Sunday, March 19, 2017

கதை சொல்லல் தினத்தில் ஒரு சிறுகதை: கதைகளற்றுக் கடந்து போகும் பால்ய காலங்கள்


பள்ளிக்கு இரண்டு நாளில் சி.இ.ஓ. இன்ஸ்பெக்‌ஷன் இருக்கிறது என்ற செய்தி வந்த போது, அது பியூலாராணியை அவ்வளவாக பாதிக்கவில்லை. வரட்டுமே; அதனால் என்ன! என்றாள் மிகச் சாதாரணமாய். சி.இ.ஓ. வையும் அவருடன் வருகிற ஆசிரிய பட்டாளத்தையும் சமாளிப்பது அப்படி ஒன்றும் சிரம்மான காரியமில்லை அவளுக்கு.
  ப்யூலாராணி ப்ளஸ் ஒன் மற்றும் ப்ளஸ் டூ வகுப்புகளுக்கு கணிதம் கற்றுத் தருகிறாள். இன்ஸ்பெக்‌ஷன் தினத்தில் என்ன பாடம் நடத்துவது; என்ன மாதிரி கேள்விகள் கேட்பது என்கிற நெளிவு சுளிவுகளும் மாணவர்களை தயார் படுத்துகிற சூட்சுமமும் அவளுக்கு அத்துபடி. அவளுடைய பத்து வருஷ சர்வீஸில் இதுமாதிரி எத்தனை இன்ஸ்பெக்‌ஷன்களை ப்பூ என்று ஊதி தள்ளியிருக்கிறாள் அவள்!
     இந்தத் தடவை நமக்கு சி.இ.ஓ.வா ஒரு புதுலேடி வர்றாங்க.... என்றும் போனவாரம் ஒரு தனியார் பள்ளிக்கு போயிருந்தப்ப அந்த ஸ்கூலயே ஒரு கலக்குக் கலக்கிட்டாங்களாம்... என்றும் ஜெய்சிங் சார் சொன்ன போதும் கூட அவள் அலட்டிக் கொள்ளவில்லை.அப்படி என்னத்த சார் கலக்குக் கலக்குன்னு கலக்குனாங்க.... அந்தக் கலக்குக் கலக்குறதுக்கு அதென்ன குலுதாடி தொட்டியா...? என்று எல்லோருக்கும் சிரிப்பூட்டினாள்.
        ”நீங்க வேற மிஸ், சீரியஸ்னஸ் புரியாம பகடி பண்ணிக்கிட்டு இருக்கீங்க...! மத்த சி.இ.ஓ. மாதிரி இவங்க இல்லையாம்; ரொம்ப ஸ்ட்ரிக்டாம். ஸ்கூல்ல தண்ணி கூடக் குடிக்க மாட்டாங்களாம்; வரும்போதே கையோட சாப்பாடு, பிளாஸ்க்குல காஃபி எல்லாம் கொண்டாந்துடுவாங்களாம்... ஸ்கூல்ல எது குடுத்தாலும் சாப்புடுறதில்லையாம்.... திடுதிப்புன்னு ஏதாவது ஸ்கூலுக்குப் போய் நிப்பாங்களாம்; இவங்க புரோகிராம் டிரைவருக்கே கூடத் தெரியாதாம்... வண்டியில ஏறிக் கொஞ்ச தூரம் போன பின்னாடிதான் எங்க போகணுமின்னே சொல்வாங்களாம்...
         அப்படித்தான் ஒரு தடவை, ப்ளஸ் டூ பிராக்டிகல் எக்ஸாம் நடக்குறப்ப, காலையிலேயே ஒரு பிரபலமான ஸ்கூலுக்குப் போயிருக்குறாங்க; இவங்க போயிருந்தப்ப எக்ஸ்டர்னல் ஆபிஸரே வராம, பிராக்டிகல் எக்ஸாம் கனஜோரா நடந்துக் கிட்டு இருந்துருக்கு... ஸ்கூல் நிர்வாகத்துக்கும் எக்ஸ்டர்னல் ஆபிஸருக்கும் ஒரு அண்டர்ஸ்டேண்டிங்குல அவர் எப்பவாவது வந்து ரெக்கார்டுகள்ளயும் பரீட்சப் பேப்பர்லயும் கையெழுத்துப் போட்டுக்குவாராம்..... ஸ்கூல் நிர்வாகத்துக்கு வார்னிங் மெமோ குடுத்து இதுவரைக்கும் நடந்த பிராக்டிகல் எக்ஸாம் மொத்தத்தையும் கேன்சல் பண்ணீட்டு மறுபடியும் புதுசா ஷெட்யூல் போட்டு வேறொரு எக்ஸ்டர்னல் ஆபிஸர அனுப்பி எக்ஸாம் நடத்தச் சொல்லி யிருக்காங்க; பழைய எக்ஸ்டர்னல் ஆபிஸருக்கு ஸ்பாட்லயே சஸ்பன்சன் ஆர்டர் குடுத்துருக்காங்க; நம்ம மாவட்டமே கதிகலங்கிக் கெடக்குதாம் தெரியுமா?
         இன்னும் கேளுங்க; கிளைமாக்ஸே இனிமே தான்; சமீபத்துல இன்னொரு ஸ்கூலுக்கு தன்னோட பேனலோட இன்ஸ்பெக்ஸன் போயிருந்துருக்குறாங்க... இவங்க கூடப் போன ஆசிரியர்கள் எல்லாம் ஆளுக்கொரு வகுப்புக்குள்ள போயி இன்ஸ்பெக்ஸன் பண்ணிக்கிட்டு இருந்துருக்குறாங்க... இவங்க அப்படியே சும்மா வராண்டாவுல உலாத்திக்கிட்டு இருந்துருக்கிறாங்க.... திடுதிப்புன்னு ஒரு வகுப்புக்குள்ள நுழைஞ்சு பார்த்துருக்குறாங்க; பசங்கள் எல்லாம் அமைதியா ஏதோ எழுதிக்கிட்டும் படிச்சுக்கிட்டும் இருந்துருக்கிறாங்க; வாத்தியார் ரெக்கார்டு நோட்டுக்கள திருத்திக்கிட்டு இருந்திருக்கார்....
          என்ன வகுப்பு நடக்குது இங்க...ன்னு சி.இ.ஓ. கேட்க, வாத்தியாரும் பவ்யமா இது மாரல் கிளாஸ் மேடம்; அதான் பசங்கள உருப்படியா ஏதாவது பாடம் படிச்சிக்கிட்டு இருக்கச் சொன்னேன்னு சொல்லவும் மேடத்துக்கு பழியா கோவம் வந்துருச்சாம்... மாரல் கிளாஸுன்னா ஒண்ணும் பண்ண வேண்டியதில்லையா? பசங்களுக்கு நீதி போதணைகள் முக்கியமில்லையா? பரீட்சையில மார்க் எடுக்குறதுக்கு மட்டும் தான் பசங்கள தயார் படுத்துவீங்களா? அவங்கள நல்ல குடிமக்களா உருவாக்க வேண்டியது உங்க கடமை இல்லையா? நம்ம பாடத்திட்டத்துல நீதிபோதணைகளுக்குன்னு எதுக்கு சில வகுப்புகள ஒதுக்கி இருக்குறாங்க; அதெல்லாம் வேலை மெனக்கெட்ட வேலையா....பொரிஞ்சு தள்ளீட்டாங்களாம்.
    அதோட விடாம ஹெட்மாஸ்டர், செக்ரட்டரின்னு மொத்த பள்ளிக்கூடத்தையும் உட்காரவச்சு நீதிபோதணை எத்தனை முக்கியம்னு மூணுமணி நேரம் லெக்சர் குடுத்துட்டு, ஸ்கூல் ரெக்கார்டுல நீதிபோதணை வகுப்பே நடக்கலயின்னு சிவப்பு மையால ரிமார்க் எழுதிட்டுப் போயிட்டாங்களாம்.... அன்னைக்கிலருந்து எந்த ஸ்கூலுக்கு இன்ஸ்பெக்ஸன் போனாலும் மாரல் பீரியட் இருக்கிற வகுப்பத் தேடிப்போயி அங்க இருக்கிற வாத்தியார ஒரு வழி பண்ணீடுறாங்களாம்....”
       ஜெய்சிங் மூச்சு விடாமல் பேசி முடிக்கவும், ப்யூலாராணிக்கும் முதல் முறையாக வயிற்றில் புளியைக் கரைப்பது போலிருந்தது. சி.இ.ஓ. இன்ஸ்பெக்ஸன் வருகிற தினத்தில் அவளுக்கு ஒன்பதாம் வகுப்பிற்கு ஒரு நீதிபோதணை வகுப்பிருந்தது. அவளுடைய பள்ளியிலும் இதுவரை மாரல் வகுப்புகளை யாரும் அவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொண்டதில்லை. அது எப்போதும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஓய்வு மாதிரி; அல்லது அவசர வேலைகள் எதுவுமிருந்தால் அதைக் கவனித்துக் கொள்வதற்கான ஏற்பாடு, அவ்வளவு தான்... பெரும்பாலும் அந்த வகுப்பில் மாணவர்களை வெளியில் போய் விளையாடச் சொல்லி விடுவாள்; வேறு ஆசிரியர் யாராவது பாடம் நடத்த அல்லது பரீட்சை வைக்க என்று கேட்டால் தாராளமாய் தாரை வார்த்து விடுவாள்.
        இதுவரைக்கும் இப்படித் தானிருந்தது. திடீரென்று அந்த வகுப்பிற்கும் தன்னைத் தயார் படுத்த வேண்டுமென்கிற எண்ணமே அவளை வேதணைப் படுத்துவதாய் இருந்தது. என்ன பேசி எப்படி அந்த வகுப்பை சமாளிப்பது என்று ஒரு வழியும் அவளுக்குப் புலப்படவில்லை. தலைமை ஆசிரியரிடம் போய் “ஸார், சி.இ.ஓ. இன்ஸ்பெக்ஸன் வர்ற அன்னைக்கு எனக்கு மாரல் கிளாஸ் ஒண்ணு இருக்கு....” என்று அவள் தொடங்குவதற்குள், “ஆமாமா, நானே உங்கள அழச்சுப் பேசனும்னு நெனச்சிருந்தேன்; நல்ல வேளை நீங்களாகவே வந்துட்டீங்க; எப்பவும் போல அந்த வகுப்புல ஒண்ணும் பண்ணாம இருந்துடாதீங்க; இந்த புது சி.இ.ஓ. மாரல் கிளாசுக்குத் தான் ஸ்பெசலா விசிட் அடிக்குறாங்களாம்... அதால உங்கள நல்லா தயார்ப் படுத்திட்டு வந்து அசத்திடுங்க....” என்றார்.
       ”என்னத்த சார் அசத்துறது, நீங்க வேற! நானே அந்த கிளாஸ எப்படி சமாளிக்கிறதுன்னு பதறிப் போயித்தான் உங்ககிட்ட ஆலோசணை கேக்கலாமின்னுட்டு வந்துருக்கேன்; நீங்கதான் ஒரு வழி சொல்லணும் சார், ப்ளீஸ்....”  என்றாள்.
       ”என்னம்மா, மாரல் கிளாஸுக்குப் போய் இப்படி பயப்படுறீங்க...! நல்லா படிக்கணும்; ஒழுக்கமா இருக்கணும்; நேரந்தவறக் கூடாது; பெரியவங்கள மதிக்கணும்; மாதா, பிதா, குரு தெய்வம்னு நீதிபோதணைகளா சொல்ல வேண்டியது தானம்மா!” என்றார் நிதானமாய் வெற்றிலைக்கு சுண்ணாம்பு தடவியபடி.
           ”முக்கால் மணி நேரத்துக்கு இதையே எப்படி திருப்பித் திருப்பிச் சொல்லிக்கிட்டு இருக்க முடியும் ஸார்; உருப்படியா வேற ஏதாச்சும் சொல்லுங்க சார்...”  பதறினாள் மிகவும் கெஞ்சுகிற தொனியில்.
        ”நேரா நீதிபோதணை சொல்லக் கூடாதும்மா.... முதல்ல ஏதாவது நல்ல கதைகள் சொல்லணும்; அப்புறம் இதுலருந்து பெறுகிற நீதின்னு நல்ல விஷயங்கள மாணவர்கள் மனசுல பதியிற மாதிரி சொல்லணும்; அதான் நீதிபோதணை வகுப்பு....”
         ”அது தெரியும் ஸார் எனக்கும்; இப்ப வகுப்புல சொல்றதுக்கு கதைகள் வேணுமே, அதான பிரச்னையே! உங்களுக்குத் தெரிஞ்ச கதைகள் ஒரு நாலஞ்சு சொல்லுங்க சார், நான் குறிச்சு வச்சுக்கிறேன்...” என்றபடி பேப்பரும் பேனாவுமாய் தயாரானாள் அவள்.
       தலைமை ஆசிரியர் நீண்ட நேரத்திற்கு தீவிரமாய் யோசித்துவிட்டு, “மனசுக்குள்ள நெறைய கதைகள் ஓடுது; ஆனா ஒண்ணு கூட சட்டுன்னு ஞாபகம் வர மாட்டேன்ங்குதும்மா... என்ன செய்யலாம்? நீங்க நம்ம தமிழ் பண்டிட்ட பார்த்துக் கேளுங்க; அவங்களுக்கு நெறையா நீதிக் கதைகள் தெரிஞ்சிருக்கும்....” என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
          ”நீதிக்கதைகளா? அப்படி எதுவும் தெரியாதே எனக்கு; இராமாயாணம், மகாபாபாரதம், சீவக சிந்தாமணி, சீறாப்புராணம்னு செய்யுள்கள் கொஞ்சம் தெரியும். அந்தப் புத்தகங்கள் வேணும்னா தர்றேன்; படிச்சுப் பார்த்து ஒப்பேத்துறியா....?” என்றாள் தமிழ் பண்டிட்.
        ”அதெல்லாம் தான் பசங்களுக்கு சிலபஸுலேயே இருக்கே! அதுக்கு அப்பாற்பட்டு புதுசா ஏதாச்சும் சொல்லுங்க மேடம்....”
