Saturday, October 25, 2014

ஆனந்த விகடனில் இரண்டு கவிதைகள்


1. அழியாச் சித்திரங்கள்
அம்மாவிடம் பால் குடித்து
உதட்டில் மிச்சமிருக்கும் வெண் துளிகளுடன்
விளையாடத் தவழ்ந்து வரும்
நடைபாதைக் குழந்தையை
துள்ளிக் குதித்து வரவேற்கிறது
தெருவில் அலையும்
பசுவின் கன்றொன்று….!
***     ***     ***
கை நீட்டும் பிச்சைக்காரிக்கு
ஏதும் தர அவகாசமில்லாமல்
மின் இரயிலைப் பிடிக்கும் அவசரத்தில்
கடந்து போகிறவர்களுக்கும்
கைகளை ஆட்டிச் சிரிக்கிறது
பிச்சைக்காரியின் தோளில் தொங்கும்
பச்சிளங் குழந்தை......!
***     ***     ***
செப்பு வைத்து சமைத்து
சிறுகுழந்தைகள் பரிமாறும்
மண் சோற்றை மறுக்காமல்
வாங்கிப் புசியுங்கள்;
நட்சத்திர உணவங்களிலும் கிடைக்காத
அபூர்வ உணவு அது…..!
         ***     ***     ***
சோறு குழம்பு கூட்டென்று
மண்ணைக் குழைத்து பரிமாறி
அவுக் அவுக் என ராகமிட்டு
பாவணைகளில் தின்று முடித்து
சிதறி ஓடும்
நடை பாதைக் குழந்தைகள்
அம்மாவிடம் போய்
அழுகின்றன பசிக்கிறதென்றபடி....!
***     ***     ***
காரை பெயர்ந்திருந்தாலும்
வண்ணங்கள் உதிர்ந்திருந்தாலும்
குட்டிக் குழந்தைகள் குடியிருக்கும்
வீட்டின் சுவர்கள் அழகானவை  
அவை
குழந்தைகளின்
கரும்பென்சில் கிறுக்கல்களால்
ஆசீர்வதிக்கப்பட்டவை …..!
  • நன்றி: ஆனந்த விகடன் 27.08.2014
 
2. தாம்பத்யம்
எனக்கும் அவளுக்குமான
கயிறு இழுக்கும் போட்டி தொடங்கியது
எங்களின் மண நாளிலிருந்து......
ஒருவரை நோக்கி ஒருவர்
இழுத்துக் கொண்டிருக்கிறோம் மூர்க்கமாக
முறுவல்களுடனும் முத்தங்களுடனும்.....
பொதுவான போட்டி விதிகள் எதற்குள்ளும்
பொருந்திப் போவதில்லை எங்களின் விளையாட்டு....
ஒருவரை நோக்கி ஒருவர்
நகர்ந்து விட நேர்கிறது அவ்வப்போது;
ஆயினும் சீக்கிரமே இயல்புக்குத் திரும்பி
இழுவையை தொடர்கிறோம்.....

கை தட்டி ஆரவாரித்தும்
கண்ணீரால் காயப்படுத்தியும்  எங்களை
உசுப்பேற்றி விடுகின்றன  உறவுகளும்….
மையக் கோடு மறைந்தாயிற்று
இழுக்கும் கயிறும் இற்றுக் கொண்டிருக்கிறது;
இருவரின் கைகளிலும் கொப்புளங்கள்
கால்களும் தளர்ந்து போயின.....
இருந்தும் இழுவையின் பிடி மட்டும்
இன்னும் இறுகிக் கொண்டு தானிருக்கிறது.....
வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டு
வெகுதூரம் வந்து விட்டோம்
இலக்குகள் எதுவுமின்றி
பழக்கத்தால் தொடர்கிறோம்;
வெறும் பாவணைகளிலும்.......!
  • நன்றி: ஆனந்த விகடன் 01.10.2014