மொட்டை மாடியில் தோழிகள் புடைசூழ உட்கார்ந்து கொண்டு அவர்கள் கொடுத்த தலைப்புகளுக்கு சுடச்சுட கவிதை எழுதி வாசித்து கை தட்டல்களை அள்ளிக் கொண்டது மறக்கவே முடியாதபடிக்கு மனதில் ஆழப் பதிந்திருக்கிறது.
                  ரஞ்சனி அவளின் முதலிரவில் அன்றைய பிரபல வாரப் பத்திரிக்கையில் முழுப்பக்கத்திற்கு வந்திருந்த அவளின் கவிதையை தன்னுடைய புதுப் புருஷன் மனோகரனுக்கு வாசித்துக் காட்டினாள். கவிதை அவனுக்குப் புரிந்ததா, பிடித்திருந்த்தா என்பது பற்றி எதுவும் சொல்லாமல், “நீ கவிதை எல்லாம் எழுதுவியா, அதுபத்தி உங்க வீட்டுல யாரும் எதுவும் சொல்லலியே...!” என்று குற்றம் சுமத்துகிற தொனியில் சொன்னான்.
                  அப்புறம் ”குடும்பப் பொண்ணுக்கு இது லட்சணமில்ல; அப்பாவுக்குத் தெரிஞ்சா ரொம்ப சத்தம் போடுவார்; அதனால இனிமே எழுதாத.....” என்று முடித்தான். ரஞ்சனிக்கு முதல் தடவையாக ஆற்றவே முடியாத அளவிற்கு மனதில் துக்கம் பொங்கியது.
ஒருமுறை வீட்டிற்குப் போயிருந்த போது அப்பாவிடம் இது பற்றிச் சொல்லி வருத்தப்பட்டாள். அவரும் “அவங்களுக்குப் பிடிக்கலைன்னா எழுதாதம்மா; வாழ்க்கைய விட கவிதை அத்தனை முக்கியமா!” என்றார் மிகவும் சாதாரணமாக.
                      அந்த நிமிஷத்திலிருந்து அப்பாவிற்கும், புருஷனுக்கும் அவளின் மனதில் துளியும் இடமில்லாமல் போனது. ரஞ்சனிக்கு வாழ்க்கையை விட கவிதை தான் முக்கியமாக இருந்தது. ஆனாலும் அவள் எழுதுவதைக் குறைத்துக் கொண்டாள். எழுதியே தீர வேண்டுமென்கிற மண்டைக் குடைச்சலெடுக்கும் சமயங்களில் மட்டும் எழுதி அவளின் அலுவலக முகவரியிலிருந்து பத்திரிக்கைகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்தாள்.
                            சக்திகணபதி எப்படியோ இவளின் வீட்டு முகவரியைக் கண்டுபிடித்து ஒரு அதிகாலையில் இவளின் வீட்டிற்கு வந்து விட்டார். அவர் வந்து கதவைத் தட்டியபோது ரஞ்சனி அவளின் புருஷனுடன் உறங்கிக் கொண்டிருந்தாள். மனோகரன் தான் போய்க் கதவைத் திறந்தான்.
                          இவளின் பெயரைச்சொல்லி கேட்கவும் இவள் வாசலுக்குப் போனாள். நான்கு பேர் நின்று கொண்டிருந்தார்கள். யாவரும் நல்ல இளைஞர்கள். இருபத்தைந்துலிருந்து முப்பது வயதுக்குள்ளிருந்தார்கள். மளமளவென்று வீட்டிற்குள் நுழைந்து வரவேற்பறையில் கிடந்த சோபாவில் உட்கார்ந்து கொண்டார்கள்.
                       அரவம் கேட்டு வீட்டின் மற்ற அறைகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்களும் வரவேற்பறைக்கு வரவும், அவர்கள் கையோடு கொண்டு வந்திருந்த ரஞ்சனி எழுதிய கவிதையின் பிரதியை எல்லோருக்கும் விநியோகித்தார்கள்.
நன்றாக நினைவிருக்கிறது
அப்போது எனக்கு பத்து வயதிருக்கும்;
ஏதோ தவறு செய்தேனென்று
தொடையில் சூடிழுத்தாள் அம்மா;
சுரீரிட்ட வலியில் சுருண்டேன்.....
அதே வலியை
அனுபவிக்கிறேன் இப்போதும்
புருஷன் ஒவ்வொருமுறை
புணரும் போதும்.......! என்று தொடங்கும் கவிதையில் ஆண், பெண் அந்தரங்க உறுப்புக்களின் பெயர்கள் சர்வசாதாரணமாக சுட்டப் பட்டிருந்தன. பெண்ணை போகப் பொருளாய்ப் பாவிப்பதிலிருந்து புரட்சியாளர்களும் மதவாதிகளும் விதிவிலக்கில்லை என்று சாடி, எல்லா மதங்களும், தத்துவங்களுமே பெண்ணின் புழங்கு வெளிகளை முடக்குவதைத் தான் முன்மொழிகின்றன என்று முடித்திருந்தாள்.
                             ”உங்கள் வீட்டுப் பெண் எழுதிய கவிதையை வாசியுங்கள் நண்பரே; எத்தனை ஆபாசமாய் எழுதியிருக்கிறார் என்று பாருங்கள்.....” என்றார் சக்திகணபதி. மலத்தை மிதித்தது போல் முகபாவம் காட்டினார்கள் கவிதையை வாசித்தவர்கள் அனைவரும். “என்னடி இந்த அசிங்கமெல்லாம்.....” என்றபடி ரஞ்சனியை அடிக்கப் பாய்ந்தார் மனோகரன்.
                                வந்தவர்கள் மனோகரனைத் தடுத்து, “அடிக்காதீர்கள் நண்பரே! சகோதரிக்கு அறிவுரை சொல்லுங்கள்....” என்றார்கள்.
                           ”என் கவிதை ஒன்றும் ஆபாசாமாயில்லை...... உங்களுக்கு கவிதை பற்றி ஏதாவது விமர்சனமிருந்தால் அதை அந்தக் கவிதை பிரசுரமான இதழுக்கு எழுத வேண்டும். அதை விடுத்து கவிதை என்றால் என்னவென்றே தெரியாத என் வீட்டுக்காரர்களிடம் கவிதையைக் கொடுத்து வாசிக்கச் சொல்கிற உங்களின் செயல் தான் கொஞ்சமும் நாகரிகமில்லாத்து; ஆபாசமானது; அருவருப்பானது; அராஜகமானதும் கூட.....” என்று சீறினாள் ரஞ்சனி.
                         ”உங்களோடதென்ன சங்கக் கவிதையா சகோதரி, அசை பிரித்து அர்த்தம் புரியாமப் போறதுக்கு..... நேரடியான கவிதை தான! சரி எங்களுக்கு புரியவில்லைன்னே வச்சுக்கலாம்; நீங்கதான் அர்த்தம் சொல்லுங்களேன்.... புணரும் போது வலி இருந்தா அதை உங்க புருஷன்கிட்டச் சொல்லுங்க; அதை ஏன் பொதுவெளிக்குக் கொண்டு வந்து நாங்க நம்புகிற தத்துவங்களை எல்லாம் கொச்சைப் படுத்துறீங்க......” என்று அவர்களும் சண்டைக்கு வந்தார்கள்.
                                 அதற்குள் அக்கம் பக்கத்தவர்கள் எல்லாம் வேடிக்கை பார்க்க கூடி விட்டார்கள். “உங்க ஏரியா பொண்னு எழுதியிருக்கிற கவிதைய வாசிச்சுப் பாருங்கள்....” என்று கவிதையின் பிரதிகளை கோயில் சுண்டல் மாதிரி ஆளுக்கொன்றாகக் கொடுத்தார்கள்.
                           “இப்படியெல்லாமா பொம்மனாட்டிங்க அசிங்க அசிங்கமா எழுதுறது....” என்று குசுகுசுத்துக் கொண்டிருந்தது கூடியிருந்த கும்பல்.
                           அவர்களில் வயது முதிர்ந்த மூதாட்டி ஒருத்தி “அவள் அப்படி என்னடா தப்பா எழுதியிருக்கா.... தினம் டீ.வி.யில சீரியல்ன்னு போடுறாங்களே, சினிமாவுல குத்துப்பாட்டுன்னு கூத்தடிக்கிறாங்களே.....! அதில இல்லாத அசிங்கமும் வக்கிரமுமா? டீ.வி ஸ்டேஷனுக்கு முன்னால, இல்லைன்னா சினிமாக்காரங்க வீடுகளுக்குப் போய் தகராறு பண்ணிப் பாருங்களேன்.... எலும்ப எண்ணி அனுப்பிருவான்; குடியிருப்பு பகுதியில் வந்து கூச்சல் போட்டுக்கிட்டு இருக்கீங்க....வெளியில் போங்கடா வெட்டிப்பயலுகளா....” அவர்களுடன் சண்டைக்குப் போனாள்.
                           ”அர்த்தம் புரியாம வக்காலத்து வாங்காதீங்க பாட்டிம்மா.....” என்றொருவன் விளக்கம் சொல்ல அவளை அணுக “எனக்கு எல்லாம் புரியும்; உங்க துருத்திய மூடிக்கிட்டுப் போங்கடா.....” என்று அவர்களின் மீது பாயப் போனாள். அவர்கள் கிளம்பிப் போனார்கள்.
                            அக்கம் பக்கத்து வீட்டுக்கார்ர்களும் கலைந்து போனபின்பு “எனக்கு எழுதப் படிக்கத் தெரியாது தாயி; நீ சரியாத்தான் எழுதியிருப்ப.... பொம்பள உடம்பப் பத்தி ஆம்பளை எழுதுனா ரசிப்பாங்க; அதையே பொம்பள எழுதுனா குடியே முழுகிப் போச்சுன்னு குதிப்பாங்க; கவனமா நடந்துக்க தாயி....” முகவாயைப் பிடித்துக் கொஞ்சி விட்டுப் போனாள். ரஞ்சனிக்கு ஔவையாராகத் தெரிந்தாள் அந்த மூதாட்டி.
                             ஒரே நாளில் அவளின் பிராந்தியம் முழுவதும் பிரபலமானாள் ரஞ்சனி. அவள் வேலைக்குப் போய்க் கொண்டிருக்கும் போது வீடுகளில் நின்றபடி எல்லாப் பெண்களும் குருகுருவென்று இவளையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். சைக்கிளில் போன ஒரு விடலை “புணர்ச்சின்னா என்னக்கா? ----- தான....?” என்று போகிற போக்கில் உரசிக்கொண்டு போனான்.
                      ஆட்டோக்காரர் ஒருத்தர் இவளிடம், “கவிதை அபாரம் மேடம்; ஆனா கொஞ்சம் புரியல.... கொங்கை, யோனி எல்லாம் கொஞ்சம் திறந்து காட்டி விளக்கம் சொன்னீங்கன்னா நல்லா புரியும்....”என்றார்.
                         “அதெல்லாம் எல்லா பொண்ணுகள் கிட்டயும் இருக்குறது தான்; உங்க அக்கா, தங்கச்சி அல்லது அம்மாகிட்ட காட்டச் சொல்லி பாருங்க பிரதர்...” என்றிவள் சொல்லவும் விருட்டென்று ஆட்டோவைக் கிளப்பிப் போனார்.
                         ஆண்டாளும் ஔவையும் தன்னை விட வெளிப்படையாக எழுதியிருக்கிறார்களே....! அதையெல்லாம் இந்த ஆண்கள் எப்படி சகித்துக் கொண்டார்கள்? அல்லது அவர்களையும் இப்படித்தான் கேவலப் படுத்தியிருப்பார்களோ? அது பற்றி எந்தப் பதிவும் சங்க இலக்கியங்களில் காணக் கிடைக்கவில்லையே என்று நினைத்துக் கொண்டாள்.
                            வீடும் அன்று முழுவதும் அவளை இறுக்கமாகவே எதிர்கொண்ட்து. ஏதோ வியாபார நிமித்தமாக வெளியூர் போயிருந்த அவளின் மாமனார் இரவு பதினோரு மணிக்கு மேல் வீடு திரும்பியவர் வந்ததும் வராததுமாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தவளை எழுப்பி சத்தம் போட்டார்.
                          ரஞ்சனியும் பதிலுக்கு வாக்குவாதம் செய்ய, “எங்க அப்பாவையே எதிர்த்துப் பேசுறயா; உனக்கு என்ன திமுருடி.....” என்று அந்த அர்த்த ராத்திரியில் அவளை இழுத்துப் போட்டு அடித்தான் மனோகரன். அப்புறம் “தேவிடியா மாதிரி கவிதை எழுதுற உனக்கு இந்தவீட்டுல இடமில்லை; இப்பவே வெளிய போ....” என்று சொல்லி அவளையும் அவளின் உடமைகளையும் வெளியில் வீசி கதவைப் பூட்டினார்கள்.