    ”நான் பாடப் புத்தகங்களுக்கு வெளியில எதுவுமே வாசிக்கிறதில்லம்மா; இன்னும் சொல்லப்போனா, பாடப்புத்தகங்களயே படிச்சு ரொம்ப நாளாச்சு; எப்பவோ படிச்சத வச்சு ஞாபகத்துலருந்து தான் ஒப்பேத்திக்கிட்டிருக்கேன்.... ம்... பாட்டி வடை சுட்டது; காக்கா கல் பொறுக்கி பானையில் போட்டு தண்ணி குடிச்சது மாதிரியான கதைகள் பரவாயில்லையா?”
         ”அய்யோ, அதெல்லாம் எலிமெண்டரி லெவல் மேடம்; பெரிய பசங்களுக்கு சொல்றது மாதிரி ஏதாவது சொல்லுங்க மேடம்.....”
          ”எனக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான்; சட்டியியில இருந்தாத்தான ஆப்பையில் வரும்.... நீ நம்ம கதிரேசன் சாரைப் போய்ப் பாரு. அவருதான் நம்ம ஏரியாவிலேயே பட்டிமன்றத்துல நம்பர் ஒன் பேச்சாளர்; டீ.வி.யில எல்லாம் அவரோட புரோகிராம் ஒளிபரப்பாகுது..... அவருக்கு இந்தமாதிரி கதைகள் எல்லாம் லட்டு மாதிரி; அப்படியே கொட்டுவார்... நீ வேணுங்குறத அள்ளிக்கிட்டு வந்துடலாம்....” என்றாள் முடிவாக.
         சாப்பிட்டு முடித்து ஓய்வாக பல்குத்திக் கொண்டிருந்த கதிரேசன் ப்யூலா சொன்னதைக் கேட்டு பகபகவென்று சிரித்தார். ”பட்டிமன்றத்துல பாட்டி கதையா? எங்கள வச்சு நீங்க காமெடி கீமடி எதுவும் பண்ணலையே! அங்க நாங்க நீதியும் சொல்றதுல்ல; கதையும் சொல்றதுல்ல; உப்புக்கல்லுக்கும் பெறாத தீர்ப்புதான் சொல்வோம்.... வேணுமின்னா, பத்து நாளைக்கு முன்னால நடந்த பட்டிமன்றத்துல ஒரு பேச்சாளர் சொன்ன கதையச் சொல்றேன், உபயோகப் படுமான்னு பாருங்க....
     வகுப்புல ஒரு வாத்தியார் பாடம் நடத்திக்கிட்டு இருந்தாராம்; அங்க ஒரு மாணவன் பாடத்தக் கவனிக்காம, கிளாஸ்ரூம் மூலையில இருந்த எலிப் பொந்தையே பார்த்துக்கிட்டு இருந்துருக்கான்; அதுக்குள்ள ஒரு எலி நுழைஞ்சுக்கிட்டு இருந்துருக்கு... அந்த நேரம் பார்த்து வாத்தியார் இவன எழுப்பி, தான் நடத்துற பாடம் புரியுதான்னு கேட்குறதுக்காக, என்னப்பா எல்லாம் நுழையுதா...ன்னு கேட்டாராம். பையனும் ரொம்ப சூட்டிகையாஎல்லாம் நுழைஞ்சுருச்சு; இன்னும் வால் மட்டும் தான் நுழையல...ன்னு சொன்னானாம். கதை எப்பூடி...” என்றார் கதிரேசன் சிரித்துக் கொண்டே.
      இதுல நீதி போதணை எங்க சார் இருக்கு?” என்றாள் ப்யூலா அலுத்துக் கொண்டபடி. அவளுக்கு எரிச்சலாக இருந்தது.
       ”இப்படி எங்க நடுவர் மாதிரி எடக்கு மடக்கா கேட்டா எப்படி! எதைக் கவனிக்குறோமோ அதுதான் நுழையுமின்னு எதையாவது சொல்லி சமாளிக்க வேண்டியது தான்; பட்டி மன்றத்துல இது மாதிரி தான் கெடைக்கும்; நாங்களே, தலைப்புக்குச சம்பந்தம் இருக்கோ இல்லையோ, அப்பப்ப வாரப் பத்திரிக்கைகள்ல வர்ற ஜோக்குகள சொல்லி ஒப்பேத்திக்கிட்டு இருக்குறோம்; குரல்வளம் இருக்குறவங்க சினிமாப் பாட்டு பாடுறோம். அவ்வளவுதான். ஜனங்கள் சிரிக்க வைக்கிறது மட்டும் தான் எங்களோட வேலை. அவங்களும் அர்த்தம் இருக்கோ இல்லையோ வஞ்சணை இல்லாம சிரிச்சு எங்கள வாழ வைக்குறாங்க.... இதுல நீதிக்கதைகள் எல்லாம் மைக்ரோஸ்கோப் வச்சுத் தேடுனாலும் கெடைக்காது மேடம். உருப்படியா ஒரு யோசணை சொல்றேன்; பேசாம அன்னைக்கு லீவப் போட்டுட்டு வீட்டுல இருந்துருங்க....என்றார்.
        அப்புறம் “கொஞ்சம் பொருங்க; அவசரப்பட்டு உங்களுக்கு அட்வைஸ் பண்ணீட்ட்ன்னு நெனைக்கிறேன்; அந்தப் பீரியட் எனக்கு ப்ரியா இருந்தா, என்னை ஆக்டிங்னு அனுப்பி இந்த ஹெச்.எம். பழிதீர்த்தாலும் தீர்த்துடுவார்....” என்றபடி தன்னுடைய டைம் டேபிளை எடுத்துப் பார்த்து, அந்த நேரத்தில் தனக்கு வகுப்பிருப்பதை உறுதிப் படுத்திக் கொண்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.
     விடுப்பு எடுப்பது சரியான யோசணையாகத் தான் தோன்றியது. கைவசம் அதிகம் லீவில்லை; சம்பளம் பிடித்தாலும் பரவாயில்லை என்று விடுப்பு எடுத்து விடலாம் தான். ஆனாலும் இன்ஸ்பெக்‌ஷன் தினத்தில் லீவு கிடைப்பது அத்தனை சுலபமில்லை. நிறைய பொய் சொல்ல வேண்டும்; மெடிக்கல் சர்ட்டிபிகேட் கூட சமர்பிக்க வேண்டியிருக்கலாம்; அதற்கு நிறைய மெனக்கிட வேண்டும்; போயும் போயும் ஒரு இன்ஸ்பெக்‌ஷனுக்கு பயந்து கொண்டு விடுப்பு எடுப்பதாவது என்று தன் தன்மானம் தடுக்க... நூலகத்திற்குள் ஓடினாள்.
       அங்கு பஞ்சதந்திரக் கதைகள், தெனாலிராமன் கதைகள் என்று ஏதாவது கிடைத்தால், அதை எடுத்துக் கொண்டு வந்து சமாளித்து விடலாம் என்று நினைத்துக் கொண்டாள். நூலகர் மாரிமுத்து டேபிளில் தலைவைத்து குறட்டை விட்டுக் கொண்டிருக்க, முகத்தைச் சுற்றிலும் ஜொள் குளம் கட்டி நின்றது. இவள் சத்தங் கொடுக்கவும் பதறி விழித்து, பார்வையாலேயே “என்ன?” என்று வினவினார்.
       ”இங்க சிறுவர் நீதிக் கதைகள் சம்பந்தமான் புக்ஸ் ஏதாச்சும் இருக்குமா?” என்றாள் ப்யூலா.
      ”அப்படி எதுவும் பார்த்த ஞாபகம் எனக்கில்ல; இந்த நூலகம் தொடங்குன புதுசுல நீங்க சொல்றது மாதிரியான புக்ஸ் நெறையவே இருந்துச்சு... யாருமே புரட்டிக்கூட பார்க்காத்தால கரையான் அரிச்சு, ரொம்ப டேமேஸ் ஆயிட்டதால எல்லாத்தையும் டிஸ்போஸ் பண்ணியாச்சு.... நீங்க எதுக்கும் ரேக்குல தேடிப் பாருங்க; தப்பித் தவறி ஏதாவது அகப்படலாம்....” என்றபடி தன் தூக்கத்தை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார்.
  ரேக்குகளை ஆராய்ந்தபோது, அறிவியல் புத்தகங்களும், பாடப் புத்தக மாதிரிகளும், வினாத்தாள் பைண்டிங்குகளுமே அதிக மிருந்தன. அவற்றுடன் சிவசங்கரி, அகிலன், கல்கி, லட்சுமி, ஜெயகாந்தன் போன்ற எழுத்தாளர்களின் பெரிய பெரிய கதைப் புத்தகங்களும் கொஞ்சமிருந்தன. இவள் கதைப் புத்தகங்கள் வாசிக்கிற ரகமில்லை; அத்தனை பெரிய புத்தகங்களை வாசித்து அவசரத்திற்கு குறிப்பெடுப்பது சாத்தியமில்லை; மேலும் அவற்றிலிருந்து சிறுவர்களுக்கான நீதிபோதணைகள் கிடைக்குமென்கிற நம்பிக்கையும் அவளுக்கில்லை. டேபிளில் சிதறிக் கிடந்த தினசரி மற்றும் வாராந்திரிகளையும் ஒரு புரட்டுப் புரட்டினாள். எல்லாவற்றிலும் சினிமா, அரசியல், சின்னத்திரை சம்பந்தப்பட்ட அக்கப்போர்களும், கிசுகிசுக்களும், வாசகனை கிச்சுக்கிச்சுமூட்டும் செய்தி விமர்சன்ங்களும், கிளுகிளுப்பூட்டும் கதைகளுமே பொங்கி வழிந்தன.
        வீட்டிற்கு வந்தபோது வராண்டாவில் ஜானி சுருண்டு படுத்துக் கிடந்தான். பாவமாக இருந்த்து. அவசரமாய்க் கதவைத் திறந்து, பாலைக் காய்ச்சி அவனை எழுப்பி பாலும் பிஸ்கெட்டும் கொடுத்தாள். சாப்பிட்டதும் வீட்டுப் பாடம் எழுத உட்கார்ந்து விட்டான். இவனை பராமரிக்க்க் கூட அவகாசமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறோமே என்று தன்னிரக்கம் சூழ்ந்தது. இவனுக்கு ஒரு நாளாவது கதை சொல்லி இருக்கிறோமா? நிலா காட்டி சோறூட்டி இருக்கிறோமா?
      இவனிடம் பேசிப் பார்த்தால் ஏதாவது கதைகள் கிடைக்குமா? இவனுடைய பள்ளியிலாவது சொல்லித் தந்திருப்பார்களா? அவனைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டு “ ஜானிக் கண்ணு; உனக்கு கதை ஏதாச்சும் தெரியுமா? உங்க டீச்சர் கதை எதுவும் சொல்வாளா?” என்று கொஞ்சினாள்.
      ”இல்ல மம்மி; எப்ப்ப் பார்த்தாலும் படி, எழுதுன்னு விரட்டிக் கிட்டுத் தான் இருப்பாங்க; வெளையாடக் கூட விட மாட்டாங்க; கதை எல்லாம் சொன்னதே இல்ல; பாரு எவ்வளவு வீட்டுப் பாடம் குடுத்துருக்காங்க....” என்றபடி அவன் தன்னுடைய பாடங்களை முடிப்பதில் மூழ்கினான். இந்த்த் தலைமுறையில் சிறுவர்களாய் இருப்பது கூட பெரிய தண்டணைதான் என்று அவளுக்குத் தோன்றியது. வீட்டில் கதைகள் சொல்ல தாத்தா பாட்டிகள் யாருமில்லை; அம்மா அப்பாக்களுக்கு அதற்கெல்லாம் அவகாசமிருப்பதில்லை. பள்ளிகளிலும் பாடங்களைத் தவிர்த்து வேறெதுவும் கிடைப்பதில்லை. பிள்ளைப் பிராயம் பெரிய சாபம் தான்.
       ப்யூலாவிற்கு அவளின் பால்யம் ஞாபகத்திற்கு வந்தது. அவளின் அம்மாவும் அப்பாவும் வேலைக்குப் போகிறவர்களாக இருந்ததால் இவளை தாத்தா, பாட்டியிடம் விட்டு வைத்திருந்தார்கள். கிராமத்தில் எங்கு பார்த்தாலும் கதைகளாகவே இறைந்து கிடந்தது. பாட்டியிடம் கதை கேட்காமல் இவள் தூங்கியதே இல்லை. வெளியூருக்கு எங்கும் போனால் தாத்தா இவளைத் தோளில் தூக்கி வைத்துக் கொண்டு கதைகள் சொல்லியபடி நடந்து போவார். தூரமே தெரியாது.காடு, கழனிகளுக்குப் போனாலும் அங்கும் வேலை செய்யும் பெண்களின் வாயிலிருந்து பொரணிகள் பேசித் தீர்ந்த்தும் கதைகள் கொட்டத் தொடங்கி விடும்.
      பள்ளிகளிலும் மாதம் ஓரிரு முறைகள் எல்லா வகுப்பு மாணவர்களையும் ஒன்றாக உட்கார வைத்து ஏதாவது ஆசிரியர் கதை சொல்லத் தொடங்கி விடுவார். இது போக ஊரிலிருக்கும் கிழவர்களுக்கு பொழுது போக வில்லை என்றால் தெருப் பிள்ளைகளையெல்லாம் கூட்டி இராமாயாணம், மகாபாரதம், நல்லதங்காள், அல்லி அரசாணி மாலை என்று விதவிதமாய் கதைகள் சொல்லத் தொடங்கி விடுவார்கள். அவையெல்லாம் மிகவும் இனிமையான நாட்கள். ஆனால் கிராமத்தில் அவள் ஐந்தாவதை முடித்ததும்,  தொடர்ந்து அவளை கிராமத்தில் தாத்தா பாட்டியிடம் விட்டு வைத்திருந்தால் பெரிய மக்குப் பிள்ளையாக வளர்ந்து விடுவாள் என்று அவளை வேரோடு பிய்த்துக் கொண்டு போய் தொலை தூரத்தில் ஒரு ரெசிடென்சி ஸ்கூலில் போய் பதியம் போட்டார்கள். அன்றிலிருந்து அவளுக்கும் கதைகளுக்குமான உறவறுந்து போனது. பால்யத்தில் கேட்ட கதைகள் யாவும் அவளின் ஞாபகத்திலிருந்தும் அனேகமாக அழிந்து போயின.
  வானொலியில் ஏதாவது கிடைக்குமா என்று தேடியதில் அங்கு டெலிபோன் அரட்டைகளும், சினிமாப் பாட்டுக்களும் நிரம்பி வழிந்தன. டீ.வி.யில் சேனல் சேனலாய்த் தாவியதில் மெகா சீரியல்களின் அதீத கண்ணீரும், பெண்ணடிமை பேணுகிற இம்மாரல் விஷயங்களும், சிறுவர் நிகழ்ச்சிகளிலோ வயசுக்கு சம்பந்தமில்லாத வாண்டுகளின் லூட்டிகளும், எல்லாவற்றையும் வாங்க வைத்து விட வசீகரிக்கும் ஆபாச விளம்பரங்களும், சேனல்களின் அரசியல் சார்புகளுக்குத் தக்கபடி சாயம் பூசிக்கொண்ட செய்திகளும், காதலைத் தவிர்த்து வாழ்வில் வேறெதுவுமே இல்லை என்று ஸ்தாபிக்கும் சினிமாக்களும்.... அவளுக்கு குமட்டலெடுத்த்து.
       ப்யூலாராணியின் புருஷன் ஒரு புத்தகப் பிரியன். அவ்வப்போது இவள் கேள்வியே பட்டியிராத சிறுபத்திரிக்கைகளில் கவிதைகளும் கதைகளும் எழுதுபவன். அவனுடைய புத்தக பீரோவைக் குடைந்ததில், திருப்பித் திருப்பி வாசித்தாலும் மண்டைக்குள் அர்த்தம் புகாமல் எதுக்களிக்கும் சிக்கலான வார்த்தைக் குவியல்களினான இலக்கிய பத்திரிக்கைகளும், அதே மொழி நடையிலான அங்கங்கே ஆபாசம் தூவிய தடித் தடியான நாவல்களும், கட்டுரைத் தொகுப்புகளும் தூசும் ஒட்ட்டையும் நிறைந்து..... அவளுக்கு மூச்சுத் திணறியது. அவசரமாய் மூடி விட்டாள். வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பிய புருஷனிடம் மெதுவாய்க் கேட்டாள்.
        ”இவ்வளவு புக்ஸ் படிக்கிறீங்க; அப்ப்ப்ப பத்திரிக்கைகள்ல எழுத வேற செய்றீங்கள்ல.... எனக்கு நாளைக்கு ஒரு முக்கால் மணி நேரத்துக்கு ஒப்பேத்துறது மாதிரி நீதிக் கதைகள் ஏதாச்சும் சொல்லுங்களேன்.....”
     ”நீதி சொல்றது இலக்கிய வாதியோட வேலை இல்லையே! நான் படிக்கிற , எழுதுற கதைகள்ல எல்லாம் கலை இருக்கும்; அனுபவம் இருக்கும்; நீ தேடுற நீதி எதுவும் இருக்காதே!”
    ”சும்மா சமாளிக்காம ஏதாவது உருப்படியா சொல்லிக் குடுங்க் ப்ளீஸ்... எதுவும் கிடைக்கலின்னா, இராத்திரி என்னால தூங்கவே முடியாதுங்க. இப்பவே தலையெல்லாம் வலிக்குறாப்புல இருக்குங்க...!” என்றாள் அழுது விடுகிற தொனியில். ”அது உன்னோட பிரச்னை; அதுக்கு நானென்ன பண்ண முடியும்...!” என்று ஆங்கிலத்தில் சொல்லி விட்டு ஒரு தடிமனான புத்தகத்தை விரித்து வைத்துக் கொண்டு வாசிக்கத் தொடங்கி விட்டான்.
          ப்யூலா பயந்தபடியே அவள் நீதி போதணை வ்குப்பிலிருந்த போது சி.இ.ஓ. இவளுடைய வகுப்புக்குள் நுழைந்து விட்டாள். ப்யூலா தன்னுடைய பால்யம் கதைகளால் சூழ்ந்திருந்த்தையும் இப்போதைய குழந்தைகளின் வாழ்க்கை கதைகளற்று வறண்டு போய் விட்டதையும், தான் கதைகள் தேடி அலைந்த்தையும் ஒரு கதை மாதிரி சொல்லி கொஞ்ச நேரத்தை ஒப்பேற்றிவிட்டு, மாணவர்களை நோக்கி, “உங்களுக்குத் தெரிஞ்ச கதைகள் ஏதாச்சும் சொல்லுங்க...” என்றாள் சமயோசிதமாக.
    மணிகண்டன் எழுந்து நிற்கவும் ப்யூலாவிற்கு பதட்டமாகி விட்ட்து. இவன் மக்கு மாணவனாயிற்றே! கிணறு வெட்ட பூதம் கிளம்பும் போலிருக்கிறதே! என்னத்தைச் சொல்லி மானத்தை வாங்கப் போகிறானோ என்று திகிலில் உறைந்து நின்றாள். இனி ஒன்றும் செய்வதற்கில்லை. ஆசையாய் எழும்பியவனை உட்காரச் சொல்ல முடியாது. அவனையே கொஞ்ச நேரம் குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருந்தாள். அதற்குள் சி.இ.ஓ.வே “ம்... சொல்லுப்பா...” என்றாள்.
     ”ரொம்ப நாளாவே என் மனசுல ஒரு விஷயம்  உறுத்திக்கிட்டு இருக்கு மிஸ்; அதுக்கு நீங்கதான் ஒரு தீர்வச் சொல்லணும்.... சின்ன வயசுல நானொரு கதை படிச்சுருக்கேன். அந்தக் கதை என்னன்ன்னா, ஒரு சின்னப்பையன் ஒரு பொருள் வாங்கப் போகும் போது, கடைக்காரர், கவனக் குறைவா, அவனுக்குத் தர வேண்டிய மீதிச் சில்லரையை விட கொஞ்சம் அதிகமாக் குடுத்துருறார்; அதை அந்தப் பையன் தனக்குன்னு வச்சுக்கனும்னு சொல்ல, அவங்க அம்மா அது தப்புன்னு சொல்லி, அதிகப்படியான பணத்த கடைக்காரர்கிட்டயே திருப்பிக் குடுத்துட்டு வரச் சொல்றாள். அவனும் அப்படியே பண்றான். நேர்மையின் முக்கியத்துவத்தை உணர்த்துறதுக்காக இந்தக் கதை சொல்லப் பட்டுருக்குன்னு புரிஞ்சுக்கிட்டேன்.
        சமீபத்துல அச்சு அசல் இதே மாதிரி நிஜமாவே என்னோட வாழ்க்கையில ஒரு சம்பவம் நடந்துச்சு மிஸ். நான் ஒரு 12ரூ.க்கு நோட்டு ஒண்ணு வாங்கீட்டு 50ரூ. குடுத்தேன். கடைக்காரர் ஏதோ ஞாபகத்துல நான் குடுத்தது 100ரூ.ன்னு நெனச்சுக்கிட்டு மீதிச்சில்லரையா 38ரூ.க்குப் பதிலா 88ரூ. குடுத்தார். நானும் கவனிக்காம நான் கணக்குல கொஞ்சம் வீக்கு மேடம் அப்படியே வாங்கீட்டுப் போயி அம்மாகிட்டக் கொடுத்தேன். அவங்க இதைக் கண்டுபிடிச்சு, அதிகப் படியான 50ரூ.யை கடைக்காரர் கிட்டவே திருப்பிக் குடுத்துட்டு வரச் சொன்னாங்க....
        நானும் சரின்னு குடுத்துடலாமின்னு போகுறப்ப, அப்பா ஹால்ல உட்கார்ந்து ஆடிட்டர் அங்கிள்கிட்டப் பேசிக்கிட்டு இருந்ததக் கேட்டேன். 15 இலட்ச ரூ.யெல்லாம் டேக்ஸா கட்ட முடியாது. இன்னும் கணக்கு வழக்குகளை அட்ஜஸ்ட் பண்ணி, அதிக பட்சம் 5இலட்ச ரூ.க்குள்ள டேக்ஸ் வர்றது மாதிரி கணக்கெழுதும் படியும் வேணுமின்னா ஒரு இலட்சம் ரூ.யைக் கோயில் உண்டியல்ல போட்டுடலாமின்னும் சொல்லிக்கிட்டு இருந்தார். எனக்கு முதல் தடவையா நேர்மை பத்தி சின்னக் குழப்பம் வந்துச்சு.....
         சரி, அது ஏதோ பெரியவங்க சமாச்சாரமின்னு நெனச்சுக்கிட்டு நான் பணத்தத் திருப்பிக் குடுக்க கடைக்குப் போனேன்; கடையில என் வயதொத்த பொண்ணு கூட கடைக்காரர் சண்டை போட்டுக்கிட்டு இருந்தார். என்ன விஷயமின்னா, அந்தப் பொண்ணு இவர் கடையில கொஞ்ச நேரத்துக்கு முன்னால தான் 35ரூ.க்கு பேனா ஒண்ணு வாங்கியிருக்கு; பேக்கிங்கே பிரிக்காம வீட்டுக்கு எடுத்துட்டுப் போய் பிரிச்சுப் பார்த்தப்பதான் அது ரிப்பேரான பேனான்னு தெரிஞ்சுருக்குது. இப்ப கடைக்காரர் பேனாவ மாத்திக் குடுக்க மறுக்குறார். அந்தப் பொண்ணுதான் போற வழியில பேனாவ கீழ போட்டு ஒடைச்சிட்டு இப்ப வந்து புதுப்பேனா கேட்குறதா சொல்லி, பேனாவ மாத்திதர அவர் வம்படியா மறுத்திட்டார். அந்தப் பொண்ணும் வேற வழியில்லாம அழுதுகிட்டே திரும்பிப் போயிடுச்சு; அந்தக் கடைக்காரர் முகத்துல, ஒரு பழுதுல்ல பேனாவ ஒரு அறியாச் சிறுமி தலையில கட்டிட்ட பெருமையை நான் கண்கூடாப் பார்த்தேன்....
        எங்க அப்பா, அரசாங்கத்துக்கு வரியா கட்ட வேண்டிய பணத்த அமுக்கிக்கிட்டு, ஒரு சிறு தொகைய கோயில் உண்டியல்ல போடுறது மூலம் தன் குற்ற உணர்ச்சிய மழுப்பிக்கிடுறார். எங்க அம்மா என்னடான்னா, வெறும் 50ரூ. கடைக்காரர் அதிகம் தந்தத திருப்பித் தரச் சொல்லீட்டு, இலட்சக் கணக்குல வரி ஏய்ச்சு மோசடி பண்ற அப்பாவ கண்டுக்கவே இல்ல; கடைக்காரர் ஒரு மோசமான பேனாவ ஒரு சின்னப் பொண்ணு தலையில கட்டி ஏமாத்துறார்.
     நேர்மைங்குறதுக்கு என்னதான் அர்த்தம் மிஸ்? எங்க அப்பா, அந்தக் கடைக்காரர்னு யாருமே அவங்க சின்ன வயசுல அந்தக் கதைய வாசிக்கலையா? இல்ல நேர்மைங்குறது காலத்துக்குக் காலம், மனுஷருக்கு மனுஷர், வயசுகளுக்குத் தக்கபடியெல்லாம் மாறுபடுமா மிஸ்! தயவு பண்ணி எனக்கு வெளக்கிச் சொல்லுங்களேன்.....” பரிதாபமாகப் பார்த்தான் மணிகண்டன்.
     சி.இ.ஓ. கை தட்டினாள். அவன் தோளில் தட்டி, “வெரிகுட்...” என்றாள். அப்புறம் கடைக்காரர் உனக்கு அதிகப்படியா குடுத்த 50ரூ.யை திருப்பிக் குடுத்தையா, இல்லையான்னு இன்னும் நீ சொல்லவே இல்லையே!” என்றாள் ஆர்வம் பொங்க.
        ”நீங்களே, சொல்லுங்க மிஸ்; நான் திருப்பிக் குடுக்கணுமா, தேவையில்லையா” என்று கேட்டான். சி.இ.ஓ. மாணவர்களை நோக்கி இந்தக் கேள்வியை வீசினாள். திருப்பித் தந்திருக்க வேண்டுமென்று மூன்று பேர்கள் மட்டும் கை தூக்கினார்கள். மற்ற முப்பத்தெட்டுப் பேரும் திருப்பித்தர தேவையில்லை என்றார்கள்.
           ”சரி நீ என்ன பண்ணுன?” என்றாள் சி.இ.ஓ. மணிகண்டனிடம்.
       ”நான் 35ரூ.யை அந்தப் பொண்ணத் தேடிப் போய்க் குடுத்து வேறொரு பேனா வாங்கிக்கச் சொன்னேன்; மிச்ச 15ரூ.யை நானே வச்சுக்கிட்டேன்.....” என்றான் மணிகண்டன். சக மாணவர்கள் எல்லோரும் கை தட்டினார்கள். “வெரி பிரில்லியண்ட் பாய்....” என்றபடி சி.இ.ஓ. அறையை விட்டு வெளியேற ப்யூலாராணி பிரமித்து நின்றாள்.