                       அவளுக்கு என்ன செய்வது, எங்கு போவது? என்று எதுவும் புரியவில்லை. அழக்கூடாது என்று வைராக்கியமாய், மெதுவாய் கால் போன போக்கில் வழக்கமாய் அலுவலகம் போகிற பாதையில் நடக்கத் தொடங்கியவளுக்கு, முத்துராமனின் நினைவு வந்தது. அவனின் வீட்டிற்குப் போய் கதவைத் தட்டினாள்.
                       கதவைத் திறந்தவன் இவள் நின்ற கோலத்தைப் பார்த்து அதிர்ந்து போனான். அவளை அறைக்குள் அழைத்து உட்காரவைத்து அவள் ஆசுவாசமானதும் விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டான்.
                      அவன் தனியாள்; எப்போதாவது தான் அவனுடைய அம்மா அவனைப் பார்க்க ஆசைப்படும் போது கிராமத்திலிருந்து வருவாள். அவள் ஊரில் தாசில்தார்ராக வேலை பார்க்கிறாள்.
                           அன்றைய இரவு ரஞ்சனியை அறைக்குள் படுக்க வைத்து விட்டு இவன் மொட்டை மாடியில் போய் படுத்துக் கொண்டான். ரொம்ப நேரத்திற்கு அவனுக்குத் தூக்கமே வரவில்லை. நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டு படுத்திருந்தவனுக்கு அவன் ரஞ்சனியை முதன் முதலில் சந்தித்த நாட்கள் அவனுக்குள் நினைவிலாடியது.
                          முத்துராமன், சென்னையின் புறநகர்ப் பகுதியான நேருஜி நகருக்குக் குடி வந்து அப்போது ஒருசில மாதங்கள் தான் ஆகியிருந்தது. அதற்கு முன்பு திருவல்லிக்கேணி மேன்ஷனில் தங்கியிருந்தான். அறையிலிருந்த புழுக்கமும், அழுக்கும், நாற்றமும், அமைதியின்மையும் அவனை மூச்சுத் திணற வைத்த்தில், புறநகர்ப் பகுதிக்கு வந்து தனியாக வீடெடுத்துத் தங்கத் தொடங்கினான்.
                         அவன் தாம்பரத்தைத் தாண்டி ஒரு கட்டுமானக் கம்பெனியில் என்ஜினியராக வேலை பார்த்தான். அன்றைக்கும் அவசரமாய் வேலைக்காக பைக்கில் போய்க் கொண்டிருந்த போது அந்தப் பெண்ணைப் பார்த்தான். இடது கால் பாதம் இலேசாய்த் திரும்பி இருக்க கெந்திக் கெந்தி நடந்து போய்க் கொண்டிருந்தாள். கடந்த சில நாட்களாகவே தினசரி காலையில் அவன் போகும் பாதையில் அவளைச் சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறான். வண்டியை நிறுத்தி அவளை ஏற்றிக் கொள்ளலாமா என்று ஒவ்வொரு முறையும் யோசித்து, அப்புறம் ஒரு பெண்ணிடம் எப்படிப் பேசுவது என்கிற சங்கோஷத்திலும் தப்பாக நினைத்து விடுவாளோ என்கிற தயக்கத்திலும் வண்டியை நிறுத்தாமலேயே கடந்து போய் விடுவான்.
                               அன்றைக்கும் அவளைக் கடந்து போனவன், என்ன ஆனாலும் பரவாயில்லை என்று, அவளுக்கு முன்னால் போய் வண்டியை நிறுத்தி, அவள் இவனைக் கடந்து நடக்கத் தொடங்கிய புள்ளியில், “எக்ஸ்கியூஸ் மீ..... ஏறிக்கிறீங்களா, நானும் இரயில்வே ஸ்டேஷனுக்குத் தான் போறேன்....” என்றான்.
                            அவள் ஒரே ஒரு நொடி தயங்கியது போல் இருந்தது. அப்புறம் ஏறிக் கொண்டாள். வழியில் எதுவும் பேசிக் கொள்ளவில்லை இருவரும். பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தவும் ஆங்கிலத்தில் நன்றி சொல்லி இறங்கிப் போனாள். தனக்கு எப்படி ஒரு பெண்ணிடம் பயமின்றி பேசுவதற்கான தைரியம் வந்ததென்ற ஆச்சர்யத்துடன், வழக்கமாய் காலை உணவு சாப்பிடும் ஹோட்டலுக்குள் நுழைந்தான். அவன் இரயில் நிலையம் போனபோது அவள் முந்தின இரயிலில் ஏறிப் போய் விட்டிருந்தாள்..
                            அடுத்த நாளும் வழியில் அவளைச் சந்தித்த போது, வண்டியை நிறுத்தி மிகவும் சாவதானமாக “ஏறிக்குங்க.....” என்று பின் சீட்டைக் காட்டினான். அவளும் அதிக தயக்கங்களின்றி ஏறிக் கொண்டாள். “ரொம்ப நன்றிங்க; உங்க புண்ணியத்துல நான் வேலையில சேர்ந்த இத்தனை நாள்ல நேத்துத் தான் நேரத்துக்கு ஆபீஸுக்குப் போய், மேனேஷர் கிட்டருந்து திட்டு வாங்காம தப்பிச்சேன்....” என்றாள் மெதுவான குரலில்.
                             மெதுவாய்ப் பேச்சுக் கொடுத்து அவளுடைய பெயர் ரஞ்சனி என்றும் அவள் எழும்பூரில் ஒரு டிராவல்ஸில் கிளார்க்காக வேலை பார்க்கிறாள் என்றும் பச்சையம்மன் கோயிலைத் தாண்டி ஓரிடத்திலிருந்து வருகிறாள் என்றும் தெரிந்து கொண்டான். ”அவ்வளவு தூரத்துலருந்து தினம் நடந்தா வர்றீங்க....?” ஆச்சர்யமும் கரிசனமுமாய்க் கேட்டான். “வீட்லருந்து யாரையாவது டிராப் பண்ணச் சொல்லலாமில்ல.....!”
                           அமைதியாக இருந்தாள். இவனுக்கு மனசுக்கு சங்கடமாக இருந்தது. ஒருவேளை அவளின் வீட்டில் வண்டி எதுவுமில்லையோ..... என்ற சந்தேகத்தில், “வீட்ல வண்டி இருக்குல்ல....!” என்று கேட்டான்.
                        ”அதெல்லாம் இருக்கு; யாருக்கும் மனசு தான் இல்ல....” என்றாள் சலிப்புடன்.
                        ”அப்பா, அண்ணான்னு யாருமில்லையா......”
                        ”அவங்கல்லாம் ஊருல இருக்காங்க......”
                        ”அப்ப, இங்க யாரு வீட்ல இருக்கீங்க......?”
                         ”ம்.... யாரு வீட்ல இருப்பாங்க.... புருஷன் வீட்ல தான்.....!”
                         ”உங்களுக்குக் கல்யாணம் ஆயிருச்சா......!” அவனின் குரலில் ஆச்சர்யமும் பதட்டமும் அப்பட்டமாய் பீறிகொண்டு வெளிப்பட்டது. “இதுக்கு ஏன் இவ்வளவு பதட்டப்படுறீங்க; நம்ம ஊர்ல பொண்ணுகளுக்கு எது கிடைக்குதோ இல்லையோ, இருவது முப்பது வயசுக்குள்ள புருஷன்ங்குற உறவு மட்டும் கண்டிப்பா கிடைச்சுடும்; அவங்கள அதிகாரம் பண்ண.......” என்று கொஞ்சம் நிறுத்தியவள் “ஏன் கல்யாணமான பொண்ணுகள உங்க வண்டிக்குப் பின்னால ஏத்திக்க மாட்டீங்களா?” என்றாள் நக்கலாய்.
                         ”அய்ய்ய்யோ.... அதெல்லாம் ஒண்ணுமில்லைங்க; உங்களப் பார்த்தா ரொம்ப சின்னப் பொண்ணாத் தெரியுது, அதான்.....” என்றான். அடுத்தடுத்த நாட்களில் அவர்களுக்குள் ஒரு சின்ன நெருக்கம் ஏற்பட்டிருந்தது. அன்றைக்கு வண்டியிலிருந்து இறங்கியவள், இவன் வண்டியை பார்க் பண்ணி வருவதற்காகக் காத்திருந்தாள்.
                         ”நான் நொண்டிக் கால வச்சுக்குட்டு நடந்து போய் இரயிலப் புடிக்கிற வரைக்கும் கூட நீங்க ஸ்டேஷனுக்கு வர்றதில்லையே, தினம் எங்க போறீங்கன்னு தெரிஞ்சுக்கிறதுக்காகத் தான் காத்திருந்தேன்?” என்று உரிமையாய்க் கடிந்து கொண்டாள்.
                        ”எங்கயும் போறதில்லைங்க; டிபன் சாப்பிட்டு வருவேன்; அவ்வளவு தான்...இன்னைக்கு நீங்களும் என் கூட வாங்களேன், டிபன் சாப்பிடலாம்...!’ என்று அழைப்பு விடுத்தான். அவளும் சரி என்று அவனைப் பின் தொடர்ந்தாள். பிகு பண்ணாமல் அவன் அழைத்தவுடனே வந்தது அவனுக்குப் பிடித்திருந்த்து. ஆர்வமாய் அவள் சாப்பிடுவதைக் கவனித்தவன், “நீங்க, காலையில எதுவும் சாப்புடலையா?” என்றான்.
                       ”என்னைக்குமே காலையில எதுவும் சாப்புடுறதில்ல; அதுக்கான அவகாசமும் இருக்குறதில்ல; சாப்புடச் சொல்லி வற்புறுத்துறதுக்கும் யாருமில்ல.....பணம் இருக்கு; ஆனாலும் ஒரு பெண் தனியா ஹோட்டலுக்கும் டீக்கடைக்கும் போக முடியுமா? இந்த இருபத்தி ஒண்ணாம் நூற்றாண்டுலயும் பொது வெளிங்குறது பொண்ணுகளுக்கு மறுக்கப் பட்டதாத்தான இருக்கு......” என்றாள் கண் கலங்கியபடி.
                       ”நீங்க கவிதை எழுதுவீங்களோ.....?” என்று எதார்த்தமாய்க் கேட்டான். “ஆமாம் அதெப்புடி அவ்வளவு கரெக்டா கண்டுபுடிச்சீங்க.....” என்று ஆச்சர்யங் காட்டினாள். ”நீங்க பொதுவெளி, மனவெளின்னு பேசுறீங்கள்ல; இந்த மாதிரி வார்த்தைங்கள்ளாம் கவிதை எழுதுற வங்களுக்குத் தான் சரளமா வரும்; அத வச்சுத் தான் கேட்டேன்....” என்றான்.
                       ”ஒரு காலத்துல எழுதிக் கிட்டிருந்தேன்; ஆனால் இப்பல்லாம் அதிகம் எழுதுறதில்லைங்க.....” என்றாள். “ஏங்க அப்புடி.... வேலைப் பளுவுல நேரங் கெடைக்குறதில்லையோ; நம்ம பெண்கள் கல்யாணமா யிட்டாலே முழு நேரத்தையும் புருஷனுக்கு பணிவிடை செய்றதுலயே செலவழிக்குறாங்க” என்றான்.
                        அவள் சிரித்தபடி, ”நேரமெல்லாம் பெரிய பிரச்னை இல்லைங்க; சீரியல் பார்க்குறத தவிர்த்தாலே தாராளமா நேரம் கிடைக்கும்; வீட்ல எழுதுறதுக்கான சூழல் தான் இல்லைங்க; எந்த காலத்துலயும் ஆதிக்க சமூகம் பெண்களோட சுதந்திர வெளிப்பாட அனுமதிக்குறதே இல்லயே....!” என்றாள்.
                         ஒருநாள் ”உங்க கவிதைகளை எல்லாம் கொண்டு வாங்களேன்... படித்துப் பார்க்கிறேன்” என்றான் முத்துராமன். அடுத்த நாளே நீள நீள நோட்டுக்களில் எழுதி வைத்திருந்த மொத்தக் கவிதைகளையும் கொண்டு போய்க் கொடுத்தாள்.
                        வாசித்து விட்டு ”உங்களோடது தான்ங்க அப்பட்டமான பெண்ணியக் கவிதைகள்; நம்முடைய கவிதாயிணிகள் எல்லாம் ஆண்களின் கவிதைகளைத்தான் எழுதிக்கிட்டு இருக்குறாங்க.....” என்று ஒவ்வொரு கவிதையாக சிலாகித்தவன், “இதையெல்லாம் தொகுத்து புத்தகமாப் போடுங்களேன்....” என்றான்.
                     ”நிறைய பதிப்பகங்கள் கிட்டக் கேட்டுப் பார்த்தேன்ங்க....மொத்தச் செலவையும் நானே ஏத்துக்கிட்டா மட்டும் தான் புத்தகம் போடமுடியும்னு சொல்லீட்டாங்க.....அவ்வளவு பணம் யார்கிட்டங்க இருக்கு.....” என்றாள் வெறுப்புடன். “நான் செலவு பண்ணி புத்தகம் போடுறேன்ங்க.......” என்று மனோகரன் சொல்லவும் “பார்க்கலாம்.....” என்றாள் கொஞ்சமும் நம்பிக்கை இல்லாமல்.