-- முற்றும்

கதை சொல்லப் போகிறேன்

இன்று கதை சொல்லல் தினம். கதை சொல்லல் தினத்தைப் பற்றி கதை சொல்லப் போகிறேன்.

மார்ச்சு 20 : உலகக் கதை - சொல்லல் தினம்
                        
 முதன் முதலில் 1991-ல் ஸ்வீடன் நாட்டில் தான் வருஷத்தின் ஒரு நாளை கதை-சொல்லல் தினமாக கொண்டாடத் தொடங்கினார்கள். ஆனால் ஏனோ ஒரு சில ஆண்டுகளிலேயே அப்படிக் கொண்டாடுவதை அவர்கள் நிறுத்தி விட்டார்கள். 1997-ல் அது மேற்கு ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயிர்பெற்றது.
                     ஏறக்குறைய இதே காலக்கட்டத்தில் தான் தென்-அமெரிக்க நாடுகள், மெக்சிகோ மற்றும் அதைச் சுற்றியுள்ள நாடுகளிலும் கதை சொல்லல் தினத்தை தேசிய அளவில் கொண்டாடும் வழக்கம் உருவாயிற்று.  2001 - 2003 காலகட்டத்தில் அது நார்வே, டென்மார்க், பின்லாந்து, மற்றும் எஸ்டோனியா போன்ற நாடுகளுக்கும் பரவி, மிக விரைவிலேயே கனடா மற்றும் உலகின் பிற நாடுகளிலும் கொண்டாடத் தொடங்கினார்கள்.
                    2005 ஆம் ஆண்டிலிருந்து தான் இந்நிகழ்வு அகில உலக அளவில் ஒரு தினமாக அங்கீகாரம் பெற்று, மார்ச் 20ந் தேதியை கதை-சொல்லல் தினமாக இன்று உலகம் முழுதும் கொண்டாடி மகிழ்கிறது. இந்நாளில் உலகிலுள்ள ‘கதை சொல்லிகள்’ அனைவரும் ஒன்றிணைந்து பல ‘கதை சொல்லல்’ சார்ந்த நிகழ்வுகளை மக்களிடையே நிகழ்த்தி, அவர்களை சந்தோஷப் படுத்துகின்றனர்.
                   ஒவ்வொரு ஆண்டும் கதை சொல்லல் தினத்திற்காக ஒரு மையக் கருத்து (THEME) உருவாக்கப் படுகிறது. அதை ஒட்டியே கதை சொல்லும் நிகழ்வுகள் அமைத்துக் கொள்ளப் படுகின்றன.
                2005ஆம் ஆண்டின் மைககருத்து இணைப்புப் பாலங்களாகவும் (BRIDGES), 2008ல் அது கனவுகளாகவும் (DREAMS), 2010ல் ஒளியும் நிழலுமாகவும் (LIGHT AND SHADOW), 2011ல் தண்ணீராகவும் (WATER), இந்த வருஷம் - 2017ல் அது உருமாற்றம் (TRANSFORMATION) என்பதாகவும் இருக்கிறது.                                      ஆழி சூழ் உலகை ஆளும் நம்முடைய மனிதகுல வரலாறு என்பது பெரிதும் கதைகளால் சூழப்பட்டது. மனிதன் சைகைளிலும் உடல் மொழியினாலும் பேசத் தொடங்கிய நாளிலிருந்தே அவன் கதைகளை உருவாக்கி பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளத் தொடங்கியிருக்க வேண்டும்.
                     எழுத்துக்களும் அதைப் பதிந்து வைப்பதற்கான சாதனங்களும் உருவாவதற்கு முந்தைய கால கட்டத்தில் எல்லா தகவல்களையும் நினைவில் வைத்திருப்பதற்கும் அவற்றைப் பரப்புவதற்கும் மனிதன் கதைகளைத் தான் பெரிதும் நம்பினான். வாய்மொழிக் கதைகளால் தான் மனிதன் போர்ச் செய்திகளையும், அதன் வெற்றி தோல்விகளையும் அரசர்களின் வீர பிரதாபங்களையும் மேலும் பல தகவல்களையும் பரப்பினான்.
                ஏனென்றால் வெறும் செய்தியாகவோ அல்லது தகவலாகவோ இருந்தால் அவற்றை நீண்ட காலத்திற்கு மனித மூளையால் நினைவில் வைத்திருக்க முடியாது. அதிலேயே கொஞ்சம் புனைவைக் கலந்து கதைகளாக்கி விட்டால் அதைக் கேட்பவர்களால் ஆயுசுக்கும் மறக்க முடியாது இல்லையா? மேலும் அதில் ஒவ்வொருவரும் தங்களின் கற்பனைக் கைச்சரக்குகளையும் கலந்து மற்றவர்களுக்குக் கடத்தும் போது புதிய புதிய கதைகளும் உருவாகின்றன.
                 உலகில் தான் எத்தனை விதமான கதைகள்! நல்லொழுக்கத்தைக் கற்பிக்க கதைகள்! நீதியை உணர்த்துவதற்கும் கதைகள்! குகை ஓவியங்களில் கதைகள்! கூத்தில் கதைகள்! நாடோடிப் பாடல்களிலும் கதைகள்!  இப்படி மனிதன் தன்னுடைய சந்தோஷத்திற்காக உருவாக்கி  உலவ விட்ட எல்லாக் கலைகளிலும் தவிரவும் புராணங்கள், இதிகாசங்கள், மத நூல்கள் போன்றவற்றிலும் கதைகளே நிரம்பி வழிகின்றன.
                        இந்தியாவைக் கதைகளின் தேசம் என்று சொன்னால் அது மிகை இல்லை. இங்கு உருவான எத்தனையோ கதைகள் யாத்ரீகர்கள், நாடோடிகள், வணிகர்கள் மற்றும் பிழைப்புத் தேடிப் போனவர்களின் மூலம்
கிரேக்கம், ஆப்பிரிக்கா, சீனா போன்ற பல தேசங்களுக்கும் பரவி இன்றும் அவை அங்கு உயிர்த்திருக்கின்றன.  
                   பிற தேசங்களிலிருந்தும் கோடிக்கணக்கான கதைகள் எந்தவிதமான பாஸ்போர்ட், விசா பிரச்னையையும் சந்திக்காமல் இந்தியாவிற்குள்ளும் ஊடுருவி இருக்கின்றன. கதைகள் மட்டும் மிகச் சுலபமாக தேச எல்லைகளை கடந்து விடுகின்றன என்பது தான் நிஜம்.
                அன்றைய பெருங்கதைகளின் காலத்திலிருந்து இன்றைய நாவல்கள், சிறுகதைகள், குறுங்கதைகள், மைக்ரோ கதைகளின் காலகட்டம் வரையிலும் அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியாக மனித மூளையிலிருந்து கதைகள் பெருகி வழிந்து கொண்டே தான் இருக்கின்றன.
                        தமிழில் எல்லா வகையான கதைகளும் கொட்டிக் கிடக்கின்றன. இங்கு அற்புதமான கதை சொல்லிகளுக்கும் பஞ்சமே இல்லை.
                        இரண்டு கதை சொல்லிகளைப் பற்றி இன்றைய நாளில் சுருக்கமாக நாம் அறிந்து கொள்ளலாம். ஒருவர் கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் என்னும் கிராமத்தைச் சேர்ந்த கி.ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் அவர்கள். தொன்னூற்று ஐந்து வயதைத் தொட்டுக் கொண்டிருக்கும் இளைஞர். கரிசல் இலக்கியத்தின் முன்னெத்தி ஏரோட்டி தனக்குப் பின்னால் பலரை உருவாக்கியவர். 
                      கி.ரா. ஒரு தேர்ந்த கதை சொல்லி. தன்னுடைய நாற்பது வயதுக்கப்புறம் தான் அவர் கதைகளை எழுதத் தொடங்கினார். அவர் இயல்பில் ஒரு விவசாயி. ‘நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கினேன். அப்போதும் பாடங்களைக் கவனிக்காமல் மழையையே ரசித்துக் கொண்டு இருந்துவிட்டேன்’ என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொள்பவர். எட்டாம் வகுப்பு வரை தான் படித்திருக்கிறார். ஆனால் அவருடைய கதை சொல்லும் திறனால் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றிய பெருமைக்குரியவர்.
                        கிராவின் பெரும்பாலான சிறுகதைகளும் நாவல்களும் குறுநாவல்களும் வாய்மொழி மரபில் உலவி வந்த கதைகளின் எழுத்து வடிவங்களே. கழனியூரான் என்னும் இன்னொரு கிராமத்து எழுத்தாளருடன் சேர்ந்து கிராமத்தின் வாய்மொழிக் கதைகளைத் தொகுத்து எழுத்து வடிவத்தில் கொண்டு வந்திருக்கிறார்.
                          பாலியல் கதைகளையும் வயது வந்தவர்களுக்கு மட்டும் என்ற பெயரில் தொகுத்தளித்திருக்கிறார். கிராமத்தில் புழக்கத்தில் இருக்கும் வட்டார வழக்குகளுக்கு ஒரு அகராதியையும் தயாரித்திருக்கிறார். தற்போது புதுச்சேரியில் தன்னுடைய மனைவியுடன் வாழ்ந்து வருகிறார்.
                        கி.ரா. கிராமத்து கதைகளை சொல்பவர் என்றால் தமிழின் நவீன கதைகளைத் தன்னுடைய குரலில் சொல்லி பதிவுசெய்து வருபவர் பவா செல்லத்துரை என்னும் கதை சொல்லி. திருவண்ணாமலையைப் பூர்வீகமாகக் கொண்டவர். அரசு வேலையை உதறிவிட்டு இலக்கியம், கதை சொல்லல், பதிப்பகம் என்று இயங்குபவர்.
                    பத்தாம் வகுப்புப் பரீட்சை விடுமுறையில் உறவுகள் பேசுகிறது என்னும் நாவலை எழுதி அது தீபஜோதி என்னும் மாத இதழில் திருவண்ணாமலை முழுவதும் இளம் எழுத்தாளர் பவாசெல்லத்துரையின் நாவல் என்று போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டு வெளி வந்திருக்கிறது.
               பள்ளியில் படிக்கும் போதே நாவல் வெளி வந்து விட்டதில் பெருமை பொங்கி அதுவே தன்னை திமிர்ப் பிடித்தவனாக அலைந்து திரிய வைத்தது என்றும் அந்தக்காலம் தான் சந்தோஷங்களைப் பறி கொடுத்த காலம் என்றும் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருக்கிறார் பவா செல்லத்துரை.
                   பவா செல்லத்துரை சிறந்த கவிஞர், பேச்சாளர், சிறுகதை எழுத்தாளர், பதிப்பாளர் என்று பன்முகத் திறமைகள் கொண்டவர் என்றாலும் அவரின் கதை சொல்லும் திறன் தான் மிகவும் பிரதானமான பங்கு வகிக்கிறது. கதை சொல்வதற்காகவே இலக்கிய இரவுகளை உருவாக்கியிருக்கிறார். முற்றம், டயலாக் போன்ற இலக்கிய அமைப்புகளையும் தொடர்ந்து நடத்தி வருகிறார்.
              சமீபத்தில் பவா செல்லதுரை பற்றிய ஆவணப்படம் ஒன்று பவா என்னும் கதைசொல்லி என்கிற பெயரில் வெளியாகி இருக்கிறது. ஆவணப்படத்தை மூத்த வலைப்பதிவரான செந்தழல் ரவியும், எஸ்கேபி கருணாவும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ஆர்ஆர் ஸ்ரீனிவாசன் இயக்கியிருக்கிறார்.
                        மிகவும் சுவாரஸ்யமான அந்த ஆவணப்படம் கதை சொல்லுதல் என்கிற கலையின் அழகை, அது தரும் மகிழ்ச்சியை அதற்கான அவசியத்தை உணர்த்துவதாக இருக்கிறது. அந்த ஆவணப் படத்தில் வேட்டை மற்றும் முதல்மதிப்பெண் பெற்ற தோழியின் கதையும் பவா செல்லத்துரையின் ஆர்பாட்டமில்லாத குரலில் எளிய மொழியில் மிகவும் சிறப்பான முறையில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
                        என்னுடைய பால்யம் கிராமத்தில் கழிந்தது. அங்கு எங்கெங்கும் கடவுள்களும்  கதைகளுமே இறைந்து கிடந்தன. ஒவ்வொரு வீட்டிற்கும் கதவுகள் இருந்ததோ இல்லையோ வாசலின் இருபுறமும் திண்ணைகள் அமைக்கப் பட்டிருந்தன. அவை வழிப் போக்கர்களை உபசரித்து மகிழ்வதற்காகவும் பெரியவர்களும் சிறுவர்களும் சேர்ந்து அமர்ந்து கதைகள் பேசி மகிழ்வதற்காகவும் உபயோகமாய் இருந்தன.
                     இரவானால் நட்சத்திரங்களையும் நிலவையும் ரசித்தபடி அம்மாவோ பாட்டியோ சொல்லும் கதைகளைக் கேட்டபடி தான் உறங்கியிருக்கிறேன். என்னுடைய அப்போதைய கனவுகளிலும் ராஜகுமாரன்களும், தேவதைகளும் அரக்கர்களுமே உலவினார்கள்.
            வாய்க்கு ருசிக்காத உணவுகளையும் கதைகளுடன் சேர்த்து குழந்தைகளுக்கு ஊட்டிவிடுகிற இலாவகம் கிராமத்து மனுஷிகளுக்குக் கைவந்த கலையாக இருந்தது. வயசுக்குத் தகுந்தபடியான கதைகள் சொல்லும் மனிதர்கள் அநேகம் இருந்தார்கள் அங்கு. பாலியல் கதைகளை பெரியவர்களிடம் கேட்டுத் தான் நான் வயசுக்கு வந்து விட்டதையே அறிந்து கொண்டேன்.
                        நான் படித்த காலக் கட்டத்தில் பள்ளிகளிலும் கதைகள் சொல்வதற்காகவும் நீதி போதணைகளுக்காகவும் வாரத்திற்கு ஒரு வகுப்பை ஒதுக்கி இருந்தார்கள். இராவுத்தர் வாத்தியாரும் கந்தசாமி மற்றும் ரத்தினசாமி வாத்தியார்களும் அற்புதமான கதை சொல்லிகளாக இருந்தார்கள்.
                        அவர்கள் தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகளுக்கு முன் தின ம் மாலையில் பிள்ளைகளை எல்லாம் ஒன்றாக உட்கார வைத்து ஒவ்வொரு பண்டிகையும் எதற்காகக் கொண்டாடப் படுகிறது, அவற்றின் சாரமும் மனித குலத்திற்கான செய்திகளும் என்னவென்று கதை கதையாக சொல்லி மகிழ்வித்தார்கள்.
                        ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகளாக இருப்பதே பெரும் சாபமாக இருக்கிறது அவர்களுக்கு. வீட்டில் அவர்களுக்குக் கதைகள் சொல்ல தாத்தா பாட்டிகள் இல்லை. அப்படியே இருந்தாலும் அவர்களும் குழந்தைகளுக்குக் கதைகள் சொல்ல நேரமில்லாமல் தொலைக்காட்சிகளின் முடியே இல்லாத அழுகாச்சி தொடர்களில் மூழ்கிக் கிடக்கிறார்கள்.
                       அதனால் குழந்தைகளும் அவர்களின் வயதுக்குப் பொருந்தாத தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பார்வையாளர்களாக இருக்க நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள். அல்லது கணிணி விளையாட்டுகளின் வன்முறைகளை ரசித்துக் குரூரமானவர்களாக உருவாகிக் கொண்டிருக்கிறார்கள்.
                    வீடுகளில் தான் இப்படி என்றால் இவர்களின் பள்ளிகளிலும் கதைகள் சொல்லும் மாரல் வகுப்புகள் ஏதும் இருப்பதாகவே தெரியவில்லை. கோடை விடுமுறை காலங்களிலும் குழந்தைகளை விளையாட விடாமலும் தாத்தா பாட்டி வீடுகளுக்கு அனுப்பி கதைகள் கேட்க வாய்ப்பளிக்காமல் புதிது புதிதாய் உருவாகும் சம்மர் கேம்ப் வகுப்புகளில் சேர்த்து சித்ரவதை செய்யப் படுகிறார்கள்.  
                        குழந்தைகள் மன ஆரோக்கியத்துடன் வளர வேண்டுமென்றால் அவர்களுக்குக் கதை சொல்லி வளர்க்க வேண்டும். அவர்கள் சொல்லும் கதைகளையும் காது கொடுத்துக் கேட்க வேண்டும். அதற்கு முதலில் பெரியவர்கள் கதைகளை அறிந்து கொள்ள வேண்டும். புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். கதை சொல்லல் தினத்திலிருந்து அதைத் தொடங்கலாம்….!

Ø  முற்றும்

Tuesday, November 29, 2016

 பிரதமர் மோடி அவர்களுக்கு ஒரு அவசர ஆலோசணை:

இன்றைக்கு தினச் செலவுக்கு எப்படியாவது கொஞ்சம் பணம் எடுத்து விட வேண்டும் என்று தீர்மானித்து என்னிடமிருக்கும் வங்கி அட்டைகளையும் பாஸ் புக், மற்றும் காசோலைகளையும் பையில் போட்டுக் கொண்டு வீதியில் இறங்கினேன்.

வழக்கம் போல் எந்த ஏடிஎம்மிலும் பணம் இல்லை. ஆந்திரா வங்கியில் பணம் எடுப்பவர்களின் வரிசையில் நின்று கொண்டிருக்கும் போது நான் 1500ரூ.க்குக் காசோலை எழுதி கையில் வைத்துக் கொண்டு நிற்பதைப் பார்த்த எனக்குப் பின்னால் நின்றவர், இந்த சிறிய தொகைக்கு ஏன் இவ்வளவு நீள வரிசையில் நிற்கிறீர்கள்; எஸ்.பி.ஐ. வங்கி ஏடி எம்மில் பணம் இருக்கிறது போய் எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். அவரிடமும் எனக்கு முன்னால் நின்றவரிடமும் இதோ வந்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டு கொஞ்ச தூரத்திலிருந்த ஏடிஎம்மிற்கு ஓடினேன்.

அங்கு போனபின்புதான் தெரிந்தது. அங்கு வங்கியில் நிற்கும் கூட்டத்தினரை விடவும் அதிகம் பேர் நின்று கொண்டிருந்தார்கள். நான் மெசினுக்கு அருகில் போகும் போது கண்டிப்பாக அதில் நிரப்பப் பட்டிருக்கும் பணம் காலியாகி விடும் என்று தோன்றியதால் மறுபடியும் வங்கியின் வரிசைக்கே வந்து நின்றேன். வரிசை அப்படி ஒன்றும் நகர்ந்திருக்கவில்லை.

நத்தை வேகத்தில் வரிசை நகர்ந்து நான் கவுண்டருக்குப் போய்க் காசோலையை நீட்டியதும் அங்கிருந்த காசாளர் தன்னிடம் 100ரூ. அல்லது 50ரூ. கரன்சிகளே இல்லை என்றும் 2000ரூயும் அதன் மடங்குகளிலும் எழுதிக் கொடுத்தால் தான் தன்னால் தர முடியும் என்று சொல்லி விட்டார். ரூ.2000 நோட்டை வைத்துக் கொண்டு நானென்ன செய்வது?

எஸ்பிஐ வங்கிக்குப் போனேன். அங்கு நின்ற கூட்டத்தைப் பார்த்துப் பதறிப்போய் ஐசிஐசிஐ வங்கிக்கு ஓடினேன். பெரிதாய்க் கூட்டம் இல்லை. அதாவது கூட்டம் வங்கிக்குள் வழிந்து வீதிக்கெல்லாம் வந்திருக்கவில்லை. வரிசையின் வாலைப் பிடித்துக் கொண்டு நின்றேன். நான் கவுண்டரில் இருப்பவரிடம் அந்த வங்கிக்கான காசோலையைக் கொடுக்கவும் என்னை ஏற இறங்கப் பார்த்தவர் காலையிலேயே சொல்லி விட்டோமே எங்களிடம் 2000ரூ. கரன்சி தவிர்த்து வேறில்லை என்று. இப்படி விடாப்பிடியாய் வரிசையில் நின்று வந்து எங்களைக் கஷ்டப்படுத்துகிறீர்களே என்று அலுத்துக் கொண்டார் ஒரு குற்ற உணர்ச்சியுடன். 500ரூபாயாக இருந்தால் கூட வாங்கிக் கொள்கிறேன் என்றேன்.
-    500ரூ. இன்னும் வரவில்லையே என்றார்.
-    தொலைக்காட்சியிலெல்லாம் புழக்கத்திற்கு வந்து விட்டதென்று சொல்கிறார்களே என்றேன்.
-    அதென்னவோ தெரியவில்லை; எங்கள் வங்கிக்கு இன்னும் வரவில்லை என்றார்.

அஞ்சலகத்திற்கு ஓடினேன். அங்கு பெரிய அளவிற்குக் கூட்டமெல்லாம் இல்லை. ஆனால் அவர்களின் சுறுசுறுப்பைத் தான் நாம் அறிவோமே! பெரும்பாலான நேரங்களில் கணிணிகள் இயங்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும். என்ன செய்வது என்று தெரியாமல் அதற்கு முன்னால் உட்கார்ந்திருப்பவரும் முழித்துக் கொண்டிருப்பார். இன்றைக்கும் அதே கதை தான். ஆனால் கடைசியில் அவரும் 100ரூ.எல்லாம் சுத்தமாக இல்லை என்று கை விரித்து விட்டார்.

கடைசியில் பணமே எடுக்காமல் வீட்டிற்கு வந்து விட்டேன். என் அனுபவத்தை வைத்து நம்முடைய பாரதப்பிரதமருக்கு ஒரு ஆலோசணை சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

பொதுமக்கள் யாவரும் 100 ரூ. மற்றும் 50ரூ. கரன்சிகளை வங்கிகளில் செலுத்தாமல் அவர்களே பதுக்கி வைத்துக் கொள்கிறார்கள் என்று தெரிகிறது. 100 ரூ. மற்றும் 50ரூ. கரன்சிகளை அவர்கள் கருப்புப் பணமாக வைத்திருக்கிறார்கள். அதனால் அந்த கரன்சிகளை வங்கிகளுக்குள் கொண்டு வருவதற்காக ஒரு நடுநிசியில் தொலைக்காட்சியில் தோன்றி பிரதமர் மோடி அவர்கள் 100 ரூ. மற்றும் 50ரூ. கரன்சிகளை செல்லாது என்று அறிவிக்கும் படியும் அதற்குப் பதிலாக உடனேயே 3000ரூ. அல்லது 4000ரூ. கரன்சிகளை புதிதாய் அச்சிட்டு வெளியிடும்படியும் ஆலோசணை சொல்கிறேன். நம்முடைய பொருளாதார வல்லுநர்கள் தொலைக்காட்சியில் தோன்றி உங்களை புதிய இந்தியாவிற்கு வித்திட்டவர் என்று புகழாரம் சூட்டி மகிழ்வார்கள். இன்னும் சில சாமான்ய மக்கள் செத்தொழிவார்கள். அதனால் நமக்கென்ன? நாட்டின் மக்கள் தொகை அப்படியாவது கொஞ்சம் குறையட்டுமே!  


     

Tuesday, August 9, 2016

சிறுகதை: காதல் என்கிற பெயரில்…..