                      ஆனால் மனோகரன் தான் சொன்னபடி பணம் செலவழித்து, ஒரு பிரபலமான பதிப்பகத்தின் மூலம் அவளின் கவிதைத் தொகுதியை வெளிக் கொண்டு வந்தான். அப்போதிருந்து இருவருக்கும் நட்பு ரொம்பவே இறுகியது. ரஞ்சனி பற்றிய நினைவுகளினூடே அவன் தூங்கிப் போனான்.
                         அடுத்தநாள் அவளை ஒரு பெண்கள் விடுதியில் சேர்த்து விட்டான். சிலநாட்கள் கழித்து அவளின் பிறந்த வீட்டிற்குப் போனபோது, அங்கும் அவளுக்கு ஆதரவு கிடைக்கவில்லை. அவர்களும் புருஷன் வீட்டை அனுசரித்துத் தான் வாழ்ந்தாக வேண்டுமென்று அவளுக்கு அறிவுரை சொல்லி அனுப்பி விட்டார்கள்.
                        விவாகரத்திற்கு முயன்ற போது, மனோகரன் வீட்டில் வேண்டுமென்றே பரஸ்பர விவாகரத்துக்கு சம்மதிக்க மறுத்து இழுத்தடித்தார்கள். கோர்ட்டில் மனுச் செய்து அங்கும் கவுன்சிலிங் வாய்தா என்று நாட்கள் கடத்தப்பட்டு அப்புறம் தான் விவாகரத்து கிடைத்தது.
                          குடும்ப நல நீதிமன்றத்தின் நீதிபதி பாலசரஸ்வதி தீர்ப்பை வாசித்து முடித்ததும் முத்துராமனுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. இனி அவன் ரஞ்சனியைத் திருமணம் செய்து கொள்வதற்கு எந்த விதத் தடையுமில்லை. ஆனால் ரஞ்சனியின் முகத்தில் மகிழ்ச்சியின் துளி கொஞ்சமும் இல்லாமல் கண்கள் பொங்க எங்கேயோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
                       என்னாயிற்று இந்தப் பெண்ணிற்கு! இந்தத் திருமண பந்தத்தை முறிக்க எத்தனை பாடு பட வேண்டி இருந்த்து! எத்தனை அவமானங்கள்! எவ்வளவு அலைக்கழிதல்கள்! மூன்று வருஷங்கள் முழுசாய் கரைந்து போயிற்றே.....! ஆனால் இந்த சந்தோஷத்தைக் கொஞ்சமும் கொண்டாடாமல் இன்னும் இந்தப் பேதைப்பெண் ஏன் இறுக்கமாய் உட்கார்ந்திருக்க வேண்டும்!
                         ஆண்களின் மனது அந்தந்த நேரத்து சந்தோஷங்களை அவ்வப்போதே ஆரவாரமாய்க் கொண்டாடித் தீர்க்க, பெண்களோ, சந்தோஷத்திற்குப் பின்னாலுள்ள வலிகளையே நினைத்து மனம் புழுங்குகிறார்கள் என்று நினைத்துக் கொண்டான்.
                        வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருக்கும் போது முத்துராமன் ”என்ன ஆச்சு ரஞ்சனி! இந்த விவாகரத்து கிடைச்சதுல உனக்கு சந்தோஷமில்லையா....” என்றபடி அவளின் கைகளை மெல்லப் பற்றினான். கைகள் வேர்த்து வெதுவெதுவென்றிருந்தது.
                    ”அதெல்லாம் ஒண்ணுமில்லையே.....!” என்றபடி முகந்திருப்பி கண்ணீரைத் துடைத்துக் கொண்டு சிரிக்க முயன்றாள். ”மனசளவுல நான் மனோகரன் கிட்டருந்து எப்பவோ வெலகியாச்சு; இனிமே ஒரே ஒரு நிமிஷம் கூட அந்த மாதிரி ஆளு கூட என்னால இணக்கமா வாழ முடியாது தான்; ஆனாலும் அதை ஒரு மூன்றாம் மனுஷி ஆவண பூர்வமா அறிவிக்கும் போது மனசுக்கு ஏனோ ரொம்ப சங்கடமா இருக்கு.....“ என்றாள் மறுபடியும் கண் கலங்கியபடி.
                     ”அம்மாட்டச் சொல்லி நம்ம கல்யாணத்துக்கு நாள் குறிக்க சொல்லட்டுமா ரஞ்சனி....” என்றான். ”இன்னொரு கல்யாணமா? அய்யோ சாமி; ஆளை விடுப்பா...... ஒரு கல்யாணத்தின் மூலமே ஏழேழு ஜென்மங் களுக்கும் போதுமான வலிகளையும் அவமானங்களையும் அனுபவச்சாச்சு; இனியொரு கல்யாணத்துக்கு நான் எப்பவுமே தயாரில்ல; என்ன விட்டுரு முத்து.....” என்றாள் தீர்மானமாக.
                       முத்துராமனுக்கு சிலீரென்றிருந்தது. தவறான நேரத்தில் அவசரப்பட்டு தான் இந்தக் கேள்வியைக் கேட்டு விட்டமோ என்று தோன்றியது அவனுக்கு. அவளின் மனநிலை கொஞ்சம் இளகட்டும்; அப்புறம் அம்மாவிடம் அழைத்துப் போய், பேச்ச் சொல்ல்லாம் என்று நினைத்துக் கொண்டான்.
                      முத்துராமனின் அம்மா தாசில்தாராக வேலை பார்ப்பதால் அவளால் ரஞ்சனியிடம் பக்குவமாய்ப் பேசி ரஞ்சனியை கல்யாணத்திற்கு சம்மதிக்க வைத்து விட முடியும் என்று நம்பினான். ரஞ்சனிக்கு இருபத்தேழு வயது முடிவதற்கே இன்னும் மூன்று மாதங்களிருந்தன. இவ்வளவு சின்ன வயதில் அவள் எப்படி வாழ்க்கையைத் தன்னந் தனியாக எதிர் கொள்ள முடியும்? என்றும் தனக்குத் தானே சமாதானமும் சொல்லிக் கொண்டான்.
                      முத்துராமனின் அம்மா கிராமத்திலிருந்து வந்திருந்த போது ரஞ்சனியிடம் நேரிடையாகவே கேட்டாள்.”என் புள்ளயக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னுட்டியாமே, ஏம்மா அவனப் புடிக்கலயா?”
                    ” அய்யோ அப்படியெல்லாம் இல்லம்மா....அவர் மட்டும் இல்லைன்னா நான் எப்பவோ செத்துப் போயிருப்பேன்; இன்னேரம் என்னைப் புதைச்ச எடத்துல புல்லு கூட மொளச்சிருக்கும்மா; இந்த மூணு வருஷமும் அவர் எனக்கு ரொம்ப பக்க பலமா பெரிய மாரல் சப்போர்ட்டா இருந்தார்; எவ்வளவோ பேர் என்கிட்டருந்து அவர விலக்க முயற்சி பண்ணாங்க; அசிங்க அசிங்கமா கதை கட்டி அவரை அவமானப் படுத்துனாங்க.... ஆனா அவர் அதுக்கெல்லாம் அசரவே இல்ல.... எனக்கு முத்துராமன ரொம்பப் புடிக்கும்மா.... ஐ லவ் ஹிம் ஸோ மச்; ஆனா கல்யாணம்ங்குற குங்குமச் சிமிழுக்குள்ள மறுபடியும் அடைபடுறதத்தான் நான் வெறுக்கிறேன்.......” என்றாள் ரஞ்சனி.
                   ”இதென்னம்மா அசட்டுத்தனம், தெனாலிராமன் பூனை மாதிரி? ஒரு தடவை உன் கல்யாணம் தோத்துப் போனதுக்காக அந்த ஏற்பாட்டையே வெறுக்குறது என்னம்மா நியாயம்.....!”
                       ”அதுக்கில்லைம்மா.... நம்மூர்ல கல்யாணம் பண்ணுறது ரொம்ப ஈஸியா இருக்கு; ஆனா ஏதோ காரணங்களுக்காக அதை முறிச்சுக்கனும்னு நெனச்சா அது கல்யாணத்த விட பெரிய சித்திரவதையா இருக்கும்மா அதான்.... என்னாலயும் மிச்ச வாழ்க்கைய தனியா கழிச்சிட முடியுமுன்னு தோணல; முத்து ராமன் மாதிரி ஒருத்தர் என் கூட இருந்தா நான் சந்தோஷமாத் தான் இருப்பேன்..... வேணுமின்னா நீங்களும் அவரும் சம்மதிச்சா நாங்க கல்யாணம் பண்ணிக்காமலே சேர்ந்து வாழறோம்....அதாவது லிவிங் டுகெதர்; நோ கமிட்மெண்ட்ஸ்; மனசுக்குப் பிடிக்கலைன்னா எப்ப வேணுமின்னாலும் பிரிஞ்சு போய்க்கலாம்....”
                           ”வேண்டாம்மா..... நீ கல்யாணமே பண்ணிக்காம தனியாவே வேணுமின்னாக் கூட வாழ்ந்துக்கோ; ஆனா எந்த ஆம்பிளை கூடயும் சேர்ந்து வாழ்ற அதாவது லிவிங் டுகெதர் தப்ப மட்டும் பண்ணீடாதம்மா....அதுக்கு இந்த சமூகம் தர்ற பேரே வேறம்மா.... கல்யாணங்குற சிஸ்டத்துல சில சிக்கல்கள் இருக்கத்தான் செய்யுது; நானும் ஒத்துக்கறேன்.....ஆனா அதுக்கு மாற்று இப்போதைக்கு வேற எதுவுமில்லையே! லிவிங் டு கெதர்ன்கிறதை கல்யாணத்துக்கு மாற்றா என்னால ஏத்துக்க முடியாது ரஞ்சனி.....
                             சின்ன வயசுல நானும் முத்துராமனோட அப்பாவும் காதலிச்சோம்; எங்க காதலுக்கு சாதி, அந்தஸ்துன்னு ஏகப்பட்ட தடைகள்; எங்களால கல்யாணம் பண்ணிக்கவே முடியல.... அதனால என்ன போங்கடான்னு நாங்க சேர்ந்து வாழத் தொடங்கீட்டோம்... எங்களச் சுத்தி இருக்குறவங்களுக்கு பதில் சொல்லியே பாதி ஆயுள் போயிருச்சும்மா; அவர் ஒரு விபத்துல செத்துப் போகவும், என்னோட வாழ்க்கையே இருளடஞ்சு போச்சும்மா..... பிள்ளைக்கு அப்பான்னு சொல்லிக்க யாருமில்லாம, நான் அவரோட சேர்ந்து வாழ்ந்த்துக்கான அங்கீகாரமில்லாம...... எவ்வளவு அவமானங்கள்! எவ்வளவு வலிகள்! அனுபவசாலி நான் சொல்றேன்..... லிவிங் டுகெதர் கல்ச்சர் எல்லாம் நமக்கு ஒத்து வராதும்மா.... புரிஞ்சுக்கோ....”
                              ”உங்க காலத்துல அது தப்பா இருந்துருக்கலாம்; ஆனா இப்ப நீதிமன்றமே ஆணும் பெண்ணும் கல்யாணம் பண்ணிக்காம சேர்ந்து வாழ்றது பெரிய பிசகில்லைன்னு சொல்லீருச்சும்மா......”
                             ”நீங்க நீதிமன்றத்துக்குள்ள போயா குடித்தனம் பண்ணப் போறீங்க? இந்த சமூகத்துக்குள்ள தான வாழ்ந்தாகனும்.... இந்த சமூகத்துக்கு இன்னும் அந்த பக்குவம் வரலியே! அது அதன் சட்ட திட்டங்கள மீறி வாழ்றவங்கள பழிக்கும்; ஏளனம் செய்யும்; சந்தர்ப்பம் கிடைக்குறப்பல்லாம் அவமானப் படுத்தும்... வாழ்க்கை முழுக்க எப்படிம்மா வலியோடயே நாட்களக் கடத்த முடியும்.... திருமணம்ங்குற ஏற்பாடு நீ சொன்ன மாதிரி குறுகியதா குங்குமச் சிமிழா இருந்தாலும் இப்போதைக்கு அதுதான் உனக்கு ஒரு அடையாளமும் பாதுகாப்பும் தரும்.... அதுக்குமேல உன் இஷ்டம்மா....” என்றாள் முத்துராமனின் அம்மா.
                       ரஞ்சனிக்கு அப்போதும் மனதுக்கு சமாதானமாகவிலை. கண்டிப்பாக எந்தக் காரணத்தை முன்னிட்டும் இனியொரு திருமணத்தில் போய் மாட்டிக் கொள்வதற்கு அவளுக்கு சம்மதமில்லை. அதேசமயத்தில் முத்துராமனின் அம்மாவையும் அவள் காயப்படுத்த விரும்பவில்லை.
                      ”எனக்குக் கொஞ்சம் யோசிக்கனும்மா; என் முடிவ ரெண்டொரு நாள்ல சொல்லட்டுமா....” என்றாள் ரஞ்சனி. “தாராளமா நல்லா யோசிம்மா; எத்தனை நாள் வேணுமின்னாலும் எடுத்துக்க; ஆனா என் பிள்ளைய முறைப்படி கல்யாணம் பண்ணிக்கிறேன்னு நீ சொன்னா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்.....” என்றாள் முடிவாக.