                         பத்திரிக்கைக்காரன் என்றால் அவனுக்கு மூன்றாவது கண் ஒன்று முளைத்திருக்க வேண்டும்; அதுவும் முழு நேரமும் விழித்திருக்க வேண்டும் என்று எடிட்டோரியல் மீட்டிங்கில் எங்களின் எடிட்டர் தீவிரமாய்ச் ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தார்.
                        அவர் சொல்வதெதுவும் என் மூளைக்குள் ஏறாமல்  அவரின் டேபிளில் நானெழுதி வைத்திருக்கும் புரஃபோசலுக்கு அனுமதி கிடைக்குமா கிடைக்காதா என்று தீவிரமாய் யோசித்துக் கொண்டிருந்தேன்.
                        நான் ராஜமாணிக்கம்; ஒரு வாரப் பத்திரிக்கையில் உதவி ஆசிரியராக வேலை செய்கிறேன். படித்தது என்ஜினியரிங். ஆனால் பார்ப்பது பத்திரிக்கைப் பணி. கல்லூரியில் படிக்கும் காலத்தில் பகுதிநேர மாணவ நிருபராக பிரபல பத்திரிக்கை நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும் வாய்ப்புக் கிடைத்தது.
                        அந்த எழுத்தார்வமே பெரும் போதையாகி என்னை இயக்க, வேலை என்பதை சம்பாதிப்பதற்கு மட்டுமானதாய் எடுத்துக் கொள்ளாமல் சந்தோஷத்திற்கு மானதுமாய் பாவித்ததால், படித்து முடித்த பின்பும் அதே பணியிலேயே ஆனால் வேறொரு பத்திரிக்கை அலுவலகத்தில் தொடர்கிறேன். நிறைய சவால்களும் கொஞ்சம் சவடால்களும் நிறைந்த பணி.
                        என் அலுவல்களில் ஒரு பகுதி தினப் பத்திரிக்கைகளை வாசித்து, அதில் சுவாரஸ்யமாக அல்லது மனதைப் பாதிக்கும் விதமாக செய்தி ஏதாவது வந்திருந்தால், அதைத் துரத்திக் கொண்டு போய், சம்பந்தப்பட்டவர்களைச் சந்தித்துப் பேசி, மேலும் விபரங்கள் சேகரித்து, கட்டுரையாக எழுதி ஆசிரியரின் பார்வைக்கு வைப்பேன். அவர் வெற்றிலை மென்றது போக மிச்சமிருக்கிற சொற்ப நேரத்தில் அதைப் படித்துப் பார்த்து அனுமதித்தால் பிரசுரமாகும்.
                        அப்படித் தான் காதலர் தினத்திற்கு அடுத்த நாளும் தினப் பத்திரிக்கை செய்திகளை அசுவாரஸ்யமாக மேய்ந்து கொண்டிருந்தேன். சில அமைப்புகள் காதலர்தினக் கொண்டாட்டங்களை எதிர்ப்பதும் இன்னும் சில அமைப்புகள் அவற்றை ஆதரிப்பதுமான வழக்கமான செய்திகளே நிரம்பிக் கிடந்தன. ஆனால் அதிலிருந்த ஒரு செய்தி என்னை வசீகரித்தது.
                        காதலர் தினத்தில் ஒரு காதலன் தன் பிரியத்திற்குரிய காதலிக்கு, பூங்கொத்துக்களை வாங்கிக் கொடுக்கலாம்; அழகழகான வழுவழுப்பான வாழ்த்து அட்டைகளை வாங்கி அனுப்பி வைக்கலாம்; அல்லது மறக்க முடியாத பொருட்கள் எதையாவது பரிசளித்து மகிழலாம்.
                        எதுவும் கொடுக்க முடியாத பட்சத்தில் சில அழுத்தமான முத்தங்களை மட்டுமாவது பரிமாறிக் கொண்டு அந்த நாளை இனிமையாய்க்  கடந்து போயிருக்கலாம். ஆனால் இந்த வருஷக் காதலர் தினத்தில் ஒரு காதலன் தன் காதலியின் முகத்தில் திராவகம்  ஊற்றிக் கொண்டாடியிருக்கிறான்.
                        செய்தியின் சுருக்கம் இது தான். 
மதுரையில் காதலர் தினத்தில் நடந்த பயங்கரம்!
தன்னைக் கல்யாணம் செய்ய மறுத்த காதலியின் முகத்தில் ஆசிட் வீசி விட்டு ஓடிப் போனான் அவளின் முன்னாள் காதலன்!  
                  
                   பளிச்சென்று மூளைக்குள் பல்பு எரிந்தது எனக்கு. இந்த செய்தியைத் துரத்திக் கொண்டு போய் விசாரித்து ஒரு நீண்ட கட்டுரையாக எழுதும் உத்தேசத்தில் எடிட்டரின் டேபிளில் அதற்கான அனுமதி வேண்டி  அவசரம் என்று குறிப்பிட்டு அவர் கண் பார்வையில் படும்படி வைத்து விட்டு எடிட்டோரியல் மீட்டிங்கில் நெர்வஸாக நகம் கடித்துக் கொண்டிருந்தேன்.
                        மீட்டிங் முடிந்த கொஞ்ச நேரத்திலேயே ஆசிரியர் என்னை அழைத்து, ஆச்சர்யமாக கேள்வி எதுவும் கேட்காமலேயே என்னுடைய புரஃபோசலுக்கு பச்சை மையில் ஓ.கே என்றெழுதி என்னிடமே தரவும், அன்றைக்கு இரவே, அலுவலகத்தில் அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு மதுரை நோக்கிப் பயணமானேன்.
                        முகத்தில் ஆசிட் வீசப்பட்ட ஆனந்தி அரசாங்க மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டிருந்தாள். அவளைப் பார்ப்பதற்கு மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை. அவளின் தாயால் அதிகம் பேச முடியவில்லை. அவள் பேச வாய் திறந்தாலே அழுகை தான் முட்டிக் கொண்டு வந்தது.
                        ஆசிட் ஊற்றப்பட்ட பெண்ணின் அக்காளும் அவளின் கணவனும் அவர்களுடனிருந்தார்கள். அவர்களும் இந்நிகழ்ச்சியின் பின்னணிகள் பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை.
                        அக்கம் பக்கத்தில் நிறைய நபர்களைச் சந்தித்து பேட்டி கண்டு இது சம்பந்தமான விபரங்களைச் சேகரித்தேன். அதில் மூன்று முக்கியமான நபர்கள் தந்த வாக்குமூலங்கள் இந்த சம்பவத்தின் பின்னணிகளைப் புரிந்து கொள்வதற்கு பெரிதும் உதவியாக இருந்தன. வாக்குமூலங்களைத் தொகுத்து நீண்ட கட்டுரையாக எழுதி ஆசிரியரின் பார்வைக்கு வைத்தேன்.
                        கட்டுரையை வாசித்தவர் இதை முழுசாய் பிரசுரிக்க முடியாது என்றும் அதிகபட்சம் ஒரு பெட்டிச் செய்தியாக மட்டுமே இதை வெளியட முடியும் என்றும் அது இந்தக் கட்டுரைக்கும் உன் உழைப்பிற்கும் மரியாதை செயவதாகாது என்றும் பதவிசான வார்த்தைகளில் சொல்லி பிரசுரிக்க மறுத்து விட்டார்.
                        எங்களின் பத்திரிக்கைப் பணியில் இதெல்லாம் சகஸம்தானே என்று அப்போதைக்கு என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டு வேறு பணிகளில் மூழ்கிப் போனேன். சில நாடகளுக்கு அப்புறம் அதை ஒரு சிறுகதையாகவும் எழுதிப் பார்த்தேன். அதுவும் சரியாக வரவில்லை.
                        அதனால் என்னிடமே நீண்ட நாட்களாக தூங்கிக் கொண்டிருந்த மூன்று வாக்குமூலங்களையும், கொஞ்சம் பட்டிதட்டி, எடிட் பண்ணி என்னுடைய புனைவு மொழியில் அப்படியே என்னுடைய இணையதள வாசகர்களின் பார்வைக்கு வைக்கிறேன்.

வாக்குமூலம்: 1 – முத்தையா
                        என் பெயர் முத்தையா. அப்பா ஆதிமூலம். ஆனந்தி என்னுடைய சொந்த மாமன் மகள் தான்; எனக்கு முறைப்பெண்ணும் கூட. அவளின் பெயரை உச்சரித்தாலே மனசின் ஓரத்தில் தித்திக்கும்.  அவள் பிறந்த போது எனக்கு ஐந்து அல்லது ஆறு வயதிருக்கும். அப்போது நாங்கள் பந்தல்குடியில் குடி இருந்தோம்.
                        அவளைப் பார்ப்பதற்காக அப்பா என்னைக் கைபிடித்து கொப்புச்சித்தன் பட்டிக்கு நான்கு மைல் தூரம் நடத்திக் கொண்டு போனது நேற்று நடந்தது போல் இன்னும் பசுமையாக என் நினைவில் இருக்கிறது. அப்பா எவ்வளவோ வற்புறுத்தி அழைத்த போதும் அம்மா எங்களுடன் வர மறுத்து விட்டாள்.
                        என்னைத் திண்ணையில் சம்மணங்கால் போட்டு  உட்காரவைத்து என் மாமன் அவளைத் துணிப் பொட்டலமாய்த் தூக்கிக் கொண்டு வந்து என் மடியில் கிடத்தினார்.
                        “நல்லாப் பார்த்துக்கடா... இவதான் உன் பொண்டாட்டி...... என்று சொன்னார். அப்பாவும் ஆமோதிப்பது போல் சிரித்தார். அப்போது நான் ரொம்பவும் வெட்கப்பட்டேன். அவளுக்கு பெயர் கூட சூட்டப் பட்டிருக்கவில்லை. என் விரலை அவளிடம் கொடுக்கவும் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டு எச்சில் ஒழுக பல் முளைக்காத ஈறுகள் விரித்து அவள் சிரித்தது இன்னும் என் நினைவி லிருக்கிறது.
                        ஆனந்தியின் அக்காள் என்னிடம் வந்து “என் தங்கச்சிய நீ ஏண்டா தூக்கி வச்சுருக்குற......? என்று சொல்லி கால்ச் சட்டைக்கு கீழே தெரிந்த என் தொடையில் நறுக்கென்று கிள்ளி வைத்தாள். நான் அம்மா என்று அலறினேன். அவளும் என் தங்கச்சிய என்கிட்டக் குடுடா..... என்று என்னை விடச் சத்தமாய் அழத் தொடங்கி விட்டாள். மாமன் வந்து அவளை சமாதானப் படுத்த முயற்சித்தார். ஆனாலும் குழந்தையை என் மடியிலிருந்து இறக்கிய பின்பு தான் அவளின் அழுகை நின்றது.
                        அவளின் அக்காவிற்கு அப்போது என்னை விட இரண்டு வயது அதிகம். அவளுக்கு என்னைக் கண்டால் எப்போதுமே பிடிக்காது. அவளுக்கு மட்டுமல்ல; அவளின் அம்மா – அதாவது என் அத்தைக்கும் எங்கள் குடும்பத்தைப் பிடிக்காது. அது அவளுக்கும் என் அம்மாவுக்குமான ஆரம்பகால நாத்தனார் சண்டைகளாலும் மனஸ்தாபங்களாலும் மனதில் வரித்துக் கொண்ட வன்மத்தால் நிறைந்தது.
                        ஆனந்தியின் அப்பா சிறுவயதிலேயே ஒரு சாலை விபத்தில் இறந்து போனார். வாழவழி தெரியாமல் அவர்கள் நிர்கதியாய் நின்ற போது, அம்மாவின் எதிர்ப்பையும் மறுப்பையும் மீறி ஆனந்தியின் குடும்பத்தை அப்பா பந்தல்குடிக்கே கொண்டு வந்து தனி வீடெடுத்து குடிவைத்து அவர்கள் கௌரவமாய் பிழைப்பதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார்.
                        கால ஓட்டத்தில் அத்தைக்கு எங்கள் குடும்பத்தின் மீதிருந்த கோபம் கொஞ்சம் கொஞ்சமாய்க் குறையத் தொடங்கியது. ஆனால் என்னுடைய அம்மா இன்னும் கூட அவர்களின் குடும்பத்தின் மீது அதே தீராப் பகையுடனேயே தான் இருக்கிறார். என்ன சொல்லியும் அவளை மாற்ற முடியவில்லை என்னால்.
                        ஆனந்தி ஒரு அற்புதமான பெண். அவள் பந்தல்குடியில் பெரும்பாலும் எங்கள் வீட்டிலிருந்து தான் வளர்ந்தாள். அவளுக்கு நன்றாக படிப்பு வந்தது. எனக்கோ அது எட்டிக்காயாய் கசந்தது. அதனால் அவள் படித்தாள்; நான் அவள் படிப்பதை வேடிக்கை பார்த்தேன். ஆனால் நானும் அவளும் ஒன்றாய்த் தான் வளர்ந்தோம். இருவருக்கும் ஒருவர் மீது ஒருவருக்கு அளவுக்கதிகமான பிரியமுமிருந்தது.
                        நான் பத்தாம் வகுப்பு பெயிலான கையோடு, ஊர் சுற்றிக் கொண்டு அலைந்தேன். அப்புறம் அப்பாவுக்கு ஒத்தாசையாக அவருடன் சேர்ந்து விவசாயத்தைக் கவனித்துக் கொண்டேன். ஆனந்தி ப்ளஸ் டூ முடித்த பின்பு, அவளுக்கு கோயம்புத்தூரில் என்ஜினீயரிங் கல்லூரியில் இடம் கிடைத்தது.
                        அவளின் அம்மா அவ்வளவு தூரம் போயெல்லாம் படிக்க வேண்டாம் என்றாள். அத்தை அப்படிச் சொன்னதற்குக் காரணம் மகளைப் பிரிந்திருக்க வேண்டுமே என்பது மட்டுமல்ல; அவளால் அவ்வளவு செலவழித்து படிக்க வைப்பது சிரமம் என்றும் நினைத்தாள்.
                         நானும் அப்பாவும் தான் பிடிவாதமாக அத்தையை சமாதானப் படுத்தி ஆனந்தியை கோயம்புத்தூருக்கு அழைத்துப் போய் கல்லூரியிலும் பெண்கள் விடுதியிலும் சேர்த்து விட்டு வந்தோம்.                              அப்பா அம்மாவிற்குத் தெரியாமல் உதவினார் என்றாலும் ஆனந்தி படித்து முடிப்பதற்குள் அத்தை படாத பாடு பட்டு விட்டாள். அல்லும் பகலும் அயராத உழைப்பு. ஆனந்தியும் பொறுப்பை உணர்ந்து சிரத்தையாகப் படித்தாள். அவள் என்ஜினீயரிங் படித்து முடிக்கவும், அவளுக்கு காம்பஸ் இண்டர்வியூவில் மதுரையில் இருந்த ஒரு கம்யூட்டர் நிறுவனத்தில் வேலை கிடைத்தது.
                        ஆனந்தி அங்கேயே விடுதியில் தங்கிக் கொண்டு விடுமுறை தினங்களில் பந்தல்குடிக்கும் வந்து போய் கொண்டிருந்தாள். போன வருஷந்தான் என்னுடைய அப்பாவும் தவறிப் போனார்.
                        ஆனந்தியை எனக்கு மணமுடித்துக் கொடுக்க அத்தைக்கு ஆசை இருந்தது.
                        ஆனாலும் அவ்வளவு படித்த பெண்ணை பத்தாம் வகுப்பு பெயிலான நான் எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும் என்று தயங்கி நான் தான் தெரிந்தவர்கள் பலரிடம் சொல்லி வைத்து, அவளுக்கு மாப்பிள்ளை தேடினேன்.
                        சிவகாசியிலிருந்து ஒரு வரன் வந்தது. அது தகைந்து, ஆனந்தியின் திருமணத்திற்கான ஏற்பாடுகளை நானும் அத்தையும் செய்து கொண்டிருந்தோம். அதற்குள் என்னன்னவோ நடந்து விட்டது.
                        எவனோ ஒரு முட்டாள் ஆனந்தி ஆபிஸ் போகும் போது மறித்து அவள் மீது ஆசிட் வீசி விட்டு ஓடி விட்டான். பத்திரிக்கைகளும் போலீஸும் அவனைக் காதலன் என்று கதை கட்டிக் கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக எனக்குத் தெரியும் இது காதல் இல்லை.
                        நீங்களே சொல்லுங்கள், நிஜமாக காதலிப்பவன் எவனும் தான் காதலிக்கும் பெண்ணின் முகத்தை இப்படிக் கோரப் படுத்திப் பார்க்க விரும்புவானா? அவனொரு மிருகம்; அவ்வளவு தான்.
                        அழகு தேவதையாய் வலம் வந்த என் அத்தை பெண்ணின் முகம் ஆசிட் வீச்சால் இப்போது கோரமாகி, அவள் உயிருக்கும் போராடிக் கொண்டிருக்கிறாள். ஆசிட் ஊற்றியவனின் முகத்திலும் இதே மாதிரி ஆசிட் ஊற்றி அதன் வலியையும் வேதணையையும் அவனை உணரச் செய்ய வேண்டும்; அப்போது தான் என் மனசு ஆறும்....! 