                                                        முற்றும்

Monday, October 11, 2010

கவிதை - இரவின் நிழல்

அனேக நேரங்களில் - நீயென்
தோளில் முகம் புதைத்து
அழுவதில்
ஆறுதல் அடைந்திருக்கிறாய்;

சிறுகுழந்தையாய்ச் சுருண்டு – என்
மடியில் படுத்துறங்குவதில்
மகிழ்வு கண்டிருக்கிறாய்;

வெறுமை தகிக்கும் உன்
விடுதிச் சூழலிலிருந்து விடுபட்டு
எங்களின் வீட்டிற்கு
ஓடி வரும் போதெல்லாம்
துப்பட்டாவையும் துயரங்களையும்
களைந்து வீசி விட்டு
விடுதலை பெற்ற
சிறுபறவையாய்
சந்தோஷச் சிறகை விரித்திருக்கிறாய்.....

இப்போதெல்லாம் நீ
என் அருகில் அமரவே
அச்சப்படுகிறாய்;

தனித்திருக்கும் தருணங்களைத்
தவிர்க்கவே விரும்புகிறாய்;

கண் பார்த்து நான் பேசினாலும்
துப்பட்டாவை அடிக்கடி
இழுத்து விட்டு இம்சிக்கிறாய்;

இருவருக்கும் இடையில்
இப்போது விழுந்து கிடக்கிறது;
எனக்குள்ளிருந்த
ஆணெனும் மிருகம் விழித்து
உலாவத் தொடங்கிய
கனத்த இரவொன்றின் நிழல்
கடக்கவே முடியாதபடி.....

Sunday, October 10, 2010

சிறுகதை: பலிகேட்கும் தேர்வுகள் - மீள் பிரசுரம்

குறிப்பு:

இந்தச் சிறுகதை ஏற்கெனெவே நம்முடைய தளத்தில் பதிவேறி யாராலும் கண்டு கொள்ளப் படாமல் ( மன்னிக்கவும்: ஒருத்தர் கருத்துச் சொல்லியிருந்தார்) கடந்து போயிருந்தது.  இது அப்படி அமரச் சிறுகதை ஒன்றும் இல்லை தான்.

இந்தச் சிறுகதையை நான் 2008ம் வருஷத்தில் எழுதினேன். ஒவ்வொரு பத்திரிக்கையாகப் பவனி போய் செப்டம்பர் 2010ல் தான் தினமணிக் கதிரில் பிரசுரமானது.மாணவன் ஆசிரியையைக் கொலை செய்வதும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதுமான இன்றைய கல்விச் சூழலில் இந்தச் சிறுகதை மீண்டும் முக்கியத்துவம் பெறுவதாக நான் கருதுவதாலும் புதிதாக ஏதும் எழுதுவதற்கு   எனக்கு அலுப்பாக இருப்பதாலும் இந்தச் சிறுகதையையே மீண்டும் பதிவிடுகிறேன்.

சிறுகதை படிக்க நேரமோ பொறுமையோ இல்லாதவர்கள் கடந்து போய் விடுங்கள். நன்றி!

பத்தாம் வகுப்பு மாணவர்களின் பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு அங்கயற்கண்ணி கொஞ்சம் தாமதமாய்த் தான் போய்ச் சேர்ந்தாள். மையத்தின் சூபர்வைசர் ஏற்கெனவே பரிச்சயமானவர்.
“என்ன டீச்சர், முதல் நாளே லேட்டா வர்றீங்க! வழக்கம் போல ட்ரெயின் லேட்டா….!” என்றவர் “உங்களப் பார்த்தே தீருவேன்னு ஒருத்தர் காலையிலருந்து காத்திருக்கிறார்; என்னன்னு விசாரிச்சுட்டு வந்துருங்க…” என்று ஒரு நமட்டுச் சிரிப்புடன் அனுப்பி வைத்தார்.
உறவுகளே இல்லாமலாகி விட்ட வாழ்க்கையில் நம்மை யார் தேடி வந்திருக்கிறார்கள்? சூபர்வைசரின் சிரிப்பைப் பார்த்தால் இதில் ஏதோ வில்லங்கம் இருக்கும் போலிருக்கிறதே என்று மனசுக்குள் நிழலாடும் கேள்விகளுடன், தேடி வந்தவரை அணுகி விசாரித்தபோது அவர் சென்னையிலிருக்கும் ஒரு பிரபல பள்ளியின் புரோக்கர் என்று புரிந்தது.
அந்த பள்ளியின் மாணவர்கள் எழுதிய விடைத்தாட்கள் இந்த மையத்திற்குத் தான் திருத்துவதற்கு வந்திருக்கிறது என்றும், அவை இவளிடம் வந்தால் தாராளமாக மதிப்பெண்களைப் போடவேண்டும் என்றும் அப்படிச் செய்தால் ஒரு பேப்பருக்கு இவ்வளவு என்று கொடுத்து விடுவதாகவும் சொல்லி ஒரு பெருந்தொகையை முன்பணமாகவும் கொடுக்க முன் வந்தார். அங்கயற் கண்ணி அவரைத் திட்டி அனுப்பி விட்டு விடைத்தாள் திருத்தும் அறைக்குள் போனாள்.
“என்ன டீச்சர் நல்ல அறுவடையா…?” என்றார் சூபர்வைசர் கிண்டலாய்ச் சிரித்தபடி.
“அட, நீங்க வேற ஏன் ஸார் வெறுப்பேத்துறீங்க….! டம்மி நம்பர் அது இதுன்னு போட்டு எல்லாம் ரகசியமா வச்சிருந்தும் எப்படி ஸார் பேப்பர ட்ரேஸ் பண்ணி வந்துடுறாங்க….” என்றாள்.
“அந்த அரசியல் எல்லாம் நமக்கு விளங்காது டீச்சர்; ஆனால் இந்தத் தடவ பேப்பர ட்ரேஸ் பண்றது கொஞ்சம் கஷ்டம் தான்; ஏன்னா இப்ப புதுசா வந்துருக்கிற லேடி சி.இ.ஓ. கடைசி நேரத்துல, முதல்ல போட்டுருந்த ஷெட்யூல்படி பேப்பர்கள அனுப்பாம மாத்தி மாத்தி அனுப்பச் சொல்லீட்டாங்க… இப்பக் கூட உங்களத் தேடி வந்து பார்த்துட்டுப் போறாருல்ல; அவர் ஸ்கூல் பேப்பர் இந்த சென்டருக்கு வரல; நானும் சொல்லிப் பார்த்தேன்; அவர் கேட்கல….” என்றபடி அவள் திருத்து வதற்கான பேப்பர் கட்டைக் கொடுத்தார்.
“இது எந்த ஸ்கூல் பேப்பர் ஸார்….” என்று அங்கயற்கண்ணி கேட்கவும் அடையாரிலிருக்கும் பிரபல பள்ளியின் பெயரைச் சொன்னார் அவர். அங்கயற்கண்ணிக்கு சிலீரென்றிருந்தது. அந்தப் பள்ளியில் தான் அவளின் பெண் அன்புச்செல்வி ஒன்பதாம் வகுப்பு வரைப் படித்தாள். பத்தாம் வகுப்பில் தொடர்ந்து படிக்க அனுமதி மறுத்து விட்டார்கள்.
சென்ற வருஷ ஜூன் மாதத்தின் மத்தியில் கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறந்து கொஞ்ச நாட்களாகியிருந்த நிலையில், அன்புச் செல்வி படிக்கும் பள்ளி நிர்வாகம் அங்கயற் கண்ணியை பள்ளிக்கு அழைத்திருந்தது.
அலுவலக உதவியாளன் அனுமதிக்கவும், அவள் அன்புச் செல்வியையும் அழைத்துக் கொண்டு தலைமை ஆசிரியையின் அறைக்குள் நுழைந்தாள்.
இவள் வணக்கம் சொன்னதைக் கூட கவனிக்காத பாவணையில் முகத்தைக் கடுகடுவென்று வைத்துக் கொண்டு “நீங்கதான் அன்புச் செல்வியோட அம்மாவா?” என்றாள் தலைமை ஆசிரியை.
இவள் ஆமாம் என்று பவ்யமாய் தலை அசைக்கவும் ”பொம்பளப் பிள்ளைய இப்படியா பொறுப் பில்லாம வளப்பீங்க! அறிவியல்லயும் ஆங்கிலத்துலயும் இவ சிங்கிள் டிஜிட் மார்க்கத் தாண்டுறதே இல்ல; இதெல்லாம் நீங்க கவனிக்கிறதே இல்லையா? எனனவா வேலை பார்க்கு றீங்க?” என்றாள்.
“அரசு மேல்நிலைப் பள்ளியில ஆசிரியரா இருக்கேன் மேடம்…”
அவளுக்கு ஆங்காரமாய்க் கோபம் வந்தது.“ஆசிரியர் பிள்ளை மக்குன்னு நீங்க ரெண்டு பேரும் நிருபிக்கலைன்னு யாரு அழுதாங்க….!” என்று சிடுசிடுத்தாள்.
“இல்ல மேடம் வீட்ல கொஞ்சம் பிரச்னை; நானும் காட்பாடியத் தாண்டி ரொம்ப தூரம் வேலைக்குப் போயிட்டு வர்றதால இவளக் கவனிக்க நேரமிருக்கிறதில்ல; இனிமே பார்த்துக்கிறேன்”
“டூ லேட்; காரியம் கொஞ்சம் கை மீறிப் போயிருச்சு, இனிமே ஒண்ணும் பண்ண முடியாது; உங்க பொண்ணோட டீ.சி.யக் குடுத்துடுறோம், நீங்க வேற ஸ்கூல்ல சேர்த்து படிக்க வச்சுக்குங்க….”
“அப்படியெல்லாம் சொல்லாதீங்க மேடம்… அவளுக்கு ஒரு நல்ல கல்வி கிடைக்கனும்னு தான், சென்னையிலயே சிறந்தது உங்க ஸ்கூல்ன்னு கேள்விப்பட்டு, எவ்வளவோ சிரமங்களப் பொறுத்துக்கிட்டு ஆறாம் வகுப்புல இருந்து அவள இங்க சேர்த்து படிக்க வைக்கிறேன்;
இவளுக்காக காட்பாடியிலருந்து வில்லிவாக்கத்துக்கு குடி வந்துருக்கேன்…. பயணத்துலயே என்னோட பாதி நாள் கழிஞ்சுடுது; இவ படிப்புக்காகத் தான் பொறுத்துக் கிட்டிருக்கேன்….பெரிய மனசு பண்ணி ஒரே ஒரு வாய்ப்புக் குடுங்க, மூணே மாசத்துல முழுசா அவள நான் மாத்திக் காட்டுறேன் மேடம்…. ப்ளீஸ், தயவு பண்ணுங்க….” கையெடுத்துக் கும்பிட்டு இறைஞ்சினாள் அங்கயற்கண்ணி.
“அன்புச் செல்வியோட அப்பா என்ன பண்றார்? “ என்று கேட்டாள் தலைமை ஆசிரியை. “அவர் எலக்ட்ரானிக்ஸ் என்ஜீனியர் மேடம்; ஆனா அவர் இப்ப எங்க கூட இல்ல மேடம்; சிங்கப்பூர்ல வேறொரு பொண்ணு கூட குடும்பம் நடத்திக்கிட் டிருக்கிறார்….அதான் இவளப் பாதிச்சு படிப்புல சுணங்கிப் போயிட்டாள் மேடம்………“கண் கலங்கினாள் அங்கயற்கண்ணி.
“ஓ… ஐயாம் சாரி…..வேணும்னா ஒண்ணு பண்ணலாம்; எங்க ஸ்கூல்லயே தொடர்ந்து படிக்கட்டும்…. ஆனா எங்க ஸ்கூல் ரோல்ல வராம பரீட்சைய பிரைவேட்டா பணம் கட்டி வெளி மாணவர்களோட சேர்ந்து எழுதட்டும்; ஒருவேளை பாஸ் பண்ணீட்டாள்னா ப்ளஸ் ஒன்னுக்கு எங்க ஸ்கூல்லயே சேர்த்துக்குறோம்; அதுக்குன்னா ஏற்பாடு பண்ணட்டுமா….?”
“அய்யோ வேண்டாம் மேடம்; அது சரியா வராது….கொஞ்சம் பெரிய மனசு பண்ணி….” அங்கயற்கண்ணி முடிப்பதற்குள் சீறினாள் தலைமை ஆசிரியை.
”சொன்னாப் புரிஞ்சுக்குங்க மேடம். இது என்னோட தனிப்பட்ட முடிவில்ல; மேனேஜ் மென்ட்டோட முடிவு…..உங்க பொண்ண பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு அனுப்பினா கண்டிப்பா ஃபெயிலாயிடுவா(ள்); அது எங்க பள்ளிக்கே பெரிய களங்கமாப் போயிடும்….20 வருஷங்களுக்கும் மேலா பத்தாம் வகுப்புலயும் +2ல்யும் 100% பாஸ் ரிசல்ட் காண்பிச்சுட்டு வர்றோம்; அதோட ஸ்டேட் ரேங்க் வாங்குற ஸ்கூல்ல ஃபெயிலியர் வந்தா பேர் கெட்டுடாதா?”
அப்போது ஒரு நடுத்தர வயதுப் பெண் அறைக்குள் வந்து “நான் தான் இவளோட கிளாஸ் டீச்சர் மேம்; ஸ்பெஷல் கேர் எடுத்துப் பார்த்துக்கிறேன் மேம்…நாம ஒரு சான்ஸ் குடுத்துப் பார்க்கலாம் மேம்…” என்று அன்புச்செல்விக்காகப் பரிந்து பேசவும், தலைமை ஆசிரியைக்கு பலியாய் கோபம் வந்து விட்டது.
”யாரக் கேட்டு உள்ள வந்த, மேனர்ஸ் இல்லாம….உன் வேலை எதுவோ அதை மட்டும் பாரு…. ஃபெயிலாயிட்டா மேனேஜ் மென்ட்டுக்கு நீயா வந்து பதில் சொல்வ? கெட் அவுட்…”என்று சீறினாள். அங்கயற்கண்ணிக்கு அந்த டீச்சரைப் பார்க்க பாவமாக இருந்தது.
“வேணும்னா அன்புச் செல்விய இந்த வருஷம் ஒன்பதாம் வகுப்பிலேயே ஃபெயில் பண்ணீடுங்க மேடம்…..அவளோட பெர்மான்மஸ் பார்த்துட்டு அடுத்த வருஷம் பத்தாவது புரமோட் பண்ணிக்குங்க….” என்றாள் அங்கயற்கண்ணி. தலைமை ஆசிரியை அதையும் ஒத்துக் கொள்ள வில்லை.
“நாங்க யாரையும் எந்த வகுப்பிலயும் ஃபெயில் பண்றதில்ல; அது எங்க ஸ்கூலோட பாலிஸி….” என்றபடி அன்புச்செல்வியின் டீ.சி.யை கிழித்துக் கொடுத்து ‘பெஸ்ட் ஆஃப் லக்’ என்று வாழ்த்தி அனுப்பி வைத்தாள்.
என்ன செய்வதென்று தெரியாமல், முகவாட்டத்துடன் வெளியே வந்த அங்கயற் கண்ணியை அன்புச்செல்வியின் வகுப்பாசிரியை தான் தேற்றினாள். தன் பெயரைத் தங்கம்மாள் என்று அறிமுகப் படுத்திக் கொண்டாள்.