வாக்குமூலம்: 2  – கதிர்வேல்        
                         விருதுநக்ர் மாவட்டத்தில் தீப்பெட்டிக்கும் பட்டாசுக்கும் பெயர் போன சிவகாசி தான் எனக்கு சொந்த ஊர். நடிகை ஸ்ரீதேவியின் பூர்வீகம் கூட சிவகாசி தான் தெரியுமா? சில மாதங்களுக்கு முன்பு பந்தல்குடி என்னும் ஊருக்கு அம்மாவுடன் போய் எனக்கு திருமணத்திற்காக ஆனந்தி என்கிற பெண்ணைப் பார்த்து பேசி முடித்து விட்டு வந்தோம்.
                         நாங்கள் பெண் பார்த்துவிட்டு வந்த அடுத்த நாளே, அகிலன் என்றொருவன் என்னை எங்களின் பள்ளியில் வந்து சந்தித்தான். அவன் தன்னை ஆனந்தியின் காதலன் என்று சொல்லிக் கொண்டான்.
                        அன்றைக்கு நான் காலையில் பள்ளிக்குள் நுழைந்து கையெழுத்துப் போட்டுக் கொண்டிருக்கும் போது, என்னுடன் வேலை பார்க்கும் சக ஆசிரியை புவனேஸ்வரி மேடம் “கதிர்வேல் ஸார், அகிலன்னு ஒருத்தர் உங்களச் சந்திக்கனும்னு காலையிலருந்து வந்து காத்திருக்கிறார்; பார்த்தீங்களா.....” என்றாள்.
                        எனக்கு அகிலன் என்று யாருடனும் பரிச்சயமிருக்கவில்லை; எனக்குத் தெரிந்த ஒரே அகிலன் தமிழின் பிரபல எழுத்தாளர்; சித்திரப் பாவை என்ற நாவலுக்காக ஞானபீட விருதெல்லாம் வாங்கியவர். அவர் இப்போது உயிரோடு இல்லை. அப்படியே உயிரோடிருந்தாலும் இவ்வளவு காலையில் என்னைச் சந்திக்க அவர் வந்து காத்திருக்க எந்த முகாந்திரமும் இல்லை என்று தோன்றியது.
                        அப்படியா, நான் பார்க்கலையே! எங்க இருக்கார்.....என்றேன் ஆர்வம் மேலிட.
                        சுற்றுமுற்றும் கண்களை அலைய விட்டவள், ஒரு மரத்தடியில் நின்று கொண்டிருந்தவனை விரல் சுட்டி, “அதோ அவர் தான்.....என்றாள்.
                        அதிகம் கட்டிட வசதிகள் இல்லாத அரசு மேல்நிலைப் பள்ளி எங்களது. பாதி வகுப்புகள் மரத்தடிகளில் தான் நடக்கும். மரத்தடியில் காத்திருந்தவனுக்கும் என்னுடைய வயது தானிருக்கும்.
                        அவனுக்கு அருகில் போய், “ஹலோ, நான் தான் கதிர்வேல்; நீங்க என்னையா தேடி வந்துருக்கீங்க.....?”  என்று கை கொடுத்தேன். ரொம்பவும் பதட்டப் படுகிறவனாகவும் பரபரப்பாகவும் தெரிந்தான். அவன் எனக்கு கை எதுவும் கொடுக்கவில்லை.
                        உங்க கூட நான் கொஞ்சம் பேசனும்....என்றான் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு. முன்பின் அறிமுக மில்லாத என்னிடம் இவன் ஏன் இத்தனை கடுமையான முகபாவம் காட்டுகிறான்... என்று மனசுக்குள் நினைத்தபடி, “எது சம்பந்தமா.....?” என்றேன்.
                         “நீங்க கல்யாணம் பண்ணிக்கப் போற ஆனந்தி சம்பந்தமா....என்றான் அதே விரைப்புடன். 
                        பிரேயர் ஆரம்பிக்க இன்னும் நேரமிருந்தது. முதல் பீரியட் எனக்கு  அன்றைக்கு வகுப்பெதுவும் இல்லை.  அகிலனை ஸ்டாஃப் ரூமிற்கு அழைத்துப் போனேன். ஸ்டாஃப் ரூமில் யாருமில்லை. எல்லோரும் பிரேயருக்கான ஆயத்தங்களில் வெட்ட வெளிகளில் அலைந்து கொண்டு இருந்தார்கள்.
                        சொல்லுங்க....என்றேன் அங்கிருந்த ஒரு பெஞ்ச்சில் அகிலனை உட்காரும்படி சைகையில் காட்டியபடி.  நீங்க யாரு? ஆனந்தியப் பத்தி என்ன சொல்லனும் உங்களுக்கு...?”
                        ஆனந்திய நீங்க கல்யாணம் பண்ணிக்கக் கூடாதுன்னு எச்சரிச்சுட்டுப் போகத் தான் வந்தேன்.....” என்றான் எரிச்சலூட்டும் தொனியில். இன்றைய நாளின் தொடக்கம் சரியில்லை என்று மனக்குறளி சொல்லியது.
                        ”காரணம் என்னன்னு தெரிஞ்சுக்கலாமா? திடீர்னு வந்ததும் வராததுமா மொட்டைத் தாத்தா குட்டையில விழுந்தான்ங்குறது போல ஆனந்திய  கல்யாணம் பண்ணக்கூடாதுன்னு சொன்னா என்ன அர்த்தம்....! முதல்ல உங்களுக்கும் ஆனந்திக்கும் என்ன சம்பந்தமுன்னு சொல்லுங்க....என்றேன்.
                        நான் அவளக் காதலிச்சவன்; இப்பவும் அவளக் காதலிச்சுக்கிட்டு இருப்பவன்; அவளும் என்னைக் காதலிக்குறா..... ஆனா வீட்டுல உள்ளவங்க இதை விரும்பல; அவங்கள நான் சமாளிச்சுக்குவேன்; இப்ப நீங்க அவளக் கல்யாணம் பண்ணக் கூடாது.....ஏதாவது காரணம் சொல்லி அவள வேண்டாமின்னுடனும்..... என்றான்.
                        ஏனோ அகிலன் சொல்வதெல்லாம் பொய்யென்று எனக்குள் ஒரு உள்ளுணர்வு எச்சரித்தது. அதனால் உங்களப் பத்தி எல்லா விபரமும் ஆனந்தி ஏற்கெனவே என்கிட்ட சொல்லியாச்சு;  நீங்க கிளம்பலாம்....என்று சும்மாவாச்சும் அவனிடம் சொல்லி வைத்தேன்.
                        அவனும் விடாமல்  என்னப்பத்தி உங்க கிட்ட அவள் என்ன சொன்னாளோ தெரியாது.... ஆனா நீங்க ஒரு விஷயம் மட்டும் தெரிஞ்சுக்கனும்; எங்களோடது சினிமாக் காதலில்ல; கைபடாம காதலிக்கிறதுக்கு; எங்களுக்குள்ள எல்லாமே நடந்துருச்சு.... புரிஞ்சுக்குங்க....” என்றான்.
                        அவன் ’எல்லாமே’ என்பதைத் தேவைக்கு மேலேயே அழுத்திச் சொன்னான்.
                        ”இங்க பாருங்க அகிலன்,  நீங்க சொல்ற எதையும் நான் நம்பத் தயாரில்ல; அப்படியே நீங்க சொல்றது உண்மையாவே இருந்தாலும் எனக்கு அதுபற்றியெல்லாம் அக்கறை இல்ல. கல்யாணத்துக்கு முன்னால ஒரு பெண் காதலிக்குறதுங்குறது பெரிய குத்தமும் இல்ல. அதோட உண்மையாக் காதலிக்கிற எவனும் தான் நேசிக்கிற பொண்ணப்பத்தி இப்படி அபாண்டமா சொல்லிக்கிட்டு இருக்கவும் மாட்டான்.... முடிஞ்சா எங்க கல்யாணாத்துக்கு வந்து ஒருவாய் சாப்பிட்டுட்டுப் போங்க.... என்று படபடவென்று அவனிடம் பேசிவிட்டு வகுப்பறை நோக்கிப் போய் விட்டேன்.
                        ஆனால் இந்த விஷயத்தை அப்படியே விட்டு விட மனதில்லை. ஆனந்தியிடமே இதைப் பற்றி நேரிடையாகப் பேசி விடாலாமென்று தீர்மானித்து, பள்ளிக்கு அரைநாள் விடுப்பு எழுதிக் கொடுத்துவிட்டு அன்றைக்கு மத்தியானமே மதுரைக்குப் பஸ் ஏறி அவளை அவளின் அலுவலகத்தில் போய் சந்தித்தேன்.
                        என்னைச் சற்றும் எதிர்பார்க்காத ஆனந்தி ரொம்பவும் பதட்டமடைந்தாள். சம்பிரதாயமான விசாரிப்புகளுக்குப் பின் அகிலன் என்னை வந்து சந்தித்தது பற்றிச் சொல்லி, “நிஜமாகவே நீங்கள் இருவரும் காதலிப்பதாக இருந்தால் உங்களின் கல்யாணத்திற்காக உங்களின் அம்மாவை சந்தித்துப் பேசி அவர்களை என்னால் சம்மதிக்க வைக்க முடியும்....” என்று சொன்னேன். அவள் சிரித்தபடி சொன்னாள்.
                        அகிலன் கொஞ்சமும் மெச்சூரிட்டியே இல்லாத விடலைத் தனமானவன் என்றும், அவன் ஆனந்தி தங்கி இருக்கும் மகளிர் விடுதி இருக்கும் பகுதியில் வசிப்பவன் ; விடுதி நடத்துபவர் அகிலனுக்கும் தெரிந்தவர் என்பதால் அவன் அவ்வப்போது விடுதிக்கு வரும் போது நட்புணர்வுடன் அவனுடன் பழகியதாகவும், அதை அவன் காதல் என்று தப்பாக அர்த்தம் பண்ணிக் கொண்டதாகவும்
                        அதை அறிய நேர்ந்த அந்த கணமே அகிலனிடம், தனக்கு அவன் மீது அந்த மாதிரியான எந்த அபிப்ராயமும் இல்லை என்று சொல்லி விலகி விட்டதாகவும் ஆனால் அகிலனோ விடாமல் அவளைத் தொடர்ந்து தன்னை அவள் காதலித்தே ஆக வேண்டுமென்று வற்புறுத்திக் கொண்டிருப்பதாகவும் சொன்னாள்.
                        ஆனந்தியிடம் பேசி விட்டு வந்ததும் எனக்கு மனசில் பாரம் இறங்கி நிம்மதியாக இருந்தது. நாங்கள் திருமணத்திற்கான மற்ற ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருந்தோம்.
                        அகிலனை அன்றைக்கு எதுவும் செய்யாமல் அப்படியே போக விட்டது எவ்வளவு பெரிய பிசகென்று இப்போது தான் புரிகிறது எனக்கு.
                        அவனை போலீஸில் பிடித்துக் கொடுத்திருக்க வேண்டும். அவன் காலைச் சுற்றிய பாம்பென்பதைக் கணிக்கத் தவறி விட்டேன்; அதனால் தான் ஆனந்திக்கு இப்போது இந்த மாதிரி நிகழ்ந்து விட்டது…. !