“இது சரியான முசுடு மேடம்; ரிசல்ட், ரிசல்ட்டுன்னு பேயா அலையும்; இதுவரைக்கும் இவளோட சேர்த்து ஏழு பேருக்கு டீ.சி. குடுத்து அனுப்பீருச்சு; அஞ்சு பேர பிரைவேட்டா எழுதச் சொல்லிருச்சு; ஒவ்வொரு வருஷமும் இப்படித்தான்... தேறாதுன்னு கொஞ்சம் சந்தேகம் இருந்தாலும் பேரண்ட்ஸக் கூப்பிட்டு டீ.சி.யக் குடுத்துருவாங்க…அப்புறம் நூறு சதவிகிதம் தேர்ச்சி காண்பிச்சுட்டோம்னு பீத்திக்குவாங்க...
விடுங்க; இவங்க புரஜெக்ட் பண்ற அளவுக்கு அன்புச்செல்வி ஒண்ணும் அத்தனைக்கு மோசமான ஸ்டூடண்ட் இல்ல; இப்ப கொஞ்ச நாளாத்தான் ரொம்பவும் டல்லா இருக்கிறா…! வீட்ல எதுவும் பிரச்னையா? சொல்லலாம்னா என்கிட்டச் சொல்லுங்க….” என்றாள்.
அவளின் பேச்சில் நிஜமான கரிசனம் தெரிந்தது. அங்கயற்கண்ணி அவளின் கதையைச் சொல்லத் தொடங்கினாள்.
அங்கயற்கண்ணிக்கு சொந்த ஊர் தென்காசிக்குப் பக்கத்திலுள்ள வாசுதேவநல்லூர்.அங்கேயே எலக்ட்ரானிக்ஸில் டிப்ளமா முடித்த முத்துராமன் என்பவளைக் காதலித்திருக்கிறாள். வேறு ஜாதி என்பதாலும் அவன் வேலை வெட்டி எதுவுமில்லாமல் வெறுமனே ஊர் சுற்றுகிறான் என்பதாலும் அங்கயற்கண்ணியின் அப்பா அவனை மணந்து கொள்ள சம்மதிக்க வில்லை.
அவளின் அம்மா இருவரையும் ரகசியமாய் அழைத்து “நீங்க என்ன தான் கெஜவித்தை செஞ்சு பார்த்தாலும் இவளோட அப்பா உங்க ரெண்டு பேத்துக்கும் கல்யாணம் பண்ணி வைக்க மாட்டார்; உங்களுக்கும் வயசாகலையா? பேசாம இந்த ஊரை விட்டுப் போயி எப்படியாவது பொழச்சுக்குங்க….நான் அவரச் சமாளிச்சுக்கிறேன்…..” என்று சொல்லி பணமும் நகையும் கொடுத்து வாழ்த்தி வழி அனுப்பி வைத்திருக்கிறாள்.
இருவரும் பாண்டிச்சேரிக்கு ஓடிப்போய் கல்யாணம் கட்டிக் கொண்டு ஒரு ஒண்டுக் குடித்தனத்தில் வாழ்க்கையைத் தொடங்கியிருக்கிறார்கள். அங்கயற்கண்ணி பி.எஸ்.ஸி, பி.எட். படித்திருந்ததால் மெட்ரிக்குலேசன் பள்ளியில் எளிதாய் வேலை கிடைத்திருக்கிறது.ஆனால் முத்து ராமனுக்குத் தான் சரியான வேலை அமையாமல் சிறு சிறு வேலைகள் தான் செய்ய வேண்டியிருந்ததாம். தன் படிப்பிற்கும், திறமைக்கும் தகுந்த வேலை சென்னைக்குப் போனால் கிடைக்கு மென்று முத்துராமன் அபிராயப்படவும், அதுவும் சரி என்று சென்னைக்குக் குடி வந்திருக்கிறார்கள்.
சென்னையில் தடுக்கி விழுந்தால் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் தான் என்பதால் அங்கயற்கண்ணிக்கு வேலை கிடைப்பதில் பிரச்னையில்லை.ஆனால் முத்துராமனுக்கு சென்னையிலும் சிலாக்கியமான வேலை அமையவில்லை.
அதனால் முத்துராமனின் தகுதியை உயர்த்தும் விதமாக அங்கயற்கண்ணி அவளுடைய சொற்ப வருமானத்திலும் அவனை பகுதி நேரக் கல்லூரியில் சேர்த்து பி.இ. படிக்க வைத்திருக்கிறாள். அதற்கப்புறம் அவர்கள் எதிபார்த்தபடியே அவனுக்கு ஒரு கம்பெனியில் நல்ல வேலை கிடைத்திருக்கிறது. அப்புறம் அவனின் நண்பன் ஒருவனின் மூலம் சிங்கப்பூரில் வேலை கிடைத்து அங்கு போய் செட்டிலாகி விட்டான். எப்போதாவது இந்தியாவிற்கும் வந்து போய்க் கொண்டிருந்தான்.
திடீரென்று தொடர்ந்து சில வருஷங்களுக்கு அவன் இந்தியா வராமல் இருக்கவும் , அவனுக்கு என்னவாயிற்றோ என்று பதறிப் போய், அங்கயற்கண்ணி டூரிஸ்ட் விசா வாங்கிக் கொண்டு சிங்கப்பூர் போய்ப் பார்த்தவள் அதிர்ந்து போய் விட்டாள்.
முத்துராமனுக்கு சிங்கப்பூரிலும் இன்னொரு குடும்பம் மனைவி குழந்தைகள் என்று இருந்தது. பைத்தியக்காரி மாதிரி அவன் என்றைக்காவது இந்தியா வருவான் என்று தான் காத்திருக்க, அவன் அங்கேயே இன்னொரு குடும்பத்துடன் வாழ்வதைப் பார்த்ததும் உடைந்து சிதறிப் போனாள். அடிப்படை நியாயம் கூட இல்லாத அவனிடம் பேசிப் பிரயோசனமில்லை என்று அடுத்த விமானம் பிடித்து இந்தியாவிற்கு வந்து விட்டாள்.
“அப்பாவோட நம்பிக்கைத் துரோகத்தை அன்புச்செல்வியாலயும் தாங்கிக்க முடியல; அதான் படிப்புல சுணங்கிப் போயிட்டா… நானும் அதக் கவனிக்காம இருந்துட்டேன்….” என்று தன் கதையைச் சொல்லி முடித்தாள் அங்கயற்கண்ணி.
“சரி போனதெல்லாம் போகட்டும்; நீங்க கவலைப் படாதீங்க; அன்புச்செல்விய நான் தேத்திக் காண்பிக்கிறேன்…” என்றாள் தங்கம்மாள் சவாலாக.
வில்லிவாக்கத்துலருந்து தினசரி வந்து போனால் பயணத்துலயே இவள் கலைத்துப் போயிடுவாள் என்றும் படிப்பில் கவனம் செலுத்த முடியாது என்றும் தங்கம்மாள் அபிப்ராயப் பட்டாள்.
அவளின் ஆலோசனைப்படி அன்புச்செல்வியை அங்கயற்கண்ணி குடியிருந்த திருவான்மியூர் பகுதியில் ஒரு அரசாங்க மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பில் சேர்த்து விட்டு அவளை தன்னுடைய வீட்டிலிருந்து பள்ளிக்குப் போய் வர ஏற்பாடுகள் செய்தாள்.
”ஒரு வருஷம் உங்க பொண்ணை நீங்க மறந்திடுங்க , நான் பார்த்துக்கிறேன்…” என்றாள். அப்படியே ஆனது. அந்த வருஷமே அன்புச்செல்வி தொண்ணூறு சதவிகிதத்திற்கும் மேலாக மதிப்பெண் எடுத்து தேறினாள். தொடர்ந்து அரசாங்க பள்ளியிலேயே இப்போது ப்ளஸ் ஒன் படித்துக் கொண்டிருக்கிறாள்.
“என்ன டீச்சர், பேப்பரயே பார்த்துக்கிட்டு இருக்கிறீங்க ; திருத்தத் தொடங்கலயா…?” என்று மையத்தின் சூபர்வைசர் கேட்கவும் தான் நினைவு கலைந்து நிகழ் காலத்திற்கு வந்தாள் அங்கயற்கண்ணி.
இது தற்செயலானதா, அல்லது விதியின் விளையாட்டா என்று தெரிய வில்லை. இதோ தன் செல்ல மகளுக்கு டீ.சி. கொடுத்து அவமானப் படுத்தி அனுப்பிய அடையாறு பள்ளியின் பேப்பர்கள் திருத்துவதற்காக அவளுக்கு முன் விரிந்து கிடக்கிறது. ஃபெயிலாகிப் போவாள் என்று தானே என் பெண்ணிற்கு டீ.சி.கொடுத்து அனுப்பினீர்கள்! இதோ உங்கள் பள்ளியின் எதிர்காலம் என் கையில்; என் பேனாவின் முனையில்… அவளுக்குள் ஒரு வன்மம் கிளர்ந்தது.
கண்ணில் விளக்கெண்ணை விட்டுக் கொண்டு ஒவ்வொரு பேப்பரையும் மிக மிகக் கவனமாக திருத்தத் தொடங்கினாள். சிறு பிழை என்றாலும் தடாலடியாக மதிப்பெண்களைக் குறைத்தாள். இது அவளுடைய இயல்பே அல்ல; பொதுவாய் மதிப்பெண்களை கர்ணபிரபு மாதிரி வாரி வாரி வழங்குவது தான் அவளது வழக்கம் . மாணவர்கள் 25 மதிப்பெண்களை நெருங்கி விட் டாலே, அங்கொன்றும் இங்கொன்றுமாய்ப் போட்டு 35க்குக் கொண்டு வந்து பாஸாக்கி விடுவாள்.
ஆனால் இந்த முறை அப்படிச் செய்யவில்லை. ஐந்து மாணவர்கள் 30,33 என்று பாஸுக்குப் பக்கத்தில் வந்தும், எந்த மாற்றமும் செய்யாமல், எங்கள் பள்ளியில் யாரும் ஃபெயிலாக மாட்டார் களென்று பெருமை பீற்றினீர்களே, இதோ அந்த வரலாற்றை உடைக்கிறேன் என்று மனசுக்குள் கறுவியபடி விடைத்தாள்களைக் கட்டி சூபர்வைசரிடம் ஒப்படைத்தாள் அங்கயற்கண்ணி.
ஆங்கில மீடியம் பள்ளி என்று அலப்பறை பண்ணும் பள்ளி; மாணவர்கள் பள்ளி வளாகத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டுமென்றும் தமிழில் பேசினால் தண்டம் விதிக்கும் பள்ளியில் ஆங்கிலப் பாடத்திலேயே ஐந்து பேர் ஃபெயிலென்றால்….. அது எத்தனை முரண்; அந்த தலைமை ஆசிரியை முகத்தை எங்கு போய் வைத்துக் கொள்வாள்! மனசுக்குள் குரூரமாகச் சிரித்துக் கொண்டாள் அங்கயற்கண்ணி.
“என்ன டீச்சர், அஞ்சு பேர பார்டர்ல ஃபெயிலாக்கி இருக்குறீங்க! நீங்க பொதுவா அப்படிப் பண்ற ஆளு இல்லயே, எத்தனை வருஷமா உங்களப் பார்த்துக் கிட்டு இருக்கிறேன்; இன்னைக்கு என்னாயிருச்சு…” என்று கரிசனமாய்க் கேட்டார் சூபர்வைசர்
“அதெல்லாம் அரை மார்க் போடக்கூட எடமில்ல ஸார்; ஃபெயிலாப் போகட்டும்; அப்பத் தான் அவங்களுக்கெல்லாம் புத்தி வரும்….” என்றாள் வெளத்துடன்.
“வேண்டாம் டீச்சர்; பசங்க பாவம்….யாரு மேலயோ உள்ள கடுப்புல பசங்களோட எதிகாலத்தப் பாழ் பண்ணீடாதீங்க….” என்று அவர் எவ்வளவோ எடுத்துச் சொல்லிய போதும் அவள் பிடிவாதமாய் மறுத்து விட்டாள்.
“அவ்வளவு தான் ஸார்….பேசாம பேப்பர வாங்கிக்குங்க…” என்றாள் மிகவும் கடுமையாக.
கிணறு வெட்டப் போய் பூதம் கிளம்பிய கதையாக, பத்தாம் வகுப்பு பரீட்சை முடிவுகள் வெளியாகி ஓரிரு தினங்களுக்குப்பின் தினப்பத்திரிக்கையில் வந்திருந்த ‘அந்த’ செய்தியை வாசித்த அங்கயற்கண்ணி அலறிவிட்டாள்.

ஆசிரியை தற்கொலை முயற்சி; தன்னுடைய மாணவர்கள் தேர்வில் தோல்வி
அடைந்ததின் எதிரொலி!
சென்னை, மே 23 – அடையாறிலுள்ள மிகப் பிரபலமான தனியார் பள்ளியைச் சேர்ந்த ஒரு ஆசிரியை தன்னிடம் பயின்ற மாணவர்கள் சமீபத்தில் நடந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்ததைத் தாங்கிக் கொள்ள முடியாமல் மனம் உடைந்து தற்கொலைக்கு முயன்று, உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலைமையில் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டிருக்கிறார். இதைப் பற்றி மேலும் கூறப் படுவதாவது:-
இரண்டு தினங்களுக்கு முன்னால் அரசு பள்ளிக் கல்வித்துறை இயக்குனகரம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான மாணவர் தேர்ச்சி முடிவுகளை வெளியிட்டிருந்தது. அதில் அடையாறிலுள்ள மிகப் பிரபலமான தனியார் பள்ளியைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் ஆங்கிலப் பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை என்றும், இதைக் கேள்விப் பட்டதும் அந்தப் பாடத்தைப் போதித்த ஆசிரியை திருமதி தங்கம்மாள் (43) நேற்று முன்தினம் அவருடைய வீட்டிலிருக்கும் போது பூச்சிக் கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் , உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில் சக ஆசிரியை ஒருவரின் மூலம் அருகாமையிலிருந்த அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப் படுவதாகவும் ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.
அடையாறு காவல்நிலைய ஆய்வாளர் பன்னீர் செல்வம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். ஆசிரியையின் தற்கொலை முயற்சிக்கு பள்ளி நிர்வாகம் கொடுத்த கெடுபிடிகளும் அழுத்தமும் காரணமா என்பது விசாரணையின் முடிவில் தெரிய வரலாம்.