வாக்குமூலம்: 3  – அகிலன்
                        குறிப்பு : போலீஸ் கஸ்டடியில் லாக்கப்பிலிருந்த அகிலன் முதலில் பேசவே மறுத்தாலும் அப்புறம் இன்ஸ்பெக்டரின் அனுமதியுடன் பேசி நான் பதிவு பண்ணிய வாக்குமூலம் இது.
                        என்பேரு அகிலன். அம்மா ஆசையா வச்சபேரு. அது ஒரு எழுத்தாளரின் பெயர் என்றும் நான் அவரின் பெயருக்கு எந்த வகையிலும் நியாயம் செய்யவில்லை என்றும் தமிழில் நான் ஓரிலக்க மதிப்பெண்களை வாங்கிக் கொண்டுவந்து காட்டிய போது விசனப்பட்டு சொல்லியிருக்கிறாள்.
                        எனக்கு சொந்த ஊருன்னு எந்த ஊரையும் சொல்லிக்க முடியாது. யாதும் ஊரேங்குற வகையைச் சேர்ந்தவன். ஏன்னா அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அரசாங்க உத்தியோகம். அப்பா சிவில் சப்ளைஸ்ல அதிகாரி; அம்மா அரசாங்க ஆஸ்பத்திரியில் நர்ஸ்.
                        அப்பா அநியாயத்துக்கு நேர்மையாளரா இருந்ததால் அதுவே அவருக்கு பெரும் போதையாகி எப்பவும் எல்லோர் கூடவும் வாக்குவாதம்; சண்டை..... அதனால் அடிக்கடி ட்ரான்ஸ்ஃபர்.
                        நானும் அப்பாகூட கொஞ்ச நாள்; அம்மாகூடக் கொஞ்ச நாள்னு வெவ்வேறு ஊர்கள்ல ஸ்டேட் போர்டு, செண்ட்ரல் போர்டு, மெட்ரிக்குலேசன்னு விதவிதமான பள்ளிகள்ல படிச்சேன். ஆனா என் மண்டையில எந்தப் படிப்புமே ஏறல.
                        அப்பாவும் அம்மாவும் என் மூளைக்குள் படிப்பைத் திணித்து விட முயன்றார்கள்.... எப்படி உருண்டு பொரண்டும் என்னால பி.எஸ்.ஸியைக் கூட முழுசாக முடிக்க முடியவில்லை; இன்னும் நாலஞ்சு பேப்பர் அரியர்ஸ் இருக்கு....!
                        அப்பாவுக்கு மேலூருக்கு மாற்றல் உத்தரவு வந்தபோது, அம்மா சிவகங்கையில் வேலையிலிருந்தாள். எப்படியோ முட்டிமோதி யார்யாரிடமோ கெஞ்சி மதுரையில் இருக்குற அரசு மருத்துவ மனைக்குத்  தலைமை நர்ஸாக வந்து சேர்ந்தாள்.
                        அங்கு நாங்கள் குடியிருந்த  அதே தெருவில் இருந்த லேடீஸ் ஹாஸ்டலில் தான் ஆனந்தி தங்கி இருந்தாள். அவளை  நான் முதல் தடவையாக பார்த்த நிமிஷமே பளிச்சுன்னு மூளைக்குள் ஒரு மின்னல் வெட்டு மாதிரி தோணுச்சு; இவள் தான் எனக்கானவள்னு.... ஆம்! அந்த நிமிஷத்திலருந்தே நான் அவளைக் காதலிக்கத் தொடங்கி விட்டேன்.
                        ஆனால் அவளை அணுகுவது தான் அத்தனை சுலபமாக இருக்க வில்லை; அவள் தங்கியிருந்த ஹாஸ்டல் நடத்துன ஓனரோட பையனை நண்பனாக்கிக்கிட்டு அடிக்கடி அவனைச் சந்திக்கப் போறது போல் ஹாஸ்டலுக்குப் போகத் தொடங்கினேன்.
                        அவள் பின்னால நாயாய் பேயாய் அலைந்தேன்.  அவள் என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையுறப்ப, பொம்பள மனசு எம்மாத்திரம்? கடைசியில அவள் என்னுடன் பேசத் தொடங்கினாள். அதுவே எனக்கு பெரிய வெற்றியாக எதையோ சாதித்து விட்ட சந்தோஷத்தைத் தந்தது.
                        ஒரு கட்டத்தில் அவளிடம் எனக்கு அவள் மேலிருந்த தீவிரமான காதலைப் பற்றிச் சொல்லவும், அவள் தனக்கு அப்படிப்பட்ட உணர்வுகள் எதுவும் இல்லை என்றும் என்னைத் தன்னுடைய நண்பனாக மட்டுமே பாவித்துப் பழகியதாகவும் சொன்னாள்.
                        ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் நட்பு எப்படி சாத்தியம்! காதல் தான் அது…. என்று அவளை நான் நச்சரிக்கத் தொடங்கினேன். அதற்கப்புறம் அவள் என்னைத் தவிர்க்கத் தொடங்கிவிட்டாள்.
                        நான் என் பெற்றோர்களுக்கு ஒரே பிள்ளை; அதனால் என் முகத்தில் சிறு வாட்டத்தையும் அவர்களால் சகித்துக் கொள்ள முடியாது. மேலும் சிறு வயதிலிருந்தே அம்மாவும் அப்பாவும் அருகிருந்து அரவணைத்து என்னை வளர்க்கவில்லை.
                        அந்தக் குற்ற உணர்ச்சியாலோ என்னவோ, நான் எதை ஆசைப்பட்டுக் கேட்டாலும் அதை எப்படியாவது தருவித்துத் தந்து விடுவார்கள். இதுவரை நான் ஆசைப்பட்டு எதுவும் கிடைக்காமல் போனதில்லை என்பதால் ஆனந்தியையும் என்னால் எப்படியும் அடைந்து விட முடியும் என்று திடமாக நம்பினேன். என்னுடைய அப்பாவிடம் அவள் வீட்டில் போய் பெண் கேட்கச் சொன்னேன்.
                        முதல் தடவையாக அவர் என்னிடமும் ஒரு அரசாங்க அதிகாரி போலவே “பாவம்; அந்தப் பொண்ணோட வாழ்க்கைய நான் பாழாக்க விரும்பல...”என்று ஒரே வாக்கியத்தில் என்னோட ஆசையை நிராகரித்து விட்டார். அம்மாவிடம் சொல்லவும், அவள் என்னை ஏதாவது வேலை தேடிக் கொள்ளும் படியும் அதற்கு அப்புறம் அவர்கள் வீட்டில் போய் பேசுவதாகவும் சொன்னாள்.
            அது கொஞ்சமும் சாத்தியமில்லாத பாதை. ஆண்கள் என்றால் வேலைக்குப் போகவேண்டும்; சம்பாதிக்க வேண்டும் என்பது இந்த சமூகத்தின் சாபக்கேடு என்பது என் அபிப்ராயம். என்னால் தினசரி கடிகார முட்களைத் துரத்தும் மாதச் சம்பளத்துக்காரனாக ஒருபோதும் மாறவே முடியாது.
            அதனால் அப்பாவிடம், “கொஞ்சம் பணம் ஏற்பாடு பண்ணித் தாருங்கள்; ஏதாவது பிஸினெஸ் பண்ணுகிறேன்....” என்றேன். அவருக்கு என்மேல் எந்த நம்பிக்கையும் இல்லை யாதலால் நான் சொன்னதை அவர் பொருட் படுத்தவே இல்லை.
            இதற்கிடையில் ஆனந்திக்கு அவர்கள் வீட்டில் தீவிரமாக மாப்பிள்ளை தேடத் தொடங்கினார்கள் என்பதை அறிந்து கொண்டேன். அவளே தான் சொன்னாள். இனியும் தாமதித்தால் அவளுக்கு வேறு யாருடனாவது திருமணம் செய்து அனுப்பி விடுவார்களென்று எனக்கு பயமும் பதட்டமும் வந்து விட்டது.
                        அவளுக்கு சிவகாசியைச் சேர்ந்த கதிர்வேல் என்பவனுடன் திருமணம் கூடி வந்து விட்டதை அறிந்து, கதிர்வேலையும் சந்தித்து விஷயத்தைச் சொல்லி அவனை ஆனந்தியயைக் கல்யாணம் பண்ணிக் கொள்கிற புரபோசலில் இருந்து விலகி விடும்படி கெஞ்சினேன்; அவனும் என்னை சீரியசாக எடுத்துக்க வில்லையே..... நான் என்னதான் செய்வது? நான் காதலிக்கும் பெண்ணை எப்படி இன்னொருவனுக்கு மனைவியாக்க அனுமதிப்பது?
            அதனால் காதலர் தினத்தன்று அவள் ஹாஸ்டலில் இருந்து ஆபிஸுக்குக் கிளம்பும் போது அவளைப் பின் தொடர்ந்து போனேன். அவள் ஆபிஸை நெருங்கியதும் அவளிடம் பேச்சுக் குடுத்தேன். சட்டென்று கையோடு நான் கொண்டு போயிருந்த ஆசிட்டை எடுத்து அவள் முகத்தில் ஊற்றி விட்டு ஓடிப் போய் விட்டேன்.
                        நான் செய்தது தவறு தான்; எனக்கு என்ன தண்டணை வேண்டுமென்றாலும் கிடைக்கட்டும்... அனுபவிக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால் ஒரு விஷயம்! நான் ஆசைப் பட்டது எதுவும் எனக்குக் கிடைத்தாக வேண்டும்; அது பொருளாக இருந்தாலும், பொண்ணாக இருந்தாலும்.... எனக்குக் கிடைக்கலைன்னா அதை வேற யாருக்கும் கிடைக்க விட மாட்டேன்!

கடைசிச் செய்தி:
                   சில நாட்களுக்கு முன்பு ஆனந்தி, மருத்துவம் பலனளிக்காமல் இறந்து விட்டாள். அவளின் அக்காள் தங்கையின் சார்பில் கேட்ட கேள்விகள் அங்கிருந்த யாவரையும் உலுக்கி விட்டன.
                   என் தங்கை என்ன குற்றம் செய்தாள்; பெண்ணாய் பிறந்ததா, அல்லது பார்க்கக் கொஞ்சம் இலட்சணமாய் இருந்ததா, அவளுக்கு ஏனிந்தத் தண்டனை?
                   பெண்கள் எல்லாம் ஆண்களின் விளையாட்டு பொம்மைகள் தானா? எங்களுக்கென்று உணர்வுகளும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளும் இருக்கவே கூடாதா?
                   இந்தச் சமூகம் என்பது ஆண்களுக்கு மட்டுமே ஆனதா?  இன்னும் இவளை போல் எத்தணை பெண்கள் இப்படி சிதைக்கப்படுவதை இந்தச் சமூகம் சகித்துக் கொண்டிருக்கப் போகிறது?

v  முற்றும்