அங்கயற்கண்ணிக்கு மனசு பாரமாக வலித்தது. தான் செய்த முட்டாள் தனத்தால் ஒரு அற்புதமான மனுஷியின் உயிரல்லவா போய் விடும் போலிருக்கிறது. கண்டிப்பாக ஃபெயிலாகி விடுவாள் என்று நம்பிய தன்னுடைய மகள் அன்புச் செல்வியை எப்படி பயிற்சி கொடுத்து அவளே ஆச்சர்யப்படும் விதமாக மிக நல்ல மதிபெண்களில் தேர்ச்சி பெற வைத்திருந்தாள். அந்த தங்கம்மாள் டீச்சருக்கா இந்த நிலைமை? அவளுக்கு எதுவும் ஆகியிருக்கக் கூடாது என்று மனசுக்குள் மறுகினாள்.
அன்புச்செல்வியையும் அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்குப் போனபோது தங்கம்மாள் அபாயக் கட்டத்தைத் தாண்டி ஆனால் மிகவும் சோர்ந்து போய் படுத்திருந்தாள். அவளின் படுக்கையைச் சூழ்ந்து கொண்டு சக ஆசிரியைகளும் மாணவர்களும் நிறையப்பேர் நின்று கொண்டிருந்தார்கள். அன்புச் செல்வி ஓடிப்போய் ஆசிரியையின் கைகளைப் பிடித்துக் கொண்டு அழத் தொடங்கவும் “அய்யோ…எனக்கு ஒண்ணுமில்லைடா; ஐயாம் ஆல்ரைட்…” என்று அவளை சமாதானப் படுத்தினாள்.
அங்கயற்கண்ணி அவளுக்கு அருகில் போய் மிக மெல்லிய குரலில் அவளுக்கு மட்டும் கேட்கும் படியாக “ஸாரி டீச்சர்; உங்களோட இந்த நிலைமைக்கு நான் தான் காரணம்…”என்றாள் குற்ற உணர்ச்சி மேலிட.
“அய்யய்யோ, நான் முட்டாள் தனமா ஏதோ பண்ணதுக்கு நீங்க என்ன மேடம் பண்ணுவீங்க; பாஸ் ஃபெயிலெல்லாம் பரீட்சையில சகஜம்னு யோசிக்காம அவசரத்துல ஏதோ பண்ணீட்டேன்; அந்தப் பசங்க பரீட்சையில் பெயிலானத என் டீச்சிங்க்கான தோல்வியா நெனைச்சு ஒரு நிமிஷம் தடுமாறிட்டேன்; அந்தப் பசங்க மறு மதிப்பீட்டுக்கு அப்ளை பண்ணியோ அல்லது அடுத்த மாசமே அரசாங்கம் நடத்துற மறு தேர்வ எழுதியோ பாஸ் பண்ணீடப் போறாங்க; இதக்கூட அந்த நிமிஷத்துல யோசிக்க முடியாமப் போயிடுச்சு…..” என்றாள் விரக்தியாய்.
அங்கயற்கண்ணி தான் வலிந்து மதிப்பெண்களைக் குறைத்துப் போட்டதை விளக்கமாய்ச் சொன்னான். “அந்த பள்ளிக் கூடத்துமேல இருந்த கோபத்துல, உங்க கேரியர்ல கறுப்புப் புள்ளி விழ வச்சு, உயிருக்குமில்ல உலை வைக்கப் பார்த்துட்டேன்…தயவு பண்ணி என்னை மன்னிச்சுடுங்க….” என்று சொல்லி கண் கலங்கினான்.
- முற்றும்

(நன்றி: தினமணிக்கதிர் 26.09.2010)

Monday, September 13, 2010

கல்கியில் எனது கவிதை:

தூக்கம் இழந்த பொம்மைகள்

இரவுகளில்
தரையில் விரிக்கப்பட்ட மெத்தையில்
பொம்மைகள் புடைசூழத் தூங்குவாள்
எங்கள் வீட்டு இளவரசி!

பொம்மைகளுடனான
அவளின் உலகத்தில்
அனுமதியில்லை யாருக்கும்....!

பொம்மைகளுக்கு
அம்மாவைப் போல் ஊட்டி விடுவாள்;

ஆசிரியையாக
பாடம் சொல்லித் சொல்வாள்;

பாட்டியாக தட்டிக் கொடுத்து
கதை சொல்வாள்;

தூங்க மறுக்கும் பொம்மைகளை
அப்பாவாக மிரட்டி உருட்டியும்
தூங்கப் பண்னுவாள்......!

விழிப்புவரும் நடு இரவுகளில்
இளவரசியைத் தேடினால்
மெத்தையிலிருந்து உருண்டுபோய்
வெறும் தரையில் விழுந்து
தூங்கிக் கொண்டிருப்பாள்
தேவதைக் கனவுகளுடன்.....

இவளின் வரவை எதிர்பார்த்து
மெத்தையில் உருண்டு கொண்டிருக்கும்
அவளின் பொம்மைகள்
கொட்டக் கொட்ட விழித்தபடி.......!

(நன்றி: கல்கி 12.09.2010)

Monday, July 12, 2010

கவிதை: உயிர் பிழைத்திருப்பதற்காக....

வீட்டு வாசலுக்கே கொண்டு வந்து
வியாபாரம் செய்யும் கூடைக்காரிகளிடம்
விருப்பத்துடன் வாங்குங்கள்
பேரம் பேசியேனும்
விலை கொஞ்சம் அதிகமென்றாலும்......!
*** *** ***
கையேந்தும் மூன்றாம் பாலினத்திற்கு
காசு போடுங்கள் மறுக்காமல்
அவர்களின் உழைப்பை மறுதலித்த
சமூகத்தின் அங்கம் தானே நாமெல்லாம்.....!
*** *** ***
இரயில் வண்டியின் இரைச்சலையும் மீறி
கூவிக் கூவி விற்கும்
கண்ணொளி இல்லாதவர்களிடம்
கனிவுடன் ஏதாவது வாங்குங்கள்
அவ்வப்போது........
*** *** ***
வழிபாட்டுத் தலங்களுக்குப் போனால்
கடவுளுக்குக் காணிக்கை போடாவிட்டாலும்
வாசலில் காத்திருக்கும்
பிச்சைக் காரர்களுக்கு
ஏதாவது கொடுக்க மறக்காதீர்கள்.....!
*** *** ***
சின்ன இரும்பு வளையத்துக்குள்
உடலைக் குறுக்கி ஒடித்து வளைத்து
சிரமப்பட்டு நுழைந்து
வெளியேறும் சிறுமியும்
கொட்டடித்து குட்டிக்கரணம் போட்டு
வில்லாய் உடல் வளைத்தும்
விளையாட்டுக் காட்டும் சிறுவனும்
தட்டேந்தி வரும்போது
தவறாமல் காசு போடுங்கள்.....!
*** *** ***
சின்னப் பிள்ளைகளின்
இரயில் விளையாட்டைப் போல்
ஒருவர் கொடுக்கை ஒருவர் பிடித்தபடி
நெரிசலினூடே பாடியபடிக்
கடந்து போகும் குருடர்களுக்கு
கண்டிப்பாய் கொடுங்கள் ஏதாவது.....!
*** *** ***
இவர்களெல்லாம்
உலக முதலாளிகளின் வரிசையில்
முதலிடம் பிடித்துவிடப் போவதில்லை;
இன்னும் கொஞ்ச நாள்
உயிர்த்திருக்க அவர்களுக்கு
உதவலாம் உங்கள் பணம்.....!